Sunday, May 24, 2015

ஜனநாயகம் : ஒரு மாபெரும் கேலிக்கூத்து



கீழே வரும் உண்மைக்கதையோடு தமிழக (முன்னாள்) முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் 18 ஆண்டு கால வழக்கினையும் அவருடைய கைது மற்றும் தற்போது இடம்பெற்றுள்ள விடுதலை நாடகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஜனநாயகம் என்பது எத்தனை பெரிய கேலிக்கூத்து என்பது புரியும்





மிழ்நாட்டில் ஒரு 6-7 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு!

ஒரு அரசு ஊழியர் (ஊர் பெயர், துறையின் பெயர் நினைவில்லை) ஒரு தடவை லஞ்சம் வாங்கி பிடிபட்டார். அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. விசாரித்த கீழ் நீதிமன்றம் அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.
அந்த ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அவர் லஞ்சமாக பெற்ற தொகை வெறும் 1,500 ரூபாய் தான். அவர் நீதிமன்றத்திடம் மன்றாடினார். ‘ஒரு சிறிய தொகைக்கு ஏன் இவ்வளவு கடுமையான தண்டனை? சஸ்பெண்டு செய்திருக்கலாமே!’ என்று கெஞ்சிப்பார்த்தார். நீதிபதி சொன்னது என்ன தெரியுமா?

“தொகை சிறியதோ பெரியதோ… அதை வாங்கவேண்டும் என்ற எண்ணம் ஒரு அரசு ஊழியருக்கு தோன்றியது தவறு! உங்கள் கடமையிலிருந்து நீங்கள் தவறி விட்டீர்கள். அதற்காகவே இந்த தண்டனை!”

அதன் பிறகு அவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் முறையீடு செய்தார். மேல் முறையீட்டில் எப்படியோ குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் படாத பாடுபட்டு, தன் சேமிப்பை எல்லாம் இழந்துவிட்டார். அப்போது அவர் ஓய்வு பெற ஒருசில வருடங்களே இருந்தன.

நீதிமன்றம் அவரை விடுவித்த பிறகு, அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்குள் அவரது வேலையை எவன் பிடித்தானோ தெரியவில்லை. அவருக்கு வேலையை மீண்டும் கொடுக்காமல் அலைக்கழித்தது நிர்வாகம்.

ஒரு கட்டத்துக்கு மேல், அவர் சோர்ந்து விட்டார். அவரது நண்பர்கள் சிலர், ‘நீங்கள் நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுங்கள்! நியாயமாக அவர்கள் உங்களுக்கு வேலை கொடுக்கவேண்டும்!’ என்று யோசனை சொன்னார்கள்.

“இனியும் வழக்கு போட்டு அலைவதற்கு என் மனசிலும் உடம்பிலும் தெம்பு இல்லை… வழக்கு செலவுக்கு என்னிடம் பணமும் இல்லை” என்று சொல்லிவிட்டார் அந்த ஊழியர்.

கடைசிவரை அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. வேலையில் இருந்தபோது லஞ்சப்புகாரில் கைதானதால், பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கவேண்டிய பலன்கள் எதுவும் சுத்தமாக வரவே இல்லை. இப்போது கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறார் அவர்.

சாமானியர்கள் எந்தவகையிலும் தப்பிவிட முடியாத இதே சட்டத்தில்தான், பணக்கார பெருச்சாளிகள் நுழைந்து வெளியே வர எண்ணற்ற ஓட்டைகளும் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் இந்த ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ள முடிகிறது. மற்றவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.

-Jesslya Jessly


No comments:

Post a Comment