Saturday, June 15, 2013

The Debate: Jesslya Vs Thameem



விடயம் : 1
 
 
 
 
 

Jesslya:
 
 
 
தமீம்,
 
உலகிலே நிகழும் அனைத்து நிகழ்வுகளும் இறைவனால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் என்றால் இவ்வுலகிலுள்ள நல்லவை கெட்டவை போன்ற அனைத்திற்கும் அவனேதான் பொறுப்பு .
 
அவனை மீறி அணுவும் அசையாது எனும்போது ஏற்கனவே அவன் தீர்மானித்த உலக நிகழ்வுகளை எவராலும் மாற்றியமைத்துவிடவே முடியாது அல்லவா?

அப்படியானால் இவ்வுலகிலே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பின்பற்றப்போகும் மதம் எதுவென்பதைத் தீர்மானிப்பவனும் இறைவன்தானே.
அதுமட்டுமல்ல உலக மாந்தரிலே 99 வீதமானவர்கள் அவரவர் யாரிடம் பிறந்து வளர்கின்றார்களோ அவர்கள் பின்பற்றும் மதத்தைத்தானே பின்பற்றும் சாத்தியமுள்ளது. மாறாக உலகிலுள்ள சகல மதங்களையும் ஐயந்திரிபற அலசி ஆராய்ந்து அவற்றிலே மிகச்சிறந்ததை தெரிவுசெய்து பின்பற்றுவது கிடையாது.
 
இதற்கு நாமே நல்ல உதாரணமாக இருக்கின்றோம்.
 
தமீம் , ஜெஸ்லியா எனும் நபர்களாகிய நாம் இருவரும் இஸ்லாமியக்குடும்பத்திலே பிறந்தவர்கள். நம்மிருவரது பெயர்கள் கூட நாம் தெரிவு செய்து சூட்டிக்கொண்டவையல்ல. அதுபோலவே தமீம் & ஜெஸ்லியா ஆகிய நாமிருவரும் இஸ்லாத்தைத் தவிர வேறு அனைத்து மதங்களையும் வரிவரியாய்க் கற்றுத் தெளிந்து அவற்றில் சிறந்த மதமென்று தெரிவு செய்து இஸ்லாமிய மதத்தினை ஏற்கவில்லை. மாறாக நம்மிருவரது பெற்றோர் பின்பற்றிய மதம் என்பதால் அது தானாகவே நமக்கு வந்து படிந்துள்ளது. இதுதானே உண்மை?

சிறுவயது முதல் பழகிவிட்ட நமது மதத்தையும் சம்பிரதாயங்களையும் இப்போது அறிவு தெரிந்த காலத்தில் வேறு மதங்களோடு ஒப்பிட்டுச் சரிபார்ப்பதைக்கூட நாம் வெறுக்குமளவுக்கு ஆழப்படிந்து விட்டது.

Ok, இப்போது....
 
நமது அயலிலுள்ள ஒரு சிவாவையும் பீட்டரையும் காமினியையும் நினைத்துப் பாருங்கள். அவர்களும் நம்மைப்போலவேதான் அவரவருடைய மதத்தைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்து நம்மைப்போலவே அவரவர் மத சம்பிரதாயங்களிலே ஊறியவர்கள்.

எப்படி நாம் நமது மதத்தைத்தவிர ஏனைய மதங்களைப் ஐயந்திரிபறக் கற்று
ஒப்பிட்டு நமது மதத்தை தெரிவு செய்யாமல் பெற்றவர்களிடமிருந்து பெற்றக்கொண்டோமோ அதுபோலத்தான்  சிவா, பீட்டர் மற்றும் காமினியும் தங்களது மதத்தை பெற்றுப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
எப்படி தமீம்  & ஜெஸ்லியா இருவரும் அவர்களது மதங்களை விட்டு வேறுமதங்களை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோலத்தான் சிவா, பீட்டர் மற்றும் காமினியாலும் தங்களது மதத்தை விட்டு நமது மதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதாவது காக்கைக்கும்  தன்குஞ்சு பொன்குஞ்சு!
 
So, அவரவருக்குரிய பொன்குஞ்சுகளான மதங்களைப் பின்பற்றுவது என்பது இறைவனின் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஏற்பாடும் கூட.
 
அவ்வாறானால் மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதற்காக மறுமையில் நரகிற்கு அனுப்புவது என்பது எந்த வகையிலே நியாயம் என்பதுதான் எனது கேள்வி.

தமீம், இதற்கு நன்கு சிந்தித்து அதேவேளை மழுப்பாமல் தெளிவான பதில் கூறுங்கள்.

Note 1: இதற்குரிய தமீமின் பதில்கருத்துரை கிடைக்கப்பெற்றதும் அப்படியே பிரசுரிக்கப்படும்.

Note 2: பல தடவை ஞாபகமூட்டியும் கூட  மேலேயுள்ள எனது வினாவுக்கு இன்றுவரையில் தமீமிடமிருந்து பதில் எதுவும் கிடைத்தபாடில்லை. அவருக்கு கடைசியாக நான் அனுப்பிய மின் அஞ்சல் செய்தியையும் அப்படியே தருகின்றேன். இன்னும் சில தினங்களுக்குள் அவர் பதிலிறுக்க முயலாவிட்டால் இந்த விவாதத்தை சிறகுகள் தளத்தை  பார்வையிடுவோரும் பங்குபற்றும் பொது விவாதமாக்கி  விடுவதுதான் சிறந்தது என்று தோன்றுகின்றது.  Let's wait & see!

- JJ 4/7/'13


e-mail to Thameem:



தமீம்,

கடைசியாக நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு நாளையுடன் வயது 10 நாட்களாகின்றன.

உங்களது முன்னைய கருத்துகளைப் படித்து நீங்கள் விவாதத்திற்கு முன்வருவீர்கள் என்று நம்பி எனது தளத்தில் அதற்கென ஒருபகுதியைக் கூட ஒதுக்கியிருந்தேன். ஆனால் நீங்கள் இதோ பதிலெழுதுகின்றேன் அதோ பதில் தருகின்றேன் என்று நம்பிக்கை தந்து விட்டு இன்று வரை அதைச் செய்யாமலே காலம் கடத்திக்கொண்டிருக்கின்றீர்கள்.
இது உங்களுடைய பதில் கூறமுடியாத இயலாமைக் காண்பிக்கின்றது என்ற முடிவுக்கு உடனடியாக வர விரும்பவில்லை. ஆயினும் இப்படியே தொடர்ந்து மௌனம் சாதித்தபடியிருந்தால் அப்படிக் கருதுவதைத் தவிர வேறுவழியில்லாது போகும்.
எனவே வெகுவிரைவிலே பதில் கூறப்பாருங்கள்.



நண்பர்களே!

 கடைசியில் நமது தமீம் ஒரு செய்தியை என்று பெயரிலியாக அனுப்பியுள்ளார். அதையும் அதற்கான எனது பதிலையும் இதோ கீழே எதுவித மாற்றங்களும் புரியாமல் அப்படியே பிரசுரிக்கின்றேன்.


உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். (5/7/'13)


  1. It was a great explanation made by brother Abu Jeza / Mohamed Uwais. May Allah bless u brother.

    சகோதரி, இஸ்லாத்தில் ஈமான் கொள்ள வேன்டிய 6 விடயங்களில் ஒன்று, நன்மை தீமை யாவும் இறைவன் நாட்டப்படியே நடைபெறும் என்பதை நம்புவதாகும். தங்களின் கேள்வியானது இறைவனுக்கு எதிராக விவாதிப்பது போன்று உள்ளது.
 
 

  1.  
  2.  
  3.  
  4.  தமீம்,

    Anonymous என்று பெயரிடாமல் அனுப்பியிருக்கின்றீர்கள். இருந்தாலும் உங்கள் இக்கட்டான நிலைமை எனக்கு நன்றாகவே புரிகின்றது. "எப்படியான விவாதத்திற்கும் தயார்" என்று அன்று நான் விவாதத்திற்கு அழைத்தபோது மார்தட்டினீர்கள். இப்போது இறைவனின் நாட்டம் அது இது என்று பின்வாங்குகின்றீர்களே..?

    ஒருவிடயத்திற்குள் இறங்குவதற்கு முன்பு யோசிக்கவே மாட்டீர்களா நீங்கள்..?

    Ok, எல்லாமே இறைவனின் நாட்டம் என்று நம்பவேண்டும் என்று கூறியிருப்பது ஒன்றும் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு சோம்பேறிகளாய் படுத்திருப்பதற்கல்ல; அந்த நிகழ்வின் தன்மையறிந்து அதற்கேற்றபடி நாம் நடந்துகொள்வதற்காகத்தான்.

    உங்கள் பேச்சின்படி பார்த்தால், பல மாதங்களுக்கு முன்பு சிலர் The innocence of Muslims எனும் முகம்மது (ஸல்) அவர்களை அவதூறுபுரியும் ஒரு திரைப்படத்தை தயாரித்து திரையிட்டபோது அதுவும் இறைவனின் நாட்டமே (அதாவது இறைவனே தனது தூதரை அவமானம் செய்து படம் பிடிக்க நாடியிருக்கின்றான்) என்று நாம் வாளாவிருந்திருக்க வேண்டும் என்றா கூறுகின்றீர்கள்? அதனை நாம் எதிர்த்து போராட வேண்டாமா?

    "சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்!" நரிகள் போல எட்டாத பழத்திற்குப் பாய்வதும் பின்பு தடுமாறி வீழ்ந்து எழுந்து ஒளிந்தோடுவதும்தான் வீரதீர ஆண்பிள்ளைகளுக்கு அழகோ?
 

7 comments:

  1. ச்கோதரி
    ஒரு கொள்கையில் பிறந்து விட்டோம் என்பதற்காக அதை பற்றி ஆழ்ந்து சிந்திக்காமல் விளங்கி கொள்ளாமல் அதிலே இருப்பது அறிவுடமையல்ல.
    இஸ்லாமும் அதை வரவேற்க வில்லை
    இறைவனுடைய வசனங்களை கண்ணை மூடிக்கொண்டு அதிலே விழாமல் சிந்தித்து நம்பிக்கை கொள்ளும் படியே இஸ்லாம் ஏவுகிறது.
    இஸ்லாத்தின் அடிப்படையான அம்சங்களிலேயே தெளிவில்லாமல் நீங்கள் இருப்பது உங்கள் கேள்விகளில் நன்கு புரிகிறது.

    இஸ்லாம் உணமையான மார்க்கம் என்பதை அறிவுபூர்வமாக விளக்குவதற்கு நிறையவே சான்றுகள் அழ குர்ஆனில் நிறைந்து இருக்குன்றன அவற்றை சிந்தித்து உணர்ந்து ஏற்றுக்கொண்ட ஒருவர் விதி பற்றிய இஸ்லாத்தின் நம்பிக்கையை ஏற்றுக் கொள்வார்.
    சிறிய உதாரணம் மூலம்விளக்குவதாயின் ஒருஆசிரியர் அவர் வகுப்பு மாணவர்களின் பரீட்சை முடிவுகளை முன்கூட்டியே அவரது அனுபவத்தின் மூலம் ஒரு இடத்தில் எழுதி வைத்து அதன் படியே முடிவுகளும் வந்தால் அவர் அவ்வாறு எழுதிவைத்த தாள் தான் நான் பரீட்சையில் சித்தியடைய வில்லை என்று ஒரு மாணவன் கூர முடியுமா? அவ்வாறுதான் இறைவன் நாட்டம் என்பதும் அது அவனது அறிவால் எதுவெல்லாம் நடக்கும் என்று முன் கூட்டியே எழுதி வைத்து விட்டான். மேலும் இது நம்பிக்கை சார்ந்த விடயம்.

    இஸ்லாத்தில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கு தெள்ளத்தெளிவான பதில் உண்டு. அது பற்றி கலந்துரையாடல் விவாதம் செய்வதற்கும் அனுமதி உண்டு.

    ஆனால் இதிலிருந்து விதி மட்டும் மாறுபடுகின்றது. நம்முடைய இறை நம்பிக்கைக்கு விதியை அல்லாஹ் சோதனையாக ஆக்கியுள்ளான். விதியை நம்பினால் அதிகமான நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது.

    விதியை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. நடந்து முடிந்த விஷயங்களுக்கு மட்டுமே விதியின் மீது பலிபோட முடியும். அதாவது விதியை நம்பக்கூடியவரின் வாழ்க்கையில் பாரதூரமான துன்பம் ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் மனவலிமை விதியின் மூலம் அவருக்கே ஏற்படுகிறது. அதே போல் சந்தோஷமான நிகழ்வுகளை அவர் சந்திக்கும் போது ஆணவம் கொள்ளாமல் எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படித்தான் நடந்தது என்று பணிவுடன் நடப்பதற்கும் இந்த விதி காரணமாக உள்ளது.

    இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். அல்குர்ஆன் (57 : 22) விதியை நம்பும்போது சில சிக்கலான கேள்விகள் எழுவதைப் போன்று விதியை நம்பாவிட்டால் அப்போதும் சிக்கலான கேள்விகள் எழத்தான் செய்கின்றன. எனவேத் தான் விதிதொடர்பாக சர்ச்சை செய்ய வேண்டாம் என மார்க்கம் வழிகாட்டியுள்ளது. Pls see next comment

    ReplyDelete
  2. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபித்தோழர்கள் விதி தொடர்பாக தர்க்கம் செய்துகொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் வருகை தந்தார்கள். உடனே கோபத்தால் அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்துவிட்டது. இவ்வாறு செய்யுமாறு நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே. உங்களுக்கு முன்னால் உள்ள சமுதாயங்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்துபோனார்கள் என்று கூறினார்கள். இப்னு மாஜா (82) எனவே விதிதொடர்பாக நாம் சர்ச்சை செய்யக்கூடாது. நடந்து முடிந்த விஷயங்களுக்கு விதியை காரணம் காட்டலாம். இனி நடக்கவிருக்கின்ற விஷயங்களைப் பொறுத்தவரை விதியை காரணம் காட்டி செயல்படாமல் இருந்துவிடக்கூடாது. நாம் செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. விதியை காரணம் காட்டி நல்லமல்கள் செய்யாமல் இருந்துவிடலாமா? என்று நீங்கள் கேட்ட கேள்வியை நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை இங்கே தருகிறோம்.

    ReplyDelete
  3. அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

    நாங்கள் பகீஉல் கர்கத் என்னும் பொது மையவாடியில் ஒரு ஜனாஸாவில் கலந்துகொண்டோம் அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும் நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தலை குனிந்தவர்களாகத் தமது கைத்தடியால் தரையைக் கீறிக்கொண்டு, "உங்களில் யாரும் அல்லது எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை; தீய கதியுடையதா, நற்பேறுடையதா என்பதும் நிர்ணயிக்கப்படாமலில்லை'' எனக் கூறினார்கள். உடனே ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதை நம்பி, (நற்) செயல்களில் ஈடுபடுவதை நாம் விட்டுவிடலாமா? ஏனெனில் நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக நல்லவர்களின் செயல்களில் ஈடுபடுவார்கள்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாகத் தீயவர்களின் செயல்களில் ஈடுபடுபவர்கள்தாமே?'' என்றதும், நபி (ஸல்) அவர்கள், “"நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்களுக்கு நல்லமல்கள் செய்வது எளிதாக்கப்படும்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும்'' என்று கூறிவிட்டு, “"எவர் தான தர்மம் கொடுத்து, பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகின்றாரோ...'' என்ற (92: 5,6ஆகிய) வசனங்களை ஓதிக் காட்டினார்கள் புகாரி (1362) நாம் சொர்க்கவாசியா? நரகவாசியா? என்பது நமக்குத் தெரியாது. நான் நரகவாசி என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தாலே இனி நான் நல்லறங்கள் செய்து என்ன புண்ணியம் என்று கேட்பதில் நியாயம் இருக்கின்றது. நமது முடிவு என்னவென்பது நமக்குத் தெரியாமல் இருக்கும் போது நல்லதை நோக்கியே நமது முயற்சி இருக்க வேண்டும்.

    உலக விஷயங்களில் இவ்வாறு தான் நாம் நடந்துகொள்கிறோம். அல்லாஹ் நமக்கு விதித்த செல்வம் வரும் என்று கூறிக்கொண்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கமாட்டோம். நம்மால் முடிந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொள்வோம். நோய் வந்தால் இறைவன் நாட்டப்படி நடக்கட்டும் என்று கூறி மருத்துவம் செய்யாமல் இருப்பதில்லை. நமது முயற்சியையும் மீறி ஏதேனும் நடந்தாலே விதியை காரணம் காட்டுவோம். இதுபோன்றே நல்லமல்கள் விஷயத்திலும் நாம் நடந்துகொள்ள வேண்டும். அல்லாஹ் நம்மை ரோபோ மிஷின்களைப் போன்று சுயவிருப்பம் வழங்கப்படாத படைப்பாக படைக்கவில்லை. மாறாக நல்லவற்றையையும் தீயவற்றையையும் நமக்கு காட்டித்தந்துள்ளான். இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்கின்ற அதிகாரத்தையும் ஆற்றலையும் இந்த உலகத்தில் நமக்கு வழங்கியிருக்கிறான். அறிவைத் தந்திருக்கின்றான். நமக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒரு வேதத்தையும் இறைத்தூதரையும் அனுப்பியுள்ளான். எனவே சிந்தித்து நல்லவற்றை செய்து தீயவற்றை விட்டும் விலகி இருப்பது தான் அறிவுடமை. அப்போது தான் வெற்றி கிடைக்கும். விதியை நம்பச் சொன்ன அல்லாஹ் தான் நல்லறங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறான்.

    "நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் (18 : 110)

    Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/-/
    Copyright © www.onlinepj.com

    ReplyDelete
  4. விதி பற்றிய எனது பதிலை இது வரை நீங்கள் பதிவேற்றாமல் கவனமாக தவிர்த்து வருகிறீர்கள்..நல்லது தமீமின் பதிலைதான் பதிவேற்ற்வீர்கள் போலும்..

    தனித்து ஒருவரோடு விவாதிப்பதை விட பகிரங்கமாக விவாதிக்கலாமே..

    ஒரு கொள்கையை விமர்சிக்கும் போது அந்த கொள்கை சார்ந்த அனவரின் கருத்துக்களையும் உங்கள் தளத்தில் பகிர்ந்தால் என்ன?

    முடிந்தால் உங்கள் தளத்திலேயேபகிரங்கமாக இஸ்லாம் பற்றிய ஒவ்வொரு விமர்சனத்திஅயும் முன்வையுங்கள் பகிரங்கமாக விவாதிப்போம் இன்ஷா அல்லாஹ்.

    உங்கள் ஈமைல் தெரியவில்லை அதனால் தான் கொமன்டில் எழுதுகிறேன்.

    my email: uwaiskky@gmail.com

    ReplyDelete
  5. Abu Jeza,

    University பரீட்சைக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்த காரணத்தால் பல நாட்களுக்குப் பின்பு இன்றுதான் எனது தளத்தையே திறந்து பார்வையிட்டேன். அதனால்தான் உங்களது பின்னூட்டங்கள் பிரசுரமாகவில்லையே தவிர வேறு உள்ளார்ந்த நோக்கமேதுமில்லை.

    தனிப்பட்ட தாக்குதலும் கண்ணியம் தவறாத மற்றும் தொடர்பற்ற வார்த்தைகளும் இல்லாதவரையில் எந்தவொரு கருத்துரைகளும் ஒதுக்கப்படாது நண்பரே.

    ReplyDelete
  6. It was a great explanation made by brother Abu Jeza / Mohamed Uwais. May Allah bless u brother.

    சகோதரி, இஸ்லாத்தில் ஈமான் கொள்ள வேன்டிய 6 விடயங்களில் ஒன்று, நன்மை தீமை யாவும் இறைவன் நாட்டப்படியே நடைபெறும் என்பதை நம்புவதாகும். தங்களின் கேள்வியானது இறைவனுக்கு எதிராக விவாதிப்பது போன்று உள்ளது.

    ReplyDelete
  7. தமீம்,

    Anonymous என்று பெயரிடாமல் அனுப்பியிருக்கின்றீர்கள். இருந்தாலும் உங்கள் இக்கட்டான நிலைமை எனக்கு நன்றாகவே புரிகின்றது. "எப்படியான விவாதத்திற்கும் தயார்" என்று அன்று நான் விவாதத்திற்கு அழைத்தபோது மார்தட்டினீர்கள். இப்போது இறைவனின் நாட்டம் அது இது என்று பின்வாங்குகின்றீர்களே..?

    ஒருவிடயத்திற்குள் இறங்குவதற்கு முன்பு யோசிக்கவே மாட்டீர்களா நீங்கள்..?

    Ok, எல்லாமே இறைவனின் நாட்டம் என்று நம்பவேண்டும் என்று கூறியிருப்பது ஒன்றும் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு சோம்பேறிகளாய் படுத்திருப்பதற்கல்ல; அந்த நிகழ்வின் தன்மையறிந்து அதற்கேற்றபடி நாம் நடந்துகொள்வதற்காகத்தான்.

    உங்கள் பேச்சின்படி பார்த்தால், பல மாதங்களுக்கு முன்பு சிலர் The innocence of Muslims எனும் முகம்மது (ஸல்) அவர்களை அவதூறுபுரியும் ஒரு திரைப்படத்தை தயாரித்து திரையிட்டபோது அதுவும் இறைவனின் நாட்டமே (அதாவது இறைவனே தனது தூதரை அவமானம் செய்து படம் பிடிக்க நாடியிருக்கின்றான்) என்று நாம் வாளாவிருந்திருக்க வேண்டும் என்றா கூறுகின்றீர்கள்? அதனை நாம் எதிர்த்து போராட வேண்டாமா?

    "சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்!" நரிகள் போல எட்டாத பழத்திற்குப் பாய்வதும் பின்பு தடுமாறி வீழ்ந்து எழுந்து ஒளிந்தோடுவதும்தான் வீரதீர ஆண்பிள்ளைகளுக்கு அழகோ? -JJ

    ReplyDelete