Sunday, May 6, 2012

கிண்ணியா : ஓர் இன்ப ஏமாற்றம்!







தீப்பிடித்ததோ

டைனமைட் வெடி!

ஆனால்

நமத்துப்போனதோ

வதந்தி வெடி!





(Thanks : Picture courtsey  Kinniya net)





டந்த 4ம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் கிண்ணியா பாலம் அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் ஒரு அதிசய சம்பவம் நடைபெற்றதை ஊடகங்கள் மூலமாக அறிந்திருப்பீர்கள். 


தனிப்பட்ட ஒருவருக்குச் சொந்தமான  காணிக்குள் குழி ஒன்றைத் தோண்டிய போது அதற்குள்ளிருந்து தீச்சுவாலையுடன் பெருமளவு புகையும் கிளம்பியுள்ளது.


இதனால் குழியைத் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் பீதியடைந்து வெருண்டோடினர்.  அதனைக் கேள்வியுற்று பார்ப்பதற்காக பெருமளவிலே மக்கள் கூடியுள்ளனர். பின்பு தீச்சுவாலை விடயம் ஆண்களிடம் அல்லது பெண்களிடம் கூறப்பட்ட இரகசியம்போல சில நிமிடங்களுக்குள்ளே உலகம் முழுவதும் பரவிவிட்டது.


( நம்புங்கள் - உடனடியாகவே தொலைபேசியிலும் Face book உட்பட சமூகத்தளங்களிலும்  இணையத்தளங்களிலும் என்ன ஏது விபரம் என்று கெட்கத் தொடங்கி விட்டார்கள் )



முதலில் ஒருவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை என்பது மட்டுமே இன்றுவரை 100%  சுத்தமான உண்மை. வேறுவார்த்தையில் சொன்னால், அதனையடுத்த நிமிடத்திலிருந்து 'உண்மை' அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டது.


இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு தனிமனிதரும் தங்கள்  மனப்பாங்கு, கேள்விஞானம் மற்றும் கல்வியறிவு  விசாலத்துக்கேற்ப பல்வேறுவிதமான யூகங்களை வெளியிடத் தொடங்கிவிட்டார்கள்.


அதிர்ஷ்டவசமாக அந்த வேளை கிண்ணியாப் பாலத்தில் நின்றிருந்த சுற்றுலா நண்பர்கள் குழு ஒன்றுக்கு உடனடியாக அங்கு செல்ல முடிந்தது. அவர்கள் மூலம்  கிண்ணியாவில் கிடைத்த சில அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.


முதலில், கீழுள்ள தொலைபேசி உரையாடலைப் பாருங்கள்:


'அது ஒண்ணுங் இல்ல மச்சாங்! இவனொளு ஆக்கள் நெறையா அநியாய வேலையெல்லாம்.........(தணிக்கை)........ செஞ்சிரிக்கானொள் பாருங்க.. அதான் பாருங்க ரப்புநாயன் பத்தியொழும்ப வச்சிரிச்சான்....எச்சரிக்கை பண்ணிரிச்சான் மச்சாங்..இதுக்குப் பெறவும் திருந்தி நடக்காட்டி...' என்று தொடர்ந்தது பாலத்தில் எமது வாகனத்துக்கு அருகே சைக்கிளை நிறுத்தி நின்று பேசிய ஒரு சாதாரண பொதுமகன் ஒருவர்.



'அது ஒண்ணுமில்ல பாருங்க இந்த எடம் பள்ளக்காணிதானே...முந்தி முந்தி நம்மட ஆக்கள் கெடந்த குப்பையெல்லாம் கொட்டினவனொளுதானெ...அதெல்லாம் உக்கி மெத்தேன் வாயு வெளியாவுது...அதுதான் பத்திரிச்சி...' என்றார் தனியார் டியூட்டரியில் விஞ்ஞானம் கற்பிக்கும் ஒரு இளைஞர்.


'இவனொள்தான் சும்மா என்னத்தையோ போட்டுப் பத்தவச்சுப்போட்டு பிலிம் காட்டுறானொள்...' என்பது ஒரு பாடசாலை பத்தாம் தரத்திலே கற்கும்மாணவியின் கருத்து என்றால்,


 60 வயது முதிய  பென்சனியர் ஒருவரின் எண்ணம் பின்வருமாறு உள்ளது:


'வாப்பா! இதெல்லாம் கடைசி காலத்துக்குரிய அடையாளந்தான்.. நம்ம மார்க்கத்தை சரியாக் கடைப்புடிச்சி நடந்தா எந்த கக்கிசமும் வராது. நம்மட பொண்டுவொளெல்லாம் டவுசர்போட்டுக்கிட்டு பைசிக்கில் ஓடிக்கிட்டுத் திரியுறதெல்லாம் அந்த ........க்கே பொறுக்கயில்ல அதான் இப்பிடியெல்லாம் முந்தி சுனாமியை உட்டான் இப்ப நெருப்பை உண்டாக்கிப் பயப்படுத்திறான்..'



'இது நம்மட பகுதியில எரிமலைக் குழம்பு வெளிவருவதற்கான அடையாளம்தான்.. ஏனென்டா கன்னியாவுல சுடுதண்ணி வருதெண்டா சும்மா வருமா? அப்படி என்னமோ இருக்கு...இனி கிண்ணியா திருகோணமலை ஏரியாவுலயிலயெல்லாம் சனம் இருக்கிறது ஆபத்துத்தான்..!' என்றார் ஒரு உயர்தரத்தில் புவியியலை ஒரு பாடமாக எடுத்தவரான முன்னாள் மாணவர் ஒருவர். (ஆனால் பெயரைக் குறிப்பிடப் போவதில்லை என்று சத்தியம் செய்தும் தனது புவியியல் பாடத்தின் பரீட்சைப் பெறுபேற்றைக் கடைசிவரை கூற மறுத்துவிட்டார் )


இப்படி ஒவ்வொருவரும் உண்மையான காரணங்களைப் பற்றிய சிறு அக்கறைதானும் இன்றி ஒவ்வொரு விதமான யூகங்களையும் நம்பிக்கைகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த இலவசசேவை சிறு தயக்கத்துடன் சூடுபிடிக்க ஆரம்பித்தவேளையில்தான்  கிண்ணியா பொலீசாரிடமிருந்து ஒரு தகவல் வெளியானது.

நீண்டகாலத்துக்கு முன்பு மீன்பிடிப்பவர்கள் புதைத்து வைத்திருந்த டைனமைட் வெடிமருந்துகளின் துகள்கள் கலந்த மண்ணே தீப்பற்றியது என்று உறுதியாகத் தெரிவித்தனர். இந்த 'டைனமைட்' உண்மை பற்றிய அறிவிப்பு நாடுமுழுவதும் செய்தியறிக்கைகளில் ஒளிபரப்பானதும் பலருக்கு மனம் தண்ணீரில் ஊறிய வெடிமருந்துபோல் சப்பென்றாகி விட்டது!


'சே! இந்த பொலீஸ்காரனொளே இப்படித்தான்! யுத்தம் முடிஞ்ச பொறவு  பரபரப்பான செய்தி ஒண்ணுமில்லாம இந்தச் சனமும்  ப்ரேக்கிங் நியுஸ்களில்லாமல் டீவிக்காரனொளும் 'டல்'லடிச்சுப்போய் கெடக்கிறதெல்லாம் இந்தக் காக்கிச்சட்டைக்காரனொளுக்கு எங்க தெரியப்போவுது...சே!  சரி கண்டுபுடிச்சதுதான் கண்டுபுடிச்சீங்க ஒரு ரெண்டு மூணுநாள் விஷயத்தை ஊறப்போட்டு வைத்திருந்தா என்ன கொறைஞ்சா போயிடும்? எவ்வளவு கஷ்டப்பட்டு அவனவன் மூளையைக் கசக்கி கற்பனைவளத்தைக் கூட்டி சனங்கள்ற  கவனத்தைக் கவருவதற்கு சாவுறான் என்டதெயல்லாம் யோசிக்காம இவனுகள் இவ்வளவு சீக்கிரமாக உண்மையைப்போட்டு ஒடச்சிப்போட்டானுகளே...!' என்று வேடிக்கையாக கவலைப்பட்டார் இளம் சட்டத்தரணி நண்பர் ஒருவர்.


அவர் கூறியதிலும் உண்மை இல்லாமலில்லை.
இன்னும் சில நாட்கள் காத்திருந்திருந்தால் சம்பவ இடமான கிண்ணியாவிலும் சூழவுள்ள இடங்களிலும் வேறு பிரதேசங்களிலும் இருந்து வந்திருக்கக்கூடிய சுவாரசியமான யூகங்களையும் கற்பனை வளங்களையும் இழந்துதான் விட்டோம் போலிருக்கின்றது.


இன்னும் இதை வைத்து நிகழ்ந்திருக்கக்கூடிய ஆன்மீக மிரட்டல்கள், உபன்னியாசங்கள், எதிர்வுகூறல்கள் மற்றும் லேசான பயமுறுத்தல்கள் போன்றவற்றைக்கூட சரிவர அனுபவித்திருக்காமல் ஒரு anti-climax ஆகிவிட்டதே என்ற சிறு ஆதங்கம் எனக்கும் இருக்கிறதுதான்.


ஒருமுறை, மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவிடம்,


'ஜோசியம், கைரேகை சாத்திரம், ராசிபலன், நியுமராலோஜி போன்றவற்றை நம்புகிறீர்களா?'


என்று வாசகர் ஒருவர் கேட்க அதற்கு அவர் தனக்கேயுரித்தான பாணியில் பதில் கூறி அவற்றைக் கிண்டலடித்து விட்டு கடைசியில் ஒன்று சொன்னார்:


' உண்மையில்லை என்றாலும் 'டல்'லடிக்கும் அன்றாட வாழ்க்கையை இப்படியான விடயங்கள் சுவாரசியப்படுத்துகின்றன '   




-மூதூர் மொகமட் ராபி

No comments:

Post a Comment