Tuesday, July 2, 2013

மொழி மேலாதிக்க மனோநிலை சரியா?


 
 
 

நாம் நம்முடைய தாய் மொழியை மிகவும் நேசிக்கிறோம்.
 
 
அது மிகச் சிறந்தது என்ற பெருமிதம் கொள்கின்றோம். எல்லாம் சரிதான். ஆனால், மற்ற எந்த மொழியும் என்னுடைய மொழியை விட சிறப்பானது அல்ல என்றோ, அனைத்து மொழிகளும் என்னுடைய மொழியை விடக் கீழானவை/குறைவானவை என்றோ கருதுவோமானால், அது ஆரோக்கியமான பார்வை அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

எல்லா மொழியும் சிறந்ததுதான். அவரவர் பேசும் மொழி அவரவர்க்கு மிக உன்னதமானதுதான். என்றாலும், எல்லாவற்றையும் மறுதலித்துத்தான் நான் என்னை நிலைநிறுத்த வேண்டும் என்று நினைப்பது தவறு. மொழி விஷயத்திலும் அதுதான் யதார்த்தம். என்னுடைய மொழியை நான் சிறப்பிப்பது தவறு இல்லை. அதேநேரம், மற்ற மொழியில் இல்லாதது என் மொழியில் உள்ளது என்ற தர்க்கம், நியாயமானதல்ல. ஏன் என்றால், மறுதலையாக, நமது மொழியில் இல்லாத பல விஷயங்கள் அந்த மொழிகளில் இருக்கலாம்.

இன்னும் சற்றுத் தெளிவாகவே இதை நோக்குவோம். மொழி என்பது அது வாழும்/இயங்கும் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டே வளர்கிறது. அது புழக்கத்தில் உள்ள பிரதேசம், காலநிலை, மக்கள் குழுமம், அவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் முதலான இன்னோரன்ன அம்சங்களின் தாக்கம் அம்மொழியில் பிரதிபலிக்கும். அதற்கமைய அதன் சொற் களஞ்சியம் பெருகி வளரும். யானையுடனான தொடர்பு தமிழ்ச் சமூகத்துக்கு அதிகமாய் இருந்ததால் அதனைக் குறிக்க நிறையச் சொற்கள் இருப்பது போல, பனித்துருவப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களின் மொழியில் பனியை அதன் இயல்பு, வடிவம், நிறம், செறிவு முதலான அடிப்படையில் குறிப்பதற்கு ஏராளமான சொற்கள் உள்ளன.
 
 
அவ்வாறே, பாலைவனப் பிரதேசங்களில் வாழும் மக்களின் மொழியில் அது குறித்த மிக நுணுக்கமான வேறுபாடுகளுடன் கூடிய ஏராளமான சொற்கள் வழக்கில் இருக்கும். ஆனால், பனி குறித்தோ, பாலைவனம் குறித்தோ அவ்வந்த மொழிகளில் வழக்கில் உள்ள அத்தனைச் சொற்களும் தமிழில் இருக்காது. ஆங்கில மொழியில் அறிவியல் தொழினுட்பத் துறைகளில் உள்ள சகல கலைச் சொற்களுக்கும் ஈடான சொற்கள் தமிழில் இல்லாதது போல, தமிழ்ப் பேசும் சமூகங்களின் கலை, கலாசார அம்சங்கள் தொடர்பான கலைச் சொற்கள் ஆங்கிலத்தில் இருக்காது.

இவ்வாறு அவ்வந்த மக்கள் குழுமம் பயன்படுத்தும் மொழி, அதன் பயன்பாட்டுக் அமைவாகவே புதுச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறது; வளர்ச்சி அடைகின்றது; நின்று நிலைக்கிறது. 

எனவே, எல்லா மொழியும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமும் சிறப்பம்சங்களும் கொண்டது தான்.

நமது மொழியை நாம் நேசிப்போம்; மற்ற மொழியை மதிப்போம். மாறாக, "என் மொழியில் தான் எல்லாம் இருக்கிறது. எனவே, அதுதான் தலையாயது " என்ற மேலாதிக்க மனோபாவத்தை மறுதலிப்போம். உண்மையில் அது ஒரு மாயை. யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட வெறும் கற்பனை.

மொழி என்பது அற்புதமான ஓர் ஊடகம். ஓர் இணைப்புப் பாலம். அது மனிதர்களையும் சமூகங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைக்க உதவ வேண்டுமே தவிர, பிரிக்கவோ வேறுபாட்டை வளர்க்கவோ உதவக் கூடாது. இது என் தாழ்மையான கருத்து.

-Abdul Haq Larina
(via FB)
 
(Note: இது மொழிக்கு மட்டுமல்ல கலாசாரம், கலைகள், பண்பாடு, மதம், இலக்கியம் உட்பட அனைத்துக்கும் பொருந்தும் - JJ)
 
Thanks: Penniyam

No comments:

Post a Comment