மழையென்றாலும் குடையைப்பிடி
வெயிலென்றாலும் குடையைப்பிடி
வயிற்றுப்பசிக்கும் குடையைப்பிடி
உயிர்ப்பயமெனினும் குடையைப்பிடி
மழையிலும் வெயிலிலும் நான் வாடாது
குடையைப்பிடிடா குடையைப்பிடி
சூரியன் சற்றே சாயுங்காலம்
சாரலைச்சாய்க்கும் காற்றின்போதும்
சற்றே என்சுகம் உனக்கும் கிட்டும்
குடையைப்பிடிடா குடையைப்பிடி...
நீ குடையேந்தவும் என்னை நிழலிலும்
இருக்கப் படைத்தது இறைவன் செயல்
இதை மாற்றலாகுமோ? குடையைப்பிடி
நான் சாத்திரம் கற்றவன் சமத்துவமும்தான்
குடையைப்பிடிடா! குடையைப்பிடி
சிந்தையில் செயலில் நூதனம் கூட்டுவேன்
சனாதனச் சங்கிலி நய்யப்பாடுவேன்
நேற்றின் அநீதி மாற்றிக்காட்டுவேன்
குடையைப்பிடிடா! குடையைப்பிடி
நெற்றியில் குறியும் பெயரில் சாதியும்
உனக்காய் துறந்தேன் ஒன்றாய்க்கலந்தேன்
நிழல்பட்டாலே பாவம் என்றவன் சரிசமமாக நடத்துகிறேன் உனை.
என் தலைக்குப் பின்னால் சூரியன்
ஒளிர்கையில்
குடைபிடிக்கும் உன்நிழலும் எனதும்
கூடி நடக்குதே அதுவே சான்று
எம்மதமும் எம் சம்மதத்தடனே என்று இப்புண்ணிய பூமியில் வாழ்ந்திடவென்றும்
யாதும் ஓர்குலம் ஒன்றே இறைஎன
இடித்துரைத்ததை ஏற்றுக்கொண்டதும்
அத்தேவனை அனைவரும் தொழுதிடும்
வண்ணம்
ஐந்து வருடத்தில் ஒருமுறையேனும்
அது யாமெனக்காட்டும் உரிமையை
உனக்குக் கொடுத்ததும் யானே குடையைப்பிடி!
அநீதிகள் யாவும் வெயிலைப்போலே
மெதுவாய்ச்சாயும் குடையைப்பிடி
அற்பன் உனக்கு பவுசே நான்தான்!
அர்த்த ராத்திரியும் குடையைப்பிடி
இரவில் மழைவரும் நாளை வெயிலிலும்
குடையைப்பிடிடா! குடையைப்பிடி
-கமல்ஹாஸன்
Thanks: Maiyam
No comments:
Post a Comment