'சாணக்கிய நகர்வு'
மறுநாள் சொன்னவன் யாரென்பார்
நேற்றுச் சொன்னதை
நினைவில் வைத்துக் கேட்டுத் திரிபவன்
யாருமிருந்தால்-
கௌரவமாய் ஒளிந்துகொள்வார்!
தனியாக கண்டுவிட்டால்
சாதுரியமாய் விலகிச்செல்வார்
கூட்டத்தில்மாட்டிக்கொண்டால்
காரணங்கள் தேடிச் சொல்வார்
கதைமிஞ்சிப் போனாலோ
விளக்கம் கொடுத்தே மயக்கம் தருவார்!
வாழ்க்கை ஒரு ஞானமென்பார்
வரலாற்றுப் பாடமென்பார்
'வால்காவில் தானிருந்து
கங்கைவரை' விளக்கம் சொல்வார்
இரத்தம் துள்ளும் இருபதிலே
தர்க்கம்பேசி எட்டியுதைத்த
தர்க்கம்பேசி எட்டியுதைத்த
நாற்றம் வீசும் குப்பைக்குழியை
இன்று-
நாசிபிடித்துக் குடைந்து நிற்பார்!
நாசிபிடித்துக் குடைந்து நிற்பார்!
விஞ்ஞானம் பேசிடுவார்
விண்வெளியை அளந்திடுவார்
'பெருவெடிப்பு' நடந்;ததென்பார்
கருந்துளைகள் உள்ளதென்பார்
ஆனால்-
நிலாவிலே இறங்கியதை
நம்பவே மறுதலிக்கும்
அறிவிலிகள் திருப்திக்காய்
ஆராய்ச்சி நூல் புனைந்து
காகம் கத்திட ஆட்கள் வரும்
'காரணமும்' கண்டு சொல்வார்!
'கன்னி நிலம்' படித்திடுவார்
கார்ல்மாக்ஸை பெரிதுவப்பார்
'மூலதனம்' அறியாதவன்
முழுமனிதன் இல்லையென்பார்
மொழிபெயர்ப்புக் கவிதை கூறி
மூச்சிரைக்க நயத்தல் புரிவார்
வீரம் விளையுதென்பார்;
வெறும் வாயில் புரட்சி செய்வார்
ஆனால்-
வீதியோரத்தில் பட்டாசு வெடித்தால்
கட்டிலடியில் ஒட்டடை துடைப்பார்!
போராட்டமே வாழ்க்கையென்பார்
புதுப்புது அர்த்தம் சொல்வார்!
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தி வைத்திருப்பார்
'பெண்விடுதலை' என்று கூறி
பெரும் விளக்கம் தானுரைப்பார்
பாரதியின் புதுமைப் பெண்ண
அடுத்தவீட்டில் தேடியலைந்து
தனதுவீட்டின் 'புனிதம்' காப்பார்!
எழுத்தினிலே
எல்லாம் செய்வார்
யதார்த்தத்தில் கோட்டை விடுவார்
'திருமண வாழ்வு' என்றால்
புரட்சிக்கு அது தடையென்பார்
ஆனால்-
தன் வயது ஏறியதும்
தனக்குமொரு பெண் கொள்வார்
தாம்பத்யமும் ஒரு புரட்சியென்பார்!
நிலையான கொள்கையில்லா
நிமிட முள்ளாய்ச் சுற்றிடுவார்
நெஞ்சறிய வஞ்சம்செய்து
குறுகுறுப்பை மறைத்து வைப்பார்
சறுக்கிக் கீழே விழுந்ததையும்
'சாணக்கிய நகர்வு' என்பார்
முகச்சவரம் செய்தால் கூட
மூன்றுபக்க அறிக்கை விடுவார்
உலகமே அழிந்தாலும்
ஊருக்குத்தான் உபதேசிப்பார்!
-Mohammed Rafi
"எலும்புத்துண்டுகளுக்காக நேர்மையான மனிதனொருவன் தன்னை ஒருபோதும் நாயாக்கிக் கொள்ள மாட்டான் "
No comments:
Post a Comment