Monday, August 27, 2012

இறைமறுப்பு : தைரியமுண்டா..?"












கிண்ணியா ஒமர் முக்தார் என்பவர் எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு ஆக்கத்தை அனுப்பி "இதனை சிறகுகளிலே பிரசுரிப்பதற்குத் தைரியமிருக்கின்றதா..?" என்று ஒரு சவால் வினாவையும் வைத்திருக்கின்றார்.

அவரது ஆக்கத்தினைப் படித்துப் பார்த்தபோது எங்கோ இதற்கு முன்பு வாசித்தது போலத் தோன்றியது. பின்புதான் அது அவரது சொந்த ஆக்கமல்ல என்பதுவும் விக்கிபீடியா தமிழ் தளத்திலே 'இறைமறுப்பு' எனும் தலைப்பிலே இருக்கும் ஒரு பரவலான தகவல்களை ஒழுங்குபடுத்தித் தொகுத்துள்ள ஆக்கம் என்பதுவும் புரிந்தது.

அதனால் அதனை ஒமர் முக்தாரின் தொகுப்பு என்று தெரிவித்து பிரசுரிப்பதிலே ஆட்சேபணை இருக்கவில்லை.
 
வாசித்துப் பாருங்கள்..... உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.


- Jesslya Jessly




இறைமறுப்பு




1. சான்றுகள் இன்மை


இறை இருக்கு என்பதற்கோ அல்லது ஆத்மா, மறுபிறவி, சொர்க்கம், நரகம் போன்றவற்றுக்கோ எந்தவித அனுபவ, பொருள்முறை அல்லது அறிவியல் ஆதாரமும் இல்லை. இறையை எல்லோரும் வழிபட வேண்டும் என்று கட்டளை இடும் இறை தன்னை ஏன் இலகுவாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.


இறை பண்டைய மனிதர்களோடு பேசியதாக, அவர்களுக்கு வெளிப்படுத்தல்கள் செய்தாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் 'புனித நூல்களில்' ஏராளமான பிழைகள் உள்ளன. உ-ம்: ரனாக், விவிலியம், குர்-ஆன் போன்ற புனித நூல்கள் மனித அடிமைத்தனத்தைக் கண்டிக்கவில்லை.


2. தன்விருப்பு வாதங்கள்


தன்விருப்பு வாதங்கள் என்பன எல்லாமறிந்த, எல்லாம் வல்ல இறை என்பது மனிதரின் தன்விருப்போடு அல்லது விடுதலை பெற்ற மனிதர் என்ற நிலைப்பாட்டோடு ஓவ்வாதது என்பதை வலியுறுத்தும் வாதங்கள் ஆகும். இறை எல்லாம் அறிந்தது, எல்லாம் வல்லது என்றால் அது அனைத்தையும் கட்டுப்படுத்தவும், முன் தீர்மானிக்கவும் வல்லது. அப்படியானால் மனிதரின் சுதந்திரம், தன்விருப்பு என்பது சாத்தியம் அற்றது என்பது இந்த வாதத்தின் நிலைப்பாடு ஆகும். இறையை வழிபடுவது இத்தகைய ஓர் அடிமை ஆண்டை உறவின் வெளிப்பாடக தோன்றுகிறது. இத்தகைய இறை இருந்தாலும் வெறுக்கப்படத்தக்கதே ஆகியவை இந்த வாதத்தின் நீட்சியாகும்.


3. தீவினைச் சிக்கல்


கருணை கொண்ட, எல்லாம் வல்ல, எங்கும் உள்ள இறை உள்ளது என்றால் உலகில் தீவினை, கொடுமை, துன்பம் ஏன் இருக்கிறது என்பதை எப்படி விளக்குவது. பல மெய்யியலாளர்கள் தீவினை இருப்பதும், இறைவன் இருப்பதும் ஏரணத்திபடி சாத்தியம் இல்லை என்று வாதிடுகிறார்கள்.


பச்சிளம் குழந்தை உணவு இல்லாமல் பட்டினி கிடந்து சாகிறது. இதை கருணை உள்ளம் கொண்டவராகக் கருதப்படும் இறை எப்படி அனுமதிக்கலாம்? கடவுள் அன்புள்ளது, பலம் பொருந்தியது, எல்லாவற்றையும் படைத்தது என்றால் பல்வேறு குறைகள் கொண்ட உலகை அது ஏன் படைத்தது? குறைகள் இருக்கிறது, தீர்க்க முடியவில்லையா? அல்லது தீர்க்க விரும்பவில்லையா? இப்படியானால் இறை, உண்மையில் கருணை உள்ளம் உடையதா? எல்லா வல்லமையும் பொருந்தியதா? போன்ற கேள்விகள் இந்த தீவினைச் சிக்கலின் தொடர் கேள்விகளாக அமைகின்றன.


4. சமய முரண்பாடுகள்


சமயங்கள் தமது உட்பிரிவுகளுக்கு இடையேயும், பிற சமயங்களோடும் பாரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சமயங்கள் தமது சமயம் மட்டுமே உண்மையானது என்று கோருவதால், அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் சரியாக இருக்க முடியாது என்பதில் இருந்து, அன்றாட வாழ்வியல் பரிந்துரைகள், இறையியல், புனித நூல்கள், வெளிப்படுத்தல்கள், சடங்குகள்
என பல வழிகளில் சமயங்கள் முரண்படுகிறன.

சமய முரண்பாட்டிற்கு ஒர் எடுத்துக்காட்டு எந்தவகை உணவு ஏற்படுடையது என்பது பற்றியதாகும். சமணம் வேர்த் தாவரங்களையும் தவிர் என்கிறது. இந்து மதம் சைவ உணவைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக மாட்டை உண்ண வேண்டாம் என்கிறது. இசுலாம் மாடு உண்பதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் பன்றி உண்பதைத் தவிர் என்கிறது. ஏன் மனிதனையும் சிலர் உண்கிறார்கள். இந்த சமய முரண்பாடுகள் அவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன.


5. சமயம் - அறிவியல் முரண்பாடுகள்


இன்று அறிவியலின் தந்தை என்று அறியப்படும் கலீலியோ கலிலி - 1633 ம் ஆண்டு உரோமன் கத்தோலிக்க திருச்சபையால், சூரியன் இந்த சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பதென்று நிறுவியதற்காகக் குற்றவாளியாக காணப்பட்டார். இந்த கருத்தை வைத்துக் கொள்ள, ஆதரிக்க, கற்பிக்க தடை செய்யப்பட்டார். சிறைதண்டனை வழங்கப்பட்டு, அவரது வயது காரணமாக
அவர் இறக்கும் வரைக்கும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

சமயத்துக்கும் அறிவியலுக்கும் பல முனைகளில் முரண்பாடுகள் உள்ளன. பல சமய புனித நூல்களில் கூறப்படும், இறைவாக்காக் கருதப்படும் பல கூற்றுக்கள் தற்போதைய அறிவியலின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அறிவியலின் வளர்ச்சிக்கும், அதன் வழிமுறைகளுக்கும் சமயம் தடையாக இருந்து வந்துள்ளது. அறிவியலில் தங்கி உள்ள தற்கால உலகில், அந்த அறிவியல் கோட்பாடுகள் எவற்றிலும் இறை என்ற கருதுகோள் தேவையற்றதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு கிறித்தவ புனித நூலான பைபிள் உலகம் அல்லது அண்டம் தோற்றம் பெற்று 5,700-10,000 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன என்றும், மனிதரை இறை படைத்தது என்றும் கூறுகிறது. அறிவியல் உலகம் 4.54 பில்லியன்  ஆண்டுகளுக்கு மேலானா கால வரலாற்றை உடையது என்றும், மனிதர் நுண்ணியிர்களில் இருந்து பல மில்லியன் ஆண்டுகளாக படிவளர்ச்சி ஊடாக கூர்ப்புப் பெற்று தோன்றினர் என்றும் கூறுகிறது.


7. பெண்கள் மீதான ஒடுக்குமுறை


பல்வேறு சமய தொன்மங்கள், நம்பிக்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் பெண்களின் ஒடுக்குமுறைக்கு காரணமாகி உள்ளன. பெண்களை தீய சக்திகளாக கட்டமைப்பது, அவர்களை கட்டுப்படுத்தும் அடக்கும் சட்டங்களை இயற்றுவது, சம உரிமைகளை வழங்காதது என பல வழிகளில் சமயங்களால் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டார்கள். பெரும்பான்மைச் சமயங்கள் ஆண் ஆதிக்க மரபைக் கொண்டவை. பெண் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற கொள்கை உடையவை.

கிறித்தவ தொன்மவியலில் ஆண் இறையின் உருவாகவும், பெண் ஆணின் உருவாகவும் படைக்கப்படுகிறார்கள். பெண் இறையை மீறி ஆசைப்பட்டு அப்பிள் உண்டதால்தான் மனித இனமே பாவப்பட்டு இறப்பு, நோய், துன்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவேண்டி வந்தது. பெண்ணை தீய நிகழ்வுக்கு இட்டு சென்றவளாக இந்த தொன்மம் சித்தரிக்கின்றது. பெண்கள் சமய குருமார்களாக வருவதை பெரும்பான்மை கிறித்தவம் இன்னும் தீர்க்கமாக எதிர்க்கிறது.

பல இசுலாமிய நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை சட்ட நோக்கிலோ நடைமுறை நோக்கிலோ இன்றுவரைப் பெறவில்லை. எடுத்துக்காட்டாக புனித இசுலாமிய நாடாக கருதப்படும் சவூதி அரேபியாவில் பெண்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. பெண்களுக்கு வேலைகள் வாய்ப்புக்கள் அரிது. குறைந்த பட்சம் அவர்கள் விரும்பும் படி உடைகளும் அணிய முடியாது. ஒர் ஆண் நான்கு மனைவிகளை வைத்திருக்க இசுலாம் அனுமதி தருகிறது. ஆனால் பெண் அப்படிச் செய்ய முடியாது. ஆணும் பெண்ணும் இணைந்து வழிபாடு கூடச் செய்ய முடியாது.

இந்து சமய மரபுகள் பெண்களை பல கொடுமைகளுக்கு உட்படுத்தின. உடன்கட்டை ஏறல் முற்காலத்தில் வற்புறுத்தப்பட்டது. பெண் குழந்தை வெறுக்கப்பட்டது. குழந்தைத் திருமணம் பரிந்துரைக்கப்பட்டது.

பெண்ணை வன்முறைக்கு உட்படுத்த அனுமதித்தது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று ஆணித்தரமாய் இந்து புனித நூல் மனு பின்வருமாறு கூறுகின்றது.  'ஒரு பெண் குழந்தையாய் இருக்கும் பொழுது அவளது தந்தைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். இளம் வயதில் அவளது கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அவளது கணவன் இறந்த பின்பு அவளது மகன்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். ஒரு பெண் என்றும் சுந்ததிரமக இருக்கக் கூடாது.'


8. சமய வன்முறை


சமயம் அல்லது சமயத் தீவரவாதம் பிற சமயத்தாருக்கு எதிராகவும், சமயம் சாராதோருக்கும் எதிராகவும் வன்முறையையும் போரையும் முன்னெடுக்க காரணமாக அமைந்துள்ளது. சமய நம்பிக்கைகள், பரப்புரை, கொள்கைகள், புனித நூல்கள், சடங்குகள் ஆகியவை இந்த வன்முறைக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. பலியிடுதல், அடக்குமுறை, தீவரவாதம், போர் என பல வழிகளில் சமய வன்முறை வெளிப்படுகிறது. இசுலாமியப் படையெடுப்புகள், சிலுவைப் போர்கள், Inquisition,Witch-hunt முப்பதாண்டுப் போர், தைப்பிங் கிளர்ச்சி, அயோத்தி வன்முறை, 9/11 தாக்குதல்கள் ஆகியவை உலக வரலாற்றில் இடம்பெற்ற சமய வன்முறைக்கு சில எடுத்துக்காட்டுக்கள்.


9. சமூகக் கேடுகள்


சமயம் ஏற்படுத்திக் கொடுக்கும் கேள்வியற்ற நம்பிக்கை சட்டகத்தாலும் (dogma faith), பல சமயக் கொள்கைகளாலும், அதன் பலம் மிக்க நிறுவனங்களாலும் பல்வேறு சமூகக் கேடுகள் நிகழ்கின்றன. எடுத்துக்காட்டுக்கு ஆபிரிக்காவில் எயிட்சு நோய் படு கொடுமைப்படுத்துகிறது. ஆனால் அங்கே காப்புறை பயன்படுத்தி பாலியல் தற்காப்பு செய்வதை கத்தோலிக்க மத சபை எதிர்க்கிறது. பெருந்தொகை கத்தோலிக்கரை கொண்ட ஆப்பிரிக்காவில் இது எயிட்சை தடுக்க ஒரு சிறந்த வழியை இல்லாமல் செய்கிறது. நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கத்தோலிக்க சமய குருமார்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் காவல் துறை அதைப் பற்றி விசாரிக்க முயன்ற போது, கத்தோலிக்க சமய நிறுவனம் அதை மூடி மறைக்க முயன்று உள்ளது.

பிறப்பால் மனிதரின் தொழிலையும் மதிப்பையும் சமூக செல்வாக்கையும் நிர்மானுக்குமாறு சாதிக் கட்டமைப்பை இந்து சமயம் தோற்றுவித்து, இறுக்கமாக அமுல்படுத்தி பெரும்பான்மை மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கியது.

பல்வேறு நாடுகளில் தற்பால் சேர்க்கையை, தற்பால் திருமணத்தை பல்வேறு சமயங்களைச் சார்ந்தோர் எதிர்க்கின்றனர். தற்பால் சேர்க்கையாளர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள், மரண தண்டைனைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இது சமய கொள்கைகளினால் சமூகத்துக்கும் விளையும் கேடு ஆகும்.

மக்களின் தேவைகளை, உணர்வுகளைப் பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிப்பதையும் அல்லது சமயத்துக்கு மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு பல ஏமாத்தல்களில் ஈடுபடுகிறார்கள். கடவுள் பல தரப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று பொய்ப் பரப்புரை செய்கிறார்கள். சாதகம், சோதிடம் முதற்கொண்டு பல்வேறு மூடநம்பிக்கைகளை சமயங்கள் பரப்புகின்றன. அறிவியலுக்கு ஏற்புடையாத உயிரியல், வானியல் மற்றும் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து மாணவர்களின் கல்வியைச் சிதைக்கிறது.

திருவிழாக்களில், கோயில்கள், சமய குருமார்களுக்கு என சமூக வளங்கள் வீணடிக்கப்பட்டு முக்கிய கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய தேவைகளுக்கு அவை பயன்படாமல் போகின்றன.


தொகுப்பு  கிண்ணியா ஒமர் முக்தார்


 
 
 

Tuesday, August 21, 2012

பாவமன்னிப்பு ஒரு பலவீனமா...?







இலவுகாக்கும்

சி

'இஸ்லாமியக்' கிளிகள்






ங்களிடத்தில் ஒருவர் ஆயிரம் ரூபாவைக் கடனாகப் பெற்றுச் செல்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உரிய காலத்தில் அவர் அதைத் திருப்பித் தருவவதற்குத் தவறினால் நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்?


இரண்டு மூன்று தடவை அவருக்கு நினைவூட்டுவீர்கள். கற்றுக் கறாராகக் கேட்டுப் பார்ப்பீர்கள். இதற்கெல்லாம் மசியாது போனால் அடுத்து, 'சரி அவருக்கு என்ன கஷ்டமோ' போனால் போகின்றது விட்டு விடுகிறீர்கள்.

சிறிதுகாலத்திற்குப் பின்பு அதே நபர் மீண்டும் தனது கஷ்டத்தைக் கூறி எப்படியோ உங்களிடம் இன்னுமொரு ஆயிரம் ரூபாவை கடனாகப் பெற்றுச் சென்றுவிடுகின்றார் என்றும் வைத்துக்கொள்வோம். அவருக்குத் திருப்பித் தரக்கூடிய நிலைமை இருந்தும் அவ்வாறு செய்யாமல் மீண்டும் அதே போலவே நடந்து கொள்கின்றார். அதையும் மன்னித்து விடுகின்றீர்களென்றே வைத்துக் கொள்வோம்.

காலக்கிரமத்திலே மூன்றாம் தடவையும் மற்றொரு கடனுதவிக்காக அவர் உங்களை நாடி வருகின்றார் அதேபோலவே கஷ்டத்தைக் கூறி உங்கள் அனுதாபத்தை வென்று  உதவி பெற்றுச் செல்கின்றார். இம்முறையும் பழைய கதையேதான் நடக்கின்றது என்றால் அவர் பற்றிய உங்கள் எதிர்காலத் தீர்மானம் எதுவாக இருக்கும்?

அவருக்குக் கொடுத்த கடனை வசூலிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இனிமேல் அவர் எவ்வளவு கெஞ்சினாலும் புதிதாகக் கடன் கொடுப்பதில்லை என்றுதானே முடிவெடுப்பீர்கள்.


சரி, இவ்வாறான கறார் முடிவை நீங்கள் இப்போது எடுக்க வேண்டியேற்பட்டதற்குரிய காரணம் என்ன?.

நீங்கள் ஓர் இரக்கமில்லாதவரா அல்லது உதவுகின்ற குணமில்லாத உலோபியா அதுவுமில்லையென்றால் கஷ்டங்களால் துன்புறுபவர்களிடம் கருணையே காண்பிக்காத நபரா...?

இவை எதுவுமே கிடையாது!

மாறாக, உதவும் குணமுள்ள  உங்களை கடனுதவி பெற்ற நபர் தவறாகக் கையாளும் விதம்தான் காரணம்.

உங்களிடம் பணம்பெற்றுச் சென்றவருக்கு இருந்த பணமுடைதான்  முதல் தடவை அவர் பணத்தைத் திரும்பத்தரத் தவறியதற்குரிய காரணம் என்றாலும் அதற்கடுத்த தடவைகளிலே நிச்சயமாக அது காரணமாய் அமைந்திருக்கவில்லை.

இன்னும் கூறினால், நீங்கள் முதல் தடவை அவரை மன்னித்து விட்டுவிட்ட பெருந்தன்மையை அவர் உங்களது பலவீனமாகக் கருதியதனால்தான் இரண்டாம் முறையும் அதே தவறை தெரிந்து கொண்டே செய்யத் துணிந்திருக்கின்றார்.


அதாவது முதல் தடவை அவர் புரிந்த தவறுக்குக் காரணம் அவரது இயலாமை. ஆனால் அடுத்தடுத்த தடவைகளில் அவர் செய்த தவறுகளுக்கெல்லாம் காரணமாக அமைந்தது உங்களை இலகுவிலே ஏமாற்றிவிடலாம் என்ற அவரது  மோசடியான எண்ணம்.

இவ்வாறு தெரிந்த கொண்டே ஏமாற்ற நினைப்பவருக்கு நீங்கள் மறுபடியும் மறுபடியும் மன்னிப்பை வழங்குவீர்களா..?  என்பதுதான் இதிலுள்ள வினா.


நிச்சயமாக மாட்டீர்கள் அல்லவா?.

சரி,  சராசரி மனிதர்களாகிய நாமே நம்மை ஒருவர் ஏமாற்றுகின்றார் என்றால் இவ்வளவு எச்சரிக்கையடைகின்றோமே எல்லாவற்றையும் அறிந்த இறைவன் தன்னை ஏமாற்ற முயல்பவர்கள் பற்றி எச்சரிக்கையடைய மாட்டானா?

நல்லது, இப்போது விடயத்திற்கு வருவோம்.

நம்மில் பலர் ஒவ்வொரு தடவையும் பல்வேறுபட்ட பாவகாரியங்களைச் செய்கின்றோம். அதுவும் அவற்றை பாவம் என்று நன்றாக அறிந்து கொண்டேதான் செய்து வருகின்றோம்.  பின்பு ஆண்டுதோறும் ரமழான் காலத்தில் புனித லைத்துல் கத்ர் எனும் இரவிலே இறைவனின் சந்நிதானத்தில் அவற்றை மன்னிக்குமாறு பாவமன்னிப்பை வேண்டுகின்றோம். 


இது நம்மில் பலருக்கு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.


தாம் வாழ்நாளில் புரிந்த பாதகச் செயல்களை,  அவை பாவங்கள் என்று அறிந்ததும் உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்புக் கேட்பவர்களும் இல்லாமலில்லை. அவ்வாறு மனம் வருந்திக் கேட்பவர்கள் அதே பாவகாரியங்களை மீண்டும் செய்யாமல் இருப்பது ஒன்றுதான் அவர்களின் நேர்மையான மன்னிப்புக்கோரலுக்குரிய தூய்மையான அடையாளம்.
மாறாக, மீண்டும் அதே பாவங்களை எதுவித உறுத்தலுமின்றி அல்லது 'அடுத்த லைலத்துக் கத்ரில் பார்த்துக்கொள்ளலாம்' என்ற நப்பாசையோடு மீண்டும் ஆரம்பித்தால் அத்தகையோரை இறைவன் மன்னிப்பானா?

ஒருவர் தன்னைத் தொடர்ந்து ஏமாற்றுகின்றார் என்று தெரிந்து விட்டால் எச்சரிக்கையடைந்து உதவ மறுக்கும் ஒரு சராசரி மனிதனை விடவா அந்த அனைத்துமறிந்தவன் எச்சரிக்கையற்று இருப்பான்?


சிந்தித்துப் பாருங்கள்...!


இப்படியான மோசடிக்காரர்களை மீண்டும் மீண்டும் இடைவிடாது மன்னிப்பதாக இருந்தால் ஒன்றில் இறைவன் தான் படைத்த மனிதனை விட எச்சரிக்கை குறைந்தவனாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் இறைவன் மனிதனைவிட வலுக்குறைந்தவனாக இருக்க வாய்ப்பே கிடையாது. உண்மை இவ்வாறிருக்கும்போது தொடர்ச்சியாக பாவச்செயல் புரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் எங்கனம் இறைவன் தங்களை ஒவ்வொருமுறையும் மன்னிப்பான் என்று அத்தனை உறுதியாக நம்புகின்றார்கள்?

சிந்தித்துப் பாருங்கள்!

இதே போலத்தான் இஸ்லாமியரின் புனிதப் பயணமாகிய ஹஜ் கடமையும் ஆகிவிட்டது. ஒருதடவை ஹஜ்ஜை  நிறைவேற்றிவிட்டு வந்தால் அன்று பிறந்த பாலகர் போலாகி விடுவார்கள் என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு.


அவ்வாறு கூறுவதன் உள்ளார்ந்த அர்த்தம்தான் என்ன?

அந்த புனிதக் கடமையை நிறைவேற்றுபவர்கள் தமது வாழ்நாளில் அதுவரை  புரிந்துவந்த பாவங்களுக்காக உண்மையாகவே மனம்வருந்தி ('உண்மையாகவே' என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்) இறைவனிடத்தில் மன்னிப்பைக்கோரினால் அவன் மன்னித்து விடுவான் என்பதுதானே தவிர, அந்த மன்னிப்பு என்பது அடுத்து வருகின்ற காலம் முழுவதும் அவர்கள் புரியப்போகும் புதிய பாவங்களுக்கான முன்அனுமதியல்ல என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

ஆனால் நமது ஹஜ்யாத்திரிகர்களில் பலர், 'ஆகா இறுதிக்கடமையையும் செய்து விட்டோம். இதுவரை புரிந்த பாவங்களெல்லாம் தீர்ந்துவிட்டன. இதுபோதும் இனி ஊருக்குத் திரும்பி நமது வழமையான பாவக்கணக்கை மீண்டும் புதிதாக மேற்கொள்வதிலே பிரச்சினையில்லை' என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

சிலவேளை கட்டுக்கடங்காதளவுக்கு பாவக்கணக்கு அதிகரிக்க நேர்ந்தால் மீண்டும் ஒருதடவை -அதுவும் அந்தப் பாவச்சம்பாத்தியத்திலேதான்- மக்காவுக்குப் போய் வந்தால் போயிற்று என்பது அவர்களது நப்பாசையாகவும் இருப்பதுண்டு.

இறைவன் தாயைவிடப் பலமடங்கு இரக்கமானவன்தான். மிகப்பெரும் கருணையாளன்தான். அதற்காக அவனொன்றும் அடுத்தவர்கள் ஏமாற்றிட ஏமாற்றிட ஏமாறிக்கொண்டேயிருக்கும் சில இளிச்சவாயர்களான மனிதர்களைப் போன்றவனல்லவே. தன்னைக்  காலம்காலமாக ஏமாற்றிக் கொண்டேயிருக்கும் இப்படியான மோசடி முஸ்லிம்களின்  நப்பாசைகளையெல்லாம் புரிந்துகொள்ளாதவனுமல்லவே.

இப்போது கூறுங்கள்...


இன்றைய நமது சமூகத்திலே எத்தகைய பாவங்களையும் புரிந்துவிட்டு லைலத்துல் கத்ர் இரவிலும் புனித கஃபதுல்லாஹ்விலும் மன்னிப்புக்கேட்டு இலகுவாக அவனது தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் பலர் உண்மையிலே படுபயங்கரமான நஷ்டவாளிகள்தானே..?

-Jesslya Jessly

Sunday, August 19, 2012




Happy
Ramzan Greetings
to  all of our
Sirhukal Viewers

Saturday, August 18, 2012

சிறுகதை: மூதூர் மொகமட் ராபி





தூக்கணாங் குருவிகள்





'வாப்பா..! வாப்பா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க...எழும்புங்க!' கிணற்றுக்குள்ளிருந்து ஒலித்த ஷைனுக்குட்டியின் குரலைத் தொடர்ந்து யாரோ என்னைப் பலமாக உலுப்பியது போலிருந்தது.


'யா..யாரும்மா.. வந்திருக்கிறது?' கண்ணைத் திறக்காமலே கேட்டேன்.



இன்று விடுமுறை என்ற தைரியத்திலே இரவெல்லாம் டீவியில் லண்டன் ஒலிம்பிக்சும் இன்டர்நெற்றில் நாஸா றோவர்-க்யுரியோஸிட்டியின் செவ்வாய்த் தரையிறக்கமும் பார்த்துவிட்டுத் தூங்கச் சென்றிருந்தேன். திரும்பத்திரும்ப ஒரு நூறுதடவையாவது செவ்வாயில் இறங்கியதால் ஒத்துழைக்க மறுத்த கண்களுடன் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றபோது எதிரிலிருந்த நிலைக்கண்ணாடியில்  சற்றே உப்பியிருந்த முகத்துடன் தலைகலைந்த நான் தெரிந்தேன்.

'முன் ஹோல்ல இருக்கச் சொல்லும்மா அந்த அங்க்கிள  இந்தா வாறேன்' என்றபடி கிச்சன் குழாயைத் திறந்து முகத்தில் தண்ணீரை விசிறியடித்தேன். ' அது அங்க்கிள் இல்ல வாப்பா.. ஒரு ஆன்ரி தான் வந்திருக்காங்க! அவங்கதான் என்னோடு சேர்ந்து உள்ள வந்து உங்களைப் போட்டு ஆட்டியாட்டி எழுப்பிட்டு அந்தா வெளியே போய் நிக்கிறாங்க!' கையிலே பாதி தின்ற புதிய வகை சொக்லேட்டுடன் கலகலவென்று சிரித்தாள் ஷைனுக்குட்டி.


'ஆன்ரியா..?  பெட்றூமுக்குள்ளேயே வந்து தொட்டு எழுப்புகிறளவு யார்டா அது?'


வாய்க்குள்ளெடுத்த தண்ணீரை கொப்புளிக்க மறந்து சில வினாடிகள் திகைத்துப்போய் நின்றவன் அடுத்த நிமிடத்தில் சட்டெனப் பல்துலக்கி முகம் கழுவி விரல்களால் தலைவாரி கையில் கிடைத்த டீ சேர்ட்டை மாட்டிக் கொண்டு முன்னறைக்கு விரைந்து சென்று பார்த்தேன்.


அங்கு போர்ட்டிக்கோவில் தொங்கிய சிறுபூந்தொட்டியொன்றை ஆராய்ந்தபடி நின்றிருந்தாள் வெகு ஸ்டைலாக ஆடையணிந்த ஓர் அழகிய இளம் பெண். என்னைப் பார்த்ததும் நிமிர்ந்தவள் சட்டெனப் புன்னகைத்தாள்.  வெகுசுத்தமான அவளது அழகிய பல்வரிசையின் பளிச்சீடு எனது மூளையின் ஞாபக இடுக்குகளுக்குள் வேகமாகப் புகுந்து பல வருடங்களைப் பின்தள்ளிவிட்டுத் திரும்பிய அந்த மில்லி செக்கன்களின் முடிவிலே,


'ஹேய்...! நொய்லீன்!' என்று என்னை மறந்து கூவினேன். 'வா! வா நொய்லீன்! இது எப்ப.. எப்ப வந்த நீ..?'


 'ம்! பரவாயில்லையே, என்ட பேராவது நினைவிருக்குதே...!' என்றவாறு அந்தரத்திலே தொங்கிச் சுழன்று கொண்டிருந்த பிரம்புக்கூடைக் கதிரையிலேறி அமர்ந்தாள் அவள்.  மார்புச்சட்டையிலே ஊஞ்சலாடிக்கொண்டிருந்த குளிர்க்கண்ணாடியை ஒரு தடவை துடைத்து அணிந்து பார்த்துவிட்டு நெற்றிக்கு மேலே தள்ளிவிட்டாள்.


அந்த இடமே அவளால் பளிச்சென்று தோன்றியது எனக்கு. அவள் வந்திருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஷைனுவைப் பிடித்துத்  தன் மடியிலே அமர்த்தி தனது கைப்பையைத் திறந்து மற்றொரு சொக்லேட் ஒன்றைக் கொடுத்தாள்.


'என்ன பேர், பிள்ளைக்கு?'


'ஷைனப் குட்டி!' என்றாள் ஷைனப், நான் சொல்வதற்குள் முந்திக்கொண்டு.



'ஆ! ஷைனப்குட்டியா? ஓகோ! குட்டியும் ஒங்கட பேர்தானா..?'


'அது வாப்பா மட்டும் கூப்பிடுற செல்லப்பேர்...உங்களுக்கும் அப்படி பேர்
இருக்கா..?'


'ம்! இருக்கே...! 'வயலின்' என்று... அதுவும் உங்க வாப்பாதான் செல்லமா முந்தி எப்பவோ வச்சது எனக்கு தெரியுமா?' என்றபடி குறும்பாக என்னைப் பார்த்தாள் நொயிலின்.



' அட! அதெல்லாம் இன்னும் நீ மறக்கல்லயா? அதுசரி, வந்ததும் வராததுமா இவளைப் பழக்கம் பிடிச்சு உள்ளயே வந்து என்னை எழுப்பத் தெரியுது...ஆனா அவள்ட பேரைக் கேட்கத் தெரியலியா?'



'அட! நான் வந்து எழுப்பினதைச் சொல்லிட்டாளா.. இந்த க்யூட் ஷைனுக்குட்டி?' என்று கன்னத்தைக் கிள்ளி, 'யு ஆர் ஸோ நோட்டி யா! குழப்படியா இவ?'


'ஆமாம்! அவள்ட அக்கா மாதிரியே!' என்றேன் லேசாகக் கண்ணடித்து. ஆனால் அதைக் கவனிக்கத் தவறியதிலே எனது ஹாஸ்யம் புரியவில்லை அவளுக்கு.


'எனக்கெண்டா.. ஷைனுக்குட்டி அப்படியே அம்மா மாதிரிதான் தெரியுறா.. அம்மாவை அவட சின்ன வயசுப்போட்டோவுல பார்க்கிற மாதிரியே இருக்கு..' என்றவள் சட்டென, 'நான்.. அவங்களை அப்படிக் கூப்பிடலாம்தானே..?' என்று கேட்டாள் அவள்.


 'ஹேய் டோன்ட் பி ஸில்லி நொய்லீன்..! ஷீ'ஸ் ஓல்வேய்ஸ் யுவர் மதர்!'


'அதுசரி...பிறகு எப்படியிருக்கீங்க..?' ஷைனு அவள் மடியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் ஓடியதும் புன்னகை மாறாமலே கேட்டாள். 


நான் பதிலேதும் கூறவில்லை.


நொயிலின் எனது இளைய தங்கையின் வகுப்புத்தோழி. ஊரிலே எங்களது வீட்டுக்கு அருகிலேதான் நொயிலினின் குடும்பமும் குடியிருந்தது. வெளியூரில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த நான் இரண்டாவது தடவை உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்குக் காத்திருந்த காலத்தில் எனக்கு அறிமுகமானவள்தான் நொயிலின். அப்போது இருந்ததற்குச் சற்று மினுமினுப்பாய்  பூசினாற்போல இருந்தாள். ஆனால் அந்த வசீகரமான புன்னகை மட்டுமே இன்னும் பிடிவாதமாக, 'நான் பழைய நொயிலின்தான்' என்றது.


உடனே,  ' இந்த நொயிலின் என்னுடைய பழைய காதலி;  இவளைக் காதலித்து கைவிட்டு விட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது என்னைத் தேடி வந்திருக்கின்றாள்..' என்று நீங்களே ஒரு கதை பண்ணிவிடாதீர்கள். ஏனென்றால் இந்தக் கதையின் இறுதியிலே ஓர் உண்மையை நான்  உங்களுக்கு...


 'என்ன.. அப்படியே பாத்திட்டேயிருக்கீங்க. பதிலே சொல்ல மாட்டீங்களா..?  ஓ! நான் இங்க வருவேன் என்று எதிர்பார்க்கல இல்ல?'


'இல்ல..! சத்தியமா இல்ல நொய்லின்! நீதான் திரும்பவும் கனடாவுக்குப் போயிட்டியே.. நீ எப்ப வந்தது? எங்கதான் இருக்கிறாய் இப்ப?' எனக்கு எதை முதலில் கேட்பது என்றே தெரியவில்லை.


 'தேங்க்யூ வெரி மச்! அதுசரி! இன்னுமொரு கேள்வி மிச்சமிருக்குதே... 'எப்பிடி வந்தாய்' என்று..? அதையும் கேட்டுவிடுங்களேன்!' அவளது பழைய குறும்பு இன்னும் போகவேயில்லை.


'சரி, அதையும் நான் கேட்டதாய் நினைச்சு பதிலைச் சொல்லு!'


'ஓகே, போன ஏப்ரல்லதான் நானும் அப்பாவும் கனடாவுலருந்து வந்தோம். தம்பி அங்கேயேதான் இருக்கிறான். இப்ப அவன் உங்களோட கோபமில்ல.. அவனுக்கு உங்க விஷயம் எல்லாம் தெரியும்.. உங்களை எப்பவும் நினைச்சுக் கதைச்சுட்டே இருப்பான் அவன்.  நாங்க இப்ப கம்பளையில இருக்கிற மேபிள் மாமி வீட்லதான் தற்காலிகமாக தங்கி இருக்கிறோம். நான் போன வியாழக்கிழமை பின்னேரம்தான் கம்பளையிலருந்து ஒருவேலையா மூதூருக்கு வந்தேன் அத்தோட சில முக்கியமான முடிவுகளையும் நான் எடுக்க வேண்டியிருந்த...'


' அப்ப நீ பாத்ததுக்கு இப்ப மூதூர் எப்படியிருக்கு நொய்லீன்?'


'அதையேன் கேட்கிறீங்க? பஸ்ஸில போய் மெயின்ரோட்ல போய் இறங்கினனா..  என்ட கர்த்தரே! எங்கட சொந்தக்காரங்கள் இருக்கிற இடங்களையே த்ரீவீல்காரங்களுக்கிட்ட கேட்டுத்தான் தெரிஞ்சுகிட்டேன் என்டா பாருங்க.. அந்த ஆஸ்பத்திரி ரோட்டை எவ்வளவு அகலமா ஆக்கிட்டாங்க.. புதுசா நெறைய கடையெல்லாம் வந்து... மூதூர் இப்ப எப்படி மாறிப்போயிருக்கு பாத்தீங்களா... ஷகீ..ப்.. ப்..?' என்றவள் சட்டென்று    நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்தி விட்டாள்.


'நோ ப்ரொப்ளம் ஐ'ம் ஸ்டில் யுவர் ஷகீப்!'


'தேங்க்யூ ஷகீ, ரெண்டு மூணுநாள் அங்க உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்தாங்களே மனோரஞ்சி அக்கா.. அவங்க வீட்ல தங்கிட்டு இப்ப காலையில பஸ் ஏறி கம்பளைக்கு போறதுக்காகத்தான் ட்றிங்க்கோ வந்தேன்.. வழியில இங்க வந்து இறங்கினேன்.  நேற்று டவுனுக்கு வந்த நேரம் தீபன் அங்கிள்தான் உங்க அட்ரஸ்ஸ யாரிட்டயோ கேட்டு வாங்கிட்டு வந்தாரு.. அப்பாவுக்கு பைபாஸ் செய்ய வேண்டியிருந்திச்சு.. இங்க மாதிரி இல்ல அங்க கனடாவுல ஹொஸ்பிடல் செலவு.. அதனாலதான் இங்கயே வந்து செய்த நாங்கள்.. போன மாதம் 23ம் திகதிதான் கலம்ப்ல அப்பல்லோவுல செய்தது...'  சொல்லிக் கொண்டே சென்றவளை,


 ' ஏன் நொய்லீன், அப்பாவோட ஓப்பரேஷனப்பத்தி எனக்கு நீங்களெல்லாம் எதுவும் சொல்லவே இல்ல..?' என்றேன் இடைமறித்து.


'அட! சொல்லியிருந்தா மட்டும் என்ன.. உங்க வில்லனைப் பார்க்க ஓடோடி வந்திருப்பீங்களோ..?' மீண்டும் கலகலத்தாள்.


'நொய்லீன் ப்ளீஸ்! இப்ப எப்படி இருக்கு அவருக்கு?'


'ம்! அவர் நல்லாத்தான் இருக்காரு.. பரவாயில்லயே.. இவ்வளவு நடந்தும் பாசம் இருக்கே அவர்மேல! அவரோட இடது கால்ல இருந்துதான் ஒபரேஷனுக்கு தேவையான வெயின் எடுத்தது... அதால நடக்கிறது கொஞ்சம் சிரமம்.. மாதத்துக்கு ஒருதடவை கலம்ப்புக்கு க்ளினிக் போய் வரணும்.  ம்ம்..! நாங்க கனடாவுல கஷ்டப்பட்டு உழைச்சதெல்லாம் வைத்தியத்துக்கே போகுது...'


'சரி.. உங்களையெல்லாம் பெத்து வளர்த்த அப்பாவுக்குத்தானே செய்றீங்க...?'


'ம்ம்! காசை மட்டும்தான் அள்ளி இறைக்கிறோம்...! ஆனாலும் பொம்பிளைப் பிள்ளை என்னால மட்டும் அவருக்கு வேண்டிய எல்லாத்தையுமே செய்ய முடியல.. தெரியுமா? எவ்வளவுதான் நான் மேபிள் மாமி மற்ற எல்லாரும் கவனிச்சிட்டாலும் இப்பல்லாம், 'அடியே! உங்கட அம்மா அவனோட.. ஐ'ம் ஸொறி டு ஸே திஸ் ஷக்கீப்..'

என்று சொல்லவந்ததை நிறுத்தி விட்டாள்.



'பரவாயில்ல.. நீ சொல்லு நொய்லீன்'


'உங்க அம்மா அவனோட போய்த்தொலையிறதுக்கு முந்தியே நான் போய்ச் சேந்திருக்கலாம்டீ.!' என்று அடிக்கடி கத்திறாரு தெரியுமா. எங்களால என்ன செய்றதுண்டே தெரியல்ல'


 'அவரு நெனைக்கிறதுலயும்..நியாயம் இருக்குத்தானே..?'


'நான் மட்டும் இல்லை என்று சொன்னேனா ஷகீப்..? வயசுபோன காலத்தில துணை இல்லாமல் போனதுதான் அவருக்குள்ள பிரச்சினையே... அதைத்தான் கோபமா எங்க மேலே கத்தித் தீர்க்கிறாரு!'


சிறிது நேரம்  நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஷைனப் முற்றத்தில் இறங்கிச் சைக்கிளை வைத்து தள்ளி விளையாடிக் கொண்டிருக்க மாமரத்தின் கிளையொன்றிலிருந்து  பச்சைக்குருவி ஒன்று, 'கொட்றூ.... கொட்றூ....' என்றது.

'உடம்புக்கு முடியாமப்போகிற நேரம்தான் ஒரு ஆம்பிளைக்குத் தன்ட துணையோட அருமையெல்லாம் புரியும் போல.. இளம் வயதில அதைப் பத்தியெல்லாம் யோசிக்கவே மாட்டாங்க.' என்று மீண்டும் பேச்சை ஆரம்பித்தேன்.


'இப்ப என்ன உங்களுக்கு... அப்பாவைக் குத்திக் காட்டணும் அதுதானே?' சட்டென அவளது உதடுகள் துடிக்க ஆரம்பித்தன. அதுவரை இருந்த கலகலப்பான முகம் மெல்ல வாடிப்போக ஆரம்பித்தது. பார்வையை வேறு எங்கோ திருப்பிக் கொண்டாள்.


 'ஹேய்.. வாட்ஸ் தீஸ்? ஐ'ம் ஸொறி நொய்லீன்.. .ஐ ரியலி டிடுண்ட் மீன் தட். இவ்வளவு நேரம் எவ்வளவு சந்தோஷமாகப் பேசிட்டிருந்தோம்... இதுதான் இந்த விசயத்தையே..'


'ஓகே! ஐ'ம் ஓல்ரைட்..! விடுங்க ஷகீப்...! நீங்க என்னதான் செய்வீங்க..? அவருக்கு நல்லாவே வேணும்.. உங்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினாரு.. அந்தநேரம் நாங்கல்லாம் சின்னவங்க.. உண்மையில  என்னதான் நடக்குது என்று அப்பல்லாம் எங்களுக்குத்  தெரியவே இல்ல..' அவள் தொடர்ந்து பேசியவாறே இருந்தாள்.



'அப்பாவோட வீண் அவமானப்படுத்தலையும் தொல்லைகளையும் பொறுக்காமத்தானே அன்டைக்கு நாலுமாதம் வாயும் வயிறுமா இருந்த எங்க அம்மா துணிச்சலா யாராலயும் நெனச்சிக்கூடப் பார்க்க இயலாத அந்த முடிவை எடுத்தாங்க. ஆனால் பாவம் நீங்க.. உங்க படிப்பு.. எதிர்காலத்தைக்கூட யோசிக்காம அம்மாவோட பக்கத்திலதானே நின்றீங்க....! அப்பல்லாம் அப்பாவோட சேர்ந்து நாங்க கூட உங்களைத்தான் ஷகீப் தப்பா நினைச்சோம்.. எங்களைச் சின்னப் பிள்ளைகள் என்று நினைச்சு நீங்ககூட உங்க நியாயத்தைக் சொல்லவேயில்ல...' அவள் பார்வை எங்கோ வெறித்தபடி இருந்தது.


'..........................'


 'அப்பா உங்களை அவமானப்படுத்திறதா நெனைச்சிட்டு உண்மையில பிள்ளைகள் எங்களைத்தான் அவமானப்படுத்தினாரு.. இப்ப இருக்கிற அறிவு அந்த நேரம் எனக்கெல்லாம் இருந்திருந்தா....!' அவள் கண்களின் ஓரத்திலே லேசாக நீர் துளிர்த்தது.


வெளியே இலேசான மழை தூற ஆரம்பித்து ஷைனப்பை நான் உள்ளே கூப்பிடுவதற்குள் சட்டென ஓய்ந்தது. புதுமழையின் ஈரலிப்பில் எழுந்த மண்வாசனை நாசியைத் துளைத்தது.


 'இட்ஸ் ஓகே நொய்லீன்.. அதெல்லாம் முடிஞ்சுபோன கதை.. லெட்ஸ் சேன்ஜ் த டொப்பிக்? இப்ப என்னவாவது குடிக்கிறியா? கூல் ஓ ஹொட்?'


'சம்திங் கூல் இஸ் பெட்டர்! அதுசரி, நீங்க ரமழான் நோன்பு இல்லயா ஷகீப்?'


'ஹேய்! ஏதும் குடிக்கிறியான்டு நான் கேட்டது உனக்குத்தான்!   ஷைலுக் குட்டி! இங்க வாங்கம்மா, ரஸாக் மச்சான்ட கடைல ஆன்ரிக்கு கூல்ட்ரிங்ஸ் ஒண்டு வாங்கிட்டு வாறீங்களாடா'


'வாப்பா...எனக்கு ஜெலியும் வேணும்..?'


'சரி, டொக்டர் மாமா நேற்று என்ன சொன்னவருண்டு தெரியும்தானே...? நிறைய வேணாம்.. கொஞ்சம் நில்லுங்க.  நொய்ல், வாட்ஸ் யுவர் பராண்ட்... ஸெவனப் ஓ ஸ்ப்ரைட்..?'


'பாத்தீங்களா ஷகீப்... எல்லாமே மறந்திட்டீங்க நீங்க?'


 ' ஓ! ஐ'ம் ஸொறி.. ஐ ரியலி போர்கொட் தட்! அது இங்க உள்ள கடைகள்ல இருக்காது. சந்திக்குத்தான் போகணும் ஷைனுவோட பேசிட்டேயிரு..இதோ நானே வாங்கிட்டு வர்ரேன்..ஆனா என்ன இப்படியே கடைக்கு நான் போனால் எல்லாருமே பயந்திடுவாங்க..' என்றபடி உள்ளே சென்று குளித்து முடித்து சேர்ட் டெனிம் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு வந்து நான் பைக்கை உதைத்த போது,


'யூ ரியலி லுக் வெரி ஸ்மாட் இன் திஸ் ப்ளு ட்ரெஸ் ஷகீ!' என்றாள் நொயிலின்.

***






னுராதபுரச் சந்தியிலிருந்த கடைகள் முழுவதும் சல்லடைபோட்டும் தேடியது கிடைக்கவேயில்லை எனக்கு.


வேறுவழியின்றி நான்கு கிலோமீற்றரில் இருக்கும் ட்றின்கோ டவுனை நோக்கி பைக்கில் பறந்தேன். போகும் வழியில் அபயபுரத்தைத் தாண்டியதும் நான் வழமையாக தயிர் வாங்கும் ஒரு சிறிய பெட்டிக்கடை ஞாபகம் வந்தது. நொயிலினுக்குத் தயிரென்றால் உயிர். டவுனுக்குப்போய் வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று யோசித்தவன் சிலவேளை வரும்போது தயிர் விற்று முடிந்துவிடும் என்பதால் சட்டென அந்தக் கடையோரமாக பைக்கை நிறுத்தினேன்.


'ஆ! இஞ்சினியர் மல்லி! கொஹாட்டத மே உதே பாந்தர? அத நிவாடு தவஸ நேத?' வெற்றிலைக் காவியேறிய பற்கள் பளிச்சிடக் கேட்டார் அவரிடம் தயிர் வாங்கிச் செல்வதாலேயே அறிமுகமாகிப்போன கடைக்காரர் சுனில் ஐயா.


நான் வந்த விசயத்தைச் சுருக்கமாகச் சொன்னேன்.


'ஹொந்த வெலாவ! ஏக்க மே ஹரிய எத்தி மஹத்தயோ...!' என்றவாறு உள்ளே சென்று ப்ரிட்ஜைத் திறந்து இரண்டு போத்தல்களை எடுத்துவைத்தார். அவற்றைப் பார்த்ததும்தான் எனக்கு உயிர் வந்தது. மிகுந்த சந்தோஷத்துடன் அவற்றுடன் தயிரும் வாங்கிக்கொண்டு பைக்கிலேறி ஸ்டார்ட் செய்தபோது,


'அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்!' என்றது பரிச்சயமான ஒரு குரல். அது வந்த திசையிலே நின்றிருந்தான் அஸ்லம், என் பள்ளிக்காலத்து பால்ய நண்பன். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒருவரோடு ஒருவர் மனம்விட்டுப் பேசிப் பழகுபவர்கள். இப்போதும் கூட விடாமல் தொடரும் நட்பு எங்களுடையது.


அஸ்லம் இப்போது திருகோணமலை நகரிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றிலே மேலாளராக வேலை செய்கின்றான். வார இறுதியிலே மட்டும் ஒரு தடவை ஊருக்குச் சென்று திரும்புவது அவன் வழமை. நகரிலுள்ள கடைத்தெருவுக்கு நான் ஏதாவது வேலையாகச் செல்லும்போதெல்லாம் அவனது நகைக்கடையிலே சந்தித்து இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொள்வோம்.


'என்னடா! ஞாயிற்றுக்கிழமையில இங்க நிக்கிறா? சனிக்கிழமை இரவே மனிசியைப் பார்க்க பஸ் ஏறி ஓடிருவியே.. என்ன வீட்ல ஏதும் சண்டையா?' என்றேன் நக்கலாக.


'இல்லடா மச்சான், இரவு கடையில கணக்குக் கூட்டினதுல ஒரு ஆயிரம் ரூபாய் குறைஞ்சிட்டுதெண்டு கணக்கைச் சரி செய்யும் வரைக்கும் போக விடவே மாட்டனுண்டாண்டா அந்த எருமை.. கடைசியில ஊருக்குப்போற கடைசி பஸ்ஸையும் விட்டுட்டன்டா..' என்றான் பரிதாபமாக.



'யாரு உன்ட அந்த முதலாளியா..? அவந்தான் காசு மட்டுந்தான் வாழ்க்கையென்று நெனைக்கிற கூட்டத்துல உள்ளவன்தானே... அப்பிடித்தான் இருப்பான்.. சரி, வந்து ஏறு என்ட வீட்டுக்குப் போயிட்டுப் போகலாம்.  வாடா! வா! என் வீட்டடியிலேயே நின்று மூதூர் பஸ்ஸைப் பிடிக்கலாம்'


'ஹெல்மெட்டும் இல்ல.. வேணாண்டா மச்சான், அதோட நான் இப்பவே மூதூருக்குப் போயாகணுண்டா.. இன்னொரு நாள் வாறேன்' என்று மறுத்தவன்,


வீதியோரமாக மோட்டார் சைக்கிளுடன் போக்குவரத்துப் பொலீஸ் அதிகாரிகள் சிலர் நின்றிருக்க அந்தப்பகுதி முழுவதும் புகையைக் கக்கியபடி இரைச்சலுடன் கடந்து சென்றது ஓர் இராணுவ கனரக வாகனம்.



'அது சரி, என்னடா தயிர், நெல்லி-ரசமெல்லாம் வாங்கிட்டுப் போறீயே.. நோன்பு திறக்கவா? இந்த விடியக் காலத்திலேயே..?'


'வீட்ல ஒரு கெஸ்ட் வந்திருக்கான்டா மச்சான்'


'டேய் சரியாச் சொல்லு! கெஸ்ட் வந்திருக்கானா வந்திருக்காவா? யாருக்கிட்ட மறைக்கிறாய் நீ? உன்ட பழைய ஆள் நொயிலின்தானே? கனடாப் பார்ட்டி!' என்றான் பாவி குறும்புடன்.


'டே....ய்ய்!' என்று கூவினேன் மயக்கம் வராத குறையாக. 'உனக்கு எப்பிடிடா இது தெரியும்?'  ஆச்சரியத்திலே பைக்கின் ஸ்டார்ட்டைக்கூட நிறுத்திவிட்டேன்.


'அவளுக்கு இஞ்ச நீ இருக்கிற அட்ரஸ்ஸைக் குடுத்து விட்டதே நான்தான் தெரியுமா?' என்றான் சிரித்தபடி. 'என்னடா  இப்படி முழிக்கிறா..?  நேத்து மத்தியானம் நம்மட நிக்கலஸ் விதானையார்ட மகன், தீபன் தெரியுந்தானே.. அவன்  வெளிநாட்டு நகைகள் கொஞ்சம்  விக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு பசார்ல என்ட கடைக்குத்தான்டா வந்தான். அவ்வளவும் பெஸ்ட் தங்கம் மச்சான்.. ஏதுடா இவ்வளவு நகை என்று விசாரிச்சதுல நொயிலின் கனடாவுலருந்து வந்த விசயத்தைச் சொன்னான். நான் உனக்கு விசயத்தைச் சொல்றதுக்கு கோல் அடிச்சேன். ஓஃப்ல இருந்திச்சுடா உன்ட போன்.. பிறகு நாந்தான் பசார்ல கூடுதலாப் பேரம் பேசி வித்துக் காசு எடுத்துக் குடுத்தேன் தெரியுமா?'


' ஓ! அப்பிடியா.. சேதி?'


'என்ன அப்பிடியா? அப்ப உனக்கிட்ட இதைப்பத்தியே அவள் சொல்லவே இல்லயாடா..?'


'அதெல்லாம் சொன்னதுதான் நாந்தான் சரியாக் கேட்கல்லபோல.. சரிடா! நான் வாறேன்' என்று பைக்கை மீண்டும் ஸ்டார்ட் செய்து புறப்பட்டத் தயாரானவுடன், 'கொஞ்சமிரு! கொஞ்சமிரு..!!' என்று என்னை மறித்துப் பிடித்துக் கொண்டான் அஸ்லம்.


'டேய் ஷகீப், அவள்ற குடும்பத்துக்காக எவ்வளவு விசயங்களை இண்டைக்கு வரைக்கும் பொறுத்திட்டிருந்த நீ.. இப்பிடி ரெண்டு குடும்ப ஆதரவுமில்லாம இன்னும் எத்தனை காலத்துக்குத்தான்டா உன்ன வாப்பாண்டு கூப்பட்டுக்கிட்டிருக்கிற அந்தச் சின்னப்பிள்ளையையும் வச்சிட்டு நீ இப்பிடியே இருப்பாய்?  இப்பதான் எல்லாமே க்ளியர்தானே.. நொய்லினை ஒருதடவை கேட்டுப் பாரேண்டா.. உனக்கு அவள்மேல இருக்கிற விருப்பத்தை மறைக்க நினைக்காத... அது உனக்குத்தான் பாதகமா முடியும்.. யாரோ வேற ஆக்களுக்கிட்ட சொல்ற மாதிரி எல்லாம் தெரிந்த எனக்கிட்டயும் பொய் சொல்லுவியாடா...?'


என்னால் எதுவுமே பேச முடியவில்லை.


அவன் சொல்வது உண்மைதான். அந்த நாட்களிலே ஊரில் நாங்கள் ஒன்றாக இருந்தபோது நொயிலினின் குடும்பம் தொடர்பாக நடந்த சகல விடயங்களையும் எனது உற்ற நண்பனாக இருந்த இந்த அஸ்லம் ஒருவனிடம்தான் பகிர்ந்து கொண்டிருந்தேன்.


நொயிலின் குடும்பத்தினர் எங்கள் ஊருக்கு வந்த காலப்பகுதியில்  நான் எனது வீட்டார்களுடன் சிறுசிறு பிரச்சினைகள் பட்டுக்கொண்டிருந்தேன். குறிப்பாக உயர்தரக் கல்வி தொடர்பாக எனக்கும் வாப்பாவுக்கும் அடிக்கடி தர்க்கம் ஏற்படுவதும் அதன் காரணமாக நான் மனமுறிவு கொள்வதும் வழமையானதாக இருந்து வந்தது.  அதனால் விளைந்த மனக்கசப்பிலே  நான் வீட்டிலே இருக்கப் பிடிக்காமலும் அதேவேளை வெளியிலே எங்கேயாவது சென்று நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க இயலாத நிலையிலும் குமுறிக் கொண்டிருந்தேன்.


அந்தவேளையிலே நொயிலின் குடும்பத்தினரின் வரவு எனக்குப் புதிய உணர்வைத் தந்தது.  குறிப்பாக, நொயிலினின் தாய் ஸ்டெல்லா அக்காவின் கனிவான தோற்றமும்  அனுசரணையான குணங்களும்  எனக்கு மட்டுமன்றி எங்கள் குடும்பத்தினருக்கும் அயலவர்களுக்கும்  கூடப் பிடித்துப்போனது. ஸ்டெல்லா அக்கா அவரது பிள்ளைகளை எப்படி நேசித்தாரோ அதே போலத்தான் என்னையும் நேசித்தார். எனது உறவுகளின் தர்க்கங்களால் சலிப்படைந்திருந்த எனக்கு அவரின் பாசம் பூட்டிக்கிடந்த ஓர் இருட்டறைக்குள்ளே திடீரென புதிய சாரளம் ஒன்றைத் திறந்து விட்டதைப் போலிருந்தது.

ஸ்டெல்லா அக்காவும் அவரது இருபிள்ளைகளும் எங்கள் அனைவரினதும் நட்புக்குரியவர்களானார்கள். முதலில் எனக்கு அறிமுகமானவன் என்னைவிட எட்டு வயது குறைந்த நொயிலினின் தம்பி சில்வஸ்டர்தான். அவ்வாறே எனது தங்கைக்கு நொயிலினும்  தாய்க்கு ஸ்டெல்லா அக்காவும் நண்பர்களாகினர். ஆனாலும் வியாபார முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவரான எனது வாப்பாவும் நில அளவைத் திணைக்களத்திலே வேலை செய்த நொயிலினின் அப்பா ஜோர்ஜ் ஸேர்வையரும் தத்தமது வீட்டில் தங்கியிருப்பது மிகவும் குறைவாக இருந்தமையால் அவர்களுக்கிடையே பெரிதாக நட்புறவு ஏற்பட வழியில்லாமல் போயிற்று.


எனக்கும் சில்வஸ்டருக்கும் வயது வித்தியாசம் பெரிதாக இருந்தபோதிலும் கிரிக்கட்டில் இருந்த அதீத ஆர்வம் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்திருந்தது. அவர்கள் வீட்டிலிருந்த பெரிய தொலைக்காட்சியில் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்காக அவனோடு அங்கு செல்வதிலே ஆரம்பித்து மெல்ல எனது வீட்டுக்கு அவனும் அவனது வீட்டுக்கு நானும் சென்று வருவது வாடிக்கையாகிப்போனது. நாளடைவிலே இந்த நெருக்கம் வலுப்பட்டு நான் எனது வீட்டிலிருப்பதே மிகவும் குறைந்து போனது. சொல்லப்போனால் சாப்பிடும் வேளை உறங்கும் வேளை தவிர மற்ற நேரங்களிலெல்லாம் ஸ்டெல்லா அக்கா வீட்டு டீவியில் கிரிக்கட் மெட்ச் அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டு கிடக்கலானேன்.
அவர்கள் வீட்டிலிருக்கும் வேளையிலே சில்வஸ்டருக்கும் நொயிலினுக்கும் அவர்களது வீட்டுப் பாடங்களைச் செய்வதற்கு நான் உதவ ஆரம்பித்தேன். இதனால் அவர்களின் பாடசாலை அலகுப்பரீட்சைப் புள்ளிகளிலே கணிசமான அதிகரிப்பு இருந்தது. இதன் காரணமாக ஸ்டெல்லா அக்காவுக்கு என்மீது இருந்த கரிசனை மேலும் உயர்ந்துவிட்டிருந்தது. அதுமட்டுமல்லாது நான் அவர்களது வீட்டிலே அதிகநேரம் செலவிடுவதையும் அவர் பெரிதும் விரும்பியிருந்தார்.


நொயிலினின் அப்பா ஜோர்ஜ் ஸேர்வையர் தனது தொழில் நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. இதனால் மாதத்தில் அரைவாசிக்காலம் அவரால் வீட்டில் இருக்க முடிவதில்லை. அவர் இல்லாத நாட்களிலே நானும் எனது இளைய தங்கையும்தான் நொயிலின் வீட்டிலே துணைக்குச் சென்று தங்கியிருப்பதுண்டு. பொதுவாக வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்கு அவசியமில்லாமல் அடிக்கடி போகக்கூடாது தங்கக்கூடாது என்பது எனது உம்மாவின் கண்டிப்பான சட்டம். ஆனால் எங்கள் இரு குடும்பங்களுக்கிடையிலே உருவான அந்நியோன்னியம் காரணமாக ஸ்டெல்லா அக்கா வீட்டில் தங்குவதிலேமட்டும் அந்த விதி எனக்குச் சற்றுத் தளர்த்தப்பட்டிருந்தது. நானும் அந்தச் சலுகைக்கு பங்கம் ஏற்படாதவாறுதான் நடந்து கொண்டிருந்தேன். ஆனாலும் விதி வேறு வடிவத்தில் என்னைக் குறிவைத்திருந்ததை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.


அப்போது நொயிலினின் வயது வெறும் 14 தான். அவள் எல்லோருடனும் சகஜமாகவே பழகக்கூடியவள் என்பதால் என்னோடும் அதேபோலவே வெகு இயல்பாக நட்புடன் பழக ஆரம்பித்தாள். எங்கள் இருவருக்குமிடையிலே கலந்துரையாடுவதற்கு பொதுவான பல விடயங்கள் இருந்த காரணத்தால் காலப்போக்கிலே அந்த நட்பு மேலும் வலுப்பெற்றது. அந்த நாட்களிலே எங்கள் இருவருக்கும் இடையில் சிநேகிதத்தையும் மீறிய பருவவயதுக்குரிய ஒருவித ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது.  ஆயினும் அந்த ஈர்ப்பு ஒரு திட்டமான உறவுவடிவத்தை அடைவதற்கு முன்னமே நாங்கள் இருவரும் பிரிந்துவிட வேண்டிய நிலைமை உருவானது.

ஆம்! என்ன காரணத்தினாலோ திடீரென்று நொயிலின் அவளது பெற்றோரால் எங்கள் ஊரிலுள்ள பாடசாலையிலிருந்து திருகோணமலை நகரிலுள்ள ஒரு கிறிஸ்தவ மிஷன் பாடசாலை விடுதியிலே சேர்க்கப்பட்டாள். அந்த திடீர் முடிவுக்குரிய காரணம் நொயிலினுக்குக் கூட அப்போது தெரிந்திருக்கவில்லை. நொயிலின் விடுதிக்குச் சென்றபிறகு எங்கள் தொடர்பு ஏறக்குறைய விடுபட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் சில்வஸ்டருடன் எனது நட்பு எதுவித குழப்பமுமின்றித் தொடர்ந்தது. குறிப்பாக நொயிலினின் தந்தை வீட்டிலே இல்லாத காலங்களில் நாங்கள் இருவரும் நொயிலின் வீட்டில் தொலைக்காட்சியே கதியெனக் கிடந்தோம். இப்படியே சில மாதங்கள் கழிந்தன.


அந்த நேரத்தில்தான் யாருமே எதிர்பார்த்திராத ஒரு விடயம் நடந்தது.
ஒருநாள் மாலை வெளியூரிலிருந்து திரும்பிய ஜோர்ஜ் ஸேர்வையருக்கும் ஸ்டெல்லா அக்காவுக்கும் என்றுமில்லாதவாறு பலத்த வாய்த்தர்க்கம் ஒன்று ஏற்பட்டது. அக்கம் பக்கமே ஆச்சரியத்திலாழும் வகையிலே இரவு வெகுநேரம் வரை நீடித்த அவர்களது தர்க்கத்திற்கு என்ன என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை. அது ஒரு தம்பதியரின் தனிப்பட்ட விடயம் என்பதால் நாங்கள் யாருமே அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


அடுத்த நாள் காலையிலே நொயிலின் வீட்டிலிருந்து யாருமே வெளியலே வரவில்லை. எனது வீட்டில் உள்ளவர்களும் இரண்டொரு நாட்களுக்கு என்னை அங்கு செல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டனர். அடுத்த நாள் மதியம் வரை பொறுத்துப் பார்த்த எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது சில்வஸ்டரைக் கண்டால் என்ன விடயம் என்பதை அறியலாம் என்று எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டுக்குப் போனேன்.


நான் அங்கு சென்றபோது அவர்களது வீடு திறந்துதான் இருந்தது. ஆனால் என்றுமில்லாதவாறு மிகவும் அமைதியாயிருந்தது.


'சில்வஸ்டர்! சில்வஸ்டர்!' என்று கூப்பிட்டேன். ஆனால் பதிலே இல்லை.


ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்று என் உள்ளுணர்வு உந்தித்தள்ள சட்டென்று திரும்பிச் சென்று விடுவோமா என்று கூட நினைத்தேன்.  ஆனால் அதற்குள் திடீரென வெளியே வந்தார் நொயிலினின் அப்பா ஜோர்ஜ் ஸேர்வையர்.


அவரை அதற்கு முன்பு வரை நான் அப்படி ஒரு கோலத்திலே பார்த்திருக்கவில்லை. அவரது கண்கள் இரண்டும் சிவந்திருக்க ஓர் அடிபட்ட புலிபோல ஆவேசத்துடனிருந்தார்.


'ஆ! ஷகீப்! வாங்க! நல்ல நேரத்திலதான் வந்திருக்கீங்க! இப்படி.. வாங்க!' என்று குரலில் ஒருவித நையாண்டி தொனிக்க எனது கையைப்பற்றித் தரதரவென்று இழுத்துக் கொண்டு உள்ளே கொண்டு சென்றார். உள்ளே படுக்கையறையினுள்ளிருந்த கட்டிலிலே அழுது சிவந்த முகத்துடனிருந்த ஸ்டெல்லா அக்கா என்னைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து, 'வேணாம் ஷகீப்! வராதீங்க...வராதீங்க..!' என்று வெறிபிடித்தவர் போல அலற...


அங்கு என்ன நடக்கின்றது என்று புரிந்து கொள்வதற்கு முன்பே எனது வலது கையைப் பிடித்து ஸ்டெல்லா அக்காவின் கையிலே திணித்து, 'இந்தா பிடி! நான் போறேன்..' என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அவர் விடுவிடுவென்று தயாராகக் கட்டி வைத்திருந்த பெட்டி மற்றும் தனது நிலஅளவை உபகரணங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று விட்டார். நடப்பது எதுவுமே புரியாமல் நான் திகைத்து நிற்க ஸ்டெல்லா அக்கா ஓடிச்சென்று கட்டிலிலே விழுந்து முகம் புதைந்து 'ஓ...!' வென்று சத்தமாய்க் குலுங்கியழ ஆரம்பித்தார்.


நான் பயந்துபோய் வெளியே வந்தபோது வீட்டு முற்றத்தில் அக்கம் பக்கமே கூடிநின்றது.


'என்னடா ஷகீப், ஒண்ணுமே சொல்லாம யோசிச்சிட்டேயிருக்க பதில் சொல்லவே மாட்டியாடா நீ?'


 'ம்ம்? என்ன கேட்ட நீ..? இல்லடா.. அஸ்லம், அவளை நான் இப்பவும் அதேபோலத்தான்டா விரும்புறேன்.. அதில மாற்றமில்ல.. ஆனால் அவள் நொயிலின் என்ன ஐடியாவுல இருக்கிறாள் என்டு எதுவுமே எனக்குத் தெரியாதுடா.. நான் கொழும்பு கெம்பஸ்ல பைனல் இயர்ல இருந்தநேரம் அவ அம்மா தவறிப்போன நேரம் வந்ததுக்கு இப்பதான்டா ஏழு வருஷம் கழிச்சு கனடாவுலருந்து வந்திருக்கிறாள்.. இப்ப அவள்ட  அப்பாவுக்கும் பைபாஸ் முடிஞ்சு ஒரு மாதம் கூட ஆகல்ல.. தவிர இப்ப அவள் என்ன நோக்கத்தில இருக்கிறாளென்டு கூடத் தெரியாம எப்படிடா நான்..?'


' அப்ப நான் வேணுண்டா ஒருக்கா கதைச்சுப் பார்க்கட்டா ஷகீப்..? இப்ப அப்படியே மூதூருக்குத்தானே வருவாள்? நான் பேசிப்ப பாக்கிறண்டா! அவள்ற நம்பர் வச்சிருக்கியா..'


'இல்லடா.. இன்னும் கேக்கல்ல... ஆனா அவள் இன்டைக்கு கம்பளைக்குப் போகிறாள்றா மச்சான். எதுக்கும் நீ இப்ப எதையும் அவசரப்பட்டு கேட்டு வச்சிடாதடா!'


உடனே அஸ்லம் சிறிது யோசித்து விட்டு,


'சரி, நீ இப்ப நேர உடனே வீட்டுக்குப்போகணுமா ஷகீப்? நீ பைக் தானே வச்சிருக்கிறாய்.. எனக்கொரு உதவி செய்ய மாட்டியாடா?'


'சொல்லுடா! செய்றேன்.!'


'மச்சான், இதில ஒரு பன்னிரண்டாயிரம் இருக்குடா. எச். என். பீ. டவுண் பிராஞ்ச்ல போய் இதை நான் தாற எக்கவுண்ட் நம்பர்ல ஒருக்கா டிப்பொசிட் பண்ணிவிடு மச்சான். இன்டைக்கே இப்பவே போட வேண்டிய காசுடா.. எனக்குப் போய் வர நேரமாகிடும்..' என்று பணத்தையும் நம்பரையும் நோட் பண்ணித் தந்தான்.


 'சரிடா ஷகீப்! அந்தா ஒரு பஸ் வருது. நான் நாளைக்குக் காலைல திரும்பி வந்திருவேன்.. பகல் கடையிலதான் இருப்பன்..அந்தப்பக்கம் வந்தா வா கதைப்பம் ஸொறிடா உன் கெஸ்ட் காத்திட்டிருப்பா என்ன..?' என்று அவன் விடைபெற்றுப் பஸ்ஸிலேறியதும்,


' இட்ஸ் ஓகே! நீ போ! நான் இந்தா இப்பவே போய் காசைப் போட்டுட்டு வந்து விடுறன்..' என்று பைக்கை டவுண் பக்கம் திருப்பினேன்.






'என்ன ஷகீப்   எனக்காக நெல்லிரசம் தேடி மிச்ச நேரம் அலைஞ்சீங்களா..?


பைக்கை முற்றத்தில் நிறுத்திவிட்டு நான் இறங்கியதும் ஷைனுவை மடியில் வைத்து அவளது பிஞ்சுக் கைகளுக்கு டியூப்  மருதாணி இட்டவாறே கேட்டாள், நொயிலின்.


'ம்! கொஞ்சம் அலைச்சல்தான்!'


அவளது அரவணைப்பிலே ஷைனுக்குட்டி வெகுசந்தோஷமாக இருப்பதைப் பார்த்ததும் அஸ்லம் கூறியதுதான் ஞாபகம் வந்தது எனக்கு. அவன் சொன்னபடியே அவளிடம் நேரடியாய்க் கேட்டுவிடலாமா என்றுகூட ஒரு கணம் நினைத்தேன். பின்பு தயிரையும் நெல்லிரசப் போத்தல்களையும் உள்ளேயிருந்த மேசையிலே வைத்துவிட்டு கிச்சன் உள்ளே சென்று இரண்டு கிளாஸ்களைக் கழுவியெடுத்தேன். ப்ரிட்ஜ்ஜைத் திறந்து ஐஸ்க்யூப்ஸ் போட்டு நெல்லிரசத்தை ஊற்றிக்கொண்டு வந்து அவள் முன்னே ட்ரேயை வைத்தேன்.


'இது என்ன ஷகீப்! இதெல்லாம் நான் செய்து தரவேண்டியது...நீங்க..போய்' என்று சிணுங்கினாள். 'இல்ல இன்டைக்கு லீவு நாள் என்டதால நான்தான் வழக்கமா வர்ற  சேர்வண்ட் பொம்பிளைய வரவேணாம் என்று சொல்லிட்டேன்'


'இருங்க ஷகீப், கையெல்லாம் மருதாணி பேஸ்ட் பட்டிருக்கு கழுவிட்டு வாறேன்' என்று உள்ளே சென்றதும், 'வாப்பா, ஏன் இந்த அன்ரி மட்டும் ஒங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடுறாங்க..?' என்று கேட்டாள் ஷைனு.


எனக்கு உடனடியாக என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.


'அதுதானே! சரி நம்ம ஏனென்று கேட்டுடலாம்.. முதல்ல நீங்க இந்த ட்ரிங்கக் குடிங்கடா' என்று ஒரு க்ளாஸை எடுத்து இரு கைகளிலும் மருதாணி இட்டிருந்த ஷைனுவுக்குப் பருக்கிவிட்டேன். அந்தப் பச்சைநிறத் திரவத்தை அவள் புதிதாகப் பார்த்து, 'இது என்ன புது ட்ரிங்ஸ்.. இன்டைக்கு மட்டும் இதையேன் வாங்கியிருக்கீங்க வாப்பா?' என்றாள்.


'ஏன் தெரியுமா ஷைனுக்குட்டி? அது எனக்கு மிச்சம் விருப்பமான ட்ரிங்க்!அதனால உங்கட வாப்பா டவுண்ல எச். என். பீ. பேங்க் வரைக்கும் போய் தேடியலைஞ்சு வாங்கி வந்திருக்காரு தெரியுமா?' என்று அபிநயித்தபடியே நொயிலினும் எங்கள் உரையாடலில் வந்து சேர்ந்து கொண்டாள்.


எனக்குத் திக்கென்றது!


'ஹேய்! இது எப்படி உனக்குத் தெரியும்?' என்று திகைத்த என்னைச் சிறிதும் பொருட்படுத்தாமல், 'அதோட, உங்கட வாப்பாவுக்கும் பிடிச்ச ட்ரிங்க்தான் அது.. தெரியுமா? அப்படித்தானே ஷகீப்?' என்று சொல்லிக்கொண்டே போனாள் நொயிலின்.


'ய்யாக்!..நல்லாவே இல்ல.. ஆன்ரி ஏன் நீங்க வாப்பாவை பேர் சொல்லிக் கூப்பிடுறீங்க?'


'மாட்டிக்கிட்டாயா?' என்ற தொனியிலே நொயிலினைப் பார்த்துப் புன்னகைத்தேன் நான். அவளும் சிறிது திகைத்துவிட்டு சிரித்தபடியே,



'பேர் வச்சிருக்கிறதே கூப்பிடத்தானே?' என்றாள்.


'அப்போ நானும் உங்களை பேர் சொல்லிக் கூப்பிடவா?' மடக்கினாள் என் ஷைலுக்குட்டி.


'சரி, நொய்லீன் என்றே கூப்பிடு எனக்கென்ன?' என்று எனது மடியிலிருந்த ஷைனுவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு வாய்விட்டுச் சிரித்தாள். அவளது சந்தோஷம் எனக்கும் தொற்றிக் கொண்டது. இப்போது கூட 'பேசாமல் கேட்டுவிடுவோமா' என்று துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு,


'அதெல்லாம் இருக்கட்டும், அப்பாவுக்கு ஒபரேஷன் நிறையச் செலவாயிட்டுதா நொயிலின் ?' என்று கேட்டேன்.


'ஆமாம்! ஒரு மூன்றுதான் செலவாகுமென்டுதான் நினைத்தோம்..ஆனால் கடைசியில ஏழு ஏழரைக்குக்கிட்ட தேவைப்பட்டுட்டுது தெரியுமா.. ஏன் கேட்டீங்க ஷகீப்?'


'ஓ! அதனாலதான் உன்ட நகையெல்லாம் வித்திட்டியா?' என்று வாய்வரை வந்ததை கேட்காமல் விட்டுவிட்டேன்


'என்ன யோசனை?'


'ஒன்றுமில்லை.. நீ எப்படி இந்தச் செலவையெல்லாம் சமாளிக்கிறாய் என்றுதான் யோசித்தேன்..' என்றேன் உண்மையான கரிசனையோடு.


அவள் முகம் சட்டென மலர்ந்தது. உடனே ஷைனுவைப் பார்த்துக் கண்ணடித்தாள். அவர்கள் இருவருக்குமிடையிலே எனக்குத் தெரியாத ஏதோ ஒரு மௌன உரையாடல் போய்க்கொண்டிருப்பது இலேசாகப் புரிந்தது.


'ஷகீப்! நீங்க இன்னமும் என்மேல உண்மையான அக்கறையோடதான் இருக்கிறீங்களா.. சொல்லுங்க?' என் கண்களை நேருக்கு நேராய்ப்பார்த்துக் கேட்டாள் நொயிலின். அவளது விழிகளின் கூர்மையை ஏனோ என்னால்  தாங்கவே முடியாதிருந்தது.


'ம்! ஏன்?' என்றேன் வெகு சுருக்கமாக.


 'அது..வந்து அது உங்களையும் ஷைனுக்குட்டியையும் இப்படித் தனியா விட்டுட்டு போக எனக்கு ஏனோ மனசு வருகுதேயில்ல..'


'..................'


' ஓம்! வாப்பா.. இந்த ஆன்ரி நம்மளோடையே இருக்கட்டுமே வாப்பா! நல்ல ஆன்ரி?'


'யேய் ஷைனு.. பெரிய கிழவி மாதிரி பேசாத..!'


'ஏன் சும்மா அவளை அட்டுறீங்க ஷகீப்? அதோட ஏன் இப்படி நடிக்கிறீங்க ஷகீப்?'  என்று கேட்டவளைச் சட்டென்று அதிர்ந்துபோய் பார்த்தேன்.


'எனக்கு எல்லாம் தெரியும் ஷகீப்! உங்களை பேங்குக்கு அனுப்பிட்டு உங்க ப்ரெண்ட் அஸ்லம் அண்ணா போற வழியில இங்க இறங்கி வந்து எல்லாம் சொல்லிட்டுத்தான் போனாரு தெரியுமா...?'


'அடப்பாவி அஸ்லம்! இதுக்குத்தானா.. என்னை நீ ஞாயிற்றுக்கிழமையில பேங்குக்குப் போய் நோண்டியாக்கி அலைக்கழிய வச்சாய்?' அவனது குறும்பை நினைத்துக் கோபமும் சிரிப்பும் ஒன்றாக வந்தது.


'ஏன் ஷகீப், உங்க மனதில இருக்கிறது எதையும் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லவே மாட்டீங்களா நீங்க?' என்றபடி என்னருகிலேயே வந்து அமர்ந்து கொண்டாள் நொயிலின். அவளது
அழகிய விழிகளிலே கண்ணீர் குளம்கட்டியிருந்தது.


'நீயும் கூடத்தான்... இன்னும் வெளிப்படையாக எதையும் சொல்லவே இல்லையே, மக்கு வயலின்! ' என்று நான் சொன்னதுதான் தாமதம். அதற்குமேல் அவள் ஒரு வினாடியும் தாமதிக்கவில்லை.\



பாய்ந்தோடி வந்து என்னை இருகைகளாலும் அணைத்துக்கொண்டு எனது மார்பிலே தலை புதைத்து ஓ வென்று குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினாள்.  என்னால் அவளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவளது அழுகை இப்போதைக்கு நிற்காது என்பதால் அப்படியே விட்டுக்கொண்டிருந்தேன்.


எனது விழிகளிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.


எங்கள் இருவரையும் பார்த்து நடப்பது புரியாமல் திகைத்துப்போயிருந்த ஷைனுவை என் இரு கைகளையும் நீட்டி நான் அழைக்க அவளும் ஓடிவந்து தனது சின்னஞ்சிறு மருதாணிக் கைகளால் எங்கள் இருவரையும் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.


நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கண்ணீர் சொரிந்து கொண்டிருப்பதையெல்லாம் எதிர்ச்சுவரில் ஒரு சதுரவடிவச் சட்டகத்தினுள்ளேயிருந்து மாறாப் புன்னகையோடு பார்த்துக் கொண்டேயிருந்தார், நொயிலின் மற்றும் ஷைனப்பானு ஆகியோரைப் பெற்றெடுத்தவரும் என்னுடைய வளர்ப்புத் தாயுமாகிய ஸ்டெல்லா அக்கா.


-The End -
- மூதூர் மொகமட் ராபி

Tuesday, August 14, 2012

Kalkudahmuslim.net




Dear Friends,

கல்குடா முஸ்லிம்நெற் எனும் தளத்தில் படித்த ஒரு பத்தி என் மனதைக் கவர்ந்தது. அதை உங்கள் பார்வைக்கும் தருகின்றேன். பாருங்கள்:

- 'Mutur' Mohd. Rafi


'அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்'





நேற்று முன்தினம் (13.08.2012) நண்பகல் 12 மணியளவில் சகோதரர் ரஊப் ஹக்கீம் அவர்கள், என்னைக் காண எனது வீட்டுக்கு வந்தார்கள். கிழக்கு மாகாண சபையில் போட்டியிடும் எந்த வேட்பாளரோடும் வராதீர்கள் என்ற எனது வேண்டுகோளை மதித்து அவர் மட்டுமே என்னோடு உரையாட வந்திருந்தார்.

நாங்கள் என்ன பேசினோம்?

அஸ்ஸலாமு அலைக்கும்
வஅலைக்குமுஸ்ஸலாம்
சுகமா இருக்கிறீர்களா?
எல்லா வருத்தங்களும் சுகமாக இருக்கின்றன. நீங்கள் எப்படி? சென்ற தேர்தலுக்கு வந்தீர்கள். இம்முறை இந்தத் தேர்தலுக்கு வருகிறீர்கள். நமது கட்சி தேர்தலுக்கான ஒரு கட்சி மட்டுமா? கடந்த கால அனுபவங்கள் எனக்கு இதைத்தான் சொல்கிறது.
அவர் அப்படியில்லை காக்கா என்று மறுக்கிறார்.

நானோ நமது கட்சி அப்படித்தான். அரசு தேர்தலுக்கான வேட்புமனுவை கோரி நாற்பது நாட்களின் பின்னரே கடைசி நாளின் நள்ளிரவு 12 மணியளவில் கல்குடாவில் முஸ்லிம் காங்கிரசுக்கான வேட்பாளர்களை தேடி அலைவீர்கள். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு குறைந்தது 24 மணித்தியாலங்களுக்கு முன்னராவது அந்தப் பணியை மேற்கொள்ள மாட்டீர்கள். உங்கள் காலத்தில் நடந்த அனைத்துத் தேர்தலிலும் இதுதான் கதை.

கள்ளமரம், கள்ளமாடு சாய்க்கும் சரியான நேரத்தில் நீங்கள் வேட்பாளர்களை வேட்டையாடுவீர்கள். இது என்ன நடைமுறை என்றே எனக்குப் புரியமாட்டேன் என்கிறது. ஒரு தொகுதி மக்களிடம் அவர்களுக்கான வேட்பாளர்களைப் பற்றி ஒரு சிறு கலந்துரையாடல் கூட நடத்தும் ஒரு ஜனநாயகப் பண்பாடாவது நமது கட்சியிடம் இல்லையா? அல்லது கல்குடாவுக்கு மட்டும் இப்படியான நடைமுறையா? கடந்த காலங்களில் எங்களுக்கான வேட்பாளர்களாக மீட்பர்களாக நீங்கள் அறிமுகப்படுத்தியவர்களின் யோக்கியதைகளைப் பற்றி நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. எல்லாம் உங்களுக்குத் தெரிந்த விடயம்.

 
மாகாண சபைத் தேர்தல் அறிவித்தல் வந்ததும் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முதல் ஐந்து நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நீங்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தீர்கள். கட்சியின் பொதுச்செயலாளர் அருமை நண்பர் ஹஸனலி அம்பாறையில் வந்து நின்று வேறுவிதமாக
சொல்லிக் கொண்டிருந்தார். நீங்கள் இருவரும் நன்கு திட்டமிட்டுத்தான் இந்த நாடகத்தை அரங்கேற்றி பின்னர் மரச்சின்னத்தில் கேட்பதுதான் முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்கான சரியான உபாயம் என்று அந்த முடிவையே காரிய சித்தியாக்கியுளீர்கள்.


கட்சியை விட்டு மாற்றுக் கட்சிக்கு போன எங்களின் அருமை நண்பர்கள் ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் அடாவடித்தனங்களையும் அட்டூழியங்களையும் பொறுக்க முடியாத முஸ்லிம்கள் அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பதே சரியென்று நம்பினால், அத்தகைய மக்களை உங்களை நம்பி வருகின்ற மக்களை தொடர்ந்தும் நீங்கள் துயரத்தில் ஆழ்த்துவது எவ்வளவு பெரிய அநீதி. நான் நூற்றுக்கு நூறு வீதம் அரசியலில் நாணயமாக நடந்து கொள்ளுங்கள் என்று சொல்ல வரவில்லை. முப்பத்து மூன்றில் மூன்றிலொன்று ஒரு சாதாரண சித்தியாவது நமக்கு அமையக் கூடாதா? அதைப் பற்றி நீங்கள் கவலைப்படக் கூடாதா?


இந்த அரசு நமக்கும் நம்மைச் சேர்ந்த சிறுபான்மை மக்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதாக இல்லையே! சிறுபான்மை இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற பொழுது, எவ்வாறு இந்த அரசுக்கு நாம் நமது மக்களின் வாக்குகளை வாரிச் சுருட்டிக் கொடுப்பது?


சராசரி சிங்கள மக்கள் சகல மக்களும் சகல உரிமைகளும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றார்கள். நம்மைப் போன்ற அரசியல்வாதிகள்தான் மக்களைப் பிரித்து மக்களை உணர்ச்சிவயப்படுத்தி ஓட்டுப் பொறுக்கிகளாக மாறி நிற்கின்றோம்.
தலைவரே! ஒரு வருடத்தில் இரண்டு நாட்களாவது முஸ்லிம் தொகுதிகளுக்கு விஜயம் செய்யுங்கள் என்று பல தடவைகள் நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். மக்களின் சுக துக்கங்களில் கலந்து கொள்ளுங்கள். மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறியுங்கள். அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். தொண்டர்களைத் தட்டிக் கொடுங்கள். அறிவுபூர்வமாக அவர்களை அரசியல்மயப்படுத்தி பல இன பல மத மக்கள் வாழும் இந்த தேசத்தில் முஸ்லிம்களும் முஸ்லிம்களுடைய அரசியலும் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்று ஆற்றுப்படுத்துங்கள் என்றெல்லாம் பல தடவைகள் சொல்லியும் அதில் கொஞ்சமும் நீங்கள் கவனம் காட்டவில்லை.
சென்ற மாகாண சபைத் தேர்தலின் போது இங்கே இருவர். இவர்களிருவரும் தோற்றுப்போக மற்றக் கிராமத்தைச் சேர்ந்த இருவர் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். மிகவும் சூழ்ச்சிகரமான திட்டம். முதல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட இருவரும் இன்று செல்லாக்காசாக்கப்பட்டுள்ளார்கள். சென்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஹுஸைனும் லெப்பை ஹாஜியாரும் இன்று விலாசம் தெரியாதவர்களாக மாறியிருக்கிறார்கள். இம்முறை தேர்தலில் இறங்கியுள்ள மூவருக்கும் இதே நிலைதான் எதிர்காலத்தில் வரப்போகிறது.


நீங்கள் நீதமாக நடக்கின்ற தலைவராக இருந்திருந்தால் காத்தான்குடியில் ஒரு வேட்பாளர், ஏறாவூரில் ஒருவர், கல்குடாவில் ஒருவர் என்று மூன்று வேட்பாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டுமென்று பிரசாரம் செய்திருக்க வேண்டும். மனதுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு செயலில் வேறொன்று. எனக்கு எதுவுமே புரியவில்லை தம்பி.


ஒவ்வொரு தேர்தலுக்கும் நீங்கள் வருவதும் மார் தட்டுவதும் அதை நாங்கள் காது குளிரக் கேட்பதும் இப்படித்தான் கடந்த 25 வருடங்கள் எம்மை விட்டுப் போயிருக்கிறது. நாம் பெற்றுக் கொண்டது எதுவுமேயில்லை. உங்களால் முடிந்தால், கிழக்கு மாகாணத்தில் இந்தக் கட்சி செய்த ஒரு பாரிய நன்மையைக் குறிப்பிடுங்கள். ஆகக் குறைந்தது ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரு ஐம்பது மாணவர்களையாவது நமது கட்சி கண்ணியப்படுத்தியதா? நாம் எதைத்தான் செய்தோம்? பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்துங்கள் என்று ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் மக்களிடம் வேண்டுகோள் வைப்பது எத்தகைய பேரம்? மிகத் திறமான நன்கு உழைக்கக்கூடிய ஒரு துறையில் மந்திரியாக வரவேண்டும்.
இந்த அரசின் 18ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு கையுயர்த்தி இந்த நாட்டு அனைத்து மக்களினதும் எதிர்கால வாழ்வை நாம் கேள்விக்குட்படுத்தியிருக்கிறோம். மிகப் பெரும் பாவம்! இதைப் பற்றி நீங்கள் யோசிக்கவில்லையா? அத்தனை பேரும் உங்களை விட்டுப் போனாலும் நீங்கள் ஒரு தனி மனிதராக பாராளுமன்றத்தில் எங்களுக்காக குரல் கொடுத்திருக்க வேண்டுமே.

நேற்று காத்தான்குடி கூட்டத்தில் புத்த பிக்குகளுக்கு எதிராக பெரும் துவேசமாகப் பேசியிருக்கிறீர்கள். அது அரசியலுக்கான பேச்சு என்று எனக்குத் தெரியும். ஆனால் இன்றைய ஊடக சாம்ராஜ்ஜியம் அதை எப்படியெல்லாம் சிங்களப் பிரதேசங்களில் பிரஸ்தாபிக்கும் என்பதை நீங்கள் உணராமல், உரையாற்றிவிட்டு இன்று அதற்காக பகிரங்க மன்னிப்புக் கோரியிருக்கிறீர்கள். சனிக்கிழமை 11.08.2012 தினகரனில் முன்பக்கச் செய்தி. ஏன் இந்த தடுமாற்றம்?


உங்களுக்குத் தெரியுமா? சென்ற உள்ளூராட்சித் தேர்தலின் போது அனுராதபுர மாவட்டத்தில் ஹொரவாப்பொத்தான பிரதேசத்தில் அரசுக்கெதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களத்தில் இறங்கியது. சுதந்திரத்திற்குப் பிறகு காலாதி காலமாக அங்கு சிங்களவர்களும் முஸ்லிம்களுமாகச் சேர்ந்து ஒரு முஸ்லிம் தவிசாளரே பதவியில் இருந்து வந்திருக்கிறார். சென்ற முறை அந்த வாக்குகளை நீங்கள் இரண்டாகப் பிரித்து அந்தப் பகுதியில் இருந்த இன நல்லுறவை குழிதோண்டிப் புதைத்திருக்கிறீர்கள். சென்ற நோன்புப் பெருநாளைக்கு அவர்கள் சாப்பிட்ட மாட்டிறைச்சிக் கறிக்குப் பிறகு இன்று வரையிலும் அங்குள்ள மக்கள் இறைச்சி சாப்பிடவில்லை.


 இம்முறை தேர்தல் பிரசாரத்திற்கு அங்கும் நீங்கள் செல்வீர்களா? இத்தனைக்கும் அந்த மக்களின் தொழிலே மாடு வளர்ப்பதுதான். இன்று அந்த மக்களை நாம் மாடு மேய்ப்பர்களாக மாற்றியிருக்கிறோம். இதுதான் நமது மீட்புப் பணி.


கிழக்கில் அரசாங்கத்திற்கெதிராகவும் ஏனைய இரு மாகாணங்களிலும் அரசாங்கத்தோடு இணைந்தும் இந்தத் தேர்தலில் மு.கா இறங்கியுள்ளது. இதன் மர்மம் என்ன தம்பி? எனக்கே புரியமாட்டேன் என்கிறது. புத்தி கெட்டுப் போச்சுதோ! நானறியேன். இந்நிலையில் என்னால் மு.கா. மேடையில் எப்படித்தான் தம்பி அரசியல் பேசலாம்? எத்தனை காலத்திற்கு நாம் மக்களை முட்டாள்களாக்கலாம்?


அல்லாஹ்வுக்காக, குர்ஆனையும் ஹதீஸையும் விட்டுவிட்டு இந்த நாட்டின் அரசியலை இந்த நாட்டின் வழிமுறையிலே நீங்கள் செய்வது மேலாக இருக்கும். உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் அதுதான் உகந்த வழி.


கடைசியாக அவர் விடைபெறும் தருணம், இவ்வாறு அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.

எங்களுக்கு தனி மாகாணம், தனி அலகு வேண்டாம்.
முதலமைச்சரும் வேண்டாம்
(அது உங்கள் தலைமைத்துவத்திற்கு..?)
பங்களாவும் குளிரூட்டியும் வேண்டாம்.
பக்கத்தில் படுத்துறங்க பத்தினிப் பெண்ணும் வேண்டாம்.
குந்தியிருக்க ஒரு துண்டு நிலமும்
குப்பை கொட்ட ஒரு புறவளவும்
தலைவரே! உங்கள் அரசரிடம் கேட்டு
உங்களுக்கு ஓட்டுப்போடும் இந்த மக்களுக்கு
வழங்குவீர்களா?

- SLM Haniffa

Thanks : Kalkudahmuslim.net

Friday, August 3, 2012

சிறுகதை: மூதூர் மொகமட் ராபி








மணல் தீவுகள்




'ஹலோ! எக்ஸ்க்யூஸ்மீ, உங்கட இந்த நம்பர்ல இருந்து இரவு நிறைய மிஸ்ட்கோல் வந்திருக்கு...யாரு நீங்க...என்ன விசயமா எடுத்தீங்....?' முழுவாக்கியத்தையும் நான் கேட்டு முடிக்கவில்லை.

'அடச்சீ!  நீங்களா...? நீங்கள்ளாம் ஒரு மனிசனா..?' என்றது எதிர்முனையிலிருந்து  ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் குரல். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

'ஹலோ! நீங்க..' என்று ஆரம்பித்த என்னைப் பேசவே விடவில்லை!

' சீ வாயை மூடுங்க! இரவு முழுக்க நானும் என்ட பிள்ளைகளும் கூப்பிட்ட நேரம் போனைத் தூக்காமல் கல்லு மாதிரி இருந்திட்டு.. இப்ப விடியிற நேரம் வந்து என்ன ....க்கு எடுக்கிறீங்கள்..? ஆங்.. இப்ப எதுக்கு எடுத்த நீங்கள்...ஆ?'  என்று அதட்டியது  அந்தக் குரல்.

'ஹலோ.. முதல்ல நீங்க யாரு...? நான் யாரேண்டு நினைச்சுட்டுப் பேசுறீங்க நீங்க...?' என்றேன்  ஆச்சரியம் நீங்காமல்.

'ஆங்! அதெல்லாம் சும்மா நடிக்க வேணாம் சரியா..? இஞ்ச பாருங்க..! எங்கட பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள்..சின்னதுகள்... அதுகளுக்கு படிப்பிக்கிற ஆள் நீங்க! இப்படித்தான் செய்யிறதா...?' என்று பட்டாசு வெடித்தது.

அடுத்த முனையிலே பேசும் பெண்குரலை என்னால் அடையாளங் காணமுடியவில்லை என்பதால் அந்தப் பெண்குரல் படபடவென்று பொரிந்து கொண்டிருப்பதை வேறுவழியின்றி கேட்டுக்கொண்டேயிருந்தேன்.

'......இந்தா! இரவு அதுகள்ற போனைப் பாத்திட்டு சரியான அடி அதுகளுக்கு. பாவம் உங்களால அதுகள் ரெண்டும் எனக்கிட்ட அடி வேண்டிட்டு அழுதழுது இந்தா..ஸ்கூலுக்கும்போக எழும்பாமப் படுக்குதுகள் சந்தோஷமா உங்களுக்கு? சே!'

என்ன விடயமென்று எனக்கு தலைகால் புரியவேயில்லை.  ஆனால் ஏதோ கைத்தொலைபேசியுடன்  தொடர்பான ஒரு விபரீதம் அந்தப் பெண்ணுக்கு நடந்திருக்கின்றது என்பதும் என்னை யாரோவென்று நினைத்து தவறுதலாக  ஏசிக்கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் இலேசாகப் புரிந்தது. செல்போனை கட்டிலில் போட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது விடாமல் கீச்சுக்குரலிலே வசைபாடியவாறேயிருந்தது.

நான்  மிக அண்மையில்தான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்து வெளியேறியுள்ள 26 வயது இளைஞன். இன்னும் அரசாங்க வேலை எதுவும் கிடைக்காததால் இங்கே கிழக்கின் தலைநகரில் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு மசூதி ஒன்றின் வாடகை அறையில் தங்கியிருந்து நகரிலுள்ள தனியார் கல்வி நிலையங்கள் பலவற்றிலே விஞ்ஞானபாடம் கற்பிக்கும் ஒரு பகுதிநேர ஆசிரியராக இருந்து வருகின்றேன். வார இறுதியிலே மட்டும் 40 கிலோமீற்றர் தள்ளியிருக்கும் ஊருக்கு ஒருதடவை போய்விட்டு மறுநாளே திரும்பி வந்து விடுவது எனது வழமை.


நேற்றைய தினம் எனது ஊரைச்சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடல் குளிக்கச்சென்று மூழ்கி உயிரிழந்த விபரீதம் பற்றி வானொலிச் செய்தியில் கேட்டேன். செய்தியிலே குறிப்பிடப்பட்ட பெயரையும் வயதையும் வைத்து அவர்கள் எனது தாய்வழி தூரத்து உறவினர்கள் என்பதை அறிந்ததும் பதறியடித்து அறையைப் பூட்டிவிட்டு ஊருக்கு பஸ்ஸேறிச் சென்றுவிட்டேன்.



மூன்று மரணவீடுகளிலும் துக்கம் விசாரித்து ஆறுதல்கூறி இயன்ற ஒத்தாசைகளையெல்லாம் புரிந்துவிட்டு இன்று அதிகாலையிலேதான் மீண்டும் அறைக்குத் திரும்பியிருந்தேன். பிரயாணக் களைப்புடன் கட்டிலில் விழுந்து கிடந்தபோது  இடுப்பினருகே ஏதோ உறுத்தியது. அதை எடுத்துப் பார்த்தால் முந்தியதினம் மரணவீட்டுக்குச் செல்லும் அவசரத்திலே நான் மறந்துபோய் அறையிலேயே விட்டுச் சென்ற கைத்தொலைபேசி. மரணவீட்டின் சோக நிகழ்வுகளிலே செல்போனை முற்றாக மறந்துவிட்டிருந்த எனது ஞாகபசக்தியை நொந்துகொண்டேன்.


இந்த ஊரிலே எனக்குள்ள ஒரே ஆத்ம நண்பன் இந்த செல்போன் என்பதால் அதை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தபடி அதன் ஒளிரும் திரையைப் பார்த்தபோது இரவு நான் எடுக்கத்தவறிய பல அழைப்புகள் (missed calls) திரையிலே வரிசைகட்டிக் கிடந்தன. அவற்றிலே ஒரு புதிய இலக்கத்திலிருந்து மட்டும் ஏராளமான அழைப்புகள் கிடப்பது கண்டு வியந்துபோய் அந்த இலக்கத்தை அழுத்தி அழைப்பை ஏற்படுத்தி விசாரிக்கப்போய்தான் இதுவரை நான் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் அந்த அதட்டலும் வசைபாடலும்...!

அந்தப் பெண்மணி என்னை விடுவதாக இல்லை. மீண்டும் மெதுவாக போனைக் காதில் வைத்தேன்

'.....இப்படியான வேலைகள் செய்வீங்களென்டு கனவிலயும்...நான் நினைக்கேல்ல மாஸ்டர்....' என்று பொரிந்து கொண்டிருந்த அந்தப் பெண் சிறிது இடைவெளி விட்டார்.  ஆனால் நிச்சயம் அது என்மீது கொண்ட பரிதாபம் காரணமாக இருக்காது. மூச்சு வாங்குவதற்காகவோ அல்லது தொண்டையைச் செருமிக் கொள்வதற்காகவோதான் இருக்க வேண்டும்.


'ஹலோ அக்கா! கொஞ்சம் நிப்பாட்டுங்க!'  சட்டென்று கிடைத்த இடைவெளிக்குள்ளே அதிரடியாகப் புகுந்து அதட்டல்போட்டு அவரின் சரவெடியை ஒருவாறு நிறுத்தினேன்.


' அக்கா, நீங்க இப்ப பத்து நிமிஷமா என்ட செலவிலதான் எனக்கே ஏசிக்கொண்டிருக்கிறீங்க  தெரியுமா?  தயவு செய்து கொஞ்சம் நீங்கள் யாரு....இப்ப என்ன விசயம் சம்பந்தமா ஏசிக்கொண்டிருக்கிறீங்க என்டு சொல்லிப்போட்டு ஏசுறீங்களா?..' என்றதும் சிலவினாடிகள் மௌனத்தின் பின்பு மறுமுனையின் தொடர்பு அறுந்து போனது.


' அதட்டலுக்கு பயந்திட்டாரா  அல்லது திரும்ப ரோஷத்திலே தன்னுடைய செலவில்  ஏசப்போகிறாரா புரியவில்லை.... இதென்ன வம்புடா இது?' என்று போனை உடனே அணைத்துச் சட்டைப்பையினுள் போட்டுக் கொண்டேன்.
மனம் நிம்மதியில்லாமல் தவித்தது.


அறையை விட்டு வெளியேறி பள்ளிவாசலை நோக்கி நடந்தேன். குழாய் நீரில் முகம், கை கால்களைச் சுத்தம் செய்தபின் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு தொழுகைக்கூடத்தின் ஒருபக்கச் சுவரோரமாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன். இப்போது மனம் சிறிது லேசாக இருந்ததுபோல உணர்ந்தேன்.


'யார் இவ...? ஏன் இப்படி ஒரேயடியாகத் துள்ளுறா..அப்படி என்னதான் நடந்திருக்கும்?' என்று நிதானமாக யோசித்தபோதுதான் அந்தப் பெண் போனிலே சற்றுமுன்பு கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.


'இஞ்ச பாருங்க எங்கட பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள்... சின்னதுகள்' மற்றும் 'படிப்பிக்கிற ஆள் நீங்களே இப்படிச் செய்யலாமா?' என்ற அந்தப் பெண்ணின் வார்த்தைகள் எனக்குள் பல்வேறு யூகங்களையும் தோற்றுவித்தது. அப்படியானால்...அந்தப் பெண்மணி என்னிடம் படிக்கின்ற யாரோ மாணவிகளின் தாயாகத்தான் இருக்க வேண்டும். எத்தனை பேர்தான் என்னிடம் படிக்கின்றார்கள்... அதிலே யாராக இருக்கும்? ஆனால் நான் அவர்களிலே யாருக்கும் என்னுடைய கைத்தொலைபேசியின் இலக்கத்தை கொடுத்திருக்கவில்லையே..'




சட்டென்று ஏதோ ஒரு பொறிதட்டவே மீண்டும் கைத்தொலைபேசியை இயக்கி ஆராயத் தொடங்கினேன். எனது விரல்கள் குறுஞ்செய்திக்குரிய உள்பெட்டியை (inbox) ஐச் சொடுக்கியதும் அது ஏறத்தாழ நிறைந்து கிடப்பது தெரிந்தது. அதுவும்கூட ஒரு குறிப்பிட்ட இலக்கத்திலிருந்து வந்த குறுஞ்செய்திகளால்தான் வழிந்து கொண்டிருந்தது.  அந்த இலக்கத்தை உற்றுப் பார்த்தவுடன்  திடுக்கிட்டேன்.


ஆம், அது சற்றுமுன் என்னை உண்டு இல்லையென்று ஆக்கிய அந்தப் பெண்ணின் இலக்கம்!

 "ஆ! இதென்ன கூத்து இது?" என்று பள்ளிவாசலினுள் இருக்கின்றேன் என்பதையும் மறந்து வாய்விட்டு கத்தியே விட்டேன். சற்றுத் தள்ளி ஓரமாக அமர்ந்து குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த மசூதியின் முஅத்தினார் (தொழுகை உதவியாளர்) என்னைச் சந்தேகமாய் ஒருதடவை பார்த்துவிட்டு மீண்டும் ஓதலானார்.


தொலைபேசித் திரையிலிருந்து கண்ணை விலக்காமலே பள்ளிவாசலை விட்டு இறங்கி வெளிமுற்றத்திற்கு வந்தேன். காகங்கள் கரைந்து கொண்டிருக்க வானம் வெளுத்திருந்தது. பள்ளி வளாகத்திலே இரண்டொரு கார்களும் வேன்களும் சில லொறிகளும் தரித்துக் கிடந்தன. அவற்றின் முன்புறக் கண்ணாhடிகளிலே இரவு பெய்தபனி படிந்து கிடந்தது. பிரதான வீதியில் வாகனங்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டிருக்க பள்ளிவாசலுக்கு எதிரேயிருந்த தேனீர்க்கடையிலிருந்து நாகூர் ஹனீபாவின் இஸ்லாமிய கீதம் ஒன்று காற்றில் பரவிவந்தது.


முற்றத்திலிருந்த மணல் குவியலின் மீது அமர்ந்து கொண்டேன். மனம் காரணமில்லாத பதட்டத்திலிருந்தாலும் நிதானத்தை வரவழைத்துக் கொண்டு  அந்தக் குறுஞ்செய்திகளை அவை வந்த ஒழுங்கிலேயே அடியிலிருந்து ஒவ்வொன்றாகத் திறந்து படிக்கலானேன்.



' ஸேர், நீங்க சாப்பிட்டீங்களா...?' என்று தமிழ் எழுத்துகளிலே விசாரித்தது முதலாவது குறுஞ்செய்தி. எனக்கு வரும் குறுஞ்செய்திகள் பொதுவாக ஆங்கிலத்தில் மட்டும்தான் வருவதனால் எனது தொலைபேசியிலே தமிழ் எழுத்துகளில் செய்தி அனுப்பும் வசதியை நான் பெற்றிருக்கவில்லை. 
யோசனையுடன் அடுத்த செய்தியைப் பார்த்தால், 'சேர் நீங்க நோம்பு பிடிக்கிறீங்களா?' என்று கேட்டது. 'இரவு வந்தனங்கள் சேர்!' என்றது ஒன்று. 'ஏன் சேர் தாடியை எடுத்திட்டீங்க?' என்றது மற்றொன்று.. 'சேர் விஞ்ஞான டெஸ்ட்டில நீங்க சொன்ன கேள்விகள் வந்தது!' இப்படியே சாதாரண சுகவிசாரிப்புக்களாக ஆரம்பித்து மெல்ல மெல்ல... 'ஏன் சேர் இப்படியெல்லாம் அசிங்கமாய பதில் message போடுறீங்க?' என்றும் 'சேர் மரியாதை மிக முக்கியம்' என்றும் பின்பு, 'சேர் நீங்க நக்கல் அடிக்கிற மாதிரி இருக்கு..' என்று தொடர்ந்து ஒருநிலையிலே, 'என்ன நீங்க ஓவராத்தான் போறீங்க?  கூடாத மெஸேஜ் அனுப்பினால் நாங்களும் ஏசித்தான் மெஸேஜ் அனுப்புவோம்' என்றெல்லாம் செய்திகளின் தன்மை வலுக்கத் தொடங்குவதை உணர்ந்தேன். மனம் பதற்றமாகி பரபரப்போடு அத்தனை செய்திகளையும் திறந்து படிக்கப் படிக்க  எனது முகம் பாறையாய் இறுகிப்போனது. சிறிதுநேரம் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே குந்தியிருந்தேன்.


'என்ன மாஸ்டர் தம்பி, ஊருக்குப்போய் வந்தாச்சா?' என்று கேட்டபடி தொழகைக்கூடத்திலிருந்து கீழே இறங்கி வந்து வேகமாக நடக்க ஆரம்பித்தார்  முஅத்தினார்.

'ஓ! ஓம் நானா..! ஸஹர் செஞ்ச கையோட பஸ் ஏறினதுதான்' என்று பதில் கூறினேன்.

வயோதிபரான அவருக்கு இரத்த அழுத்த வியாதி இருப்பதால் விடிந்ததும் பள்ளிவாசல் வளாகத்தைச் சுற்றிச் சில வளையங்கள் நடப்பது வழமை. அன்றைய தினம் பள்ளிவாசல் வளாகத்தினுள்ளே லொறிகள், வேன்கள், கார்கள் என்று அதிகமான வாகனங்கள் தரித்து நின்றிருந்ததால் அவரது நடைக்குத் தடங்கல்கள் அதிகமிருந்தன. இதனால் அவர் சற்றுச் சிரமப்பட்டே நடைப் பயிற்சியைச் செய்து கொண்டிருந்தார். அவர் நடக்கும் திசையிலே சற்றுத் தூரத்தில் நின்றிருந்த ஒரேமாதிரியான இரு அழகான புதிய கார்கள் என் கண்ணில் பட்டன.  அருகருகே நின்றிருந்த அந்தக் கார்களில் ஒன்று அடர்பச்சை நிறத்திலும் மற்றையது வெளிர் மஞ்சள்  நிறத்திலும் இருந்தன.

அப்பொழுதுதான் எனது மூளையிலே சட்டென ஒரு மின்னல் பளிச்சிட்டது.

ஒருவேளை போனில் ஏசியது அந்த 'ப்ளக் அண்ட் வைற்'ஸின் தாயாக இருக்குமோ? அவர் கதைத்த விடயங்களையும் எனக்கு வந்திருந்த மெஸேஜ்களையும் பார்க்கும்போது நிச்சயம் எனது அனுமானம் சரியென்றுதான் தோன்றியது.


நகரை அண்டியுள்ள கிராமம் ஒன்றிலே நான் கற்பிக்கும் தனியார் டியூட்டரியில் ஒன்பதாம் வகுப்பிலே படிக்கும் இரட்டைச் சகோதரிகளான இரு மாணவிகளைத்தான்  'ப்ளக் அண்ட் வைற்ஸ்'  என்பது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இருவரையும் காண்பித்து இரட்டைச்சகோதரிகள் என்று தெரியாதவர்கள் யாரிடமாவது சொல்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைக் கேட்பவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
அந்தளவுக்கு அந்த இரு பெண்பிள்ளைகளிடமும் நிறம் தோற்றம் குணம் முதற்கொண்டு அத்தனையிலும் வித்தியாசங்கள்தான் அதிகம். ஆம், ஒருத்தி பால்போல பளிச்சென்று இருந்தால் மற்றவள் கன்னங்கரேல் கருங்காலி நிறத்திலிருப்பாள். ஒருத்திக்கு அழகான பெரிய விழிகள் என்றால் மற்றவளுக்கு யானைக்குப்போல சிறிய கண்கள். ஒருத்தி என்னுடைய பாடத்தில் படு கெட்டிக்காரி. ஆனால் மற்றவளோ சாதாரண ரகம். ஒருத்தி வெகுநிதானமானவளென்றால் மற்றவள் படு பரபரப்பானவள். அப்படியொரு விநோதமான சேர்க்கையுள்ள இரட்டையர்களாக அவர்களை இறைவன் படைத்திருந்தான். அதனால்தான் அவர்களை 'ப்ளக் அண்ட் வைற்ஸ்' என்பது. அப்படிச் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும்.


இரண்டு பேருமே ஒரே வகுப்பில் இருப்பதால் கற்பித்தலின்போது வகுப்பறைச் சூழலைக் கலகலப்பாக்குவதற்காக இரட்டையர்கள் இருவரையும் அவ்வப்போது வேடிக்கையாக நான் கேலிசெய்வதுமுண்டு. நான் மட்டுமல்ல, அவர்களது சக வகுப்பு மாணவ மாணவிகளிலிருந்து டியூட்டரி நடத்துனர் வரையில் அவர்கள் இருவரையும் 'பென்குயின்ஸ்'  மற்றும் 'பன்டா பியர்ஸ்' என்றெல்லாம் கேலி செய்வது வழமைதான்.
 


விஞ்ஞான பாடத்தில் வரும் சுவாரஸ்யமான விடயங்களுடன் தொடர்புபடுத்தி நான் கேலி செய்வதால் வெளிப்படையாக என்னைச் செல்லமாகக் கோபித்துக் கொள்வார்களாயினும் அந்த இருவருக்கும் என்மீது  ஒரு தனிப்பிரியமிருக்கத்தான் செய்தது. 'சாப்பிட்டீங்களா சேர்?' என்றோ 'இன்டைக்கு ஸ்கூலுக்குப் போகும்போது உங்களைக் கண்ட நாங்கள் ஸேர்!' என்றெல்லாம் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள் அந்த இருவரும். நானும் அவர்களின் அன்பைப் புரிந்தவனாக பொறுமையாகப் பதில் கூறுவதுண்டு.


அந்தப் பெண்கள் ஆசிரியர்கள் எல்லோருடனும் மேலதிக அக்கறையுடன் பழகுவதற்கு அவர்களிருவரின் தாயின் கதைதான் காரணம். அதை ஒருநாள் டியூட்டரிப் பொறுப்பாளர் என்னிடம் விபரமாகக் கூறி முடித்தபோது ஏதோ 70 களில் வெளிவந்த ஒரு பழைய தமிழ் அல்லது ஹிந்தி திரைப்படத்தின் கதையைக் கேட்பது போலிருந்தது.


அந்தத் தாய் ஒரு பாடசாலை மாணவியாக இருந்த காலத்திலே பருவக்கோளாறு காரணமாக  தனது பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக ஓர் இளைஞனைக் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி அவனை மணமுடித்திருந்தாராம். மனமுதிர்ச்சியற்ற வயதிலே திருமண வாழ்வை ஆரம்பித்த காரணத்தினாலோ என்னவோ இருவருக்குமிடையே இருந்த இளம்வயதின் கவர்ச்சிகள் தீர்ந்ததும் அந்தத் திருமண பந்தம் சில மாதங்களுக்குள்ளேயே முடிவுக்கு வரவேண்டியதாகிப்போனதாம். 



தன்னை நம்பி வீட்டைவிட்டு வந்தவளைக் கர்ப்பிணியாக்கிய அந்த பொறுப்பற்ற இளைஞன்  அவளைக் கைவிட்டு எங்கோ சென்றுவிட  நிராதரவானாள் நமது இரட்டைகளின் தாய்.  பெற்றோரிடமும் திரும்பிச் செல்ல முடியாத நிலையிலே வேறுவழியின்றி தற்கொலைக்கு முயன்றவளை அதிஷ்டசவமாக பாடசாலை ஆசிரியையான ஒரு வயது முதிர்ந்த கத்தோலிக்கப் பெண்துறவிதான்  காப்பாற்றியிருந்தாராம்.



நமது 'ப்ளக் அன்ட் வைற்ஸ்' பிறக்கும் வரையிலே தனது ஆலய விடுதியிலே அடைக்கலம் கொடுத்திருந்த அந்தப் பெண் துறவி, தொண்டு நிறுவனமொன்றின் உதவியோடு அவர்களுக்கு வீடு ஒன்றைக் கட்டித்தந்ததோடு தான் மரணமடையும் வரை தாயையும் இரட்டைக் குழந்தைகளையும் தனது பராமரிப்பிலேயே வைத்திருந்தார்.



இதனிடையே ஒருநாள் மனைவியைக் கைவிட்டுச்சென்ற இளைஞன் மனம் திருந்தி தனது மகள்களாகிய இரட்டைச் சிறுமிகளைப் பற்றியும் கேள்வியுற்று அவர்களைக் காண திரும்பி வந்திருந்தானாம்.  ஆனால் துரதிஷ்டவசமாக அவன் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே  சந்தேகத்தின்பேரில் சீருடைக் காவலர்களால் கொண்டு செல்லப்பட்டுவிட்டானாம்.  அதன்பிறகு அவனைப்பற்றிய தகவலே இல்லாதிருந்ததாம். எவ்வளவோ முயன்றும் அவனை எங்கே கொண்டு போனார்கள் என்று அறியவே முடியவில்லையாம். நமது நாட்டின் காணாமல் போனோர்களின் பட்டியலில் அவனும் இடம்பிடித்து விட்டானாம்.


சூழ்நிலை காரணமாக அந்தத் தாயும் சகோதரிகளும் வறுமையுடன் போராடியே வளர்ந்திருந்தார்களாம். அதன் பிறகு பல வருடங்களாக கூலிவேலைகளைச் செய்து தனது இரு பெண்களையும் வளர்த்து வந்தாராம் அந்தப் பெண். அவர்களின் நிலைமையை அறிந்துதான் எங்கள் டியூட்டரி பொறுப்பாளர் அவர்களிடம் கட்டணம் கூட அறவிடுவதில்லையாம்.



நீண்ட காலமாக தந்தை என்ற ஆணின் துணையும் அரவணைப்பும் இன்றியே வாழ்ந்து வருவதால்தான் அந்த இரட்டைச் சகோதரிகள் தம்மீது அக்கறையுடன் கற்பிக்கும் ஆண் ஆசிரியர்களிடம் அதீத அன்புரிமை பாராட்டுகின்ற இயல்புகளைச் சற்றுத் தூக்கலாகவே கொண்டிருக்கின்றார்களாம் என்று அவர்களின் கதையைக் கூறி முடித்தார் பொறுப்பாளர்.


அந்த மாணவிகளின் மிகை  இயல்புகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பாடங்களைக் கற்பித்து முடிக்கவேண்டிய அவசரத்தில் இருக்கும் எனக்கு சிலவேளைகளிலே தொல்லையாய் கூட அமைந்து விடுவதுண்டு. அப்படியான வேளைகளிலே இலேசாக அவர்களிருவரையும் கடிந்து கொண்டும் விடுவேன். அப்படி ஏதாவது செய்துவிட்டால் போதும் இரட்டைச் சகோதரிகளின் முகங்கள் வெட்டிப்போட்ட வாழையிலைபோல துவண்டு தொங்கி விடும். வீட்டுக்குப்போனதும் அழப்போகும் அழுகையை தங்களது கண்களிலே அடைகாத்து வைத்திருப்பார்கள் இருவரும்.



மீண்டும் பழைய நிலையை அடைய சில நாட்களாகும். அதுவரை என்னோடு சிறு ஊடல்கொண்டு பேசாமல் திரிவார்கள். சிலவேளைகளிலே வகுப்பிலே கண்கள் கலங்கி அழுவதும்கூட நடக்கும். நானும் அதைக் கவனிக்காதது போலவே இருந்து விடுவேன். உண்மையிலேயே எனக்கிருக்கும் வேலைப்பளுவில் இதையெல்லாம் கவனிக்க முடிவதில்லையாயினும் அவர்களது குடும்ப நிலையை அறிந்திருந்ததால் மனதின் சிறுமூலையிலே மெல்லிய அனுதாபம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் கூடிய விரைவிலேயே அந்தக் கெட்டிக்காரப் பெண்களை அவர்களது படிப்பை நினைத்தாவது ஏதாவது உயர்வாகப்பேசி இயல்பு நிலைக்குக் கொண்டுவந்து விடுவேன்.

 அந்த இரட்டைச் சகோதரிகளிடம் ஏன் நான் இப்படியெல்லாம் அனுதாபமாய் நடந்து கொள்கின்றேன் என்பது எனது வகுப்பிலே கற்கும் பல மாணவர்களுக்கும் சில மாணவிகளுக்கும் புரிவதில்லை. இதனால் அவர்களில் சிலர் துணிந்து, "சேர், நீங்க 'ப்ளாக் அண்ட் வைட்ஸ்' க்குப் பயங்கர ஸப்போர்ட்தானே ஸேர்..?'" என்று செல்லக்கோபத்தோடு என்னைக் கலாய்ப்பதுமுண்டு.


உடனே நானும் கடுமையான சிந்தனை வயப்பட்டதுபோல பாசாங்கு செய்து, "பிள்ளைகளே.. கவனியுங்கள்!  ஒரு ஆசான் எனப்படுபவர் அவரது மாண்புமிகு மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் பொதுவானவர் என்று இலைகுழை ஆடையுடுத்து தாடிமீசை வைத்திருந்த நமது முன்னோர்களாகிய காட்டுமிராண்டிகள் கல்வெட்டுக்களிலே எழுதிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள், தெரியுமோ?"  என்று திடீரெனச் செந்தமிழில் பேசி அவர்களைப் பதிலுக்குக் கலாய்ப்பேன்.

உடனே வகுப்பே சுவாரஸ்யமாகிவிடும்.

"ஸேர், எனக்கொரு சந்தேகம்! கல்வெட்டு எழுதும்போது பிழைவிட்டா எதை வச்சு சேர் அழிச்சிருப்பாங்க...?'" என்பான் ஒரு வால் பையன்.

"அதுதானே...எதை வச்சு அழிச்சிருப்பாங்க?"  என்பேன் நானும் உண்மையான சந்தேகத்தோடு.

"அழிச்சிருக்கவே மாட்டாங்க ஸேர்!" என்பாள் ஒருத்தி.

"ம்ம்..அப்படியா சேதி? ஆகா! எப்பிடி இளவரசியே இவ்வளவு ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறீர்கள்?"  என்பேன் நானும் நையாண்டி குறையாமல்.

"அதுவந்து ஸேர்.. பிழைவிட்டா மட்டும் என்ன, பின்னால வாறவங்களுக்குப் புரியவா போகுது என்டு நினைச்சி பேசாம விட்டிருப்பாங்க, ஸேர்"  என்பாள் அவள். 

மொத்த வகுப்புமே சிரிசிரியெனச் சிரித்து கலகலப்பாகி விடும்!


இப்படியாக அனைவரையும் சமாளித்தவாறு சுவாரசியமாப் போகும் எனது விஞ்ஞானபாடம். தவிர,  அந்த இரட்டையர்களை சக மாணவிகளோ மாணவர்களோ ஒருபோதும் கோபித்ததுகூடக் கிடையாது என்றால் நம்புவீர்களா?  அந்தளவுக்கு தங்களது நல்ல இயல்புகளாலும் திறமையாலும் அனைவரது அபிமானத்தையும் பெற்றிருந்தார்கள் அந்த 'ப்ளாக் அண்ட் வைற்' சகோதரிகள்.

"என்ன தம்பி... தனிய.. இருந்து...ஹா..ஆ!..இப்பிடி.. மனசுக்குள்ள சிரிக்கிறீங்க..?" என்றபடி மீண்டும் என்முன்னே வந்து நின்றார், முஅத்தின்.  நடைப்பயிற்சியால் மூச்சு வாங்கியது அவருக்கு.

"ஏன் நானா இப்படி நோன்பையும் புடிச்சிக்கிட்டு உடம்பை வருத்திறீங்க?"

"என்ன தம்பி செய்யுறது போன க்ளினிக்கில டாக்குத்தர் சொல்லிப்போட்டான் ஒவ்வொரு நாளும் காலையில நடக்காட்டி...ங்ஆ!  அதாலதான் நோம்பெல்லாம் பார்க்க ஏலாது வாப்பா..! அதுசரி போன காரியம் என்னாச்சு?" என்று கேட்டார்.

கடல் குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய ஊர் இளைஞர்களின் விபரத்தை பொறுமையாகச் சொல்லி முடித்தேன்.

"யா அல்லாஹ்! இந்த நோம்பு காலத்துலயும் இப்பிடித் தோணியை எடுத்திட்டுப் போய் கடல்ல விளையாடிச் சாவணுணுமா..?  யார்ர புள்ளைகள் வாப்பா..அது? சின்னப்பயலுவளா?"

"ஆங்..மூணுபேரும் தூரத்துச் சொந்தக்காரங்கதான் நானா. ஒருவன் ரஜீஸ், 28 வயசு..மற்றவன் ஸஹீர், மிஸ்பா ரெண்டுபேருக்கும் 19 வயசு இந்த வருஷம் ஏயெல் எடுக்கிற பொடியன்கள்..!"

"அப்பிடியா பாவமே?"  என்ற முஅத்தின் திடீரெனத் திரும்பி, "என்ன பேர் வாப்பா சொன்னீங்க..?"  என்று ஆச்சரியமாய்க் கேட்டார்.

"ஏன் நானா?" என்றேன் அவரது ஆச்சரியத்தைப் பார்த்து. "இல்ல..இல்ல எங்கயோ கேள்விப்பட்ட பேரு மாதிரி இரிக்குதேண்டுதான் பாத்தன்.." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவரை அப்போது பார்த்து பள்ளிவாசலில் நின்றிருந்த வாகனம் ஹோன் அடித்துக் கூப்பிடவே அவசரமாகச் சென்று விட்டார் அவர். முஅத்தின் வேலைகளோடு பள்ளிவாசலில் தரித்து நிற்கும் வாகனங்களின் பண வசூல் வேலைகளையும் அவரேதான் கவனித்துக் கொள்வதால் எப்போதுமே இப்படித்தான் பாவம். ஓயாத வேலை அவருக்கு.

பள்ளிக்கிணற்றடிக்குச் சென்று குளித்துமுடித்து, பரீட்சைத்தாள் ஆயத்தம் செய்வதற்காக அறையைப் பூட்டிக்கொண்டு பொதுநூலகத்திற்குப் புறப்பட்டேன். பள்ளிவாசல் வளாகத்தை விட்டு வெளியிலிருக்கும் பஸ்தரிப்பில் நான் காத்து நின்ற போது அந்த வழியாகச் சென்ற இரு மாணவிகள், "குட்மோர்னிங் ஸேர்" என்று கூறியவாறு என்னைக் கடந்து சென்றார்கள்.

உடனே, மீண்டும் எனக்கு அந்த 'ப்ளக் அன்ட் வைற்ஸ்'  நினைவுக்கு வந்து விட்டார்கள். இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாளலாம் என்றே புரியவில்லை. 'சே! அவர்களுடைய போனிலிருந்து என்னுடைய போனுக்கு வந்த செய்திகளுக்காக எனக்கு ஏன் அந்தத் தாய் அப்படி ஏசினார் என்பதுதான் இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.

அந்தப் பெண்ணை மீண்டும் போனிலே அழைத்துப் பேசிப் பார்த்தாலென்ன என்று கூட யோசித்தேன். ஆனால் சும்மா கிடந்ததை உசுப்பேற்றி விட்டது போலாகி விடுமோ..? என்றும் பயந்தேன். எதற்கும் கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்று தீர்மானித்துக் கொண்டவனாக வந்த பஸ்ஸிலே ஏறினேன்.

***

பொதுநூலகத்தின் உசாத்துணைப் பகுதியில் நான் பரீட்சைக்குரிய வினாத்தாள் தயாரிப்பிலே மும்முரமாக இருந்தேன்.  ஆனாலும் அப்போது கூட அதிகாலையிலே என்னை ஏசிய முகம் தெரியாத பெண்ணின் எண்ணமாகவே இருந்தது.  ஏதோ ஒரு விபரீதம் நடக்கக் காத்திருப்பது போலவே மனம் அமைதியின்றி உழன்றது.



'இரவெல்லாம் பூட்டிய அறைக்குள்ளே கிடந்த போனுக்கு அவர்களது போனிலிருந்து  மெஸேஜ்கள் வந்திருக்கின்றது என்றால்  என்னை ஏன் ஏசுகின்றார்கள்..?'  என்ற யோசனை மீண்டும் மீண்டும் என்னைக் கொன்று தின்று கொண்டிருந்தது. அந்த மெஸேஜ்களிலே கூட... 'ஏன் சேர் இப்படியெல்லாம் அசிங்கமாய் பதில் எழுதுகிறீர்கள்?' என்றும் 'சேர் மரியாதை மிக முக்கியம்' என்றும் இருந்தது நினைவுக்கு வந்தது. அப்படியானால்... எனது போனிலிருந்தும் மெஸேஜ் போயிருக்க வேண்டும் என்றுதானே அர்த்தம்?.. ஆனால் யாருமில்லாத அறைக்குள்ளே கிடந்த போனிலிருந்து எப்படி மெஸேஜ் போகும்..?' என்று யோசித்தவாறு வெகுஇயல்பாக எனது போனிலுள்ள send message பகுதிக்குச் சென்று பார்த்தேன்.

அதுவும் நிறைந்துதான் கிடந்தது.

சரி என்று என்னால் அனுப்பப்பட்டிருந்த பழைய செய்திகளை பார்க்கலாம் என்று சொடுக்கியதுதான் தாமதம் மைகாட்! என் கண்களையே நம்ப முடியவில்லை. அந்தப் பெண்ணின் இலக்கத்திற்கு மட்டும் 19 மெஸேஜ்கள் - அவை அத்தனையும் வாசிக்கவே கூசும் படுஆபாசமான கொச்சையான மெஸேஜ்கள்-  அனுப்பப் பட்டிருந்தது தெரியவந்தது. அதுவும் நேற்றிரவு நான் மரணவீட்டிலே இருந்த சமயத்திலே!

அப்படியானால்.. நேற்று மதியம் நான் மறந்துபோய் அறையிலே விட்டுச்சென்ற செல்போனை யாரோ கையாண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்..?

ஆனால் அது.. எப்படி?...எப்படிச் சாத்தியம்?

பூட்டியிருந்த அறைக்குள்ளே வந்து  இதை யார் செய்திருக்க முடியும்? அப்படி வந்தவர்கள் ஏறத்தாழ எண்பதினாயிரம் ரூபா பெறுமதியான இந்த வெளிநாட்டு போனைத் திருடிச் செல்லாமல் ஏன் இப்படி எனது மாணவிகளின் இலக்கத்துக்கு ஆபாசச் செய்தி அனுப்பியிருக்க வேண்டும்..? அப்படியானால் எனக்கு வேண்டுமென்றே கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரவேண்டுமென்று நினைக்கும் யாரோ இங்கே இருக்கின்றார்களா..? எனக்குப் பயமும் பிரமிப்புமாகச் சேர்ந்து தலையைச் சுற்றியது. சிறிதுநேரம் பிரமை பிடித்தவன் போல அப்படியே அமர்ந்திருந்தேன்.

'இல்லை..! இதை இப்படியே விடக்கூடாது' உடனடியாகக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற ஆவேசம் உண்டாகவே எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு பஸ்ஸைப் பிடித்து மீண்டும் நான் தங்கியிருந்த பள்ளிவாசல் வாடகை அறைக்கு வந்து சேர்ந்தேன். அந்தப் பிரதேசமே ஆள் நடமாட்டம் குறைந்து அமைதியாயிருந்தது. அறையைத் திறக்க முன்பு அதன் கதவையும் பூட்டுகளையும் நோட்டமிட்டேன். அவை எல்லாமே வேறுயாரும் திறக்கமுடியாதளவுக்குப் பாதுகாப்பாகத்தான் இருந்தன.


என்னைத் தவிர, முஅத்தினாரிடம் மட்டும்தான் இந்த அறைக்குரிய மற்றொரு திறப்பு உள்ளது. அதுவும் நானேதான் ஒரு முற்காப்புக்காக அவரிடம் கொடுத்து வைத்திருந்தது. 

அப்படியானால் முஅத்தின் நானாவைத்தான் சந்தேகப்படுவதா, சே! அவருக்கு இப்படிச் செய்ய வேண்டிய தேவை என்ன? அத்தோடு சாதாரண தொலைபேசியே அதிகம் பாவித்தறியாத வயோதிபர் அவர். அப்படியானால் யார் இந்த சதிவேலையைச் செய்திருப்பார்கள்? கண்ணுக்குத் தெரியாமல் செயல்படும் எனது எதிரிகளோடுதானா இத்தனை நாளும் இந்த இடத்திலே நான் இருந்து கொண்டிருக்கின்றேன் என்று எண்ணியபோது உடலெல்லாம் உள்ளுர நடுங்கியது எனக்கு.

மனமெல்லாம் வெறுமையாகி கால்கள் பலமிழந்தது போலிருக்க அறையைக் கூடத் திறக்காமல் அப்படியே வாசலிலே அமர்ந்து கொண்டேன்.


 "தம்பீ வந்திட்டீங்களா? "    சற்றுத் தூரத்தில் முஅத்தின் என்னை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

 "காலம்பொறயிலருந்து ஒங்களத்தானே தம்பி தேடிக்கிட்டிருக்கேன்... விடியப்புறம் சொல்ல நெனச்சிக்கிட்டு இருந்தேன்..அதுக்குள்ளே வந்து எங்கயோ குர்பான் ஆடு தக்பீர் பண்றதுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டானுகள்...திரும்பி வந்து பாத்தா ஒங்கள காணல்லியே..' என்றவாறு என்னை நோக்கி வந்தார் முஅத்தின்.

'என்ன விசயம் நானா?' என்றேன் கசப்புடன்.

' தம்பீ, நேத்து காலம்பற நீங்க ஊருக்குப்போன பொறவு... லுஹர்  நேரம் மூணு இளந்தாரிப் பொடியனொள் மோட்ட சைக்கிள்ள வந்தானுவொள். இஞ்ச எங்கயோ இண்டவிக்கோ  செமினாருக்கோ போகணுமாம். ஒரு ராவு தங்கி நிண்டு போறதுக்கு றூம் கேட்டானொள். அந்த நேரம் ஒரு றூமும் கிடையாது. பொறவு ஒங்கட பேரைச் சொல்லி இஞ்சயா இரிக்கிங்க எண்டு கேட்டானொள். நானும் ஓம் மாஸ்டர் தம்பி இஞ்சதான் இரிக்கிற... இப்ப ஊருக்கு மையத்து வூட்டுக்குப் போயிருக்கிறாருண்டு சொன்னேன்... ஒங்கட பக்கத்து ஊர்தானாம் தெரியுமாம் என்டு பயலுவள் சொன்னதால நாந்தான் நிண்டுட்டுப் போட்டுப் போகட்டும் என்டு உங்கட றூமைத் தொறந்து வுட்டேன் வாப்பா.. படுத்துக் கெடந்து காலம்பற சுபஹு தொழுத கையோட பொயிட்டானுவள்...! பிரச்சினையில்லையே ..தம்பீ..?


'பிரச்சினை..யில்லையா? எவ்வளவு வாங்கினீங்க அவனுகளுக்கிட்ட?' என்று கேட்பதற்கு பற்றிக்கொண்டு வந்த கோபத்தை உதடுகளிலே வைத்து அடக்கிக் கொண்டு பேசாமலிருந்தேன்.

'ஆனா தம்பீ.. ஒங்கட பொஸ்தகம் சாமானுவள் எதையும் தொடப்படாது என்டு சொல்லித்தான் உள்ளேயே வுட்டேன் தம்பீ...?' என்று என் முகத்தைப் பார்க்கத் திராணியின்றி வேறு எங்கோ பார்த்துக்கொண்டுதான் பேசினார்.

'என்ன தம்பீ, ஒண்ணுமே பேசுறீங்க இல்ல..? ஒங்கட சொந்தமெண்டு சொன்னதாலதான்...'  என்றார் குற்றவுணர்வுடன் குனிந்தபடி. அவரைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது.

 " அதுசரி, எப்பிடி ஆக்கள் நானா? பேர் ஏதாவது சொன்னானுகளா.....?' என்றேன் எனது எரிச்சலை வெளியிலே காட்டாமல்.

 "ஆ! இரிங்க...! இப்படி நீங்க கேப்பீங்கண்டுதான் எதுக்கும் இருக்கட்டுமெண்டு பள்ளிக்குள்ள வாற வாகனத்தை பதியிற கொப்பியில கடசிப்பக்கத்துல அவனொள் பள்ளிய வுட்டுப் போறநேரம் மூணு பேர்ர பேரையும் கேட்டுஎழுதி வைச்சிருக்கேன் தம்பீ. இரிங்க..அதைக் கொஞ்சம் எடுத்திக்கிட்டு வாறேன்" என்று மசூதியின் மெயின்கேற்றுடன் இருக்கும் வாகனப் பதிவுக்கூண்டை நோக்கி வேகமாக நடந்தார் முஅத்தினார்.

அவர் வரும்வரை என்னுடைய ஆவலை அடக்க முடியவில்லை.
சட்டென அவரை முந்திக்கொண்டு, வாகனப்பதிவுக் கூண்டை நோக்கி ஓடிச்சென்று அந்தக் கொப்பியை எடுத்து அவசர அவசரமாக படபடவெனத் தட்டிப் பார்த்தேன்.


அந்த பெரிய ஸீ ஆர் கொப்பியின் கடைசிப் பக்கத்தின் ஒரு மூலையிலே ரஜீஸ், மிஸ்பா,  ஸஹீர் என்று நேற்றைய தினம் நீரில் மூழ்கி இறந்துபோன இளைஞர்கள் மூவரின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தது.

The End


- மூதூர் மொகமட் ராபி