ஜெனிவாவில் கூட இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். போராட்டத்தின் மூன்றாவது நாள் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்களின் போராட்டமும் கைவிடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை துவக்கினர். அதன் ஒரு பகுதியாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்தனர். சட்டக்கல்லூரிக்கு உள்ளேயே போராட்டத்தை நடத்தினால் பெரிய அளவில் தாக்கம் இருக்காது என்பதால் நகரத்தின் மையத்தில் இடம் தேடினர். இடம் கிடைக்காததால் ம.தி.மு.க. அலுவலகத்தில் அனுமதி பெற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.
மாணவர்கள் எதிர்பார்த்தபடியே ஊடகங்களின், மக்களின் கவனத்தை ஈர்த்தது. சமூக ஆர்வலர்கள் அமைப்புகள் தலைவர்கள் என பலரும் வந்து வாழ்த்தி உற்சாகமூட்டினர். இதே வேளையில் தமிழகம் முழுவதும் அரசு சட்டக்கல்லூரி கலைக்கல்லூரி மாணவர்கள் வீச்சாக போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதை தடுக்க இயலாத தமிழக அரசு அனைத்து அரசு சட்டக்கல்லூரிக்கும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை விட்டது.
விடுமுறை விட்டால் போராட்டம் பிசுபிசுத்துப்போய்விடும் என்று தமிழக அரசு மனப்பால் குடித்த வேளையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர். முதலில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்களும் அவர்களுடன் எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்களும் வந்தனர். இரண்டு கல்லூரி மாணவர்களும் இணைந்து ஒரு பேரணி நடத்தினர் பின் இதில் திருப்தியடையாத மாணவர்கள் வீரியமான போராட்டத்தில் இறங்கும் விதமாக ரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
இதே வேளையில் சட்டக்கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டத்தை தீவிரபடுத்தும் விதமாக விமான நிலையத்தை முற்றுகையிட்டு அங்குவைத்தே ராஜபக்சேஷவின் உருவபொம்மையை எரித்தனர். இப்போராட்டம் எளிதில் நடந்துவிட வில்லை. விமானநிலையத்தில் இருந்த மாணவர்களை தடுக்க முயல அதை மீறி மாணவர்கள் உள்ளே நுழைய போலீசார் தாக்க துவங்கியுள்ளனர். மாணவர்கள் அதை முறியடித்து உள்ளே நுழைய வட இந்திய போலீஸ் துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவோம் என்று மிரட்டியும் பணியாமல் உள்ளே நுழைந்து அமெரிக்க அரசு, இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இந்த வேளையில் அனைத்து தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்துவிட்டனர்.
ஆங்காங்கே சாலைமறியல், உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டம், வகுப்பு புறக்கணிப்பு, பாரதியார் பல்கலைகழகத்தின் தொடர் உண்ணாவிரத போராட்டம் என போராட்டம் தீவிரமடைந்ததை கண்டு பீதியுற்ற தமிழக அரசு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்டது. ஆனால் மாணவர்கள் இதற்கெல்லாம் பின்வாங்குவதும் இல்லை. உடனடியாக மாணவர்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
மாணவர்கள் கூட்டமைப்பு துவக்கம்
தமிழீழ விடுதலைக்காக மாணவர்கள் கூட்டமைப்பு கோவை பகுதியை மையமாக முன்வைத்து மாணவர்களின் முன்முயற்சியில் துவக்கப்பட்டது. கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் தலைமையின் கீழ் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் பல்வேறு பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறத் துவங்கின. மாணவர்கள் ஓர் அமைப்பாக ஒருங்கிணைந்தபின் போராட்டம் முன்னிலும் பலமடங்கு வீரியத்துடன் நடைபெறத்துவங்கியது. குறிப்பாக நேரு மாணவர்கள் நடத்திய போராட்டம்.
நேரு கல்லூரி மாணவர்களின் எழுச்சி
முந்தைய நாள் இரவு திட்டமிட்டு குறைந்தது நூறில் (100) இருந்து இருநூறு(200) பேர் பங்கேற்பர் என்ற எதிர்பார்ப்புடன் மறுநாள் காலை அணிதிரட்ட ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டது மாணவர்களின் உணர்வையும் வளர்ச்சியையும் காட்டுகிறது. இதில் பெருமகிழ்ச்சிக்குறிய மற்றொரு செய்தி என்னவென்றால் கலந்து கொண்டவர்களில் பாதிபேர் மலையாளிகள் மேலும் கணிசமான அளவு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள்.
இனவெறி, மொழிவெறி, மாநில மனோபாவத்தையும் கடந்து மாணவர்கள் ஓர் வர்க்கமாய் ஒன்றிணைந்து போராட்ட களத்திற்கு வந்தனர். துவக்கத்தில் உண்ணாவிரதம் இருப்பது அல்லது அடையாள போராட்டம் நடத்துவது என்ற எண்ணத்தில் வந்தவர்கள் பின்பு போராட்டத்தை தீவிரப்படுத்த எண்ணினர். எனவே அருகில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்களையும் இணைத்துக்கொண்டு மதுக்கரையில் உள்ள மத்திய அரசின் இராணுவ ஆயுதக்கிடங்கை முற்றுகையிடக் கிளம்பினர். கல்லூரியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கரைக்கு பேரணியாகவே முழக்கமிட்டபடி கிளம்பினர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுச்சியுடன் கிளம்ப நான்கு இடங்களில் காவல்த்துறை தடுத்து நிறுத்த முயன்றது.
தடுப்புகளை வீசி எரிந்துவிட்டு போலீசையும் இடித்து தள்ளி விட்டு முன்னேறியது மாணவர் பட்டாளம். ஆயுதக்கிடங்கை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சுமார் இரண்டுமணி நேரம் போராட்டம் தொடர்ந்தது. இந்திய ராணுவம் துப்பாக்கியை காட்டி மிரட்டிப்பார்த்தனர், போலீஸ் லத்தியை காட்டி மிரட்டி பார்த்தது எதற்கும் அஞ்சாமல் மாணவர்கள் துணிந்து நின்றபோது துப்பாக்கிகளும், லத்திகளும் பணிந்தன. மாணவர்களிடம் கெஞ்சின. மாணவர்கள் எழுச்சியுற்று வீதிக்கு வந்தால் அரசின் அடக்குமுறைக் கருவிகள் அஞ்சி நடுங்குவதையும் கெஞ்சிப்பணிவதையும் நேரில் பார்க்க வேண்டுமே அந்தக் காட்சி வீரியமான போராட்டங்களின் மூலம் அதிகார வர்க்கத்தை பணிய வைக்கமுடியும் என்பதை மாணவர்கள் தங்கள் போராட்ட அனுபவத்தின் மூலம் உணர்ந்தனர்.
பின் போராட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிய மாணவர்கள் மன நிறைவு இன்றி பிரிந்து சென்று சென்று சாலைமறியல் ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். மாணவர்களை கைது கூட செய்ய முடியாமல் விட்டு சென்றது போலீஸ்.
என்.ஜி.பி. கல்லூரி மாணவர்களின் போர் !
மறுநாள் போராட்டச் செய்திகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்துகொண்டே இருந்தன. எஸ்.என்.ஆர். கல்லூரி, சி.எம்.எஸ்., பி.எஸ்.ஜி. மாணவர்களின் போராட்டம், பள்ளி மாணவர்கள் +2 தேர்வெழுதிவிட்டு தொண்டாமுத்தூர் சாலைமறியல், ஆலாந்துறை பள்ளி மாணவர்களின் போராட்டம், குனியமுத்தூர் பள்ளி மாணவர்களின் போராட்டம், கிருஷ்ணா கல்லூரி, கற்பகம் கல்லூரி கிராமப்புறங்களில் தன்னெழுச்சி போராட்டம், ஈரோடு, திருப்பூர் மாணவர்களின் போராட்டம் என பரவிக்கொண்டிருந்தது. இவ்வேளையில் என்.ஜி.பி. கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆயத்தமாகி போராட்ட கமிட்டிக்கு அழைப்பு விடுத்தனர்.
போராட்டகமிட்டி பிரதிநிதி சென்று பேசிய போது ஏதாவது பிரச்சினை வருமா? போலீஸ் அடிக்குமா? கொஞ்சம் பயமாக இருக்கிறது இயல்பாக தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். இவ்வேளையில் நூற்றுக்கணக்கில் போலீஸ் மாணவர்களை சுற்றி வளைத்து நின்றிருந்தது. இதை உடைத்துக் கொண்டு எப்படி வெளியேறுவது. நாம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோம்.என்பதை உணர்ந்து அருகாமை கல்லூரி மாணவர்களை துணைக்கு அழைத்தனர். மாணவர் கூட்டமைப்பும் மாணவர்களை அழைத்து வந்தது.
கல்லூரிக்குள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து செல்வது போல் வெளியேறி விமானநிலையத்தை நோக்கி சென்றனர். விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மாணவர்கள் வருவார்கள் என எதிபார்த்து போலீஸ் படை காத்திருந்தது. திடீரென்று முழக்கமிட்டு உள்ளே நுழைந்த மாணவர்களை தடுப்புகளை வைத்து (பேரிகார்டு) தடுக்க முயன்றது. ஒல்லியான மாணவன் ஒருவன் எட்டி உதைக்க பேரிகார்டு எகிறியது.
தடுப்பை உடைத்துக் கொண்டு மாணவர்கள் உள்ளே செல்ல பின்னே போலீஸ் ஓட போர்க்களமானது விமானநிலையம். ஒரு வழியாக மாணவர்கள் ஒவ்வொருவரையும் பிடித்து நிறுத்தியது போலீஸ். ஒரு மாணவனை பிடிக்க மூன்று போலீஸ் நான்கு போலீஸ் என தேவைப்பட்டது. ஒரு வழியாக தடுத்து நிறுத்தி விட்டோம் என போலீஸ் நினைத்து பெருமூச்சு விட எங்கிருந்தோ வந்த மற்றொரு மாணவர் பட்டாளம் விமானநிலையத்துக்குள் பாய்ந்து முன்னேற செய்வதறியாது நிலைகுலைந்து போனது போலீஸ் படை. “போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் எங்களால் முடியவில்லை என்று கெஞ்சத் துவங்கி விட்டார்கள்”.
கமிஷனர் போலீசின் அதிகாரம் மாணவர்களின் காலைப் பிடித்து கெஞ்சிக்கொண்டிருந்தது. “நாங்கள் உடனே நிறுத்தமாட்டோம் பதினைந்து நிமிடம் முழக்கமிட்டபின் செல்வோம்” என்றனர் மாணவர்கள். வேறு வழியின்றி அனுமதித்தது போலீஸ். போராட்டத்திற்கு பின் கைதான மாணவர்களை மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற போது வழிநெடுக முழக்கமிட்ட படியே மாணவர்கள் சென்றனர்.
மாணவர்களை கைது செய்து வைத்திருந்த மண்டபத்தை சுற்றி இருந்த பொதுமக்கள் விஷயத்தை கேள்விப்பட்டு மாணவர்களை சந்திக்க வந்தனர். வரும் போது பலகாரம், உணவு, தேநீர் போன்றவற்றை கொடுத்து தங்களின் ஆதரவையும் வாழ்த்துதளையும் தெரிவித்தனர். உங்களின் போராட்டம் சிறப்பானது நீங்கள் இத்துடன் நிறுத்தக்கூடாது நாட்டையே நீங்கள் மாற்ற வேண்டும் என்று வாழ்த்தினர்.
பேரணிக்கு திட்டமிடல்:
மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் மாணவர்களை ஒருங்கிணைந்து மாணவர் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட நிலையில் இதற்கு தலைமை தாங்கிய கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.
பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்தேறின குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மார்ச் 19 அன்று காவல் துறையின் அனுமதி மறுத்த நிலையில் தான் ஏற்பாடுகள் நடந்தேறின. தடையை மீறி நடத்துவது என்று மாணவரகள் உணர்வு பூர்வமாக தீர்மானித்திருந்தனர். மாணவர்களின் உறுதியை கண்டு அஞ்சிய காவல்துறை மார்ச் 18 அன்று இரவு அனுமதியளித்தது.
வெற்றிகரமான பேரணி:
மார்ச் 19 அன்று காலை முன்னணியாளர்கள் பேரணி துவங்கும் இடத்திற்கு வந்தனர். உளவுத் துறை அவர்களை கேமராவில் படமெடுத்து. அதன் மூலம் மிரட்ட முயன்றது. மாணவர்கள் அதற்கு அஞ்சாமல் படம் எடுப்பதை தடுத்து நிறுத்தினர். முந்தைய நாள் பத்திரிகையில் போராட்டத்தில்
பங்கேற்றவர்களின் பெயர், முகவரிகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னாளில் அரசு வேலைகளில் சேரும்போது அரசுக்கு எதிராக போராடியது தெரிந்தால் வேலை கிடைக்காது என்ற செய்தியை வெளியிட்டு மாணவர்களை பயமுறுத்த முயன்றது.
இவை அனைத்தையும் மீறி மாணவர்கள் பேரணி துவங்கும் இடத்தில் குவியத் துவங்கினர். சுமார் 6,000 மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி எழுச்சியுடன் துவங்கியது. இந்திய அரசையும் அமெரிக்க தீர்மானத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் மோசடியையும் அம்பலபடுத்தியும், தேசிய கட்சிகள், ஒட்டு கட்சிகளின் துரோகத்தையும் தோலுரித்தும் முழக்கங்கள் எழுப்பினர். பறை இசை முழக்கத்துடன் பேரணி துவங்கியது. சாலையின் இரு பக்கத்திலும் கூடி நின்று கவனித்தனர். “வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதிக்கு வந்து போராடு” என்ற முழக்கம் அவர்களையும் போராட அழைத்தது.
போலீஸ் ஏற்படுத்திய தடையை முறியடித்த மாணவர்கள்:
மாணவர்கள் போராட்டம் பிரதான சாலையில் முன்னேறிச் சென்ற போது, போலீஸ் வழிமறித்து. தடுப்புகளையும், 2 தனியார் பேருந்துகளையும் நிறுத்தி வைத்து எதிரே போலீஸ் பட்டாளத்தையும் நிறுத்தி வைத்து ஆள் அரவமற்ற மாற்று பாதையில் செல்லச் சொன்னது. மாணவர்கள் மறுத்தனர். “முன்னேறுவோம் முன்னேறுவோம் தடைகளை உடைத்து முன்னேறுவோம்” என்ற தொடர் முழக்கம் மாணவர்களை எழுச்சியுறச் செய்தது. மாணவர்களிடமிருந்து கற்கள் பறந்தன. பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கியது, உடனே பேருந்தை எடுத்து விட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு, போலீஸ் படையை விலக்கிக் கொண்டு மாணவர் படை வெற்றி முழக்கமிட்டு முன்னேறியது.
போலீஸ் படையோ எதுவும் செய்ய இயலாமல் கையை பிசைந்து கொண்டு விலகி நின்றது. காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு பின் உண்ணாவிரதப் பந்தலுக்கு சென்று சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். உண்ணாவிரதப் போராட்டம் அரசை நிர்பந்திக்காது எனவே தீவிர போராட்டதிற்கு தயராகும் விதமாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு தீவிர போராட்டத்திற்கு மாணவர்களை அரை கூவி அழைத்து பேரணியை நிறைவு செய்தனர்.
சுமார் மூன்று மணிநேரம் நடந்த பேரணி மாணவர்களையும் மக்களையும் எழுச்சியுற செய்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு உணர்வூட்டியது.
பேரணி முடித்து சென்ற மாணவர்களில் ஒரு பிரிவினர் ரயிலை மறித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். மறுநாளும் போராட்டங்களும் தீவிரமடைந்தன. தற்போதைய போராட்டங்கள் அனைத்தும் போர்குணமான, துணிச்சலான போராட்டங்கள் ஆகும். மாணவிகள் மட்டுமே பங்கேற்ற ஆர்பாட்டம், 14 மாணவிகள் மட்டும் பங்கேற்று காட்டூர் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை போராட்டம், ராணுவ பயிற்சி கல்லூரி முற்றுகைப் போராட்டம் அதை வீடியோ படம் எடுத்த மத்திய உளவுத் துறைக்கு அடி உதை அவருடைய பேண்ட் கிழிந்து போனது, சொட்டைத் தலையிலேயே அடித்துள்ளனர். இதர சீருடை போலீசார் வந்து காப்பாற்றி செல்லவேண்டி வந்தது. அதன் பின் போலீஸ் தரப்பில் யாரும் போட்டோ பிடிக்கவில்லை. தந்தி அலுவலகம் முற்றுகை, வருமானவரி அலுவலகத்தை கைப்பற்றி 1 ½ மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வங்கி பி.எஸ்.என்.எல்., முற்றுகை என மத்திய அரசின் நிர்வாக அதிகார மையங்கள் அனைத்தையும் இலக்கு வைத்து போராடினர். போலீஸ் துறையோ வெந்து நொந்து போனது.
தொடர்ச்சியான இந்த போராட்டம் மாணவர்களை வெகுவாக பயிற்றுவித்துள்ளது.
- ஜாதி, மதம், இனம் கடந்து மாணவர்களை ஒரு வர்க்கமாய் ஒன்றிணைத்துள்ளது.
- அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.
- சமூக பிரச்சினையின்பால் கவனத்தையும், அக்கறையும் கொள்ள செய்தது.
- போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்க கூடாது என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தானும் இதில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற சமூக பண்பை விதைத்துள்ளது.
- குறிப்பாக சமூகம் சார்ந்த எந்த போரட்டத்திலேயும் பங்கேற்காத மருத்துவக் கல்லூரி மாணவர்களையும், விவசாய கல்லூரி மாணவர்களையும், பள்ளி மாணவர்களையும் வீதிக்கு வரவைத்தது.
- பெண்களை கணிசமான அளவு ஆண்களுக்கு இணையாக போராட்ட களத்திற்கு கொண்டு வந்துள்ளது.
- பல மாணவ தலைவர்களை, போராளிகளை, கவிஞர்களை, பேச்சாளர்களை உருவாக்கி சமூகத்துக்கு அளித்துள்ளது.
- நீண்ட நேரம் அமர்ந்து அரசியல் சார்ந்த சொற்பொழிவுகளை கவனிக்க, விவாதிக்க வைத்துள்ளது.
ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளை தானும் நம்பாது சமூகத்துக்கும் போதிக்க வைத்துள்ளது. - கல்லூரி நிர்வாகத்தை கண்டு, போலீசை கண்டு, அதிகாரிகளை கண்டு அஞ்சாமல் அடக்குமுறைகளை தன் வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம் எதிர்கொள்ள பயிற்றுவித்தது.
- கல்லூரி விட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்றாலும் அங்கும் எழுச்சிகளை ஏற்படுத்த முனைவது.
எனினும் இத்தகைய எழுச்சி பெற்ற மாணவர் வர்க்கம் இனவாத கண்ணோட்டத்தில் பீடிக்கப்பட்டும், அரசியல் அறியாமையுடனும் சரியான அமைப்பை தேர்ந்தெடுக்க தெரியாமலும் குழப்பத்தில் இருப்பது ஒரு யதார்த்தம். எனினும் தனக்கான புரட்சிகர கடமையை விரைவில் உணர்ந்து தயாராகும் என நம்பலாம் ஏனெனில் தேசத்தின் எதிர்காலம் அவர்கள் கையில்.
பின்குறிப்பு: 1. நாம் தமிழர் கட்சியின் தலையீடு காரணமாக மாணவர்களின் ஒற்றுமையில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதை விரைவில் உணர்ந்து மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
2. இனி போராட்டம் நடைபெறாது என்ற தைரியத்தில் கல்லூரியை திறந்தது சி.எம்.எஸ். கல்லூரி நிர்வாகம். மீண்டும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம், ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு என போராட்டம் வளர கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
தடைகளை கடந்து தொடர்கிறது மாணவர்கள் போராட்டம்…. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!!
No comments:
Post a Comment