Monday, May 7, 2012

சிறுகதை: மூதூர் ஏ.எஸ். உபைதுல்லா





கொடி பறக்குது!










'வாப்புச்சி ஒங்களுக்கு விசியந்தெரியுமா?'


'சொல்லு ராசா'


'கருமலோத்து மல இரிக்குலவா...அதுல ஒரு சின்னக் கொளம் இரிக்காம..அதுலருந்து தான் ஆமிக்கேமுக்கு பைப்பால தண்ணி போவுதாம். அது வத்துரதே இல்லியாம்...'  என கூறிக் கொண்டிருந்த பேரன் இன்னும் ஏதேதோ சொல்ல வைத்திருந்தவன் வேலிக்கு மேலால் கூட்டாளிகளின் தலைக்கறுப்புத் தெரியப்பறந்தோடினான்.


பேரன் சொல்லி முடிய தானும் கருமலை ஊற்று பற்றி அவனுக்கு நிறைய சொல்ல வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால் பேரன் ஓடிவிட்டான்
ஜனாப்தீன் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார். மனக்குளத்துக்குள் பேரன் விட்டெறிந்த கல் கடந்தகால நினைவலைகளை எழுப்பியது.



கருமலையின் சுற்றுவட்டாரத்தில் ஜனாப்தீனின் கால்தடம் படாத  இடம் இல்லையென்றே சொல்லலாம். இன்றைக்கும் பார்ப்பவர் கண்களை ஆச்சரியத்தால் அகலமாக்கும் அற்புதமான வற்றாத கருமலை ஊற்று இன்றளவும் மிகப்பெரிய அதிசயம் தான்;.அது ஒரு அள்ளக்குறையாத ஒரு அட்சய பாத்திரம். அதில் சுத்தமும் சுவையும் மிகுந்த மதுரமான தண்ணீர். ஜனாப்தீனும்  அதில் குடித்திருக்கிறார். குளித்து மகிழ்ந்திருக்கிறார்.



அந்தக்காலத்தில் கருமலையில் கொடியேத்தி அடிவாரத்தில் கந்தூரி நடைபெறும். ஊர்கூடி உண்டு மகிழும். அதிலும் கொட்டியாரத்தார் வத்தையில் புறப்பட்டு வந்து விசேடமாக கந்தூரி கொடுப்பார்கள். மீனவர்கள் இரண்டு மூன்று மாதங்கள் வாடிபோட்டு தங்கி மீன்பிடிப்பார்கள்.



மலையில் கொடி ஏத்தி அதுகாற்றில் அசைவதைக்கண்ணால் கண்டதன் பின்னர் தான் அடிவாரத்தில் அடுப்பெரிக்கப்படும். அந்தக்காலத்தில் இளைஞர் குழுவொன்று கொடியுடன் மலையேறப் புறப்படும். ஜனாப்தீன்தான் அதற்கு தலைமை தாங்குவார்.            



காலவோட்டத்தில் எல்லோரையும்; வாரியெடுத்துக் கொண்டு ஓடும் காலம்
ஜனாப்தீனையும் வயோதிபனாக்கி சாய்மனைக் கதிரைக்குள் மடித்துப் போட்டது. தூரத்தில்குடிமனைகளுக்கு மேலால் பசியமரங்களை போர்வையாய் போர்த்திக் கொண்டு நின்ற கருமலையின் உச்சி கண்ணில் பட்டதும் ஜனாப்தீனுக்கு நாடிநரம்புகளில் ஒருவித விறுவிறுப்பு பரவியது. மனம் கடந்தகாலத்துக்குத் தாவியது.

***








து ஒரு கத்தூரிக் காலம். அரிசி, ஆடு, ஆக்கள் என வயிறு நிறைய ஏற்றிக் கொண்டு கொட்டியாரத்து வத்தை குடாக்கடலைக் கிழித்து வகிடெடுத்துக் கொண்டு கருமலையூற்றை இலக்கு வைத்து விரைந்து கொண்டிருந்தது. வத்தையின் தண்டயல் சுலைமான் அணியத்துக்கு வந்து வெறுமேலுடன் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் நிற்பது கரையில் இருந்து பார்க்கத் தெளிவாகத் தெரிந்தது.


தடதடவென வேகத்தை தணித்தக் கொண்டு குவாட்டிக் குடாவுக்குள் நுழைந்த வத்தை நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. கரையில் நின்றவர்கள் முழங்காலளவு தண்ணீரில்போய் வத்தையில் இருந்த பொருட்களை இறக்கினார்கள்.வெள்ளைமணல் நாச்சிக்குடா சின்னம்புள்ளச்சேனை மக்களும் தம் பொருட்களோடு அங்கு வரத்தொடங்கினர். கொடியுடன் மலையேறக்காத்திருந்த ஜனாப்தீன் குழுவினரும் வெள்ளயும் சொள்ளயுமாக  வந்து சேர்ந்தனர். ஒரே கலகலப்பும் ஆரவாரமும்தான்.




சற்றுநேரத்தில் கூடிநின்ற மக்கள் வழிவிட முகம்மது தம்பி நடுவே நடந்து வரஇ தொடர்ந்து பக்கிரான் லெப்பை மசூர் லெப்பை வகாப் லெப்பை ஆகியோர் வந்தனர். ஆரவாரித்துக்கொண்டிருந்த சனங்களை முகம்மது தம்பி தலையை உயர்த்தி சுற்றிலும் ஒருமுறை பார்த்தார். மழைத்தூறலுக்கு அடங்கிய புழுதியாய் ஆரவாரம் ஓய்ந்து  எங்கும் ஒரே........ அமைதி.


'லெவ்வ நீங்க துஆவ ஓதுங்க' என்றதும் பக்கிரான் லெப்பை இருகைகளையும் மேலே தூக்கிக் கொண்டு மனமுருக துஆ செய்யவாரம்பித்தார். மக்களும் பக்தி சிரத்தையாக ஆமீன் சொன்னார்கள்.                               



 துஆ முடிந்ததும் ஜனாப்தீன் குழுவினர் புறப்பட்டனர.; ஜனாப்தீன் பிஸ்மிகால் வைத்து பயணத்தை ஆரம்பிக்க மலையடிவாரத்தில் கந்தூரிவேலைகள் ஆரம்பமாகின.


ஏற்கனவே நடந்த கந்தூரியின் போது பாவிக்கப்பட்ட கொறக் கொள்ளிக் கொட்டான்கள்இ மக்கிமண்ணோடு மண்ணாக கிடந்த சாம்பல் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக கற்களை உருட்டி வந்து அடுப்பு வைத்தனர.; ஒரு சாரார் மலைக்காட்டுக்குள் நுழைந்து வேண்டியமட்டும் விறகுகளை சுமந்து வந்து போட்டார்கள். பொண்டுகள் அரிசியை களையத்தொடங்க  சிறுவர்களை விரட்டிவிட்டு ஆண்கள் சிலர் பற்றை மறைவில் ஆடுகளை அறுத்து உரிக்கத்தொடங்கினர். சிறுவர்கள் தூண்டல் தங்குஸூடன் மீன்பிடிக்கச் சென்றனர். குழந்தைகள் ஓடியாடிக் கொண்டும் தாய்மாரின் முந்தானை பிடித்து காரணம் சொல்லத் தெரியாமல் அழுது கொண்டும் திரிந்தனர்.

கிழக்கே கரக்கடச் சேனைக்கப்பால் இளஞ்சூரியன் தென்னைகளின் உச்சிகளை தடவிக் கொண்டு மேலெழும்ப இளைஞர்களும் உற்சாகமாக மலையேறிக் கொண்டிருந்தனர்.


உருளைக்கிழங்களவு முதல் ஊர்க்குருவி முட்டையளவு வரையிலான கற்கள் நிறைந்த மலைப்பாதையில் எறிக் கொண்டிருக்க அவர்களின் நடுவே குப்பாயத்தால் சுற்றப்பட்ட கொடியை மிகவும் பக்திசிரத்தையாக  தோளில் சுமந்த மனசூர் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தார். நெஞ்சேற்றமான பாதையில் ஆங்காங்கே மயில் தோகையென தாழ்ந்து தரைதடவத் துடிக்கும் மரக்கிளைகளை தலைக்கு மேலால் தூக்கிவிட்டுக்; கொண்டும் சவட்டிக்கொண்டும் சவட்டி முறித்துவிட்டுக் கொண்டும் முன்னேறினார்கள்.
வழியில் அவர்களை குறுக்கறுத்துக் கொண்டு காட்டுச்சேவல் ஒன்று ஓடியது.

'சா....புடிச்சி அறுத்தாக்கிணா நல்லாரிக்கும்'  என சம்மூன் குனிந்து கல்லெடுக்க அலியார் விரைந்து சம்மூனின் கையைப் பிடித்துக் கொண்டு
'கல்லக் கீழ போடு சம்மூன். கொடியேத்தப்போற நேரத்துல இப்புடியெல்லாம் செய்யப் பொடாது'                                           


அலியாரின் நியாயத்தை உணர்ந்த சம்மூன் கல்லைக் கீழே போட்டார்.
வெயில் ஏறிக் கொண்டிருந்தது. எல்லாரின் நெற்றியிலும் வியர்வை முத்துக்கள். முதுகுச்சட்டையும் லேசாக ஒட்டத்தொடங்கியது. ஆனாலும் கொட்டியாரக்குடாவின் தலைதடவி அதன் ஈரப்பதன் அள்ளிக்கொண்டு வந்து மலையை மூடிக் கவிந்து கிடக்கும் பசுமையான மரங்களுக்குள் பூந்து புறப்பட்டு வந்த கடல் காற்று ஈரப்பதன் அள்ளி வியர்த்த உடலில் எறிந்து விட்டுப் போனதும் உடல் சில்லென்று சிலிர்த்து ஒரு சுகானுபவம் ஏற்பட்டது. எல்லோரும் ஒரே நேரத்தில் 'ஆஹா......!' என்றனர்.


கொடி கொண்டு செல்லும் குழுவில் ஒரு வெளியூர் இளைஞன். கொடி ஏற்றத்துக்குப் புதிது. நாலாபக்கமும் திரும்பிப்பார்த்துக் கொண்டே  நடந்து கொண்டிருந்தான்.மலையில் இருந்து கீழே சுட்டிக் காட்டி அந்த எடத்துல ஏன் ஒருத்தரயும் காணயில்ல' என்று கேட்க


'அதா...அதுதான் குவாட்டிக்குடா. இஞ்சால இரிக்கி பாருங்க அது தான்
திருக்கக்குடா. இந்தப்பக்கம் திரும்பிப்பாருங்க அதச் சொல்ற வேப்பங் குடான்டு. இந்த எடத்துலயெல்லாம் கொஞ்சக் காலத்துக்கு மொத நம்மட சனந் தான் வாழ்ந்துது.  ரெண்டாம் ஒலக யுத்தத்துல ஜப்பாங்காரங் குண்டு போடயிங் சனம் எழும்பிக்கிட்டு கந்தளா, கிண்ணியா, தம்பலகாமம் என்டு போய் குடியேறிட்டு. இப்பயுங் அந்தாக்கள்ற பதிவுத்துண்டுல(Birth certificate) வேப்பங்குடா திருக்கக்குடா குவாட்டிக்குடான்டுதான் இரிச்சி.'  என்று ஜனாப்தீன் விளக்கிக் கொண்டு முன்னே செல்ல, திடீரென்று,


'எல்லாரும் அப்புடியே நில்லுங்க' என்றார் மன்சூர்.



நடந்தவர்கள்  சடுதியாக ஸ்தம்பித்தார்கள். எல்லோரும் மன்சூரை விழிகளால் வினவ அவர் சுட்டிக்காட்டிய திசையில் எல்லார் விழிகளும் குத்திட்டு நின்றன. அங்கே கற்களை சுற்றிப் படர்ந்த மரங்களின் அடியில் சருகுகள் நிறைந்து கிடந்தன. சற்று நேரத்தில் அந்தச் சருகுகள் லேசாக அசைய ஆரம்பித்தன. மெல்ல மெல்ல அந்த அசைவு நீளமாக நெளிந்து வளைந்து அசைந்ததும் தான் சருகுக்குள் கிடந்த வெங்களாத்தியன் ஒன்று புறப்பட்டுப் போவது தெரிந்தது.                      


தூரத்தூர நடந்தவர்கள் இப்போது அருகருகே நடந்து முன்னேறினர். சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே அமைதி. அந்த அமைதியை குலைக்க விரும்பிய அலியார்


'வெங்களாத்தியன் மட்டுமா பக்கத்துமலயில மான் மொயல் உக்குளான் காட்டுக்கோழி எல்லாங்கெடக்கு இன்ஸா அல்லாஹ்  நாளக்கி மம்மதம்பி நானாட்ட தோக்க வாங்கிக்கிட்டு போவோம்' என்று சொல்லி வாயெடுக்கு முன் பக்கத்து பற்றைக்குள் ஒரு சடசடப்பு. பெண் மான் ஒன்றை ஆண்மான் ஒன்று  விரட்டிக் கொண்டோடியது. எல்லோர் முகங்களிலும் ஒருவித மகிழ்ச்சிப் பிரவாகம். அந்த மகிழ்ச்சியில்  நடை வேகம் கொண்டது.


இப்பொழுது ஜனாப்தீன் முன்னே நடந்து கொண்டிருந்தார்.
அப்போது மலைமீதிருந்த கருமலையூற்றுப் பள்ளிவாசல் நெருங்கிக் கொண்டிருந்தது. அதனைக் கண்டதும் எல்லோரையும் ஒருவித பக்திப் பரவசம் பற்றிக் கொண்டது. இனம் புரியாமல் மனதுக்குள் அமைதி ஒன்று பரந்து நிறைந்தது.

பள்ளிவாசலை நெருங்கி விட்டார்கள். அது  அப்படியே கொட்டியாரக் குடாவை பார்த்துக் கொண்டிருந்தது. காலம் பூராகவும் பள்ளிவாசல் கொட்டியாரக் குடாக் காற்றால் வயிற்றை நிரப்பும் வண்ணமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழுவழுப்பான படிகளில் இறங்கினால் நேரே சென்று கடலில் கால் நனைக்கலாம். எனவே பள்ளி வாசலின் பக்கவாட்டால் ஏறி தூணைப்பிடித்து  பள்ளிவாசலின் முன் பிரகாரத்துக்குள் நுளைந்தார்கள். அந்த அற்புத ஊற்றில் வுளு செய்தார்கள். இரண்டு ரக்காயத்து சுன்னத்துதொழுதார்கள். அந்த வுளுவோடு பள்ளிவாசல் முன்றலில் போர்வைக்குள் சுற்றிவைக்கப்பட்ட கொடியை எடுத்து நாட்டினார்கள். பச்சைப் பின்னணியில் பொட்டும் பொறயும் தாங்கிய கொடி கடல் காற்றில் படபடத்து பட்டொளி வீசிப்பறந்தது.


அனைவரும் அன்னார்ந்து பார்த்து பரவசமானார்கள்.கொடியை ஏற்றிவிட்டு இன்னும் சொற்ப உயரமே இருந்த மலை உச்சிக்கு ஏறினார்கள். மலை உச்சியில் சற்று வேகமான காற்று. உச்சியில் இருந்து பார்க்கும் போது  திரும்பும் பக்கமெல்லாம் அல்லாஹ்வின் அருள் இயற்கை அழகாக காட்சியளித்தது. கொட்டியாரக் குடா நீலத்துகில் விரித்து விட்டது போன்று விரிந்து பரந்து கிடந்தது. 05 சிறு சிறு கீற்றுகள் போல மீன்பிடித் தோhணிகள் அலைகளில் லாவகமாக அசைந்து கொண்டிருந்தன.



இடையிடையே அலைகள் பிளவுற்று அன்னக்கூட்டம் போல நுரையெறிந்து கொண்டு போனது. மூதூருக்கும் திருகோணமலைக்கும் இடையே பயணிகள் படகும், நெல், செங்கல் ஏற்றிய வத்தைகளும் போய்வந்து கொண்டிருந்தன. பிரம்மாண்டமான பாதாளமலை கடலுக்குள் கம்பீரமாக குத்திட்டு நின்றது. உலகின் உண்ணதமான அந்த துறைமுகத்துக்குள் வெளிநாட்டுக்கப்பல்கள் நுழைந்து கொண்டிருப்பது கண்கொள்ளாக் காட்சி.



அங்கிருந்து இறங்கி  கருமலையூற்றுப் பள்ளிவாசல் முன்றலுக்கு வந்தனர்.
அப்படியே நடந்து அங்கே காணப்படும் நாப்பது முழ கபுறையும் ஏனைய கபுறுகளையும் பார்த்துக் கொண்டு வந்து பள்ளிவாசலின் படிக்கட்டில் அமர்ந்தனர். சட்டையின் மேல் பொத்தானை தளர்த்திக்கொண்டு அடுத்தடுத்த படிக்கட்டில் கைகளை ஊண்றி வசதியாக சரிந்து கொண்டனர். சிலு சிலுவென வீசிவந்த கடல் காற்று ஆடைகளுக்குள் நுழைந்து குளுகுளுப்பேற்றிக் கொண்டு போனது. எல்லோருடைய மனங்களும் அல்லாஹ்வைப் புகழ்ந்தன.
சாய்ந்து கொண்டிருந்த ஜனாப்தீன் மன்சூரின் பக்கம்திரும்பி



'என்ன அருமயான காத்துப்பாத்தியா மன்சூர்'


'உண்மதாம்மச்சான். காலம்பூரா இங்கினயே இருந்திரலாம் போலரிக்கி'
அலியாரும் உரையாடலில் இறங்கினார்.


'இப்ப வெளங்குதா இந்தப் பெரியார்களெல்லாம் ஏன் இந்த எடத்த தெரிவு செஞ்சாங்க என்டு? இந்த தனிமயும் காத்தும் பசுமையும் தூய்மயும் அப்புடியே படச்சவன நெனச்சி பரவசப்படுத்திப்போடும்'


இந்த  உரையாடல் எதிலும் ஈடுபடாத அந்த இளைஞன் நாற்பது முழக் கபுறையே பார்த்துக் கொண்டிருந்தான்.


'என்ன தம்பி வந்ததுலருந்து ஒன்னும் பேசமாட்டெங்கிரிங்க. கபுறயே பாத்துக் கிட்டிரிக்கிங்க' என்றார் மன்சூர்.                 


'அது... அது எப்புடி நாப்பது முழம் என்டுதான்'


'அதா...இந்தக்கபுறு எந்தக்காலத்துல இருந்து இஞ்ச இரிக்கென்டு எனக்குத் தெரியா. ஆனா இந்தப்பள்ளிவாசல் இந்த எடத்தல கட்டப்பட்டது ஆயிரத்தி எண்ணூத்திப்பைனஞ்சாமாண்டு எண்டு அந்தா அதுல கல்வெட்டுமாதிரி எழுதியிரிக்கி பாருங்க' என்று மன்சூர் பள்ளியின் உள்முகப்பை சுட்டிக்காட்டினார். அதனை உற்றுப்பார்த்த இளைஞன்


'வெள்ளக்காரன் கண்டியக் கைப்பத்துன ஆண்டும் அதுதான்'என்று கூறிவிட்டு
 மீண்டும் நாப்பது முழக்கபுறையே குறிப்பாக பார்ப்பதை அவதானித்த
அலியார்,


' தம்பி...நாப்பது மொழக்கபுறு இங்கினமட்டுமில்ல. பக்கத்துல கன்னியாவுலயும் மல உச்சில ஒரு நாப்பது மொழ கபுறு இரிக்கி. அதுமட்டுமில்லாம எலங்கயிலயும் ஒலகத்துல வேற வேற நாடுகள்ளயும்; இப்புடி நீளமான கபுறு இரிக்கி. இதுக்குப்பின்னால ஏதோ ஒரு உண்ம இரிக்கும். அத ஆராஞ்சி பாக்கணும்' என்றார்.


' அதுமட்டுமில்ல. ஆதம்நபி நூகுநபியிர சந்ததிக்கெல்லாம் அல்லாஹ் தொன்னூறு மொழ ஒயரத்தக் குடுத்ததா குர்வான்ல சொல்லப்பட்டிரிக்கி' என்று ஜனாப்தீன் தனக்குத் தெரிந்ததை சொன்னார்.



' கதயென்டா நல்லா இன்றஸ்ட்டாத்தான் இரிக்கி. கொடியேத்தப்போன ஆக்களக் காணயில்லயென்டு சனந்தேடும். வெளிக்கிடுவோம்' என்று மன்சூர் சொன்னதும் அனைவரம் எழுந்து சாரனை உதறி உடுத்திக் கொண்டு மலையில் இருந்து இறங்கத்தொடங்கினர்.


மலையடிவாரத்தில் என்ன பாவம் செய்ததோ பெரிய பெரிய அண்டாக்கள் அடுப்பில் ஏற்றப்பட்டிருந்தன. கொதித்துக் கொண்டிருந்த தண்ணீருக்குள் போட்ட ஏலங்காவாசம் காற்றில் கலந்து நாசிக்குள் நுளைந்து அவர்களை வரவேற்றது.

***







டந்தகால நினைவுகளில் சஞ்சரித்த ஜனாப்தீன் நிகழ்காலத்துக்கு வந்தார். இப்பொழுதும் அந்த ஏலங்காவாசனை அவர்மூக்கில் மணப்பது போன்று ஒரு பிரமை. ஒருமுறை சுவாசத்தை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டார். அது ஏக்கப்பெருமூச்சாக வெளியேறியது.


அழகும் ஆரவாரமும் கதையும் கலகலப்புமாக காட்சியளித்த கருமலையும்இபள்ளிவாசலும் அதன் வற்றாத அற்புத ஊற்றும் தற்பொழுது இராணுவத்தளமாக மாறியிருக்கிறது. பழாய்ப்போன யுத்தம் இப்படி எத்தனை சந்தோசங்களை புரட்டிப்போட்டு விட்டது.


இருந்தாலும் எப்படியாவது மௌத்துக்கு முன் ஒருதடவை கருமலையில் ஏறி அந்த அற்புத ஊற்றில் ஒலுவெடுத்து கருமலைப்பள்ளியில் தொழுதுவிட வேண்டுமென அவரது மனம் அடம்பிடிக்க ஆரம்பித்தது.



-மூதூர் ஏ.எஸ்.உபைதுல்லா  

No comments:

Post a Comment