பூவிழியே!
பூவிழி
மெல்லத் திறவாமலே
புதைந்துபோன
என் புன்னகைப் புதையலே...
புனைந்துநான் முடிப்பதற்குள்ளே
தொலைந்துபோன
புத்தம் புதுக்கவிதையே!
வரைந்த வண்ணம்
வரைந்தவண்ணம் உலரும் முன்னே
மறைந்துபோன
என் மௌன ஓவியமே..!
உன் தந்தை முகம் பாராமல்
தாயின் பாலும் அறியாமல்
என் அனிச்சம்பூவே
அப்படியென்னடி அவசரம் உனக்கு..?
இரத்த உறவுகளும்
இரக்கமில்லாச் சதிபுரியும்
ஈன மனிதர்களைப்
பார்த்திடப் பயந்துதானோ
உன் இருவிழிகளை நீயும்
இறுக மூடிவிட்டாய்...?
பாசத்தைக்கூடப்
பணத்தால் கணித்திடும்
இந்தப்பாசாங்கு பூமியிலே
உன்பாதங்கள் படவிரும்பா
அவசரத்தினாலா
பதறியடித்து நீ ஒடி மறைந்தாய்...?
ஓ! இறைவனே!
இவ்வுலகில் நீயொருவன்
உண்மையிலே இருந்தாயென்றால்
ஒன்று செய்!
விழிதிறவா மழலையெல்லாம்
விண்வெளியில் தாரகையாய்
உருமாறி உயிர்த்திருக்கும்
என்பாலர் பருவத்துப் பள்ளிக் கதைகளை
உண்மையாய் ஆக்கிவிடு!
ஒவ்வொரு இரவிலும்
ஒயாமல் விழித்திருக்கும்
என் ஒளிமகளை நான் காணும்
சிறுதயவையேனும் புரிந்துவிடு!
-மூதூர் மொகமட் ராபி
No comments:
Post a Comment