ஃப்ரீ வீஸாவும் சிக்கன் ஷவர்மாவும்
அவன் ஏசுகிறானா இல்லை என்னிடம் ஏதாவது செல்லம் கொஞ்சுகிறானா என்றே விளங்கவில்லை. முன்னமே கேள்விப்பட்டது போலவே அந்த மொழி கொஞ்சம் இனிமையாக இருப்பது போல்தான் பட்டது. ஒரு வகையான ராகம் அதன் ஒவ்வொரு சொல்லிலும் விரவிக்கிடந்தது. அதை அவன் உச்சரித்த குரலில் ஒருவித வசீகரமும் இருந்தது. பொதுவாகவே எல்லா அரபிகளுக்கும் அந்த வசீகரம் வாய்த்திருக்கும். அவர்கள் பேசும் மொழியின் இனிமையால் அவ்வசீகரம் கைகூடியதா இல்லை அவர்களது குரலின் வசீகரம் அம்மொழியை இனிமையாக ஆக்கிவிட்டிருந்ததா என்பதை என்னால் இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுது என் முகத்தை நோக்கி உமிழப்பட்டுக் கொண்டிருக்கும் வசைச் சொற்களின் இனிமையும் அப்படிப்பட்டதே. ஆனால் கொழுத்தும் வெயிலுடன் கூடிய இந்தக்காலைப் பொழுது அதை ரசிக்க முடியாதவனாய் என்னைச் செய்திருந்தது. அரபு வானத்தின் சூரியன் எங்களது சூரியனை விட வீரியம் மிக்கது, அரபிகளின் மனத்தைப்போலவே. ரொட்டித்துண்டை சீண்டிக்கொண்டிருக்கும் ஒரு காகத்திடமிருந்து இன்னொரு காகம் வந்து கொத்திப்பறித்த பின் அதைப் பறிகொடுத்த காகம் பார்க்குமே ஒரு பார்வை... அப்படி ஒரு பார்வையை அவன் மீது வீசிவிட்டு, அந்தப் பார்வையின் அர்த்தத்தை முழுவதுமாக அவன் புரிந்துகொள்ளும் முன்பே 'சுக்ரன்' என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
'ஆயாளு எந்தா பறஞ்சதுந்நு மனசிலாயோ...?' என்று சம்ஸுக்கா கேட்டதற்கு, 'என்னத்தைப் பெரிசாப் பறஞ்சிருக்கப் போறான்..? பாஸ்போர்ட் வேணும்டா இருநூறு தினாரோட வாடா வேசி மகனேன்டு பறஞ்சிருப்பான்'.
'ஆயாளு எந்தா பறஞ்சதுந்நு மனசிலாயோ...?' என்று சம்ஸுக்கா கேட்டதற்கு, 'என்னத்தைப் பெரிசாப் பறஞ்சிருக்கப் போறான்..? பாஸ்போர்ட் வேணும்டா இருநூறு தினாரோட வாடா வேசி மகனேன்டு பறஞ்சிருப்பான்'.
சம்ஸுக்கா இதழ் பிரியாத சிரிப்பொன்று சிரித்தார். இந்தச் சிரிப்பை அவரால் மட்டுமே சிரிக்கமுடியுமென நான் நினைக்கிறேன். எப்போதாவது அபூர்வமாகத்தான் அப்படிச் சிரிப்பார். அந்த அரபிக்காரனிடம் இப்போது போவதில் பயனில்லை என்று அவர் ஏற்கனவே சொல்லியிருந்தும் கூட நான் தான் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருந்தேன். அரபிகள் மிக்க கருணையாளர்கள் என்று நான் எண்ணியிருந்த ஒரு காலமும் உண்டு. அந்த எண்ணத்தின் மிச்ச சொச்சம் ஏதோ என் மூளையில் எங்கோ பதிந்து கிடந்திருக்க வேண்டும். அதுதான் மறுபடியும் என்னை இங்கு இழுத்து வந்து இலங்கைத் தேசத்தின் ஒரு ஓரத்தில் என்னைப் பற்றி இன்னும் முட்டாள்த் தனமாக நம்பிக்கை கொண்டிருக்கும் என் தாய்க்கு வேசிப்பட்டமும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. அலுத்துக் கொண்டே தளர்ந்து நடக்கையில் சம்ஸுக்கா வழியிலிருந்த கேரள ரெஸ்டோரன்டுக்குள் நுளைந்து சாயாவுக்கு ஓடர் கொடுத்தார். வரும்போது இதே ரெஸ்டோரன்டில்தான் பூரியும் பாஜியும் வாங்கிக் கொடுத்திருந்தார். கடந்த சில மாதங்களாக என் உணவுக்குப் படியளப்பவர் அவர்தான். ஓசியில் குடிக்கும் சாயா என்பதைக் குறித்துக் கொஞ்சம் கூடக் கூச்சமின்றி சாயாவை ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தேன். நான் சற்று வாடியிருப்பதைப் பார்த்து'வெசமிக்கண்டா...' என்று அவர் சொல்ல நினைத்திருப்பார் போலும். சொல்லவில்லை. கடந்த ஆறு மாத காலத்துக்குள் நான் என் நிலையை நினைத்து கழிவிரக்கம் கொண்டோ கவலைப்பட்டோ அவர் பார்த்ததே இல்லை என்பதுதான் காரணம். ஒருவேளை 'என்ன ஜென்மம் இவன்?'என்றுகூட சிலநேரம் அவர் யோசித்திருக்கக்கூடும். அவர் நினைத்தாரோ இல்லையோ நான் என்னைப்பற்றி அப்படி பல நேரங்களில் நினைப்பதுண்டு.
இப்பொழுது தொத்திக்கொண்டிருக்கும் இந்த ஹோட்டல் வேலையில் நிலைத்தால் எப்படியும் இன்னொரு ஆறு மாசத்திற்குள் பாஸ்போர்ட்டை மீட்டுவிடலாம்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை மீட்கும் பாரம் மட்டுமே என் தலையில் சுமத்தப்பட்டிருக்கவில்லையே... இருக்கும் பாரங்களின் விசை இமைகளை ஈர்த்து, இடுக்கி போட்டு இழுப்பதால் இழந்த இரவுத் தூக்கங்களை நினைத்துப்பார்க்கிறேன். வெளிநாடு போகிறேன் பேர்வழி என்று ஏற்கனவே இரண்டு முறை வாப்பாவின் நெஞ்சில் ஏறி நான் மிதித்த மிதியில் ஏகப்பட்ட கடன். கட்டாரில் ஆறு மாசம், சவூதியில் இரண்டு மாசம். திரும்பி வந்த இரண்டு தடவையும் அவரின் முகத்தில் முழிக்கவே திராணியற்று அவரில்லாத சமயங்களாகப் பார்த்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அவர் வரும் முன்பே ஓடிக்கொண்டிருந்தேன். இப்படி வீட்டை விட்டு நான் அந்நியமாகிக் கொண்டிருந்த நிலையில் நல்ல வடிவான காதலொன்றும் வந்து சேர்ந்து கல்யாணமும் செய்து கொண்டபோது வாப்பாவுக்கும் எனக்குமான உறவு முற்றிலுமாக அறுந்து போனது. கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு மாதம் வீட்டுக்குச் செல்லவேயில்லை. பின்னர் மெல்ல மெல்ல உம்மாவைத் தாளித்து வீட்டில் ஒண்டினேன். அப்போதும் வாப்பா இல்லாத நேரங்களிலேயே போக்குவரத்து. 'இந்த அடப்புக்குள்ள அவன் வந்தா அவன்ட காலை வெட்டிப் போட்டுருவன்' என்று அவர் சொல்லியிருந்தார்.
'இல்ல..நான் அவள 'முடிக்கத்தான்' போறன்...' என்று பள்ளித்தலைவர் மற்றும் குடும்பப் பெரியவர்களின் முன்னிலையில் நான் அடம்பிடித்து நின்ற அந்தப் பொழுதில்தான் எங்கள் வாப்பா கண்கலங்கியதை முதன் முறையாகப் பார்த்ததாக பின்பொரு தரம் தாஹிர் மச்சான் என்னோடு பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார். தாய்மாமா என்ற முறையில் எங்கள் வாப்பாவின் மீது அவர் நல்ல மரியாதை கொண்டிருந்தார். வாப்பா கலங்கியதைப் பார்த்து தனக்கும் அழுகை வந்ததாகச் சொன்னார். இன்றைக்கே 'காவின்'எழுதவேண்டும் என்று நான் எடுத்திருந்த தீவிர முடிவு, வீட்டில் ஏற்படுத்தியிருந்த இறுக்கமான, மிகவும் குழப்பமான சூழ்நிலை காரணமாக அப்போது நான் யாருடையவும் முகத்தையோ கண்களையோ நேருக்கு நேர் பார்க்கத் துணியவில்லை. வாப்பா கண்கலங்கியதைக் கூடப் பார்க்காமல் தலைகுனிந்துதான் நின்றிருந்தேன். வாப்பா அன்று நிறையப் பேசினார் என்று நினைக்கிறேன். என்னை நோக்கி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. கிராம சேவைப் பிரிவுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற ரீதியில்'கள்ளத்தொடர்பு' வைத்திருக்கும் 'ஊர்ப்பெரியவரை' விளித்து மதித்துப் பேசிக்கொண்டிருந்தார். அவரோ இடைக்கிடை 'அது சரி', 'அது சரி' என்று சொல்லிக்கொண்டிருந்ததாக ஞாபகம். அப்போது வாப்பா பேசிய பெரும்பாலான சொற்கள் நான் கொண்டிருந்த பித்தத்தின் காரணமாகவோ என்னவோ என் புறச்செவிகளைத் தொட்டு உள்ளே நுளையும் வழி மூடப்பட்டிருந்ததால் வெறுமனே காற்றில் கரைந்து போயின.
எனது பிடிவாதத்தால் அன்றிரவே அனைத்தும் நடந்தேறி, தேக்கி வைத்திருந்த உடல் வெப்பம் முழுவதும் முதலிரவில் வடிந்து பெருந்தூக்கம் ஆட்கொண்டிருக்கையில்,மதுவருந்திவிட்டு உறங்குபவன் நடுச்சாமத்தில் தண்ணீர் விடாய்க்கத் திடுக்கிட்டு விழிப்பது போல் விழித்தேன். முன்னிரவில் காற்றில் கரைந்துபோன வாப்பாவின் வார்த்தைகளில் சில அந்தப் 'புதிய' அறையின் சுவர்களை நிறைத்திருக்கக் கண்டேன். ஊர்த்தலைவரிடம் வாப்பா பேசிக்கொண்டிருந்தார், 'இவ்வளவு நாளும் உழைக்கப் போறாக... என்ன உழைக்கீங்க...எவ்வளவு உழைக்கீங்க...என்ன செய்றீங்கன்டு கேட்டிருப்பனா? அவக உழைக்கிறத என்ன செஞ்சாக...? பவுடர்ப் பொட்டியும் குளோன் போத்தலும் வாங்கியே செலவழிச்சாங்... அவகளுக்குப் பிறகு நாலு புள்ளைகள் கிடக்கு... அதுகளுக்கு ஒரு டொஃபித் துண்டாச்சும் வாங்கிக் கொடுத்திருப்பாகளா...? மத்தாக்கள் வாங்கித் தின்டு குடிக்கிறதப் பாத்து என்ட புள்ளைகளும் ஆசைப்படுந்தானே..?பின்னேரத்துல ஒரு டேஸ்ட் கிழங்குப் பார்சல் வாங்கிட்டு வந்து குடுக்க நமக்குக் கட்டாதுன்டு மார்க்கட்டுக்குப் போய் மையறுக்கிழங்கு வாங்கிட்டு வந்து நானே பொரிச்சுக் குடுப்பன் என்ட பிள்ளைகளுக்கு... இப்புடியிரிக்கி வூட்டு நிலம...இதெல்லாம் இவகளுக்குத் தெரியுமான்டு கேளுங்க ஹாஜியார் பாப்பம்....'
இப்படி சில இரவுகளில் கண் விழிப்பதும் வாப்பாவின் குரல் சுவர்களில் கேட்பதும் நிகழ்ந்தது. அதற்குப் பயந்து கண்விழிக்கும் தருணத்தையெல்லாம் காமத்தில் கரைக்க முயற்சித்தேன். காலப்போக்கில் அந்த சுவர்க்குரல் தொலைந்து போனது.
பேசிக்கொண்டிருக்கும்போது, '...அப்படிப்பட்ட மனுசனைக் கத்த வச்சிட்டியேடா' என்று தாஹிர் மச்சான் சொல்ல, 'எப்படிப்பட்ட...?' என்று கேட்டு அதற்குப் பதிலாக ஒரு முறைப்பையே பதிலாகப் பெற்றேன். சற்று நேரம் கழித்து 'இல்ல...மச்சான்..நான் எப்படியாவது கஷ்டப்பட்டு அவகளுக்கு உதவி செய்வன்' என்று நான் சொன்னபோது என்னை அவர் பார்த்த பார்வையை இப்போதும் என்னால் மறக்கமுடியவில்லை.
'முதல் ஏதாவது வேலைய ஒழுங்காப் பாத்து பொண்டாட்டியக் காப்பாத்துற வழியப் பாரு,இனி கடன் அது இதுண்டு கேட்டு என்னைத் தொந்தரவு படுத்தாத!' என்று சொன்னார்.
இரண்டு வருடங்கள் எப்படியோ கழிந்து போனபின் தொடர்ந்து நான் கஷ்டப்படுவதைக் காணச்சகிக்காமல் உம்மாதான் யாரிடமோ நகையை வாங்கி அடகு வைத்து விட்டுக் காசு தந்தா. அந்தக் காசைக்கொண்டு வந்து இறங்கிய இடம் குவைத். ஆறு மாதத்தில் அரபிக்கார எஜமானனிடம் சொல்லிக்கொள்ளாமல் வேலை பார்க்குமிடத்தை விட்டுப் பாய வேண்டிய நிலை ஏற்பட்டு, வெளியிலே நல்ல வேலை கிடைத்தும் பாஸ்போர்ட் அவனிடம் இருப்பதால் வேலையிலும் நிரந்தரமாகச் சேர முடியாத துர்ப்பாக்கியம். வேலை தரும் புதிய அரபிக்கு பாஸ்போர்ட் முதலிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. சம்ஸுக்கா மட்டும் இல்லையென்றால் மூன்றாவது தடவையாகவும் வெறுங்கையுடன் ஊர்போய்ச்சேர வேண்டியிருந்திருக்கும்.. அவர்தான் உறுதியாகச் சொன்னார் 'எந்தெங்கிலும் பணி கிட்டும். நீ போகண்டா' என்று. கைக்குழந்தையுடனிருக்கும் என் மனைவி, படித்துக்கொண்டிருக்கும் என் இரண்டு தங்கச்சிகள், கொள்ளிச்சைக்கிள் இழுக்கும் வாப்பா... இவர்களைப் பற்றிய கவலை என்னைவிட அவருக்கு அதிகமாக இருந்தது ஏனென்று புரியவில்லை. குவைத்தில் வாழுகின்றவர்களில் என் மீது அக்கறை கொண்ட ஒரே ஜீவன் இவர்தான். ஊர்க்காரர்கள்,சில பல உறவுக்காரர்கள் என்று இங்கிருந்த போதும் எவரையும் நான் நாடுவதில்லை. ஏனென்று தெரியவில்லை, ஊர், ஊர்க்காரர்கள் என்றாலே வெறுப்பாக இருந்தது. இன்றுகூட தான் வேலைக்குச் செல்லும் நேரத்தை எனக்காக ஒத்திப்போட்டு விட்டு வந்து இந்த அரபு முதலையிடம் தூஷண வார்த்தைகளை சம்ஸுக்கா கேட்டுக்கொண்டிருந்தார்.
'எந்தடா பலமாயிட்டு யோசிக்குந்நு?' என்று சம்ஸுக்கா கேட்டபோது, 'ஒண்ணுமில்ல க்கா' என்று விட்டு கண்ணீர்த்துளிகளை மறைக்கத் தூரத்தே பார்ப்பவனைப்போல் நடித்தேன். 'சிகரெட் ஒந்நு வலி' என்று வாங்கித் தந்தார். அவர் புகைப்பதில்லை.
கடந்த சில மாதங்களாகத் தெரிந்தவர்கள் யாரையும் சந்திப்பதை நிறுத்தி விட்டேன். முக்கியமாக எங்கள் ஊர்க்காரர்களை. இந்த வேலை கிடைக்கும் முன்பு ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருந்த போது காசிம் ரைவர் நானா வந்து அரை போத்தல் கசிப்புக் கேட்டார். கடையிலிருக்கும் சிங்களப் பொடியனிடம் சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். அவர் ஊருக்குச் சென்றபோது நான் குவைத்தில் கசிப்புச்சாராயம் வித்துக் காசு சம்பாதிப்பதாகவும் விரைவில் பொலிஸில் மாட்டி கை வெட்டப்படுவேன் என்பதாகவும் எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரிடமோ சொல்லித் தொலைக்க, போன் எடுத்துப் பேசும்போது உம்மா ஒரே அழுகை. 'இப்புடியெல்லாம் காசு சம்பாரிக்கத் தேவல்ல கிளி... புடி பட்டா அரபிகள் கைய வெட்டிப்போட்டுருவானுகளாம்.. உழைக்காட்டியும் பரவால்ல..இஞ்ச வந்துரு மனெ.' என்று ஒப்பாரி.
'இல்லம்மா...வாற மாசம் வேற நல்ல வேலையொன்டு கிடச்சிடும்'
உம்மா நேத்திக்கடன் ஏதும் வைத்திருப்பா போல. அது பலித்து விட்டிருக்கிறது என்றே நம்பினேன். ஆண்டு அனுபவிக்கிறது என்று சொல்வார்களே.. அதற்கேற்ற மாதிரி ஒரு வேலை. 'வோல்பேப்பர்' ஒட்டுவது. அரபிகளின் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று செய்து முடித்து சம்பளமும் சலுகைகளும் பெறக்கூடிய வேலை. எனது எஜமான் நிர்ணயித்துள்ள சம்பளத்தை விடப் பல மடங்கு உயர்த்திச் சொல்லி அரபிகளை சுரண்டத் தோதான வேலை. முக்கியமான பல்வேறு அலுவலகங்களுக்கும் பணிக்குச் சென்றிருக்கிறேன். ஆள் அடையாள அட்டை (பதாகா) வழங்கும் அலுவலகம் உட்பட. அங்குதான் பதாகாவை அச்சிட்டே வழங்குகின்றார்கள். சாமான்யமாக அங்கெல்லாம் நம்மைப் போன்ற யாரும் நுழைந்துவிட முடியாது. அங்கு நான் ஒட்டிய கறுப்பு நிற சுவர்த்தாள் அந்த அதிகாரிக்குப் பிடித்து விட, என்னைப்பற்றி விசாரித்தான். பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முன்னாள் அரபு முதலாளியிடம் பறிகொடுத்துவிட்ட நான் ஒரு 'ஓடுகாலி' என்பதைச் சொன்னேன். அவன் சிரித்து விட்டு பதாகா அவசியமில்லை என்றும், ஏதாவது பிரச்சினை என்றால் தனக்கு போன் பண்ணுமாறும் கூறி நம்பரும் முப்பது தினாரும் தந்தான். ஒரு நாளில் முப்பது தினார் என்பது என் போன்றவர்களுக்கு ரொம்பவே அதிகம். முன்னர் நான் செய்த ஹோட்டல் வேலையில் எனக்குக் கிடைத்தது மாதமொன்றுக்கு ஐம்பது தினார். இப்போது நான் தனியாகக் குடியிருக்கும் அறை வாடகையே மாதத்துக்கு ஐம்பது தினார். ஒரு மனிதனின் வாழ்க்கை மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் இப்படியெல்லாம் மாறுமா என்ன?
மேற்படி பல்வேறு அலுவலகங்களுக்கும் நான் வேலைக்குச் சென்றிருந்தாலும் கூட நான் அதிகமும் பணி புரிய விழைவது பெருநகரங்களில் வசிக்கும் குவைத்திகள் தங்களது 'சின்னவீடுகளுக்குக்' கட்டிக்கொடுத்திருக்கும் பெரிய வீடுகளில்தான். நான் வசிப்பது குவைத் நாட்டின் மூன்றாவது பெரிய நகரம். அதிக பொலிஸ் சோதனைகளுக்குள்ளாவதும் இந்த நகரம் தான். இங்கு சகலமும் நடக்கும்; சகலதும் கிடைக்கும். இந்த நகரத்தில் விசேசமாக நான் கண்டது ஒன்று உண்டு. வேறு பெருநகரங்களில் வசிக்கும் அரபுச் சீமான்கள் பலர் தங்களது ஐந்தாம் ஆறாம் துணைவிகளுக்காக இந்நகரத்திலேயே வீடு கட்டி, பிளாட் வாங்கிக் கொடுத்திருந்தார்கள் என்பதுதான் அது. இந்நகரம் அதற்கென்றே உருவாக்கப்பட்டது போல்தான் தோன்றியது எனக்கு. அந்தளவுக்கு 'சின்னவீடுகளால்' இது நிரம்பி வழிந்தது. இவ்வாறான வீடுகளுக்கு வேலைக்குச் செல்வதென்பது எனக்குக் கொண்டாட்டம். நேர்த்தியாக வேலை செய்ய வேண்டும். அது அந்த அரபியின் வைப்பாட்டிக்குப் பிடிக்கவும் வேண்டும். அவள் அந்த அரபியின் முன்னிலையில் அழகாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும் அதன் பின் நாம் கேட்கும் தினார்களைத் தர அந்த சீமான்கள் தயங்குவதே இல்லை. அந்தப் பெண்ணுக்குப் பிடித்துப் போய்விட்ட சுவர்த்தாளை ஒட்டியவனல்லவா?நம் மதிப்பு ஏறிவிடும். அவள் முன்னிலையில் தனது தயாள குணத்தைக் காட்ட வேண்டிய ஒரு கட்டாயம் உருவாகிவிட்டதாகக் கற்பனை செய்து கொண்டு கேட்பதை விட அதிகமாகக் கொடுப்பார்கள். நூறு நூற்றைம்பது தினார் மதிப்புடைய உயர் ரக மது போத்தல்களையெல்லாம் கேட்டுப் பெற்று வந்திருக்கிறேன். தருவார்கள், ஆனால் எதையும் 'அவள்' முன்னிலையில் கேட்க வேண்டும். அதற்கு முன், அவள் மனைவியா இல்லை வைப்பாட்டிதானா என்பதை அறிந்து கொள்ளும் திறமையும் இதற்கு அவசியம். அது எனக்கு இருந்தது.
இந்த வேலை கிடைத்த பின் இரண்டொரு முறை சம்ஸுக்காவைப் பார்க்கச் சென்றிருந்தேன். நான் சந்தித்த அற்புதமான மனிதர் சம்ஸுக்கா . மலையாளி. வயதில் என்னை விட இரண்டு மடங்கு மூத்தவர். சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன் குவைத்துக்கு வந்தவர். பதினெட்டு வருட சம்பாத்தியத்தில் ஆறு தங்கைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்ட திருப்தியுடன் இருக்கிறார். ஆம், அவரது குடும்பத்தில் அவர் ஒரே ஆண்பிள்ளை. இப்போதுதான் தனது ஒரே மகளுக்காக மாளிகை போன்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார். இனி மகளின் திருமணத்திற்கான நகைநட்டுக்கள் சாமான்கள் சேர்க்க வேண்டும். மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒன்றரை அல்லது இரண்டு வருடம் என்பது அவர் கணக்கு. அதன் பின், குவைத்தை விட்டுப்போய் விடுவேன் என்று சொல்லுவார். தன் வாழ்வின் இறுதிப்பகுதியைத் தனது சொந்த ஊரில் மனைவி மகளுடன் கழிப்பது பற்றிய கற்பனையில் இருந்தார். சில நேரங்களில் 'தன் இளமை முழுவதையும் இங்கே பாழாக்கிவிட்டோமே' என்ற விசனம் அவருக்கு ஏற்படும். அவ்வாறு மன உளைச்சல் ஏற்படுகின்ற வேளைகளில் முப்பது தினார் கொடுத்து ஈராக்கிய மது வாங்கிக் கொண்டு வந்து என்னுடன் சேர்ந்து அருந்துவார். ஆனால் மனப்பாரத்தை இறக்கி வைக்க வேண்டுமே என்று ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டார். ஆனால் ஒன்று மட்டும் அடிக்கடி சொல்லுவார். எக்காரணம் கொண்டும் வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவனைத் தனது மகளுக்குத் திருமணம் செய்து கொடுப்பதில்லை என்பதுதான் அது. மிகக் குறைந்த சம்பளமெனினும் பரவாயில்லை; சொந்த ஊரில் பணி புரியும் மாப்பிள்ளையே அவரது இலட்சியம்.
அவர் பேசாவிட்டாலும், போதையேறினால் நான் பலமாகவே பேசுவேன். என்னைப்பற்றிப் பலவாறு வெறியில் புலம்பிக் கொண்டிருப்பேன். அவற்றில் பெரும்பாலானவை சம்ஸுக்கா காலையில் சொல்லும்போது தான் தெரியவரும். அப்படித்தான் ஒருமுறை கேட்டார், 'ஏன்டே...கிழங்குப் பொரி வாங்கிக்கொடுக்கிறது எந்தா...நின்டே வல்லிய லட்ஷியமோ?'
நான் வேலை இல்லாமல் சிரமப்பட்ட நாட்களில் எனக்கு உண்டியும் உறையுளும் அளித்த அவருக்குப் பிரதியுபகாரமாக ஏதாவது நானும் செய்ய வேண்டும் என நினைத்து பலமுறை முயன்றிருக்கிறேன். மிக நாசூக்காக அவற்றை மறுத்து விடுவார். அவரைப்பார்க்கச் சென்ற சந்தர்ப்பங்களில் வாங்கிச்சென்ற பழங்கள் தின்பண்டங்கள் போன்ற பொருட்களை மட்டும் ஏற்றுக்கொண்டார். வேலையைப் பற்றி, தங்குமிடத்தைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். எதற்கும் நான் உண்மை சொன்னதில்லை. ஐம்பது தினார் வாடகை கொடுத்து தனியே அறை எடுத்துத் தங்கியிருக்கிறேன் என்பதைச் சொன்னால் ஏசி விடுவாரோ என்ற பயத்தின் காரணமாக அவரை என் இருப்பிடத்திற்கு அழைக்கவுமில்லை.
இந்த ஒரு வருடத்தில் நான் முழுவதுமாக மாறிப்போயிருந்தேன். வாரத்தில் ஒருமுறை மனைவியுடனும் உம்மாவுடனும் போனில் பேசினேன். மாதத்திற்கொருமுறை இருவருக்கும் செலவுக்குப் பணமனுப்பினேன். இது இரண்டையும் தவிர ஏறக்குறைய ஊரை நான் மறந்தே விட்டிருந்தேன். ஏற்கனவே வெளிநாடு சென்றதில் ஏற்பட்ட கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக்கொண்டிருப்பதாக உம்மா சொன்னா. முழுவதுமாக அடைத்திருக்க முடியும். ஆனால் நான் தான் முழுப்பணத்தையும் அனுப்புவதில்லையே. எனது செலவுகள் பல வழிகளில் பெருகிவிட்டிருந்தன. என்ன வழிகள் என்று இங்கே விபரிக்கப்போவதில்லை.
இந்த இடத்தில் நான் சம்ரியாவை சந்தித்ததைப் பற்றிச் சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால் இந்தக்கதையை அவளிடமிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் என் குடும்பக் கதையெல்லாம் சொல்லி நேரத்தைப் போக்கடித்து விட்டேன். எனது சிங்களத் தோழி ஒருத்தி அடிக்கடி 'உங்கள் ஊர்க்காரி ஒருத்தி எனக்கு பெஸ்ட் ஃபிரண்ட்' என்று சொல்லிக் கொண்டிருந்தாள். மட்டுமின்றி அவளைப் பற்றிய பல ஆச்சரியமூட்டும் தகவல்களையும் சொல்லி வைத்திருந்தாள். இருப்பினும் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் வந்ததே இல்லை. தற்செயலாக ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது...சந்திக்காமலேயே போயிருக்கலாமே என்று இன்று வரை எண்ணச் செய்யக்கூடியவளாக அவள் இருந்தாள்.
அவள் எனது ஊர் மட்டுமல்ல, எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவனான நிஸாமின் தங்கையும் கூட. பாடசாலையில் என்னைவிட ஒரு வகுப்பு குறையப் படித்தாள். அந்நூர் பாடசாலைக்கு ஒரு செமினாருக்காகச் சென்றபோது தான் முதன்முதலாக அவளைச் சந்தித்தேன். நண்பர்கள் மூலமாகக் கேள்விப்பட்டது போலவே ரொம்ப அழகு. நண்பனின் தங்கை என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே எல்லோரும் அவளிடம் கண்ணியமாக நடந்து கொண்டோமே தவிர நண்பர்களுக்கெல்லாம் உள்ளே 'நப்ஸ்'' துடித்துக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். அழகி.
உயர்தரம் படிக்காமல் சின்ன வயசிலேயே திருமணம்...விவாக ரத்து... வெளிநாட்டு வாழ்க்கை... மறுமணம்...அதிலும் தோல்வி...குடும்பத்தினரின் உதாசீனம்... பணக்கஷ்டம்... மறுபடி வெளிநாடு என்று இப்படியான எல்லாப் பெண்களுக்குமுரிய சோகக் கதைகள் அவளிடம் நிறையவே இருந்தன. ஊரில் இருந்தபோது இரண்டொரு முறையே அவளுடன் பேசியிருப்பேன். அதுவும் நிஸாமைப் பார்க்கப் போகும் சந்தர்ப்பங்களில்தான். அங்கிருக்கும்போது எனக்கும் அவளுக்கும் இடையில் நடந்த உரையாடல் பெரும்பாலும் இவ்வாறுதான் அமைந்திருக்கும். நான் வெளியில் நின்று 'நிஸாம்' எனக் குரல் கொடுக்க அவள் 'நானா இல்ல..வெளியில போயிரிக்காரு' என்பாள். அல்லது நிஸாம் வீட்டிலிருக்கும்போது என்றால் எனது அழைப்புக்கான பதிலை அவனிடம் சொல்வாள் 'நானா! உங்கள யாரோ கூப்பிட்றாக' என்று. இவற்றைத் தவிர அவளிடம் பேச எந்த வாய்ப்பும் எனக்குக் கிடைத்தில்லை. ஆனால், இங்கே அவளைச் சந்தித்தபோது நிறையப் பேசக் கிடைத்தது. என்றால் எனக்கல்ல, அந்த சந்தர்ப்பம் அவளுக்கே கிடைத்தது எனச் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அவள் நிறையப் பேசினாள். நீண்ட நாட்களாகப் பேச்சுத்துணைக்கு ஆளே கிடைக்காமல் இருட்டறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த ஒருத்தியைப்போலப் பேசினாள். நான் நினைக்கிறேன் என்னுடன் பழகத்தொடங்கிய ஒரு வார காலத்துக்குள்ளாகவே அவளைப் பற்றிய அநேக விசயங்களை அவள் மூலமாகவே அறிந்து கொண்டேன் என்று. இத்தனைக்கும் ஒரே ஊர்க்காரன் என்ற ரீதியில் அந்த நட்பு அமைந்திருக்கவில்லை. அவளது நெருக்கமான தோழியாகிய இஷானி என்ற சிங்களப் பெண்ணுக்கு நான் நல்ல நண்பன் என்ற அடிப்படையிலே அது அமைந்திருந்த்து. காரணம் கருதியே நானும் நிஸாமின் பெயரைத் தவறியும் உச்சரித்து விடாமல் பழகினேன். தவிரவும், என்னைப்பற்றி அளவுக்கு மிஞ்சி நல்லத்தனமாகப் புகழ்ந்து இஷானி வழங்கிய சான்றிதழும் ஒரு காரணம். அவளுக்கு என்னை ரொம்பப் பிடித்துப்போய் விட்டிருந்தது. அதெப்படி என் குடும்பத்திலுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் என்னைப் பிடித்துப் போகின்றதென்பது எனக்கு விளங்காத விசயங்களில் ஒன்று, கிட்டத்தட்ட கணிதப்பாடம் போல.
இரண்டொரு முறை 'உன்னை எங்கயோ பாத்த மாதிரியே இருக்கு'எனக்கூறியிருக்கிறாள். பழகத்தொடங்கிய ஒரு மாத்திற்குப் பின் ஒரு மாலைப்பொழுதில் இஷானியுடன் வந்திருந்தாள். மூவரும் ஒரு கஃப்டீரியாவில் அமர்ந்து ஒரு லெபனான் தேசத்து 'சிக்கன் ஷவர்மா'வைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதை மறுபடியும் சொன்னாள். இனிமேலும் மறைக்க விரும்பாமல் நான் 'ஓம், பாத்திருக்கம்...' என்றேன்.
'எங்க?'
'அந்நூர் ஸ்கூல்ல... ஓ எல் செமினார்ல...'
ஒரு தேர்ந்த நடிகைக்கு உரிய பாவனைகளுடன் புருவமுயர்த்தி உதடுகளைச் சுழித்து தோள்களைக் குலுக்கி 'ப்ச்... ஞாபகமில்லயே...' என்றாள்.
'ஒரு மஞ்சக்கலர் ரோசாப்பூவோட மூணு பேரு சுத்தித் திரிஞ்சீங்களே ஞாபகமிரிக்கா...? நீ..பேபி...மறுகா இன்னொருத்தி...பேரு தெரியா.. தெத்துப் பல்லுடின்டு சொல்லிச் சிரிச்சீங்களே...பிறகு நிஸாமைத் தேடி நான் உங்கட வீட்ட வரக்கொள்ள விறைச்சுப் போய் நின்டாயே.. ஞாபகமிருக்கா...?'
நிஸாமின் பெயரை உச்சரித்ததும் திருக்கை வாலால் விளாசப்பட்ட நாய் ஒன்று மிரண்டு பார்ப்பது போலப் பார்த்தாள். அன்றிலிருந்து சரியாக ஒரு வாரம் அவள் என்னோடு பேசவில்லை. போன் பண்ணினால் எடுப்பதில்லை. நிறையத் தடவைகள் முயற்சித்துவிட்டு கடைசியாக 'தேங்ஸ்' என்று ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினேன். அந்த உத்தி பலனளித்தது. என்னத்துக்குத் 'தேங்ஸ்?' என்று பதில் வந்தது. இந்த முறை நான் பதில் அனுப்பவில்லை. சற்றுப் பொறுத்து போன் பண்ணினாள். நான் எடுக்கவில்லை. இரண்டு நாட்கள் முயற்சித்துவிட்டு மூன்றாவது நாள் இஷானியுடன் என் அறைக்குத் தேடி வந்திருந்தாள். சற்றே அழுதாள்.
அவளிடம் கேள்விகள் கேட்பதில்லை என்ற என் கொள்கயினால் தர்மசங்கடமான சூழ்நிலைகள் உருவாகாமல் நான் பார்த்துக்கொண்டேன். மேலும், நான் பள்ளிக்கூட்த்தில் படிக்கும்போது கடைப்பிடித்த அதே கண்ணியத்தை அவளிடம் எப்போதும் கடைப்பிடித்தது அவளுக்கு என்மீது நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மனம் விட்டுப் பேசுவாள். நல்ல வருமானம் என்று சொன்னாள்...ஊரில் மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். குவைத்தில் சொந்தமாக நான்கு டாக்ஸிகள் ஓடுகின்றன. அதாவது நான்கு ட்ரைவர்களுக்கு அவள் வேலை வழங்கிய எஜமானி என்ற நிலையில் இருந்தாள். வாழ்க்கை பற்றி எனக்கே பிடிபடாத தத்துவங்களெல்லாம் பேசுவாள். அவள் 'ஃப்ரீயாக' இருக்கின்ற பகல் பொழுதுகளில் மாத்திரமே அவளைச் சந்திக்க முடியும். இரவுகளில் போன் பண்ணவோ பேசவோ முடியாது. அவளது தற்காலிக கணவனான மலையாளி வேலை முடிந்து வந்துவிடுவான். இவன் மூன்றாவது தற்காலிகக் கணவன் என்று இஷானி சொன்னாள். 'அவனுக்கு இவளைப் பற்றித் தெரியாதா?' என்று கேட்டதற்கு, 'அவள் ஆண்களிடம் உண்மையாக நடந்துகொள்வதை விட்டு ரொம்ப காலமாகிவிட்டது' என்றாள்.
கையில் காசில்லாத தருணங்களில் காசும் தந்திருக்கிறாள். 'காசில்லாம உலகமில்ல..வாழ்க்கையுமில்ல' என்பது தான் அவள் சொன்னதிலேயே எனக்குத் தெரிந்திருந்த தத்துவம். பெரும்பாலும் தரித்திரத்தில் உழல்கின்ற அனைவருக்கும் இது தெரிந்த தத்துவமாகவே இருக்கும். அதிலும் என்னைப் போன்ற தரித்திரக்காரர்களுக்கு என்றால் சொல்லவும் வேண்டுமா?
நேற்று மாலை கடைசியாக அவளைச் சந்தித்த போது, கேட்கக் கூடாது என நினைத்திருந்த அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன். 'உனது 'இந்த' வாழ்க்கையப் பற்றி உனது குடும்பத்தினருக்குத் தெரியுமா?' என்று. மிக இயல்பாக 'தெரியும்' என்றாள்.
'நானாவுக்கு?'
'தெரிஞ்சத்தால தான் அவரு கதைக்கிறல்ல..' என்றாள். 'ஊர்ல இருக்கிற சில சொந்தக்காராக்களுக்கே தெரியும்..நானா குவைத்திலயே இரிக்காரு..அவருக்குத் தெரியாம இரிக்குமா?' என்று சிரித்த போது ஒரு கணம் அவள் முகத்தில் குழந்தை ஒன்று தோன்றி மறைந்ததைக் கண்டேன். விழிகளில் நான் சென்றபிறகு அழுவதற்கான அழுகை தயாராக இருந்தது. ஆனால் அந்தக் குழந்தைமையை தனது கர்வத்தாலும் வைராக்கியத்தாலும் அவள் கொன்று மனதிற்குள் எப்போதோ புதைத்து விட்டிருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது. நான் இருக்கும்போது அழுது விடக்கூடாது என்பதை விட, தன் இளமையும் உடலும் ஒத்துழைக்கும் வரை உழைத்துவிட்டு ஊருக்குச்சென்று தான் வாழப்போகும் செல்வந்த வாழ்வைப் பற்றிய கனவே அவள் கண்ணீரைத் தடுத்து நின்ற பெரும் திரை என்பதும் எனக்குத் தெரியும்.
இந்நிலையில், இவளைப்பற்றி எனக்குத் தெரியும் என்பது நிஸாமுக்குத் தெரிய நேர்ந்தால் அவனது மனநிலை எப்படியிருக்கும் என்பதைப் பற்றிக் கற்பனை செய்ய முயன்றது பெரும் வலிதரும் அனுபவமாக இருந்தது. ஒரு இரண்டு வருடங்களுக்கு அவனைச் சந்திக்கவே கூடாது என்று அந்த இடத்திலேயே முடிவெடுத்து விட்டேன்.
அமைதியாக இருந்த என்னை நோக்கி ஒரு ரெட்புல் பானத்தை நீட்டும்போது, '{ஹம்..காசு... காசிருந்தா எல்லாரும் மத்த எல்லாத்தையும் மறந்துடுவாங்க.' என்றாள். எத்தனை பெரிய யதார்த்தம்? அவள் சொன்னது வேறு அர்த்ததில் என்றாலும் பணம் கைகளில் சேரத்தொடங்கிய பின் நான் மறந்தவைகளைப் பற்றி ஒரு கணம் எண்ணினேன். அவள் தந்த பானத்தைக் குடித்து விட்டு வெளிக்கிட்டு அந்தத் தொடர்மாடிக் குடியிருப்பை விட்டு அகலத் தொடங்கினேன்.
உடல்நிறை எண்பத்தாறு கிலோவைத் தாண்டியபிறகு படிகளில் ஏறி இறங்குவது எனக்கு மிகவும் சிரமம். எப்போதும் எலவேட்டர்களையே நாடும் நான் அன்று என்னை மறந்து படிகளில் இறங்கினேன். தளர்ந்துபோய் இருந்தேன். சம்ஸுக்காவும் சம்ரியாவும் மாறி மாறி மனதில் ஊர்ந்து கொண்டிருந்தனர். இருவரும் இரு துருவங்கள். என்றாலும் கூட இருவருக்குமிடையிலான பொதுத்தன்மை என் நெற்றிப்பொட்டில் அடித்தது. இருவருமே செல்வம் சேர்க்கும் பொருட்டு தங்கள் இளமையை விற்றவர்கள்...இதைச் சிந்தித்த அந்தக் கணத்தில்தான் முதன்முதலாக வாழ்க்கை என்னைப் பயமுறுத்தத் தொடங்கியது.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் சம்ரியாவைச் சந்திக்கும் முன்பு உம்மாவுக்குக் கோல் எடுத்திருந்தேன்.
'அனிஸாக்கு ஏ.எல். ரிசல்ஸி வந்திட்டு. கெம்பஸும் கிடைக்கல..கொலேஜும் கிடைக்கல..அவளாவது படிச்சிக் கிடிச்சி ஒரு வேலை வெட்டிக்குப் போவான்டு நினைச்சிக்கிட்டிருந்தம்...அதுவும் நடக்கல...என்ட குமருகள எப்படித்தான் கர சேக்கப் போறனோ...? அல்லா....' என்ற அழுகை வார்த்தைகள் படியிறங்கும் தோறும் காதுகளில் அறைந்து கொண்டேயிருந்தன. கீழ்த் தளத்துக்கு வந்ததும் வராததுமாக போனில் இலக்கங்களை அழுத்தினேன்.
'உம்மா...நாந்தான் கதைக்கன்... அவள அழுது குழறிக்கிட்டு இரிக்க வேணான்டு சொல்லுங்க... காசனுப்புறன். ஜீ.ஏ.கிவ் பதியச் சொல்லுங்க. அவள் படிக்கட்டும்..' என்று விட்டு உடனே துண்டித்தேன். மனதில் சம்ஸுக்காவும் அவரது ஆறு தங்கைகளும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
எனது அறைக்குச்செல்ல டாக்ஸி பிடிக்க வேண்டும். ஆனால் நடந்துகொண்டிருந்தேன். அங்கிருந்த பெட்ரோல் பங்க் முனை தாண்டியதும் 'தால்...' என்ற அதட்டல் கேட்டது. இரண்டு போலிஸ்காரர்கள் நின்றுகொண்டிருந்தனர். உயரமானவன் என்னை உற்றுப் பார்த்து 'ஜீப் பதாகா!' என்றான். எடுத்து நீட்டியதும் கையிலிருந்த மடிக்கணினி போன்ற ஆனால் அதை விடச்சிறிய சாதனத்தில் எனது அடையாள அட்டை இலக்கத்தை ஒற்றிப் பார்த்துவிட்டு அதன் திரையை மற்றவனிடம் நீட்டினான். அவன் எனது இடது கையைப் பற்றி முறுக்கி 'யெல்லா..' என்றவனாக என்னைக் காரினுள் தள்ளித் திணித்தான். உள்ளே ஏற்றியதும் முதல் வேலையாக எனது போனைப்பறித்து பெற்றியையும் சிம் கார்டையும் கழற்றியெடுத்தான். 'எந்த நாடு?' என்று அரபியில் கேட்டான். 'ஸ்ரீலங்கா' என்ற போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊர் ஞாபகம் திரண்டு வந்தது.
எனது முன்னாள் அரபு எஜமானன் என் மீது போலிசில் அளித்திருந்த புகாரின் பேரில் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன் என்பது போலிஸ் நிலையத்தில் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. வீஸா இல்லாமல் குவைத்திலிருந்த குற்றத்திற்குமாகச் சேர்ந்து என்னை சிறையில் தள்ளினார்கள். சிறிய சிறை. நல்ல உணவு கிடைத்தது. ஐந்தாவது நாளில் இரண்டாவது சிறைக்கு மாற்றப்பட்டேன். அது சுமார் ஆயிரத்து ஐந்நூறு பேர் தங்கியிருந்த பெரிய சிறை. அங்கும் நல்ல சாப்பாடு. மெடிக்கல் செக்கப் எல்லாம் நடந்தது. அங்கிருந்தபோதுதான் ஒரு கருணை மிக்க போலிஸ்காரனின் உதவியால் எனது தற்போதைய எஜமானனுக்கு தகவல் சொல்ல முடிந்தது. பதினோராவது நாள் என்னுடைய எஜமானன் வந்து என்னைச் சந்தித்தான். இருநூறு தினார்களைக் கொடுத்து என்னுடைய பாஸ்போர்ட்டை மீட்டு என்னிடம் தந்தான். அதைப் போலிஸார் வாங்கி பெரிய சீல் ஒன்று குத்தி என்னிடம் தந்தார்கள். எக்ஸிட். உடனடியாக நான் குவைத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதைக் குறிக்கும் சீல் அது. இரண்டு வருடங்களுக்குப் பின்பே என்னால் இனி இம்மண்ணில் கால் வைக்க முடியும். 'நான் வெளியேறப்போகும் செய்தியை சம்ஸுக்காவுக்குச் சொல்லமுடியுமா?'என என் எஜமானனிடம் கேட்டேன், 'கண்டிப்பாக' என்றான். 'கவலைப்படாதே இரண்டு வருடங்களுக்குப் பிறகு உனக்கு நான் வீஸா அனுப்புவேன்' என்று நம்பிக்கை தந்தான். ஆம், எஜமானனே! நான் வரவேண்டும்...கண்டிப்பாக வரத்தான் வேண்டும்.
விமானநிலையத்துக்கு சம்ஸுக்கா வந்திருந்தார். போலிஸார் அருகில் சென்று சந்திக்க விடவில்லை. கண்ணாடித் தடுப்புகளுக்கு வெளியே நின்ற அவரைப் பார்த்தபோது 'போய் வருகிறேன் சகோதரா' என்று மனதுக்குள் நினைத்தேன். நான் நினைத்தது அவரது இதயத்துக்குக் கேட்டது போல் இதழ் பிரியாத அவரது சிரிப்புடன் தலையசைத்து கையிலிருந்த பொலிதீன் பையை உயர்த்திக் காட்டினார். பையிலிருந்த நான் விரும்பிப் புகைக்கும் டன்ஹில் சில்வர் சிகரெட் கார்ட்கள் எனக்குத் தெளிவாக விளங்கின.
சாதாரணப் பயணிகள் செல்லும் வழியாலன்றி நேரடியாகப் போலிஸ் வண்டியிலேயே நான் விமானத்தினருகில் கொண்டுசெல்லப்பட்டேன். விமானத்தில் ஏறும் முன்பாக என்னிடமிருந்து பிடுங்கப்பட்ட போனும் போர்டிங் பாஸ் குத்தப்பட்ட பாஸ்போர்ட்டும் திருப்பித் தரப்பட்டன. வானை செம்மேகங்கள் தழுவிக் களைத்துப் பிரியும் நேரத்தில் விமானம் புறப்பட்டது. கண்ணாடியினூடாக வானவெளி மெல்ல மெல்ல மங்கி வெளிக்காட்சிகள் மறைந்து இருண்ட கண்ணாடியில் இப்போது என் முகம் மட்டுமே நிழலாகத் தெரிந்தது. கொழும்பில் இறங்கியவுடன் சம்ரியாவுக்கு போன் பண்ணி நாடு திரும்பியதைச் சொல்ல வேண்டும். ஒரு பலமான நன்றியையும் சொல்லவேண்டும். என்னத்துக்கு நன்றி? என்று கேட்பாள். காசுதான் எல்லாம் என்பதை வார்த்தைகளால் சொல்லியும், காசு ஒன்றுமேயில்லை என்பதைச் சொல்லாமலும் புரிய வைத்தாயே...அதற்கு! என்பதைச் சொல்லக்கூடாது.
வீட்டு ஞாபகம் வந்தது. பாரம் ஏற்றிச் சைக்கிளைத் தொடர்ந்து மிதிப்பதால் உண்டாகும் கால் வலியுடன் வாப்பா அவதிப்பட்டுப் படுத்திருக்கும்போது இரண்டு தங்கைகளும் அவர் கால்களருகில் அமர்ந்து காய்ச்சப்பட்ட 'சித்தாலேப' தைலத்தைத் தேய்த்து கால்களை உருவிவிடும் காட்சியைப் பலபோது நான் கண்டிருக்கிறேன். அந்தக்கால்களை ஒருமுறை தொட்டுப்பார்க்கும் ஏக்கம் நெஞ்சை நிரப்பித் தொண்டையை அடைக்க வெடித்து அழத்தொடங்கினேன்.
-ஷாஜகான்
Thanks: Kalkudahmuslims.net
No comments:
Post a Comment