Friday, May 4, 2012

இது என்ன நியாயம்?கம்பன் பேரில் கலகம் வேண்டாம்!ருடாவருடம் தலைநகரில் நடைபெறும் மனநிறைவைத்தரும் வைபவங்களுள் அகில இலங்கை கம்பன் கழக விழா முதன்மை வாய்ந்தது. தமிழ்பேசும் மக்கள் என்ற கோசத்தோடு உள்நாட்டு இந்து, முஸ்லிம் கிறிஸ்தவ தமிழ் இலக்கியகர்த்தாக்கள் இலக்கிய சுவைஞர்கள் உட்பட வெளிநாட்டு தமிழறிஞர்களையும் ஒன்றிணைக்கும் சமத்துவ இலக்கிய சங்கமமாக விளங்குவது கம்பன்கழக விழா. இவ்வாறு ஒற்றுமையின் சின்னமாக திகழும் கம்பன் கழகம் இன்று ஊடகங்களில் பேசுபொருளாகமாறியிருப்பது நமது கவனத்தை ஈர்ப்பதாகிறது.


இவ்வருட கம்பன் கழக தொடக்கவிழாவில் ஜனாப். ரஊப்ஹக்கிம் உரையாற்றக் கூடாது.  அவர் புலம்பெயர் தமிழர் குழுக்களின் முயற்சியின் பேறாய் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கெதிரான பிரேரணையை தோற்கடிக்கமுயற்சித்தார். இது தமிழ்மக்களுக்கு எதிராகச் செயற்பட்டாகிறதால், ஆதலால் அவர் அ.இ.கம்பன்.கழகத்தில் தொடக்கவுரையாற்றக் கூடாது என தமிழ்ப்படைப்பாளிகள் சங்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்வின் என்ற இணையதளம் செய்தி வெளியி;ட்டுள்ளது.


தொடக்கவுரையாற்ற ஹக்கீம் தக்கவர்தாமா என்பதை கம்பவாரிதியவர்களும் நிகழ்வுக்குழுவும் நன்குபரிசீலித்ததன் பின்பே  தீர்மானித்திருக்க, தமிழ்படைப்பாளிகள் சங்கமானது அத்தீர்மானம் தமிழ்மக்களுக்கு எதிராகக்கொண்டுவரப்பட்ட தீர்மானம்; எனக்கருதி ஜனாப். ஹக்கீம் உரையாற்றுவதை எதிர்க்கிறது.


தொடக்கவுரையாற்ற ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டதற்குப் பின்னணியில் பெரும் மர்மங்களோ நோக்கங்களோ இருந்திருக்கும் என்றெல்லாம் கருதத் தேவையில்லை. ஹக்கீம் ஒரு தமிழறிந்த சிறந்த பேச்சாளர். அவ்வளவுதான் அத்தகுதிபோதும் தொடக்கவுரையாற்றுவதற்கு என கம்பன்குழு தீர்மானித்திருக்கும். அதற்கும் அப்பால் அவர் ஒரு அரசியல்வாதி என்ற வகையில் அரசியல் சொல்லாடற்பாங்கில் சொல்வதானால் அவரும் ஒரு தமிழ்பேசும் மகன் என்பதனால் அவர் தெரிவுசெய்யப்பட்டிருக்கலாம். இதில் ஏனைய காரணங்களை விட இக்காரணமே சாலப்பொருந்தும் எனக்கருதலாம்.


'கம்பனைப் போற்றுவதானது தமிழைப்போற்றுவதாகும்'. என்பதில் இருகருத்துக்களில்லை. இவ்வாறிருக்க தமிழ்படைப்பாளிகள் சங்கம் ஜனாப்.  ஹக்கிம் தமிழருக்கு எதிராகச்செயற்பட்டாராதலால் அவர் கம்பன் கழகத்தில் உரையாற்றலாகாது என்பதினூடாக தமிழ்மொழி தமிழருக்கு மாத்திரம் உரித்துடையமொழி என கூறி தமிழ்மொழிக்கு ஒரு இனம் சார்நிலைப்பட்ட முகத்தோற்றத்தை கொடுக்க முற்படுவது வெளிப்படையாகத்தெரிகிறது.


அதாவது பல்வேறு பிரதேசத்தவரும் பல்வேறு இனத்தவரும் பேசவும் பற்றுக் கொள்ளவும் வளர்க்கவும் பன்முகங்கொண்ட ஒரு செம்மொழிக்கு இனவாதச்சாயம் பூசி அழகுபார்க்க முற்படுவது ஆரோக்கியமானதல்ல என்பதை தமிழின் மீது அறிவுபூர்வமான அன்பு வைத்திருப்போர் அனைவரும் ஏற்றுக்கொள்வர்;.


அஃதவ்வாறிருக்க அமெரிக்காவின் ஜெனிவாப்பிரேரணையானது தமிழ் மக்களது நலனைக்கொண்டதா அல்லது அமெரிக்காவின் நலனைக் கொண்டதா என்ற வினாவை எழுப்பினால் அதன் விடை என்னவாகும் என்பதும்இ சர்வதேசஇ பிராந்திய அரசியல் போக்கு எதிர்காலங்களில் என்னென்ன தளங்களில் பயணிக்கும் அப்போது இப்பிரேரணை எத்தகைய பெறுமானத்துக்குட்படும் என்பதெல்லாம் உடன் கூறமுடியாத விடயங்கள்.


யதார்த்தம் இவ்வாறிருக்க தமிழைக்கொண்டாடும் ஒரு அரிய இனிய கைங்கரியத்தை அரசிலாக்குவது பரிதாபத்துக்குரியது.

கடல்கடந்து செயற்படும் முன்னாள் போராளிகளின் பல்வேறு முயற்சிகளின்பேறாக பிரேரணை கொண்டு வரப்பட்டதென்றும் அதற்குத்தாமே பெருங்காரணம் என்றும் பல்வேறு புலம்பெயர் முன்னாள் ஆயுதக்குழுக்கள் இன்றுவரை ஊடகங்களுடாக உரிமைப்போராட்டம் நடாத்திக்கொண்டிருப்பது வெளிப்படை.


அந்தவகையில் பார்க்கப்போனால் தமிழ் ஆயுதக்குழுக்களுக்குள் பல்வேறு வேற்றுமைகள் இருப்பினும் அவை முஸ்லிம்கள் மீது தமிழ்த் தேசியவாதத்தை வன்முறைவடிவில் பிரயோகிப்பதில் அவை தமக்குள் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டிருந்தன என்பது மறுக்க முடியாத மறைக்கமுடியாத உண்மை. அந்தவகையில் பார்க்கப்போனால் தம்மையளிக்க முற்பட்டோரின் நடவடிக்கையினை எதிர்ப்பதில் எந்தப்பிசகும் இல்லை. சிங்களத்தேசியவாதத்தின் எந்வொரு நகர்வினையும் எதிர்ப்பதற்கு உள்ள நியாயம் தான் இதற்குள்ள நியாயமும்.


இந்த நியாயங்கள் ஒருபுறமிருக்க நூற்றாண்டிற்கு முன்பிருந்து  பொன்னம்பலம் இராமனாதன் தொடக்கி வைத்த தமிழ்ப்பேசும் மக்கள் என்ற வகைப்படுத்தல் இன்று வரையில் அது முஸ்லிம்கள் தொடர்பில் மேலாதிக்க நோக்கங்கொண்ட சொல்லாடலாகவே பிரயோகிக்கப்படுகிறது என்பது தெள்ளத் தெளிவான விடயம்.


யதார்த்தம் இவ்வாறிருக்க தமிழ்ப்பேசும் மக்கள் என்ற சொல்லாடலுக்குரித்தான அரசியல் பரிமாணத்துக்கு பதிலாக மொழிசார் பரிமாணத்தை எடுத்துக்கொண்டோமானால் முஸ்லிம்கள் தமிழைப் பேசவும் போற்றவும் வளர்க்கவும் முற்றிலும் அருகதையுடையவர்கள்.


தமிழ் மொழிக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான தொடர்பு இனாமாகவோ பிச்சையாகவோ வழங்;கப்பட்ட ஒன்றல்ல. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக பல்லாயிரம் இலக்கியங்களைப் படைத்துத்தமிழை அணிசெய்து கொண்டுதான் இன்றும் முஸ்லிம்கள் தம் வீட்டு மொழியாகவும் கற்றல் மொழியாகவும் தமிழைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.


உமறுப்புலவர் சதாவதானி செய்குத்தம்பிப்பாவலர் முதற்கொண்டு,அருள்வாக்கி அப்துல்காதிருப்புலவர்,சொர்ணகவிராயர், மஸ்தான்ஸாஹிப்சித்தர் ஈறாக கவிக்கோ, எம்.ஏ. நுஃமான் வரை பல்லாயிரம் முஸ்லிம்கள் முத்தமிழுக்குமப்பால் நாற்றமிழான அறிவியற்றமிழுடாகவும் தமிழக்கு அரும்பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.இன்றும் இலங்கையில் தமிழ்மக்கள் எவருமே வசிக்காத எத்தனையோ பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் அருமைத் தமிழைப்பேசி படித்து எழுதித் தமிழுக்கு அணிசெய்து கொண்டிருக்கின்றனரென எத்தனையோ தமிழறிஞர்கள் வியந்துரைத்துக் கொண்டிருக்கின்றனர்.தென்னிந்தியாவில் உள்ள பழந்தமிழ் கல்வெட்டுக்களை ஆராய்ந்த புகழ்வாய்ந்த ஆய்வாளர்; ஐராவது மகாதேவனின் ஆய்வு நூல் பற்றிக்குறிப்பிட்ட தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள், 'தமிழ்மக்கள்   மத்தியில் இருந்து அருகி விட்டதாகவும் அவை முந்துதமிழ் எனவும் கூறப்படுகின்ற பல பழந்தமிழ்ச்சொற்கள் இன்றும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பது கவனிப்பிற்குரியதும் ஆய்வுக்குரியதுமாகும்'  எனக்குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் தமிழுக்கும் முஸ்லிம்களுக்கும் பன்னெடுங்கால நீண்டநெடிய தொடர்புகளிருக்கின்றன. இத்தகைய ஒரு உறவை தமிழ்படைப்பாளிகள் சங்கம் என்று கூறப்படுகின்ற ஒரு சங்கம் குறுகிய கண்ணோட்த்தினூடாக பிரித்துப்பார்க்கலாகாது.


எல்லாவற்றுக்குமப்பால் 'கம்பனை பண்டிதர்கள் மத்தியில் எடுத்துச் சென்றோருக்கு மத்தியில் கம்பனை பாமரர்மத்தியில் எடுத்துச்சென்றவர் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி உயர் திரு மு.மு.இஸ்மாயில் அவர்கள் என்று எல்லாத்தமிழ் அறிஞர்களும் ஒருமிக்கப் பாராட்டுவர். அந்தளவுக்கு நீதிபதி. மு.மு.இஸ்மாயில் அவர்கள்  கம்பராமாயண விருத்தப்பாக்களுக்கு சொல்,பொருள், அணி எனப் பிரித்து பொருளும் பொழிப்பும் சிறப்பும் எழுதிய தமிழ்நடை லட்சக்கணக்கானோரை கம்பனைப் படிக்கத் தூண்டியது.


எவ்வாறாயினும்  இக்காரணங்கள் அனைத்கக்கும் அப்பால் ஜனாப். ரஊப் ஹக்கீம் அவர்கள் ஒரு காத்திரமான கவிப்புலமைப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். ஆகவே அஃதொன்று மட்டுமே போதும் அவர் கம்பன் விழாவில் தொடக்கவுரையாற்ற.மொழியை...இணைக்கும் வழியாகவே பார்ப்போம் - யாரும்
     பிரித்துப் பலியாக்க வேண்டாம்.
-மூதூர் முகம்மதலி ஜின்னாஹ்
 Thanks : Thenee

No comments:

Post a Comment