Sunday, March 31, 2013

அரை உண்மைகளின் அபாயம்images (3)
 
 
 
யோலா கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இந்த போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவித்துவருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப் போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு.
 
 
 
இந்தப் போராட்டத்தின் சில கோரிக்கைகள்: இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்படவேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.
 
 
 
இந்தத் ‘தன்னெழுச்சியான’ கோரிக்கைகள் மாணவர்களுடையதுதான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக சில மாணவத்தனமான கோரிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. மற்றபடி இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கை செய்தது இனப்படுகொலை. இந்தியாவும் அதற்கு முழு உடந்தை. இந்த இரண்டு விஷயங்களைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதுமட்டுமே.
 
 
 
மிகவும் உணர்வுபூர்வமான இந்தப் பிரச்னையில் தமிழகத்தில் இப்போது ஒருவித பாசிச மாற்று அமைப்பு கட்டமைக்கப்பட்டுவருகிறது. இலங்கைப் பிரச்னையில் தனி ஈழத்துக்குக் குறைவாக யார் பேசினாலும் அவர்கள் தமிழினத் துரோகியே என்ற நிலையை மெள்ள உருவாக்கிவருகிறார்கள். இலங்கை அரசு மிக மோசமான குற்றங்களை இழைத்திருப்பது உண்மையே. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒருவர் வேறு சில விஷயங்களையும் கட்டாயம் பேசியாக வேண்டும்.
 
 
 
இலங்கை ஈழப் பிரச்னை என்பது நீண்ட நெடும் வரலாறைக் கொண்டது. பல்வேறு ஊடுபாவுகள் கொண்டது. ஈடுபட்ட அனைத்து தரப்புகளின் கைகளிலும் ரத்தக் கறை உண்டு. ஆனால், அவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒற்றை குற்றவாளி (சிங்கள-இந்திய கூட்டணி) மட்டும் கட்டம் கட்டப்படுவதற்கான சர்வதேச அரசியல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செயல்பட்டுவந்த காலகட்டத்தில் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவு அளித்துவந்த அமெரிக்க அரசு இன்று யோக்கியன் போல் நீதிபீடத்தில் ஏறி அமர்ந்து இலங்கையைக் குற்றம்சாட்டுகிறது. அதோடு நின்றுவிடாமல் இந்திய அரசையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தந்திரத்தையும் சர்வதேச அரசியல் சக்திகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
 
 
 
இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக மோசமாக இந்தச் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இது தொடர்பான முழுச் சித்திரமும் கிடைக்கவேண்டுமென்றால், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கவேண்டும். பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷாகப் பிரித்து மிகப் பெரிய சாதனையைச் செய்திருந்தார் இந்திராகாந்தி. இந்திய ராணுவத்தினரை தெய்வமாகத் தொழும் பங்களாதேஷிகள் இன்றும் உண்டு (அந்தப் போரில் அப்படி ஒரு ரட்சகனாக இருந்த இந்திய ராணுவம் இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது… இதற்கு யார் காரணம் என்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை).
 
 
 
கிழக்கு பாகிஸ்தானைத் தனி நாடாகப் பிரித்துவிட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் பஞ்சாபை இந்தியாவில் இருந்து பிரிக்கவேண்டும் என்ற பெயரில் தீவிரவாத சக்திகள் தூண்டிவிடப்பட்டன. அதை அடக்க இந்திரா எடுத்த முயற்சிகள் அவருடைய உயிருக்கு உலை வைத்தன. அதோடு பஞ்சாப் பிரச்னையும் மெள்ள முடிவுக்குவந்தது (மிஷன் ஆல்ரெடி அக்கம்ப்ளிஸ்ட்). ஏற்கெனவே, மூத்த இளவரசர் சஞ்சய் காந்தி ‘விமான விபத்தில்’ கொல்லப்பட்டிருந்தார். அடுத்ததாக, ஆட்சிக்கு வந்த இளைய இளவரசர் ராஜீவ் காந்தி தன் அன்னையின் வழியில் இலங்கை விஷயத்தில் ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு சர்வதேச அளவில் புகழ் பெற வழிநடத்தப்பட்டார்.
 
 
 
கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்திய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்ததால் தனிநாடாக உருவாக்குவது எளிதான செயலாக இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்; அவர்களுக்கு மாநில சுய ஆட்சி பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் நியாயமான நோக்கம். எனவே, ராஜீவ்காந்தி அந்த உடன்பாட்டுக்கு ஆத்மார்த்தமாக முயன்றார். இலங்கையின் வேண்டுகோளின் பேரில் அமைதிப்படை என இந்திய ராணுவத்தை அங்கு அனுப்பினார். தனி ஈழம் என்பது மிகவும் நியாயமற்ற கோரிக்கை என்பதுதான் இந்தியாவின் கொள்கை. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளின் தீர்மானமும் அதுவே.
 
 
 
ஆனால், இலங்கை இந்த இடத்தில் தன் நரித்தனத்தை காட்டியது. இந்தியாவை இந்த போரில் சிக்க வைக்க வேண்டும் என்ற சர்வதேச தந்திரத்தின் அங்கமாக அது இந்திய அமைதிப் படையை தன் நாட்டுக்குள் முதலில் அனுமதித்தது. ஆனால், அடுத்தகட்டமாக தன்னுடைய இறையாண்மைக்கு இழுக்காகிவிட்டது என்ற போர்வையில் இந்திய ராணுவத்தைத் துரத்தி அடிக்கத் தீர்மானித்தது. தாற்காலிக உடன்பாடாக விடுதலைப் புலிகளுடன் நட்புறவு கொண்டு, இந்திய ராணுவம் செய்தவற்றை விட மிக அதிகமான குற்றச்சாட்டுகளை அதன் மீது சுமத்தி அதை அங்கிருந்து அகற்றினார்கள். அடுத்த தேர்தலில் ராஜீவ் வென்றுவிடுவார் என்ற நிலை ஏற்பட்டபோது, மீண்டும் இந்திய அமைதிப் படையை அனுப்பிவிடுவாரோ என்ற பயத்தில், விடுதலைப் புலிகள் ராஜீவையும் அப்பாவிக் காவலர்களையும் இந்திய மண்ணில் கொன்றார்கள். அதுவரை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்த தமிழக மாநிலக் கட்சிகளும் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிர்நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 
 
 
மூன்று ‘எதிர்பாராத’ மரணங்களைத் தொடர்ந்து அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி நின்ற சோனியாவின் மீது ‘விதிவசமாக’ ஆட்சிப் பொறுப்பு திணிக்கப்பட்டது. (முன்னாள்) இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் தமிழகத்தில் பிரிவினை சக்திகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு விமான, கடல் சார்ந்த படைகளின் உதவியைத் தந்தது. முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை ஒழிக்கத் தந்த இந்த உதவியானது இலங்கையில் நடந்த இன்ன பிற வன்முறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இன்று இந்தியாவும் போர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை இந்தியா மீதும்கூட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம். ஏற்கெனவே ஆரிய திராவிட கதைகள் வேறு இங்கு வலுவாக வேருன்றித்தான் இருக்கின்றன.
 
 
 
இந்தியா நிச்சயமாக இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவே செய்யாது. அது முடியவும் செய்யாது. இலங்கை அரசு உள்நாட்டில் கலகம் விளைவித்தவர்களை அடக்கியிருக்கிறது… அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது என்பது போன்ற வெளிப்படையான காரணங்களில் ஆரம்பித்து, ராஜிவ் கொல்லப்பட்டபோது அருகில் எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லாமல் போனது எப்படி? சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய வீடியோ எப்படி மாயமாக மறைந்தது என்ற விடைதெரியாத கேள்விகள் வரை பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, இந்தியா கடைசிவரை இலங்கைக்கு சாதகமாகவே நடந்துகொள்ளும். சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மனங்களிலும் இந்தியா மீதான மதிப்பு மேலும் குறையவே செய்யும்.
இப்படியான சூழலில் லயோலா கல்லூரி மாணவர்கள் ‘தன்னெழுச்சியாக’ போராட்டத்தை மூன்று மிக அபாயகரமான நோக்கங்களைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
 
 
முதலாவதாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. கிழக்குப் பகுதி தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பெரும்பான்மையான தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களே. விடுதலைப் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் மட்டும்தான் இலங்கை ராணுவம் தன் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. கொழும்புவிலும் பிற இலங்கையின் பகுதிகளிலும் ஈழத்தைவிட மிக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் வசித்து வரத்தான் செய்கிறார்கள். இனப்படுகொலை என்றால் அவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், இலங்கை அரசு அவர்களை ஒன்றும் செய்யவில்லை.
 
 
 
இரண்டாவதாக, இந்தப் போரில் விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்து சிறு குறிப்பு கூடக் கிடையாது. பொய்யைவிட அரை உண்மைகள் மிக ஆபத்தானவை. இலங்கை – ஈழப் பிரச்னையில் இலங்கை அரசு எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டதோ அதற்கு சற்றும் குறையாத அட்டூழியங்களை விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்து வந்திருக்கிறது.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் யார் ஆண்டது… அதற்கு முன் யார் ஆண்டது என்பதெல்லாம் ஒருவகையில் நிரூபிக்க முடியாத உண்மைகள். நவீன அரசு எப்போது எந்த ஒப்பந்தத்தின் பேரில் உருவாகிறதோ அதன் அடிப்படையில்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கவேண்டும். சேர சோழ பாண்டியர்களின் போர்களால் நிறைந்ததுதான் தமிழக சரித்திரமும். நாளையே மதுரையை எங்களுக்குப் பிரித்துக்கொடு என்று பாண்டியர்கள் போராடினால் தமிழ் இறையாண்மை அரசு அவர்களை ஒடுக்கத்தான் செய்யும்.
 
 
 
தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள் எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும்.
கேவலம் ஒரு கருத்துக் கணிப்பில் தனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விஷயத்தை வெளியிட்ட அற்ப காரணத்துக்காக மூன்று தமிழ் அப்பாவிகளை உயிருடன் கொளுத்திய சம்பவத்தையும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பேருந்தை எரித்து தமிழ் மாணவிகளைக் கொன்றவர்களையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. இவ்வளவு ஏன், சாதிப் பிரச்னைகளில் கொல்லப்படுபவர்கள் எல்லாருமே அப்பாவித் தமிழர்கள்தானே. சாராயக் கடை திறந்து மெள்ள மெள்ளக் கொல்லப்படுவதும் தமிழர்கள்தானே. சிறு எதிர்ப்புகூட தெரிவிக்காத நிலையிலேயே இந்தப் படுகொலைகள் என்றால் நாட்டைப் பிரித்துக் கொடு என்றால் நம் தமிழ் அரசு நம் தமிழ் மக்களை எப்படி நடத்தும் என்பதை யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த வார்த்தைகளைப் பேசுவது நல்லது. அகதிகளாக இங்கு வந்து ஆண்டுக்கணக்காக துன்பத்தில் தவிப்பவர்களுக்கு இந்த தமிழினத்தலைவர்களும் காவலர்களும் இனமான எழுச்சி நாயகர்களும் செய்து கிழித்தது என்ன என்பதையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.
 
 
 
இத்தனைக்கும் தமிழகத்தில் கூட தாய் மொழிக் கல்வி இருந்திராத நிலையில் ஈழத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே மருத்துவக் கல்லூரி வரை படித்து முடிக்க முடிந்திருந்தது. நீதிக் கட்சி தொடங்கியபோது சொற்ப எண்ணிக்கையிலான பிராமணர்கள் அரசுப் பணிகளில் பெருமளவு இடத்தைப் பிடித்திருந்ததுபோல் இலங்கையில் சிறுபான்மையாக இருந்த தமிழர்கள் (சுமார் 15%)  அரசுப் பணிகளில் 40-50% இடங்களில் இருந்தார்கள். இலங்கை அமைச்சகத்திலும் தமிழர்கள் கணிசமாக இடம்பெற்றிருந்தனர். இவையெல்லாம் 1983-ல் பேரழிவு ஆரம்பிப்பதற்கு முந்தைய நிலை. அப்படியாக தனி நாடு கோருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில்தான் விடுதலைபுலிகள் போராட்டத்தை அதுவும் மிக மூர்க்கமான வன்முறைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
 
 
 
இஸ்லாமியர்களைப் போட்டது போட்டபடி துரத்தியடித்ததில் இருந்து அவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று கண்டந்துண்டமாக வெட்டியும் வெடி குண்டு வைத்தும் கண்மூடித்தனமாகக் கொன்றழித்திருக்கிறார்கள். பாலசந்திரனை விட மிகச் சிறிய குழந்தைகளையெல்லாம் கூட மசூதியில் தொழுது கொண்டிருந்தபோது நேருக்கு நேர் நின்று சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.
 
 
 
இதைவிட தமிழ் இனத்துக்குள்ளேயே பிற போராட்டக் குழுவினரை சரமாரியாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆயுதக் கடத்தலில் ஆரம்பித்து அனைத்துவகையான திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை குறித்து ஒரு வார்த்தைகூட இன்றைய போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.
 
 
 
மூன்றாவதாக, இந்தியாவை இந்தப் போரில் பிரதான குற்றவாளியாக இணைக்கும் பணியை வேகத்துடன் முன்னெடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, வை.கோ. பழ நெடுமாறன், சீமான், மே 17 இயக்கம் போன்றவர்களுக்கு இடப்பட்ட பணியும் இதுவே. ‘தன்னெழுச்சியாகப்’ போராட முன் வந்திருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களும் இதையே முன்வைத்திருக்கிறார்கள். அப்படியாக இலங்கையைச் சீரழித்தது போதாதென்று இந்தியாவையும் அழிக்கும் நோக்கில்தான் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
 
 
 
மிகையான, பாதி உண்மைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரத்த சரித்திரத்தின் இந்த இரண்டாம் பாகம் சரியாக இனங்காணப்பட வேண்டும். ஒரு பெரும் கொடுங்கனவின் தொடக்க நிமிடங்கள் இவை. நாளைய பெரும் வன்முறைக்குத் தோதாக இது போன்ற நடவடிக்கைகளால் நிலம் தயார்படுத்தப்பட்டுவருகிறது. சில நோய்களை வரும் முன்பே தடுத்துவிடவேண்டும். வந்த பிறகு மீட்சிக்கான வழியே கிடையாது.
 
 
 
இலங்கைக் கடற்படையால் தமிழக/இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுபவற்றைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தாலே அரை உண்மை எவ்வளவு அபாயகரமானது என்பது புரிந்துவிடும். தமிழகப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவது, தமிழக மீனவர்கள் வலிமையான மோட்டர் படகுகளைப் பயன்படுத்துவது, இலங்கை மீனவர்களுக்கு அவர்களுடன் போட்டிபோட முடியாத நிலை, தமிழ மீனவர் குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள் கூட இலங்கை அரசின் மீது பழிபோடப்படுதல், அரசியல் உள்நோக்கத்துடன் மிகைப்படுத்திக் கூறப்படும் நிகழ்வுகள், கைது போன்ற இலங்கைக் கடற்படையின் முதல் கட்டத் தொடர் எச்சரிக்கைகள், மாற்று மீன் பிடித் தடங்களை உருவாக்குதல், கடல் பாசிகள் வளர்த்தல் என எதுவுமே பேசப்படாமல் வெறுமனே இலங்கை அரசு தமிழக/இந்திய மீனவர்களைக் கொல்கிறது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டு பிரச்னையை மேலும் பெரிதாக்க மட்டுமே செய்யும்.
 
 
 
பஞ்சாபில் ஆரம்பிக்கப்பட்ட காலிஸ்தான் பிரச்னை இந்திய அரசால் ஓரளவுக்கு ”நல்ல முறை’யில் தீர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் என எல்லையோரப்பகுதிகளில் தீராத வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்போது ஈழத்தையும் உள்ளடக்கிய தனித் தமிழ் நாடு என்ற சாகசப் போர் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
 
 
 
தமிழக, இந்திய அரசும் அதன் அதிகாரவர்க்கமும் இந்தப் பிரச்னையைக் கையாளும் திறமை கொண்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் தரப்புக்கான எண்ணெயை ஊற்றி பிரச்னையைக் கொழுந்துவிட்டெரியவே செய்வார்கள். அல்லது அந்த திசையில் உளவுத்துறையால் வழிநடத்தப்படுவார்கள். மக்களாட்சியில் மக்கள்தான் மன்னர்கள்… அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் அடுத்தகட்ட மன்னர்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், உண்மையில் தேசங்கள் இவர்களால் ஆளப்படுவதில்லை. சர்வதேச வஞ்சக உளவாளிகளால் அது ஆளப்படுகிறது. பிரிவினைவாதிகளுக்கு உணவிடும் அவர்கள்தான் இறையாண்மையைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற பேரில் அரசையும் ஆட்டுவித்துவருகிறார்கள். சதுரங்கத்தின் இரண்டு பக்கமும் அவர்களே அமர்ந்து ஆடும் இந்த ஆட்டத்தில் உருட்டப்படும் காய்கள்தான் நாமும் நம் தலைவர்களும்.
 
 
 
பாரத மாதாவின் முகமூடிக்குப் பின்னால் இன்றிருப்பது சூனியக்காரி. நாம் சூனியக்காரி மீது எறியும் அம்புகள் எல்லாம் கேடயமாகப் பிடிக்கப்பட்டிருக்கும் பாரத மாதாவின் தேகத்தைத்தான் குத்திக் கிழிக்கின்றன. மீட்பு தேடி ஓடும் நம்மை, புதிய அவதாரமெடுத்து அரவணைக்கக் காத்திருப்பதோ தெய்வ வடிவில் இருக்கும் சாத்தான். சூனியக்காரிக்கும் சாத்தானுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நம் பாரத தேசத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கிறது.
 
 
 
 

No comments:

Post a Comment