'சில்மியா.. என்ன புள்ள நீ.. நம்மட வளவுக்குள்ள நடக்கிற மார்க்க விசயங்கள் ஒண்டுக்கும் வாறாயில்ல.. நேத்து மத்தியானம் கூட ஹில்மா வூட்டுல.. அன்வர் மௌலவிட பயான் நடந்திச்சு.. தெரியுமா? எல்லாருக்குஞ் சொல்லி விட்டாங்களே..'
அருகிலிருக்கும் சில்லறைக் கடைக்குச் சென்று மத்தியானச் சமையலுக்குத் தேவையான பலசரக்கு சாமான்கள் வாங்கிக்கொண்டு திரும்பி வரும் வழியில் என் அயல் வீட்டுக்காரியான நிஸ்மிதான் கேட்டாள்.
'எங்க நிஸ்மீ.. ஒண்ணுக்கும் நேரமில்ல. அவர வேலைக்கும் புள்ளைகளை ஸ்கூலுக்கும் அனுப்பினா சாப்பாடு செய்து எடுக்கவே நேரம் சரியாருக்கு.. இதுக்குள்ள எங்க...?'
'அப்பிடிச் சொல்லாத புள்ள.. இந்த வளவுக்குள்ள குடியிருக்கிறவங்கள்ல எத்தினை பேர்தான வாறாங்க தெரியுமா? எல்லாருக்கும் வேலைதான்.. ஆனா மவுத்துக்குப் பொறவு நாம போற எடத்துக்கும் கொஞ்சம் தேடத்தானே வேணும்.. வெளியூருலயெல்லாம் நம்மளைப்போல பொம்புளைகள் எவ்வளவோ பேரு தப்லீக் ஜமாத் வேலை செய்யிறாங்க தெரியுமா? இது நம்ம காலடியில நம்ம அயலுக்குள்ளேயே அவங்க வந்து மார்க்க உபதேசம் பண்ண வாராங்க.. அதுக்கும் நாம வராட்டி எப்படி?'
'சரி பாப்பம் வரத்தான் வேணும் நிஸ்மீ. சரி, அடுப்புல கறி கொதிக்;குது.. ஸ்கூல் விட்டு புள்ளைகள் வாற நேரமாச்சு. நான் வாறேன்' என்று வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன்.
நிஸ்மியையும் என்னையும்போல இன்னும் நிறையப் பெண்கள் ஒரே வளவுக்குள் இருந்தாலும் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதற்கு கூட நேரமே இருப்பதில்லை. அவரவர் குடும்ப காரியங்களைப் பார்ப்பதற்கே பொழுது சரியாகி விடுவதால் அவ்வப்போது இப்படி வழியில் சந்தித்துப் பேசினால்தான் உண்டு.
இன்னொரு நாள்...
'சில்மி, நான் கேக்குறனென்டு ஒண்ணும் நெனைக்காத.. நீ ஏன் வெளியில போகக்கொள்ள இன்னும் சல்வார்தான் போட்டுட்டுப் போறா..'
'ஏண்டி சல்வாருக்கென்ன..? அது ஸாரியை விட நல்லா முழு உடம்பையும் மூடித்தானே இருக்கு' என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.
'ஆங்.. அது மரியாதையான உடுப்புத்தான். ஆனா இப்ப நம்மட பொம்பிளைகள் எல்லாரும் அபாயாதானே போடுறாங்க.. இந்த வளவுக்குள்ளேயும் பாரு நான், நம்மட நுஸ்ரத், பேபி, மேல் வீட்டு ஹில்மா எல்லாரும் அபாயாக்கு மாறிட்டாங்க தெரியுமா.. என்னைப் போல நீயும் போடேன்.' என்றாள் நிஸ்மி சிரித்தவாறு.
'ஆ.. போடத்தான் வேணும்.. ஆனா எப்பிடிடீ இந்த வெயில் வெக்கைக்குள்ள ஸாரியும் உடுத்து அதுக்கு மேலால அதையும் போடுறீங்க..?'
'எப்பயுமா போடுறம்..? அவரோட வெளியில எங்கேயாவது போகக்குள்ளதானே போடுறம்.. ஆனா அரபு நாட்டுல பாரு.. அந்த வெயிலுக்குள்ளயும் எல்லாம் போடுதுகள்தானே..'
'அந்த ஊருல பாலைவனம்.. அங்க அடிக்கடி மணல்புயல் வீசுறதாலதான் அப்படி உடுப்புகள் சரி. அங்க பொம்புளைகளுக்கு மட்டுமில்ல.. ஆம்புளைகளுக்கும் கிட்டத்தட்ட அதேபோலத்தான் தலை காதையெல்லாம் மூடி உடுப்பு இருக்கு என்டு வெளிநாட்டுக்குப் போன நம்ம பெனாட உம்மா சொல்லுவா..?'
'அதுவுஞ் சரிதான். அதுகள்ற சுவாத்தியத்துக்கேத்த உடுப்பை அதுகள் போடுதுகள்.. என்ன? என்ன இருந்தாலும் உடம்பை தலையிலருந்து கால் வரைக்கும் மூடுதுதானே அது'
'ஆனா நீ அபாயாவைப் போட்டுக்கிட்டு அவரோட பைக்ல பின்னாலருந்து போகக்குள்ள பாத்தேன்.. உன்ட கீழ்க்கால் வரைக்கும் தெரியுதே நிஸ்மி..'
'அதென்னடி செய்யுறது.. முந்தி மாதிரி பைக்ல சைடால இருந்து போனா ட்ரபிக் பொலீஸ்காரன் எழுதிறானாம்.. அதுதான் அப்பிடி. என்னமோ நாம எல்லாத்திலயும் நம்மட மார்க்கம் சொல்ற மாதிரித்தான் இருக்கணும் சில்மீ. நான் வாறன் அடுப்புல சோறு இருக்கு!' என்று விரைந்தாள் நிஸ்மி.
மற்றுமொரு தினம்..
'என்ன சில்மி, நா அவ்வளவு சொல்லியும் நீ நேத்து பயானுக்கு வராம வுட்டுட்டியே..?'
'அது வந்து இவன் சின்னவனை நேர்ஸரியிலருந்து கூட்டி வரப்போனதில லேட்டாகிட்டுது நிஸ்மீ..'
' பரவாயில்ல நீ பிந்தியென்டாலும் வந்திருக்கலாமே.. வட்டி வாங்குறது வட்டி குடுக்கிறது எவ்வளவு பாவம் என்டதை என்ன அழகா நம்மட பஷீர் மவுலவி எடுத்துச் சொன்னாரு தெரியுமா..?'
'அப்பிடியா..? வட்டி குடுக்கிறதும் பாவமென்டா.. எங்கடவரு பேங்க்ல லோனெல்லாம் எடுத்திருக்காரு அதுக்கு வட்டி வெட்டுறானே.. நிஸ்மீ!'
' அதுவும் பாவந்தான்..! அதுக்குத்தான் உனக்கிட்ட பயானுக்கு வா என்டு சொல்றது.. அப்பிடி வந்திருந்தா நீ லோன் எடுக்க வாணாமென்டு உன்ட புருசன்ட சொல்லியிருக்கலாமில்லியா..?'
'அதுக்கென்னடி பண்றது.. வேலைக்குப் போய் வாறதுக்கு பைக் வாங்கிறதுக்கு யாரு காசு தாறது..? அதான் டிப்பாட்மென்ட்ல பைக் லோன் எடுத்தாரு. அதுசரி ஒன்ட அவரு எப்பிடி புது ஆட்டோ வாங்கினாரு? லீஸிங்ல வாங்கினென்டு கேள்விப்பட்டேனே?'
'இல்லல்ல.. நாந்தான் சீட்டுப் போட்டு ரெண்டு லெச்சம் காசு குடுத்தேன்.. அடுத்த மாதம் முடியுது. நீயும் அடுத்த சீட்டுக்குச் சேர்ந்து லோன் காசைக் கொண்டு போய்க் கட்டிரு.. என்னமோ சில்மி.. நாளைக்கு படைச்சவன் ரப்புக்கிட்ட நாம எல்லாரும் கணக்குக் குடுக்கணும். அவன் எல்லாம் அறிஞ்சவன். இருட்டில மறைவுல நடக்கிறதையும் அறிய வல்லவன்..'
'பாப்பம்.. அப்படித்தான் செய்ணும் நிஸ்மீ. நான் வாறேன். சுமைலாவை டியூசனுக்கு அனுப்பணும்'
பிறிதொரு நாள்..
'அக்கா அக்கா!' என்று யாரோ கூப்பிட்டார்கள்.
சமையலறையினுள் வேலையாக இருந்த நான் வெளியே வந்து பார்த்தபோது கையில் பைலுடன் ஒரு இளம் பெண் நின்றிருந்தாள்.
'அக்கா நான் சமூர்த்தி ஒப்ஃபிசிலிருந்து வாறேன். யுத்த காலத்தில பாதிக்கப்பட்டவங்கள்ற விபரம் எடுக்க வந்திருக்கிறம். அப்படி யாராவது உங்கட குடும்பத்தில இருக்காங்களா?' என்றபடி உள்ளே வந்தாள்.
'ஆ.. வாங்க தங்கச்சி. எங்கட வாப்பா முந்தி கடத்துப்பட்டவரு அதைப் போடலாமா?'
'எந்த வருசம் கடத்துப்பட்டவரு..?' என்று பேனையைத் திறந்தாள் அந்த யுவதி.
'அது வந்து 1988ம் வருசம் நடந்தது.. மரக்கறி கொண்டுவர தம்புள்ளைக்கு ட்ரைவராப் போனவருதான். இடையில யாரோ வேனோட கடத்திக் கொண்டு போயிட்டாங்க. இன்னும் திரும்பவேயில்ல உயிரோட இருக்காரா இல்லையாண்டு கூடத் தெரியாது' சொல்லும்போதே எனக்கு அந்த சிறுவயதுத் துயரம் மனதிலே நிழலாடி லேசாக அழுகை வரும்போலிருந்தது. கண்களை தாவணித் தலைப்பில் துடைத்துக் கொண்டேன்.
'1982ம் ஆண்டில இருந்து 2009 வரையில பதியலாம் அக்கா. ஆனா நீங்க கலியாணங் கட்டியிருக்கிறதால உங்கட குடும்பத்தில இதைப் பதிய ஏலாது. உங்களுக்கு கலியாணங்கட்டாத சகோதரம் யாராவது இருந்தா சொல்லுங்க. அவங்கட பேர்ல இதைப் பதியலாம். அரசாங்க நிவாரணம் கிடைக்கும்'
'அப்படி யாரும் இல்ல தங்கச்சி. என்ட சகோதரம் எல்லாரும் கலியாணம் கட்டிட்டாங்க. போன மாதம்தான் கடைசித் தங்கச்சிட கல்யாணம் கூட நடந்தது'
'சரி, அக்கா அப்ப நான் போய்ட்டு வாறேன்'
'இருங்க தங்கச்சி டீ ஏதும் குடிச்சிட்டு போகலாம்' என்றேன்.
'இல்லக்கா இந்த வளவுக்குள்ள இருக்கிற உங்கட மற்றக் குடும்ப ஆக்கள்ட விபரமும் பதியணும்.. நான் வாறேன்' என்று அவள் வாசல் கேட்டைக் கடந்து சென்றுவிட்டாள்.
அந்தப் பெண் சென்று சிறிது நேரத்தில், 'அடியே சில்மி.. அந்த சமூர்த்திக்காரி இஞ்சயும் வந்தாளா? யுத்த காலத்தில காணாமப் போனவங்களையெல்லாம் பதியிறாங்களாம்.. ஒங்கட வாப்பாட பேரைக் குடுத்தியா நீ? அரசாங்கத்தால நெறையக் காசு தரப்போறானாம்டி.. டீவியில சொன்னாங்க..' என்று பதறியபடி என் கேற்றைத் திறந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே விரைந்து வந்தாள் நிஸ்மி.
'இல்லை நிஸ்மீ. அது வந்து எங்க வாப்பாவுக்கு கலியாணமாகாத பிள்ளைகள் இருந்தாதான் தருவாங்களாம் என்று சொல்லிட்டாள். அதுதான் பதிய இல்ல.'
'போடி இவளே! ஒனக்கு புத்தியேயில்லடி'
'ஏண்டி அப்படிச் சொல்றா?'
'பிறகென்னடி..? எங்கட வாப்பாவும்தான் ஒங்கட வாப்பா தொலைஞ்ச நேரம்தான் மவுத்தாப் போனாரு. எனக்கும் சகோதரம் எல்லாரும் கலியாணங் கட்டிட்டாங்கதான்... ஆனா நான் நிவாரணத்துக்குப் பதிஞ்சுட்டேன் தெரியுமா?
' எப்பிடிடீ.. நிஸ்மீ? ஒங்க வாப்பா நெஞ்சு வருத்தம் வந்துதானே மவுத்தாகினாங்க?'
'ஓ! ஆனா அது யாருக்குடி தெரியப்போவுது..? நான் புலி புடிச்சிப்போய் அடிச்சிக் கொன்டுட்டாங்கன்டுதான் குடுத்திருக்கேன். அரசாங்கம்தானே சில்மி காசு தரப்போவுது.. அதால நான் என்ட தங்கச்சி நுஸ்ரத்தை இன்னும் கலியாணங்கட்ட இல்லண்டு போட்டுப் பதிஞ்சிட்டுத்தான் வாறேன். நீயும் உன்ட தங்கச்சி றிஸானாட பேர்ல பதிஞ்சிருக்கலாமேடி மடைச்சி.. அது போன மாசம்தானே கலியாணங்கட்டுனிச்சு..? சரி சரி, நான் வாறண்டி' என்றபடி என் வீட்டு கேற்றைக் கடந்து தன் வீடுநோக்கி விரைந்தாள் நிஸ்மி.
'எங்கடி நிஸ்மீ இப்பிடி அவசரமா ஓடுறா? கொஞ்சம் இரேன்?'
' இல்லடி, நான் போய்ட்டு வாறேன், லுஹர் தொழணும்..!'
-'மூதூர்' மொகமட் ராபி
(2013.12.12)
(2013.12.12)
( குறிப்பு: பயான் - இஸ்லாமிய மதப் பிரசங்கம், அபாயா – உடலை முமுமையாக மூடி பெண்கள் அணியும் மேலங்கி, ரப்பு - இறைவன், மவுத்து – மரணம், )
No comments:
Post a Comment