Wednesday, May 9, 2012

சிறகிலிருந்த பிரிந்த இறகு ஒன்று!

தருமு சிவராமு 


"தருமு சிவராமு  என்ற ஒரு படைப்பாளியைத் தெரியுமா உங்களுக்கு?"


                                என்று கேட்டால் என்று நம்மில் பலர் யோசிப்பார்கள். இத்தனைக்கும் அவன் நமது திருகோணமலை மண்ணில் பிறந்தவன்.


நமது நாட்டிலும் தமிழ்நாட்டிலும் கவிதை, சிறுகதை, குறுநாவல்கள், பத்திகள்,ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள், என்று எதையும் விட்டு வைக்காத எழுத்தாற்றலிலும் மட்டுமல்லாது கேலிச்சித்திரம், ஓவியம் ஆகிய துறைகளிலும் தனது தனித்துவமான ஆற்றலை நிரூபித்திருப்பவன் அவன்.

அட! இத்தனை விடயங்களில் சிறந்து விளங்கியவனை  அதுவும் நமது மண்ணின் படைப்பாளியை யாரென்று கூறாமல் பெரும் பீடிகையெல்லாம் போட்டுக்கொண்டு ஏதோ இன்று நேற்று எழுத்துத்துறையில் கால்வைத்திருக்கும் ஒரு கற்றுக்குட்டி எழுத்தாளரைப்போல அறிமுகம் செய்து கொண்டிருக்கிறீர்களே என்று கேட்பவர்களுக்கு மட்டும் ஒன்று சொல்கின்றேன்.

அவன் இப்போது உயிருடன் இல்லை.

ஆம்! எழுத்தையும் படைப்பாற்றலையும் தவிர இறுதிவரை தனது பிழைப்புக்கென தொழிலென்று எதையுமே செய்யாததாலும் இந்தப் உலகத்தின் பாசாங்குமிக்க போலிச்சம்பிரதாயங்களுடன் கடைசிவரை சமரசம் புரியாததாலும் தமிழ்நாட்டில் ஒரு சிறுநகரத்தின் ஒதுக்குப்புறமான சந்து ஒன்றிலிருந்த வாடகை அறையில் வறுமையாலும் நோயினாலும் ஏறத்தாழ அநாதையாகச் செத்துப்போனான், அந்த மகாகலைஞன்.அவனை எல்லோரும் 'பிரமிள் என்ற புனைபெயரினூடாகத்தான் அதிகம் அறிந்து வைத்திருக்கின்றார்கள். இந்த சிறகுகள் வலைப்பூவின் முகப்புக் கவிதையாக வீற்றிருக்கும் 'காவியம்' எனும் சிறுகவிதையை வாசித்துப்பாருங்கள். அது ஒன்றே போதும் அதைப்படைத்தவனின் பேராளுமையை அறிந்து கொள்வதற்கு...


               

               காவியம்


சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின் தீராத

பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச்செல்கின்றது...
உண்மையைச் சொல்பவனாகவே இருந்த காரணத்தால் உயிரோடு இருந்தவரை சர்ச்சைக்குரியவனாகவே வாழ்ந்து பின்பு இறந்தபோது, தனது இறுதி ஊர்வலத்துக்குக் கூட பதினான்குபேரைத் தாண்டாத மகாகவி சுப்பிரமணி பாரதி போலவே இவனுக்கும்கூட  வாழ்விலும் மறைவிலும் அதே 'பெரும்பேறு' கள் நிகழ்ந்தன.

இறந்தபின்பும் இறவாத ஜீவனுள்ள அவனது படைப்புகள் மட்டுமே அவனை நமக்கெல்லாம் அடையாளம் காட்டும்.

அவனைப்போலவே அவனது படைப்புக்களும் எதுவித சமரசங்களுக்கும் உட்படவில்லை. நினைத்ததை நெற்றிக்கு நேரே பொட்டிலறைவதுபோலச் சொல்லும் நெஞ்சுரமும் நேர்மைத்திறனுமுள்ள இந்த மாபெரும் மனிதனின் கவிதையில் ஒன்றை இங்கே தருகின்றேன் படித்துப் பாருங்கள், நண்பர்களே...!- 'Mutur' Mohammed Rafi
கவிதை:என்றேன்,  என்கின்றார் 


டைப்பு ஒரு பயங்கரப்

பொறுப்பு என்றேன்

'கவிதை ஒர் அறிவார்த்தத்

திகைப்பு' என்றேன்.

'உள்ளதை உள்ளத்தில்

வாங்கி உயிருட்டும்

சுக்கிரத் தவிப்பு

உம்மிடம் இல்லை.

உள்ளதுக்கு அப்பால்

ஆழ்ந்து எரியும்

சூரியத் தகிப்பு

அதுவும் இல்லை.உமக்கேன் இந்த வேலை?

உமது பிரைவேட்

புட்டிக்குடியையும்

குட்டி அடியையும்

அவுத்த அவுத்துக்

காட்டிவிட்டால்

கவிதை ஆகுமா?

பிரக்ஞை விசயம்

பிரைவேட் அல்ல-

தனியன் அனுபவம்

மனிதம் ஆகணும்

ஆகலை என்றால்

அறிவின் எதிரில் அது

அய்யோ பாவம்,படிக்கும் மனசுக்குள்

நிகழும்விபத்து

கால் ஒடிந்த நாற்

காலியில் உட்கார மாட்டீர் நீர்

மனிதத்துவத்துக்கு

மானக்கேடான

உமது கவிதையில்

அமராது என்மூளை என்றேன்.
அவர் சொன்னார்.

'எனக்கேது சூரிய ரேகை

எனக்கேது ஏதோ சுக்கிர யோகம் என்று

சோசியம் பார்க்கிறீர்.

நானாக்கள்சூனாக்கள்

ஞாவன்னா ராவன்னா

யாரைத்தான் வேணாலும்

கேட்டுப் பாருமேன்

அவர்கள் அறிஞர்கள்.
உமக்கேது அறிவு?

அறிந்தவர் என்றால் கேட்கிறேன்

சொல்லும் கேள்விக்கு விடையை'

என்ற அவர்

குலுக்கு நடிகைகள்

கும்மிருட்டு மோகினிகள்

சிலுக்கு மாமிகள்

சிலரைக்குறிப்பிட்டு ... 'இவர்களின் உறுப்புகளில்

சிவப்பெது கறுப்பெது?

சொல்லும்' என்கின்றார்.

என்கின்ற போதே

வழியுது அவருக்கு

ஜொள்ளும் ஸ்கலிதமும்.

-பிரமிள்

No comments:

Post a Comment