Sunday, March 31, 2013

அரை உண்மைகளின் அபாயம்



images (3)
 
 
 
லயோலா கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இந்த போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவித்துவருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப் போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு.
 
 
 
இந்தப் போராட்டத்தின் சில கோரிக்கைகள்: இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்படவேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.
 
 
 
இந்தத் ‘தன்னெழுச்சியான’ கோரிக்கைகள் மாணவர்களுடையதுதான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக சில மாணவத்தனமான கோரிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. மற்றபடி இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கை செய்தது இனப்படுகொலை. இந்தியாவும் அதற்கு முழு உடந்தை. இந்த இரண்டு விஷயங்களைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதுமட்டுமே.
 
 
 
மிகவும் உணர்வுபூர்வமான இந்தப் பிரச்னையில் தமிழகத்தில் இப்போது ஒருவித பாசிச மாற்று அமைப்பு கட்டமைக்கப்பட்டுவருகிறது. இலங்கைப் பிரச்னையில் தனி ஈழத்துக்குக் குறைவாக யார் பேசினாலும் அவர்கள் தமிழினத் துரோகியே என்ற நிலையை மெள்ள உருவாக்கிவருகிறார்கள். இலங்கை அரசு மிக மோசமான குற்றங்களை இழைத்திருப்பது உண்மையே. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒருவர் வேறு சில விஷயங்களையும் கட்டாயம் பேசியாக வேண்டும்.
 
 
 
இலங்கை ஈழப் பிரச்னை என்பது நீண்ட நெடும் வரலாறைக் கொண்டது. பல்வேறு ஊடுபாவுகள் கொண்டது. ஈடுபட்ட அனைத்து தரப்புகளின் கைகளிலும் ரத்தக் கறை உண்டு. ஆனால், அவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒற்றை குற்றவாளி (சிங்கள-இந்திய கூட்டணி) மட்டும் கட்டம் கட்டப்படுவதற்கான சர்வதேச அரசியல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செயல்பட்டுவந்த காலகட்டத்தில் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவு அளித்துவந்த அமெரிக்க அரசு இன்று யோக்கியன் போல் நீதிபீடத்தில் ஏறி அமர்ந்து இலங்கையைக் குற்றம்சாட்டுகிறது. அதோடு நின்றுவிடாமல் இந்திய அரசையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தந்திரத்தையும் சர்வதேச அரசியல் சக்திகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
 
 
 
இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக மோசமாக இந்தச் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இது தொடர்பான முழுச் சித்திரமும் கிடைக்கவேண்டுமென்றால், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கவேண்டும். பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷாகப் பிரித்து மிகப் பெரிய சாதனையைச் செய்திருந்தார் இந்திராகாந்தி. இந்திய ராணுவத்தினரை தெய்வமாகத் தொழும் பங்களாதேஷிகள் இன்றும் உண்டு (அந்தப் போரில் அப்படி ஒரு ரட்சகனாக இருந்த இந்திய ராணுவம் இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது… இதற்கு யார் காரணம் என்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை).
 
 
 
கிழக்கு பாகிஸ்தானைத் தனி நாடாகப் பிரித்துவிட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் பஞ்சாபை இந்தியாவில் இருந்து பிரிக்கவேண்டும் என்ற பெயரில் தீவிரவாத சக்திகள் தூண்டிவிடப்பட்டன. அதை அடக்க இந்திரா எடுத்த முயற்சிகள் அவருடைய உயிருக்கு உலை வைத்தன. அதோடு பஞ்சாப் பிரச்னையும் மெள்ள முடிவுக்குவந்தது (மிஷன் ஆல்ரெடி அக்கம்ப்ளிஸ்ட்). ஏற்கெனவே, மூத்த இளவரசர் சஞ்சய் காந்தி ‘விமான விபத்தில்’ கொல்லப்பட்டிருந்தார். அடுத்ததாக, ஆட்சிக்கு வந்த இளைய இளவரசர் ராஜீவ் காந்தி தன் அன்னையின் வழியில் இலங்கை விஷயத்தில் ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு சர்வதேச அளவில் புகழ் பெற வழிநடத்தப்பட்டார்.
 
 
 
கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்திய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்ததால் தனிநாடாக உருவாக்குவது எளிதான செயலாக இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்; அவர்களுக்கு மாநில சுய ஆட்சி பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் நியாயமான நோக்கம். எனவே, ராஜீவ்காந்தி அந்த உடன்பாட்டுக்கு ஆத்மார்த்தமாக முயன்றார். இலங்கையின் வேண்டுகோளின் பேரில் அமைதிப்படை என இந்திய ராணுவத்தை அங்கு அனுப்பினார். தனி ஈழம் என்பது மிகவும் நியாயமற்ற கோரிக்கை என்பதுதான் இந்தியாவின் கொள்கை. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளின் தீர்மானமும் அதுவே.
 
 
 
ஆனால், இலங்கை இந்த இடத்தில் தன் நரித்தனத்தை காட்டியது. இந்தியாவை இந்த போரில் சிக்க வைக்க வேண்டும் என்ற சர்வதேச தந்திரத்தின் அங்கமாக அது இந்திய அமைதிப் படையை தன் நாட்டுக்குள் முதலில் அனுமதித்தது. ஆனால், அடுத்தகட்டமாக தன்னுடைய இறையாண்மைக்கு இழுக்காகிவிட்டது என்ற போர்வையில் இந்திய ராணுவத்தைத் துரத்தி அடிக்கத் தீர்மானித்தது. தாற்காலிக உடன்பாடாக விடுதலைப் புலிகளுடன் நட்புறவு கொண்டு, இந்திய ராணுவம் செய்தவற்றை விட மிக அதிகமான குற்றச்சாட்டுகளை அதன் மீது சுமத்தி அதை அங்கிருந்து அகற்றினார்கள். அடுத்த தேர்தலில் ராஜீவ் வென்றுவிடுவார் என்ற நிலை ஏற்பட்டபோது, மீண்டும் இந்திய அமைதிப் படையை அனுப்பிவிடுவாரோ என்ற பயத்தில், விடுதலைப் புலிகள் ராஜீவையும் அப்பாவிக் காவலர்களையும் இந்திய மண்ணில் கொன்றார்கள். அதுவரை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்த தமிழக மாநிலக் கட்சிகளும் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிர்நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 
 
 
மூன்று ‘எதிர்பாராத’ மரணங்களைத் தொடர்ந்து அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி நின்ற சோனியாவின் மீது ‘விதிவசமாக’ ஆட்சிப் பொறுப்பு திணிக்கப்பட்டது. (முன்னாள்) இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் தமிழகத்தில் பிரிவினை சக்திகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு விமான, கடல் சார்ந்த படைகளின் உதவியைத் தந்தது. முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை ஒழிக்கத் தந்த இந்த உதவியானது இலங்கையில் நடந்த இன்ன பிற வன்முறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இன்று இந்தியாவும் போர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை இந்தியா மீதும்கூட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம். ஏற்கெனவே ஆரிய திராவிட கதைகள் வேறு இங்கு வலுவாக வேருன்றித்தான் இருக்கின்றன.
 
 
 
இந்தியா நிச்சயமாக இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவே செய்யாது. அது முடியவும் செய்யாது. இலங்கை அரசு உள்நாட்டில் கலகம் விளைவித்தவர்களை அடக்கியிருக்கிறது… அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது என்பது போன்ற வெளிப்படையான காரணங்களில் ஆரம்பித்து, ராஜிவ் கொல்லப்பட்டபோது அருகில் எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லாமல் போனது எப்படி? சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய வீடியோ எப்படி மாயமாக மறைந்தது என்ற விடைதெரியாத கேள்விகள் வரை பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, இந்தியா கடைசிவரை இலங்கைக்கு சாதகமாகவே நடந்துகொள்ளும். சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மனங்களிலும் இந்தியா மீதான மதிப்பு மேலும் குறையவே செய்யும்.
இப்படியான சூழலில் லயோலா கல்லூரி மாணவர்கள் ‘தன்னெழுச்சியாக’ போராட்டத்தை மூன்று மிக அபாயகரமான நோக்கங்களைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
 
 
முதலாவதாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. கிழக்குப் பகுதி தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பெரும்பான்மையான தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களே. விடுதலைப் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் மட்டும்தான் இலங்கை ராணுவம் தன் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. கொழும்புவிலும் பிற இலங்கையின் பகுதிகளிலும் ஈழத்தைவிட மிக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் வசித்து வரத்தான் செய்கிறார்கள். இனப்படுகொலை என்றால் அவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், இலங்கை அரசு அவர்களை ஒன்றும் செய்யவில்லை.
 
 
 
இரண்டாவதாக, இந்தப் போரில் விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்து சிறு குறிப்பு கூடக் கிடையாது. பொய்யைவிட அரை உண்மைகள் மிக ஆபத்தானவை. இலங்கை – ஈழப் பிரச்னையில் இலங்கை அரசு எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டதோ அதற்கு சற்றும் குறையாத அட்டூழியங்களை விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்து வந்திருக்கிறது.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் யார் ஆண்டது… அதற்கு முன் யார் ஆண்டது என்பதெல்லாம் ஒருவகையில் நிரூபிக்க முடியாத உண்மைகள். நவீன அரசு எப்போது எந்த ஒப்பந்தத்தின் பேரில் உருவாகிறதோ அதன் அடிப்படையில்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கவேண்டும். சேர சோழ பாண்டியர்களின் போர்களால் நிறைந்ததுதான் தமிழக சரித்திரமும். நாளையே மதுரையை எங்களுக்குப் பிரித்துக்கொடு என்று பாண்டியர்கள் போராடினால் தமிழ் இறையாண்மை அரசு அவர்களை ஒடுக்கத்தான் செய்யும்.
 
 
 
தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள் எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும்.
கேவலம் ஒரு கருத்துக் கணிப்பில் தனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விஷயத்தை வெளியிட்ட அற்ப காரணத்துக்காக மூன்று தமிழ் அப்பாவிகளை உயிருடன் கொளுத்திய சம்பவத்தையும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பேருந்தை எரித்து தமிழ் மாணவிகளைக் கொன்றவர்களையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. இவ்வளவு ஏன், சாதிப் பிரச்னைகளில் கொல்லப்படுபவர்கள் எல்லாருமே அப்பாவித் தமிழர்கள்தானே. சாராயக் கடை திறந்து மெள்ள மெள்ளக் கொல்லப்படுவதும் தமிழர்கள்தானே. சிறு எதிர்ப்புகூட தெரிவிக்காத நிலையிலேயே இந்தப் படுகொலைகள் என்றால் நாட்டைப் பிரித்துக் கொடு என்றால் நம் தமிழ் அரசு நம் தமிழ் மக்களை எப்படி நடத்தும் என்பதை யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த வார்த்தைகளைப் பேசுவது நல்லது. அகதிகளாக இங்கு வந்து ஆண்டுக்கணக்காக துன்பத்தில் தவிப்பவர்களுக்கு இந்த தமிழினத்தலைவர்களும் காவலர்களும் இனமான எழுச்சி நாயகர்களும் செய்து கிழித்தது என்ன என்பதையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.
 
 
 
இத்தனைக்கும் தமிழகத்தில் கூட தாய் மொழிக் கல்வி இருந்திராத நிலையில் ஈழத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே மருத்துவக் கல்லூரி வரை படித்து முடிக்க முடிந்திருந்தது. நீதிக் கட்சி தொடங்கியபோது சொற்ப எண்ணிக்கையிலான பிராமணர்கள் அரசுப் பணிகளில் பெருமளவு இடத்தைப் பிடித்திருந்ததுபோல் இலங்கையில் சிறுபான்மையாக இருந்த தமிழர்கள் (சுமார் 15%)  அரசுப் பணிகளில் 40-50% இடங்களில் இருந்தார்கள். இலங்கை அமைச்சகத்திலும் தமிழர்கள் கணிசமாக இடம்பெற்றிருந்தனர். இவையெல்லாம் 1983-ல் பேரழிவு ஆரம்பிப்பதற்கு முந்தைய நிலை. அப்படியாக தனி நாடு கோருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில்தான் விடுதலைபுலிகள் போராட்டத்தை அதுவும் மிக மூர்க்கமான வன்முறைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
 
 
 
இஸ்லாமியர்களைப் போட்டது போட்டபடி துரத்தியடித்ததில் இருந்து அவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று கண்டந்துண்டமாக வெட்டியும் வெடி குண்டு வைத்தும் கண்மூடித்தனமாகக் கொன்றழித்திருக்கிறார்கள். பாலசந்திரனை விட மிகச் சிறிய குழந்தைகளையெல்லாம் கூட மசூதியில் தொழுது கொண்டிருந்தபோது நேருக்கு நேர் நின்று சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.
 
 
 
இதைவிட தமிழ் இனத்துக்குள்ளேயே பிற போராட்டக் குழுவினரை சரமாரியாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆயுதக் கடத்தலில் ஆரம்பித்து அனைத்துவகையான திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை குறித்து ஒரு வார்த்தைகூட இன்றைய போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.
 
 
 
மூன்றாவதாக, இந்தியாவை இந்தப் போரில் பிரதான குற்றவாளியாக இணைக்கும் பணியை வேகத்துடன் முன்னெடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, வை.கோ. பழ நெடுமாறன், சீமான், மே 17 இயக்கம் போன்றவர்களுக்கு இடப்பட்ட பணியும் இதுவே. ‘தன்னெழுச்சியாகப்’ போராட முன் வந்திருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களும் இதையே முன்வைத்திருக்கிறார்கள். அப்படியாக இலங்கையைச் சீரழித்தது போதாதென்று இந்தியாவையும் அழிக்கும் நோக்கில்தான் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
 
 
 
மிகையான, பாதி உண்மைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரத்த சரித்திரத்தின் இந்த இரண்டாம் பாகம் சரியாக இனங்காணப்பட வேண்டும். ஒரு பெரும் கொடுங்கனவின் தொடக்க நிமிடங்கள் இவை. நாளைய பெரும் வன்முறைக்குத் தோதாக இது போன்ற நடவடிக்கைகளால் நிலம் தயார்படுத்தப்பட்டுவருகிறது. சில நோய்களை வரும் முன்பே தடுத்துவிடவேண்டும். வந்த பிறகு மீட்சிக்கான வழியே கிடையாது.
 
 
 
இலங்கைக் கடற்படையால் தமிழக/இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுபவற்றைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தாலே அரை உண்மை எவ்வளவு அபாயகரமானது என்பது புரிந்துவிடும். தமிழகப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவது, தமிழக மீனவர்கள் வலிமையான மோட்டர் படகுகளைப் பயன்படுத்துவது, இலங்கை மீனவர்களுக்கு அவர்களுடன் போட்டிபோட முடியாத நிலை, தமிழ மீனவர் குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள் கூட இலங்கை அரசின் மீது பழிபோடப்படுதல், அரசியல் உள்நோக்கத்துடன் மிகைப்படுத்திக் கூறப்படும் நிகழ்வுகள், கைது போன்ற இலங்கைக் கடற்படையின் முதல் கட்டத் தொடர் எச்சரிக்கைகள், மாற்று மீன் பிடித் தடங்களை உருவாக்குதல், கடல் பாசிகள் வளர்த்தல் என எதுவுமே பேசப்படாமல் வெறுமனே இலங்கை அரசு தமிழக/இந்திய மீனவர்களைக் கொல்கிறது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டு பிரச்னையை மேலும் பெரிதாக்க மட்டுமே செய்யும்.
 
 
 
பஞ்சாபில் ஆரம்பிக்கப்பட்ட காலிஸ்தான் பிரச்னை இந்திய அரசால் ஓரளவுக்கு ”நல்ல முறை’யில் தீர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் என எல்லையோரப்பகுதிகளில் தீராத வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்போது ஈழத்தையும் உள்ளடக்கிய தனித் தமிழ் நாடு என்ற சாகசப் போர் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
 
 
 
தமிழக, இந்திய அரசும் அதன் அதிகாரவர்க்கமும் இந்தப் பிரச்னையைக் கையாளும் திறமை கொண்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் தரப்புக்கான எண்ணெயை ஊற்றி பிரச்னையைக் கொழுந்துவிட்டெரியவே செய்வார்கள். அல்லது அந்த திசையில் உளவுத்துறையால் வழிநடத்தப்படுவார்கள். மக்களாட்சியில் மக்கள்தான் மன்னர்கள்… அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் அடுத்தகட்ட மன்னர்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், உண்மையில் தேசங்கள் இவர்களால் ஆளப்படுவதில்லை. சர்வதேச வஞ்சக உளவாளிகளால் அது ஆளப்படுகிறது. பிரிவினைவாதிகளுக்கு உணவிடும் அவர்கள்தான் இறையாண்மையைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற பேரில் அரசையும் ஆட்டுவித்துவருகிறார்கள். சதுரங்கத்தின் இரண்டு பக்கமும் அவர்களே அமர்ந்து ஆடும் இந்த ஆட்டத்தில் உருட்டப்படும் காய்கள்தான் நாமும் நம் தலைவர்களும்.
 
 
 
பாரத மாதாவின் முகமூடிக்குப் பின்னால் இன்றிருப்பது சூனியக்காரி. நாம் சூனியக்காரி மீது எறியும் அம்புகள் எல்லாம் கேடயமாகப் பிடிக்கப்பட்டிருக்கும் பாரத மாதாவின் தேகத்தைத்தான் குத்திக் கிழிக்கின்றன. மீட்பு தேடி ஓடும் நம்மை, புதிய அவதாரமெடுத்து அரவணைக்கக் காத்திருப்பதோ தெய்வ வடிவில் இருக்கும் சாத்தான். சூனியக்காரிக்கும் சாத்தானுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நம் பாரத தேசத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கிறது.
 
 
 
 

இலங்கையும் வெறுப்பு அரசியலும்

 
 
Courtesy : The Hindu, Sept 6, 2012
 
 
இலங்கையில் இருந்து சில பறவைகள் பறந்து வருகின்றன. தமிழகத்தின் வான்பரப்பில் நுழையும்போது கீழிருந்து கற்கள் பறந்து வருகின்றன. ஒரு பறவை சொல்கிறது. 'இதற்குத்தான் தமிழ்நாட்டின்மீது பறக்கவேண்டாம் என்று சொன்னேன்!'  The Hindu வெளியிட்டுள்ள  கார்ட்டூன் இது. இலங்கையில் இருந்து வந்திருந்த கால்பந்தாட்ட வீரர்களைத் தமிழக முதல்வர் திருப்பியனுப்பியதையும் திருச்சி விமானநிலையத்தில் வந்திறங்கிய இலங்கை ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள்மீது நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலையும் கண்டிக்கும் விதத்தில் இந்தக் கார்ட்டூன் அமைந்துள்ளது.

கார்டூனின் மையக்கருத்தோடு முரண்படுவதற்கு எதுவுமில்லை. இலங்கை அரசின் மீதான கோபத்தை இலங்கை விளையாட்டு வீரர்கள்மீதும் சுற்றுலாப் பயணிகள்மீதும் வெளிப்படுத்தியது நிச்சயம் தவறுதான். 'இன்று பள்ளிக்கூட கால்பந்து அணியினரைத் திருப்பியனுப்பினார்கள். நாளை கிரிக்கெட் வீரர்களைத் தடை செய்யச் சொல்வார்கள். இலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் ஆன்மிகக் பயணிகளும் வரக்கூடாது என்று தடை செய்யக் கோருவார்கள். இது ஆபத்தான விளையாட்டு!' என்னும் The Hindu  எடிட்டோரியலின் கவலையும்கூட நியாயமானதுதான்.

இந்த இரு சம்பவங்களில் முதலாவது தமிழக அரசின் செயல்பாட்டால் நிகழ்ந்தது. மற்றொன்று தமிழகக் கட்சிகளின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டது. இரண்டுக்கும் உள்ளிருப்பது வெறுப்பு அரசியல்.  'இலங்கைத் தமிழர்கள்பால் இந்த அரசு மிகுந்த அக்கறையோடு இருப்பதைப் போல தீவிரமாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பிய காரணத்தால், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலாவாகவும், கோவில்களுக்காகவும் வந்த இலங்கை பயணிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன' என்கிறார் கலைஞர். அரசியல் ரீதியான கோரிக்கைகளைக்கூட இனவாத உணர்ச்சி பரபரப்பு அரசியலில் மூழ்கடித்து விடுவது திராவிட இயக்க கட்சிகளின் மரபு.' என்கிறது வினவு, 'சிங்கள இனவெறி அரசை எதிர்க்க முடியாதவர்கள் இறுதியில் ஆன்மிக யாத்திரை வந்த சிங்கள மக்களை துரத்தியிருக்கிறார்கள்.'

உண்மையில், மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் திறன் வெறுப்பு அரசியலுக்கு இருக்கிறது. ஹிட்லர் வளர்த்தெடுத்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்தது. வெறுப்பு அரசியலுக்குப் பலியான அதே யூதர்கள் இன்னொரு வெறுப்பு அரசியல் சித்தாந்தத்தை வளர்த்தெடுத்து பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்களைக் கொன்றொழித்தார்கள். அமெரிக்காவின் தவறுகளுக்காக அமெரிக்கர்கள் செப்டெம்பர் 11, 2001 அன்று தண்டிக்கப்பட்டார்கள். ஆதிக்க இந்து சாதியினராலும் தலைமையினாலும் வளர்த்தெடுக்கப்பட்ட தீவிர வெறுப்பு அரசியலின் விளைவே குஜராத் 2002 கலவரம். அசாம் கலவரமும்கூட இந்த வகையில்தான் அடங்கும்.

பலரும் நினைப்பது போல் இந்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் அரசியல் தலைமையால் மட்டுமே தனியோரிடத்தில் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுவதில்லை. நம்மில் பலரும்கூட இதற்கு இரையாகிறோம். பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் வட மாநிலத்தவரைச் சந்திக்கும்போது, நம்மையறியாமல் முகம் சுளிக்கும்போது வெறுப்பு அரசியல் நம்மைப் பற்றிக்கொள்கிறது. என் இடத்தில் நீ என்ன செய்கிறாய்? பேருந்தில் எனக்கான இடத்தில் நீ ஏன் அமர்ந்திருக்கிறாய்? எனக்கான வாய்ப்புகளை நாளை நீ தட்டிப்பறித்துவிடுவாயோ? பால் தாக்கரே, ராஜ் தாக்கரே குழு மகாராஷ்டிராவில் இப்படிப்பட்ட விரோத உணர்வுகளைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானியப் பாடகர்களோடு இணைந்து ஆஷா போஸ்லே பாடக்கூடாது என்று சமீபத்தில் 
ராஜ் தாக்கரே உத்தரவு போட்டிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அரசு இயந்திரம் சிங்களர்கள் மத்தியில் வெற்றிகரமாக விதைத்த வெறுப்பு அரசியல் உணர்வுதான் முள்ளிவாய்க்காலைத் தோற்றுவித்தது. ஓர் அரசு இரு வகைகளில் இதனை செய்கிறது. 1) ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பரவியிருக்கும் அதிருப்தியை பிரயத்தனப்பட்டு ஊதிப் பெரிதாக்கி வளர்த்துவிடுவதன் மூலம், ஒரு குழுவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி மோதவிடுகிறது. 2) இயல்பிலேயே மக்களிடையே ஒரு சாராருக்கு எதிராக மூண்டெழும் வெறுப்புணர்வை, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதன்மூலம், வன்முறையை வளர்த்தெடுக்கிறது. ஆட்சியில் உள்ள அரசுக்கும் சரி, ஆட்சியைப் பிடிக்க விரும்பும் கட்சிகளுக்கும்சரி, இந்த இரண்டுமே லாபமளிக்கக்கூடியதுதான். காலப்போக்கில், எது இயல்பான வெறுப்புணர்வு, எது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வு என்று பிரித்து பார்க்கமுடியாதபடி சிக்கல்கள் பெரிதாகிவிடுகின்றன. உதாரணத்துக்கு, ஜெர்மானியர்களிடையே யூத எதிர்ப்புணர்வு வளர்ந்திருந்தது உண்மை. ஹிட்லர் அந்த உணர்வை வளர்த்தெடுத்து ஓர் அரசியல் சித்தாந்தமாக வளர்த்தெடுத்ததும் உண்மை. இரண்டும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டபோது விபரீதமான விளைவுகள் ஏற்பட்டன.

வெறுப்பு அரசியலை வளர்ப்பதும் ஆதரிப்பதும் மிகவும் எளிது.  உறுதியான, உடனடியான பலன்கள் சர்வநிச்சயம். எனவே, உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் இப்பணியைத் தொடர்நது செய்துவருகின்றன. பகுத்தாய்ந்து சிந்திக்கத் தெரியாத மக்கள் தொடர்ந்து இதற்குப் பலியாகின்றனர்.

மேலே குறிப்பிட்ட இரு சம்பவங்களின் பின்னணியில் இன்னொரு உண்மையும் ஒளிந்திருக்கிறது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழக அரசாலும் தமிழகக் கட்சிகளாலும் எதுவும் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டினால் அரசியல் பிழைப்பு பாதிக்கப்படும். ஒரே மாற்று, வெறுப்பு அரசியலும் குளிர் காய்தலும் மட்டுமே.

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத் தருவேன் என்று தேர்தல் பிரசாரங்களின் போது வாக்களித்திருந்தாலும், அது சாத்தியமில்லை என்பது முதல்வருக்குத் தெரியும். எனவேதான், சாத்தியமானதும் எளிதானதுமான ஒரு காரியத்தை அவர் செய்தார். ஈழத்தை முன்வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும் பிற கட்சிகளும் குழுவினரும்கூட கோஷம் எழுப்பியும் கல் வீசியும் தங்களால் இயன்ற அளவுக்கு வெறுப்பை விதைத்து முடிந்தவரை ஆதாயம் அடைந்துகொண்டார்கள். இப்போதைக்கு அதிகபட்சம் இதுதான் சாத்தியம்.

முழு விழிப்புடனும் சுயநினைவுடனும் இருக்கவேண்டிய அவசியம் நமக்குத்தான் இருக்கிறது. இயல்பான நம்முள்ளே எழுந்தாலும் சரி, செயற்கையாக வெளியில் இருந்து தூண்டிவிடப்பட்டாலும் சரி, ஆபத்தான வெறுப்பு அரசியல் வளையத்துக்குள் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இதிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழி, வரலாற்றை ஆழமாகவும் அகலமாகவும் கற்பதும், கற்றதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் மட்டும்தான்.

தி இந்து கார்ட்டூனுக்கு வருவோம். தமிழர்களின் கல்வீசும் செயல்பாட்டைக் கண்டித்து தலையங்கமும் கார்ட்டூனும் செய்திக்கட்டுரைகளும் தீட்டிய தி இந்து, இதே உக்கிரத்துடன், இதே தார்மிகக் கோபத்துடன் இலங்கையை என்றேனும் கண்டித்திருக்கிறதா? இல்லை எனில், இதுவும்கூட ஒருவகை வெறுப்பு அரசியல்தான் அல்லவா?
 
 
இந்தக் கட்டுரை சிலருக்குக் கோபத்தையும் வேறு சிலருக்குக் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
 
இன்றுகூட ஒரு நண்பர் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
 
//இலங்கைக் கால்பந்தாட்டக்காரர்களைத் தமிழக அரசு சட்டப்படி வெளியேற்றியது, புத்த பிட்சுக்களின் மீது சில தனிமனிதர்கள் தாக்குதல் நடத்தினர், இரண்டையும் இணைத்து மோசடி செய்கிறது இந்து தலையங்கம், ஓர் இனப்படுகொலை செய்த நாட்டின் விளையாட்டாளர்களை வெளியேற்றுவது என்பது எப்படி இனவாதமாகும்? இந்தக் கவலை நியாயமானது என்று நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் மருதன்? //
 
 
 
விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பியது ஓர் அரசின் செயல்பாடு. புத்த பிட்சுக்களின்மீது தாக்குதல் நடத்திய சில தனிமனிதர்களின் செயல்பாடு. ஒரு நாட்டு அரசின் செயல்பாடும் அந்நாட்டு மக்கள் சிலரின் செயல்பாடும் ஒன்றா என்பதுதான் கேள்வி. நிச்சயம் வெவ்வேறுதான். அதே சமயம் இரண்டுமே ஆபத்தானவை என்பதால் இரண்டும் சேர்த்தேதான் எதிர்க்கப்படவேண்டும்.
சிங்கள இனவாத அரசு, தமிழர்களை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தக்காக ஒடுக்குவது நியாயமல்ல என்றால் சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தமிழக அரசு ஒடுக்குவதும் நியாயமற்றதுதான்.
 
 
ஆனால், நம்மில் பலரால் சிங்களர்களின் செயல்பாடுகளையும் தமிழகத்தின்
செயல்பாடுகளையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பார்க்கமுடியவில்லை. அதற்கு மனம் ஒப்பவில்லை. பல கேள்விகள் அலைமோதுகின்றன. பல்லாயிரம் பேரைக் கொன்றவர்களும் கல்லெறிபவர்களும் ஒன்றா? இருவருக்கும் ஒரே நீதியா? இருவருடைய குற்றங்களையும் ஒன்றுபோல் பாவித்து தீர்ப்பு எழுதுவது சாத்தியமா? படுகொலை செய்பவர்கள்மீது ஆத்திரப்பட்டு சிறு கல் வீசினால் அது கொடுஞ்செயல் ஆகிவிடுமா?
இந்தக் கேள்விகளுக்கு விடை தேடவேண்டுமானல், இவற்றோடு சேர்த்து இன்னும் இரு  கேள்விகளை நாம் எழுப்பவேண்டும்.
 
  • ஒரு நாட்டின் அரசையும் அதன் மக்களையும் ஒன்றுபோல் பாவிக்கவேண்டுமா?
 
  • ஒரு நாட்டின் செயல்பாடுகளுக்கு அந்நாட்டு மக்களும் பொறுப்பேற்கவேண்டுமா?


எனில், அமெரிக்க அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் ஒருவர், அமெரிக்கர்கள் அனைவரையும் எதிர்த்தாகவேண்டுமா? சோவியத் ரஷ்யாவை அல்லது செஞ்சீனத்தை ஏற்கும் ஒருவர் ஒவ்வொரு ரஷ்யரையும் ஒவ்வொரு சீனரையும் அரவணைக்கவேண்டுமா?
 
 
ஒருவருடைய அடையாளம் என்பது என்ன என்னும் ஆதாரமான கேள்வி இங்கே எழுகிறது. The Argumentative Indian புத்தகத்தில் அமர்த்தியா சென் இதுபற்றி விவாதிக்கிறார். ஒருவர் பட்டம் பெற்றவராக இருக்கிறார். அவர் ஒரு வங்கியில் பணிபுரிகிறார்.
 
 
அவருக்கு கால்பந்து பிடிக்கும். அவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் பார்வை இருக்கிறது. அவர் மாலை நேரங்களில் தன் வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்கிறார். அவர் ஒரு கணவர். தன் மகனுக்குத் தகப்பன். அவர் கற்றறிந்தவர். அவர் ஒரு இந்தியர். அவர் ஒரு முஸ்லிம். இதில் எது அவருடைய அடையாளம்? எந்த அம்சத்தை அல்லது அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்மீதான மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது? எந்த அடையாளத்தைக் கொண்டு அவர் ஏற்கப்படுகிறார் அல்லது நிராகரிக்கப்படுகிறார்? அவரைப் பற்றி நாம் உருவாக்கிக்கொள்ளும் பிம்பம் எத்தகையது? இது மிகவும் முக்கியமானதொரு கேள்வி. காரணம், இந்தப் பிம்பத்தை வைத்துதான் நாம் அவரை எதிர்கொள்கிறோம்.
 
 
இலங்கை அதிபரை ஒரு  ஃபாசிஸ்டாக அன்றி வேறெப்படியும் நம்மால் கற்பனை செய்யமுடியாததற்குக் காரணம் அவருடைய பிற குணாதிசயங்களைக் காட்டிலும் அவருடைய ஃபாசிச குணம் மேலெழும்பியிருப்பதுதான். அந்தக் குணமே அவரது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைக்கிறது.
ஒரு ஃபாசிஸ்ட் என்னும் அடிப்படையில் இலங்கை அதிபர் எதிர்க்கப்படவேண்டியவர். ஒரு போர்க்குற்றவாளி, கிரிமினல் என்னும் அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டியவர். அவருடைய  அரசியல் நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று. முறியடிக்கப்படவேண்டிய ஒன்றும்கூட. மஹிந்த ராஜபக்ஷேவின் அடையாளம் இதுவே. அவர் ஒரு சிங்களராகவும் இருக்கிறார். அவ்வளவுதான்.
 
 
இதே ரீதியில், இலங்கை அதிபர் அரசை ஒரு ஃபாசிஸ்ட் அரசு என்னும் முறையில் எதிர்க்கவேண்டும். இலங்கை அதிபர்க்குத் துணை நிற்கும் அவருடைய அரசையும் ராணுவத்தையும் எதிர்க்கவேண்டும். அதே வரிசையில், சிங்களப் பேரினவாதம் எதிர்க்கப்படவேண்டியது. ஆனால் சிங்களர்கள் அனைவரும் எதிர்க்கப்படவேண்டியவர்களா?
அமெரிக்க எதிர்ப்பு என்பது அனைத்து அமெரிக்கர்களையும் எதிர்ப்பது என்று நாம் அர்த்தப்படுத்திக்கொண்டால், நோம் சாம்ஸ்கி, ஹோவர்ட் ஜின், பாப் உட்வர்ட்உள்ளிட்ட அமெரிக்க விமரிசகர்களையும் சேர்த்தேதான் நாம் எதிர்க்கவேண்டியிருக்கும்.
 
 
சிங்கள அரசைக் கடுமையாகச் சாடி பலியான லசிந்த விக்கிரமதுங்கவை ஒரு சிங்களர் என்பதற்காக நாம் எதிர்க்கவேண்டுமா என்ன?
எதிர்க்கவேண்டியது சிங்கள இனவாத அரசைத்தான்; சிங்களர்களை அல்ல. இந்த உண்மை தெரிந்தேதான் இங்குள்ள அரசியல் கட்சிகளும் சில இயக்கங்களும் வெறுப்பு அரசியலை மக்களிடையே பரப்பிவிடுகின்றன. அவற்றுக்கு நாம் இரையாகக்கூடாது.
 
 
sl_1401580f
 
 
ஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மை இனம் அதன் சிறுபான்மை இன மக்களை எப்படி நடத்துகிறது என்பதைத் தொடர்ச்சியாக கவனித்து, ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவேண்டியது அந்நாட்டு மக்களின் தார்மிகக் கடமையாகும். இந்த அளவுகோலின் அடிப்படையில்தான் இலங்கைப் பிரச்னையை நாம் கவனிக்கவேண்டும். அங்கே ஒருவேளை சிங்களர்கள் சிறுபான்மையினராக இருந்து, பெரும்பான்மை தமிழர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டால், அப்போது நாம் சிங்களர்களுக்கு ஆதரவாகத்தான் குரல் கொடுக்கவேண்டும். நம் இனம், நம் மொழி, தொப்புள்கொடி உறவு போன்ற பதங்களை அப்போது பயன்படுத்தமுடியாது என்றபோதிலும்.
‘சிங்களர்கள்’ என்னும் அடையாளத்தை இப்போது மூன்றாகப் பிரிக்கலாம்.
  • இலங்கை அரசின் இனவாதக் கொள்கையை ஏற்பவர்கள் / அவற்றால் பலனடைபவர்கள்.
 
 
  • இலங்கை அரசின் இனவாதக் கொள்கைகளை ஏற்காதவர்கள் / அவற்றை எதிர்ப்பவர்கள்.
 
  • அரசியல் பார்வை ஏதுமற்றவர்கள்.


சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான நம்  போராட்டத்தில் இரண்டாவது பிரிவினரை நாம் ஒன்றிணைத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றாவது பிரிவினரை வென்றெடுக்கவேண்டும்.
முதல் பிரிவினர் எதிர்க்கப்படவேண்டியவர்கள்.
எப்படிப் பார்த்தாலும், சிங்களர்களோடு உரையாடாமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல், அவர்களோடு முரண்படாமல் இலங்கைத் தமிழர் போராட்டத்தை முன்னெடுக்கமுடியாது. சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்னும் ஒரே காரணத்துக்காக ஒதுக்குவது பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும்.


சிங்கள அரசின்மீதான கோபத்தை சிங்களர்கள்மீது செலுத்துவதும் அதற்குத் துணை போவதும் சிங்கள அரசுக்கு சாதகமான செயல்பாடாகத்தான் இருக்கும். அரசியல் பார்வை ஏதுமற்ற சிங்களர்களும்கூட தங்கள் அரசோடு வேறுவழியின்றி ஒன்றிப்போகும் அபாயமும் ஏற்படும்.
ஆட்சியாளர்களைப் போலன்றி, பாட்டாளி வர்க்கம் சர்வதேசத்தன்மை கொண்டிருக்கவேண்டியது அவசியம். மாணவர்கள் போராட்டமாக இருந்தாலும் சரி, மக்கள் போராட்டமாக இருந்தாலும் சரி. பாதிக்கப்பட்ட சிங்களர்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்து அவர்களையும் ஒன்றிணைத்து போராடுவதன்மூலம் மட்டுமே ஒடுக்கப்படும் தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரமுடியும்.

-Maruthan
 
Thanks : Tamilpapaer.com

Saturday, March 30, 2013

காவிகளும் கசடுகளும்






 

நாட்டின் பிரச்சினைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும்   மக்களை விட தோர்கள்தான் அதிகம் காராணம்  இதற்காக நாங்கள் அனைத்து தேரர்களையும் குறைகூறவில்லை எனினும்  இஸ்லாமிய ஆடைகளை விமர்சிக்கும் பொது பல சேனா தலைவர் தேசிய பாதுகாப்புக்கு இஸ்லாமிய ஆண்கள்,பெண்கள் அணியும் ஆடை பிரச்சினையாக அமையும் என்றார் இதன் போது நாங்கள்  அவரது ஆடையினை சுட்டிக்காட்டவேண்டி இருக்கின்றது. 

ஒரு சில தேரர்கள் அணியும் காவி ஆடைக்குள் திருடப்பட்ட பொருட்களையும், போதைப்பொருட்களையும்,  பாதுகாப்பாக கடத்துகின்றார்கள் இதற்காக புத்த துறவிகள் அனைவரும் காவியுடையை அகற்ற நீங்கள் போராடுவீர்களா? இலங்கையில் இஸ்லாமிய தலைவர்கள் எவரும் நாட்டின் சட்டத்தினை மீறி குற்றம் செய்யவில்லை ஆனால் தேரர்கன் சட்டத்தினை மீறி இருக்கின்றார்கள் என்பதனை பின்வரும் தரவுகள் எடுத்துக்காட்டாகும்.  

2011.10.13 ஆம் திகதி தம்புள்ள , நிகரவெட்டன , பல்லியகதி என்ற பிரதேசத்தில் ஒன்பது வயதான சிறுமியை விகாரைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் விகாராதிபதியான சங்கைக்குரிய தேரர் கைது செய்யப்பட்டார். 

2011.08.20 ஆம் திகதி மிஹிந்தனை ரஜமகா விகாரையின் சங்கைக்குரிய நமலவெல ரட்னசார தேரர் 13 வயது சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றத்திற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தார்.

2011.10.04 ஆம் திகதி விஹாரைக்குச் சென்ற ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரரை அங்குரஸ்ஸ பொலிஸார் மாத்தறை நீதவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 2011.10.12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டது.

2012.09.13 ஆம் திகதி ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரைக் கட்டிப்பிடித்து பிக்கு ஒருவர்  பலவந்தமாக முத்தமிட்டார் .இதனையடுத்து சம்மந்தப்பட்ட பிக்குவைக் கண்டி பொலிஸார் கைது  செய்து கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அதனை அடுத்து பிக்குவை 2012.09.24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி வீதிமன்றம் உத்தரவிட்டது.

2012.03.07 ஆம் திகதி பேலியகொட பகுதியைசேர்ந்த பிக்கு ஒருவர் ஆபாச வீடியோ காட்சிகளை தேரர்க்கு செந்தமான கணினியில் வைத்திருந்த குற்றத்திகாக தங்கியிருந்த பௌத்த விகாரையில் வைத்து பிக்குவை காவல் துறையினர் கைது செய்து மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

2012.11.17 ஆம் திகதி ருவன்வல்ல சோபித தேரர் என்ற பௌத்த பிக்கு தொழில் வாய்ப்பு ஒன்றினை பெற்றுதருவதாக் தெரிவித்து விதவைப் பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பொலிஸாரல் கைது செய்யப்பட்டு கேகாலை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார். 

2012.08.31 ஆம் திகதி ராஜாங்களை யாய 18ம் பிரதேச விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்து தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். 

2012.06.04 ஆம் திகதி வலஸ்முல்ல கொலுவார பிரசேத்தில் வீடு வீடாக யாசிக்கும் பிக்கு 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தினார் இப் பிக்குவை 2012.06.11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளர். 

2012.12.26 ஆம் திகதி அநுராதபுரம் மஹகெலகம சுதர்சனாரமா விகாரையைச் சேர்ந்த பிக்கு 15 வயது பள்ளிச் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தினார் இப் பிக்குவை பொலிஸார் கைது செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டது. 

2012.05.12 ஆம் திகதி  பண்டிருப்பு காலவன்ன விகாரையில் இருந்த 57 வயதான பௌத்த 7,10, 11 வயதுள்ள மூன்று சிறார்களை பலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக புத்தள மாவட்ட வென்னப்புவ  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

2012.11.16 ஆம் திகதி ஆசிரியர் வங்கி அட்டையை திருடி 90000 ரூபாயை மோசடி செய்த பிக்குவை காவல்துறையினார் கைது செய்து பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது 2012.11.29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

2012.06.03 ம் திகதி இலங்கையை சேர்த 65 வயதான  பௌத்த லண்டன் குறோய்டனில் உள்ள தமெஸ் பௌத்த விகாரையின் விகாராதிபதி பகலகம சோமரத்ன தோர் வயது குறைந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினார் பிக்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதி 7 ஆண்டுகள் சிறைத்தண்னை விதித்தார். 

2012.02.17 ஆம் திகதி போதைப் பொருள்களை கடத்திய குற்றச்சாட்டிற்கு மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் வைத்து தேரர் கைது செய்யப்பட்டார் .

2012.08.03 ஆம் திகதி இளைஞர்களுடன் மதுபானம் அருந்திவிட்டு காவல்துறையினரை அச்சுறுத்திய தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இத் தேரருக்கு களுத்துறை நீதிமன்றம் பிடியாணைப் பறிப்பிக்கப்பட்டவர் எனவும் தெரிவித்தார்.

2012.6.08 ஆம் திகதி பெந்தொட்ட அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற 23 லட்சம் ரூபா தங்க நகை கொள்ளை மற்றும் அளுத்னமையில் இடம்பெற்ற 4கோடி ரூபா மாணிக்கக்கல் கொள்ளை என்பவற்றுடன் தொடர்டைய இதுரவ பண்டாரிகொட பிரதேச விகாரை ஒன்றின் தேரர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

2012.08.06 ஆம் திகதி அம்லிபிட்டிய , கல்அமுணதொல வனப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரம வெட்டிய  தேரர் கைது செய்யப்பட்டார்.

2012.02.09 ஆம் திகதி கற்பிட்டி ,கண்டக்குளி , சமுர்தர்சன விஹாரையின் பிரதம தேரர் பென்டிவௌ தியசேன மோசடி குற்றச்சாட்டில் தொடர்புடையவர் என்று பொலன்னறுவை தீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய கட்டுநாக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 

2013.03.08 ம் திகதி  பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுகம பிரசேத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்வையிட்டு வந்த பிக்கு ஒருவரை பேலியாகொடை பொலிஸ் இரவு 1.30 மணியாளவில் விகாரையை சுற்றிவளைத்து பிக்குவை பேலியகொடை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

2013.02.03  ஆம் திகதி களனி விஹாரையொன்றின் பீடாதிபதி திருமணமாண 43 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்  பாதிக்கப்பட்ட  பெண் ராகம வைத்தியசாலையில் பல நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார் இப் பெண் முறைபாடு எதனையும் செய்ய வேண்டாம் என பௌத்த பிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஆசிய மனித உரிமை ஆணைக் குழு காவல் துறைக்கு அறிவித்துள்ளது

2013.02.15 ஆம் திகதி பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட நாரம்மலை பிரதேச பிக்குவை வெலிவேரிய பொலிசார் கைது செய்து கம்பஹா மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் ஆஜர்படுத்தியபோது 2012.02.27 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமான்றம் உத்தரவிட்டது.

2013.01.16 ஆம் திகதி திருகோணமலை மொரவெவ எட்டாபெந்தியேவ பகுதியில்  ஆறு வயது சிறுவரை பலியல் குற்றம் புரிந்த பிக்குவை திருகோணமலை நீதிமன்றத்தில் பொலிஸ் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிக்குவை 2013.01.29 ம் திகதி வரை விளக்கதறியலில் வைக்க நீதிபதி சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

2013.02.02. பல்வேபெத்த ,ஹெலஉடகந்த பிரதேச விகாரை ஒன்றின் விகாராதிபதி குடிபோதையுடன் பொலிசார் கைது செய்தார்.

2013.02.11 ஆம் திகதி  வெல்லாவ ஹரிபிட்யே தர்மசந்திர பிரிவெனவின் பிரதிப் பணிப்பாளர் தம்ம விசுத்தி தேரரே  திருமணம் செய்தார் இதன்போது வேறு பெயர் ஒன்றில் பதிவு திருமணம் செய்து கொண்டமையும், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டமையும் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தமை ஆகிய குற்றசாட்டுக்களுடன் பொலிஸார் கைது செய்யப்பட்டார். 

2013.02.24 ஆம் திகதி புத்தளம் கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

எவராக இருந்தாலும் தவறுகள் சுட்டிக்கட்டப்படவேண்டியவை. இல்லை என்றால் எதிர்கால சந்ததிகள் சுட்டிக் காட்டும். மேற்குறிப்பிடப்பட்ட குற்றங்களை செய்த  தேரர்களை கைது செய்த காவல் துறையினர் நாட்டின் அடிப்டை சட்டத்தினை மீறுகின்ற பொது பல சேனா தேரர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ? அரசாங்கத்தின் தளத்திற்கு ஆடும் கூட்டம் ஒன்று நாட்டின் உருவாகி விட்டது. தடுப்பது யார் ? பொருத்துப் பார்ப்போம் அல்லாஹ் நம் பக்கம் .
 
- Yakkoob Faizal
 
 Thanks : Jaffna Muslim      
 

Friday, March 22, 2013

மலாலா : ஆயுதங்களும் சில பள்ளிப் புத்தகங்களும்!



 





 



மலாலா யூசப்சாய் பாகிஸ்தானின் ஸ்வாத் பகுதியைச் சேர்ந்தவள். அவளது தந்தை ஜியாவுத்தீன் யூசப்சாய் ஒரு கவிஞர். மலாலா என்றால் “மிகுந்த சோகமான” என்று அர்த்தம். இந்தப் பெயரை அவளது அப்பா பஷ்தூன் கவிஞர் மலாலாவின் நினைவாக தனது மகளுக்குச் சூட்டியிருந்தார். மலாலாவின் அப்பா ஜியாவுத்தீன் யூசப்சாய் தனது செல்ல மகளை எல்லா சுதந்திரங்களுடன் வளர்த்தார்.


தனது பையன்கள் நித்திரை கொண்ட பிறகும் கூட இரவில் நீண்ட நேரம் வரை தனது மகளுடன் அரசியல், சமூகசூழல் என நாட்டின் எதார்த்த நிலைகளைப் பேசிக் கொண்டேயிருப்பார், விவாதித் துக் கொண்டிருப்பார். இந்த உரையாடல்களின் வழியே ஒரு புதிய மனுஷியாக அவள் வளர்ந்து உற்சாகத்துடன் உலவி வந்தாள்.
இந்த ஸ்வாத் பகுதி முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது, ஸ்வாதின் எல்லைதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியாக உள்ளது. தலிபான்கள் ஸ்வாதில் வன்முறைகளில் ஈடுபட்டு ஆப்கானில் மறைந்து விடுவார்கள். இதனாலேயே ஸ்வாத்தில் பாகிஸ்தான் ராணுவமும் அளவுக்கு அதிகமாகக் குவிக்கப்பட்டுள்ளது.



இந்தப் பெரும் படைகளின் இருப்பு அந்தப் பகுதியின் இயல்பு வாழ்க்கையை மெல்ல மெல்ல அபகரித்து வந்தது. பலருக்கு இதுபற்றிய மன வருத்தம் இருப்பினும் அதனை வெளிப்படுத்த இயலாத சூழல் அங்கு நிலவியது. வசதி படைத்த சிலர் மெல்ல இடம்பெயர்ந்து சென்றாலும், ஏழைகள்

மற்றும் இந்த நிலத்தின்மீது காதல் கொண்ட-வர்களால் அங்கிருந்து அகல இயலவில்லை.

தலிபான்கள் அங்கு அடிக்கடி திடீர் கட்டுப்பாடுகள், தடைகள் விதிப்பது சகஜம். இதனை அவர்களின் பண்பலை வானொலியில்தான் அறிவிப்பார்கள். இந்த அறிவிப்புகள் அந்த மலைகளின் நிறத்தை மாற்றும் பலம் கொண்டவை. பெண்கள்மீதும் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்மீதும் அதீத கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். குறிப்பாக, பெண்கள் கல்வி பயில்வது தலிபான்களுக்கு வேப்பங்காயாக இருக்கும். உலகின் எல்லா அடிப்படைவாதக் குழுக்களும், மத
தீவிரவாதக் குழுக்களும் முதலில் குறிவைப்பது அவர்களின் சமூகப் பெண்களையே.


 
 
 

தனது தந்தையுடன் அடிக்கடி வெளியே சென்று விடுவார் மலாலா. ஒருமுறை பெஷாவர் நகருக்கு மலாலாவை யூசப்சாய் அழைத்துச் சென்றார். அங்கு அந்த கூட்டத்தில் பார்வையாளர்கள், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் கூடியிருந்த அரங்கில் அவள் “எனது அடிப்படை உரிமையான கல்வியைத் தலிபான்களால் எப்படிப் பறிக்க முடியும்?” என்றாள். அதே நேரம் யூசப்சாயிடம் ஒரு பிபிசி நிருபர், உனது பள்ளியில் படிக்கும் யாராவது தலிபான்கள் அடக்குமுறையில் பள்ளி மாணவிகளின் வாழ்க்கை பற்றி எழுத இயலுமா என்று கேட்டார்.


முதலில் ஆயிஷா என்கிற மாணவிதான் இதை எழுத முன்வந்தார். ஆனால் அவளது பெற்றோர் இதை அறிந்ததும் தலிபான்களின் எதிர்வினைக்குப் பயந்து வேண்டவே வேண்டாம் என்றார்கள். அந்த நேரம் வேறு யார் இதை எழுதுவார்கள் என்ற குழப்பமான சூழலில் மலாலா இதை எழுத முன்வந்தார். ஆனால் அவளது பாதுகாப்பு கருதி அவளது பெயரில் எழுத வேண்டாம் எனவும் புனை பெயரில் எழுதலாம் எனவும் முடிவு செய்தார்கள்.


ஜனவரி 3, 2009ல் தான் அவளது முதல் டைரிக் குறிப்பு பிபிசி உருது வலைத்தளத்தில் வெளியானது. இந்த டைரிக் குறிப்புகளுக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் உருவானார்கள். தலிபான்கள்
அந்தப் பகுதியில் செய்த நடவடிக்கைகளை எல்லாம் மிக துல்லியமான தனது விமர்சனங்களுடன் பதிவு செய்யத் தொடங்கினார் மலாலா. தலிபான்கள் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகளைக் குண்டு வைத்து தகர்த்தது பற்றி ஆவேசமாகப் பல பதிவுகள் செய்தார். தடையை ஏற்று மூடியிருந்த பள்ளிகளையும் தலிபான்கள் தகர்ப்பதை அவளால் ஏற்க முடியவில்லை.

பள்ளிகள் தகர்க்கப்பட்டபோதும் அவள் தனது பரீட்சைகளுக்காகப் படித்துக் கொண்டிருந்தாள். எப்படியும் நிலைமை சரியாகிவிடும் என்று அவள் நம்பிக்கையுடன் இருந்தாள். பாகிஸ்தான் ராணுவம் சரிவர தன் கடமையைச் செய்யவில்லை என்று பல சமயம் ஆதங்கப்பட்டாள்.


ஒருமுறை அவள், பாகிஸ்தான்
பிரதமர் சர்தாரியின் மகள் ஸ்வாத் பகுதியில் உள்ள பள்ளியில் பயில்பவளாக இருந்தால் இங்கு நிலைமை இவ்வாறாக இருக்காது என்றும் எழுதினாள்.

இந்த நேரம் குடும்பத்துடன் அவர்கள் இஸ்லாமாபாத், பெஷாவர் நகரங்கள் நோக்கிச் சென்றார்கள். பல நண்பர்களின் வீடுகளில் தங்கினார்கள். அவள் தனது ஸ்வாத்
பகுதியுடன் எல்லா நகரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். மலாலாவுக்குத் தான் ஒரு அரசியல் வாதியாகத்தான் ஆகவேண்டும் என்று திடமான எண்ணம் மனதில் பட்டது. அதன் வழியேதான் இந்த சமூகத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய இயலும் என்று அவள் நம்பினாள்.

அவளது டைரிக் குறிப்புகள் பிரபலமானதைத் தொடர்ந்து அவளைப் பற்றி நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு ஊடகம் ஆவணப்படம் ஒன்றை எடுத்தது. இந்தப் படம் வெளியானதும் மலாலா பாகிஸ்தானில் பலர் அறியும் ஒரு நபராக உருவாகி வந்தார். அவள் அடிக்கடி தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் பேட்டிகள் அளித்து வந்தாள். அவள் ஒரு கல்விசார்
செயல்பாட்டாளராக வளர்ந்து வந்தாள். இந்த நேரம் தெஸ்மண்டு அவர்கள் மலாலாவின் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்டு அவளுக்கு சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்குப் பரிந்துரைத்தார். இதனை அறிந்த பாகிஸ்தான் அரசு உடனே அவளுக்குத் தேசிய குழந்தைகள் அமைதி விருது வழங்கியது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் தலிபான்களுக்குப் பெரும் எரிச்சலைத் தந்தது. அவர்களின் கூட்ட விவாதப் பொருளாக மலாலா மாறினாள். அவர்கள் ஏகமனதாக மலாலாவைக் கொல்ல முடிவு செய்தார்கள். அக்டோபர் 9, 2012 அன்று பெரும் தலிபான் படை தங்களின் முழு ஆயுத பலத்துடன் மலாலாவின் பள்ளி நோக்கிச் சென்றது.
 
 
சர்வ வல்லமையுடனான ஆயுதம் ஏந்திய ஒரு தீவிரவாதப் படை நோட்டு புத்தகங்களை முதுகில் சுமந்து பூக்களைப் பறித்து மலைச்சாரலில் தனது வீடு நோக்கிச் சென்ற சிறுமியைப் பார்த்துப் பயம் கொண்டதுதான் வேடிக்கை.
 
 
மலாலாவைத் தலிபான்கள் கழுத்திலும் தலையிலும் சரமாரியாகச் சுட்டார்கள். அடுத்த சில தினங்கள் மயங்கிய நிலையில் அவள் உயிர் பிழைப்பாளா என்பதே பெரும் சந்தேகமாக இருந்தது. உலகம் முழுவதும் மலாலாவுக்கு ஆதரவாகப் போராட்டங்கள், பிரார்த்தனைகள் நடைபெற்றன. அவளை முதலில் ராவல்பிண்டிக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது பாகிஸ்தான் அரசு.
 
 

 
 
பாகிஸ்தானில் உள்ள 50 மதத்
தலைவர்கள்  மலாலாவைத் தாக்கியவர்களுக்கு எதிராக ஃபத்வா பிறப்பித்தார்கள்.

இந்த நேரம் மலாலாவின் கதை சர்வதேச ஊடகங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. அவளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்க உடனே விமான ஆம்புலன்சில் அவள் லண்டன் அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு பிரிட்டன் பிரதமர் இணையத்தில் ‘‘நானும் ஒரு மலாலா’’ என்கிற மனுவைச் சுற்றுக்கு விட்டார்.

மலாலா இதனை எந்தக் கணமும் எதிர்பார்த்துதான் காத்திருந்தார். இப்படி ஒன்று தனக்கு நிகழும் என்பதை முன்உணர்ந்தவளாகவே அவள் இருந்தாள். இதனையும் கூட அவள் தனது டைரியில் எழுதியிருந்தாள்.


‘‘நான் அடிக்கடி தலிபான்கள் என்னைக் கொல்ல வரும் காட்சி பற்றி யோசித்திருக்கிறேன். நிச்சயம் அவர்கள் என்னைக் கொல்ல வரும் சந்தர்ப்பத்திலும்கூட நான் அவர்களிடத்தில் நீங்கள் செய்வது தவறு, கல்வி என்பது எனது அடிப்படை உரிமை என்று வாதிடுவேன்’’


என்கிறார் மலாலா.

.
இந்த சம்பவங்கள் நடைபெறும் இதே சூழலில்தான் வட இந்தியாவில் உள்ள ஜாட்கள் குழந்தை திருமணம்தான் ஜாதியைப் பாதுகாக்க ஒரே வழி என்றும், தமிழகத்தில் ஜாதி மறுப்பு செய்யும் தங்கள் ஜாதிக்காரர்களைக் கொல்லுவோம் என்றும் சில அமைப்புகளின் தலைவர்கள் பகிரங்கமாகப் பேட்டி அளித்ததும் நினைவுக்கு வருகிறது. எல்லா மதங்களிலும் தலிபான்கள் பல நிறங்களில், பல வடிவங்களில் இருக்கவே செய்கிறார்கள்.
 

-முத்து கிருஷ்ணன்