Friday, November 16, 2012

சிறுகதை: கரைகள் தேடும் படகுகள்



 




 




டத்தடிச் சந்தியிலிருக்கும் சமாதிப் பிள்ளையார் கோயிலில், 'இன்றைய எங்கள் பயணம் எந்வொரு பிரச்சினையுமில்லாமல் முடியணும்டா சாமி' என்று மானசீகமாக வேண்டிவிட்டு அருகிலிருக்கும் பழக்கடைகள்  மலர்ச்சாலைகளையெல்லாம் தாண்டிச் சற்றுத்தள்ளியிருந்த பஸ்தரிப்பில் போய் நான் நின்றபோது என்னை உரசுவதுபோல வந்து க்ரீச்சிட்டு நின்றது அந்தப் புத்தம்புதுக் கருநீலநிற சொகுசுக் கார்.

'ஹேய் தனுஷ்! ஏறுடா கார்ல!'


ட்ரைவர் ஸீட்டில் இருந்து என்னை உரிமையோடு அழைத்தவனைப்  பார்த்ததும் மறுப்பேதுமின்றி கதவைத்திறந்து முன்புற ஆசனத்தில் ஏறிக்கொண்டேன். பஸ்தரிப்பில் நின்றிருந்த பலரின் பார்வை முதுகிலே ஊசியாய்க் குத்தியது. அந்த ஏஸிக் காரினுள்ளே அமர்ந்ததும் வேறோர் உலகத்திற்கு வந்துவிட்டது போலிருந்தது எனக்கு. வருடக்கணக்காகப் பழகிய தூசுபடிந்த சுற்றுவட்டத்து வீதிகளெல்லாம் கனவில் வரும் காட்சிபோல பளிச்சென்று தோன்றியது.

'என்ன புதுக்காராயிருக்கு...? காரை மாத்திட்டீங்களா இல்ல உங்க ஆளையே மாத்திட்டீங்களா?'


'கேள்வியைப் பாரு! அந்தப் பழைய காரை வித்தாச்சு. இது போன புதன்கிழமைதான் கஸ்டம்ஸ்லருந்து எடுத்தது. எப்பிடி நல்லாருக்கா?' என்று ஆவலுடன் கேட்டான் அவன்.


'நல்லாருக்கு. அதுசரி, காரை எடுத்திட்டு வந்திருக்கீங்களே கார்லயே அங்க போகப்போறமா என்ன?'


'ஓமோம், கடலுக்குள்ளால ரோட் ஒன்டு கண்டு பிடிச்சிருக்காங்களாம். அதாலேயே ஓட்டிக்கிட்டே போனா நேராய்ப் போய்ச்சேர்ந்திருவோம். ஆளைப்பாரு! இன்டைக்கு சனிக்கிழமை. பொஸ்ஸும் வெளிநாட்ல. இன்டைக்கு இரவுதானே நம்ம பிரயாணம்.. அதுதான் சும்மா காரை எடுத்துட்டு வந்தேன். அதிருக்கட்டும் பாவாடை, தாவணி, தலையில பூ, கையில கூடை.. சும்மா சொல்லக்கூடாதுடா எதை  உடுத்தினாலும் உனக்கு அழகாவே இருக்குடா ராஸ்கல். இன்னும் நீ கோயிலுக்கெல்லாம் வாறியா?'


'அதெல்லாம் இருக்கட்டும். உண்மையில நாம இன்றைக்கு இரவு போறமா இல்ல போனமுறை மாதிரி இழுபறிதானா? காரை வேற கொண்டு வந்திருக்கீங்க. நம்ம சாமானெல்லாம் எங்க?'


'அதெல்லாம் நிலாவெளியில ஒரு வீட்டுல நேற்றே ரெடி பண்ணி வச்சிட்டேன். காரை பீச் ஹோட்டல்ல பார்க்பண்ணி லொக்செய்துட்டு கீயைக் கொடுத்திட்டுப்போய் போட்ல ஏறவேண்டியதுதான். ரஞ்சித் காலைல பஸ்பிடிச்சு வந்து எடுத்திட்டுப் போவான்.?'


'ஐயோ! அந்த ரஞ்சித்துக்கும் விஷயத்தைச் சொல்லிட்டீங்களா? பொஸ்ஸுக்கு மட்டுந்தான் சொல்லப்போறதா எனக்கிட்ட சொன்னீங்க?'


' ரஞ்சித்துக்கு நான் மட்டும் போறதாத்தான் சொன்னேன். நான் போனா என்னோட வேலை அவனுக்குத்தானே? அதனால நிச்சயம் யாருகிட்டயும் சொல்ல மாட்டான். பொஸ் நேற்றுத்தான் மக்காவுக்குப் போனாரு. ஏயாபோர்ட்ல வச்சு அவருகிட்ட நம்ம விசயத்தை விளக்கமாகச் சொன்னேன். முதல்ல அதிர்ச்சியாகிப் பிறகு மிச்சம் கவலைப்பட்டாரு. என்னை விஷ் பண்ணிக் காசும் கொஞ்சம் தந்தாரு. எல்லாத்தையும் ரஞ்சித்துக்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிட்டுப் போ என்றாரு.'


'நீங்க இவ்வளவு றிஸ்க் எடுத்து நாம இப்படிப் போகத்தானா வேணும் மார்க்? இதெல்லாம் என்னாலதானே கஷ்டம். நான் வரல்ல மார்க்!' 


'சரி, வரலண்டா இறங்கிப் போ!' என்றான் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு.  அதை உண்மையாகச் சொன்னானா இல்லை நடிக்கிறானா என்று தெரியாதபடி இருந்தது அவனது முகபாவம். ஆனாலும் எனக்குள்ள ரோசத்தை உடனடியாக நிரூபிக்க விரும்பி இறங்கிச் செல்வதற்காக கதவின் திருகியைக் கோபத்தோடு திருப்பினேன்.  ஆனால் எவ்வளவு முயன்றும் திறக்கவே முடியவில்லை.


' ஏய், சும்மா பகிடிக்குடா! நான் சொன்னா உடனே நம்பிடுவியா நீ? ஓகே ஷேல்வீ கோ டு நிலாவெளி பீச் றைட் நவ்?' என்று என்னிடம் கேட்டுக்கொண்டே செல்போனில் யாருக்கோ கோல் செய்தான் அந்தக்  குறும்புக்காரன் மார்க் ஆன்டனி கெமிலஸ்.


அதுதான் அவனது முழுப்பெயர்.  அவனுடைய பெயரைப் போலவே அவனும் படு ஸ்டைலாகவும் ஸ்மார்ட்டாகவும் இருப்பவன்தான். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு திருகோணமலை அனுராதபுரச் சந்தியிலுள்ள நித்தியானந்தா கல்லூரியில் நான் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவேளை எனது பாடசாலை ஆசிரியனாக அதுவும் என்னுடைய வகுப்பாசிரியனாக இருந்தவன்தான் இவன் என்று சொன்னால் நம்புவீர்களா?


ஒரு ஆசிரியரைப் போய் மரியாதையில்லாமல் அவன் இவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றேனே என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது. அது ஒன்றுமில்லை. பிற்காலத்திலே எங்கள் இருவருக்குள்ளேயும் உண்டான நெருக்கத்தின் விளைவுதான் இந்த மாற்றம். இதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தக் கதையை குறைந்தபட்சம் இன்னும் மூன்று நான்கு பராவாவது தொடர்ந்து படித்தாக வேண்டும்.


மார்க் ஆன்டனி கெமிலஸ் எங்கள் பாடசாலையின் பழைய மாணவனும் கூட.  பாலையூற்றைச் சேர்ந்த பழைய ஏற்பாடுகளை மிகவிசுவாசமாக நம்பும் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் கடைசிப்பிள்ளை அவன். அவனது பெற்றோர்கள் சகோதரங்கள் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரும் வெளிநாடுகளில்தான் உள்ளனர். இவன் மட்டும் வெளிநாடு போவதிலே நாட்டமின்றி தனது வயதான பாட்டியுடன் ஊரிலே இருக்கின்றான். ஏஎல் பரீட்சையில் முதல் தடவையிலேயே பாஸாகி மூன்று வருடங்களில் கல்வியியல் கல்லூரியை வெற்றிகரமாக முடித்ததிலே இருபத்தியொரு வயது பூர்த்தியாவதற்கிடையிலே நியமனம் பெற்று நான் படித்துக்கொண்டிருந்த நித்தியானந்தா கல்லூரிக்கே உடற்கல்வி ஆசிரியராக வந்துவிட்டான். 


அவன் எங்கள் பாடசாலையின் முன்னாள் மாணவன் என்பதாலும் முன்பு எங்களோடு ஒன்றாகப்பழகி கிரிக்கட், புட்போல் விளையாடித் திரிந்தவன் என்பதாலும் அவனை ஏனோ ஒரு ஆசிரியருக்குரிய இடத்திலே வைத்துப் பார்க்க எங்களால் முடியவில்லை. அவனும் எங்களை மாணவர்களாக மட்டும் கருதாமல் ஏறத்தாழ நண்பர்கள் போலத்தான் நடாத்தினான். இருந்தாலும் ஒரு மரியாதைக்காக அவனை நாங்கள் எல்லோரும் பாடசாலையில் வைத்து மட்டும் 'ஆன்டனி ஸேர்' என்று அழைப்பதுண்டு.


அவன் வருவதற்கு முன்பு வரை எங்கள் நித்தியானந்தா கல்லூரி ஏறத்தாழ ஒரு வயோதிபர் மடம்போலத்தான் காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்பு அடுத்தடுத்த வருடங்களில் பழைய ஆசிரியர்களெல்லாம் ஓய்வுபெற்று பல இளம் ஆசிரியர்கள் வந்து ஒன்று சேர்ந்து இயங்கத் தொடங்கிய பின்புதான் எங்களைப்போன்ற மாணவர்களுக்கெல்லாம் படிப்பிலும் ஸ்போர்ட்சிலும் அலாதியான உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவனது மாணவர்களிலே


படிப்பில் எப்போதுமே கெட்டித்தனமாக இருந்து வந்தவனான எனக்கு ஸ்போர்ட்ஸிலே இருக்கும் ஆர்வத்தை பார்த்து மார்க் கெமிலஸுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும் போல. அதன் காரணமாகத்தான் பின்பு அவனுக்குள் என்மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருக்க வேண்டும். அது பின்பு எனது தனிப்பட்ட வாழ்க்கையிலே அக்கறை செலுத்துமளவு நெருக்கமாகி ஒருகட்டத்திலே ஆசிரியர்-மாணவ உறவுக்கும் அப்பாலும் சென்று இன்று எனது குடும்பப் பிரச்சினைகளைக்கூட அவனிடம் மனம்விட்டுப்பேசித் தீர்மானிக்குமளவுக்கு இறுக்கமான நட்பாகிப்போயிருக்கின்றது.


'ஹேய்! என்ன இவ்வளவு யோசனை? பிரயாணத்துக்கு இரவு வரைக்கும் நேரமிருக்கு. லெட்ஸ் என்ஜோய் நவ்! நிலாவெளி பீச் உனக்கு ஓக்கேவா?' என்ற அவனது குரல் கேட்டு நினைவுக்கு வந்தபோது வெளியே லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது.

நான் சிறிது யோசித்துவிட்டு, 'யெஸ்!'  என்றதுதான் தாமதம்.
விர்ரெனக் கிளம்பிய கார் திருகோணமலை புகையிரத நிலையச் சந்தியைத்தாண்டி குவாடலூப் சேர்ச் முன்னாலிருந்த பொலீஸ் பாதுகாப்பு வீதித்தடையில்தான் போய் நின்றது. கரும்பச்சை நிற மழைக்கோட் அணிந்த வயதான ஒரு பொலீஸ்காரர் காரையும் எங்களையும் சில மில்லிகிராம் சந்தேகமாய் உற்றுப்பார்த்துவிட்டுத் தலையசைத்தார். அடுத்த நிமிடம் குளியலறையில் கைதவறிய சவர்க்காரம்போல கார்ப்பெட் வீதியில் வழுக்கிப் பாய்ந்தது கார். காதை உறுத்தாத மெல்லிய மேற்கத்திய சங்கீதத்தில் நனைந்தபடி கண்ணாடியூடாகத் தெரிந்த வெளியுலகம் வெகுநிசப்தமாய் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.

வீதியோரம் இடதுபுறமாய் ரயில்வே குவார்ட்டர்ஸ், நெருப்புவாகை மரங்கள்.. சித்திவிநாயகர்கோயில்.. பழக்கடை.. இரும்புக்கடை.. தேனீர்க்கடை.. சில்லறைக்கடைகள்.. வீடியோக்கிளப்.. கொம்யூனிக்கேஷன்கள், தரிசு நிலம், காத்திருக்கும் முச்சக்கரவண்டிகள்.. மஞ்சள் பெயிண்ட் அடித்த புல்டோசர்.. வாழைக்குலையேற்றிச் செல்லும் சைக்கிள்காரர்.. டியூஷன் செல்லும் பிள்ளைகள், சீமெந்து விளம்பரம்.. மெக்கானிக் ஷொப்.. குட்டிச்சுவர்கள்.. சினிமா போஸ்டர்களை அசைபோடும் மாடுகள், மீன்விற்கும் பெண்.. என்று எல்லோரும் வேகமாகப் பின்வாங்கிக்கொண்டிருந்தார்கள்.



'என்னடா கோபமா? சரி, ஸீட் பெல்ட்டைப் போட்டுக்கோ.. ட்ரஃபிக்காரன் நிக்கிறான்!'

'என்னை ஏன் இன்னும் நீங்க வாடா போடா என்றீங்க..?' என்றேன் உண்மையான கோபத்தோடு.

'சரி மகாராணி, தங்களது ஆசனப்பட்டியை அணிந்து கொள்ளுங்கள். எதிரே நமது போக்குவரத்துக் காவலர்கள் பாதையோரங்களிலே வசூலுக்காகக் காத்துக் கிடக்கின்றார்கள்!'  என்றான் வாய்க்குள் சிரித்தபடி.

'சீ! நேத்திரா டீவில வாறவங்க பேசுற தமிழ் மாதிரியிருக்கு.. வாந்தி வருது!' 

'அதுக்குள்ளேவா.. இப்பதானே பழகினோம்.. ஏம் ஐ டூ ஃபாஸ்ட்?'

'ச்சீ! யூ ஆர் எ பேட் போய்!'

ஸீட்பெல்ட்டை அணிந்த மறுகணம் நான் அடிக்க கை ஓங்கி சட்டென்று அவன்  விலகமுயன்றதிலே காரின் பவர் ஸ்டியரிங் லேசாய்த் திரும்பி விட்டது. 120 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த கார் தடுமாறி கார்ப்பட் சாலையிலே சிறிது தூரம் சறுக்கிச் சென்று க்ரீச்சிட்டு மறுபுறம் திரும்பி நின்றது. சக்கரங்களின் உராய்வினால் லேசான டயர்நாற்றத்துடன் கூடிய புகைகிளம்ப பயத்திலே எனக்கு  இரத்தம் உறைந்துவிட்டது.   வெகுநிச்சயமாய் ஏற்படவிருந்த விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியதில் என்னை நான் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குச் பல நிமிடங்கள் தேவைப்பட்டன. மார்க் கெமிலஸ் ஒரு கைதேர்ந்த சாரதி என்பதால் சட்டெனச் சுதாரித்து நடுவீதியில் நின்றுவிட்ட காரை ஒரு வட்டமடித்து சரியான பாதையில் திருப்பியெடுத்து விட்டான். அந்த வேளையிலே ட்ரபிக் பொலீஸ் யாருமில்லாதிருந்தது எங்கள் அதிர்ஷ்டமே.

கார்  அலஸ்தோட்டத்தைத் தாண்டிக் கொண்டிருந்தபோதுதான் என்முகத்தில் இருந்த பயத்தையும் தவிப்பையும் அவன் தன்னெதிரேயிருந்த பின்பார்வைக் கண்ணாடியில் ரசித்தபடி வருவதைப் பார்த்தேன்.

நான் ஓஎல் பரீட்சைக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலாக எனக்குள் ஒரு உடல் வேறுபாட்டை உணர்ந்தேன். ஆயினும் பரீட்சை மும்முரத்தில் இருந்த காரணத்தால் அதைச் சரியாகக் கவனிக்காமலிருந்து விட்டேன். பின்பு ஏஎல் கணிதப் பிரிவிலே சேர்ந்து படித்த அந்த இரண்டு வருட காலத்திலே இடையிடையே சில உடற்கோளாறுகள் தோன்றியிருந்தது. சில மாற்றங்கள் என்னை யோசிக்க வைத்தாலும் அவை குறித்து அதிக கவலையில்லாமல்தான் இருந்து வந்தேன்.


நான் A/L பரீட்சைக்குத் தோற்றிக் கொண்டிருந்த பழைய நாட்களில் மார்க் கெமிலஸ் என் படிப்பிலே அதிக அக்கறையெடுத்து நிறைய உதவிகள் செய்து கொண்டிருந்தான். அவனுடைய இந்த அபரிமித ஆர்வத்தினால் அவனையும் என்னையும் வைத்து நண்பர்களுக்குள் ஒரு கேலிப்பேச்சுக் கூட வளர்ந்திருந்தது. பரீட்சையின் பின்னர் தனது நண்பனொருவனின் கம்ப்யூட்டர் நிறுவனமொன்றிலே இலவசமாகப் பயிற்சி பெறும் ஏற்பாட்டையும் ஆங்கிலம் படிப்பதற்குரிய ஒழுங்கையும் அவனாகவே முன்வந்து வழங்கினான். இப்படியாக இருவருக்குமிடையே ஒரு நன்றி கலந்த நட்புணர்வு வளர்ந்திருந்தது.


நான் ஏஎல் பரீட்சை எழுதவேண்டிய நேரத்தில்தான் மார்க் கெமிலஸுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆம், கிழக்கிலே நடந்த மாகாணசபைத் தேர்தலையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சராகிய முஸ்லீம் அரசியல்வாதி ஒருவருக்கு அந்தரங்கச் செயலாளராக அவன் நியமிக்கப்பட்டு எங்கள் பாடசாலையிலிருந்து தற்காலிகமாக விலகிச் சென்றுவிட்டான். அதற்கிடையிலே ஒருவாறு உயர்தரப்பரீட்சையும் எழுதி முடிவும் வெளியாகியிருந்தது.


பிஸிகல் ஸயன்ஸ் கிடைக்கும் வாய்ப்புள்ள பெறுபேறு வந்திருந்த காரணத்தால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கெம்பஸ் போவதா அல்லது வேலையொன்றுக்காக முயல்வதா என்பதைத் தீர்மானிப்பதற்காக் காத்திருந்த வேளையில்தான் மீண்டும் எனக்குள் மீண்டும் சில வேறுபாடுகள் தலைதூக்கின. இம்முறை அவற்றின் தாக்கம் உக்கிரமாக இருந்ததால் அலட்சியம் செய்யமுடியவில்லை. ஒருநிலையில் வேறு ஒருவரின் உடலில் நான் இருப்பதைப் போலவும் சிலவேளைகளிலே எனக்குள்ளேயே வேறு ஒருவர் இருப்பது போலவும் சிக்கலான உள்ளுணர்வுகள் என்னை வாட்டியது. ஆனால் அவற்றை யாரிடமும் கூறவும் முடியவில்லை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.


எனக்கென்று நெருக்கமாகப் பழகக்கூடிய நட்புவட்டத்தை நான் பெற்றிருக்காத காரணத்தாலும் வெட்கத்தினாலும் எனக்குள் நடந்து கொண்டிருந்த உடல் மற்றும் உள்ளுணர்வு மாற்றங்களையும் யாரிடமும் கூறமுடியாது போய்விட்டது. முன்பு போல கடினமான விளையாட்டுகளிலே ஈடுபட முடியவில்லை. வீதிக்குப் போவதற்குக்கூட யாராவது துணைக்கு வரவேண்டும் போலிருந்தது. யாரைப் பார்த்தாலும் எனக்கு ஆபத்தை விளைவித்து விடுவார்களோ என்ற இனம்புரியாத அச்சமும் தோன்றியது. கடைவீதிகளுக்குப் போய் பொருட்களை வாங்கி வரும் வேலைகளுக்குப் பதிலாக வீட்டுவேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வதற்கே ஆர்வமாக இருந்தது. என்னைத் தேடி யாராவது வந்தால்கூட ஒளிய ஆரம்பிக்கலானேன். வீட்டின் வரவேற்பறையிலிருப்பதைவிட கூடிய நேரங்களிலே சமையலறையிலும் பின்கட்டுகளிலுமே இருக்கலானேன். புட்போல், கிரிக்கட், கார் பந்தயம் போன்ற உற்சாகமான விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததுபோய்  பெண்கள் அழுதுவடியும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை இரசித்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

 



 
கார் சாம்பல் தீவு பாலத்தை தாண்டிக் கொண்டிருந்தது.

சற்றுத் தூரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த விஷ்ணு கோயிலின் பிரமாண்டமான கோபுரம் நீலவானின் பின்னணியிலே மிகவும் எடுப்பாகத் தெரிந்துகொண்டிருந்தது.


'அதுசரி, உங்க வீட்ல என்னடா சொல்றாங்க? இப்ப உன்னோட எல்லாரும் எப்படி இருக்கிறாங்க? இல்ல முன்ன மாதிரித்தான் இப்பவும் நீ தனியாத்தான் திரியுறியா?'


எனக்குச் சட்டென கண்களிலே நீர் துளிர்த்தது. அவனிடம் மறைப்பதற்கு முயன்றபோதும் கண்டுவிட்டான். ஸ்டியரிங்கை ஒருகையில் பிடித்துக் கொண்டு டேஷ்போர்டிலிருந்த டிஷ்யூவைக் கிழித்து நீட்டினான்.


'சரி, பதில் சொல்லணுமென்று கட்டாயமில்லை. ஷேல் வீ சேன்ஜ் த டொப்பிக்?'


'இல்ல.. அதையே பேசலாம். அதுக்குத்தானே இப்பவே வந்தேன்..! மார்க், கொஞ்சம் நிப்பாட்டுங்க,  இந்த கோயிலை ஒருக்கா இறங்கிப் பார்த்திட்டுப் போகலாம்' 


அவன் என்னை வியப்பாய் பார்த்தபடியே காரின் வேகத்தைக் குறைத்து இடதுபுறமாய் ஓரங்கட்டினான். அது ஒரு புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பிரதிஷ்டை செய்யப்படாத கோயில் என்பதால்  பல ஏக்கர் பரப்பளவிலுள்ள அதன் வளாகம் ஆட்களேயில்லாமல் வெறிச்சோடிக்கிடந்தது. வாசலிலே நின்றபடியே செருப்பைக் கழற்றிவிட்டு கண்ணைமூடிக் கையெடுத்துக் கும்பிட்டேன்.


'உனக்கிருக்கிற பிரச்சினைக்கு இந்தக் தனிக்கோயில் ஒற்றைச்சாமியெல்லாம்  போதாது. மொத்த சாமியையும் க்ளஸ்டர் மீட்டிங் கொன்பரன்ஸ் போட்டுத்தான் கும்பிடணும்'


'இங்க, இந்த நக்கல்தானே கூடாது. வேணும்டா உங்க மேரி மாதாவையும் கும்பிடுறன் போதுமா?'

'ஐயோ, நானே கும்பிடுறது கிடையாது. ஆனா பாவம் மாதா. உன்னால அவ நிம்மதியும் கெட்டுறப்போகுது'

'சரி ஜோக்ஸ் இருக்கட்டும். பீ ஸீரியஸ் மார்க்! இப்ப என்னதான் நான் செய்ய?'


'இப்பவா? வா முதல்ல கோயிலைச் சுற்றிப்பார்ப்போம்!' என்றவாறு என்னைக் கையிலே பிடித்தபடி நடக்கத் தொடங்கினான்.
.



ரசியல்வாதிக்கு பீஏவாக ஆகிவிட்டதால் அந்த நாட்களிலே மார்க் கெமிலஸால் முன்பு போல அடிக்கடி என்னைக் காணவரமுடியாமலிருந்தது. எப்போது பார்த்தாலும் மீட்டிங்குகள், பயணங்கள், திறப்பு விழாக்கள் என்று அவன்  வீட்டுப்பக்கம் வருவதே கிடையாது. அப்படியே வந்தாலும் குறைந்தபட்சம் ஆறுபேராவது புடைசூழ ஒரு சிற்றரசன் போலத்தான் வருவான். எதிரேயுள்ள மனிதர்களோடு பேசுவதைவிட செல்போனுடன் அவன் பேசுவதுதான் அதிகம்.


அவனது செல்போனும் கூட, 'நீங்கள் அழைக்கும் நபர் தற்போது வேறு ஒரு அழைப்பிலிருக்கின்றார்' எனும் பதிவுசெய்யப்பட்ட வாசகத்தைச் சொல்லும் கிளிப்பிள்ளையாகிப்போனது. இதனால் எனது பிரச்சினைகளை அவனிடம் கூட உடனடியாகச் சொல்ல முடியாது போனது. மனதிற்குள்ளேயே குமைந்து குமைந்து தற்கொலை செய்துவிடலாமா என்றுகூட நினைத்தேன்.


ஆனால் மார்க் கெமிலஸ் என்னைப் படிப்பிலும் விளையாட்டிலும் உருவாக்கிப் பார்க்க வேண்டும் என்ற பேராவலுடன் இருந்த காரணத்தால் அதற்கும் கூட அவன்தான் ஒருவகையிலே தடையாக இருந்தான். ஆனாலும் ஒருகட்டத்திலே என்னால் தாங்கவே முடியவில்லை. எப்படியோ இடைவிடாமல் முயன்று மார்க் கெமிலஸை வரவழைத்து தனிமையிலே சந்தித்துவிட்டேன்.  என்னுடைய அத்தiனை பிரச்சினைகளையும் ஒன்றும் விடாமல் அவனிடம் சொல்லி அழுது தீர்த்துவிட்டேன். அதையெல்லாம் கேட்டவன் அப்படியே ஆடிப்போய் விட்டான். அன்று எதுவுமே பேசமுடியாமல் சில நிமிஷங்கள் கல்லாய்ச் சமைந்து நின்றது மட்டும்தான் அதன் பிறகு அவன் ஓய்விலிருந்து நான் பார்த்த ஒரே சந்தர்ப்பம்.


அதன்பிறகு நடந்தவற்றையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிப் புரியவைப்பதென்றால்  தமிழ்மொழியிலுள்ள வார்த்தைகளெல்லாம் நிச்சயம் தமது சக்திக்கு மீறி உழைத்தாக வேண்டியிருக்கும்.
ஆம். எனது பிரச்சிiனையைத் தெரிந்த கொண்ட பிறகு மார்க் ஒரு மணிநேரம் கூட என்னைத் தனிமையில் விடவில்லை. தனது அரசியல்வாதியிடம் பொருத்தமான பொய்கூறி தனது பொறுப்புகளையெல்லாம் மிகப்பெரும் பிரயத்தனத்துக்கு மத்தியில் தற்காலிகமாக வேறுசிலரிடம் ஒப்படைத்துவிட்டு என்னுடனேயே இருந்தான். முதலில் என்மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொண்டான். இதற்காக அவன் மணிக்கணக்கில் தன் நேரத்தைச் செலவழிக்கவேண்டியிருந்தது. இதனால் எனது வீட்டாருக்குக் கூட அவனது என்னுடனான நடத்தை தொடர்பாக இலேசான சந்தேகம் உண்டானது. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு பம்பரமாய் இயங்கினான். தனக்கு மிகவும் நம்பிக்கையானவரான திறமை வாய்ந்த ஒரு பெண் வைத்தியரிடம் என்னை அழைத்துச் சென்று காண்பித்து எனது நிலைமைகள் தொடர்பாகப் விரிவாகக்  கேட்டறிந்தான்.


பின்பு அந்த டாக்டரின் ஆலோசனைப்படி என் பெற்றோர்களிடமும் சகோதரிகளோடும் தனித்தனியாகப் பேசினான்.   அதிர்ச்சியடைந்த அவர்கள் அடுத்த கணமே என்னைத் தோஷம் கழிப்பது, தெய்வக்குற்றம் போக்குவது என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். தீவிரமான மூடநம்பிக்கைகளிலும் சிறுதெய்வ வழிபாடுகளிலும் ஊறிப்போனவர்களான எனது குடும்பத்தினருக்கு மார்க் கெமிலஸின் அக்கறை புரிந்த அளவுக்கு எனது பிரச்சினைக்குரிய மருத்துவத் தீர்வு புரியவில்லை. 



இனிமேல் எனது குடும்பத்தினரோடு போராடுவதிலே பலனில்லை என்று புரிந்துவிட்டதால் என்னுடைய உறுதியான முடிவுக்காக காத்திருந்து நான் சம்மதித்ததும் எனது உறவுகளின் விருப்பமின்மைக்கு மத்தியில் திடீர் நடவடிக்கையிலே இறங்கினான் அவன். இதனால் எங்கள் உறவுகளிடம் நிறைய வீண்பழி கேட்டான். வேறுவழியில்லாத நிலையிலே மிரட்டியும் பார்த்தான். எதுவுமே கைகொடுக்காத நிலையில் கடைசியில் தனது அரசியல்வாதியின் செல்வாக்கை மறைமுகமாகப் பயன்படுத்தி கொழும்புவரை என்னை ஏறத்தாழக் கடத்திச் சென்று மருத்துவ ரீதியாகக் கைகொடுத்தவன்தான் இந்த மார்க் கெமிலஸ் என்ற எனது முன்னாள் ஆசிரியன்.

இத்தனை களேபரங்கள் நடந்தும் கூட என்னுடைய பிரச்சினையை தங்களது குடும்பத்திற்கேற்பட்ட ஓர் அவமானச் சாபமாக எங்கள் வீட்டார்கள் கருதியதால்  எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் அடுத்த வீட்டுக்குக்கூடத் தெரியாமல் இரகசியமாக வைத்திருக்கவே நினைத்தார்கள்.  நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களுக்கேயுரிய அந்த எழுதாச்சட்டம் மட்டும் இல்லாதிருந்தால் நானும் மார்க் கமிலஸும் நடாத்திய மருத்துவப் போராட்டங்களெல்லாம் பாதிவழியிலேயே பிசுபிசுத்துப்போயிருக்கும்.

கடைசியில் சில இலட்சங்களை ஏப்பமிட்டதும் சிக்கல் வாய்ந்ததுமான சத்திரசிகிச்சைகளுக்கு நான் உள்ளாகினேன். அதன் பின்னர் வெகுவிரைவிலேயே என்னால் உடலளவிலே அதிக சிரமமின்றி புதிய ஒரு வாழ்வுக்கு மாறிவிட முடிந்தது பெரும் அதிஷ்டமே. இயல்பிலேயே அழகானதும் நளினமானதுமான தோற்றமுடையதாக எனது உடல் இருந்ததும் அதற்குரிய முக்கிய காரணங்களிலே ஒன்று. ஆயினும் உறவுகளின் கேள்விகளுக்கும் சமூகத்தின் ஏளனப்பார்வைகளுக்கும் முகம் கொடுப்பதுதான் எனக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. இன்னும் இருந்தும் வருகின்றது.

இன்றைய உலகிலே என்னைப் போன்றவர்களாலும் அதிக சிரமமின்றி வாழமுடியும் என்பதற்கு என்னையே எனக்கு உதாரணமாக்கிக் காட்டியவன் மார்க் கெமிலஸ். எனது இரத்த உறவுகளே என்னை ஒருவித அசூயையுடன் பார்த்து ஒதுங்கிப்போகும் நிலையிலே எனக்கென்று எதுவித வாழ்க்கை நோக்குகளுமின்றிய வெட்டவெளியான இன்றைய நிலையிலும் மார்க் கெமிலஸுடனான அந்த நட்புறவு இன்னும் தொடர்ந்து வருகின்றது.




'ம்,  சொல்லுங்க மார்க்ஸ். இப்ப நான் என்ன செய்யறது. பிறந்ததிலிருந்து நான் வைத்திருந்த என்னுடைய பேர் விபரமெல்லாம் இப்ப நான் மாத்தணுமா என்ன?'

'அதுதான்டா எனக்கும் விளங்குதில்ல. நான் எனக்குத் தெரிஞ்சவங்ககிட்டயெல்லாம் கேட்டுப் பாத்திட்டன். பெயரை தனூஷா என்று மாற்றி பேர்த் ஸேட்டிபிகேட்டில் விபரங்களை புதுசா எழுதி திரும்பவும் பதிவு செய்ய வேணும் என்ற ஒரு விசயத்தைத் தவிர இது சம்பந்தமா எதுவும் தெரியல்ல! ஆனாலும் உனக்காக சில விசயங்களை  கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஏற்கனவே நான் மாற்றித்தான் வச்சிருக்கிறேன்டா'
'நம்ம நாட்டுல இதுவிசயமா எதுவும் கேட்கிறதுக்கே பயமாயிருக்கு.  அதுக்காக எல்லாவற்றைமே மறைச்சுக்கொண்டு  மனசுக்குள்ளேயே குமைஞ்சு கொண்டும் என்னால் வாழமுடியாது.'

'ஒண்ணு செய்வோமா? இந்தத் திருட்டுப் பயணத்தை இப்படியே நிப்பாட்டிடுவோம். ஒரு மாதத்தில முறைப்படி பாஸ்போட் வீசா எல்லாம் எடுத்துத் தாறேன். இந்த நாட்டைவிட்டு சுவிஸ் கனடா என்று எங்காவது வெளிநாட்டுக்கு நீ மட்டும் போயிட்டு உன்ட படிப்பைப் முடிச்சிட்டுத் திரும்பி வா.  அந்த நாடுகள்ல மெடிகல் வசதியும் நல்லாருக்கும் அங்கேயே உன்ட படிப்பையும் தொடரலாம்..  தனியாக உன்னை நீயே சமாளிச்சுக்கிறது அங்க சுலபம்.  இதெல்லாம் அங்க சகஜமாகிப் பலவருஷங்களாகிட்டுது'

'இதுக்காக ஒருமாதம் காத்திருக்கணுமா நான்? இங்க உள்ள உறவுகளைச் சகிக்க முடியாமத்தானே வந்தேன். தவிர, நான் மட்டும் வெளிநாட்டுக்குப்  போகணுமா? கொழும்புக்கு ஒபரேஷனுக்கு கூட்டிக் கொண்டு போனதுக்கே உங்களுக்கு அவ்வளவு பிரச்சினை போட்டவங்க என்னோட அக்காமார். என்னை நீங்க தனியாக வெளிநாட்டுக்கு அனுப்புறதைக் கேள்விப்பட்டா உங்களை என்ன பண்ணுவாங்க தெரியுமா? அப்படியெண்டாலும்  நீங்களும்தான் வரணும்?'

'உனக்காக எங்கேயும் வருவேன். ஆனா ஏனோ எனக்கு இங்க நம்ம நாட்டுல இருக்கிறதுதான் விருப்பம்டா.'
'அது உண்மைதான் மார்க், அதுவுமில்லாம எங்க போனாலும் நம்ம சனங்களோட வாழறதுலதானே சந்தோசமிருக்கு'

'ஆனா நம்ம சனங்கள்தானேடா இதையெல்லாம் ஏதோ பேய் பலாப்பழத்தைப் பார்க்கிற மாதிரி பார்க்குது?'
'நம்ம சனங்களும் வேணும். ஆனா அதுகளோட இந்த சின்னப்புத்தியையும் சகிச்சுக் கொள்ளணும். என்னதான்டா பண்றது... என்னைப் பெத்தவங்களே இப்பிடியிருக்கிறாங்க.. மற்றவங்களை குறைசொல்ல முடியுமா? எனக்கு ஒருநேரம் செத்துடலாமா என்றுகூட இருக்கு!'

'ஹேய்.. டோண்ட் டேக் திஸ் மச் ஸீரியஸ். இவ்வளவு படிச்சிருக்கிறவள் நீயே இப்பிடி யோசிக்கலாமா. கோபம் வந்தால் யாரையாவது கொல்லணும் போல இருக்கு என்டு சொல்லு. ஐ மே அண்டர்ஸடேண்ட். பட் உன்னை நீயே அழிச்சிக்கிறதெல்லாம்.. டூ மச்டா!'

'ஐ'ம் ஸொறி. உங்களாலதான் எதையுமே செய்ய முடியாம இருக்கிறேன். இப்படிப் பேசிப்பேசியே என்னைக் கவுத்திட்டடா நீ!' என்று அவன் தலையிலே செல்லக் குட்டு ஒன்று வைத்தேன்.

'என்ன 'நீங்க உங்க' எல்லாம் போய் கடைசில 'டா' வந்;திட்டுது போல!' என்று கிசுகிசுத்தவாறு என் இடையில் கைபோட்டு வளைத்து அணைத்துக் கொண்டான். யாரும் பார்த்து விடுவார்களோ என்று கூச்சமாக இருந்தாலும் அவனது செய்கையை உள்ளுக்குள் விரும்பினேன். என்னைத் தன் மார்போடு அணைத்து முத்தமிட மாட்டானா என்று மனம் ஏங்கியது. என்னை வெட்கம் பிடுங்கித் தின்றது. திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை. முகத்தை நெருங்கி வந்துவிட்டு ஏனோ அதற்குமேல் முன்னேறாமல் என்னை விடுவித்துவிட்டான்.

இருவரும் அருகிலிருந்த ஒரு வேப்பமரத்தின் கீழிருந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்தோம்.
போன மாதத்தை விட வெட்கத்தின் அளவு கூடியிருப்பதை தெளிவாக உணர்ந்தேன். அப்படியானால் சிகிச்சை பலனளிக்கத் தொடங்கிவிட்டது என்றுதானே அர்த்தம். இதையும் அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

'என்ன மகாராணிக்கு என்ன முகமெல்லாம் இப்படிச் சிவந்திருக்கு? அதுசரி இப்ப உனக்கு எல்லாம் ஓகேவா? ஏதாவது கொம்ப்ளய்ண்ட் இருக்கா. நேற்றுகூட நம்ம ஸர்ஜன் கோல் எடுத்து விசாரிச்சாருடா. இதுவரைக்கும் எத்தனையோ பேருக்கு ப்ளாஸ்டிக் ஸர்ஜரி செய்திருந்தாலும் உனக்காகச் செய்ததுதான் அவருக்கு மனநிறைவு தந்த விடயமாம் என்றெல்லாம் சொல்லிட்டிருந்தார். பாவம் நல்ல மனிசன்.'
'அதனாலதானே அவரோட பேர்சனல் ஃபீஸ் கூட வேணாம்;டாரு. ஹொஸ்பிடல் சார்ஜ் மட்டுந்தானே. நல்லாருக்கணும் அந்த டொக்டர். நீங்களும் பாவம். எனக்காக எவ்வளவு காசு உங்க பொஸ்ஸுக்கிட்ட கடனா வாங்கி வாங்கிச் செலவழிச்சிட்டீங்க. அந்த அழகான பைக்கைக் கூட வித்திட்டீங்க.'

'அதுதான் இப்ப அவரோட புதுக்கார் இருக்கே. இன்றைக்கு இரவு 11 மணி வரைக்கும் இது நம்ம கார்தான்...?'

'ஆ! அப்ப சாமத்துலயா நம்ம போட்ல போகிற பயணம்? எனக்கேலாப்பா கடல்ல குளிர் நடுங்கும். கடைசில பாருங்க அங்க போய்ச் சேர்றதுக்குள்ள நான் குளிர்ல செத்தே போயிடுவேன். நீங்க இருந்து அழப்போறீங்க. ஏன் பகல்ல போனா என்னவாம்?' என்று சிணுங்கினேன்.

'ஆங், போகலாம்! உன் மச்சான்மார் நேவிக்காரன் இருக்கிறானே? வெத்திலை பாக்கு வச்சு வந்து கூட்டிட்டுப் போவான். பிறகு நீயும் நானும் முக்காடு போட்டுட்டுப்போய் ட்ரிங்கோ ஜெற்றியில இறங்கிறதை டீவியில காட்டுவான் பரவாயில்லயா? ப்ளெங்கட் ஸ்வெட்டர் க்ளவ்ஸ் எல்லாம் இருக்கு..  அதெல்லாம் ஒண்ணும் சாக மாட்டாய் நீ. எல்லாம் என்னோட பொஸ் தந்தது!'

'சரி வாங்க போகலாம்.' என்று எழுந்து காரை நோக்கி நடந்தேன்.

'தனூஷா! கொஞ்சம் நில்லு! உனக்கு இப்ப எல்லாம் நோர்மலா இருக்குதா? எப்படியும் ஹோர்மோன்ஸ் ஸ்டிமியுலேஷன் ஸ்கேனிங் பார்க்க நாம ஒரு தடவை கொழும்புக்கு போய் வந்திருக்கத்தான் வேணும்டா. சே! அதுக்குள்ள இந்தப் பிரயாணம் ஓக்கேயாயிடுச்சு பாரு.'

'அதெல்லாம் ஓக்கே. பீரியட்ஸ் கூட ரெகுலராயிட்டுது. எல்லாம் சரியாகி வந்துதான் என்ன? எங்க வீட்டு ஆக்களே முதல்ல என்ட பிரச்சினையைப் புரிஞ்சிக் கொள்றாங்கல்லயே. நீங்க அம்மாக்கிட்ட சொல்லி விளங்கப்படுத்தினதாலதான் ஓரளவு என்டாலும் ஒத்துக்கிட்டாங்க. என்டாலும் என்ட சகோதரங்கள் மற்ற உறவுகளெல்லாம் என்னை ஒரு பெண்பிள்ளை என்றே நினைக்கிறதில்ல. அவங்க என்னை உறவு என்று சொல்லிக்கொள்றதுக்கே விரும்புறாங்க இல்ல மார்க்.'

'..........'

'கோயிலுக்குப் போறதுக்கென்று எல்லாரும் வெளிக்கிடுவாங்க. நானும் வெளிக்கிட்டவுடனே சட்டென்று எல்லாரும் போகாம நின்றிடுவாங்க. ஒரு விசேஷத்துக்குக் கூட என்னை வீட்டுல விட்டுட்டு ரகசியமாக போயிடுவாங்க தெரியுமா? இத்தனைக்கும் என் குடும்பத்தில உள்ளவங்க யாரையும் விட நான் அழகிலயும் நிறத்திலயும் வடிவாத்தானே இருக்கிறேன்? பிறகு ஏன் எனக்கு இப்படியெல்லாம் செய்யிறாங்க. எனக்கு எப்படியிருக்கும் யோசிச்சுப் பாருங்க. இன்றைக்குக் கூட கோயிலுக்குத் தனியாகத்தான் வந்தேன்.'

 'சரி, அவங்கட கதையெல்லாம் விடு. இனி உன்னால அடுத்தவங்க துணையில்லாமலே சுதந்திரமா வாழ இயலும். கையில உன்னோட படிப்புக்குரிய சேர்ட்டிபிக்கட்ஸ் எல்லாம் பக்காவா இங்லீஷ்ல ட்ரான்ஸ்லேட் செய்து ரெடியா வச்சிருக்கேன். அங்க போய் சேர்ந்து செட்டிலானதும் படிக்கலாம். பிறகென்ன நல்ல வேலை கிடைக்கும். இப்பிடி இடையிலே சோர்ந்து போயிட்டியென்டா இத்தனை நாள் நீ பட்ட கஷ்டத்திற்கும்  நானெடுத்த முயற்சிக்கும் பலனில்லாமப் போயிடும்.'

'சரி, நம்ம போட் அங்க போய்ச்சேர எத்தனை நாளாகும் மார்க்?'

'ஒரு பத்து பதினைஞ்சு நாளாகலாம். ஆனா கடல் நிலைமைகளைச் சொல்ல இயலாதுடா'

'சரி மார்க், இனி உங்களை நான் டிஸ்கரேஜ் பண்ண மாட்டேன். சரி, எனக்குத் தூக்கம் வருது.' என்றபடி நான் அவனது தோளிலே சாய்ந்ததும் காரை ஓட்டிக்கொண்டே இடது கையால் என்னை அணைத்துக் கொண்டான் மார்க்.

கடற்கரைக் காற்று இதமாய் வீசிக்கொண்டிருக்க கார் நிலாவெளியை நோக்கி தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது.


 
 
ரு குளிர்நிறைந்த அக்டோபர் மாதத்தின் அதிகாலையில் திடீரென வெளிச்சமும் சப்தங்களும் உறுத்த நான் கண்விழித்தபோது, நிலாவெளிக் கடற்கரையிலிருந்து ஆண்களும் பெண்களும் குழந்தை குட்டிகளுமாய் எழுபத்தைந்து பேருடன்  புறப்பட்டு பதினொரு நாட்கள் கடினமானதொரு நெடும்பயணம் செய்து வந்த எங்கள் படகைச்சூழ நீலநிற கப்பற்படைச் சீருடையும் கறுப்புநிற கூலிங் க்ளாஸ்களும் அணிந்த வெள்ளைக்கார கடற்படை மாலுமிகள் ஆங்கிலத்திலே இரைச்சலாய்ப் பேசிக்கொண்டு நின்றிருந்தார்கள்.

 "Ok Guys! You are saved. Now, you all have to get-down from your boat for the initial Medical Checking before entering  the Christmas Island!" 


கரையிலிருந்து எங்களைத் தங்களது கப்பற்படைப் படகுக்குள் இறங்குமாறு மெகா போனில் அறிவித்துக் கொண்டிருக்க படகிலே எங்களோடு வந்த மக்களெல்லாம்  அந்த வெள்ளைக்காரர்களின் நேவிப்படகுக்குள்ளே இறங்குவதற்காக தங்களது மூட்டை முடிச்சுகளுடன் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

இத்தனை நாளும் அத்தனைபேரும் முடங்கிக் கிடந்து பயணம்புரிந்த அந்தப் பெரிய மீன்பிடிப்படகின் இருளான உள்ளறையிலிருந்து நானும் மேலேறி வந்தபோது இத்தனை ஆரவாரங்களுக்கு மத்தியிலும் படகின் மேல்தளத்திலே ஓர் ஓரமாய் குளிரிலே இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் மார்க் கெமிலஸைப் பார்த்தேன். 'எப்படி இவ்வளவு இரைச்சலுக்கும் இடையிலும் இந்தக் குறும்புக்காரன் இன்னும் வேண்டுமென்றே தூங்கிக் கொண்டிருக்கின்றான்' என்ற கோபத்திலே அவனை எழுப்புவதற்காக நான் தொட்டுப்பார்த்தபோது..

அவன் உடம்பு ஐஸ்கட்டியாய் விறைத்துச் சில்லிட்டுப்போயிருந்தது.




-மூதூர் மொகமட் ராபி
(2012.11.13)

Friday, November 9, 2012

திரைப்பட விமர்சனம் : மூதூரின் முதல் திரைப்படம்


 
 
நம்பிக்கை தரும் 'ஏமாற்றம்'







வ்வாரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பியல்பு இருப்பது வழமை.

நமது ஊரான மூதூருக்கு உள்ள சிறப்பியல்பு என்று நான் கருதுவது மிகக்குறைந்த வசதிகளைக் கொண்டு நம்மவர்கள் மேற்கொள்ளும் பெரும் முயற்சிகளைத்தான். இது கல்வி, கலாசாரம், கலை இலக்கியம், பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல், விளையாட்டுத்துறை என்று அனைத்து விடயங்களுக்கும் பொருந்தக்கூடியதாகவே இருந்து வருகின்றது.

அந்த வகையில்தான் மூதூரின் முதலாவது திரைப்படமான ஏமாற்றம் என்ற இந்த திரைப்பட முயற்சியையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. திரைப்படம் சார்ந்த குறைந்தபட்ச அறிவுதானும் இல்லாதநிலையிலே குறைவான தொழினுட்ப வசதிகளையும் அனுபவமின்மையையும் வைத்துக்கொண்டு திரைப்படமொன்றை உருவாக்க நினைத்த தைரியத்தை முதலிலே பாராட்டியாக வேண்டும்.

ஏனெனில் இந்தப்படத்தின் இயக்குனர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் இளைஞர் எச். பீ. எச். அர்ஷாத் படத்தின் பின்னிணைப்பிலே தோன்றி குறிப்பிட்டிருக்கும் தகவல்களையும் பார்க்கையிலே இந்தப்படத்தின் கதைத்தேர்வு, திரைக்கதை, பாத்திரங்கள் தேர்வு, நடிப்பு, ஒளிப்பதிவு, காட்சித்தொகுப்பு, இசைச்சேர்ப்பு முதலிய அம்சங்களையும் குற்றங்காணவிழைவதிலே அர்த்தமில்லை என்றுதான் தோன்றுகின்றது.

இத்திரைப்படத்தின் இறுவட்டை பலமுறை மீண்டும் மீண்டும் பார்த்து அதன் கலை மற்றும் தொழினுட்ப அம்சங்களை நன்கு உள்வாங்கி விமர்சனம் செய்வதுதான் மிகச் சரியானது. ஆயினும் அதற்குப் பதிலாக ஒரு குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தை பார்த்து எனது கருத்துக்களைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் மற்றும்  வேலைப்பளுவிற்கிடையில் பார்வையாளர்களாகிய உங்களோடு சிறிய தலைப்புகளில் சில விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கு முயற்சித்திருக்கின்றேன்.

கதைத்தேர்வு:

இன்று மூதூர் இளைஞர்கள் என்றாலே உள்ளுரிலும் வெளியூர்களிலும் நிதிமோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிடுபவர்கள் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டு வருகின்றது. அதேவேளை இத்தகைய அபிப்பிராயங்களின் மறுதலையாக இவ்வாறான மோசடிக்காரர்களை நம்பி இலகுவாக ஏமாந்து விடுபவர்களாகவும் அதே மூதூர் இளைஞர்கள்தான் இருந்து வருகின்றார்கள் என்பது முரண்நகை.

இவ்வாறான ஒரு சூழலிலே இந்த அம்சங்களை கருவாக திரைப்படத்திற்குரிய  கதை அமைந்திருப்பது வெகுபொருத்தம்.

திரைக்கதை & வசனம்:

திரைக்கதைதான் ஒரு திரைப்படத்துக்கு மையநரம்புத்தொகுதி போன்றது.
ஒரு சிறந்த சிறுகதையோ நாவலோ காட்சிகளை எழுத்திலே விபரித்து நம் கண்முன்னே நிறுத்தும். அங்கு கதையாசிரியரின் விவரணைகளுடன் வாசகர்களின் நமது கற்பனாசக்தியும் ஒன்றிணைந்து காட்சிகள் வடிவம் பெறும். ஆனால் ஒரு சிறந்த திரைப்படம் என்பது ஏறத்தாழ முழுமையான காட்சி ஊடகம். எனவே திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் ஒருவர் திரைக்கதையில்தான் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.
ஆனால் சங்கீத ஞானம் இல்லாதவர்கள் கூட சில வேளைகளிலே தமது குரல் வளத்தையும் கேட்டல் அறிவையும் கொண்டு சிறப்பாக பாடிவிட முடிவதுண்டு. அதுபோலவே இங்கு பல குறைபாடுகளுடன் கூடிய ஆனால் கதைக்கு பெரியளவிலே உறுத்தல் தந்திராத திரைவடிவம் ஒன்று இயல்பாக அல்லது அதிர்ஷ்டவசமாக ஏற்பட்டுள்ளது.

உரையாடல் முழுவதும் உள்ளுருக்குரியதாக எழுதப்பட்டிருக்கின்றது. இதனால் திரைப்படமானது ஏனைய பல குறைபாடுகளையும் மீறி நமக்குரியதான உணர்வை ஏற்படுத்துவதையும் நமது சமூகத்தை விட்டு அந்நியப்பட்டு விடாதிருப்பதையும் உறுதிசெய்திருக்கின்றது. குறிப்பாக முஸ்பீக்கின் தந்தையின் மரணக்காட்சியையும் அதன் பின்னரான உரையாடலையும் குறிப்பிடலாம்.

பாத்திரத்தேர்வு & நடிப்பு:

தொழில்சார் நடிகர்களோ நாடகக் கலைஞர்களோ இல்லாத நிலையில் நண்பர்கள் வட்டத்திற்குள் பாத்திரங்களைத் தேர்வு செய்யவேண்டிய நிலை எந்தவொரு இயக்குனருக்கும் சிரமமானது. அதுவும் கெமராக் கூச்சமின்றி உடல்மொழி சார்ந்து இயல்பாக நடிப்பதற்கு தனித்திறமையும் கடுமையான பயிற்சியும் தேவை. இருந்தபோதிலும் வெகு சொற்ப அளவிலாவது முயற்சித்திருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. நடிப்பின் குறைபாடுகள் பல சந்தர்ப்பங்களிலே காட்சித் தொகுப்பின் மூலம் வெகுசமார்த்தியமாக மறைக்கப்பட்டுள்ளது சிறந்த உத்தி.

வயதான பாத்திரங்களுக்கு நாடகபாணி ஒப்பனைகளுடன் கூடிய இளைஞர்களுக்குப் பதிலாக வயதானவர்களையே பயன்படுத்தியிருக்கக்கூடிய வாய்ப்புகளை இயக்குனர் தவறவிட்டிருக்கின்றார். இதற்குரிய காரணம் அவரது விளக்கத்திலே சொல்லப்படவில்லை. ஆனாலும் அவற்றுக்குப் பொருத்தமானவர்களும் திறமையானவர்களுமான மூத்தவர்கள் ஊரிலே கிடையாது என்பதைவிட அத்தகைய வயதிலிருப்பவர்களுக்கு திரைப்பட முயற்சி மற்றும் நடிப்புத் தொடர்பான ஆன்மீகத்துக்கூடான தவறான பார்வையே காரணமாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

ஒளிப்பதிவு:

இயக்குனரின் தகவலின்படி சாதாரண ஸோனி எச்டீ வீடியோ கெமரா பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. அதுமட்டுமே ஒரு பெரும் குறைபாடு என்று சொல்லமுடியாது. ஏனெனில் 'மும்பை எக்ஸ்பிரஸ்' இதே கெமராவினால் மட்டுமே ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒரு முழுநீளத் தென்னிந்தியத் திரைப்படம்.

ஆனால் 'மும்பை எக்ஸ்பிரஸ்' வேறுபல துணைச்சாதனங்களின் உதவியோடு திறமை வாய்ந்த தொழினுட்பக்குழுவினால்  சாதனைக்காகப் புரியப்பட்ட முயற்சி என்பதால் அதனை இதனுடன் ஒப்பிடமுடியாதுதான். ஆனாலும் ஒரு காட்சியை படமாக்கும்போது பல்வேறு கோணங்களில் படமாக்கினால் அது காட்சியுடன் பார்வையாளனை ஒன்ற வைக்கும். சில காட்சிகளிலே அது செய்யப்பட்டிருக்கின்றது எனினும் பாத்திரங்கள் உரையாடும் காட்சிகளில் விசுவின் படங்கள் போல கெமிரா ஆணி அடித்தாற்போல ஒரே இடத்திலே அமர்ந்து சலிப்பூட்டுகின்றது. ஒளிப்பதிவிலே தனியே சாதனங்களையும் கணனி மென்பொருட்களையும் நம்புவதைவிட ஒரு இயக்குனர் தனது கற்பனைத்திறனை நம்புவதுதான் சிறந்தது.

காட்சித்தொகுப்பு & இசைச் சேர்ப்பு:

எவ்வளவு மோசமான திரைக்கதையையும் கூட தூக்கி நிறுத்தக்கூடியது காட்சித்தொகுப்பு. இந்த 'ஏமாற்றத்தை' யும் காட்சித்தொகுப்பு ஒன்றுதான் வெகுவாகத் தூக்கி நிறுத்தியிருக்கின்றது. ஆயினும் சில இடங்களில் அவசியமில்லாத எடிட்டிங் சில்மிஷங்கள் தூக்கலாகி கவனத்தைக் கலைக்கின்றன.

அதுபோலவே காட்சிக்குப் பொருத்தமான இசைச் சேர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. பல இடங்களிலும் இவை சரியாக இருந்தபோதிலும் சில இடங்களிலே சோற்றுக்குக் கறி என்று இல்லாமல் கறிக்குச் சோறு என்பது போல ஆகிவிட்டிருக்கின்றது.

ஆக மொத்தத்தில் நான் ஆரம்பத்திலே குறிப்பிட்டது போன்று திரைப்படம் சார்ந்த குறைந்தபட்ச அறிவுதானும் இல்லாத நிலையிலே குறைவான தொழினுட்ப வசதிகளையும் அனுபவமின்மையையும் வைத்துக்கொண்டு திரைப்படமொன்றை உருவாக்க நினைத்த ஏமாற்றம் இயக்குனர் மற்றும் குழுவினரின் தைரியத்தையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

அதேவேளை திரைப்படத்தின் முடிவில் இயக்குனர் குறிப்பிட்டுள்ள விடயங்களிலே சில விமர்சனங்களும் உள்ளன. நமது ஊரிலிருந்து உருவாகும் திரைப்படங்கள் மூதூருக்குரிய திரைப்பட முயற்சியின் விளைவு என்ற உரிமையை நாம் முழுமையாக அனுபவிப்பதாயின் அது தனியே ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமேயுரியதாக மாத்திரம் அமைந்து விடாமல் சகல மக்களுக்குமுரிய உணர்வகளைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும்.

அதுமட்டுமன்றி உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களாக ஈரான் இஸ்லாமியக்குடியரசின் இஸ்லாமிய விழுமியங்களுடன் கூடிய திரைப்படங்கள் பெண்களின் மகத்தான பங்களிப்புடன் உருவாகி வருகின்ற நிலையில் இளைஞர் அர்ஷத் தனது திரைப்படத்தில் பெண்களையே பயன்படுத்தவில்லை என்று பெருமையாகக் குறிப்பிடுவது படுபிற்போக்கான மனோபாவம் ஆகும். மாறாக பெண்களுக்கும் மதவிழுமியங்களுக்குட்பட்ட வரையறைகளுக்குள் எதிர்காலத்தில் திரைப்பட வாய்ப்பளிக்கப்படவேண்டும் என்று அவர் தனது கருத்தைத் திருத்தியமைத்துக் கொள்வதுதான் ஆரோக்கியமாக இருக்கும்.

இறுதியாக, ஏமாற்றம் என்ற இத்திரைப்படத்திலே எத்தனையோ குறைபாடுகள் இருந்தபோதிலும் இதன் மூலம் நமது இளைஞர்கள் சமூகத்துக்கு ஒரு செய்தியை தெளிவாக் கூறியுள்ளார்கள்.
அதாவது நமது ஊரிலே திறமையான இளைஞர்களுக்கும் அவர்தம் துணிச்சலான முன்னோடி முயற்சிகளுக்கும் பஞ்சமில்லை எனும் தகவலையும் வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்குமிடத்து பெரியளவிலே சாதிக்கும் வல்லமையை நிரூபிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கின்றார்கள்.

இத்திரைப்படத்தின் இயக்குனருக்கும் இதற்காக உழைத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

 -மூதூர் மொகமட் ராபி
(2012.11.07)

Tuesday, November 6, 2012

மூதூர் மொகமட்ராபி : மற்றுமொரு வெற்றி!





ண்மையிலே திருகோணமலை சாகித்திய விழா மற்றும் மாவட்ட இலக்கிய விழா ஆகியவற்றினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆக்கப்போட்டிகளிலே சிறுகதை மற்றும் கவிதைகளுக்காக முறையே முதலாம் இரண்டாம் இடங்களை வென்றிருந்தவரான மூதூர் மொகமட்ராபி இம்முறை மற்றுமொரு வெற்றியையும் பெற்றுள்ளார்.
 
ஆம்.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சினால் அகில இலங்கை ரீதியிலே நடாத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி - 2012ல்  சிறுகதைப் பிரிவிலே கலந்துகொண்ட மூதூர் மொகமட்ராபியின்  சிறுகதை  அகில இங்கை ரீதியிலே மிகச்சிறந்த ஐந்து சிறுகதைகளிலே ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி  காலை 9.00 மணி முதல் மாலை வரை  கொழும்பிலுள்ள தேசிய அருங்காட்சியக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய இலக்கிய, கலையுலகப் பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ளவிருக்கும் கோலாகலமான விருது வழங்கும் விழாவில் இவருக்கான விருதும் பரிசும் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
கிழக்கின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக தன்னை நிரூபித்துவரும் இவரை சிறகுகள் இணையத்தளத்தின் சார்பிலே வாழ்த்துவதிலே மகிழ்ச்சியடைகின்றோம்.
 
Jesslya Jessly

Wednesday, October 31, 2012

மூதூர் மாணவி பாத்திமா பாஃரா ரோஷன் கவிதைப்போட்டியிலே வெற்றி




 
தி/ மூதூர் அந்நஹார் மகளிர் கல்லூரி யைச் சேர்ந்த தரம் 7   மாணவி செல்வி. பாத்திமா பாஃரா ரோஷன் சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியிலே மூன்றாம் இடத்தை வெற்றியீட்டியுள்ளார். இவர் திருகோணமலையில் தொழில்புரியும் மூதூர் வர்த்தகரான ஜனாப். முஹம்மது பாயிஸ் - பரீன் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும் மறைந்த அதிபர் எம்.எம்.கே. முஹம்மது அவர்களின் பேத்தியுமாவார்.
 
இவருக்குரிய பரிசு இன்றைய 30.10.2012 தினம் சம்மாந்துறையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகள் தின விழா விலே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். கவிதைப்போட்டியிலே முதலாம் இரண்டாம் இடங்களை கிண்ணியா கல்வி வலயத்தைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவிகள் பெற்றிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
பாத்திமா பாஃரா மற்றும் வெற்றி பெற்ற மாணவிகள் அனைவரையும் பாராட்டுகின்றோம்
 
- 'Mutur' Mohammed Rafi

Monday, October 29, 2012

சிறுகதை : எனது பெயர் இன்சாப்.










னது பெயர் இன்சாப்.

இந்த நவம்பர் மாதம் வந்தால் எனக்கு வயது 13 ஆகப்போகின்றது. ஆனால் நவம்பர் மாதங்களெல்லாம் இனிமேல் வருமா என்பதுதான் இப்போது பிரச்சினையே. ஆம், அதற்குக் காரணமிருக்கின்றது. அதற்கு முன்பு என்னைப்பற்றிச் சொல்லி முடித்து விடுகின்றேன்.


நான் பார்ப்பதற்கு அழகானவனோ அல்லது சட்டென எல்லோருக்கும் பிடித்துப்போகும் சிறுவனோ கிடையாது. ஆனால் வகுப்பிலே ஓரளவு கெட்டித்தனமாகப் படிப்பவன்தான். விஞ்ஞானப்பாடத்தை மட்டுமே மிகவும் விருப்பத்துடன் படிப்பேன். வீட்டில் எனது அறை முழுவதையும் வயர்களாலும் பற்றரிகளாலும் நிறைத்து வைத்திருப்பேன். பொதுமைதானத்தில் கிரிக்கட் விளையாடும் வகுப்புச் சினேகிதர்கள் தவிர வீட்டிலிருக்கும் உம்மா வாப்பா உட்பட பெரியவர்களுக்கு குறிப்பாக வீட்டு வராந்தாவில் சாய்மனைக் கதிரையில் கால்நீட்டியமர்ந்து பத்திரிகையை புரட்டிக்கொண்டிருக்கும் பென்சன் வாங்கும் பெரிசுகளுக்கு  நான் கிலோக் கணக்கிலே எரிச்சல் தருபவன்.


வீட்டிலிருந்து சுமார் நாலு கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் சந்தடி மிகுந்த நகரப்பாடசாலையொன்றிலே எட்டாம் வகுப்பிலே படிக்கின்றேன். தினமும் காலையில் எழுந்தவுடன் எனது தம்பி இம்ரானுடன் (பட்டப்பெயர்: ஒல்லிப்பிச்சான்) ஒரு சின்னச் சண்டையாவது போடாவிட்டால் சாப்பாடு செரிக்காது எனக்கு. பாடசாலைக்கு நாங்கள் இருவரும் வெளிக்கிடும் நேரத்தில் எங்கள் வீடு கிட்டத்தட்ட 2009 மே மாதத்து  வெள்ளிமுள்ளி வாய்க்கால் போலிருக்கும்.


அலாரம் மணிக்கூடுபோல் சமையல் புகைக்குள்ளிருந்து அவ்வப்போது நேரத்தைச் சொல்லித் தொண்டையைக் கிழிக்கும் உம்மா, பழைய மோட்டார்சைக்கிளிலே எங்களைப் பாடசாலையில் இறக்கிவிட்டு இறைச்சிக்கோழி பாக்கி வசூலுக்குப் போகும் பரபரப்பில் பத்து செக்கனுக்கு ஒருதடவை தொண்டையைச் செருமியபடி, 'டேய்! டேய்! வாங்ளேண்டா கெதியா!' என்று முன்னும் பின்னும் அலையும் வாப்பா, முன்வராந்தாவில் படித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையை விலக்கி மூக்குக்கண்ணாடிக்குள்ளிருந்து முறைக்கும் புச்சியப்பா (வாப்பாவின் தந்தை - அவரை நான் அப்படித்தான் அழைப்பேன்),  ஆகியோரின் வசவுகளின் பின்னணி இசையோடு நானும் ஒல்லிப்பிச்சானும் பாடசாலைக்குப் போவதற்குள் வீடு நாலுபடும்.


நான் சஞ்சரிக்கும் உலகிலிருந்து இந்தப் பெரிசுகளையெல்லாம் நீக்கிவிட்டால்  அதிலே எனது கிரிக்கட் நண்பர்களும் டீவியில் வரும் மல்யுத்தச் சண்டியர்களும் தான் இருப்பார்கள். எனது மண்டைக்குள்ளே கார்ட்டூன் மிருகங்களும் சண்டியர்களின் சாகசங்களும்தான் மறுஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாததால் மனதிலோடும் சாகசக்கயிறுகளின் இழைபிரிந்து வெடிக்கும் ஒரு கணத்தில் திடீரென 'ஆய்....ஊய்!' என்று அலறிவிட்டு அதற்கடுத்த கணங்களிலே எதுவுமே நடவாததுபோல எனது வேலையைச் செய்து கொண்டிருப்பேன். புதிதாக இதைக் காண்பவர்கள் என்னைச்சிறிது சந்தேகமாய்ப் பார்ப்பதுண்டு. ஆனால் எங்கள் வீட்டிலுள்ள பெரிசுகளுக்கு  இதெல்லாம் பழகிப்போன விடயம். ஆனால், விருந்தினர்கள் வந்திருக்கும் நேரங்களில் மட்டும் 'யேய்! இன்சாப்!' என்று புதிதாய் அதட்டுவார்கள்.


கார்ட்டூண், கிரிக்கட் தவிர இன்னுமொரு பொழுதுபோக்கும் எனக்கு உண்டு. சகல பத்திரிகையிலும் வெளிவரும் விண்வெளி பற்றிய செய்திகளையெல்லாம் தவறாமல் விரும்பிப் படிப்பதும் அவற்றைக் கத்தரித்து என் தாத்தாவின் பழைய டயரி ஒன்றிலே ஒட்டி வைத்துவிடுவதும்தான் அது. இந்த ஆர்வம் வந்ததற்கு என் வகுப்பாசிரியரான விஞ்ஞான ஆசிரியர் ஜெயக்குமார் ஸேரும் ஒரு காரணம். அவரிடம் விண்வெளியைப்பற்றி ஏதாவது சந்தேகம் கேட்டால் அதன் பிரமாண்டத்தையும் அதிசயத்தையும் கூறி எங்களையெல்லாம் பிரமிக்க வைத்துவிடுவார்.


சரி, அதெல்லாம் இருக்கட்டும். முதலில் நான் சொல்ல வந்த கதையைச் கூறிமுடித்து விடுகின்றேன்.


இப்போது சில நாட்களாக எனது உடம்பிலே ஏதோ சிறிய வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்துள்ளது. சரியாக எப்போது என்று தெரியவில்லை, என் உடம்பு எனக்கே பாரமாகி விட்டது போலத் தோன்றுகின்றது. கால் மூட்டுக்களில் வலிவேறு பாடாய்ப்படுத்துகின்றது. இதை வீட்டில் கூறியபோது வழக்கம்போல, 'எங்களுக்குந்தாண்டா நோவுது...சின்ன வயசு உனக்கு ஏண்டா? நீ எப்ப பாத்தாலும் போல் போடுற மாதிரியும் பெட் பண்ற மாதிரியும் வீசிக்கிட்டு திரியறதாலதான் அப்படியிருக்கு. ஒரு நிமிசம் கையைக் காலை வச்சகிட்டு நீ இருந்தாத்தானே?' என்ற திட்டுத்தான் கிடைத்தது.
வேறுவழியின்றி, வராந்தாவிலே பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த புச்சியப்பாவிடம் கூறினேன். அவரோ, 'சரி, எனக்கும்தான் நோவுது. அதுவும் இப்ப கொஞ்சநாளாக் கூடுதலாத்தான் வலிக்குது. சரி வா! நோவுக்கு நான் பூசுற இலுப்பெண்ணெய்யைத் தடவி விடுறன்..' என்று ஒரு நாற்றம் பிடித்த பழைய போத்தலை எடுத்தார். அவ்வளவுதான் எடுத்தேன் ஒரே ஒட்டம்..!


000







திங்கட்கிழமை காலை..


வாரவிடுமுறை நாட்களில் அடிக்கடி மழை பொழிந்ததால் கிரிக்கட் தோழர்களை உடனே  சந்தித்துப் பேச முடியவில்லை. அன்று பௌர்ணமி விடுமுறையாதலால் அன்றுதான் மைதானத்தில் விளையாடப் போனபோது பார்த்துப்பேசிக் கொண்டோம்..


'ஓம்டா இன்சாப்! எனக்கும் அப்படித்தான்டா இருக்கு! கால் ரெண்டையும் யாரோ நிலத்துக்குள்ள இருந்து இழுத்துப் பிடிக்கிற மாதிரி' என்றான் சதோசன்.


' என்னடா இது? உண்மையாவாடா? நான் எனக்குத்தான் அப்பிடி இருக்குன்டல்லாவா நினைச்சுக்கிட்டு இருக்கிறேன்'


'டேய், பொய் சொல்லாத.. உனக்கும் அப்பிடியாடா இருக்கு...? நான் எனக்கு மட்டுந்தான் அப்பிடியென்று நினைச்சேன்' என்றான் மிஷ்கின்.


'நல்லாருக்கு கதை! எங்க வீட்ல அப்பா அம்மா தங்கச்சி பாட்டி எல்லாருக்கும் இதே போல இருக்குதென்டு ஏதோ செய்வினையோ என்று பயந்துபோய் ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேர்த்தி வச்சிருக்காங்கடா!' என்றான் நெட்டைக் கொக்கு அஸ்வின்.


'இதைப் பார்டா, முந்தியெல்லாம் இந்த பெட்டால எவ்வளவு வடிவா தூக்கியடிக்கலாம். இப்பல்லாம் அப்படி அடிக்கேலாம கொஞ்சம் கஷ்டமா இருக்கு!' காற்றில் வீசிக்காட்டினான் சதோசன்.


'உனக்குச் சும்மாவே அடிக்கத் தெரியாது...'


'போடா தூள்புட்டு!'


'டேய்! சண்டையை விடுங்கடா! எங்க வீட்டுலயும் எல்லாருக்கும் கால் வலிடா!'


எங்கள் அணியிலுள்ள எல்லோருமே இதுபோல ஒரே கதையைச் சொல்லத் தொடங்கவே விளையாட்டை நிறுத்திவிட்டு அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். ஒன்றுமட்டும் தெளிவாகப் புரிந்தது எனக்கு. சில நாட்களாக நான் உணர்ந்த அந்த ஏதோ ஒரு வித்தியாசம் ஒரு பொதுவான விடயம்தான்.


'இப்ப என்னடா செய்யுறது? யாருக்கிட்டயாவது கேட்டுப் பார்ப்போமா?'


'நாளைக்கு ஸ்கூல்ல சயன்ஸ் ஸேர்க்கிட்ட கேப்பம்டா?'


'நாளை வரைக்கும் பொறுக்கேலாதுடா எனக்கு...இப்பவே அவருகிட்டயாவது கேக்கணும்டா!'


'அவர்ட வீடு தெரியாதே...ஆனா நம்ம ஸ்கூல்ல ஏஎல் படிக்கிற ப்ரீபெக்ட் அஸருதின் அண்ணா...இங்க மூர் ஸ்ட்ரீட் பக்கத்துலதான் றூம் எடுத்துப் படிச்சிட்டிருக்கார். அவர் நம்மட ஸேருக்கிட்டதான்டா க்ளாஸ் போறவர். வீடு தெரியும் போய் கேட்கலாம் வாங்கடா!' என்ற மிஷ்கினின் யோசனையை ஏற்றுக்கொண்டு புறப்பட்டது எங்கள் அணி..


பொதுமைதானத்திலிருந்து நகரின் பிரதான பஸ்நிலையத்தை நாங்கள் கடந்து செல்லும்போது, 'இன்சாப், வா கொஞ்சம் சந்தைக்குள்ளே போய் வரலாம். இதுக்குள்ளதான் எங்க அப்பா மரக்கறிக்கடை வச்சிருக்கார்' என'று கூப்பிட்டான் சதோசன்.


'ச்சீ வேணாண்டா, பிறகு பார்க்கலாம் வாடா!'


'என்னைப் பார்த்தா அப்பா ஐஸ்க்ரீம் குடிக்கக் காசு ஏதும் தந்தாலும் தருவாரு...சரி வேணாம்டா விடு'


' அட! மிச்சம் ஆசைப்படுறான் பாவம்! வாங்கடா' என்று சதோசனின் அப்பாவுடைய காய்கறிக்கடையை பார்க்க சந்தைக்குள் சென்றோம்.


000






'அட இது என்ன கூத்து?'


நாங்கள் சொன்னதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் அதிர்ந்து கூவினார், தூக்குத் தராசிலே கரட் கிழங்குகளை நிறுத்து வியாபாரம் செய்தபடி நின்றிருந்த சதோசனின் அப்பா சண்முகலிங்கம்.


'அதுசரி! நானும் கொஞ்ச நாளா இதைப் பத்தித்தான் யோசிச்சிட்டு இருந்தேன். போன வருசம் சிக்கின்குனியா காய்ச்சல் வந்தநேரம் கைகால் எலும்பெல்லாம் ஒருமாதிரி இழுத்துப் பிடிச்சாப்பல இருந்திச்சுத்தானே..? கிட்டத்தட்ட அதே மாதிரித்தான் ஆனா காலுக்குக் கீழே பூமிக்குள்ள இருந்து யாரோ இழுத்துப் புடிக்கிறாப்பல இருக்கு..அதுமட்டுமில்ல தூக்கிற சாமானெல்லாங் கூட கடும் பாரமாயிருக்குதுடாப்பா!' என்றார்.


பின்பு சுற்றிலும் ஒருபார்வை பார்த்துவிட்டு, 'இதைக் கொஞ்சம் பாருங்க! இந்தா என்ட கையில இருக்கிற இந்தத் தூக்குத் திராசில முந்தியெல்லாம் ஒரு கிலோவுக்கு நடுத்தர ஸைஸ் கரட் ஒரு பத்து பன்னிரண்டு கிழங்கைப் போட்டாப் போதும் ஆனா இப்ப கொஞ்ச நாளா 8 அல்லது 9 கிழங்கைப் போடக்குள்ளேயே ஒரு கிலோ வந்துடுது. கத்தரிக்காய் 4 , 5 காயைப்போட டக்கெண்டு வந்திடுது ஒரு கிலோ! முந்தியெல்லாம் 7 இல்லாட்டி 8 காய் தேவைப்படும்.' என்று சொல்லிக் கொண்டே போனார். எங்களுக்கு அவர் கூறியது புதுவிடயமாக இருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.


'டேய்! இதை நம்மட ஜெயக்குமார் ஸேர்க்கிட்டதான் கேக்கணும்' என்றான் மிஷ்கின்.


'என்ன சண்முகம், ஒன்ட மகனோட கூட்டாளியெல்லாம் சேர்ந்து வந்திருக்காங்க போல.  இண்டைக்குக் கிரிக்கட்டுக்கு லீவு விட்டுட்டு மார்க்கட் பக்கம் வந்திருக்காங்களே...சும்மா வரமாட்டாங்களே?' அன்று பௌர்ணமி தினம் என்பதால் கடையைக் கழுவிப் பூட்டியபடி கேட்டார், பக்கத்து ஆட்டிறைச்சிக் கடை முதலாளி அனீபா நானா. அவரிடமும் நாங்கள் கூறிய விடயம் சொல்லப்பட்டது.


'ஓகோ! அதான்டா சண்முகம் நா பார்த்தேன்..ஒரு ரெண்டு மூணு நாளா இப்படிக் கிடக்கே ண்டு...! கால்வலிய வுடு. நிண்ட நெலையில யாவாரஞ் செய்ர நம்மளுக்கெல்லாம் அது எப்பவும் உள்ளதுதானே? அந்த போஸ்ட் மாஸ்டர்ர மனிசி நேத்துக்காலையில ரெண்டு கிலோ 'தனி'  வாங்கிட்டுப்போனா...வாங்கிப்பாத்த கையோட எறைச்சி முந்தி மாதிரி பொலிவாயில்ல என்டு ஒருநாளும் இல்லாத மாதிரிக்கு வந்து ஏசிட்டுப் போயிருக்கா. கடைப் பொடியன் சொன்னான். அப்ப இதுதானா விசயம்? பாரத்தைக் கூடக் காட்டுதா, திராசு..? ம்ம்..கூடக்காட்டினா நமக்கு நல்லதுதான்...ஹாஹ்ஹா! ஆனா அது பாவம்! மேல ஒருத்தன் பாத்திட்டு இருக்கான்.' என்று உரத்துப்பேச அந்த இடத்தில் ஒரு சிறுகூட்டமே கூடி இதைப்பற்றி அலசியது.


அங்கு எல்லோருடைய கதையும் ஒரே கதையாகவே இருந்தது.


000





றுநாள் பாடசாலை ஆரம்பித்தது.


அடிக்கடி மழைபொழிவதும் நிற்பதுமாக இருந்தது அன்றைய காலைப்பொழுது. பாடசாலையிலே எல்லோருடைய வாயிலும் 'அந்தபுதுவித கால்வலி' பற்றிய பேச்சாகவே இருந்தது. ஜெயக்குமார் ஸேர் வகுப்புக்குள் வந்து சேர்ந்ததுதான் தாமதம், முன்தினம் நடந்த அனைத்தையும் அடித்துப்பிடித்து மூச்சுவாங்கச் சொல்லி முடித்தோம்.


எப்போதுமே கலகலப்பாக நகைச்சுவையாய்ப் பேசுபவர்தான் ஜெயக்குமார் ஸேர். அன்று வழக்கத்திற்கு மாறாக மிகுந்த சிந்தனை வயப்பட்டிருந்ததால் நாங்கள் கூறியது ஒன்றுமே அவருக்கு முதலில் புரியவில்லை. பின்பு சுதாரித்துக் கொண்டு பொறுமையாகக் கேட்டு விளங்கினார். திடீரென ஏதோ தோன்றியவராக ஆய்வுகூடத்துக்குள்ளே புகுந்து ஒரு விற்றராசுடன் வெளியே வந்தார். 'இங்க வா சதோசன், இன்சாப்! ரெண்டு பேரும் ஓடிப்போய் கெண்டீன் சின்னத்தம்பி அண்ணர்க்கிட்டப் போய் நான் சொல்றதுகள வாங்கிட்டு கெதியா வாங்க!'  என்றார்.


நாங்கள் கொண்டு வந்த தராசு எடைக்கற்களை ஒவ்வொன்றாக விற்றராசிலே நிறுத்துப் பார்க்கலானார் ஜெயக்குமார் ஸேர். என்ன ஆச்சரியம் ஒருகிலோ எனக்குறிக்கப்பட்டிருந்த படிக்கல் அதனிலும் அதிகநிறையைக் காட்டியது. அவ்வாறே 2கிலோ, 5கிலோ கற்களும் நிறைகளைச் சற்றுக்கூட காட்டியது. நடப்பதை நம்பவே முடியாமல் விற்றராசுகளை மாற்றி மாற்றி திரும்பத் திரும்பச் செய்து பார்த்துக் கொண்டேயிருந்தார் ஸேர். ஆனால் விளைவு மட்டும் மாறாமல் அதே விதமாகவே இருந்தது. எங்கள் வகுப்பாசிரியரின் முகம் அதிர்ச்சியில் வெளிறிப்போனது.


அதன் பிறகு அவர் எங்களோடு பேசவேயில்லை. மிகுந்த யோசனையுடன் ஆய்வுகூடத்திற்கும் அதிபர் காரியாலயத்திற்குமாக ஓடித்திரிந்து கொண்டிருந்தார். இயர்போனைக் காதிலே பொருத்தியபடி கைத்தொலைபேசியில் யாராருக்கோவெல்லாம் அழைப்பு எடுத்தவாறிருந்தார். பாடசாலை முழுவதும் ஒரு வகையான பதற்றம் தொற்றியிருந்தது. வெளியாட்கள் பலர் பாடசாலை வளவுக்குள் ஒருவித பரபரப்புடன் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதிபர் காரியாலயத்திற்கு முன்பும் பலர் கூடிப்பேசியவாறு நின்று கொண்டிருந்தார்கள்.


பக்கத்து வகுப்புகளிலிருந்த ஆசிரியர்களும் சில பெரிய வகுப்பு மாணவர்களும் எங்கள் எட்டாம் வகுப்புக்குள் படியேறி வந்து,  'இன்சாப் யார்?' என்று கேட்டு  சதோசன், மிஷ்கின், அஸ்வின் உட்பட எல்லோரையும் ஏதோ மிருகக்காட்சிசாலைக்குப் புதிதாகவந்த விலங்குகளைப் பார்ப்பதுபோலப் பார்த்து விட்டுப் போனார்கள்.


சிறிதுநேரத்தில், 'இன்சாப் உன்னை அதிபர் கூட்டி வரச்சொன்னார்..வா!' என்று எங்கள் வகுப்புக்கு வந்து நின்றான் ஒரு மாணவர்தலைவன். காரணம் புரியாமல், குழப்பத்தோடு நான் படியிறங்கிச் செல்கையில், 'அம்மாத்தலை! நீ ஸ்கூல்லயே பெரிய ஆளாயிட்ட போல, வாழ்வுதாண்டா ஒனக்கு!' என்றான், கண்களிலே லேசான பொறாமையுடன்.

000


திபரின் அறை மிகவும் விசாலமாக இருந்தது.


சுவரில் கைகளைக்கட்டியபடி புன்னகையுடன் அமைதியாக நின்றிருக்கும் விவேகானந்தரின் கீழே விசாலமான மேசையின் பின்னால் சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி யாருக்கோ தொலைபேசியில் 'ஓம்.. ஓம்! சரி..சரி!' என்று சொல்லிக் கொண்டிருந்தார் அதிபர். அவரைச் சுற்றிலும் நிறைய பிரமுகர்கள் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தபடி அமர்ந்திருந்தார்கள்.


 ' ம்ம்! இங்க வா! நீதானே இன்சாப்? என்ன ஜெயா..? இவன்தானே ஆள்?' என்று பக்கவாட்டில் திரும்பி யாரையோ கேட்டார் அதிபர். அப்போதுதான் எனது வகுப்பாசிரியர் ஜெயக்குமார் ஸேரும் அந்தக்கூட்டத்தில் இருப்பதைக் கண்டேன். எனது பார்வை அவரில் வீழ்ந்ததும் 'பயப்பட வேண்டாம்' என்பது போல லேசாய் சைகை செய்தார்.


' குட்மோர்னிங்சேர்! ஓம்..நான்தான் ஸேர் இன்சாப்!' என்றேன் தட்டுத் தடுமாறியபடி. 'சரி பயப்பட வேண்டாம்! நேற்றுப் பின்னேரம் எங்கே போனனீங்க..என்ன நடந்தது என்றதை காலையில் ஜெயக்குமார் ஸேர்ட்ட சொன்னது போல வடிவாச் சொல்லு பார்ப்போம்' என்று அதிபர் கேட்டார்.
நான் தயங்கியபடி மீண்டும் ஒருதடவை ஜெயக்குமார் ஸேரைப் பார்த்துவிட்டு, 'அது வந்து ஒரு ரெண்டு மூணு நாளைக்கு முதல்ல இருந்து...' என்று நான் சொல்லத் தொடங்கியதும் எதிரேயிருந்த தன்னியக்க டிஜிட்டல் வீடியோ கெமரா என்மீது வெளிச்ச வெள்ளத்தை பாய்ச்சியபடி உயிர்பெற்றது.


000


'அடேய்! இன்சாப்! என்னடா சொல்லுறா? ஏண்டா ஒனக்கிந்த வேண்டாத வேலைக்கெல்லாம் பாஞ்சடிச்சிட்டு முன்னுக்குப்போறாய் இரு..இரு ஒனக்கு வாப்பா வரட்டும்;!' என்ற உம்மாவின் தொணதொணப்புக்குப் போட்டியாக மழையும் விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது.


புச்சியப்பா உள்ளறையில் மதியக் குட்டித்தூக்கத்திலிருந்ததால் முன் வராந்தவிலிருக்கும் அவரது சாய்மானக் கதிரையிலே சுருண்டு படுத்திருந்தேன். அப்போது மழைக்கோட்டிலிருந்து ஈரம் சொட்டச்சொட்ட மோட்டார் சைக்கிளில் வந்து சேர்ந்தார் வாப்பா. சைக்கிளை நிறுத்தி அவர் இறங்குவதற்கிடையிலே, 'இஞ்ச கேட்டீங்களாப்பா! இவன் இன்சாப்ட வேலைய..ஸ்கூல்ல என்னமோ வீடியோ எடுத்தாங்களாம் இவன் ஒண்ணும் ஒழுங்காச் சொல்லுறானில்லப்பா..என்னென்டு கொஞ்சம்...'


'சரிசரி, அதெல்லாம் பிறகு கேட்டுக்கலாம். இப்ப டீவியைப் போடுங்கடாப்பா. அண்டைக்கு ரெண்டு நாளா எல்லாருக்கும் காலுக்குள்ளால இழுத்துப் புடிச்ச மாதிரி இருக்கெண்டு சொன்னீங்கதானே...? அது நம்மளுக்கு மட்டுமில்ல தெரியுமா? ஊரெல்லாம் இதே கதையாத்தான்டாப்பா...அது சம்பந்தமாத்தான் டீவில நியூஸ் சொல்லிட்டிருக்கானாம் போடுங்க கெதியா?' என்றவாறு மழைக்கோட்டைக் கூடக் கழற்றாமல் ஹோலுக்குள்ளே நுழைந்து ஈரக்கையோடு டீவியைப்போட்டார் வாப்பா.


'இஞ்ச பார்ரா இன்சாப்! இந்த மனிசன்ட வேலையை! வீடெல்லாம் ஒரே தண்ணீ!' என்று கூவிய உம்மாவையெல்லாம் கவனிக்காமல் உயிர்பெற்ற தொலைக்காட்சி,

'.....ன்று தெரிவித்தார். அவர்மேலும் இதுபற்றிக் கூறுகையில், இந்த வகையான கால்மூட்டு வலி நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்டுள்ளதோடு மிக விரைவாக நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் பரவியுள்ளமை ஆச்சரியத்தைத் தருவதாகவும் தெரிவித்தார். இந்த அசாதாரண இழுவிசையுடன் கூடிய கால் மூட்டுவலி இதுவரை அறியப்படாத கிருமிகளின் தொற்றுதலால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை எனவும்....' என்று தொடர்ந்தது.


'என்னப்பா இது செய்தி சொல்றான்? ஒண்ணும் வெளங்குதில்ல!'


' அதான் டீவிக்காரன்! கொஞ்சம் இரேன் முழுசாக் கேப்பம்!'


'வாப்பா! வாப்பா, இது நான் இண்டைக்கு ஒருநாள் சொன்னதுதானே..? நீங்களும் உம்மாவும் ஏசுனீங்க நம்பாம!'


'சரிசரி, கத்தாம செய்தியைக்கேளு!'


'இதுவரை ஆயிரக்கணக்கான நோயாளிகள் மாவட்ட வைத்தியசாலைகளின் வெளிநோயாளர்பிரிவுகளிலே சிகிச்சைக்கென வந்த கொண்டுள்ளனரெனவும் அவர்களுக்கு வெறும் வலிநிவாரணி மாத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் தேசிய...'


'பாத்தீங்களாப்பா! இவன் இன்சாப் அண்டைக்குச் சொல்லக்குள்ள நம்ம பெரிசா கணக்கெடுக்கயில்ல..' என்று என்னை அன்போடு கட்டிப்பிடித்துக் கொண்டார் வாப்பா.


'...விடயமாக மேலும் பல மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இதுபற்றி மக்கள் வீண் அச்சம் அடையத் தேவையில்லை. பொதுமக்கள் பீதியடையாமல் அமைதி காக்குமாறு...'


'நீ பெரிய கெட்டிக்காரந்தாண்டா. ஆனா ஏண்டா ராஜா இப்படிக் குழப்படி...?' என்று கோபம் குறைந்து உம்மாவும் என் கதைச் செல்லமாகத் திருகிக்கொண்டிருக்கும்போது,


'மணிச்சாச்சி! மணிச்சாச்சி' என்று மூச்சிரைக்க ஓடிவந்தான் அடுத்த வீட்டுச் சிறுவன் பர்சான். 'மணிச்சாச்சி, ஒங்கட இன்சாப் இருக்கானே...அவன எங்கட டீவில காட்டினாங்க!' என்று சொல்லிவிட்டுத் திரும்பி ஓடிப்போனான்.


முதலில் ஒருவருக்கும் புரியவில்லை. 'என்னடா சொல்றான், அவன்?' என்று குழம்பினார் வாப் வாப்பா. 'வாப்பா! காலையில ஸ்கூல்ல என்னை வீடியோ எடுத்தாங்க வாப்பா!'


'என்னப்பா இவன் சொல்றான்? என்னடா...என்ன எடுத்தாங்க சரியாகச் சொல்லித் தொலையேன்!'


'அதைத்தானேப்பா நீங்க வந்தவுடனே கரடியாக் கத்தினேன். நீங்க எப்பயாவது என்ட கதையக் கேட்டிருக்கீங்களா?'


'சரி, ஒன்ட பொலம்பல நிப்பாட்டு பாப்போம்!' என்று ஒரு சின்ன முறுகல் இருவருக்குமிடையிலே உண்டாவதற்கிடையில், 'அடியேய் மணி!' என்றபடி இடுப்பில் கைக்குழந்தையுடன் ஓட்டமும் நடையுமாக வந்தாள் அடுத்த வீட்டு மாமி.


' டீயேய் மணி! உன்ட இன்சாப்புப் பொடியன டீவில திருப்பித் திருப்பிக் காட்டுறாங்கடி.. இதென்னடி றூபவாகினியப் புடிச்சிவச்சிருக்கா? அங்கால சக்தியைப் போடு புள்ள மொதல்ல!'


வாப்பா அவசர அவசரமாய் சேனலை மாற்ற, 'இதோ மீண்டும் அந்தத் தகவலைப் பார்ப்போம்' என்று அறிவிப்பாளரின் குரலோடு காட்சி விரிந்தது.
முதலிலே எங்கள் பாடசாலையை மத்திய அளவு தூரத்தில் இருந்து காட்டிய கெமரா பின்பு ஸும் ஆகி பாடசாலையின் பெயர்ப்பலகையிலே போய் மொய்த்தது. அடுத்த காட்சியில் அதிபரின் காரியாலயச் சுவரிலிருந்த தமிழ்ப்பண்டிதர்களையும் பெரியார்களையும் ஒரு மேய் மேய்ந்துவிட்டு கைகட்டிப் புன்னகையுடன் நிற்கும் விவேகானந்தரிடம் சில வினாடிகள் தேங்கியபின் வெகுநிதானமாக கீழிறங்கிவர... அங்கே பெரிய மீசைக்குள் சிரித்தபடி எங்கள் அதிபர் இருந்தார். அவரையடுத்து இருபுறமும் காலையிலே நான் பார்த்த மனிதர்கள் இருந்தனர்.


'எங்கடா ஒன்னக் காணயில்ல?' என்று உம்மா பொறுமையிழந்த கணத்தில் சட்டென ஒரு வெட்டில் எனது முகம் நெருக்கமாகக் காட்டப்பட்டது. பின்பு எனது முழுத்தோற்றத்தையும் காட்டும் வசதிக்காக கெமரா சற்றுப் பின்வாங்கியது.


'இந்தா, நம்மட இன்சாப்!...இன்சாப்!' என்று எல்லோருமே கத்தினார்கள். எனக்கு உச்சி மண்டையில் பெருமை மத்தாப்புக் கொட்டினாலும்  லேசான வெட்கமாகவும் இருந்தது.


'உஷ்! சத்தம்! என்ன என்று கேப்பமே' என்று வாப்பா எல்லோரையும் அடக்க, சுற்றியுள்ள அனைவரையும் கலவரமாகப் பார்த்து, 'எனது பெயர் இன்சாப்....' என்று ஆரம்பித்து நான் காலையிலே கூறியது அனைத்தும் ஒளிபரப்பானது.
அவ்வளவுதான். வீட்டுச் சுற்றுப்புறத்திலும் பாடசாலையிலும் நான் ஒரு திடீர் நட்சத்திரமாகி விட்டேன்.


000








றுநாள் நான் பாடசாலை சென்றதும் எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.


ஆசிரியர்கள் கூட 'இன்சாப் நீ டீவில வாறளவுக்கு பெரிய ஆளாயிட்ட போல' என்று பாராட்டினார்கள். எங்கு பார்த்தாலும் இன்சாப் என்பதே பேச்சாக இருந்தது.  என்னுடன் சண்டையிட்டு பேசாமல் இருந்தவர்கள் கூட 'இன்சாப்ட பிரண்ட்ஸ்தான் நாங்க'  என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நான் போகுமிடமெல்லாம் 'இவந்தண்டா..அது' என்று என்னைக்காட்டிக் கிசுகிசுத்தார்கள். பலரின் பார்வையிலே டன் கணக்கில் பொறாமை தெரிந்தது. 
நான் இயல்பிலேயே ஒரு புகழ்விரும்பி. கிரிக்கட்டில் ஒரு சிக்சர் அடித்துவிட்டாலே நூறாவது செஞ்சுரி போட்ட சச்சின் போல அலப்பறை காட்டுவேன். இப்படியானால் கேட்க வேண்டுமா? புகழ்போதை தலைக்கேறி காற்றில் மிதந்து கொண்டிருந்தேன். ஆனாலும் 'ஏன் இப்படி ஆனது?' என்ற கேள்விமட்டும் என்னை உள்ளுரக் கொன்று கொண்டேயிருந்தது.


இடைவேளை நேரத்தில் நண்பர்களோடு உலாவியபோது..
'அட, வாடா எனது அருமை மாணவனே!'   என்னைக் கண்டதும் கூவியழைத்தபடி வந்தார் ஜெயக்குமார் ஸேர். அவரது கைகளிலே அன்றைய தினசரிப் பத்திரிகைகள் இருந்தன. எல்லோரும் உற்சாகமாகி ஓடிப்போய் அவரைச் சூழ்ந்து கொண்டோம்.


'நீ பெரியளாயிட்டடா இன்சாப், இதில உன் போட்டோ வந்திருக்கு. எல்லோரும் லைப்ரரிக்கு வாங்க காட்டுறேன்!'  என்றபடி மாடியேறிச் சென்றுவிட்டார். 'ஹே!' என்று உற்சாமாய் கூச்சலிட்டபடி அவர்பின்னால் ஓடினோம்.
மேல்மாடியிலிருந்த லைப்ரரியில் அந்தப்பத்திரிகைக்காக வகுப்பே முண்டியடித்தது. எங்கள் பாடசாலையின் படமும் அதிபர், ஜெயக்குமார் ஸேர் மற்றும் எனது படமும் இருந்தது. இந்த வருட வலயமட்டக் கிரிக்கட் போட்டிக்காக போஸ்டல் அடையாள அட்டைக்கு எடுத்த படம்தான் என்னுடையது.


'என்ன ஸேர், எங்க படத்தையும் குடுத்திருக்கலாந்தானே? நாங்களுந்தானே இன்சாப்போட இருந்தோம்' என்று எனது நண்பர்களில் சிலர் ஏமாற்றத்தோடு கேட்க, 'உங்கட படங்கள் அவசரத்துக்குக் கிடைக்கல்லடா...அதோட இன்சாப்தானேடா உங்க கேங்க் லீடர்?' என்று சமாளித்தார் ஸேர். பையன்களும் 'ஓம் ஸேர் அவன்தான் எங்க கெப்டன்!' என்று ஒத்துப்பாட எனக்கு மகிழ்ச்சி மண்டையிலே மீண்டும் மத்தாப்பூக் கொட்டியது.
எனது நண்பர்கள் அனைவரும் படங்களையே முண்டியடித்துக் பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் தனியாக நின்று பத்திரிகையின் மற்றொரு பக்கத்தில் தொடர்ந்த அந்தச் செய்தியின் தொடர்ச்சியைத் தேடி வாசிக்கலானேன்.


'என்ன ஸேர், இப்படி எழுதியிருக்கிறாங்க?' என்று கேட்பதற்கு நான் நிமிர்ந்தபோது என்னையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயக்குமார் ஸேர். அவரைத்தேடி உயர்வகுப்பு விஞ்ஞான மாணவர்கள் சிலர் மேலேறி லைப்ரரிக்குள் வந்து சேர்ந்தார்கள்.


 'எப்படி எழுதியிருக்கு? வாசி பார்ப்போம்' என்றார் அவர், ஆவலுடன்.


' நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த அசாதரண கால்மூட்டுவலி ஆரம்பத்திலே புதிய வகையான தொற்றுநோயாக இருக்கலாமெனக் கருதப்பட்டபோதிலும் தற்போது திருகோணமலை நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆசிரியர்களும் மாணவர்களும் அனுப்பி வைத்த தகவல் ஒன்றை மேற்கொள் காட்டி முன்னைய அனுமானம் தவறானது என்று இலங்கை விஞ்ஞானப்பேரவை தெரிவித்துள்ளது.' 


'நிப்பாட்டாதே! தொடர்ந்து வாசி! இன்சாப்!'


'அத்துடன் மேற்படி உடல்வலி நமது நாட்டில் மட்டுமன்றி இந்தியத் துணைக்கண்டத்திலும் ஆசியா மற்றும் உலகின் பல பிராந்தியங்களிலும் உணரப்பட்டு வருவதால் இது புவியின் ஈர்ப்புவிசையுடன் தொடர்பான பிரச்சினையாக இருக்கலாம் எனவும் பேரவையின் அறிக்கை குறிப்பிடுகின்றது. இது குறித்து...'


'சரி போதும்..இப்ப கேளுங்க.. உங்க கேள்விகளை!'


'இப்ப பூமியிட ஈர்ப்புவிசை கூடியிருக்கா குறைஞ்சிருக்கா ஸேர்?'


'கூடிக்கொண்டுதான் இருக்குது ஆனா மெல்ல..மெல்லத்தான் கூடியிருக்கு. அதனாலதான் கால்மூட்டு வலி தவிர பெரிய பாதிப்பு ஏதுமில்லாம இருக்கிறம்'
'ஏன் ஸேர் சும்மாயிருக்கிற பூமிக்கு புவியீர்ப்பு கூட வேணும்?'


'அதுதான்டா சரியாகத் தெரியல்ல..நானும் இன்ரநெட்டில எல்லாம் தேடிப் பாத்திட்டுத்தான் வாறேன்..அது சம்பந்தமா நம்பக்கூடிய மாதிரி தகவல் எதையுமே காணல்ல.!'


'பூமி மாதிரி ஒரு விண்பொருள்ற ஈர்ப்புச் சக்தி கூட வேணுமெண்டா என்னென்ன நடக்கணும் ஸேர்..?' ஏஎல் படிக்கிற ஒருவன்  கேட்டான்.


'ம்..ஒண்டு அதுட மொத்தத் திணிவு அதிகரிக்க வேணும்...அல்லது அதுட சுழற்சி வேகம் அதிகரிக்க வேணும்!'


'ஒருவேளை நம்மட பூமியை வெளிக்கிரகவாசிகள் வந்து ஏதும் செய்திட்டாங்களோ?'


'ஹாஹ்..ஹா! நல்ல கற்பனை வளமிருக்குடா இன்சாப் உனக்கு..! நீ பார்க்கிற கார்ட்டூண்லதான் அப்பிடி நடக்கும். சரி, பார்ப்பம் எப்படியும் காரணம் தெரிய வரும்தானே...அதுசரி, இந்த விண்வெளி விசயத்துல உனக்கு என்னடா இவ்வளவு ஆர்வம்' என்று வாஞ்சையோடு என்னுடைய தலையை விரல்களால் சிலுப்பிவிட்டு  இறங்கிச் சென்றார் ஜெயக்குமார் ஸேர்.


அவர் சென்று வெகுநேரமாகியும் கூட நான் அங்கேயே நின்றிருந்தேன். 'ஏன் இப்படியெல்லாம் நடக்கவேண்டும். புவியீர்ப்பு அதிகரிப்பதற்கு பூமி திடீரென நிறையில் பெருக்க வேண்டும் என்றுதானே கொன்னார் ஸேர், அது சாத்தியமில்லை. அப்படியானால் உண்மையான காரணம்தான் என்ன?' என்று யோசித்து யோசித்து ஒரே தலைவலியாக இருந்தது. காரணம் தெரியாவிட்டால் தலையே வெடித்து விடும் போலிருந்தது. பாடசாலை நூலகத்திலிருந்த எனது படம் வந்த பத்திரிகையின் பக்கங்களை வெறுமனே புரட்டியபடி இருந்தேன்.


வேறு யாரிடம் கேட்கலாம்? ஏதாவது புத்தகங்களில் இருக்காதா...இணையத்தில் கூட சரியான தகவல் இல்லையென்றாரே... அப்படியானால் என்னதான் செயய்லாம்..? அப்போதுதான் கையிலிருந்த பக்கத்தில் தற்செயலாக அந்தச் செய்தியைக் கண்டேன்.


'விண்வெளி தொடர்பான சில வல்லரசு நாடுகளின் பரிசோதனை முயற்சிகளுக்கும் தற்போது பூமியின் அசாதாரண புவியீர்ப்புவிசை அதிகரிப்புக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று ஐ.நா சபையில் விவாதம். ஆயினும் இக்குற்றச்சாட்டை அனைத்து வல்லரசு நாடுகளும் மறுதலித்துள்ளன...' என்று வாசித்துக் கொண்டிருக்கும் போது எனது மண்டைக்குள் எங்கோ ஒரு 'பளிச்!'


000








'புச்சியப்பா! புச்சியப்பா!'


வீடு வந்து சேர்ந்ததும் புத்தகப்பையை ஒரே வீசாக வீசியெறிந்து விட்டு எனது புத்தக அலுமாரியை எலிபோலக் குடையத் தொடங்கினேன். 'என்னடா இன்சாப், உன்ட ஸேர் என்ன சொன்னாரு?' என்று கேட்ட வாப்பாவுக்கு தேடுவதை நிறுத்தாமல், காலையில் நடந்ததையெல்லாம் சுருக்கமாகச் சொன்னேன்.


'அட நியூஸ்பேப்பர்லயும் வந்திட்டுதா விசயம். வாழ்வுதாண்டா ஒனக்கு? பேப்பர் வச்சிருக்கியா?'


'அந்தா என்ட பேக்ல இருக்கு..எடுங்க!'
பத்திரிகையிலே எனது படத்தைப் பார்த்து மகிழ்ந்த வாப்பா, உம்மாவையும் கூவி அழைத்தார். சமையலறையிலிருந்து ஈரக்கையைத் துடைத்தபடி வெளியே வந்து பார்த்த  உம்மா, ' இஞ்ச பாரு! வேற நல்ல ஒரு போட்டோவைக் குடுத்திருக்கலாமே நீ? ஓடிப்போய் சரீனா சாச்சிக்குக் காட்டிட்டு வா. அவக்கிட்ட குடுத்தாப் போதும் ஊர்ல எல்லாருக்கும் காட்டிடுவா'


'நா எங்க குடுத்தேன், ஸேர்தான் கிரிக்கட் டீம் போட்டோவக் குடுத்தாரு... இப்ப அதுவாம்மா முக்கியம்?' என்றபடி புத்தகங்களை அள்ளி இறைத்தேன்.


' சரி, இப்ப என்னத்தைத் தேடிடா இப்படிக் கொடையுறா நீ?'


'பேப்பர்ல வந்த ந்யூஸ் எல்லாத்தையும் வெட்டி ஒட்டி வச்சிருந்தேன் ஒரு பெரிய டயறி ஒண்ணு. எங்கம்மா அதைக் காணல்ல. இந்த ஒல்லிப்பிச்சான் இம்ரான் எடுத்தானாம்மா..?'


'டேய்.. இனி அதையெல்லாம் வுட்டுட்டு படிக்கிற வேலையப்பாரு!'


'சரி, படிக்கிறன்தானே..வாப்பா! இப்ப அந்த டயறியைத் தாங்க!'
'இன்சாப்! இதையாடா தேடுறா நீ?' என்று எனது பச்சைநிறத் தோல் உறையிட்ட அந்த டயறியை நீட்டியபடி வந்தார் புச்சியப்பா. 'சவுமி, ஒன்ட பொடியன் பெரிய ஆள்றா...? இஞ்ச பாரேன்..எவ்வளவு காலத்துக்கு முந்தின விண்வெளிச் செய்தியெல்லாம் சேர்த்து ஒட்டி வச்சிருக்காம் பாரு! எப்படி இதையெல்லாம் சேர்த்தெடுத்தான் இவன்?' என்றவாறு வாப்பாவிடம் அதைக் கொடுத்தார் அவர். அவ்வளவுதான் எனக்கு வந்ததே ஒரு கோபம்.


இறங்கிப் பாய்ந்தோடி வந்து, 'இங்க தாங்க அதை!' என்று வெடுக்கென புச்சியப்பாவின் கையிலிருந்து பிடுங்கி தரையில் டயறியோடு விழுந்தேன். 'டேய்! இன்சாப், என்னடா இது மரியாதையில்லாம..' என்ற வாப்பாவின் அதட்டல் குரலையெல்லாம் பொருட்படுத்தாமல் அதனைத்திறந்து படபடவென பக்கங்களைப் புரட்டினேன்.


கடைசியில் நான் தேடிய அந்தச் செய்தி அகப்பட்டு விட்டது. அதைச் சில நிமிடங்கள் நிதானமாக வாசித்தேன்.. வாசித்தேன்.. வாசித்துக் கொண்டேயிருந்தேன்.


'டேய் இன்சாப்? என்னடா ஒனக்கு?' என்று உம்மா கேட்டதெல்லாம் காதில் விழுந்தாலும் கவனத்தில் ஏறவில்லை. அந்த இரண்டு பக்கத் துணுக்குச் செய்தியை வாசித்து முடித்ததும் வெறியே பிடித்து விட்டது எனக்கு.
'ஓ! ஹோ......!' என்று டயறியை இருகைகளாலும் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி வெளியே முற்றத்திற்கு ஓடிவந்தேன். வராந்தாவிலே அங்குமிங்கும் துள்ளியோடினேன். என்னாலேயே என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.


'நான் கண்டு புடிச்சிட்டேன்! கண்டு புடிச்சிட்டேன்!' என்ற வானத்தைப் பார்த்து அலறினேன்.


'டேய் இன்சாப்? இன்சாப் என்னடா இது? பக்கத்து வீட்ல ஆக்கள்லாம் பாக்கிறாங்கடா!'


'ஜெயக்குமார் ஸேர்! உங்க மாணவன் இன்சாப்! இன்சாப்  கண்டு புடிச்சிட்டான்..!'  என்று சந்தோஷ மிகுதியால் முற்றத்தில் சுற்றிச் சுற்றி ஓடினேன்.


'யா! அல்லாஹ்! என்ட புள்ளைக்கு என்னமோ ஆயிட்டு! டீவில காட்டினதில எல்லார்ர கண்ணூறும் பட்டுட்டு.. என்ட புள்ள ஆண்டவனே!' என்ற உம்மாவின் புலம்பலும் 'ஓ! யுரெக்கா...யுரெக்கா! கண்டு புடிச்சிட்டேன்..!' என்று நான் கத்தியதும்தான் கடைசியாகத் தெரியும் எனக்கு.


மீண்டும் நான்  கண்விழித்தபோது என்னைச்சுற்றி பல தெளிவில்லாத முகங்கள் தண்ணீரிலாடும் பிம்பங்கள் போலத் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன. இறுதியில் மீண்டும் இருண்டுபோயின.


000






'யென்ஷாப்! யென்ஷாப்! ஓபன் யுவர் ஐஸ் போய்! யென்ஷாப் கண்ணத் தொற!' என்று காதுகளுக்கருகிலே புதிதாக ஒரு கிணற்றுக்குரல் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து, 'நீங்க கூப்பிட்டுப் பாருங்க' என்று அது விலக, 'இன்சாப்! வாப்பா! இஞ்ச பார்ரா கண்ணை முழிச்சுப் பார்டா என் தங்கம்!' என்று உம்மாவின் விசும்பல் குரலும் இடையிடையே வாப்பாவின் குரலும் பாதாளத்துக்குள்ளிருந்து ஒலித்தன. குரல்கள் தெளிவாகக் கேட்டாலும் எவ்வளவு முயன்றும் கண்ணைத் திறக்கவோ உடலை அசைக்கவோ முடியவில்லை.


நான் எங்கே இருக்கிறேன்..?


'நோ ப்ரொப்ளம்!  ஹீல் பீ ஓல்ரைட்!  அவனுக்கு ஒண்டுமில்ல...நீங்க எல்லாரும் வெளிய இருங்க கொஞ்ச நேரம்' என்றது அந்த 'யென்ஷாப்'  குரல். அதன் பிறகு நீண்ட மௌனம். மின்விசிறியின் ஒலிதவிர வேறு எதுவும் கேட்கவில்லை.


'குட்மோர்னிங் டொக்டர்!' என்று எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு குரல் கேட்டது.


'ப்ளீஸ் கம் மிஸ்டர் ஜயக்குமார்! நீங்கதான் யென்ஷாப்ட க்ளாஸ் டீச்சரா? வெல்..! நீங்க வந்து கூப்பிட்டுப் பாருங்க. ஒரு தடவை கண் திறந்திருக்கிறான். பட் திரும்பவும் மூடிட்டான். யு ஜஸ்ட் ட்ரை..கோல் ஹிம்!'


'இன்சாப்! உன்ட ஸேர் வந்திருக்கிறன்டா பயலே. கண்ணைத் திறடா என்ட கெட்டிக்காரப்  பயலே!...இன்சாப்!' என்று என் தலையைக்கோதியவாறே கூப்பிட்டார். அவர் கெஞ்சுவதைப் பொறுக்க முடியாமல் இமைகளிரண்டிலும் பாறாங்கற்கள் கட்டியிருந்த கண்களைக் கஷ்டப்பட்டுக்திறக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை.


'மிஸ்டர் ஜயக்குமார்! என்ன ப்ரச்சினை ஸ்கூல்ல இவனுக்கு? பேரண்ட்ஸ் என்னமோ சொன்னாங்களே..சம்திங் எபவுட் ஒன் கோயிங் கன்ட்ராவேர்ஷல் க்ராவிட்டி ப்ராப்ளம்? இவன் எதையோ கண்டுபிடிச்சிட்டனென்டு கத்திக் கூப்பாடு போட்டு...ஓவர் எமோஷனல் ஸ்டேஜ்க்கு வந்ததாகத்தான் உங்க ட்ரிங்கோமலீ பேஸ் ஹொஸ்பிடல் றிப்போர்ட்.. வாட் ஹெப்பண்ட் எக்சுவலி?' என்று கேள்விக்குமேல் கேள்வியாய் கேட்டது அந்த புதுக்குரல்.


'ஓ! அதுவா டொக்டர்? இவன் அவனையறியாமலே ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறான்... ஆரம்பத்திலருந்து எல்லாம் சொல்றேன்' என்று ஜெயக்குமார் ஸேர் ஆரம்பிக்க,  'இப்படி வாங்க அங்க என் ரூம்ல போய் உட்கார்ந்து பேசலாம்' என்று அந்த புதுக்குரல் அழைக்க இருவரும் தூரவிலகிச் சென்று விட்டார்கள்.


அங்கு அமைதி ஆட்கொண்டது. மீண்டும் மின்விசிறியின் மெல்லிய
படபடப்புடன் நிசப்தத்தில் நான் மட்டும் தனியாய்... 


சிறிது நேரத்தில் அதே குரல்கள்...


'ஓ! அப்படியா? வெரி இன்ட்ரஸ்டிங் போய்!' என்று என் தலையைக்கோதின அந்த புதிய குரலுக்குரிய குளிரான விரல்கள்.


'யெஸ் டொக்டர் பூமி வெப்பமடைதல்... யூ நோ.. க்ளோபல் வார்மிங்.. சூடு கூடி துருவத்திலே இருக்கிற பனிப்பாறைகள் உருகி கடலின் மட்டம் கூடி மாலைத்தீவு போல சில தீவுகளும் ரஷ்யா போல சில பெரிய நாடுகள்ற கரையோரங்களும் கடலுக்குள்ள போகும் என்று கேள்விப்பட்டிருப்பீங்களே டொக்டர்..?'


'யெஸ்! யெஸ்! ஐ நோ! ஐ யூஸ்ட்டு வோட்ச்  டிஸ்கவரி சேனல்'


'அதிலருந்து குறுக்கு வழியில தப்புறதுக்கு சில நாடுகள் ரகசியமாகச் செய்த சதி ஒண்ணு அம்பலமானதுக்கு இவனும் ஒரு காரணமாக இருந்திருக்கிறான் டொக்டர்!'


'அப்படியா? எப்படி அது?'


'இப்ப நம்ம பூமியை மெல்ல மெல்ல சூரியனை விட்டுத் விலக்கித் தள்ளி வச்சா அதோட வெப்பநிலை அதுதான்  எவரெஜ் டெம்பரேச்சர் குறைஞ்சிரும்தானே..'


'ஓ! மை காட் அது எப்படி இவ்வளவு பெரிய பூமியைத் தள்ளி வைக்க முடியும் மிஸ்டர் ஜயக்குமார்? இட் ஈஸ் அன் பிலீவபிள்!'


'இட்ஸ்.. பொஸிபிள் டொக்டர்! பூமிக்கும் செவ்வாய்க்குமிடையில ஒருசில வால்நட்சத்திரங்கள் ..கொமட்ஸ் அடிக்கடி கடந்து போய்க்கிட்டே இருக்கும்.. அது ஒவ்வொரு தடவையும் க்ரொஸ் பண்ணும்போது செவ்வாய்ப் பக்கமிருந்து ஒரு ஸ்பேஸ்ஷிப்ல இருந்து பவர்புல்லலான லேசர் கதிர்களை வால்நட்சத்திரத்துக்குப் பாய்ச்சினாப் போதும்..'


'ஓகே.. பாய்ச்சினா என்னாகும்?'


'அந்த அசையும் வால்நட்சத்திரத்தின்ட ஈர்ப்புச் சக்திகடுமையாக அதிகரிக்கும். அதனால் அது பூமியைக் கவரும். அப்படியே பூமியை அலுங்காமக் குலுங்காம ஒரு நாய்க்குட்டியைப் போல சூரியனிலிருந்து விலக்கி தேவையான இடத்துக்கு கொண்டு வந்திடும். இதைத்தான் மெல்ல மெல்ல பல ஆண்டுகளாகச் செய்து ரகசியமாகச் கொண்டு வந்திருக்கிறாங்க....'


'இட்ஸ் ரிடிக்யுலஸ்! ஸோ, நம்ம பூமி இப்போ பழைய இடத்தில இல்லையா?'


'யெஸ் டொக்டர்! அவர்கள் கடைசித் தடவையாக பூமியை இழுத்தபோது தவறுதலாக திடீரென அதிக தூரத்துக்கு இழுபட்டு விட்டது பூமி. அதாலதான் பூமியோட சுழற்சி வேகம் சட்டென அதிகரித்து கால்வலி, உடல் பாரம், அதிக மழை போன்ற பிரச்சினைகள்... இந்த ரகசிய நடவடிக்கை இவன் மூலமாக இப்போ அம்பலமாகியிருக்கு..!'


'ஓகே! இதெல்லாம் இந்தச் சின்னப் பையனுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?'


'இவனுக்கு மட்டுமில்ல, நிறையப்பேருக்கு ஏன்..எனக்கும் கூட சந்தேகம் வந்ததுதான். ஆனா அது ஒரு ஷேப்புக்கு வந்ததுக்கு இவனுக்கு ஸ்பேஸ் நியுஸ்களில இருந்த இன்ட்ரஸ்ட்டும் இவன்ட பத்திரிகைகள்ல வருகிற ஸ்பேஸ் ந்யூஸ் எல்லாத்தையும் வெட்டி ஒட்டி வைக்கிற பொழுது போக்குதான் காரணம். அப்படி...'


'சொல்லுங்க.!'


'அப்படி ஒரு செய்திதான் இது. இதுதான் அந்த செய்தி...பாருங்க! இது 2001ல் அதாவது இவன் பிறந்த அடுத்த வருசம் குமுதம் என்ற மெகஷின்ல ஓகஸ்ட் 2ம் திகதி, 'பூமியை இடம் மாற்றுங்கள்!' என்ற ஒரு சிறுகட்டுரை. இது இவனிட்ட இருந்ததாலதான் இந்த காரணத்தையே கெஸ் பண்ணி எங்களால இன்டர் நெஷனல் சயன்ஸ் யூனியனுக்கு தகவல் கொடுக்க முடிந்தது. அதனாலதான் இப்ப விசயமே அம்பலமாகி யூ என் வரை  பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்குது..' என்று ஜெயக்குமார் ஸேர் சொல்லிக் கொண்டிருக்கும் போது எனக்கு மெல்ல மெல்ல...கைகளை அசைக்க..முடிந்தது.


'இந்தச் சின்னப்பயல் இப்போ இன்டர்நேஷனல் லெவல்ல பேமஸாகிட்டான்.. டொக்டர்! இவனை இங்கே கொழும்பு ஹொஸ்பிடலுக்கு  கொண்டு வந்தது தெரியாததால டீவி பேப்;பர் ரிப்போர்ட்டர்ஸ் எல்லோரும் இவனைத்தேடி ட்ரிங்கோவுக்குப் போயிருக்கிறாங்க...இவன் இங்க இருக்கிறது மட்டும் தெரிஞ்சா இந்த ஹொஸ்பிட்டலே தாங்காது டொக்டர்!'


'வெல் வெல்! ஸோ, யூ ஸே மை ஹொஸ்பிட்டல் இஸ் ஓல்ஸோ கொயிங் டூ பீ மோர் பொப்யூலர்.. அப்படித்தானே ஜயக்குமார்?'


'பாவம், எல்லாத்துக்கும் காரணமாக இருந்திட்டு இவன்  இப்படிக் கிடக்கிறானே டொக்டர்?'


'டோண்ட்  வொறி! ஹீ வில் பீ ஓல்ரைட் ஜயக்கு..மா...! ஓ காட்! அங்க பாருங்க! அவனோட கண் திறந்திருக்கு! கம்!கம்!'


'யென்ஷாப்.. மை போய்! யென்ஷாப்! ஜயக்குமார் ப்ளீஸ் கோல் ஹிம்!'


'இன்சாப்! இங்க பாரு இன்சாப்!' என்று கூப்பிடும் ஜெயக்குமார் ஸேர் இப்போது எனக்குத் தலைகீழாக தெரிந்தார். கை கால்ககளை மெல்ல அசைக்க முடிந்தது. முகம் முழுக்க மூடியிருந்த கருவிகளின் வயர்களைத் தாண்டி லேசாகப் புன்னகைத்தேன். எனது கண்களிலிருந்து நீர் வழிந்தது.


'டேய் என்ட கெட்டிக்காரப்பயலே! உண்மையில பெரிய ஆள்தாண்டா நீ!' என்று என்னைக் கட்டிக் கொண்டு கூவினார், எனக்கு மிகவும் பிடித்தமான அந்த அருமையான விஞ்ஞான ஆசிரியர். அவர் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் முத்துக்கள் அறையின் புளொரஸெண்ட் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது எனக்கு.


'தேங்க்யூ ஸேர்!' மீண்டும் புன்னகைத்தேன், நான். 



-மூதூர் மொகமட் ராபி

Saturday, October 27, 2012

Happy
Eid ul Alha Festival
to all
Viewers of Sirahukal !

Friday, October 26, 2012

பரிசுபெற்ற இலக்கியத் தம்பதிகள்

 


A.J.M. Saly & Mubeena M. Saly
திருகோணமலை பிரதேச சாகித்திய விழாவும் மாவட்ட இலக்கிய விழாவும் தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி கேட்போர் கூடத்திலே கடந்த 25.10.2012 அன்று மாலை வெகு கோலாகலமாக நடைபெற்றது.
 
இதிலே தி/ஜமாலியா முஸ்லீம் மகாவித்தியால ஆசிரியர் திரு. ஏ.ஜே. முகம்மது சாலி மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி முபீனா முகம்மது சாலி தம்பதிகள் கவிதைப்போட்டி மற்றும் சிறுகதைப்போட்டி ஆகியவற்றிலே பரிசில்களை வென்றிருக்கின்றனர்.
 
திரு. ஏ.ஜே. முகம்மது சாலி கவிதைப்போட்டியிலே பிரதேச மட்டத்தில் முதலாம் இடத்தையும் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார். திருமதி முபீனா முகம்மது சாலி சிறுகதைப்போட்டியிலே பிரதேச மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் வெற்றி பெற்றார்.
 
அதேசமயம் இவர்கள் இருவரும் 2011 ம் ஆண்டுக்குரிய போட்டிகளிலும் பங்கேற்று பரிசில்களை வென்றெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இத்தம்பதிகளின் இலக்கிய முயற்சிகள் மீதான  ஆர்வமும் திறமையும் பாராட்டுக்குரியது.
 
Jesslya Jessly

Monday, October 22, 2012

திருகோணமலை பிரதேச சாகித்திய விழா - 2012 சிறுகதைப்போட்டியில் 'மூதூர்' மொகமட் ராபிக்கு முதலிடம்!







2012ம் வருடத்திற்கான திருகோணமலை பிரதேச சாகித்திய விழாவை முன்னிட்டு திருகோணமலை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் எழுத்தாளரான மூதூர் மொகமட் ராபி முதலாம் இடத்தை வெற்றி பெற்றுள்ளார்.
 
 
அத்துடன் கவிதைப்போட்டியில் அவர் எழுதிய புதுக்கவிதை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
 
இவருக்கான பரிசுகள் எதிர்வரும் 2012.10.25 அன்று பிப 2.00 மணியளவில்
தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள பிரதேச சாகித்திய விழா 2012 விழாவில் வைத்து வழங்கப்படவுள்ளது.
 
 
இவர் பற்றிய ஒரு சிறுகுறிப்பு:
 
 
 
 
 
 
ண்பர் மொகமட் ராபி அண்மைக்காலத்தில் நம்பிக்கை தரும் ஒரு படைப்பாளியாக தன்னை இனங்காண்பித்துவரும் எழுத்தாளர். ஆனாலும் தன்னை தனது எழுத்துகளுக்கூடாக வெளிப்படுத்தினால் மட்டும் போதும் எனக் கருதுபவர்.

இதனால் இவர் பற்றிய சரியான அறிமுகம் இன்று வரையிலே இல்லாதிருக்கின்றது. இதுவரை ஏறத்தாழ இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஐம்பதுக்கும் மேலான புதுக்கவிதைகளையும் எழுதியுள்ள இவரதுபடைப்புகள் தினக்குரல், வீரகேசரி மீள்பார்வை, மித்திரன் போன்ற செய்தித்தாள்களிலும் மல்லிகை, ஜீவநதி போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. தவிர, "சிறகுகள்", கிண்ணியா நெற், கல்குடா முஸ்லீம் நெற் போன்ற இணைய வெளியீடுகளிலும் இவரது ஆக்கங்கள்தொடர்ந்து பிரசுரமாகிக் கொண்டுமிருக்கின்றன.

இவர் தன்னை 'மூதூர் மொகமட் ராபி' என அழைத்துக் கொண்டாலும் இவரது படைப்புக்கள் இவரது ஊரோடு மட்டும் மட்டுப்படாது பரந்த தளத்தைக் கொண்டவையாகவுள்ளன.

இவர் ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வுபெற்ற அதிபர் திரு ஏ.எம். புஹாரி (1992-1997 காலப்பகுதியில் T/Mutur Central College ல் சிறப்பான தனித்துவம் மிக்க அதிபராகக் கடமையாற்றியவர் ) -திருமதி அம்ரா புஹாரி தம்பதிகளின் மகன் ஆவார்.

இவரது தாயார் திருமதி. அம்ரா புஹாரி மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவரும் 1992 -2004 காலப்பகுதியிலே T/An-Nahar Girls' MV யில் வெற்றிகரமான ஓர் அதிபராக இருந்தவர் ஆவார்.

கடந்த 2011ம் வருடம் திருகோணமலை வலயக்கல்வி அலுவலகம், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடாத்திய சிறுகதைப்போட்டியிலும் 'மூதூர் மொகமட் ராபி' யின் சிறுகதை முதலிடத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த படைப்பு முயற்சிகளுக்காக பெற்றுவரும் வெற்றிகள் குறித்து இவரை பாராட்டலாம்.
 
- Jesslya Jessly

Monday, October 15, 2012

சிறுகதை: மூதூர் மொகமட்ராபி


 
 
 
 
நாளைக்கும் நிலவு வரும்!
 
 
 
 

'நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்'

காதில் வந்து விழுந்த அந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் திவ்வியா. அழுதது சிவந்துபோன அவளது விழிகளில் தேங்கியிருந்த கண்ணீர்க்குளம் சட்டென உடைந்து கன்னங்களிலே வழிந்தது.

'என்ன திவ்யா, திரும்பவும் அழுகையா?' கரையிலே மோதிச் சிதறும் நுரைப்பூக்களை நீண்டநேரமாய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் திவ்வியாவின் விசும்பலைக்கேட்டுத் திரும்பினான்.

அன்று ஒரு கிறிஸ்துமஸ் தினம் என்பதால் சற்று முன்னர் வரை திருகோணமலை கடற்கரை சனக்கூட்டத்தால் நிறைந்திருந்தது. ஆனால் இப்போது மழைக்கான அறிகுறிகள் இருந்ததால் கூட்டம் மெல்லக் கரையத் தொடங்கியிருந்தது. ஆங்காங்கே ஓரிரு ஜோடிகளைத்தவிர வேறு யாருமே தென்படவில்லை. வெகுதூரத்தில் தொடுவானத்தின் மேலாக மழைமேக இராட்சதர்கள் எழுந்து வந்து கொண்டிருந்தனர்.

'சுரேஸ் அத்தான்.. அந்தா போகிற பாட்டு கேட்குதா உங்களுக்கு? என்று அந்தக் கடற்கரையின் பக்கவாட்டில் செல்லும் தெருவோர விளக்குக் கம்பத்திலே கட்டியிருந்த நகரசபை ஒலிபெருக்கிகளைக் காட்டினாள் திவ்வியா.

'நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்..'

உப்புக் காற்றிலே மிதந்து வந்து மனதைப் பிசையும் அந்த இனிய கீதம். கனமாக இருந்த சுரேஷின் மனதிலே அந்தப் பாடலின் சாரம் முதலில் உறைக்கவில்லை. ஆனால் அடுத்த கணத்தின் இறுதியிலே ஒரு பலமான சம்மட்டியடியாய் இறங்கியது அந்தப்பாடல் வரிகளின் அர்த்தம்.

'நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்.. நாளைக்கும் பூ மலரும் நாமிருக்க மாட்டோம்..'

'நீங்க ஊருக்கு வரமுதல்ல எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன் இந்தப் பாட்டை..ஆனா இப்ப கேட்டால் அது..' அவளால் மேலே தொடர்ந்து பேச முடியவில்லை. முழங்கால்களுக்கிடையே தலையைப் புதைத்து விசும்பியழத்தொடங்கினாள்  திவ்வியா.

ஓங்கியடிக்கும் அலைகள் தரும் சிறு இடைவெளிகளில் ஒன்றையொன்று ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன சின்னஞ்சிறு மணல் நண்டுகள்.
திவ்வியாவின் அழுகையால் சுரேஷுக்கும் அழுகை வரும்போலிருந்தது. அதை தவிர்ப்பதற்காக பார்வையை மீண்டும் கரையோர அலைகளிடம் திருப்பினான்.

அவர்கள் அழுது முடிப்பதற்கிடையில் நாம் அவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்து கொண்டு வந்துவிடலாம்.

திவ்வியா சுரேஷின்  மாமி கனகாவின் இளைய மகள். சுரேஷின் தந்தை திருகோணமலையிலுள்ள ஒரு தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்தவர். நீண்டகால நோயாளியான சுரேஷின் தாய் திடீரென்று ஒருநாள் கண்ணை மூடிவிட அதற்கென்றே காத்திருந்தவர்போல அவர் வேறு திருமணம் முடித்துச் சென்றுவிட பதினொரு வயதுச் சிறுவனான சுரேஷ் ஏறக்குறைய அநாதையாகிப்போனான். வேறுவழியின்றி தந்தையின் ஒரே சகோதரியான திவ்வியாவின் தாய் கனகா மாமியிடம் அடைக்கலம் புகுந்தான். இளம் வயதிலே கணவனைப் பறிகொடுத்திருந்த திவ்வியாவின் தாய்க்கு தனது இரு பெண்குழந்தைகளுக்கும் ஆண்துணையாக சுரேஷ் வந்து சேர்ந்தது பெரும் ஆறதலாக இருந்தது.

சுரேஷ் வீட்டுக்கு வந்துசேர்ந்த மூன்றாவது வருடத்திலே பெரியவள் நித்தியாவும் இளையவள் திவ்வியாவும் அடுத்தடுத்து வயதுக்கு வந்து விட்டார்கள். அதுவரையிலே அக்கம்பக்கத்திலிருந்தவர்களுக்கு சிறுவனாகத் தோற்றமளித்த சுரேஷ் திடீரென ஒரு வாட்டசாட்டமான வாலிபனாய்த் தோன்ற ஆரம்பித்து விட்டான்.

கண்ணுக்கு அழகான இரு வயதுக்குவந்த பெண் பிள்ளைகளுடன் ஒரு வாலிபன் ஒன்றாக ஒரேவீட்டில் இருப்பதைப்பற்றி அயலவர்கள் சாடைமாடையாய் கதைபேச ஆரம்பித்தார்கள். இதனால் இயல்பாய் இருந்த அந்த வீடு தடுமாறிப்போனது. சிறுவயது முதல் நித்தியாவுடனும் திவ்வியாவுடனும் ஒரேவீட்டில் ஓடிப்பிடித்து விளையாடிப் பழகியவனான சுரேஷ் திடீரென கனகா மாமி  மற்றும் அவர்களது உறவினர்களால் தான் புதுவிதமாகக் நடாத்தப்படுவதை உணர்ந்ததும் குழப்பமடைந்தான்.

'ஏன் மாமி, இந்த அக்கம் பக்கத்தாக்களா உங்கள இவ்வளவு நாளும் பாத்தவங்க...? இவங்கட கதையக்கேட்டா நீங்க.. சே! சரி யார் கதச்சதென்டு சொல்லுங்க.. மட்கோ ஸ்கூல்ல படிப்பிக்கிற அந்தக் கிழவி டீச்சர்தானே..? அவவப் பத்தித் தெரியாததா உங்களுக்கு?  ஒரு ஸ்கூலயே கோள் சொல்லிக் குழப்பினவவாம் அவ. எங்கட வெல்டிங் கடை ரதியக்கா சொன்னவ தெரியாதா...? அவவாத்தான் இருக்கும்.. எனக்குத் தெரியும்' என்று ஆத்திரத்திலும் ஆற்றாமையாலும் கொதித்தான் சுரேஷ்.

கனகா மாமி கண்ணீர் வழிய தலையை இரு கைகளாலும் பிடித்தபடி அமர்ந்து இருந்தாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

'ஏனம்மா, சுரேஷ் அத்தான் இன்றைக்கு நேற்றா எங்களோட இருக்கிறார்.. இவ்வளவு காலமும் பாத்திட்டு இருந்தவங்கள்ற கதையக்கேட்டு நீங்களும் தலையைக் குழப்பிட்டு இருக்கிறிங்களேம்மா..' என்று மூத்தவள் நித்தியா தன் பங்குக்கு ஆத்திரப்பட்டாள்.

'இருங்கம்மா, பென்சனுக்குப் போகாமல் இழுத்திழுத்துக் கிடக்கிற அந்தக் கிழட்டு டீச்சரை ஒரு பிடிபிடிச்சிட்டு வாறேன்'

'யேய் சும்மா இருடி.. அவவுக்குச் சும்மாவே வாய் சரியில்ல.. நீயும் அங்க போய் சத்தம் போட்டால் இதுதான் சாட்டென்டு இன்னும் அபாண்டம் சொல்லத் தொடங்கிடுவா..' கொதித்துக் கிளம்பிய திவ்வியாவை நித்தியாதான் குறுக்கிட்டுத் தடுத்தாள்.

இந்தச் சம்பவம் நடந்தது முதல் அந்த வீட்டில் ஒருவிதமான சங்கடம் நிலவியது. முன்பெல்லாம் வேலைக்குச்சென்றால் மாலையில் நேரத்திற்கு உற்சாகமாகத் திரும்பி வந்துவிடும் சுரேஷ் இப்போதெல்லாம் இருட்டிய பின்பு வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வரத் தொடங்கினான். அப்படியே நேரத்துக்கு வந்தாலும் யாரோடும் சரியாகப் பேசுவதோ சாப்பிடுவதோ கிடையாது. எப்போதும் எதையோ பறிகொடுத்தவன் போல யோசனையிலாழ்ந்திருக்கத் தொடங்கினான். அவனது மௌனத்தால் சகோதரிகள் இருவரும் நடைப்பிணமானார்கள். அந்தச் சந்தோச இல்லமே களையிழந்து போனது.

ஒருநாள் வழமைபோல வேலைக்குச் சென்ற சுரேஷ் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. கலவரமடைந்த தாயும் சகோதரிகளும் அவன் வேலை செய்யும் வெல்டிங் பட்டறைக்குத் தேடிச் சென்றார்கள். அங்கு இரவு வேலை நடந்து கொண்டிருந்தபோதிலும் சுரேஷ் மட்டும் இருக்கவில்லை.

சுரேஷ் முதல்நாள் வேலையைவிட்டு விலகிவிட்டதாகவும் அவன் இத்தனை காலமும் வேலைசெய்த காலத்திலே சம்பளம் போக தன்னிடம் சேமித்து வைத்திருந்த பணத்தை வீட்டிலுள்ளவர்களுக்குத் தருமாறு கூறியதாகவும் வெல்டிங் பட்டறை உரிமையாளர் சொன்னார். அவர் கொடுத்த பெரும் தொகைப்பணத்தை வாங்கிக் கொண்டு அழுதபடியே மூவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். அன்றிரவு யாருமே உறங்கவில்லை.

சுரேஷ் எங்கு போனான் என்பது யாருக்குமே தெரியவில்லை.

அவன் திரும்பி வருவானென்று காத்திருந்து காத்திருந்து நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களானது. அவன் வருவான் என்ற நம்பிக்கை அவர்கள் மூவரின் வாழ்க்கைப் போராட்டப் பாதையின் நெரிசல்களுக்குள் சிக்கி மெல்லத் மெல்லத் தேய்ந்து போனது. எல்லோருமே சுரேஷை ஏறத்தாழ மறந்து போயிருந்தார்கள்.

நித்தியாவுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அத்தோடு தனது குடும்ப நிலைமையையும் கருதி படிப்பை இடையிலே நிறுத்திவிட்டு அருகிலிருந்த தையல் நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்து உழைத்துச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் இளையவள் திவ்வியாவோ நித்தியாவைப் போலல்லாமல் படிப்பில் படுகெட்டிக்காரியாக இருந்தாள். உயிரியல் விஞ்ஞானப் பிரிவிலே படித்து உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தாள். அவளது பாடசாலையிலே அந்த வருடம் மருத்துவத்துறைக்கு  எதிர்பார்க்கப்பட்ட மாணவிகளிலே திவ்வியாவும் ஒருத்தி. கணவனையும் இழந்து உதவியின்றித் தவித்த குடும்பத்திலே திவ்வியாவின் எதிர்காலத்தை நினைத்துத்தான் கனகா மாமி ஓரளவேனும் நம்பிக்கையோடு இருந்தாள்.

ஒருநாள் அதிகாலை அவர்களது வீட்டு வாசலிலே வந்து நின்ற ஒரு விமானநிலைய வாடகை வேனிலிருந்து இறங்கினான் சற்று உயரமான சிவந்த நிறமுடைய ஓர் அழகான இளைஞன். நீலநிற டெனிம் ஜீன்ஸ் டீசேர்ட் விலையுயர்ந்த கூலிங் க்ளாஸ் அணிந்து வீட்டுக்குள் வந்தவன் சுரேஷ்தான் என்பதை அடையாளங் காண்பதற்கு எல்லோருக்கும் வெகுநேரமானது.

கண்முன்னே நடப்பதெல்லாம் ஒரு கனவுபோல இருந்ததால் அவற்றை நிஜம் என்று புரிவதற்கு கனகா மாமி, நித்தியா மற்றும் திவ்வியா ஆகிய மூவருக்கும் சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

'தம்பீ சுரேஷ்! எங்களையெல்லாம் விட்டுட்டு...' என்று மாமி அழத்தொடங்க பிறகு நடந்ததையெல்லாம் சொல்லவும் வேண்டுமா..? பிரிந்தவர்கள் கூடியதில் அடக்கி வைத்திருந்த ஆற்றாமை உணர்வெல்லாம் அழுகையாய் வெடிக்க.. வார்த்தைகளை வென்ற கண்ணீர் மழை ஆறாய்ப் பெருக்கெடுத்தோட நீண்ட காலத்திற்குப் பின்னர் அந்த வீட்டில் ஆனந்த வெள்ளம் கரைபுரண்டோடியது.
"T.M. Suresh of  Trincomalee, SriLanka From Dubai"    என்ற கறுப்புநிற ஸ்டிக்கர்கள் ஒட்டிய பிரமாண்டமான பல சூட்கேஸ்களும் தங்களைக் கவனமாகக் கையாளுமாறு ஆங்கிலத்தில் கெஞ்சும் அட்டைப்பெட்டிகளிலே எல் ஈ டீ டீவி, ப்ரிஜ், லாப்டொப் போன்ற புத்தம் புதிய ஆடம்பரப் பொருட்களும் வரிசையாக வேனிலிருந்து இறக்கப்படுவதை அந்தத் தெருவே லேசான பொறாமையுடன் வேடிக்கை பார்த்தது.

000

சுரேஷ் துபாயிலிருந்து வந்து ஒரு மாதம் கழிந்து விட்டிருந்தது.

அந்த நடுத்தர வர்க்கத்து வீடு வெளிநாட்டு ஆடம்பரப் பொருட்களால் நிரம்பித் திக்கு முக்காடியது. அதுவரையில் வெகுநிதானமாய் ஊர்ந்து கொண்டிருந்த எளிமையான அந்தக் குடும்பத்தின் வாழ்க்கைமுறை ஐந்தாவது கியருக்கு மாற்றிய பல்ஸர் பைக்காய் மாறிப் பறக்கவாரம்பித்தது. தினமும் சினிமா, பீச் விசிட், ஷொப்பிங், பேஸ் வாஷ், மேக் அப், உடற்பயிற்சி சாதனங்கள், உல்லாசப் பயணம், செல்போன் உளறல்கள், பார்ட்டிகள் என்று அவர்கள் வாழ்க்கையே மாறிப்போனது.

முன்பெல்லாம் திருப்பள்ளியெழுச்சியுடன் கண்விழிக்கும் நித்தியாவின் காலைப்பொழுதுகள் இப்போதெல்லாம் ஏ. ஆர். ரஹ்மானின் ஸ்டீரியோ அலறல்களுடன் விடிந்தன. அவள் அறையில் கேபிள் டீவி ஏறத்தாழ இருபத்திநான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்க இன்னும் தைத்து முடிக்காத ஆடைகள் அவளது அறையிலே மலைபோலக் குவிந்து கிடந்தன.

தினமும் தமிழ் சினிமா பார்க்கும் நித்தியாவை வில்லன்கள் கனவிலே கடத்திச் செல்ல பைக்கிலே துரத்திவந்து காப்பாற்றிக் கொண்டிருந்தான் சுரேஷ். ஏசீஏ டியூட்டரியில் திவ்வியாவுடன் படித்து ஆறுமாதமாய் அவள் பின்னால் அலைந்து கொண்டிருந்த திலீப்புக்கு, 'சுரேஷ் அத்தான் வந்து விட்டதால் இனியும் என் பின்னால் அலையாதே' என்று ஒரு எஸ்எம்எஸ் பண்ணிவிட்டு போன் ஸிம்மை கழற்றி எரியும் அடுப்பிலே போட்டுவிட்டாள்.

நித்தியாவையும் திவ்வியாவையும் குதூகலிக்க வைப்பதே வாழ்வின் ஒரே இலட்சியமாய்க் கருதி பணத்தைத் தண்ணீராக இறைத்தான் சுரேஷ்.  அவர்களது சந்தோசத்திலே அரேபியப் பாலைவனத்தில் கொளுத்தும் வெய்யிலிலே வருடக்கணக்காகச் சிந்திய வியர்வைத்துளிகளையெல்லாம் மறந்து போனான்.

அவன் வீட்டைவிட்டு ஓடிப்போகக் காரணமாக இருந்த அயலவர்களின் வாய்களெல்லாம் சுரேஷ் தந்த வெளிநாட்டுச்சுயிங்கம், சொக்லேட், சென்ட் குப்பிகள் மற்றும் டீ சேர்ட்டுகளின் உபயத்தில் திறக்கவே மறந்துபோயிருந்தன. ஆனாலும் ஊரவர்களின் வாயை நிரந்தரமாகவே அடைத்துவிட வேண்டுமென்று கனகா மாமி விரும்பினாள்.

நித்தியாவுக்கு  சுரேஷிலே விருப்பமிருப்பதை மட்டுமல்ல இளையவள் திவ்வியாவின் பருவக்கோளாறையும் கனகா மாமி அறிந்திருந்ததால் சுரேஷ் லீவு முடிந்து மீண்டும் துபாய் செல்வதற்கிடையிலே மூத்தவள் நித்தியாவை அவன் கையிலே பிடித்துக் கொடுத்து விடுவதற்குத் துடித்தாள். சுரேஷ் தனது ஒரே அண்ணனின் மகன் என்ற உரிமையில் மிகுந்த நம்பிக்கையோடு அவனிடம் அதைப்பற்றிக் கேட்பதற்குக் காத்திருந்தாள் அந்தத் தாய்.

திவ்வியா பாடசாலைக் கல்விச்சுற்றுலா சென்றிருந்த டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் ஒருநாள் சுரேஷிடம் மனம்விட்டுப்பேசி திருமணத்திற்கான சம்மதம் பெறப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நாளிலே பதிவுத் திருமணத்தை முடித்துவிட்டு சுரேஷ் துபாய் செல்வதெனவும் பின்பு நித்தியாவை துபாய்க்கு அனுப்பிவைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டு அதற்கான நாளும் உறவினர்களால் குறிக்கப்பட்டது.
அந்த நாளும் வர சுரேஷின் வெளிநாட்டுப் பயணத்தை உத்தேசித்து நெருங்கிய உறவுகளின் முன்னிலையில் சுரேஷ் - நித்தியாவின் பதிவுத் திருமணம் வெகுநிறப்பாக நடைபெற்றது. திருமணத்தையடுத்து அன்றிரவு நிகழ்ந்த கலகலப்பான விருந்திலே சுரேஷ் மட்டும் டல்லாக இருந்ததற்கு காரணமிருந்தது.

சுரேஷை ஒருதலையாய் காதலித்திருந்த திவ்யா இரகசியமாக நஞ்சுகுடித்து உயிரைவிட எடுத்துக் கொண்ட முயற்சிதான் அந்தக் காரணம் என்பது வேறு யாருமறியாதது. திவ்யாவின் அறைக்குள்ளே புகுந்து அவள் கையிலிருந்த நஞ்சுக்குப்பியைப் பறித்தெடுப்பதற்கும் பிறர் அறியாமல் அவளை சமாதானப்படுத்தித் தேற்றுவதற்கும் சுரேஷ் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. திருமண உடையை மாற்றுவதற்காக வீட்டின் பின்புறம் வந்தவன் தற்செயலாக திவ்வியாவின் அறைப்பக்கம் செல்ல நேர்ந்ததால்தான் அவளைச் சரியான சமயத்திலே அவனால் காப்பாற்றிவிடவும் நடந்ததை வெளியிலே தெரியாதபடி மறைக்கவும் முடிந்தது. இல்லையென்றால் என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயந்தான் சுரேஷ்.

திவ்வியாவின் தற்கொலைமுயற்சி ஒருதலைக்காதல் ஆகியவை தந்த அதிர்ச்சியினால் புதிதாகத் திருமணமானதிலுள்ள நியாயமான மகிழ்ச்சியைக்கூட அவனால் அனுபவிக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் அறியாமல் தன்னை ஆவலோடு நாடி வந்த நித்தியாவின் நெருக்கத்தைக்கூட சாக்குப்போக்குகள் கூறி தவிர்த்து வந்தான் அவன். சுரேஷின் உதாசீனமும் காரணமில்லாமல் தன்னோடு முறைத்துக்கொண்டிருக்கும் தன் தங்கையின் புதிய போக்கும் கண்டு புரியாமல் திகைத்தாள் நித்தியா. சுரேஷின் வருகைக்குப் பின்பு சகோதரிகள் இருவரது உறவும் முதன்முதலாக கசந்துபோனது.

இதற்கிடையிலே சுரேஷ் தனது பயணத்துக்குரிய ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஒருதடவை கொழும்புக்குச் செல்லவேண்டியிருந்தது. அவன் சென்ற பின்பு ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாதிருந்த நித்தியாவும் திவ்வியாவும் தாயின் தலையீடு மற்றும் பரிசுப்பொருட்களைப் பிரித்துப் பார்க்கும் ஆவல் காரணமாக மீண்டும் உறவானார்கள்.

'ஏன்க்கா உன்ட ரெஜிஸ்டருக்கே இவ்வளவு  ப்ரஸண்ட்ஸ் வந்திருக்கே கல்யாணத்தையும் சேர்த்து வச்சிருந்தா இந்தே வீடே காணாமப்போயிருக்கும் போல..'

'ஆங் அதெல்லாம் நான் இங்க எல்லோரோடயும் பழகிற மாதிரி.. அதுதான் இவ்வளவு பேர் ரெஜிஸ்டருக்கு வந்தவங்க உனக்கெல்லாம் வச்சா உன்ட ப்ரெண்ட்ஸ் மட்டும்தான் வருவாங்க..அதுவும் சந்தேகம்தான்'

'அக்கா, என்னக்கா இது.. இந்த 2004 ம் வருசத்துக்குரிய பெஸ்ட் ஜோக்கை  டிசம்பர் இரண்டாவது வீக்ல அடிச்சிட்டியே? ஆனா இன்னும் ஒரு கிழமை பொறுத்து 31ம் திகதி இந்த ஜோக்கை அடிச்சிருந்தியென்டால் உனக்கு விருதே தருவாங்களே அக்கா' என்று கலகலவென்று சிரித்தாள் திவ்வியா.

நித்தியாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. 'யேய், அப்பிடி என்னடி பிழையாச் சொல்லிட்டன்.. இப்பிடிச் சிரிக்கிறா நீ?'

'பின்னே என்னக்கா..? எத்தனையோ வருசத்துக்குப் பிறகு திரும்பி வந்திருக்கிற சுரேஷ் அத்தான் எப்பிடியிருக்கிறாரு என்று பார்க்கத்தான் அரைவாசிச் சனமே வந்தது. உனக்காக ஒண்ணும் வரல்ல. பாவம், சுரேஷ் அத்தான் வாழ்க்கை முழுக்க உன்னையே பாத்திட்டு இருக்க வேண்டிய தலைவிதி அவருக்கு..' என்று அபிநயம் பிடித்துக் காட்டினாள் திவ்வியா.

'அம்மா இஞ்சப் பாரம்மா இந்தச் சனியன்ட கதைய!'

'அவ மட்டும் எனக்கு ஒருத்தரும் வரமாட்டாங்களாம் என்று சொல்லலாமா?'

'ஏய் என்னடி நீங்க ரெண்டு பேரும்.. சின்னப்பிள்ளைகள் மாதிரி..? இப்பத்தானே ஒண்டா இருந்து நல்ல வடிவா பேசிட்டிருந்தீங்க..?' சமையலறையிலிருந்து அதட்டல் போட்டாள் கனகா மாமி.

'இருடி.. நீயும் ஒருநாள் எவனையாவது கட்டிட்டு வருவாய்தானே.. அப்ப நானும் பார்க்கத்தான் போறேன்..'

'அப்பிடியா..? இதை நீ முதல்லயயே சொல்லியிருந்தா சுரேஷ் அத்தான் என்னையும் சேர்த்து ரெஜிஸ்டர் செய்திருப்பாரே.. இன்னும் நிறைய ப்ரஸெண்ட் வந்திருக்குமே அக்கா?'

'அம்.......மா!'

'அடியேய்.. திவ்வியா கதைய விட்டுப்போட்டு இஞ்சாலை வாடி நீ! பிள்ளை நித்தியா, நீயும் இந்த விசரிட கதையை கேட்டுட்டு நிக்கிறீயே.. இவளுக்கு உன்னக் குழப்புறதே வேலையாப் போயிட்டுது. நீ வா வந்து வளவையெல்லாம் வடிவாக் கூட்டு பாப்பம்!' என்று கனகா மாமி அவர்களின் பேச்சை நிறுத்தியபோது வாசலிலே ஒரு முச்சக்கரவண்டி வந்து நின்றது.
சுரேஷ்தான் கொழும்பிலிருந்து திரும்பியிருந்தான். புதுமாப்பிள்ளையாய் உற்சாகத்துடன் போனவன் முகமெல்லாம் வாடிப்போய் கசங்கிப்போன மாலையாய் வந்திறங்கினான்.

'தம்பி, ஏதும் சுகமில்லையா? இப்பிடிக் காஞ்சுபோயிட்டீங்க' என்று பதறிய மாமியையயும் திகைத்துப் போய்நின்ற நித்தியாவையும் பார்த்து ஒப்புக்குச் சிரித்துவிட்டு நேரே படுக்கையறைக்குள்ளே போய் நுழையப்போனவன் திவ்வியாவிடம் மட்டும், 'ஒண்டுமில்ல களைப்பாயிருக்கு. தூங்கியெழும்பினாச் சரியாயிடும்' என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் கதவைச்சாத்திக்கொண்டு அவன் கட்டிலில் தொப்பென விழும் ஓசை கேட்டது..

அவனை எழுப்பி மேலும் விபரம் கேட்க முடியாமல் திகைத்து நின்றார்கள் மூவரும். சிறிது நேரம் குழப்பமடைந்திருந்த மாமி சட்டெனத் தெளிவாகிய முகத்துடன் 'நான் நினைச்சது சரி, நல்லாருந்த பிள்ளைக்கு கண் வச்சிட்டாங்களடி.. விடக்கூடாது வா! நித்தியா ஒருக்கா கோயிலுக்குப் போய் மாசிலாமணி ஐயரைப் பாத்திட்டு வருவம்..' என்று எழுந்தாள்.

'ஐயோ அம்மா, திரும்பவும் தொடங்கிட்டியா..? அத்தான் எழும்பின பிறகு என்ன ஏதுண்டு கேட்டுட்டு உன்ட மாய மந்திரத்தை தொடங்கலாமே. சரி, இனி இந்த வீட்டில இருந்த மாதிரித்தான்' என்று அலுத்துக்கொண்ட திவ்வியாவை முறைத்தாள் மாமி.

'அடியேய், டீவி பாத்துக் கொண்டிராமல் அத்தான் எழும்பின உடனே டீ போட்டுக்குடு..! இந்தா நாங்க இப்ப வந்திருவம் சரியா?' என்று அதட்டிவிட்டு இருவரும் வீதியில் இறங்கினார்கள்.

அவர்கள் சென்றதும் திவ்வியா தீவிர சிந்தனையிலாழ்ந்தாள்.

திடீரென ஏதோ தோன்றியவளாக எழுந்து சுரேஷின் அறையை ஒசைப்படாமல் திறந்து உள்ளே சென்றாள். அவன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க மெல்ல பூனைபோல நடந்து சற்று முன்னர் கதிரையிலே அவன் வீசியெறிந்த ட்ரவலிங் பேக்கைத்திறந்து ஆராயத் தொடங்கினாள். சுரேஷின் பாஸ்போட், வீசா மற்றும் ஆவணங்களையெல்லாம் தாண்டி அவனது கறுப்புநிற டயறியினுள்ளிருந்த ஒரு பழுப்புநிறக் கடிதவுறை கண்ணில் பட்டது. அதை அவசர அவசரமாகப் பிரித்துப் பார்த்தாள்.

அது கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றின் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்த மருத்துவச் சோதனை அறிக்கை. அதைப் பரபரப்பாகப் பிரித்துப் படித்தாள் திவ்வியா. அதனைப் புரட்டிப் புரட்டிப்படித்தாள்.அவளது விழிகள் நம்பமுடியாமல் பனித்தன. தலைசுற்றிக் கால்கள் பலமிழக்க, 'ஐயோ அம்மா!' அலறியபடி மயங்கிச் சரிந்தாள்.
000

கரையை வேகமாக ஒரு தடவை அறைந்து விட்டுச்சென்றது ஒரு பேரலை. ஒரு தடவை மின்னிவிட்டுக் கம்மிய வானம் இருண்டுபோய் இதோ மழை வரப்போகிறது என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது.

'திவ்வியா வா போவோம். மாமி உன்னைத் தேடப் போகிறா..!'

'அப்ப உங்கட முடிவுல ஒரு மாற்றமும் இல்லயா அத்தான்?'

'இப்படி ஆனபிறகு எப்படி திவ்வி..? கார் எக்ஸிடெண்ட்ல எனக்கு துபாய்ல நோயுள்ள ரத்தம் பாய்ச்சினதாலதான் இப்படியானதுண்டு சொன்னா ஊர்ல யாராவது நம்புவாங்களா..?'

'நான் நம்புறனே அத்தான்..'

'ஆனா மத்தவங்க..? இந்த வியாதி வாறதுக்கு பாதுகாப்பில்லாத ரத்தம் ஏத்திறது.. ஷேவிங் என்று எத்தனையோ வேற வழிகளும் இருக்குது.  இருந்தாலும் நம்ம சனங்க இது ஒருவனோட கெட்ட சகவாசத்தால மட்டுமே வாறது என்றுதான் நம்புறாங்க தெரியுமா?'

'ஓம் அத்தான் எனக்கும் தெரியும்.  அவங்க நம்பாட்டி என்ன..? அவங்களுக்கு இது தெரியவே வேணாம். இதுக்காக நீங்க சாகிறதுதான் ஒரே வழியா?'

'இல்ல.. சாகிறதுக்கு எனக்கு மட்டும் ஆசையா என்ன? சந்தேகத்திற்கு இடமில்லாம வருத்தமிருக்கிறது நிச்சமாயிட்டுது. மருந்தே இல்லாத சாவு நிச்சயமான வியாதி இது. இனியும் நான் உயிரோட இருந்தா நித்தியாவைக் கட்டித்தானே ஆகணும்.. மாட்டேன் என்று சொன்னால் அவளால தாங்கவே முடியாது..'

'நீங்க செத்திட்டா மட்டும் அக்கா தாங்குவாளா அத்தான்..?'

'ரெஜிஸ்டர் செய்துவைத்த ஒரு பொம்பிளைப் பிள்ளைய உயிரோட இருந்திட்டு கல்யாணங் கட்ட மாட்டேன் என்று சொன்னா மட்டும் தாங்குவாளா சொல்லு?'
'........'

'தவிர மாட்டேன் என்று சொன்னால் ஊருலகம் நம்பக்கூடிய மாதிரியான ஏதாவது காரணத்தையும் நான் சொல்ல வேணும்.. அப்பிடி இல்லையென்றால் பழையபடி எங்காயாவது உங்களையெல்லாம் விட்டுத் தெலைந்து போயிடணும். அப்படி எங்கேயோ கண்காணாத இடத்தில நான் உதவிக்குக் கூட ஆளில்லாம நோய்முற்றிக் கஷ்டப்பட்டுத்தானே சாகணும் திவ்வியா.. அப்பிடி அன்பில்லாத ஒரு இடத்தில நான்.. அழுந்திச் சாவுறதைவிட இப்பவே செத்துடறது .. நல்லதுதானே?'

திவ்வியாவினால் பதில் எதுவுமே கூறமுடியவில்லை.

'திவ்வியா, எல்லா உண்மையையும் தெரிஞ்ச ஒரே ஆள் நீ மட்டும்தான். நான் போக வேண்டுமென்பது கடவுள் செயல். சாகும்போதாவது எனக்கு கெட்ட பெயர் எதுவும் வராமப் நீ பார்த்துக் கொள். இதுதான் எனக்கு நீ செய்ய வேண்டிய உதவி'

' தாலி கட்டின பொம்பிளைய சத்தமில்லாமல் கொன்று கோயில் வளவுக்குள்ளேயே புதைச்ச புண்ணியவான்களெல்லாம் இருக்கிற இந்த ஊர்ல மத்தவங்களுக்குக் கஷ்டம் வரக்கூடாது என்று நினைக்கின்ற உங்களுக்குப்போய்  இப்படி ஒரு கஷ்டத்தை தந்த கடவுளையா சொல்றீங்க..?'

சுரேஷ் சிறிது நேரம் தொடுவானத்தை வெறித்தபடி மௌனமாக இருந்தான்.

'அத்தான் உங்க நியாயம் எனக்குப் புரியுது. இதைவிட வேறு வழிசொல்றதுக்கும் எனக்குத் தைரியமில்ல. ஆனா ஒரே ஒரு விசயம். அதை மட்டும் நீங்க மாட்டனென்று சொல்லக்கூடாது'

'என்ன அது?'

'அது வந்து நாளைக்கு நீங்க எங்களையெல்லாம் விட்டுப் பிரிஞ்சு போகும் இடத்திற்கு நானும் வருவேன்..'

'ஏன் திவ்வியா வழியனுப்பி வைக்கவா..?' என்று வேதனைச் சிரிப்புடன் கேட்டவன் சிறிய யோசனைக்குப் பின்பு 'சரி, வா' என்றான்.
அவர்கள் வீடு திரும்புவதற்காக எழுந்தபோது மழை கலைந்து விட்டதனால் மீண்டும் கடற்கரையிலே நத்தார் தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன.

000

மறுநாள் அதிகாலையிலேயே சுரேஷ் எழுந்து விட்டான்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவனைத் தவிர யாரும் எழுந்திருக்கவில்லை.  தனது தாயின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு சிறிதுநேரம் மௌனமாய் அழுதான். பின்பு மனதைத் தேற்றிக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான்.

திவ்வியாவின் அறை விளக்கு எரியவில்லை என்பதால் அவளும் இன்னும் எழுந்திருக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டு அப்படியே நடந்து நித்தியாவின் அறைப்பக்கம் வந்தான். திறந்திருந்த யன்னல் வழியாகப் ஆழ்ந்து உறங்கும் நித்தியாவையும் கனகா மாமியையும் பார்த்தான். இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் அன்று நடக்கப்போவது எதையுமே அறியாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள் மாமியும் நித்தியாவும். இருவரையும் எழுப்பாமல் எப்படி விடைபெறுவது என்று சிறிது நேரம் தவித்தான் அவன். 

மீண்டும் அறைக்கு வந்து திவ்வியாவின் படிப்புச் செலவுக்குத் தேவையான பணம் பெறுவதற்குரிய வங்கி ஆவணங்களையெல்லாம் பத்திரப்படுத்தி வைத்தான். அதன் பின்பு தனது மருத்துவ அறிக்கை சம்பந்தமான காகிதங்களையெல்லாம் ஒன்றும் விடாமல் சேகரித்து தீயிட்டுக் கொளுத்தினான்.  சாம்பலைக்கூட விட்டுவைக்காமல் கழிப்பறையில் ப்ளாஷ்-அவுட் செய்துவிட்டு வெளியே வந்து திவ்வியாவின் அறையைப் பார்த்தான். அவள் அறைவிளக்கு இன்னும் எரியவில்லை. செல்போனில் அவளது நம்பரை அழுத்த ஆரம்பித்தவன் பின்பு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக முயற்சியை இடையிலே கைவிட்டான். சிறிது நேரம் மௌனமாய் அழுதவன் வீட்டிலிருந்து வெளியேறி வீதிக்கு வந்து இருட்டில் திரும்பிப் பாரக்காமல் நடக்கத் தொடங்கினான்.

மார்கழிக்குளிருக்கு உடலைச் சுருட்டிக் கிடந்த தெருநாய்கள் எழுந்து நின்று குரைப்பதற்குப்பதில் லேசாய் உறுமிவிட்டுப் படுத்தன. சிறிது தூரம் நடந்தவன் தன்பின்னால் யாரோ நடந்து வரும் காலடியோசை கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது  திவ்வியா வந்து கொண்டிருந்தாள்.

இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் மௌனமாக நடந்து கொண்டிருந்தார்கள். முதல்நாளே பேசி வைத்துக்கொண்ட இரகசிய இடத்திற்கு அவர்கள் இருவரும் நடந்து வந்து சேர்ந்தபோது பொழுதுபுலர்ந்து வெகுநேரமாகிவிட்டிருந்தது.

அது ஓர் ஆள்அரவமற்ற பாறைக்கடற்கரை. கரைமுழுவதும் சிறியதும் பெரியதுமாக குத்திக்கிழிக்கும் பாறைகள் நிறைந்திருந்தன. ஆழமும் நீரோட்டமும் அதிகமான இடம் அது. அந்தப்பகுதியிலே வந்து கடலுக்குள் இறங்கியவர்கள் தற்கொலை முயற்சியில் வந்து விழுந்தவர்கள் யாருமே உயிரோடு மீண்டது கிடையாது என்பதால் அந்த இடத்துக்கு ஆள்கொல்லிக் கடல் என்றொரு பெயருமிருந்தது. சுரேஷ் அந்த இடத்ததைத் தெரிவு செய்ததற்குக் காரணமும் அதுதான்.

'சரி, திவ்வியா, நீ இனி வீட்டுக்குத் திரும்பிப்போ! நான் போய்.. வாறேன். யுனிவசிட்டி கிடைத்ததும் போய் உன்ட படிப்பை...நீ நல்லபடியா..' அவனால் தொடர முடியவில்லை.

திவ்வியா எதுவும் பேசவில்லை. உப்புக்காற்றிலே கேசம் அலைபாய்ந்து கொண்டிருக்க சலனமேதுமின்றி கூடவே நடந்து வந்தாள். அவளது முகம் பாறையாய் இறுகிப்போயிருந்தது. இருவரும் கடலுக்குள் துருத்திக்கொண்டிருந்த உயரம் குறைவான பாறை ஒன்றிலே ஒருவரையொருவர் பார்த்தபடி வெகுநேரம் வரை பேசிக்கொள்ளாமலே அமர்ந்திருந்தார்கள். அதுவரை கத்திக்கொண்டிருந்த கடல் அலைகள் குறைந்து ஒரு குளம்போல அமைதியாகி விட்டிருந்தது.

மனதைக் கல்லாக்கிக்கொண்டு சுரேஷ் எழுந்தான். உணர்ச்சியில்லாத உருவம்போல திவ்வியாவும் எழுந்து நின்றாள். தூரத்தில் எங்கோ வாகனங்கள் வீறிட்டுக் கொண்டு செல்லும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.

'திவ்வியா, நேரமாயிட்டுது. இந்நேரம் உன்னைத் தேடிக்கிட்டிருப்பாங்க..ப்ளீஸ் வீட்டுக்குப்போ!' என்று தழுதழுத்த சுரேஷை திடீரென்று வெறிபிடித்தவள் போல ஆவேசமாய்க் கட்டியணைத்துக் கொண்டாள் திவ்வியா.

'அத்தான் நான் உங்களை சாக விட மாட்டேன்.. அக்கா வேணாம்..நான் உங்களை கட்டிக்கொள்றேன்.. உங்க வருத்தம் எனக்கும் வரட்டும்.. பரவாயில்ல அத்தான்..'

சுரேஷ் இதை எதிர்பார்க்கவில்லை.

'ஏய்! திவ்வி உனக்கென்னப் பைத்தியமா?' என்று அவளது ஆவேசப்பிடியிலிருந்து விடுபடுவதற்காக சுரேஷ் முயன்றுகொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் நின்றிருந்த பாறையின் கீழே கடல் திடீரென வேகமாக வற்றிக்கொண்டு சென்றது.

கடல் பின்வாங்கிச் சென்ற அந்த நாள் 2004.12.26. நேரம் காலை 8.49 மணி.

-மூதூர் மொகமட்ராபி