Tuesday, July 24, 2012

துரோகிகளின் மவுனத்தில்......!








மே 2009இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகள் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப் போராட்டத்தைப் பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படுத்திய எதிர்வினை பகையுணர்வு, மவுனம்.

புலிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த ஒரு சூழலில், அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, விமரிசிப்பது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை என்பது அவர்களுடைய கருத்து. பாராட்டுபவனே நண்பன், விமரிசிப்பவன் எதிரி என்ற ஓட்டுக்கட்சி அரசியலின் பண்பாடு இவர்களுடைய பார்வையின் மீது செலுத்தும் செல்வாக்கு இத்தகைய கருத்து உருவாவதற்குக் காரணமாக இருக்கின்றது.

ஒரு போராட்டத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமரிசிப்பதென்பது, அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குச் செய்யப்படும் உதவி. குறிப்பிட்ட இயக்கங்கள் அல்லது தலைவர்களின் கவுரவத்தையும் நலனையும் காட்டிலும், மக்களுடைய போராட்டத்தின் நலன் மேம்பட்டது. வெளிப்படையான அரசியல் விமரிசனங்களும் விவாதங்களும்தான் தவறுகளிலிருந்து மீள்வதற்கும், சரியான வழியைக் கண்டறிவதற்கும் வழி என்பது எங்களுடைய பார்வை.

விமரிசனங்கள் முடக்கப்படும் இடத்தில் தான் துரோகிகள் பெருகுகின்றார்கள். வெளிப்படையான அரசியல் விவாதம் மறுக்கப்படும் இடத்தில், திரைமறைவுச் சதிகள் மூலம் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கருத்து வேறுபாடுகளின் இடத்தை அவதூறுகளும், முத்திரை குத்துதல்களும் பிடித்துக் கொள்கின்றன.

இவையெல்லாம் நன்னெறிப் போதனைகள் அல்ல. எமது விமரிசனங்களைக் கண்டு முகம் சுளித்த புலிகள் இயக்க ஆதரவாளர்களைக் கேட்கிறோம்: முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தின் பின்னால், திரைமறைவில் நடைபெற்றிருக்கும் பேரங்கள் நாடகங்கள், பிரபாகரன் குறித்த மர்மங்கள், யார் புலிகள் இயக்கத்தின் உண்மையான பிரதிநிதி, யார் நண்பன், யார் உளவாளி என்று புரிந்துகொள்ள முடியாத குழப்பங்கள். இவையெல்லாம் உங்களுக்கு அதிர்ச்சியூட்டவில்லையா? இந்த நிலைமைகள் திடீரென தோன்றியவையென்று கருதுகின்றீர்களா?

நேர்மையான சந்தர்ப்பவாதம் என்று எதை நாங்கள் குறிப்பிட்டோமோ அது, பச்சையான துரோகமாக அம்பலமாகி நிற்கின்றபோதும், புலிகளும் புலி ஆதரவாளர்களும் அதைப் புரிந்து கொள்ளும் திராணியற்றவர்களாக, புரிந்தாலும் புலம்புவதைத் தவிர வேறு வழி தெரியாதவர்களாக மாறியிருப்பதன் காரணம் என்ன என்பதைக் காலம் கடந்த பின்னராவது பரிசீலிப்பீர்களா? பார்ப்போம்.

தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட ""ஈழம் நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்'' என்ற எமது வெளியீடு கீழ்க்கண்ட வரிகளுடன் முடிந்திருந்தது:

"நோக்கத்தில் நேர்மை இருப்பதால் வழிமுறையின் நேர்மையின்மை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று இதுகாறும் நீங்கள் இறுமாந்து இருந்திருக்கலாம். நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் தோற்றுவிக்கும் விளைவு ஒன்றுதான் என்பதை விரைவிலேயே காண்பீர்கள். அப்போதும் நாங்கள் எழுப்பிய கேள்விகளைப் புறக்கணிக்கவே விரும்புவீர்கள். எனினும், அவை உங்களுக்குள்ளிருந்தே எழும் கேள்விகளாகவும் மாறியிருக்கும்.''

எதிர்பார்த்ததைப் போலவே அந்த வெளியீடுகள் எழுப்பிய கேள்விகள் அன்று புறக்கணிக்கப்பட்டன. பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதற்குப் புகைப்பட ஆதாரத்தை வெளியிட்ட நக்கீரன் தான் அந்த நாட்களின் நாயகன். அந்த நக்கீரன் அட்டைப்படம் ஒரு கிராபிக்ஸ் வேலை என்பதைப் புரிந்து கொள்வதொன்றும் கடினமல்ல. ஆனால் உண்மையை எதிர்கொள்வதைக்காட்டிலும் பொய்யில் இளைப்பாறுவதையே புலி ஆதரவாளர்கள் விரும்பினார்கள். எனவே நக்கீரன் அட்டைப்படம் உண்மையாக இருக்கவேண்டுமே என்று விரும்பி, பின்னர் தம் விருப்பத்தையே நம்பிக்கையாகவும் மாற்றிக்கொண்டு ஆறுதல் பெற்றார்கள்.

களத்தில் இறங்குகிறார் கஸ்பர்!

இதனைத் தொடர்ந்து அதே கிராபிக்ஸ் வேலையைத் தனது எழுத்தில் காட்டத் தொடங்கினார் ஜெகத் கஸ்பர். புலிகளின் தியாகம், இறுதிப் போரின் அவலம், பிரபாகரனின் நற்குணங்கள், தளபதிகளின் திறமைகள் ஆகியவற்றை விவரிக்கும் போதே, புலிகள் இயக்கத்தலைமையுடன் தான் கொண்டிருந்த நெருக்கத்தையும் தனது கட்டுரையில் ஊடும் பாவுமாகச் சேர்த்து நெய்தார். நற்செய்திகளை விசுவாசிகளின் மண்டைக்குள் இறக்கும் கலையை முறைப்படிக் கற்றுத்தேர்ந்த அருட்தந்தை என்ற தகுதியின் காரணமாகவும், சி.ஐ.ஏவால் ஸ்பான்சர் செய்யப்பட்ட ""வெரித்தாஸ்'' வானொலியில் பணியாற்றிய அனுபவத்தின் காரணமாகவும், உண்மை எது பொய் எது என்று பிரித்தறிய முடியாத ஒரு மொழிநடையில் புலி ஆதரவாளர்களைத் தனது கஸ்டடிக்குள் கொண்டு வந்தார் கஸ்பர்.

நடேசன், பூலித்தேவன் மற்றும் 300 பேர் இந்தியத் தூதரிடமோ ஐ.நா.விடமோ ஆயுதங்களை ஒப்படைப்பதற்குத் தயாராக இருந்ததாகவும், இதற்கு கனிமொழி மூலம் காங்கிரசு பெரியவரைத் தொடர்பு கொண்டு தான் ஏற்பாடு செய்ததாகவும், பிறகு அந்தக் காங்கிரசு பெரியவர், காலம் கடந்து விட்டதால் இனி இலங்கை ராணுவத்திடம் சரணடைவதுதான் ஆகக்கூடிய காரியம் என்று கூறியதாகவும், அதனை ஏற்றுக்கொண்டு, புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாகவும் எழுதினார் கஸ்பர். சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும் முடிவை எடுக்க கோத்தபய ராஜபக்சேதான் காரணம் என்றும் அக்கட்டுரையில் கஸ்பர் குறிப்பிட்டிருந்தார். அப்போது புலிகள் இயக்கத் தலைமையுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலைவர்கள் யாரும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என்பதும் இங்கே குறித்துக் கொள்ளத்தக்கது. பிறகு, கஸ்பரின் நல்லேர் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "மௌனத்தின் வலி' எனும் கவிதை நூலையும் அந்த வெளியீட்டு விழாவையும் விமரிசித்து, "வினவு' இணையதளம் வெளியிட்ட கட்டுரை, இந்தச் சரணடைவு நாடகத்தில் கஸ்பரின் பாத்திரத்தை அம்பலப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த பேட்டியில் அருட்தந்தை ஆத்திரத் தந்தையாகி வெடித்திருந்தார்.


இதற்குப் பிறகு குமுதம் இணையதளத்தில் கஸ்பரின் பேட்டி வெளிவந்தது. கடைசிக்கட்ட பேரிழப்புகளைத் தடுக்கும் விதமாகப் போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய இந்தியா முன் வந்ததாகவும், புலிகள் அதனை நிராகரித்து விட்டதாகவும் குறிப்பிட்ட கஸ்பர், வைகோ, நெடுமாறன் போன்றோரின் தவறான வழிகாட்டுதலே இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.


வைகோவையும், நெடுமாறனையும் இழுத்த பிறகுதான் புலி ஆதரவாளர்கள் பலருக்கு கஸ்பரின் மீதிருந்த விசுவாசம் விலகத் துவங்கியது. கஸ்பரின் எழுத்துகளைச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். கஸ்பர் ஒரு இந்திய உளவுத்துறை ஏஜெண்டு என்றும், புலி ஆதரவு இணையதளங்கள் குற்றம் சாட்டத் தொடங்கின.

புலிகளைக் காப்பாற்ற முயன்றதா இந்திய அரசு?

கடைசிக்கட்ட பேரிழப்புகளைத் தடுக்கும் விதமாக, ஒரு போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்ய இந்தியா முன்வந்ததாக கஸ்பர் கூறுகிறாரே, இதில் உண்மை இருக்க முடியுமா? அந்த நாட்களை நினைவுபடுத்திப் பாருங்கள். தேர்தல் நெருங்கியவுடன் கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தைத் தொடர்ந்து, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோமென்று ஒரு பதில் நாடகத்தை நடத்தியது இலங்கை அரசு. அதற்கு "போர்நிறுத்தம்' என்று கொண்டு கூட்டிப் பொருள் விளக்கம் கொடுத்தார் ப.சிதம்பரம். உடனே "நாங்கள் போர் நிறுத்தமெல்லாம் செய்யவில்லை' என்று மறுப்பு வெளியிட்டது இலங்கை அரசு. "இல்லையில்லை இது போர்நிறுத்தம் தான்' என்று சிதம்பரமும் கருணாநிதியும் சாதித்தார்கள். தமிழகத்தில் வாக்குப்பதிவு முடியும் வரை இந்த நாடகத்தை நடத்தி விட்டு, அதன்பின் மூர்க்கமாக இறுதித் தாக்குதலை நடத்தி முடிப்பது என்பதுதான் இந்திய இலங்கை கூட்டுத் திட்டமாக இருந்திருக்கின்றது. அதனால்தான் புலிகள் பலமுறை போர்நிறுத்தம் கோரியும், போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசு நிராகரித்ததபோது. அதனை இந்திய அரசு வழிமொழிந்தது.


போரில் பங்கேற்றது மட்டுமின்றி, அதனை இறுதிவரை உடனிருந்து வழிகாட்டிய இந்திய அரசு, "இறுதி நேரப் பேரழிவைத்தடுக்க முயன்றதாக' கஸ்பர் கூறுவது பச்சையான பித்தலாட்டம். அது மட்டுமல்ல, எல்லாம் முடியும் நேரத்தில் போர்நிறுத்தம் செய்து, புலித்தலைவர்களைச் சரணடைய வைத்து, அவர்களை உயிரோடு பிடித்துக் கொண்டு வந்து, புதிய அரசியல் நெருக்கடிகளையும் வில்லங்கங்களையும் உருவாக்கிக் கொள்வதற்கு இந்திய அதிகார வர்க்கமொன்றும் அடி முட்டாளல்ல.

கஸ்பரை யூதாஸ் என்று சொல்ல முடியுமா?

அப்படியானால் நடேசனும் பிற புலித் தலைவர்களும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவார்கள் என்று தெரிந்தேதான் அவர்களையெல்லாம் இந்தச் சதிவலையில் கஸ்பர் சிக்க வைத்தாரா? புலிகளைக் காட்டிக் கொடுத்து ஆதாயம் பெற்ற யூதாஸ்தான் அருட்தந்தை கஸ்பர் என்ற முடிவுக்கு நாம் வந்து விடலாமா? அப்படி அவர் அடைந்த ஆதாயத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. அல்லது ஒரு தீய உள்நோக்கத்துடன்தான்(malafide intention)புலிகளை இந்தச் சதிவலையில் அவர் சிக்க வைத்தார் என்றும் நம்மால் நிரூபிக்க முடியாது.


எனினும் இந்தக் குற்றத்திலிருந்து கஸ்பரை விடுதலை செய்யவும் முடியாது. கஸ்பரும் கனிமொழியும் புலித்தலைவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நல்öலண்ணத்தால் உந்தப்பட்டே இந்த முயற்சியில் இறங்கியிருக்கக் கூடும். கருணாநிதியை அவமதித்த புலிகள், ராஜீவ் கொலை மூலம் தி.மு.க.வினரை அடிவாங்க வைத்து விட்டு, தற்போது தேர்தலில் ஜெ.வை ஆதரித்தவர்கள்.. இப்படி "எண்ணற்ற மனவருத்தங்களையும், வலிகளையும் மவுனமாக விழுங்கிக் கொண்டு, தனது பெருந்தன்மை குறித்து தானே நெகிழ்ச்சி கொண்ட நிலையில்தான்' சிதம்பரத்திடம் பேசியிருப்பார் கனிமொழி. கனிமொழியே கவனிக்கத் தவறிய கனிமொழியின் பெருந்தன்மைகளை அந்த இக்கட்டான தருணத்திலும் கஸ்பர் நினைவுபடுத்தியிருப்பார்.


எனினும், புலித் தலைவர்களைக் காப்பாற்றும் இவர்களுடைய நல்ல நோக்கத்தை உளவுத்துறை தனது தீய நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். இந்திய உளவுத்துறை உள்துறை மேல்மட்டங்களால், அல்லது அந்தக் காங்கிரசு பெரியவரால் கஸ்பர் ஏமாற்றப்பட்டிருக்கலாம். அவ்வாறாயின், ""இன்னின்னார் என்னை ஏமாற்றிவிட்டார்கள்'' என்று கஸ்பர் நேர்மையாகச் சொல்லியிருக்க வேண்டும். ""உங்களுடைய வாக்குறுதியை நம்பித்தானே அவர்களைச் சரணடையச் சொன்னேன். இந்தப் படுகொலைக்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று சிதம்பரத்தைச் சந்திக்கு இழுத்திருக்க வேண்டும்.


இந்தப் போர்க்குற்றத்தை நாம் நிரூபிக்க முடியாது. ஆனால் அருட்தந்தை கஸ்பரோ இதற்கு நேரடி சாட்சி.கொடுத்த வாக்குறுதியை மீறி நிராயுதபாணிகளைப் படுகொலை செய்த இலங்கை அரசை இந்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று கஸ்பர் கோரிக்கை எழுப்பலாமே, உண்ணாவிரதம் இருக்கலாமே!


கஸ்பர் இப்படியெல்லாம் செய்திருந்தால் அவர் காங்கிரசு அரசின் கோபத்துக்கு இலக்காக நேர்ந்திருக்கும். கனிமொழி, கருணாநிதி ஆகியோரின் பகைமையைத் தேடிக்கொள்ள நேர்ந்திருக்கும். அந்த நள்ளிரவில் நடைபெற்ற இந்தத் திரைமறைவு நாடகத்தில், நாம் இதுவரை அறிந்திராத நிழல் மனிதர்கள் பலரும் சந்திக்கு வர நேர்ந்திருக்கும். அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.


பொன்சேகாவின் அறிக்கை வெளிவந்தவுடன் பிரணாப் முகர்ஜி பதறிப்போய் இலங்கைக்கு ஓடியதை நாம் பார்க்கவில்லையா? கோத்தபயவைக் குற்றம் சாட்டிய பொன்சேகா, மறுநாளே பல்டியடித்ததையும் நாம் பார்க்கவில்லையா? ஆனானப்பட்ட இராணுவ ஜெனரலுக்கே இந்தக் கதி என்றால் கேவலம் ஒரு அருட்தந்தையின் நிலை பற்றி என்ன சொல்ல?


பழியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வற்ககாக இந்திய அரசை ஒருவேளை கஸ்பர் சந்திக்கு இழுத்திருந்தால், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர் பெற்றிருக்கும் செல்வாக்கை அந்தக் கணமே இழந்திருப்பார் அது குறைந்தபட்ச இழப்பு. அதிகபட்ச இழப்பு அகால மரணமாகக் கூட இருக்கலாம். நக்கீரன் அட்டை பொய்யென்று தெரிந்தாலும் அதையே புலி ஆதரவாளர்கள் நம்ப விரும்பினார்கள். என்ன செய்வது? நாயுடன் படுத்தவன் உண்ணியுடன்தான் எழுந்திருக்க வேண்டும். உளவுத்துறையுடனும் அதிகார வர்க்க மேல் மட்டங்களுடனும் சல்லாபிப்பவர்கள் பாதிவழியில் தமது விசுவாசத்தை முறித்துக் கொண்டால் அவர்களுக்கு நேரும் கதி இதுதான்.


ஆனால் உறுதியான விசுவாசிகளை உளவுத்துறை இயன்றவரை கைவிடுவதில்லை. பிரச்சினை புகையத் தொடங்கிவிட்டது என்று தெரிந்தவுடனே, கொலைப்பழியிலிருந்து கஸ்பரையும் காப்பாற்றி, இந்திய அரசையும் சேர்த்துக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏற்ற மாதிரியான ஒரு கதையை உளவுத்துறையே கஸ்பருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் போலும்!


வேறெப்படிச் சொல்வது?

"சண்டை நிறுத்தத்துக்கு வாய்ப்பிருந்தது. ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்பது கட்டாயமாகக் கூட கூறப்படவில்லை. இருப்பினும் புலிகள்தான் அதனை நிராகரித்து விட்டார்கள்'' என்று குமுதம் டாட் காம் பேட்டியில் கஸ்பர் கூறுகிறாரே, இதை நாம் நம்ப வேண்டுமாம்.


கொண்டுபோய் கொள்ளி வைத்துக் கொளுத்திவிட்டு வந்தபிறகு, ""தனியா இருந்து கஷ்டப்படாதீங்கப்பா, என்னோட மெட்ராஸ் வந்துடுங்கன்னு போனவாரம் கூடச் சொன்னேன், அவரு கேக்கலியே'' என்று பெத்த அப்பனுக்குச் சோறு போடாமல் விரட்டிய பிள்ளை எழவு வீட்டில் அங்கலாய்த்து அழுவான். கஸ்பரும் அழுகிறார். இந்த உருக்கமான கதை, குற்றத்திலிருந்து தன்னைத் தப்புவித்துக் கொள்ள உகந்ததாக இருப்பதால் கஸ்பர் இதை நம்புகிறார். நம்மையும் நம்பச் சொல்கிறார்.


கஸ்பரின் குற்றம் அடுத்தபடிக்குத் தாவி ஏறுகிறது. நல்லெண்ணத்துடன் கூடிய முட்டாள்தனமாக இருந்திருக்கக் கூடிய ஒரு தவறை (இந்தியாவை நம்பி புலிகளை சரணடையச் சொன்னது) மறைக்க அவர் செய்யும் முயற்சி, கிரிமினல் சதித்திட்டத்தை நோக்கி அவரை அழைத்துச் செல்கிறது. பாட்டியிடமிருந்து பணத்தைத் திருடிய பேரன், திருட்டை மறைக்கும் நோக்கத்துக்காக பாட்டியையே கொலை செய்கிறானே, அந்தத் திசையை நோக்கித்தான் போகிறார் கஸ்பர். இருப்பினும், கஸ்பரோ, கனிமொழியோ புலிகளுக்கு நேர்ந்த இந்த முடிவை எண்ணி வருத்தப்பட்டிருக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக வருந்தியிருப்பார்கள். இருப்பினும் அந்தக் கோரமான முடிவுக்குத் தாங்கள்தான் பொறுப்பு என்பதை மட்டும்தான் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தம்முடைய ஆலோசனையைக் கேட்டுச் சரணடைவதற்குப் பதிலாக, அவர்கள் தொடர்ந்து சண்டை போட்டிருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கப்போகிறது? எப்படியும் போரில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதுதானே எதார்த்தம். ஆகவே, ""கொலைக்கு உடந்தையாகிவிட்டதாக எண்ணி, தாங்கள் குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை'' என்று அவர்கள் தமக்குள் பேசித் தெளிவு அடைந்திருப்பார்கள்.


இந்தத் திரைமறைவு விவகாரங்களையெல்லாம் வெளியில் சொல்லாமல் கஸ்பர் மவுனமாகவே இருந்திருந்தால் உங்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கவா போகிறது என்று சில புத்திசாலிகள் குயுக்தியாக கேள்வி கேட்கலாம். நக்கீரன் தொடரில் கஸ்பர் இதையெல்லாம் எழுதக் காரணம் விவரமறியாத வெகுளித்தனமும் அல்ல, பிரபலமடையும் ஆசையும் அல்ல. இத்தகைய திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளையும், தப்பிப்பதற்கான வழிகளையும் தீர்க்கமாக யோசித்துத்தான் அதற்கு ஏற்ற புனைவுகளை உருவாக்குகிறார்கள். புலி ஆதரவாளர்களுடைய மனத்துயரையும், அவர்களுடைய ஏக்கங்களையும், அரசியல் அறிவின்மையையும், ரசிக மனோபாவத்தையும் நன்றாகப் புரிந்து கொண்டு, அவர்களை வீழ்த்தும் விதத்தில் எழுதப்படும் தரம் தாழ்ந்த ஒரு புனைவுதான் நக்கீரன் தொடர்.


அருட்தந்தை ஜெகத் கஸ்பர் என்ற புலிகள் இயக்க ஆதரவாளர் தன்னை அறியாமல் துரோகியாக மாறிய கதை இதுதான். அல்லது நேர்மைக்குள் கயமையும், நல்லெண்ணத்துக்குள் நயவஞ்சகமும் குடியேறுவது இப்படித்தான். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதும் தான் இதன் ஒரே நோக்கம்.


நோக்கத்தில் நேர்மை இருப்பதால் வழிமுறையின் நேர்மையின்மை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று கருதுவோர் யாராக இருந்தாலும், (அவர்கள் நல்லெண்ணம் கொண்ட, நேர்மையான, தூய்மையான, எளிமையான சந்தர்ப்பவாதிகளாக இருந்தாலும்) அவர்கள் அனைவரும் வந்தடையும் இடம், தற்போது கஸ்பர் வந்தடைந்திருக்கும் இடம்தான்.


நேர்மையான குறுக்குவழி கஸ்பரின் பங்காளிகள்!


கஸ்பரோடு ஒட்டாதவர்களும், அதே நேரத்தில் கஸ்பருக்கு இணையாகப் புலிகளை ஆதரிப்பவர்களுமான நெடுமாறன், வைகோ முதலானோர் இந்தத் துரோகப் பாதையின் இன்னொரு தண்டவாளமாகக் கருதப்படவேண்டியவர்கள். புலிகள் மீதான அதீதமான புகழுரைகளுடன் கப்ஸாக்களையும் கலந்து, நக்கீரன் இதழில் கஸ்பர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, எது உண்மை, எது புருடா என்று சாதாரண வாசகனுக்கு வேண்டுமானால் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நெடுமாறன், வைகோ உள்ளிட்ட புலி ஆதரவாளர்களுக்கு இதன் பொய்மை நிச்சயம் புரிந்திருக்கும். ஆனால் ஏன் யாரும் மூச்சுவிடவில்லை? அரசியல் நாகரீகமா? எனில், கஸ்பர் இவர்களைச் சந்திக்கு இழுத்தபோதும் அந்த நாகரீகத்தையும் மவுனத்தையும் பேண வேண்டியதுதானே! உடனே இவர்களது ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி கஸ்பரைக் கிழிப்பது ஏன்?


"மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் நடேசன் தலைமையில் சிங்கள இராணுவத்திடம் சரணடைவது என்ற முடிவைப் புலிகள் எடுத்தார்கள்'' என்று மே 21 ஆம் தேதி நக்கீரனில் கஸ்பர் எழுதியபோது, நெடுமாறன், வைகோ, சீமான், மணியரசன் போன்ற யாரும் அதனை மறுக்கவில்லையே! கேள்விக்கு உள்ளாக்கவில்லையே!


கொடூரமான சிங்கள இனவெறி இராணுவம் எந்த யுத்த தருமத்துக்கும் கட்டுப்படாது என்ற உண்மை புலித் தலைவர்களுக்குத் தெரியாதா? தெரிந்தும் இப்படி ஒரு தற்கொலைப் பாதையைப் புலிகள் தேர்ந்தெடுத்ததாக கஸ்பர் எழுதிய போது, வைகோ, நெடுமாறன் போன்றோரால் அதனை எப்படி நம்ப முடிந்தது?


300 பேர் சரணடைவது என்ற முடிவை எடுக்கு முன்னர் புலிகள் நெடுமாறனையோ, வைகோவையோ கலந்தாலோசிக்கவில்லையா? அல்லது ஆலோசனை கேட்ட புலிகளிடம், சரணடைந்து விடுங்கள். எங்களுக்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை என்று ஒப்புதல் கொடுத்தார்களா? அவ்வாறாயின், இந்தக் குற்றத்தில் இவர்களும் கஸ்பரின் கூட்டாளிகள் ஆகவில்லையா?


கஸ்பரின் கதை ஒருபுறம் இருக்கட்டும். ஜெயலலிதா வெற்றி பெற்றால் போர்நிறுத்தம் என்பது நெடுமாறன், வைகோ முதலானோரின் கணக்கு. அந்தக் கணக்கு பிசகிவிட்டதுதென்பது மே 16 அன்றே தெளிவாகிவிட்டது. "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' இலை மலரா விட்டால் என்ன செய்வது என்று பதிலளிக்க வேண்டிய கடமை வைகோவுக்கும், நெடுமாறனுக்கும், சீமானுக்கும் உண்டா இல்லையா? எமது முந்தைய வெளியீட்டில் இதே கேள்வியை நாங்கள் கேட்டோம். எங்களுக்கு பதில் சொல்லவில்லை. இவர்களை நம்பி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்ற புலிகளுக்காவது பதில் சொல்லும் கடமை இவர்களுக்கு உண்டா இல்லையா? மே16 தேர்தல் தோல்விக்குப் பிறகு... இனி என்ன செய்வது என்று இவர்கள் புலிகளுக்குச் சொன்ன யோசனை என்ன? போரிட்டுச் சாகச் சொன்னார்களா? இவர்கள் பேச்சைக் கேட்காமல்தான் புலிகள் சரணடைந்து விட்டார்களா? சொல்லட்டும்.


வைகோ, நெடுமாறனின் மவுனத்துக்கு என்ன பொருள்?


இந்தக் கேள்விகள் எதையும் புலி ஆதரவாளர்கள் இவர்களைக் கேட்கவில்லை என்பது வெட்கக் கேடு! இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மவுனம் சாதிக்கும் உரிமை இவர்கள் யாருக்கும் கிடையாது.

இவர்களுடைய "மகா மவுனம்' நமக்குத் தெளிவுபடுத்தும் செய்தி இதுதான். தங்கள் ஆயுதங்களை மவுனிக்கச் செய்வது என்ற முடிவை புலிகள் மேற்கொள்வதற்கு நெடுநேரம் முன்னதாகவே, இந்த தொப்புள் கொடி உறவுகள் தங்கள் கைபேசிகளை மவுனிக்கச் செய்திருக்க வேண்டும். எங்கள் கணக்கு பிசகி விட்டது. இனி உங்கள் பாடு என்று கை கழுவியிருக்க வேண்டும். கை கழுவியதற்குப் பின்னர் உட்கார்ந்துக் கதறி அழுதிருக்கலாம். ஆனால் அந்தக் கண்ணீர், அறம் கொன்ற கண்ணீர்! "

என் கணக்கு பிசகி விட்டதே' என்று கஸ்பரும்தான் அழுதிருக்கக் கூடும்.

புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களே,


குண்டு வீச்சின் இரைச்சலுக்கும், மக்களின் ஓலத்துக்கும் இடையே, ரத்தமும் கண்ணீரும் ஆறாய்ப் பெருகிக் கொண்டிருந்த அந்தக் கொலைக்களத்தின் மத்தியிலிருந்து தொலைபேசியில் பேசிய சூசையின் குரல் உங்கள் காதிலிருந்தும் மறைந்து விட்டதா? பட்டினியும், தூக்கமின்மையும், மனச்சோர்வும் வாட்ட, கதறுகின்ற மக்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல், தமது தலைமைத்துவத்தின் கவுரவம் நொறுங்கி, உடைந்து போன மனிதர்களாய் தத்தளித்த புலிகள் ஒரு ஆதரவுக் குரல் தேடி தொலைபேசியில் இவர்களை அழைத்திருக்க மாட்டார்களா? அழைத்திருப்பார்கள். மீண்டும் மீண்டும் அழைத்திருப்பார்கள். ஸ்விட்ச்டு ஆஃப் என்பதுதான் புலிகளுக்கு கிடைத்த பதில் என்றால் அந்த பதிலின் பொருள் என்ன?


"கை கழுவுகிறவர்கள் தம் கையை இரத்தத்தில் கழுவுகிறார்கள்' என்றார் பிரெக்ட். குற்றத்தை ஒப்புக் கொண்டவன் மன்னிப்புக் கேட்கிறான். தண்டனைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறான். குற்றத்திலிருந்து தப்பிக்க விரும்பும் மனமோ கொடூரமானது. தீர்மானகரமான இத்தகைய தருணங்களில் தான் அது அம்பலமாகிறது . இவர்களுடைய மவுனம் தோற்றுவித்த வலியை நாம் உணர வேண்டும் என்றால் கொல்லப்பட்ட புலித் தலைவர்கள் எழுந்து வந்து நமக்கு சாட்சி சொல்ல வேண்டும். அல்லது புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களே, நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.


ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்? பேசட்டும். பேசினால்தானே இவர்களுடைய மவுனத்தின் வலியையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இருபதாயிரம் உயிர்களுக்கு இவர்கள் பொறுப்பில்லையா?

கடைசி கட்டப் பேரிழப்புகளைத் தடுக்க ஒரு போர்நிறுத்தத்துக்கு காங்கிரசு அரசு வாய்ப்பளித்தது என்று கஸ்பர் கூறுவது இமாலயப் பொய் என்றால், அம்மாவும் அத்வானியும் வெற்றி பெற்ற மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்கும் என்று நெடுமாறனும் வைகோவும் கூறுவது ஒரு ஆகாசப் புளுகு.

அந்த நாட்களை நினைவுபடுத்திப் பாருங்கள்! இங்கே இவர்கள் ஜெயலலிதாவுக்கு சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கே ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பிணங்கள் விழுந்து கொண்டிருந்தன. சிங்கள இராணுவம், தான் விரும்பிய திசையில் புலிகளையும் மக்களையும் நெட்டித்தள்ளி, முள்ளிவாய்க்கால் எனும் தூக்குமேடையில் கொண்டு நிறுத்தியிருந்தது.

தப்பிக்கவோ தற்காத்துக் கொள்ளவோ எந்த வழியும் இல்லாத அந்த நிலையில், ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்ற முடிவை சில நாட்களுக்கு முன்னரே புலிகள் எடுத்திருந்தால், ஒருவேளை, ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு, மே 13 அன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே சிங்கள இராணுவம் வெறிகொண்ட தாக்குதலைத் தொடங்கிவிட்டது. "ஆயுதங்களை மவுனிக்கிறோம்' என்ற தங்களது முடிவினைத் தள்ளி வைப்பதற்கு வேறு எந்த முகாந்திரமோ நம்பிக்கையோ அவர்களிடம் கிடையாது — இந்தியத் தேர்தல் முடிவுகள் குறித்து நெடுமாறன், வைகோ போன்றோர் கொடுத்த நம்பிக்கையைத் தவிர.

இந்த 4 நாட்களில் கொல்லப்பட்ட புலிப்படையினரின் உயிர்களும் பொதுமக்களின் உயிர்களும் யாருடைய கணக்கில் எழுதப்படவேண்டும்?

"அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது நம் கையில் மட்டுமா இருக்கிறது?'' என்று புத்திசாலித்தனமாக மடையடைக்கலாம். ஆனால் இந்த மடையடைப்பின் அந்தப் பக்கம் தேங்கியிருப்பது 20,000 மக்களின் இரத்தம்.

சில ஆயிரம் புலிகள் மற்றும் மக்களின் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் இந்தச் சூதாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அத்வானியின் மீதும் அம்மாவின் மீதும், அவர்களுடைய வெற்றியின் மீதும் இவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்கிறது! கஸ்பருக்கோ சிதம்பரத்தின் மீது நம்பிக்கை!

கர்த்தரை நம்பி கஸ்பர் ஏமாறட்டும், சிவபிரானை நம்பி நெடுமாறன் ஏமாறட்டும் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் தங்களுடைய அரசியல் நம்பிக்கையின் மீது, ஆயிரம் பதினாயிரம் மக்களின் உயிரை இவர்கள் பணயம் வைக்கும்போது, அதன் விளைவுகளுக்கு அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் பொறுப்பேற்றுப் பதில் சொல்லியாக வேண்டும்.

இன்று எல்லாம் முடிந்து விட்டது. ஈழப்பிரச்சினை ஓட்டுக்கு உதவாது என்று புரிந்து கொண்ட ஜெயலலிதா, பிரச்சாரத்தின் இறுதி நாட்களிலேயே ஈழம் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டார். பாரதீய ஜனதாவோ ஈழமா, கிலோ என்ன விலை என்று கேட்கிறது.
"இப்படிப்பட்டவர்களை நம்பியா இத்தனை ஆயிரம் உயிர்களைப் பணயம் வைக்கச் சொன்னோம்?'' என்று வைகோ நெடுமாறன் அணியினர் யாரேனும் எங்கேனும் வருத்தம் தெரிவித்துப் பேசியிருக்கிறார்களா?

"ஜெயலலிதாவும் பாரதீய ஜனதாவும் வென்றிருந்தால் 17ஆம் தேதி போர்நிறுத்தம் வந்திருக்கும். ராவின் அதிகாரிகளும், ஐ.பி.யின் அதிகாரிகளும், புலிகளை ஒழிப்பதற்காக இலங்கை அரசுடன் கூட்டாகப் போட்ட திட்டங்கள் அனைத்தையும் 16ஆம் தேதி இரவே கிழித்துப் போட்டிருப்பார்கள்'' என்ற கதையைத்தான் இந்தக் கணம் வரை இவர்கள் கடை விரித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா வென்றிருந்தால்...?

உண்மை என்ன? பா.ஜ.க. வென்றிருந்தாலும் முள்ளிவாய்க்காலில் இப்போது என்ன நடந்ததோ அதுதான் நடந்திருக்கும். ஆனால், பாத்திரங்கள் இடம் மாறியிருப்பார்கள். வைகோவும் நெடுமாறனும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். கஸ்பரும் கருணாநிதியும் அவர்களைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்திருப்பார்கள்.

தன்னைத் தற்காத்துக் கொள்ள தேவையான கதையை வை.கோ நமக்குச் சொல்லியிருப்பார். "அத்வானி அவர்களே, நீங்கள் இடுகின்ற முதல் ஆணை என் ஈழத்தமிழனைக் காப்பாற்ற வேண்டும். இதற்காக என் தமிழினம் என்றென்றைக்கும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கும் என்று கூறினேன். என் கண் முன்னே சிவசங்கர மேனனை அழைத்து அவர் ஆணையிட்டார். இந்திய உளவுத்துறை அதிகாரிகள் நேரில் விரைந்தார்கள். ஆனால் ஐயகோ, மாபாவி கோத்தபய ராஜபக்சே அதற்கு முன்னே சதி செய்து கொன்றுவிட்டான்'' என்று பேசிவிட்டு கருப்புத் துண்டால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருப்பார்; இன்று ப.சிதம்பரத்தை கஸ்பர் நியாயப்படுத்துவதைப் போலவே, நெடுமாறன் அம்மாவை நியாயப்படுத்தியிருப்பார். இந்தக் காட்சிகளையெல்லாம் காணமுடியாமல், தமிழ்நாட்டு மக்கள் இவர்களைக் காப்பாற்றி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவர்களுடைய அரசியல் நிலைப்பாடு அறியாமையிலிருந்து பிறந்தது அல்ல. பச்சையான சந்தர்ப்பவாதம். தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்கு ஈழ மக்களையும் புலிகளையும் பகடைக் காயாக்கிவிட்டு, இன்று பரிதாபத்துக்குரிய அவல நிலைக்கு அந்த இனமே தள்ளப்பட்ட சூழலிலும் கூட, கடுகளவும் குற்றவுணர்வு கொள்ளாத கல்நெஞ்சக்காரர்கள் இவர்கள்.

தேர்தல் புறக்கணிப்பு என்ற முழக்கத்தை நாம் வைத்தபோது, ""உங்கள் கொள்கையெல்லாம் சரிதான். ஆனால் இது நடைமுறை சாத்தியமான தீர்வு எதையும் ஈழத்தமிழ் மக்களுக்கு வழங்காது'' என்று ஒரு ஏளனப்புன்னகையால் எங்களை ஒதுக்கி விட்டு, கம்பீரமாக இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கப் போனார்கள். தேர்தல் தோல்வியை விட்டுத் தள்ளுவோம். நடைமுறை சாத்தியமான தீர்வை வழங்கும் அம்மாவும் அத்வானியும் போர்க்குற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்களா? போராடுகிறார்களா? இவர்களுடைய வெற்றிதான் ஈழத்தமிழர்களை வானமேற்றி வைகுந்தம் சேர்த்திருக்குமா?

"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றார்கள். மலரா விட்டால் என்ன செய்வது என்று பதிலளிக்க வேண்டிய கடமை வைகோவுக்கும், நெடுமாறனுக்கும், சீமானுக்கும் உண்டா இல்லையா? மே16 தேர்தல் தோல்விக்குப் பிறகு... இனி என்ன செய்வது என்று இவர்கள் புலிகளுக்குச் சொன்ன யோசனை என்ன? போரிட்டுச் சாகச்சொன்னார்களா? இவர்கள் பேச்சைக் கேட்காமல்தான் புலிகள் சரணடைந்து விட்டார்களா?

இந்தக் கேள்விகள் எல்லாம் இவர்களுடைய சிந்தனைத்திறனுக்கு அப்பாற்பட்ட கேள்விகள் அல்ல. இந்தத் தேர்தல் சூதாட்டம் குறித்து இவர்கள் நெஞ்சில் இருக்கின்ற, ஆனால் வாயில் வராத ஒரு பதில் இருக்கிறது. " " மயிரைக் கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை, போனா மசிரு'' என்பதுதான் அது. போன உயிர்களைப் பற்றி இதைவிட மேம்பட்ட வேறு மதிப்பீடுகள் எதுவும் இவர்களுக்கு இருக்குமாயின், குறைந்த பட்சம் அந்தக் கடைசி நாட்களில் நடந்த திரைமறைவு நாடகங்கள் பற்றி ஒளிவு மறைவின்றி இவர்கள் பேசியிருப்பார்கள்.

மவுனம் சாதிக்க இவர்களுக்கு உரிமை உண்டா?

ஈழப்பிரச்சினைக்காகத் தமிழகத்தில் தீக்குளித்தவர்கள், சிறை சென்றவர்கள், பட்டினி கிடந்தவர்கள், தடியடிபட்டவர்கள் எத்தனை பேர்? ஐரோப்பாவின் வீதிகளில் நின்ற புலம் பெயர் தமிழர்கள் எத்தனை இலட்சம் பேர்? யாருக்காகப் போராடினோமோ அவர்களுடைய தலைவிதியை ஒரு பாதிரியும், மந்திரியும், சில அதிகாரிகளும் இரகசியமாகத் தீர்மானிப்பார்களாம். கடைசி நாட்களில் நடந்தது என்ன என்பது பற்றி வைகோவும் நெடுமாறனும் பேசவே மாட்டார்களாம். எல்லாம் முடிந்துவிட்ட பிறகும் நடந்ததைச் சொல்ல மாட்டார்களாம். ""சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும்'' என்று குமுதம் பேட்டியில் கூறுகின்றார் கஸ்பர். ஈழத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் யார்? தமிழக மக்களா, யாரோ சில உளவுத்துறை அதிகாரிகளா? சில அரசியல் தரகர்களும், பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் உருட்டும் தாயக்கட்டையாக ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டமே மாறிப்போனதற்கும், உலகில் வேறு எங்கும் காணாத வகையில் ஒரு முற்றான துடைத்தொழிப்பு நடந்து முடிந்திருப்பதற்கும் காரணம் ஒரு பாதிரியும், தமிழகத்தில் சில மாவீரர்களும் மட்டுமல்ல.

துரோக நாடகத்தின் பாத்திரங்கள்!
இந்தப் பக்கம் கஸ்பர், அந்தப்பக்கம் நெடுமாறன், வைகோ என்று ஒட்டாமல் பிரிந்திருக்கும் இந்தத் தண்டவாளங்கள் இரண்டும் ஒரே திசையை நோக்கித்தான் புலிகளை இட்டுச் சென்றன. ஆனால் "ஒன்றுக்கு இன்னொன்று மாற்று' என்று கருதி இந்தத் தண்டவாளங்களின் மீது சவாரி செய்தார்கள் புலிகள். எஞ்சினுக்கு என்னதான் ஆற்றல் இருந்தாலும், செல்லும் திசையைத் தண்டவாளங்கள்தானே தீர்மானிக்கின்றன.


இது புலிகளும், பல்வேறு தரப்புகளைச் சார்ந்த அவர்களது அபிமானிகளும் தெரிந்தே தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதையின் முடிவு. இந்தக் கசப்பான உண்மைக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது. அதனை விவரிக்க இது இடமல்ல. நடப்பு நிகழ்வுகளுக்கு வருவோம். இந்தத் துரோக நாடகத்தின் பார்வையாளர்களான புலி ஆதரவாளர்கள் தம்மையும் அறியாமல் இதன் பாத்திரங்களாகவும் இருந்து வருகிறார்கள்.


கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகாவது தாங்கள் ஆபத்தின் விளிம்பில் நிற்பதை புலிகள், தமது தமிழக ஆதரவாளர்களுக்கு உணர்த்தினார்களா, அல்லது தாங்கள் உருவாக்கிக் கொண்ட நாயக பிம்பத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உண்மையை அவர்களிடமிருந்தும் மறைத்தார்களா தெரியவில்லை.


புலிகளே சொல்லியிராவிட்டாலும் சொந்த அறிவு உள்ளவர்கள் யாரும் கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின்னர் புலிகளின் அரசியல், ராணுவப் பின்னடைவைப் புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால், கிளிநொச்சியின் வீழ்ச்சியை "மாபெரும் பின்வாங்கும் போர்த்தந்திரம்' என்றும், "சிங்கள ராணுவத்தை உள்ளே இழுத்து ரவுண்டு கட்டி அடிப்பதற்காகத்தான் புலிகள் பின்வாங்குகின்றார்கள்' என்றும் புலி ரசிகர்கள் இங்கே ராணுவ ஆய்வுகளை வெளியிட்டார்கள். வேறு சிலர் "புலிகளையாவது வெல்வதாவது' என்று பொதுக் கூட்டம் போட்டு நமக்குத் தைரியம் சொன்னார்கள்.


புலி ஆதரவாளர்களின் மனோநிலை கொஞ்சம் விசித்திரமானதுதான். "ஏசு கிறிஸ்துவின் கடைசி ஆசை' என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை அது நினைவூட்டுகின்றது. சிலுவையில் அறையப்பட்டு அரை மயக்க நிலையில் கனவு காணும் ஏசு, தான் சிலுவையிலிருந்து தப்பி காதலியை மணந்து குடும்பம் ? நடத்துவதாகக் கனவு காண்பார். அந்தக் கனவுக்குள் ஒரு காட்சி "ஏசு நமக்காக சிலுவையில் மரித்தார்' என்று சந்தையில் நின்று பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார் ஒரு மதபோதகர். அவரிடம் சென்று "நான்தான் ஏசு, நான் மரிக்கவில்லை. பெண்டாட்டி, பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கிறேன்'' என்று கூறுவார் ஏசு. மதபோதகரோ, ""நீ ஏசுவாகவே இருந்தாலும் சரி, எங்களைப் பொருத்தவரை ஏசு சிலுவையில் மரித்து விட்டார்'' என்று தீர்க்கமாகப் பதிலளிப்பார்.


"பாரியதொரு தோல்வி' என்று புலிகள் இயக்கத்தினரே கூறியபின்னரும், இது "தோல்வியே அல்ல, பின்வாங்கும் போர்த்தந்திரம்' என்று கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தஞ்சாவூரில் மாநாடு போட்டு பேசுகின்றார்கள் புலி ஆதரவாளர்கள். கூடியிருக்கும் ஆயிரம் பேர் இந்த மாபெரும் உண்மையைக் கைதட்டி வரவேற்கிறார்கள். இவர்களையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது?

கஸ்பர் நக்கீரன் இதழில் புலிகளை வானளாவப் புகழ்ந்து தள்ளியபோது, நிகழ்காலத்தை மறந்து அந்தக் கதகதப்பில் புலி ஆதரவாளர்கள் கண் மயங்கினார்கள். இப்போது கஸ்பரை ""உளவாளி, இயக்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்'' என்றெல்லாம் சாடுகின்றார்கள். இயக்கத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவரை நடேசன் ஏன் தொடர்பு கொண்டார் என்ற கேள்வியோ, போரை நடத்தும் எதிரியின் (காங்கிரசு) அணிக்காரரை எதற்காக நடேசன் தொடர்பு கொண்டார் என்ற கேள்வியோ அவர்களுக்கு எழவேயில்லை. கஸ்பரின் ஆலோசனைப்படி ""இலங்கை ராணுவத்திடம் சரணடைவது என்ற பாரிய முடிவை எடுத்த நடேசன், உங்களைக் கலந்தாலோசிக்கவில்லையா?'' என்று நெடுமாறன், வைகோ போன்றோரை இவர்கள் கேட்பதுமில்லை.


பொதுவாக, அரசியல் தரத்தில் தி.மு.க. தொண்டனைவிடத் தங்களைப் பெரிதும் உயர்ந்தவர்களாகத்தான் கருதிக் கொள்கிறார்கள் புலி ஆதரவாளர்கள். திருமண உதவி, ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி என்று என்னென்னவோ கொடுக்கிறார் கலைஞர். ""யார் தாலியை அறுத்து இந்த தருமம் நடக்கிறது?'' என்ற கேள்வியை எந்த தி.மு.க. தொண்டனும் கேட்பதில்லை. ""கொடுக்கிறாரா வாங்கிக் கொள்!'' அவ்வளவுதான். காங்கிரசோடு சேர்ந்தாலும், பாரதிய ஜனதாவோடு சேர்ந்தாலும் தி.மு.க. தொண்டனைப் பொருத்தவரை, அதெல்லாம் அவருடைய ராஜதந்திரம். "ஜெயிக்கிறாரா, அதுதான் முக்கியம்''. இதுதான் சராசரி தி.மு.க. தொண்டனின் பார்வை. கலைஞரின் கொள்கை என்ன என்று தி.மு.க. தொண்டன் கேட்பதில்லை. அவனுக்கு கலைஞர் தான் கொள்கை. புலிகள் குறித்த புலி ஆதரவாளர்களின் பார்வையும் இதுதான்.


புலிகள் ஆடிய ஆடுபுலி ஆட்டம்!


புலிகள் இயக்கமோ அனைத்துக்கும் இடமளிக்கின்றது. ஆளும் வர்க்க அரசியல், ஜனநாயகமே இல்லாத அமைப்பு முறை, அணிகளால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர்கள், மக்கள்திரள் அரசியலை வெறுத்தொதுக்கும் ராணுவவாத நடைமுறை இவையனைத்தும் கலந்த இவ்வமைப்பு, சிங்கள இனவெறியின் மூர்க்கத்தனம் காரணமாக தனது உறுதியைப் பேண முடிந்தது.


புலிகளைப் பொருத்தவரை விடுதலை என்பது ஒரு பாதி ஆயுதப் போராட்டம், மறுபாதி லாபியிங் வேலை. அதற்காக இந்தப் பக்கம் நெடுமாறன், வைகோ, பாஜக அந்தப் பக்கம் கஸ்பர், கனிமொழி. அப்புறம் அமெரிக்காவை சரிக்கட்ட ஒபாமாவுக்கான தமிழர்கள், ஐரோப்பிய நாட்டு அரசுகளுக்குத் தனி ஆட்கள், இலங்கை அரசியலைச் சமாளிக்க துரோகிகள், பிழைப்புவாதிகள் அனைவரையும் அள்ளிக்கட்டிய ஒரு தமிழர் கூட்டணி.... "யாரை வேண்டுமானாலும் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்' என்பதுதான் அவர்களது அரசியல்.


இந்த சந்தர்ப்பவாத அரசியலை ராஜதந்திரம் என்றும், எல்லோரையும் காய்களாகப் பயன்படுத்தி புலிகள் ஆடுகின்ற "ஆடுபுலி ஆட்டம்' என்றும் கூறி புலி ஆதரவாளர்கள் வியந்து கொண்டிருந்தார்கள். இந்த விபரீத ஆட்டத்தில் புலிகளும் வெட்டுப்படக் கூடும் என்பதை, வெட்டுப்படும் வரை அவர்கள் நம்பத்தயாராக இல்லை.


கூடாத கொள்கைகள் மட்டுமல்ல, கூடாத நட்பும்தான் புலிகளை முள்ளிவாய்க்காலுக்குத் தள்ளிக் கொண்டு வந்தது. அந்த இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் புலித்தலைமையும் ஆயிரக்கணக்கான மக்களும் தப்பிக்கவே முடியாமல் சுற்றி வளைக்கப்பட்டிருந்தபோது, தமிழகத்தின் இரு அரசியல் அணிகளையும் சேர்ந்த புலிகளின் ஆதரவுத் தலைவர்களும் பிரமுகர்களும், தாங்கள் தப்பிக்கும் வழியைத்தான் தேடிக் கொண்டிருந்தார்கள்.

"ஏதாவது செய்யுங்கள்'' என்று முள்ளிவாய்க்காலிலிருந்து எத்தனை தொலைபேசி அழைப்புகள்! எங்களுக்கும் தெரியும். புலி ஆதரவுப் பிரமுகர்களுடைய கைபேசிகள், வெடிகுண்டுகளைப் போல அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தன.


அந்த நாட்களில் நடேசனுடனோ, பூலித்தேவனுடனோ, பிரபாகரனுடனோ நிகழ்த்தப்பட்ட உரையாடல்கள், வழங்கப்பட்ட ஆலோசனைகள் ஆகிய எவையும் யாருடைய தனிப்பட்ட விவகாரமும் அல்ல. அவை இலட்சக்கணக்கான ஈழத்தமிழ்மக்களின் உயிருடனும் உரிமையுடனும் தொடர்புள்ளவை. அவர்களுடைய தலைவிதியைத் தீர்மானிப்பதில் பாத்திரமாற்றியவை. அவற்றை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு. கண்ணுக்கெட்டிய வரை மாவீரர் கல்லறை நீள்வதைக் காட்டி அதனைத் தமிழ் வீரத்துக்கு சான்றாக்கி கொட்டி முழக்கியவர்கள், தமிழகத்தில் தீக்குளித்து இறந்த ஒவ்வொரு இழவு வீட்டுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு மலர் வளையம் வைத்து விளம்பரம் தேடியவர்கள் முள்ளி வாய்க்கால் சுடுகாட்டைக் கண்டு மட்டும் முகத்தை மூடிக்கொள்வது ஏன்?


நாங்கள் எழுப்பும் இந்தக் கேள்விகளும் வெந்த புண்ணில் பாய்ச்சப்படும் வேல்களே என்று வியாக்கியானம் செய்யலாம். வெறுப்பை உமிழலாம். எமது அரசியல் ரீதியான விமரிசனங்களால் மனம் புண்பட்டுப் போன "அனிச்ச மலர்' களைக் கேட்கிறோம். வன்னி மக்களைக் காட்டிலும் நீங்கள் புண்பட்டு விட்டீர்களா? உங்களுடைய தலைவர்களின் இந்தக் கள்ள மவுனம் உங்களைப் புண்படுத்தவே இல்லையா? விசித்திரம் தான்!


அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செத்துப் போன அநாதைப் பிணத்துக்கு, வைத்தியம் பார்த்த மருத்துவரைக் கேள்வி கேட்கக் கூட நாலு பேர் வருகிறார்கள். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உங்கள் அபிமான புலித் தலைவர்களும் 20,000 மக்களும் காற்றோடு கரைந்து விட்டார்களே, ஈழத்துக்கு "வைத்தியம்' சொன்ன உங்கள் தலைவர்களை நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லையே.


எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்: இருக்கிறார். உடனே விசில் சத்தம் கூரையைப் பிளக்கிறது. இருக்கட்டும். நாங்கள் இல்லாமல் போன 20,000 பேரின் இறுதி நாட்களுக்கு விளக்கம் கேட்கிறோம். அதற்கும் "விசில்'தான் பதிலா?

யார் நண்பன்? யார் துரோகி? யார் தலைவர்?

விடுதலைப் போராட்டத்தில் தோல்வியும், பின்னடைவும் அதிசயமல்ல. ஒரு இயக்கம் அந்தத் தோல்வியை எப்படி எதிர்கொள்கின்றது என்பதுதான் அதன் தரத்துக்கு உரைகல். எது சரி, எது பிழை என்று கொள்கைகளின் மீது இங்கு விவாதம் நடைபெறவில்லை. மாறாக யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்பதுதான் இன்று விவாதப் பொருள்.

"பிரபாகரன் இறந்துவிட்டார்' என்று பத்மநாதன் சொன்னதுமே, "அவன் துரோகி' என்று பிரகடனம் செய்தார் நெடுமாறன். "ஆயுதப் போராட்டம் தளபதி ராம் தலைமையில் மீண்டும் தொடங்கவிருக்கிறது'' என்கிறது ஒரு தரப்பு, ""ராம் சிங்கள அரசின் கைக்கூலி'' என்கிறது இன்னொரு பிரிவு. ""நாடு கடந்த தமிழ் ஈழம்'' என்று ஒரு பிரிவு, "அவ்வாறு பேசுபவர்கள் துரோகிகள்'' என்று இன்னொரு பிரிவு.


"துரோகி' என்ற சொல் ஈழ விடுதலைப் போராட்டத்தில் புழங்கிய அளவிற்கு வேறு எங்கும் புழங்கியிருக்குமா என்று தெரியவில்லை. துரோகி பட்டத்தை வழங்கும் அதிகாரம் படைத்த திருச்சபை இப்போது இல்லையென்பதால், சுயேச்சையான சபைகள் உலகெங்கும் முளைத்து விட்டன. கையில் "துரோகி' என்ற முத்திரைக் கட்டையுடன் மெய்உலகிலும், மெய் நிகர் உலகிலும் நூற்றுக்கணக்கானோர் அலைகின்றார்கள். முதுகு இருப்பவன் ஒவ்வொருவனும் முத்திரையை சுமந்தாக வேண்டும் என்ற நிலை. அடுத்தவனைத் துரோகியாகவும் தங்களைப் புனிதவானாகவும் சித்தரித்துக் கொள்ளும் இந்த நாடகம், தவிர்க்கவியலாதபடி ""நீ பத்தினியா நீ பத்தினியா'' என்ற குழாயடிச் சண்டையில் வந்து நிற்கின்றது.


திருமாவின் இறுதி ஆயுதம்!


ஜெயலலிதாவினால் பொடாவில் கைது செய்யப்பட்டு, நெடுமாறன் பிணையில் வெளியே வந்தபோது, "அரசியல் பேசக்கூடாது' என்று நீதிமன்றம் போட்ட அநீதியான நிபந்தனையை மீறி, "பேசுங்கள் ஐயா'' என்று பலரும் வற்புறுத்திய போதிலும், நெடுமாறன் பேசாததற்குக் காரணம் அவருடைய ஜெயலலிதா சார்புநிலைதான் என்கிறார் சுப.வீ.

"தேர்தலில் தோற்றாலும் சரி, ஈழத்துக்காக மூன்றாவது அணி அமைப்போம் என்று நான் சொன்னதை நிராகரித்து என்னை ஜெயலலிதா அணியில் சேர்ப்பதிலேதான் நெடுமாறன் அணியினர் குறியாக இருந்தனர். அ.தி.மு.க.வுக்கு கூட்டணி சேர்ப்பதுதான் இவர்களது நோக்கமேயன்றி, ஈழம் அல்ல'' என்கிறார் திருமாவளவன்.


காங்கிரசு அணியில் சேர்ந்தது மட்டுமின்றி, இலங்கைக்கும் போய்விட்டு வந்ததால், திருமாவை நெடுமாறன் அணியினர் விமரிசிக்கத் தொடங்கவே அவர் இறுதி ஆயுதத்தையும் கையில் எடுத்து விட்டார்.


"நடேசன் பூலித்தேவனுடன் பிரபாகரனும் சரணடைந்தார். அதன் பின்னரே கொல்லப்பட்டார்'' என்று தீவிர புலி ஆதரவாளரான ஒரு நண்பர் கூறியதாகவும் அந்த நண்பர் சொன்னதைச் சலனமில்லாமல் கேட்பதைத் தவிர தன்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் எழுதியிருக்கிறார் திருமா. (ஜூ.வி டிச. 27, 2009).


திருமாவளவனை "துரோகி' என்று புலி ஆதரவாளர்கள் சாடலாம். ஆனால் அந்தச் சொல் வீரியம் இழந்து நைந்து விட்டது. வெல்லப்பட முடியாத வீரம், சரணடையாத சயனைடு குப்பி என்பனவற்றையே தாயத்தாகக் கொண்டு அரசியல் விமரிசனங்கள் அனைத்தையும் புலிகள் அண்ட விடாமல் விரட்டி வந்த காலம் முடிந்து விட்டது. இந்தச் சூழ்நிலையிலாவது அறிவுப்பூர்வமான பரிசீலனையை நோக்கி புலி ஆதரவாளர்கள் திரும்பியிருக்க வேண்டும்.


மாறாக, கடவுள் இல்லை என்று நிரூபித்த பெரியாரின் வாதத்துக்கு செருப்பையே தமது பதிலாக எறிந்தார்களே பக்தர்கள், அந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள் புலிகளின் ஆதரவாளர்கள் பலர். இந்த மனநிலைதான் அருட்தந்தை ஜெகத் கஸ்பரின் கப்சாக்களுக்கான சந்தை. அய்யா நெடுமாறன் அணியினரின் அரசியல் சந்தர்ப்பவாதங்களைப் பாதுகாக்கும் கவசமும் இந்த மனநிலைதான்.


"பிரபாகரன் இல்லை என்று சொல்வதே தமிழ் மக்களின் தார்மீகபலத்தைக் குலைப்பதற்கு சிங்கள அரசு செய்யும் சதி' என்றும் இதற்கு விளக்கமும் கூறுகின்றார்கள். சதி கிடக்கட்டும், இன்று தமிழ் மக்களின் விதிக்கு வழிகாட்டப் போகும் தலைவர் யார்? எந்தவொரு பிரச்சினையிலும் "எது சரி' என்ற கேள்விக்கு "புலி என்ன சொல்கிறதோ அதுதான் சரி'' என்று மட்டுமே பதிலளித்துப் பழகியிருக்கும் புலி ஆதரவாளர்கள், இந்தச் சூழ்நிலையிலும் ஒரு தலைவரையே தேடுகிறார்கள். ஆனால் அவர்கள் முன் "தலைவர்' இல்லை. "தலைவர்கள்' அணிவகுத்து நிற்கிறார்கள். நெடுமாறன், வைகோ, ராமதாசு, மணியரசன், மகேந்திரன் இன்ன பிறரில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவர் யார்? தரவரிசைப் பட்டியல் எது?


உங்களுக்குள்ளிருந்தே எழும் கேள்விகள்! ஒரே தலைவர் என்ற நிலை இல்லாததால், சரி பிழையைத் தீர்மானிப்பதற்கு, தவிர்க்கவியலாமல் ஒரு கொள்கை தேவைப்படுகின்றது. எது அந்தக் கொள்கை?


"இந்திய அரசை அனுசரித்து, நமக்கு ஆதரவாகத் திருப்புவதுதான் சிறந்த கொள்கை'' என்கிறார் கஸ்பர். ""அது இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழத்தைக்
காவு கொடுக்கும் சதி'' என்கிறது தமிழர் கண்ணோட்டம். இந்தச் சதியைத்தான் "இந்திய ராஜதந்திரத்தின் தோல்வி'' என்ற தலைப்பில் தினமணியில் நடுப்பக்கக் கட்டுரையாகவே எழுதியிருந்தார் நெடுமாறன். "இந்தியா என்ற அச்சில்தான் ஈழம் சுழலும்'' என்று தங்களது வெளியுறவுக் கொள்கையைப் பிரகடனமே செய்திருந்தார் பாலசிங்கம். எந்தக் கொள்கை நமது கொள்கை?


"எல்லா தமிழரையும் ஒன்றிணைப்பது என்று பேசுவதே மோசடி'' என்கிறது தமிழர் கண்ணோட்டம். ஆனால், இல.கணேசன், சசிகலா நடராசன், அர்ஜுன் சம்பத், அம்மா என்று அத்தனைத் தமிழர்களையும் ஒன்றிணைத்த அத்தகையதொரு மோசடிக்கு அடிக்கல் நாட்டியவரோ, அய்யா நெடுமாறன்தான். எனில், தமிழர்களை எந்த அடிப்படையில் ஒன்றிணைப்பது?


நாளை இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் செய்யவேண்டியது என்ன? கஸ்பரை துரோகி என்று சாடும் தீவிர புலி ஆதரவு இணையதளங்கள் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழர்களைக் கோருகிறது. "சிவாஜிலிங்கம் தமிழர் ஓட்டுகளைப் பிரிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள ராஜபக்சேவின் கையாள்'' என்கின்றது. "பொன்சேகா (ரணில்) வெற்றி பெறுவதுதான் தமிழர்களுக்கு நல்லது'' என்று நக்கீரன் கட்டுரையில் கஸ்பரும் இதையே மறைமுகமாக வழிமொழிகிறார். அய்யா நெடுமாறனோ ராஜபக்சேவின் கையாள் என்று தூற்றப்படும் சிவாஜிலிங்கத்துடன் கைகோர்த்து நிற்கிறார். தமிழர்கள் என்ன செய்வது?


சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவுக்கும், கருணாநிதிக்கும் எதிராக ஜெயலலிதாவையும், அத்வானியையும் ஆதரித்த புலி ஆதரவாளர்களின் நிலைப்பாட்டின்படி, உலகத் தமிழர்கள் பொன்சேகாவின் பின்னால் அணிதிரள வேண்டும். ஆனால் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா நெடுமாறன் ஆசிபெற்ற சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதாயின், உலகத் தமிழர்கள் ராஜபக்சேயின் பின்னால் அணிதிரள வேண்டியிருக்கும். இதில் சரி தவறு பற்றி நாங்கள் பேசுவது, புலிகள் இயக்க ஆதரவாளர்களின் மனதை மீண்டும் புண்படுத்தக் கூடும் என்பதால், இந்த விசயத்தில் இப்போதைக்கு நாங்கள் மவுனம் சாதித்து விடுகிறோம்.


இந்தக் கேள்விகள் எவையும் நாங்கள் எழுப்பும் கேள்விகள் அல்ல. நாங்கள் எழுப்பும் கேள்விகளைப் புறக்கணிக்கவே எப்போதும் நீங்கள் விரும்புவீர்கள். இவை உங்களுக்குள்ளிருந்தே எழும் கேள்விகள்.


உங்கள் புண்பட்ட நெஞ்சில் நாங்கள் பாய்ச்சுவது வேல் அல்ல, கொள்கை என்ற ஒரு சொல். இன்று நீங்கள் அனுபவிக்கும் வேதனையிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி அந்தச் சொல்லின் முன் சரணடைந்து விடுவதுதான்.


கூச்சப்படத் தேவையில்லை; இந்தச் சரணடைவு கவுரவமானது.

பின் குறிப்பு: இக்கட்டுரையில் கஸ்பர், வைகோ, நெடுமாறன் முதலான முக்கியஸ்தர்களை மட்டுமே சந்தர்ப்பவாதத்திற்கும், துரோகத்திற்கும் பிரதிநிதிகளாக காட்டி எழுதியிருக்கிறோம். இவர்களின் பின்னால் எண்ணற்ற தமிழ்த்தேசிய, திராவிட இயக்கம் சேர்ந்த அமைப்புகள் ஈழப்போரின் போது அணிதிரண்டு நின்றன. இனவாதத்தை இதயமாகவும், மார்க்சிய லெனினியத்தை முகப்பூச்சாகவும் அணிந்த 'இடது சாரி' அணியினரும் இதில் அடக்கம். டூரிங் டாக்கீஸ் விளம்பர வண்டியின் பின்னால் புழுதி கிளப்பிக் கொண்டு ஓடும் சிறுவர்களைப் போல இவர்களில் பலரும் வைகோ, நெடுமாறன் அணியினரின் பின்னால் ஓடினர். ஈழப்போரை நிறுத்த இதுவே காரிய சாத்தியமான தீர்வு என்றும் சாதித்தனர்.


பதிலளிக்க வேண்டியவர்கள் இவர்களும்தான். தனியாக பெயர் குறிப்பிடவில்லை என்பதால் தங்களுக்கு இல்லை என்று இவர்கள் கருதிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பின் குறிப்பு.

Thanks : Puthiya Kalachcharam

No comments:

Post a Comment