Monday, August 27, 2012

இறைமறுப்பு : தைரியமுண்டா..?"












கிண்ணியா ஒமர் முக்தார் என்பவர் எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு ஆக்கத்தை அனுப்பி "இதனை சிறகுகளிலே பிரசுரிப்பதற்குத் தைரியமிருக்கின்றதா..?" என்று ஒரு சவால் வினாவையும் வைத்திருக்கின்றார்.

அவரது ஆக்கத்தினைப் படித்துப் பார்த்தபோது எங்கோ இதற்கு முன்பு வாசித்தது போலத் தோன்றியது. பின்புதான் அது அவரது சொந்த ஆக்கமல்ல என்பதுவும் விக்கிபீடியா தமிழ் தளத்திலே 'இறைமறுப்பு' எனும் தலைப்பிலே இருக்கும் ஒரு பரவலான தகவல்களை ஒழுங்குபடுத்தித் தொகுத்துள்ள ஆக்கம் என்பதுவும் புரிந்தது.

அதனால் அதனை ஒமர் முக்தாரின் தொகுப்பு என்று தெரிவித்து பிரசுரிப்பதிலே ஆட்சேபணை இருக்கவில்லை.
 
வாசித்துப் பாருங்கள்..... உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.


- Jesslya Jessly




இறைமறுப்பு




1. சான்றுகள் இன்மை


இறை இருக்கு என்பதற்கோ அல்லது ஆத்மா, மறுபிறவி, சொர்க்கம், நரகம் போன்றவற்றுக்கோ எந்தவித அனுபவ, பொருள்முறை அல்லது அறிவியல் ஆதாரமும் இல்லை. இறையை எல்லோரும் வழிபட வேண்டும் என்று கட்டளை இடும் இறை தன்னை ஏன் இலகுவாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.


இறை பண்டைய மனிதர்களோடு பேசியதாக, அவர்களுக்கு வெளிப்படுத்தல்கள் செய்தாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் 'புனித நூல்களில்' ஏராளமான பிழைகள் உள்ளன. உ-ம்: ரனாக், விவிலியம், குர்-ஆன் போன்ற புனித நூல்கள் மனித அடிமைத்தனத்தைக் கண்டிக்கவில்லை.


2. தன்விருப்பு வாதங்கள்


தன்விருப்பு வாதங்கள் என்பன எல்லாமறிந்த, எல்லாம் வல்ல இறை என்பது மனிதரின் தன்விருப்போடு அல்லது விடுதலை பெற்ற மனிதர் என்ற நிலைப்பாட்டோடு ஓவ்வாதது என்பதை வலியுறுத்தும் வாதங்கள் ஆகும். இறை எல்லாம் அறிந்தது, எல்லாம் வல்லது என்றால் அது அனைத்தையும் கட்டுப்படுத்தவும், முன் தீர்மானிக்கவும் வல்லது. அப்படியானால் மனிதரின் சுதந்திரம், தன்விருப்பு என்பது சாத்தியம் அற்றது என்பது இந்த வாதத்தின் நிலைப்பாடு ஆகும். இறையை வழிபடுவது இத்தகைய ஓர் அடிமை ஆண்டை உறவின் வெளிப்பாடக தோன்றுகிறது. இத்தகைய இறை இருந்தாலும் வெறுக்கப்படத்தக்கதே ஆகியவை இந்த வாதத்தின் நீட்சியாகும்.


3. தீவினைச் சிக்கல்


கருணை கொண்ட, எல்லாம் வல்ல, எங்கும் உள்ள இறை உள்ளது என்றால் உலகில் தீவினை, கொடுமை, துன்பம் ஏன் இருக்கிறது என்பதை எப்படி விளக்குவது. பல மெய்யியலாளர்கள் தீவினை இருப்பதும், இறைவன் இருப்பதும் ஏரணத்திபடி சாத்தியம் இல்லை என்று வாதிடுகிறார்கள்.


பச்சிளம் குழந்தை உணவு இல்லாமல் பட்டினி கிடந்து சாகிறது. இதை கருணை உள்ளம் கொண்டவராகக் கருதப்படும் இறை எப்படி அனுமதிக்கலாம்? கடவுள் அன்புள்ளது, பலம் பொருந்தியது, எல்லாவற்றையும் படைத்தது என்றால் பல்வேறு குறைகள் கொண்ட உலகை அது ஏன் படைத்தது? குறைகள் இருக்கிறது, தீர்க்க முடியவில்லையா? அல்லது தீர்க்க விரும்பவில்லையா? இப்படியானால் இறை, உண்மையில் கருணை உள்ளம் உடையதா? எல்லா வல்லமையும் பொருந்தியதா? போன்ற கேள்விகள் இந்த தீவினைச் சிக்கலின் தொடர் கேள்விகளாக அமைகின்றன.


4. சமய முரண்பாடுகள்


சமயங்கள் தமது உட்பிரிவுகளுக்கு இடையேயும், பிற சமயங்களோடும் பாரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சமயங்கள் தமது சமயம் மட்டுமே உண்மையானது என்று கோருவதால், அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் சரியாக இருக்க முடியாது என்பதில் இருந்து, அன்றாட வாழ்வியல் பரிந்துரைகள், இறையியல், புனித நூல்கள், வெளிப்படுத்தல்கள், சடங்குகள்
என பல வழிகளில் சமயங்கள் முரண்படுகிறன.

சமய முரண்பாட்டிற்கு ஒர் எடுத்துக்காட்டு எந்தவகை உணவு ஏற்படுடையது என்பது பற்றியதாகும். சமணம் வேர்த் தாவரங்களையும் தவிர் என்கிறது. இந்து மதம் சைவ உணவைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக மாட்டை உண்ண வேண்டாம் என்கிறது. இசுலாம் மாடு உண்பதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் பன்றி உண்பதைத் தவிர் என்கிறது. ஏன் மனிதனையும் சிலர் உண்கிறார்கள். இந்த சமய முரண்பாடுகள் அவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன.


5. சமயம் - அறிவியல் முரண்பாடுகள்


இன்று அறிவியலின் தந்தை என்று அறியப்படும் கலீலியோ கலிலி - 1633 ம் ஆண்டு உரோமன் கத்தோலிக்க திருச்சபையால், சூரியன் இந்த சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பதென்று நிறுவியதற்காகக் குற்றவாளியாக காணப்பட்டார். இந்த கருத்தை வைத்துக் கொள்ள, ஆதரிக்க, கற்பிக்க தடை செய்யப்பட்டார். சிறைதண்டனை வழங்கப்பட்டு, அவரது வயது காரணமாக
அவர் இறக்கும் வரைக்கும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

சமயத்துக்கும் அறிவியலுக்கும் பல முனைகளில் முரண்பாடுகள் உள்ளன. பல சமய புனித நூல்களில் கூறப்படும், இறைவாக்காக் கருதப்படும் பல கூற்றுக்கள் தற்போதைய அறிவியலின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அறிவியலின் வளர்ச்சிக்கும், அதன் வழிமுறைகளுக்கும் சமயம் தடையாக இருந்து வந்துள்ளது. அறிவியலில் தங்கி உள்ள தற்கால உலகில், அந்த அறிவியல் கோட்பாடுகள் எவற்றிலும் இறை என்ற கருதுகோள் தேவையற்றதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு கிறித்தவ புனித நூலான பைபிள் உலகம் அல்லது அண்டம் தோற்றம் பெற்று 5,700-10,000 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன என்றும், மனிதரை இறை படைத்தது என்றும் கூறுகிறது. அறிவியல் உலகம் 4.54 பில்லியன்  ஆண்டுகளுக்கு மேலானா கால வரலாற்றை உடையது என்றும், மனிதர் நுண்ணியிர்களில் இருந்து பல மில்லியன் ஆண்டுகளாக படிவளர்ச்சி ஊடாக கூர்ப்புப் பெற்று தோன்றினர் என்றும் கூறுகிறது.


7. பெண்கள் மீதான ஒடுக்குமுறை


பல்வேறு சமய தொன்மங்கள், நம்பிக்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் பெண்களின் ஒடுக்குமுறைக்கு காரணமாகி உள்ளன. பெண்களை தீய சக்திகளாக கட்டமைப்பது, அவர்களை கட்டுப்படுத்தும் அடக்கும் சட்டங்களை இயற்றுவது, சம உரிமைகளை வழங்காதது என பல வழிகளில் சமயங்களால் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டார்கள். பெரும்பான்மைச் சமயங்கள் ஆண் ஆதிக்க மரபைக் கொண்டவை. பெண் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற கொள்கை உடையவை.

கிறித்தவ தொன்மவியலில் ஆண் இறையின் உருவாகவும், பெண் ஆணின் உருவாகவும் படைக்கப்படுகிறார்கள். பெண் இறையை மீறி ஆசைப்பட்டு அப்பிள் உண்டதால்தான் மனித இனமே பாவப்பட்டு இறப்பு, நோய், துன்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவேண்டி வந்தது. பெண்ணை தீய நிகழ்வுக்கு இட்டு சென்றவளாக இந்த தொன்மம் சித்தரிக்கின்றது. பெண்கள் சமய குருமார்களாக வருவதை பெரும்பான்மை கிறித்தவம் இன்னும் தீர்க்கமாக எதிர்க்கிறது.

பல இசுலாமிய நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை சட்ட நோக்கிலோ நடைமுறை நோக்கிலோ இன்றுவரைப் பெறவில்லை. எடுத்துக்காட்டாக புனித இசுலாமிய நாடாக கருதப்படும் சவூதி அரேபியாவில் பெண்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. பெண்களுக்கு வேலைகள் வாய்ப்புக்கள் அரிது. குறைந்த பட்சம் அவர்கள் விரும்பும் படி உடைகளும் அணிய முடியாது. ஒர் ஆண் நான்கு மனைவிகளை வைத்திருக்க இசுலாம் அனுமதி தருகிறது. ஆனால் பெண் அப்படிச் செய்ய முடியாது. ஆணும் பெண்ணும் இணைந்து வழிபாடு கூடச் செய்ய முடியாது.

இந்து சமய மரபுகள் பெண்களை பல கொடுமைகளுக்கு உட்படுத்தின. உடன்கட்டை ஏறல் முற்காலத்தில் வற்புறுத்தப்பட்டது. பெண் குழந்தை வெறுக்கப்பட்டது. குழந்தைத் திருமணம் பரிந்துரைக்கப்பட்டது.

பெண்ணை வன்முறைக்கு உட்படுத்த அனுமதித்தது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று ஆணித்தரமாய் இந்து புனித நூல் மனு பின்வருமாறு கூறுகின்றது.  'ஒரு பெண் குழந்தையாய் இருக்கும் பொழுது அவளது தந்தைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். இளம் வயதில் அவளது கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அவளது கணவன் இறந்த பின்பு அவளது மகன்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். ஒரு பெண் என்றும் சுந்ததிரமக இருக்கக் கூடாது.'


8. சமய வன்முறை


சமயம் அல்லது சமயத் தீவரவாதம் பிற சமயத்தாருக்கு எதிராகவும், சமயம் சாராதோருக்கும் எதிராகவும் வன்முறையையும் போரையும் முன்னெடுக்க காரணமாக அமைந்துள்ளது. சமய நம்பிக்கைகள், பரப்புரை, கொள்கைகள், புனித நூல்கள், சடங்குகள் ஆகியவை இந்த வன்முறைக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. பலியிடுதல், அடக்குமுறை, தீவரவாதம், போர் என பல வழிகளில் சமய வன்முறை வெளிப்படுகிறது. இசுலாமியப் படையெடுப்புகள், சிலுவைப் போர்கள், Inquisition,Witch-hunt முப்பதாண்டுப் போர், தைப்பிங் கிளர்ச்சி, அயோத்தி வன்முறை, 9/11 தாக்குதல்கள் ஆகியவை உலக வரலாற்றில் இடம்பெற்ற சமய வன்முறைக்கு சில எடுத்துக்காட்டுக்கள்.


9. சமூகக் கேடுகள்


சமயம் ஏற்படுத்திக் கொடுக்கும் கேள்வியற்ற நம்பிக்கை சட்டகத்தாலும் (dogma faith), பல சமயக் கொள்கைகளாலும், அதன் பலம் மிக்க நிறுவனங்களாலும் பல்வேறு சமூகக் கேடுகள் நிகழ்கின்றன. எடுத்துக்காட்டுக்கு ஆபிரிக்காவில் எயிட்சு நோய் படு கொடுமைப்படுத்துகிறது. ஆனால் அங்கே காப்புறை பயன்படுத்தி பாலியல் தற்காப்பு செய்வதை கத்தோலிக்க மத சபை எதிர்க்கிறது. பெருந்தொகை கத்தோலிக்கரை கொண்ட ஆப்பிரிக்காவில் இது எயிட்சை தடுக்க ஒரு சிறந்த வழியை இல்லாமல் செய்கிறது. நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கத்தோலிக்க சமய குருமார்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் காவல் துறை அதைப் பற்றி விசாரிக்க முயன்ற போது, கத்தோலிக்க சமய நிறுவனம் அதை மூடி மறைக்க முயன்று உள்ளது.

பிறப்பால் மனிதரின் தொழிலையும் மதிப்பையும் சமூக செல்வாக்கையும் நிர்மானுக்குமாறு சாதிக் கட்டமைப்பை இந்து சமயம் தோற்றுவித்து, இறுக்கமாக அமுல்படுத்தி பெரும்பான்மை மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கியது.

பல்வேறு நாடுகளில் தற்பால் சேர்க்கையை, தற்பால் திருமணத்தை பல்வேறு சமயங்களைச் சார்ந்தோர் எதிர்க்கின்றனர். தற்பால் சேர்க்கையாளர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள், மரண தண்டைனைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இது சமய கொள்கைகளினால் சமூகத்துக்கும் விளையும் கேடு ஆகும்.

மக்களின் தேவைகளை, உணர்வுகளைப் பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிப்பதையும் அல்லது சமயத்துக்கு மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு பல ஏமாத்தல்களில் ஈடுபடுகிறார்கள். கடவுள் பல தரப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று பொய்ப் பரப்புரை செய்கிறார்கள். சாதகம், சோதிடம் முதற்கொண்டு பல்வேறு மூடநம்பிக்கைகளை சமயங்கள் பரப்புகின்றன. அறிவியலுக்கு ஏற்புடையாத உயிரியல், வானியல் மற்றும் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து மாணவர்களின் கல்வியைச் சிதைக்கிறது.

திருவிழாக்களில், கோயில்கள், சமய குருமார்களுக்கு என சமூக வளங்கள் வீணடிக்கப்பட்டு முக்கிய கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய தேவைகளுக்கு அவை பயன்படாமல் போகின்றன.


தொகுப்பு  கிண்ணியா ஒமர் முக்தார்


 
 
 

No comments:

Post a Comment