அன்புள்ள நண்பர்களே!
பத்து கட்டளைகள் (Ten commandments) என்றதும் உங்களுக்கெல்லாம் நினவுக்கு வருவது பொதுவாக 4 மணித்தியாலம் ஓடும் ஓர் ஆங்கிலப்படம்தானே?
உங்களுக்கு எப்படியோ எனக்கு அதை மறக்கவே முடியாது. அதற்கு காரணம் படமல்ல. படம் பார்க்கச் சென்ற விதம்தான்.
பாடசாலை காலத்தில், நான் படித்த கிறிஸ்தவ பாடசாலையினால் மாணவிகளாகிய எங்களை கண்டி நகரில் இருக்கும் ஒரு திரையரங்கிற்கு அழைத்துச்சென்று காண்பித்தார்கள். எங்கள் கல்லூரியிலிருந்து ஏறத்தாழ குறைந்தது ஒரு கிலோமீற்றராவது இருக்கும் திரையரங்குக்கு எல்லோரையும் வரிசையாக கால்நடையாகவே கூட்டிச்சென்றார்கள் , எங்களுடைய கன்னியாஸ்திரீகள்.
சினிமா அரங்கை அடையும்போதே களைத்துப் போன எங்களை இருளும் குளிருமான திரையரங்கிற்குள் இருத்தியதும் வந்ததே ஒரு தூக்கம். அதுபோல இன்றுவரை பகலிலே நான் தூங்கியதில்லை. படம் பார்த்ததை விட நாங்கள் தூங்கியதுதான் அதிகம். அந்த புகழ்பெற்ற கடல் பிரியும் தந்திரக்காட்சியை மட்டும் யாரோ எழுப்பிக் காண்பித்தது லேசாக ஞாபகமிருக்கின்றது.
படம் முடிந்ததும் எல்லோரையும் தட்டி எழுப்பி மீண்டும் பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்குள் எங்கள் கன்னியாஸ்திரீகளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.
அது மோஸஸுசுக்கு 'கடவுள் ' பணித்த கட்டளைகள். கீழே நான் தரப்போவது எழுத்தாளர்களுக்கு லூயிஸ் ஜாரா என்பவர் தரும் 10 கட்டளைகள் :
-Jesslya Jessly
1. பணப்பெட்டியில் ஒரு காதை வைத்தபடி எழுதாதே. காசு குலுங்கும் சத்தம் உன் எழுத்தின் சந்தத்தை மறைத்துவிடும்.
2. உன் வாசகனை வெறுக்காதே. சிலவேளை அவனே உனக்கு வழிகாட்டக்கூடும்.
3. உனக்கே புரியாத வார்த்தைகளால் வாசகனைக் குழப்பாதே.
4. மற்றவனின் வெற்றியை நீ ஆசைப்படாதே.
5. உன்னுடைய மொழிக்கு மரியாதை செய்து உண்மையாக எழுது.
6. புகழை நீ துரத்தாதே. அது உன்னைத் தேடி வரட்டும். பேராசை இல்லாதவர்களை புகழ் மெதுவாகத்தான் தேடிவரும். ஆனால் வந்த பின்பு நெடுநாள் உடன் வசிக்கும்.
7. எழுத்துலக முன்னோடிகளை இழிவுபடுத்தாதே. அதேசமயம் அவர்களை கண்மூடித்தனமாகவும் புகழாதே.
8. இலக்கியத்தைக் காப்பாற்ற வந்த அவதார புருஷனாக உன்னை நீயே ஒருபோதும் நினைத்துக்கொள்ளாதே. ஏனெனில் உலகெங்கும் பரந்துள்ள திறமையின் விதைகள் கோடிக்கணக்கில் மலர்ந்து காளான்களைக் காட்டிக்கொடுத்து விடும்.
9. உன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கையைப் புறக்கணிக்காதே. அதில்தான் உன் எழுத்தின் ஊற்று உள்ளது.
10. ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழுது. அதன் தரத்திலிருந்து உன்னை மக்கள் அறிந்த கொள்வார்கள்.
-லூயிஸ் ஜாரா
 

 
No comments:
Post a Comment