நிறைவான அறிவைப்பெறும் பிரதான வழி புத்தகவாசிப்பே!
இன்றைய தகவல் தொழில்நுட்ப நூற்றாண்டிலே வாசிப்பு என்பது படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது போலத் தோன்றுகின்றது. இலத்திரனியல் பொழுதுபோக்குச் சாதனங்களின் தாக்கமே இதற்கு பிரதான காரணியாக கருதவேண்டியுள்ளது. இந்தப் புதியபோக்கு உலகளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் தவிர்க்க முடியாத மாற்றங்களில் ஒன்று.
எனினும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இன்றைக்கும் வாசிப்பு என்பது அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான பிரதான வழியாகவே இருந்து வருகின்றது. ஏனெனில் எவ்வளவுதான் இலத்திரனியல் ஊடகங்களும் பொழுதுபோக்குச் சாதனங்களும் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள போதிலும் அவற்றையெல்லாம் கொள்வனவு செய்வதற்கும் பராமரிப்பதற்கும் அவசியமான நிதித்தேவை என்பது சாதாரண அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இன்னும் சவாலாகவே இருந்து வருகின்றது. தவிர இலத்திரனியல் சாதனங்களை மின் இணைப்பு இல்லாத இடங்களிலே பயன்படுத்த முடியாது என்பது அவற்றின் மிகப்பெரிய பலவீனமாகும். இதனால் அவற்றை தமக்குத் தேவையான இடங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்துவதிலே இன்னும் சிரமங்கள் இருந்து வருகின்றன.
புத்தகங்களைப் பொறுத்தவரையில் அவை வெறும் காகிதத்தினால் ஆனவை. வேண்டிய இடத்திற்குக் எதுவித தயக்கமுமின்றிக் கொண்டு செல்லப்படத்தக்கவை. வீட்டில் அலுவலகத்தில் கடையில் ஏன் நடையிலும் கூட வாசிக்கலாம். பஸ்ஸில் ரயிலில் அவற்றை வேண்டிய அளவில் வைத்தக் கொள்ளலாம் மடிக்கலாம். சுருட்டி வைத்துக் கொள்ளலாம். அவற்றைப் பயன்படுத்துவதற்கு நேரம் ஒன்றைத் தவிர எதுவித செலவும் அவசியமில்லை.
எனவே நிறைவான அறிவை பெறக்கூடிய பிரதான வழி புத்தகவாசிப்புத்தான் என அடித்துக் கூறலாம்.
-M.B. Sithy Rumaiza (Librarian)
"சோம்பேறித்தனமும் சிலவேளை பொறுமையெனத் தவறாகக் கணிக்கப்படுகின்றது"
No comments:
Post a Comment