Wednesday, August 1, 2012

சிறுகதை : ஷாஜஹான்


 ஃப்ரீ வீஸாவும் சிக்கன் ஷவர்மாவும்










வன் ஏசுகிறானா இல்லை என்னிடம் ஏதாவது செல்லம் கொஞ்சுகிறானா என்றே விளங்கவில்லை. முன்னமே கேள்விப்பட்டது போலவே அந்த மொழி கொஞ்சம் இனிமையாக இருப்பது போல்தான் பட்டது. ஒரு வகையான ராகம் அதன் ஒவ்வொரு சொல்லிலும் விரவிக்கிடந்தது. அதை அவன் உச்சரித்த குரலில் ஒருவித வசீகரமும் இருந்தது. பொதுவாகவே எல்லா அரபிகளுக்கும் அந்த வசீகரம் வாய்த்திருக்கும். அவர்கள் பேசும் மொழியின் இனிமையால் அவ்வசீகரம் கைகூடியதா இல்லை அவர்களது குரலின் வசீகரம் அம்மொழியை இனிமையாக ஆக்கிவிட்டிருந்ததா என்பதை என்னால் இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுது என் முகத்தை நோக்கி உமிழப்பட்டுக் கொண்டிருக்கும் வசைச் சொற்களின் இனிமையும் அப்படிப்பட்டதே. ஆனால் கொழுத்தும் வெயிலுடன் கூடிய இந்தக்காலைப் பொழுது அதை ரசிக்க முடியாதவனாய் என்னைச் செய்திருந்தது. அரபு வானத்தின் சூரியன் எங்களது சூரியனை விட வீரியம் மிக்கது, அரபிகளின் மனத்தைப்போலவே. ரொட்டித்துண்டை சீண்டிக்கொண்டிருக்கும் ஒரு காகத்திடமிருந்து இன்னொரு காகம் வந்து கொத்திப்பறித்த பின் அதைப் பறிகொடுத்த காகம் பார்க்குமே ஒரு பார்வை... அப்படி ஒரு பார்வையை அவன் மீது வீசிவிட்டு, அந்தப் பார்வையின் அர்த்தத்தை முழுவதுமாக அவன் புரிந்துகொள்ளும் முன்பே 'சுக்ரன்' என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

'ஆயாளு எந்தா பறஞ்சதுந்நு மனசிலாயோ...?' என்று சம்ஸுக்கா கேட்டதற்கு, 'என்னத்தைப் பெரிசாப் பறஞ்சிருக்கப் போறான்..? பாஸ்போர்ட் வேணும்டா இருநூறு தினாரோட வாடா வேசி மகனேன்டு பறஞ்சிருப்பான்'.
 
சம்ஸுக்கா இதழ் பிரியாத சிரிப்பொன்று சிரித்தார். இந்தச் சிரிப்பை அவரால் மட்டுமே சிரிக்கமுடியுமென நான் நினைக்கிறேன். எப்போதாவது அபூர்வமாகத்தான் அப்படிச் சிரிப்பார். அந்த அரபிக்காரனிடம் இப்போது போவதில் பயனில்லை என்று அவர் ஏற்கனவே சொல்லியிருந்தும் கூட நான் தான் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருந்தேன். அரபிகள் மிக்க கருணையாளர்கள் என்று நான் எண்ணியிருந்த ஒரு காலமும் உண்டு. அந்த எண்ணத்தின் மிச்ச சொச்சம் ஏதோ என் மூளையில் எங்கோ பதிந்து கிடந்திருக்க வேண்டும். அதுதான் மறுபடியும் என்னை இங்கு இழுத்து வந்து இலங்கைத் தேசத்தின் ஒரு ஓரத்தில் என்னைப் பற்றி இன்னும் முட்டாள்த் தனமாக நம்பிக்கை கொண்டிருக்கும் என் தாய்க்கு வேசிப்பட்டமும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. அலுத்துக் கொண்டே தளர்ந்து நடக்கையில் சம்ஸுக்கா  வழியிலிருந்த கேரள ரெஸ்டோரன்டுக்குள் நுளைந்து சாயாவுக்கு ஓடர் கொடுத்தார். வரும்போது இதே ரெஸ்டோரன்டில்தான் பூரியும் பாஜியும் வாங்கிக் கொடுத்திருந்தார். கடந்த சில மாதங்களாக என் உணவுக்குப் படியளப்பவர் அவர்தான். ஓசியில் குடிக்கும் சாயா என்பதைக் குறித்துக் கொஞ்சம் கூடக் கூச்சமின்றி சாயாவை ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தேன். நான் சற்று வாடியிருப்பதைப் பார்த்து'வெசமிக்கண்டா...' என்று அவர் சொல்ல நினைத்திருப்பார் போலும். சொல்லவில்லை. கடந்த ஆறு மாத காலத்துக்குள் நான் என் நிலையை நினைத்து கழிவிரக்கம் கொண்டோ கவலைப்பட்டோ அவர் பார்த்ததே இல்லை என்பதுதான் காரணம். ஒருவேளை 'என்ன ஜென்மம் இவன்?'என்றுகூட சிலநேரம் அவர் யோசித்திருக்கக்கூடும். அவர் நினைத்தாரோ இல்லையோ நான் என்னைப்பற்றி அப்படி பல நேரங்களில் நினைப்பதுண்டு.
 
இப்பொழுது தொத்திக்கொண்டிருக்கும் இந்த ஹோட்டல் வேலையில் நிலைத்தால் எப்படியும் இன்னொரு ஆறு மாசத்திற்குள் பாஸ்போர்ட்டை மீட்டுவிடலாம்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை மீட்கும் பாரம் மட்டுமே என் தலையில் சுமத்தப்பட்டிருக்கவில்லையே... இருக்கும் பாரங்களின் விசை இமைகளை ஈர்த்து, இடுக்கி போட்டு இழுப்பதால் இழந்த இரவுத் தூக்கங்களை நினைத்துப்பார்க்கிறேன். வெளிநாடு போகிறேன் பேர்வழி என்று ஏற்கனவே இரண்டு முறை வாப்பாவின் நெஞ்சில் ஏறி நான் மிதித்த மிதியில் ஏகப்பட்ட கடன். கட்டாரில் ஆறு மாசம், சவூதியில் இரண்டு மாசம். திரும்பி வந்த இரண்டு தடவையும் அவரின் முகத்தில் முழிக்கவே திராணியற்று அவரில்லாத சமயங்களாகப் பார்த்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அவர் வரும் முன்பே ஓடிக்கொண்டிருந்தேன். இப்படி வீட்டை விட்டு நான் அந்நியமாகிக் கொண்டிருந்த நிலையில் நல்ல வடிவான காதலொன்றும் வந்து சேர்ந்து கல்யாணமும் செய்து கொண்டபோது வாப்பாவுக்கும் எனக்குமான உறவு முற்றிலுமாக அறுந்து போனது. கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு மாதம் வீட்டுக்குச் செல்லவேயில்லை. பின்னர் மெல்ல மெல்ல உம்மாவைத் தாளித்து வீட்டில் ஒண்டினேன். அப்போதும் வாப்பா இல்லாத நேரங்களிலேயே போக்குவரத்து. 'இந்த அடப்புக்குள்ள அவன் வந்தா அவன்ட காலை வெட்டிப் போட்டுருவன்'  என்று அவர் சொல்லியிருந்தார்.
 
'இல்ல..நான் அவள 'முடிக்கத்தான்' போறன்...'  என்று பள்ளித்தலைவர் மற்றும் குடும்பப் பெரியவர்களின் முன்னிலையில் நான் அடம்பிடித்து நின்ற அந்தப் பொழுதில்தான் எங்கள் வாப்பா கண்கலங்கியதை முதன் முறையாகப் பார்த்ததாக பின்பொரு தரம் தாஹிர் மச்சான் என்னோடு பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார். தாய்மாமா என்ற முறையில் எங்கள் வாப்பாவின் மீது அவர் நல்ல மரியாதை கொண்டிருந்தார். வாப்பா கலங்கியதைப் பார்த்து தனக்கும் அழுகை வந்ததாகச் சொன்னார். இன்றைக்கே 'காவின்'எழுதவேண்டும் என்று நான் எடுத்திருந்த தீவிர முடிவு, வீட்டில் ஏற்படுத்தியிருந்த இறுக்கமான, மிகவும் குழப்பமான சூழ்நிலை காரணமாக அப்போது நான் யாருடையவும் முகத்தையோ கண்களையோ நேருக்கு நேர் பார்க்கத் துணியவில்லை. வாப்பா கண்கலங்கியதைக் கூடப் பார்க்காமல் தலைகுனிந்துதான் நின்றிருந்தேன். வாப்பா அன்று நிறையப் பேசினார் என்று நினைக்கிறேன். என்னை நோக்கி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. கிராம சேவைப் பிரிவுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற ரீதியில்'கள்ளத்தொடர்பு' வைத்திருக்கும் 'ஊர்ப்பெரியவரை' விளித்து மதித்துப் பேசிக்கொண்டிருந்தார். அவரோ இடைக்கிடை 'அது சரி', 'அது சரி' என்று சொல்லிக்கொண்டிருந்ததாக ஞாபகம். அப்போது வாப்பா பேசிய பெரும்பாலான சொற்கள் நான் கொண்டிருந்த பித்தத்தின் காரணமாகவோ என்னவோ என் புறச்செவிகளைத் தொட்டு உள்ளே நுளையும் வழி மூடப்பட்டிருந்ததால் வெறுமனே காற்றில் கரைந்து போயின.
 
எனது பிடிவாதத்தால் அன்றிரவே அனைத்தும் நடந்தேறி, தேக்கி வைத்திருந்த உடல் வெப்பம் முழுவதும் முதலிரவில் வடிந்து பெருந்தூக்கம் ஆட்கொண்டிருக்கையில்,மதுவருந்திவிட்டு  உறங்குபவன் நடுச்சாமத்தில் தண்ணீர் விடாய்க்கத் திடுக்கிட்டு விழிப்பது போல் விழித்தேன். முன்னிரவில் காற்றில் கரைந்துபோன வாப்பாவின் வார்த்தைகளில் சில அந்தப் 'புதிய' அறையின் சுவர்களை நிறைத்திருக்கக் கண்டேன். ஊர்த்தலைவரிடம் வாப்பா பேசிக்கொண்டிருந்தார், 'இவ்வளவு நாளும் உழைக்கப் போறாக... என்ன உழைக்கீங்க...எவ்வளவு உழைக்கீங்க...என்ன செய்றீங்கன்டு கேட்டிருப்பனா? அவக உழைக்கிறத என்ன செஞ்சாக...? பவுடர்ப் பொட்டியும் குளோன் போத்தலும் வாங்கியே செலவழிச்சாங்... அவகளுக்குப் பிறகு நாலு புள்ளைகள் கிடக்கு... அதுகளுக்கு ஒரு டொஃபித் துண்டாச்சும் வாங்கிக் கொடுத்திருப்பாகளா...? மத்தாக்கள் வாங்கித் தின்டு குடிக்கிறதப் பாத்து என்ட புள்ளைகளும் ஆசைப்படுந்தானே..?பின்னேரத்துல ஒரு டேஸ்ட் கிழங்குப் பார்சல் வாங்கிட்டு வந்து குடுக்க நமக்குக் கட்டாதுன்டு மார்க்கட்டுக்குப் போய் மையறுக்கிழங்கு வாங்கிட்டு வந்து நானே பொரிச்சுக் குடுப்பன் என்ட பிள்ளைகளுக்கு... இப்புடியிரிக்கி வூட்டு நிலம...இதெல்லாம் இவகளுக்குத் தெரியுமான்டு கேளுங்க ஹாஜியார் பாப்பம்....'
 
இப்படி சில இரவுகளில் கண் விழிப்பதும் வாப்பாவின் குரல் சுவர்களில் கேட்பதும் நிகழ்ந்தது. அதற்குப் பயந்து கண்விழிக்கும் தருணத்தையெல்லாம் காமத்தில் கரைக்க முயற்சித்தேன். காலப்போக்கில் அந்த சுவர்க்குரல் தொலைந்து போனது.
 
பேசிக்கொண்டிருக்கும்போது, '...அப்படிப்பட்ட மனுசனைக் கத்த வச்சிட்டியேடா' என்று தாஹிர் மச்சான் சொல்ல, 'எப்படிப்பட்ட...?' என்று கேட்டு அதற்குப் பதிலாக ஒரு முறைப்பையே பதிலாகப் பெற்றேன். சற்று நேரம் கழித்து 'இல்ல...மச்சான்..நான் எப்படியாவது கஷ்டப்பட்டு அவகளுக்கு உதவி செய்வன்' என்று நான் சொன்னபோது என்னை அவர் பார்த்த பார்வையை இப்போதும் என்னால் மறக்கமுடியவில்லை.
 
'முதல் ஏதாவது வேலைய ஒழுங்காப் பாத்து பொண்டாட்டியக் காப்பாத்துற வழியப் பாரு,இனி கடன் அது இதுண்டு கேட்டு என்னைத் தொந்தரவு படுத்தாத!' என்று சொன்னார்.
 
இரண்டு வருடங்கள் எப்படியோ கழிந்து போனபின் தொடர்ந்து நான் கஷ்டப்படுவதைக் காணச்சகிக்காமல் உம்மாதான் யாரிடமோ நகையை வாங்கி அடகு வைத்து விட்டுக் காசு தந்தா. அந்தக் காசைக்கொண்டு வந்து இறங்கிய இடம் குவைத். ஆறு மாதத்தில் அரபிக்கார எஜமானனிடம் சொல்லிக்கொள்ளாமல் வேலை பார்க்குமிடத்தை விட்டுப் பாய வேண்டிய நிலை ஏற்பட்டு, வெளியிலே நல்ல வேலை கிடைத்தும் பாஸ்போர்ட் அவனிடம் இருப்பதால் வேலையிலும் நிரந்தரமாகச் சேர முடியாத துர்ப்பாக்கியம். வேலை தரும் புதிய அரபிக்கு பாஸ்போர்ட் முதலிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. சம்ஸுக்கா  மட்டும் இல்லையென்றால் மூன்றாவது தடவையாகவும் வெறுங்கையுடன் ஊர்போய்ச்சேர வேண்டியிருந்திருக்கும்.. அவர்தான் உறுதியாகச் சொன்னார் 'எந்தெங்கிலும் பணி கிட்டும். நீ போகண்டா' என்று. கைக்குழந்தையுடனிருக்கும் என் மனைவி, படித்துக்கொண்டிருக்கும் என் இரண்டு தங்கச்சிகள், கொள்ளிச்சைக்கிள் இழுக்கும் வாப்பா... இவர்களைப் பற்றிய கவலை என்னைவிட அவருக்கு அதிகமாக இருந்தது ஏனென்று புரியவில்லை. குவைத்தில் வாழுகின்றவர்களில் என் மீது அக்கறை கொண்ட ஒரே ஜீவன் இவர்தான். ஊர்க்காரர்கள்,சில பல உறவுக்காரர்கள் என்று இங்கிருந்த போதும் எவரையும் நான் நாடுவதில்லை. ஏனென்று தெரியவில்லை, ஊர், ஊர்க்காரர்கள் என்றாலே வெறுப்பாக இருந்தது. இன்றுகூட தான் வேலைக்குச் செல்லும் நேரத்தை எனக்காக ஒத்திப்போட்டு விட்டு வந்து இந்த அரபு முதலையிடம் தூஷண வார்த்தைகளை சம்ஸுக்கா  கேட்டுக்கொண்டிருந்தார்.
 
'எந்தடா பலமாயிட்டு யோசிக்குந்நு?' என்று சம்ஸுக்கா கேட்டபோது, 'ஒண்ணுமில்ல க்கா' என்று விட்டு கண்ணீர்த்துளிகளை மறைக்கத் தூரத்தே பார்ப்பவனைப்போல் நடித்தேன். 'சிகரெட் ஒந்நு வலி' என்று வாங்கித் தந்தார். அவர் புகைப்பதில்லை.
 
கடந்த சில மாதங்களாகத் தெரிந்தவர்கள் யாரையும் சந்திப்பதை நிறுத்தி விட்டேன். முக்கியமாக எங்கள் ஊர்க்காரர்களை. இந்த வேலை கிடைக்கும் முன்பு ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருந்த போது காசிம் ரைவர் நானா வந்து அரை போத்தல் கசிப்புக் கேட்டார். கடையிலிருக்கும் சிங்களப் பொடியனிடம் சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். அவர் ஊருக்குச் சென்றபோது நான் குவைத்தில் கசிப்புச்சாராயம் வித்துக் காசு சம்பாதிப்பதாகவும் விரைவில் பொலிஸில் மாட்டி கை வெட்டப்படுவேன் என்பதாகவும் எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரிடமோ சொல்லித் தொலைக்க, போன் எடுத்துப் பேசும்போது உம்மா ஒரே அழுகை. 'இப்புடியெல்லாம் காசு சம்பாரிக்கத் தேவல்ல கிளி... புடி பட்டா அரபிகள் கைய வெட்டிப்போட்டுருவானுகளாம்.. உழைக்காட்டியும் பரவால்ல..இஞ்ச வந்துரு மனெ.' என்று ஒப்பாரி.
 
'இல்லம்மா...வாற மாசம் வேற நல்ல வேலையொன்டு கிடச்சிடும்'
 
உம்மா நேத்திக்கடன் ஏதும் வைத்திருப்பா போல. அது பலித்து விட்டிருக்கிறது என்றே நம்பினேன். ஆண்டு அனுபவிக்கிறது என்று சொல்வார்களே.. அதற்கேற்ற மாதிரி ஒரு வேலை. 'வோல்பேப்பர்' ஒட்டுவது. அரபிகளின் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று செய்து முடித்து சம்பளமும் சலுகைகளும் பெறக்கூடிய வேலை. எனது எஜமான் நிர்ணயித்துள்ள சம்பளத்தை விடப் பல மடங்கு உயர்த்திச் சொல்லி அரபிகளை சுரண்டத் தோதான வேலை. முக்கியமான பல்வேறு அலுவலகங்களுக்கும் பணிக்குச் சென்றிருக்கிறேன். ஆள் அடையாள அட்டை (பதாகா) வழங்கும் அலுவலகம் உட்பட. அங்குதான் பதாகாவை அச்சிட்டே வழங்குகின்றார்கள். சாமான்யமாக அங்கெல்லாம் நம்மைப் போன்ற யாரும் நுழைந்துவிட முடியாது. அங்கு நான் ஒட்டிய கறுப்பு நிற சுவர்த்தாள் அந்த அதிகாரிக்குப் பிடித்து விட, என்னைப்பற்றி விசாரித்தான். பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முன்னாள் அரபு முதலாளியிடம் பறிகொடுத்துவிட்ட நான் ஒரு 'ஓடுகாலி' என்பதைச் சொன்னேன். அவன் சிரித்து விட்டு பதாகா அவசியமில்லை என்றும், ஏதாவது பிரச்சினை என்றால் தனக்கு போன் பண்ணுமாறும் கூறி நம்பரும் முப்பது தினாரும் தந்தான். ஒரு நாளில் முப்பது தினார் என்பது என் போன்றவர்களுக்கு ரொம்பவே அதிகம். முன்னர் நான் செய்த ஹோட்டல் வேலையில் எனக்குக் கிடைத்தது மாதமொன்றுக்கு ஐம்பது தினார். இப்போது நான் தனியாகக் குடியிருக்கும் அறை வாடகையே மாதத்துக்கு ஐம்பது தினார். ஒரு மனிதனின் வாழ்க்கை மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் இப்படியெல்லாம் மாறுமா என்ன?
 
மேற்படி பல்வேறு அலுவலகங்களுக்கும் நான் வேலைக்குச் சென்றிருந்தாலும் கூட நான் அதிகமும் பணி புரிய விழைவது பெருநகரங்களில் வசிக்கும் குவைத்திகள் தங்களது 'சின்னவீடுகளுக்குக்' கட்டிக்கொடுத்திருக்கும் பெரிய வீடுகளில்தான். நான் வசிப்பது குவைத் நாட்டின் மூன்றாவது பெரிய நகரம். அதிக பொலிஸ் சோதனைகளுக்குள்ளாவதும் இந்த நகரம் தான். இங்கு சகலமும் நடக்கும்; சகலதும் கிடைக்கும். இந்த நகரத்தில் விசேசமாக நான் கண்டது ஒன்று உண்டு. வேறு பெருநகரங்களில் வசிக்கும் அரபுச் சீமான்கள் பலர் தங்களது ஐந்தாம் ஆறாம் துணைவிகளுக்காக இந்நகரத்திலேயே வீடு கட்டி, பிளாட் வாங்கிக் கொடுத்திருந்தார்கள் என்பதுதான் அது. இந்நகரம் அதற்கென்றே உருவாக்கப்பட்டது போல்தான் தோன்றியது எனக்கு. அந்தளவுக்கு 'சின்னவீடுகளால்' இது நிரம்பி வழிந்தது. இவ்வாறான வீடுகளுக்கு வேலைக்குச் செல்வதென்பது எனக்குக் கொண்டாட்டம். நேர்த்தியாக வேலை செய்ய வேண்டும். அது அந்த அரபியின் வைப்பாட்டிக்குப் பிடிக்கவும் வேண்டும். அவள் அந்த அரபியின் முன்னிலையில் அழகாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும் அதன் பின் நாம் கேட்கும் தினார்களைத் தர அந்த சீமான்கள் தயங்குவதே இல்லை. அந்தப் பெண்ணுக்குப் பிடித்துப் போய்விட்ட சுவர்த்தாளை ஒட்டியவனல்லவா?நம் மதிப்பு ஏறிவிடும். அவள் முன்னிலையில் தனது தயாள குணத்தைக் காட்ட வேண்டிய ஒரு கட்டாயம் உருவாகிவிட்டதாகக் கற்பனை செய்து கொண்டு கேட்பதை விட அதிகமாகக் கொடுப்பார்கள். நூறு நூற்றைம்பது தினார் மதிப்புடைய உயர் ரக மது போத்தல்களையெல்லாம் கேட்டுப் பெற்று வந்திருக்கிறேன். தருவார்கள், ஆனால் எதையும் 'அவள்' முன்னிலையில் கேட்க வேண்டும். அதற்கு முன், அவள் மனைவியா இல்லை வைப்பாட்டிதானா என்பதை அறிந்து கொள்ளும் திறமையும் இதற்கு அவசியம். அது எனக்கு இருந்தது.
 
இந்த வேலை கிடைத்த பின் இரண்டொரு முறை சம்ஸுக்காவைப் பார்க்கச் சென்றிருந்தேன். நான் சந்தித்த அற்புதமான மனிதர் சம்ஸுக்கா . மலையாளி. வயதில் என்னை விட இரண்டு மடங்கு மூத்தவர். சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன் குவைத்துக்கு வந்தவர். பதினெட்டு வருட சம்பாத்தியத்தில் ஆறு தங்கைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்ட திருப்தியுடன் இருக்கிறார். ஆம், அவரது குடும்பத்தில் அவர் ஒரே ஆண்பிள்ளை.  இப்போதுதான் தனது ஒரே மகளுக்காக மாளிகை போன்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார். இனி மகளின் திருமணத்திற்கான நகைநட்டுக்கள் சாமான்கள் சேர்க்க வேண்டும். மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒன்றரை அல்லது இரண்டு வருடம் என்பது அவர் கணக்கு. அதன் பின், குவைத்தை விட்டுப்போய் விடுவேன் என்று சொல்லுவார். தன் வாழ்வின் இறுதிப்பகுதியைத் தனது சொந்த ஊரில் மனைவி மகளுடன் கழிப்பது பற்றிய கற்பனையில் இருந்தார். சில நேரங்களில் 'தன் இளமை முழுவதையும் இங்கே பாழாக்கிவிட்டோமே' என்ற விசனம் அவருக்கு ஏற்படும். அவ்வாறு மன உளைச்சல் ஏற்படுகின்ற வேளைகளில் முப்பது தினார் கொடுத்து ஈராக்கிய மது வாங்கிக் கொண்டு வந்து என்னுடன் சேர்ந்து அருந்துவார். ஆனால் மனப்பாரத்தை இறக்கி வைக்க வேண்டுமே என்று ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டார். ஆனால் ஒன்று மட்டும் அடிக்கடி சொல்லுவார். எக்காரணம் கொண்டும் வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவனைத் தனது மகளுக்குத் திருமணம் செய்து கொடுப்பதில்லை என்பதுதான் அது. மிகக் குறைந்த சம்பளமெனினும் பரவாயில்லை; சொந்த ஊரில் பணி புரியும் மாப்பிள்ளையே அவரது இலட்சியம்.
 
அவர் பேசாவிட்டாலும், போதையேறினால் நான் பலமாகவே பேசுவேன். என்னைப்பற்றிப் பலவாறு வெறியில் புலம்பிக் கொண்டிருப்பேன். அவற்றில் பெரும்பாலானவை சம்ஸுக்கா காலையில் சொல்லும்போது தான் தெரியவரும். அப்படித்தான் ஒருமுறை கேட்டார், 'ஏன்டே...கிழங்குப் பொரி வாங்கிக்கொடுக்கிறது எந்தா...நின்டே வல்லிய லட்ஷியமோ?'
 
நான் வேலை இல்லாமல் சிரமப்பட்ட நாட்களில் எனக்கு உண்டியும் உறையுளும் அளித்த அவருக்குப் பிரதியுபகாரமாக ஏதாவது நானும் செய்ய வேண்டும் என நினைத்து பலமுறை முயன்றிருக்கிறேன். மிக நாசூக்காக அவற்றை மறுத்து விடுவார். அவரைப்பார்க்கச் சென்ற சந்தர்ப்பங்களில் வாங்கிச்சென்ற பழங்கள் தின்பண்டங்கள் போன்ற பொருட்களை மட்டும் ஏற்றுக்கொண்டார். வேலையைப் பற்றி, தங்குமிடத்தைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். எதற்கும் நான் உண்மை சொன்னதில்லை. ஐம்பது தினார் வாடகை கொடுத்து தனியே அறை எடுத்துத் தங்கியிருக்கிறேன் என்பதைச் சொன்னால் ஏசி விடுவாரோ என்ற பயத்தின் காரணமாக அவரை என் இருப்பிடத்திற்கு அழைக்கவுமில்லை.


இந்த ஒரு வருடத்தில் நான் முழுவதுமாக மாறிப்போயிருந்தேன். வாரத்தில் ஒருமுறை மனைவியுடனும் உம்மாவுடனும் போனில் பேசினேன். மாதத்திற்கொருமுறை இருவருக்கும் செலவுக்குப் பணமனுப்பினேன். இது இரண்டையும் தவிர ஏறக்குறைய ஊரை நான் மறந்தே விட்டிருந்தேன். ஏற்கனவே வெளிநாடு சென்றதில் ஏற்பட்ட கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக்கொண்டிருப்பதாக உம்மா சொன்னா. முழுவதுமாக அடைத்திருக்க முடியும். ஆனால் நான் தான் முழுப்பணத்தையும் அனுப்புவதில்லையே. எனது செலவுகள் பல வழிகளில் பெருகிவிட்டிருந்தன. என்ன வழிகள் என்று இங்கே விபரிக்கப்போவதில்லை.
 
இந்த இடத்தில் நான் சம்ரியாவை சந்தித்ததைப் பற்றிச் சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் இந்தக்கதையை அவளிடமிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் என் குடும்பக் கதையெல்லாம் சொல்லி நேரத்தைப் போக்கடித்து விட்டேன். எனது சிங்களத் தோழி ஒருத்தி அடிக்கடி 'உங்கள் ஊர்க்காரி ஒருத்தி எனக்கு பெஸ்ட் ஃபிரண்ட்' என்று சொல்லிக் கொண்டிருந்தாள். மட்டுமின்றி அவளைப் பற்றிய பல ஆச்சரியமூட்டும் தகவல்களையும் சொல்லி வைத்திருந்தாள். இருப்பினும் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் வந்ததே இல்லை. தற்செயலாக ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது...சந்திக்காமலேயே போயிருக்கலாமே என்று இன்று வரை எண்ணச் செய்யக்கூடியவளாக அவள் இருந்தாள்.
 
அவள் எனது ஊர் மட்டுமல்ல, எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவனான நிஸாமின் தங்கையும் கூட. பாடசாலையில் என்னைவிட ஒரு வகுப்பு குறையப் படித்தாள். அந்நூர் பாடசாலைக்கு ஒரு செமினாருக்காகச் சென்றபோது தான் முதன்முதலாக அவளைச் சந்தித்தேன். நண்பர்கள் மூலமாகக் கேள்விப்பட்டது போலவே ரொம்ப அழகு. நண்பனின் தங்கை என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே எல்லோரும் அவளிடம் கண்ணியமாக நடந்து கொண்டோமே தவிர நண்பர்களுக்கெல்லாம் உள்ளே 'நப்ஸ்''  துடித்துக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். அழகி.
 

உயர்தரம் படிக்காமல் சின்ன வயசிலேயே திருமணம்...விவாக ரத்து... வெளிநாட்டு வாழ்க்கை... மறுமணம்...அதிலும் தோல்வி...குடும்பத்தினரின் உதாசீனம்... பணக்கஷ்டம்... மறுபடி வெளிநாடு என்று இப்படியான எல்லாப் பெண்களுக்குமுரிய சோகக் கதைகள் அவளிடம் நிறையவே இருந்தன. ஊரில் இருந்தபோது இரண்டொரு முறையே அவளுடன் பேசியிருப்பேன். அதுவும் நிஸாமைப் பார்க்கப் போகும் சந்தர்ப்பங்களில்தான். அங்கிருக்கும்போது எனக்கும் அவளுக்கும் இடையில் நடந்த உரையாடல் பெரும்பாலும் இவ்வாறுதான் அமைந்திருக்கும். நான் வெளியில் நின்று 'நிஸாம்' எனக் குரல் கொடுக்க அவள் 'நானா இல்ல..வெளியில போயிரிக்காரு' என்பாள். அல்லது நிஸாம் வீட்டிலிருக்கும்போது என்றால் எனது அழைப்புக்கான பதிலை அவனிடம் சொல்வாள் 'நானா! உங்கள யாரோ கூப்பிட்றாக' என்று. இவற்றைத் தவிர அவளிடம் பேச எந்த வாய்ப்பும் எனக்குக் கிடைத்தில்லை. ஆனால், இங்கே அவளைச் சந்தித்தபோது நிறையப் பேசக் கிடைத்தது. என்றால் எனக்கல்ல, அந்த சந்தர்ப்பம் அவளுக்கே கிடைத்தது எனச் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அவள் நிறையப் பேசினாள். நீண்ட நாட்களாகப் பேச்சுத்துணைக்கு ஆளே கிடைக்காமல் இருட்டறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த ஒருத்தியைப்போலப் பேசினாள். நான் நினைக்கிறேன் என்னுடன் பழகத்தொடங்கிய ஒரு வார காலத்துக்குள்ளாகவே அவளைப் பற்றிய அநேக விசயங்களை அவள் மூலமாகவே அறிந்து கொண்டேன் என்று. இத்தனைக்கும் ஒரே ஊர்க்காரன் என்ற ரீதியில் அந்த நட்பு அமைந்திருக்கவில்லை. அவளது நெருக்கமான தோழியாகிய இஷானி என்ற சிங்களப் பெண்ணுக்கு நான் நல்ல நண்பன் என்ற அடிப்படையிலே அது அமைந்திருந்த்து. காரணம் கருதியே நானும் நிஸாமின் பெயரைத் தவறியும் உச்சரித்து விடாமல் பழகினேன். தவிரவும், என்னைப்பற்றி அளவுக்கு மிஞ்சி நல்லத்தனமாகப் புகழ்ந்து இஷானி வழங்கிய சான்றிதழும் ஒரு காரணம். அவளுக்கு என்னை ரொம்பப் பிடித்துப்போய் விட்டிருந்தது. அதெப்படி என் குடும்பத்திலுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் என்னைப் பிடித்துப் போகின்றதென்பது எனக்கு விளங்காத விசயங்களில் ஒன்று, கிட்டத்தட்ட கணிதப்பாடம் போல.
 
இரண்டொரு முறை 'உன்னை எங்கயோ பாத்த மாதிரியே இருக்கு'எனக்கூறியிருக்கிறாள். பழகத்தொடங்கிய ஒரு மாத்திற்குப் பின் ஒரு மாலைப்பொழுதில் இஷானியுடன் வந்திருந்தாள். மூவரும் ஒரு கஃப்டீரியாவில் அமர்ந்து  ஒரு லெபனான் தேசத்து 'சிக்கன் ஷவர்மா'வைச்  சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதை மறுபடியும் சொன்னாள். இனிமேலும் மறைக்க விரும்பாமல் நான் 'ஓம், பாத்திருக்கம்...' என்றேன்.
 
'எங்க?'
 
'அந்நூர் ஸ்கூல்ல... ஓ எல் செமினார்ல...'
 
ஒரு தேர்ந்த நடிகைக்கு உரிய பாவனைகளுடன் புருவமுயர்த்தி உதடுகளைச் சுழித்து தோள்களைக் குலுக்கி 'ப்ச்... ஞாபகமில்லயே...' என்றாள்.
 
'ஒரு மஞ்சக்கலர் ரோசாப்பூவோட மூணு பேரு சுத்தித் திரிஞ்சீங்களே ஞாபகமிரிக்கா...? நீ..பேபி...மறுகா இன்னொருத்தி...பேரு தெரியா.. தெத்துப் பல்லுடின்டு சொல்லிச் சிரிச்சீங்களே...பிறகு நிஸாமைத் தேடி நான் உங்கட வீட்ட வரக்கொள்ள விறைச்சுப் போய் நின்டாயே.. ஞாபகமிருக்கா...?'
 
நிஸாமின் பெயரை உச்சரித்ததும் திருக்கை வாலால் விளாசப்பட்ட நாய் ஒன்று மிரண்டு பார்ப்பது போலப் பார்த்தாள். அன்றிலிருந்து சரியாக ஒரு வாரம் அவள் என்னோடு பேசவில்லை. போன் பண்ணினால் எடுப்பதில்லை. நிறையத் தடவைகள் முயற்சித்துவிட்டு கடைசியாக 'தேங்ஸ்' என்று ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினேன். அந்த உத்தி பலனளித்தது. என்னத்துக்குத்  'தேங்ஸ்?' என்று பதில் வந்தது. இந்த முறை நான் பதில் அனுப்பவில்லை. சற்றுப் பொறுத்து போன் பண்ணினாள். நான் எடுக்கவில்லை. இரண்டு நாட்கள் முயற்சித்துவிட்டு மூன்றாவது நாள் இஷானியுடன் என் அறைக்குத் தேடி வந்திருந்தாள். சற்றே அழுதாள்.
 
அவளிடம் கேள்விகள் கேட்பதில்லை என்ற என் கொள்கயினால் தர்மசங்கடமான சூழ்நிலைகள் உருவாகாமல் நான் பார்த்துக்கொண்டேன்.  மேலும், நான் பள்ளிக்கூட்த்தில் படிக்கும்போது கடைப்பிடித்த அதே கண்ணியத்தை அவளிடம் எப்போதும் கடைப்பிடித்தது அவளுக்கு என்மீது நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மனம் விட்டுப் பேசுவாள். நல்ல வருமானம் என்று சொன்னாள்...ஊரில் மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். குவைத்தில் சொந்தமாக நான்கு டாக்ஸிகள் ஓடுகின்றன. அதாவது நான்கு ட்ரைவர்களுக்கு அவள் வேலை வழங்கிய எஜமானி என்ற நிலையில் இருந்தாள். வாழ்க்கை பற்றி எனக்கே பிடிபடாத தத்துவங்களெல்லாம் பேசுவாள். அவள் 'ஃப்ரீயாக' இருக்கின்ற பகல் பொழுதுகளில் மாத்திரமே அவளைச் சந்திக்க முடியும். இரவுகளில் போன் பண்ணவோ பேசவோ முடியாது. அவளது தற்காலிக கணவனான மலையாளி வேலை முடிந்து வந்துவிடுவான். இவன் மூன்றாவது தற்காலிகக் கணவன் என்று இஷானி சொன்னாள். 'அவனுக்கு இவளைப் பற்றித் தெரியாதா?' என்று கேட்டதற்கு, 'அவள் ஆண்களிடம் உண்மையாக நடந்துகொள்வதை விட்டு ரொம்ப காலமாகிவிட்டது' என்றாள்.
 

கையில் காசில்லாத தருணங்களில் காசும் தந்திருக்கிறாள். 'காசில்லாம உலகமில்ல..வாழ்க்கையுமில்ல' என்பது தான் அவள் சொன்னதிலேயே எனக்குத் தெரிந்திருந்த தத்துவம். பெரும்பாலும் தரித்திரத்தில் உழல்கின்ற அனைவருக்கும் இது தெரிந்த தத்துவமாகவே இருக்கும். அதிலும் என்னைப் போன்ற தரித்திரக்காரர்களுக்கு என்றால் சொல்லவும் வேண்டுமா?
 

நேற்று மாலை கடைசியாக அவளைச் சந்தித்த போது, கேட்கக் கூடாது என நினைத்திருந்த அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன். 'உனது 'இந்த' வாழ்க்கையப் பற்றி உனது குடும்பத்தினருக்குத் தெரியுமா?' என்று. மிக இயல்பாக 'தெரியும்' என்றாள்.
 
'நானாவுக்கு?'
 
'தெரிஞ்சத்தால தான் அவரு கதைக்கிறல்ல..' என்றாள். 'ஊர்ல இருக்கிற சில சொந்தக்காராக்களுக்கே தெரியும்..நானா குவைத்திலயே இரிக்காரு..அவருக்குத் தெரியாம இரிக்குமா?'  என்று சிரித்த போது ஒரு கணம் அவள் முகத்தில் குழந்தை ஒன்று தோன்றி மறைந்ததைக் கண்டேன். விழிகளில் நான் சென்றபிறகு அழுவதற்கான அழுகை தயாராக இருந்தது. ஆனால் அந்தக் குழந்தைமையை தனது கர்வத்தாலும் வைராக்கியத்தாலும் அவள் கொன்று மனதிற்குள் எப்போதோ புதைத்து விட்டிருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது. நான் இருக்கும்போது அழுது விடக்கூடாது என்பதை விட, தன் இளமையும் உடலும் ஒத்துழைக்கும் வரை உழைத்துவிட்டு ஊருக்குச்சென்று தான் வாழப்போகும் செல்வந்த வாழ்வைப் பற்றிய கனவே அவள் கண்ணீரைத் தடுத்து நின்ற பெரும் திரை என்பதும் எனக்குத் தெரியும்.
 

இந்நிலையில், இவளைப்பற்றி எனக்குத் தெரியும் என்பது நிஸாமுக்குத் தெரிய நேர்ந்தால் அவனது மனநிலை எப்படியிருக்கும் என்பதைப் பற்றிக் கற்பனை செய்ய முயன்றது பெரும் வலிதரும் அனுபவமாக இருந்தது. ஒரு இரண்டு வருடங்களுக்கு அவனைச் சந்திக்கவே கூடாது என்று அந்த இடத்திலேயே முடிவெடுத்து விட்டேன்.
 

அமைதியாக இருந்த என்னை நோக்கி ஒரு ரெட்புல் பானத்தை நீட்டும்போது, '{ஹம்..காசு... காசிருந்தா எல்லாரும் மத்த எல்லாத்தையும் மறந்துடுவாங்க.' என்றாள். எத்தனை பெரிய யதார்த்தம்? அவள் சொன்னது வேறு அர்த்ததில் என்றாலும் பணம் கைகளில் சேரத்தொடங்கிய பின் நான் மறந்தவைகளைப் பற்றி ஒரு கணம் எண்ணினேன். அவள் தந்த பானத்தைக் குடித்து விட்டு வெளிக்கிட்டு அந்தத் தொடர்மாடிக் குடியிருப்பை விட்டு அகலத் தொடங்கினேன்.
 

உடல்நிறை எண்பத்தாறு கிலோவைத் தாண்டியபிறகு படிகளில் ஏறி இறங்குவது எனக்கு மிகவும் சிரமம். எப்போதும் எலவேட்டர்களையே நாடும் நான் அன்று என்னை மறந்து படிகளில் இறங்கினேன். தளர்ந்துபோய் இருந்தேன். சம்ஸுக்காவும் சம்ரியாவும் மாறி மாறி மனதில் ஊர்ந்து கொண்டிருந்தனர். இருவரும் இரு துருவங்கள். என்றாலும் கூட இருவருக்குமிடையிலான பொதுத்தன்மை என் நெற்றிப்பொட்டில் அடித்தது. இருவருமே செல்வம் சேர்க்கும் பொருட்டு தங்கள் இளமையை விற்றவர்கள்...இதைச் சிந்தித்த அந்தக் கணத்தில்தான் முதன்முதலாக வாழ்க்கை என்னைப் பயமுறுத்தத் தொடங்கியது.
 
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் சம்ரியாவைச் சந்திக்கும் முன்பு உம்மாவுக்குக் கோல் எடுத்திருந்தேன்.
 
'அனிஸாக்கு ஏ.எல். ரிசல்ஸி வந்திட்டு. கெம்பஸும் கிடைக்கல..கொலேஜும் கிடைக்கல..அவளாவது படிச்சிக் கிடிச்சி ஒரு வேலை வெட்டிக்குப் போவான்டு நினைச்சிக்கிட்டிருந்தம்...அதுவும் நடக்கல...என்ட குமருகள எப்படித்தான் கர சேக்கப் போறனோ...? அல்லா....' என்ற அழுகை வார்த்தைகள் படியிறங்கும் தோறும் காதுகளில் அறைந்து கொண்டேயிருந்தன. கீழ்த் தளத்துக்கு வந்ததும் வராததுமாக போனில் இலக்கங்களை அழுத்தினேன்.
 
'உம்மா...நாந்தான் கதைக்கன்... அவள அழுது குழறிக்கிட்டு இரிக்க வேணான்டு சொல்லுங்க... காசனுப்புறன். ஜீ.ஏ.கிவ் பதியச் சொல்லுங்க. அவள் படிக்கட்டும்..' என்று விட்டு உடனே துண்டித்தேன். மனதில் சம்ஸுக்காவும் அவரது ஆறு தங்கைகளும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
 
எனது அறைக்குச்செல்ல டாக்ஸி பிடிக்க வேண்டும். ஆனால் நடந்துகொண்டிருந்தேன். அங்கிருந்த பெட்ரோல் பங்க் முனை தாண்டியதும் 'தால்...' என்ற அதட்டல் கேட்டது. இரண்டு போலிஸ்காரர்கள் நின்றுகொண்டிருந்தனர். உயரமானவன் என்னை உற்றுப் பார்த்து 'ஜீப் பதாகா!' என்றான். எடுத்து நீட்டியதும் கையிலிருந்த மடிக்கணினி போன்ற ஆனால் அதை விடச்சிறிய சாதனத்தில் எனது அடையாள அட்டை இலக்கத்தை ஒற்றிப் பார்த்துவிட்டு அதன் திரையை மற்றவனிடம் நீட்டினான். அவன் எனது இடது கையைப் பற்றி முறுக்கி 'யெல்லா..' என்றவனாக என்னைக் காரினுள் தள்ளித் திணித்தான். உள்ளே ஏற்றியதும் முதல் வேலையாக எனது போனைப்பறித்து பெற்றியையும் சிம் கார்டையும் கழற்றியெடுத்தான். 'எந்த நாடு?' என்று அரபியில் கேட்டான். 'ஸ்ரீலங்கா' என்ற போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊர் ஞாபகம் திரண்டு வந்தது.
 
எனது முன்னாள் அரபு எஜமானன் என் மீது போலிசில் அளித்திருந்த புகாரின் பேரில் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன் என்பது போலிஸ் நிலையத்தில் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. வீஸா இல்லாமல் குவைத்திலிருந்த குற்றத்திற்குமாகச் சேர்ந்து என்னை சிறையில் தள்ளினார்கள். சிறிய சிறை. நல்ல உணவு கிடைத்தது. ஐந்தாவது நாளில் இரண்டாவது சிறைக்கு மாற்றப்பட்டேன். அது சுமார் ஆயிரத்து ஐந்நூறு பேர் தங்கியிருந்த பெரிய சிறை. அங்கும் நல்ல சாப்பாடு. மெடிக்கல் செக்கப் எல்லாம் நடந்தது.  அங்கிருந்தபோதுதான் ஒரு கருணை மிக்க போலிஸ்காரனின் உதவியால் எனது தற்போதைய எஜமானனுக்கு தகவல் சொல்ல முடிந்தது. பதினோராவது நாள் என்னுடைய எஜமானன் வந்து என்னைச் சந்தித்தான். இருநூறு தினார்களைக் கொடுத்து என்னுடைய பாஸ்போர்ட்டை மீட்டு என்னிடம் தந்தான். அதைப் போலிஸார் வாங்கி பெரிய சீல் ஒன்று குத்தி என்னிடம் தந்தார்கள். எக்ஸிட். உடனடியாக நான் குவைத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதைக் குறிக்கும் சீல் அது. இரண்டு வருடங்களுக்குப் பின்பே என்னால் இனி இம்மண்ணில் கால் வைக்க முடியும்.  'நான் வெளியேறப்போகும் செய்தியை சம்ஸுக்காவுக்குச் சொல்லமுடியுமா?'என என் எஜமானனிடம் கேட்டேன், 'கண்டிப்பாக' என்றான். 'கவலைப்படாதே இரண்டு வருடங்களுக்குப் பிறகு உனக்கு நான் வீஸா அனுப்புவேன்' என்று நம்பிக்கை தந்தான். ஆம், எஜமானனே! நான் வரவேண்டும்...கண்டிப்பாக வரத்தான் வேண்டும்.
 
விமானநிலையத்துக்கு சம்ஸுக்கா வந்திருந்தார். போலிஸார் அருகில் சென்று சந்திக்க விடவில்லை. கண்ணாடித் தடுப்புகளுக்கு வெளியே நின்ற அவரைப் பார்த்தபோது 'போய் வருகிறேன் சகோதரா' என்று மனதுக்குள் நினைத்தேன். நான் நினைத்தது அவரது இதயத்துக்குக் கேட்டது போல் இதழ் பிரியாத அவரது சிரிப்புடன் தலையசைத்து கையிலிருந்த பொலிதீன் பையை உயர்த்திக் காட்டினார். பையிலிருந்த நான் விரும்பிப் புகைக்கும் டன்ஹில் சில்வர் சிகரெட் கார்ட்கள் எனக்குத் தெளிவாக விளங்கின.
 
சாதாரணப் பயணிகள் செல்லும் வழியாலன்றி நேரடியாகப் போலிஸ் வண்டியிலேயே நான் விமானத்தினருகில் கொண்டுசெல்லப்பட்டேன். விமானத்தில் ஏறும் முன்பாக என்னிடமிருந்து பிடுங்கப்பட்ட போனும் போர்டிங் பாஸ் குத்தப்பட்ட பாஸ்போர்ட்டும் திருப்பித் தரப்பட்டன. வானை செம்மேகங்கள் தழுவிக் களைத்துப் பிரியும் நேரத்தில் விமானம் புறப்பட்டது. கண்ணாடியினூடாக வானவெளி மெல்ல மெல்ல மங்கி வெளிக்காட்சிகள் மறைந்து இருண்ட கண்ணாடியில் இப்போது என் முகம் மட்டுமே நிழலாகத் தெரிந்தது. கொழும்பில் இறங்கியவுடன் சம்ரியாவுக்கு போன் பண்ணி நாடு திரும்பியதைச் சொல்ல வேண்டும். ஒரு பலமான நன்றியையும் சொல்லவேண்டும். என்னத்துக்கு நன்றி? என்று கேட்பாள். காசுதான் எல்லாம் என்பதை வார்த்தைகளால் சொல்லியும், காசு ஒன்றுமேயில்லை என்பதைச் சொல்லாமலும் புரிய வைத்தாயே...அதற்கு! என்பதைச் சொல்லக்கூடாது.
 
வீட்டு ஞாபகம் வந்தது. பாரம் ஏற்றிச் சைக்கிளைத் தொடர்ந்து மிதிப்பதால் உண்டாகும் கால் வலியுடன் வாப்பா அவதிப்பட்டுப் படுத்திருக்கும்போது இரண்டு தங்கைகளும் அவர் கால்களருகில் அமர்ந்து காய்ச்சப்பட்ட 'சித்தாலேப' தைலத்தைத் தேய்த்து கால்களை உருவிவிடும் காட்சியைப் பலபோது நான் கண்டிருக்கிறேன். அந்தக்கால்களை ஒருமுறை தொட்டுப்பார்க்கும் ஏக்கம் நெஞ்சை நிரப்பித் தொண்டையை அடைக்க வெடித்து அழத்தொடங்கினேன்.

-ஷாஜகான் 

Thanks: Kalkudahmuslims.net

Monday, July 30, 2012

'திருநெல்வேலிக்கே அல்வா...?







விமர்சனங்களுக்கே ஒரு  விமர்சனம்!






'திருநெல்வேலிக்கே அல்வாவா?' என்ற பாணியில் 'என்னது, விமர்சனத்திற்கே விமர்சனமா?' என்று விழிவிரிய ஆச்சரியப்படுவதை சற்று ஒத்திப்போட்டுவிட்டு நீங்கள்  தொடர்ந்து படித்தால் நாம் உடனடியாகவே விடயத்திற்கு வந்துவிடலாம்.


இந்த உலகிலே மனிதனால் இன்னும் அறியப்படாத விடயங்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அப்படிக் அறியப்பட்டவற்றிலே அவனால் விமர்சிக்கப்படாத விடயங்களே இல்லையென்று அடித்துச்சொல்லலாம்.

சமையல் கலை முதற்கொண்டு இசை, இலக்கியம், சினிமா, விளையாட்டு, அரசியல், வியாபாரம்... என்று பொதுவாக எல்லாத் துறைகளிலுமே விமர்சனமும் விமர்சிப்பவர்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அதுபோலவே விமர்சனம் ஆரம்பமான அந்தக் கல்தோன்றி கடவுள் தோன்றாக்காலம் முதற்கொண்டு விமர்சனத்தை விரும்பாதவர்;களும் இவ்வுலகிலே இருந்து கொண்டேதானிருக்கின்றார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால், விமர்சித்தல் என்பது ஏதோ தவறான விடயம் போலத்தான்; தோற்றமளிப்பதுண்டு.  அதற்குரிய காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனெனில் எல்லாவற்றிலும் நல்ல விடயங்களும் தீய விடயங்களும் இருப்பதைப்போலவே விமர்சனங்களிலும் இருவகையுண்டு. ஒன்று ஆக்கபூர்வமான விமர்சனம் மற்றையது அவதூறுபூர்வமான விமர்சனம். (அழிவுபூர்வமானது என்று சொல்வேனென்றுதானே எதிர்பார்த்தீர்கள்? )

'சாப்பாடு என்னவோ நல்லாத்தான் இருக்கு. ஆனால் அந்த மாசிச் சம்பல்தான்  கெடுத்து விட்டுது பாருங்க' என்று மூக்குப் பிடிக்கச் சாப்பிட்ட ஒருவர் போகின்ற போக்கிலே கல்யாண சமையலைப் பற்றி இப்படி விமர்சித்துவிட்டுச் சென்றால் இரவெல்லாம் கண்விழித்து ஓடியாடிக் கஷ்டப்பட்டுச் சமைத்தவர்களுக்கு எப்படியிருக்கும்..?

அதேபோல கற்பனை வளத்துடன் மாய்ந்து மாய்ந்து எழுதும் எழுத்தாளன், பலகோடி பணத்தையும் உழைப்பையும் கொட்டித் தயாரிக்கும் திரைப்படத் தயாரிப்பாளன், நாள் முழுவதும் வெய்யிலிலே பட்டை உரியும் விளையாட்டு வீரன், இரவு பகலாய் சண்டைக் காட்சிகளிலும் உணர்வுக்காட்சிகளிலும் உடலைப்பணயம் வைக்கும் நடிகன், மூளையைக்கசக்கி நுட்பத்திறமையுடன் கோர்ப்புச் செய்யும் ஓர் இசைக் கலைஞன், மக்களிடம் நல்லபேரும் வாக்குகளும் வாங்கிவிட உழைக்கும் அரசியல்வாதி...

இவர்கள் அத்தனைபேரும் மிகுந்த பிரயாசையுடன் வெளிப்படுத்தும் தத்தமது படைப்புகளையும் முயற்சிகளையும் தலைக்குமேலாகச் சுழலும் ஒரு மின்விசிறியின் கீழே மேஜை போட்டு உட்கார்ந்து மடிக்கணனியை வைத்துக்கொண்டு யாரோ சிலர் சுளுவாக விமர்சித்து விட்டுச் செல்கின்றபோது ஆத்திரம் வராமல் வேறு என்னதான் வரும்?

நியாயம்தானே? சரி, இப்போது மறுதலையாகச் சிந்தித்துப் பார்ப்போம்...

ஒரு விடயம் மிகுந்த பிரயாசத்துடன் செய்யப்படுகின்றது என்பதற்காக மட்டுமே அது சிறப்பானதாகவும் சமூகப்பயனுடையதாகவும் அமைந்துவிடுமா?

இரவெல்லாம் கண்விழித்து.. பார்த்துப் பார்த்து சமைத்த திருமண உணவு சுவையில்லாமல் அமைந்துவிடுவதில்லையா? மாய்ந்த மாய்ந்து எழுதிய ஆக்கம் வெகுசாதாரணமாக ஆகிவிடுவதில்லையா? பிரபலங்கள் ஒன்றுகூடி பிரயாசையுடன் உருவாக்கிய திரைப்படம் பெட்டிக்குள்ளேயே முடங்கிவிடுவதில்லையா என்ன?

கல்யாணச் சாப்பாட்டை வேண்டுமானால்; பெருந்தன்மையாக உண்;டு சமாளித்து எழுந்து ஒருநடை மணமக்களை வாழ்த்தியபின் போட்டோவுக்குப் போஸும் வீடியோவில் அசடும் வழிந்துவிட்டுத் திரும்பி விடலாம். அது சபைமரியாதை மட்டுமல்ல ஓர் உயர்ந்த பண்பும் கூட.

ஆனால் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் வெளிவரும் சமூக விழுமியங்களுடன் தொடர்புடைய கருத்து வெளிப்பாடுகள் ஆக்கங்கள் அரசியல் ஆய்வுகள் போன்ற விடயங்களிலெல்லாம் அவ்வாறு பெருந்தன்மையுடன் 'பேசாமல்' இருந்து விடலாமா?

எந்தவொரு படைப்பாளியும் தனது படைப்பைப் பற்றிய மக்களின் கருத்தை அறிந்தால்தான் அவரால் மேலும் வெற்றிகரமான படைப்புக்களை உருவாக்கி அந்தத்துறையிலே உயரிய நிலையை எய்த முடியும். மக்களின் கருத்தை தனது படைப்புக்களின் மீது வைக்கப்படும் விமர்சனங்களிலிருந்துதான் ஒரு படைப்பாளியால் விரைவாகவும் சுலபமாகவும்  பெற்றுக்கொள்ள முடியும்.
ஒர் உணவுச்சாலையின் நிருவாகிகள், 'சாப்பாடு எப்படியிருக்கின்றது?' என்று வாடிக்கையாளர்களிடம்; கேட்பது அதிலேயுள்ள குறை நிறைகள் பற்றிய விபரங்களை அறிந்து மேலும் சிறப்பான உணவை வழங்குவதற்காகத்தானேயன்றி வெறுமனே அவர்களோடு அளவளாவும் ஆசையினால் அல்ல என்பதைப்; புரிந்து கொள்வதற்கு பெரிய பட்டப்படிப்புகளெல்லாம்  அவசியமில்லை.


விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன.


ஒரு படைப்பை விமர்சிக்கும்போது முன்பு குறிப்பிட்டதுபோல அது ஆக்கபூர்வமானதாகவும் படைப்பாளியின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டுவதிலே உயர்ந்தபட்ச ஊடகநாகரீகம் பேணுவதாகவும் இருத்தல் வேண்டும். அதேவேளை தனிப்பட்ட குரோதத்துடன் படைப்பையோ படைப்பாளியையோ மட்டந்தட்டுவதும்  மிகை அபிமானத்துடன் அளவுமீறிப் புகழ்ந்துரைப்பதும் சரியான விமர்சனமாக இருக்கவே முடியாது.


அதேவேளை விமர்சனங்களை எதிர்கொள்ளும் படைப்பாளிகளும் தம்மீது சரியான கோணத்திலே முன்வைக்கப்படும் விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும். 'நான் எவ்வளவு பெரிய படைப்பாளி. இவர்கள் எப்படி என் படைப்பில் குறைகாணலாம்' என்று இறுமாப்புடன் நடந்து கொள்ளாமல் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துபார்த்தல் அவசியம். அவ்வாறு செய்யும்போதுதான் நமது படைப்பிலுள்ள நிறைகுறைகளை நாமே அறிந்து அவற்றை செப்பனிடக்கூடிய வாய்ப்புக் கிடைக்கும். மாறாக நமது படைப்பின் மீது அநாவசியமான அவதூறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் அதனைத் துணிவுடன் எதிர்கொள்ளவும் நமது அதிருப்தியை நாகரீகமான விதத்திலே  சுட்டிக்காட்டவும் நமக்கு உரிமையுள்ளது அல்லவா?.

அவதூறு விமர்சனங்களைப் புரிபவர்களிடம் அல்லது அவர்களது விமர்சனங்கள் வெளியாகும் அதே ஊடகங்களிடம் குறிப்பிட்ட விமர்சனம் பற்றிய நமது கருத்துரைகளை தர்க்கரீதியாக முன்வைத்து பதிலளிக்கலாம். அவ்வாறு செய்யும்போது நமது படைப்பையும் அதற்குரிய விமர்சனங்களையும் படிக்கும் வாசகர்களுக்கும் விமர்சனம் பற்றிய நமது கருத்துக்களையும் அறியக்கூடியதாக இருக்கும். நம்மீது வைக்கப்படும் விமர்சனம் உண்மையிலேயே அவதூறுக்குரியதொன்றாக இருந்தால் அதை நமது எதிர்க்கருத்துக்களின் உதவியோடு வாசகனும் புரிந்து கொள்வான் அல்லவா? இவ்வாறு தொடர்ந்து நாம் செய்து வந்தால் அவதூறு விமர்சனம் செய்பவர்கள் நிச்சயம் வாசகர்களால் அடையாளங் காணப்பட்டு ஆதரவையும் இழந்து விடுவார்கள். நாளடைவிலே அவதூறு விமர்சனத்தை கைவிட்டு ஓட வேண்டிய நிலை அவர்களுக்கு நிச்சயம் ஏற்படும்.


அதைவிடுத்து விமர்சனங்களே செய்யவேண்டாம் என்று வேண்டுவதாலோ அல்லது அத்தகையோரை வசைபாடுவதாலோ உருப்படியான விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. மாறாக 'விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் இவர்கள்' என்ற ஏளனப்பார்வைதான் நம்மீது உருவாகும்.
விமர்சனங்களை எதிர்கொள்ள மறுப்பதால் ஏற்படும் இழப்பு படைப்பாளிக்குத்தான் சென்றுசேரும்;. ஏனெனில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஒரு படைப்பாளியின் ஆற்றலும் திறமையும் இடைவிடாது பாய்ந்தோடும் நீரோடையை ஒத்திருக்கும். ஆனால் விமர்சனங்களே இல்லாதபோது அந்த ஆரோக்கியமான நீரோடை மெல்ல ஒடுங்கி தேங்கிய சேற்றுக்குட்டையாக மாறிவிடும் அபாயம் உண்டாகின்றது.


நமது சமூகத்திலே பெரும் எழுத்தாளர்கள் என்று கருதப்படுகின்ற பலரிடம் விமரிசனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதிருப்பதைக் காணலாம். தம்மையும் தமது படைப்புக்களையும் பாராட்டிப் புகழ்ந்து வைக்கப்படுகின்ற விமர்சனக் கண்ணோட்டங்களை மட்டுமே காண்பதற்கும் ஏற்பதற்கும் தயாராக இருக்கின்றனரே தவிர தமது குறைகள் சுட்டிக்காட்டப்படுவதை விரும்புவது கிடையாது. அவ்வாறான விமர்சனத்தை - சுஜாதாவின் பாணியிலே கூறினால் - நாய் கொண்டு வந்துபோட்ட வஸ்துவைப் பார்ப்பதுபோலத்தான்  பார்ப்பார்கள்.


பொதுவாக விமர்சனங்கள் மறுக்கப்படும் இடங்களிலேதான் பின்னடைவுகளும் துரோகங்களும் செழித்து வளருகின்றன என்பார்கள். இது எல்லாத் துறைகளுக்கும் மிகவும் பொருந்தும்.  இந்த எளிய தத்துவம் எத்தனை உண்மையானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு நமது நாட்டிலே நிகழ்ந்து முடிந்த உள்நாட்டுயுத்த வரலாறு ஒன்றே போதுமானது.


மனிதாபிமான உணர்வுகளுடனும் இடதுசாரிச் சிந்தனைகளுடனும் விடுதலைகாணப் புறப்பட்ட படித்த புத்திஜீவி இளைஞர்கள் ஆரம்ப காலங்களிலே மக்களின் விமர்சனங்களுக்கு மதிப்புக்கொடுத்து சுயவிமர்சனங்களோடு தமது போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிகரமாக விளங்கினர்.


ஆனால் பிற்காலங்களிலே அவர்கள் சுயவிமர்சனங்களை தவிர்த்ததோடு தம்மீது பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட நியாயமான விமர்சனங்களையும் மறுத்துச் செயற்பட ஆரம்பித்தார்கள். இதனால் படிப்படியாக ஜனநாயக மறுப்புடன் கூடிய சகபோராளிகளையும்  மக்களையும் கொன்று குவிக்கத்தக்க அராஜகப்போக்கிலான சிறுசிறு ஆயுதக்குழுக்களாக ஆனார்கள். காலப்போக்கில் தமக்கிடையே ஒற்றுமையிழந்து மோதுண்டு ஒருவரையொருவர் இரக்கமின்றி அழித்தொழித்ததுடன் இறுதியிலே முழுமையாக இல்லாதொழிந்துபோனார்கள்.


ஒரு விடுதலைப் போராட்டம் சரியான பாதையிலே முன்னெடுக்கப்படுவதற்கு விசுவாசமான போராளிகள் இருப்பது முக்கியமானது. விசுவாசமான போராளிகளை வளர்த்தெடுப்பதற்கு விமர்சனங்கள் மிக அவசியமானவை. அந்த விமர்சனங்கள் புறக்கணிக்கப்படும்போதுதான் தவறான வழிகாட்டல், தலைமை வழிபாடுகள், தனிநபர் பயங்கரவாதம், காட்டிக்கொடுப்புகள், துரோகங்கள் போன்ற பிழையான விடயங்கள் உருவாகி வளர்ச்சியடைந்து ஒருகட்டத்திலே மொத்தப் போராட்டத்தையே நிலைகுலையச்செய்துவிடும்.
ஒரு விடுதலைப் போராட்டமும் முழுமையாக அழிவடைந்ததற்கு எத்தனையோ புறக்காரணிகள் இருந்தபோதிலும்கூட விமர்சனங்களை மறுத்து ஒதுக்கியதுதான் முதற்கோணலாக அமைந்து விட்டிருக்கின்றது என்றால் அது மிகையல்ல.

பொதுமக்களின் பார்வைக்காக வெளிவருகின்ற வருகின்ற எந்தவொரு சமூகவிழுமியங்களுடன் தொடர்புடைய படைப்பக்களுக்கும் விமர்சனம் எத்தனை அவசியமானது என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணத்தை நாம் தேடிப்பெற முடியாது.


- Jesslya Jessly

Tuesday, July 24, 2012

செயற்கை உயிர் : கடவுளின் ராஜ்யத்துக்குள்





படைப்புரிமை இழந்த பழைய கடவுள்
காப்புரிமை கோரும் புதிய கடவுள் !







 
யிர் என்பதை பொருள்முதல்வாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட விடை காண முடியாத புதிராகச் சித்தரித்து வாதிட்டவர்களுக்கு இயற்கையின் இயக்கவியல் என்ற தனது நூலில் (1886) எங்கெல்ஸ் பதில் அளித்தார். இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இயற்கை விஞ்ஞானம் அன்று கண்டிருந்த முன்னேற்றங்களின் துணை கொண்டு 'உயிர்' என்பதற்கு எங்கெல்ஸ் அளித்த அற்புதமான பொருள்முதல்வாத விளக்கம் அது.
'புரதப் பொருட்களின் இருத்தலின் பாங்கே உயிர்.... இரசாயன ரீதியாகப் புரதப் பொருள்களைத் தயாரிப்பது என்பது எப்போதாவது வெற்றி பெறுமெனில் அப்போது அவை உயிரின் இயல் நிகழ்ச்சியை நிச்சயமாகவே வெளிப்படுத்தும்...''

'.. மனது பொருள் என்பதையும் மனிதன் இயற்கை என்பதையும் உடல் ஆத்மா என்பதையும் வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகின்ற, பொருளற்ற, இயற்கைக்கு முரணான கருத்து இனி மென்மேலும் சாத்தியமில்லாமல் போகும்.''

'புரதப் பண்டங்களின் ஆக்கம் அறியப்பட்டவுடன் உயிருள்ள புரதத்தைத் தயாரிக்கும் வேலையில் இரசாயனவியல் இறங்கும். மிகச் சாதகமான சூழ்நிலைகளில் எதை இயற்கை ஒரு சில வான்கோள்களில் செய்து முடிக்கப் பத்து இலட்சக்கணக்கான ஆண்டுகள் பிடித்தனவோ, அதைப் பொழுது விடிவதற்குள் இரசாயனவியல் சாதிக்க வேண்டும் எனக் கோருவது ஒரு மந்திரவித்தையைக் கோருவதற்கு ஒப்பாகும்.''


1886இல் எதனை மந்திர வித்தை என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டாரோ, அந்த மந்திர வித்தையைச் சாதிக்கும் திசையில் இரசாயனவியல் இன்று வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது.


சிந்தடிகா (Synthetica) அமெரிக்காவின் கிரேக் வென்டர் என்ற விஞ்ஞானி தனது சோதனைக் கூடத்தில் மே 20, 2010 அன்று உருவாக்கியிருக்கும் புதியதொரு நுண்ணுயிரின் பெயர். செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிர் என்ற பொருள்படும் வகையில் சூட்டப்பட்ட பெயர். சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்து முதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி சிந்தடிகா.


ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக் குறியீடுகளுக்குரிய (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா.


சிந்தடிகா என்பது இயற்கை தனது இயக்கத்தின் போக்கில் தானே படைத்த புதியதொரு உயிரல்ல ஏற்கெனவே இருக்கின்ற ஒரு உயிரின் மரபணுவை பிரதி எடுத்து குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி ஆட்டினைப் போன்ற நகலும் அல்ல. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அல்லது தக்காளியைப் போன்றதும் அல்ல. இயற்கை படைத்த கூட்டுக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் செயற்கை என்று இதைச் சொல்லலாம்.


வேர்க்கடலையின் பருப்பை நீக்கிவிட்டு தோலுக்குள்ளே செலுத்தப்பட்ட முந்திரிப் பருப்பைப் போன்றது இந்தப் படைப்பு. இந்த முந்திரிப்பருப்பு முந்திரியின் மரபணுவிலிருந்து நேரிடையாகப் படைக்கப்பட்டதல்ல. அந்த மரபணுவின் வேதியியல் மூலக்கூறுகளை சோதனைச்சாலையில் ஒன்றிணைத்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது. அந்த அளவில் இது உயிரற்ற சடப்பொருளிலிருந்து உருவாக்கப்பட்ட உயிர்.


மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டீரியாவின் குரோமோசோம் அமைப்பை கணினியின் உதவியுடன் பகுத்தாராய்ந்து, அவற்றின் மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) சுமார் 10 இலட்சம் வேதியியற் குறியீடுகளாக மொழிபெயர்த்தனர் கிரேக் வென்டர் குழுவினர். பின்னர் அந்த வேதியியற் குறியீடுகளின் அடிப்படையில் வேதிப் பொருட்களை ஒன்றிணைத்து, செயற்கையான மரபணுத் தொகுப்பை (ஜெனோம்) உருவாக்கினர். பின்னர் மைகோபிளாஸ்மா காப்ரிகோலம் என்ற பாக்டிரியாவிலிருந்து அதன் மரபணுத்தொகுப்பை 'சுரண்டி' எடுத்துவிட்டு, எஞ்சியிருந்த கூட்டுக்குள் (அணுவின் உட்கரு) தாங்கள் உருவாக்கிய செயற்கையான மரபணுத் தொகுப்பில் சில மாற்றங்களும் செய்து உட்செலுத்தினர். இந்தப் புதிய கூட்டிற்குள் குடியேயற்றப்பட்ட மைகோபிளாஸ்மா மைகோய்டஸ் என்ற பாக்டீரியாவின் வேதியியற் பொருட்கள் கூட்டில் பொருந்தி, ஒரு புதிய உயிராக இயங்கத் தொடங்கியது.


செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்கும் பொருட்டு அதன் வேதியல் சேர்க்கையைக் கண்டறிதல்; அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத்தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு (அணு உட்கரு கூட்டுக்கு) புரிய வைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்.


உடல் வேறு, உயிர் வேறு என்று கருதுகின்ற புராணங்களில் விவரிக்கப்படும் 'கூடு விட்டுக் கூடு பாய்தல்' என்ற புனைகதையை, நடைமுறையில் சாதித்துக் காட்டியிருக்கிறது இன்றைய அறிவியல். ராமசாமியின் உடலுக்குள் கோவிந்தசாமியை நுழைத்து, இனி கோவிந்தசாமியாகவே நடந்து கொள்ள வேண்டும் என்று ராமசாமியின் உடலுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் இதனை எளிமைப்படுத்திக் கூறலாம். ஆனால் அணு உட்கரு (உடல்) என்பது வெறும் கூடு அல்ல, மரபணு (டி.என்.ஏ) என்பதே உயிரும் அல்ல. இவற்றின் இயங்கியல் ரீதியான சேர்க்கையும், அவ்வாறு சேர்ந்திருத்தலின் பாங்குமே உயிர்.


தனக்கு வேண்டிய ஆற்றலை இயற்கையிலிருந்து தானே கிரகித்துக் கொள்வதையும், தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொள்வதையும் உயிரின் இலக்கணமாகக் கூறுகிறது அறிவியல். தன்னைத் தானே மறு உற்பத்தி செய்து கொண்டு பல்கிப் பெருகியதன் மூலம் இந்த இலக்கண வரையறையையும் நிறைவு செய்திருக்கின்றது சிந்தடிகா.


குரோமோசோம் என்பது மரபணுக்களால் ஆனது; மரபணுக்கள் டி.என்.ஏ, மற்றும் ஆர்.என்.ஏ.க்களால் ஆனவை; டி.என்.ஏ, ஆர்.என்.ஏ க்கள் புரதத்தினாலும், புரதங்கள் அமினோ ஆசிட்டுகளாலும் ஆனவை. அமினோ ஆசிட்டுகள் வேதிப் பொருட்களால் ஆனவை (ர்2Nஊர்சுஊழுழுர்) என்பது ஏற்கெனவே அறியப்பட்ட அறிவியல் உண்மை. கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கின்றது.


எப்படிப் பார்த்தாலும், இயற்கை தனது போக்கில் உருவாக்கியவை அல்லது இறைவனால் படைக்கப்பட்டவை என்று நம்பப்படும் பல்லாயிரம் கோடி உயிரினங்களுக்கு அப்பால், மனிதன் தன் சொந்தக் கையால் உருவாக்கி, ''இது நான் உருவாக்கியது'' என்று அந்த உயிரிலேயே கையெழுத்தும் இட்டு வைத்திருக்கும் ஒரு புதிய உயிரினம் இது. 'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்' என்ற வகையிலான 'போலச்செய்தலில்' தொடங்கிய மனிதன், பறவையைக் கண்டான் பறவையைப் படைத்தான் என்பதை நோக்கியும், இதுவரை இல்லாதொரு புதிய பறவையையும் படைப்பான் என்பதை நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் அடி இது.


இந்தக் குறிப்பிட்ட ஆய்வுக்கு மட்டும் பத்து ஆண்டுகளும் 40 மில்லியன் டாலர்களும் செலவாகியிருக்கின்றன. கணினித் தொழில்நுட்பமும், அவற்றின் கணக்கிடும் வேகமும் பன்மடங்கு வளர்ந்திருப்பதனால்தான், பல இலட்சம் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இயற்கை உருவாக்கியிருக்கும் இந்த நுண்ணுயிரின் கட்டமைப்பை, ஒரு பத்து ஆண்டுகளில் மனிதனால் புரிந்து கொள்ள முடிந்திருக்கின்றது.


உயிரை செயற்கையாக உருவாக்கும் ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. ஒரேகானில் உள்ள ரீட் கல்லூரியின் தத்துவத்துறைப் பேராசிரியரும், முற்றிலும் இரசாயனப் பொருட்களிலிருந்தே செயற்கை உயிரை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் புரோட்டோ லைஃப் என்ற இத்தாலிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் பெடோ, ''கடவுளின் ஏரியா என்று கருதப்படும் பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். உயிர் என்பது மிகவும் வலிமையானது. நாம் நினைப்பதைச் செய்யும்படி ஒரு உயிரைப் படைக்க முடியுமானால், எல்லாவிதமான நல்ல காரியங்களையும் செய்யலாம். பொறுப்புடன் நடந்துகொள்ளும் பட்சத்தில் 'கடவுளின் வேலையை' நாம் மேற்கொள்வதில் தவறில்லை'' என்கிறார்.


கிரேக் வென்டரின் ஆய்வுக்கூடம், வேதிப்பொருட்களைக் கொண்டு தாங்கள் செயற்கையாக உருவாக்கிய மரபணுத்தொகுப்பினைக் குடியேற்ற, ஏற்கெனவே உள்ள இன்னொரு பாக்டீரியாவின் கூட்டினைப் பயன்படுத்திக் கொண்டனர். மார்க் பெடோவின் ஆய்வுக் குழுவோ, மரபணுக்களைக் குடியேற்றும் கூடுகளை செயற்கையான முறையில் தயாரிக்க முயன்று கொண்டிருக்கின்றது. நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களிலிருந்தே உயிரை உருவாக்குவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

•••
 

2500 ஆண்டுகளுக்கு முன்னால் கடவுள் கோட்பாட்டை முன்வைத்த பார்ப்பனிய தத்துவஞான மரபினர், உலகாயதவாதிகளை (பொருள்முதல்வாதிகளை) பார்த்து, ''ஜடப்பொருளிலிருந்து, அந்த ஜடப்பொருட்களின் குணங்களைப் பெற்றிராத புதிய குணங்ளைக் கொண்ட உயிர்ப்பொருள் என்பது எவ்வாறு உருவாக முடியும்?'' எனக் கேள்வி எழுப்பினர். ''ஜடப்பொருளான அரிசி புளிக்க வைக்கப்படும்போது போதை எனும் புதிய குணம் கொண்ட மதுவாக மாறுவதைப் போல பஞ்சபூதங்களின் சேர்க்கையில்தான் உயிர் உருவாகின்றது'' என்று அன்று நடப்பிலிருந்த அறிவின் வளர்ச்சிக்கு ஒப்ப கருத்துமுதல்வாதிகளுக்குப் பதிலடி கொடுத்தனர் பொருள்முதல்வாதிகளாகிய சாருவாகர்கள்.


2500 நூற்றாண்டுகளில் அறிவியல் வெகுதூரம் வளர்ந்து விட்டது. எனினும் இன்றும் கூட பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டு, நேரம் தவறாமல் மாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கும் பாதிரிகளும், முல்லாக்களும், சங்கராச்சாரிகளும் படுக்கையை விட்டு எழுந்திருக்காத நிலையிலும் கூட, ''என்னதான் இருந்தாலும் மனிதனால் ஒரு எறும்பைப் படைக்க முடியுமா? இறைவன் பெரியவன்'' என்று கூறி போலித் தன்னடக்கத்துடன் ஏளனப் புன்னகையைச் சிந்துகிறார்கள்.


எனினும், செயற்கை உயிரியல் (ளலவொநவiஉ டிழைடழபல) என்றொரு ஆய்வுத்துறையே உருவாகிவிட்ட இன்றைய நிலையிலும், சிந்தடிகா உருவாக்கப்பட்ட பிறகும், விஞ்ஞானிகள் யாரும் ஆணவம் கொண்டு திரியவில்லை. புதியதைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத்தான் பழையதை ஆய்வு செய்வதும் கற்றுக்கொள்வதும் அவசியமானதாக இருக்கிறது. அந்த வகையில் செயற்கை உயிரைப் படைக்க முனைந்திருக்கும் விஞ்ஞானிகள்தான் இயற்கை படைத்திருக்கும் உயிர்களை ஆய்வு செய்வதிலும் அளப்பரிய ஆர்வம் காட்டுகின்றார்கள். 400 கோடி ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம வளர்ச்சியின் போக்கில் இயற்கை படைத்திருக்கும் உயிர்களையும், நுண்ணுயிரிகளையும், செல்களையும் (அணு) அவை பெற்றிருக்கும் ஆற்றலையும் வியப்புடன் விவரிக்கின்றார்கள்.


'நம் விரலை உள்ளே விட்டால் அந்தக் கணமே தசையும், நகமும், எலும்பும் கரைந்து காணாமல் போய்விடும் அளவிற்கான திராவகங்களிலும் உயிர்வாழக் கூடிய நுண்ணுயிரிகள், மனிதர்களைக் கொல்வதற்குத் தேவைப்படுகின்ற அணுக்கதிர் வீச்சைக் காட்டிலும் 1500 மடங்கு அதிகமான கதிர்வீச்சினால் தாக்கிச் சிதறடிக்கப்பட்ட பின்னரும், தன்னைத்தானே தைத்துக்கொண்டு உடனே தன்னை மறுஉற்பத்தியும் செய்து கொள்ளும் ஆற்றல் பெற்ற நுண்ணுயிரிகள், மனிதனும் விலங்குகளும் உறைந்தோ, உருகியோ, சிதறியோ, மூச்சுத் திணறியோ அழிந்துவிடக்கூடிய பருவநிலைகளில் சர்வ சாதாரணமாக உயிர்வாழும் நுண்ணுயிரிகள் பல இயற்கையில் இருக்கின்றன. இயற்கையின் பல்லுயிர்ச் சூழல் குறித்து இதுவரை நாம் அறிந்திருப்பது ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மை. நாம் படைக்கவிருக்கும் செயற்கை உயிரிகள் என்னவிதமான பணிகளைச் செய்யும் ஆற்றல் பெற்றவையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு ஆற்றல் பெற்ற கோடிக்கணக்கான உயிரிகள் இயற்கையில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கின்றன'' என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


'இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை... இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம், அதன் நடுவில் நிலை வாழ்கிறோம். இயற்கையின் நியதிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைச் சரியாகப் பிரயோகிப்பதில், மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்ற உண்மையில்தான் இயற்கையின் மீதான நமது ஆளுமை என்பதன் பொருள் அடங்கியுள்ளது'' என்றார் எங்கெல்ஸ்.



மதவாத அறிவிலிகளின் போலித் தன்னடக்கத்திற்கும் அறிவியலாளர்களின் தன்னடக்கத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். ''தன்னுடைய படைப்பைப் புரிந்து கொள்ளுவதற்கும், அதனை சிறப்பாக கையாள்வதற்குமான பரிசாக தேவன் மனிதனுக்கு அறிவை வழங்கியிருக்கிறான் என்பதற்கு இது (சிந்தடிகா) இன்னொரு நிரூபணம்'' என்று மிகவும் அற்பத்தனமான முறையில் கடவுளை முட்டுக்கொடுத்து நிறுத்த முயன்றிருக்கிறார் இத்தாலிய கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் அஞ்சலோ பாக்னசோ.


'தன்னைக் கடவுளாகக் கருதிக்கொள்வதும், கடவுளுக்கே உரிய படைப்பாற்றலை ஏந்திச் சுழற்றுவதும் மனிதனை காட்டுமிராண்டித்தனத்தில் தள்ளிவிடும். படைப்பவன் ஒருவன் மட்டுமே அவன்தான் இறைவன் என்பதை விஞ்ஞானிகள் ஒருக்காலும் மறந்துவிடக்கூடாது'' என்றார் மோகேவெரோ என்றொரு பாதிரி. காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றிப் பேசும் யோக்கியதை கத்தோலிக்க திருச்சபைக்கு உண்டா என்பது ஒருபுறம் இருக்க, சிந்தடிகா குறித்த செய்தி வெளிவந்தவுடனே, 'அழித்தல்' தொழிலில் ஈடுபட்ட சங்கராச்சாரியும் கூட 'ஆக்கல்' தொழிலை பிரம்மனிடமிருந்து மனிதன் அபகரித்துக் கொண்டிருப்பது குறித்து தனது கவலையை வெளியிட்டிருக்கின்றார்.


செயற்கை உயிரின் ஆக்கத்தின் மூலம், கடவுள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பை அறிவியல் மேலும் அடைத்து விட்டது. எனினும், கடவுள் கல்லறைக்குச் செல்ல மறுக்கிறார். காரணம், எந்த முதலாளித்துவம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மூலதனமிடுகின்றதோ, அதே முதலாளித்துவம் அறிவியலை தனது இலாப நோக்கத்துக்கான கருவியாகப் பயன்படுத்துவதன் மூலம், கடவுள் தொடர்ந்து உயிரோடிருக்க துணை செய்கின்றது.


தனது கொள்ளை இலாப நோக்கத்துக்காக இயற்கை முதல் மனிதர்கள் வரையில் எதையும், யாரையும் அழிக்கத் தயங்காத முதலாளி வர்க்கம் அறிவியலின் துணை கொண்டு நடத்தியிருக்கும் அழிவு வேலைகளைக் காட்டி, படைப்புப் பணியை கடவுளிடமிருந்து மனிதன் பறித்துக் கொண்டால் நேரக்கூடிய விபரீதங்களைக் காட்டி நம்மை மிரட்டுகின்றார்கள் மதவாதிகள். திருச்சபை கூறுவது போல அறிவியல் மனிதனிடம் சிக்கியிருக்கவில்லை. தம்மளவில் மனிதத்தன்மையை அகற்றியவர்களும், மனிதகுலத்திடமிருந்தும் அதனை அகற்ற விரும்புகிறவர்களுமான உலக முதலாளி வர்க்கத்திடம் சிக்கியிருக்கின்றது அறிவியல்.


அணு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், மரபணு மாற்ற விதைகள், புவி சூடேறுதல் மற்றும் இயற்கைப் பேரழிவுகளைத் தோற்றுவித்துள்ள உலக முதலாளி வர்க்கம், அறிவியலால் அகற்றப்பட்ட கடவுளை மீண்டும் அரியணையில் அமர்த்துகின்றது. மதவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருகின்றது. இதன் விளைவாக, அறிவியலின் சாதனைகள் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தருவதற்குப் பதிலாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கின்றன. சிந்தடிகா இதற்கு விலக்கல்ல.

***

புதிய நுண்ணுயிரியை வடிவமைத்து உருவாக்குவதைச் சாத்தியமாக்கியிருக்கும் இந்த முன்னேற்றத்தின் பயனாக, தொற்றுநோய்கள் மற்றும் ஆட்கொல்லி நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்கலாம். பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற அழிக்க முடியாத கழிவுகளைக்கூட தின்று செரிக்கும் திறன் கொண்ட நுண்ணுயிர்கள், கரியமில வாயுவை உறிஞ்சும் நுண்ணுயிரிகள், உயிரி எரிபொருளை (பயோ ஃப்யூவல்) தயாரிக்க உதவும் நுண்ணுயிரிகள் போன்ற பலவற்றையும் உருவாக்கலாம்.


அமெரிக்காவில் உள்ள மாசாசூ செட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம், வௌ;வேறு விதமான பணிகளைச் செய்யக் கூடிய சுமார் 2000 உயிரி உறுப்புகளின் டி.என்.ஏ குறியீடுகளைத் கிளூரக் வென்டர் (டீழை டீசiஉம pயசவள) பட்டியலிட்டுத் தொகுத்து வைத்திருக்கிறது. போல்ட், நட்டுகள், சக்கரங்கள், புல்லிகள், கியர்களை இணைத்து ஒரு எந்திரத்தை உருவாக்குவதைப் போல, இந்த உயிரி உறுப்புகளை இணைத்து விரும்பியபடி ஒரு உயிரி எந்திரத்தை உருவாக்குவதென்பதே அங்கு நடைபெறும் ஆய்வின் நோக்கம். சிலிக்கான் தொழில் நுட்பத்துக்கு மாற்றாக, நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும் நடைபெறுகின்றன.


உயிரித் தொழில்நுட்பம் வழங்கும் நேர்மறைப் பயன்கள் கற்பனைக்கெட்டாதவை. எனினும், இந்த அறிவியலும் தொழில்நுட்பமும் யாருடைய ஏகபோகத்தின் கீழ் இருக்கின்றன என்பதுதான் அறிவியல் வளர்ச்சி செல்லும் திசையையும் அதன் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கான சாத்தியத்தையும் தீர்மானிக்கின்றன. பெரும் பொருட்செலவு பிடிக்கும் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அமெரிக்க இராணுவத்தின் ஆராய்ச்சித் துறையோதான் கட்டுப்படுத்துகின்றன. உலகச் சந்தையின் மீது வர்த்தக ரீதியான ஏகபோக ஆதிக்கம் அல்லது இராணுவ மேலாதிக்கம் என்பவையே பெரும்பாலான ஆய்வுகளின் நோக்கத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.


இந்நிறுவனங்களின் கூலி அடிமைகளாக உள்ள விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒரு கண்டுபிடிப்பின் பயன்பாடு குறித்தோ, அதன் எதிர்விளைவுகள் குறித்தோ தாங்கள் அறிந்த உண்மைகளை வெளியிட முடியாமல் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப்படுபவர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை நலனுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்துக் கூறி சான்றளிக்கும் அறிவு நாணயமற்றவர்களாகவும் உள்ளனர்.


தற்போது சிந்தடிகாவை உருவாக்கியிருக்கும் கிரேக் வென்டரின் தனியார் ஆய்வு நிறுவனம், எக்சான் மொபில் என்ற அமெரிக்க பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. சூழலிலிருந்து கரியமில வாயுவை உறிஞ்சி அதனை ஹைட்ரோ கார்பன்களாக மாற்றவல்ல கடற்பாசிகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின்படி நடைபெறும் ஆய்வு. எண்ணெய் வளங்கள் வற்றி வரும் சூழலில், கரும்பு, சோளம், ஜட்ரோபா போன்றவற்றிலிருந்தெல்லாம் தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைக் காட்டிலும் மலிவானதாக இருக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் ஹைட்ரோ கார்பனிலிருந்து பெட்ரோலும் டீசலும் தயாரித்து எண்ணெய் விற்பனையில் உலக ஏகபோகத்தை அடைவதே எக்சான் மொபில் நிறுவனத்தின் நோக்கம்.


அதே போல, நுண்ணுயிர்களின் மரபணுக்களை செயற்கையாக திருத்தி அமைத்து, அவற்றிலிருந்து ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆய்விலும் நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு மருந்துக் கம்பெனியுடன் இணைந்து கிரேக் வென்டரின் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இரத்தப் புற்றுநோய்க்கான மருந்துகளைத் தயாரித்து வந்த இந்திய நிறுவனங்களை, காப்புரிமையைக் காட்டி உற்பத்தியை தடுத்து நிறுத்தி, அம்மருந்துகளின் விலையை நூறு மடங்கிற்கு மேல் விலை உயர்த்தி விற்று வரும் நிறுவனம்தான் நோவார்ட்டிஸ்.


எக்சான் மொபில் நிறுவனமோ, புஷ் கும்பலுக்கு மிகவும் நெருக்கமானது. இராக் ஆக்கிரமிப்பின் பின்புலத்தில் இருந்தது. இத்தகைய நிறுவனங்கள் மேற்கூறிய கண்டுபிடிப்புகளை எப்படி பயன்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.


மருந்து நிறுவனங்கள் மட்டுமின்றி, உணவு தானிய வணிகத்தில் உலக ஏகபோகத்தை நிறுவிக்கொள்ளத் துடிக்கும் மான்சான்டோ முதலான பன்னாட்டு வேளாண் வணிகக் கழகங்களும்  உயிரி தொழில் நுட்ப ஆய்வுகளில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன. இந்தியா முதலிய நாடுகளில் அரசுகள், ஆய்வுக் கூடங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் துணையுடன் தமது ஆய்வுகளின் சோதனைக்களமாக அந்நாடுகளின் விவசாயத்தை மாற்றுகின்றன. மான்சான்டோவின் பி.டி விதைகள் இந்திய விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதும் ஏவியிருக்கும் அழிவு நமது கண்முன் தெரிகின்ற சான்று.


ஆனால் இந்த அழிவைக் கூட ''சொல்லி அழக் கூடாது, சொல்லாமல்தான் அழ வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக அறிவியல் ஆதாரம் இல்லாமல் பேசுவது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம்'' என்று கூறும் சட்ட முன்வரைவை நிறைவேற்றுவதற்காக தயார் நிலையில் வைத்திருக்கின்றது மத்திய அரசு.


செயற்கை கடற்பாசி இயற்கையான உயிர்ச்சூழலுக்குள் ஏவப்பட்டால் ஏற்படும் விளைவுகள் பின் விளைவுகள் என்ன, அவை ஏவப்பட்டிருக்கின்றனவா இல்லையா என்பதைக் கூட எப்படித் தெரிந்து கொள்வது போன்ற கேள்விகளை எழுப்புகின்றார்கள் சூழலியலாளர்கள். இந்தக் கேள்விகளுக்கு விடை காண பெரும் ஆராய்ச்சி தேவையில்லை. யூனியன் கார்பைடு நடத்திய போபால் படுகொலையும், தற்போது அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடாவின் கடற்பரப்பு முழுவதும் பரவி கோடிக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைக் கொன்று கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெயும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியும் உண்மைகள். செயற்கை உயிரிகளால் ஏற்படும் ஆபத்துகளை இவ்வாறு பளிச்சென்று நிரூபிக்கக் கூட முடியாது என்பதால், இத்தகைய ஆய்வுகளையே தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர் சூழலியலாளர்கள்.


விபத்துகள் மட்டுமல்ல. நுண்ணுயிரிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாத பேரழிவு ஆயுதங்களாகவும் ஏவ முடியும். இராக்கில் குறைந்த கதிர் வீச்சு கொண்ட அணு ஆயுதங்களையும், வியத்நாமிலும், கொரியாவிலும் இரசாயன ஆயுதங்களையும், இராக்கில் விச வாயுக் குண்டுகளையும் பயன்படுத்தியிருக்கும் அமெரிக்கா உயிரி ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடும். அவ்வகையில் இக்கண்டுபிடிப்புகள் அனைத்தையுமே அழிவு வேலையின் ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியும். பயன்படுத்தும்.


இப்பிரச்சினைக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கின்றது. அறிவியல் தொழில்நுட்ப புரட்சியையும், உலகமயமாக்கலையும் தொடர்ந்து உலக நாடுகளின் மீது திணிக்கப்பட்டிருக்கும் வணிகம் சார்ந்த அறிவுசார் சொத்துடைமை (வுசுஐPளு), புதிய கண்டுபிடிப்புகளின் மீது மட்டுமின்றி, தாவரங்கள், நுண்ணுயிரிகள் மற்றும் மரபணுக்கள் மீதும் கூட காப்புரிமை கோரும் அதிகாரத்தை உலக முதலாளித்துவத்திற்கு வழங்கியிருக்கின்றது. வேம்பு மீது அமெரிக்க நிறுவனம் காப்புரிமை பெற்றதும், அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளும் நாம் அறிந்ததுதான். தாவரங்களுக்கு மட்டுமல்ல, மனிதனின் மரபணுக்களுக்கும் கூட காப்புரிமை பெற்று, அவற்றைத் தனிச்சொத்துடைமையாக மாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது உலக முதலாளித்துவம்.


அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிரோட் (39) என்ற பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது மருத்துவ சோதனையில் கண்டறியப்பட்டது. கருப்பையிலும் தனக்குப் புற்றுநோய் வர அபாயம் உள்ளதா என்பதை மரபணுச் சோதனை மூலம் தெரிந்து கொள்ள எண்ணிய அந்தப் பெண், மிரியாட் என்ற சோதனைக் கூடத்தை அணுகினார். புற்றுநோயை உருவாக்கும் மரபணு அந்தப் பெண்ணின் உடலில் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. வேறோரு சோதனைக் கூடத்தில் மீண்டும் மரபணுச் சோதனை செய்து பார்த்து இதனை உறுதி செய்து கொள்ள கிரோட் விரும்பினார். ஆனால் மரபு வழியில் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் இரு மரபணுக்களை முதன்முதலாகக் கண்டுபிடித்த மிரியாட் சோதனைக்கூடம், அவ்விரு மரபணுக்களுக்கான அறிவுசார் சொத்துடைமையை பதிவு செய்து வைத்திருந்தது. மிரியாட்டில் இந்த சோதனைக்கான கட்டணம் 1.5 இலட்சம் ரூபாய். இதைவிட மிக மலிவான கட்டணத்தில் இச்சோதனையைச் செய்வதற்கு பல இடங்கள் இருந்தும், அமெரிக்காவின் வேறெந்த சோதனைக்கூடத்திலும் இந்தச் சோதனையைச் செய்வதற்கு மிரியாட் தடையாணையும் பெற்றிருந்தது.



கிரோட்டின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அமெரிக்க சிவில் உரிமை யூனியன் ''உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நிலையிலும் கூட மனிதனின் மரபணுக்கள் எனப்படுபவை இயற்கையின் அங்கங்களே. இவை புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல'' என்று வாதிட்டன. மார்ச் 2010இல் அமெரிக்காவின் ஒரு மாவட்ட நீதிமன்றம் மிரியாட் நிறுவனத்தின் இந்தக் காப்புரிமையை ரத்து செய்திருக்கிறது.


மிரியாட் போன்ற உயிரி தொழில் நுட்ப நிறுவனங்களும், மருந்து நிறுவனங்களும் சுமார் 40,000 மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பெற்று வைத்திருக்கின்றன. இந்தத் தீர்ப்பை ரத்து செய்தால் மட்டுமே தங்களது ஆராய்ச்சியின் 'பயனை' முழுமையாக 'அறுவடை' செய்ய இயலும் என்பதால் இத்தொழில் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பை முறியடிக்க முயலும் என்பதில் ஐயமில்லை. சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறும் முயற்சி, மேற்கூறிய வழக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக உதவும் என்றும் சில விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.



மனித மரபணுத் தொகுப்பு தொடர்பான ஆய்வில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானியும், மனித மரபணுவின் மீது காப்புரிமை பெறும் முயற்சிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவருமான மான்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் சல்ஸ்டன் கீழ்கண்டவாறு எச்சரிக்கின்றார்: ''சிந்தடிகாவுக்கு காப்புரிமை பெறுவதற்காக கிரேக் வென்டர் கொடுத்துள்ள விண்ணப்பம், சிந்தடிகாவுக்கு மட்டும் காப்புரிமையை கோரவில்லை. உயிரி தொழில்நுட்பம் தொடர்பான பல வகையான ஆய்வு முறைகளுக்கும் சேர்த்து காப்புரிமை கோருகின்றது. இது நிராகரிக்கப்படவில்லை என்றால், உலகெங்கும் நடைபெறும் உயிரி தொழில்நுட்ப ஆரோய்ச்சி முழுவதுமே கிரேக் வென்டர் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, உயிரி தொழில்நுட்ப ஆரோய்ச்சியே மொத்தமாக முடக்கப்பட்டு விடும்.''


சிந்தடிகாவை உருவாக்கிய கிரேக் வென்டர் எனும் விஞ்ஞானியே உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் எதிரியாக மாறி நிற்பதை இப்போது காண்கிறோம்.


இப்போது அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு நிறுத்துவது ஆண்டவனல்ல, அறிவுசார் சொத்துடைமை என்ற உலக முதலாளித்துவத்தின் கோட்பாடு. அறிவியலை அடக்கி ஆள்வது திருச்சபை அல்ல, முதலாளித்துவ உடைமை உறவை நிலைநாட்டுகின்ற ஏகாதிபத்தியம் அல்லது உலக வர்த்தகக் கழகம்.


உயிரின் வேதியல் மூலத்தைக் கண்டறிந்து, அதனை மாற்றியமைத்து, இதுவரை இல்லாத புதியதொரு உயிரை உருவாக்கவும் தலைப்பட்டுவிட்டது இயற்கை விஞ்ஞானம். உடைமை உறவின் சமூகப் பொருளாதார மூலத்தை மார்க்சியம் கண்டறிந்து சொல்லிய பின்னரும், அதனைப் புரிந்துகொள்ள இயலாத அறியாமையில் சமூகத்தை அமிழ்த்தியிருக்கும் ஏகாதிபத்தியம், உற்பத்தி சாதனங்களை மட்டுமன்றி உயிரணுவையும் தனிச்சொத்துடைமை யாக்கும் திசையில் சமூகத்தை இழுத்துச் செல்கின்றது.



இயற்கையின் 400 கோடி ஆண்டு கால 'வரலாறு', பொருள்முதல்வாத
நோக்கில் விளக்கம் பெற்றுவிட்டது. சோதனைக்கூடத்தில் நிரூபிக்கப்பட்டும் விட்டது.


மனிதனின் சில ஆயிரம் ஆண்டு கால வரலாறு, பொருள்முதல்வாத நோக்கிலான மாற்றத்துக்காகவும், புதிய சமூகத்தின் தோற்றத்துக்காகவும் ஏங்கி நிற்கின்றது. அதன் காரணமாகவே, அறிவியலும் தேங்கி நிற்கிறது. இந்தத் தேக்கத்தை உடைப்பதற்குத் தேவைப்படுவது புரட்சி. இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முடிவு.

Thanks : Maruthaiyan, Puthiya Kalachaharam
 

துரோகிகளின் மவுனத்தில்......!








மே 2009இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகள் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப் போராட்டத்தைப் பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படுத்திய எதிர்வினை பகையுணர்வு, மவுனம்.

புலிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த ஒரு சூழலில், அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, விமரிசிப்பது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை என்பது அவர்களுடைய கருத்து. பாராட்டுபவனே நண்பன், விமரிசிப்பவன் எதிரி என்ற ஓட்டுக்கட்சி அரசியலின் பண்பாடு இவர்களுடைய பார்வையின் மீது செலுத்தும் செல்வாக்கு இத்தகைய கருத்து உருவாவதற்குக் காரணமாக இருக்கின்றது.

ஒரு போராட்டத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமரிசிப்பதென்பது, அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குச் செய்யப்படும் உதவி. குறிப்பிட்ட இயக்கங்கள் அல்லது தலைவர்களின் கவுரவத்தையும் நலனையும் காட்டிலும், மக்களுடைய போராட்டத்தின் நலன் மேம்பட்டது. வெளிப்படையான அரசியல் விமரிசனங்களும் விவாதங்களும்தான் தவறுகளிலிருந்து மீள்வதற்கும், சரியான வழியைக் கண்டறிவதற்கும் வழி என்பது எங்களுடைய பார்வை.

விமரிசனங்கள் முடக்கப்படும் இடத்தில் தான் துரோகிகள் பெருகுகின்றார்கள். வெளிப்படையான அரசியல் விவாதம் மறுக்கப்படும் இடத்தில், திரைமறைவுச் சதிகள் மூலம் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கருத்து வேறுபாடுகளின் இடத்தை அவதூறுகளும், முத்திரை குத்துதல்களும் பிடித்துக் கொள்கின்றன.

இவையெல்லாம் நன்னெறிப் போதனைகள் அல்ல. எமது விமரிசனங்களைக் கண்டு முகம் சுளித்த புலிகள் இயக்க ஆதரவாளர்களைக் கேட்கிறோம்: முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தின் பின்னால், திரைமறைவில் நடைபெற்றிருக்கும் பேரங்கள் நாடகங்கள், பிரபாகரன் குறித்த மர்மங்கள், யார் புலிகள் இயக்கத்தின் உண்மையான பிரதிநிதி, யார் நண்பன், யார் உளவாளி என்று புரிந்துகொள்ள முடியாத குழப்பங்கள். இவையெல்லாம் உங்களுக்கு அதிர்ச்சியூட்டவில்லையா? இந்த நிலைமைகள் திடீரென தோன்றியவையென்று கருதுகின்றீர்களா?

நேர்மையான சந்தர்ப்பவாதம் என்று எதை நாங்கள் குறிப்பிட்டோமோ அது, பச்சையான துரோகமாக அம்பலமாகி நிற்கின்றபோதும், புலிகளும் புலி ஆதரவாளர்களும் அதைப் புரிந்து கொள்ளும் திராணியற்றவர்களாக, புரிந்தாலும் புலம்புவதைத் தவிர வேறு வழி தெரியாதவர்களாக மாறியிருப்பதன் காரணம் என்ன என்பதைக் காலம் கடந்த பின்னராவது பரிசீலிப்பீர்களா? பார்ப்போம்.

தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட ""ஈழம் நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்'' என்ற எமது வெளியீடு கீழ்க்கண்ட வரிகளுடன் முடிந்திருந்தது:

"நோக்கத்தில் நேர்மை இருப்பதால் வழிமுறையின் நேர்மையின்மை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று இதுகாறும் நீங்கள் இறுமாந்து இருந்திருக்கலாம். நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் தோற்றுவிக்கும் விளைவு ஒன்றுதான் என்பதை விரைவிலேயே காண்பீர்கள். அப்போதும் நாங்கள் எழுப்பிய கேள்விகளைப் புறக்கணிக்கவே விரும்புவீர்கள். எனினும், அவை உங்களுக்குள்ளிருந்தே எழும் கேள்விகளாகவும் மாறியிருக்கும்.''

எதிர்பார்த்ததைப் போலவே அந்த வெளியீடுகள் எழுப்பிய கேள்விகள் அன்று புறக்கணிக்கப்பட்டன. பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதற்குப் புகைப்பட ஆதாரத்தை வெளியிட்ட நக்கீரன் தான் அந்த நாட்களின் நாயகன். அந்த நக்கீரன் அட்டைப்படம் ஒரு கிராபிக்ஸ் வேலை என்பதைப் புரிந்து கொள்வதொன்றும் கடினமல்ல. ஆனால் உண்மையை எதிர்கொள்வதைக்காட்டிலும் பொய்யில் இளைப்பாறுவதையே புலி ஆதரவாளர்கள் விரும்பினார்கள். எனவே நக்கீரன் அட்டைப்படம் உண்மையாக இருக்கவேண்டுமே என்று விரும்பி, பின்னர் தம் விருப்பத்தையே நம்பிக்கையாகவும் மாற்றிக்கொண்டு ஆறுதல் பெற்றார்கள்.

களத்தில் இறங்குகிறார் கஸ்பர்!

இதனைத் தொடர்ந்து அதே கிராபிக்ஸ் வேலையைத் தனது எழுத்தில் காட்டத் தொடங்கினார் ஜெகத் கஸ்பர். புலிகளின் தியாகம், இறுதிப் போரின் அவலம், பிரபாகரனின் நற்குணங்கள், தளபதிகளின் திறமைகள் ஆகியவற்றை விவரிக்கும் போதே, புலிகள் இயக்கத்தலைமையுடன் தான் கொண்டிருந்த நெருக்கத்தையும் தனது கட்டுரையில் ஊடும் பாவுமாகச் சேர்த்து நெய்தார். நற்செய்திகளை விசுவாசிகளின் மண்டைக்குள் இறக்கும் கலையை முறைப்படிக் கற்றுத்தேர்ந்த அருட்தந்தை என்ற தகுதியின் காரணமாகவும், சி.ஐ.ஏவால் ஸ்பான்சர் செய்யப்பட்ட ""வெரித்தாஸ்'' வானொலியில் பணியாற்றிய அனுபவத்தின் காரணமாகவும், உண்மை எது பொய் எது என்று பிரித்தறிய முடியாத ஒரு மொழிநடையில் புலி ஆதரவாளர்களைத் தனது கஸ்டடிக்குள் கொண்டு வந்தார் கஸ்பர்.

நடேசன், பூலித்தேவன் மற்றும் 300 பேர் இந்தியத் தூதரிடமோ ஐ.நா.விடமோ ஆயுதங்களை ஒப்படைப்பதற்குத் தயாராக இருந்ததாகவும், இதற்கு கனிமொழி மூலம் காங்கிரசு பெரியவரைத் தொடர்பு கொண்டு தான் ஏற்பாடு செய்ததாகவும், பிறகு அந்தக் காங்கிரசு பெரியவர், காலம் கடந்து விட்டதால் இனி இலங்கை ராணுவத்திடம் சரணடைவதுதான் ஆகக்கூடிய காரியம் என்று கூறியதாகவும், அதனை ஏற்றுக்கொண்டு, புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாகவும் எழுதினார் கஸ்பர். சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும் முடிவை எடுக்க கோத்தபய ராஜபக்சேதான் காரணம் என்றும் அக்கட்டுரையில் கஸ்பர் குறிப்பிட்டிருந்தார். அப்போது புலிகள் இயக்கத் தலைமையுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலைவர்கள் யாரும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என்பதும் இங்கே குறித்துக் கொள்ளத்தக்கது. பிறகு, கஸ்பரின் நல்லேர் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "மௌனத்தின் வலி' எனும் கவிதை நூலையும் அந்த வெளியீட்டு விழாவையும் விமரிசித்து, "வினவு' இணையதளம் வெளியிட்ட கட்டுரை, இந்தச் சரணடைவு நாடகத்தில் கஸ்பரின் பாத்திரத்தை அம்பலப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த பேட்டியில் அருட்தந்தை ஆத்திரத் தந்தையாகி வெடித்திருந்தார்.


இதற்குப் பிறகு குமுதம் இணையதளத்தில் கஸ்பரின் பேட்டி வெளிவந்தது. கடைசிக்கட்ட பேரிழப்புகளைத் தடுக்கும் விதமாகப் போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய இந்தியா முன் வந்ததாகவும், புலிகள் அதனை நிராகரித்து விட்டதாகவும் குறிப்பிட்ட கஸ்பர், வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிகாட்டுதலே இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.


வைகோவையும், நெடுமாறனையும் இழுத்த பிறகுதான் புலி ஆதரவாளர்கள் பலருக்கு கஸ்பரின் மீதிருந்த விசுவாசம் விலகத் துவங்கியது. கஸ்பரின் எழுத்துகளைச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். கஸ்பர் ஒரு இந்திய உளவுத்துறை ஏஜெண்டு என்றும், புலி ஆதரவு இணையதளங்கள் குற்றம் சாட்டத் தொடங்கின.

புலிகளைக் காப்பாற்ற முயன்றதா இந்திய அரசு?

கடைசிக்கட்ட பேரிழப்புகளைத் தடுக்கும் விதமாக, ஒரு போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய இந்தியா முன்வந்ததாக கஸ்பர் கூறுகிறாரே, இதில் உண்மை இருக்க முடியுமா? அந்த நாட்களை நினைவுபடுத்திப் பாருங்கள். தேர்தல் நெருங்கியவுடன் கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தைத் தொடர்ந்து, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோமென்று ஒரு பதில் நாடகத்தை நடத்தியது இலங்கை அரசு. அதற்கு "போர்நிறுத்தம்' என்று கொண்டு கூட்டிப் பொருள் விளக்கம் கொடுத்தார் ப.சிதம்பரம். உடனே "நாங்கள் போர் நிறுத்தமெல்லாம் செய்யவில்லை' என்று மறுப்பு வெளியிட்டது இலங்கை அரசு. "இல்லையில்லை இது போர்நிறுத்தம் தான்' என்று சிதம்பரமும் கருணாநிதியும் சாதித்தார்கள். தமிழகத்தில் வாக்குப்பதிவு முடியும் வரை இந்த நாடகத்தை நடத்தி விட்டு, அதன்பின் மூர்க்கமாக இறுதித் தாக்குதலை நடத்தி முடிப்பது என்பதுதான் இந்திய இலங்கை கூட்டுத் திட்டமாக இருந்திருக்கின்றது. அதனால்தான் புலிகள் பலமுறை போர்நிறுத்தம் கோரியும், போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசு நிராகரித்ததபோது. அதனை இந்திய அரசு வழிமொழிந்தது.


போரில் பங்கேற்றது மட்டுமின்றி, அதனை இறுதிவரை உடனிருந்து வழிகாட்டிய இந்திய அரசு, "இறுதி நேரப் பேரழிவைத்தடுக்க முயன்றதாக' கஸ்பர் கூறுவது பச்சையான பித்தலாட்டம். அது மட்டுமல்ல, எல்லாம் முடியும் நேரத்தில் போர்நிறுத்தம் செய்து, புலித்தலைவர்களைச் சரணடைய வைத்து, அவர்களை உயிரோடு பிடித்துக் கொண்டு வந்து, புதிய அரசியல் நெருக்கடிகளையும் வில்லங்கங்களையும் உருவாக்கிக் கொள்வதற்கு இந்திய அதிகார வர்க்கமொன்றும் அடி முட்டாளல்ல.

கஸ்பரை யூதாஸ் என்று சொல்ல முடியுமா?

அப்படியானால் நடேசனும் பிற புலித் தலைவர்களும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவார்கள் என்று தெரிந்தேதான் அவர்களையெல்லாம் இந்தச் சதிவலையில் கஸ்பர் சிக்க வைத்தாரா? புலிகளைக் காட்டிக் கொடுத்து ஆதாயம் பெற்ற யூதாஸ்தான் அருட்தந்தை கஸ்பர் என்ற முடிவுக்கு நாம் வந்து விடலாமா? அப்படி அவர் அடைந்த ஆதாயத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. அல்லது ஒரு தீய உள்நோக்கத்துடன்தான்(malafide intention)புலிகளை இந்தச் சதிவலையில் அவர் சிக்க வைத்தார் என்றும் நம்மால் நிரூபிக்க முடியாது.


எனினும் இந்தக் குற்றத்திலிருந்து கஸ்பரை விடுதலை செய்யவும் முடியாது. கஸ்பரும் கனிமொழியும் புலித்தலைவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நல்öலண்ணத்தால் உந்தப்பட்டே இந்த முயற்சியில் இறங்கியிருக்கக் கூடும். கருணாநிதியை அவமதித்த புலிகள், ராஜீவ் கொலை மூலம் தி.மு.க.வினரை அடிவாங்க வைத்து விட்டு, தற்போது தேர்தலில் ஜெ.வை ஆதரித்தவர்கள்.. இப்படி "எண்ணற்ற மனவருத்தங்களையும், வலிகளையும் மவுனமாக விழுங்கிக் கொண்டு, தனது பெருந்தன்மை குறித்து தானே நெகிழ்ச்சி கொண்ட நிலையில்தான்' சிதம்பரத்திடம் பேசியிருப்பார் கனிமொழி. கனிமொழியே கவனிக்கத் தவறிய கனிமொழியின் பெருந்தன்மைகளை அந்த இக்கட்டான தருணத்திலும் கஸ்பர் நினைவுபடுத்தியிருப்பார்.


எனினும், புலித் தலைவர்களைக் காப்பாற்றும் இவர்களுடைய நல்ல நோக்கத்தை உளவுத்துறை தனது தீய நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். இந்திய உளவுத்துறை உள்துறை மேல்மட்டங்களால், அல்லது அந்தக் காங்கிரசு பெரியவரால் கஸ்பர் ஏமாற்றப்பட்டிருக்கலாம். அவ்வாறாயின், ""இன்னின்னார் என்னை ஏமாற்றிவிட்டார்கள்'' என்று கஸ்பர் நேர்மையாகச் சொல்லியிருக்க வேண்டும். ""உங்களுடைய வாக்குறுதியை நம்பித்தானே அவர்களைச் சரணடையச் சொன்னேன். இந்தப் படுகொலைக்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று சிதம்பரத்தைச் சந்திக்கு இழுத்திருக்க வேண்டும்.


இந்தப் போர்க்குற்றத்தை நாம் நிரூபிக்க முடியாது. ஆனால் அருட்தந்தை கஸ்பரோ இதற்கு நேரடி சாட்சி.கொடுத்த வாக்குறுதியை மீறி நிராயுதபாணிகளைப் படுகொலை செய்த இலங்கை அரசை இந்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று கஸ்பர் கோரிக்கை எழுப்பலாமே, உண்ணாவிரதம் இருக்கலாமே!


கஸ்பர் இப்படியெல்லாம் செய்திருந்தால் அவர் காங்கிரசு அரசின் கோபத்துக்கு இலக்காக நேர்ந்திருக்கும். கனிமொழி, கருணாநிதி ஆகியோரின் பகைமையைத் தேடிக்கொள்ள நேர்ந்திருக்கும். அந்த நள்ளிரவில் நடைபெற்ற இந்தத் திரைமறைவு நாடகத்தில், நாம் இதுவரை அறிந்திராத நிழல் மனிதர்கள் பலரும் சந்திக்கு வர நேர்ந்திருக்கும். அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.


பொன்சேகாவின் அறிக்கை வெளிவந்தவுடன் பிரணாப் முகர்ஜி பதறிப்போய் இலங்கைக்கு ஓடியதை நாம் பார்க்கவில்லையா? கோத்தபயவைக் குற்றம் சாட்டிய பொன்சேகா, மறுநாளே பல்டியடித்ததையும் நாம் பார்க்கவில்லையா? ஆனானப்பட்ட இராணுவ ஜெனரலுக்கே இந்தக் கதி என்றால் கேவலம் ஒரு அருட்தந்தையின் நிலை பற்றி என்ன சொல்ல?


பழியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வற்ககாக இந்திய அரசை ஒருவேளை கஸ்பர் சந்திக்கு இழுத்திருந்தால், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர் பெற்றிருக்கும் செல்வாக்கை அந்தக் கணமே இழந்திருப்பார் அது குறைந்தபட்ச இழப்பு. அதிகபட்ச இழப்பு அகால மரணமாகக் கூட இருக்கலாம். நக்கீரன் அட்டை பொய்யென்று தெரிந்தாலும் அதையே புலி ஆதரவாளர்கள் நம்ப விரும்பினார்கள். என்ன செய்வது? நாயுடன் படுத்தவன் உண்ணியுடன்தான் எழுந்திருக்க வேண்டும். உளவுத்துறையுடனும் அதிகார வர்க்க மேல் மட்டங்களுடனும் சல்லாபிப்பவர்கள் பாதிவழியில் தமது விசுவாசத்தை முறித்துக் கொண்டால் அவர்களுக்கு நேரும் கதி இதுதான்.


ஆனால் உறுதியான விசுவாசிகளை உளவுத்துறை இயன்றவரை கைவிடுவதில்லை. பிரச்சினை புகையத் தொடங்கிவிட்டது என்று தெரிந்தவுடனே, கொலைப்பழியிலிருந்து கஸ்பரையும் காப்பாற்றி, இந்திய அரசையும் சேர்த்துக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏற்ற மாதிரியான ஒரு கதையை உளவுத்துறையே கஸ்பருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் போலும்!


வேறெப்படிச் சொல்வது?

"சண்டை நிறுத்தத்துக்கு வாய்ப்பிருந்தது. ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்பது கட்டாயமாகக் கூட கூறப்படவில்லை. இருப்பினும் புலிகள்தான் அதனை நிராகரித்து விட்டார்கள்'' என்று குமுதம் டாட் காம் பேட்டியில் கஸ்பர் கூறுகிறாரே, இதை நாம் நம்ப வேண்டுமாம்.


கொண்டுபோய் கொள்ளி வைத்துக் கொளுத்திவிட்டு வந்தபிறகு, ""தனியா இருந்து கஷ்டப்படாதீங்கப்பா, என்னோட மெட்ராஸ் வந்துடுங்கன்னு போனவாரம் கூடச் சொன்னேன், அவரு கேக்கலியே'' என்று பெத்த அப்பனுக்குச் சோறு போடாமல் விரட்டிய பிள்ளை எழவு வீட்டில் அங்கலாய்த்து அழுவான். கஸ்பரும் அழுகிறார். இந்த உருக்கமான கதை, குற்றத்திலிருந்து தன்னைத் தப்புவித்துக் கொள்ள உகந்ததாக இருப்பதால் கஸ்பர் இதை நம்புகிறார். நம்மையும் நம்பச் சொல்கிறார்.


கஸ்பரின் குற்றம் அடுத்தபடிக்குத் தாவி ஏறுகிறது. நல்லெண்ணத்துடன் கூடிய முட்டாள்தனமாக இருந்திருக்கக் கூடிய ஒரு தவறை (இந்தியாவை நம்பி புலிகளை சரணடையச் சொன்னது) மறைக்க அவர் செய்யும் முயற்சி, கிரிமினல் சதித்திட்டத்தை நோக்கி அவரை அழைத்துச் செல்கிறது. பாட்டியிடமிருந்து பணத்தைத் திருடிய பேரன், திருட்டை மறைக்கும் நோக்கத்துக்காக பாட்டியையே கொலை செய்கிறானே, அந்தத் திசையை நோக்கித்தான் போகிறார் கஸ்பர். இருப்பினும், கஸ்பரோ, கனிமொழியோ புலிகளுக்கு நேர்ந்த இந்த முடிவை எண்ணி வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக வருந்தியிருப்பார்கள். இருப்பினும் அந்தக் கோரமான முடிவுக்குத் தாங்கள்தான் பொறுப்பு என்பதை மட்டும்தான் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தம்முடைய ஆலோசனையைக் கேட்டுச் சரணடைவதற்குப் பதிலாக, அவர்கள் தொடர்ந்து சண்டை போட்டிருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கப்போகிறது? எப்படியும் போரில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதுதானே எதார்த்தம். ஆகவே, ""கொலைக்கு உடந்தையாகிவிட்டதாக எண்ணி, தாங்கள் குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை'' என்று அவர்கள் தமக்குள் பேசித் தெளிவு அடைந்திருப்பார்கள்.


இந்தத் திரைமறைவு விவகாரங்களையெல்லாம் வெளியில் சொல்லாமல் கஸ்பர் மவுனமாகவே இருந்திருந்தால் உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கவா போகிறது என்று சில புத்திசாலிகள் குயுக்தியாக கேள்வி கேட்கலாம். நக்கீரன் தொடரில் கஸ்பர் இதையெல்லாம் எழுதக் காரணம் விவரமறியாத வெகுளித்தனமும் அல்ல, பிரபலமடையும் ஆசையும் அல்ல. இத்தகைய திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளையும், தப்பிப்பதற்கான வழிகளையும் தீர்க்கமாக யோசித்துத்தான் அதற்கு ஏற்ற புனைவுகளை உருவாக்குகிறார்கள். புலி ஆதரவாளர்களுடைய மனத்துயரையும், அவர்களுடைய ஏக்கங்களையும், அரசியல் அறிவின்மையையும், ரசிக மனோபாவத்தையும் நன்றாகப் புரிந்து கொண்டு, அவர்களை வீழ்த்தும் விதத்தில் எழுதப்படும் தரம் தாழ்ந்த ஒரு புனைவுதான் நக்கீரன் தொடர்.


அருட்தந்தை ஜெகத் கஸ்பர் என்ற புலிகள் இயக்க ஆதரவாளர் தன்னை அறியாமல் துரோகியாக மாறிய கதை இதுதான். அல்லது நேர்மைக்குள் கயமையும், நல்லெண்ணத்துக்குள் நயவஞ்சகமும் குடியேறுவது இப்படித்தான். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதும் தான் இதன் ஒரே நோக்கம்.


நோக்கத்தில் நேர்மை இருப்பதால் வழிமுறையின் நேர்மையின்மை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று கருதுவோர் யாராக இருந்தாலும், (அவர்கள் நல்லெண்ணம் கொண்ட, நேர்மையான, தூய்மையான, எளிமையான சந்தர்ப்பவாதிகளாக இருந்தாலும்) அவர்கள் அனைவரும் வந்தடையும் இடம், தற்போது கஸ்பர் வந்தடைந்திருக்கும் இடம்தான்.


நேர்மையான குறுக்குவழி கஸ்பரின் பங்காளிகள்!


கஸ்பரோடு ஒட்டாதவர்களும், அதே நேரத்தில் கஸ்பருக்கு இணையாகப் புலிகளை ஆதரிப்பவர்களுமான நெடுமாறன், வைகோ முதலானோர் இந்தத் துரோகப் பாதையின் இன்னொரு தண்டவாளமாகக் கருதப்படவேண்டியவர்கள். புலிகள் மீதான அதீதமான புகழுரைகளுடன் கப்ஸாக்களையும் கலந்து, நக்கீரன் இதழில் கஸ்பர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, எது உண்மை, எது புருடா என்று சாதாரண வாசகனுக்கு வேண்டுமானால் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நெடுமாறன், வைகோ உள்ளிட்ட புலி ஆதரவாளர்களுக்கு இதன் பொய்மை நிச்சயம் புரிந்திருக்கும். ஆனால் ஏன் யாரும் மூச்சுவிடவில்லை? அரசியல் நாகரீகமா? எனில், கஸ்பர் இவர்களைச் சந்திக்கு இழுத்தபோதும் அந்த நாகரீகத்தையும் மவுனத்தையும் பேண வேண்டியதுதானே! உடனே இவர்களது ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி கஸ்பரைக் கிழிப்பது ஏன்?


"மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் நடேசன் தலைமையில் சிங்கள இராணுவத்திடம் சரணடைவது என்ற முடிவைப் புலிகள் எடுத்தார்கள்'' என்று மே 21 ஆம் தேதி நக்கீரனில் கஸ்பர் எழுதியபோது, நெடுமாறன், வைகோ, சீமான், மணியரசன் போன்ற யாரும் அதனை மறுக்கவில்லையே! கேள்விக்கு உள்ளாக்கவில்லையே!


கொடூரமான சிங்கள இனவெறி இராணுவம் எந்த யுத்த தருமத்துக்கும் கட்டுப்படாது என்ற உண்மை புலித் தலைவர்களுக்குத் தெரியாதா? தெரிந்தும் இப்படி ஒரு தற்கொலைப் பாதையைப் புலிகள் தேர்ந்தெடுத்ததாக கஸ்பர் எழுதிய போது, வைகோ, நெடுமாறன் போன்றோரால் அதனை எப்படி நம்ப முடிந்தது?


300 பேர் சரணடைவது என்ற முடிவை எடுக்கு முன்னர் புலிகள் நெடுமாறனையோ, வைகோவையோ கலந்தாலோசிக்கவில்லையா? அல்லது ஆலோசனை கேட்ட புலிகளிடம், சரணடைந்து விடுங்கள். எங்களுக்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை என்று ஒப்புதல் கொடுத்தார்களா? அவ்வாறாயின், இந்தக் குற்றத்தில் இவர்களும் கஸ்பரின் கூட்டாளிகள் ஆகவில்லையா?


கஸ்பரின் கதை ஒருபுறம் இருக்கட்டும். ஜெயலலிதா வெற்றி பெற்றால் போர்நிறுத்தம் என்பது நெடுமாறன், வைகோ முதலானோரின் கணக்கு. அந்தக் கணக்கு பிசகிவிட்டதுதென்பது மே 16 அன்றே தெளிவாகிவிட்டது. "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' இலை மலரா விட்டால் என்ன செய்வது என்று பதிலளிக்க வேண்டிய கடமை வைகோவுக்கும், நெடுமாறனுக்கும், சீமானுக்கும் உண்டா இல்லையா? எமது முந்தைய வெளியீட்டில் இதே கேள்வியை நாங்கள் கேட்டோம். எங்களுக்கு பதில் சொல்லவில்லை. இவர்களை நம்பி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்ற புலிகளுக்காவது பதில் சொல்லும் கடமை இவர்களுக்கு உண்டா இல்லையா? மே16 தேர்தல் தோல்விக்குப் பிறகு... இனி என்ன செய்வது என்று இவர்கள் புலிகளுக்குச் சொன்ன யோசனை என்ன? போரிட்டுச் சாகச் சொன்னார்களா? இவர்கள் பேச்சைக் கேட்காமல்தான் புலிகள் சரணடைந்து விட்டார்களா? சொல்லட்டும்.


வைகோ, நெடுமாறனின் மவுனத்துக்கு என்ன பொருள்?


இந்தக் கேள்விகள் எதையும் புலி ஆதரவாளர்கள் இவர்களைக் கேட்கவில்லை என்பது வெட்கக் கேடு! இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மவுனம் சாதிக்கும் உரிமை இவர்கள் யாருக்கும் கிடையாது.

இவர்களுடைய "மகா மவுனம்' நமக்குத் தெளிவுபடுத்தும் செய்தி இதுதான். தங்கள் ஆயுதங்களை மவுனிக்கச் செய்வது என்ற முடிவை புலிகள் மேற்கொள்வதற்கு நெடுநேரம் முன்னதாகவே, இந்த தொப்புள் கொடி உறவுகள் தங்கள் கைபேசிகளை மவுனிக்கச் செய்திருக்க வேண்டும். எங்கள் கணக்கு பிசகி விட்டது. இனி உங்கள் பாடு என்று கை கழுவியிருக்க வேண்டும். கை கழுவியதற்குப் பின்னர் உட்கார்ந்துக் கதறி அழுதிருக்கலாம். ஆனால் அந்தக் கண்ணீர், அறம் கொன்ற கண்ணீர்! "

என் கணக்கு பிசகி விட்டதே' என்று கஸ்பரும்தான் அழுதிருக்கக் கூடும்.

புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களே,


குண்டு வீச்சின் இரைச்சலுக்கும், மக்களின் ஓலத்துக்கும் இடையே, ரத்தமும் கண்ணீரும் ஆறாய்ப் பெருகிக் கொண்டிருந்த அந்தக் கொலைக்களத்தின் மத்தியிலிருந்து தொலைபேசியில் பேசிய சூசையின் குரல் உங்கள் காதிலிருந்தும் மறைந்து விட்டதா? பட்டினியும், தூக்கமின்மையும், மனச்சோர்வும் வாட்ட, கதறுகின்ற மக்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல், தமது தலைமைத்துவத்தின் கவுரவம் நொறுங்கி, உடைந்து போன மனிதர்களாய் தத்தளித்த புலிகள் ஒரு ஆதரவுக் குரல் தேடி தொலைபேசியில் இவர்களை அழைத்திருக்க மாட்டார்களா? அழைத்திருப்பார்கள். மீண்டும் மீண்டும் அழைத்திருப்பார்கள். ஸ்விட்ச்டு ஆஃப் என்பதுதான் புலிகளுக்கு கிடைத்த பதில் என்றால் அந்த பதிலின் பொருள் என்ன?


"கை கழுவுகிறவர்கள் தம் கையை இரத்தத்தில் கழுவுகிறார்கள்' என்றார் பிரெக்ட். குற்றத்தை ஒப்புக் கொண்டவன் மன்னிப்புக் கேட்கிறான். தண்டனைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறான். குற்றத்திலிருந்து தப்பிக்க விரும்பும் மனமோ கொடூரமானது. தீர்மானகரமான இத்தகைய தருணங்களில் தான் அது அம்பலமாகிறது . இவர்களுடைய மவுனம் தோற்றுவித்த வலியை நாம் உணர வேண்டும் என்றால் கொல்லப்பட்ட புலித் தலைவர்கள் எழுந்து வந்து நமக்கு சாட்சி சொல்ல வேண்டும். அல்லது புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களே, நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.


ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்? பேசட்டும். பேசினால்தானே இவர்களுடைய மவுனத்தின் வலியையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இருபதாயிரம் உயிர்களுக்கு இவர்கள் பொறுப்பில்லையா?

கடைசி கட்டப் பேரிழப்புகளைத் தடுக்க ஒரு போர்நிறுத்தத்துக்கு காங்கிரசு அரசு வாய்ப்பளித்தது என்று கஸ்பர் கூறுவது இமாலயப் பொய் என்றால், அம்மாவும் அத்வானியும் வெற்றி பெற்ற மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்கும் என்று நெடுமாறனும் வைகோவும் கூறுவது ஒரு ஆகாசப் புளுகு.

அந்த நாட்களை நினைவுபடுத்திப் பாருங்கள்! இங்கே இவர்கள் ஜெயலலிதாவுக்கு சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கே ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பிணங்கள் விழுந்து கொண்டிருந்தன. சிங்கள இராணுவம், தான் விரும்பிய திசையில் புலிகளையும் மக்களையும் நெட்டித்தள்ளி, முள்ளிவாய்க்கால் எனும் தூக்குமேடையில் கொண்டு நிறுத்தியிருந்தது.

தப்பிக்கவோ தற்காத்துக் கொள்ளவோ எந்த வழியும் இல்லாத அந்த நிலையில், ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்ற முடிவை சில நாட்களுக்கு முன்னரே புலிகள் எடுத்திருந்தால், ஒருவேளை, ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு, மே 13 அன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே சிங்கள இராணுவம் வெறிகொண்ட தாக்குதலைத் தொடங்கிவிட்டது. "ஆயுதங்களை மவுனிக்கிறோம்' என்ற தங்களது முடிவினைத் தள்ளி வைப்பதற்கு வேறு எந்த முகாந்திரமோ நம்பிக்கையோ அவர்களிடம் கிடையாது — இந்தியத் தேர்தல் முடிவுகள் குறித்து நெடுமாறன், வைகோ போன்றோர் கொடுத்த நம்பிக்கையைத் தவிர.

இந்த 4 நாட்களில் கொல்லப்பட்ட புலிப்படையினரின் உயிர்களும் பொதுமக்களின் உயிர்களும் யாருடைய கணக்கில் எழுதப்படவேண்டும்?

"அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது நம் கையில் மட்டுமா இருக்கிறது?'' என்று புத்திசாலித்தனமாக மடையடைக்கலாம். ஆனால் இந்த மடையடைப்பின் அந்தப் பக்கம் தேங்கியிருப்பது 20,000 மக்களின் இரத்தம்.

சில ஆயிரம் புலிகள் மற்றும் மக்களின் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் இந்தச் சூதாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அத்வானியின் மீதும் அம்மாவின் மீதும், அவர்களுடைய வெற்றியின் மீதும் இவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது! கஸ்பருக்கோ சிதம்பரத்தின் மீது நம்பிக்கை!

கர்த்தரை நம்பி கஸ்பர் ஏமாறட்டும், சிவபிரானை நம்பி நெடுமாறன் ஏமாறட்டும் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் தங்களுடைய அரசியல் நம்பிக்கையின் மீது, ஆயிரம் பதினாயிரம் மக்களின் உயிரை இவர்கள் பணயம் வைக்கும்போது, அதன் விளைவுகளுக்கு அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் பொறுப்பேற்றுப் பதில் சொல்லியாக வேண்டும்.

இன்று எல்லாம் முடிந்து விட்டது. ஈழப்பிரச்சினை ஓட்டுக்கு உதவாது என்று புரிந்து கொண்ட ஜெயலலிதா, பிரச்சாரத்தின் இறுதி நாட்களிலேயே ஈழம் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டார். பாரதீய ஜனதாவோ ஈழமா, கிலோ என்ன விலை என்று கேட்கிறது.
"இப்படிப்பட்டவர்களை நம்பியா இத்தனை ஆயிரம் உயிர்களைப் பணயம் வைக்கச் சொன்னோம்?'' என்று வைகோ நெடுமாறன் அணியினர் யாரேனும் எங்கேனும் வருத்தம் தெரிவித்துப் பேசியிருக்கிறார்களா?

"ஜெயலலிதாவும் பாரதீய ஜனதாவும் வென்றிருந்தால் 17ஆம் தேதி போர்நிறுத்தம் வந்திருக்கும். ராவின் அதிகாரிகளும், ஐ.பி.யின் அதிகாரிகளும், புலிகளை ஒழிப்பதற்காக இலங்கை அரசுடன் கூட்டாகப் போட்ட திட்டங்கள் அனைத்தையும் 16ஆம் தேதி இரவே கிழித்துப் போட்டிருப்பார்கள்'' என்ற கதையைத்தான் இந்தக் கணம் வரை இவர்கள் கடை விரித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா வென்றிருந்தால்...?

உண்மை என்ன? பா.ஜ.க. வென்றிருந்தாலும் முள்ளிவாய்க்காலில் இப்போது என்ன நடந்ததோ அதுதான் நடந்திருக்கும். ஆனால், பாத்திரங்கள் இடம் மாறியிருப்பார்கள். வைகோவும் நெடுமாறனும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். கஸ்பரும் கருணாநிதியும் அவர்களைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்திருப்பார்கள்.

தன்னைத் தற்காத்துக் கொள்ள தேவையான கதையை வை.கோ நமக்குச் சொல்லியிருப்பார். "அத்வானி அவர்களே, நீங்கள் இடுகின்ற முதல் ஆணை என் ஈழத்தமிழனைக் காப்பாற்ற வேண்டும். இதற்காக என் தமிழினம் என்றென்றைக்கும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கும் என்று கூறினேன். என் கண் முன்னே சிவசங்கர மேனனை அழைத்து அவர் ஆணையிட்டார். இந்திய உளவுத்துறை அதிகாரிகள் நேரில் விரைந்தார்கள். ஆனால் ஐயகோ, மாபாவி கோத்தபய ராஜபக்சே அதற்கு முன்னே சதி செய்து கொன்றுவிட்டான்'' என்று பேசிவிட்டு கருப்புத் துண்டால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருப்பார்; இன்று ப.சிதம்பரத்தை கஸ்பர் நியாயப்படுத்துவதைப் போலவே, நெடுமாறன் அம்மாவை நியாயப்படுத்தியிருப்பார். இந்தக் காட்சிகளையெல்லாம் காணமுடியாமல், தமிழ்நாட்டு மக்கள் இவர்களைக் காப்பாற்றி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவர்களுடைய அரசியல் நிலைப்பாடு அறியாமையிலிருந்து பிறந்தது அல்ல. பச்சையான சந்தர்ப்பவாதம். தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்கு ஈழ மக்களையும் புலிகளையும் பகடைக் காயாக்கிவிட்டு, இன்று பரிதாபத்துக்குரிய அவல நிலைக்கு அந்த இனமே தள்ளப்பட்ட சூழலிலும் கூட, கடுகளவும் குற்றவுணர்வு கொள்ளாத கல்நெஞ்சக்காரர்கள் இவர்கள்.

தேர்தல் புறக்கணிப்பு என்ற முழக்கத்தை நாம் வைத்தபோது, ""உங்கள் கொள்கையெல்லாம் சரிதான். ஆனால் இது நடைமுறை சாத்தியமான தீர்வு எதையும் ஈழத்தமிழ் மக்களுக்கு வழங்காது'' என்று ஒரு ஏளனப்புன்னகையால் எங்களை ஒதுக்கி விட்டு, கம்பீரமாக இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கப் போனார்கள். தேர்தல் தோல்வியை விட்டுத் தள்ளுவோம். நடைமுறை சாத்தியமான தீர்வை வழங்கும் அம்மாவும் அத்வானியும் போர்க்குற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்களா? போராடுகிறார்களா? இவர்களுடைய வெற்றிதான் ஈழத்தமிழர்களை வானமேற்றி வைகுந்தம் சேர்த்திருக்குமா?

"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றார்கள். மலரா விட்டால் என்ன செய்வது என்று பதிலளிக்க வேண்டிய கடமை வைகோவுக்கும், நெடுமாறனுக்கும், சீமானுக்கும் உண்டா இல்லையா? மே16 தேர்தல் தோல்விக்குப் பிறகு... இனி என்ன செய்வது என்று இவர்கள் புலிகளுக்குச் சொன்ன யோசனை என்ன? போரிட்டுச் சாகச்சொன்னார்களா? இவர்கள் பேச்சைக் கேட்காமல்தான் புலிகள் சரணடைந்து விட்டார்களா?

இந்தக் கேள்விகள் எல்லாம் இவர்களுடைய சிந்தனைத்திறனுக்கு அப்பாற்பட்ட கேள்விகள் அல்ல. இந்தத் தேர்தல் சூதாட்டம் குறித்து இவர்கள் நெஞ்சில் இருக்கின்ற, ஆனால் வாயில் வராத ஒரு பதில் இருக்கிறது. " " மயிரைக் கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை, போனா மசிரு'' என்பதுதான் அது. போன உயிர்களைப் பற்றி இதைவிட மேம்பட்ட வேறு மதிப்பீடுகள் எதுவும் இவர்களுக்கு இருக்குமாயின், குறைந்த பட்சம் அந்தக் கடைசி நாட்களில் நடந்த திரைமறைவு நாடகங்கள் பற்றி ஒளிவு மறைவின்றி இவர்கள் பேசியிருப்பார்கள்.

மவுனம் சாதிக்க இவர்களுக்கு உரிமை உண்டா?

ஈழப்பிரச்சினைக்காகத் தமிழகத்தில் தீக்குளித்தவர்கள், சிறை சென்றவர்கள், பட்டினி கிடந்தவர்கள், தடியடிபட்டவர்கள் எத்தனை பேர்? ஐரோப்பாவின் வீதிகளில் நின்ற புலம் பெயர் தமிழர்கள் எத்தனை இலட்சம் பேர்? யாருக்காகப் போராடினோமோ அவர்களுடைய தலைவிதியை ஒரு பாதிரியும், மந்திரியும், சில அதிகாரிகளும் இரகசியமாகத் தீர்மானிப்பார்களாம். கடைசி நாட்களில் நடந்தது என்ன என்பது பற்றி வைகோவும் நெடுமாறனும் பேசவே மாட்டார்களாம். எல்லாம் முடிந்துவிட்ட பிறகும் நடந்ததைச் சொல்ல மாட்டார்களாம். ""சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும்'' என்று குமுதம் பேட்டியில் கூறுகின்றார் கஸ்பர். ஈழத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் யார்? தமிழக மக்களா, யாரோ சில உளவுத்துறை அதிகாரிகளா? சில அரசியல் தரகர்களும், பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் உருட்டும் தாயக்கட்டையாக ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டமே மாறிப்போனதற்கும், உலகில் வேறு எங்கும் காணாத வகையில் ஒரு முற்றான துடைத்தொழிப்பு நடந்து முடிந்திருப்பதற்கும் காரணம் ஒரு பாதிரியும், தமிழகத்தில் சில மாவீரர்களும் மட்டுமல்ல.

துரோக நாடகத்தின் பாத்திரங்கள்!
இந்தப் பக்கம் கஸ்பர், அந்தப்பக்கம் நெடுமாறன், வைகோ என்று ஒட்டாமல் பிரிந்திருக்கும் இந்தத் தண்டவாளங்கள் இரண்டும் ஒரே திசையை நோக்கித்தான் புலிகளை இட்டுச் சென்றன. ஆனால் "ஒன்றுக்கு இன்னொன்று மாற்று' என்று கருதி இந்தத் தண்டவாளங்களின் மீது சவாரி செய்தார்கள் புலிகள். எஞ்சினுக்கு என்னதான் ஆற்றல் இருந்தாலும், செல்லும் திசையைத் தண்டவாளங்கள்தானே தீர்மானிக்கின்றன.


இது புலிகளும், பல்வேறு தரப்புகளைச் சார்ந்த அவர்களது அபிமானிகளும் தெரிந்தே தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதையின் முடிவு. இந்தக் கசப்பான உண்மைக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது. அதனை விவரிக்க இது இடமல்ல. நடப்பு நிகழ்வுகளுக்கு வருவோம். இந்தத் துரோக நாடகத்தின் பார்வையாளர்களான புலி ஆதரவாளர்கள் தம்மையும் அறியாமல் இதன் பாத்திரங்களாகவும் இருந்து வருகிறார்கள்.


கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகாவது தாங்கள் ஆபத்தின் விளிம்பில் நிற்பதை புலிகள், தமது தமிழக ஆதரவாளர்களுக்கு உணர்த்தினார்களா, அல்லது தாங்கள் உருவாக்கிக் கொண்ட நாயக பிம்பத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உண்மையை அவர்களிடமிருந்தும் மறைத்தார்களா தெரியவில்லை.


புலிகளே சொல்லியிராவிட்டாலும் சொந்த அறிவு உள்ளவர்கள் யாரும் கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளின் அரசியல், ராணுவப் பின்னடைவைப் புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால், கிளிநொச்சியின் வீழ்ச்சியை "மாபெரும் பின்வாங்கும் போர்த்தந்திரம்' என்றும், "சிங்கள ராணுவத்தை உள்ளே இழுத்து ரவுண்டு கட்டி அடிப்பதற்காகத்தான் புலிகள் பின்வாங்குகின்றார்கள்' என்றும் புலி ரசிகர்கள் இங்கே ராணுவ ஆய்வுகளை வெளியிட்டார்கள். வேறு சிலர் "புலிகளையாவது வெல்வதாவது' என்று பொதுக் கூட்டம் போட்டு நமக்குத் தைரியம் சொன்னார்கள்.


புலி ஆதரவாளர்களின் மனோநிலை கொஞ்சம் விசித்திரமானதுதான். "ஏசு கிறிஸ்துவின் கடைசி ஆசை' என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை அது நினைவூட்டுகின்றது. சிலுவையில் அறையப்பட்டு அரை மயக்க நிலையில் கனவு காணும் ஏசு, தான் சிலுவையிலிருந்து தப்பி காதலியை மணந்து குடும்பம் ? நடத்துவதாகக் கனவு காண்பார். அந்தக் கனவுக்குள் ஒரு காட்சி "ஏசு நமக்காக சிலுவையில் மரித்தார்' என்று சந்தையில் நின்று பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார் ஒரு மதபோதகர். அவரிடம் சென்று "நான்தான் ஏசு, நான் மரிக்கவில்லை. பெண்டாட்டி, பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கிறேன்'' என்று கூறுவார் ஏசு. மதபோதகரோ, ""நீ ஏசுவாகவே இருந்தாலும் சரி, எங்களைப் பொருத்தவரை ஏசு சிலுவையில் மரித்து விட்டார்'' என்று தீர்க்கமாகப் பதிலளிப்பார்.


"பாரியதொரு தோல்வி' என்று புலிகள் இயக்கத்தினரே கூறியபின்னரும், இது "தோல்வியே அல்ல, பின்வாங்கும் போர்த்தந்திரம்' என்று கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தஞ்சாவூரில் மாநாடு போட்டு பேசுகின்றார்கள் புலி ஆதரவாளர்கள். கூடியிருக்கும் ஆயிரம் பேர் இந்த மாபெரும் உண்மையைக் கைதட்டி வரவேற்கிறார்கள். இவர்களையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது?

கஸ்பர் நக்கீரன் இதழில் புலிகளை வானளாவப் புகழ்ந்து தள்ளியபோது, நிகழ்காலத்தை மறந்து அந்தக் கதகதப்பில் புலி ஆதரவாளர்கள் கண் மயங்கினார்கள். இப்போது கஸ்பரை ""உளவாளி, இயக்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்'' என்றெல்லாம் சாடுகின்றார்கள். இயக்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவரை நடேசன் ஏன் தொடர்பு கொண்டார் என்ற கேள்வியோ, போரை நடத்தும் எதிரியின் (காங்கிரசு) அணிக்காரரை எதற்காக நடேசன் தொடர்பு கொண்டார் என்ற கேள்வியோ அவர்களுக்கு எழவேயில்லை. கஸ்பரின் ஆலோசனைப்படி ""இலங்கை ராணுவத்திடம் சரணடைவது என்ற பாரிய முடிவை எடுத்த நடேசன், உங்களைக் கலந்தாலோசிக்கவில்லையா?'' என்று நெடுமாறன், வைகோ போன்றோரை இவர்கள் கேட்பதுமில்லை.


பொதுவாக, அரசியல் தரத்தில் தி.மு.க. தொண்டனைவிடத் தங்களைப் பெரிதும் உயர்ந்தவர்களாகத்தான் கருதிக் கொள்கிறார்கள் புலி ஆதரவாளர்கள். திருமண உதவி, ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி என்று என்னென்னவோ கொடுக்கிறார் கலைஞர். ""யார் தாலியை அறுத்து இந்த தருமம் நடக்கிறது?'' என்ற கேள்வியை எந்த தி.மு.க. தொண்டனும் கேட்பதில்லை. ""கொடுக்கிறாரா வாங்கிக் கொள்!'' அவ்வளவுதான். காங்கிரசோடு சேர்ந்தாலும், பாரதிய ஜனதாவோடு சேர்ந்தாலும் தி.மு.க. தொண்டனைப் பொருத்தவரை, அதெல்லாம் அவருடைய ராஜதந்திரம். "ஜெயிக்கிறாரா, அதுதான் முக்கியம்''. இதுதான் சராசரி தி.மு.க. தொண்டனின் பார்வை. கலைஞரின் கொள்கை என்ன என்று தி.மு.க. தொண்டன் கேட்பதில்லை. அவனுக்கு கலைஞர் தான் கொள்கை. புலிகள் குறித்த புலி ஆதரவாளர்களின் பார்வையும் இதுதான்.


புலிகள் ஆடிய ஆடுபுலி ஆட்டம்!


புலிகள் இயக்கமோ அனைத்துக்கும் இடமளிக்கின்றது. ஆளும் வர்க்க அரசியல், ஜனநாயகமே இல்லாத அமைப்பு முறை, அணிகளால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர்கள், மக்கள்திரள் அரசியலை வெறுத்தொதுக்கும் ராணுவவாத நடைமுறை இவையனைத்தும் கலந்த இவ்வமைப்பு, சிங்கள இனவெறியின் மூர்க்கத்தனம் காரணமாக தனது உறுதியைப் பேண முடிந்தது.


புலிகளைப் பொருத்தவரை விடுதலை என்பது ஒரு பாதி ஆயுதப் போராட்டம், மறுபாதி லாபியிங் வேலை. அதற்காக இந்தப் பக்கம் நெடுமாறன், வைகோ, பாஜக அந்தப் பக்கம் கஸ்பர், கனிமொழி. அப்புறம் அமெரிக்காவை சரிக்கட்ட ஒபாமாவுக்கான தமிழர்கள், ஐரோப்பிய நாட்டு அரசுகளுக்குத் தனி ஆட்கள், இலங்கை அரசியலைச் சமாளிக்க துரோகிகள், பிழைப்புவாதிகள் அனைவரையும் அள்ளிக்கட்டிய ஒரு தமிழர் கூட்டணி.... "யாரை வேண்டுமானாலும் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்' என்பதுதான் அவர்களது அரசியல்.


இந்த சந்தர்ப்பவாத அரசியலை ராஜதந்திரம் என்றும், எல்லோரையும் காய்களாகப் பயன்படுத்தி புலிகள் ஆடுகின்ற "ஆடுபுலி ஆட்டம்' என்றும் கூறி புலி ஆதரவாளர்கள் வியந்து கொண்டிருந்தார்கள். இந்த விபரீத ஆட்டத்தில் புலிகளும் வெட்டுப்படக் கூடும் என்பதை, வெட்டுப்படும் வரை அவர்கள் நம்பத்தயாராக இல்லை.


கூடாத கொள்கைகள் மட்டுமல்ல, கூடாத நட்பும்தான் புலிகளை முள்ளிவாய்க்காலுக்குத் தள்ளிக் கொண்டு வந்தது. அந்த இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் புலித்தலைமையும் ஆயிரக்கணக்கான மக்களும் தப்பிக்கவே முடியாமல் சுற்றி வளைக்கப்பட்டிருந்தபோது, தமிழகத்தின் இரு அரசியல் அணிகளையும் சேர்ந்த புலிகளின் ஆதரவுத் தலைவர்களும் பிரமுகர்களும், தாங்கள் தப்பிக்கும் வழியைத்தான் தேடிக் கொண்டிருந்தார்கள்.

"ஏதாவது செய்யுங்கள்'' என்று முள்ளிவாய்க்காலிலிருந்து எத்தனை தொலைபேசி அழைப்புகள்! எங்களுக்கும் தெரியும். புலி ஆதரவுப் பிரமுகர்களுடைய கைபேசிகள், வெடிகுண்டுகளைப் போல அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தன.


அந்த நாட்களில் நடேசனுடனோ, பூலித்தேவனுடனோ, பிரபாகரனுடனோ நிகழ்த்தப்பட்ட உரையாடல்கள், வழங்கப்பட்ட ஆலோசனைகள் ஆகிய எவையும் யாருடைய தனிப்பட்ட விவகாரமும் அல்ல. அவை இலட்சக்கணக்கான ஈழத்தமிழ்மக்களின் உயிருடனும் உரிமையுடனும் தொடர்புள்ளவை. அவர்களுடைய தலைவிதியைத் தீர்மானிப்பதில் பாத்திரமாற்றியவை. அவற்றை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு. கண்ணுக்கெட்டிய வரை மாவீரர் கல்லறை நீள்வதைக் காட்டி அதனைத் தமிழ் வீரத்துக்கு சான்றாக்கி கொட்டி முழக்கியவர்கள், தமிழகத்தில் தீக்குளித்து இறந்த ஒவ்வொரு இழவு வீட்டுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு மலர் வளையம் வைத்து விளம்பரம் தேடியவர்கள் முள்ளி வாய்க்கால் சுடுகாட்டைக் கண்டு மட்டும் முகத்தை மூடிக்கொள்வது ஏன்?


நாங்கள் எழுப்பும் இந்தக் கேள்விகளும் வெந்த புண்ணில் பாய்ச்சப்படும் வேல்களே என்று வியாக்கியானம் செய்யலாம். வெறுப்பை உமிழலாம். எமது அரசியல் ரீதியான விமரிசனங்களால் மனம் புண்பட்டுப் போன "அனிச்ச மலர்' களைக் கேட்கிறோம். வன்னி மக்களைக் காட்டிலும் நீங்கள் புண்பட்டு விட்டீர்களா? உங்களுடைய தலைவர்களின் இந்தக் கள்ள மவுனம் உங்களைப் புண்படுத்தவே இல்லையா? விசித்திரம் தான்!


அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செத்துப் போன அநாதைப் பிணத்துக்கு, வைத்தியம் பார்த்த மருத்துவரைக் கேள்வி கேட்கக் கூட நாலு பேர் வருகிறார்கள். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உங்கள் அபிமான புலித் தலைவர்களும் 20,000 மக்களும் காற்றோடு கரைந்து விட்டார்களே, ஈழத்துக்கு "வைத்தியம்' சொன்ன உங்கள் தலைவர்களை நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லையே.


எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்: இருக்கிறார். உடனே விசில் சத்தம் கூரையைப் பிளக்கிறது. இருக்கட்டும். நாங்கள் இல்லாமல் போன 20,000 பேரின் இறுதி நாட்களுக்கு விளக்கம் கேட்கிறோம். அதற்கும் "விசில்'தான் பதிலா?

யார் நண்பன்? யார் துரோகி? யார் தலைவர்?

விடுதலைப் போராட்டத்தில் தோல்வியும், பின்னடைவும் அதிசயமல்ல. ஒரு இயக்கம் அந்தத் தோல்வியை எப்படி எதிர்கொள்கின்றது என்பதுதான் அதன் தரத்துக்கு உரைகல். எது சரி, எது பிழை என்று கொள்கைகளின் மீது இங்கு விவாதம் நடைபெறவில்லை. மாறாக யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்பதுதான் இன்று விவாதப் பொருள்.

"பிரபாகரன் இறந்துவிட்டார்' என்று பத்மநாதன் சொன்னதுமே, "அவன் துரோகி' என்று பிரகடனம் செய்தார் நெடுமாறன். "ஆயுதப் போராட்டம் தளபதி ராம் தலைமையில் மீண்டும் தொடங்கவிருக்கிறது'' என்கிறது ஒரு தரப்பு, ""ராம் சிங்கள அரசின் கைக்கூலி'' என்கிறது இன்னொரு பிரிவு. ""நாடு கடந்த தமிழ் ஈழம்'' என்று ஒரு பிரிவு, "அவ்வாறு பேசுபவர்கள் துரோகிகள்'' என்று இன்னொரு பிரிவு.


"துரோகி' என்ற சொல் ஈழ விடுதலைப் போராட்டத்தில் புழங்கிய அளவிற்கு வேறு எங்கும் புழங்கியிருக்குமா என்று தெரியவில்லை. துரோகி பட்டத்தை வழங்கும் அதிகாரம் படைத்த திருச்சபை இப்போது இல்லையென்பதால், சுயேச்சையான சபைகள் உலகெங்கும் முளைத்து விட்டன. கையில் "துரோகி' என்ற முத்திரைக் கட்டையுடன் மெய்உலகிலும், மெய் நிகர் உலகிலும் நூற்றுக்கணக்கானோர் அலைகின்றார்கள். முதுகு இருப்பவன் ஒவ்வொருவனும் முத்திரையை சுமந்தாக வேண்டும் என்ற நிலை. அடுத்தவனைத் துரோகியாகவும் தங்களைப் புனிதவானாகவும் சித்தரித்துக் கொள்ளும் இந்த நாடகம், தவிர்க்கவியலாதபடி ""நீ பத்தினியா நீ பத்தினியா'' என்ற குழாயடிச் சண்டையில் வந்து நிற்கின்றது.


திருமாவின் இறுதி ஆயுதம்!


ஜெயலலிதாவினால் பொடாவில் கைது செய்யப்பட்டு, நெடுமாறன் பிணையில் வெளியே வந்தபோது, "அரசியல் பேசக்கூடாது' என்று நீதிமன்றம் போட்ட அநீதியான நிபந்தனையை மீறி, "பேசுங்கள் ஐயா'' என்று பலரும் வற்புறுத்திய போதிலும், நெடுமாறன் பேசாததற்குக் காரணம் அவருடைய ஜெயலலிதா சார்புநிலைதான் என்கிறார் சுப.வீ.

"தேர்தலில் தோற்றாலும் சரி, ஈழத்துக்காக மூன்றாவது அணி அமைப்போம் என்று நான் சொன்னதை நிராகரித்து என்னை ஜெயலலிதா அணியில் சேர்ப்பதிலேதான் நெடுமாறன் அணியினர் குறியாக இருந்தனர். அ.தி.மு.க.வுக்கு கூட்டணி சேர்ப்பதுதான் இவர்களது நோக்கமேயன்றி, ஈழம் அல்ல'' என்கிறார் திருமாவளவன்.


காங்கிரசு அணியில் சேர்ந்தது மட்டுமின்றி, இலங்கைக்கும் போய்விட்டு வந்ததால், திருமாவை நெடுமாறன் அணியினர் விமரிசிக்கத் தொடங்கவே அவர் இறுதி ஆயுதத்தையும் கையில் எடுத்து விட்டார்.


"நடேசன் பூலித்தேவனுடன் பிரபாகரனும் சரணடைந்தார். அதன் பின்னரே கொல்லப்பட்டார்'' என்று தீவிர புலி ஆதரவாளரான ஒரு நண்பர் கூறியதாகவும் அந்த நண்பர் சொன்னதைச் சலனமில்லாமல் கேட்பதைத் தவிர தன்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் எழுதியிருக்கிறார் திருமா. (ஜூ.வி டிச. 27, 2009).


திருமாவளவனை "துரோகி' என்று புலி ஆதரவாளர்கள் சாடலாம். ஆனால் அந்தச் சொல் வீரியம் இழந்து நைந்து விட்டது. வெல்லப்பட முடியாத வீரம், சரணடையாத சயனைடு குப்பி என்பனவற்றையே தாயத்தாகக் கொண்டு அரசியல் விமரிசனங்கள் அனைத்தையும் புலிகள் அண்ட விடாமல் விரட்டி வந்த காலம் முடிந்து விட்டது. இந்தச் சூழ்நிலையிலாவது அறிவுப்பூர்வமான பரிசீலனையை நோக்கி புலி ஆதரவாளர்கள் திரும்பியிருக்க வேண்டும்.


மாறாக, கடவுள் இல்லை என்று நிரூபித்த பெரியாரின் வாதத்துக்கு செருப்பையே தமது பதிலாக எறிந்தார்களே பக்தர்கள், அந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள் புலிகளின் ஆதரவாளர்கள் பலர். இந்த மனநிலைதான் அருட்தந்தை ஜெகத் கஸ்பரின் கப்சாக்களுக்கான சந்தை. அய்யா நெடுமாறன் அணியினரின் அரசியல் சந்தர்ப்பவாதங்களைப் பாதுகாக்கும் கவசமும் இந்த மனநிலைதான்.


"பிரபாகரன் இல்லை என்று சொல்வதே தமிழ் மக்களின் தார்மீகபலத்தைக் குலைப்பதற்கு சிங்கள அரசு செய்யும் சதி' என்றும் இதற்கு விளக்கமும் கூறுகின்றார்கள். சதி கிடக்கட்டும், இன்று தமிழ் மக்களின் விதிக்கு வழிகாட்டப் போகும் தலைவர் யார்? எந்தவொரு பிரச்சினையிலும் "எது சரி' என்ற கேள்விக்கு "புலி என்ன சொல்கிறதோ அதுதான் சரி'' என்று மட்டுமே பதிலளித்துப் பழகியிருக்கும் புலி ஆதரவாளர்கள், இந்தச் சூழ்நிலையிலும் ஒரு தலைவரையே தேடுகிறார்கள். ஆனால் அவர்கள் முன் "தலைவர்' இல்லை. "தலைவர்கள்' அணிவகுத்து நிற்கிறார்கள். நெடுமாறன், வைகோ, ராமதாசு, மணியரசன், மகேந்திரன் இன்ன பிறரில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவர் யார்? தரவரிசைப் பட்டியல் எது?


உங்களுக்குள்ளிருந்தே எழும் கேள்விகள்! ஒரே தலைவர் என்ற நிலை இல்லாததால், சரி பிழையைத் தீர்மானிப்பதற்கு, தவிர்க்கவியலாமல் ஒரு கொள்கை தேவைப்படுகின்றது. எது அந்தக் கொள்கை?


"இந்திய அரசை அனுசரித்து, நமக்கு ஆதரவாகத் திருப்புவதுதான் சிறந்த கொள்கை'' என்கிறார் கஸ்பர். ""அது இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழத்தைக்
காவு கொடுக்கும் சதி'' என்கிறது தமிழர் கண்ணோட்டம். இந்தச் சதியைத்தான் "இந்திய ராஜதந்திரத்தின் தோல்வி'' என்ற தலைப்பில் தினமணியில் நடுப்பக்கக் கட்டுரையாகவே எழுதியிருந்தார் நெடுமாறன். "இந்தியா என்ற அச்சில்தான் ஈழம் சுழலும்'' என்று தங்களது வெளியுறவுக் கொள்கையைப் பிரகடனமே செய்திருந்தார் பாலசிங்கம். எந்தக் கொள்கை நமது கொள்கை?


"எல்லா தமிழரையும் ஒன்றிணைப்பது என்று பேசுவதே மோசடி'' என்கிறது தமிழர் கண்ணோட்டம். ஆனால், இல.கணேசன், சசிகலா நடராசன், அர்ஜுன் சம்பத், அம்மா என்று அத்தனைத் தமிழர்களையும் ஒன்றிணைத்த அத்தகையதொரு மோசடிக்கு அடிக்கல் நாட்டியவரோ, அய்யா நெடுமாறன்தான். எனில், தமிழர்களை எந்த அடிப்படையில் ஒன்றிணைப்பது?


நாளை இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் செய்யவேண்டியது என்ன? கஸ்பரை துரோகி என்று சாடும் தீவிர புலி ஆதரவு இணையதளங்கள் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழர்களைக் கோருகிறது. "சிவாஜிலிங்கம் தமிழர் ஓட்டுகளைப் பிரிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள ராஜபக்சேவின் கையாள்'' என்கின்றது. "பொன்சேகா (ரணில்) வெற்றி பெறுவதுதான் தமிழர்களுக்கு நல்லது'' என்று நக்கீரன் கட்டுரையில் கஸ்பரும் இதையே மறைமுகமாக வழிமொழிகிறார். அய்யா நெடுமாறனோ ராஜபக்சேவின் கையாள் என்று தூற்றப்படும் சிவாஜிலிங்கத்துடன் கைகோர்த்து நிற்கிறார். தமிழர்கள் என்ன செய்வது?


சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவுக்கும், கருணாநிதிக்கும் எதிராக ஜெயலலிதாவையும், அத்வானியையும் ஆதரித்த புலி ஆதரவாளர்களின் நிலைப்பாட்டின்படி, உலகத் தமிழர்கள் பொன்சேகாவின் பின்னால் அணிதிரள வேண்டும். ஆனால் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா நெடுமாறன் ஆசிபெற்ற சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதாயின், உலகத் தமிழர்கள் ராஜபக்சேயின் பின்னால் அணிதிரள வேண்டியிருக்கும். இதில் சரி தவறு பற்றி நாங்கள் பேசுவது, புலிகள் இயக்க ஆதரவாளர்களின் மனதை மீண்டும் புண்படுத்தக் கூடும் என்பதால், இந்த விசயத்தில் இப்போதைக்கு நாங்கள் மவுனம் சாதித்து விடுகிறோம்.


இந்தக் கேள்விகள் எவையும் நாங்கள் எழுப்பும் கேள்விகள் அல்ல. நாங்கள் எழுப்பும் கேள்விகளைப் புறக்கணிக்கவே எப்போதும் நீங்கள் விரும்புவீர்கள். இவை உங்களுக்குள்ளிருந்தே எழும் கேள்விகள்.


உங்கள் புண்பட்ட நெஞ்சில் நாங்கள் பாய்ச்சுவது வேல் அல்ல, கொள்கை என்ற ஒரு சொல். இன்று நீங்கள் அனுபவிக்கும் வேதனையிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி அந்தச் சொல்லின் முன் சரணடைந்து விடுவதுதான்.


கூச்சப்படத் தேவையில்லை; இந்தச் சரணடைவு கவுரவமானது.

பின் குறிப்பு: இக்கட்டுரையில் கஸ்பர், வைகோ, நெடுமாறன் முதலான முக்கியஸ்தர்களை மட்டுமே சந்தர்ப்பவாதத்திற்கும், துரோகத்திற்கும் பிரதிநிதிகளாக காட்டி எழுதியிருக்கிறோம். இவர்களின் பின்னால் எண்ணற்ற தமிழ்த்தேசிய, திராவிட இயக்கம் சேர்ந்த அமைப்புகள் ஈழப்போரின் போது அணிதிரண்டு நின்றன. இனவாதத்தை இதயமாகவும், மார்க்சிய லெனினியத்தை முகப்பூச்சாகவும் அணிந்த 'இடது சாரி' அணியினரும் இதில் அடக்கம். டூரிங் டாக்கீஸ் விளம்பர வண்டியின் பின்னால் புழுதி கிளப்பிக் கொண்டு ஓடும் சிறுவர்களைப் போல இவர்களில் பலரும் வைகோ, நெடுமாறன் அணியினரின் பின்னால் ஓடினர். ஈழப்போரை நிறுத்த இதுவே காரிய சாத்தியமான தீர்வு என்றும் சாதித்தனர்.


பதிலளிக்க வேண்டியவர்கள் இவர்களும்தான். தனியாக பெயர் குறிப்பிடவில்லை என்பதால் தங்களுக்கு இல்லை என்று இவர்கள் கருதிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பின் குறிப்பு.

Thanks : Puthiya Kalachcharam