Sunday, March 3, 2013

சிறுகதை : விஸ்வரூபம்






யாரித்து முடித்த நாள் முதலாய் திரையிடப்பட முடியாமல் சர்ச்சைக்குள்ளாகி இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு பிரபல்யமான தென்னிந்தியத் தமிழ் திரைப்படம்.  பின்பு அது தடைகளையெல்லாம் மீறி ஒருவழியாக தலைநகரின் திரைகளுக்கு வந்திருந்தபோது அதனைப் பார்ப்பதற்காக தலைநகருக்குச் சென்றுவரத் தீர்மானித்தேன்.


விஷம்போல ஏறிச்செல்லும் விலைவாசிக்கும் இன்றிருக்கும் வாழ்க்கைச் செலவுக்கும் மத்தியில் என்னைப் போன்ற ஓர் அரசஊழியன் தலைநகருக்குச் சென்றுவருவது என்பது அதுவும் ஒரு திரைப்படத்தைப் பார்த்து ரசிப்பதற்காக பணம் செலவழித்து ஏறத்தாழ இருநூற்று ஐம்பது கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து திரும்புவது என்பதெல்லாம் நிச்சயம் மிகை முயற்சிதான்.


ஆனாலும் குறித்த திரைப்படம், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலே ஏற்படுத்திய பரபரப்புகளாலும் இணையத்தளங்களிலே அது தொடர்பாக நீண்டு கொண்டே போன இழுபறி விவாதங்களாலும் உருவாகிய 'அப்படி என்னதான் அதிலே இருக்கின்றது..?' என்ற சுவாரசியம் என்னைத் தின்று துளைத்தது. அந்த சுவாரசியம்தான் அடுத்தமாத பட்ஜட் பற்றிய அபாய உணர்வுகளையெல்லாம் தற்காலிகமாக ஒத்திப்போட்டு கொழும்புக்குச் சென்று உயர்ந்த தொழினுட்பத்தரத்துடன் அந்த படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று என்னைத் தூண்டியிருக்க வேண்டும்.


 'படம் பார்க்க கொழும்பு செல்கின்றேன்' என்று யாராவது கேட்டால் சொல்ல முடியுமா? அப்படிக் கூறினால் எனது அலுவலகத்திலும் அயலிலும் வாழும் மத்தியதர வர்க்க சகமனிதர்களால் அதைத்தாங்கிக் கொள்வதற்குத்தான் முடியுமா என்ன? குறைந்தபட்சம் ஆதர்ச நாயகர்களுக்கு ஆளுயர கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் புரிகின்ற தமிழ்நாட்டு சினிமாப் பைத்தியங்களோடு என்னையும்  இணைத்து கிசுகிசுத்துப் பழிவாங்கி விடுவார்கள். அதற்காகவே வேறு ஏதாவது ஒரு பொருத்தமான காரணம் தேடினேன்.  என்ன செய்யலாம் என்று மூளையைக் கசக்கியபோதுதான் சட்டென அது ஞாபகம் வந்து என் வயிற்றில் மைலோ வார்த்தது.


இப்போது மனதை உறுத்திக்கொண்டிருந்த குற்றவுணர்வு ஓரளவு தணிந்திருந்தது. அன்றைய தினம் கொழும்பு புறப்படும் இரவுத்தபால் ரயில்வண்டிக்குரிய ஒருசோடி புகையிரத ஆணைச்சீட்டுக்களை அலுவலகத்தில் எழுதிப் பெற்றுக்கொண்டு மாலையில் வீடு திரும்பினேன்.


000




'என்ன திடீரென்று... சொல்லவேயில்லையே நீங்க?'
கையிலே சமையல் கரண்டியுடன் அதிர்ச்சி காண்பித்த மனைவிக்கு காரணத்தை எப்படிச் சொல்வதென்று புரியாமல் விழித்தேன்.

'அது வந்து.. இந்த ஈடீசிஎஸ் ஊழியர் சேமலாப நிதி தெரியுமா... அது விஷயமா...'

 'சரி, அந்தப்படத்தைப்போய்  பார்த்திட்டு வாங்க! ஆனா நிறையச் செலவழிச்சிராதீங்க.. கரண்டுக்கும் ரெட் பில் வந்திருக்குது... உங்க உடுப்பு ஏதும் கழுவுறதெண்டால் ப்ளாஸ்டிக் பக்கட்டில எடுத்துப்போடுங்க?' என்றுவிட்டு சமையலறைக்குள் புகுந்துவிட்டாள் அவள்.

அவளுக்கு ஈடீசீஎஸ் பற்றித் தெரியாது போனாலும் சர்ச்சைக்குரிய திரைப்படம் பற்றிய செய்திகளை விடாமல் நான் வாசிப்பதையும் அலுவலக நண்பர்களுடன் நேரிலும் போனிலும் முழுமூச்சாக விவாதிப்பதையும் நன்கறிந்திருந்தாள்.

'என்ன யோசிக்கிறீங்க... ட்ரெயின்ல வோரண்ட்லதானே போறீங்க..?'

'ஓமோம்.. நாளைக்கு காலையில லிலானியை என்ன செய்யிறது?'

'அவளை நான் பஸ்ல கூட்டிக் கொண்டு போய் டியூஷனுக்கு விடுறன். நீங்க ஞாயிற்றுக்கிழமை விடிய வந்திடுவீங்கதானே..?'

'பின்னே..? அங்கேயே குடியிருக்கிறதுக்கா போறேன்.. திங்கள் ஒபிஸ்ல ஓடிட் வேற இருக்கு'


000 






திருகோணமலை ரயில் நிலையத்தில் போய் நான் இறங்கியபோது ரயில் புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரமிருந்தது. நான் எதிலுமே சற்று முன்ஜாக்கிரதை முத்தண்ணாதான். கடைசிநேரத்தில் அல்லாடுவதெல்லாம் அறவே பிடிப்பதில்லை.


இரண்டாம் வகுப்பு டிக்கட் கவுண்டரில் இருந்தவரிடம் ஆணைச்சீட்டை நீட்டினேன்.

'இதுல சைனா பேயிலிருந்து புறப்படுறதா எழுதுப்பட்டிருக்கே.. மறந்துபோய் இங்க வந்திட்டீங்களோ..?' என்று சிரித்தபடி அதைத் திருப்பித் தந்தார் அந்த கவுண்டர் க்ளார்க். திருகோணமலை நகருக்கு அடுத்த ரயில் நிலையமான சீனக்குடாவிலிருந்து புறப்படும் விதமாக ஆணைச்சீட்டை எழுதி வந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

'பரவாயில்லை, ஒரு டிக்கட் எடுத்து இதே ட்ரெயின்ல சைனாபே போங்க. அங்க ஒரு பத்து நிமிஷம் நிக்கும். அங்கிருந்து உங்க வொறண்டை பாவியுங்க..' என்றபடி தந்தார் அவர் புன்னகை மாறாமல்.

புகையிரத மேடைக்கு நான் இறங்கியபோது தண்டவாள ஸ்லீப்பர் கட்டைகளுக்குப் புதிதாக அடித்திருந்த ஒயில் நாற்றம் நாசியைத் தாக்கியது. மேடையின் இடதுபுறமாக சற்றுத்தூரத்திலே இருளான இடத்தில் ரயில் எஞ்சின் இரைந்தபடி நின்றிருக்க பயணிகள் பெட்டிகள் கூட்டமின்றி வெறிச்சோடிக்கிடந்தது. ஒருசோடி உடுப்பு ஒரு டயறியுடன் முதுகிலே தொங்கிய நூல்பை மற்றும் ஒரு கையில் மனைவி கட்டித்தந்த இரவுச்சாப்பாட்டுப் பார்சல்; சகிதம் பயணிகள் பெட்டி ஒன்றிற்குள் ஏறி இரண்டாம் வகுப்பு இருக்கைகளைத் தேடி ரயில் பெட்டிகளுக்கேயுரிய நாற்பது வோட் மங்கலான வெளிச்சத்தில் நடந்தேன்.


இரண்டாம் வகுப்புப்பெட்டி என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் யன்னோலர இருக்கை தேடி அமர்ந்திருந்தார்கள். தெரிந்த முகமாக யாருமே தென்படவில்லை. இரவுநேரப் பயணமேயானாலும் எனக்கு ஓடும் ரயிலில் தூக்கம் வருவதில்லை. தெரிந்தவர்களும் இல்லையென்றால் இரவு முழுவதும் கொட்டக்கொட்ட விழித்தபடி சிந்தனைகளின் இறுக்கத்தில் உழன்று கொண்டுதான் இருக்கவேண்டும். 'சே! வாசிப்பதற்கு புத்தகம் ஏதாவது கொண்டு வந்திருக்கலாம்' என்று உள்ளுர நொந்து கொண்டிருந்தபோது யாரோ 'உஷ்ஷ்....ஷ்ஷ்!' என்று கூப்பிட்டார்கள்.


'என்னடா வாசுதேவா, யாரை ஏத்திவிட வந்த நீ...?'

பழகிய குரல் கேட்டு நிமிர்ந்தபோது வெளியே புகையிரத மேடையில் சிரித்தபடி நின்றிருந்தான் சலீம். அவன் என்னுடைய பழைய நண்பன். மிகவும் ஜாலியான பேர்வழி. ஒருகாலத்தில் இருவரும் திருகோணமலை தபால் அலுவலகத்தில் அமைய ஊழியர்களாக ஒன்றாக வேலைபார்த்தவர்கள். அதிலிருந்து கொண்டே இருவரும் ஆசிரியர்களையும் எழுதுவினைஞர்களையும் தெரிவு செய்வதற்குரிய ஒர் ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றவர்கள். நான் பிரதேச அலுவலகத்தில் க்ளார்க் ஆகிவிட அவன் ஆங்கில ஆசிரியராகி இப்போது சுற்றயல் கிராமப் பாடசாலை ஒன்றிலே கற்பிக்கின்றான். அவன் மனைவி ரயில்வேயில் க்ளார்க்காக இருப்பதால் இந்தப் புகையிரத நிலையத்திற்கு மிக அருகிலுள்ள ரயில்வே விடுதி ஒன்றில்தான் இருக்கின்றான்.


'ஏண்டா என்னையெல்லாம் பார்த்தா பிரயாணஞ் செய்ய வந்தவன் மாதிரி தெரியாதோ..?' என்று மடக்கினேன் அவனைச் சந்தித்த குதூகலத்துடன்.


'அட! நீ கொழும்புக்குப் போறியா...? யா அல்லாஹ், வாசுதேவன் கொழும்புக்குப் போகிறானாம்யா அல்லாஹ்! மழைதான்டா வரப்போகுது இன்டைக்கு! டேய், உன்னைத் தெரியாதா...? நீ லேசில செலவழிச்சு பயணம் போக மாட்டியே?' என்று வானத்தைப் பார்த்து பிரார்த்திப்பது போல பாவனை செய்து  கலாய்த்தான் சலீம்.


இருவரும் ஒருவருரையொருவர் கட்டியணைத்துக் கொண்டோம்.

'சரி நீ எங்க..?' என்று கேட்டேன்.

'அது வந்து மச்சான், ஈடீசிஎஸ் ஒபிசுக்கு போறேண்டா! வாற மாதம் ஒரு பெரிய செலவொண்ணு இருக்கு. அதால ஒரு லோன் ஒண்டு எடுக்கலாமென்றுதான்'

'அட இவனும் அங்கேதான் போகிறானா?' எனக்கு ஆச்சரிமாக இருந்தது. இது என்ன பொருத்தம்? நானும் அங்கேதான் போக வேண்டும் என்பதை அவனிடம் சொல்லுவோமா வேண்டாமா என்று யோசித்தேன். அவனாக கேட்கட்டும் என்று ஒத்திப்போட்டேன்



குவார்ட்டசிலருந்து இடறிவிழுந்தா ஸ்டேஷன். நீ ஏண்டா சலீம் ஏழரைக்குப்போற ட்ரெயினுக்கு இவ்வளவு நேரத்தோட வந்து நிற்கிறா..?' என்றேன் ஆச்சரியத்துடன்.

'அதுவா? வெளிக்கிடும்போது கண்டால் என்ட சின்ன மகள் லைலா தானும் வர அழுது என்னை விடவே மாட்டாள்றா. அதான் நேரத்தோட வந்து இங்க நிக்கிறன்.'

'ம்ம்.. அன்புத் தொல்லையோ! பிறகு இப்ப ஸ்கூல் எங்க உனக்கு?'

அவன் பதில் கூறிவிட்டு இப்போதுள்ள பாடசாலைக் கல்வியின் நிலைமை பற்றி கவலையாக ஏதேதோ பேசிப் பெருமூச்சு விட்டான்.

'சரிசரி, அதையெல்லாம் விடு. இப்ப வா ட்றெயின் வெளிக்கிடும் வரையில வேற ஏதாவது பேசிட்டிருக்கலாம்'

இருவரும் அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தோம். இப்போது பயணிகள் கூட்டம் ஓரளவு கூடி ஒரு ரயில் நிலையத்திற்குரிய ஆரவாரங்கள் எல்லாம் ஆரம்பமாகியிருந்தன.

'அதுசரி, கமல்ற படம் பாத்தியா சலீம் ? அது என்னடா அதை ஓடவிடாம உங்கட ஆக்கள் பிரச்சினை பண்ணிட்டிருக்கிறாங்க?' என்று கேட்டேன் பேச்சைத் திருப்புவதற்காக.

அதுவரை அவனது முகத்திலிருந்த புன்னகை சட்டென மறைந்து போனது. சிறிது நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான் அவன்.

'என்னடா இவ்வளவு யோசிக்கிறா நீ? இதுக்குப் பதில் சொன்னாலும் உன்ட அல்லா ஏதும் தண்டிப்பாராடா?'

உடனே அவன் சத்தமாய் சிரித்து விட்டான்.



''இல்லடா தேவா! ஆனா நீ இந்தா நினைக்கிறியே, எங்கட அல்லாஹ்வைப் பத்தி ஏதோ கொடுமையா. அதைத்தான்டா நினைச்சிக் கவலைப்படுறேன்!'
'என்னடா சொல்றாய் நீ?'
'உன்ன மாதிரி முஸ்லீம் இல்லாத ஒரு சராசரி மனிசன அப்பிடியெல்லாம் நினைக்க வச்ச எங்கட ஆக்கள்ற வேலைகளை நினைச்சித்தான்டா கோவம் வருது'


'..............'


'இதை விட வறுமை, உரிமைகளை மறுக்கிறது, சிறுபான்மை என்ற புறக்கணிப்பு என்று எத்தனையோ பிரச்சினைகள் எங்கட சமூகத்துக்கு இந்த நாட்டுலயும் உலகத்துலயும் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு ஒரு சினிமாப்படத்தைப் போய் இவ்வளவு பிரச்சினை பண்ணிட்டிருக்கிறதே முதல்ல தேவையில்லாத ஒண்ணு'



'நீதான்டா சலீம் இப்பிடிச் சொல்றா. ஆனா நான் செய்தியில பேப்பர்ல இன்டர்நெற்றில எல்லாம் பார்த்தேன். படம் பார்க்கிறவங்களையே தாக்க வேணும் என்கிற மாதிரி கொலைவெறியோட எழுதிறாங்களேடா உங்கட ஆக்கள் கனபேர்?'

'மச்சான் தேவா, உங்கட ஆக்கள் எங்கட ஆக்கள் என்டெல்லாம் இல்ல. எல்லா சமூகத்திலயும் மதவெறி புடிச்சவங்க இருக்கிறது வழமைதானே. அயோத்தியில பாபர் மசூதியை உடைச்சது யார்? குஜராத்தில அட்டூழியம் பண்ணது யாரு?'


'ஆனா அதை கடுமையாக எதிர்த்தவங்கள்ல எங்கட ஆக்களும் இருந்தாங்களே மறந்திட்டியா சலீம்?'

'மறக்கல்லடா! எல்லா மக்கள்லயும் மதவெறி பிடிச்சு அலையுறவங்க கொஞ்சப் பேரும் அந்த வெறியை விரும்பாம வெறுக்கிறவங்க நிறையப்பேரும் இருக்கத்தான் செய்யிறாங்க'

'ஆனா உங்கடவங்க இதுவரைக்கும் உங்கட ஆக்கள் செய்யிற தப்புகளை எப்பவாவது கண்டிச்சிருக்கிறாங்களா சலீம்?'


'தீவிரவாதிகளை அழிக்கிறதா சொல்லிக்கிட்டு ஆப்கானிஸ்தான்ல அமெரிக்காவும் நேட்டோ படைகளும் மக்களுக்குச் செய்யிற அநியாயங்களை தெரியுமா உனக்கு?'


'நல்லாவே தெரியும். அதை ஒரு மோசமான பயங்கரவாதம் என்று உலகம் முழுக்கவுள்ள எல்லா இனமக்களும் கண்டிக்கிறாங்கதானே.. எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யிறங்கதானே? ஆனா அதே ஆப்கானிஸ்தானில இருக்கிற தாலிபன்கள் மதச்சட்டங்கள் என்ற பேரால சொந்த மக்களுக்கே செய்யிற வன்முறைகளை நீங்க எப்பவாவது கண்டிச்சிருக்கிறீங்களா?'


'அது வந்து.. அவங்க நாட்டுல மதச்சட்டம் அப்பிடித்தான்..'

'சமாளிக்காதடா சலீம். எந்த மதமும் அடுத்தவரைத் துன்புறுத்தச் சொல்லியிருக்காது. கழுத்தை வெட்டிக் கொல்றது.. கல்லெறிஞ்சு கொல்றது.. பொம்பிளைகள்ற மூக்கை அறுக்கிறது... அசிட் வீசுறது என்று எவ்வளவு காட்டுமிராண்டித்தனம் செய்யிறாங்க.. கிட்டத்ததுல பாகிஸ்தான்ல மலாலா என்கிற பதினஞ்சு வயசு ஸ்கூல் பிள்ளைய அவள் பேஸ்புக்கில எழுதின பெண்கல்வி பத்தின கட்டுரைகளுக்காக சுட்டுக்காயப்படுத்தியிருக்கிறானுங்க தலிபான்கள். இதெல்லாம் அல்லா செய்யச் சொன்னாரா மச்சான்?'


'அதெல்லாம் பிழைதான். அதுக்காக எங்க எல்லாரையுமே பயங்கரவாதிகளா காண்பிக்கிறதும் கூடாதுதானே?'


'நீங்க சிலபேர் செய்யிற தவறுகளாலதான் அமெரிக்கா மாதிரி ஆட்களுக்கு தாங்கள் செய்யிற அட்டூழியங்களுக்கு நியாயஞ் சொல்லறதுக்கு வாய்ப்புகளை தாராளமாக குடுத்திட்டிருக்கிறீங்க தெரியுமா?'


'அமெரிக்கா முஸ்லீம்களை பயங்கரவாதிகள் என்று சொன்னா பரவாயில்ல. அவன் எப்பவுமே எங்களுக்கு எதிரிதான். ஆனா அதையே நீங்களுஞ் சொல்லலாமாடா தேவா?'

'ஓ! நீ கமல்ற படத்தைச் சொல்றியா?  நீ பாத்தியாடா சலீம், அந்தப் படத்தில அப்பிடி என்னதான்டா பிரச்சினை?'

'நானும் பார்க்கயில்ல.. வேறென்ன? அமெரிக்கன்களை நல்லவங்களாகவும் தாலிபான்களை கொடூரமானவங்களா காட்டியிருக்கிறாங்களாம் என்று கேள்விப்பட்டேன்'

'ஆனா அதுக்காக அந்தப்படத்தை மக்களைப் பார்க்க விடாம தடுக்கிறது சரியா?'
'இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள்தான் என்று காட்டுற படத்தை தடுக்கிறது தப்பில்லையேடா தேவா?'

'அது படம் பார்த்தால்தானே தெரியவரும். யாரோ கொஞ்சப்பேர் பார்த்திட்டு தடுத்தா அது நியாயமா? முதல்ல படத்தை கொஞ்ச நாளாவது ஓடவிடணும். பொதுமக்கள் பார்க்க வேணும். படத்தோட மையக்கருத்து உண்மையில நீ சொல்றதுபோல இருந்தால் வா. அதுக்கு எதிரா நாங்களும் சேர்ந்து போராட வாறோம்'


'நீ சொல்றதும் சரிதான் தேவா. படைப்பு உரிமையை இப்பிடி எல்லாருமே ஏதாவது ஒரு காரணத்துக்காக கேள்விக்குள்ளாக்கினா பிறகு அம்புலிமாமா கதைகளை மட்டும்தான் படம் எடுக்க வேண்டியிருக்கும்.'


சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்ளாமல் அவரவர் யோசனையில் ஆழ்ந்திருந்தோம். நேரம் 7:16 ஐக் காட்டியது. தூரத்து வானிலே சில மின்னல் கீற்றுகள் ஓசையின்றி வெடித்துச் சிதறுவது தெரிந்தது.


 'அதுசரி தேவா, கேட்க மறந்திட்டேனே... கொழும்புக்கு நீ எங்க போகிறா..?'
'நானா? நானும்  உன்ன மாதிரி ஈடீசீஎஸ் ஒபிசுக்குத்தாண்டா போறன். இப்பதான் நான் மெம்பரா சேரப்போறன். எனக்கும் பிறகு லோன் தேவைப்படும்தானே..?'

'அதுசரி, மெம்பரா சேர்றதுக்காக ஏண்டா கொழும்புக்குப் போகிறா..? அநியாயச் செலவேடா'

'போகாம எப்பிடிடா சேர்றது..? இங்க மெம்பர்ஷிப் அப்ளிகேஷன் போர்ம் கூட கிடையாது?' என்றேன், அப்பாவிபோல முகத்தை வைத்துக்கொண்டு.

'அடப்பாவி! நீ உன்ட ஒபிஸ்ல யாரிட்டயாவது கேட்டிருந்தா தந்திருப்பாங்களேடா..? அதிருக்கட்டும் நீ அதுக்காக மட்டுந்தான் கொழும்புக்குப் போறியா.. சொல்லு?' என்று கேட்டான் சலீம் தீர்க்கமாக.
'இல்ல படம் பார்க்கத்தான் முக்கியமாக போகின்றேன்' என்று எப்படி அவனிடம் சொல்ல முடியும்?

'ஓம்டா! ஏண்டா கேட்கிறாய்?'  என்றேன்.

'அப்படியெண்டா கொஞ்சம் பொறு!' என்றபடி தனது செல்போனில் இலக்கங்களை ஒற்றி காதுக்குள் வைத்தபடி ஒரு ஓரமாய் நடந்து சென்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் சலீம்.

அவன் என்ன செய்யகின்றான் என்று புரியவில்லை எனக்கு. மெல்ல மெல்ல பயணிகளும் வழியனுப்பிகளும் மேடைக்கு வந்து கொண்டிருந்தார்கள். புகையிரத நிலைய அதிபர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்துநின்று பொதிகளேற்றப்படும் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


அப்போது ஒரு சிறுவன் ஓடிவந்து, 'வாப்பா இந்தாங்க, உம்மா தந்தாங்க' என்று ஒரு பழுப்புநிற கவரைத் சலீமிடம் தந்து விட்டுப்போக அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பி வைத்தான் தேவா.

'வாப்ப்ப்.....பா! நான் சொன்ன கன் வாங்கிட்டு வாங்க!'

'யாருடா அது? உன்ட மகனா.. முந்திப் பாத்ததுக்கு அப்பிடியே இருக்கான்?'

'அடேய், இவன் என்ட ரெண்டாவது பொடியண்டா! சரி, பிடி இதை!' என்று அந்த பழுப்பு நிற கவரை என்னிடம் நீட்டினான்.

'அப்பிடியா..? அதுசரி இது என்னடா கவர்ல..?

'சரி, இப்ப நான் சொல்றபடி கேளு தேவா! இது குவார்ட்டஸ்ல எனக்கிட்ட இருந்த ஈடிசிஎஸ் மெம்பர்ஷிப் அப்ளிக்கேஷன் போர்ம்.   இதை இங்கேயே நிரப்பித்தந்துட்டு நீ வீட்டுக்குப்போ! பெரிசா விபரம் ஒண்ணும் தேவையில்ல. நான் கொண்டுபோய் ஒப்படைக்கிறன். எனக்கு அங்க வேண்டிய ஆள் உதவியெல்லாமிருக்கு. உன்ட விபரமும் சைனும் இருந்தாலே போதும். மற்றதையெல்லாம் நான் பார்த்துக்கொள்றன்.. சரிதானே?' 


'சலீம், கொஞ்சமிரு!'

அவன் என்னைப் பேசவே விடவில்லை.

'டேய் நீ தனிச் சம்பளக்காரன். நீ ஏன்டா பாவம் சும்மா இதுக்காக கொழும்புக்கு வந்து  மெனக்கெடப்போறாய்...? கெதியாய் நிரப்பு இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு வா!' என்று உரிமையோடு பயணிகள் இளைப்பாறும் அறைக்கு என்னை அவன் இழுத்துக்கொண்டு சென்றபோது எனக்கு முகத்தில் ஈயாடவில்லை.


-மூதூர் மொகமட் ராபி


No comments:

Post a Comment