Monday, December 16, 2013

ஆசிரியர்கள் Vs மாணவர்கள்



 


"இன்றைய தனியார்மய சூழலில் கல்வி என்பதே கடைச்சரக்காய் ஆகிவிட்ட பிறகு ஆசிரியப் பணி மட்டும் எப்படி தளிர்களை உருவாக்கும் கவனத்துடனும், கண்னியத்துடனும் இருக்கும்? ஆசிரியர்களுக்கு கொடுக்கும் மதிப்பை மாணவர்கள் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் தகுதியாக இருக்கிறார்களா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. நுகர்வுக் கலாச்சார வெறியில் சமூகப் பொறுப்பற்று திரிகிறார்கள் என்றாலும் சிறு தூண்டுதல் செய்தாலும் அதைப் பற்றிக் கொண்டு பற்றிஎரிய மாணவர்கள் என்றும் ஆயத்தமாகவே இருக்கிறார்கள். ஆனால் அந்தத் தூண்டுதலை செய்யும் சுடர்களைத்தான் தனியார்மயம் தணித்து விட்டது.


பொதுவாக கல்வி என்பது மாணவர்களுக்கு கற்கும் ஆசையை தூண்ட வேண்டும். ஆனால் மெக்காலே கல்வி முறையும், கல்வி தனியார்மயமும் சேர்ந்து மாணவர்களை ரப்பர் ஸ்டாம்புகளாக தயாரித்துத் தள்ளுகிறது என்பதோடு மட்டுமல்லாமல் கற்கும் அனுபவத்தை விட்டே வெருண்டோட வைக்கிறது. அதனால் தான் மாணவப் பருவத்திலிருந்து மனிதனாக பதவி உயர்வு பெறுவோர் தேடல் எனும் சிந்தனையே இல்லாமல் இருக்கிறார்கள். எல்லா மாணவர்களுக்குமே தேடல் அனுபவம் தூண்டப்பட வேண்டும் என்றால் அது வெறுமனே கல்வியையும் ஆசியர்களையும் மட்டுமே சார்ந்ததல்ல. சமூகச் சூழலையும் முக்கியமாக உள்ளடக்கியது.


ரஷ்யக் கல்வி முறைக்கும் இந்தியா (இலங்கை போன்ற நாடுகளின்) கல்வி முறைக்கும் உள்ள வித்தியாசமாக ஒன்றைச் சுட்டிக் காட்டுவார்கள்.


நூலில் இருக்கும் யானையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால் இந்தியக் குழந்தை யானை என்று சொல்லும், ரஷ்யக் குழந்தை யானையின் படம் என்று சொல்லும்.


இந்த நுணுக்கமான வேறுபாடு கற்பிக்கும் முறையிலிருந்து ஏற்படுவதில்லை. மாறாக சமூக அக்கரையுடன் கல்வி மாறும் போது ஏற்படுவது. அத்தகைய சமூக மாற்றத்துக்காக நாம் உழைக்க முன்வரும் போது மாணவர்களும் அந்த இலக்கை எட்டிப் பிடிப்பார்கள்."


-'இந்த பயந்தாரி சொன்னதுதான் சரி' எனும் செங்கொடியின் பதிவிலிருந்து

No comments:

Post a Comment