Monday, December 16, 2013

சிறுகதை : அதே நாள்.. அதே நேரம்!







யில்வே குவார்ட்டஸில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த சரக்கு எஞ்சின் சாரதி லசந்த பெரேராவுக்கு சரியாக அதிகாலை 4.55க்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. தூக்கம் கலையாமலே, 'நிமால்.. என்னடா இது..? அதுக்குள்ள எழுப்பிக்கிட்டு.. எட்டு மணிக்குத்தானே ட்யூட்டி?'

'அண்ணே.. ஒடனே எழும்பி கெதியா வேர்ஹவ்சுக்கு வாங்கண்ண..!' அவன் குரலில் ஒட்டியிருந்த கலவரம் அவரது தூக்கக் கலக்கத்தை முறித்துப்போட்டது. நிமால் அவரோடு எஞ்சின் உதவியாளனாக வேலை செய்பவன்.

'என்னடா இப்பிடி பதறுற.. எஞ்சின்ல ஏதும் பிரச்சினையா..?'

'எஞ்சினே பிரச்சினையாகிட்டுண்ணே..' என்று ஆரம்பித்து அவன் விபரத்தைச் சொன்னதும் அவரது இதயம் சில கணங்கள் நின்று போனது. அவசர அவசரமாக முகம் கழுவி உடைமாற்றி அடுத்த அறையில் கம்ப்யூட்டரைக் கூட அணைக்க மறந்து தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பி கதவைப் பூட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டு தெமட்டகொடைக்கு விரைந்தார் லசந்த பெரேரா.

ரயில்வே வேர்ஹவுஸில் ஒரு பெரும்கூட்டமே கூடியிருந்தது.

'என்ன லசந்த இப்பிடிப் பண்ணிட்டே.. எத்தனை தரம் சொல்லியிருக்கேன் எஞ்சினை ஸ்டார்ட்ல வைக்காத வைக்காதேன்னு.. இப்ப பாரு உன்ட 'கலுபல்லா' எஞ்சின் ஆளே இல்லாம எங்க வரைக்கும் போயிருக்கு பாத்தியா? கல்கிசையில வச்சு ஊர்ச் சனங்கள் தொரத்திப்போய் ஏறி ரத்மலானையில வச்சுத்தான் கஷ்டப்பட்டு நிப்பாட்டிருக்காங்க தெரியுமா? இப்ப என்ன பண்றது..? ஹெட் ஒஃபிசிலருந்து டெலிபோன் மேல டெலிபோனா வந்திட்டேயிருக்கு.. இப்ப என்னைத்தான் சஸ்பெண்ட் பண்ணுவாங்க பாரு' என்றார் வேர்ஹவுஸ் எஞ்சினியர் இல்யாஸ்.

'அதை இரவெல்லாம் ஸ்டாட்ல வச்சாத்தான் ஸேர் காலையில கிளப்பலாம். அப்படி ஒரு 60 வருசத்துப் பழைய எஞ்சினை வச்சுக்கிட்டு நான் இருபத்தியாறு வருசமா மாரடிக்கிறேன்.. அதெல்லாம் நம்ம டிப்பாரட்மென்டுக்குத் தெரிய வராது.. இதுக்கு மட்டும் வந்திடுவாங்க ஸேர்'

'அதெல்லாம் நம்ம சொல்ல ஏலாது லசந்த. அதெப்படி உன்னோட 'கலுபல்லா' அதுவாக கிளம்பி அவ்வளவு தூரம் போகும்?'

'அதுதான் ஸேர் நானும் யோசிக்கிறேன். இதுக்கு முதல் ஒருதடவை கூட இப்பிடி நடக்கயில்லியே.. ப்ரேக் லீவர் எல்லாம் சரியாத்தான் போட்டு வச்சிருந்தேன். அதை யாராவது ரிலீஸ் பண்ணாம கிளம்பவே கிளம்பாதே.. வேணுமென்றே யாராவது செய்திருப்பாங்களா..?'

'சேச்சே! இங்க உன்னைத்தவிர யாருக்கு அதுக்கிட்ட போகத் தைரியமிருக்கு? 'கலுபல்லா' என்றது கூட நீ வச்ச பேருதானே? அது உனக்கிட்ட மட்டும்தான் சொல்லுக்கேட்கும்.. வா இப்ப ஒருக்கா நாம ரத்மலானைக்குப் போயிட்டு வருவோம்.. நிமால் நீயும் வந்து ஏறு!'

'ஸேர், திடீரெண்டு குவாட்டஸ்லருந்து ஓடி வந்திட்டன். மகன் ஸ்கூலுக்குப் போகணும். இன்டைக்கு மனுஷியும் வீட்ல இல்ல.. ஊருக்குப் போயிருக்கா நான் ஒருக்கா..' என்று இழுத்தார் பெரேரா.

'ஐயோ.. நிலைமை தெரியாம பேசிட்டிருக்கிறியே.. உன்ட மகன் என்ன நேர்ஸரிக்கா போறான்? ஏஎல் படிக்கிற பையன்தானே.. அதெல்லாம் பாத்துக்குவான். இன்டைக்கு முழுக்க விசாரணை அது இதென்டு சோறு தண்ணியில்லாம அலையப்போறோம். இப்ப ரெண்டு பேரும் வாகனத்துல வந்து ஏறுங்க!' என்றபடி தன்னுடைய பிக்-அப்பை நோக்கி முன்னால் நடந்தார்.

'சே! அவசரத்துல செல்போனைக்கூட கொண்டு வரலடா நிமால்' என்றபடி இல்யாஸ் எஞ்சினியரைப் பின்தொடர்ந்தார் லசந்த.

'கிட்டத்தட்ட 15-16 கிலோமீற்றர் கல்கிசை போகும் வரைக்கும் எத்தினை ஸ்டேசன்..? இடையில யாருமே கவனிக்காம இருக்கிறதென்டா நம்ம ரயில்வே எவ்வளவு கவனக்குறைவா இருந்திருக்கு பாத்தீங்களா ஸேர்?' என்றான் நிமால்.

'நல்லவேளை.. அந்த நேரம் ட்ரக்குல இடையில வேற ரயில் எதுவும் வரல்ல. அப்பிடி வந்திருந்தால் நாம மூணுபேரும் இப்படிப் பேசிக்கிட்டிருக்க மாட்டோம். அந்த அல்லாஹ்தான் காப்பாத்துனான்'

இரத்மலானையில் மூவரும் சென்று இறங்கியபோது அங்கு நின்றிருந்த 'கலுபல்லா' ஒன்றுமே நடவாததுபோல அமைதியாக நின்றிருக்க ரயில்வே அதிகாரிகள் பொதுமக்கள் டீவி கமராக்கள் என்று கூட்டம் எஞ்சினை மொய்த்திருந்தது. புகையிரத வீதியோரமாக இருந்த கடைத்தெருவிலே பொலீஸ் மக்கள் கூட்டத்தை விரட்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

'இவர்தான் அந்த எஞ்சின் ட்றைவராம்'

'இவரால மட்டும்தான் இதை ஓட்ட ஏலுமாம்?'

'ஏதோ ஆவிகள்ற வேலைதானாம்' என்று கூட்டத்தில் இஷ்டத்திற்கு அவிழ்த்தார்கள்.

அதற்குள் உள்ளுர் தொலைக்காட்சிச் சேனலில் இன்டவியூவுக்கு வந்தவர்கள் போல டை கட்டியிருந்த மூன்றுபேர் காமிராவைப் பார்த்து, 'இன்று அதிகாலை 1.45 மணியளவில் மருதானை மாளிகாவத்தை புகையிரத திருத்த நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆளில்லாத எஞ்சின் ஒன்று தானாகவே புறப்பட்டு..'  என்று மாற்றி மாற்றி மூன்று மொழியிலும் ப்ரேக்கிங் நியூஸ் வாசித்தார்கள்.



000
 
 

 

ரவு லசந்த பெரேரா குவார்ட்டசுக்கு வந்து சேர்ந்தபோது அவரது மகன் வீட்டிலிருக்கவில்லை. வீட்டுத் திறப்பை பூச்சாடியின் கீழ் வைத்துவிட்டுப் போயிருந்தான். கதவைத் திறந்து அங்கிருந்த குஷன் கதிரையில் களைத்துப்போய் லசந்த விழுந்தார். டீவியில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ரயில்வே அமைச்சரை ஒரு பிடிபிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது கதிரையில் கிடந்த செல்போன் சிணுங்கியது. ஊருக்குச் சென்றிருந்த அவருடைய மனைவி மல்காந்தி.

'ஹலோ! சொல்லு'

'என்னங்க.. எத்தினை கோல் எடுத்தன்.. ஏன் இவ்வளவு நேரமும் போனை எடுக்கல்ல?  என்ன நடந்தது..? நான் டீவியில் பாத்துத்தான் விசயத்தையே அறிஞ்சேன். அங்க இப்ப என்னதான் நடக்குது..? நான் காலையில கிளம்பி வரவா?' என்றாள் மூச்சு விடாமல்.

'ஒண்ணுமில்ல மல்.. இன்டைக்கு சாமத்துல நம்ம 'கலுபல்லா' தன்ட பாட்டுக்கு கிளம்பி ரத்மலான வரைக்கும் போயிட்டுது.. நான் எவ்வளவு சொல்லியும் டிப்பாட்மென்ட்டுல கேக்குறாங்க இல்லப்பா. விசாரணை முடியும் வரைக்கும் என்னையும் நிமாலையும் சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க..'

'இதென்ன அநியாயம்..? நீங்க நிப்பாட்டிட்டு வீட்டுக்கு வந்த பிறகு எஞ்சின் தானாகக் கிளம்பிப்போனா அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க.. வேர்ஹவுஸ் ஆக்கள்தானே பாத்திருக்கணும். உங்களை எப்படி வேலையிலிருந்து நிப்பாட்டலாம்?'

'அதுசரிதான்.. கவலைப்படாத.. காரணத்தை விசாரிச்சுக் கண்டு பிடிக்கும் வரைக்கும்தான் சஸ்பெண்ட். நீ வர வேணாம். நான் சமாளிச்சுக்கிறேன்.. எங்க இல்யாஸ் மஹத்தயா இது சம்பந்தமா எனக்கு சப்போர்ட்டாகத்தான் இருக்கிறாரு.. எங்கட யூனியன் ஆக்களும் சஸ்பெண்டை எதிர்த்து நாளைக்கு ஸ்ட்ரைக் ஒண்ணு பண்ண இருக்கிறாங்க.. மல், எனக்கு ஒரே ஒரு கவலைதான்.'

'சொல்லுங்கப்பா.. என்ன அது?'

'கலுபல்லா மற்ற எஞ்சின்கள் மாதிரியில்ல. அது கோளாறு புடிச்சது. ஆனா நான் சொன்னதைக் கேட்கும்.. ஆமா, நானாகவே கண்டுபுடிச்ச ஒரு டெக்னிக்லதான் அதை நான் கிளப்புவேன். அதால.. என்னைத் தவிர வேற யாராலயும் கலுபல்லாவை லேசில கிளப்ப ஏலாது.. அந்த டெக்னிக்கை என்கூட வேலை செய்யிற க்ளீனர் நிமாலுக்குக் கூட நான் காட்டிக் குடுத்ததில்ல.. அப்படியிருக்க எப்படி அது தன்னால போயிருக்கும் என்டதுதானப்பா.. தெரியல்ல'

'ஏன் தெரியாது? அது எனக்குத் தெரியுமே..'

'ஏய் என்ன சொல்றாய் நீ?'

'அதுதான் என்னையும் நம்ம மகன் வசந்தயும் ஒருநாள் உங்கட கலுபல்லாவில கொழும்புக்கு கூட்டிப்போனீங்களே.. அப்ப எப்பிடி அதைக்கிளப்புறதென்டு எங்களுக்கு காட்டினீங்களே.. மறந்திட்டீங்களா?'

'அட ஆமாம். நானே மறந்திட்டன்.. அப்ப நீதான் நேற்றிரவு தங்கால்லயிலருந்து பறந்து வந்து கலுபல்லாவைக் கிளப்பி விட்டுட்டுத் திரும்பிப்போனியா என்ன?'

'பகிடி இருக்கட்டும்.. போகாந்திய விகாரைக்கு போய் எதுக்கும் ஒரு பூஜை ஒண்டு செய்துட்டு வாங்கப்பா.. ஏதாவது ஆவி வேலையோ என்னமோ யாருக்குத் தெரியும்?' என்றாள்.

000
 
 

 

தற்கடுத்து வந்த நாட்கள் முழுவதும் விசாரணை, யூனியன் போராட்டம் என்று அலைந்து திரிந்ததில் வீட்டையே கவனிக்க முடியவில்லை லசந்த பெரேராவினால்.

'என்னங்க நானும் ஊரிலேருந்து வந்த நாளிலேருந்து பார்க்கிறேன்.. என்ன எப்ப பார்த்தாலும் இப்பிடி ஓயாம யோசிச்சுக்கிட்டே இருக்கிறீங்க?' என்று கேட்டாள் மல்காந்தி.

'இல்ல.. ஒண்ணுமில்ல மல்'

'அட என்னங்க இது? அதுதான் உங்கட சஸ்பென்சனை நீக்கி திங்கட் கிழமை வேலைக்கு வரச்சொல்லிட்டாங்கதானே.. இன்னும் எதுக்கு மண்டையைக் குடைஞ்சிட்டிருக்கிறீங்க.. உங்க எஞ்சின் எப்பிடி தனியா கிளம்பிச்செண்டா?'

'ஓமோம்.. அது எப்பிடி மல்..?'

'ஐயோ..கடவுளே! அதை விடவே மாட்டீங்களா..? இவன் நம்மட வசந்த அடுத்த வருசம் எக்ஸாம் எடுக்கிறான் தெரியும்தானே. ஆனா இப்ப கொஞ்ச நாளா ஒழுங்காப் படிக்காம கம்ப்யூட்டர்ல இரவு விடியவிடிய இருந்து வேற ஏதோவெல்லாம் பண்ணிக்கிட்டிருக்கான். ஹெட்போனைப் போட்டுக்கிட்டு யாரோடயெல்லாம் பேசிக்கிட்டிருக்கான். நான் கேட்டால் பேஸ்புக் பிரண்ட்ஸ் என்றான். கொஞ்சம் கவனிக்க மாட்டீங்களா?' என்றாள்.

'ஓ! அதுவா? இதெல்லாம் இப்ப சகஜம்தான் மல். ஆனா படிப்பைக் கெடுத்துக்காம பண்ணாப் பரவாயில்லை.. சரி நான் பாக்கிறேன்'

000
 
 


 

மீண்டும் வேலைக்குச் சேர்ந்ததும் நிமாலுடன் சேர்ந்து இரத்மலானை ஸ்டேஸனுக்குச் சென்று அங்கு நின்றிருந்த கலுபல்லா எஞ்சினை ஓட்டி வந்தார் லசந்த பெரேரா.

'கலுபல்லா' ஒரு பழைய காலத்து தயாரிப்பு என்பதால் எஞ்சினின் அத்தனை இயக்கு பாகங்களும் இரும்பாலானவை. எஞ்சினைக் கிளப்புவதற்கு வேண்டிய லீவரை நகர்த்துவதற்கு அசாத்திய பலமும் பழக்கமும் வேண்டும். அதற்காகவே குறுக்கு வழியொன்றை தெரிந்து வைத்திருந்தார். உட்புறமாக சிக்னல் பெனலின் கீழிருக்கும் பெட்டியைத் திறந்து சாவி ஒன்றினால் ஒரு குறிப்பிட்ட ஸ்க்ரூவை தளர்த்திவிட்டால் அந்த லீவரை ஒரு சிறுகுழந்தையால் கூட சுலபமாக இயக்கிவிட முடியும். இது லசந்தவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இது எப்படி வெளியே தெரிந்திருக்க முடியும் என்பதுதான் எவ்வளவு யோசித்தும் அவருக்கு பிடிபடாதிருந்தது.

வேர்ஹவுஸ் வரும் வழிமுழுவதும் எஞ்சினின் உள்ளேயுள்ள அத்தனை பாகங்களையும் வெகுகவனமாக ஆராய்ந்து கொண்டே வந்தார் லசந்த. ஒரு தேர்ந்த துப்பறிவாளனைப்போல கீழே கிடந்த சிறு துரும்பைக்கூட விடாமல் சேகரித்தார். அவற்றுள் சிகரட் துண்டுகள், செல்போன் ரீசார்ஜ் கார்டுகள், இரண்டொரு சூயிங்கம் கவர்கள், பாக்குச் சீவல்கள் போன்ற பொருட்கள் கிடந்தன. சிகரட் அவருடைய ப்ராண்ட்தான். பாக்குச் சீவல்கள் நிமாலுடையது. ஆனால் ஸ்ட்ராபெரி படம்போட்டிருந்த அந்த சூயிங்கம் கவர்கள் யாருடையவை என்று புரியவில்லை என்றாலும் அவற்றை இதற்கு முன்பு எங்கோ பார்த்தது போலிருந்தது அவருக்கு. சரி, விசாரணைக்கு வந்த அதிகாரிகள் யாருக்காவது சூயிங்கம் சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு அத்தோடு விட்டுவிட்டார்.

மண்டையை அரித்துக் கொண்டிருந்தது ஒரே கேள்வி மட்டும்தான்: 'எப்படித் தனியாகக் கிளம்பியது இந்தக் கலுபல்லா?'

இரவும் பகலும் தினசரி மனதை அரித்துக் கொண்டிருந்ததால் லசந்தவினால் சரியாகத் தூங்கக்கூட முடியாதிருந்தது. வீட்டில் மனைவியிடமும் மகனிடமும் மட்டுமல்லாமல் வேலைத்தளத்தில் சகஊழியர்களிடமும் இதைப்பற்றியே பேசியவாறு இருந்தார். ஆரம்பத்தில் சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் நாளடைவில் இந்தப் பேச்சை ஆரம்பித்தாலே நழுவ ஆரம்பித்தார்கள்.


000
 
 

 

ருநாள் வேலைத்தளத்திலுள்ள பொறியிலாளர் அலுவலகத்துக்குப் போயிருந்தார் லசந்த. அப்போது தன் மேசையில் இருந்த கம்ப்யூட்டரில் ஏதோ பொறித்துக் கொண்டிருந்தார் இல்யாஸ் எஞ்சினியர். அவரைக் கண்டதும், 'லசந்த இஞ்ச வா! ஒரு விஷயம் தெரியுமா?' என்றார்.

'என்ன ஸேர்?'

'ஆளில்லாம எஞ்சின் கிளம்பிப்போனது இப்ப மட்டுமில்ல முந்தியும் நடந்திருக்கு.. அதுவும் இந்த வேர்ஹவுஸ்லேயே நடந்திருக்கு தெரியுமா?'

'அப்பிடியா..? எப்ப ஸேர்? நான் அப்படி ஏதும் கேள்விப்படல்ல. அப்படியெண்டா அது இருபத்தியாறு வருசத்துக்கும் முதல்லதான் நடந்திருக்கும்..'

'ஹா! அதுவந்து  நீ நான் எல்லாரும் அப்ப பிறந்தே இருக்க மாட்டோம் தெரியுமா? அதாவது வெள்ளைக்காரன் ஆண்ட காலத்துல.. அப்பதான் அது நடந்திருக்கு..!'

'அப்படியா ஸேர்..?'

'ஆமா.. சரியா நூறு வருசத்துக்கு முன்னால 1913ம் வருசம் அதுவும் சரியா இதே டிசம்பர் மாசம் அதே 5ம் திகதிதான் ஒரு எஞ்சின் தனியா கிளம்பி கோட்டை ஸ்டேஷன் வரைக்கும் ஆளில்லாம போயிருக்கு தெரியுமா?'

'ஸேர் விளையாடாதீங்க..! அது எப்படி சரியா அதே திகதியில..? நம்ப ஏலாம இருக்கு..'

'நீ நம்ப மாட்டாய் என்டுதான் விபரத்தை என்னோட பேஸ்புக்ல சேவ் பண்ணி வச்சிருக்கிறேன். கொஞ்சம் இரு காட்டுறேன்.. லசந்த நீ மயக்கம் ஏதும் போட்டுறாத.. இன்னொரு விசயமும் இருக்கு.. 1913 டிசம்பர் 5ல் புறப்பட்டுப்போன எஞ்சினும் நம்ம கலுபல்லா மாதிரி விடியக்காலையில 1.30 மணிக்கும் 2.00 மணிக்கும் இடையிலதான் போயிருக்குதாம்.. இதுக்கு என்ன சொல்லுறது?'

'ஸேர்.. இதெல்லாம் உண்மையா.. எங்கருந்து இதெல்லாம் எடுத்தீங்க..? நம்பவே முடியல்ல!'

'நம்ம டிப்பார்ட்மென்ட்ல விசாரணை நடக்குது தெரியுந்தானே..? முதல் ஏதாவது இதே போல நடந்திருக்கா என்று தேடிப் பாத்திருக்காங்க.. அந்த நேரந்தான் தற்செயலாக பழைய ரெக்கோட்ஸ்ல வெள்ளைக்காரங்க காலத்து ஆட்கள் இதைத் தெளிவா எழுதி வச்சிருக்கிறது தெரியவந்திருக்கு.. ம்.. இந்தா பாரு அந்த சம்பவத்தைப்பற்றிய நியூஸ்.. நீ இங்லீஷ் வாசிப்பாய்தானே.. அதோட ஸ்கேன் பண்ணிய லொக் ஷீட்டும் இருக்கு பார்!' என்று அவரது கம்ப்யூட்டர் திரையைக் காட்டினார் இல்யாஸ்.


“The Department of Railways of Ceylon is conducting investigations into an incident in which a train engine had travelled from Dematagoda to Kotte without a driver. The Railway Control Room said that the engine which was powered at around 1.45 a.m. today had operated from Dematagoda owing to a break malfunction. Thereafter, the moving train engine was stopped by a group of linesmen of Kotte Railway station… 1913.12.05



' அட.. ஆமாம்! இதென்ன கூத்து? அதுவும் அதே நாள் அதே நேரம்.. ஸேர்.. இது மல்காந்தி சொல்றது போல ஆவிகளோட வேலையாத்தான் இருக்கும் போல.. இல்லாட்டி எப்பிடி ஸேர் இப்பிடி?'

'யாரு உன்ட மனுஷியா? அதுசரி.. ஆவிக்கு லொக் ஷீட், நியூஸ் எல்லாம் வாசிக்கத் தெரியுதாக்கும்.. ஒருவேளை இங்லீஷ் ஆவி போல' என்று சிரித்தார் இல்யாஸ். அவரோடு சேர்ந்து அலுவலகத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்.

000
 
 

 

 
 
'அப்பா, நாளைக்கு ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்கு. உங்களைக் கூட்டிட்டு வரச்சொன்னாங்க நீங்க வாறீங்களாப்பா..?' லசந்த பெரேரா நைட் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு வந்தபோது பாடசாலை யூனிபோம் அணிந்து ஷு மாட்டிக்கொண்டிருந்தபடி கேட்டான் மகன் வசந்த.

'இல்லடா எனக்கு தொடர்ந்து நைட் டியூட்டி இருக்கு.. காலையில தூங்கியாகணும் மகன். அம்மாவைக் கூட்டிட்டுப்போ!'

'சரி, நான் வாறன். எந்தக்காலத்துலடா உன்ட அப்பா ஸ்கூலுக்கு வந்திருக்கிறாரு?..' என்றபடி சமையலறையிலிருந்து வெளிப்பட்ட மல்காந்தி,


'டேய் வசந்த!  என்னடா இது ஸ்கூலுக்குப் போற நேரம் சூயிங்கத்தை வாயில் போடுற.. இப்படியே போயிடாதடா! துப்பிட்டுப்போ!?' என்று சத்தம் போட்டாள் மல்காந்தி.

'சரி.. சரி' என்று விட்டுப் பாடசாலைக்குப் போய் விட்டான் அவன்.

' ஐயோ! ஏண்டி புள்ளைய போற நேரத்தில ஏசிட்டிருக்கிற..?'

'பின்ன என்னங்க..  எப்ப பாத்தாலும் அவன்ட கூட்டாளி இம்ரான் வெளிநாட்டுல இருந்து அனுப்புன சூயிங்கத்தை ஆடு மாதிரி சப்பிக்கிட்டே இருக்கிறான்.'

' சரிசரி, மல்காந்தி.. இஞ்ச வா கொஞ்சம்!'

'என்னங்க.. பசிக்குதா?'

'அதில்ல.. அந்த கொம்ப்யூட்டரைக் கொஞ்சம் ஓன் பண்ணு. உனக்கொரு அதிசயமான விசயம் ஒண்டு காட்டணும்.' என்று இல்யாஸ் எஞ்சினியர் நேற்று மாலை கூறிய நூறுவருடங்களுக்கு முந்திய கதையை மனைவியிடம் ஆர்வமாகக் கூறினார் லசந்த.

'என்ன சொல்றீங்க நான் நம்ப மாட்டேன்'

'என்னாலயும் நம்பேலாமத்தான்டி இருந்திச்சு.. ஆனா இல்யாஸ் மஹத்தயா அவர்ட பேஸ்புக்ல காட்டினாரு.. இரு உனக்கும் காட்டுறேன்..'

இருவரும் பேசிக்கொண்டே மகனின் அறைக்குள் வந்தபோது அவனுடைய கம்ப்யூட்டர் அணைக்கப்படாமல் ஸ்க்ரீன் ஸேவர் இயங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.

'இப்பிடித்தாங்க இவன்.. லைட்டைக் கூட ஓப்ஃ பண்ண மாட்டான். எல்லாமே அவனுக்கு விளையாட்டாக இருக்கு. எதையுமே சீரியஸா எடுக்கிறதில்ல..'

'சரி, விடு, சின்னப் பையன்தானே..?' என்றபடி கம்ப்யூட்டரில் தன்னுடைய ஃபேஸ் புக்கை ஸைன் இன் செய்வதற்காகத் தயாரான லசந்த பெரேரா மகன் வசந்தவின் பேஸ்புக் பக்கம் சைன் அவுட் செய்யப்படாமல் திறந்து இருப்பதைக் கண்டார்..

அதிலே வசந்த தன்னுடைய சிறுவயதுப் புகைப்படங்களையெல்லாம் நிரப்பி வைத்திருந்தான். லசந்தவும் மல்காந்தியும். அதைப் பார்த்து விட்டு இன்னும் செல்லச் செல்ல தங்களுடைய திருமணப் படங்கள் குடும்பத்தாரின் படங்களையெல்லாம் பார்த்தார்கள். இலங்கை கிரிக்கட் அணி வீரர்களின் படங்களும் நிறைய இருந்தன.

'பார்த்தியா மல்காந்தி நம்மட பழைய படங்களையும் எடுத்து ஸ்கேன் பண்ணிப் போட்டிருக்கிறான் ராஸ்கல்'

'ஆமாங்க.. அங்க பாருங்க.. 'என்னுடைய தெய்வங்கள் இவர்கள்' என்று நம்ம படத்துக்குக் கீழே எழுதியிருக்கிறான்..'


'Yes, நம்ம ஒரே புள்ளை பாசக்காரன்தான்.. இல்ல?'

'இது என்னங்க இந்தப்படம் உங்கட தெமட்டகொட வேர்ஹவுஸ் மாதிரியிருக்கு.. ஆனா பழைய கால படம் போல கறுப்பு வெள்ளையில இருக்கு.. வெள்ளைக் காரன்லாம் இருக்கிறான். என்னமோ இங்லீஷ்ல நிறைய எழுதியிருக்கு..?'

' இரு.. இரு! நானும் பார்க்கிறேன்..' என்று அதை முழுமையாக வாசித்தார். வாசித்து முடித்ததும் ஆச்சரியத்தால் அவர் கண்கள் அகல விரிந்தன.


'ஏய்..மல்காந்தி, இது வந்து நான் சொன்னேனே 1913ல் நடந்த விசயம்தான்.. ஆனா இந்த நியூஸ் இவனுக்கு எப்பிடி கிடைச்சுது அதுவும் போன அக்டோபர் மாதத்தில?'

'என்ன சொல்றீங்க நீங்க..?'

'இல்ல.. எங்க ரயில்வே டிப்பார்ட்மெண்ட்டுக்கே நேற்றுத்தான் தெரிஞ்ச 100 வருசத்துக்கு முந்தின விசயம் இவனுக்கு மட்டும் எப்பிடி போன அக்டோபர் மாசத்தில படத்தோட கிடைச்சுது..?'

'ஒருவேளை இன்டர் நெற்றுல போய் எடுத்திருப்பானோ.. அப்படியென்றாலும் எதற்காக இதை அவன் தேட வேண்டும்.. எதற்கும் இந்தத் தகவல் எங்கேயிருந்து வந்திருக்குதென்று தேடிப்பார்ப்போம்' என்று யோசித்து தடவியதில் இம்ரான் ஜான் என்பவனிடமிருந்து அந்தப் படமும் தகவலும் கூட ஒரு மெஸேஜும்  வசந்தவுக்கு வந்திருப்பது தெரிந்தது.

அந்த மெஸேஜை திறந்து வாசித்தார்கள் லசந்த பெரோவும் அவரது மனைவி மல்காந்தியும்.  அந்த மெஸேஜில் இருந்த செய்தி இதுதான்:

Hi Vasantha,

I'm fine. How are you Machchan? இதோட இருக்கிற படத்தையும் செய்தியையும் பாரு மச்சான். நீ நம்ப மாட்டாய் என்டதுக்காகத்தான் அனுப்புறன்டா.. 1913.12.05 இதுதான் அந்த டேட். சரிதானே? நான் ஏற்கனவே சொன்னது போல நான் சொன்ன அதே நாள்ல அதே டைமுக்கு செய்து விடு. அதுக்குப் பிறகு பாரு நடக்கிறத..

இதே மாதிரி வேர்ல்ட்ல பல சம்பவங்கள் நடந்திருக்கு.. நீ The same date & The same incident என்ற வெப் சைட்ல போய்ப் பாரு. நிறைய details இருக்கு.. ஆனா அதை இப்பிடி நடக்குமென்டு முன்கூட்டியே நாம நெற்ல முன்கூட்டியே சொன்னா அதோட பவரே வேறடா.. நான் சொல்றபடி மட்டும் செய்து பாரு.. எலகிரிதான் மச்சி!

டேய், உன்னை நம்பித்தான் எத்தனையோ டொலர் டொலரா பந்தயங் கட்டியிருக்கேன்.. சொதப்பிடாத. சரியா டிசம்பர் 05 வியாழக்கிழமை 1.45க்கு எப்படியாவது கிளப்பி விட்டுடு. அது கொஞ்ச தூரம் போனாக்கூட போதும்டா.. அடுத்த நாள் நியூஸ்ல வந்திட்டா சரி..! அதுக்குப் பிறகு நம்ம ரேஞ்சே வேறடா இப்பருந்தே ரெடியாகு! மறந்திடாதே.

அதுசரி நான் அனுப்பிவச்ச Stawberry Chewin-gum pack எப்படியிருக்குடா..? செம கிக்குல்ல?  byeடா!



000
 
 
-மூதூர் மொகமட் ராபி
(2013.12.15)

No comments:

Post a Comment