இலங்கை மார்க்சிய லெனிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் முக்கிய செயற்பட்டாளருமான தோழர் வி. விசுவானந்ததேவன் மறைந்து 27 ஆண்டுகளாகின்றன. தோழர் வி.விசுவானந்ததேவனை இன்று நினைகூரும் முகமாக, 29 ஆண்டுளுக்கு முன்னர் மலையக மக்கள் தொடர்பாக அவரால் எழுதப்பட்ட கட்டுரையொன்று இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
இக்கட்டுரை 1983 ஆண்டு ஏப்பிரல்-மே காலப்பகுதியில் வெளியான 7வது புதுசு இதழில் பிரசுரமானது. மலையகத்தின் அக்காலகட்ட சூழலினையும், மலையக மக்கள் தொடர்பாக அக்காலத்தில் நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களையும், 1983 ஆண்டு காலப்பகுதியிலான நாட்டின் மொத்த அரசியல் நிலைமைகளையும் கருத்திற்கொண்டு இக்கட்டுரை வாசிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மறைந்த தோழர் வி.விசுவானந்ததேவனின் அக்காலகட்டத்து கருத்து என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.
-'Mutur' Mohd. Rafi
மலையக மக்களின் பிரச்சனை
இலங்கைக்கு பிரிட்டிசார் வருகைதந்தவுடன் சில மாற்றங்களைக் கொண்டு வந்தனர். எமது பொருளாதாரத்தை தமது தேவைக்கேற்ப மாற்றினர். எமது நீர்ப்பாசன முறைகள் அழிக்கப்பட்டன அல்லது கவனிக்கப்படாமல் விடப்பட்டன. மலையகத்தில் கண்டிய நிலப்பிரபுக்கள் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு மலைகளிலுள்ள காடுகளும் அழிக்கப்பட்டு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அந்த காலத்தில் தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் நிலவிய வறட்சியான சூழ்நிலையைப் பாவித்து அங்கிருந்து தோட்டங்களிற்கு கூலித்தொழிலாளர்களை கொண்டு வந்தனர். அக்காலத்தில் தமிழ் நாட்டில் நிலவிய சாதிமுறையைத் தமக்கு சாதகமாக பயன்படுத்தினர். உயர்சாதியினரைக் கங்காணியாக நியமித்து அவர்களே ஆட்களைச் சேர்த்து வந்தனர். ஆரம்பத்தில் வீதிகள், புகையிரதப்பாதைகள் அமைப்பதற்கும், பின் காடுகளை அழித்து தோட்டங்கள் உருவாக்கவும் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் நவீன அடிமைகளாக தோட்டங்களில் வைக்கப்பட்டனர். மற்றைய ஆலைத்தொழிலாளருக்கு உரிய உரிமையான தொழில் சுதந்திரமில்லை. தமது உழைப்பு சக்தியை விரும்பிய இடத்தில் சுதந்திரமாக விற்கும் உரிமை கூட இருக்கவில்லை. ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்திற்கு நிர்வாகத்தின் அனுமதியின்றிப் போகமுடியாது. சிங்கள கிராமங்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்டனர். பிரிட்டிசார் இங்குள்ள மக்களைக் கூலிக்கமர்த்தாது இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வந்ததன் காரணங்களை பின்வருமாறு தொகுக்கலாம்.
1. இங்குள்ள மக்கள் குறைந்த கூலிக்கு வேலைசெய்யத் தயாராக இருக்கவில்லை.
2. உள்ளுர் மக்களின் சுதந்திர வேட்கை
3. இவர்களைக் கொண்டு வருவதன் மூலம் இனங்களுக்கிடையில் குரோதத்தினை உருவாக்கி தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தல்.
பிரிட்டிசார் பல தேசிய இனங்களையும் வலுக்கட்டாயமாக ஒரு நிர்வாகத்தில் இணைத்து பின் பிரித்தாளும் தந்திரத்தையும் கையாண்டனர். ஆரம்பத்தில் 1830 ஆம் ஆண்டளவில் தோட்டப்பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள் கோப்பித் தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்பட்டனர். கோப்பிச் செய்கை எதிர்பார்த்த வருவாயைத் தராததினால் கோப்பிச் செய்கை கைவிடப்பட்டது. தேயிலை, றப்பர், தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. கோப்பிப் பயிர்ச்செய்கை காலத்தில் சில மாதங்களில் மட்டும் தொழிலாளர் வந்து பின் திரும்பி செல்லும் போக்கிருந்தது. தேயிலை, றப்பர் செய்கை ஆரம்பமானவுடன் பெரும்பான்மையோர் நிரந்தரமாகவே தங்கிவிட்டனர். 1860 ஆம் ஆண்டளவிலிருந்து தேயிலை, றப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.
தோட்டத் தொழிலாளரது பெருமளவான வருகை 1930 ஆண்டு வரைக்கும் இடம்பெற்றது. ஆரம்பத்திலிருந்தே தோட்டத் தொழிலாளருக்கு எதிரான உணர்வுகள் சிங்கள மக்களிடம் சிங்களத் தலைவர்களால் ஊட்டப்பட்டன. இவர்கள் வந்தனாலேயே சிங்கள விவசாயிகளுக்கு நிலப்பிரச்சனை ஏற்பட்டதாகப் புகட்டப்பட்டது. மேலும் தோட்டங்களுடன் கிராமங்கள் தொடர்புபட முடியாமல் தோட்ட நிர்வாகம் வைத்திருந்ததனால் ஒருவரையொருவர் புரியவோ தமது பொதுப்பிரச்சனைக்காக இணைந்து போராடவோ முடியாத நிலை நிலவி வந்தது. இவர்களிடம் போராட்ட குணாம்சம் மறைந்திருந்ததை யாரும் மறக்க முடியாது. ஆலைத் தொழிலாளர்போல் முன்னேறிய உற்பத்திச் சாதனங்களுடன் உறவில்லாமை, நிலப்பிரபுத்துவத்தை உடைத்து வராமல் ஏகாதிபத்தியத்தால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி உறவு என்பன காரணமாக இவர்கள் நகர்ப்புற பாட்டாளிகளின் அளவு அரசியல் உணர்வு பெற்று முன்னணி பாத்திரம் வகிக்க முடியவில்லை. சில போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 1939 ஆம் ஆண்டு ஹங்குராங்கந்தவில் உள்ள முள்ளோயா தோட்டத்தில் முதன்முதலாக கோவிந்தன் என்னும் தொழிலாளி வீரமரணம் எய்தினார்.
தோட்டத் தொழிலாளருக்கு எதிரான உணர்வுகளைத் தொழிலாளாகள் தலைவர்களும் கொண்டிருந்தனர். முதலாவது அரசாங்க சபையில் (1931க்கு பின்) பெரும் தொழிலாளர் தலைவர் எனச் சொல்லப்படும் ஏ.ஈ. குணசிங்கா போன்றோர் தோட்டத் தொழிலாளருக்கு எதிரான குரலெழுப்பினர். தம்மை சோசலிஸ வாதிகளாகக் காட்டிய சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம். பெரேராவும் பிலிப் குணவர்த்தனாவும் அரசாங்க சபையில் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். தோட்டத் தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்த முதலில் முனைந்தவர் எஸ். நடேசஜயராகும். இவர் 1931 இல் அகில இலங்கை உழைப்பாளர் சம்மேளனம் எனும் அமைப்பை உருவாக்கினார். இது 1933 வரையும் தான் நிலைத்து பின் 1940 இல் ஜவகர்லால் நேருவின் ஆலோசனைப்படியே இலங்கை – இந்திய காங்கிரஸ் உருவானது. இதுவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக உருவெடுத்தது. தொண்டமானின் தலைமையில் தொழிலாளர்கள் அணிதிரண்டனர். 1947 பாராளுமன்றத் தேர்தலில் 7 பிரதிநிதிகள் மலையக மக்களிலிருந்து தெரிவாயினர். அத்தோடு மலையக மக்கள் இடதுசாரிகளை ஆதரித்து அவர்களது வெற்றிக்கு உதவினர். அன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் இலங்கரத்தினாவுக்கு ஆதரவு நல்கி வெற்றி பெறச்செய்தனர்.
இவை யாவும் சேர்ந்து டி.எஸ். சேனநாயக்காவை விழிப்படைய வைத்தது என்றும், இவர்கள் இடதுசாரிகளுடன் நிற்பார்கள் என்பதைப் புரிந்து, சுதந்திரம் கிடைத்தவுடன் 1948 இல் முதல் செய்த வேலை பிரஜா உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி இவர்களது பிரஜா உரிமையை இல்லாது செய்தார். டி.எஸ். இன் இந்நடவடிக்கைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் தனிப்பெரும் தழிழ் தலைவரான ஜீ.ஜீ அவர்கள.; டி.எஸ்.உம் ஜீ.ஜீ உம் தமது வர்க்க நலனில் ஒன்றிணைந்ததில் வியப்பொன்றும் இல்லை. ஏற்கனவே தோட்ட நிர்வாகத்திலும், தோட்டப்பாடசாலை ஆசிரியர்களாகவும் இருந்த யாழ்ப்பாணத்தவர் நடந்து கொள்ளும் மோசமான போக்கினால் யாழ்ப்பாண எதிர்ப்பு தோட்டத் தொழிலாளரிடையே இருந்தது.
ஜீ.ஜீ யின் இத்துரோகத்தனம் யாழ்ப்பாண எதிர்ப்பை மேலும் அதிகமாக்கியது. ஜீ.ஜீ யின் இந்நடவடிக்கையை எதிர்த்தே தமிழ்க் காங்கிரஸிருந்து வெளியேறி தழிழரசுக்கட்சியை செல்வநாயகம், வன்னியசிங்கம் போன்றோர் உருவாக்கினாலும் தோட்டத்தொழிலாளரை அணிதிரட்டிப் போராடவில்லை. தமிழரசுக்கட்சி தமிழ் தேசிய, குட்டி முதலாளிகளின் நலனையே ஆரம்பத்தில் பிரதிபலித்தது. தோட்டத் தொழிலாளரின் நலனில் தேசிய, குட்டி முதலாளிகளின் நலன் தங்கியிருக்காததும், தமிழரசுக்கட்சி பாராளுமன்றக்கட்சி ஆகையால் தோட்டத்தொழிலாருக்கு வாக்கினமையாலும், தோட்டத் தொழிலாளர்களைப்பற்றி அக்கறைப்படவேயில்லை. தொண்டமான 1948 இல் பிரஜா உரிமைச் சட்டத்திற்கு எதிராக ஒருநாள் ஹர்த்தாலுடன் போராட்டத்தை நிறுத்திக்கொண்டார். பின் தொண்டமான் தோட்டத்தொழிலாளரைக் காட்டிக்கொடுத்து நியமன எம்.பி பதவிக்கும் மந்திரிப்பதவிக்கும் யூ.என்.பி யுடன் சங்கமமானார். இடதுசாhரிக் கட்சிகளான லங்கா சம சமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி ஆகியவை கூட வாக்கு இல்லாத இவர்களைத் திரும்பிப் பார்க்கவில்லை. மற்றும் இடதுசாரிகள் பலரும் பராமுகமாயிருந்தனர். மக்கள் விடுதலை முன்னணியினர் 1971 கிளர்ச்சிக்கு முன்பு மிகவும் கீழ்த்தரமான முறையில் இவர்களுக்கெதிராக பிரச்சாரம் செய்தனர்.
1971 ஏப்ரல் கிளர்ச்சியின் முனனோடியான தயாரிப்பு வகுப்புகள் ஜந்தில் இரண்டாவது வகுப்பு முழுவதும் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற பொருளில் பிரதானமாக மலையகத் தொழிலாளருக்கெதிராகவும் பொதுவாக தமிழ் மக்களுக்கு விரோதமானதாகவுமே இருந்தது.
மலையக தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான் ஆரம்பத்தில் பெரிய சங்கமாக இருந்தது. இதன் இந்திய சார்புத்தன்மை பிற்போக்கு தலைமை காரணமாக தொழிலாளர்கள் சிந்திக்கும் ஆற்றலிழந்து தொழிற் சங்க சேற்றுக்குள்ளேயே இருந்தார்கள். இப்பிற்போக்குத் தலைமை சிங்களத் தொழிலாளர்களுடன் தோட்டத்தொழிலாளர் இணைய முடியாதவாறு தடுத்தே வைத்திருந்தது. பின்னர் உருவான அஸிஸ். வெள்ளையன் போன்றோரின் சங்கங்களும் தொழில் தகராறுகள் போன்ற சிறு பிரச்சினைகளுக்கான தொழிற் சங்க நடவடிக்கை என்ற எல்லைக் கோட்டிற்கு அப்பால் செல்லவில்லை. சம சமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட்கட்சிகளினால் உருவாக்கப்பட்ட தோட்டத் தொழிலாளருக்கான தொழிற் சங்கங்களும் தொழிற் சங்க வாதத்திலேயே மூழ்கின. 1965ஆம் ஆண்டிற்குப் பின் உருவாக்கப்பட்ட சண்முகதாசனின் தலைமையிலான செங்கொடிச்சங்கம் ஒரளவு தொழிலாளர்களை அரசியல் மயப்படுத்தினர். இவர்கள் பாராளுமன்றப் பாதையில் செல்லாததனால் இப்படிச்செய்வது சாத்தியமாயிற்று. செங்கொடிச்சங்கத் தோட்டங்களில் தலைமையின் வழிகாட்டலின்றியே பல போராட்டங்கள் நடத்தினர். மடக்கும்பரை, கீனாக்கலை, றங்கலை ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடத்தினர். கீனாக்கலை போராட்டத்தில் இரு தொழிலானர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினார். இவ்வமைப்புக் கூட தொடர்ந்து முன்செல்ல முடியாது போயிற்று. இதற்கான காரணங்கள்:
1: மலையகமக்களின் யதார்த்த நிலைமையை உணராத வறட்டு மார்க்ஸிய பார்வை.
2: தோட்டத் தொழிலாளரே புரட்சியின் முதன்மை சக்தி எனும் தவறான கண்ணோட்டம் (இவர்கள் முக்கியமான சக்தி, முதன்மை சக்தியன்று).
3: தொழிற்சங்கத் தலைமையின் துரைத்தனம்.
இன்னொரு தவறான போக்கும் மலையகத்தில் இருந்த சில அதிதீவிர சக்திகளால் முன்வைக்கப்பட்டது. தொழிற்சங்க வேலையே திரிபுவாத வேலை எனவே தொழிற்சங்கங்களை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்பதே இத்தவறான கண்ணோட்டம் இந்தியாவிலுள்ள சில அதிதீவிரவாதிகளிடமிருந்து இவர்களுக்குக் கிடைத்தது. 1971 ஏப்ரல் கிளர்ச்சியைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்கள் பயம் காரணமாகவும் சுயலாபம் கருதியும் அரசியலற்ற தொழிற் சங்கம், தொழிற்சங்கத்தின் சுயாதீனம் எனும் தவறான கருத்துக்களை முன்வைத்தனர். இதனால் செங்கொடிச்சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் கூட சில துரைமார்களின் வியாபார நிறுவனங்களாக மாறியுள்ளன.
ஒப்பந்தங்கள்
இந்நாட்டில் காலத்திற்கு காலம் பல ஒப்பந்தங்கள் பொருட்களை விற்பது வாங்குவது போல் செய்யப்பட்டன. ஆயினும் நாடற்றவர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. முதலில் இந்திய பாகிஸ்தானிய பிரஜா உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டு 1இலட்சத்து 35ஆயிரம் பேருக்கு பிரஜா உரிமை வழங்கப்பட்டது. பின்னர் 1954ஆம் ஆண்டு நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம் செய்யப்பட்டும் அதனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை. நாடற்றவர் பிரச்சனையைத் தீர்க்க எண்ணி ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் 1964ஆம் ஆண்டு செய்யப்பட்டது இது மக்களினுடைய எந்த விருப்பு வெறுப்பையும் கணக்கிலெடாது இரு நாட்டுத் தலைவர்களும் சரக்கு பரிவர்த்தனை போன்ற தமது ஒப்பந்ததைச் செய்து முடித்தனர்.
இவ்வொப்பந்தப்படி 5இலட்சத்து 25ஆயிரம் பேரை இந்திய அரசு ஏற்றுக் கொள்வதாகவும் 3இலட்சம் பேரை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாகவும் உடன்பாடானது. இவ்வொப்பந்தம் 79ஆம் ஆண்டுடன் காலாவதியாகியும் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கப்பட்டது. இதுவரைக்கும் 3இலட்சத்து 50ஆயிரம் பேர் தான் இந்தியா சென்றுள்ளார்கள். இனப்பெருக்கத்தைக் கணக்கிலெடுப்பின் 3இலட்சம் பேர்தான் இந்தியா சென்றுள்ளனர். 1974ஆம் ஆண்டு ஸ்ரீமாவும் இந்தியாவும் எஞ்சிய 1 இலட்சம் பேருக்கான ஒப்பந்தம் செய்தார்கள். 75ஆயிரம் பேரை இலங்கையும் 75ஆயிரம் பேரை இந்தியாவும் ஏற்றுக் கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. மொத்தமாக 6இலட்சம் பேருடன் குடிப்பெருக்கத்தால் அதிகரிப்பவர்களையும் இந்தியா ஏற்க வேண்டும். மொத்தமாக 4இலட்சமும் குடிப்பெருக்கத்தால் அதிகரிப்பவர்களும் இலங்கையில் குடியுரிமை பெறத் தகுதியுள்ளவர்கள். ஆனால் இலங்கையரசு 7பேர் இந்தியா சென்றால் 4பேருக்குத்தான் பிரஜா உரிமை வழங்குகிறது. எப்படியிருப்பினும் இதுவரைக்கும் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டும் நாடற்றவர் பிரச்சினை தீராத ஒரு பிரச்சனையாகவேயுள்ளது. இவ்வொப்பந்தங்கள் எழுதிய காலத்தில் குறிப்பாக ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் எழுதிய பொழுது சில வறட்டுவாதிகள் இரு முதலாளித்துவ அரசுகளுக்கும் இவ்வொப்பந்தம் எழுதும் அருகதையில்லை. இதுபற்றி நாம் அக்கறைப்படத் தேவையில்லை. சோஷலிஸம் வந்த பின்தான் இவையெல்லாம் தீர்க்கப்படும் என்று பிதற்றினர். அன்றைய அரசில் ஒட்டிக்கொண்டிருந்த சமசமாஜக் கட்சியினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இவ்வொப்பந்தத்தை ஆதரித்தனர். அன்று இவ்வொப்பந்தத்தை ஆதரித்த பலரும் இன்று பாவமன்னிப்புக்காக இவ்வொப்பந்தத்திற்கெதிராகக் கூச்சலிடுவது வேடிக்கையானது. காலங்கடந்து ரத்துச் செய்யும்படி கேட்பதில் அர்த்தமில்லை. விரும்பியோர் இங்கு வாழவும் விரும்பியோர் இந்தியா செல்லவும் வழிவகுக்கும் நிலைமையே நியாயமானது. ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நடைமுறையிலுள்ள இவ்வேளையில் இங்கு இருக்கப்போகும் சகலருக்கும் உடனடியாக இங்கு பிரஜா உரிமை வழங்கும்படி போராடுவதே அவசியமானது.
மலையக மக்களின் இன்றைய நிலையும் பிரச்சினைக்கான தீர்வும்:
நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் வேலையில்லாத் திண்டாட்டம் என்பன சிங்கள மக்களைத் தோட்டங்களை நோக்கி நகர்த்தியது. தோட்டத் தொழிலாளரைக் காட்டி அவர்களுக்கு எதிரான துவேஷத்தைக் கோஷித்தே பல அரசியல்வாதிகளும் சிங்கள மக்களை அணிதிரட்டினர். சென்ற அரசாங்க காலத்தில் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டு சில தோட்டங்களிலிருந்து தொழிலாளர் விரட்டப்பட்டு சிங்கள மக்களுக்குக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. சில தோட்டங்களில் தமிழ்த் தொழிலாளர்கள் உத்தியோகத்தர் வெளியேற்றப்பட்டு சிங்கள தொழிலாளர் உத்தியோகத்தர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இவைகளைக் காரணம் காட்டியே இன்று தொண்டமான் இவ்வரசுக்கு விசுவாசமாக நடக்கும்படி தோட்டத் தொழிலாளரைக் கேட்கிறார். கடந்த அரசாங்கத்தால் தோட்ட முதலாளி தொண்டமானின் தோட்டங்களும் தேசியமயமாக்கப்பட்டது. தொண்டமான் சென்ற அரசாங்கம் பதவியிலிருந்த போது வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தை ஏற்று தமிழ் ஈழ கோரிக்கையை அங்கீகரித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியும் பெற்று சில காலத்திலேயே அவையெல்லாவற்றையும் ஒரு புறம் வைத்து விட்டு ஜே ஆருடன் கூட்டுசேர்ந்து மந்திரிப் பதவியும் பெற்றுத் தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்தார். தொண்டமான் அரசுடன் சேர்ந்திருந்தும் கூட இவ்வரசு பதவிக்குவந்து சில நாட்களில் 1977 ஒகஸ்டில் இனக் கலவரத்தில் தேட்டத்தொழிலாளர் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டனர். கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், தீவைப்பு என்பன நடைபெற்றன. பலர் உயிருடன் கொழுத்தப்பட்டனர்.
1977 வடுக்கள் அழிய முன்னரே மீண்டும் 1981இல் மீண்டும் 1977 போன்ற கொடுமைகள் தொண்டமானுடன் ஒன்றாகவிருக்கும் அதே மந்திரிமாரின் வழி காட்டலில் நடந்தன. இவ்வரசு நட்சா எனப்படும் கிராம விஸ்தரிப்பு மூலம் தொழிலாளரைப் படிப்படியாகத் தோட்டங்களை விட்டு அப்புறப்படுத்தத் திட்டம் தீட்டியுள்ளது. இவற்றை நோக்கும் போது தொண்டமான் தனது வர்க்க நலன் கருதி அரசுடன் இணைந்திருப்பது வியப்புக்குரியதல்ல. 1977 தேர்தலுக்கு தமிழ் ஈழக் கோரிக்கையை உரக்கக்கத்திய கூட்டணி, மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்கு இரகசிய திட்டம் இருப்பதாகச் சொல்லியது. 1977 ஓகஸ்ட் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு வடகிழக்கு நோக்கி வந்த அகதிகளைப் பாதுகாக்க வாழ வழிவகுக்கத் திராணியற்று கூட்டணியினர் கைவிட்டனர். சில சமூக சேவை நிறுவனங்களே இவர்களைக் குடியேற்றியுள்ளன. இவ்விதம் சமூக சேவை நிறுவனங்களின் உதவியுடனும் தன்னிச்சையாகவும் இது வரைக்கும் 1இலட்சம் பேரளவில் வடகிழக்கு பகுதிகளில் வந்து குடியேறியுள்ளனர். இவ்விதம் குடியேறியவர்களுக்கும் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்த மக்களுக்கும் இடையில் இன்னமும் சமூக. பொருளாதார, கலாசார வேறுபாடுகள் காரணமாக சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. காலப்போக்கில் அவை படிப்படியாக மங்கி மறையும்.
இன்று மலையகத்தில் மூன்று வகையான ஸ்தாபனங்கள் மக்களிடையே வேலைசெய்கின்றன.
(1) தொழிற்சங்கங்ள்
(2) சில சமூக சேவை ஸ்தாபனங்கள்
(3) மலையக மக்களின் தனித்துவமான பிரச்சினைகளின் நிமித்தம் உருவான வெகுஜன ஸ்தாபனங்கள்.
தொழிற்சங்கங்கள் யாவும் இன்று வெறும் சீர்திருத்த ஸ்தாபனங்களாகவும் வெறும் சந்தாபிடிக்கும் வியாபார நிறுவனங்களாகவும் மாறியுள்ளன. சுமூகசேவை ஸ்தாபனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக சில சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இவைகள் சிலவற்றின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியனவாகவும் உள்ளன. மக்களை சரியான வழியில் சிந்தித்து பிரச்சினைகளுக்கான தீர்வுக்காகப் போராடவிடாது தடுப்பதுதான் நோக்கம் என சந்தேகிக்கத் தோன்றுகிறது. பெருமளவு வெளிநாட்டு நிதி இவற்றிற்குக் கிடைக்கிறது.
வெகுஜன ஸ்தாபனங்களை நோக்கின் அவை மலையகத்தில் உள்ள சில படித்த இளைஞர்களினால் உருவாக்கப்பட்டன. மலையகத்தில் இப்போது தான் படித்த வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது. எல்லா இடங்களிலும் ஆரம்பத்தில் குட்டி பூர்ஷ்வா வர்க்கம் தான் விழிப்புணர்ச்சி பெறும். மலையக மக்களுக்கான தனியான ஸ்தாபனம் உருவாவது சரியானதும் தேவையானதும் கூட. இவ்வியக்கங்கள் இன்னமும் படித்த சில இளைஞர்களை விட்டு மக்களிடம் செல்லவில்லை. இவ்வியக்கங்களில் குட்டி பூர்ஷ்வா சிந்தனையிலிருந்து விடுபட்ட ஊழியர்கள் உருவாகாமைதான் மக்களிடம் செல்ல முடியாத நிலைக்கான காரணமாகும். இவற்றிற் சில மலையக மக்களை தனியான தேசிய இனம் (யேவழைn) எனும் கருத்தை முன்வைத்துள்ளனர். இதற்கு எதிராக தமிழ் மக்களிடையே உள்ள சில இயக்கங்கள் எல்லாத் தமிழ் பேசும் மக்களைபும் சேர்த்து (மலையக மக்கள், முஸ்லிம் மக்கள், இலங்கைத்தமிழர்) ஒரே தேசிய இனம் (யேவழைn) என முன்வைக்கின்றனர். இதனை ஈழவர் எனவும் அழைக்கின்றனர். இவ்விரண்டு கருத்துக்களையும் தெளிவாகப் பார்ப்போம்.
மலையக மக்களைத் தனியான தேசிய இனம் என்று சொல்பவர்கள் பல நோக்குடையவர்கள் உள்ளனர். ஒரு சாரார் தேசிய இனம் என்பது என்ன என்பதில் தெளிவின்றிச் சிறுபான்மையினங்கள் யாவும் தேசிய இனம் என்று கருதுகின்றனர். இன்னொரு சாரார் மலையக மக்களை தேசிய இனம் என்று சொல்வது அவர்களது அந்தஸ்தைக் கூட்டும் என்ற தவறான சிந்தனையிலும் மலையக மக்களிடையே தமது தனித்துவமான தலைமையை உருவாக்கவும் வேண்டி இந்த கோசத்தை முன் வைக்கின்றனர் மலையக மக்களைத் தனித் தேசிய இனம் என்று அங்கீகரிக்கக் கோரும் இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸின் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பரந்த அளவில் கிளர்ந்து வருகையில் மலையக மக்களை அத்துடன் இணைய விடாது குறுக்கே பிரிக்கின்ற தந்திரோபாயமாகத்தான் இ.தொ. கொங்கிரஸ் இதனைக் கையாள்கிறது. இந்நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேறிய மலையக மக்களையும் இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸ் வடக்கு – கிழக்கு மக்களின் போராட்டங்களோடு இணையவிடாது தனியே பிரித்து வைக்க தன்னாலான எல்லாப் பிரயத்தனங்களையும் செய்கிறது. இது மிகவும் அபாயகரமான போக்கு ஆகும். யதார்த்தத்தில் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் குடியேறிய மலையக மக்கள் தங்களை தங்களை அப்பிரதேச மக்களின் போராட்டங்களுடன் இணைக்க முடியாதவிடத்து இம் மலையக மக்கள் 'தனித்துப்' போய்விடுவார்கள்! இதனை அவர்களுக்கு வலியுறுத்துகிற அதே உயர்த்திய தொனியில் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராளிகளுக்கும் சில விஷயங்களை வலியுறுத்த வேண்டி இருக்கிறது. வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு எடுக்கிற கவனத்தைவிட நூறு மடங்கு அதிகளவு மலையக மக்கள் மத்தியில் அவர்கள் இறங்க வேண்டும். குறிப்பாக வடக்கு-கிழக்கு பகுதியில் குடியேறியுள்ள மலையக மக்களைத் தம்மோடு அணிதிரட்டுவதோடு மலையகத்திலே உள்ளவர்களுக்கு அவர்களுடைய தனித்துவத்தை பேணும் வகையில் அவர்கள் எடுக்கின்ற எல்லாப் போராட்டங்களுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும்.
ஈழவர் என்ற கருத்து வெறும் வறட்டுத்தனமான அணுகுதலிருந்தே உருவானது. யுதார்த்த நிலையைக்கணக்கிலெடுக்காது பிரச்சனையைக் குறைக்கும் நோக்குடன் சுய மனவிருப்பின் அடிப்படையிலே முன்வைக்கப்பட்டது.
ஈழவர் என்ற கருத்தாக்கம் தேசிய இனங்களின் வரலாற்று ரீதியான உருவாகத்தை மறுப்பதோடு மட்டுமல்லாமல் நடைமுறையைக் கவனத்திலெடுக்காத வெறும் கற்பனையாகும். இங்கு முஸ்லிம்கள், மலையக மக்கள் போன்றவர்களுடைய தனித்துவங்கள் சிதைக்கப்படுகின்றன.
தேசிய இனப்பிரச்சனை என்பது சாரம்சத்தில் வர்க்கப் பிரச்சனையே. குறிப்பாக இது விவசாயப்புரட்சியுடன் சம்மந்தப்பட்டது. முதலாளித்துவம் வளர்ந்து சந்தைப் பொருளாதாரம் உருவானவுடனேயே ஒரு மொழி பேசும் மக்கள் ஓரே பிரதேசத்தில் வாழும் மக்களிடையே ஒரு பொருளாதார பிணைப்பு உருவானது. இதன் நிமித்தமே தேசிய இனங்கள் (Nations) உருவானது. மலையக மக்கள் காலனித்துவவாதிகளால் கொண்டு வரப்பட்டதால் சுயமாக நிலப்பிரபுவத்தை வீழ்த்தி உருவான மக்களிடம் உள்ள நிலத்துடனான பிணைப்பிருக்கவில்லை. இந்தியாவிலிருந்து பூரணமாக விடுபடாத நிலை (தமது தாய்நாடான இந்தியாவை எண்ணும் நிலை) இருந்தது. சமூக வரலாற்று பொருளாதாரக் காரணங்களால் இவர்கள் வடக்கு- கிழக்கு தமிழ் மக்களிடம் இருந்து வேறுபாடுடையவர்களாக இருந்தனர். 1948 இல் பிரஜா உரிமை பறிக்கப்பட்டமையாலும் ஸ்ரீமா ௲ சாஸ்திரி ஓப்பந்தம் காரணமாகவும் இவர்கள் இலங்கையின் தேசிய அரசியல் வாழ்விலிருந்து விலகியிருந்தனர். இவர்கள் ஒரு தனியான தேசிய இனமாவதற்குரிய சாத்தியக் கூறுகளை இனவாத அரசுகள் அழித்தன. இதனால் இவர்களால் தனியான தேசிய இனமாக வளர முடியாமல் போய்விட்டது.
1977 இல் இனக்கலவரம் நடந்து முடிந்தவுடன் மலையகத்தில் முன்னோடிகளாக இருந்த பலர்கூட மலையக மக்கள் யாபேரும் இந்தியா செல்ல வேண்டுமென எனப்பிரச்சாரம் செய்தனர் தேசிய இனம் என்ற நிலையில் இருந்திருப்பார்களாயின் சரியானதோ பிழையானதோ தலைமையில் போராடியிருப்பார்கள். இவையாவற்றையும் பார்க்கும் போது மலையக மக்கள் தேசிய சிறுபான்மையினர் என்ற நிலையிலேயே இன்று உள்ளார்கள்.
இவர்களின் பிரச்சனைக்கு தீர்வு என்ன?
இவர்களில் ஒரு பகுதியினர் சிங்கள கிராமங்களில் மத்தியில் வாழ்பவர்கள். குறிப்பாக கண்டி, கம்பளை, மாத்தளை, இரத்தினபுரி, தெனியாய பகுதிகளில் இவ்விதமாக உள்ளவர்கள் உண்டு. இவர்களில் இந்தியா செல்பவர்கள் போக மிகுதியானவர்கள். வடகிழக்குக்கு அல்லது மலையக மக்களுக்கு செறிவாக உள்ள பகுதிகளுக்கு குடிபெயர்வது அவசியமானதாகும். செறிவான பகுதிகளில் வாழ்வோர் தம்மை அமைப்புரீதியில் அணி திரட்டி தற்பாதுகாப்பிற்காக போராடுவதற்கு தாயாராவது அவசியமானதாகும். இவர்களது எதிர்காலத் தீர்வு மாறி வரும் சூழல் மற்றும் மக்கள் போராட்டத்தின் வளர்ச்சி என்பவற்றில் தங்கியுள்ளது.
பின் குறிப்பு:
மலையக மக்களின் பிரச்சனையின் முழுவடிவங்களையும் விரிவாகவும் தெளிவாகவும் ஆராய முடியவில்லை. தொடர்ந்து வரும் கருத்தின் விவாதங்கள் இதற்கான பாதையைத் திறக்கும் என நம்புகிறேன். மலைய மக்களின் சோகத்தை இங்குடன் முடியவில்லை. இங்கு ஆரம்பமாகி ஹட்டன். கண்டி ரெயில்வே ஸ்ரேசன்களிலும் தலைமன்னாரிலும் இராமேஸ்வரம் மண்டபத்திலும் இச்சோகக்கதை தொடர்ந்து பின் தழிழ் நாட்டின் கிராமங்களிலும் நீலகிரியிலும் அந்தமானிலும் முடிவுற்று நீள்கிறது. .இங்கிருந்து குடிபெயரும் குடிபெயர்ந்த நண்பர்களின் கடிதங்கள் பல கதைகள் சொல்லும். எனது நண்பன் சிவானந்தன் கண்டி கலாச்சார குழுவினால் வெளியிடப்பட்ட 'நதி' எனும் சஞ்சிகையில் எழுதிய சென்று 'வருகிறேன் ஜென்ம பூமியே' எனும் கவிதை இம் மண்ணை நேசித்து இச் சமூகத்தின் கொடுமையால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட ஒரு பிரஜையின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரையை எழுதும் போது அக் கவிதையை நினைக்காமல் இருக்கவே முடியவில்லை.
நன்றி: புதுசு, ஏப்பிரல்-மே 1983
No comments:
Post a Comment