Monday, July 16, 2012

தோழர் வி. விசுவானந்ததேவனின் கருத்து -1983










லங்கை மார்க்சிய லெனிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் முக்கிய செயற்பட்டாளருமான தோழர் வி. விசுவானந்ததேவன் மறைந்து 27 ஆண்டுகளாகின்றன. தோழர் வி.விசுவானந்ததேவனை இன்று நினைகூரும் முகமாக, 29 ஆண்டுளுக்கு முன்னர் மலையக மக்கள் தொடர்பாக அவரால் எழுதப்பட்ட கட்டுரையொன்று இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.


இக்கட்டுரை 1983 ஆண்டு ஏப்பிரல்-மே காலப்பகுதியில் வெளியான 7வது புதுசு இதழில் பிரசுரமானது. மலையகத்தின் அக்காலகட்ட சூழலினையும், மலையக மக்கள் தொடர்பாக அக்காலத்தில் நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களையும், 1983 ஆண்டு காலப்பகுதியிலான நாட்டின் மொத்த அரசியல் நிலைமைகளையும் கருத்திற்கொண்டு இக்கட்டுரை வாசிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மறைந்த தோழர் வி.விசுவானந்ததேவனின் அக்காலகட்டத்து கருத்து என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.


-'Mutur' Mohd. Rafi



மலையக மக்களின் பிரச்சனை 

லங்கைக்கு பிரிட்டிசார் வருகைதந்தவுடன் சில மாற்றங்களைக் கொண்டு வந்தனர். எமது பொருளாதாரத்தை தமது தேவைக்கேற்ப மாற்றினர். எமது நீர்ப்பாசன முறைகள் அழிக்கப்பட்டன அல்லது கவனிக்கப்படாமல் விடப்பட்டன. மலையகத்தில் கண்டிய நிலப்பிரபுக்கள் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு மலைகளிலுள்ள காடுகளும் அழிக்கப்பட்டு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அந்த காலத்தில் தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் நிலவிய வறட்சியான சூழ்நிலையைப் பாவித்து அங்கிருந்து தோட்டங்களிற்கு கூலித்தொழிலாளர்களை கொண்டு வந்தனர். அக்காலத்தில் தமிழ் நாட்டில் நிலவிய சாதிமுறையைத் தமக்கு சாதகமாக பயன்படுத்தினர். உயர்சாதியினரைக் கங்காணியாக நியமித்து அவர்களே ஆட்களைச் சேர்த்து வந்தனர். ஆரம்பத்தில் வீதிகள், புகையிரதப்பாதைகள் அமைப்பதற்கும், பின் காடுகளை அழித்து தோட்டங்கள் உருவாக்கவும் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் நவீன அடிமைகளாக தோட்டங்களில் வைக்கப்பட்டனர். மற்றைய ஆலைத்தொழிலாளருக்கு உரிய உரிமையான தொழில் சுதந்திரமில்லை. தமது உழைப்பு சக்தியை விரும்பிய இடத்தில் சுதந்திரமாக விற்கும் உரிமை கூட இருக்கவில்லை. ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்திற்கு நிர்வாகத்தின் அனுமதியின்றிப் போகமுடியாது. சிங்கள கிராமங்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்டனர். பிரிட்டிசார் இங்குள்ள மக்களைக் கூலிக்கமர்த்தாது இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வந்ததன் காரணங்களை பின்வருமாறு தொகுக்கலாம்.

1. இங்குள்ள மக்கள் குறைந்த கூலிக்கு வேலைசெய்யத் தயாராக இருக்கவில்லை.

2. உள்ளுர் மக்களின் சுதந்திர வேட்கை

3. இவர்களைக் கொண்டு வருவதன் மூலம் இனங்களுக்கிடையில் குரோதத்தினை உருவாக்கி தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தல்.

பிரிட்டிசார் பல தேசிய இனங்களையும் வலுக்கட்டாயமாக ஒரு நிர்வாகத்தில் இணைத்து பின் பிரித்தாளும் தந்திரத்தையும் கையாண்டனர். ஆரம்பத்தில் 1830 ஆம் ஆண்டளவில் தோட்டப்பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள் கோப்பித் தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்டனர். கோப்பிச் செய்கை எதிர்பார்த்த வருவாயைத் தராததினால் கோப்பிச் செய்கை கைவிடப்பட்டது. தேயிலை, றப்பர், தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. கோப்பிப் பயிர்ச்செய்கை காலத்தில் சில மாதங்களில் மட்டும் தொழிலாளர் வந்து பின் திரும்பி செல்லும் போக்கிருந்தது. தேயிலை, றப்பர் செய்கை ஆரம்பமானவுடன் பெரும்பான்மையோர் நிரந்தரமாகவே தங்கிவிட்டனர். 1860 ஆம் ஆண்டளவிலிருந்து தேயிலை, றப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.
தோட்டத் தொழிலாளரது பெருமளவான வருகை 1930 ஆண்டு வரைக்கும் இடம்பெற்றது. ஆரம்பத்திலிருந்தே தோட்டத் தொழிலாளருக்கு எதிரான உணர்வுகள் சிங்கள மக்களிடம் சிங்களத் தலைவர்களால் ஊட்டப்பட்டன. இவர்கள் வந்தனாலேயே சிங்கள விவசாயிகளுக்கு நிலப்பிரச்சனை ஏற்பட்டதாகப் புகட்டப்பட்டது. மேலும் தோட்டங்களுடன் கிராமங்கள் தொடர்புபட முடியாமல் தோட்ட நிர்வாகம் வைத்திருந்ததனால் ஒருவரையொருவர் புரியவோ தமது பொதுப்பிரச்சனைக்காக இணைந்து போராடவோ முடியாத நிலை நிலவி வந்தது. இவர்களிடம் போராட்ட குணாம்சம் மறைந்திருந்ததை யாரும் மறக்க முடியாது. ஆலைத் தொழிலாளர்போல் முன்னேறிய உற்பத்திச் சாதனங்களுடன் உறவில்லாமை, நிலப்பிரபுத்துவத்தை உடைத்து வராமல் ஏகாதிபத்தியத்தால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி உறவு என்பன காரணமாக இவர்கள் நகர்ப்புற பாட்டாளிகளின் அளவு அரசியல் உணர்வு பெற்று முன்னணி பாத்திரம் வகிக்க முடியவில்லை. சில போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 1939 ஆம் ஆண்டு ஹங்குராங்கந்தவில் உள்ள முள்ளோயா தோட்டத்தில் முதன்முதலாக கோவிந்தன் என்னும் தொழிலாளி வீரமரணம் எய்தினார்.

தோட்டத் தொழிலாளருக்கு எதிரான உணர்வுகளைத் தொழிலாளாகள் தலைவர்களும் கொண்டிருந்தனர். முதலாவது அரசாங்க சபையில் (1931க்கு பின்) பெரும் தொழிலாளர் தலைவர் எனச் சொல்லப்படும் ஏ.ஈ. குணசிங்கா போன்றோர் தோட்டத் தொழிலாளருக்கு எதிரான குரலெழுப்பினர். தம்மை சோசலிஸ வாதிகளாகக் காட்டிய சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம். பெரேராவும் பிலிப் குணவர்த்தனாவும் அரசாங்க சபையில் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். தோட்டத் தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்த முதலில் முனைந்தவர் எஸ். நடேசஜயராகும். இவர் 1931 இல் அகில இலங்கை உழைப்பாளர் சம்மேளனம் எனும் அமைப்பை உருவாக்கினார். இது 1933 வரையும் தான் நிலைத்து பின் 1940 இல் ஜவகர்லால் நேருவின் ஆலோசனைப்படியே இலங்கை – இந்திய காங்கிரஸ் உருவானது. இதுவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக உருவெடுத்தது. தொண்டமானின் தலைமையில் தொழிலாளர்கள் அணிதிரண்டனர். 1947 பாராளுமன்றத் தேர்தலில் 7 பிரதிநிதிகள் மலையக மக்களிலிருந்து தெரிவாயினர். அத்தோடு மலையக மக்கள் இடதுசாரிகளை ஆதரித்து அவர்களது வெற்றிக்கு உதவினர். அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் இலங்கரத்தினாவுக்கு ஆதரவு நல்கி வெற்றி பெறச்செய்தனர்.

இவை யாவும் சேர்ந்து டி.எஸ். சேனநாயக்காவை விழிப்படைய வைத்தது என்றும், இவர்கள் இடதுசாரிகளுடன் நிற்பார்கள் என்பதைப் புரிந்து, சுதந்திரம் கிடைத்தவுடன் 1948 இல் முதல் செய்த வேலை பிரஜா உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி இவர்களது பிரஜா உரிமையை இல்லாது செய்தார். டி.எஸ். இன் இந்நடவடிக்கைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் தனிப்பெரும் தழிழ் தலைவரான ஜீ.ஜீ அவர்கள.; டி.எஸ்.உம் ஜீ.ஜீ உம் தமது வர்க்க நலனில் ஒன்றிணைந்ததில் வியப்பொன்றும் இல்லை. ஏற்கனவே தோட்ட நிர்வாகத்திலும், தோட்டப்பாடசாலை ஆசிரியர்களாகவும் இருந்த யாழ்ப்பாணத்தவர் நடந்து கொள்ளும் மோசமான போக்கினால் யாழ்ப்பாண எதிர்ப்பு தோட்டத் தொழிலாளரிடையே இருந்தது.

ஜீ.ஜீ யின் இத்துரோகத்தனம் யாழ்ப்பாண எதிர்ப்பை மேலும் அதிகமாக்கியது. ஜீ.ஜீ யின் இந்நடவடிக்கையை எதிர்த்தே தமிழ்க் காங்கிரஸிருந்து வெளியேறி தழிழரசுக்கட்சியை செல்வநாயகம், வன்னியசிங்கம் போன்றோர் உருவாக்கினாலும் தோட்டத்தொழிலாளரை அணிதிரட்டிப் போராடவில்லை. தமிழரசுக்கட்சி தமிழ் தேசிய, குட்டி முதலாளிகளின் நலனையே ஆரம்பத்தில் பிரதிபலித்தது. தோட்டத் தொழிலாளரின் நலனில் தேசிய, குட்டி முதலாளிகளின் நலன் தங்கியிருக்காததும், தமிழரசுக்கட்சி பாராளுமன்றக்கட்சி ஆகையால் தோட்டத்தொழிலாருக்கு வாக்கினமையாலும், தோட்டத் தொழிலாளர்களைப்பற்றி அக்கறைப்படவேயில்லை. தொண்டமான 1948 இல் பிரஜா உரிமைச் சட்டத்திற்கு எதிராக ஒருநாள் ஹர்த்தாலுடன் போராட்டத்தை நிறுத்திக்கொண்டார். பின் தொண்டமான் தோட்டத்தொழிலாளரைக் காட்டிக்கொடுத்து நியமன எம்.பி பதவிக்கும் மந்திரிப்பதவிக்கும் யூ.என்.பி யுடன் சங்கமமானார். இடதுசாhரிக் கட்சிகளான லங்கா சம சமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி ஆகியவை கூட வாக்கு இல்லாத இவர்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. மற்றும் இடதுசாரிகள் பலரும் பராமுகமாயிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியினர் 1971 கிளர்ச்சிக்கு முன்பு மிகவும் கீழ்த்தரமான முறையில் இவர்களுக்கெதிராக பிரச்சாரம் செய்தனர்.
1971 ஏப்ரல் கிளர்ச்சியின் முனனோடியான தயாரிப்பு வகுப்புகள் ஜந்தில் இரண்டாவது வகுப்பு முழுவதும் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற பொருளில் பிரதானமாக மலையகத் தொழிலாளருக்கெதிராகவும் பொதுவாக தமிழ் மக்களுக்கு விரோதமானதாகவுமே இருந்தது.

மலையக தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான் ஆரம்பத்தில் பெரிய சங்கமாக இருந்தது. இதன் இந்திய சார்புத்தன்மை பிற்போக்கு தலைமை காரணமாக தொழிலாளர்கள் சிந்திக்கும் ஆற்றலிழந்து தொழிற் சங்க சேற்றுக்குள்ளேயே இருந்தார்கள். இப்பிற்போக்குத் தலைமை சிங்களத் தொழிலாளர்களுடன் தோட்டத்தொழிலாளர் இணைய முடியாதவாறு தடுத்தே வைத்திருந்தது. பின்னர் உருவான அஸிஸ். வெள்ளையன் போன்றோரின் சங்கங்களும் தொழில் தகராறுகள் போன்ற சிறு பிரச்சினைகளுக்கான தொழிற் சங்க நடவடிக்கை என்ற எல்லைக் கோட்டிற்கு அப்பால் செல்லவில்லை. சம சமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட்கட்சிகளினால் உருவாக்கப்பட்ட தோட்டத் தொழிலாளருக்கான தொழிற் சங்கங்களும் தொழிற் சங்க வாதத்திலேயே மூழ்கின. 1965ஆம் ஆண்டிற்குப் பின் உருவாக்கப்பட்ட சண்முகதாசனின் தலைமையிலான செங்கொடிச்சங்கம் ஒரளவு தொழிலாளர்களை அரசியல் மயப்படுத்தினர். இவர்கள் பாராளுமன்றப் பாதையில் செல்லாததனால் இப்படிச்செய்வது சாத்தியமாயிற்று. செங்கொடிச்சங்கத் தோட்டங்களில் தலைமையின் வழிகாட்டலின்றியே பல போராட்டங்கள் நடத்தினர். மடக்கும்பரை, கீனாக்கலை, றங்கலை ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடத்தினர். கீனாக்கலை போராட்டத்தில் இரு தொழிலானர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினார். இவ்வமைப்புக் கூட தொடர்ந்து முன்செல்ல முடியாது போயிற்று. இதற்கான காரணங்கள்:

1: மலையகமக்களின் யதார்த்த நிலைமையை உணராத வறட்டு மார்க்ஸிய பார்வை.

2: தோட்டத் தொழிலாளரே புரட்சியின் முதன்மை சக்தி எனும் தவறான கண்ணோட்டம் (இவர்கள் முக்கியமான சக்தி, முதன்மை சக்தியன்று).

3: தொழிற்சங்கத் தலைமையின் துரைத்தனம்.

இன்னொரு தவறான போக்கும் மலையகத்தில் இருந்த சில அதிதீவிர சக்திகளால் முன்வைக்கப்பட்டது. தொழிற்சங்க வேலையே திரிபுவாத வேலை எனவே தொழிற்சங்கங்களை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்பதே இத்தவறான கண்ணோட்டம் இந்தியாவிலுள்ள சில அதிதீவிரவாதிகளிடமிருந்து இவர்களுக்குக் கிடைத்தது. 1971 ஏப்ரல் கிளர்ச்சியைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்கள் பயம் காரணமாகவும் சுயலாபம் கருதியும் அரசியலற்ற தொழிற் சங்கம், தொழிற்சங்கத்தின் சுயாதீனம் எனும் தவறான கருத்துக்களை முன்வைத்தனர். இதனால் செங்கொடிச்சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் கூட சில துரைமார்களின் வியாபார நிறுவனங்களாக மாறியுள்ளன.
ஒப்பந்தங்கள்

இந்நாட்டில் காலத்திற்கு காலம் பல ஒப்பந்தங்கள் பொருட்களை விற்பது வாங்குவது போல் செய்யப்பட்டன. ஆயினும் நாடற்றவர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. முதலில் இந்திய பாகிஸ்தானிய பிரஜா உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டு 1இலட்சத்து 35ஆயிரம் பேருக்கு பிரஜா உரிமை வழங்கப்பட்டது. பின்னர் 1954ஆம் ஆண்டு நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம் செய்யப்பட்டும் அதனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை. நாடற்றவர் பிரச்சனையைத் தீர்க்க எண்ணி ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் 1964ஆம் ஆண்டு செய்யப்பட்டது இது மக்களினுடைய எந்த விருப்பு வெறுப்பையும் கணக்கிலெடாது இரு நாட்டுத் தலைவர்களும் சரக்கு பரிவர்த்தனை போன்ற தமது ஒப்பந்ததைச் செய்து முடித்தனர்.

இவ்வொப்பந்தப்படி 5இலட்சத்து 25ஆயிரம் பேரை இந்திய அரசு ஏற்றுக் கொள்வதாகவும் 3இலட்சம் பேரை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாகவும் உடன்பாடானது. இவ்வொப்பந்தம் 79ஆம் ஆண்டுடன் காலாவதியாகியும் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கப்பட்டது. இதுவரைக்கும் 3இலட்சத்து 50ஆயிரம் பேர் தான் இந்தியா சென்றுள்ளார்கள். இனப்பெருக்கத்தைக் கணக்கிலெடுப்பின் 3இலட்சம் பேர்தான் இந்தியா சென்றுள்ளனர். 1974ஆம் ஆண்டு ஸ்ரீமாவும் இந்தியாவும் எஞ்சிய 1 இலட்சம் பேருக்கான ஒப்பந்தம் செய்தார்கள். 75ஆயிரம் பேரை இலங்கையும் 75ஆயிரம் பேரை இந்தியாவும் ஏற்றுக் கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. மொத்தமாக 6இலட்சம் பேருடன் குடிப்பெருக்கத்தால் அதிகரிப்பவர்களையும் இந்தியா ஏற்க வேண்டும். மொத்தமாக 4இலட்சமும் குடிப்பெருக்கத்தால் அதிகரிப்பவர்களும் இலங்கையில் குடியுரிமை பெறத் தகுதியுள்ளவர்கள். ஆனால் இலங்கையரசு 7பேர் இந்தியா சென்றால் 4பேருக்குத்தான் பிரஜா உரிமை வழங்குகிறது. எப்படியிருப்பினும் இதுவரைக்கும் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டும் நாடற்றவர் பிரச்சினை தீராத ஒரு பிரச்சனையாகவேயுள்ளது. இவ்வொப்பந்தங்கள் எழுதிய காலத்தில் குறிப்பாக ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் எழுதிய பொழுது சில வறட்டுவாதிகள் இரு முதலாளித்துவ அரசுகளுக்கும் இவ்வொப்பந்தம் எழுதும் அருகதையில்லை. இதுபற்றி நாம் அக்கறைப்படத் தேவையில்லை. சோஷலிஸம் வந்த பின்தான் இவையெல்லாம் தீர்க்கப்படும் என்று பிதற்றினர். அன்றைய அரசில் ஒட்டிக்கொண்டிருந்த சமசமாஜக் கட்சியினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இவ்வொப்பந்தத்தை ஆதரித்தனர். அன்று இவ்வொப்பந்தத்தை ஆதரித்த பலரும் இன்று பாவமன்னிப்புக்காக இவ்வொப்பந்தத்திற்கெதிராகக் கூச்சலிடுவது வேடிக்கையானது. காலங்கடந்து ரத்துச் செய்யும்படி கேட்பதில் அர்த்தமில்லை. விரும்பியோர் இங்கு வாழவும் விரும்பியோர் இந்தியா செல்லவும் வழிவகுக்கும் நிலைமையே நியாயமானது. ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நடைமுறையிலுள்ள இவ்வேளையில் இங்கு இருக்கப்போகும் சகலருக்கும் உடனடியாக இங்கு பிரஜா உரிமை வழங்கும்படி போராடுவதே அவசியமானது.

மலையக மக்களின் இன்றைய நிலையும் பிரச்சினைக்கான தீர்வும்:


நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் வேலையில்லாத் திண்டாட்டம் என்பன சிங்கள மக்களைத் தோட்டங்களை நோக்கி நகர்த்தியது. தோட்டத் தொழிலாளரைக் காட்டி அவர்களுக்கு எதிரான துவேஷத்தைக் கோஷித்தே பல அரசியல்வாதிகளும் சிங்கள மக்களை அணிதிரட்டினர். சென்ற அரசாங்க காலத்தில் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டு சில தோட்டங்களிலிருந்து தொழிலாளர் விரட்டப்பட்டு சிங்கள மக்களுக்குக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. சில தோட்டங்களில் தமிழ்த் தொழிலாளர்கள் உத்தியோகத்தர் வெளியேற்றப்பட்டு சிங்கள தொழிலாளர் உத்தியோகத்தர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இவைகளைக் காரணம் காட்டியே இன்று தொண்டமான் இவ்வரசுக்கு விசுவாசமாக நடக்கும்படி தோட்டத் தொழிலாளரைக் கேட்கிறார். கடந்த அரசாங்கத்தால் தோட்ட முதலாளி தொண்டமானின் தோட்டங்களும் தேசியமயமாக்கப்பட்டது. தொண்டமான் சென்ற அரசாங்கம் பதவியிலிருந்த போது வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தை ஏற்று தமிழ் ஈழ கோரிக்கையை அங்கீகரித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியும் பெற்று சில காலத்திலேயே அவையெல்லாவற்றையும் ஒரு புறம் வைத்து விட்டு ஜே ஆருடன் கூட்டுசேர்ந்து மந்திரிப் பதவியும் பெற்றுத் தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்தார். தொண்டமான் அரசுடன் சேர்ந்திருந்தும் கூட இவ்வரசு பதவிக்குவந்து சில நாட்களில் 1977 ஒகஸ்டில் இனக் கலவரத்தில் தேட்டத்தொழிலாளர் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டனர். கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், தீவைப்பு என்பன நடைபெற்றன. பலர் உயிருடன் கொழுத்தப்பட்டனர்.

1977 வடுக்கள் அழிய முன்னரே மீண்டும் 1981இல் மீண்டும் 1977 போன்ற கொடுமைகள் தொண்டமானுடன் ஒன்றாகவிருக்கும் அதே மந்திரிமாரின் வழி காட்டலில் நடந்தன. இவ்வரசு நட்சா எனப்படும் கிராம விஸ்தரிப்பு மூலம் தொழிலாளரைப் படிப்படியாகத் தோட்டங்களை விட்டு அப்புறப்படுத்தத் திட்டம் தீட்டியுள்ளது. இவற்றை நோக்கும் போது தொண்டமான் தனது வர்க்க நலன் கருதி அரசுடன் இணைந்திருப்பது வியப்புக்குரியதல்ல. 1977 தேர்தலுக்கு தமிழ் ஈழக் கோரிக்கையை உரக்கக்கத்திய கூட்டணி, மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்கு இரகசிய திட்டம் இருப்பதாகச் சொல்லியது. 1977 ஓகஸ்ட் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு வடகிழக்கு நோக்கி வந்த அகதிகளைப் பாதுகாக்க வாழ வழிவகுக்கத் திராணியற்று கூட்டணியினர் கைவிட்டனர். சில சமூக சேவை நிறுவனங்களே இவர்களைக் குடியேற்றியுள்ளன. இவ்விதம் சமூக சேவை நிறுவனங்களின் உதவியுடனும் தன்னிச்சையாகவும் இது வரைக்கும் 1இலட்சம் பேரளவில் வடகிழக்கு பகுதிகளில் வந்து குடியேறியுள்ளனர். இவ்விதம் குடியேறியவர்களுக்கும் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்த மக்களுக்கும் இடையில் இன்னமும் சமூக. பொருளாதார, கலாசார வேறுபாடுகள் காரணமாக சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. காலப்போக்கில் அவை படிப்படியாக மங்கி மறையும்.

இன்று மலையகத்தில் மூன்று வகையான ஸ்தாபனங்கள் மக்களிடையே வேலைசெய்கின்றன.
(1) தொழிற்சங்கங்ள்

(2) சில சமூக சேவை ஸ்தாபனங்கள்

(3) மலையக மக்களின் தனித்துவமான பிரச்சினைகளின் நிமித்தம் உருவான வெகுஜன ஸ்தாபனங்கள்.

தொழிற்சங்கங்கள் யாவும் இன்று வெறும் சீர்திருத்த ஸ்தாபனங்களாகவும் வெறும் சந்தாபிடிக்கும் வியாபார நிறுவனங்களாகவும் மாறியுள்ளன. சுமூகசேவை ஸ்தாபனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக சில சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இவைகள் சிலவற்றின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியனவாகவும் உள்ளன. மக்களை சரியான வழியில் சிந்தித்து பிரச்சினைகளுக்கான தீர்வுக்காகப் போராடவிடாது தடுப்பதுதான் நோக்கம் என சந்தேகிக்கத் தோன்றுகிறது. பெருமளவு வெளிநாட்டு நிதி இவற்றிற்குக் கிடைக்கிறது.

வெகுஜன ஸ்தாபனங்களை நோக்கின் அவை மலையகத்தில் உள்ள சில படித்த இளைஞர்களினால் உருவாக்கப்பட்டன. மலையகத்தில் இப்போது தான் படித்த வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது. எல்லா இடங்களிலும் ஆரம்பத்தில் குட்டி பூர்ஷ்வா வர்க்கம் தான் விழிப்புணர்ச்சி பெறும். மலையக மக்களுக்கான தனியான ஸ்தாபனம் உருவாவது சரியானதும் தேவையானதும் கூட. இவ்வியக்கங்கள் இன்னமும் படித்த சில இளைஞர்களை விட்டு மக்களிடம் செல்லவில்லை. இவ்வியக்கங்களில் குட்டி பூர்ஷ்வா சிந்தனையிலிருந்து விடுபட்ட ஊழியர்கள் உருவாகாமைதான் மக்களிடம் செல்ல முடியாத நிலைக்கான காரணமாகும். இவற்றிற் சில மலையக மக்களை தனியான தேசிய இனம் (யேவழைn) எனும் கருத்தை முன்வைத்துள்ளனர். இதற்கு எதிராக தமிழ் மக்களிடையே உள்ள சில இயக்கங்கள் எல்லாத் தமிழ் பேசும் மக்களைபும் சேர்த்து (மலையக மக்கள், முஸ்லிம் மக்கள், இலங்கைத்தமிழர்) ஒரே தேசிய இனம் (யேவழைn) என முன்வைக்கின்றனர். இதனை ஈழவர் எனவும் அழைக்கின்றனர். இவ்விரண்டு கருத்துக்களையும் தெளிவாகப் பார்ப்போம்.

மலையக மக்களைத் தனியான தேசிய இனம் என்று சொல்பவர்கள் பல நோக்குடையவர்கள் உள்ளனர். ஒரு சாரார் தேசிய இனம் என்பது என்ன என்பதில் தெளிவின்றிச் சிறுபான்மையினங்கள் யாவும் தேசிய இனம் என்று கருதுகின்றனர். இன்னொரு சாரார் மலையக மக்களை தேசிய இனம் என்று சொல்வது அவர்களது அந்தஸ்தைக் கூட்டும் என்ற தவறான சிந்தனையிலும் மலையக மக்களிடையே தமது தனித்துவமான தலைமையை உருவாக்கவும் வேண்டி இந்த கோசத்தை முன் வைக்கின்றனர் மலையக மக்களைத் தனித் தேசிய இனம் என்று அங்கீகரிக்கக் கோரும் இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸின் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பரந்த அளவில் கிளர்ந்து வருகையில் மலையக மக்களை அத்துடன் இணைய விடாது குறுக்கே பிரிக்கின்ற தந்திரோபாயமாகத்தான் இ.தொ. கொங்கிரஸ் இதனைக் கையாள்கிறது. இந்நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேறிய மலையக மக்களையும் இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸ் வடக்கு – கிழக்கு மக்களின் போராட்டங்களோடு இணையவிடாது தனியே பிரித்து வைக்க தன்னாலான எல்லாப் பிரயத்தனங்களையும் செய்கிறது. இது மிகவும் அபாயகரமான போக்கு ஆகும். யதார்த்தத்தில் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் குடியேறிய மலையக மக்கள் தங்களை தங்களை அப்பிரதேச மக்களின் போராட்டங்களுடன் இணைக்க முடியாதவிடத்து இம் மலையக மக்கள் 'தனித்துப்' போய்விடுவார்கள்! இதனை அவர்களுக்கு வலியுறுத்துகிற அதே உயர்த்திய தொனியில் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராளிகளுக்கும் சில விஷயங்களை வலியுறுத்த வேண்டி இருக்கிறது. வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு எடுக்கிற கவனத்தைவிட நூறு மடங்கு அதிகளவு மலையக மக்கள் மத்தியில் அவர்கள் இறங்க வேண்டும். குறிப்பாக வடக்கு-கிழக்கு பகுதியில் குடியேறியுள்ள மலையக மக்களைத் தம்மோடு அணிதிரட்டுவதோடு மலையகத்திலே உள்ளவர்களுக்கு அவர்களுடைய தனித்துவத்தை பேணும் வகையில் அவர்கள் எடுக்கின்ற எல்லாப் போராட்டங்களுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும்.
ஈழவர் என்ற கருத்து வெறும் வறட்டுத்தனமான அணுகுதலிருந்தே உருவானது. யுதார்த்த நிலையைக்கணக்கிலெடுக்காது பிரச்சனையைக் குறைக்கும் நோக்குடன் சுய மனவிருப்பின் அடிப்படையிலே முன்வைக்கப்பட்டது.

ஈழவர் என்ற கருத்தாக்கம் தேசிய இனங்களின் வரலாற்று ரீதியான உருவாகத்தை மறுப்பதோடு மட்டுமல்லாமல் நடைமுறையைக் கவனத்திலெடுக்காத வெறும் கற்பனையாகும். இங்கு முஸ்லிம்கள், மலையக மக்கள் போன்றவர்களுடைய தனித்துவங்கள் சிதைக்கப்படுகின்றன.
தேசிய இனப்பிரச்சனை என்பது சாரம்சத்தில் வர்க்கப் பிரச்சனையே. குறிப்பாக இது விவசாயப்புரட்சியுடன் சம்மந்தப்பட்டது. முதலாளித்துவம் வளர்ந்து சந்தைப் பொருளாதாரம் உருவானவுடனேயே ஒரு மொழி பேசும் மக்கள் ஓரே பிரதேசத்தில் வாழும் மக்களிடையே ஒரு பொருளாதார பிணைப்பு உருவானது. இதன் நிமித்தமே தேசிய இனங்கள் (Nations) உருவானது. மலையக மக்கள் காலனித்துவவாதிகளால் கொண்டு வரப்பட்டதால் சுயமாக நிலப்பிரபுவத்தை வீழ்த்தி உருவான மக்களிடம் உள்ள நிலத்துடனான பிணைப்பிருக்கவில்லை. இந்தியாவிலிருந்து பூரணமாக விடுபடாத நிலை (தமது தாய்நாடான இந்தியாவை எண்ணும் நிலை) இருந்தது. சமூக வரலாற்று பொருளாதாரக் காரணங்களால் இவர்கள் வடக்கு- கிழக்கு தமிழ் மக்களிடம் இருந்து வேறுபாடுடையவர்களாக இருந்தனர். 1948 இல் பிரஜா உரிமை பறிக்கப்பட்டமையாலும் ஸ்ரீமா ௲ சாஸ்திரி ஓப்பந்தம் காரணமாகவும் இவர்கள் இலங்கையின் தேசிய அரசியல் வாழ்விலிருந்து விலகியிருந்தனர். இவர்கள் ஒரு தனியான தேசிய இனமாவதற்குரிய சாத்தியக் கூறுகளை இனவாத அரசுகள் அழித்தன. இதனால் இவர்களால் தனியான தேசிய இனமாக வளர முடியாமல் போய்விட்டது.

1977 இல் இனக்கலவரம் நடந்து முடிந்தவுடன் மலையகத்தில் முன்னோடிகளாக இருந்த பலர்கூட மலையக மக்கள் யாபேரும் இந்தியா செல்ல வேண்டுமென எனப்பிரச்சாரம் செய்தனர் தேசிய இனம் என்ற நிலையில் இருந்திருப்பார்களாயின் சரியானதோ பிழையானதோ தலைமையில் போராடியிருப்பார்கள். இவையாவற்றையும் பார்க்கும் போது மலையக மக்கள் தேசிய சிறுபான்மையினர் என்ற நிலையிலேயே இன்று உள்ளார்கள்.

இவர்களின் பிரச்சனைக்கு தீர்வு என்ன?

இவர்களில் ஒரு பகுதியினர் சிங்கள கிராமங்களில் மத்தியில் வாழ்பவர்கள். குறிப்பாக கண்டி, கம்பளை, மாத்தளை, இரத்தினபுரி, தெனியாய பகுதிகளில் இவ்விதமாக உள்ளவர்கள் உண்டு. இவர்களில் இந்தியா செல்பவர்கள் போக மிகுதியானவர்கள். வடகிழக்குக்கு அல்லது மலையக மக்களுக்கு செறிவாக உள்ள பகுதிகளுக்கு குடிபெயர்வது அவசியமானதாகும். செறிவான பகுதிகளில் வாழ்வோர் தம்மை அமைப்புரீதியில் அணி திரட்டி தற்பாதுகாப்பிற்காக போராடுவதற்கு தாயாராவது அவசியமானதாகும். இவர்களது எதிர்காலத் தீர்வு மாறி வரும் சூழல் மற்றும் மக்கள் போராட்டத்தின் வளர்ச்சி என்பவற்றில் தங்கியுள்ளது.

பின் குறிப்பு:




மலையக மக்களின் பிரச்சனையின் முழுவடிவங்களையும் விரிவாகவும் தெளிவாகவும் ஆராய முடியவில்லை. தொடர்ந்து வரும் கருத்தின் விவாதங்கள் இதற்கான பாதையைத் திறக்கும் என நம்புகிறேன். மலைய மக்களின் சோகத்தை இங்குடன் முடியவில்லை. இங்கு ஆரம்பமாகி ஹட்டன். கண்டி ரெயில்வே ஸ்ரேசன்களிலும் தலைமன்னாரிலும் இராமேஸ்வரம் மண்டபத்திலும் இச்சோகக்கதை தொடர்ந்து பின் தழிழ் நாட்டின் கிராமங்களிலும் நீலகிரியிலும் அந்தமானிலும் முடிவுற்று நீள்கிறது. .இங்கிருந்து குடிபெயரும் குடிபெயர்ந்த நண்பர்களின் கடிதங்கள் பல கதைகள் சொல்லும். எனது நண்பன் சிவானந்தன் கண்டி கலாச்சார குழுவினால் வெளியிடப்பட்ட 'நதி' எனும் சஞ்சிகையில் எழுதிய சென்று 'வருகிறேன் ஜென்ம பூமியே' எனும் கவிதை இம் மண்ணை நேசித்து இச் சமூகத்தின் கொடுமையால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட ஒரு பிரஜையின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரையை எழுதும் போது அக் கவிதையை நினைக்காமல் இருக்கவே முடியவில்லை.

நன்றி: புதுசு, ஏப்பிரல்-மே 1983

Wednesday, July 11, 2012

கடவுள் துகள்?






‘ஹிக்ஸ் போஸான் ’













டித்தவர், பாமரர் பேதமின்றி; அறிந்தவர், அறியாதவர் வித்தியாசமின்றி; ஆன்மீகவாதி, பகுத்தறிவுவாதி வேறுபாடின்றி அனைவராலும் அண்மையில் உச்சரிக்கப்படும் சொல் என்று ‘ஹிக்ஸ் போஸானை’ கூறினால் அது மிகையல்ல. கடவுள் துகள் என்று வேடிக்கையாக குறிப்பிடப்படும் அந்த துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடவுள் உண்டு என்பதை அறிவியல் ரீதியாக மெய்ப்பித்து விட்டதாகவும், அறிவியல் யூகம் என்ற நிலையில் இருந்த பெருவெடிப்புக் கொள்கையை அறிவியல் உண்மை என்ற நிலைக்கு உயர்த்தி விட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அறிவியலாளர்களோ ‘ஹிக்ஸ் போஸான்’ துகள் இருக்கிறது என்பதை உண்மைப்படுத்தும் சான்றுகள் இருப்பதை 99.9 விழுக்காடு வரை உறுதி கூறமுடியும் என்ற நிலையை ஆய்வின் மூலம் வந்தடைந்திருப்பதாக மிகுந்த எச்சரிக்கையுடன் கூறுகிறார்கள். கடவுள் துகள் குறித்த மக்களின் பரவசத்திற்கும், அறிவியலாளர்களின் எச்சரிக்கைக்கும் இடையில் என்ன இருக்கிறது? ஹிக்ஸ் போஸான் எனும் இயற்பியல் கலைச் சொல்லுடன் கடவுள் எந்த விதத்தில் தொடர்பு கொண்டிருக்கிறார்?



இந்த பேரண்டம் எப்படி தொடங்கியது எனும் கேள்விக்கு பெருவெடிப்பு என்பதே இப்போதைய பதில். இந்த பெருவெடிப்பு என்பது கொள்கை தான் அறுதியான ஒன்றல்ல. அலைவுக் கொள்கை, நிலைக் கொள்கை உள்ளிட்டு பேரண்டத் தொடக்கம் குறித்த சில கொள்கைகளில் பெருவெடிப்புக் கொள்கையே சரியானது என்று பெரும்பாலான அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அண்டம் முழுவதும் பரவியிருக்கும் வெப்பம், பருப் பொருட்களின் விரைவு போன்ற சான்றுகளையும் காட்டுகிறார்கள். இந்த பெருவெடிப்பு நிகழ்வின் ஆதிக் கணத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதற்கும் ஒரு அணுவின் கட்டமைப்பில் என்ன இருக்கிறது என்பதற்கும் தொடர்பு இருக்கிறது. அதாவது, ஓர் அணுவிற்குள் இருக்கும் நுண்ணிய அணுக்கூறுகள் பெருவெடிப்பின் பரமாணுவிற்கும் ஒத்திசைவு இருக்கக்கூடும் என்பது அறிவியலாளர்களின் முடிவு. எப்படியென்றால், அண்டம் முழுதும் பரவியிருக்கும் பொருட்கள் அனைத்திற்கும் அடிப்படை அணுவே. அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியூட்ரான்களின் எண்ணிக்கைகளைக் கொண்டே பொருட்களின் தன்மைகள் மாறுபடுகின்றன. அதேநேரம் மொத்த பேரண்டம் என்பது பருப் பொருட்களால் மட்டுமே ஆனது அல்ல. பருப்பொருட்கள் அல்லாத அறியப்படாத ஆற்றல்களால் சூழப்பட்டதே பேரண்டம். இவைகளை அறிய வேண்டுமென்றால் ஒரு அணுவுக்குள் என்ன இருக்கிறது என்பது அறியப்பட்டாக வேண்டும்.



அணுவின் கட்டமைப்பில் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான்கள் அல்லாத வேறு பொருட்களை கண்டறியும் முயற்சியில் அவைகளை அசுர வேகத்தில் மோதவிட்டுப்பார்க்கும் கொலைட்ரான் வகை சோதனைகள் எழுபதுகளின் பிற்பகுதியில் அமெரிக்காவில் தொடங்கின. அணுக்களுக்கு நிறையை அளிக்கும் ஒரு துகளைத்தேடும் பயணத்தில் அமெரிக்காவின் பெர்மி ஆய்வகத்தில் குவார்க்குகளும் பாரியான்களும் கண்டுபிடிக்கப்பட்டாலும், சில கணங்களில் தன்மை மாறிவிடும் போஸான் வகையைச் சேர்ந்த துகள் உறுதிப் படுத்தப்படவில்லை. பீட்டர் ஹிக்ஸ் என்பவர் யூகித்துச் சொன்னதால் அவர் பெயரைக் கொண்டு ஹிக்ஸ் போஸான் துகள் என்றழைக்கப்படுகிறது. பின்னர் அந்த ஆய்வகம் கைவிடப்பட்டது.



எண்பதுகளின் இறுதியில் பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் அமைக்கப்பட்ட செர்ன் ஆய்வகத்தில் நிலைப்படுத்தப்பட்ட மாதிரி (ஸ்டாண்டர்ட் மாடல்) உறுதி செய்யப்பட்டது. மூலாதாரத் துகள்களில் ஆறு குவார்க்குகள், ஆறு லெப்டான்கள், ஐந்து போஸான்களுடன் ஆறாவது போஸானாக ஹிக்ஸ் போஸானும் சேர்க்கப்பட்டு அதைக் கண்டடைந்தே தீர்வதென்று எலக்ட்ரான்களையும் புரோட்டான்களையும் ஒளி வேகத்தில் மோதவிட்டு, அதன்மூலம் சூரியனை விட ஒரு லட்சம் மடங்கு அதிக வெப்பத்தில் பெருவெடிப்பின் துவக்க கணங்களை ஆய்வகத்தில் உண்டாக்கி ஹிக்ஸ் போஸான் துகள் வெளிப்படுகிறதா என சோதித்தறிவது தான் ஆய்வகத்தின் நோக்கம். இங்கிருந்து தான் ஹிக்ஸ் போஸானை கண்டடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். இரண்டாயிரத்தின் துவக்க ஆண்டுகளில் ஹிக்ஸ்போஸானை யார் முதலில் கண்டுபிடிப்பது செர்ன் ஆய்வுக் கூடமா? பெர்மி ஆய்வுக் கூடமா? என்றொரு போட்டியே நடந்தது. மட்டுமல்லாது, தாங்கள் அந்த துகளை கண்டுபிடித்துவிட்டோம் என்று பெர்மி ஆய்வுக்கூட இத்தாலிய அறிவியலாளர்கள் பொய்யாக அறிவிக்கவும் செய்தார்கள்.




அறிவியலாளர்களை அதிகம் அலைக்கழிக்கும் துகள் எனும் கருத்தில் நாசமாய்ப் போன துகள் எனும் பெயரில் ‘Goddamn particle’ ஒரு நூலை வெளியிட நோபல் பரிசு பெற்ற அறிவியலாளரான லியான் லாடர்மேன் விரும்பினார். ஆனால் அந்நூலின் பதிப்பகத்தார், நூலின் தலைப்பு ஒரு வசைச் சொல்லாக இருப்பதா எனும் எண்ணத்தில் நூலின் தலைப்பை ‘God particle’ என்று மாற்றினார். நூலின் விற்பனைக்காகவும், பரபரப்பிற்காகவும் சூட்டப்பட்ட ‘கடவுள் துகள்’ எனும் பெயர் இன்று கடவுள் இருப்பதை அறிவியல் உறுதி செய்துவிட்டது என்று பிதற்றும் அளவிற்கு சென்றிருக்கிறது.




பொதுவாக அறிவியல், மக்களுக்காக மக்கள் நலம், மக்கள் முன்னேற்றம் என்ற திசையில் பயணப்பட வேண்டும். ஆனால் தற்போது அறிவியல் முன்னேற்றம் மட்டுமல்ல, சமூக முன்னேற்றம் என்பதும் முதலாளிகளின் முன்னேற்றம் மட்டுமே. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு புதுவிதமான ஆயுதங்களை கண்டுபிடித்தாக வேண்டிய அவசியத்தில் இருந்து இயற்பியலிலிருந்து துகள் இயற்பியல் என்றொரு தனித்துறை உருவாக்கப்பட்டு அசுர வளர்ச்சியடைந்தது. இதன் தொடர்ச்சியாகவே அணு குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்தப்பயணம் இன்னும் நுணுக்கமாகவும், இன்னும் விரைவாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதன் பொருள், உலகை ஒரே வர்த்தக குடையின் கீழ் கொண்டுவரும் ஏகாதிபத்திய நோக்கத்திற்கு இந்த ஆய்வுகள் ஏதோ வகையில் உதவிக் கொண்டிருக்கின்றன என்பதைத் தவிர வேறொன்று இருக்க முடியாது.




இதை அறிவியலுக்கு எதிரான கருத்து என்று திரிக்க முடியாது. என்னதான் ஆக்கபூர்வமான பயன்பாடு, இராணுவப் பயன்பாடு என்று அணு அறிவியலை இரண்டாக பிரித்திருந்தாலும்; அது பரந்துபட்ட மக்களுக்கு அழிவு சக்தியாகவும், முதலாளிகளுக்கு ஆக்க சக்தியாகவுமே இன்றுவரை அணு அறிவியல் பயன்பட்டிருக்கிறது என்பது கண்கூடு. ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு குறித்து பரவசப்படும் ஒரு கூலித் தொழிலாளிக்கு அதனால் கிடைத்த பலன்கள் என்ன? அணுவைப் பிளந்தால் அபரிதமான சக்தி உருவாகும் என்பதில் ஒரு விவசாயிக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது? ஆனால் முதலாளிகளுக்கு .. ..? மூடி மறைப்பதற்காக செய்யப்படும் வெகு மக்கள் பயன்களை பட்டியலிடுவதை விட அறிவியல் வளர்ச்சிகள் எந்த நோக்கில் பயணப்படுகிறது என்பதை சிந்தித்துப் பார்ப்பதே சரியானதாக இருக்கும்.




இப்பேரண்டம் எப்படித் தோன்றியது என்பதில் தொடங்கி பருப் பொருட்களின் அடிப்படைத் துகள்களின் தன்மைகளை ஆராய்வது வரை அறிவியலின் தேவை மனித குலத்தின் பயணத்திற்கு அவசியமானது தான். ஆனால் எல்லாவற்றிலும் லாபம் ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் ஏகாதிபத்தியங்களின் கைகளில் அறிவியல் மட்டும் மக்களுக்கு பயனுள்ள வழியில் மட்டுமே செல்லும் என்று யாரால் உறுதி கூற முடியும்? செவ்வாயில் நுண்ணுயிரிகள் இருக்கிறதா என்பதை ஆளில்ல்லா விண்கலங்கள் மூலம் ஆராயும் அறிவியல் கேவலம் கொசுக்களை ஒழிப்பதை நோக்கி ஏன் பயணப்பட முடியவில்லை? அறிவியலை வியப்பதற்கான ஒன்றாக கருதாமல் வாழ்க்கைக்கானதாக மாற்ற வேண்டுமானால் சமூகம் மாற வேண்டும், அரசியல் மாற வேண்டும். அந்த மாற்றம் நேரும் போது தான் அறிவியல் மக்களின் கைகளில் இருக்கும்.

Thanks : Senkodi

Friday, June 29, 2012

சிறுகதை: மூதூர் மொகமட் ராபி

 





இலுப்பம் பூக்கள்! 

   




ந்த பாடசாலைக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது நேரம் காலை பத்து மணியைத் தாண்டியிருந்தது. அந்த இடத்திலே இப்படியொரு பாடசாலை இருக்கின்றதா என்று வியந்தவாறு முன்புற ஆசனத்திலிருந்து இறங்குவதற்குத் தயாரானேன். 'சேர், இந்தாங்க பைல்' என்று இஞ்சினை நிறுத்தாமல், ஒருகையால் ஸ்டீயரிங்கைப் பிடித்தவாறு எடுத்துத் தந்தான் பஷீர்.
     

 'பஷீர், வாகனத்தை உள்ள போடவேணாம். ரிவர்ஸ் எடுக்கக் கஷ்டம்இ உன்ட வீடு இஞ்ச எங்கேயோதானே பக்கத்துலதானே இருக்கு...? நாங்க வர லேட்டாகும். போய் ஏதும் சாப்பிட்டுக் குடிச்சிட்டு வாறதெண்டா போயிட்டு வா!' என்று சொல்லிவிட்டு நாங்கள் இறங்கியதும் மகிழ்ச்சியோடு விர்ரென புறப்பட்டுப்போனான். 


அவன் சென்றதும், இடது புறமாக இருந்த பிரதான வாயில் வழியாக நானும் என்கூட துணைக்கு அனுப்பப்பட்டிருந்த கோட்டக் கல்விப்பணிப்பாளர் பெரியநாயகம்  ஸேரும் உள்ளே நுழைந்தோம். அப்போது திடீரென அவர், 'ரனீஸ், நீங்க  உள்ள போங்க! நான் பக்கத்தில போய் ஒரு கிட்கார்ட் ஒண்டு எடுத்திட்டு வாறன்' என்று போனைக் பார்த்துக்கொண்டே சற்றுத் தள்ளியிருந்த சில்லறைக் கடையை நோக்கிச் நடக்கலானார்.


அது ஒரு 1சீ தரத்திலுள்ள பாடசாலை.  பிரதான வாயிலுக்கு இடதுபுறமாக ஒரு இருதள மாடிக்கட்டிடமும் சுற்றிலும் இரண்டொரு பழைய கட்டிடங்களும் மத்தியிலே ஒரு திறந்த முற்றமும் இருந்தன. அந்த முற்றத்தின் ஓரங்களில் விரித்துவைத்த பச்சைக்குடைகளாய் இலுப்பை மரங்கள் சில வரிசை கட்டி நின்றிருந்தன. நான் உள்ளே சென்றபோது பாலர் வகுப்புச் சின்னஞ்சிறு மாணவர்கள் முற்றத்திலே இரைச்சலுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். புதிதாய்த்தோற்றமளித்த மாடிக்கட்டிடத்தில்தான் அதிபர் காரியாலயம்  இருக்கும் என்ற யூகத்தோடு அதை நோக்கி நடந்தேன்.



அப்போது ஒருவரையொருவர் துரத்தி வந்த இரு சின்னஞ்சிறு பாலகர்கள் என்கால்களின் மீது வந்து மோதிக்கொண்டு தடுமாறி நின்றார்கள். பழக்கமில்லாததால் என்முகத்தை அண்ணாந்து பார்த்து செய்வதறியாது விழித்தார்கள்;. அவர்களிடம் குனிந்து, 'ஹலோ! குட்மோனிங்! உங்கட அதிபர் எங்க?' என்று கேட்டேன். அவர்கள் இருவரும் காட்டிய திசையானது எனது யூகத்துக்கு நேரெதிராக இருந்தது. ஆச்சரியத்துடன் அவ்விரு சிறுவர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு பழைய கட்டிடத்தை நோக்கித்திரும்பி  நடந்தேன். தரைமீது இறைந்து கிடந்த இலுப்பம் பூக்களின் வாசனை வழியெங்கும் கூடவே வந்தது.


நான் முகம்மது ரனீஸ்கான்.
எல்லோரும் சுருக்கமாக ரனீஸ் என்றுதான் அழைப்பார்கள். இயற்கைத் துறைமுக நகரத்தின் வலயக்கல்வி அலுவலகத்திலே நிர்வாக அலுவலராக இருக்கின்றேன். இந்தப் பதவிக்கு நான் நியமிக்கப்பட்டு வெறும் ஒன்றரை வருடங்கள்தான் பூர்த்தியாகியுள்ளது. இப்போது நான் வந்திறங்கியுள்ள  இந்தப்பாடசாலையிலே கற்பிக்கும் ஒர் ஆசிரியர் தொடர்பாக சிறுவிசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக எனது மேலதிகாரியினால் அனுப்பப்பட்டிருந்தேன்.

 'அஸ்ஸலாமு அலைக்கும் ஸேர்!' 

குரல்வந்த திசையிலே முகம் தவிர உடல் முழுவதையும் கறுப்பு அங்கியினால் போர்த்திருந்த ஒர் ஆசிரியை நின்றிருந்தார். அவரை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருந்தது போலத் தோன்றியது. குரலும் பரிச்சயமானது போலிருக்கவே, 'நீங்க...?' என்று வினவினேன்.

'நான்தான் ஸேர், மரினா டீச்சர்! வைஸ் ப்ரின்ஸிப்பல்... இப்ப கொஞ்சம் முதல் நீங்க...டெலிபோன்கோள் பண்ணினது எனக்குத்தான்! வாங்க ஸேர்!'

'ஓ! நீங்கதானா அது! இதென்ன ஒவ்பிஸை லொக் பண்ணி வச்சிருக்கிறீங்க!? ப்ரின்ஸிப்பல் இல்லையா?' என்றவாறு சுற்றிலும் நோட்டமிட்டேன். தூரத்து வகுப்புகளிலே கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியைகள் சிலர் என்னைச் சிறிது கலவரத்தோடு எட்டிப்பார்ப்பது தெரிந்தது.

'அவரா..? அவர் இப்ப கொஞ்ச முதல்தான் ஸேர்.. ஒரு மையத்து வீட்டுக்குப் போனார்..கோல் பண்ணிக் கூப்பிடவா ஸேர்?' 

அறையைத் திறந்து அதிபரின் மேஜைக்கு முன்னாலிருந்த ஆசனத்தில் என்னை அமரச்செய்தபின்பு மின்விசிறியைச் சுழலவிட்டார், மரினா ஆசிரியை. நான் இருந்த இடத்திலிருந்து பார்த்தபோது புதிய மாடிக்கட்டிடத்தின் படிக்கட்டுக்கள் நேரே தெரிந்தன.

'முதல்ல என்னை ஸேர் என்டு கூப்பிடுறதை நிப்பாட்டுங்க மிஸஸ் மரீனா. ஐ'ம் ரனீஸ். ஜஸ்ட் கோல் மீ மிஸ்டர் ரனீஸ் ஓகே! வேணாம்..டீச்சர்!, அதிபர் ஷோர்ட் லீவ்லதானே போயிருக்கிறார்..அவர் வாற மாதிரி வரட்டும். நீங்க கொஞ்சம் இங்க நிண்டால் போதும். ஓகே! அவரைக் கூப்பிடுங்க!'

'யாரை ஸேர்...ஸொறி! யாரைக் கூப்பிட?'

'அட உங்களுக்குத் தெரியாதா என்ன...? நான் இங்க வரமுதல்ல கோள்பண்ணி, லீவு முடிஞ்சு இண்டைக்கு அவர் வந்திருக்கிறாரா என்டு உங்களிடம்தானே விசாரித்தேன். மறந்திட்டீங்களா என்ன? சொல்லுங்க பாப்பம்!' என்றேன் லேசான கோபத்துடன். எனது கண்களை நேரே பார்க்க முடியாமல் வேறு எங்கோ பார்வையைத் திருப்பிக் கொண்டார் அந்தப் பெண்மணி.

'ஓ! ஷாபிக் ஸேரையா..? இருங்க கூட்டிட்டு வாரேன்!' என்று அந்த ஆசிரியை வெளியேறிச் சென்றவர் சற்று நேரத்திலே திரும்பிவந்து,  'அவரு 10ம் வகுப்பில படிப்பிச்சிட்டிருக்கார். நான் விசயத்தைச் சொல்ல, அவசரமா...என்று திருப்பிக் கேட்கிறாரு...? அவர் எப்பவுமே...இப்படித்தான்...' என்றார் திரும்பி வந்த மரீனா டீச்சர்.

'சரி, பரவாயில்லை.. அவர் பாடத்தை முடிச்சிட்டே வரட்டும். படிப்புத்தானே முக்கியம்...? மரினா டீச்சர் நீங்களும் க்ளாசுக்குப் போங்க!' என்று கூறிவிட்டு எழுந்து நின்று யன்னலினூடாகப் வீதியைப் பார்த்தேன். அங்கு தூரத்திலே இருந்த சில்லறைக் கடையிலே என்னுடன் வந்தவரான பெரியநாயகம் யாருடனோ  பேசிக்கொண்டு நிற்பதைக் கண்டேன்.

இந்த விசாரணைக்கு நான் வந்ததே ஒரு பெரிய கதை.



ஓய்வுபெற்ற பழைய கல்விப்பணிப்பாளரைத் தொடர்ந்து கடந்த வாரம்தான் புதிதாக பதவியேற்றவராகிய  ரவீந்திரன் ஸேர் இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னை தனது பிரத்தியேக அறைக்கு அழைத்திருந்தார். இப்போது நான் வந்திருக்கும் இந்தப் பாடசாலையின் பெயரைக்கூறிவிட்டு, 'ரனீஸ், உங்களுக்கு நான் வித்தியாசமான ஒரு வேலை தரப்போறன். நீங்களும் எப்ப பார்த்தாலும் பைல்களோடையும் கம்ப்யூட்டரோடையும் மாரடிச்சிட்டிருக்கீங்கதானே...? இன்டைக்கு டிப்ரெண்டா ஒரு வேலை செய்யுங்க. ஒருக்கா நான் சொல்லுகிற ஸ்கூலுக்குப் போய் அங்க யாரோ ஷாபிக்கோ... ஷாபிக் என்டு சொல்லி ஒரு மாஸ்டர்... ஒருத்தன்..இருக்கிறானாமே...? ம்ம்.. எல்லாம் உங்கட ஆக்கள்தான்!. எதுக்கெடுத்தாலும் கூடக்கூட றூல்ஸ் கதைச்சி ஸ்கூலக் குழப்பிட்டு இருக்கிறானாம் என்று நம்மட தனபால் சொல்லிட்டிருந்தார்.. கொஞ்சம் என்ன ஏது என்டு பாத்திட்டு வாங்களேன்...ரனீஸ்' என்றார்.

'ஓக்கே...ஸேர், ஆனா நான் எப்படி இந்த வேலையை...?'

'ஆக்சுவலா, இது நாந்தான் போக வேண்டிய வேலை...! யூ நோ! நான் வந்து பொறுப்பெடுத்ததுக்கு இன்னும் மத்த வேலைகளே முடியல்ல..! அதோட நான் கொஞ்சம் பெற்றிக்கலோ போய் வரவேண்டியிருக்கு...! ம்ம்.. நீங்க அங்கே பெரிசா ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை.'

'சரி ஸேர்'

'நீங்க அவனுக்கு அங்க என்ன பிரச்சினையென்று முதல்ல பாருங்க! அவன் டைமுக்கு க்ளாசுக்குப் போய் பிள்ளைகளுக்கு நல்லாப்படிப்பிக்கிற ஆளாம் என்டு நம்மட இங்லீஷ் ஏடீயும்;  சொன்னவ. பொதுவா ஒருவன் நேரந்தவறாம  வகுப்புக்குப்போய்  நல்லாப் படிப்பிச்சானென்டா  நிச்சயமா அவனுக்கு இந்த 'நோட்ஸ் ஒப் லெஸ்ஸன்', லெஸ்ஸன் ப்ளானெல்லாம் எழுதிவைக்க நேரமிருக்காது தெரியுந்தானே...? அதைவச்சே ஏதாவது பிழையப் புடிச்சு... அதை இதைக் கேட்டு.. சும்மா தெரியாதா... ரனீஸ், கொஞ்சம் ஆளப் பயங்காட்டிட்டு வாங்க...!  அது போதும்..?'

'நான் மட்டும் தனியாகவா..?'

'இல்லை...நம்ம டீடீஈ பெரியநாயகம் சும்மாதானே இருக்கிறாரு...கூட்டிட்டுப் போங்க..மற்றது, அந்த ஸ்கூல் விசயங்களை நம்மட தனபால் ஸேருகிட்ட கேளுங்க.. நிறையக் கதை கதையாச் சொல்லுவாரு..' என்று
நமுட்டுச்சிரிப்புடன் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் அந்தச் சிரிப்புக்குரிய அர்த்தம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.     


நான் தற்போது நிர்வாக உத்தியோகத்தராக இருக்கும் அலுவலகத்திலே அனுபவம் நிறைந்த பெரியநாயகம் உட்பட பலதரப்பட்டவர்களும் பணிபுரிகின்றார்கள். அவர்களிலே இன்னும் பாடசாலையிலே கற்பிக்க வேண்டிய பல ஆசிரியர்கள் மட்டுமல்ல எங்கள் மேலதிகாரி ரவீந்திரன் ஸேரின் நண்பரான தனபால் போன்ற சில முன்னாள் பாடசாலை அதிபர்களும் அடக்கம். நாடுமுழுவதும் இருக்கும் பாடசாலைகளிலெல்லாம் ஆசிரியர்கள் தட்டுப்பாடுள்ள நிலைமையிலே இவர்களையெல்லாம் ஏன் இங்கே வலயக்கல்வி அலுவலகத்திலே வீணாக வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று வந்த புதிதிலே நானும் வியந்திருக்கின்றேன். ஆனால் கற்பித்தல் திறமையை இழந்துவிட்டவர்களும் பாடசாலைப் பணத்திலே ஊழல்கள் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகி பெற்றோர்களாலும் ஊர்மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட  அதிபர்களும்தான் அலுவலகத்திலே ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பிரகிருதிகள் என்ற இரகசியம் பின்புதான்  எனக்குத் தெரியவந்தது.


முன்னாள் அதிபர் தனபால், இப்போது நான் விசாரணைக்காக வந்திருக்கும் இந்தப் பாடசாலையிலே நீண்ட காலமாக அதிபராக இருந்தவராம். அவரது பதவிக்காலத்திலே இந்த பாடசாலைக்கு வருகின்ற எந்தவொரு கல்வியதிகாரியையும் அயர்ந்து போய்விடச் செய்துவிடுவாராம்.  அந்தளவுக்கு ஆவணங்களையெல்லாம் மிகநேர்த்தியாகவும் இற்றைப்படுத்தியும் வைத்திருப்பாராம். இதற்காகவே ஹிட்லரைப் போன்று தன்கீழ் வேலை பார்த்த ஆசிரியைகளையெல்லாம் சாறாகப்பிழிந்து காட்டியவராம். தன்னை ஒரு சிறந்த நிர்வாகி என்று கல்வி அலுவலகம் கொண்டாட வேண்டுமென்பதே அவருடைய முதன்மையான நோக்கமாக இருந்த காரணத்தால் ஆவணங்களை தயார் செய்து வைத்திருந்த அளவுக்கு இந்தப்பாடசாலையின் கல்வி அபிவிருத்தியையோ மாணவர்களின் ஆளுமை விருத்தியையோ அவர் வளர்த்தெடுக்கத் தவறிவிட்டார்.


கல்வியதிகாரிகளிடம நல்லபேர் வாங்கிய இறுமாப்பிலே திளைத்த முசுட்டுப் பேர்வழியான தனபாலுக்கு ஒருகட்டத்தில் கர்வம் உச்சிக்கேறியதாம். பெற்றோர்கள் நலன்விரும்பிகள் பொதுமக்கள் யாரையுமே மதிக்காமல் நடக்கத் தொடங்கினாராம். இதனால் இந்த ஊர்மக்களின் அதிருப்தியும் எதிர்ப்புணர்வும்  பெருகியதிலே  கடைசியிலே ஒருநாள் அது ஓர் பெரும் ஆர்ப்பாட்டமாக வெடித்தது. அந்த வெடிப்பின் முனைப்பிலே, 'இந்தச் சண்டாளன் எமக்கு வேண்டவே வேண்டாம்!' என்று ஏறத்தாழ ஊர்மக்கள்  அனைவரும் ஒன்றுசேர்ந்து அடித்துத் துரத்திவிட்டதனால்தான் வேறுவழியின்றி எங்கள் அலுவலகத்தில் அஞ்ஞாதவாசம் செய்து கொண்டிருக்கின்றார் இந்த தனபால்.


இப்போதெல்லாம் எங்கள் அலுவலகத்திலே எங்காவது மூலையிலே குந்தியிருந்து கொண்டு தன்னை அவமதித்தவர்களையெல்லாம் எப்படிப் பழிதீர்க்கலாம் என்று கறுவிக் கொண்டிருப்பதுதான் அவரது பிரதான வேலை. அதேவேளை தற்போது எங்கள் பணிப்பாளர் ரவீந்திரன் ஸேர் உட்பட தனது சமவயது நண்பர்களிலே பலர் கல்வியதிகாரிகளாக இருப்பதால் அவர்களை நச்சரித்து சில காரியங்களைச் சாதித்துக் கொண்டிருப்பதையும் நானறிவேன். அந்தக் காரியங்களிலே பிரதானமானது எது தெரியுமா?; இந்தப் பாடசாலையிலே இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் தனக்கு வால்பிடித்துப் பணியாற்றிய சில பழைய ஆசிரியைகளை  பயன்படுத்தி இப்போதுள்ள புதிய அதிபரையும் மீறி தனது விருப்பு வெறுப்புக்கேற்ப இந்தப் பாடசாலையிலுள்ள தனது எதிரிகளையெல்லாம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதுதானாம்


'என்ன அனீஸ்.. பெரிய யோசனைபோல.. என்னவாம் ஆள் வந்திருக்கானா?' என்றபடி உள்ளே வந்து அருகிலே இருந்த நாற்காலியிலே அமர்ந்து ஆசவாசப்படுத்திக் கொண்டார், பெரியநாயகம். சற்றுத் தூரத்தில் எங்கோ ரயில்வண்டியொன்றின் இரைச்சல் ஓசை கேட்டது.

'ஓம் ஸேர்! ஆள் க்ளாஸ்ல இருக்கிறாராம். பாடத்தை முடிச்சிட்டே
வரச்சொல்லியனுப்பியிருக்கிறேன்.  அதுசரி, நம்ம ரவீந்திரன் ஸேர் சொன்ன மாதிரி, உண்மையில நோட்ஸ் ஒப் லெஸ்ஸன் எல்லாம் ஆள் வச்சிருக்க மாட்டாரா ஸேர்?'

கையிலிருந்த கிட் கார்டைச்சுரண்டி தொலைபேசியின் இலக்கங்களை
ஒவ்வொன்றாக அழுத்திக் கொண்டிருந்த பெரியநாயகத்திடம் கேட்டேன்.

' அட! ஏன் வச்சிருந்தா பயமா? இப்பிடியான ஆளையெல்லாம் பிழை புடிக்கிறதுக்கு எவ்வளவோ விசயம் இருக்கு.. ஏதாவது இருக்காமலா போகும்..? நாங்களெல்லாம் எத்தனை வருஷமா...இதைப்போல எத்தனை பேரை...கவுத்திருக்கோம் தெரியுமா?'

'அத விடுங்க ஸேர், இதுக்கு முதல்ல ஷாபிக் ஸேரைத் தெரியுமா  உங்களுக்கு?'

'ஏன் தெரியாம...? அவன் ஆள் இஞ்ச சந்திமடத்தில நித்தியானந்தாவுல படிப்பிச்சவந்தானே... .பிறகு எட்டுவருசம் முடிஞ்சதால தாஹிரா கொலீஜுக்கு ட்ரான்ஸ்பர் கேட்டுப்  போனான். அங்க போய்  ரெண்டு வருசம் போறதுக்குள்ள  இஞ்ச மாறி வந்திட்டான்...'

'அப்பிடியா, தாஹிரா கொலீஜ்ஜில இவருக்கு என்ன ப்ரச்சினை.. ஸேர்?'
'ச்ச்! அது தம்பி எங்க போனாலும் இவன் சும்மா இருக்க மாட்டானே..! மத்தவனெல்லாம் வாயைப் பொத்திகிட்டு இருக்கிறத ஏத்துக்கிட்டு சாட்டுக்கெண்டாலும் வேலைசெய்யிற மாதிரி நடிச்சிட்டிருப்பானுகள்.  இவன் சின்ஸியரா வேலை செய்வான்.. ஆனா ஆள் வாயை வச்சிட்டு இருக்க மாட்டான்.!'

'அப்பிடி என்னதான் ஸேர்  பேசுவாரு..?'

'இப்ப வருவான் பார்க்கத்தானே போறீங்க..! அவனுக்குத் தான் பெரிய அறிவாளி என்ற நெனைப்பு! அவனை விட்டா நேர்மையான ஆள் இந்த உலகத்தில கிடையாது என்று நினைச்சிட்டிருக்கான்! இஞ்ச சந்தியில நித்தியானந்தா கல்லூரியில இருக்கிற நேரம் அவன் படுத்தின பாட்டுலதான் அந்த மனுஷன் அதிபர் கே. தேவநாயகம் இப்ப வேலையும் இல்லாம இன்டடிக்ஷன்ல கிடந்து இப்ப கொஞ்சநாள் என்ட ஒபிசுலயும் பிறகு சின்னச்சின்ன ஸ்கூல்லயும் மாறிமாறிக் கிடந்து தட்டழியுது.. சே! பாவம்டாப்பா அந்த ஆள்!'

'யாரு...? கொஞ்ச காலம் உங்களோட ஒபிசுல இருந்தாரே.. அந்த வேர்ல்ட்புட் ஸ்கூல் பிள்ளைகள்ற மதிய உணவுக் காசுல விளையாடி.. புடிபட்ட அதிபர் தேவநாயகம்தானே..? அவர் எப்படியும் அறுபது லட்சத்துக்கு மேல பிள்ளைகளுக்குச் சேர வேண்டிய காசைச் சுருட்டினதா...' நான் வாக்கியத்தை முடிக்கவில்லை.

'நீங்க பாத்தீங்களா? அதை நீங்க உங்கட கண்ணால பாத்தீங்களா ரனீஸ்? சரி, இதெல்லாம் ஒலகத்துல நடக்காததா? எல்லாருஞ் செய்யிறதுதானே..? இவனுக்கு என்ன வந்தது..? இவன் இவன்ட படிப்பிக்கிற வாத்தி வேலையை மட்டும் ஒழுங்காப் பாத்திட்டுப் போகாம அவரோட பிரச்சினைப் பட்டு அங்க இங்கே ஜனாதிபதிக்கெல்லாம் இங்லீஷ்ல கடிதம் எழுதி...' 

அவர் ஏதேதோ சொல்லிக்கொண்டே செல்ல எனக்கு 'ஜிவ்' வென்றிருந்தது.
ஓகோ இவர்தானா அது? கடந்த வருடம் நான் வந்த புதிதிலே நடந்த விடயம் அது. நித்தியானந்தா கல்லூரியிலே ஏழைப்பிள்ளைகளுக்காக அரசாங்கமும் வேர்ல்ட்புட் நிறுவனமும் அனுப்பிய மதிய உணவுப்பொருட்களில் அதிபரும் அவரது சகபாடிகளும் இணைந்து மோசடி செய்து ஏப்பம் விட்ட ஊழல் விடயத்தை அம்பலப்படுத்தியவர் இவர்தானா...?
அந்த மோசடி அதிபரைக் கண்டிக்க வேண்டிய எங்களுடைய அலுவலகமே அவரைக் காப்பாற்றுவதற்காக  அந்த ஊழலையும் மோசடியையும் மழுப்பிக்கொண்டிருந்த வேளையிலே துணிந்து நின்று எதிர்த்துப் போராடி நியாயத்தை நிலைநாட்டிய  ஆசிரியர் என்று அப்போது கேள்விப்பட்டு நான் வியந்தது இவரைத்தானா? இப்போது நான் விசாரிக்க வந்திருப்பதும் இவரைத்தானா?

'என்ன ரனீஸ்.. திடீரென்று ஒரு மாதிரி ஆயிட்டீங்க?' என்னை மீண்டும் நனவுலகத்துக்கு வரவழைத்தார் பெரியநாயகம்.

 ' ஒண்ணுமில்ல... இப்பத்தான் ஸேர் எனக்கு விஷயமே விளங்குது. இவரை எனக்கு ஏற்கனவே தெரியும் ஸேர்! ரெண்டு மாசம் முன்னால ஒருநாள் என்னைத் தேடி ஒபிஸுக்கு வந்திருந்தாரு. அவருக்கு ஏதோ அஞ்சு வருஷத்துக்குரிய சம்பள உயர்ச்சிப்படிவம் நிரப்பப்படாமல் இருந்ததற்காக  சப்ஜெக்ட் க்ளார்க் வதனி என்னிடம் அனுப்பியிருந்தா...'

'அப்படியா? வந்து என்ன கேட்டான்...?'

' அவர் எதுவும் கேட்கயில்ல.. நான்தான் ஸேர் கேட்டேன், ஏன் ரெண்டு மூன்று வருசத்துக்குரிய தரங்கணிப்பீடு, இன்க்ரிமென்ட் போம்ஸ் எல்லாம் நிரப்பித்தரவில்லை என்று கேட்டு காரணத்தை எழுத்தில தரும்படி கேட்டேன். அதுக்கு அவர் என்ன சொன்னாரு தெரியுமா?'

'என்ன? ஏதாவது ஏடாகூடாமா சொல்லியிருப்பானே...?

' ம்ம்! 'நான் காரணத்தை சொல்றேன் மிஸ்டர் ரனீஸ். அது எழுத்தில தரக்கூடியதுதானாண்டு கேட்டுட்டுச் சொல்லுங்க.. உங்களுக்கு ஓகேயெண்டா பிறகு எழுதித்தாறேன்' என்று சொன்னாரு!'

' பாத்தீங்களா, பாத்தீங்களா? அவன்ட திமிரைப் பாத்தீங்களா..? நெனைச்சேன்.! அவன் இப்பிடித்தான் கதைப்பான்! உங்களுக்கு 'மிஸ்டர் ரனீஸ்' போட்டா கதைச்சவன்? திமிர் புடிச்சவன்! அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?'

'காரணத்தைச் சொல்லச் சொன்னேன்.. சொன்னாரு. ஆனா அவர் சொன்ன காரணத்தை எழுதினா.... அவ்வளவுதான் ஸேர். அதனால வேற ஒரு காரணத்தை எழுதி வாங்கிட வேண்டியதாப் போயிட்டு ஸேர்?

'அப்படி என்னதான் புதினமான காரணம் சொன்னான்?'

'நீங்க சொன்ன விசயம்தான்! நித்தியானந்தா கொலீஜ் அதிபரின் 'வேர்ல்ட்புட்' மதிய உணவுக் காசு சுருட்டலுக்கு எதிர்ப்புத்தெரிவிச்சுத் தான் தட்டிக்கேட்டதாலதான் தனக்கு அவர் இன்க்ரிமென்ட் போம்ல சிபாரிசு செய்து சைன் பண்ணித் தரவேயில்ல என்று சொன்னார் ஸேர்..!'

இப்போது பெரியநாயகம் எதுவும் பேசவில்லை.

அப்போது வாசலிலே நிழலாடியது. எங்கள்  ட்ரைவர் பஷீர்தான் வந்திருந்தான்.
'சேர், பிக்அப்பை தூரத்துல நிழல்ல பார்க் பண்ணிருக்கன். போவக்குள்ள கூப்பிடுங்க!' என்று சொல்லிவிட்டு வெளியேறியவனை, ' ஏய்! பஷீர் இஞ்ச வா! நீ இந்த ஏரியா ஆள்தானே? உனக்கிட்ட கேட்டாத் தெரியுமே... ' என்று உள்ளே
கூப்பிட்டு எடுத்தார் பெரியநாயகம்.

 'ஓம் ஸேர். இஞ்ச பக்கத்துலதான் கோச்சி ரோட்டோரம் பள்ளிவாசலுக்குக் கிட்டதான் ஸேர் வூடு..  ஏன்ட சின்ன புள்ளையும் இஞ்ச இந்த ஸ்கூல்லதான் ரெண்டாமாண்டுல படிக்குது. ஸேர்..!' என்றான் தலையைச் சொறிந்தபடி.

'அட்றா சக்கை.!  ரனீஸ், பாத்தீங்களா? நம்ம கையிலேயே ஒரு பேரண்ட்டை வச்சிக்கிட்டு... சரி, இங்க இருக்கிற ஷாபிக் ஸேர் எப்பிடிடா பஷீர்? இந்த ஊர்லதானே அவரும் இருக்கிறாரு? ஏதும் கரைச்சலான ஆளாடா?'

அவன் உடனடியாக பதிலேதும் கூறாமல் எனது முகத்தைப் பார்த்தான்.


அவனது தயக்கத்தை புரிந்து கொண்டவனாக, 'பரவாயில்லை, உள்ளதைச் சொல்லுங்க பஷீர். நாங்க அவருக்கிட்ட இதைப்பத்திச் சொல்லப் போறதில்ல!'

' எனக்குத் தெரிஞ்சதை நாஞ்சொல்றேஞ் சேர்...! அவரு நல்லாளா இல்ல கூடாதாளா என்டெல்லாம் எனக்குத் தெரியா ஸேர். ஆனா எப்ப பாத்தாலும் ஸ்கூல்ல படிப்பிக்கிற ஆள்தான் ஸேர்! புள்ளைகளுக்கு ஏமாத்தாம பாடம் நடக்கணுமெண்டுதான்  நிப்பாரு. இந்தக் களவு பொய்க்கெல்லாம் ஒத்துக்க மாட்டாரு ஸேர்! தனக்குச் சரியென்டு படுறதை பயப்படாம யாருகிட்டயும் தைரியமாப் பேசுறவருதாஞ் சேர் அவரு...'


அவன் தயங்கித் தயங்கிச் சொல்லிமுடித்ததும் பெரியநாயகத்தின் முகத்திலே ஈயாடவில்லை.

'சரி, பஷீர், நேத்துக் காலையில ஒபிஸ்ஸில இருந்து நாம கச்சேரிக்கு
வாகனத்துல போனோம்தானே? அப்ப தனபால் சேர் என்னை மறிச்சு இந்த ஷாபிக் சேரைப் பத்தி என்னவோ பிழையா கண்டபடியெல்லாம் சொல்லிட்டு இருந்தார்தானே.. அந்தநேரம் ட்ரைவர் ஸீட்டுல இருந்து நீங்களும் கேட்டுட்டுத்தானே இருநதீங்க...  அப்ப ஏன் இதைப்பத்தி எதுவுமே பேசாம சும்மா இருந்தீங்க...?' என்று நான் அவனைக் கேட்டேன்.

' யா..அல்லாஹ்! அதை எப்படி ஸேர் சொல்றது? நம்மட  தனபால் சேர்ட
கொணஞ் சரியில்ல சேர். அவர வேணாமெண்டு சனம் தொரத்தினதுலயும் ஞாயமிருக்கு சேர். நாங்களும் அதில இருக்கிறம் என்டு அவருக்கும் நல்லாத் தெரியும். அவருக்கு விரோதமான டீச்சர்மாரையும் சேர்மாரையும்  நம்மட புதுசா வந்திருக்கிற ரவீந்திரன் சேருக்கிட்ட அநியாயமா போட்டுக் குடுத்துக்கிட்டிருக்கிறாரு.. அப்பிடி என்னையும் ஏதாவது வம்புல மாட்டிவுட்டுருவான்ற பயத்துலதான் ஸேர் நான் அன்டைக்கு எதுவுஞ் சொல்லயில்ல. ஆனா அல்லாண்ட ஒருவன் எல்லாத்தையும் பாத்திட்டு இருக்கான் ஸேர்..!'

அவனால் மேலே சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது. 

 'ஆனா, இப்ப சொல்றேன் ஸேர். அவரு ஷாபிக் சேரைப்பத்திச் சொன்னதெல்லாம் அல்லாவுக்கே அடுக்காது. அந்த கேவலமான மனிசன் தனபால் சேர்ரட கதையை நம்பி இவருக்கு ஏதும் கெடுதல் பண்ணிராதீங்க ஸேர்..! அந்தப் பாவம் உங்களையும் உங்க புள்ளைகளையும் கூட வுடாது ஸேர்!' என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே போய்விட்டான் பஷீர்.

அவன் வெளியிலே சென்ற சிறிது நேரத்திற்கு நானும் பெரியநாயகமும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அந்த அறைமுழுவதும் ஒருவித
சங்கடமான மௌனம் நிலவியது.

அப்பொழுது பார்த்து பாடம் ஒன்று நிறைவு பெறுவதற்கான மணியும் ஒலித்து ஓய்ந்தது.


'இப்ப என்ன ஸேர் செய்றது..?'  வெகுநேரத்தின் பின்பு நான்தான் மௌனத்தை உடைத்தேன்.

'ம்ம்..! நம்ம நம்மட கடமைiயைச் செய்வோம் ரனீஸ்! வேறு என்னத்தைத்தான் செய்றது?' என்றார் பெரியநாயகம் பலகீனமாக.

' இல்ல ஸேர். இவ்வளவு விளக்கமுள்ள ஒரு மனிசன் இந்த விசாரணையைப்
பத்தியும்  நிச்சயமாகக் கேட்கத்தான் செய்வார். யார் தன்மேல புகார் தந்தது என்று கேட்டால் என்னத்தைச் சொல்லுவது...? அதனாலதான் யோசிக்கிறேன்..'

'அவர்மேல என்னென்ன பிரச்சினைகள்...? ஏதும் எழுத்தில
தந்திருக்கிறாங்களா?'


'அப்படியெல்லாம் எதுவுமேயில்லை. நான்தான் ஒரு வசதிக்காக சில விடயங்களைக் குறிச்சிட்டு வந்தேன்.. சொல்லப்போனால் ஆக்சுவலா இது ஒரு அனொபிஸியலான விசாரணைதான்..ஸேர். அதுவும் தனபால் ஸேர்ட தனிப்பட்ட ப்ரெண்ட்ஷிப்புக்காக ரவீந்திரன் ஸேர் இவரைக் கொஞ்சம் வெருட்டிட்டு வரச்சொன்னதுதான்...விசாரிக்கப்போய் அதுவே பெரிய பிரச்சினை ஆகிவிடாதா ஸேர்!?' என்று நான் கேட்க,


'சரி.. சரி, நம்ம அவனுக்கிட்ட 'நோட்ஸ் ஒப் லெஸ்ஸ'னையே கேட்டுப் பார்ப்போம். ம்ம்.. அதையும் அவன் எழுதிக்கிழுதி வச்சிருக்காமல் இருக்க வேணுண்டா சாமி!.' என்றார் பெரியநாயகம் கவலையுடன்.

அப்போது மாடிக்கட்டிடத்திலிருந்து ஷாபிக் ஆசிரியர் எங்களை நோக்கி இறங்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

அவர் நடந்து வரும் வழியியிலே தரையெங்கும் இலுப்பம் பூக்கள் இறைந்து கிடந்தன.
***

-மூதூர் மொகமட் ராபி
(2012.06.27)





Friday, June 22, 2012

யார்...? & யார்...?





யூகித்துப் பாருங்கள்!











நண்பர்களே!

கீழே தரப்பட்டிருப்பதை சற்றுப்படித்துப் பாருங்கள். இது, இந்திய தமிழ் சினிமாவிலே தத்தம் துறையிலே மங்காப்புகழுடன் இன்னும் இருந்துவரும் இரு பெரிய நட்சத்திரக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட விடயம்.

ஒரு கலைஞரைப் பற்றி மற்றொரு கலைஞர் கூறியிருக்கும் ஒரு குறிப்பு இது. நீங்கள் இலகுவிலே கண்டுபிடித்துவிடாதிருப்பதற்காக மட்டும் ஓரிரு சொற்களை மட்டும் மாற்றியிருக்கின்றேன்.

இவர்கள் இருவரும் யார், யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம். முடியாது போனால் அல்லது விடையைச் சரிபார்க்க நினைத்தால் அடியிலே தருகின்றேன் பின்பு சாவகாசமாய் பார்த்துக்கொள்ளலாம்.



அந்த கிராமத்துக் குழந்தையை எனக்குத் தெரியும்.


இந்த பிள்ளைக்கு இசை தெரிந்த அளவு சமூக சாதுர்யம் தெரியாது. அந்த சாதுர்யம் தனக்கு இல்லை, என்ற விமர்சனத்திற்கு அஞ்சி வேடிக்கை மனிதர்கூட்டத்தில் சேராமல் கர்வமாய் தவழ்கிறது.


சத்தியமாய் இந்தக் குழந்தைக்கு வியாபாரம் தெரியாது. ஆனால் கறாரான வியாபாரிபோல் நடிக்கும். நடிப்பில் என்னளவு தேர்ச்சி இல்லாததால் குட்டு வெளிப்பட்டுக் குழம்பும்.


நான் இசைக் கலைஞனாக இருந்திருந்தால் அவராக இருக்க ஆசைப்பட்டிருப்பேன்.


அதேபோல் அவர் நடிப்புக் கலைஞனாக இருந்திருந்தால் என்னைப் போல இருக்கவே ஆசைப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.


சகபாலன்
..............................???






இவர்களில் யார்?











 இவர்களில் யார்?

இவர்களில் யார்?



 இவர்களில் யார்?



















இவர்களில் யார்?







சரி, உங்கள் பொறுமையைச் சோதித்து போதும். இதோ விடை:


"அந்த கிராமத்துக் குழந்தையை எனக்குத் தெரியும்.


இந்த பிள்ளைக்கு இசை தரிந்த அளவு சமூக சாதுர்யம் தெரியாது. அந்த சாதுர்யம் தனக்கு இல்லை, என்ற விமர்சனத்திற்கு அஞ்சி வேடிக்கை மனிதர்கூட்டத்தில் சேராமல் கர்வமாய் தவழ்கிறது.


சத்தியமாய் இந்தக் குழந்தைக்கு வியாபாரம் தெரியாது. ஆனால் கறாரான வியாபாரிபோல் நடிக்கும். நடிப்பில் என்னளவு தேர்ச்சி இல்லாததால் குட்டு வெளிப்பட்டுக் குழம்பும்.


நான் இசைக் கலைஞனாக இருந்திருந்தால் இளையராஜாவாக இருக்க ஆசைப்பட்டிருப்பேன்.


அதேபோல் இளையராஜா நடிப்புக் கலைஞனாக இருந்திருந்தால் என்னைப் போல இருக்கவே ஆசைப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.


சகபாலன்
கமல்ஹாசன்"




- 'Mutur'  Mohammed Rafi

Wednesday, June 20, 2012

மலையடியில் மரணிக்கும் மதநெறிகள்!







மூதூர்   'மூணாங்கட்டைமலை'

விவகாரம்:





னுராதபுரம் - பொலநறுவை - யாப்பஹுவ - குருநாகல்  - கண்டி - கம்பளை...       
                       என்று நமது இலங்கைத்தீவிலுள்ள சில நகரங்களின் பெயர்களை வரிசைக்கிரமமாகக்கூறிக் கொண்டு வந்தால் உங்களைப்போன்ற சிறகுகளின் நீண்டகால  வாசகர்களுக்கு உடனடியாக மனதிலே தோன்றுவது என்னவாக இருக்கும்?

இதுவும் ஒரு புதிதாக உருவான நீண்டதூர பேருந்து தடமோ என்று நினைக்க மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. இலங்கையின் வரலாறுபற்றி சிறிதளவு அறிந்திருந்தாலே போதும் பண்டைய இலங்கையின் தலைநகரங்களின் இடம்பெயர்வு ஒழுங்கு என்பதை இலகுவாகக் கண்டுபிடித்து விடுவீர்கள்.
இதேபோல அதே அனுராதபுரத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றுமொரு ஊர்களின் வரிசைக்கிரமத்தைக் கீழே தருகின்றேன். இதனைப்பற்றி ஏதாவது புரிகின்றதா என்று முயன்று பாருங்கள்..

அனுராதபுரம் - தம்புள்ள - மூதூர் - தெகிவளை- காலி...

என்ன ஏதாவது புரிந்ததா நண்பர்களே? இருங்கள் விளக்கமாகக் கூறுகின்றேன்.

        மூன்று தசாப்தங்களையும் பல்லாயிரம் உயிர்களையும் கோடிக்கணக்கான பணத்தையும் மனித உழைப்பையும் ஏப்பம்விட்டதன் மூலம் நமது அழகிய இலங்கைத்தீவின் எதிர்காலத்தையே நாசமாக்கியது  உள்நாட்டு யுத்தம்.  அந்த பேரழிவு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், அண்மைக்காலமாக சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அசிங்கம்பிடித்த ஆக்கிரமிப்புக்கும் அடாவடித்தனத்துக்கும் இலக்காகிவரும் முஸ்லீம் மக்களின் இருப்பிடங்களின் அல்லது வணக்கஸ்தலங்களின் ஊர்களின் ஒழுங்கு வரிசைதான் அது.


ஆம் நண்பர்களே, ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்கும் ஓநாய்கள்போல கடந்த வருடம் அனுராதபுரத்தில் ஒட்டுப்பள்ளம் எனும் பிரதேசத்திலே அமைந்திருந்த முஸ்லீம்களில் ஒருசாரார் புனிதமாக மதித்துப்போற்றும் கல்லறை ஒன்று அந்தப்பிரதேச பௌத்த மதகுருக்கள் சிலரின் தலைமையிலான உள்ளுர் காடையர்களினால் பொலீசார் வேடிக்கை பார்த்திருக்க உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டதை யாவரும் அறிவோம்.



அதனையடுத்து இலங்கையின் தூங்கா நகரமான தம்புள்ளையில் பௌத்த மதகுருக்கள் சிலரின் தூண்டுதல் வழிகாட்டலுடன்  60 வருடங்களுக்கும் மேலான காலப்பழமைவாய்ந்த பள்ளிவாசலைத் தகர்ப்பதற்கும் அங்கிருந்து அகற்றுவதற்கும் ஆர்ப்பாட்டக்குழு ஒன்று முயன்றனர். இதன்போது ஓரளவு பள்ளிவாசல் சேதத்திற்குள்ளானது.


அதே போன்று இனவாத சக்திகளால் தூண்டப்பட்ட இளைஞர் குழு தெகிவளையிலே காலம்காலமாக வசித்துவரும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் தொழுகைபுரியும் பள்ளிவாசலொன்றின் பாதுகாப்பையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கிவிட இப்போதும் முயன்று கொண்டிருக்கின்றனர்.




புத்தளம் - சிலாபம் வீதியிலுள்ள ஆரியசிங்களவத்தை கிராமத்திலே வசித்துவரும் முஸ்லீம் குடும்பங்கள் தமது சொந்த காணியிலே தொழுகைக்காக நிர்மாணம் செய்த தற்காலிக பள்ளிவாசலின் இருப்பை எதிர்த்து அமைதியின்மையையும் நெருக்கடியையும் ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்குழு ஒன்று அங்குள்ள முஸ்லீம்களை வற்புறுத்தி அந்த இடத்தை வெறும் குர்-ஆன் ஓதலுக்குரிய மதரஸாவாக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று ஒரு சட்டத்தரணி ஆவணத்திலே கையெழுத்தும் பெற்றுள்ளனர்.


காலியிலே ஒன்றாக வாழ்ந்துவருகின்ற சிங்கள-முஸ்லீம் மக்களிடையே பிரிவினையையும் குரோதத்தையும் உருவாகிவிடும் விதமாக இனவாதசக்திகள் முஸ்லீம்களின் வியாபாரத்தலங்களின் மீது கதவுகளிலும் பூட்டுகளிலும் மனிதமலத்தை விசிறியும் பன்றியின் இரத்தத்தைப் தெளித்தும் காட்டுமிராண்டித்தனம் புரிந்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி அந்த முஸ்லீம் வர்த்தக நிலையங்களின் நீண்டகால வாடிக்கையாளர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.


இவ்வாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக முஸ்லீம்களின் மீது திட்டமிட்டதும் எழுந்தமானதுமான தாக்குதல்கள் நிகழ்ந்தவாறுள்ள நிலையிலே, தற்போது உள்நாட்டு இனமுறுகல் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலே ஒன்றான கிழக்குமாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேசத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றது.





மூதூர் நகரிலிருந்து தென்புறமாக ஏறத்தாழ நான்கு கிலோமீற்றர் தொலைவிலே திருகோணமலை – மட்டக்களப்பு ஏ-14 வீதியை அண்மித்துள்ள கிராமம்தான் ஜபல்நகர். இங்கு முஸ்லீம்களும் தமிழர்களும் நீண்டகாலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். நெடுஞ்சாலைகளை முன்பு மைல் அளவுத்திட்டத்தில் வைத்திருந்த காலத்தில் 64ம் மைல்கல்லிலே அமைந்திருந்த காரணத்தால், 'அறுபத்தி நாலு' என்று இந்தப்பகுதி அழைக்கப்பட்டது. இங்கு அமைந்துள்ள ஓர் மிகமுக்கியமான நில அடையாளம்தான் 'மூணாங்கட்டை மலை' என அழைக்கப்படும் சராசரியாக 200 அடி உயரமுள்ள இந்தத் தொடர்குன்றுகள். இக்குன்றுகளைச்சூழ ஒருபுறம் மக்கள் குடியிருப்புகளும் மறுபுறம் மூதூர்வாழ் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் நெல்வயல்களும் காணப்படுகின்றன.



மூதூர் பிரதேசசபையின் நிருவாக ஆளுகைக்குட்பட்ட இந்த மூணாங்கட்டைமலைக் குன்றானது மூதூர் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒர் இயற்கை வளமாகும். இதனால்; அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தமது  கட்டிட நிர்மாணம், வீதியபிவிருத்திப் பணிகள் போன்ற தேவைகளுக்கு அவசியமான பாறாங்கற்களை இக்குன்றிலிருந்தே உடைத்துப்பெற்று வருகின்றனர். இந்த பாறாங்கல்லுடைத்தல் தொழில் இப்பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்து வாழும் எத்தனையோ ஏழைக்குடும்பங்களின் அன்றாட ஜீவனோபாயமாக இருந்து வருகின்றது.




இந்த நிலையில்தான் கடந்த 08.06.2012  வெள்ளிக்கிழமையன்று சேருவிலை விகாராதிபதி வண. சரணகீர்த்தி தேரோ வின் தலைமையிலே திடீரென பல வாகனங்களில் 20க்கும் அதிகமான பணியாட்கள் மூணாங்கட்டை மலைப்பகுதிக்கு வந்திறங்கினார்கள். அதனைத் தொடர்ந்து குன்றின் உச்சிக்குச் செல்வதற்குரிய படிக்கட்டுத் தொகுதியொன்றை அமைப்பதற்குரிய உபகரணங்களும் இரும்பு மரக்கிராதிகளும் வந்திறங்கின. அத்துடன் அதே 'மூணாங்கட்டை மலை'  குன்றின் அடிவாரத்திலே  சிறியதொரு வணக்கத்தல வடிவிலமைந்த கொட்டில் ஒன்றையும் நிறுவும் முயற்சிகளையும் ஆரம்பித்தனர்.


இதனால் அப்பிரதேசவாசிகள் குழப்பத்திற்கும் பீதிக்குமுள்ளானார்கள். இதனையடுத்து இந்த விடயம் ஊருக்குள் வேகமாகப்பரவியது. விளைவாக ஊர்ப்பிரமுகர்கள் ஒன்றுகூடி சர்வமதக்குழுவின் தவிசாளரின் தலைமையில் மலையடிவாரத்தில் ஆலய நிர்மாணத்திலே ஈடுபட்டுக்கொண்டிருந்த  பௌத்த விகாராதிபதியைச் சந்தித்துப்பேச முடிவு செய்தனர்.


விகாராதிபதிக்கும் அவரது குழுவினருக்கும் அவர்களது மேற்படி நடவடிக்கைகளின் தீய விளைவுகளை எடுத்துக்கூறி சுமுகமான ஒரு இணக்கத்துக்கு வருவதற்காக குறிப்பிட்ட இடத்திற்கு 12.06.2012 செவ்வாயன்று அவர்கள் சென்று பேசியபோது வெகுண்டெழுந்த சேருவில விகாராதிபதி,  தவிசாளரையும் ஊர்மக்களையும் நோக்கி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, 'நாங்கள் 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தநாட்டில் வாழ்பவர்கள். நீங்களோ 500 வருடங்களாகத்தான் இங்கே குடியேறியிருப்பவர்கள். நாங்கள் உரிய மேலிடத்தின் முறையான அனுமதியைப் பெற்றுத்தான் இதனைச் செய்து கொண்டிருக்கின்றோம். எங்களைத் தடுக்க உங்களுக்கு உரிமையில்லை. நாங்கள் நினைத்தால் இந்த நாட்டை விட்டே உங்களைத் துரத்துவோம்' என்றெல்லாம் சத்தமிட்டுள்ளார். இதிலிருந்தே அவர்களது உத்தேச பௌத்த ஆலய நிர்மாணிப்பின் நோக்கத்தினை  தெளிவாக அறியக்கூடியதாகவுள்ளது.


மூதூர் பட்டினத்திலே வாழ்ந்துவரும் ஏறத்தாழ 90 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 300 அங்கத்தவர்களும் தமது ஆன்மீக பேணுதல்களை நிறைவேற்றுவதற்காக பௌத்த விகாரையொன்று ஏற்கனவே இருந்து வருகின்ற நிலைமையில் ஒரு சிங்களவர்தானும் குடியிருக்காத ஜபல்நகரிலே ஓர் பௌத்த ஆலயம் அமைப்பதற்கான தார்மீக நியாயம் எதுவுமே கிடையாது என்பதால் மூதூரிலுள்ள பல சிங்கள மக்களே ஆச்சரியப்படுமளவுக்கு சேருவிலை விகாராதிபதியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இத்தனைக்கும் இந்த மலையடிவார பௌத்த ஆலயத்தின் நிர்மாணிப்பு வேலைகள் பற்றி மூதூரில் வாழும் சிங்களமக்களிடமோ மூதூர் பட்டின விகாராதிபதிக்கோ தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.


அதேவேளை, இந்த 'மூணாங்கட்டை மலை' குன்றுகளின் ஆக்கிரமிப்புக்கு வெறும் ஆலய நிர்மாணம் மட்டுமல்ல வேறு சில நோக்கங்களும் இருப்பதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது  சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்தக்குன்றுகளில் பழங்காலப் புதையல்கள் இருப்பதாக இப்பிரதேச மக்களிடையே நீண்டகாலமாக ஓர் நம்பிக்கை நிலவி வந்திருக்கின்றது.


இதை உறுதிப்படுத்தும் விதமாக 1970 களிலே பௌத்த பிக்கு ஒருவர் புதையலை எடுப்பதற்காக உயிர்ப்பலி கொடுக்கும் நோக்கத்திலே இந்தக்குன்றின் உச்சிக்கு  குழந்தையொன்றைக் கடத்திச் சென்றுள்ள சம்பவத்தை பிரதேசமக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் தகவலொன்றை அடுத்து குன்றின் உச்சிக்கு விரைந்து ஏறிய அன்றைய மூதூர் பொலீசார் பிக்குவின் பலிபூஜையின் இறுதிநேரத்தில் அதிரடியாகப்புகுந்து அந்தக்குழந்தையைக் காப்பாற்றியதையும் குற்றவாளியான பௌத்த பிக்குவைக் கைதுசெய்து கொண்டுசென்றதையும் இன்றும் பல முதியவர்கள்  நினைவு கூருகின்றனர்.





எவ்வாறாயினும் இந்த மலையடிவார ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிச்சயமாக வேறு உள்நோக்கங்கள் கொண்டது என்பதை யூகிப்பதற்கு பெரிய புத்திசாலித்தனம் ஒன்றும் தேவையில்லை. இவர்கள் ஆலயம் அமைப்பதும் பின்பு அந்த இடத்திலே மெல்ல மெல்ல அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்வதும் அதன்பின்னர் அந்தப் பிரதேசங்களிலே காலங்காலமாக வாழ்ந்துவரும் சிறுபான்மையின மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதும் இலங்கையின் பிந்தியகால வரலாற்றுப் பாடங்கள். ஆனால், இவ்வாறான தூரநோக்கற்ற பல நடவடிக்கைளினால்தான் வளம்நிறைந்த நமது அழகிய தீவுதேசம் ஏறத்தாழ கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் இயல்பாக அடைந்திருக்கவேண்டிய பொருளாதார அபிவிருத்தியையும் செழிப்பையும் இழந்து நின்றது என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளாதிருப்பதுதான் வியப்பைத் தருகின்றது.


அதேவேளை அரசுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் அமைச்சர்களும் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் இதுகுறித்து காத்திரமான நடவடிக்கைகள் எதையும் மேற்கௌ;ளாமல் வாளாவிருப்பதையும் அறிய முடிகின்றது. பின்பு இந்த விடயம் குறித்து அண்மையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சரொருவர் மூதூருக்கு வந்திருந்தார்.
மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக மூதூரில் நிகழ்ந்த சர்வமதக்குழு பிரதிநிதிகளின் சந்திப்பிலே அவர் உரையாற்றியபோது, 'அரசாங்கம் மூணாங்கட்டைமலை குன்றிலே ஆலயம் எதனையும் அமைப்பதற்கான எந்த அனுமதியையும் எவருக்கும் வழங்கியிருக்கவில்லை' என்று கூறிச்சென்றார்.




ஆகவே இதிலிருந்து உரிய மேலிடத்தின் அனுமதி பெற்றிருப்பதாக சேருவில விகாராதிபதி சர்வமதக்குழுவின் தவிசாளரிடம் கூறியது பொய்யான கூற்று என்று தெரியவருகின்றது. அவ்வாறாயின் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயற்பட்ட விகாராதியின்மீதும் மலைக்குன்றிலே பௌத்த கொடியை ஏற்றி தற்காலிகச் சிறுஆலயத்தையும் நிறுவிக்கொண்டிருக்கும் அவரது குழுவினர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று விசனத்துடன் வினவுகின்றார்கள் மூதூர் மக்கள்.






எது எவ்வாறாயினும் மூதூர்ப்பிரதேசத்தில் வாழும் ஏறத்தாழ அனைத்து மக்களும் அமைதியான வாழ்க்கையையே விரும்புபவர்கள். ஆனால், ஆக்கிரமிப்புச் சம்பவத்தைத் தெடர்ந்து இங்கு வாழும் சகல இனமக்களின் மனதிலும் சந்தேகமும் நிம்மதியின்மையும் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. இந்த நிலை இவ்வாறே நீடிக்கும்போது பல விரும்பத்தகாத நிகழ்வுகள், அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இனமுறுகல் யுத்தவடுக்கள் இன்னும் மாறாதநிலையிலும் அமைதியாகவே இருந்துவரும் இந்தப் பிரதேசம் மீண்டும் போர்க்களமாக மாறிவிடக்கூடிய நிலையொன்று ஏற்படுமாயின் அதன் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என்று அங்குள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அஞ்சுகின்றனர்.


இந்தப்பிரதேசத்தின் மக்களைப் பிரதிநிதித்துவம்புரியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தங்களது அரசியல் வேறுபாடுகளையும் தனிப்பட்ட நலன்களையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு நிலைமையை எடுத்துக்கூறி, உடனடியாக இந்த இயற்கைவளம் மீதான மத ஆக்கிரமிப்பையும் அதனைத்தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும்; செயற்பாடுகளையும் நிறுத்தவேண்டும் என்பதே இந்த நாட்டில் சமாதானமும் சகஜவாழ்வும் நிலைபெறவேண்டும் எனவிரும்புவோர் அனைவரினதும் விருப்பமாகும்.

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார்களா பார்க்கலாம்!


- Jesslya Jessly 
(2012.06.20)

Sunday, June 17, 2012

மூதூர் : மலையும் வெறியும்





உயர மலையேறும் மதவெறிகள்...!

&
துயர நிலைவீழும்   மதநெறிகள்..!





போருக்குப்பிந்திய இலங்கையில் உள்நாட்டு மக்களிடமும்,வெளிநாட்டு மக்களிடமும் சில பொதுவான  நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் காணப்பட்டன. கோடிக்கணக்கில் பணத்தையும் ஆயிரக்கணக்கிலே உயிர்களையும் விழுங்கிய யுத்தம் ஓய்ந்தது. இனிமேல் விலைவாசி குறையப்போகின்றது. எவரும் எங்கும் எப்போதும் செல்லலாம். எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் சமய கலாசாரங்களைப்பேணி நி;ம்தியாக வாழலாம் என்று அனைத்து இலங்கைமக்களும் நம்பியிருந்ததெல்லாம் முற்றிலும் நியாயமானவையே.


ஏனெனில் வெள்ளைமுள்ளிவாய்க்காலோடு யுத்தம் முடிவுக்கு வந்தகையோடு 'இது இலங்கை மக்களின் நாடு. இங்கு சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேதம்கிடையாது. உங்கள் அனைவருக்கும் சமத்துவமான வாழ்வு நிச்சயமாக உண்டு.' என அன்றுமுதல் கூறத்தொடங்கிய ஜனாதிபதி இன்றளவும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் கூறிக்கொண்டுதான் இருக்கின்றார். மக்களும் ஜனாதிபதியின் தூய்மையான இந்த வாரத்தைகளை நம்பி அது நடைமுறையிலும் நிறைவேற வேண்டுமே என்ற எதிர்பார்ப்புடன் மனதுக்குள் பிரார்த்தித்த வண்ணமுள்ளனர்.


இதே பிரார்த்தனை நாட்டின் அனைத்துப் பிரதேசத்திலும் பரந்து வாழும் முஸ்லிம்களுக்கு இருந்தது போன்றே மூதூர் பிரதேச முஸ்லிம்களுக்கும் பலமாக இருந்ததுண்டு. மூதூரின் வளத்தையும்  வாழ்வையும் மக்களையும் காக்கவென மூதூருக்கு உள்ளும் புறமும் இப்பிரார்த்தனைகள் ஒலிப்பதுண்டு.
2002  பெப்ரவரி மாதம் 2ம் திகதியன்று அரசு- விடுதலைப்புலிகளிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான போது 'இனியெல்லாம் சுகமே...' என எதிர்பார்த்திருந்த மூதூர் முஸ்லிம்களுக்கு பிரச்சினை, சிலுவை வடிவில் வந்தது.


மூதூர் - மட்டக்களப்பு பிரதான வீதியின்  64வது மைல்கல்லில் உள்ள ஜபல் நகரில் மூதூர் பிரதேசத்துக்கே தனியழகு சேர்ப்பதுதான் நில அடையாளமான இயற்கையின் கொடையாகிய மூணாங்கட்ட மலை என அழைக்கப்படும் குன்றுத்தொடராகும். அந்த 'சமாதான' காலத்தில் எல்லா மக்களுக்கும் பயன்பட்டுக்கொண்டிருந்த எல்லோருக்கும் பொதுவான இயற்கை வளமான மலையின் மீது திடீரென ஒருநாள் கொங்றீட் சிலுவைகள் முளைத்தன.


ஊருக்கே பொதுவான இயற்கைவளமொன்றின் மீது மத அடையாளத்தை இட்டுவைப்பது குறித்த மதத்துக்கும் அதனை விசுவாசத்துடன் பின்பற்றும் மக்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடல்லாமல் மக்களுக்கு மத்தியில் வீண் பதட்டத்தையும் தோற்றுவிக்கலாம் என அவ்வேளையிலே சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டனர்.


அவ்வாறிருக்கையில் மலையில் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சிலுவைகள் திடீரென அகற்றப்பட்டன. அவ்வாறு மர்மமான முறையிலே அகற்றியமை தெரியவந்த போது அவை மூதூர் முஸ்லிம்களால்தான் அகற்றப்பட்டதாக  ஆதாரமற்ற வீண்பழி ஒன்றை  அன்றைய புலிப்பயங்கரவாதிகள்  முன்வைத்தனர்.



அதுமட்டுமல்லாமல் அதனைச்சாட்டாக வைத்து மூதூர் முஸ்லீம்கள் மீது ஓர்  திட்டமிட்ட பெரியளவிலான தாக்குதலை புலிகளின் மறவர்படை மேற்கொண்டது. மல்லிகைத்தீவு ராசு, நாவலடி ரஞ்சன்(மூலப்பொட்டி) என அழைக்கப்படும் புலிகளின் மறவர்படை பிரதேசத்தலைவர்களால் பட்டப்பகலில் மூதூர் முஸ்லிம்களின் உயிர் உடமை மீது குறிவைத்துத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.


இதன்போது நான்கு முஸ்லிம்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன் அது முஸ்லீம்களின் புனித ரமழான் நோன்பு காலமாதலால் அதற்குத் தேவையான பேரீச்சம்பழம், அரிசி மற்றும் பலசரக்குப்பொருட்களை ஏற்றிவந்த முஸ்லிம் வர்த்தகர் காஸிம் ஹாஜியாரின் லொறி பச்சனூர் எனுமிடத்தில் மறித்து தீயிட்டுக்; கொளுத்தப்பட்டது.
மேலும் அந்த சமயத்திலே அறுவடைக்குத் தயாராகவிருந்த முஸ்லிம்களின் வயல்களுக்குள் நீரைத் திறந்து விட்டதுடன் கால்நடைகளையும் வயலுக்குள் சாய்த்துவிட்டு மகிழ்ந்தனர்.


ஏன் இந்த கடந்தகால ஞாபகங்கள் என்றால்,நியாயமற்ற வீம்புத்தனமான சமய அடையாள வெளிப்படுத்தல்கள்,திணிப்புகள் என்பன சாதாரண மக்களது வாழ்வில் எவ்வாறு பாரிய தாக்கங்களுக்கு வழிசமைத்துக் கொடுக்கின்றது என்பதை நாம் இரைமீட்கத்தான்.


ஆக, ஏற்கனவே எல்லோருக்கும் பொதுவான மூணாங்கட்டை மலைக்குன்று  தூரநோக்கற்ற மதசார்புள்ள விஷமிகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியதனால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகள் முன் அனுபவமாக இருக்க, இப்பொழுது மீண்டும் மூணாங்கட்டைமலை விவகாரம் விகாரமாய் உருவெடுத்து மூதூர் மக்களை அச்சத்துக்கும் பதட்டத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.


அன்று சிலுவைகள், இம்முறை பௌத்த சமய அடையாளப்படுத்தல்கள்... இதனால் மூதூர் மக்களின் அச்சமும் பீதியும் பன்மடங்காகியிருக்கின்றது.  அண்மைக்காலமாக தீவிரப்போக்குடைய சில பௌத்த பிக்குகள் குண்டர்கள் புடைசூழ அநுராதபுர ஒட்டுப்பள்ளம் சியாரம் உடைப்பு, தம்புள்ள புனிதப்பிரதேச பிரகடனம் மற்றும் மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிமீதான தாக்குதல், ஆரிய சிங்கள மாவத்தை மத்ரசாவுக்கு விடப்படும் அச்சுறுத்தல், தெகிவளை பள்ளிவாசல் மீதான பிக்குகளின் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் இலங்கை முஸ்லிம்களின் சமய அடையாளங்கள் மீதும், மதவிழுமிய நடவடிக்கைகள் மீதும் மதப் பின்பற்றல் குறித்த உரிமையின் மீதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. ஆகவே இதன்பின்னணியாக அல்லது இத்தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே மூதூர் ஜபல்நகர்மூணாங்கட்ட விவகாரத்தைப்பர்க்கவேண்டியிருக்கிறது.


அதாவது இதுவரையிலான முஸ்லிம் சமய அடையாளங்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தம் பெரும்பாலும் சமய அனுஷ்டானத்துக்கு விடப்பட்ட சவாலாக இருக்க, மூணாங்கட்ட மலைப்பிரச்சினை சமய அனுஷ்டானத்துக்கும், வாழ்வாதாரத்துக்கும் சவால் விடுவதாக இருக்கிறது.
கடந்த 2008 ம் ஆண்டு சேருவிலை விகாரையைச் சேர்ந்த பிதம பிக்குவான சரணகீர்த்தி தேரோ அவர்கள், இம்மலையின் மீது பௌத்த சின்னங்கள் இருக்கின்றது எனக்கூறி சர்ச்சையை உண்டு பண்ணிய போது, அது பற்றி நேரில் கண்டு அறிவதற்காக மூதூர் சர்வமதக்குழுவினர் குறித்த பிக்குவுடன் சேர்ந்து மலையுச்சிக்கு ஏறினர். அங்கு பௌத்த புறாவஸ்த்து என்று பிக்கு சுட்டிக்காட்டிய அம்சத்தை அக்குழுவினர் ஆராய்ந்த போது அது 1989ல் இந்திய அமைதிகாக்கும் படையினர்(IPKF) மலை மீது தொலைத்தொடர்புக்கோபுரம் அமைத்து  அதனை அகற்றியபின் பழைமையடைந்து போயிருந்த சீமெந்துக்கட்டுத்தான் அது என அவ்விடத்திலேயே அது நீருபிக்கப்பட்டது.



அதே நேரம் அம்மலையுச்சியில் இருக்கும் கிறேவல் பாங்கான இடத்தில் கல்லில் வடிக்கப்பட்ட மிசான் கட்டைகள் நடப்பட்டடிருப்பது தெரிய வந்தது. அவ்விடயம் அப்போது பி.பி.சி.செய்தியிலும் ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.


விடயம் இவ்வாறு மாறியதால், அத்தோடு அவ்விடயம் குறித்த பௌத்த பிக்குவால் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் மூணாங்கட்டைமலையில் புத்தர் சிலை வைக்கும் சர்ச்சை அதிகார சக்திகளின் பக்கதுணையுடன் பூதாகரமாக எழுந்துள்ளது.


மூதூரைப் பொறுத்தவரையில் 1965ம் ஆண்டிற்குப்பின்பே சிங்கள மக்கள் இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுள் பல குடும்பத்தினர் தம் ஊரான கந்தளாய்க்கு திரும்பிச்சென்றிருக்கின்றனர். தற்போது மூதூர் பிரதேச செயலகத்துக்குள் 293 அங்கத்தவர்கள் கொண்ட 94 சிங்களக்குடும்பங்களே வாழ்ந்து வருகின்றனர்.இவர்களது மார்க்க அனுஷ்டானத்துக்கென தபாலகத்தக்கருகில் ஒரு பெரிய விகாரையும் உண்டு.


இவ்வாறிருக்கையில் கடந்த 01.06.2012 அன்று வெள்ளிக்கிழைமை சுமார் மதியம் 12.25 அணியளவில் சேருவில பிரதம பிக்குவான சரண கிர்த்தி தேரோ அவர்கள் இருபது சிங்கள இளைஞர்களுடன் ஜபல் நகர்மலையடிக்கு வந்து மலையுச்சியில் புத்தர் சிலை வைப்பதற்கான முன்னாயத்தங்களை மேற்கொண்டிருக்கின்றார். ஜபல் நகர் மலையானது,மூதூர் பிரதேசசiயின் ஆளுகைக்கும், பராமரிப்புக்கும் உட்ப்ட்ட ஒரு இயற்கைவளமாகும்.எனவே சேருவில தேர்தல் தொகுதியைச்சேர்ந்த பிக்குவும் குழுவினரும் பிரதேசசபையின் அனுமதி எதனையும் பெறாது மலையை அணுகுவதும்,இயற்கை வளமொன்றை மத ஆளுகைக்கு உட்படுத்துவதும் சட்டவிரோதமானது என பொதுமக்கள் அப்பிக்குவிடம் தம் ஆட்சேபனையை தெரிவித்தபோது தான் உரிய ஏற்பாடுகளோடு வந்து வேலையைக் காட்டகிறேன் என அபப்pக்கு கூறிச் சென்றுள்ளார்.


அவ்வாறு அவர் கூறிச் சென்றதன் பின்னர் சர்வமதக்குழுவினரோ,மக்கள் பிரதிநிதிகளோ குறித்த பிக்குவை அல்லது பௌத்தமதீpடத்தை அணுகி விடயங்களை விளக்கியிருக்கலாம் ஆனால் மக்கள்  அப்பாவித்தனமாக அரசியல் தலைமைகள் அனைத்தையும் வென்று வருவார்கள் என வாளாவிருந்தனர்.


ஏற்கனவே அநுராதபுர சியாரம் உடைப்புக்கு எதிராக வழக்குத்தொடர்வேன் நீதி பெற்று வருவேன். அது நான் செய்தாக வேண்டிய என் கடமை என அரசியல் தரப்பில் இருந்து மக்களை சூடாக்க விடுக்கப்பட்ட வழக்கமான வாய்ச்சவடால் அது என்பதை இனங்காணாமல் இன்னமும் தம் வாக்குப்பலம் வென்று வரும் என மக்கள் நம்பினர்.


இந்நம்பிக்கையின் விளைவு 12.06.2012அன்று தெளிவாகியது. அன்றைய தினம் சேருவில தேரோ, குழுவினருடன் வந்து மலையுச்சிக்கு செல்வதற்கான படிகள் அமைக்கும் கட்டுமானப்பண்களை ஆரம்பித்து வைக்கும் ஸ்தல பூஜா என்று சொல்லிக் கொண்டு சமய அனுஸ்டானத்துடன் பணிகளை ஆரம்பித்து வைத்தார். அதன் போது மூதூர் பிரதேச சபை தவிசாளரும் மாகாணசபை உறுப்பினரும் ஜபல்நகருக்குச் சென்று தேரோவை அனுகிய போது,தகாத வதார்த்தைப்பியோகங்களுடாக தான் தொல்பொருள் தினைக்களத்தின் அனுமதி பெற்றிருப்பதாகவும் நாங்கள் இந்த நாட்டுக்கு 2500 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். நீங்கள் 500 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். என்னை தடுத்தால் அனைவரையும் ஊரைவிட்டே விரட்டியடித்துவிடுவேன் என்றும் அச்சுறுத்தியிருக்கின்றார்.


மூதூர் ஜபல் நகர்மலையைப்பொறுத்தவரை அது மூதூரின் மையப்பகுதியில்  எழில் கொஞ்சும் ஒரு இயற்கை வளமாகும். மனித நாகரிகம் தோன்றியது முதல் மக்களது கருங்கற் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அம்மலையைச் சூழவுள்ள பல்லாயிக்கணக்கான வயல்நிலங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கும், தமிழருக்கும் உரித்தானவை. மலைக்குச் செல்லும் வழியில் ஜபல்நகர் மஸ்ஜிதுன்னூர் என்ற பள்ளிவாசலும், மலையடிவாரத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வணங்குவதற்கென ஒரு சிறு முருகன் கோவிலும் பன்னெடுங்காலமாகக் காணப்படுகிறது. இச்சமயத்தலங்கள் எக்காலத்திலும் மலையின் மீது ஆதிக்கம் செலுத்தியது கிடையாது. மாறாக, மiயைச் சூழவுள்ள தம் விளை நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தம் வணக்கவழிபாட்டை மேற்கொள்ளவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யதார்த்தம் இவ்வாறிருக்க வரலாற்றில் என்றுமே பௌத்த சமய அடையாளம் இல்லாத பூர்வீகமாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் (குடியேற்றினாலன்றி)பௌத்தர்கள் இல்லாத ஜபல்நகர் மலையின் மீது, இப்போது புத்தர் சிலை நிறுவும் பணி அதிகார பக்கபலத்துடன் 12.06.2012 முதல் நடை பெறுகின்றது. அதேவேளை ஏனைய சமய அடையாளம் இருப்பது போல அங்கு பௌத்த சமள அடையாளமும் இருந்து விட்டுப் போகட்டும் என ஒர் அபிப்பிராயமும்  இங்கு முன்வைக்கப்படலாம். ஆனால் இங்கு மக்களது நியாயமான அச்சம் என்னவென்றால் , வரலாற்றில் சிறுபான்மை மக்கள் செறிவாக சுமுகமாக வாழும் பிரதேசங்களில் புத்தர் சிலை நிறுவிடும் போதெல்லாம் நடைபெற்றுவருவதை அனைவரும் அறிவர். ஏனெனில் ஒரு இந்து வழிபாட்டிடம் அமையப்பெற்று அல்லது இஸ்லாமிய வழிபாட்டிடம் அமையப்பெற்று அதுநாளடைவில் அங்கிருக்கும் இயற்கைவளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரிகட்டச்செய்து புனிதப்பிரதேச பிரகடணம் செய்து பூர்வீகமாக வாழும் மக்களையும் அவர் தம் வழிபாட்டிடத்தையும் அசிங்கமானது எனக்குறி அனைத்தையும் வன்முறை மூலம் அகற்றுமாறு தாக்குதல் தொடுத்ததில்லை.


ஆனால் அறுபதுவருடப்பழமைவாய்ந்த தம்புள்ளைப் பள்ளிவாசலும்,காளிகோவிலும் இன்று பௌத்த தேரோக்களின் பார்வையில் அகற்றப்படவேண்டிய அசிங்கங்களாகத்தெரிகின்றன. இவ்வாறு ஒவ்வொரு சிறுபான்மைப்பிரதேசத்திலும் சுத்திகரிப்புத் தாக்குதல்கள் சட்டத்தால் கட்டுப்படுத்தமுடியாதளவுக்கு நடைபெற்றுவருவதை நாளாந்தம் கண்கூடாகக் கண்டு கொண்டுதானிருக்கின்றோம்.



அந்த வகையில் தற்போது ஜபல் நகர் மலைமீதான புத்தர் சிலை நிறுவுதலானது,  எல்லாவற்றையும் போன்ற ஒரு சமய அடையாளம் என்பதற்கு அப்பால் எல்லோருக்கும் பொதுவான இயற்கைவளம் மீதான ஒர் ஆக்கிரமிப்பு என உள்ளுர் மக்கள்அச்சம் கொள்வதில் உண்மையும்,; நியாயமும் இருக்கிறது.
 


தற்போது தம் முதற்கட்ட இருப்பை தக்க வைத்துக்கொள்ளும் வேலைகள் சரண கீர்த்தி தேரோவின் தலைமையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குறித்த தேரோ, அல்லது அவரது சீடர்கள் மலையில் பாறாங்கல்லுடைப்பதற்கு தடை விதிக்கலாம்.(அப்போது 87 மைல்களுக்கு அப்பால் உள்ள கந்தளாயிலிருந்து பல்லாயிரம் ரூபாக்களைச் செலுத்தி பாறாங்கற்களை கொள்வனவு செய்யவேண்டிவரும்)அல்லது விகாரைக்கு வரிகட்டி உடைக்குமாறு கட்டளை பிறப்பித்து கல்லின் கொள்விலையை அதிகரித்துக்கொண்டு போகலாம். அல்லது இவை யாவற்றையும் வென்று அடுத்த சில ஆண்டுகளிலோ,எதிர்கால சந்ததியை நோக்கியோ புனிதப்பிரதேசப் பிரகடனம் புறப்பட்டு வரலாம். அப்போது  கல்லுடைத்தலுடன் தொடர்புடைய ஜீவனோபயத்தை நம்பிவாழும், வாழப்போகும் மக்கள் (தற்போது கல்லுடைத்தலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜீவனோபாயத்தை உடைய குடும்பங்களின் எண்ணிக்கை - 488) பாதிக்கப்படுவார்கள்.




மேலும், மலையைச்சூழவுள்ள பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை புனிதப்பிரதேசம் விழுங்கிவிடலாம். அப்போது மக்களின் ஜீவனோபாயம் வீதிக்கு வந்தவிடலாம். மொத்தத்தில் உள்ளுர் மக்களது வாழ்வும் வளமும் கேள்விக்குறியாவதற்கான சூழலே கட்டமைக்கப்படுகிறது. என நாட்டுநடப்பை கருத்திற் கொள்ளும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர் ஒருவர் உள்நாட்டு யுத்தத்துக்கு முன்பும், பின்பும் திருகோணமலை கன்னியாய் வெந்நீருற்றை தரிசித்தவராக இருப்பின், அங்கு உள்ளுர் மக்களது மத அடையாளத்திற்கு நிகழ்ந்துள்ள கதியை நன்கறிவார்.முன்பு அங்கு இஸ்லாமியப் பெரியாரின் அடக்கத்தலம், பள்ளிவாசல்,சிவன் கோவில் என்பனபோன்ற வற்றை மட்டுமே கண்டிருப்பார். அங்கு  பௌத்த சமய அடையாளத்தையும் கண்டிருக்க முடியாது. ஆனால், இன்று... யுத்தத்திற்குப்பிந்திய கன்னியாயில் பௌத்தசமய அடையாளத்தையன்றி வேறெதனையும் அங்குகாண முடியாதள்ளது. இது யுத்தத்துக்குப்பிந்திய இலங்கைவாழ் சிறுபான்மை மக்களது சமய, கலாசார, பண்பாட்டு அம்சங்களுக்கு நேர்ந்துவரும் கதியின் ஒரு சோறுபதம்.

-மூதூர் முகம்மதலி ஜின்னாஹ்.


Ethnic                        Muslim   Tamil        Sinhala
Families                    10,221       8,194           94
Population                 40,101      27,153        293
Male                          19,824      12,970        139
Female                       20,277      14,183        154
Percentage (%)           59.37         40.20        0.43
                                            



     (statistics-2011 D.S. Mutur)