Friday, May 4, 2012

சிறுகதை: மூதூர் மொகமட் ராபி






நண்பனே...!
எனது உயிர் நண்பனே...!













னக்கு நீண்டகால நண்பன் ஒருவன் இருந்தான்.

ஒரு நிமிஷம் இருங்கள்! 'இருந்தான்' என்றா சொன்னேன்? அப்படிச் கூறினால் அவன் இப்போது எனக்கு நண்பன் இல்லை என்றாகி விடும் என்பதால் உங்களின் அனுமதியுடன் அதிலேயுள்ள 'ந்தான்' என்ற விகுதியை மாற்றி விடுகின்றேன். இருக்கின்றான்!


அவன் ஓர் பாடசாலை ஆசிரியன்.  பெரிய புத்திசாலியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஆனால் யாரைப் பார்த்தாலும் சுவாரசியமாகப் பேசக்கூடியவன். அதுமட்டுமல்ல இடம், பொருள், ஏவல் அறிந்து நடந்து கொள்ளுவதிலே பெரிய சாமர்த்தியசாலி அவன்.  ஆங்கில மொழியறிவும் ஏறக்குறைய ஒரு கனவான் போன்ற தோற்றமும்  இருப்பதால் கேட்கவும் வேண்டுமா.. எதையும் யாரிடமும் சாதித்துக் கொள்ளக் கூடியவனாக இருந்தான் - அழகான வயசுப் பெண்கள் உட்பட. அவன் எதைச் செய்தாலும் அதற்கு உள்ளுர ஏதாவது காரணம் இல்லாமலிருக்காது.


அவனிடமுள்ள படுசுவாரசியமான விடயம், எப்படியான தகிடுதத்தங்கள் சுழியோட்டங்களிலே ஈடுபட்டாலும் வேளை தவறாது இறைவணக்கத்தில் ஈடுபட்டுவிடுவான் என்பதுதான் . அந்த வழக்கத்தை மட்டும் அவன் என்றைக்கும் கைவிட்டதில்லை. நான் கூட, 'செய்வதையெல்லாம் செய்துவிட்டு தொழுது தப்பிவிடலாம் என்ட நப்பாசையாடா உனக்கு..? நம்மையெல்லாம் படைச்சவன் என்ன அவ்வளவு ஏமாந்தவனாடா?' என்று அவனை வேடிக்கையாகக் கலாய்ப்பதுண்டு. தான் தொழுவது மட்டுமல்லாது 'ஒழுங்காகத் தொழுகிறாயாடா நீ?' என்று தொடங்கி எனக்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து அவ்வப்போது 'மினி பயான்' (சிறு ஆன்மீகச் சொற்பொழிவு) வைப்பான், அவன்.


எனக்கும் அவனுக்குமிடையிலே உயரம் மற்றும் நிறம் அடங்கலாக தோற்றத்தில் மட்டுமல்லாது மனோபாவங்களிலும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.  எதையுமே நேர்வழியில் மட்டுமே சிந்திக்கவும் அணுகவும் விரும்புபவனாகிய  எனக்கு அவனது சாமர்த்தியப்போக்கு வியப்பையும் ஒருவித ஆர்வமதிப்பையும் ஏற்படுத்துவதுண்டு. அவனைப்போல சாமர்த்தியமாக நடந்து கொள்ள மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால் இன்று இருப்பதை விடவும் வசதியான பத்திரமானதொரு வாழ்வை நான் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால் அது நிச்சயம்  எனக்குப் பிடித்தமான வாழ்வாக இருந்திருக்காது என்பதெல்லாம் வேறுவிடயம்.


எங்களுக்கிடையே இத்தனை வேறுபாடுகள் இருந்தபோதிலும் இருவரும் வெகுகாலமாக நல்ல நண்பர்களாகத்தான் இருந்து வந்தோம்.. மன்னிக்கவும்.. இருக்கின்றோம். அதற்குரிய  காரணங்களில் ஒன்று நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடியாதளவு தூரத்தில் வசிப்பது. எங்களது மனோபாவ வேறுபாடுகளை மோதவிடாமல் கவனமாகத் தவிர்த்துக் கொள்வது மற்றையது.


ஆனால்  இப்போது நான் சொல்லப்போகும் விடயம் எங்களுக்கிடையே இருக்கும் அந்த எழுதாத சட்டம் பற்றியல்ல. மாறாக, அத்தனை கவனமாக இருந்தும் கூட நாங்கள் இருவரும் மோத வேண்டிய சூழ்நிலை எப்படி உருவானது என்பதைச் சொல்வதற்காகத்தான் இதை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.


அதை நீங்கள் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்பு நானும் இப்போது ஒரு ஆசிரியராகி ஒரு பாடசாலையிலே கற்பித்துக் கொண்டிருப்பது...    அதே பாடசாலையில் சில காலத்துக்கு முன்னர் அதிபராகக் கடமையேற்ற ஒரு ஊழல் மோசடிப் பேர்வழியின் அட்டகாசங்கள்...   அவரின் நேர்மை தவறிய நடவடிக்கைகளால் எனது சமூகத்தைச் சேர்ந்த ஏழைக்குடும்பங்களின் கல்வியில் ஏற்பட்டுவந்த பாதிப்புக்கள்...எல்லாவற்றையும் விலாவரியாகச் சொல்லியாக வேண்டும்.


ஆனால் அதையெல்லாம் ஒன்றும் விடாமல் நான் விபரிக்கப்போனால் நீங்கள் ஒன்றிரண்டு கொட்டாவிகளுக்குப் பிறகு இந்தக்கதையை மூடிவைத்து விட்டு STAR TV யில் ஐபிஎல் கிரிக்கட் மறுஒளிபரப்புகளைப்  பார்க்கப் போய்விடுவீர்கள்...என்பதால் விட்டுவிடுகின்றேன். (பிழைத்துப் போங்கள்!)


***








ழல்பேர்வழியின் அட்டூழியங்களுக்கு எதிரான மும்முரமான போராட்டத்தின் உச்சத்தில் நானிருந்த நேரம் அது. 
அதே காலப்பகுதியில்தான் எங்களது உள்ளுர் அரசியல்வாதி ஒருவரின் அந்தரங்கச் செயலாளராக அந்த நெடுநாள் நண்பன்  நியமிக்கப்பட்டான். அந்த விடயம்கூட ஒருநாள் வீட்டுக்குப் போவதற்காக நான் பிரதான வீதியைக்கடந்து கொண்டிருந்தபோது என்னைக் கண்டுவிட்டு காரை நிறுத்தி அவன்  பேசியதால்தான் தெரிய வந்தது.


பின்பு ஒருநாள் எங்கள் பாடசாலையின் வருடாந்த கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு பொலீஸ் காவலுடன் அவனது  அரசியல்வாதி சகிதம் வந்திருந்தான்.


178 சென்ரிமீற்றர் உயரத்தில், ஆகாய வெளிர்நீலநிற சேர்ட், ரத்தச்சிவப்புநிற டை,  கறுப்புக்கோட் குளிர்க்கண்ணாடியுடன் அழகான கறுப்புநிறத்தில் பளபளக்கும் ஹையுண்டாய் காரில் ஸ்மார்ட்டாக வந்து இறங்கிய அவன்மீது  உண்மையான நேசமுள்ள எனக்கே லேசான பொறாமை வந்துவிடுமோ என்று பயந்திருக்கின்றேன். அவனது தோற்றத்துக்கும் குணாம்சங்களுக்கும் அந்தப்பதவி வெகு கச்சிதமாய் இருந்தது.


 அங்கும் கூட என்னிடம், ' டேய்! மச்சான், தவறாமல் அஞ்சுநேரமும் தொழுகிறாயாடா...?' என்றுதான் கேட்டான். 'சரி இறைபக்தியில் பற்றி  இவ்வளவு அக்கறைப்படுபவன் நிச்சயம் நமது சமூகத்தின் பிரச்சினையிலும் அக்கறை காண்பிப்பான்' என்று நம்பி எனது அதிபரின் துவேசம், ஊழல் மோசடி நடவடிக்கைககள், அவருக்கெதிரான எங்களது போராட்டங்கள்  பற்றியெல்லாம் அவன் காதிலே போட்டு வைத்தேன்.  அவரால் சுற்றயல் பிரதேசத்தில் இருக்கும் எங்கள் சமூகம் எவ்வளவு மோசமாகப் பாதிப்புக்குள்ளாகின்றது என்பதையும் விளக்கமாக விபரித்து அந்த ஊழல்பேர்வழியை இந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக உதவுமாறு அவனிடம் கேட்டிருந்தேன்.


ஆனால் அதுதான் நான் செய்த மிகப்பெரும் தவறு!


அதைவிட தனிப்பட்ட வகையில் எனக்கு ஏதாவது பாரிய உதவி ஒன்றைக் கேட்டிருந்தால் கூட எங்கள் இருவருக்குமிடையில் எந்த மனஸ்தாபமும் இன்றுவரை வந்திருந்திருக்காது என்பது இப்போதுதான் தோன்றுகின்றது எனக்கு.


அரசியல்வாதிகளின் இருப்பே அவர்களை நம்பி வாக்களிக்கும் நமது அப்பாவிப் பொதுமக்களின் முட்டாள்தனத்திலும் மறதியிலும்தான் உள்ளது. அரசியலில் இறங்கிவிட்டால் அவர்களே நினைத்தாலும் கூட தாங்கள் பிடித்திருக்கும் அசிங்கம் பிடித்த வஞ்சகப் புலிவால்களை கைவிட்டு விடமுடியாது. அரசியல் சதுரங்க விளையாட்டில் நேர்மையான மனிதர்கள் என்று யாராவது இருந்தால் அவர்கள் மார்க்கட் மவுசுகுறைந்த தமிழ் சினிமா நடிகைகள் போலத்தான் இருந்தாகவேண்டும். மனசாட்சியில்லாத மிருகங்கள் மட்டுமே ஆயுள்வரை கதாநாயகர்களாக உலாவரும் சர்க்கஸ் கூடாரம்தான் அரசியல்துறை. ஒரு திருடனுக்கு எப்படிப் பார்த்தாலும் மற்றொரு திருடன்தானே உபத்திரவமில்லாதவனாக இருக்க முடியும்.


இதையெல்லாம் எப்படி நேரடியாக என்னிடம் சொல்வது என்று தெரியாமலோ என்னவோ சிறிது காலம் என்னை அவனது அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக அலையச் செய்தான் எனது நேசத்துக்குரிய அந்த நீண்டநாள் நண்பன்.


இறந்த மகனை உயிர்ப்பித்துத் தருமாறு கேட்ட தாயிடம், 'சாவு விழாத ஒரு வீட்டிலிருந்து பிடிச்சாம்பல் எடுத்து வா' என்று கேட்டாராமே  புத்த பெருமான். அந்த போதிமரத்து மாதவனைப்போலவே,  'என்னால் செய்ய முடியாது' என்று அவனுக்கே நிச்சயமாகத் தெரிந்த சில ஏற்பாடுகளைக் குறிப்பிட்டு  'அதையெல்லாம் செய்து கொண்டுவா ஆளைத் தூக்கிவிடலாம்' என்று என்னை அலைக்கழித்தான் அந்த சாமர்த்தியசாலி.


மரணமே நிகழாத  வீட்டிலிருந்து பிடிச்சாம்பல் கொண்டு வரப்போன  பெண்ணின் நிலைமைதான் அப்போது எனக்கும் இருந்தது.  ஆனாலும் நான் புத்தபெருமானின் துணையில்லாமலே என்னுடைய 'இறந்த குழந்தையை' உயிர்ப்பித்தேன். இன்னமும் சொல்லப்போனால் அந்த புத்தபெருமானின் எஜமானர்களின் மறைமுக இடைஞ்சலையும் மீறித்தான் 'மரித்த குழந்தையை'  உயிரூட்டியெடுத்தேன்.


ஆம்! எனது நோக்கத்திலிருந்த யோக்கியம் தந்த மனோபலத்தினாலும் தளராத விடாமுயற்சியினாலும்  பொதுமக்களின் ஒத்தாசையுடன் எங்கள் குழந்தைகளின் கல்வியை  நாசம் செய்துகொண்டிருந்த  ஊழல்பிசாசை அந்த இடத்திலிருந்து துரத்தியடித்தேன்.



***







ந்த நிகழ்ச்சிப் பிறகு வெகுநாட்களாக நண்பர்கள் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. சிறிதுகாலம் இருவருக்குமிடையில் கைத்தொலைபேசி குறுஞ்செய்திச்சேவையில் மெல்லிய பனிப்போர் நிகழ்ந்து வந்தது. அதன் பின்பு அதுவும் கூட நின்று போனது.


நீ....ண்ட காலமாய் தொடர்பே கிடையாது.


ஏறத்தாழ அவனை நானும் என்னை அவனும்; மறந்துபோய்விட்டிருந்த நிலையில் இரண்டொரு நாட்களுக்கு முன்பு நகரிலிருக்கும் பிரபலமான மருந்துக்கடையொன்றிலே மருந்தை வாங்கிக்கொண்டு திரும்பியபோது எனக்குப் பின்னால் நின்றிருந்தான் அவன்.

'மச்சான் நீயாடா? அஸ்ஸலாமு அலைக்கும்!' 

அந்த வெளிர்நீலநிற சேர்ட்..சிவப்பு டை..கறுப்புக்கோட்..கார்..எதையுமே காணவில்லை. சாயம்போன டீ சேர்ட் ஜீன்ஸில் முகவாயில் லேசாய் நரைத்த மூன்றுநாள் ஷேவ் செய்யப்படாத தாடியுடன் 'அவனா நீ' என்பது போல நின்றிருந்தான்.

' அலைக்கும் ஸலாம்! என்னடா எப்படியிருக்கிறாய்..? இப்ப உன்னைத் திரும்பவும் ஸ்கூலுக்கு ரிலீஸ் பண்ணிட்டாங்களா?'

' ம்ம்! தட் ஈஸ் நொட் ரிலீஸ் மச்சான்இ இட்ஸ் ரியலி எ பிக் ரிலீப்ஃடா!' என்றான் தோள்களைக் குலுக்கிக் கொண்டு.. அதன்பிறகு தெருவோரமாக நின்று வெகுநேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம்.
'கொஞ்சம் இருடா, ஒருநிமிஷம் நானும் மருந்தை வாங்கிட்டு..' என்று மீண்டும் பாமசிக்குள்ளே நுழைந்தவனை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.


இத்தனை நடந்தும் அவன் மீது எனக்குத் துளியளவு கூட வருத்தமில்லை என்றால் நம்புவீர்களா நீங்கள்?


ஆம்! அவன்மீது பரிதாபம்தான் ஏற்பட்டது. அதுகூட, அவனது காரையும் வசதிகளையும் பறித்துக்கொண்டு மீண்டும் 20ம் திகதியைக் காத்திருக்கும் சாதாரண ஒரு ஆசிரியர் வாழ்க்கைக்குள்ளே தள்ளிவிட்டார்களே என்பதனால் அல்ல...! அவன் சாமர்த்தியத்துக்கு ஒரு பீ. எம். டபிள்யூ காரோடு நாளைக்கே நடுவீதியில் என்னை மறித்து, 'மச்சான் இப்ப நான்........' என்று வேறு ஒரு புதிய தகவலை அவன் சொல்லக்கூடும்.


ஆனால், எனது கவலையெல்லாம்..


 'எப்போது பார்த்தாலும் என்னைப் போன்ற நண்பர்களுக்கு தொழுகையை வலியுறுத்தும் அந்த பிராண்டட் 'மார்க்கபக்தி' நண்பனுக்கு அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் சுபஹானஹுதாலா, அன்றாடம் கூலிவேலை செய்து விறகுவெட்டி, இறைவனைப் பயந்து ஐந்துவேளை தொழுது  களவு-பொய்யின்றி நேர்மையாக வாழும் ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு  உதவும் பாக்கியத்தை   ஏன் இல்லாமல் செய்தான்...?'  என்பதுதான்!


மருந்துகளோடு அவன் திரும்பி வந்ததும், 'மச்சான்,  நான் கொஞ்சம் அவசரமா போக வேணும்டா..நீ வேலைய முடிச்சிட்டு போகிற வழியில வீட்டுக்கு வந்திட்டுப் போ!' என்று புறப்பட ஆயத்தமானேன்.


'சரிடா, வரப்பாக்கிறேன்..நீ போயிட்டு வா!'  என்று விடை தந்தவன் சற்று யோசித்து விட்டு என்னை மீண்டும் அழைத்து,


' அதுசரி, தொழுகையெல்லாம் ஒழுங்காகச் செய்யுறியா?' என்று கேட்டான்.




 Thanks: Kinniya net
-மூதூர் மொகமட் ராபி

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நண்பர் மொகமட் ராபி,

    இந்தக் கதையைப்படிக்கும்போது இது ஒரு கற்பனைக் கதையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது. அவ்வாறு கற்பனையாக இருந்தால் உங்கள் கற்பனை வளத்துக்கு ஒரு விசேட பாராட்டு!

    வழமையாக உங்களது சிறுகதைகளில் வரும் பாத்திரங்களை நெடுநேரம் உரையாட விடுவதன் மூலம் கதையை நகர்த்திச் செல்லுபவர்தான் நீங்கள். ஆனால் வழமைக்கு மாறாக இந்தக் கதையை வெறும் இரு பாத்திரங்களின் குணநலன்களைப் பற்றிய விபரிப்புகளோடும் வெகு அரிதான உரையாடல்களுடனும் எழுதிச் சென்றிருக்கின்றீர்கள்.

    இன்றைய போட்டா போட்டிச் சமூகத்தில் இரு நண்பர்களின் உறவுநிலையை குறிப்பிடத்தக்களவு உண்மையாக விபரித்திருக்கின்றீர்கள். இறுக்கமான ஆன்மிகப்பேணுதலைப் பற்றிப்பேசுவதும் ஆனால் சமூக வாழ்வுநிலைப் போட்டியென்று வரும்போது தேவையான சமரசங்களைக் மனஉறுத்தலின்றி செய்வதுமான இன்றைய மனிதர்களின் போலித்தனங்களை இயல்பு குன்றாமல் விபரித்துச் சென்றுள்ளது சிறப்பாக உள்ளது.

    அரசியலில் நேர்மை என்பதற்குரிய உங்கள் உவமானங்கள் புதிதாக இருக்கின்றது. அத்துடன் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாது சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக்கழிப்பதைக் கூற புத்தரையும் இறந்த குழந்தையைச் சுமந்துவந்து உயிர்ப்பிச்சை கேட்ட பெண்ணையும் கையாண்டிருப்பது வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கின்றது.

    ஆனாலும் கதையின் சில இடங்களிலே மறைந்த தமிழக பிரபல எழுத்தாளர் ஒருவரின் பாணி உங்களையறியாமலே அவ்வப்போது தலைதூக்குவதும் தெரிகின்றது. கதையின் போக்கை சுவாரசியமாக்குவதற்கு அத்தகைய பாணி நெருடலின்றி பயன்படுகிறது என்றாலும் அவற்றையும் உங்களுக்கேக்கேயுரித்தான மொழிநடையில் கையாள்வதிலேதான் சவாலைச் சந்தித்து வெல்லும் திருப்தியிருக்கும் என்பது எனது கருத்து.

    பாராட்டுக்கள்

    ReplyDelete