தூக்கணாங் குருவிகள்
'வாப்பா..! வாப்பா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க...எழும்புங்க!' கிணற்றுக்குள்ளிருந்து ஒலித்த ஷைனுக்குட்டியின் குரலைத் தொடர்ந்து யாரோ என்னைப் பலமாக உலுப்பியது போலிருந்தது.
'யா..யாரும்மா.. வந்திருக்கிறது?' கண்ணைத் திறக்காமலே கேட்டேன்.
இன்று விடுமுறை என்ற தைரியத்திலே இரவெல்லாம் டீவியில் லண்டன் ஒலிம்பிக்சும் இன்டர்நெற்றில் நாஸா றோவர்-க்யுரியோஸிட்டியின் செவ்வாய்த் தரையிறக்கமும் பார்த்துவிட்டுத் தூங்கச் சென்றிருந்தேன். திரும்பத்திரும்ப ஒரு நூறுதடவையாவது செவ்வாயில் இறங்கியதால் ஒத்துழைக்க மறுத்த கண்களுடன் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றபோது எதிரிலிருந்த நிலைக்கண்ணாடியில் சற்றே உப்பியிருந்த முகத்துடன் தலைகலைந்த நான் தெரிந்தேன்.
'முன் ஹோல்ல இருக்கச் சொல்லும்மா அந்த அங்க்கிள இந்தா வாறேன்' என்றபடி கிச்சன் குழாயைத் திறந்து முகத்தில் தண்ணீரை விசிறியடித்தேன். ' அது அங்க்கிள் இல்ல வாப்பா.. ஒரு ஆன்ரி தான் வந்திருக்காங்க! அவங்கதான் என்னோடு சேர்ந்து உள்ள வந்து உங்களைப் போட்டு ஆட்டியாட்டி எழுப்பிட்டு அந்தா வெளியே போய் நிக்கிறாங்க!' கையிலே பாதி தின்ற புதிய வகை சொக்லேட்டுடன் கலகலவென்று சிரித்தாள் ஷைனுக்குட்டி.
'ஆன்ரியா..? பெட்றூமுக்குள்ளேயே வந்து தொட்டு எழுப்புகிறளவு யார்டா அது?'
வாய்க்குள்ளெடுத்த தண்ணீரை கொப்புளிக்க மறந்து சில வினாடிகள் திகைத்துப்போய் நின்றவன் அடுத்த நிமிடத்தில் சட்டெனப் பல்துலக்கி முகம் கழுவி விரல்களால் தலைவாரி கையில் கிடைத்த டீ சேர்ட்டை மாட்டிக் கொண்டு முன்னறைக்கு விரைந்து சென்று பார்த்தேன்.
அங்கு போர்ட்டிக்கோவில் தொங்கிய சிறுபூந்தொட்டியொன்றை ஆராய்ந்தபடி நின்றிருந்தாள் வெகு ஸ்டைலாக ஆடையணிந்த ஓர் அழகிய இளம் பெண். என்னைப் பார்த்ததும் நிமிர்ந்தவள் சட்டெனப் புன்னகைத்தாள். வெகுசுத்தமான அவளது அழகிய பல்வரிசையின் பளிச்சீடு எனது மூளையின் ஞாபக இடுக்குகளுக்குள் வேகமாகப் புகுந்து பல வருடங்களைப் பின்தள்ளிவிட்டுத் திரும்பிய அந்த மில்லி செக்கன்களின் முடிவிலே,
'ஹேய்...! நொய்லீன்!' என்று என்னை மறந்து கூவினேன். 'வா! வா நொய்லீன்! இது எப்ப.. எப்ப வந்த நீ..?'
'ம்! பரவாயில்லையே, என்ட பேராவது நினைவிருக்குதே...!' என்றவாறு அந்தரத்திலே தொங்கிச் சுழன்று கொண்டிருந்த பிரம்புக்கூடைக் கதிரையிலேறி அமர்ந்தாள் அவள். மார்புச்சட்டையிலே ஊஞ்சலாடிக்கொண்டிருந்த குளிர்க்கண்ணாடியை ஒரு தடவை துடைத்து அணிந்து பார்த்துவிட்டு நெற்றிக்கு மேலே தள்ளிவிட்டாள்.
அந்த இடமே அவளால் பளிச்சென்று தோன்றியது எனக்கு. அவள் வந்திருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஷைனுவைப் பிடித்துத் தன் மடியிலே அமர்த்தி தனது கைப்பையைத் திறந்து மற்றொரு சொக்லேட் ஒன்றைக் கொடுத்தாள்.
'என்ன பேர், பிள்ளைக்கு?'
'ஷைனப் குட்டி!' என்றாள் ஷைனப், நான் சொல்வதற்குள் முந்திக்கொண்டு.
'ஆ! ஷைனப்குட்டியா? ஓகோ! குட்டியும் ஒங்கட பேர்தானா..?'
'அது வாப்பா மட்டும் கூப்பிடுற செல்லப்பேர்...உங்களுக்கும் அப்படி பேர்
இருக்கா..?'
'ம்! இருக்கே...! 'வயலின்' என்று... அதுவும் உங்க வாப்பாதான் செல்லமா முந்தி எப்பவோ வச்சது எனக்கு தெரியுமா?' என்றபடி குறும்பாக என்னைப் பார்த்தாள் நொயிலின்.
' அட! அதெல்லாம் இன்னும் நீ மறக்கல்லயா? அதுசரி, வந்ததும் வராததுமா இவளைப் பழக்கம் பிடிச்சு உள்ளயே வந்து என்னை எழுப்பத் தெரியுது...ஆனா அவள்ட பேரைக் கேட்கத் தெரியலியா?'
'அட! நான் வந்து எழுப்பினதைச் சொல்லிட்டாளா.. இந்த க்யூட் ஷைனுக்குட்டி?' என்று கன்னத்தைக் கிள்ளி, 'யு ஆர் ஸோ நோட்டி யா! குழப்படியா இவ?'
'ஆமாம்! அவள்ட அக்கா மாதிரியே!' என்றேன் லேசாகக் கண்ணடித்து. ஆனால் அதைக் கவனிக்கத் தவறியதிலே எனது ஹாஸ்யம் புரியவில்லை அவளுக்கு.
'எனக்கெண்டா.. ஷைனுக்குட்டி அப்படியே அம்மா மாதிரிதான் தெரியுறா.. அம்மாவை அவட சின்ன வயசுப்போட்டோவுல பார்க்கிற மாதிரியே இருக்கு..' என்றவள் சட்டென, 'நான்.. அவங்களை அப்படிக் கூப்பிடலாம்தானே..?' என்று கேட்டாள் அவள்.
'ஹேய் டோன்ட் பி ஸில்லி நொய்லீன்..! ஷீ'ஸ் ஓல்வேய்ஸ் யுவர் மதர்!'
'அதுசரி...பிறகு எப்படியிருக்கீங்க..?' ஷைனு அவள் மடியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் ஓடியதும் புன்னகை மாறாமலே கேட்டாள்.
நான் பதிலேதும் கூறவில்லை.
நொயிலின் எனது இளைய தங்கையின் வகுப்புத்தோழி. ஊரிலே எங்களது வீட்டுக்கு அருகிலேதான் நொயிலினின் குடும்பமும் குடியிருந்தது. வெளியூரில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த நான் இரண்டாவது தடவை உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்குக் காத்திருந்த காலத்தில் எனக்கு அறிமுகமானவள்தான் நொயிலின். அப்போது இருந்ததற்குச் சற்று மினுமினுப்பாய் பூசினாற்போல இருந்தாள். ஆனால் அந்த வசீகரமான புன்னகை மட்டுமே இன்னும் பிடிவாதமாக, 'நான் பழைய நொயிலின்தான்' என்றது.
உடனே, ' இந்த நொயிலின் என்னுடைய பழைய காதலி; இவளைக் காதலித்து கைவிட்டு விட்டேன். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது என்னைத் தேடி வந்திருக்கின்றாள்..' என்று நீங்களே ஒரு கதை பண்ணிவிடாதீர்கள். ஏனென்றால் இந்தக் கதையின் இறுதியிலே ஓர் உண்மையை நான் உங்களுக்கு...
'என்ன.. அப்படியே பாத்திட்டேயிருக்கீங்க. பதிலே சொல்ல மாட்டீங்களா..? ஓ! நான் இங்க வருவேன் என்று எதிர்பார்க்கல இல்ல?'
'இல்ல..! சத்தியமா இல்ல நொய்லின்! நீதான் திரும்பவும் கனடாவுக்குப் போயிட்டியே.. நீ எப்ப வந்தது? எங்கதான் இருக்கிறாய் இப்ப?' எனக்கு எதை முதலில் கேட்பது என்றே தெரியவில்லை.
'தேங்க்யூ வெரி மச்! அதுசரி! இன்னுமொரு கேள்வி மிச்சமிருக்குதே... 'எப்பிடி வந்தாய்' என்று..? அதையும் கேட்டுவிடுங்களேன்!' அவளது பழைய குறும்பு இன்னும் போகவேயில்லை.
'சரி, அதையும் நான் கேட்டதாய் நினைச்சு பதிலைச் சொல்லு!'
'ஓகே, போன ஏப்ரல்லதான் நானும் அப்பாவும் கனடாவுலருந்து வந்தோம். தம்பி அங்கேயேதான் இருக்கிறான். இப்ப அவன் உங்களோட கோபமில்ல.. அவனுக்கு உங்க விஷயம் எல்லாம் தெரியும்.. உங்களை எப்பவும் நினைச்சுக் கதைச்சுட்டே இருப்பான் அவன். நாங்க இப்ப கம்பளையில இருக்கிற மேபிள் மாமி வீட்லதான் தற்காலிகமாக தங்கி இருக்கிறோம். நான் போன வியாழக்கிழமை பின்னேரம்தான் கம்பளையிலருந்து ஒருவேலையா மூதூருக்கு வந்தேன் அத்தோட சில முக்கியமான முடிவுகளையும் நான் எடுக்க வேண்டியிருந்த...'
' அப்ப நீ பாத்ததுக்கு இப்ப மூதூர் எப்படியிருக்கு நொய்லீன்?'
'அதையேன் கேட்கிறீங்க? பஸ்ஸில போய் மெயின்ரோட்ல போய் இறங்கினனா.. என்ட கர்த்தரே! எங்கட சொந்தக்காரங்கள் இருக்கிற இடங்களையே த்ரீவீல்காரங்களுக்கிட்ட கேட்டுத்தான் தெரிஞ்சுகிட்டேன் என்டா பாருங்க.. அந்த ஆஸ்பத்திரி ரோட்டை எவ்வளவு அகலமா ஆக்கிட்டாங்க.. புதுசா நெறைய கடையெல்லாம் வந்து... மூதூர் இப்ப எப்படி மாறிப்போயிருக்கு பாத்தீங்களா... ஷகீ..ப்.. ப்..?' என்றவள் சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்தி விட்டாள்.
'நோ ப்ரொப்ளம் ஐ'ம் ஸ்டில் யுவர் ஷகீப்!'
'தேங்க்யூ ஷகீ, ரெண்டு மூணுநாள் அங்க உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்தாங்களே மனோரஞ்சி அக்கா.. அவங்க வீட்ல தங்கிட்டு இப்ப காலையில பஸ் ஏறி கம்பளைக்கு போறதுக்காகத்தான் ட்றிங்க்கோ வந்தேன்.. வழியில இங்க வந்து இறங்கினேன். நேற்று டவுனுக்கு வந்த நேரம் தீபன் அங்கிள்தான் உங்க அட்ரஸ்ஸ யாரிட்டயோ கேட்டு வாங்கிட்டு வந்தாரு.. அப்பாவுக்கு பைபாஸ் செய்ய வேண்டியிருந்திச்சு.. இங்க மாதிரி இல்ல அங்க கனடாவுல ஹொஸ்பிடல் செலவு.. அதனாலதான் இங்கயே வந்து செய்த நாங்கள்.. போன மாதம் 23ம் திகதிதான் கலம்ப்ல அப்பல்லோவுல செய்தது...' சொல்லிக் கொண்டே சென்றவளை,
' ஏன் நொய்லீன், அப்பாவோட ஓப்பரேஷனப்பத்தி எனக்கு நீங்களெல்லாம் எதுவும் சொல்லவே இல்ல..?' என்றேன் இடைமறித்து.
'அட! சொல்லியிருந்தா மட்டும் என்ன.. உங்க வில்லனைப் பார்க்க ஓடோடி வந்திருப்பீங்களோ..?' மீண்டும் கலகலத்தாள்.
'நொய்லீன் ப்ளீஸ்! இப்ப எப்படி இருக்கு அவருக்கு?'
'ம்! அவர் நல்லாத்தான் இருக்காரு.. பரவாயில்லயே.. இவ்வளவு நடந்தும் பாசம் இருக்கே அவர்மேல! அவரோட இடது கால்ல இருந்துதான் ஒபரேஷனுக்கு தேவையான வெயின் எடுத்தது... அதால நடக்கிறது கொஞ்சம் சிரமம்.. மாதத்துக்கு ஒருதடவை கலம்ப்புக்கு க்ளினிக் போய் வரணும். ம்ம்..! நாங்க கனடாவுல கஷ்டப்பட்டு உழைச்சதெல்லாம் வைத்தியத்துக்கே போகுது...'
'சரி.. உங்களையெல்லாம் பெத்து வளர்த்த அப்பாவுக்குத்தானே செய்றீங்க...?'
'ம்ம்! காசை மட்டும்தான் அள்ளி இறைக்கிறோம்...! ஆனாலும் பொம்பிளைப் பிள்ளை என்னால மட்டும் அவருக்கு வேண்டிய எல்லாத்தையுமே செய்ய முடியல.. தெரியுமா? எவ்வளவுதான் நான் மேபிள் மாமி மற்ற எல்லாரும் கவனிச்சிட்டாலும் இப்பல்லாம், 'அடியே! உங்கட அம்மா அவனோட.. ஐ'ம் ஸொறி டு ஸே திஸ் ஷக்கீப்..'
என்று சொல்லவந்ததை நிறுத்தி விட்டாள்.
'பரவாயில்ல.. நீ சொல்லு நொய்லீன்'
'உங்க அம்மா அவனோட போய்த்தொலையிறதுக்கு முந்தியே நான் போய்ச் சேந்திருக்கலாம்டீ.!' என்று அடிக்கடி கத்திறாரு தெரியுமா. எங்களால என்ன செய்றதுண்டே தெரியல்ல'
'அவரு நெனைக்கிறதுலயும்..நியாயம் இருக்குத்தானே..?'
'நான் மட்டும் இல்லை என்று சொன்னேனா ஷகீப்..? வயசுபோன காலத்தில துணை இல்லாமல் போனதுதான் அவருக்குள்ள பிரச்சினையே... அதைத்தான் கோபமா எங்க மேலே கத்தித் தீர்க்கிறாரு!'
சிறிது நேரம் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஷைனப் முற்றத்தில் இறங்கிச் சைக்கிளை வைத்து தள்ளி விளையாடிக் கொண்டிருக்க மாமரத்தின் கிளையொன்றிலிருந்து பச்சைக்குருவி ஒன்று, 'கொட்றூ.... கொட்றூ....' என்றது.
'உடம்புக்கு முடியாமப்போகிற நேரம்தான் ஒரு ஆம்பிளைக்குத் தன்ட துணையோட அருமையெல்லாம் புரியும் போல.. இளம் வயதில அதைப் பத்தியெல்லாம் யோசிக்கவே மாட்டாங்க.' என்று மீண்டும் பேச்சை ஆரம்பித்தேன்.
'இப்ப என்ன உங்களுக்கு... அப்பாவைக் குத்திக் காட்டணும் அதுதானே?' சட்டென அவளது உதடுகள் துடிக்க ஆரம்பித்தன. அதுவரை இருந்த கலகலப்பான முகம் மெல்ல வாடிப்போக ஆரம்பித்தது. பார்வையை வேறு எங்கோ திருப்பிக் கொண்டாள்.
'ஹேய்.. வாட்ஸ் தீஸ்? ஐ'ம் ஸொறி நொய்லீன்.. .ஐ ரியலி டிடுண்ட் மீன் தட். இவ்வளவு நேரம் எவ்வளவு சந்தோஷமாகப் பேசிட்டிருந்தோம்... இதுதான் இந்த விசயத்தையே..'
'ஓகே! ஐ'ம் ஓல்ரைட்..! விடுங்க ஷகீப்...! நீங்க என்னதான் செய்வீங்க..? அவருக்கு நல்லாவே வேணும்.. உங்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினாரு.. அந்தநேரம் நாங்கல்லாம் சின்னவங்க.. உண்மையில என்னதான் நடக்குது என்று அப்பல்லாம் எங்களுக்குத் தெரியவே இல்ல..' அவள் தொடர்ந்து பேசியவாறே இருந்தாள்.
'அப்பாவோட வீண் அவமானப்படுத்தலையும் தொல்லைகளையும் பொறுக்காமத்தானே அன்டைக்கு நாலுமாதம் வாயும் வயிறுமா இருந்த எங்க அம்மா துணிச்சலா யாராலயும் நெனச்சிக்கூடப் பார்க்க இயலாத அந்த முடிவை எடுத்தாங்க. ஆனால் பாவம் நீங்க.. உங்க படிப்பு.. எதிர்காலத்தைக்கூட யோசிக்காம அம்மாவோட பக்கத்திலதானே நின்றீங்க....! அப்பல்லாம் அப்பாவோட சேர்ந்து நாங்க கூட உங்களைத்தான் ஷகீப் தப்பா நினைச்சோம்.. எங்களைச் சின்னப் பிள்ளைகள் என்று நினைச்சு நீங்ககூட உங்க நியாயத்தைக் சொல்லவேயில்ல...' அவள் பார்வை எங்கோ வெறித்தபடி இருந்தது.
'..........................'
'அப்பா உங்களை அவமானப்படுத்திறதா நெனைச்சிட்டு உண்மையில பிள்ளைகள் எங்களைத்தான் அவமானப்படுத்தினாரு.. இப்ப இருக்கிற அறிவு அந்த நேரம் எனக்கெல்லாம் இருந்திருந்தா....!' அவள் கண்களின் ஓரத்திலே லேசாக நீர் துளிர்த்தது.
வெளியே இலேசான மழை தூற ஆரம்பித்து ஷைனப்பை நான் உள்ளே கூப்பிடுவதற்குள் சட்டென ஓய்ந்தது. புதுமழையின் ஈரலிப்பில் எழுந்த மண்வாசனை நாசியைத் துளைத்தது.
'இட்ஸ் ஓகே நொய்லீன்.. அதெல்லாம் முடிஞ்சுபோன கதை.. லெட்ஸ் சேன்ஜ் த டொப்பிக்? இப்ப என்னவாவது குடிக்கிறியா? கூல் ஓ ஹொட்?'
'சம்திங் கூல் இஸ் பெட்டர்! அதுசரி, நீங்க ரமழான் நோன்பு இல்லயா ஷகீப்?'
'ஹேய்! ஏதும் குடிக்கிறியான்டு நான் கேட்டது உனக்குத்தான்! ஷைலுக் குட்டி! இங்க வாங்கம்மா, ரஸாக் மச்சான்ட கடைல ஆன்ரிக்கு கூல்ட்ரிங்ஸ் ஒண்டு வாங்கிட்டு வாறீங்களாடா'
'வாப்பா...எனக்கு ஜெலியும் வேணும்..?'
'சரி, டொக்டர் மாமா நேற்று என்ன சொன்னவருண்டு தெரியும்தானே...? நிறைய வேணாம்.. கொஞ்சம் நில்லுங்க. நொய்ல், வாட்ஸ் யுவர் பராண்ட்... ஸெவனப் ஓ ஸ்ப்ரைட்..?'
'பாத்தீங்களா ஷகீப்... எல்லாமே மறந்திட்டீங்க நீங்க?'
' ஓ! ஐ'ம் ஸொறி.. ஐ ரியலி போர்கொட் தட்! அது இங்க உள்ள கடைகள்ல இருக்காது. சந்திக்குத்தான் போகணும் ஷைனுவோட பேசிட்டேயிரு..இதோ நானே வாங்கிட்டு வர்ரேன்..ஆனா என்ன இப்படியே கடைக்கு நான் போனால் எல்லாருமே பயந்திடுவாங்க..' என்றபடி உள்ளே சென்று குளித்து முடித்து சேர்ட் டெனிம் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு வந்து நான் பைக்கை உதைத்த போது,
'யூ ரியலி லுக் வெரி ஸ்மாட் இன் திஸ் ப்ளு ட்ரெஸ் ஷகீ!' என்றாள் நொயிலின்.

***
அனுராதபுரச் சந்தியிலிருந்த கடைகள் முழுவதும் சல்லடைபோட்டும் தேடியது கிடைக்கவேயில்லை எனக்கு.
வேறுவழியின்றி நான்கு கிலோமீற்றரில் இருக்கும் ட்றின்கோ டவுனை நோக்கி பைக்கில் பறந்தேன். போகும் வழியில் அபயபுரத்தைத் தாண்டியதும் நான் வழமையாக தயிர் வாங்கும் ஒரு சிறிய பெட்டிக்கடை ஞாபகம் வந்தது. நொயிலினுக்குத் தயிரென்றால் உயிர். டவுனுக்குப்போய் வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று யோசித்தவன் சிலவேளை வரும்போது தயிர் விற்று முடிந்துவிடும் என்பதால் சட்டென அந்தக் கடையோரமாக பைக்கை நிறுத்தினேன்.
'ஆ! இஞ்சினியர் மல்லி! கொஹாட்டத மே உதே பாந்தர? அத நிவாடு தவஸ நேத?' வெற்றிலைக் காவியேறிய பற்கள் பளிச்சிடக் கேட்டார் அவரிடம் தயிர் வாங்கிச் செல்வதாலேயே அறிமுகமாகிப்போன கடைக்காரர் சுனில் ஐயா.
நான் வந்த விசயத்தைச் சுருக்கமாகச் சொன்னேன்.
'ஹொந்த வெலாவ! ஏக்க மே ஹரிய எத்தி மஹத்தயோ...!' என்றவாறு உள்ளே சென்று ப்ரிட்ஜைத் திறந்து இரண்டு போத்தல்களை எடுத்துவைத்தார். அவற்றைப் பார்த்ததும்தான் எனக்கு உயிர் வந்தது. மிகுந்த சந்தோஷத்துடன் அவற்றுடன் தயிரும் வாங்கிக்கொண்டு பைக்கிலேறி ஸ்டார்ட் செய்தபோது,
'அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்!' என்றது பரிச்சயமான ஒரு குரல். அது வந்த திசையிலே நின்றிருந்தான் அஸ்லம், என் பள்ளிக்காலத்து பால்ய நண்பன். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒருவரோடு ஒருவர் மனம்விட்டுப் பேசிப் பழகுபவர்கள். இப்போதும் கூட விடாமல் தொடரும் நட்பு எங்களுடையது.
அஸ்லம் இப்போது திருகோணமலை நகரிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றிலே மேலாளராக வேலை செய்கின்றான். வார இறுதியிலே மட்டும் ஒரு தடவை ஊருக்குச் சென்று திரும்புவது அவன் வழமை. நகரிலுள்ள கடைத்தெருவுக்கு நான் ஏதாவது வேலையாகச் செல்லும்போதெல்லாம் அவனது நகைக்கடையிலே சந்தித்து இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொள்வோம்.
'என்னடா! ஞாயிற்றுக்கிழமையில இங்க நிக்கிறா? சனிக்கிழமை இரவே மனிசியைப் பார்க்க பஸ் ஏறி ஓடிருவியே.. என்ன வீட்ல ஏதும் சண்டையா?' என்றேன் நக்கலாக.
'இல்லடா மச்சான், இரவு கடையில கணக்குக் கூட்டினதுல ஒரு ஆயிரம் ரூபாய் குறைஞ்சிட்டுதெண்டு கணக்கைச் சரி செய்யும் வரைக்கும் போக விடவே மாட்டனுண்டாண்டா அந்த எருமை.. கடைசியில ஊருக்குப்போற கடைசி பஸ்ஸையும் விட்டுட்டன்டா..' என்றான் பரிதாபமாக.
'யாரு உன்ட அந்த முதலாளியா..? அவந்தான் காசு மட்டுந்தான் வாழ்க்கையென்று நெனைக்கிற கூட்டத்துல உள்ளவன்தானே... அப்பிடித்தான் இருப்பான்.. சரி, வந்து ஏறு என்ட வீட்டுக்குப் போயிட்டுப் போகலாம். வாடா! வா! என் வீட்டடியிலேயே நின்று மூதூர் பஸ்ஸைப் பிடிக்கலாம்'
'ஹெல்மெட்டும் இல்ல.. வேணாண்டா மச்சான், அதோட நான் இப்பவே மூதூருக்குப் போயாகணுண்டா.. இன்னொரு நாள் வாறேன்' என்று மறுத்தவன்,
வீதியோரமாக மோட்டார் சைக்கிளுடன் போக்குவரத்துப் பொலீஸ் அதிகாரிகள் சிலர் நின்றிருக்க அந்தப்பகுதி முழுவதும் புகையைக் கக்கியபடி இரைச்சலுடன் கடந்து சென்றது ஓர் இராணுவ கனரக வாகனம்.
'அது சரி, என்னடா தயிர், நெல்லி-ரசமெல்லாம் வாங்கிட்டுப் போறீயே.. நோன்பு திறக்கவா? இந்த விடியக் காலத்திலேயே..?'
'வீட்ல ஒரு கெஸ்ட் வந்திருக்கான்டா மச்சான்'
'டேய் சரியாச் சொல்லு! கெஸ்ட் வந்திருக்கானா வந்திருக்காவா? யாருக்கிட்ட மறைக்கிறாய் நீ? உன்ட பழைய ஆள் நொயிலின்தானே? கனடாப் பார்ட்டி!' என்றான் பாவி குறும்புடன்.
'டே....ய்ய்!' என்று கூவினேன் மயக்கம் வராத குறையாக. 'உனக்கு எப்பிடிடா இது தெரியும்?' ஆச்சரியத்திலே பைக்கின் ஸ்டார்ட்டைக்கூட நிறுத்திவிட்டேன்.
'அவளுக்கு இஞ்ச நீ இருக்கிற அட்ரஸ்ஸைக் குடுத்து விட்டதே நான்தான் தெரியுமா?' என்றான் சிரித்தபடி. 'என்னடா இப்படி முழிக்கிறா..? நேத்து மத்தியானம் நம்மட நிக்கலஸ் விதானையார்ட மகன், தீபன் தெரியுந்தானே.. அவன் வெளிநாட்டு நகைகள் கொஞ்சம் விக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு பசார்ல என்ட கடைக்குத்தான்டா வந்தான். அவ்வளவும் பெஸ்ட் தங்கம் மச்சான்.. ஏதுடா இவ்வளவு நகை என்று விசாரிச்சதுல நொயிலின் கனடாவுலருந்து வந்த விசயத்தைச் சொன்னான். நான் உனக்கு விசயத்தைச் சொல்றதுக்கு கோல் அடிச்சேன். ஓஃப்ல இருந்திச்சுடா உன்ட போன்.. பிறகு நாந்தான் பசார்ல கூடுதலாப் பேரம் பேசி வித்துக் காசு எடுத்துக் குடுத்தேன் தெரியுமா?'
' ஓ! அப்பிடியா.. சேதி?'
'என்ன அப்பிடியா? அப்ப உனக்கிட்ட இதைப்பத்தியே அவள் சொல்லவே இல்லயாடா..?'
'அதெல்லாம் சொன்னதுதான் நாந்தான் சரியாக் கேட்கல்லபோல.. சரிடா! நான் வாறேன்' என்று பைக்கை மீண்டும் ஸ்டார்ட் செய்து புறப்பட்டத் தயாரானவுடன், 'கொஞ்சமிரு! கொஞ்சமிரு..!!' என்று என்னை மறித்துப் பிடித்துக் கொண்டான் அஸ்லம்.
'டேய் ஷகீப், அவள்ற குடும்பத்துக்காக எவ்வளவு விசயங்களை இண்டைக்கு வரைக்கும் பொறுத்திட்டிருந்த நீ.. இப்பிடி ரெண்டு குடும்ப ஆதரவுமில்லாம இன்னும் எத்தனை காலத்துக்குத்தான்டா உன்ன வாப்பாண்டு கூப்பட்டுக்கிட்டிருக்கிற அந்தச் சின்னப்பிள்ளையையும் வச்சிட்டு நீ இப்பிடியே இருப்பாய்? இப்பதான் எல்லாமே க்ளியர்தானே.. நொய்லினை ஒருதடவை கேட்டுப் பாரேண்டா.. உனக்கு அவள்மேல இருக்கிற விருப்பத்தை மறைக்க நினைக்காத... அது உனக்குத்தான் பாதகமா முடியும்.. யாரோ வேற ஆக்களுக்கிட்ட சொல்ற மாதிரி எல்லாம் தெரிந்த எனக்கிட்டயும் பொய் சொல்லுவியாடா...?'
என்னால் எதுவுமே பேச முடியவில்லை.
அவன் சொல்வது உண்மைதான். அந்த நாட்களிலே ஊரில் நாங்கள் ஒன்றாக இருந்தபோது நொயிலினின் குடும்பம் தொடர்பாக நடந்த சகல விடயங்களையும் எனது உற்ற நண்பனாக இருந்த இந்த அஸ்லம் ஒருவனிடம்தான் பகிர்ந்து கொண்டிருந்தேன்.
நொயிலின் குடும்பத்தினர் எங்கள் ஊருக்கு வந்த காலப்பகுதியில் நான் எனது வீட்டார்களுடன் சிறுசிறு பிரச்சினைகள் பட்டுக்கொண்டிருந்தேன். குறிப்பாக உயர்தரக் கல்வி தொடர்பாக எனக்கும் வாப்பாவுக்கும் அடிக்கடி தர்க்கம் ஏற்படுவதும் அதன் காரணமாக நான் மனமுறிவு கொள்வதும் வழமையானதாக இருந்து வந்தது. அதனால் விளைந்த மனக்கசப்பிலே நான் வீட்டிலே இருக்கப் பிடிக்காமலும் அதேவேளை வெளியிலே எங்கேயாவது சென்று நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க இயலாத நிலையிலும் குமுறிக் கொண்டிருந்தேன்.
அந்தவேளையிலே நொயிலின் குடும்பத்தினரின் வரவு எனக்குப் புதிய உணர்வைத் தந்தது. குறிப்பாக, நொயிலினின் தாய் ஸ்டெல்லா அக்காவின் கனிவான தோற்றமும் அனுசரணையான குணங்களும் எனக்கு மட்டுமன்றி எங்கள் குடும்பத்தினருக்கும் அயலவர்களுக்கும் கூடப் பிடித்துப்போனது. ஸ்டெல்லா அக்கா அவரது பிள்ளைகளை எப்படி நேசித்தாரோ அதே போலத்தான் என்னையும் நேசித்தார். எனது உறவுகளின் தர்க்கங்களால் சலிப்படைந்திருந்த எனக்கு அவரின் பாசம் பூட்டிக்கிடந்த ஓர் இருட்டறைக்குள்ளே திடீரென புதிய சாரளம் ஒன்றைத் திறந்து விட்டதைப் போலிருந்தது.
ஸ்டெல்லா அக்காவும் அவரது இருபிள்ளைகளும் எங்கள் அனைவரினதும் நட்புக்குரியவர்களானார்கள். முதலில் எனக்கு அறிமுகமானவன் என்னைவிட எட்டு வயது குறைந்த நொயிலினின் தம்பி சில்வஸ்டர்தான். அவ்வாறே எனது தங்கைக்கு நொயிலினும் தாய்க்கு ஸ்டெல்லா அக்காவும் நண்பர்களாகினர். ஆனாலும் வியாபார முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவரான எனது வாப்பாவும் நில அளவைத் திணைக்களத்திலே வேலை செய்த நொயிலினின் அப்பா ஜோர்ஜ் ஸேர்வையரும் தத்தமது வீட்டில் தங்கியிருப்பது மிகவும் குறைவாக இருந்தமையால் அவர்களுக்கிடையே பெரிதாக நட்புறவு ஏற்பட வழியில்லாமல் போயிற்று.
எனக்கும் சில்வஸ்டருக்கும் வயது வித்தியாசம் பெரிதாக இருந்தபோதிலும் கிரிக்கட்டில் இருந்த அதீத ஆர்வம் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்திருந்தது. அவர்கள் வீட்டிலிருந்த பெரிய தொலைக்காட்சியில் போட்டிகளைக் கண்டுகளிப்பதற்காக அவனோடு அங்கு செல்வதிலே ஆரம்பித்து மெல்ல எனது வீட்டுக்கு அவனும் அவனது வீட்டுக்கு நானும் சென்று வருவது வாடிக்கையாகிப்போனது. நாளடைவிலே இந்த நெருக்கம் வலுப்பட்டு நான் எனது வீட்டிலிருப்பதே மிகவும் குறைந்து போனது. சொல்லப்போனால் சாப்பிடும் வேளை உறங்கும் வேளை தவிர மற்ற நேரங்களிலெல்லாம் ஸ்டெல்லா அக்கா வீட்டு டீவியில் கிரிக்கட் மெட்ச் அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டு கிடக்கலானேன்.
அவர்கள் வீட்டிலிருக்கும் வேளையிலே சில்வஸ்டருக்கும் நொயிலினுக்கும் அவர்களது வீட்டுப் பாடங்களைச் செய்வதற்கு நான் உதவ ஆரம்பித்தேன். இதனால் அவர்களின் பாடசாலை அலகுப்பரீட்சைப் புள்ளிகளிலே கணிசமான அதிகரிப்பு இருந்தது. இதன் காரணமாக ஸ்டெல்லா அக்காவுக்கு என்மீது இருந்த கரிசனை மேலும் உயர்ந்துவிட்டிருந்தது. அதுமட்டுமல்லாது நான் அவர்களது வீட்டிலே அதிகநேரம் செலவிடுவதையும் அவர் பெரிதும் விரும்பியிருந்தார்.
நொயிலினின் அப்பா ஜோர்ஜ் ஸேர்வையர் தனது தொழில் நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. இதனால் மாதத்தில் அரைவாசிக்காலம் அவரால் வீட்டில் இருக்க முடிவதில்லை. அவர் இல்லாத நாட்களிலே நானும் எனது இளைய தங்கையும்தான் நொயிலின் வீட்டிலே துணைக்குச் சென்று தங்கியிருப்பதுண்டு. பொதுவாக வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்கு அவசியமில்லாமல் அடிக்கடி போகக்கூடாது தங்கக்கூடாது என்பது எனது உம்மாவின் கண்டிப்பான சட்டம். ஆனால் எங்கள் இரு குடும்பங்களுக்கிடையிலே உருவான அந்நியோன்னியம் காரணமாக ஸ்டெல்லா அக்கா வீட்டில் தங்குவதிலேமட்டும் அந்த விதி எனக்குச் சற்றுத் தளர்த்தப்பட்டிருந்தது. நானும் அந்தச் சலுகைக்கு பங்கம் ஏற்படாதவாறுதான் நடந்து கொண்டிருந்தேன். ஆனாலும் விதி வேறு வடிவத்தில் என்னைக் குறிவைத்திருந்ததை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
அப்போது நொயிலினின் வயது வெறும் 14 தான். அவள் எல்லோருடனும் சகஜமாகவே பழகக்கூடியவள் என்பதால் என்னோடும் அதேபோலவே வெகு இயல்பாக நட்புடன் பழக ஆரம்பித்தாள். எங்கள் இருவருக்குமிடையிலே கலந்துரையாடுவதற்கு பொதுவான பல விடயங்கள் இருந்த காரணத்தால் காலப்போக்கிலே அந்த நட்பு மேலும் வலுப்பெற்றது. அந்த நாட்களிலே எங்கள் இருவருக்கும் இடையில் சிநேகிதத்தையும் மீறிய பருவவயதுக்குரிய ஒருவித ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது. ஆயினும் அந்த ஈர்ப்பு ஒரு திட்டமான உறவுவடிவத்தை அடைவதற்கு முன்னமே நாங்கள் இருவரும் பிரிந்துவிட வேண்டிய நிலைமை உருவானது.
ஆம்! என்ன காரணத்தினாலோ திடீரென்று நொயிலின் அவளது பெற்றோரால் எங்கள் ஊரிலுள்ள பாடசாலையிலிருந்து திருகோணமலை நகரிலுள்ள ஒரு கிறிஸ்தவ மிஷன் பாடசாலை விடுதியிலே சேர்க்கப்பட்டாள். அந்த திடீர் முடிவுக்குரிய காரணம் நொயிலினுக்குக் கூட அப்போது தெரிந்திருக்கவில்லை. நொயிலின் விடுதிக்குச் சென்றபிறகு எங்கள் தொடர்பு ஏறக்குறைய விடுபட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் சில்வஸ்டருடன் எனது நட்பு எதுவித குழப்பமுமின்றித் தொடர்ந்தது. குறிப்பாக நொயிலினின் தந்தை வீட்டிலே இல்லாத காலங்களில் நாங்கள் இருவரும் நொயிலின் வீட்டில் தொலைக்காட்சியே கதியெனக் கிடந்தோம். இப்படியே சில மாதங்கள் கழிந்தன.
அந்த நேரத்தில்தான் யாருமே எதிர்பார்த்திராத ஒரு விடயம் நடந்தது.
ஒருநாள் மாலை வெளியூரிலிருந்து திரும்பிய ஜோர்ஜ் ஸேர்வையருக்கும் ஸ்டெல்லா அக்காவுக்கும் என்றுமில்லாதவாறு பலத்த வாய்த்தர்க்கம் ஒன்று ஏற்பட்டது. அக்கம் பக்கமே ஆச்சரியத்திலாழும் வகையிலே இரவு வெகுநேரம் வரை நீடித்த அவர்களது தர்க்கத்திற்கு என்ன என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை. அது ஒரு தம்பதியரின் தனிப்பட்ட விடயம் என்பதால் நாங்கள் யாருமே அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அடுத்த நாள் காலையிலே நொயிலின் வீட்டிலிருந்து யாருமே வெளியலே வரவில்லை. எனது வீட்டில் உள்ளவர்களும் இரண்டொரு நாட்களுக்கு என்னை அங்கு செல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டனர். அடுத்த நாள் மதியம் வரை பொறுத்துப் பார்த்த எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது சில்வஸ்டரைக் கண்டால் என்ன விடயம் என்பதை அறியலாம் என்று எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டுக்குப் போனேன்.
நான் அங்கு சென்றபோது அவர்களது வீடு திறந்துதான் இருந்தது. ஆனால் என்றுமில்லாதவாறு மிகவும் அமைதியாயிருந்தது.
'சில்வஸ்டர்! சில்வஸ்டர்!' என்று கூப்பிட்டேன். ஆனால் பதிலே இல்லை.
ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்று என் உள்ளுணர்வு உந்தித்தள்ள சட்டென்று திரும்பிச் சென்று விடுவோமா என்று கூட நினைத்தேன். ஆனால் அதற்குள் திடீரென வெளியே வந்தார் நொயிலினின் அப்பா ஜோர்ஜ் ஸேர்வையர்.
அவரை அதற்கு முன்பு வரை நான் அப்படி ஒரு கோலத்திலே பார்த்திருக்கவில்லை. அவரது கண்கள் இரண்டும் சிவந்திருக்க ஓர் அடிபட்ட புலிபோல ஆவேசத்துடனிருந்தார்.
'ஆ! ஷகீப்! வாங்க! நல்ல நேரத்திலதான் வந்திருக்கீங்க! இப்படி.. வாங்க!' என்று குரலில் ஒருவித நையாண்டி தொனிக்க எனது கையைப்பற்றித் தரதரவென்று இழுத்துக் கொண்டு உள்ளே கொண்டு சென்றார். உள்ளே படுக்கையறையினுள்ளிருந்த கட்டிலிலே அழுது சிவந்த முகத்துடனிருந்த ஸ்டெல்லா அக்கா என்னைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து, 'வேணாம் ஷகீப்! வராதீங்க...வராதீங்க..!' என்று வெறிபிடித்தவர் போல அலற...
நான் பயந்துபோய் வெளியே வந்தபோது வீட்டு முற்றத்தில் அக்கம் பக்கமே கூடிநின்றது.
'என்னடா ஷகீப், ஒண்ணுமே சொல்லாம யோசிச்சிட்டேயிருக்க பதில் சொல்லவே மாட்டியாடா நீ?'
'ம்ம்? என்ன கேட்ட நீ..? இல்லடா.. அஸ்லம், அவளை நான் இப்பவும் அதேபோலத்தான்டா விரும்புறேன்.. அதில மாற்றமில்ல.. ஆனால் அவள் நொயிலின் என்ன ஐடியாவுல இருக்கிறாள் என்டு எதுவுமே எனக்குத் தெரியாதுடா.. நான் கொழும்பு கெம்பஸ்ல பைனல் இயர்ல இருந்தநேரம் அவ அம்மா தவறிப்போன நேரம் வந்ததுக்கு இப்பதான்டா ஏழு வருஷம் கழிச்சு கனடாவுலருந்து வந்திருக்கிறாள்.. இப்ப அவள்ட அப்பாவுக்கும் பைபாஸ் முடிஞ்சு ஒரு மாதம் கூட ஆகல்ல.. தவிர இப்ப அவள் என்ன நோக்கத்தில இருக்கிறாளென்டு கூடத் தெரியாம எப்படிடா நான்..?'
' அப்ப நான் வேணுண்டா ஒருக்கா கதைச்சுப் பார்க்கட்டா ஷகீப்..? இப்ப அப்படியே மூதூருக்குத்தானே வருவாள்? நான் பேசிப்ப பாக்கிறண்டா! அவள்ற நம்பர் வச்சிருக்கியா..'
'இல்லடா.. இன்னும் கேக்கல்ல... ஆனா அவள் இன்டைக்கு கம்பளைக்குப் போகிறாள்றா மச்சான். எதுக்கும் நீ இப்ப எதையும் அவசரப்பட்டு கேட்டு வச்சிடாதடா!'
உடனே அஸ்லம் சிறிது யோசித்து விட்டு,
'சரி, நீ இப்ப நேர உடனே வீட்டுக்குப்போகணுமா ஷகீப்? நீ பைக் தானே வச்சிருக்கிறாய்.. எனக்கொரு உதவி செய்ய மாட்டியாடா?'
'சொல்லுடா! செய்றேன்.!'
'மச்சான், இதில ஒரு பன்னிரண்டாயிரம் இருக்குடா. எச். என். பீ. டவுண் பிராஞ்ச்ல போய் இதை நான் தாற எக்கவுண்ட் நம்பர்ல ஒருக்கா டிப்பொசிட் பண்ணிவிடு மச்சான். இன்டைக்கே இப்பவே போட வேண்டிய காசுடா.. எனக்குப் போய் வர நேரமாகிடும்..' என்று பணத்தையும் நம்பரையும் நோட் பண்ணித் தந்தான்.
'சரிடா ஷகீப்! அந்தா ஒரு பஸ் வருது. நான் நாளைக்குக் காலைல திரும்பி வந்திருவேன்.. பகல் கடையிலதான் இருப்பன்..அந்தப்பக்கம் வந்தா வா கதைப்பம் ஸொறிடா உன் கெஸ்ட் காத்திட்டிருப்பா என்ன..?' என்று அவன் விடைபெற்றுப் பஸ்ஸிலேறியதும்,
' இட்ஸ் ஓகே! நீ போ! நான் இந்தா இப்பவே போய் காசைப் போட்டுட்டு வந்து விடுறன்..' என்று பைக்கை டவுண் பக்கம் திருப்பினேன்.
'என்ன ஷகீப் எனக்காக நெல்லிரசம் தேடி மிச்ச நேரம் அலைஞ்சீங்களா..?
பைக்கை முற்றத்தில் நிறுத்திவிட்டு நான் இறங்கியதும் ஷைனுவை மடியில் வைத்து அவளது பிஞ்சுக் கைகளுக்கு டியூப் மருதாணி இட்டவாறே கேட்டாள், நொயிலின்.
'ம்! கொஞ்சம் அலைச்சல்தான்!'
அவளது அரவணைப்பிலே ஷைனுக்குட்டி வெகுசந்தோஷமாக இருப்பதைப் பார்த்ததும் அஸ்லம் கூறியதுதான் ஞாபகம் வந்தது எனக்கு. அவன் சொன்னபடியே அவளிடம் நேரடியாய்க் கேட்டுவிடலாமா என்றுகூட ஒரு கணம் நினைத்தேன். பின்பு தயிரையும் நெல்லிரசப் போத்தல்களையும் உள்ளேயிருந்த மேசையிலே வைத்துவிட்டு கிச்சன் உள்ளே சென்று இரண்டு கிளாஸ்களைக் கழுவியெடுத்தேன். ப்ரிட்ஜ்ஜைத் திறந்து ஐஸ்க்யூப்ஸ் போட்டு நெல்லிரசத்தை ஊற்றிக்கொண்டு வந்து அவள் முன்னே ட்ரேயை வைத்தேன்.
'இது என்ன ஷகீப்! இதெல்லாம் நான் செய்து தரவேண்டியது...நீங்க..போய்' என்று சிணுங்கினாள். 'இல்ல இன்டைக்கு லீவு நாள் என்டதால நான்தான் வழக்கமா வர்ற சேர்வண்ட் பொம்பிளைய வரவேணாம் என்று சொல்லிட்டேன்'
'இருங்க ஷகீப், கையெல்லாம் மருதாணி பேஸ்ட் பட்டிருக்கு கழுவிட்டு வாறேன்' என்று உள்ளே சென்றதும், 'வாப்பா, ஏன் இந்த அன்ரி மட்டும் ஒங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடுறாங்க..?' என்று கேட்டாள் ஷைனு.
எனக்கு உடனடியாக என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
'அதுதானே! சரி நம்ம ஏனென்று கேட்டுடலாம்.. முதல்ல நீங்க இந்த ட்ரிங்கக் குடிங்கடா' என்று ஒரு க்ளாஸை எடுத்து இரு கைகளிலும் மருதாணி இட்டிருந்த ஷைனுவுக்குப் பருக்கிவிட்டேன். அந்தப் பச்சைநிறத் திரவத்தை அவள் புதிதாகப் பார்த்து, 'இது என்ன புது ட்ரிங்ஸ்.. இன்டைக்கு மட்டும் இதையேன் வாங்கியிருக்கீங்க வாப்பா?' என்றாள்.
'ஏன் தெரியுமா ஷைனுக்குட்டி? அது எனக்கு மிச்சம் விருப்பமான ட்ரிங்க்!அதனால உங்கட வாப்பா டவுண்ல எச். என். பீ. பேங்க் வரைக்கும் போய் தேடியலைஞ்சு வாங்கி வந்திருக்காரு தெரியுமா?' என்று அபிநயித்தபடியே நொயிலினும் எங்கள் உரையாடலில் வந்து சேர்ந்து கொண்டாள்.
எனக்குத் திக்கென்றது!
'ஹேய்! இது எப்படி உனக்குத் தெரியும்?' என்று திகைத்த என்னைச் சிறிதும் பொருட்படுத்தாமல், 'அதோட, உங்கட வாப்பாவுக்கும் பிடிச்ச ட்ரிங்க்தான் அது.. தெரியுமா? அப்படித்தானே ஷகீப்?' என்று சொல்லிக்கொண்டே போனாள் நொயிலின்.
'ய்யாக்!..நல்லாவே இல்ல.. ஆன்ரி ஏன் நீங்க வாப்பாவை பேர் சொல்லிக் கூப்பிடுறீங்க?'
'மாட்டிக்கிட்டாயா?' என்ற தொனியிலே நொயிலினைப் பார்த்துப் புன்னகைத்தேன் நான். அவளும் சிறிது திகைத்துவிட்டு சிரித்தபடியே,
'பேர் வச்சிருக்கிறதே கூப்பிடத்தானே?' என்றாள்.
'அப்போ நானும் உங்களை பேர் சொல்லிக் கூப்பிடவா?' மடக்கினாள் என் ஷைலுக்குட்டி.
'சரி, நொய்லீன் என்றே கூப்பிடு எனக்கென்ன?' என்று எனது மடியிலிருந்த ஷைனுவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு வாய்விட்டுச் சிரித்தாள். அவளது சந்தோஷம் எனக்கும் தொற்றிக் கொண்டது. இப்போது கூட 'பேசாமல் கேட்டுவிடுவோமா' என்று துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு,
'அதெல்லாம் இருக்கட்டும், அப்பாவுக்கு ஒபரேஷன் நிறையச் செலவாயிட்டுதா நொயிலின் ?' என்று கேட்டேன்.
'ஆமாம்! ஒரு மூன்றுதான் செலவாகுமென்டுதான் நினைத்தோம்..ஆனால் கடைசியில ஏழு ஏழரைக்குக்கிட்ட தேவைப்பட்டுட்டுது தெரியுமா.. ஏன் கேட்டீங்க ஷகீப்?'
'ஓ! அதனாலதான் உன்ட நகையெல்லாம் வித்திட்டியா?' என்று வாய்வரை வந்ததை கேட்காமல் விட்டுவிட்டேன்
'என்ன யோசனை?'
'ஒன்றுமில்லை.. நீ எப்படி இந்தச் செலவையெல்லாம் சமாளிக்கிறாய் என்றுதான் யோசித்தேன்..' என்றேன் உண்மையான கரிசனையோடு.
அவள் முகம் சட்டென மலர்ந்தது. உடனே ஷைனுவைப் பார்த்துக் கண்ணடித்தாள். அவர்கள் இருவருக்குமிடையிலே எனக்குத் தெரியாத ஏதோ ஒரு மௌன உரையாடல் போய்க்கொண்டிருப்பது இலேசாகப் புரிந்தது.
'ஷகீப்! நீங்க இன்னமும் என்மேல உண்மையான அக்கறையோடதான் இருக்கிறீங்களா.. சொல்லுங்க?' என் கண்களை நேருக்கு நேராய்ப்பார்த்துக் கேட்டாள் நொயிலின். அவளது விழிகளின் கூர்மையை ஏனோ என்னால் தாங்கவே முடியாதிருந்தது.
'ம்! ஏன்?' என்றேன் வெகு சுருக்கமாக.
'அது..வந்து அது உங்களையும் ஷைனுக்குட்டியையும் இப்படித் தனியா விட்டுட்டு போக எனக்கு ஏனோ மனசு வருகுதேயில்ல..'
'..................'
' ஓம்! வாப்பா.. இந்த ஆன்ரி நம்மளோடையே இருக்கட்டுமே வாப்பா! நல்ல ஆன்ரி?'
'யேய் ஷைனு.. பெரிய கிழவி மாதிரி பேசாத..!'
'ஏன் சும்மா அவளை அட்டுறீங்க ஷகீப்? அதோட ஏன் இப்படி நடிக்கிறீங்க ஷகீப்?' என்று கேட்டவளைச் சட்டென்று அதிர்ந்துபோய் பார்த்தேன்.
'எனக்கு எல்லாம் தெரியும் ஷகீப்! உங்களை பேங்குக்கு அனுப்பிட்டு உங்க ப்ரெண்ட் அஸ்லம் அண்ணா போற வழியில இங்க இறங்கி வந்து எல்லாம் சொல்லிட்டுத்தான் போனாரு தெரியுமா...?'
'அடப்பாவி அஸ்லம்! இதுக்குத்தானா.. என்னை நீ ஞாயிற்றுக்கிழமையில பேங்குக்குப் போய் நோண்டியாக்கி அலைக்கழிய வச்சாய்?' அவனது குறும்பை நினைத்துக் கோபமும் சிரிப்பும் ஒன்றாக வந்தது.
'ஏன் ஷகீப், உங்க மனதில இருக்கிறது எதையும் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லவே மாட்டீங்களா நீங்க?' என்றபடி என்னருகிலேயே வந்து அமர்ந்து கொண்டாள் நொயிலின். அவளது
அழகிய விழிகளிலே கண்ணீர் குளம்கட்டியிருந்தது.
'நீயும் கூடத்தான்... இன்னும் வெளிப்படையாக எதையும் சொல்லவே இல்லையே, மக்கு வயலின்! ' என்று நான் சொன்னதுதான் தாமதம். அதற்குமேல் அவள் ஒரு வினாடியும் தாமதிக்கவில்லை.\
பாய்ந்தோடி வந்து என்னை இருகைகளாலும் அணைத்துக்கொண்டு எனது மார்பிலே தலை புதைத்து ஓ வென்று குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினாள். என்னால் அவளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவளது அழுகை இப்போதைக்கு நிற்காது என்பதால் அப்படியே விட்டுக்கொண்டிருந்தேன்.
எனது விழிகளிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
எங்கள் இருவரையும் பார்த்து நடப்பது புரியாமல் திகைத்துப்போயிருந்த ஷைனுவை என் இரு கைகளையும் நீட்டி நான் அழைக்க அவளும் ஓடிவந்து தனது சின்னஞ்சிறு மருதாணிக் கைகளால் எங்கள் இருவரையும் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.
நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கண்ணீர் சொரிந்து கொண்டிருப்பதையெல்லாம் எதிர்ச்சுவரில் ஒரு சதுரவடிவச் சட்டகத்தினுள்ளேயிருந்து மாறாப் புன்னகையோடு பார்த்துக் கொண்டேயிருந்தார், நொயிலின் மற்றும் ஷைனப்பானு ஆகியோரைப் பெற்றெடுத்தவரும் என்னுடைய வளர்ப்புத் தாயுமாகிய ஸ்டெல்லா அக்கா.
-The End -
- மூதூர் மொகமட் ராபி
Hi Rafi,
ReplyDeleteஅழகான மனதை என்னவென்று சொல்ல முடியாதபடி பிசையும் ஒரு (காதல்) கதை. இப்படிச் சொல்வது கூடப் பொருத்தமா தெரியவில்லை. எது எப்படியோ வாசிப்பதற்கு மிகவும் நன்றாகவுள்ளது.