பிரிவுகள் Vs சந்திப்புகள்
பிரிவுகளை நான்
அதிகம் நேசிக்கின்றேன்!
ஆம்!
நேரில் வந்து உன்னைக் காணும்
சந்திப்புகளை விட
நினைவுகளில் நிறுத்தி வைத்து
உணர்வுகளால் உறவாடும்
பிரிவுகளைத்தான் பிடித்திருக்கின்றது!
இன்று நாளையென்று
நாட்களைக் நகர்த்தி
வாட்டியெடுக்கும் வாரங்களையெல்லாம்
விரட்டியடித்து
உயிரே உனைக்காண ஓடோடி வந்தால்..
இளமை வேகம்
இயல்பான துணிவு அத்தனையுமிருந்தும்
'யாராவது பாரத்து விடுவார்களோ'
என்ற பயத்தில்
இதயம் எகிறிக்குதிக்கும்
அதுவரையில்
ஒரு நிறைமாதப் பெண்ணின்
நிதானத்தோடு நடைபயிலும்
என் கடிகார முட்கள்
உன்னைக் கண்டதும்
ஓர் அவசரகால ஆம்புலன்ஸாகி
அலறியடித்து ஓடுவதேன்?
உன்னோடு பேச
ஓராயிரம் முறை ஒத்திகை பார்த்து
இரவிரவாய் நெட்டுருப்போட்டு வைத்த
என் வார்த்தைத் தோரணங்களெல்லாம்
ஒரு நொடியில் உதிர்ந்துவிழ..
எதையோ பேசவந்து
எதையெதையோ பேசிவைத்து
ஏதோகேட்க வந்து எதையோ கேட்டு வைத்திட
சடுதியாய் சாகும் நம் சந்திப்புவிழா!
ஓ!
ஏக்கங்கங்கள்
என்னைத் தத்தெடுக்க
மீண்டும் வந்து கொல்லும்
உன்பிரிவு
ஆனாலும்
சந்திப்புக்களை விட பிரிவுகளைத்தான்
நான் அதிகம் நேசிக்கின்றேன்
ஆம்!
சந்திப்புகள்
சடுதியாய் வந்து போகும் தபால்காரன்
ஆனால் பிரிவுகளோ
நமது காதலின் வலிமையை
இரகசியமாய் பரீட்சிக்கும்
இலவச வைத்தியன்!
-மூதூர் மொகமட் ராபி
No comments:
Post a Comment