Tuesday, December 17, 2013

நாடகம் : கோவில்யானைநாடகப்பாத்திரங்கள்
 
 
 
 
 
சூரியகோடி - அமரபுரத்துஅரசன்
வஜ்ரி - அந்த அரசனுடைய ஒரேகுமாரன்
நித்தியராமன் - அமரபுரத்தில் ஒரு பெருஞ்செல்வன்
ரணதீரன் - அந்த நாட்டுக் குதிரைப்படைத் தலைவரில் ஒருவன்
சாத்தான் - அமரபுரத்துக் காளிகோயில் பூசாரி.
சந்திரவர்மன் - அங்கதேசத்து அரசன்மகன்; வஜ்ரிக்குத் தோழன்
வஜ்ரலேகை - நித்தியராமன்மகள்; வஜ்ரியின் காதலி
மந்திரிகள், சேனாதிபதிகள், வேலையாட்கள், தோழிகள் முதலியோர்.

காட்சி - 1
 
[அமரபுரத்தில் மிகக் கீர்த்தியும் செல்வமும் உடைய காளிகோயிற் புறத்தே விரிந்த பூஞ்சோலை; சுனைகளும் தடங்களும் நீரோடைகளும் நெருங்கி ஒளிர்வது. அங்கு ஒரு லதாமண்டபத்தில் வஜ்ரலேகை தனியே வீற்றிருக்கிறாள். முன் மாலைப்பொழுது; மிக அழகிய வெயிலொளி.]

வஜ்ரலேகை : (தனக்குள்ளே பேசிக்கொள்ளுகிறாள்.) நல்லையடா நீ! விதியே, நல்லை நீ. ஐந்து பிராயம் ஆகுமுன்னே என் தாயைக் கொன்றுவிட்டாய். என் பிதா தம்முடைய செல்வங்களையும் கவலைகளையும் ஒருங்கே ஒன்று, பத்து, நூறாயிரமாகப் பெருக்குவதிலேயே எப்போதும் ஈடுபட்டுப் போயினர். என்னைத் தவிர வேறுயாருக்கும் தம்பிடி செல்வம் உடைமையாகி விடாதபடி காக்கும் பொருட்டுத் தாம் இரண்டாந்தாரம் விவாகம் செய்யாமல் நிறுத்திக்கொண்டார். என் பொருட்டே தாம் உயிர்த்திருப்பதாகச் சொல்கிறார். என் குழந்தைகளும் என் புருஷனும் நானும் சந்தோஷமாக வாழ்ந்திருப்பதைத் தாம்பார்த்து விட்டுத்தான் சாகவேண்டும் என்ற எண்ணம் வைத்திருக்கிறார்.

அந்த எண்ணம் அவர் மனத்தை அட்டை போலக் கௌவிக்கொண்டிருக்கிறது. நல்லவேளை! எனக்கு இன்னும் கணவனும் குழந்தைகளும் ஏற்படவில்லை. அந்த நிலைமை இன்றைக்கு ஏற்பட்டால், அவர் அதைப் பார்த்துவிட்டு இன்றைக்கே இறந்துபோய் விடுவார் என்று தோன்றுகிறது. மேலும், இந்த எண்ணத்தை வைத்துக்கொண்டு, விரைவில் மணம் புரிந்துகொள்ளும்படி என்னைச் சதா அரித்துக்கொண்டே இருக்கிறார். செல் அரிப்பது போல் அரிக்கிறார். எனக்கோ வயது பதினாறு கழியவில்லை. ஆண்மக்களும் பெண்மக்களும் என்னை மிக அழகுடையவளென்று கருதுகிறார்கள். இந்தத் தேசத்து அரசன் மகனும் மகாசுந்தரபுருஷனும் இளம் பெண்களால் பிரத்தியட்ச மன்மதன் என்று போற்றப்படுவோனுமாகிய வஜ்ரி என்மீது பெருங்காதல் கொண்டிருக்கிறான். இப்படி எல்லா வகையிலும் குறைவின்றி இருக்கும் என் மனத்தைக் கூட விதியே, அடாவிதியே, விதியே, பாழ்த்த விதியே, நீ ஓயாமல் தீயிடைப்பட்ட புழுவைப் போலே துடித்துக்கொண்டிருக்கும்படி செய்வாயெனில் பொருளில்லார், அழகில்லார், மிடிமைக்கும் நோய்களுக்கும் இரைப்பட்டார் - மற்றைய மாதர்களின் மனத்தை என்படச்செய்வாயோ அறிகிலேன். கணவரை இழந்து, பொருளும் இன்றி, அழகும் இளமையும் தவறிய ஸ்திரீகள், காதல் சுவை இனியில்லையென்று தீர்ந்த நிலையுடையோர் எத்தனை ஆயிரம், எத்தனை லக்ஷம், எத்தனை கோடி! அவர்களுடைய அக வாழ்க்கை எங்ஙனம் இயலுகிறதோ? அவர்கள் மனத்தை எத்தனை கவலைப் புழுக்கள்அரிக்கின்றனவோ? அவர்கள் எங்ஙனம் ஆவிதரித்து நிற்கின்றனரோ அறிகிலேன். ஆ! இளமை கழிந்த பிறகும் காதல் சாகாதன்றோ? மனிதர், விதவைகளாகும்படி பலாத்காரம் செய்தாலும் இயற்கை நெறிமாறுமா? எல்லா உயிர்களுக்கும் எப்படியாவது சிறிது சிறிது சுகம் கிடைக்கத்தான் செய்யும். மேலும், உலகத்தில் இன்பம் யாருக்குமே இல்லை என்றும் இவ்வுலகம் எல்லா உயிர்களுக்கும் எப்போதுமே துன்பமயந்தான் என்றும் இந்தக் கோயில் தலைவியாகிய விலாஸினி சொல்வதுதான் ஒருவேளை உண்மையோ எப்படியோ? அப்போது, எனக்குள்ள செல்வமும் இளமையும் பேரழகும் எனக்கு இன்பந்தராமல் இருப்பது வியப்பாக மாட்டாதன்றோ? ஹும்! அப்படி இராது; இந்த உலகத்தில் ஏற்படக்கூடிய பலவகைத் துன்பங்களுக்குச் செல்வம் முதலியன மருந்தாகு மென்பதில் ஐயமே இல்லை. இன்பம் தவறாமல் இருப்பதற்கு வேண்டிய சௌகரியங்கள் பெரும்பாலும் நமக்கு இருக்கின்றன. இன்னும் எங்கேயோ ஒரு குறை இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து நிவிருத்தி செய்துவிட வேண்டும். இந்த உலகம் மாற்ற வொண்ணாத துன்ப இயற்கையுடையது என்போரின் வார்த்தையை நான் நம்பவே மாட்டேன்; மாட்டேன்; மாட்டேன்; மாட்டேன்! இங்கு நித்திய இன்பம் கண்டுபிடிக்க முடியுமென்று நமது வேதாரண்ய குரு சொல்வதையே நான் நம்புகிறேன்.
ஆனால்,அங்ஙனம் இன்பம் எய்தாதபடி நம்மைத் தடுக்கும் குறை எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

(இவ்வாறு தன் மனத்துள்ளே பேசி வருகையில், கடைசி வசனம் அவளையும் மீறி உரத்த குரலில் வந்துவிட்டது. அப்போது அங்கு ரணதீரன் வருகிறான்.)

ரணதீரன் : பெண்ணே, உனக்கு நல்ல காதலன் இல்லாத குறைதான் இருக்கக் கூடியது. (நகைக்கிறான்.)

வஜ்ரலேகை : நீர் யார்?

ரண : அமரபுரத்து வேந்தனுடைய குதிரைப்படையில் நான் ஒரு தளகர்த்தன்.

வஜ்ர : இங்கு ஏன் வந்தீர்?

ரண : கோவிலுக்குப் பூஜைக்காக வந்தேன். மாலைப்பொழுது மிக இனிமையாகத் தோன்றிற்று. சோலையில் சிறிதுநேரம் உலாவி மகிழ்வோம் என்ற எண்ணத்தால் இப்புறம் வந்தேன். இங்கு வந்து நெடுநேரமாக நிற்கிறேன். உன் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றேன். ஆனால் இதுவரை நீ என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. ஏதோ, ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாய் என்று தெரிந்துகொண்டேன். கடைசியாக ஒரு வார்த்தை இரைந்து சொன்னாய். அதற்கு மறுமொழி சொன்னேன்.

வஜ்ர : நல்லது; நீர் போய்வரலாம்.

ரண : கண்மணியே, நின்மீது நான் கரைகடந்த காதலுடையேன்.

வஜ்ர : இங்கு நில்லாமல் போம்.

ரண : நான் இந்நகரத்துக்குத் திரைப்படையில் ஒரு தளபதி. என் பிதா பெரிய சேனாபதிகளில் ஒருவராக இருந்து, சமீபத்திலே நடந்த வங்கத்துப் போரில் மிக வீரத்துடன் உயிர் துறந்தார். எனக்குச் சைனியத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. அரசன் நேரே என்மீது மிக்க அன்பு வாய்ந்தவன். ஆதலால் என்னை யாரோ ஒரு சாதாரண மனிதனாகக் கருதி நீ பேசுவது சரியல்ல. நான் உன்னைக் காதல் செய்வதால் உனக்கு எவ்வித அவமானமும் விளையாது. நான் உன்னை உலகறிய மணம் புரிந்துகொள்ளும் நோக்கமுடையேன். குலத்தில் க்ஷத்திரியன். நாட்டில் உயர்ந்த உத்தியோகம் வகிக்கிறேன். ஆதலால் நீ என்னை எவனோ கதியற்றவனென்று கருதிப் பேசுவதை நிறுத்தி எனக்கு அருள் புரிய வேண்டும். உன்னையன்றி உறுபுகல் வேறில்லை. உன்னைக் கண்ட அளவிலே காதல் கொண்டேன். இது முதற்காட்சியில் விளைந்த காதல். இதுவரை எத்தனையோ ஆயிரம் மகளிருடனே பழகியிருக்கின்றேன். எவளிடத்தும் என்மனம் இங்ஙனம் வீழ்ச்சி பெற்றதில்லை. நீ எனக்குக் கடவுள் காட்டிய பெருங்களிக்கோலம். என்னை இகழாதே! என்னைத் துரத்தாதே; என்மீது கருணை கொள். என்னைக் காதல்செய். எனக்கு நீயே கதி.
வஜ்ர : நீர் இங்கிருந்து போக உடம்படுகிறீரா, இல்லையா?

ரண : நீ நான் கேட்டதற்கு இரண்டில் ஒன்று மறுமொழி சொல். பிறகு நான் போய்விடுகிறேன்; நீ என்னைக் காதல் புரிந்து மணம் செய்துகொள்ள உடம்படுகிறாயா, இல்லையா?

வஜ்ர : நான் உம்மை மணம் புரிதல் சாத்தியப்படாது.

ரண : ஏன்?

வஜ்ர : நான் மற்றொருவனுக்கு என் சுகத்தை ஏற்கனவே வசப்படுத்தி விட்டேன்.

ரண : அவன் யாவனோ?

வஜ்ர : அவன் . . . அவன் . . . அவன் . . . இந்நகரத்தரசன் மகன், வஜ்ரி.
(அந்தச் சமயத்தில் வஜ்ரி வருகிறான். அவனைக் கண்டவுடன் ரணதீரன் கை கூப்பி வணங்குகிறான்.)

வஜ்ரி : கண்மணி! என் பெயரை எதற்காகச் சொல்லுகிறாய்? இந்த - நின் பெயர் என்ன தம்பி? ரணதீரனன்றோ? ஆம் - இந்த ரணதீரனை உனக்கு முன்னமே தெரியுமா?

வஜ்ர : நான் இவரை இதற்கு முன் பார்த்ததில்லை. இப்போது தான் இவர் இங்கு வந்தார். ‘யார் பொருட்டுக் காத்திருக்கிறாய்?’ என்று என்னிடம் கேட்டார். ஆதலால் நின் பெயரைச் சொன்னேன். நீ ஏன் இத்தனை கால தாமதப்பட்டு வந்தாய்?

(ரணதீரன் வணங்கி விடைபெற்றுச் செல்கிறான்.)

வஜ்ரி : நான் அம்மன் கோயில்யானையுடன் விளையாடிக்கொண்டிருப்பதில் எதிர்பார்த்ததற்கு மேல் அதிகப்பொழுது செலவிடும்படி நேர்ந்துவிட்டது. அங்கதேசத்து வேந்தன் மகன் சந்தரவர்மன் இந்நகரத்துக்கு வந்திருக்கிறான். அவனையும் கோயிலுக்கு அழைத்து வந்தேன். நானும் யானையும் விளையாடுவதைப் பார்த்து அவன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். அவன்மனம் விகற்பப்படாமல் அவனுக்கு உபசாரங்கள் செய்து அவனை அனுப்பிவிட்டு நேரே இங்கே வருகிறேன். அது நிற்க. நீ ஏதோ அஞ்சினவள் போலே காணப்படுகிறாயே. அந்த ரணதீர மூடன் நீ பயப்படும்படி ஏதேனும் செய்தானா? அப்படியானால் சொல்; அவனை இப்பொழுதே தேடிக்கொண்டு வரும்படி செய்து தக்க சிக்ஷை விதிக்கிறேன்.

வஜ்ர : அவன் தவறாக நடக்கவில்லை. நீ என்னை எப்போது மணம் புரிந்துகொள்ளப் போகிறாய்?

வஜ்ரி : என்கண்ணே, சந்திரவர்மனுடைய தங்கையை மணம் புரிந்துகொள்ளும்படி என் பிதா வற்புறுத்துகிறார். அந்த விஷயத்துக்காகத்தான் சந்திரவர்மனும் இங்கு வந்திருக்கிறான். நான் எப்படியாவது தந்திரம் பண்ணி அதைக் கலைத்து விடுகிறேன். பிறகு உடனே உன் விஷயத்தைப் பற்றி என் பிதாவுடன் பேசி அவரை நமது மணத்துக்கு இணங்கும்படி செய்துவிடுவேன். நீ பயப்படாதே. அடுத்த தை மாஸத்தில் நாம் மணம் புரிந்துகொள்வோம். அதுவரை, கருணை கூர்ந்து பொறுத்திரு.

வஜ்ர : ஏற்கனவே நீ என்மீது காதல் கொண்டிருப்பதனால், அங்கத்தரசன் மகளை மணம் புரிவது சாத்தியம் இல்லை என்று இப்போதே உன் பிதாவிடம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் நீ ஏன் சொல்லிவிடக் கூடாது?வஜ்ரி : அங்ஙனம் சொல்லுதல் இப்போது சாத்தியம் இல்லை. என்னுடைய பிதாவின் குணம் உனக்குத் தெரியாது. அவர் வழியிலேயே நாம் விட்டுத் திருப்புவதுதான் அவரிடம் காரியத்தை வெல்லும்வழி.

(இருவரும் பிரிந்து செல்லுகின்றனர்.)


காட்சி - 2
 
 
[நித்தியராமன் வீடு. காலை நேரம். நித்தியராமன் காலையுணவு கழித்துச்
சந்தோஷமாகத் தாம்பூலம் தரித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது அவனிடம் ஒரு வேலையாள் வந்து சொல்லுகிறான்.]


வேலையாள் : ஐயனே, தங்களைத் தரிசனம் செய்ய வேண்டுமென்ற கருத்துடன் வெளியே ஒருவர் வந்து காத்திருக்கிறார்.

நித்தியராமன் : பெயர் விசாரித்தாயோ?

வேலையாள் : இல்லை; பார்த்தால் சைனியத்தைச் சேர்ந்தவர் போலே தோன்றுகிறது.

நித்திய : ஓஹோ! அப்படியானால் உடனே வரச்சொல்.

வேலையாள் : கட்டளைப்படி.

(உடனே சில க்ஷணங்களில் ரணதீரன் வந்து புகுகிறான்.)

நித்திய : தாங்கள் வெகுநேரமாகக் காத்திருக்கிறீர்களா? உட்காருங்கள். தங்கள் பெயர் யாது?

ரண : இப்போதுதான் வந்தேன். என் பெயர் ரணதீரன். நான் இந்நகரத்து அரசனுடைய குதிரைப்படைத் தலைவரில் ஒருவன்.

நித்திய : இங்கு எதன் பொருட்டு விஜயம் செய்தீர்கள்?

ரண : தங்களிடம் ஒரு வரம் கேட்கும் பொருட்டு.

நித்திய : என்ன வரம்?

ரண : தங்கள் குமாரியை எனக்கு மணம் புரிவிக்க வேண்டும்.

நித்திய : ஓ! ஐயமின்றி நடத்தலாம். உம்மைப் பார்த்தால் ஆணுக்கு ஆண் மையலுறத் தக்க அழகுடன் விளங்குகிறீர். உயர்ந்த உத்தியோகம் பார்க்கிறீர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் உம்முடைய முகத்தை நோக்கிய அளவில் நல்ல குணவான் என்று தெரிகிறது. அப்படியே செய்யலாம். ஆனால்,அந்தப் பெண்ணுடைய சம்மதத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அவளுக்கு ஒரு தக்க வரன் தேடிக்கொடுத்து, அவள் தன் கணவனுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ந்து வாழ்வதைக் காணும் பொருட்டாகவே நான் இன்னும் உயிர் தரித்திருக்கிறேன். எனக்கு இவ்வுலகத்தில் வேறு எவ்விதமான பற்றுதலும் இல்லை. அவளை நீர் நேரே பார்த்து அவளுடைய சம்மதத்தைத் தெரிந்துகொண்டீரா? இளம் பிள்ளைகள் - அதிலும் இக்காலத்துப் பிள்ளைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அல்லது இப்போதே இங்கு அவளை வரவழைத்துக் கேட்போமே? யாரடா, ஏ வேலையாள்!

ரண : ஹா, ஹா, ஹா, வேண்டாம், வேண்டாம்! வேலையாளைக் கூப்பிடாதேயுங்கள். அவளையும் இப்போது இங்கே அழைப்பித்தல் வேண்டாம். தாங்கள் அவளிடம் தனியாகப் பேசி என்னை மணம் புரிந்துகொள்ளச் சொல்ல வேண்டும். அவள் என்னை ஏற்கனவே பார்த்திருக்கிறாள். என்னை ஒருவாறு விரும்பவும் செய்கிறாள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், வேறொரு கொடிய துஷ்டனுடைய மயக்கத்தில் வீழ்ந்திருக்கிறாளாதலால் என்னை மணம் புரிய இயலாது என்கிறாள். அவன் வெறுமே இவளை மயக்கித் தன் இஷ்டம்போல் சிறிது காலம் வைத்துக்கொண்டிருந்து, அப்பால் சாற்றை உறிஞ்சிக்கொண்டு பழத்தோலை எறிந்து விடுவது போலே இவளை எறிந்துவிடக் கருதியிருக்கிறான். அவன் இவளைச் சடங்குகளுடன் சாஸ்திரோக்தமாக மணம் புரியப்போவதில்லை அவனால் அங்ஙனம் செய்ய முடியாது.

நித்திய : அவன் யார்? அவன் யார்? யார் அந்தப் பாதகன்?
ரண : அதை நான் சொல்லமாட்டேன். பின்னிட்டுத் தங்களுக்கே தெரியும். இந்தச் செய்தியை நான் சொன்னதாகக்கூடத் தங்கள் குமாரியிடம் தாங்கள் தெரிவிக்கக்கூடாது. தெரிவித்தால் காரியம் கெட்டுப்போகும். என்னை அவள் மணம் புரியவேண்டியது தங்கள் விருப்பம் என்பதை மாத்திரம் வற்புறுத்த வேண்டும். நான் இப்போது போய், நாளைக் காலையில் வருகிறேன். அப்போது எனக்கு முற்றும் அநுகூலமான உத்தரம் கொடுப்பீர்களென்று நம்புகிறேன்.
நித்திய : நல்லது, நீர் போய் வாரும். நல்ல சமயத்தில் எச்சரிக்கை கொடுக்க வந்தீர். பெரிய உபகாரம் செய்தீர். உமக்கே என் பெண்ணைக் கொடுக்கிறேன். யோசனை வேண்டுவதில்லை.

(ரணதீரன் போகிறான்.)

நித்திய : யாரடா, வேலையாள்!

(வேலையாள் வருகிறான்.)

வேலையாள் : ஐயனே, யாது கட்டளை?

நித்திய : வஜ்ரலேகையை அழைத்துவா.

வேலையாள் : குழந்தை வஜ்ரலேகை வீட்டில் இல்லை. சிறிது நேரத்துக்கு முன்புதான் வெளியே ஒரு தோழியுடன் சென்றாள். காளிகோயில் பெரிய பூசாரி வீட்டுக்குப் போயிருப்பதாகத் தோன்றுகிறது.

நித்திய : சரி; நீ போ. (வேலையாள் சென்ற பிறகு நித்தியராமன் தனக்குள்ளே யோசனை செய்கிறான்.) நாமும் அங்கே தான் போய்ப் பார்ப்போம். அந்தப் பூசாரி யோகியென்றும், மந்திரவாதியென்றும் பிரசித்தி அடைந்திருக்கிறான். அவனிடம் இந்தப் பெண்ணுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி விசாரணை செய்யலாம். இவள் அங்கே போன நோக்கத்தையும் தெரிந்து வரலாம். என் வஜ்ரலேகையின் உள்ளத்தை மயக்கி அவளை வீழ்த்த விரும்புவதாக ரணதீரனாலே தெரிவிக்கப்பட்ட பாதகனைப் பற்றிய உளவுகளும் அங்கே கிடைக்கலாம் என்று தோன்றுகிறது.

(புறப்படுகிறான்.)காட்சி - 3
 

[ராஜா சூரியகோடியின் அரண்மனையில் ஓர்அறை. அங்கு அரசன் தனியே ஒரு பொன்னாசனத்தின் மேல் வீற்றிருக்கிறான். அவனெதிரே மற்றோர் ஆசனத்தில் காளிகோயில் பெரிய பூசாரியாகிய சாத்தன் (முன்னர் சாத்தான் என உள்ளது) இருக்கிறான்.]


சூரியகோடி : இத்தனையும் மெய்தானா?

சாத்தன் : ஆம்.

சூரிய : இல்லையெனில்?

சாத் : என்னைச் சிரச்சேதம் செய்துவிடலாம்.

சூரிய : சரி. உண்மையென்று வைத்துக்கொள்வோம். இதைத் தடுக்க வழியில்லையா?

சாத் : எதைத் தடுக்க?

சூரிய : எல்லாவற்றையும். முதலாவது, நம் மகன் வஜ்ரி அந்தச் செட்டிமகளை மணம் புரியாதபடி தடுக்க வேண்டும்.

சாத் : அதற்கு வழி நான்அறியேன்.

சூரிய : உன்பலம், உன் சாஸ்திரபலம், உன்னுடைய கிரக நக்ஷத்திரங்களின் பலம் இத்தனையையும் கொண்டு இதைத் தடுக்க முடியாதா? தள்ளும், நான் செய்கிறேன்.

சாத் : தங்களால் முடியாது.

சூரிய : அது எப்படி?

சாத் : மனிதர், பூதங்கள், தேவகணங்கள், யாவராலும் காதலின் வலிமையைக் கடக்க முடியாது. தங்களுடைய குமாரனும் அப்பெண்ணும் தம்முள்ளே மெய்யான காதல் கொண்டிருக்கின்றனர்.

சூரிய : எப்படி? எப்படி? மெய்க்காதலா? அதன் இயல்பு என்னே? எங்குளது? அதனைக் காவியங்களிலன்றி நாம் உலக வாழ்க்கையில் காண்பதில்லை. தோன்றி மறையும் விருப்பமே இயற்கையில் உள்ளது. அது மெய்க் காதலாகாதன்றோ?

சாத் : காவியத்துக் காதல் எங்ஙனமோ தங்கள் மகனுக்கும் அச்செட்டி மகளுக்குமிடையே மூண்டு விட்டது.

சூரிய : அதைத் தடுப்பேன். தடுத்தே தீர்வேன்.

சாத் : முடியாது; முடியவே முடியாது.

சூரிய : என் சொல்லுக்கு இணங்காவிடின் வஜ்ரிக்குப் பட்டம் இல்லை என்று நீக்கிவிட்டு மற்றொரு குமாரனை ஸ்வீகாரம் செய்துகொள்வேன். என் விருப்பத்தைக் கேள். அந்த ரணதீரன் என்ற குதிரைப்படைத் தலைவன் செட்டி மகளாகிய வஜ்ரலேகையை மணம்புரிந்து கொள்ள வேண்டும். நமது வஜ்ரி அங்க தேசத்து அரசன் மகளை மணம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி நடந்தால் எல்லோர் மனமும் திருப்தி அடையும். இவ்விரண்டு விவாகங்களையும் இநத மாத முடிவுக்குள்ளேயே நடத்தி விடலாம் என்று நினைக்கிறேன். இது என் தீர்ப்பு. இதை நீ இப்போதே போய் வஜ்ரி, செட்டி, ரணதீரன் எல்லோருக்கும் தெரிவித்து விடு. என் ஆக்கினையைக் கடந்து என் நாட்டில் ஒன்றும் நடக்கக் கூடாது.

சாத் : ஐயனே, ஹூணதேசத்திலிருந்து, சிறிது காலத்துக்கு முன்பு ஒரு படிப்புள்ள வியாபாரி இங்கு வந்திருந்தார். அவர் எனக்கு ஒரு கதை சொன்னார். தேவரீர் இப்போது கொடுத்த உத்தரவைக் கேட்டபோது எனக்கு அந்தக் கதை நினைப்புக்கு வருகிறது. அந்தக் கதையிலே, ஹூணதேசத்து வேந்தன் ஒருவன், தன்மந்திரியுடன் கடற்கரையிலே அலைமோதும் இடத்தில் சென்று நாற்காலிகள் போட்டு உட்கார்ந்து கொண்டு கடலை நோக்கி, ‘கடலே, நான் பூமண்டல சக்கரவர்த்தி; என் கட்டளைகளுக்கு நீயும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; இதோ ஒரு கட்டளையிடுகிறேன். முதலாவது அதன்படி நட. நாம் இருக்கும் இடத்தில் அலை எறியாதே; சற்றுப் பின்னே விலகிப்போ’ என்றானாம். உடனே, தற்செயலாகக் கடலில் பிரமாண்டமானதோர் புதிய அலை வந்து அவ்விருவரின் நாற்காலியையும் மோதிக்கொண்டு போய்விட்டதாம். அவர்கள் உயிர் தப்புவது பெருங்கஷ்டமாயிற்றாம். அந்த ஹூணராஜன் ஜடமான கடலுக்கு ஆக்கினை பிறப்பித்து வெட்கமடைந்தான். தாங்களோ, ஸூக்ஷ்ம சக்திகளுக்குள்ளே ஸப்த ஸாகரங்களும் கலந்த சக்தியென்று சொல்லத் தக்கதாகிய மூலசக்தியை எதிர்த்துக் கட்டளை போட உத்தேசிக்கிறீர்கள். ஆலை பலாவாக்கினாலும் ஆக்கலாம். மனிதருக்குள்ளே தலைமைப்பட்டோரிடம் வீண் கட்டளை பிறப்பிக்கும் இயல்பு நேராமற் செய்வது பெருங்கஷ்டம்.

(அரண்மனை வாயிலில் கூகூ என்று பலவிதமான ஒலிகள் எழுகின்றன. நாலைந்து வேலையாட்கள் தலை அவிழ, மொழிகுழற, அரசன் முன்னே வந்து நிற்கின்றனர். ஒவ்வொருவனும் இன்னது சொல்வதென்று அறியாமல் திணறுகிறான்.)

சூரிய : என்னேடா கிளர்ச்சி! எதன் பொருட்டு இத்தனை அல்லோலகல்லோலம்? யாது நிகழ்ந்தது? சொல்லுமின்களடா!
முதல் வேலையாள்: ஒரு குடம் ரத்தம்!

இரண்டாம் வேலையாள்: மண்டை கீறிப் போய்விட்டது . . . மூக்கில்குத்தி . . . வாய் கிழிந்திருக்கிறது!

மூன்றாம் வேலையாள்: பிரக்கினை போய்விட்டது!

முதல் வேலையாள்: பிரக்கினை திரும்ப வந்துவிட்டது! இளவரசன் இன்னும் சாகவில்லை.
சூரிய : என்னடா? யார், யார்? இளவரசனா? வஜ்ரியா? நடந்தது என்ன? அவனை யார் வெட்டினார்கள்? தெளிவாகச் சொல்.

முதல் வேலையாள்: காளிகோயில் யானை. அதற்கு மதம் ஏறியிருக்கிறது. முன்பு இரண்டு கால்களுக்கு மாத்திரம் சங்கிலி போட்டுக் கட்டியிருந்தார்கள். இப்போது ஒரு வாரமாக நான்கு கால்களுக்கும் விலங்கிட்டிருக்கிறார்கள். அங்க தேசத்தரசன் மகனோடு, நம் இளவரசன் யானைக்குப் பழம் கொடுக்கப் போனார்.
சூரிய : கோயில்யானையா? என் மகனையா அடித்தது? நான் கெட்டேன் - ஆ! மகனே!


(மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டான்.)


சாத்தன் : கேளப்பா, ஏ வேலையாள்! இளவரசனைப் பற்றிப் பிறகு கவனிப்போம். முதலாவது இங்கு மூர்ச்சை போட்டு விழுந்திருக்கும் அரசனுக்கு வேண்டிய சிகிச்சைகள் செய்ய வேண்டும். இவரைத் தூக்குங்கள்; படுக்கை அறையிலே கொண்டு போடுங்கள். நான் குணப்படுத்தி விடுகிறேன்.
(வேலையாட்கள் மூர்ச்சை போட்டு விழுந்த சூரிய கோடியைத் தூக்கிக் கொண்டு செல்லுகின்றனர்.)


காட்சி- 4
 

[அரண்மனை. வஜ்ரியும் அங்கத்தரசன் மகன் சந்திரவர்மனும் வஜ்ரலேகையும் இருக்கின்றனர்.]

சந்திரவர்மன் : எதற்கும் வஜ்ரி இப்போது அதிகமாக வார்த்தை சொல்லாமல் இருப்பது நன்று. யார் வந்தாலும் அவர்களுக்கு நானே மறுமொழிகள் சொல்லலாம் என்றும், வஜ்ரி வாய் திறந்தாலே கெடுதி என்றும், அரண்மனை வைத்தியர் பலமான எச்சரிக்கை கொடுத்துப் போனார். நடந்ததை நான் சொல்லுகிறேன்.

வஜ்ரலேகை : சரி, நீங்களே சொல்லுங்கள். முழு விவரமும் சொல்ல வேண்டும்.

சந்திர : அந்த யானைக்கு மதமேறியிருக்கிறதென்று எங்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. நாங்கள் - இருவரும் அங்கே போன போது பாகன் இல்லை. புறத்து வேலியைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஜனங்கள் நின்றுகொண்டிருந்தனர். அந்த யானைக்குச் சமீபமாக வஜ்ரி நேரே சென்றான். நானும் வேலிப் புறத்தே நின்றேன். தொலைவிலிருந்து பார்த்தால் போதுமென்று நான் சொன்னேன். வஜ்ரி அது தனக்கு மிகப் பழக்கமென்றும் தன்னிடம் பூனைக் குட்டி போலே நடந்துகொள்ளும் என்றும் சொல்லி விட்டுச் சமீபத்திலே சென்றான்.

வஜ்ர : ஆம், நமது வஜ்ரியை வேலிப் புறத்தே கண்டால், நின்றுகொண்டிருக்கும் அந்த யானை கீழே படுத்துத் துதிக்கையைத் தூக்கி வணங்கி விட்டு மறுபடி எழுந்து நிற்கும். நான் நேராகவே பன்முறை இதனைப் பார்த்திருக்கிறேன்.

சந்திர : ஆனால் இந்தமுறை துரதிருஷ்டவசத்தால் இவன் நேரே தன் முகத்தைக் காட்டாமல் தலையைக் குனிந்து கொண்டு யானையிடம் சென்றான். அப்படிக்கு அது அதிகமாக ஒன்றும் செய்யவில்லை. துதிக்கையால் இவளைத் [இவனைத்] தள்ளி வீழ்த்திவிட்டது. கீழே ஒரு கல் மண்டையில் அடித்து ரத்தம் வெள்ளமாகப் பெருகிற்று. யானை அதைக் கண்ட மாத்திரத்தில் திடுக்கிட்டுப் போய்விட்டது. அப்போது நான் அந்த யானையின் முகத்தை உற்று நோக்கினேன்; ஓரிரு க்ஷணங்கள் தன் துதிக்கையால் வஜ்ரியின் கால்களைத் துழாவிக்கொண்டிருந்தது. இவன் பிரக்கினையின்றிக் கீழே அதன் முன்பு வீழ்ந்து கிடக்கிறான். ‘உம், உம்’ என்று ஒருவித உறுமுதல் இவன் வாயினின்றும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. யானை, தன் தந்தையுடைய கடிகாரத்தை வீழ்த்தியுடைத்து விட்டுப் பின் பச்சாதாபமெய்தும் குழந்தை விழிப்பது போலே விழித்துக்கொண்டு நின்றது. ஓரிரு க்ஷணங்களுக்கப்பால், நான் மனத்தைத் தைரியப்படுத்திக்கொண்டு வேலிக்குள் இறங்கி இவனை வெளியே தூக்கி வந்தேன். வெளியே கொண்டு வந்து நிறுத்திய அளவிலே இவனுக்குப் பிரக்கினை மீண்டு விட்டது. இதுதான் நடந்த சங்கதி.

வஜ்ர : ரத்தச் சேதம் மிகவும் அதிகம் என்கிறார்களே!

சந்திர : ரத்தம் அதிகம் வடிந்து சென்றுவிட்டது எனினும் காயம் பெரிது அல்ல. உயிருக்கு அபாயம் இல்லை. காயம் சிறிதுதான். வைத்தியர் வந்து உதிரத்தைக் கழுவிக்கட்டுக் கட்டும்போது நான் நன்றாகப் பார்த்தேன். புண் சிறிது.

வஜ்ரி : கண்ணே நீ அஞ்சாதே! நின் பொருட்டாக நான் பிழைப்பேன்.
(இங்ஙனம் அவன் சொல்லுகையில் அவன் வாய் வழியாக ரத்தம் ஒழுகுதல் கண்டு வஜ்ரலேகை மூர்ச்சை போட்டு விடுகிறாள். அவளைத் தெளிவித்து எழுப்புதற்குரிய முயற்சிகளைச் சந்திரவர்மன் செய்கிறான். பிறகு அவளையும் ஒரு தோழியையும் பல்லக்கில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.)


ந்திரவர்மன் : ஆ! காதலென்பதை இன்றுதான் கண்டேன். வஜ்ரி, நீ அதிருஷ்டசாலி. உன்னை யானை அடித்ததுகூட எனக்குப் பொறாமை உண்டாக்குகிறது. என்னை ஒரு யானை அடித்து, எனக்காக ஒரு பெண் இப்படி மூர்ச்சை போட்டு விழுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஸ்திரீகள் மூர்ச்சையுறுதல் புதுமை அல்ல. ஆனாலும் இவளுடைய மூர்ச்சை மாதிரி வேறு. இவளுடைய காதலே புதிது. ஆ! வஜ்ரி! நீ அதிருஷ்டசாலிகளிலே சிறந்தவன். இனி என் தங்கையை நீ மணம் புரிந்துகொள்வதென்ற பேச்சை அடியோடு நிறுத்தி விடுவதற்குரிய ஏற்பாடுகள் நானே செய்கிறேன். உன் பிதாவுக்கும் நானே தெளிவேற்படுத்துகிறேன். நீ எதற்கும் யோசனை பண்ணாதே. இப்போது நீ இங்கே தனியாக இருப்பது நன்று. யாரிடமும் பேசாதே. வாய் திறக்கக் கூடாது. தூங்க முயற்சி பண்ணு. நான் போய் வருகிறேன்.


(விடை பெற்றுச் செல்லுகிறான்.)காட்சி - 5
 


[அமரபுரத்து அரசனாகிய சூரிய கோடியின் சபை. மந்திரிகள் சேனாதிபதிகள் முதலியோர் புடை சூழ அரசன் வீற்றிருக்கிறான். அந்தச் சபையில் சத்தியராமன்1, வஜ்ரலேகை இருவரும் வந்திருக்கிறார்கள். வஜ்ரியும் தலை, வாய்களுக்குக் கட்டுகள் கட்டிக்கொண்டு வந்து வீற்றிருக்கிறான்.]

சூரியகோடி: சபையோர்களே, குடிகளே,! தசரதன் ஸ்ரீராமமூர்த்தியை மகனாகப் பெற்று மகிழ்ந்தான். நான் வஜ்ரியைப் பெற்றேன். இவன் ஆண்டிலே குறைந்தவனாயினும், அறிவிலும் வீர்த்தன்மையிலும் இக்காலத்து ராஜகுமாரர்களுக்குள்ளே சிறந்து விளங்குகிறான். கல்வி கேள்விகளிலே இவன் நம்நாட்டுப் பண்டித சிகாமணிகளால் பெரிதும் வியக்கப்படுகிறான். இவன் பெரிய வேதாந்தி என்றும் ஆன்ம ஞானி என்றும் பல மேதாவிகள் தெரிவிக்கிறார்கள்.

(Note:1. இந்த ஓரிடத்திலும் பின்னர் ஓரிடத்திலும் நித்தியராமன் என்னும் பெயர் சத்தியராமன் என உள்ளது. பிற இடங்களில் எல்லாம் நித்தியராமன் என்னும் வடிவமே உள்ளது.)

இன்றுகாலையிலே இவன் ஏறக்குறைய இறந்து பட்டானென்ற செய்தி இந்த நகர் முழுதும் பரவிக் குடிகளனை வரையும் பெருந்துயரில் வீழ்த்திற்று. இன்று மாலை இவன் நேரே நமது சபைக்கு வந்து, தனக்கு லேசான உராய்தலையன்றி வேறொன்றும் இல்லை என்று சொல்லி நம்மிடையே பூர்ணசந்திரனைப் போல் வீற்றிருக்கிறான். இவனுக்கு நீங்கள் எல்லீரும் மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள் செய்தருள வேண்டும். இவனை வானவர் மார்க்கண்டன் போலே வாழ்விக்கக் கடவர். இன்று உங்களுக்கெல்லாம் நான் மிகவும் சந்தோஷமான செய்தி ஒன்று சொல்லப் போகிறேன். என் மகன் ஞானியாதலால் பல விஷயங்களில் சாதாரண லௌகிக வழக்கங்களை மீறி நடக்கிறான். அது எனக்குப் பல சமயங்களில் வருத்தம் உண்டாக்குகிறது. எனினும் என் செய்யலாம்? அவன் செய்வதுதான் நியாயமென்று பல முதியோர்களே சொல்லுகின்றனர். நாம் முற்கால விதிகளால் கட்டுப்பட்டிருக்கிறோம். அவன் எதிர்கால நிலை உணர்ந்தவனா கையால், எதிர் காலவிதிகளின்படி நடக்கிறானென்று பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். திருஷ்டாந்தமாக, எங்கள் குலத்துக்குள்ள பொது வழக்கத்தின்படி இவனுக்கு ஒரு ராஜகுமாரியையே மணம் புரிவிக்க வேண்டுமென்று நான் நிச்சயித்திருந்தேன். இவனோ, நமது நகரத்து வைசியர்களில் மிகக் கீர்த்தி பெற்ற சத்தியராமச் செட்டியின் குமாரியையே மணம் புரிய உடம்படுகிறான். எதிர்கால உலகத்தில் காதல் ஒன்றையன்றி அசாசுவதமான பதவி வேற்றுமைகளைக் கருதி விவாக சம்பந்தங்கள் செய்துகொள்ளப்பட மாட்டாவாம். அதற்கு இவன் தானே ஒரு வழிகாட்டியாக நின்று, அமரபுரத்து அரண்மனையில் பட்ட மஹிஷியாக ஒரு வைசியகுமாரியைப் புகுத்த விரும்புகிறான். என் விருப்பத்தை மாற்றி நான் இவனுடைய கருத்துக்கு இணங்கி விட்டேன்.

அதனுடன், எனக்கு வயதுமுதிர்ந்து விட்டபடியால், இவனுக்கு மகுடம் சூட்டி விட்டு நான் மிஞ்சியுள்ள வாழ்க்கையை ராஜ்யப் பொறுப்புகளின்றி அமைதியுடன் கழிக்க நிச்சயித்திருக்கிறேன்.

மந்திரிகளே, குருக்களே, சேனாதிபதிகளே, நண்பர்களே!

என் மகன் வஜ்ரிக்கும் வஜ்ரலேகைக்கும் விவாகச் சடங்குகள் இந்த வாரத்துக்குள்ளே தொடங்கிவிடும். இனி உங்களுக்கு ராஜா வஜ்ரி, ராணி வஜ்ரலேகை. இந்திரனும் இந்திராணியும் போல் இவ்விருவரும் நீடுழி ஆட்சி புரிய இந்நாடு மிகவும் கீர்த்தியும் சகல நன்மைகளும் பெற்று ஓங்குக!

(வாத்தியகோஷம். வெடிகள் தீர்த்தல் முதலிய ஆரவாரங்கள்.)

-ஸி. சுப்பிரமண்யபாரதியார்

(கலைமகள் , ஜனவரி, 1951, பக். 83-90)
 
 
Thanks : Kaalachuvadu

No comments:

Post a Comment