கிரகணாதி கிரகணங்கட்கப்பாலுமே
ஒரு அசகாய சக்தியுண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும்
ஆருக்கும் விளங்காததாம்
அதைப்பயந்து அதையுணர்ந்து
அதைத் துதிப்பதைத்தன்றி
பிறிதேதும் வழியில்லையாம்
000
நாம் செய்ததெல்லாம் முன்செய்ததென்று
விதியொன்று செய்வித்ததாம்
அதைவெல்ல முனைவோரை
சதிகூட செய்தது அன்போடு ஊர்சேர்க்குமாம்
குருடாக செவிடாக மலடாக முடமாக
கருசேர்க்கும் திருமூலமாம்
குஸ்ட குஸ்யம் புற்று சூலை மூலம் என்ற
குரூரங்கள் அதன் சித்தமாம்
000
புண்ணில் வாழும் புழு
புண்ணியம் செய்திடின் புதுஜென்மம் தந்தருளுமாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதிசேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை
வேடிக்கை பார்ப்பததன் வாடிக்கை விளையாடலாம்
000
நேர்கின்ற நேர்வெல்லாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதன்செயலாம்
பரணிகள் போற்றிடும்
உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணிதந்தது காக்குமாம்
நானூறுலட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி
அல்குலின் சினைசேர்க்குமாம்
000
அசுரரைப்பிளந்தபோல் அணுவதைப் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்க்கருளிடும்
பரிவான பரபிரம்மமே
000
உற்றாரும் உறவினரும் கற்றாரும்
கற்றுக் கற்பித்து உளமார தொழும்சக்தியை
மற்றவர் வை(யும்) பயம் கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்று கொள்!
ஆகமக்குளம் மூழ்கி மும்மலம் கழி
அறிவை ஆத்திகச் சலவையும் செய்!
000
கொட்டடித்துப் போற்று..!
மணியடித்துப்போற்று கற்பூர ஆரத்தியை..!
தையடா ஊசியில் தையெனத் தந்தபின்
தக்கதைத் தையாதிரு!
உய்திடும் மெய்வழி உதாசீனித்தபின்
நைவதே நன்றெனில் நை!
-கமல்ஹாஸன்
Thanks :' Coffee with Anu' TV programme
No comments:
Post a Comment