Wednesday, July 3, 2013

சொத்துரிமை சட்டங்கள் ?






சவூதி அரேபிய இளவரசர் (கண்ணாடி அணிந்திருப்பவர்) தனது நண்பர்களுடன் மதுபானப் பார்ட்டி ஒன்றில்....


சொத்துரிமை எனும் சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் பெரும்பாலும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. தனியுடமையின் பொருளை உணர்த்துவதற்கு உதவும் மிகத் துல்லியமான சொல் சொத்துரிமை.


ஒருவர் தான் அனுபவிக்கும் உடமையின் வசதிகளை தனக்குப் பின் தன்னுடைய வாரிசுகளுக்கு கடத்துவது தான் சொத்துரிமை. ஆனால் வாரிசு என்பது யார் எந்த அடிப்படையில் அவர்களுக்கு கடத்துவது என்பதற்கு உலகின் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் மரபு சார்ந்து வேறு வேறு வழிமுறைகள் இருக்கின்றன.



அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை தொடங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சார விழுமியங்கள் வரை அனைத்தும் சேர்ந்தே அந்த வழிமுறைகளை தீர்மானிக்கிறது. இதில் எந்த வழிமுறை சரியானது என்பதை தீர்மானிப்பதற்கு ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா? அப்படி ஏதேனும் இருந்தாலும் ஒரு சமுதாயத்திற்குள் இருக்கும் வேறுபட்ட நடைமுறைகளில் எது சரியானது என்பதை தீர்மானிப்பதற்கு வேண்டுமானால் உதவலாம். மாறாக ஒரு சமுதாயத்தின் நடைமுறைகளை அது தான் ஒட்டு மொத்த மனித இனத்துக்கும் சரியானது பின்பற்றப்பட வேண்டியது என்று கூறினால் அது திணிப்பாகத் தானே இருக்க முடியும்?



சொத்துரிமை குறித்து நமது புனித குர்ஆன் கூறுவது என்ன?



'உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும்.. ..பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு மூன்றிலிரண்டு பாகம். ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதி. இறந்தவருக்கு குழந்தைஇருந்தால் பெற்றொருக்கு ஆறில் ஒரு பாகம், குழந்தை இல்லாதிருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று மீதம் தந்தைக்கு .. ..
 
(குர்ஆன் 4:11)
 

.. ..மனைவியர் விட்டுச் சென்றதில் பிள்ளை இல்லையென்றால் கணவனுக்குப் பாதி, இருந்தால் கால் பங்கு. கணவன் விட்டுச் சென்றதில் பிள்ளை இல்லையென்றால் மனைவிக்கு கால் பங்கு, பிள்ளை இருந்தால் எட்டில் ஒரு பங்கு. முன் பின் வாரிசுகள் இல்லாதவர்களுக்கு சகோதரன் அல்லது சகோதரி இருந்தால் இருவருக்கும் தனித்தனியாக ஆறில் ஒரு பாகம். மேற்பட்டால் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தை சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும். .. ..
 
(குர்ஆன் 4:12)


இப்படிப் போகிறது குர்ஆனின் பங்கு பிரித்தல்கள்.


இவற்றிலிருந்து இரண்டு அம்சங்களை நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஒன்று, சேர்த்த சொத்துகள் பிரிதொரு குலத்தவருக்குச் சென்று விடாமல் சொந்தக் குடும்பத்தவர்களுக்குள்ளே பிரித்துக் கொள்ள வேண்டும் எனும் முனைப்பு. மற்றெல்லா உறவுகளைக் காட்டிலும் முதன்மையான உறவாக இருந்தும் மனைவி எனும் உறவுக்கு பிற உறவுகளைக் காட்டிலும் குறைவாக பங்கு பிரித்திருப்பது.


ஒருவனின் சொத்துகளை அவன் உறவினர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுப்பது என்பது அரேபியாவின் சொத்துரிமை வடிவம். முகம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் ஆண்டான் அடிமை காலகட்டம். அடிமைகள் ஆண்டைகள் மட்டுமல்லாது நாடோடிகளாக வாழ்ந்த மக்களும் அங்கு இருந்தனர். அதாவது புராதன பொதுவுடமையில் தனிப்பட்ட சொத்துகள் என்று எதுவும் இல்லாமல் அனைத்தயும் பயன்படுத்திக் கொள்ளும் வடிவத்தில் இன்னமும் மீதமிருந்த நாடோடிகள், ஆண்டைகளாகவும் வணிகர்களாகவும் உயர்ந்து வரும் நகர்ப்புரத்து அரேபியர்கள். இந்த இரண்டையும் கலந்த வடிவமாகத்தான் அனைத்து உறவினர்களுக்கு சொத்தை பகிர்ந்தளிப்பது எனும் வடிவம் அரேபியாவில் இருந்திருக்கிறது.



ஆனால் இது போன்ற வடிவம் இந்தியா போன்ற நாடுகளில் இல்லை. ஒருவனின் சொத்தை மகன்களுக்கு மட்டுமே பிரித்துக் கொடுக்கும் வடிவமே இருந்து வருகிறது, ஏனைய உறவுகளுக்கு கொடுப்பதில்லை. அதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் தன்னுடைய வரம்புகளை மீறுபவர்களுக்காகவே நரகத்தை சித்தப்படுத்தி வைத்திருக்கிறேன் என்று ஹைபிட்சில் பயங்காட்டியும் இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் அதை பொருட்படுத்தாமல் இந்திய வடிவத்தையே பின்பற்றி வருகிறார்கள். அல்லாஹ்வின் சட்டங்கள் எக்காலத்துக்கும் எல்லாருக்கும் பொருந்தமானது என்று எந்த முஸ்லீம்கள் கூறுகிறார்களோ அந்த முஸ்லீம்களே நடைமுறையில் இஸ்லாமியச் சட்டங்கள் பொருத்தமில்லாதது என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.



இதிலே வேடிக்கை என்னவென்றால் மலைவாழ் மக்கள், சில பழங்குடிகளிடையே இன்னும் தனிச் சொத்துடமை வேரூன்றவில்லை. அவர்களும் நிலத்தை பண்படுத்தி உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள் என்றாலும் அதை தங்களுடைய சொத்தாக அவர்கள் கருதுவதில்லை, தனித்தனி குடிசைகளில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தனிப்பட்ட சொத்து என்பது அறிமுகமாகவில்லை. இவர்களுக்கு மேற்படி சட்டங்கள் பொருந்துமா?
தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியில் மருமக்கள் வழி மான்மியம் என்றொரு சொத்துடமை வடிவம் இருந்தது. அதை கடைப்பிடித்த மக்கள் தங்கள் சொத்துக்களை மருமகன்களுக்கே கொடுத்து வந்தனர். அது அவர்களுக்கு அநீதியாகவோ சொந்த மகன்களை புறக்கணிக்கும் விசயமாகவோ பார்க்கவில்லை. சரியானது என்றெண்ணியே கொடுத்து வந்திருப்பார்கள். இதன் காரணம் என்னவென்றால் அவர்களின் பண்பாட்டு வழிகளில் மரபை பின்பற்றி யார் தம் சொத்துகளுக்கு வாரிசு என்று முடிவு செய்கிறார்களோ அவர்களுக்கு சொத்துகளைக் கடத்துகிறார்கள். இந்த அடிப்படையில் தான் அரேபியர்கள் தங்களின் பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு சொத்துடமை வடிவத்தைக் கொண்டிருந்தார்கள். இது தான் உலகம் முழுமைக்கும் உள்ள மக்களுக்கு பொதுவானது நீதியானது என்று கூறுவதற்கான அடிப்படை அதில் ஏதும் இருக்கிறதா?



ஆனால் மனித குல முன்னேற்றம் எனும் அடிப்படையில் தனிச் சொத்துடமை என்பது அநீதியானது. தனிச் சொத்துடமையில் எல்லைகள் விரிந்து கொண்டே சென்றது தான் இன்று மனிதன் சந்திக்கும் இன்னல்கள், இடையூறுகள் பெரும்பாலானவற்றுக்கு காரணமாய் அமைந்திருக்கிறது.



அரேபியாவின் சொத்துடமை வடிவத்தை உலகம் முழுவதுக்குமாக பரிந்துரை செய்துவிட்டு, இதில் தான் உங்களுக்கு வாழ்வு இருக்கிறது என்று கூறினால் அது எந்த அடிப்படையில் சரியானது என்றும் கூறப்பட வேண்டும். ஏன் கூற முடியவில்லை?



இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. இயங்கியல் வரலாற்றியலின்படி மாறி மாறி வந்திருக்கும் கால்கட்டங்கள் அனைத்துக்கும் பொதுவான சொத்துடமை வடிவம் என்று எதுவும் இருக்க முடியாது. இரண்டாவது அது கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்த அரேபியாவின் பண்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு சொத்துடமை வடிவத்தைக் கொண்டிருந்த   சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

Thanks : senkodi 

No comments:

Post a Comment