Sunday, March 31, 2013

இலங்கையும் வெறுப்பு அரசியலும்

 
 
Courtesy : The Hindu, Sept 6, 2012
 
 
லங்கையில் இருந்து சில பறவைகள் பறந்து வருகின்றன. தமிழகத்தின் வான்பரப்பில் நுழையும்போது கீழிருந்து கற்கள் பறந்து வருகின்றன. ஒரு பறவை சொல்கிறது. 'இதற்குத்தான் தமிழ்நாட்டின்மீது பறக்கவேண்டாம் என்று சொன்னேன்!'  The Hindu வெளியிட்டுள்ள  கார்ட்டூன் இது. இலங்கையில் இருந்து வந்திருந்த கால்பந்தாட்ட வீரர்களைத் தமிழக முதல்வர் திருப்பியனுப்பியதையும் திருச்சி விமானநிலையத்தில் வந்திறங்கிய இலங்கை ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள்மீது நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலையும் கண்டிக்கும் விதத்தில் இந்தக் கார்ட்டூன் அமைந்துள்ளது.

கார்டூனின் மையக்கருத்தோடு முரண்படுவதற்கு எதுவுமில்லை. இலங்கை அரசின் மீதான கோபத்தை இலங்கை விளையாட்டு வீரர்கள்மீதும் சுற்றுலாப் பயணிகள்மீதும் வெளிப்படுத்தியது நிச்சயம் தவறுதான். 'இன்று பள்ளிக்கூட கால்பந்து அணியினரைத் திருப்பியனுப்பினார்கள். நாளை கிரிக்கெட் வீரர்களைத் தடை செய்யச் சொல்வார்கள். இலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் ஆன்மிகக் பயணிகளும் வரக்கூடாது என்று தடை செய்யக் கோருவார்கள். இது ஆபத்தான விளையாட்டு!' என்னும் The Hindu  எடிட்டோரியலின் கவலையும்கூட நியாயமானதுதான்.

இந்த இரு சம்பவங்களில் முதலாவது தமிழக அரசின் செயல்பாட்டால் நிகழ்ந்தது. மற்றொன்று தமிழகக் கட்சிகளின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டது. இரண்டுக்கும் உள்ளிருப்பது வெறுப்பு அரசியல்.  'இலங்கைத் தமிழர்கள்பால் இந்த அரசு மிகுந்த அக்கறையோடு இருப்பதைப் போல தீவிரமாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பிய காரணத்தால், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலாவாகவும், கோவில்களுக்காகவும் வந்த இலங்கை பயணிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன' என்கிறார் கலைஞர்அரசியல் ரீதியான கோரிக்கைகளைக்கூட இனவாத உணர்ச்சி பரபரப்பு அரசியலில் மூழ்கடித்து விடுவது திராவிட இயக்க கட்சிகளின் மரபு.' என்கிறது வினவு, 'சிங்கள இனவெறி அரசை எதிர்க்க முடியாதவர்கள் இறுதியில் ஆன்மிக யாத்திரை வந்த சிங்கள மக்களை துரத்தியிருக்கிறார்கள்.'

உண்மையில், மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் திறன் வெறுப்பு அரசியலுக்கு இருக்கிறது. ஹிட்லர் வளர்த்தெடுத்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்தது. வெறுப்பு அரசியலுக்குப் பலியான அதே யூதர்கள் இன்னொரு வெறுப்பு அரசியல் சித்தாந்தத்தை வளர்த்தெடுத்து பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்களைக் கொன்றொழித்தார்கள். அமெரிக்காவின் தவறுகளுக்காக அமெரிக்கர்கள் செப்டெம்பர் 11, 2001 அன்று தண்டிக்கப்பட்டார்கள். ஆதிக்க இந்து சாதியினராலும் தலைமையினாலும் வளர்த்தெடுக்கப்பட்ட தீவிர வெறுப்பு அரசியலின் விளைவே குஜராத் 2002 கலவரம். அசாம் கலவரமும்கூட இந்த வகையில்தான் அடங்கும்.

பலரும் நினைப்பது போல் இந்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் அரசியல் தலைமையால் மட்டுமே தனியோரிடத்தில் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுவதில்லை. நம்மில் பலரும்கூட இதற்கு இரையாகிறோம். பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் வட மாநிலத்தவரைச் சந்திக்கும்போது, நம்மையறியாமல் முகம் சுளிக்கும்போது வெறுப்பு அரசியல் நம்மைப் பற்றிக்கொள்கிறது. என் இடத்தில் நீ என்ன செய்கிறாய்? பேருந்தில் எனக்கான இடத்தில் நீ ஏன் அமர்ந்திருக்கிறாய்? எனக்கான வாய்ப்புகளை நாளை நீ தட்டிப்பறித்துவிடுவாயோ? பால் தாக்கரே, ராஜ் தாக்கரே குழு மகாராஷ்டிராவில் இப்படிப்பட்ட விரோத உணர்வுகளைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானியப் பாடகர்களோடு இணைந்து ஆஷா போஸ்லே பாடக்கூடாது என்று சமீபத்தில் 
ராஜ் தாக்கரே உத்தரவு போட்டிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அரசு இயந்திரம் சிங்களர்கள் மத்தியில் வெற்றிகரமாக விதைத்த வெறுப்பு அரசியல் உணர்வுதான் முள்ளிவாய்க்காலைத் தோற்றுவித்தது. ஓர் அரசு இரு வகைகளில் இதனை செய்கிறது. 1) ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பரவியிருக்கும் அதிருப்தியை பிரயத்தனப்பட்டு ஊதிப் பெரிதாக்கி வளர்த்துவிடுவதன் மூலம், ஒரு குழுவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி மோதவிடுகிறது. 2) இயல்பிலேயே மக்களிடையே ஒரு சாராருக்கு எதிராக மூண்டெழும் வெறுப்புணர்வை, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதன்மூலம், வன்முறையை வளர்த்தெடுக்கிறது. ஆட்சியில் உள்ள அரசுக்கும் சரி, ஆட்சியைப் பிடிக்க விரும்பும் கட்சிகளுக்கும்சரி, இந்த இரண்டுமே லாபமளிக்கக்கூடியதுதான். காலப்போக்கில், எது இயல்பான வெறுப்புணர்வு, எது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வு என்று பிரித்து பார்க்கமுடியாதபடி சிக்கல்கள் பெரிதாகிவிடுகின்றன. உதாரணத்துக்கு, ஜெர்மானியர்களிடையே யூத எதிர்ப்புணர்வு வளர்ந்திருந்தது உண்மை. ஹிட்லர் அந்த உணர்வை வளர்த்தெடுத்து ஓர் அரசியல் சித்தாந்தமாக வளர்த்தெடுத்ததும் உண்மை. இரண்டும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டபோது விபரீதமான விளைவுகள் ஏற்பட்டன.

வெறுப்பு அரசியலை வளர்ப்பதும் ஆதரிப்பதும் மிகவும் எளிது.  உறுதியான, உடனடியான பலன்கள் சர்வநிச்சயம். எனவே, உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் இப்பணியைத் தொடர்நது செய்துவருகின்றன. பகுத்தாய்ந்து சிந்திக்கத் தெரியாத மக்கள் தொடர்ந்து இதற்குப் பலியாகின்றனர்.

மேலே குறிப்பிட்ட இரு சம்பவங்களின் பின்னணியில் இன்னொரு உண்மையும் ஒளிந்திருக்கிறது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழக அரசாலும் தமிழகக் கட்சிகளாலும் எதுவும் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டினால் அரசியல் பிழைப்பு பாதிக்கப்படும். ஒரே மாற்று, வெறுப்பு அரசியலும் குளிர் காய்தலும் மட்டுமே.

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத் தருவேன் என்று தேர்தல் பிரசாரங்களின் போது வாக்களித்திருந்தாலும், அது சாத்தியமில்லை என்பது முதல்வருக்குத் தெரியும். எனவேதான், சாத்தியமானதும் எளிதானதுமான ஒரு காரியத்தை அவர் செய்தார். ஈழத்தை முன்வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும் பிற கட்சிகளும் குழுவினரும்கூட கோஷம் எழுப்பியும் கல் வீசியும் தங்களால் இயன்ற அளவுக்கு வெறுப்பை விதைத்து முடிந்தவரை ஆதாயம் அடைந்துகொண்டார்கள். இப்போதைக்கு அதிகபட்சம் இதுதான் சாத்தியம்.

முழு விழிப்புடனும் சுயநினைவுடனும் இருக்கவேண்டிய அவசியம் நமக்குத்தான் இருக்கிறது. இயல்பான நம்முள்ளே எழுந்தாலும் சரி, செயற்கையாக வெளியில் இருந்து தூண்டிவிடப்பட்டாலும் சரி, ஆபத்தான வெறுப்பு அரசியல் வளையத்துக்குள் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இதிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழி, வரலாற்றை ஆழமாகவும் அகலமாகவும் கற்பதும், கற்றதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் மட்டும்தான்.

தி இந்து கார்ட்டூனுக்கு வருவோம். தமிழர்களின் கல்வீசும் செயல்பாட்டைக் கண்டித்து தலையங்கமும் கார்ட்டூனும் செய்திக்கட்டுரைகளும் தீட்டிய தி இந்து, இதே உக்கிரத்துடன், இதே தார்மிகக் கோபத்துடன் இலங்கையை என்றேனும் கண்டித்திருக்கிறதா? இல்லை எனில், இதுவும்கூட ஒருவகை வெறுப்பு அரசியல்தான் அல்லவா?
 
 
இந்தக் கட்டுரை சிலருக்குக் கோபத்தையும் வேறு சிலருக்குக் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
 
இன்றுகூட ஒரு நண்பர் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
 
//இலங்கைக் கால்பந்தாட்டக்காரர்களைத் தமிழக அரசு சட்டப்படி வெளியேற்றியது, புத்த பிட்சுக்களின் மீது சில தனிமனிதர்கள் தாக்குதல் நடத்தினர், இரண்டையும் இணைத்து மோசடி செய்கிறது இந்து தலையங்கம், ஓர் இனப்படுகொலை செய்த நாட்டின் விளையாட்டாளர்களை வெளியேற்றுவது என்பது எப்படி இனவாதமாகும்? இந்தக் கவலை நியாயமானது என்று நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் மருதன்? //
 
 
 
விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பியது ஓர் அரசின் செயல்பாடு. புத்த பிட்சுக்களின்மீது தாக்குதல் நடத்திய சில தனிமனிதர்களின் செயல்பாடு. ஒரு நாட்டு அரசின் செயல்பாடும் அந்நாட்டு மக்கள் சிலரின் செயல்பாடும் ஒன்றா என்பதுதான் கேள்வி. நிச்சயம் வெவ்வேறுதான். அதே சமயம் இரண்டுமே ஆபத்தானவை என்பதால் இரண்டும் சேர்த்தேதான் எதிர்க்கப்படவேண்டும்.
சிங்கள இனவாத அரசு, தமிழர்களை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தக்காக ஒடுக்குவது நியாயமல்ல என்றால் சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தமிழக அரசு ஒடுக்குவதும் நியாயமற்றதுதான்.
 
 
ஆனால், நம்மில் பலரால் சிங்களர்களின் செயல்பாடுகளையும் தமிழகத்தின்
செயல்பாடுகளையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பார்க்கமுடியவில்லை. அதற்கு மனம் ஒப்பவில்லை. பல கேள்விகள் அலைமோதுகின்றன. பல்லாயிரம் பேரைக் கொன்றவர்களும் கல்லெறிபவர்களும் ஒன்றா? இருவருக்கும் ஒரே நீதியா? இருவருடைய குற்றங்களையும் ஒன்றுபோல் பாவித்து தீர்ப்பு எழுதுவது சாத்தியமா? படுகொலை செய்பவர்கள்மீது ஆத்திரப்பட்டு சிறு கல் வீசினால் அது கொடுஞ்செயல் ஆகிவிடுமா?
இந்தக் கேள்விகளுக்கு விடை தேடவேண்டுமானல், இவற்றோடு சேர்த்து இன்னும் இரு  கேள்விகளை நாம் எழுப்பவேண்டும்.
 
  • ஒரு நாட்டின் அரசையும் அதன் மக்களையும் ஒன்றுபோல் பாவிக்கவேண்டுமா?
 
  • ஒரு நாட்டின் செயல்பாடுகளுக்கு அந்நாட்டு மக்களும் பொறுப்பேற்கவேண்டுமா?


எனில், அமெரிக்க அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் ஒருவர், அமெரிக்கர்கள் அனைவரையும் எதிர்த்தாகவேண்டுமா? சோவியத் ரஷ்யாவை அல்லது செஞ்சீனத்தை ஏற்கும் ஒருவர் ஒவ்வொரு ரஷ்யரையும் ஒவ்வொரு சீனரையும் அரவணைக்கவேண்டுமா?
 
 
ஒருவருடைய அடையாளம் என்பது என்ன என்னும் ஆதாரமான கேள்வி இங்கே எழுகிறது. The Argumentative Indian புத்தகத்தில் அமர்த்தியா சென் இதுபற்றி விவாதிக்கிறார். ஒருவர் பட்டம் பெற்றவராக இருக்கிறார். அவர் ஒரு வங்கியில் பணிபுரிகிறார்.
 
 
அவருக்கு கால்பந்து பிடிக்கும். அவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் பார்வை இருக்கிறது. அவர் மாலை நேரங்களில் தன் வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்கிறார். அவர் ஒரு கணவர். தன் மகனுக்குத் தகப்பன். அவர் கற்றறிந்தவர். அவர் ஒரு இந்தியர். அவர் ஒரு முஸ்லிம். இதில் எது அவருடைய அடையாளம்? எந்த அம்சத்தை அல்லது அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்மீதான மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது? எந்த அடையாளத்தைக் கொண்டு அவர் ஏற்கப்படுகிறார் அல்லது நிராகரிக்கப்படுகிறார்? அவரைப் பற்றி நாம் உருவாக்கிக்கொள்ளும் பிம்பம் எத்தகையது? இது மிகவும் முக்கியமானதொரு கேள்வி. காரணம், இந்தப் பிம்பத்தை வைத்துதான் நாம் அவரை எதிர்கொள்கிறோம்.
 
 
இலங்கை அதிபரை ஒரு  ஃபாசிஸ்டாக அன்றி வேறெப்படியும் நம்மால் கற்பனை செய்யமுடியாததற்குக் காரணம் அவருடைய பிற குணாதிசயங்களைக் காட்டிலும் அவருடைய ஃபாசிச குணம் மேலெழும்பியிருப்பதுதான். அந்தக் குணமே அவரது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைக்கிறது.
ஒரு ஃபாசிஸ்ட் என்னும் அடிப்படையில் இலங்கை அதிபர் எதிர்க்கப்படவேண்டியவர். ஒரு போர்க்குற்றவாளி, கிரிமினல் என்னும் அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டியவர். அவருடைய  அரசியல் நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று. முறியடிக்கப்படவேண்டிய ஒன்றும்கூட. மஹிந்த ராஜபக்ஷேவின் அடையாளம் இதுவே. அவர் ஒரு சிங்களராகவும் இருக்கிறார். அவ்வளவுதான்.
 
 
இதே ரீதியில், இலங்கை அதிபர் அரசை ஒரு ஃபாசிஸ்ட் அரசு என்னும் முறையில் எதிர்க்கவேண்டும். இலங்கை அதிபர்க்குத் துணை நிற்கும் அவருடைய அரசையும் ராணுவத்தையும் எதிர்க்கவேண்டும். அதே வரிசையில், சிங்களப் பேரினவாதம் எதிர்க்கப்படவேண்டியது. ஆனால் சிங்களர்கள் அனைவரும் எதிர்க்கப்படவேண்டியவர்களா?
அமெரிக்க எதிர்ப்பு என்பது அனைத்து அமெரிக்கர்களையும் எதிர்ப்பது என்று நாம் அர்த்தப்படுத்திக்கொண்டால், நோம் சாம்ஸ்கி, ஹோவர்ட் ஜின், பாப் உட்வர்ட்உள்ளிட்ட அமெரிக்க விமரிசகர்களையும் சேர்த்தேதான் நாம் எதிர்க்கவேண்டியிருக்கும்.
 
 
சிங்கள அரசைக் கடுமையாகச் சாடி பலியான லசிந்த விக்கிரமதுங்கவை ஒரு சிங்களர் என்பதற்காக நாம் எதிர்க்கவேண்டுமா என்ன?
எதிர்க்கவேண்டியது சிங்கள இனவாத அரசைத்தான்; சிங்களர்களை அல்ல. இந்த உண்மை தெரிந்தேதான் இங்குள்ள அரசியல் கட்சிகளும் சில இயக்கங்களும் வெறுப்பு அரசியலை மக்களிடையே பரப்பிவிடுகின்றன. அவற்றுக்கு நாம் இரையாகக்கூடாது.
 
 
sl_1401580f
 
 
ஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மை இனம் அதன் சிறுபான்மை இன மக்களை எப்படி நடத்துகிறது என்பதைத் தொடர்ச்சியாக கவனித்து, ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவேண்டியது அந்நாட்டு மக்களின் தார்மிகக் கடமையாகும். இந்த அளவுகோலின் அடிப்படையில்தான் இலங்கைப் பிரச்னையை நாம் கவனிக்கவேண்டும். அங்கே ஒருவேளை சிங்களர்கள் சிறுபான்மையினராக இருந்து, பெரும்பான்மை தமிழர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டால், அப்போது நாம் சிங்களர்களுக்கு ஆதரவாகத்தான் குரல் கொடுக்கவேண்டும். நம் இனம், நம் மொழி, தொப்புள்கொடி உறவு போன்ற பதங்களை அப்போது பயன்படுத்தமுடியாது என்றபோதிலும்.
‘சிங்களர்கள்’ என்னும் அடையாளத்தை இப்போது மூன்றாகப் பிரிக்கலாம்.
  • இலங்கை அரசின் இனவாதக் கொள்கையை ஏற்பவர்கள் / அவற்றால் பலனடைபவர்கள்.
 
 
  • இலங்கை அரசின் இனவாதக் கொள்கைகளை ஏற்காதவர்கள் / அவற்றை எதிர்ப்பவர்கள்.
 
  • அரசியல் பார்வை ஏதுமற்றவர்கள்.


சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான நம்  போராட்டத்தில் இரண்டாவது பிரிவினரை நாம் ஒன்றிணைத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றாவது பிரிவினரை வென்றெடுக்கவேண்டும்.
முதல் பிரிவினர் எதிர்க்கப்படவேண்டியவர்கள்.
எப்படிப் பார்த்தாலும், சிங்களர்களோடு உரையாடாமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல், அவர்களோடு முரண்படாமல் இலங்கைத் தமிழர் போராட்டத்தை முன்னெடுக்கமுடியாது. சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்னும் ஒரே காரணத்துக்காக ஒதுக்குவது பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும்.


சிங்கள அரசின்மீதான கோபத்தை சிங்களர்கள்மீது செலுத்துவதும் அதற்குத் துணை போவதும் சிங்கள அரசுக்கு சாதகமான செயல்பாடாகத்தான் இருக்கும். அரசியல் பார்வை ஏதுமற்ற சிங்களர்களும்கூட தங்கள் அரசோடு வேறுவழியின்றி ஒன்றிப்போகும் அபாயமும் ஏற்படும்.
ஆட்சியாளர்களைப் போலன்றி, பாட்டாளி வர்க்கம் சர்வதேசத்தன்மை கொண்டிருக்கவேண்டியது அவசியம். மாணவர்கள் போராட்டமாக இருந்தாலும் சரி, மக்கள் போராட்டமாக இருந்தாலும் சரி. பாதிக்கப்பட்ட சிங்களர்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்து அவர்களையும் ஒன்றிணைத்து போராடுவதன்மூலம் மட்டுமே ஒடுக்கப்படும் தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரமுடியும்.

-Maruthan
 
Thanks : Tamilpapaer.com

No comments:

Post a Comment