Friday, March 8, 2013

இலங்கை குறித்து அமரிக்காவின் 2013 திட்டங்கள் என்ன? :






லகத்தின் பேட்டை ரவுடி அமரிக்காவின் முடிவு தான் முடிந்த முடிவு.


வாசிங்டனிலோ நியூயோர்கிலோ உலகத்தின் மூலையில் இருக்கும் நாடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். அரசுகள் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதை நடைமுறைப்படுத்த உள்ளூர் முகவர்களை தந்திரமாகத் தயார்படுத்திக்கொள்வார்கள். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசுகள், அமரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளோ இல்லை உலகில் வாழும் பன்நாட்டு நிறுவனங்களோ பணக் கொடுப்பனவுகளைச் செய்யும். பணத்தைப் பெறுபவர்கள் சிறிய கிராமிய அமைப்புக்களிலிருந்து பெரும் கட்சிகள் வரை யாராகவும் இருக்கலாம். சில சிக்கலான நாடுகளுக்கு அமரிக்க அரசு நேரடியாகவே பணக் கொடுப்பனவுகளை செய்யும்.
 
 
உலகம் முழுவதும் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான தன்னார்வ நிறுவனங்களை விச வித்துக்கள் போல் விதைத்து வைத்திருக்கிறார்கள். இவற்றில் சில உளவு வேலைகள் கூட செய்கின்றன.
 
இலங்கையில் ஜனநாயகத்திற்கானதும், நல்லாட்சிக்கானதும்(Democracy and Governance ) என்ற திட்டத்தை முன்வைத்து அமரிக்க அரசு இயங்கிவருகிறது. யூஎஸ் எயிட்ஸ் (United States Agency for International Development (USAID)) என்ற அமரிக்க அரசின் சரவதேசப் பிரிவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் USAID நிறுவனம் பல நாடுகளின் ஆட்சியைக் கவிழ்க்கவும் புதிய ஆட்சிகளை உருவாக்கவும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.
 
 
ஆப்கானிஸ்தான், கிழக்கு தீமோர், பங்களாதேஷ், கம்போடியா, ஈராக், நேபாளம், யெமன் உட்பட இலங்கையும் இந்த நிறுவனம் தீவிரமாக இயங்கும் நாடுகளில் ஒன்று.
 
 
இந்த நிறுவனம் ஊடகங்களுக்கும், தனிநபர்களுக்கும், கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும், அடையாளம் சார்ந்த இயக்கங்களுக்கும் பணக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும். சில சந்தர்பங்களில் அமரிக்க அரசுக்கு சார்பாக ஒரு அரசு முழுமையாக மாறும் வரை எதிர்க்கட்சிகளை வளர்த்து பின்னதாக அழித்து சிதைத்துவிடும் என்று செவேஸ் கோட் என்ற நூலை எழுதிய எவா கோலிக்கர் என்பவர் கூறுகிறார்.
 
 
ஜனநாயகமும் நல்லாட்சியும் என்ற தலையங்கத்தில் இலங்கையில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அந்த நிறுவனத்தின் (USAID) அடிப்படைத் திட்டமே கூறிவிடுகிறது.
 
 
-ஒரு நாட்டில் கட்சி அதிக பலமுடையதாக இருத்தல் ஆபத்தானது.
 
 
-ஒரு நாட்டில் கட்சி என்பது குடிசார் அமைப்புக்களை விட பலமானதாக அமைந்திருந்தால் அல்லது ஒரு கட்சி ஆட்சி அமைந்திருந்தால் தமது வேலை இலகுவானது.
 
 
-நாம் புதிய அமைப்புக்களை உருவாக்குவது இலகுவானது.
 
இவ்வாறு ஒரு கட்சி பலமான நிலையிலிருக்கும் நாட்டில் எதிர்க்கட்சியைப் பலப்படுத்தி ஆளும் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே அமரிக்காவின் நோக்கம்.
 
 
இதற்காக அமரிக்காவின் நேரடி நிதி உதவியில் செயற்பட்டு வெற்றிகண்ட மாணவர் அமைப்பை தமது திட்டத்திலேயே உதாரணமாக முன்வைக்கிறார்கள். சேர்பியாவில் சில்படொன் மிலோசவிச்சை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு அங்கே மாணவர் அமைபுக்களுக்கு அமரிக்கா நேரடியாகவே நிதி உதவி வழங்கியது
 
 
சேர்பியாவில் அன்றிருந்த மாணவர் ஒன்றிய இயக்கம் எனப்படும் ஒட்போர்  (OTPOR) என்ற அமைப்பு ஊக்கப்படுத்திய அமரிக்கா தமக்கு முழுமையாகச் சார்பான அரசு ஒன்று அமையும் வரை நாட்டை 'ஜனநாயகப்படுத்துவதாக' அமரிக்க அரசின் வெவ்வேறு உப - உறுப்புக்கள் ஊடாக நிதி உதவி வழங்கியது.
 
சேர்பியாவின் நிலையிலிருந்து இலங்கை சிறிதளவு வேறுபடுகிறது. இலங்கையில் அதிகாரத்திலிருக்கும் குடும்பம் அமரிக்க அரசின் நலன்களுக்கு முழுமையாக முரண்பட்டதல்ல. ஆயினும் உலகின் அதிகார மையங்கள் முகாம்களாகப் பிளவுபடும் நிலையில் இலங்கை அரசு தனது நலன்களின் அடிப்படையில் எதிர்கால நகர்வுகளை அமரிக்கா தவிர்ந்த அரசுகளோடும் மேற்கொள்ளும். இதனால் இலங்கையில் ஆட்சி மாற்றத்தையோ அன்றி பலமான எதிர்க்கட்சியையோ தோற்றுவிப்பதே அமரிக்காவின் நலன்களுக்குப் பொருத்தமானது.
 
 
இதனை அடிப்படையாகக் கொண்டே அமரிக்க அரசின் ‘ஜனநாயகமும் நல்லாட்சியும்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுவரைக்கும் 20 மில்லியன் அமரிக்க டொலர்களை இலங்கையில் இத்திட்டத்திற்காக செலவு செய்துள்ளதாக அமரிக்க அரசு கூறுகின்றது.
 
 
ஆக, இலங்கையில் தோற்றுவிக்கப்படும் எழுச்சிகளும் மொட்டையான சுலோகங்களும் அரசின் அடிப்படைக் கட்டமைவினைச் சிதைக்கின்றனவா என்ற கேள்வி இன்று முதன்மையானது. வட-கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு போராட்டம் நடைபெறுகிறதா? ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை கோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா? போராட்டங்கள் எந்த வர்க்கத்தின் நலனை முன்னிலைப்படுத்துகின்றன? போராடுவதாகக் கூறும் அமைப்புக்களின் பண மூலம் என்ன? சமூக மாற்றத்திற்கான அடிப்படை அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றனவா? இலங்கையில் பிரதான முரண்பாடு மற்றும் அடிப்படை முரண்பாடுகள் குறித்த கட்சிகளின் நிலை என்ன? போன்ற அடிப்படையான அடிப்படையான ஆய்வுகளிலிருந்தே ஏகாதிபத்தியங்கள் முன்மொழியும் நாச வேலைகளிலிருந்து தப்பித்துகொள்ள இயலும்.
 
2013 ஆம் ஆண்டு உணர்ச்சிவயப்பட்ட நடவடிக்கைகளைவிட அறிவுபூர்வமான அவதானமான நகர்வுகளையே வேண்டி நிற்கிறது.
 
-நிவேதா நேசன்
 
Thanks: innoru.com

No comments:

Post a Comment