Monday, April 13, 2015

மூதூரிலே மலர்ந்தன : 'இலுப்பம் பூக்கள்'









மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'மூதூர்' மொகமட் ராபி எழுதிய சிறுகதைத் தொகுப்பாகிய 'இலுப்பம் பூக்கள்' வெளியீடு கடந்த 12.04.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் மூதூர் தி/அந்நஹார் மகளிர் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.



இவ்வெளியீட்டு விழாவில் மூதூர், சம்பூர், தோப்பூர், கிண்ணியா மற்றும் திருகோணமலை ஓட்டமாவடியைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், அரச  ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் அதிபர் ஜனாப். எம். எஸ். அமானுல்லாஹ் அவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு மூதூர் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத்தொகுப்பு ஒன்று வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.



மறைந்த எழுத்தாளரான திரு. வ. அ. இராசரத்தினம் அவர்களுக்குப் பின்னர் மூதூரின் சிறுகதை வரலாற்றில் அண்மைக்காலமாக ஒருவித தேக்க நிலை ஒன்று நிலவி வருவதாக நூல் அறிமுகவுரையின்போது கூறிய அதிபர் ஜனாப். ஏ. எஸ். உபைத்துல்லாஹ் அவர்கள், மூதூர் மொகமட் ராபி அந்த தேக்கநிலையை தகர்த்தெறியும் ஆற்றல் மிக்கவர் என்றும் குறிப்பிட்டார்.


அடுத்து நூலாசிரியர் ஜனாப். எம். பீ. மொகமட் ராபி,தமது  பெற்றோர்களாகிய ஜனாப். ஏ. எம். புஹாரி மற்றும் ஜனாபா. அம்ரா புஹாரி தம்பதிகளுக்கு நூலின் முதற் பிரதிகளை வழங்கி வெளியிட்டு வைத்தார். இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற அதிபர்கள் என்பதோடு முறையே தி/மூதூர் மத்திய கல்லூரி மற்றும் தி/அந்நஹார் ம.வி.யின் முன்னாள் அதிபர்கள் குறிப்பிடத்தக்கது.



அதனையடுத்து இடம்பெற்ற நூல் மதிப்பீட்டு உரைகளை சிரேஷ்ட எழுத்தாளர்களான நந்தினி சேவியர், ஜனாப் கே. எம். எம். இக்பால், திருமலை நவம் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

தி/ஸ்ரீவாணி வித்தியாலய அதிபர் திருமதி. வீ. அன்பழகன் அவர்களது ஏற்பாட்டில் உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு. ஆ. செல்வநாயகம் அவர்கள் நூலாசிரியரைப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.



நூலாசிரியர் தமது ஏற்புரையில் நேர்மையும் நெஞ்சுரமும் ஊட்டி வளர்த்த பெற்றோர்கள் இருவரையும் பாராட்டி தனது நன்றிகளையும் தெரிவித்ததோடு சிறுகதை முயற்சியில் தாம் ஈடுபட்டு இலுப்பம் பூக்களை வெளியிடுவதற்கு காரணமாக இருந்தவர்களை உணர்ச்சிப் பெருக்குடன் நினைவுகூர்ந்தார்.


இறுதியில் ஆசிரியர் ஜனாப் ஏ.எஸ். அப்துல்லாஹ்வின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

-Jesslya Jessly

No comments:

Post a Comment