முயல்களும் மோப்ப நாய்களும்!
வீட்டுக்குள்ளே ஒரே புழுக்கமாக இருப்பதால் நாங்கள் எல்லோருமே எங்கள் வீட்டு மொட்டை மாடியில்தான் உறங்குவது வழமை. சிறிது நேரமானதும் வாப்பா என்னையும் தம்பிகளையும் துhக்கம் கலைந்து விடாமல் வீட்டினுள்ளே படுக்ககையறையினுள் கிடத்தி விடுவார். ஆனால் இப்போது ஒருவரையும் காணவில்லை. அவர்களைத் தேடியபோதுதான் சட்டென என்னருகில் படுத்திருக்கும் எனது செல்ல அர்னப்பின் நினைவு வந்தது. எங்கே போயிருப்பான்? ஒருவேளை வீட்டுக்குள் இறங்கி விட்டானோ? உச்சி வானிலே ஒட்டியிருந்த பிறை நிலாவின் சிறு வெளிச்சத்தில் ஒரு மூலையில் ஏதோ ஒன்று அசைவது போல... ஓ! அது.. அர்னப்தான் மாடிப்படியில் இறங்கித் துள்ளித் துள்ளி ஓடுகிறான்.
'ஹேய்! ஆர்னப்..!ஆர்னப்!! ஓடாதே!' என்று கத்தியபடி நான் அதன் பின்னாலேயே துரத்திச் செல்வதற்குள் அவன் எங்கள் மொட்டைமாடியிலிருந்து வீதிக்கு இறங்கிச் செல்லும் படிக்கட்டுகளைத் தாண்டி எதிர்வீட்டு இக்ரமின் குடியிருப்பு வளாகத்துக்குள்ளே ஓடிச் சென்று மறைந்து விட்டான்.
'சே!' என்று அலுத்துக் கொண்டேன். அந்த வீட்டுக்குள் நாங்கள் விளையாடும் பந்து போனாலே திரும்பத்தேடித் தரமாட்டார்கள். மிகவூம் தொந்தரவு கொடுத்தால் புதிதாக ஒரு பந்து வாங்க பணம் கொடுப்பார்களேயன்றி பந்தைத் தேடுவதற்கு விடுவதில்லை. அதுவும் நள்ளிரவைத் தாண்டியிருக்கும் இந்த நேரத்தில் அவனைப் பற்றிப் பேசக்கூட முடியாது. எனக்கு அழுகை அழுகையாக வந்தது.
' சே!என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள்?' என்று யோசித்தவாறு மொட்டை மாடி கைப்பிடிச் சுவரிலே சாய்ந்து கொண்டேன். இருளிலே அமைதியாக மூழ்கியிருந்த எதிர்வீட்டு மாடிக்குடியிருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். துhரத்திலே தெரிந்த பள்ளிவாசலின் மினாராக்கள் மெல்லிய நிலவொளியில் எடுப்பாகத் தெரிந்தன. எங்கோ ஒரு நாய் நீளமாய் ஊளையிட்டது.
நாய் என்றதும் சட்டென இக்ரமின் நினைவுதான் தோன்றியது. அவனுக்கு நாய்களை ஏனோ கண்ணிலே காட்டக் கூடாது. அவற்றை எங்கே கண்டாலும் துரத்தித் துரத்தி அடிப்பான். மற்றப்படி மிருகங்களிடமெல்லாம் மிகுந்த இரக்கமுள்ளவன் அவன். அவன் வீட்டிலே பறவைகளும் முயல்குட்டிகளுமாய் எங்கு பார்த்தாலும் செல்லப் பிராணிகள்தானாம். அவற்றிலே அளவு கடந்த பிரியம் கொண்டவன் அவன்.
இக்ரம் எங்களோடு கால்பந்து ஆட வந்து சேர்ந்த காலத்திலிருந்தே நாய்களை பார்த்தால் இருக்கிற வேலையை விட்டு விட்டுக் கற்களைப் பொறுக்கிக் கொண்டு துரத்துவான். எப்படியும் கண்ணில் பட்ட நாய்களை அடித்துத் துரத்தி விட்டுத்தான் திரும்பவும் வந்து விளையாடுவான். அவனிடம் இதுபற்றி கேட்க நினைத்து ஒருநாள் கேட்டும் விட்டேன்.
'இக்ரம், நாய்களோட உனக்கு என்னடா அப்படி வெறுப்பு?'
'சே! நீ ஒரு முஸ்லீமாடா, இப்படிக் கேட்கிறாய்? வெறுக்கப்பட்ட பிராணி அல்லவாடா அது?''சரிடா..நாங்க அதைப்போய் அளையக் கூடாதே தவிர..அதுகளை ஏன்டா தண்டிக்க வேணும்? அதுவும் உயிர்கள்தானேடா இக்ரம்' 'இல்லடா அதுகள் கெட்ட மிருகங்கள். நான் வளர்க்கிற எத்தனை முயல்களைக் கடிச்சி குதறியிருக்கு தெரியுமா உனக்கு?'
'அது கூடாதுதான்..ஆனா அதுக்கு நீ கடிச்ச நாயை மட்டும் அடிக்கலாம். ஏன்டா சும்மா இருக்கிற நாய்களையெல்லாம் கொல்ல நினைக்கிறாய்?'
'எல்லா நாய்களுமே முயல்களுக்கு எதிரிதான்டா! நாய்களைக் கொல்றதில பாவமே இல்ல!'
'சரி..சரி ரெண்டு பேரும் பேச்சை விடுங்கடா..போய் விளையாடுவோம்!' என்று எங்கள் மற்ற நண்பர்களின் இடையூறுகளோடு அந்த உரையாடல் அன்று முடிந்தது. ஆனாலும் நாய்கள் உண்மையிலேயே கொல்லப்பட வேண்டியவைதானோ என்ற குழப்பம் எனக்கேற்பட்டது மட்டும் உண்மை.
இக்ரம் சொல்வது போல நாய்களையெல்லாம் அழித்தால்தான் முயல்களையூம் செல்லப்பிராணிகளையும் காப்பாற்ற முடியுமோ...அப்படியானால் லவ்பேர்ட்ஸ்களை பிடித்துத் தின்னும் பூனைகளை இக்ரம் ஏன் கொல்வதில்லை? என்று கேட்க வேண்டுமென மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
இக்ரம் எங்களது மனதிலே சில மாற்றங்களை ஏற்படுத்தி விட்டான். அவன் எங்களுக்கொல்லாம் அறிமுகமானதே ஒரு விசித்திர அனுபவம்தான்.
எங்கள் குடும்பம் இந்த வீட்டிற்கு குடிவந்த காலத்திலிருந்தே இக்ரம் இருக்கும் அந்த மாடி வீட்டுக் குடியிருப்பு எங்களுக்கெல்லாம் சற்று வினோதமாகத்தான் இருந்தது. நாங்கள் இருக்கும் பிரதேசம் இராணுவ அதிகாரிகளின் குடும்பங்கள் வாழும் குடியிருப்பு என்பதால் இங்குள்ள மனிதர்களின் நடவடிக்கைகள் சற்று விறைப்பாகத்தான் இருப்பதுண்டு. எப்போது பார்த்தாலும் புழுதி கிளப்பும் வாகனங்களும் விறைப்பான மனிதர்களும் தாராளமாகப் புழங்குவதுண்டு
எங்கள் வீட்டின் மொட்டைமாடியிலிருந்து இக்ரமின் மாடிக் குடியிருப்பின் மேல்தளத்தைத் தௌpவாகப் பார்க்க முடியூம். அங்கே ஒன்றிரண்டு குடும்பங்கள் பெண்கள் குழந்தைகள் என்று வசிப்பது மட்டும்தான் தெரியூம். ஆனாலும் அவர்கள் அதிகம் அயலவர்களாகிய எங்களோடு பழகுவதோ பேசுவதோ கிடையாது. எப்போதாவது மாலைவேளைகளில் மாடியிலிருந்து கீழிறங்கி வருவதுண்டு. வீதியைச் சிறிதுநேரம் வேடிக்கை பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்;. பெண்கள் வெளியே வருவது மிகவூம் குறைவூ. அப்படி வந்தாலும் முகம் மட்டும் தெரியும் உடையணிந்து குழந்தைகளுடன்தான் வருவார்கள்.
ஒருநாள் நானும் எனது நண்பர்களும் அருகிலுள்ள மைதான மேட்டிலே கால்பந்து ஆடிக் கொண்டிருக்கும்போது ஒருதடவை அவர்கள் வீட்டுக் குழந்தைகள் வீதியிலே விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அவர்களிடையே எங்கள் வயதொத்த ஒர் அழகான சிறுவன் நாங்கள் விளையாடுவதையே ஏக்கமாய் பார்த்தவாறு நின்றிருந்தான். அவனைப் பார்க்க ஏனோ பாவமாக இருந்தது.
'வா! பந்து விளையாடலாம்' என்று சைகையால் அழைத்தேன். உடனே அவன் உற்சாகமாகி வீதியைக் கடந்து ஓடிவரத் தயாரானவூடன் யாரோ அதட்டும் குரலில் திருப்பியழைத்தார்கள். அவனது விழிகளிலே பூத்திருந்த பிரகாசம் சட்டென வடிந்த துயரத்தை அன்று நான் பார்த்தேன். அதனை மறக்க பல நாட்களானது எனக்கு.
மற்றொருநாள் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்தச் சிறுவன் கால்பந்து விளையாடும் உடையிலே சப்பாத்துகள் அணிந்து கம்பீரமாக நின்றிருந்தான். அவன் கையிலே ஒரு விலையுயர்ந்த அழகான கால்பந்து இருந்தது. நாங்களும் விளையாட வந்ததை மறந்து அவனையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தோம்.
எங்களது உடைகளையூம் அழுக்குப் பந்தையூம் கிழிந்த சப்பாத்துக்களையூம் ஒருமுறை பார்த்துக் கொண்டோம். 'அங்க பாருடா! என்ன மாதிரி ஜேஸி..பூட்ஸ் பார்த்தியா? இதெல்லாம் எங்கடா இருக்கு..'
'அந்த பந்தைப் பாருங்கடா! எப்படிப் பளபளக்குது..? நிச்சயமா வெளிநாட்டுலதான் அதை வாங்கியிருப்பான்' என்றெல்லாம் வியந்தபடி நண்பர்கள் நாங்கள் ஒன்றுகூடிப் பார்த்திருக்க, அவனாகவே எங்களை வருமாறு அழைத்தான். அதற்காகவே காத்திருந்த நாங்கள் குதுhகலத்தில் துள்ளிக் குதித்தோம். ஆனாலும் அவனருகே நின்றிருந்த சில முரட்டு ஆண்களைப் பார்த்துவிட்டு சற்றுத் தயங்கினோம்.
'பரவாயில்லை வாருங்கள்!' என்று எங்களைக் கூப்பிட்டு அந்தச் சிறுவனை எங்களோடு அழைத்துச் செல்ல அனுமதித்தார்கள் அந்த ஆசாமிகள். நாங்களும் மகிழ்ச்சி மேலிட ராஜமரியாதை தந்து அவனை விளையாடக்கூட்டிச் சென்றோம்.
அன்றிலிருந்து இக்ரம் எங்களோடு கால்பந்தாடுவது வழமையாகிப் போனது. அவனது குடும்பத்தினரும் எங்களைப் பார்த்து சிறிது புன்முறுவல் செய்யலானார்கள். சில வேளைகளில் மைதானத்திலே இருக்கும்போது அந்த வீட்டுப்பெண்கள் எல்லோருக்கும் வாழைப்பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் கொடுத்தனுப்புவார்கள். அவ்வளவு ருசியான பழங்களை நாங்கள் ஒருபோதும் கண்டதேயில்லை. அத்தனை அன்பானவர்களாயிருந்தும் ஒருதடவை கூட அவர்களது வீட்டிற்கோ அல்லது வளவிற்குள்ளோ எங்களை அழைத்ததில்லை. அனுமதித்ததும் கிடையாது.
திடீரென ஒருநாள் இக்ரம் விளையாட வரவில்லை. அவன் மட்டுமல்ல அந்த வீட்டிலிருந்து எவரையும் வெளியே காணவில்லை. அந்த வீட்டின் யன்னல்கள் கூட அடைத்திருந்தன. அந்த மாடிக்குடியிருப்பு வளாகத்திற்குள்ளிருந்து புழுதி இறைத்தபடி சில வாகனங்கள் அடிக்கடி சென்று வந்தன. தவிர
இக்ரமைக் காணவேயில்லை.
இக்ரம் வந்ததிலிருந்து அவன் கொண்டு வரும் புதிய பந்திலே விளையாடிய எங்களுக்கு மீண்டும் பழைய கிழிந்து போன அழுக்குப் பந்திலே விளையாடும் நிலை. ஆட்டத்தின் இடையிலே வாழைப்பழங்களும் கிடைக்கவில்லை. இக்ரமைப் பற்றி யாரிடமும் கேட்கவூம் முடியவில்லை. தினமும் அவனைக் காத்திருந்து கண்கள் பூத்தபின் வேறுவழியின்றி விளையாடலானோம்.
பத்து அல்லது பதினைந்து நாட்கள் இப்படியே கழிந்தது. ஒருநாள் நாங்கள் பாடசாலை விட்டு வரும்போது இக்ரமின் எதிர்மாடிக் குடியிருப்பிலே ஆள்நடமாட்டம் தெரிந்தது. சந்தோசம் பொங்கிட மாலையானதும் மைதானத்துக்குப் படையெடுத்தோம். இக்ரமைத் தேடி அவன் வீட்டு முன்புற வாசலுக்குச் சென்றிருந்த எங்களுக்கு அந்த வளாகத்தினுள் நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. அவர்களில் யாரையூம் இதற்கு முன் பார்த்ததில்லை. அவர்கள் அனைவரும் முற்றிலும் புதியவர்களாக இருந்தார்கள். பழையவர்கள் எவரையுமே காணவில்லை.
'ஏய்! பையன்களா என்ன வேணும் உங்களுக்கு?'
'இக்ரம் இருக்கிறானா?' என்று நாங்கள் கேட்டதும் தங்களுக்குள் ஒன்றுகூடி ஏதோ ஒரு புரியாத மொழியிலே கிசுகிசுத்து விட்டு, 'இப்போ அவனைப் பார்க்க முடியாது. என்ன விசயம்?' என்று கேட்டார்கள்.
கால்பந்து ஆடும் விடயத்தைப்பற்றி அவர்களிடம் கூறினோம். மீண்டும் தங்களுக்குள் கிசுகிசுத்த பின் அவர்களில் ஒருவன் மாடியேறி வீட்டினுள்ளே சென்றான். சிறிது நேரத்தின் பின்பு திரும்பி வந்து, 'நீங்களெல்லாம் உங்க மைதானத்துக்குப் போகலாம். இக்ரம் வருவான்' என்றான். எதுவும் பேசாமல் மைதானத்தை நோக்கி நம்பிக்கையின்றி நடந்தோம்.
'என்னடா இவன்களெல்லாம் ரோபோ மாதிரி இருக்கிறான்கள்? இக்ரம் எப்பிடிடா அந்த வீட்டுக்குள்ளே இருக்கிறான். ஆமி கேம்ப் போல இருக்கு வீடு?'
'ஓம்டா நானும் பார்க்கிறன். இக்ரம் ஸ்கூலுக்கே போறதில்லையாம். யாரோ வாகனத்துல வந்த சொல்லிக் கொடுத்திட்டுப் போறாங்க.. அவங்க வீட்டுக்கு எல்லாமே வெளியில இருந்து வந்துதாண்டா வருது. அவன் அவ்வளவு பெரிய ஆளாடா?'
'இல்லடா அவங்க யாரோ பெரிய இடத்து ஆட்கள் போல இருக்குது. அதாலதான் இவ்வளவு கெடுபிடி!
''என்றாலும் இது மிச்சம் ஓவர்தான்டா!'
இப்படியே எங்களுக்குள் பேசியவாறு நடந்து கொண்டிருக்கும் போது பின்னாலே ஓடிவந்து சேர்ந்தான் இக்ரம். அவன் கையிலே நிறைய அட்டைப் பெட்டிகள் இருந்தன. எல்லோரும் ஆவலாக ஒடிச் சென்று அவனைத் துhக்காத குறையாக மைதானத்துக்குக் கொண்டு வந்தோம்.
அட்டைப் பெட்டிகளை ஆவலாய்த் திறந்து பார்த்தால் அத்தனையூம் விலையுயர்ந்த புத்தம்புதிய கால்பந்து சப்பாத்துக்கள். எங்களுக்காக இக்ரமின் தாய் கொடுத்தனுப்பியிருந்தார். எங்களது மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினோம்.
இக்ரம் எங்கள் எல்லோருக்கும் ஏறத்தாழ ஒரு இரட்சகனாய் ஆனான். ஒவ்வொரு நாளும் அவன் கொண்டு வரும் சொக்லேட்டுக்கள் பாலாடைக்கட்டிகள், பழங்கள் மற்றும் அழகிய ஜேஸிக்களால் எங்கள் கால்பந்து அணி வளமாகிக் கொண்டேயிருந்தது. தவிர அவன் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரனாகவவுமிருந்தான். அதனால் நாங்கள் எல்லோரும் அவனுடன் மிகுந்த விருப்பமாக இருந்தோம்.
தினமும் சிறிது நேரம் மைதானத்தில் ஒன்றுகூடிப் பேசிக் கொண்டிருந்து விட்டு கலைந்து போவது கால்பந்தாட்ட நண்பர்கள் எமது வழமை. அவரவர் குடும்பம் பாடசாலை பிடித்தவை பிடிக்காதவைகள் பற்றியெல்லாம் அளவளாவுவோம்.
இக்ரம் தனது வீட்டில் வளர்க்கும் முயல்குட்டிகள் லவ்பேர்ட்ஸ் மற்றும் நாய்களிலே தனக்கிருக்கும் வெறுப்பு பற்றித்தான் அதிகம் பேசிக் கொண்டிருப்பான். அதுவும் இல்லையென்றால் கால்பந்து விளையாட்டைப் பற்றிப் பேசுவானே தவிர அவனது குடும்பம் பற்றி எதுவும் கூற மாட்டான். எதேச்சையாக பேச்சு வந்தால் உடனே மௌனமாகி விடுவானே தவிர வீட்டிலுள்ளவர்களைப் பற்றித் தப்பித் தவறிக்கூட ஒரு வார்த்தை பேசமாட்டான்.
இக்ரம் எல்லோருடனும் நன்றாகப் பழகிய போதிலும் தனது வீட்டுக்கு எங்களை அழைக்கவோ அல்லது கூட்டிச் செல்லவோ மாட்டான். அதேபோல எங்கள் வீடுகளுக்கும் வரமாட்டான். இது ஒன்றுதான் எங்களுக்கு அவனிடம் இருந்த ஒரேயொரு சங்கடமான விடயம். ஆனாலும் எங்கள் கால்பந்தாட்டத்துக்கும் நட்புக்கும் அதனால் எந்தக்குறையும் இல்லையைன்பதால் அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுவோம்.
ஒருநாள் விளையாட்டு முடிந்ததும் என்னைத் தனியாக அழைத்துச் சென்றான் இக்ரம். அவனது கண்கள் இலேசாகக் கசிந்திருந்தன. முகம் சற்று வாடியிருந்தது.
'என்னடா இக்ரம் ஏதும் பிரச்சினையா ?'
'ஒண்டுமில்லடா..கொஞ்சம் எங்கட வீடு வரைக்கும் கூட வந்துட்டுப் போ' 'என்ன உன்ட வீட்டுக்கா?!' என்றேன் ஆச்சரியம் தாளமுடியாமல். 'ஒருவேளை எங்களுக்குத் தந்த சப்பாத்துகளையெல்லாம் திருப்பிக் கேட்கப் போகிறானோ' என்று பயந்தபடி அவனைப் பின்தொடர்ந்தேன்
'கொஞ்சம் இங்கேயே நில்லு வாறேன்' என்று கூறி வீட்டுக்கு அருகேயுள்ள குறுகிய ஒழுங்கைக்குள் என்னை நிறுத்தி உள்ளே ஓடிப்போனவன் சிறிது நேரத்தில் கையிலே ஒரு சணல் பை ஒன்றுடன் வந்தான். அதற்குள்ளே ஏதோ அசைந்தவாறிருந்தது.
'இந்தா! இது என்ட செல்லப் பயல் அர்னப். இதை இனி நீதான் வச்சுக்கோ!' என்று கவலையுடன் நீட்டினான் அதை. அவன் தந்தது, கொழுகொழுவென்று பார்ப்பதற்கு அழகாக இருந்த ஒரு சின்ன முயல் குட்டியை.
ஒரு வெண்பஞ்சுக் குவியலை வாங்குவது போல அதை ஆசையாக கை நீட்டி வாங்கிக் கொண்டேன். இக்ரம் தனது முயல்களிலே எவ்வளவு இரக்கமும் ஆசையூம் உள்ளவன் என்பது எனக்குத் தெரியும். அப்படியானவன் ஏன் தன் செல்ல முயலை திடீரென எனக்கு தரவேண்டும் என்றுதான் புரியவில்லை.
அதை அவனிடம் கேட்டபோது தனது முயல்கள் பறவைகளெல்லாம் வேறு எங்கோ கொண்டு செல்லப்படப் போவதாக மட்டும் சொல்லி விட்டு ஓடிவிட்டான். அதற்கு மேல் அவனிடம் பேச முடியவில்லை.
அன்றுதான் நானும் நண்பர்களும் கடைசியாக இக்ரமைக் கண்டோம். மறுநாள் நாங்கள் வழமைபோல அந்த இடத்திற்குச் சென்றபோது அவர்களது வீட்டு வாசலிலே இராணுவ முகாம்களிலிருப்பது போல தடுப்புகள் அமைத்திருந்தார்கள். அதனுள்ளே இருந்தவர்கள் கூட வேறு புதியவர்களாக இருந்தார்கள். இக்ரமை பற்றி விசாரித்தபோது கொஞ்சம் கூட இரக்கமின்றி சத்தம்போட்டுத் துரத்திவிட்டார்கள்.
மிகுந்த கவலையுடன் மைதானத்துக்குப் போனோம். இக்ரம் கால்பந்து உட்பட எல்லாவற்றையூம் எங்களிடம் தந்து விட்டுத்தான் போயிருந்தான். ஆனாலும் அவனில்லாமல் முன்பு போல எங்களால் உற்சாகமாக விளையாட முடியவில்லை. தவிர பாடசாலையில் தவணைப்பரீட்சை ஆரம்பமானதால் வீட்டிலுள்ளவர்கள் எங்களை விளையாடுவதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் அவன் வீட்டுப்பக்கம் போகவேயில்லை. என்றாலும் எனது வீட்டு மொட்டை மாடியிலிருந்து தெரியும் அவனது குடியிருப்பு வளாகத்தை அடிக்கடி ஏக்கத்தோடு பார்த்துக் கொள்வது எனது வழமையானது.
'ஓ! இக்ரம் நீ எங்கே இருக்கிறாய்?'
இக்ரம் துhக்கிக் கொடுத்த தினத்திலிருந்த நான்தான் அவனுடைய செல்ல முயலை வளர்த்து வருகின்றேன். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் 'அர்னப்' மீது கொள்ளை ஆசை. என்னருகிலேயேதான் இரவில் படுத்துறங்கும். ஆனால் அடிக்கடி இக்ரமின் வீட்டுப் பக்கமாக ஓடிவிடுவதுதான் அதனிடம் உள்ள ஒரேயொரு கெட்ட பழக்கம். மீண்டும் அதைத் தேடிப்பிடித்துத் திரும்பக் கொண்டு வருவதற்குள் களைத்துப் போய்விடுவேன். ஆனால் இப்போது இந்த நடுச்சாமத்திலே எதுவும் செய்ய முடியாது.
'சரி, காலையில்தான் இதைப்பற்றிக் கேட்கலாம். துhக்கமும் கலைந்து விட்டது. கீழே இறங்கிப்போய் வீட்டுக்குள் போய் துhங்கலாம்.' என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் இறங்கும் படிக்கட்டில் நான் காலை வைத்ததுதான் தாமதம்! தலைக்குமேலாக வானத்திலே ஒரு பெரிய சப்தம் கேட்டது. அண்ணாந்து பார்த்தபோது திடீரென எங்கிருந்தோ வந்த இரு ஹெலிகாப்டர்கள் காற்றைக் கிழித்தெறியும் விசிறிகளின் ஒலியூடன் எங்கள் மொட்டை மாடிக்கு மேலாக மிகத்தாழ்வாக பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன்.
அந்த கரிய இராட்சத் தும்பிகளின் வயிற்றிலிருந்து இராணுவச் சிப்பாய்கள் போலிருந்த சிலர் எதையோ பிடித்துக் கொண்டு சட்டென கீழே இறங்கினார்கள். அவர்களிலே மூன்று அல்லது நான்கு பேர் எங்கள் மொட்டை மாடித்தளத்தில் குதித்து இறங்கினார்கள். இறங்கியதுதான் தாமதம், கண்மூடித் திறப்பதற்குள் துப்பாக்கிகள் மற்றும் நவீன தொலைநோக்கிகளுடன் சட்டென தரையில் படுத்துக்கொள்வதைக் கண்டேன்.
ஏனையவர்கள் எங்கள் பக்கத்திலிருந்த மாடிக்குடியிருப்பின் சந்துபொந்துகள் எங்கும் தொப்தொப்பென துப்பாக்கிகள் சகிதம் இறங்கித் தரையிலே படுத்துக் கொண்டார்கள். மேலே பறந்த ஹெலிகாப்டர் சுழற்றிய காற்றினால் கிளம்பிய புழுதிப்படலம் கண்களைக் குருடாக்கியது.
சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதை நான் புரிந்து கொள்வதற்கிடையில் 'டவூண்! போய்..!! டவூண்!' என்று கத்தியபடியே என்னை நோக்கிக் கூச்சலிட்டபடி ஒரு சிப்பாய் ஓடிவந்தான். எனது கால்களைத் தனது ஒருகாலால் தட்டிவிட்டு தோள்பட்டையில் பிடித்து இலாவகமாய் வீழ்த்தி தரையோடு குப்புறப்படுக்க வைத்த கையோடு அவனும் துப்பாக்கியோடு வீழ்ந்து படுத்தான்.
சத்தம் கேட்டு நித்திரை கலைந்து மேலே ஓடி வந்த எனது தந்தை மற்றும் தாய் குடும்பத்தினரையூம் மொத்தமாக பிடித்து, 'கோ! கோ பெக்!! கெட் இன் ஸைட்.. கோ!!' என்று உள்ளே தள்ளி விட்டு மொட்டை மாடிக் கதவை அடைத்தான் மற்றொரு சிப்பாய். உள்ளேயிருந்து எனது தாயும் தம்பிகளும் பயத்திலே அழுவது கேட்டது.
ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய சிப்பாய்கள் பலர் எங்கள் மொட்டை மாடியின் சுற்றுச் சுவரில் மறைந்தவாறு எதிர்ப்புறமுள்ள இக்ரமின் குடியிருப்பை சூழ்ந்து குறிவைத்து படுத்திருந்தார்கள்.ஹெலிகாப்டர்களிலிருந்து கடைசியாக இறங்கிய சிப்பாய்களின் கைகளிலே உறுதியான பட்டிகளால் பிணைத்திருந்த இரண்டு பெரிய அல்சேஷன் மோப்ப நாய்கள் பயங்கரமாக உற்றுப் பார்த்தவாறு இறங்கிச் சென்றன. அவற்றின் கோரைப் பற்கள் உலோகம் போல பளபளத்தன. யார் இவர்களெல்லாம் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது? எதற்காக இக்ரமின் வீட்டைச் சுற்றி இவ்வளவும் நடக்கின்றது? எதுவுமே விளங்கவில்லை எனக்கு.
திடீரென வானத்திலிருந்து தீப்பிழம்பு ஒன்று சீறிக்கொண்டு வந்து வெடித்துக் காதைச் செவிடாக்கியது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி வேட்டுகள். எங்கும் ஒரே புகைத்திரள். சிறிது நேரம் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை எனக்கு.
'ஓ! சுடாதீங்க அங்க..என்ட முயல் குட்டி இருக்கு ...சுடவேணாம்...முயல்குட்டி அங்க இருக்கு!' என்று கத்தினேன். 'வாட்? கீப் கொயட் போய்!' என்று அதட்டினான் என்னருகே படுத்திருந்த சிப்பாய். அவன் நீச்சல் கண்ணாடிபோல எதையோ கண்களிலே அணிந்து பார்க்கவே வினோதமாக இருந்தான். அவனது ஒருகை என்னை வலது தோள்பட்டையைப் பிடித்து எழுந்திருக்க விடாமல் தரையிலே அழுத்திக் கொண்டிருக்க மற்றக் கை இயந்திரத் துப்பாக்கியின் விசையிலே தயாராயிருந்தது.
'சுடாதீங்க! என்ட அர்னப்! அங்க இருக்கிறான்..!' என்று இக்ரமின் வீட்டைக் காட்டிக் கத்தினேன். ஹெலிகாப்டரின் விசிறி ஒலியிலே நான் கத்தியது என்னைப் பிடித்திருந்த அந்தச் சிப்பாய்க்கு கேட்கவில்லை.'வாட்?' காதிலே அவன் அணிந்திருந்த இயர்போனை சிறிது அகற்றி விட்டு ' யூ வோன்ட் டு கோ தாட் ஹவுஸ்?' என்றான் ஆங்கிலத்தில். 'நோ..மை...ரபிட் அர்னப்' என்றேன்.
'வாட்..?...யூவர் பாதர்?' என்றான் புரியாமல். நான் கைகளால் முயல்குட்டிபோல சைகை காட்ட
' ஓ! டோண்ட் வொறி!' என்று சிரித்தான்.
இதற்கிடையில் எதிர்வீட்டிலிருந்து துப்பாக்கியால் திருப்பித் தாக்கினார்கள். அதனையடுத்து மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று தீப்பற்றியவாறு வெடித்து விழுவதையும் கண்டேன். உடனே என்னோடிருந்தவன் உட்பட சிப்பாய்கள் அனைவரும் உசாராகி, எனது அழுகையையும் புறக்கணித்துவிட்டு இக்ரமின் மாடிக்குடியிருப்பை நோக்கித் துப்பாக்கியால் சல்லடையிட்டு ஓய்ந்தார்கள்.
சிறிது நேரத்தில் பெருமழையடித்து ஓய்ந்தது போல வெடிச்சத்தம் ஒய்ந்தது. சிப்பாய்கள் எல்லோரும் எங்களை விட்டுவிட்டு இக்ரமின் மாடிக்குடியிருப்புக்குள் இறங்கி ஒடிச் சென்றார்கள். மாடிச்சுவரின் மேலாகப் பார்த்தபோது அந்த வீட்டின் கண்ணாடிகள் நொருங்கிக் கிடப்பதைக் கண்டேன். இருட்டிலே சரியாக எதுவுமே தெரியவில்லை. டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சியடி பலர் நடமாடுவது தெரிந்தது.
சில நிமிடங்களிலே நாங்கள் கால்பந்தாடும் மேட்டில் நின்றிருந்த ஹெலிகாப்டர்களில் அவசர அவசரமாக எதையெல்லாமோ ஏற்றிக் கொண்டிருந்தார்கள். எல்லாமே தௌpவில்லாமல் தெரிந்தது. இராட்சத விசிறிகள் புழுதி கிளப்பியபடி வானிலே எழுந்து திரும்பிய கதவூகளற்ற ஹெலிகாப்டர்களில் ஒன்றிலே அமர்ந்திருந்த சிப்பாய்கள் கீழிருந்த எங்களைப் பார்த்து கைகளையுயர்த்தி வெற்றி முழக்கமிட்டபடி சென்றார்கள். அவர்களின் முழங்கால்களுக்கிடையே நாக்கைத் தொங்க விட்டபடி நின்றிருந்தது ஒரு மோப்ப நாய்;. அந்த நாயின் வாயிலே தொங்கிக் கொண்டிருந்தது....
சிவப்பு நிறம் தோய்ந்த ஒரு வெண்பஞ்சுக் குவியல்!
-Mohammed Rafi
"இரத்தத்தில் கையை நனைப்பவர்கள் கண்ணீரால்தான் அதை கழுவியாக வேண்டும்"
No comments:
Post a Comment