Tuesday, August 14, 2012

Kalkudahmuslim.net




Dear Friends,

கல்குடா முஸ்லிம்நெற் எனும் தளத்தில் படித்த ஒரு பத்தி என் மனதைக் கவர்ந்தது. அதை உங்கள் பார்வைக்கும் தருகின்றேன். பாருங்கள்:

- 'Mutur' Mohd. Rafi


'அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்'





நேற்று முன்தினம் (13.08.2012) நண்பகல் 12 மணியளவில் சகோதரர் ரஊப் ஹக்கீம் அவர்கள், என்னைக் காண எனது வீட்டுக்கு வந்தார்கள். கிழக்கு மாகாண சபையில் போட்டியிடும் எந்த வேட்பாளரோடும் வராதீர்கள் என்ற எனது வேண்டுகோளை மதித்து அவர் மட்டுமே என்னோடு உரையாட வந்திருந்தார்.

நாங்கள் என்ன பேசினோம்?

அஸ்ஸலாமு அலைக்கும்
வஅலைக்குமுஸ்ஸலாம்
சுகமா இருக்கிறீர்களா?
எல்லா வருத்தங்களும் சுகமாக இருக்கின்றன. நீங்கள் எப்படி? சென்ற தேர்தலுக்கு வந்தீர்கள். இம்முறை இந்தத் தேர்தலுக்கு வருகிறீர்கள். நமது கட்சி தேர்தலுக்கான ஒரு கட்சி மட்டுமா? கடந்த கால அனுபவங்கள் எனக்கு இதைத்தான் சொல்கிறது.
அவர் அப்படியில்லை காக்கா என்று மறுக்கிறார்.

நானோ நமது கட்சி அப்படித்தான். அரசு தேர்தலுக்கான வேட்புமனுவை கோரி நாற்பது நாட்களின் பின்னரே கடைசி நாளின் நள்ளிரவு 12 மணியளவில் கல்குடாவில் முஸ்லிம் காங்கிரசுக்கான வேட்பாளர்களை தேடி அலைவீர்கள். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு குறைந்தது 24 மணித்தியாலங்களுக்கு முன்னராவது அந்தப் பணியை மேற்கொள்ள மாட்டீர்கள். உங்கள் காலத்தில் நடந்த அனைத்துத் தேர்தலிலும் இதுதான் கதை.

கள்ளமரம், கள்ளமாடு சாய்க்கும் சரியான நேரத்தில் நீங்கள் வேட்பாளர்களை வேட்டையாடுவீர்கள். இது என்ன நடைமுறை என்றே எனக்குப் புரியமாட்டேன் என்கிறது. ஒரு தொகுதி மக்களிடம் அவர்களுக்கான வேட்பாளர்களைப் பற்றி ஒரு சிறு கலந்துரையாடல் கூட நடத்தும் ஒரு ஜனநாயகப் பண்பாடாவது நமது கட்சியிடம் இல்லையா? அல்லது கல்குடாவுக்கு மட்டும் இப்படியான நடைமுறையா? கடந்த காலங்களில் எங்களுக்கான வேட்பாளர்களாக மீட்பர்களாக நீங்கள் அறிமுகப்படுத்தியவர்களின் யோக்கியதைகளைப் பற்றி நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. எல்லாம் உங்களுக்குத் தெரிந்த விடயம்.

 
மாகாண சபைத் தேர்தல் அறிவித்தல் வந்ததும் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முதல் ஐந்து நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நீங்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தீர்கள். கட்சியின் பொதுச்செயலாளர் அருமை நண்பர் ஹஸனலி அம்பாறையில் வந்து நின்று வேறுவிதமாக
சொல்லிக் கொண்டிருந்தார். நீங்கள் இருவரும் நன்கு திட்டமிட்டுத்தான் இந்த நாடகத்தை அரங்கேற்றி பின்னர் மரச்சின்னத்தில் கேட்பதுதான் முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்கான சரியான உபாயம் என்று அந்த முடிவையே காரிய சித்தியாக்கியுளீர்கள்.


கட்சியை விட்டு மாற்றுக் கட்சிக்கு போன எங்களின் அருமை நண்பர்கள் ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் அடாவடித்தனங்களையும் அட்டூழியங்களையும் பொறுக்க முடியாத முஸ்லிம்கள் அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பதே சரியென்று நம்பினால், அத்தகைய மக்களை உங்களை நம்பி வருகின்ற மக்களை தொடர்ந்தும் நீங்கள் துயரத்தில் ஆழ்த்துவது எவ்வளவு பெரிய அநீதி. நான் நூற்றுக்கு நூறு வீதம் அரசியலில் நாணயமாக நடந்து கொள்ளுங்கள் என்று சொல்ல வரவில்லை. முப்பத்து மூன்றில் மூன்றிலொன்று ஒரு சாதாரண சித்தியாவது நமக்கு அமையக் கூடாதா? அதைப் பற்றி நீங்கள் கவலைப்படக் கூடாதா?


இந்த அரசு நமக்கும் நம்மைச் சேர்ந்த சிறுபான்மை மக்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதாக இல்லையே! சிறுபான்மை இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற பொழுது, எவ்வாறு இந்த அரசுக்கு நாம் நமது மக்களின் வாக்குகளை வாரிச் சுருட்டிக் கொடுப்பது?


சராசரி சிங்கள மக்கள் சகல மக்களும் சகல உரிமைகளும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றார்கள். நம்மைப் போன்ற அரசியல்வாதிகள்தான் மக்களைப் பிரித்து மக்களை உணர்ச்சிவயப்படுத்தி ஓட்டுப் பொறுக்கிகளாக மாறி நிற்கின்றோம்.
தலைவரே! ஒரு வருடத்தில் இரண்டு நாட்களாவது முஸ்லிம் தொகுதிகளுக்கு விஜயம் செய்யுங்கள் என்று பல தடவைகள் நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். மக்களின் சுக துக்கங்களில் கலந்து கொள்ளுங்கள். மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறியுங்கள். அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். தொண்டர்களைத் தட்டிக் கொடுங்கள். அறிவுபூர்வமாக அவர்களை அரசியல்மயப்படுத்தி பல இன பல மத மக்கள் வாழும் இந்த தேசத்தில் முஸ்லிம்களும் முஸ்லிம்களுடைய அரசியலும் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்று ஆற்றுப்படுத்துங்கள் என்றெல்லாம் பல தடவைகள் சொல்லியும் அதில் கொஞ்சமும் நீங்கள் கவனம் காட்டவில்லை.
சென்ற மாகாண சபைத் தேர்தலின் போது இங்கே இருவர். இவர்களிருவரும் தோற்றுப்போக மற்றக் கிராமத்தைச் சேர்ந்த இருவர் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். மிகவும் சூழ்ச்சிகரமான திட்டம். முதல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட இருவரும் இன்று செல்லாக்காசாக்கப்பட்டுள்ளார்கள். சென்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஹுஸைனும் லெப்பை ஹாஜியாரும் இன்று விலாசம் தெரியாதவர்களாக மாறியிருக்கிறார்கள். இம்முறை தேர்தலில் இறங்கியுள்ள மூவருக்கும் இதே நிலைதான் எதிர்காலத்தில் வரப்போகிறது.


நீங்கள் நீதமாக நடக்கின்ற தலைவராக இருந்திருந்தால் காத்தான்குடியில் ஒரு வேட்பாளர், ஏறாவூரில் ஒருவர், கல்குடாவில் ஒருவர் என்று மூன்று வேட்பாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டுமென்று பிரசாரம் செய்திருக்க வேண்டும். மனதுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு செயலில் வேறொன்று. எனக்கு எதுவுமே புரியவில்லை தம்பி.


ஒவ்வொரு தேர்தலுக்கும் நீங்கள் வருவதும் மார் தட்டுவதும் அதை நாங்கள் காது குளிரக் கேட்பதும் இப்படித்தான் கடந்த 25 வருடங்கள் எம்மை விட்டுப் போயிருக்கிறது. நாம் பெற்றுக் கொண்டது எதுவுமேயில்லை. உங்களால் முடிந்தால், கிழக்கு மாகாணத்தில் இந்தக் கட்சி செய்த ஒரு பாரிய நன்மையைக் குறிப்பிடுங்கள். ஆகக் குறைந்தது ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரு ஐம்பது மாணவர்களையாவது நமது கட்சி கண்ணியப்படுத்தியதா? நாம் எதைத்தான் செய்தோம்? பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்துங்கள் என்று ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் மக்களிடம் வேண்டுகோள் வைப்பது எத்தகைய பேரம்? மிகத் திறமான நன்கு உழைக்கக்கூடிய ஒரு துறையில் மந்திரியாக வரவேண்டும்.
இந்த அரசின் 18ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு கையுயர்த்தி இந்த நாட்டு அனைத்து மக்களினதும் எதிர்கால வாழ்வை நாம் கேள்விக்குட்படுத்தியிருக்கிறோம். மிகப் பெரும் பாவம்! இதைப் பற்றி நீங்கள் யோசிக்கவில்லையா? அத்தனை பேரும் உங்களை விட்டுப் போனாலும் நீங்கள் ஒரு தனி மனிதராக பாராளுமன்றத்தில் எங்களுக்காக குரல் கொடுத்திருக்க வேண்டுமே.

நேற்று காத்தான்குடி கூட்டத்தில் புத்த பிக்குகளுக்கு எதிராக பெரும் துவேசமாகப் பேசியிருக்கிறீர்கள். அது அரசியலுக்கான பேச்சு என்று எனக்குத் தெரியும். ஆனால் இன்றைய ஊடக சாம்ராஜ்ஜியம் அதை எப்படியெல்லாம் சிங்களப் பிரதேசங்களில் பிரஸ்தாபிக்கும் என்பதை நீங்கள் உணராமல், உரையாற்றிவிட்டு இன்று அதற்காக பகிரங்க மன்னிப்புக் கோரியிருக்கிறீர்கள். சனிக்கிழமை 11.08.2012 தினகரனில் முன்பக்கச் செய்தி. ஏன் இந்த தடுமாற்றம்?


உங்களுக்குத் தெரியுமா? சென்ற உள்ளூராட்சித் தேர்தலின் போது அனுராதபுர மாவட்டத்தில் ஹொரவாப்பொத்தான பிரதேசத்தில் அரசுக்கெதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களத்தில் இறங்கியது. சுதந்திரத்திற்குப் பிறகு காலாதி காலமாக அங்கு சிங்களவர்களும் முஸ்லிம்களுமாகச் சேர்ந்து ஒரு முஸ்லிம் தவிசாளரே பதவியில் இருந்து வந்திருக்கிறார். சென்ற முறை அந்த வாக்குகளை நீங்கள் இரண்டாகப் பிரித்து அந்தப் பகுதியில் இருந்த இன நல்லுறவை குழிதோண்டிப் புதைத்திருக்கிறீர்கள். சென்ற நோன்புப் பெருநாளைக்கு அவர்கள் சாப்பிட்ட மாட்டிறைச்சிக் கறிக்குப் பிறகு இன்று வரையிலும் அங்குள்ள மக்கள் இறைச்சி சாப்பிடவில்லை.


 இம்முறை தேர்தல் பிரசாரத்திற்கு அங்கும் நீங்கள் செல்வீர்களா? இத்தனைக்கும் அந்த மக்களின் தொழிலே மாடு வளர்ப்பதுதான். இன்று அந்த மக்களை நாம் மாடு மேய்ப்பர்களாக மாற்றியிருக்கிறோம். இதுதான் நமது மீட்புப் பணி.


கிழக்கில் அரசாங்கத்திற்கெதிராகவும் ஏனைய இரு மாகாணங்களிலும் அரசாங்கத்தோடு இணைந்தும் இந்தத் தேர்தலில் மு.கா இறங்கியுள்ளது. இதன் மர்மம் என்ன தம்பி? எனக்கே புரியமாட்டேன் என்கிறது. புத்தி கெட்டுப் போச்சுதோ! நானறியேன். இந்நிலையில் என்னால் மு.கா. மேடையில் எப்படித்தான் தம்பி அரசியல் பேசலாம்? எத்தனை காலத்திற்கு நாம் மக்களை முட்டாள்களாக்கலாம்?


அல்லாஹ்வுக்காக, குர்ஆனையும் ஹதீஸையும் விட்டுவிட்டு இந்த நாட்டின் அரசியலை இந்த நாட்டின் வழிமுறையிலே நீங்கள் செய்வது மேலாக இருக்கும். உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் அதுதான் உகந்த வழி.


கடைசியாக அவர் விடைபெறும் தருணம், இவ்வாறு அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.

எங்களுக்கு தனி மாகாணம், தனி அலகு வேண்டாம்.
முதலமைச்சரும் வேண்டாம்
(அது உங்கள் தலைமைத்துவத்திற்கு..?)
பங்களாவும் குளிரூட்டியும் வேண்டாம்.
பக்கத்தில் படுத்துறங்க பத்தினிப் பெண்ணும் வேண்டாம்.
குந்தியிருக்க ஒரு துண்டு நிலமும்
குப்பை கொட்ட ஒரு புறவளவும்
தலைவரே! உங்கள் அரசரிடம் கேட்டு
உங்களுக்கு ஓட்டுப்போடும் இந்த மக்களுக்கு
வழங்குவீர்களா?

- SLM Haniffa

Thanks : Kalkudahmuslim.net

1 comment:

  1. அன்புள்ள மாமா,

    நீங்கள் சொன்னதையெல்லாம் அவர் என்ன கேட்காமல் புரிந்து கொள்ளாமலா இருந்திருப்பார்? No. அத்தனை விடயங்களையும் அவர் நன்றாகக் கிரகித்து அதையிட்டு சந்தோஷப்பட்டிருப்பார். என்ன புரியவில்லையா?

    (நம்ம ‘வைகைப்புயல்’ வடிவேலு பாணியில் இதை வாசித்துப்பாருங்கள் புரியும்)

    ‘ஆகா.. நம்ம கட்சியோட ஆரம்பகால அனுபவப்பார்ட்டி இப்புடி ஒண்ணொண்ணாப் போட்டுத் தாக்குகின்றானே…? ஓஹோ! அப்படீன்னா நம்ம யாருக்காக வேண்டி இந்த அரசியலச் செஞ்சிட்டிருக்கோமோ அது சரியாத்தான் போயிட்டிருக்காப்ல.. ம்ஹும்.. நா நெனைச்சேன்! தப்பித் தவறியாவது நம்மளுக்கு பேங்க் எக்கவுண்டுல காசும் எலக்ஷனுக்கு டைம்டேபிளும் தந்துக்கிட்டேயிருக்கிற நம்ம எஜமானர்களுக்கு பொருத்தமில்லாமத்தான் போய்க்கிட்டிக்கிறமோன்னு ஒரு சின்னச் சந்தேகம் இருந்திட்டிருச்சிடா ஙொக்க மக்கா…! ஆனா இப்ப இந்த பெரிசு போட்டுத் தாக்கிறதப்பாத்தாக்கா…. நம்ம வண்டி சரியான றூட்டிலதான் போய்ட்டிருக்குது போல’

    இப்படித்தான் யோசித்திருப்பார் நம்ம ‘தலைவர்’.

    ReplyDelete