Monday, July 15, 2013

தாரிக் அலி

மீடியா டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன், ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் இணைந்து ஜூலை 9 அன்று நடத்திய கருத்தரங்கில் புகழ்பெற்ற எழுத்தாளரும்  சிந்தனையாளருமான தாரிக் அலி , The State of Journalism in the 21st Century: Celebrities, Trivia and Whistleblowers என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

2014ம் ஆண்டு இதழியல் மாணவர்களுக்காக சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெருமளவு கூட்டம் திரண்டுவிட்டதால் பார்வையாளர்கள் பலருக்கு நிகழ்ச்சியின் இறுதி வரை அமர இடம் கிடைக்கவில்லை.


தாரிக் அலியின் உரை ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அதற்குப் பிறகு கேள்வி பதில் பகுதி. காத்திரமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தாலும் சரளமான நடையில் அபாரமான உச்சரிப்பில் இடையிடையே நகைச்சுவை கலந்து உரை அமைந்திருந்ததால் ஒரு விநாடிகூட யாருக்கும் சோர்வு தட்டியிருக்காது என்று நம்புகிறேன். ஒரே ஏமாற்றம், எடுத்துச் சென்று ஒலிப்பதிவுக் கருவி இயங்காததுதான். எனவே, நினைவில் தங்கியிருந்ததை வைத்தும் இடையிடையே எடுத்த குறிப்புகளின் அடிப்படையிலும் இதனை எழுதுகிறேன். குறைகள், குற்றங்கள் என்னுடையவை. இன்னும் ஓரிரு நாள்களில் யூட்யூபில் இந்த உரை முழுவதுமாகப் பதிவேற்றப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.


பத்திரிகை சுதந்தரம் • எட்வர்ட் ஸ்நோடெனை நான் ஆதரிக்கிறேன். அடைக்கலம் கோரி ஸ்நோடென் அனுப்பிய விண்ணப்பத்தை ஒரு விநாடிகூட யோசிக்கவும் இந்தியா நிராகரித்துவிட்டது வருத்தமளிக்கக்கூடியது. ஏதேனும் சாக்கு போக்கு அல்லது காரணங்கள் சொல்லி நிராகரிக்கக்கூட இந்தியா முயற்சி செய்யவில்லை. அரசியல் எஜமானர்களைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்பது மட்டும்தான் இந்தியாவின் குறிக்கோள்.

 • ஸ்நோடெனை ஒரு விசில் புளோயர் என்றல்ல ஒரு கிரிமினல் குற்றவாளி என்றே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய மீடியா அழைக்கிறது.

 • அரசாங்கத்தின் ஊதுகுழல்கள் மட்டுமே ஒரு நாட்டில் இயங்கமுடியும்; அரசாங்கத்தின் கருத்துகள் மட்டுமே நமக்குக் கிடைக்கும் என்றால் அதை ஒரு ஜனநாயக நாடு என்று அழைக்கமுடியாது.

 • சோவியத் யூனியனில் பத்திரிகை சுதந்தரம் இல்லை, மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை என்று மேற்கத்திய உலகம் வலுவாகப் பிரசாரம் மேற்கொண்டபோது இடதுசாரிகளால் தகுந்த முறையில் பதிலளிக்கமுடியவில்லை. சோவியத் யூனியனில் பத்திரிகை சுதந்தரம் இருக்கல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

 • இன்னொன்றையும் ஒப்புக்கொள்ளவேண்டும். சோவியத் யூனியனைப் பலமாக எதிர்த்த மேற்கத்திய நாடுகள் பலவற்றில் அப்போது பத்திரிகை சுதந்தரம் இருந்தது. இதையே அவர்கள் வேறு வார்த்தைகளில், ‘எங்களிடம் ஜனநாயகம் இருக்கிறது, ஆனால் உங்களிடம் அது இல்லை’ என்று குற்றம் சாட்டினார்கள். உங்களைவிட நாங்கள் மேம்பட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள பத்திரிகை சுதந்தரத்தையே அவர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார்கள்.

 • வியட்நாம் யுத்தம் குறித்து அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை நீங்கள் பார்க்கவேண்டும். அப்போதெல்லாம் செய்திகள் தெரிந்துகொள்ளவேண்டுமானால் டிவியைத்தான் ஆன் செய்யவேண்டும். வியட்நாம் எந்த அளவுக்குக் கொடூரமாக அமெரிக்காவால் அழிக்கப்பட்டது என்பதை அமெரிக்க மீடியா துணிச்சலுடன் படம் போட்டுக் காட்டியது. இப்போதும்கூட அப்படிப்பட்ட காட்சிகளை ஒருவர் படம்பிடிக்கமுடியுமா என்று தெரியவில்லை. அதே போல், அமெரிக்காவைக் கண்டிக்கும் பல கட்டுரைகள் நியூ யார்க் டைம்ஸில் வெளிவந்துள்ளன.

 • பிரிட்டனின் கொள்கைகள் பிரிட்டனிலேயே எதிர்க்கப்பட்டது. கிறிஸ்டஃபர் ஹில், எரிக் ஹாப்ஸ்பாம் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களைப் பிரிட்டன் உருவாக்கியது.

 • பார்த்தீர்களா எங்கள் நாட்டில் மட்டும்தான் பத்திரிகை சுதந்தரம் இருக்கிறது என்று பெருமிதத்துடன் இருந்த மேற்கத்திய நாடுகளுக்கு அந்தப் பெருமிதமே ஒரு கட்டத்தில் இம்சையாகவும் மாறியது. அவர்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டே தீரவேண்டிய கட்டாயத்துக்கும் அவர்கள் தள்ளப்பட்டார்கள்.


 • அமெரிக்கா, பிரிட்டன், முதலாளித்துவம் 


 • ஆப்கனிஸ்தான்மீது அமெரிக்கா படையெடுத்தது ஏன்? ஆப்கன் பெண்களுக்குச் சுதந்தரம் அளிக்கத்தான் என்கிறது அமெரிக்கா. அப்படியானால் பெண்களுக்காக நடத்தப்பட்ட முதல் யுத்தம் என்று இதனை நாம் பெருமையுடன் அழைக்கலாம். ஆனால், அவ்வாறு நம்மால் செய்யமுடியாமல் போவதற்குக் காரணம் எந்தப் பெண்களுக்காகப் போராடுவதாகச் சொன்னார்களோ அதே பெண்களால் அமெரிக்க ராணுவத்தினர் வெறுப்புடன் விரட்டியடிக்கப்பட்டதுதான்.

 • ஆப்கனிஸ்தான் யுத்தம் குறித்து மேற்கத்திய உலகில் பெரிதாக எந்த எதிர்ப்புகளும் இல்லை. ஆக்கிரமிப்பாக அல்ல, விடுதலைக்கான யுத்தமாகவே அதை அவர்கள் கண்டனர். சிலர் வெளிப்படையாகவே அது ஒரு பழிவாங்கும் செயல் என்றனர். இப்படி நேர்மையாக ஒப்புக்கொண்டவர்களைக்கூட ஒருவகையில் ஏற்றுக்கொண்டுவிடலாம்.

 • கடாபியின் கதையை எடுத்துக்கொள்ளுங்கள். டோனி பிளேரின் ஆலோசகராக இருந்த ஆண்டனி கிப்பன்ஸ் லிபியாவுக்குச் சென்று முகமது கடாபியைச் சந்தித்து பல மணி நேரங்கள் பேசியிருக்கிறார். கடாபியின் (அவர் எழுதியதாகச் சொல்லப்படும்) கிரீன் புக்கைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். அவருடைய புத்திசாலித்தனத்தைப் புகழ்ந்திருக்கிறார். பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று கடாபியின் மகனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. அவருடைய ஆராய்ச்சிக்கட்டுரையை வேறு யாரோ எழுதிக்கொடுத்தார்கள். இப்படி கடாபியோடு ஒட்டி உறவாடி வந்த நாடுதான் பிரிட்டன். பிற்பாடு மிக மோசமான முறையில், கொடூரமாக கடாபி கொல்லப்பட்டார்.

 • டோனி பிளேர், க்ளிண்டன், புஷ், ஒபாமா அனைவருடைய கொள்கையும் ஒன்றுதான். இவர்களிடையே எந்த வேறுபாடும் இல்லை.

 • தற்போது எஞ்சியுள்ள ஒரே சூப்பர் பவர் அமெரிக்கா. அதற்கு எதிர்ப்புகளே இல்லை. ஆசியா, ஐரோப்பா அனைத்தும் அமெரிக்காவுக்கு அடிபணிந்தே நடக்கின்றன. ஒற்றைத் துருவ வல்லரசு ஒன்றின் கீழ் உலகமே இன்று அடங்கியிருக்கிறது. இது நிச்சயம் ஆரோக்கியமான விஷயம் அல்ல.

 • மேற்கத்திய உலகம் பயன்படுத்தும் சில வார்த்தைப் பிரயோகங்களை நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட நாடு ‘ரிஃபார்ம்ஸை’ எதிர்க்கிறது என்று எழுதுகிறார்கள். சந்தைப் பொருளாதாரத்தை ரிஃபார்ம்ஸ் என்று அழைக்கமுடியுமா என்ன?

 • அதே போல், சுதந்தரம் என்றால் ஜனநாயகம். ஜனநாயகம் என்றால் முதலாளித்துவம். ஆக, முதலாளித்துவம் என்றால் சுதந்தரமும் ஜனநாயகமும்தான் என்று மேற்கத்திய உலகம் சொல்லிவருகிறது. அனைத்து வார்த்தைகளையும் ஒன்றுபோல் பாவித்து மாற்றி மாற்றி அவர்கள் பயன்படுத்திவருகிறார்கள். உண்மையில் முதலாளித்துவம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்த அவர்களுக்கே சங்கடங்கள் இருக்கின்றன. அதனால்தான் சுதந்தரத்தையும் ஜனநாயகத்தையும் இழுத்து வந்து நம் முன் நிறுத்துகிறார்கள்.

 • ஜனநாயகம் என்பதை நாம் போராடிப் பெறவேண்டியிருக்கிறது. நாடுகள் ஒவ்வொன்றும் பிரயத்தனப்பட்டுப் போராடியே ஜனநாயகத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால் முதலாளித்துவம் அப்படியல்ல. முதலாளித்துவம் ஜனநாயகத்தை மறுக்கிறது. சுதந்தரத்தை மறுக்கிறது. உழைக்கும் மக்கள் (சார்டிஸ்டுகள்) பிரிட்டனில் அரசியல் சீர்திருத்தங்களுக்காகப் போராடியிருக்கிறார்கள். பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடியிருக்கிறார்கள். முதலாளித்துவம் இந்த அடிப்படை உரிமைகளைக்கூட மறுத்துள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது. முதலாளித்துவமும் ஜனநாயகமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லப்படுவதை நிச்சயம் ஏற்கமுடியாது.


 • இன்றைய மீடியா • சினிமா நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களுக்குப் பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன? சமீபத்தில் விவாகரத்து செய்தவர்கள் யார்? இது போன்ற முக்கிய விவரங்களை உள்ளடக்கிய சினிமா பத்திரிகைகள் வெளிவருவதில் எனக்குப் பிரச்னையில்லை. அதே போல்தான் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படும் பத்திரிகைகளும். யாருக்கு எதில் விருப்பமோ அதைத் தேடிப்பிடித்து காசு கொடுத்து வாங்கிகொள்வார்கள். ஆனால் எல்லாப் பத்திரிகைகளும் திரும்பத்திரும்ப இப்படிப்பட்ட விஷயங்களை அளிக்கவேண்டிய அவசியம் என்ன? சீரியஸ் ரிப்போர்டிங் இன்று குறைந்து வருகிறது.

 • பொதுவாகவே கனமான விஷயங்களைக் கொடுக்கவேண்டாம் என்றே பெரும்பாலான பத்திரிகைகள் நினைக்கின்றன. எதற்காக வாசகர்களைக் கஷ்டப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும்.

 • எதற்காக பல நிருபர்களை ஒரு நிறுவனம் பணியில் வைத்திருக்கிறது என்றே புரியவில்லை. எல்லாப் பத்திரிகைகளும் ஒரே கதையை ஒரே மாதிரியே சொல்கின்றன.

 • ஆழமாக விஷயங்கள் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கான பத்திரிகையாக இன்றும் இருப்பது தி கார்டியன் போன்ற வெகு சில பத்திரிகைகள்தான். ஆனால் அதிலும்கூட இப்போது பல மாற்றங்கள் வந்தவிட்டன. ‘கொலைவெறிக் கதைகள்’ நிறைய வர ஆரம்பித்துவிட்டன. மக்கள் எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அதை மட்டுமல்ல, எது அவர்களுக்குப் படிக்கப் பிடிக்குமோ அதையும் சேர்த்தே கொடுப்போம் என்று முடிவெடுத்துவிட்டார்கள் போல.

 • தி கார்டியனுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. செப்டெம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து மில்லியன் கணக்கில் அமெரிக்கர்கள் தி கார்டியன் இணையத்தை பார்வையிட்டார்கள். தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏன் தாக்கப்படுகிறோம் என்று அவர்களுக்குப் புரியவில்லை. அந்த நெருக்கடியான கணத்தில் அமெரிக்கப் பத்திரிகைகளை நாடி அவர்கள் செல்லவில்லை. அந்த அளவுக்கு கார்டியன்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். இவ்வளவு பேர் ஒரே சமயத்தில் இணையத்தில் தேடியதில் திக்குமுக்காடிப்போன கார்டியன் இணையத்தளம் தாற்காலிகமாக அப்போது செயலிழந்துவிட்டது.

 • டயானா இறந்துவிட்டார். நிச்சயம் இது ஒரு துன்பமான நிகழ்வுதான், சந்தேகமில்லை. இரு குழந்தைகளின் தாய் ஒருவர் திடீரென்று இறந்துபோனாலும் அது வருத்தம் தருவதாகத்தான் இருக்கும். ஆனால் மீடியா இந்தத் துக்கத்தை அத்தனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. அத்தனை பத்திரிகைகளிலும் டயானா கவர் ஸ்டோரி. மாய்ந்து, மாய்ந்து டயானாவின் வாழ்வையும் மரணத்தையும் அலசி ஆராயத் தொடங்கினார்கள். உலகின் மாபெரும் பேரழிவு என்றார்கள். மரணம் நிகழ்ந்த சில ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் டயானா பற்றி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார்கள். அவர் படம் இடம்பெறாத பத்திரிகைகளே இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த எவ்வளவோ செய்திகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு டயானாவை முன்னிறுத்தவேண்டிய அவசியம் என்ன?

 • எதையும் உடனுக்குடன் கொடு என்கிறது இணையம். சுடச்சுட செய்தி, சுடச்சுட கருத்து என்பதுதான் அதன் தாரக மந்திரம். சில விஷயங்களில் இதுவும் நமக்குத் தேவைதான். என்றாலும் பொறுமையாக விஷயத்தை உள்வாங்கி, ஆராய்ந்து அலசி எழுதப்படும் கட்டுரைகளே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
 • எதிர்காலமும் நம்பிக்கையும்


  இன்றுள்ள அரசியல் தலைவர்களிடம் ‘விஷன்’ இல்லை.

  ஹியூகோ சாவேஸின் செயல்பாடுகள் நம்பிக்கையளிக்கும்படியாக இருக்கின்றன. வெனிசூலாவில் அவர் மேற்கொண்ட மாற்றங்கள் கண்கூடானவை. திட்டவட்டமாக முடிவெடுத்து சில மக்கள் நலன் சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார். ‘வெனிசூலாவில் இதற்கு முன்னால் கொள்ளையடித்துக்கொண்டிருந்தார்கள். நாட்டின் எண்ணெய் வளம் அமெரிக்க முதலாளிகளால் உறிஞ்சப்பட்டு வந்தது. இனி அது தொடராது. எண்ணெய் வருவாய் இனி வெனிசூலா மக்களுக்காகச் செலவிடப்படும்’ என்று அறிவித்துவிட்டு அதன்படி நடந்துகொண்டவர் சாவேஸ். கல்வி, மருத்துவம், அடிப்படை கட்டுமானங்கள் என்று பல துறைகளில் வெனிசூலா முன்னேறியுள்ளது. (இன்னமும் முன்னேற வேண்டிய துறைகள் அநேகம் என்பது உண்மை).

 • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியைப் பிடித்த முதல் புரட்சியாளர் சாவேஸ். சாவேஸுக்கு எதிராக வெனிசூலாவில் மீடியா அவநம்பிக்கையுடன் செயல்பட்டது. சாவேஸின் முயற்சிகள் தோல்விடையும் என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி சாவேஸ் வெற்றிபெற்றார். மீண்டும் பத்திரிகை சுதந்தரத்தை இங்கே நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. சிலர் பத்திரிகைகள் வலிமையானவை, அவற்றைமீறி யாரும் எதையும் செய்யமுடியாது என்கிறார்கள். இதுவும் தவறுதான். இல்லாவிட்டால் சாவேஸ் வென்றிருக்கமுடியுமா?

 • எதிர்காலத்தில் புத்தகம் வழக்கொழிந்துவிடுமா என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி ஆகாது என்றே நினைக்கிறேன். நான் ஒரு பழமைவாதி. அதற்காக இணையத்தை நான் பயன்படுத்துவதில்லை என்பதல்ல விஷயம். அதுவும் முக்கியம்தான். ஆனாலும் கையில் எடுத்து வைத்து ஒரு விஷயத்தைப் படிப்பதையே நான் விரும்புகிறேன். உதாரணத்துக்கு, பத்திரிகையை எடுத்துக்கொள்ளுங்கள். எது தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது, எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், அட்வர்டைஸ்மெண்ட் ஸ்பேஸ் எப்படி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது போன்ற விஷயங்களை அச்சில் காணவே நான் விரும்புகிறேன்.

 • இணையம் அச்சிடுவதை எளிமையாக்கிவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு கட்டுரை எழுதினால் அதை நியூ யார்க் டைம்ஸுக்கோ அல்லது அப்படியொரு பத்திரிகைக்கோ அனுப்புவோம். அது பிரசுரமானால் சரி. ஆகாவிட்டால் அத்தோடு தொலைந்தது என்று விட்டுவிடுவோம். வேறு மாற்று இல்லை. ஆனால் இப்போதோ உங்களால் எதையும் சுயமாக இணையத்தில் பதிப்பிக்க முடியும். இந்த மாற்றத்தை வரவேற்கிறேன்.

 • கவுண்டர்பஞ்ச், சலோன் போன்ற இணையத்தளங்கள் பல காத்திரமான கட்டுரைகளைத் தாங்கி வருகின்றன. பிரிட்டன், அமெரிக்கா போன்ற இடங்களில் இப்படிப்பட்ட தளங்கள் இயங்குவதற்கு வாசகர்கள் பண உதவி அளிப்பது சகஜமானது.

 • ஒரு சில பெரிய நிறுவனங்கள் தவிர இப்போதெல்லாம் பத்திரிகையை மட்டுமே நம்பி யாரும் இயங்குவதில்லை. வேறு ஏதோ செய்கிறார்கள், அப்படியே ஓர் ஓரமாகப் பத்திரிகையையும் நடத்துகிறார்கள்.

 • ஒரு பத்திரிகையாளரின் கடமை என்ன? தான் கண்டதை, தனக்கு உண்மை என்று பட்டதை உண்மையாக எழுதவேண்டும். தனக்குப் பிடிக்காத அல்லது கருத்தளவில் தான் சாராத ஓரிடத்தில் இருந்து வரும் விஷயங்களையும்கூட உள்ளது உள்ளபடி பதிவு செய்யவேண்டும். எதிர்கருத்துக்கும் மாற்றுக்கருத்துக்கும் இடம் கொடுக்கவேண்டும். ரிப்போர்டிங்கில் சுயசரக்கு சேர்க்கக்கூடாது. விருப்பு வெறுப்பின்றி அரசியல் கட்சிகளின் சந்திப்புகள், ஊர்வலங்கள், தலைவர்களின் உரைகள் போன்றவற்றைப் பதிவு செய்யவேண்டும். பிற்பாடு அவற்றை மறுத்தோ அல்லது முற்றிலும் நிராகரித்தோ தனியாக எழுதலாம். தவறில்லை. ஆனால் முதலில் எதிர்
 • கருத்தை உரிய முறையில் பிரசுரித்துவிடவேண்டும்.


 • மேற்கத்திய உலகமே செய்தித்துறையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. அவர்கள் முன்வைக்கும் செய்திகளுக்கு மாற்றான செய்திகள், அவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு மாற்றான வாதங்கள் முன்வைக்கப்படவேண்டும்.

 • அரசியல் அழுத்தங்கள் எதுவுமின்றி சுதந்தரமாக ஊடகம் செயல்படவேண்டும். இதில் ஏதேனும் விதிமீறல்கள் நிகழ்ந்தால், ஜனநாயகம் மறைந்துபோகிறது.


 • தாரிக் அலி : ஓர் அறிமுகம்  லாகூரில் பிறந்து வளர்ந்த தாரிக் அலி ஒரு பிரிட்டிஷ் பாகிஸ்தானிய எழுத்தாளர் ஆவார்.


  தி கார்டியன், கவுண்டர்பஞ்ச், லண்டன் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் ஆகிய இதழ்களில் எழுதி வருகிறார். பாகிஸ்தான் அரசியல், அமெரிக்கா, லத்தின் அமெரிக்க அரசியல், பொலிவாரியப் புரட்சி, வரலாறு, இஸ்லாம், சமூகம் போன்ற பல துறைகளில் நூல்கள் எழுதியுள்ளார். பத்திரிகையாளர், நாவலாசிரியர், குறும்பட இயக்குநரும்கூட. இவரது தந்தை மஸார் அலி கான் . தாரிக் அலி  தன் தந்தையிடம் இருந்தே கற்றிருக்கவேண்டும். இஸ்லாமிய  மதத்தின் அடிப்படைகளை தாரிக் அலியின் தந்தை அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.


  பாகிஸ்தான் அரசியல் குறித்து தாரிக் அலி இள வயதிலேயே தீவிரமான விமரிசனக் கருத்துகள் கொண்டிருந்ததால் அங்கே இருப்பது ஆபத்து என்று கருதி பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.


  தாரிக் அலி தனது தொடக்கக்கால அரசியல் உணர்வுகள் குறித்தும் தனது நம்பிக்கைகள் உருபெற்ற கதையையும் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். நீண்ட நாள்களாக அச்சில் இல்லாமல் இருந்து தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர், Street Fighting Years. வியட்நாம் யுத்தத்துக்கு எதிராக ஹென்றி கிஸிஞ்சருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டபோது தாரிக் அலியின் பெயர் பரவலாக வெளியில் தெரிய ஆரம்பித்தது. அமெரிக்கா இன்று வரை போரிடுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. அமெரிக்காவை விமரிசிப்பதையும் தாரிக் அலி இன்றுவரை நிறுத்திக்கொள்ளவில்லை.


  அறுபதுகளில் முளைவிட்ட நியூ லெஃப்ட் என்னும் அறிவியக்கத்தில் தாரிக் அலி தன்னை இணைத்துக்கொண்டார். நியூ லெஃப்ட் ரிவ்யூ இதழில் இணைந்து பணியாற்றினார். ஐஎம்ஜி என்று அழைக்கப்படும் இண்டர்நேஷனல் மார்க்ஸிட் க்ரூப் என்னும் ட்ராட்ஸ்கிய கட்சியில் சேர்ந்தார்.


  மால்கம் எக்ஸ், ஜான் லெனன், ரெஜி டெப்ரே உள்ளிட்டோருடன் நேரடியாகப் பழகியிருக்கிறார் தாரிக் அலி. எட்வர்ட் செய்ட்டுடன் நீண்ட உரையாடல் நிகழ்த்தியிருக்கிறார். வரலாறு குறித்து திரைப்பட இயக்குநர் ஆலிவர் ஸ்டோனுடன் விவாதித்திருக்கிறார். இந்த இரு உரையாடல்களும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.


  அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் நியோ லிபரல் கொள்கைகளையும் தாரிக் அலி கடுமையாகச் சாடி வருகிறார். வெனிசூலாவில் நடைபெற்ற பொலிவாரியப் புரட்சியின்மீதும் அதை நிகழ்த்திய ஹியூகோ சாவேஸின்மீதும் தாரிக் அலிக்கு மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறது.

  - Maruthan

  Thanks: tamilpaper.com

  No comments:

  Post a Comment