Wednesday, July 17, 2013

சஹீட் அப்ரிடி : பாகிஸ்தான் அணியின் மந்திரச்சொல்!

சிறிது இடைவெளிக்குப் பின்பு மீண்டும் மேற்கிந்தியத் தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டிருந்த சஹீட் அப்ரிடி நேரத்தை வீணடிக்கவில்லை.


ஆம், குயானாவில் இடம்பெற்ற ஆரம்பப் போட்டியில் தனது வருகையை 76 (55),  9-3-12-7 எனும் உலகமே வியக்கும்படியான சகலதுறை பெறுபேற்றுடன்  அறிவித்திருக்கின்றார்.


பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத்தீவு அணிகளின் துடுப்பாட்ட ஜாம்பவான்கள் அனைவரும் எகிறிவரும் பந்துகளை எப்படிச் சமாளிப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்த குயானா ஆடுகளத்தில் அப்ரிடி மட்டுமே அவற்றை நான்கு ஓட்டங்களாகவும் ஆறு ஓட்டங்களாகவும் மாற்றிக் காட்டி தனது தனித்தன்மையை நிரூபித்திருக்கின்றார்.


20.1 ஓவரில் 47 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை பறிகொடுத்து பாகிஸ்தான் அணி தடுமாறிக்கொண்டிருந்த வேளையில் மறுமுனையில் ஏகப்பட்ட பந்துகளை விரயம் செய்து வெகுநிதானமாக ஆடிக்கொண்டிருந்த அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் குடன் 6வது விக்கட்டுக்காக களமிறங்கினார் அப்ரிடி. இரண்டாவது பந்தினை மைதானத்திற்கு வெளியே தூக்கி ஆட்டக் கணக்கை ஆரம்பித்த அப்ரிடி 77 நிமிடங்கள்  களத்தில் நின்று  55 பந்துகளை மட்டுமே  எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உட்பட 76 ஓட்டங்களை 138.18 எனும் தாக்கு விகிதத்தில்  பெற்றார்.பாகிஸ்தான் 167 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளையில் பொலார்ட் வீசிய 38வது ஓவரின் இறுதிப்பந்தில் சமியிடம் பிடிகொடுத்து அப்ரிடி ஆட்டமிழந்தபோது ஆறாவது விக்கட்டுக்கான இணைப்பாட்டத்திற்காக அப்ரிடி-மிஸ்பா ஜோடி 120 ஓட்டங்களை கேசரித்திருந்தார்கள்.


பந்துகளை எதிர்கொள்வதற்கு சிரமம் தரும் ஆடுகளத்தில் தனது அதிரடியின் மூலம் அணியை இக்கட்டான நிலைமையிலிருந்து மீட்டுக்கொடுத்தார் அப்ரிடி.
இறுதியில் மிஸ்பாவின் 121 பந்துகளில் பெறப்பட்ட மிக நிதானமான  53 ஓட்டங்களுடன் 224 எனும் போராடத்தக்க மொத்த ஓட்ட எண்ணிக்கையை பாகிஸ்தான் அணி பெற்றுக்கொண்டது.IPL (இந்திய பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி) 20013 யை கலக்கிய அதிரடி வீரர் க்றிஸ் கெய்ல் சகலதுறை வீரர்கள் ப்ராவோ மற்றும் பொலார்ட், ஆகியோரை நம்பி 225 எனும் வெற்றி இலக்கை எதிர்கொண்டு களமிறங்கியது  மேற்கிந்திய அணி.


 உலகின் அதி உயரமான (7' 1") வேகப்பந்து வீச்சாளர் மொகம்மட் இர்பானின் வேகத்திற்கு ஆரம்ப ஆட்டக்காரர்  சார்ள்ஸின் விக்கட் தகர்க்கப்பட அடுத்து வந்த ப்ராவோவும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இல்லாத ஓட்டத்தை பெறவிழைந்த அதிரடி வீரர் க்றிஸ் கெய்ல், மிஸ்பா உல் ஹக்கினால் ரன் அவுட் செய்யப்பட்டார். 4வது ஓவர் முடிவிலே ஏழு ஓட்டங்களுக்கு மூன்று விக்கட்டுகளை இழந்து தடுமாறிய அணியை அடுத்து வந்த சாமுவேல்ஸ் மற்றும் சிம்மன்ஸ் ஆகியோர் ஓரளவு நிலைப்படுத்தினர்.
ஆனால் அவர்கள் இருவரதும் பெறுமிக்க இணைப்பாட்டத்தின் விதி அப்ரிடியின் வடிவிலே 22 வது ஓவரிலே காத்திருந்தது.


ஆம், 21 வது ஓவரிலே ஆறாவது பந்து வீச்சாளராக அப்ரிடி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதற்கு முன்பு அவர் விளையாடிய  சில ஆட்டங்களிலே ஒரு விக்கட்டைத்தானும் வீழ்த்தியிராததால் பெரிய எதிர்பார்ப்பு ஏதுமிருக்கவில்லை.


ஆனால், அப்ரிடிக்கு, Boom Boom  என்பது போல    வேடிக்கையான இன்னொரு பட்டப் பெயர்  இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது.  ஆம், அதுதான் ...


'The King of Come Back'


அதாவது ஏதாவது ஒரு காரணத்திற்காக அணியிலிருந்த நீக்கப்பட்டு சில காலத்திற்குப்பின்பு மீண்டும் திரும்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதலாவது ஆட்டத்திலேயே சிறப்பாக ஆடும் வழமை அப்ரிடிக்கு இருந்தே வந்திருக்கின்றது. ஆனால் அதேவேளை தொடர்ந்து நின்றுபிடித்து பிரகாசிப்பது மட்டும் இன்னும் கேள்விக்குறிதான்.


அந்த சாதனை இம்முறையும் நிகழ்ந்தது. இன்னிங்ஸின் 22வது - அப்ரிடியின் இரண்டாவது - ஓவரின் முதலாவது பந்திலே அதுவரை கவனமாக ஓட்டங்களைச் சேர்த்துக்கொண்டிருந்த சிம்மன்ஸ் விக்கட் காப்பாளர் உமர் அக்மலினால் ஸ்டம்ப்ஸ் செய்யப்பட்டு  ஆட்டமிழந்தார். அப்ரிடியிடமிருந்து அடுத்து வந்த பந்தை எதிர்கொண்ட சகலதுறை வீரர் ப்ராவோ, அதை அப்படியே தனது கால்காப்பிலே வாங்கியதிலே நடுவரின் தூக்கிய கையின் ஒற்றை விரலையும் அப்ரிடியின்  'X மனித வடிவ' கொண்டாட்டத்தையும் பார்த்தபடி வெளியேறினார்.


மற்றுமொரு ஓவரில் பொலார்ட், அப்ரிடியின் 94.8 கிமீ வேகச்சுழலை தூக்கி விளாசியதில் லோங் ஓஃப் பகுதியில் பிடிபட்டார்.


அடுத்து கீமா றோச் அப்ரிடியின் பந்துக்கு அவரிடமே பிடிகொடுத்து வெளியேறி ஒரே இன்னிங்ஸில் அரைச்சதமும் குறைந்த பட்சம் ஐந்து விக்கட்டையும் பெற்ற வீரர்களின் சாதனைப்பட்டியலில் மூன்றாவது தடவையும் அப்ரிடி தனது பெயரைப் பதிவு செய்வதற்கு உதவினார்.


ஏற்கனவே இருதடவை இங்கிலாந்து (61 ஓட்டம் 5 விக்கட்டுகள் 40 ரன்களக்கு லாஹுர் மைதானம் - 27 அக்டோபர், 2000) மற்றும் இலங்கை (75 ஓட்டங்கள் 5விக்கட்டுகள் 35 ரன்களுக்கு - சார்ஜா மைதானம் - 20 நவம்பர் 2011)   ஆகிய அணிகளுக்கு எதிராக இதே சாதனையைச் புரிந்தவரும் அப்ரிடியேதான் என்பது கூடுதல் தகவல்.


அதன் பிறகு வந்தவர்களில் சமியைத் தவிர அனைவரும் அப்ரிடியின் வேகமும் சுழலும் இணைந்த கலவையான பந்துகளுக்கு எப்படி ஆடுவது என்று புரியாமல் அடுத்தடுத்து விக்கட்டுகளைப் பறிகொடுத்ததிலே 98 ஓட்டங்களுக்குள் சுருண்டு வீழ்ந்தது மேற்கிந்திய அணி.


பாகிஸ்தான் அணி 126 ஓட்டங்களால் வெற்றிபெற, வேறு தெரிவுகளுக்கே இடம்வைக்காத வண்ணம், ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை  30வது தடவையாக தனதாக்கிக் கொண்டார் அப்ரிடி.


ஒரே இன்னிங்ஸில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர்களின் வரிசையில் 10-0-38-6 எனும் பந்து வீச்சுப் பெறுதியுடன் 42 வது இடத்திலிருந்த அப்ரிடி தற்போது 9-3-12-7 எனும் புதிய பந்து வீச்சு பெறுதியுடன் 40 இடங்கள் முன்னேறி இலங்கையின் சமிந்த வாஸுக்கு அடுத்ததாக இரண்டாவது வீரர் வரிசைக்கு வந்துள்ளார்.


ஒருநாள் சர்வதேச ஆட்டங்களில் தற்போது விளையாடி வரும் வீரர்களிலே இதுவரை அதிகப்படியான விக்கட்டுகளை வீழ்த்தியவர்களிலும் கூட இன்று இதை எழுதும் தினம் (16 ஜுலை 2013) வரை மொத்தமாக 356 போட்டிகளில் விளையாடி 357 விக்கட்டுகளை வீழ்த்தியிருப்பதன் மூலம் அப்ரிடி முன்னணியிலிருக்கின்றார்.


அத்துடன் இதுவரை அதிகப்படியான விக்கட்டுகளை வீழ்த்தியவர்களிலும் கூட மொத்தமாக முரளிதரன், வாசீம் அக்ரம், வகார்யூனிஸ், சமிந்த வாஸ், சோன் பொலாக், மக்கிராத் மற்றும் ப்ரட் லீ ஆகியோருக்கு அடுத்ததாக சஹீட் அப்ரிடி  8 வது இடத்திலிருப்பதும் குறிப்பிடத்தக்க தகவல்.

அதுமட்டுமன்றி ஒருநாள் சர்வதேசப்போட்டி வரலாற்றிலே 7000 ஓட்டங்களுக்கு மேல் பெற்று 350 விக்கட்டுகளையும் வீழ்த்திய முதலாவது வீரர் என்ற பெருமையையும் அப்ரிடி தனதாக்கியுள்ளார். ( குறித்த 355வது போட்டி வரை 7277 ஓட்டங்கள் 355 விக்கட்டுகள்)

இதற்கு முன்னதாக இலங்கை அணியின் சாதனை வீரர் சனத் ஜெயசூரிய 7000 ஓட்டங்களை 300 விக்கட்டுகளுடன் கடந்தவராவார். ( இறுதியாக ஆடிய 445வது போட்டி வரை 13430  ஓட்டங்கள் 323 விக்கட்டுகள்)


சஹீட் அப்ரிடியை 'ஒரு சகலதுறை ஆட்டக்காரர்' என்று வெகு சாதாரணமாக யாராவது விபரித்தால் அது ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை வெறும் விஞ்ஞானி என்று கூறுவது போலிருக்கும் என்றார் பிரபல கிரிக்கட் விமர்சகர் ஒருவர்.கிரிக்கட் மீதுள்ள ஈடுபாட்டுக்கும் திறமைகளுக்கும் பஞ்சமில்லாத சகலதுறை வீரரான சஹீட் அப்ரிடி அதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டேயிருந்தாலும் கூட நிலைத்து நின்று ஆடுவதில் அக்கறை காண்பிக்காத காரணத்தாலும் தான் நினைப்பதை வார்த்தைகளில் அப்படியே மறைக்காமல் கூறிவிடும் இயல்புடையவராக இருப்பதாலும் அணியில் அவரது இடத்தை நிலையாக வைத்திருக்க இன்னும் தடுமாறிக் கொண்டிருக்க வேண்டியிருக்கின்றது.அதேவேளை, சஹீட் அப்ரிடியின் கிரிக்கட் வரலாற்றைப் பார்க்கும்போது, நிலைத்து நின்று ஆடுவதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத காரணத்தால்தான் மற்றவர்களால் நினைக்கவே முடியாத சில அதிரடிச் சாதனைகளை அவரால் சாதிக்க முடிகின்றதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.


-மூதூர் மொகமட்ராபி

No comments:

Post a Comment