Monday, February 20, 2012

சிறுகதை:




வேடிக்கை மனிதர்கள்!    


வீட்டிலிருந்து அவசரமாய் வெளியேறி,  வீதியில் வந்த முச்சக்கரவண்டியை நிறுத்தி, திருகோணமலை  பஸ் நிலையத்திற்கு பதற்றமாய் வந்து சேர்ந்தான் இம்தியாஸ். பதறியடித்து இறங்கியவன் நின்று பார்த்தபோது கண்டிக்குச் செல்லும் முதலாவது பஸ்வண்டி புறப்படுவதற்குரிய எந்தவொரு அறிகுறியுமின்றி   அமைதியாக  நின்றிருந்தது.

முச்சக்கரிக்கு காசைத்தந்துவிட்டு பஸ்ஸை நோக்கியபடி யோசனையுடன்  நின்றிருந்தான். இறங்கிய இடத்திலிருந்து நின்று பார்க்கும்போதே பஸ்ஸினுள் அதிக ஆட்கள் இல்லாதிருப்பது தெளிவாகத் தெரிந்தது.  தூங்கியெழுந்த தெருநாயொன்று தலையைச் சிலுப்பிச் சோம்பல் முறித்தபடி எழுந்துசெல்ல  அருகிலிருந்த தேனீர்க்கடையின் வானொலி,  'நீ போகும் வழி தேடி வருவேனே பின்னாலே' என்று சத்தமாய்ப் பாடிக் கொண்டிருந்தது.

'ஒருவேளை முதல் பஸ் போய் இப்போது நிற்பது கண்டிக்குப்போகும் அடுத்த பஸ்ஸோ? இல்லையே... முதல் பஸ் 6.30க்குத்தானே?' கைத்தொலைபேசியில் நேரத்தைப் பார்த்துக் கொண்டான். இன்னும் 10 நிமிடங்கள் இருந்தன. அப்படியும் சந்தேகம் தீராமல் பொதுச்சந்தைக்கு எதிரேயிருந்த  மணிக்கூட்டுக்கோபுரத்தின் உச்சியைப் பார்த்தான்.  அது வழக்கம்போல வேறொரு நாட்டின் நேரமொன்றைச் சரியாகக் காட்டிக் கொண்டிருந்தது.

பஸ்ஸினுள்ளே அவன் ஏறிப்பார்த்தபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டொருவர் மட்டும் அமர்ந்திருக்க ஏனைய இருக்கைகள் எல்லாம் ஆட்களின்றி வெறுமையாகக் கிடப்பது தெரிந்தது.   யன்னலோரமாக ஓர் வசதியான இருக்கையைத் தேர்ந்தெடுத்து அவன் அமர்ந்து கொள்ள சற்றுமுன் உதித்த செம்மஞ்சள் நிறச்சூரியன் பஸ் கண்ணாடிகளில் துண்டுதுண்டாய் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.

ஆட்கள் போதாது என்பதால் எப்படியும் இப்போதைக்கு பஸ்ஸை எடுக்கப்போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டவன்.  'சே! இப்படித் தெரிந்திருந்தால் அழகாய்ச் சாப்பிட்டு விட்டே வந்திருக்கலாம். பாவம் மதிவதனி,' அதிகாலையில் எழுந்து அழுகின்ற மூன்றுமாதக் கைக்குழந்தையுடன் போராடிக் கொண்டே  பரபரக்கச் சமைத்துத் தந்திருந்தாள். அந்தச் சாப்பாட்டைக் கூட  நேரமாகிவிட்டது என்று சாப்பிடாமல் வைத்துவிட்டு  வந்ததை நொந்து கொண்டான்.


செல்போன் சிணுங்கியது. அவள்தான் எடுத்தாள்.

'ஹலோ! மதி! ஆங்.. கேட்குது சொல்லு! ஓகே 6.30 பஸ் கிடைச்சுட்டுது! ஆனா எப்ப போகுமோ தெரியல்ல. ஸ்டாண்டுலதான் நிக்கிறேன். ஓமோம். சாப்பிட்டுட்டே வந்திருக்கலாம். அதைத்தான் இப்ப நினைச்சிட்டு...  யாரு வந்தது? பள்ளித் தலைவரா? ம்ம்! இப்ப அங்க நிக்கிறாரா? இல்லையா? நீ என் நம்பரைக் குடுத்திருக்கலாமே.. சரி, அவரே எடுக்கிறாராமா? ஓகே..ஓகே! இப்ப வெளிக்கிட்டா நான் 12மணிக்கெல்லாம் கண்டிக்குப் போயிடுவேன் ஆ? சரிசரி, போனதும் எடுக்கிறேன்.. யசோ எப்பிடியிருக்கு? தூக்கமா ஓ! சரிசரி பை!'  என்று போனை அணைத்துவிட்டு நிமிர்ந்தான்.

பஸ்ஸின் வெளியே சில இளைஞர்கள் நின்றிருந்தனர்.

' பஸ் எத்தனைக்குப் போகும், தம்பி?'  பஸ்ஸின் முன்புற நுழைவாயில் வழியாக இறங்கிச் சென்று  கண்டக்டர் போலிருந்த ஒரு இளைஞனிடம் சென்று கேட்டான், இம்தியாஸ்.

'கொஹாட்டத ஐயே? நீங்க நுவரதானே போறது? அதிங்... எந்த நாளும்..ஆறு அரைக்குப் போறதுதானே ஐயா! ...இன்டைக்கு ஆக்கள் கொஞ்சங் வர இருக்குது! ஏறி ஸீட்ல ஒக்காந்து இருங்க! இன்னம் ரெண்டு மூணு சீட் மட்டுந்தான் இருக்கிறதி... ஆ! நுவர..!நுவர..! மாத்தளே..மாத்தளே..!'

'ரெண்டு மூணு  சீட் மட்டுமா? பஸ்ஸே போறதுக்கு ஆக்களில்லாமப் பேயடிச்சுக் கிடக்கு.. கதையப்பாரு...இவனுகளுக்கு ஆக்கள் இல்லையென்றாலும் இந்தப் பந்தா மட்டும் போகாது' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான். பஸ்ஸின் பின்னிருக்கையிலிருந்த யாரோ ஒருவர் யன்னல் வழியாக வெற்றிலைச் சாறைப் புளிச்சென்று துப்பினார்.

'ஆ! கடலை! கடலை!! தண்ணிப் போத்தல்...பெப்பர்மின்ட்!'
பஸ்நிலையத்தின் முன்புறமிருக்கும் முஸ்லீம் ஹோட்டலில் இருந்து கடகடவென்ற காதைப்பிளக்கும் ஒலியுடன் கொத்து ரொட்டி வாசனை வந்தது.
'தம்பி, நான் போய் டீ ஒன்டு குடிச்சிட்டு வாரேன்..இப்ப போக மாட்டீங்கதானே?' என்று  முன்கடையை நோக்கி நடந்தவனை, 'ஐயா..போக வேணாம்! இந்தா இப்ப பஸ் போறது ஒங்களுக்கு சாப்புட ...ஹபரணைக்கு பஸ் நிப்பாட்டுறான்.. இப்ப வாங்க ஐயா!' என்று கூப்பிட்ட கண்டக்டர் பையனை அவன் பொருட்படுத்தவில்லை.
 

'இவன்கள் இப்படித்தான் சொல்லுவான்கள். பஸ் எடுக்க எப்படியும் ஏழு மணியாகிடும்!' 

தேனீர்க்கடையை நோக்கி ஒரு பத்து மீற்றர் கூட நடந்திருக்கமாட்டான். திடீரென்று ஓர் இயந்திர உறுமல் கேட்டது. ஆச்சரியமாய் திரும்பிப் பார்த்தபோது கண்டி பஸ்ஸின் சாரதி  இருக்கையிலே ஒருவன் அமர்ந்திருந்து பஸ்ஸின் ஸ்டியரிங் சில்லை வட்டமாய்த் தொட்டுத் தொட்டு கும்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டான்.

' ஆ! நுவர.. நுவர..மாத்தளே..'

இரண்டொரு தடவை சத்தமாய் ஹோன் அடித்துக் குலுங்கிவிட்டு நகரத் தொடங்கியது பஸ்வண்டி. முதலில் நம்பவே முடியாமல் திகைத்து பின் சுதாரித்து ஓடிச்சென்று பஸ்ஸின் முன்புற நுழைவாயிலில் தொங்கிக் கொண்டிருந்த அந்த கண்டக்டர் பையனுடன் ஒட்டிக் கொண்டான். பஸ்நிலையப் பிரதான வாயிலைக் கடந்து மெல்லத் திரும்பி அது நின்றபோது இன்னும் சில பயணிகள் ஓடிவந்து பின்புறக் கதவு வழியாக ஏறிக் கொண்டார்கள். பஸ்ஸைத் தொடர்ந்து, 'ஆ! கடலை..கடலை..கச்சான்.. தண்ணிப்போத்தல்!' களும் சிறு ஓட்டத்தில் கூடவே வந்தன.

'தண்ணிப்போத்தல்! தண்ணீ! ஒண்ணு?'


'ச்சே! சில்லறை தாங்க நானா! விடிய வெள்ளனையோட ஆயிரத்தை நீட்டினா..?  கடலைப் பக்கட் கொஞ்சம் தரவா?'


' கந்தளே போற ஆக்கள்..முன்னுக்கு வாங்க! நுவர மாத்தளே மட்டும் அந்த ரெண்டு ஸீட்ல இருங்க..அம்மா எங்க போர? ஆ? சரி, இருங்க..முன்னுக்கு வாங்க... சந்திக்கா.. ஏறவாணாம்.. வாணாம்! சந்தில நிக்காது..! ரைட்! ரைட்!'
பஸ் புறப்பட்டு வேகம் பிடித்தது.


'என்ன புதினமிது?  அரைவாசி இருக்கைகள் கூட நிறைந்திராத வெறும் பஸ்ஸை எப்படி இன்றைக்கு மட்டும் நேரத்துக்கே எடுத்தான்கள்?'  ஆச்சரியம் நீங்காமலே ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸின்  பின்புறமிருக்கும் தனது இருக்கையை நோக்கி நகர்ந்தான், இம்தியாஸ்.


பசி வயிற்றை கிள்ளியது.


மக்கெய்ஸர் மைதானத்தைத்தாண்டிய பஸ்  நகரசபைச் சுற்றுவட்டத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது, 'ஆ! எப்படி இப்ப? நான் சொன்னதிங்தானே? டீ குடிக்கப் போக வேணாம் என்டு...'  நடுவழியில் நின்று கலாய்த்தான் கண்டக்டர் பையன்.


' அட! இல்லடாப்பா....! உன்ட பஸ்..ஆக்களேயில்லாம வெறும் சீட்டாக் கிடக்குது..இப்ப போக மாட்டீங்களென்டு நினைச்சன்' என்றான் இம்தியாஸ் அசடு வழிய.

'இல்லே ஐயா! அதிக்கு எல்லாம் ஆக்கள் இருக்கு! அந்தா தாடி வச்சிட்டு  இருக்கிறதுதானே மூணுபேர் பின்னால! அவங்கட ஆக்கள் எல்லாம் ஒரு இருவது பேர் நுவரக்கு வாறது. பாருங்க..போஸ்ட் ஒபிஸ் சந்தியில கொஞ்சம் தாடி ஆக்கள் இப்ப ஏறுது. மத்த அவங்கட ஆக்கள் எல்லாம் கந்தளே வரைக்கும் ஒவ்வொரு இடத்திலே நிக்குற நேரத்துக்கு வந்து ஏறுறது.'


அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகம் குறைந்து தபால்நிலைய பஸ்தரிப்பிலே நின்றது பஸ். அங்கு வெண்ணிறத் தொப்பி மற்றும் முழங்கால்வரை நீண்டிருக்கும் வெண்ணிற அங்கிகள் அணிந்த  நீண்ட தாடி  ஆண்கள்  பலர் தோளிலே பெரிய பயணப்பொதிகளைச் சுமந்தவாறு சிறுகூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள்.   

பஸ் நின்று கண்டக்டர் பையன் வெளியில் இறங்கியதும் அந்தத் தாடி மனிதர்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஓரிரு நிமிடங்கள் நீடித்த சிங்களமொழி உரையாடலின் பின்பு பஸ்ஸினுள்ளே எல்லோரும் ஏறிவந்தார்கள்.  ஆட்களில்லாத வெற்று இருக்கைகள் அனைத்திலும்  தோளிலே சுமந்துவந்த பயணப்பைகளைப் போட்டு இடம்பிடித்தார்கள். பின்பு இம்தியாசுக்கு முன்னாலும் பின்னாலுமிருந்த மீதி இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.
'
அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜி'

'அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி....'

'அப்படி உக்காருங்க ஹாஜி!' 'பரவாயில்ல சீதேவி நான் இங்கினக்கயே இருக்கிறேன்..அல்ஹம்துலில்லாஹ்' ' சுபஹானல்லாஹ்' 'மாஷா அல்லாஹ்' என்பது போன்ற உரையாடலும்  அத்தர் நறுமண வாசனையும்  பரவிச்செல்ல


மீண்டும் கிளம்பி  வேகம் பிடித்தது பஸ்.


ஜெற்றிப் பொலீஸ் சுற்றுவட்டத்தில் திரும்பி உள்துறைமுக வீதிக்கு வந்ததும் மீண்டும் சிணுங்கியது இம்தியாசின் செல்போன். அதிலே புதிய இலக்கம் ஒளிர்ந்திட இயர்போனை பொருத்திக் கொண்டு, 'ஹலோ! யாரு' என்றான்.

' ஆ! தம்பி நாந்தான் பள்ளித்தலைவர் பேசுறேன். அஸ்ஸலாமு அலைக்கும்...!'


'ஆங்..அலைக்கும் ஸலாம்! சொல்லுங்க தலைவர்!'


'தம்பீ, உங்களுக்கிட்டக் கொஞ்சம் பேசலாம் என்டுதான் வீட்டுக்கு வந்தேன். அந்தப் புள்ள மதிவதனி நீங்க இப்பதான் கண்டிக்குப் பயணம் போறதாச் சொல்லிச்சு. அந்தப் புள்ளயிட விசயமாத்தான் கண்டிக்குப் போறீங்கபோல..'


'ஓமோம்.. இப்ப பஸ்லதான் இருக்கிறேன். ஏதும் அவசரமா கதைக்கணுமா..அப்படியென்டா இறங்கி ஆட்டோ பிடிச்சி வாறேன். இப்பதான் பஸ் இன்னர் ஹாபர் ரோட்டுக்கு வந்திருக்கு..? இறங்கவா?'

' இல்ல.. இல்ல! அல்லாட காவல், நீங்க போற பயணத்தை நல்லபடியா செய்து முடிங்க தம்பீ.! நா இஞ்ச உங்கட விசயமா பள்ளி மற்ற ஆக்களோட கதைச்சுப் பார்த்தேன். அவங்கட கதையப் பாத்தா...?'

'பார்த்தா? என்ன சொல்லுங்க நானா?'

'இல்ல.. போன்ல எல்லாம் கதைக்க ஏலுமோ தெரியல்ல..இப்ப நீங்களும் நம்மட மார்க்கத்துக்கு மாறிவந்து ஒரு வருசந்தானே ஆகுது. அதுவுமில்லாம நீங்க  இந்த ஊர்லயே நம்மட புள்ளைகளோடேயே ஒரே ஸ்கூல்ல படிச்சு ஒண்ணா விளையாடி ஒண்ணுக்குள்ள ஒண்ணாக் கிடந்த ஆள். அ தம்பி.  அதால  எங்களுக்கு உங்கள்ல சந்தேகம் எதுவுமில்ல. ஆனா அந்தப் புள்ள மதிவதனிட விசயந்தான் கொஞ்சம் பிரச்சினையாயிருக்கு...' பஸ் மட்கோ சந்திப் புகையிரதக் கடவையில் நின்றிருக்க ரயிலின்  இரைச்சலில் அவரது பேச்சு தெளிவின்றி இடறியது.

' ஹலோ! அதுதான் அந்தப்புள்ளயும் நம்ம மார்க்கத்துக்கே மாறி வர்றதுக்குச் சம்மதிச்சுட்டுதானே தலைவர்? நான் முந்தா நாளிரவு அந்தப்பி;ள்ளை மதியையும் முன்னுக்கு வச்சுத்தானே உங்களிட்ட..ஹலோ..! ஹலோ!' 

'தம்பி, சிக்னல் கிளியரில்லாம இருக்கு. நீங்க கட் பண்ணுங்க.. நான் பிறகு எடுக்கிறேன் என்று சட்டென போனை வைத்து விட்டார்.

'சே!' என்று அலுத்துக் கொண்டான். அவரிடம் முழுமையாக சொல்லி முடிக்காதது சிறிது ஏமாற்றம் தந்தது.  மதிவதனி, கடைசித் தங்கை சஹானாவுடன் ஒன்றாகப் படித்தவள். அவனது பயோலொஜி டியூட்டரி இருந்த அதே மரியாள் வீதியில்தான் மதிவதனியின் அண்ணன் பாலா மாஸ்டரின் கணிதபாட டியூட்டரியும் இருந்தது. ஏஎல் படித்து விட்டு ரிசல்ட்ஸ் வரும்வரை காத்திருந்த காலத்தில் பின்னேரங்களில் எல்லோரையும் போல சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியுலா வருவது இம்தியாசின் வாடிக்கை. அந்தக் காலங்களில் மதிவதனி அவனுக்கு மட்டுமல்ல அவன் போன்ற இளைஞர்கள் பலருக்கும் கனவு மங்கையாக இருந்தவள். 

 அதற்கு அவளது அமைதியான சுபாவம் பகட்டில்லாத அழகு மட்டுமல்ல அவளது இனிமையான குரலும்தான் காரணம். அப்போதெல்லாம் பாடசாலை விழாக்கள், ஊர்க் கொண்டாட்டங்கள், கோயில் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் மதிவதனியின் இனிய பாடல்கள் ஒலிக்காதிருந்தது கிடையாது. 'மாணிக்க வீணையேந்தும் மாதே நீ கலைவாணி' என்று அவள் பாடுவது இன்று நினைத்தாலும் காதுகளில் தேன் பாய்ச்சுமே. அது மட்டுமா...?
பஸ் கண்ணாடி யன்னலினூடாக வீசிய காற்று முகத்தில் கவிதைபாட எப்போது தூங்கிப்போனான்?


மீண்டும் அவன் கண்விழித்தபோது  பஸ் ஏதோ ஒரு தரிப்பில் நின்று புறப்பட்டது. 

புறப்படும்போது இருந்ததைப் போலன்றி ஆசனங்கள் ஏறக்குறைய நிரம்பியிருந்தன. இரண்டொரு இருக்கைகள் மட்டும் எங்கோ வழியில் நின்று இனிமேல் ஏறப்போகும் தாடிமனிதர்களின் சகபாடிகளுக்காகக் காத்திருந்தன.  

 'அஸ்ஸலாமு அலைக்கும் அமீர் சாப்!' 

கோரஸாக எழுந்த குரலால் சற்றுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஒரு 70 வயது மதிக்கத்தக்க வயோதிபரும் அவரைப் போலவே தோளிலே பயணப்பையுடன் இன்னும் சிலரும் பின்கதவு வழியாக ஏறிவந்து கொண்டிருந்தார். ஆசுவாசப் பெருமூச்சுடன் அந்த மனிதர் அமர்ந்த பின்பே மற்றவர்களும் மரியாதையுடன் உட்கார்ந்தார்கள்.

'ஹாஷிம் ஹாஜி சாப், எல்லாரும்  ஏறிட்டாங்களா?'

'ஓ! கந்தளாய் பேராத்துப் பள்ளியில மட்டும் ஒரு நாலு பேர் நிக்கிறாங்க சாப்! அவங்களும் ஏறிட்டா சரியாயிரும்... இன்ஷால்லாஹ்!'
'அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!' என்றார் திருப்தியுடன்.


அந்த மனிதரை இதற்கு முன்பு இம்தியாசுக்கு எங்கோ சந்தித்ததைப் போலவும் அவரது முகம் நன்கு பரிச்சயமான முகம்போலவும் தோன்றியது. அவரது பயணப்பையை  பவ்யமாக வாங்கி அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து யன்னலோரமாக இருந்த வேறு இருக்கையொன்றிலே மெதுவாக அமர்த்தினார்கள், அந்தத் தாடிமனிதர்கள்.  அவர்களில் பலர் இளைஞர்களாகவும் சிலர் நடுத்தர வயதினராகவும் இருக்க மீதிப்பேர் வயோதிபர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் அருகருகேயுள்ள  இருக்கைகளிலே ஒன்றாக அமர்ந்திருந்து தங்களுக்கிடையே பல பாஷைகளிலும் பேசிக் கொள்ளலானார்கள். சிலர் ஏனைய பயணிகளுக்கு இடையிலே அமர்ந்து இருந்த போதிலும் மற்றவர்களைக் கண்டு கொள்ளாமல் பொதுவாகத் தங்களுக்கிடையிலே மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். 

இப்போது அந்த பஸ் ஏறத்தாழ அவர்களின் பிரத்தியேக வண்டி போலவே தோற்றமளித்தது.  'அவர்களின் தயவில்தான் நாங்கள் சிலர் அதிலே ஏறிக்கொண்டு பயணிக்கிறோம்' என்று கூறினால் யாரும் கேள்வி கேட்காமல் நம்பிவிடுவார்கள் போலிருந்தது பஸ்ஸின் நிலைமை.

 இம்தியாசின் அருகாமையிலும் அவர்களில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் புதிதாய் ஏறிய ஒருவர். அவரது கையிலே  பிளாஸ்டிக் மணிகளாலான ஓர் சிறிய மாலை  ஒன்று இருந்தது.   அதைக் கையில் வைத்து வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு  உருட்டிக்கொண்டேயிருந்தார். அவரது விழிகள் இரண்டும் அரைத்தூக்கத்தில் மூடியிருந்தது. அவரது மேலங்கியிலிருந்து வந்து கொண்டிருந்த கடுமையான அத்தர் வாசனை முதலில் சுகந்தமாக இருந்த போதிலும் போகப்போக அவனுக்குத் தலையை வலிப்பது போலிருந்தது.

பஸ் இடையிடையே நின்று ஹபரணைச் சந்தி, தம்புள்ள சந்தை போன்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளை ஏற்றிக் கொண்டது. அப்படி ஏறிக் கொண்டவர்கள் கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டு பயணம் செய்தார்கள்.  இருக்கைகளில் அமர்ந்திருக்கும்  பிரயாணிகளை ஒருவித ஏக்கத்துடன் பார்த்தவாறு நின்றிருந்த அவர்களின் உடல்கள் வெறிபிடித்து விரையும் பஸ்ஸின் வேகத்திற்கேற்ப முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தன.

பஸ் கப்பல் துறையை ஆயுர்வேத ஆஸ்பத்திரியைத் தாண்டிக் கொண்டிருந்தது.

'எக்ஸ்க்யூஸ்மீ தொர! கொஞ்சம் தள்ளி இருக்கிறீங்களா? நான் ஏன்ட பேக்கை ஓசக்க போடணும்' என்றபடி எழுந்தார் பக்கத்திலிருந்தவர். அதற்கு அவருக்கு இடத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் அமர்ந்தபோது, இம்தியாசைப் பார்த்து முதன் முதலாக சிநேகமாகப் புன்னகைத்து, 'ஜஸாக்கல்லாஹு ஹைராஹ்' என்றார் அவர்.


அவன் புரியாமல் விழித்தான்!

'இல்ல.. தேங்ஸ் சொன்னேன்' என்றார் சிரித்தபடி. அவரது பற்கள் வெகுசுத்தமாக பளிச்சென்றிருந்தன. வெளித்தோற்றத்தை வைத்து அந்தத் தாடி மனிதரை 'அவர்' என்று கூறினாலும் அவரது அடர்த்தியான மார்புவரை நீண்டிருந்த தாடியை நீக்கிவிட்டுப் பார்த்தால்   இம்தியாசை விட கூடிப்போனால் நான்கு அல்லது ஐந்து வயதுமட்டுமே அதிகமான ஓர் இளைஞன்தான் தெரிவான். 

'ஏன் நானா, 'நன்றி' என்று தமிழிலேயெல்லாம் சொல்ல மாட்டீங்களா?'

'அப்படியில்ல தொர, உங்களப் பாத்திட்டு முஸ்லீம் என்று நெனைச்சுட்டேன்!'

' அட! நான் முஸ்லீம் இல்லையென்று இப்ப யார் சொன்னது?'

அவர் அவனை ஒருமுறை மேலிருந்து கீழ்வரை உற்றுப் பார்த்துவிட்டு அமைதியாகி யோசனையிலாழ்ந்து விட்டார்.

' என்ன நானா, ஏதும் பிழையாச் சொல்லிட்டனா?'

' இல்லல்ல....உங்கட கதையைப் பார்த்திட்டு...?' என்று இழுத்தார் அவர். வேறு எதையோ சொல்ல வந்துவிட்டுச் சமாளிப்பது போலிருந்தது அவரது பார்வை.

'என்ன யோசிக்கிறீங்க... சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க!' அவன் விடவில்லை.

'இல்ல தொர ஏன்ட பேர் பாசில். நாங்க எல்லாரும் கம்பளைக்கு மஹல்லா வேலையாப் போயிட்டிருக்கிறோம். தம்பீ உங்கட பேரென்ன.. என்ன செய்யிறீங்க?'

இம்தியாஸ் சொன்னான். 

' அல்ஹம்துலில்லாஹ்! தம்பீ, நான் சொல்றனென்டு பிழையா நீங்க நினைக்கப்படாது. நம்ம முஸ்லீமென்டு மத்தவங்களுக்குத் தெரியிறதுக்கு தனியா அடையாளம் வேணும். உங்களைப் பார்த்த சீருக்கு நான் குறிப்பில்லாமத்தான் இருந்தேன். முகத்தை வச்சுத்தான் முஸ்லீமென்டு..ஓரளவு வெளங்கிச்சு..ஆனா கதையைப் பார்த்துத்தான் பொறகு கொஞ்சம் சக்காயிருச்சு... '

'சரி, முஸ்லீமென்டு தெரியிறதுக்கு நான் எப்படியிருக்கணும் பாசில் நானா? இப்படி டெனிம் ஜீன்ஸ் டீ சேர்ட்லாம் போடக்கூடாதா...இல்ல தமிழ்லதான் ஒழுங்கா பேசக்கூடாதா... ஹாஹா!?'

அவரும் லேசாய் சிரித்துக் கொண்டார்.

'சேச்சே! அப்பிடிச் சொல்ல வரல்ல தொர, ஒரு ஆம்புளைய பாத்தாக்கா தோற்றத்துலயே இவரு இஸ்லாத்தை நம்புறவரு...பின்பற்றுவரு அப்பிடியெண்டு தெரியிற மாதிரி இருக்கணுமென்றுதான் நம்ம ரஸுருல்லாஹ்...'

'அப்படியென்டால் நீங்க போட்டிருக்கிற இந்த நீளமான உடுப்புத்தான் முஸ்லீம்களுக்குரிய அடையாளமா என்ன?'

அவருக்கு எனது கேள்வி ரசிக்கவில்லை. வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு வெளியே பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார். பஸ்ஸின் யன்னலை ஊடறுத்து வீசிய தம்பலகாமத்தின் வயல்வெளிக் காற்று எனது தலைமுடியை அலைக்கழித்துக் கொண்டிருக்க அவர் திரும்பும் வரை காத்திருந்தேன்.

'தம்பி, ஒங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.. நம்ம மார்க்கத்துல ஆம்பளைகளுக்கு வேறயா பொம்பளைகளுக்கு இன்னன்ன மாதிரின்னு உடுத்திக்கொள்ளணும் என்று தெளிவாச்  சொல்லியிருக்குத்தானே? அதைச் செய்தா சரிதான்.'

'ஓம் நானா, அதன்படிதான் நானும் உடுத்திருக்கிறேன் என்றுதான் நெனைக்கிறேன். ஆனா நான் போட்டிருக்கிறது நீங்களெல்லாம் போட்டிருக்கிற மாதிரி பாகி;ஸ்தான் ஆப்கானிஸ்தான் மக்கள் போடுகின்ற ஜுப்பா கிடையாது. பாருங்க,  நம்மட ஆக்கள்ல சிலபேர் சாரம் சேட் போடுறாங்க, டீ சேட் ஜீன்ஸ் போடுறாங்க, சிலபேர் உங்கள மாதிரியும் போடுறாங்க.. அரபு நாடுகளில வேறொருவிதமா...  இதில இதுதான் முஸ்லீம்களுக்குரிய ஆடை என்று எதை எடுத்துக் கொள்றது...?'

பாசில் நானாவால் பதில் சொல்ல முடியவில்லை.

'இங்க பாருங்க நானா, பேசுகிற மொழியும் உடுத்துகின்ற ஆடைகளும்  மனிதர்கள் நமது வசதிக்குத் தக்கபடிதான். நான் தமிழன் அதனால் தமிழை மட்;டுந்தான் பேசுவேன் என்றோ நான் சிங்களவன் சிங்களத்தை மட்டுந்தான் பயன்படுத்துவேன் என்றெல்லாம் சொல்லிட்டு இந்தக்காலத்தில வாழமுடியுமா?'

' பேசிக்கிற பாஷைக்கு வேணுமென்டா நீங்க சொல்றது சரி தம்பி, ஆனா இது உடுப்புக்குச் சரிவருமா? நமக்கென்று ஒரு கலாச்சாரம்  பாரம்பரியம் இல்லியா என்ன?'

' சரி, ஒரு பேச்சுக்கு நீங்க காலைல வாக்கிங் போக வேண்டியிருக்கு என்று வைச்சுக் கொள்வோமா... இப்ப நீங்க போட்டிருக்கிற இந்த உடுப்பு அதுக்குச் சரிவருமா? டீ-சேட் பொட்டம் போட்டுத்தானே ஆகணும்? நம்ம பிள்ளைகள் ஸ்கூல்ல புட்போல், கிரிக்கட், நீச்சல் பயிற்சிக்கு போனா அந்தந்த விளையாட்டுக்கு அவசியமான உடுப்புகளை அணியத்தானே வேணும்?'

'இப்ப நீங்க சொல்றதப் பார்த்தாக்கா.... டீவில காட்டுறாங்களே... நீச்சல் போட்டி,  பீச்-வொலிபோல்! அப்ப அதுக்கெல்லாம் போறதென்டா பிகினி உடுப்புலதான் போகணுமா?' என்று கேட்டார் பாசில், அதிரடியாக.

'ஆ! நல்லாக் கேட்டீங்க நானா?' என்று அவரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் இம்தியாஸ். அவனுடைய யோசனையைப் பார்த்து  மடக்கிவிட்ட திருப்தியில் அவர் உள்ளுக்குள் சிரிப்பது நன்றாகப் புரிந்தது.

அதற்குள் பஸ் ஓரிடத்தில் நின்றது. 'அனுஹய பகின்ட முள்ளிப் பொத்தானை இறங்குங்க! ஆ.. நுவர.. மாத்தளே நுவர மாத்தளே!' சிலர் ஏறி இறங்கிக்கொள்ள மீண்டும் இரைச்சலுடன் புறப்பட்டது.

'என்ன தம்பி, பதிலையே காணல்ல...?'

'ம்ம்! அதுமாதிரி விளையாட்டுக்கெல்லாம் நாம போகணுமா இல்லையான்னு தீர்மானிக்கிற விஷயம் இன்னும் நம்ம கையிலதானே இருக்கு? ஆனா, நீச்சல் மாதிரிப் போட்டியில கலந்து கொள்றது என்று முடிவெடுத்திட்டோமென்றால் சேட், சாரம், ஜுப்பாவெல்லாம் உடுத்திக்கொண்டு நிச்சயமா நீந்த முடியாது!'

 'சரி தம்பி, உடுத்துறத வுடுங்க! இன்னும் எத்தனையோ விசயம் இருக்கே! ரஸுலுல்லாஹ் சொன்ன சுன்னத்தான விசயங்கள்... ஆண்கள் தாடி வச்சுக் கொள்வது, தொப்பிகள் அணிந்து கொள்வது..இதெல்லாம் செய்யக்கூடியதுதானே?'

'ஓம். அதெல்லாம் செய்யக் கூடியதுதான். ஆனால் அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதுமா நானா? ஒரு முஸ்லீம் முதலில் தனது நற்செயல்களால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலே அக்கறை செலுத்தக் கூடாதா? உதாரணமா பாருங்க, நம்ம மார்க்கத்திலதான் சுத்தம் பற்றி அதிகமாகச் வலியுறுத்திச் சொல்லியிருக்கு இல்லையா?

'நெசம்தான்.. 'சுத்தம் ஈமானின் (இறை நம்பிக்கையின்) பாதி' என்று சொல்லியிருக்கிறாங்க நம்ம ரஸுலுல்லாஹ்..'

 'ம்ம்! ஆனால் சுத்தம் என்றால் தங்களோட உடம்பை மட்டும் கழுவிக்கழுவி வைச்சுக்கொள்றாங்களே தவிர, நம்மில் எத்தனை பேர் தெருவில் காறி எச்சில் துப்புகின்றோம் ...வீட்டுக்குப்பையை வீதியில் கொட்டுகின்றோம் தெரியுமா? பொலித்தீன்களை ஷொப்பிங் பேக்குகளை பிளாஸ்டிக் போத்தல்களையெல்லாம் ஓடைக்குள்ளேயும் கழிவுநீர்க் கான்களுக்குள்ளேயும் கொஞ்சமும் யோசிக்காமல் போடுகின்றோம்..பார்த்தீங்களா?

அவர் எதுவும் பேசாமல் நான் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

'நம்ம மட்டுமா அப்படிப் போடுறம்? எல்லா ஜாதிச் சனங்களும்தானே போடுதுங்க.. சுத்தமில்லாம பொறுப்பில்லாம நடந்துக்குதுங்க... நீங்க ஏதோ நம்ம சனங்கள் மட்டும்தான் என்ட மாதிரிச் சொல்றீங்களே?'

'உண்மைதான்! நம்மட நாட்டுல எல்லாரும் செய்றதைத்தான் நாங்களும் செய்யுறோம். அதுலயும் நாம ஒருபடி மேலதான்!  எல்லா இனமக்களும் குடியிருக்கிற ஒரு டவுனை எடுத்துப் பாருங்க.. மற்ற வீதிகளை விட நம்மட சனங்கள் குடியிருக்கிற வீதிகளும் சந்துகளும்தான் அதிகமான கழிவுக்குப்பைகளால நிரம்பியிருக்கும். இந்தக் கசப்பான உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேணும்'

அவர் அதை ஏற்றுக்கொள்வதைப்போல தலையாட்டினார்.

'ஆனா, மத்தவங்ளோட மார்க்கங்களில சுத்தம் இறைநம்பிக்கையின் பாதி என்றளவுக்கெல்லாம் சொல்லல்லையே நானா? நம்மட மார்க்கத்துலதானே சுத்தத்தை ஆதாரமான நம்பிக்கையின் அரைவாசியோட சம்பந்தப்படுத்தியிருக்காங்க. அப்படியென்றால் நாமதானே மத்தவங்களை விட முன்மாதிரியாக சுத்தம் பேணணும்?'

'நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் தம்பி. இருந்தாலும் இந்த அற்ப துனியாவோட விசயங்கள திருத்திறதுக்கு அதிகமா ஈடுபடப்போனா நாளைக்கு மறுமை நாள்ல நாம நஷ்டவாளி ஆகிவிடுவோம். அதால..'

'என்ன..? எனக்கு விளங்கயில்ல?'

'இல்ல பாருங்க, இந்த உலகம் வந்து மறுமைக்கான விளைநிலமென்டு கண்மணி ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்லியிருக்கிறாங்க. நாம தனித்தனியா ஒவ்வொருவரும் நம்மளை மறுமையில கிடைக்கப்போற ஜன்னத்துல் பிர்தவ்சுக்காக தயார் செய்துக்கிட்டு வந்தாலே எல்லாம் சரியாகிடும்...இதைத்தான் அல்லா.. ஜெல்ல..சுபஹானல்... தம்பி! என்ன தம்பி, திரும்பிட்டீங்க..இதென்ன காதில இயர்போனைப் போடுறீங்க..?

அவருக்கு பதில் சொல்ல அவகாசமில்லாமல் மீண்டும் பள்ளித் தலைவர் போனில் வந்திருந்தார்.

' ஆ! சொல்லுங்க தலைவர் ! இப்ப தெளிவா கேக்குது! எக்ஸ்க்யூஸ்மீ..! ஒண்ணுமில்ல அது இங்க பஸ்ல பக்கத்துல ஒருவர்.. சரி, நீங்க சொல்லுங்க! மதிவதனியும் என்னைப்போலவே நம்ம மார்க்கத்துக்கு வாறதில நம்ம பள்ளி ஆக்களுக்கு என்ன பிரச்சினை? '
'.................'

' சரி, பிழையா நினைக்கல்ல.. பரவாயில்ல சொல்லுங்க!'
'.....................?'


நான் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அருகிலிருந்த தாடிக்காரர்,  போனில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் என்னையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

'சரி தலைவர், நீங்க எல்லாரும் இப்ப எதைச் சந்தேகப்படுறீங்க? மதியும் அந்தப் பிஞ்சுப் புள்ளையும் என்னைத் திருப்பியும் பழையபடி ஆக்கிடுவாங்க என்றுதானே? நானா, நீங்க சொல்ற மாதிரி நம்மட அயலுக்குள்ளேயே நம்மட ஒரு பிள்ளையை நான் கட்டியிருக்கலாம்தான்.. ஏன் இப்ப கூட  நீங்க காட்டுற பிள்ளைய நான் கட்டுறேன். ஆனா..'
'.........'
'நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க! நான் கட்டுறேன். ஆனா.. வன்னி அடிபாட்டுல சிக்கி புருசனையும் அவன்ட தாய் தகப்பனையும் குடும்பத்தையும் பறி கொடுத்திட்டு கைப்பிள்ளையோட யாருமே இல்லாம வந்து நிக்கிறவ மதிவதனி. அவளை உங்கட அயலுக்குள்ள யாராவது ஒரு நல்ல தொழிலோடு இருக்கிற பொடியன்கள்ல ஒருத்தனைக் கட்டச்  சொல்லுங்களேன் பார்ப்போம்..!'
'...........'
' என்ன நானா சத்தமேயில்ல? பார்த்தீங்களா? மாட்டாங்கதானே? இப்படி இளம் வயதில வாழக்கையை பறிகொடுத்தவளை நாமே கைவிட்டா அவள் எங்கதான் போவாள் சொல்லுங்க? நீங்க கேட்டபடி மதி இருந்த கட்டுகஸ்தோட்டை பள்ளிவாசல் முகாம்ல இருந்து கடிதம் எடுத்திட்டு வாறேன். அதன் பிறகு நாங்க சேர்ந்து இருக்கிறதில பிரச்சினை இல்லதானே?'
'............................'
'ஆங்! அதுக்குத்தானே நானா, இப்ப நான் அங்கே போயிட்டிருக்கிறேன். அது வந்து..பெரிய கதை!  கடைசிச் சண்டை நடந்ததுதானே...அதுல   உயிர்தப்பி பிள்ளையோட ஓடி  வவுனியாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறா.  அங்க மதியிட அப்பாவோட முதல் சேர்வையரா வேலை செய்த முஸ்லீம் பெரியவர் கண்டு  கண்டிக்கு கூட்டி வந்திருக்கார். அங்க அவர்ர குடும்பத்தோட வீட்டுல தங்க வச்சி உதவியெல்லாம் செஞ்சிருக்காரு. அந்த மனிசன்ட குடும்பத்தாக்கள்ட உதவியையும் நல்ல குணத்தையும் பார்த்திட்டு அங்க இருக்கும் போதே நம்ம மார்க்கத்துக்கு வாற ஐடியாவுலதான் இருந்திருக்கா மதி.'
'...................'
 'ஓமோம் நானா! அங்க உள்ள பள்ளிவாசல்ல அதுக்குரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தபோதுதான் பொலீஸ் பிரச்சினையாகி இங்க டரிங்கோவுக்கு வர வேண்டியதாகிட்டுது அவளுக்கு! இங்க அதுகள்ற குடும்பமே அவளைச் சேர்க்காம துரத்தி விட்டதெல்லாம் உங்களுக்கும் தெரியும்தானே? அப்படிப் பரிதவிச்சு நின்று கொண்டிருந்தவளைத்தான் நான் கட்டிக் கொள்றதுக்கு இப்ப உங்களுக்கிட்ட கேக்கிறேன்...'

'........................' 

' ஓகே..அதுக்கு என்ன செய்யுறது நானா? ஏதோ படிக்கிற காலத்துல வயசக்கோளாறுல படிப்பிச்ச ஸ்கூல் மாஸ்டரை விரும்பி வன்னிக்குப் போயிட்டாள். இப்ப அவள்ற புருசனும் இல்ல.. கடைசிச் சண்டையில மாட்டி எல்லாத்தையும் பறிகொடுத்திட்டு வந்திருக்கிறாள். இங்க, நாங்களும் சந்தேகப்பட்டுச் சேர்க்காம இருந்தா பாவம் அவள் என்னதான் செய்வாள் சொல்லுங்க, தலைவர்?'

'............................'

' சரி சரி, நான் விசயத்தை முடிச்சிட்டு இன்றைக்கு நைட் பஸ்ல திரும்புறன். நீங்கதான் யோசிச்சு ஒரு நல்ல முடிவெடுக்கணும். ஆ...! சரிசரி வைங்க' என்று செல்போனை அணைத்தபோது அவனையே திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார் தாடிக்காரர்.

'யாரு..அது? ஏதும் ஊர்ப் பிரச்சினையா?'

'சேச்சே! இது வேற ஒரு பிரச்சினை!'

' தமிழ் புள்ளயக் கலியாணஞ் செய்யப் போறீங்களா? நான் நீங்க  பேசுனதைக் கேட்டுட்டுத்தான் இருந்தன் தம்பீ.. யாரு அது தெரிஞ்ச ஆக்களா?'

'ம்ம்! அந்தப்புள்ள என்ட  தங்கச்சிட  க்ளாஸ்மேட்!'

'உங்கட வீட்டுல சம்மதமா அதுக்கு? அந்தக் குட்டியை உங்க வீட்ல சேர்ப்பாங்களா? '

'சே! என்ன நானா பேசுறீங்க? ஒரு பொம்பிளைப் பிள்ளைய குட்டி கிட்டி அது என்டுட்டு? முதல்ல என்னையே சேர்ப்பாங்களோ தெரியாது!'

'இல்ல அது வந்து...'

அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக் கொள்ளவில்லை. இம்தியாஸ் வெகுநேரமாய் யோசனையிலாழ்ந்திருந்தான்.

'என்ன தம்பீ, கவலைப்படாதீங்க! எல்லாம் அல்லாஹ்ட ஒதவியால சரியா வரும். ரஸுலுல்லாஹ் கூட யுத்தத்துல ஸகீதான தோழர்களோட விதைவைகளைத் திருமணஞ் செய்திருக்கிறாங்க..'

'அதெல்லாஞ் சரிதான், ஆனா இதே போல ஒரு பொம்புளையச் செய்ய விடுவீங்களா நானா?'

' ஆ! என்ன தம்பீ சொன்னீங்க?' என்றார் பதறியடித்து.

'இல்ல ஒண்ணுமில்ல, எனக்கு போன் கோல்; வர முந்தி நீங்க என்னமோ சொல்லிட்டிருந்தீங்களே? அதைப்பத்திப் பேசுவோமே, பாசில் நானா' என்று பேச்சை மாற்றினான், இம்தியாஸ்.

' ஓ அதுவா? அதான் தம்பி, இந்த அற்ப உலகத்தினுடைய சீரழிவுகள்ல சிக்கிடாம நாம நிறைய அமல்களை செய்து நம்மட கப்றுக்குத் தேவையானதை சம்பாதிச்சுக்கணும்'

'நீங்க சொல்றது சரிதான் நானா. ஆனா நீங்க அமல்கள் என்று சொல்றது எதை?'

' என்ன தம்பி, புரியாத ஆளாயிருக்கிறீங்க? இரவிலும் பகலிலும் பர்ளான சுன்னத்தான தொழுகைகள்ல அதிகமாக ஈடுபடுறது, நோன்புகள் நோற்கிறது, ஏழைகளுக்கு ஸகாத் கொடுக்கிறது, தீன் மார்க்கத்தை அடுத்தவருக்கும் எத்திவைக்கிறது...'

'ஓகே..ஓகே! அப்படியென்டா இந்த உலகம் எப்படியாவது போகட்டும். நம்ம மட்டும்  தனித்தனியா சொர்க்கத்துக்குப் போக வழி தேடுனாப் போதும் அதுதானே நீங்க சொல்ல வாறது?'

' இல்ல அப்பிடியில்ல!'

'வேற எப்பிடி? இங்க பாருங்க நானா, இந்த உலகத்துல மனுசனாய்ப் பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் சில கடமைகள் இருக்கு! முதல்ல சமூகத்தில உள்ள சீர்கேடுகளைப்பற்றி அறிஞ்சு கொள்ள வேணும் பிறகு அதில இருந்து தன்னையும் மற்றவர்களையும் எப்படி மீட்கலாம்  என்று யோசிக்கணும். அதுக்குத்தான் நமக்கெல்லாம் இறைவன் அறிவை தந்திருக்கின்றானே தவிர சீர்கேடுகளையெல்லாம் கண்டும் காணாம ஓதுங்கிப்போய் தப்பிக்கிறதுக்கில்ல?'

'அதைத்தானே நாங்களும் சொல்றோம். எல்லாரும் இறைவன்ட வழியில வந்து அமல்கள்ல ஈடுபட ஆரம்பிச்சா இந்த ஒலகத்தில பூரா பிரச்சினைகளும் மெல்ல மெல்லக் காணாமப் போயிடும.; துனியா வாழ்க்கையில யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்ல. ஆனா அல்லாஹ்ட பாதையில ஒருவன் கொஞ்சநாள் சரி இறங்கிட்டானென்டா மனசுக்கு ஒரு நிம்மதி உண்டாகும். அவர்ட பிரச்சினைகளெல்லாம் அவனோட கிருபையால ஸோல்வ் ஆகும் தெரியுமா? '

'அடடே அப்படியா? அப்ப இங்க பஸ் முழுக்க உங்களோட வந்திருக்கிறவங்க  எல்லாருமே அதுக்குத்தான்  வந்திருக்கிறாங்களா?'

' ஆங் ! இல்ல ..அதுவந்து..' விழித்தார் பாசில் நானா.


'சரி, நம்ம நாட்டில இப்ப திடீரென்று பெற்றோல் டீசல் விலையெல்லாம்
கூடிப்போய் இருக்கு! பஸ்கட்டணம், லைட்பில், பாண், மரக்கறி, மற்ற சாமான்கள்ற விலையும் கூடி வாழ்க்கைச் செலவு சமாளிக்கவே முடியாதளவுக்கு ஆகிட்டுது..இந்தப் பிரச்சினையால பாதிக்கப்படுகின்ற கூலிவேலை செய்து பிழைக்கிற ஒருவன் அல்லது மீன்பிடிக்கிற ஒருவன் சிறு அரசாங்க உத்தியோகத்தன் தன்ட பிள்ளை குட்டிகள்ற சாப்பாட்டு நெருக்கடியில இருந்து எப்படித் தப்புறது சொல்லுங்க நானா? அவன் தன்னைப்போல பாதிக்கப்பட்ட மற்றவங்களோட ஒண்ணு சேர்ந்து போராடுறதா அல்லது உங்களோட வந்து பஸ் ஏறுறதா?'

' சேச்சே! அதுகளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அரசியல் பிரச்சினைகளை நம்மட மார்க்கத்தோட கொண்டு சேர்க்கப்படாது, தெரியுமா?'

' அரசியலும் பொருளாதாரமும்தானே நானா நம்மளோட வாழ்க்கையைத் தீர்மானிக்குது. அப்படியிருக்க எப்படி..? சரி, நீங்க மூச்சுக்கு மூச்சு சொல்லிட்டிருக்கீங்களே நம்ம ரஸுலுல்லாஹ் ரஸுலுல்லாஹ் என்று அவங்க  எப்படியானவங்க தெரியுமா உங்களுக்கு?'

'சொல்லுங்களேன் தம்பி, கேப்பம்'

'ரஸுலுல்லாஹ் தனியே பள்ளிவாசலுக்குள்ளே அமர்ந்து இறைவணக்கத்தில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கவில்லையே.. அவர்கள் தாங்கள் வாழ்ந்த சமூக அவலங்களைச் சென்று பார்த்தார்கள்... தோழர்களோடு சேர்ந்து எதிரிகள்மீது யுத்தங்கள் செய்தார்கள்... பகைவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்தினார்கள், ஒப்பந்தங்கள் புரிந்தார்கள். இதெல்லாம் அரசியல் இல்லையா?' 

திடீரென எற்பட்ட ஒரு குலுக்கலுடன் நின்றது பஸ்.

பஸ் ஒரு புறமாய்ச் சரிந்து நின்றிருக்க, நடந்தது என்னவென்று பார்க்க பஸ்ஸின் அத்தனை யன்னல்களிலும் தலைகள் முளைத்தன.

'ஐயோ! டயரெக்க கியா மல்லி!' என்றபடி சாரதி இறங்கிப் பின்னே செல்ல,


'கட்டிய ஒக்கோம கருணாகரலா பகிண்டகோ! ஆக்கள்..எல்லாரும் எறங்குங்க...டயர் மாத்திறது' என்ற கண்டக்டரின் குரல் கேட்டது.

அது ஒரு குடியிருப்புகளில்லாத சனநடமாட்டம் குறைவான வயல் பிரதேசம். நெடுஞ்சாலை வெய்யிலில் கொதித்துக் கொண்டிருந்தது. வேறுவழியின்றி எல்லோரும் இறங்கி வீதியோரத்தில்  பச்சைக் குடை ஒன்றை விரித்து வைத்தது போல் நின்றிருந்த  நிழல்வாகை மரத்தினடியில் செல்ல சிலர் சற்றுத் தள்ளியிருந்த ஒரேயொரு சிறு தேனீர்க்கடையை நாடினார்கள்.

அதுவரை இம்தியாஸோடு பேசிக்கொண்டு வந்தவரான   பக்கத்து சீட் பாசில் நானா அவனைத் தனது சகாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் பலர் நன்கு படித்தவர்களாகவும் உயர் பதவியில் இருப்போராகவும் காணப்பட்டார்கள். ஒருவரையொருவர்  விசாரித்தறிந்து அளாவளாவிக் கொண்டிருந்த போது பஸ்ஸின் பின்புறமிருந்து உலோகச் சாவிகளின் உராய்தல் ஒலிகள் கேட்க ஆரம்பித்தன.

அப்போது தாடிமனிதர்களின் தலைவர் போன்றிருந்தவர் திடீரென எழுந்து நின்று, 'இறுக்கமான ஆன்மீகப் பின்பற்றுதலின் அவசியம்' பற்றிய போதனையொன்றைச் செய்ய ஆரம்பித்தார். மரத்தினடியில் அது நிகழ்ந்து கொண்டிருக்கும் போது பஸ்ஸின் சாரதியும் கண்டக்டரும் மிகவும் சிரமத்துடன் பஸ்ஸின் உதிரிச் சக்கரத்தை தனியாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சனநடமாட்டம் குறைவான இடமென்பதாலும் பஸ்ஸில் சாதாரண பயணிகள் குறைவு என்பதாலும் போதிய உதவியின்றி அவர்கள் இருவரும்  கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

'எக்ஸ்க்யூஸ்மீ, பாசில் நானா!'

' ஷ்ஷ்! எங்க தம்பீ! போறீங்க? இருங்க, இது முடிய ஒரு கூட்டுத் துஆ ஒன்று இருக்கு.. கலந்துக்குவோம்' என்றார் எனது பக்கத்துசீட்!

'என்ன? ஏன் திடீரென்று துஆ?'

'அது வந்து...இதே போல இனி வழியில எந்தக் கரைச்சலும் வராம இருக்கிறதுக்கு அல்லாஹ்வுக்கிட்ட..'

'ஓ! அப்படியா? இருங்க நானா, அந்தா அவங்க ரெண்டு பேரும் பாவம் டயரை மாத்திறதுக்கு தனியாக் கஷ்டப்படுறாங்க. வேற ஆக்களும் இல்லப் போலிருக்கு..கொஞ்சம் ஹெல்ப் ஒன்று கொடுப்போம்!' என்றபடி அவர்களிடமிருந்து விலகி வீதியில் நின்ற பஸ்ஸை நோக்கி நடந்தான் இம்தியாஸ். அருகிலிருந்த சிறுமரக்கிளையில் டீ சேர்ட்டைக் கழற்றிக் கொழுவி ஜீன்ஸை மடித்துக் கொண்டு   சாரதியுடன் நின்று டயரை மாற்றுவதற்கு உதவ ஆரம்பித்தான். அவனைப் பார்த்துவிட்டு வேறு சிலரும் உதவிக்கு வந்தனர்.

அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து வெய்யிலில் நின்று வியர்வை வழிய டயரை மாற்றிக் கொண்டிருக்கும் போது நிழல்வாகையின் கீழ் நின்று இனி வரப்போகும் இடையூறுகளுக்காக துஆச் செய்து கொண்டிருந்தார்கள், அந்தத் தாடி மனிதர்கள்.

ஒருவழியாக முக்கால் மணிநேரத்தில் பஸ் பயணத்திற்குத் தயாராகி விட்டது.
வேலைமுடிந்த களைப்பிலே சாரதி கண்டக்டர் உட்பட அனைவரும் சாலையோரமிருந்த ஓர் இளநீர் கடையை நோக்கிச் சென்றனர். இளநீரைக்குடித்துக் கொண்டிருக்கும்போது பஸ்ஸின் சாரதியும் கண்டக்டரும் இம்தியாசின் மீது மிகவும் மதிப்புடன் நடந்து கொண்டார்கள். அவனது கண்டிக்குச் செல்லும் பயணத்தின் அவசரத்தை விசாரித்து வீணாகிய நேரத்தை எப்படியும் இனிவரும் ஓட்டத்தில் பிடித்துவிடலாம் என்று உறுதியளித்தார்கள்.
பஸ் மீண்டும் புறப்பட்டது.

'என்ன தம்பி, கையெல்லாம் க்ரீஸ் போல? நல்லாக் கழுவியிருக்கலாமே' என்றார் பாசில்.

'ஓமோம்! சோப் எதுவுமில்ல! பரவாயில்ல உங்கட கையெல்லாம் நல்ல சுத்தமா இருக்குத்தானே?'

அப்போது இரண்டு வயதான மனிதர்கள் தள்ளாடியபடி நின்றபடி  பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சுகவீனமுற்றிருந்தவர் போலத் தோன்றியது இம்தியாசுக்கு. அவர்  நிற்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் தடுமாறுவதை பஸ்ஸில் இருந்த தாடி மனிதர்கள் உட்பட அத்தனை பேரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யன்னலோரமாக இருந்ததால் இம்தியாசினால் சட்டென எழுந்திருக்க முடியவில்லை. அப்படியும் அருகிலிருந்த பாசில் நானாவிடம்  கூறிவிட்டு அவன் இடம்தர முனைந்த போது சட்டென பின்புறமிருந்த ஒரு வயதான பெண்மணி எழுந்து அந்த வயோதிபரின் கையைப் பிடித்து தனது இடத்தில் அமரச் செய்து விட்டு எழுந்து நின்று கொண்டார். அந்தப் பெண்மணியும் வயதான ஒருத்தி என்பதால் பஸ்ஸின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது தள்ளாடினார்.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
 

அந்தப் பெண்மணியிடம் தாடிமனிதர்கள் தமது சகாக்களுக்காக பிரயாணப்பைளை வைத்து இடம் போட்டு வைத்திருந்த  இருந்த இரண்டு சீட்களைக்காட்டி, அதிலே தற்காலிகமாக அமர்ந்து கொள்ளுமாறு சைகை காட்டினான் இம்தியாஸ். அதற்குத் தயங்கிய அந்தப் பெண்மணி, 'அணே எப்பா மகத்தயோ! மங் அலுத்ஓய லங்க பகிணவா நே! ஓண நெஹ மாத்தயா!' என்றாள், அந்தத்தாடி மனிதர்களைப் பார்த்தபடி. ஆனால் அவர்களோ ஒன்றுமே அறியாதவர்களாய்  யன்னலுக்கு வெளியே பார்த்தபடி இருந்தார்கள்.

'கமக் நெஹ!  உட்காருங்க. அவங்க ஏறுறதுக்கு இன்னும்
தூரமிருக்குக்குத்தானே? சீட்டகெ வாடிவென்ன அம்மே!' என்று  வற்புறுத்தியும் கூட அந்தப் பெண்மணி அவற்றில் இருக்க ஏனோ தயங்கினாள். இம்தியாஸ் தனது இருக்கையை விட்டு வெளியேறி வயதான அந்தப் பெண்ணை அதில் அமரவைத்துவிட்டு நின்று கொண்டே வந்தன்.

வயல்வெளிகளினூடாக வீசிய காற்று பஸ்ஸினுள்ளிருந்த அனைவரையும் கிறங்கடித்துக் கொண்டிருக்க சரியாக இருபது நிமிடங்களில் பஸ் கந்தளாய் மணிக்கூட்டுக்கோபுரச் சந்திக்கு வந்து சேர்ந்தது. இம்தியாசின் கால்கள் லேசாக வலி கண்டன.

'இறுங்கு! உண உண இறுங்கு!'

'கந்தளே ஹந்திய ஒக்கோம பகிண்ட!'  என்ற கண்டக்டரின் அதட்டலின் பின்பு பஸ் மீண்டும் விரைந்தது. கந்தளாய் ரயில் நிலையத்தைக் கடந்து போட்டங்காட்டுச் சந்தியில் திரும்பி பேராற்றுப் பள்ளிவாசலின் முன் நின்றது. அதிலே ஒரே ஒரு தாடிக்காரர் மட்டும் ஏறி உள்ளே வந்தார்.

' என்ன இது? நீங்க மட்டும் ஏறியிருக்கீங்க? மத்தவர் ரகீம் சாப் எங்க?' என்று கேட்டார் அவர்களின் தலைவர்.

'அதுவா? அவருக்குக் விடிய சுபஹோட கடுமையான வீசிங் மாதிரி வந்திட்டுது. நிலைமை கொஞ்சம் மோசமா இருந்திச்சு. ஒடனே பள்ளியில நைட்அவுட் நிண்டிருந்த குருநாகல் வேன் ஒண்டுல ஆள ஊருக்கு அனுப்பியாச்சு அமீர் சாப்! ஆள ஹொஸ்பிட்டல்ல சேர்த்திருக்காம். இப்ப கொஞ்சம் நல்லமாம் அவர்ர மகன் கோல் எடுத்தாரு இப்ப கொஞ்ச முந்தி!'

'யால்லாஹ்!... அல்ஹம்துலில்லாஹ்!' என்றார் தலையை ஆட்டிக்கொண்டு அமீர் சாப்.

மீண்டும் பஸ் கிளம்பிய போது இருவருக்காக இடம் போடப்பட்டு வைத்திருந்த இருக்கைகளில் கடைசியாக ஏறிய தாடிக்காரர் மட்டுமே அமர்ந்ததனால்  மற்றைய இருக்கை வெறுமையாக இருந்தது. 

இப்போது அவனுடன் அருகேயிருந்து பேசிக்கொண்டு வந்த மனிதரான பாசில் நானா பஸ்ஸில்  நின்று கொண்டிருக்கும் பயணித்த இம்தியாசையும் அந்த வெறும் இருக்கையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். அவனோ அவரைக் கவனிக்காமல் பஸ்ஸுக்கு வெளியே எதிர்த்திசையில் வேகமாய் ஊர்வலம்போகும் மரங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும் அவனது கவனத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக அவர் கையை அசைத்து சைகை செய்து கொண்டிருப்பது இம்தியாசின் ஓரக்கண்ணில் லேசாகத் தெரிந்தது. ஆனாலும் அந்தப்பக்கம் திரும்பாமலே நின்று கொண்டிருந்தான். நீண்ட நேரம் நின்று வந்ததால் கால்வலி உயிரை எடுத்தது.

சிறிது நேரத்தில் தனது முதுகில் வேறு யாரோ தொடுவதை உணர்ந்து அவன் திரும்பியபோது வயதான தாடிக்காரர் அமீர் சாப்  நின்றிருந்தார்.
' பரவாயில்ல, அந்த சீட்டில இருங்க தம்பீ..! எங்கட ஆள் ஒருவர் வரயில்ல சுகமில்லாம வீட்டுக்குப் போயிட்டாரு' என்று உற்சாகமாகக் கேட்டுக் கொண்டார்.

'  அடடா! எனக்காக எழும்பி வந்திருக்கீங்க போல இருக்கே..அமீர் சாப். மிச்சம் நன்றி! ஆனால் ஒன்று.  நான் நின்றுட்டு வரத்தான் விரும்புறேன்! தேங்ஸ்' என்று சற்றுத் தள்ளிப்போய் சாரதிக்குப் பக்கத்திலே நின்று கொண்டான், இம்தியாஸ் எனப்படும் முன்னாள் சரவணபவன்.

பஸ் இப்போது புதிய பாதையில் விரைந்து கொண்டிருந்தது.


-மூதூர் மொகமட் ராபி

Friday, February 17, 2012

"வரப்புயர!"






              தலைப்பைப் பார்த்ததும் சட்டென நமது சங்க காலத்துப் தமிழ் பெண் புலவர் அவ்வை மூதாட்டியின உருவம் அல்லது நடிகை கே.பி. சுந்தராம்பாளின் நினைவு உங்களுக்கு வரவில்லையென்றால் நீங்கள் நிவாரணத்துக்குக்கூட பாடசாலைப் பக்கம் அல்லது கறுப்பு-வெள்ளைப்படம் ஓடிய காலத்தில் தியேட்டர் பக்கம் ஒதுங்காத பேர்வழியாகத்தான் இருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் அரசவையில் புலவர்களும் வீற்றிருப்பார்கள். தமிழ்ப்படங்களில் காண்பிப்தைப்போல அரசர்கள் ஈட்டியுடன் அசையாது காவலுக்கு நின்றிருக்கும் சேவகனை 'யாரங்கே!' என்றெல்லாம் உண்மையில் அதட்டினார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் தம்மை அளவுக்கு மீறிப் புகழ்ந்து தள்ளிய புலவர்களுக்கெல்லாம் நிச்சயம் பரிசுகள் கொடுத்துப் பழக்கியிருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

சரி, விடயத்திற்கு வருவோம். ஒருமுறை அதியமானின் அரசவையில் புலவர்களெல்லாம் மன்னனை நீட்டி முழக்கிப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அவ்வை மூதாட்டியின் முறை வந்ததும் சட்டென ரெடிமேட் புகழாரங்கள்  எதுவும் மனுஷிக்கு ஞாபகம் வரவில்லையோ என்னவோ மன்னனைப் பார்த்து 'வரப்புயர!' என்று சிம்பிளாகச் சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிட்டதாம் கிழவி. இதென்னடா பெரிசு சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்லிவிட்டுப் போகுதே என்று அதியமான் திகைத்து பிறகு விளக்கம் கேட்க,

'வரப்புயர நீர் உயரும் - நீர் உயர நெல் உயரும் - நெல் உயர குடி உயரும்- குடி உயர கோன் (அரசன்) உயர்வான்'

என்றொரு விளக்கம் கொடுத்து அசத்தியதாம் மனுஷி.

இதை ஏன் இப்போது ஞாபகப்படுத்துகின்றேன் தெரியுமா? கடந்த ஒருவார காலமாக  நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மையப்பிரச்சினையாக எரிபொருள் விலையேற்றங்கள் இருந்துவருகின்றது. 

அரசு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை ஒவ்வொன்றாய் அதிகரிக்காமல் எரிபொருளின் விலையை மட்டும் அதிகரித்தது. ஆனால் அதனை அடுத்து இப்போது அன்றாடம்  தொடர்ச்சியாய் இடம்பெற்றுவரும் போக்குவரத்துக்கட்டணங்கள், மின்சாரக்கட்டணங்கள், நீர்வழங்கல் கட்டணங்கள், சீமந்து உட்பட கட்டிடப் பொருட்களின் விலையேற்றங்களை பார்க்கும் போது...


அவ்வையாரின்  அந்த 'வரப்புயர' தான் நினைவுக்கு வருகின்றது.


-மூதூர் மொகமட் ராபி

Tuesday, January 31, 2012

கிரிக்கட்:







எழுச்சிகளும் வீழ்ச்சிகளும்








கிரிக்கட் விளையாட்டில் என்ன நடந்தாலும் அது இன்றும் கனவான்களின் விளையாட்டாக -குறைந்தபட்சம் பெயரளவிலாவது- கருதப்பட்டுத்தான் வருகின்றது. ஆனால் காலத்துக்குக் காலம் அவ்விளையாட்டில் நாட்டாண்மை செய்பவர்கள் மட்டும் சங்கீதக் கதிரை விளையாட்டுப் போல மாறிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில் எகிறும் வேகப்பந்து வீச்சால் மிரட்டி ஏனைய அணிகளை ஆக்கிரமித்து ஆட்டிப்படைத்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி. பின்பு அது மெல்ல மெல்ல சுழல்பந்து வீச்சாளர்களின் கைகளுக்குத் தாவியதிலே முறையே இந்திய பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய துணைக்கண்ட அணிகளின் ஆக்கிரமிப்புகளும் உருவானது.

அதன் பின்னர்  பாகிஸ்தான் அணியின் வழியில் வேகத்தையும் சுழலையும் பயன்படுத்தி ஆனால் சரியான விகிதத்தில் கலந்துகட்டி ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக அவுஸ்திரேலிய அணி மேலாண்மை செய்து கொண்டிருந்தது. அதன் பின்னர் அண்மைக் காலத்தில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மாற்றி மாற்றிப் பலம்பெற்று வந்திருந்தன.

ஒருகாலத்தில் ஆட்டிப்படைத்த அணிகள் ஒரேயடியாகச் சரிவுக்குள்ளாவதும் வீழ்ந்து கிடந்த அணிகள் பலம்பெற்று எழுவதுமான போக்குகள் தொடர்ந்தாலும் அண்மைக்காலத்தில் டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தரப்படுத்தல்களை அறிமுகப்படுத்திய பின்னர் அதில் முதலிடத்தைப் பெறுவதற்கும் அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கும் முக்கிய அணிகளுக்கிடையில் பெரும் இழுபறிகள் நிகழ்ந்து வருகின்றதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அதுவும் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி தனது நீண்டகால  முதலிடக் கிரீடத்தைப் பறிகொடுத்த பின்னர் அந்த இடத்திற்கான இழுபறிகள் சூடுபிடித்தன. 2011 உலகக்கிண்ணச் சாம்பியனான இந்திய அணி துணைக்கண்டத்தில் நிகழ்ந்த டெஸ்ட் தொடர்களை வென்றவுடன் அந்த இடத்தை எட்டியது. இருந்த போதிலும் அதிலே நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து, திறமையான வீரர்கள் இருந்தும் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும்  உட்பூசல்களால் துவண்டு கிடந்த பாகிஸ்தான் அணியை காயடித்து முதலிடத்தை எட்டி இன்றுவரை அதில் இருந்து வருகின்றது.

இந்த நிலையில்தான் வலுவான நிலையில் இருந்த இந்தியாவுக்குச் சோதனைக்காலம் 2011ன் பிற்பகுதியில்  ஆரம்பித்தது. அனுபவம் வாய்ந்த Big Three  எனப்படும் சச்சின்,ட்ராவிட், லக்ஷ்மன் ஆகியவர்களையும் சேவக், டோனி, காம்பிர், விராட் கோஹ்லி, சகீர்கான் ஆகிய நட்சத்திர வீரர்களையும் நம்பி இங்கிலாந்தில் களமிறங்கியது. ஆனால் நான்கு டெஸ்ட்கள் கொண்ட தொடரில் அவர்களுக்கு ஒரு போட்டியைத்தானும் வெற்றிபெற...வெற்றிபெறுவது இருக்கட்டும் தோல்வியைத் தவிர்க்கும் வகையில் draw (சமநிலை) செய்யக்கூட முடியவில்லை. முழுமையான வெள்ளையடிப்பு! (Whitewash)


மறுபுறம் 2010ம் ஆண்டில் இங்கிலாந்துத் தொடரில் தொடரைப் பறிகொடுத்துத் தோல்வியடைந்தது மட்டுமன்றி Spot-Fixing  ஆட்ட நிர்ணயச்சதியில் சிக்கி தனது மூன்று முக்கிய வீரர்களையும் இழந்து  ஊமைக் காயமடைந்திருந்த பாகிஸ்தான் அணியை ஆண்டு 2011 வெற்றிகளால் ஒத்தமிட்டது.



 அடிபட்ட புலியாகி பாகிஸ்தான் அணி சிலிர்த்து எழுந்ததில், அந்த ஆண்டில் மட்டும்  நியூசிலாந்து,  இலங்கை சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளைப் புரட்டிப் போட்டது. அந்த நான்கு தொடர்களையும் தோல்வியின்றியே வென்றிருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் மட்டுமே ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டது. அதிலும் தொடரை சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 கெப்டன் கூல் மகேந்திரசிங் டோனி தலைமையிலான இந்திய அணிக்கு மீண்டும் கடந்த 2011 கிறிஸ்மஸ் தினத்தை அடுத்து வரும் Boxing Day (மோதல் தினம்) முதல் கொண்டு இவ்வருடம் ஜனவரி வரை அவுஸ்திரேலியாவில் காயடிப்பு ஆரம்பமானது. முதல் மூன்று போட்டிகளையும் இன்னிங்ஸ்களால் அதுவும் ஐந்து நாட்கள் கூட காத்திருக்காமல் தோற்று முடித்தார்கள். சரி, தொடர்தான் கைநழுவிப்போனது கடைசியும் நான்காவதுமான டெஸ்ட்டில் ஓர் ஆறுதல் வெற்றியாவது தருவார்களா? என்று பார்த்தால்...வெற்றியென்ன  ஆறுதல் ட்ரா கூடத் தரவில்லை. 





ஆனால் ஓரேயொரு விடயம் ஆறுதல். என்ன தெரியுமா? அதாவது கடைசித் தோல்வியை மட்டும் பெரும் பிரயத்தனம் பண்ணி ஐந்தாம் நாள் வரை கொண்டு சென்றதுதான். அதிலும் இன்னிங்ஸ் தோல்வியையும் ஆஸி அணித்தலைவர் மைக்கல் க்ளார்க் புண்ணியத்தில் -அவர் follow on கொடுக்காமல் இரண்டாம் இன்னிங்ஸை விளையாடியதால்- தவிர்த்திருக்கிறார்கள். அந்தத் தொடரின் ஒரேயொரு இந்தியச் சதத்தை விராட் கோஹ்லி மட்டும் முதல் இன்னிங்ஸில் அடித்திருந்தது மட்டுமே வித்தியாசம்.


அதேவேளை புதிய ஆண்டான 2012ஐயும்  வெற்றிகரமாகத் துவக்கியுள்ளது பாகிஸ்தான் அணி. மிஸ்பா-உல்-ஹக் தலைமையிலான டெஸ்ட் அணி தரநிலையில் முதலிடத்திலுள்ள இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சித் தோல்விகளைப் பரிசளித்து வஞ்சம் தீர்த்துள்ளது. பாலைவன மைதானங்களில் நடந்து வரும் 3 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் 10 விக்கட்டுக்களால் அபார வெற்றியீட்டிய பாகிஸ்தான் இரண்டாவது போட்டியிலே  வெறும் 145 என்ற சுலபமாக இலக்கைத் துரத்தி இலகுவாக வெற்றியீட்டியிருக்க வேண்டிய ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர்களை சுழலில் சிக்கவைத்து 72 ஓட்டங்களால் வீழ்த்தித் தொடரையும் கைப்பற்றியுள்ளது.



 

இதை வேறுவிதமாகச் சொன்னால் 2010ல் இங்கிலாந்து மண்ணில் பெற்ற தோல்விக்கும் அவமானங்களுக்குமாய்ச் சேர்த்து அபுதாபியின் பாலைவன மண்ணில் வைத்துச் சூடாக பழிவாங்கியுள்ளது. இதை நான் எழுதுகையில்(2012.01.29) மேலும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமுள்ளது. அதிலே எதுவும் நடக்கலாம். எனினும் இந்தத் தொடர் வெற்றி பாகிஸ்தானுக்கு புதுரத்தம் பாய்ச்சியிருக்கும் என்பதிலே சந்தேகமில்லை.



அதேவேளை தொடர்ச்சியாக இரு தொடர்களிலே எட்டு டெஸ்ட்களைத் தோற்று நொந்து நொதித்துப் போயிருக்கும் இந்திய அணியை விமர்சனக் கணைகளால் சரமாரியாக குத்தியெடுக்கின்றார்கள் ஊடக வாலாக்கள். ஆனால் ஒன்று இந்திய அணி சிறிய ஒரு வெற்றியைப் பெற்று விட்டால் போதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அளவுக்கு மீறி ஆடுபவர்களும் இதே ஆட்கள்தான். வெற்றிகளின் போது புகழ் வெளிச்சத்தில் மறைக்கப்படுகின்ற பலவீனங்களெல்லாம் தோல்வியடையும்போதுதான் கோரமாய்ப் பல்லிளிக்கும் என்பது இந்திய அணிக்கு மட்டும் எப்போதும் நன்கு பொருந்தும்.


இந்தியா,இலங்கை போன்ற துணைக்கண்டத்துக்குரிய கிரிக்கட்  நிர்வாகத்தினரின்  மீது ஒரு வழமையான விமர்சனமுள்ளது. அதாவது சுற்றுலா அணிகளைத் தமது சொந்த மைதானங்களில் எதிர்கொள்ளும்போது ஆடுகளங்களை பெரும்பாலும் தமக்குச்  சாதகமான வகையில் மட்டுமே தயாரிப்புச் செய்வது. இதனால் பொதுவாக சுற்றுலா அணிகளை  இலகுவாக வெற்றி பெற்றுவிடுவது வழமை. ஆனால் இங்கிலாந்து, நியூசிலாந்து,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் மைதானங்களில் வேறுபட்ட காலநிலை நிபந்தனைகளின் கீழ் விளையாடும்போது சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது. அந்த மைதானங்களில் எகிறிவரும் வேகப்பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறுகின்றார்கள்.


இதற்குப் பதிலாக,  சொந்த மைதானங்களைத் தனியே சுழல்பந்து வீச்சுகளுக்கு மட்டுமல்லாமல் இரு அணியினருக்கும் ஏற்ற விதமாக நடுநிலையாக சமதரத்தில் களத்தயாரிப்புச் செய்து ஆடிவரும்போது அதனால் கிடைக்கும் நீண்டகால பலன் மூலமாக வெளிநாடுகளிலும் நடுநிலை மைதானங்களிலும் வெற்றி பெறக்கூடிய வல்லமை கிடைக்கும். மாறாக உள்நாட்டில் தோற்று விடுவோமோ என்று எதிர்மறையாகச் சிந்தித்து ஆடுகளங்களைத் தயார் செய்தால் இங்கிலாந்து, நியுசிலாந்து போன்ற நாடுகளின் மைதானங்களில் வெற்றிபெறுவதையோ தோல்விகளைத் தவர்ப்பதையோ நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. இந்த உண்மைகளை என்றோ உணர்ந்து செயற்பட்டிருந்தால் இன்றைய இந்திய அணியின் பரிதாப நிலை  தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது கிரிக்கட் வல்லுனர்கள் பலரின் கருத்தாகும்.



 
நடந்து முடிந்த இரட்டை வெள்ளையடிப்புக்கு வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் ட்ராவிட் போன்றோர் நொண்டிச் சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டிராமல் இனிமேலாவது மேற்கூறியவை போன்ற விமர்சனங்களை  கருத்தில் கொள்வார்களா பார்க்கலாம்?

-'Mutur' Mohammed Rafi


Monday, January 23, 2012

ஒரு வரலாற்றுத் தொடர்கதை:







இறங்குதுறை புளிமரம்




அத்தியாயம் 1









'ராபர்ட்! ராபர்ட்! மேலே ஓடி வா!'


ஸ்டீபனின் கூக்குரல் கேட்டு கண்விழித்தேன். 'நாம்  வந்து சேர்ந்து விட்டோம்! ஹோ....!'


அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு கப்பலின் மேல்தளத்துக்கு ஓடிவந்தேன். ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கும் ஸ்டீபனைத் தள்ளி விட்டு கண்களைச் சுருக்கியபடி கடலை உற்று நோக்கினேன். செம்பிழம்பாய் தகிக்கும் இளஞ்சூரியனின் கீழே வெகுதூரத்திலே பச்சைக் கம்பளமாய் ஜொலித்தது கரையோரம். மகிழ்ச்சி மேலிட ஓடிவந்து ஸ்டீபனை இறுகக்கட்டிக் கொண்டேன்.



இங்கிலாந்தின் கரையில் மீண்டும்  நாங்கள் கால்பதித்த போது என்னை மீறி அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கப்பலை விட்டிறங்கியதும் தரையிலே முழந்தாளிட்டு அமர்ந்து விட்டேன். கடலோரப் பாறைகளின் முதுகிலே மோதிச்சிதறும் அலையோசைகளின் பின்னணி இசையில் கண்களை இறுகமூடிப் பிரார்த்தனை புரிந்தேன். மார்பிலே சிலுவை கீறி  தாய் மண்ணை முத்தமிட்டு எழுந்து நின்றேன்.



'பரிசுத்த பிதாவே, உமக்கு எனது நன்றிகள்!'



இதே துறைமுகத்தின் கரையிலிருந்து நாங்கள் புறப்பட்டுச் சென்ற அந்த ஜனவரி மாதத்தின் காலைப்பொழுதை எனக்கு நன்றாக ஞாபகமிருந்தது.  அதை இன்று தெரியும் துறைமுகத்துடன் பொருத்திப் பார்க்க முயன்று  தோற்றுப் போனேன். பூமிப்பந்தின் உச்சியிலே பரந்து கிடக்கும் ஆட்டிக் சமுத்திரத்தையும் ஆகாயத்தையும் தவிர இங்குள்ள எல்லாமே மாறிவிட்டதைப் போலிருந்தது. யாருமே தெரிந்த முகங்களாக இருக்கவில்லை. நான் வந்திறங்கிய கப்பலின் பாய்கள் சுருக்கிக் கட்டப்பட்டு முடிந்ததும் சரக்குகள் இறக்கும் பணி ஆரம்பமானது.


'ராபர்ட்! அதோ அந்தக் குதிரை வண்டி என் கிராமத்துக்குப் போகிறாதாம். நான் போய் வருகிறேன்டா!' என்று தழுதழுத்தவன் என்னைப் பிரிய மனமின்றி அப்படியே இறுகக்கட்டிக் கொண்டான். ' வா ராபர்ட்! என் கிராமத்துக்கே போய்விடலாம்.. போய்விட்டு வரலாம்!'

'இல்லை..ஸ்டீவன்..வேண்டாம். நீ போய் உன் ஆட்களைப் பார்த்துவிட்டு பிறகு வா! உன்னைப் போலவேதான்..எனக்கும் என்னுடைய உறவுகளைப் பார்க்கும் ஆவல் கொல்லுகிறதடா. போய்வா! ஆண்டவன் அருளட்டும் உனக்கு!' என்று வழியனுப்பி வைத்தேன்.

' உன்னை அடுத்த வாரம் வந்து சந்திக்கிறேன் ராபர்ட்!' என்று கத்திக் கொண்டே குதிரை வண்டியில் ஏறி மறைந்தான் அவன்.


அங்குமிங்குமாக ஊடாடித் திரியும் பரபரப்பான துறைமுக மனிதர்களுக்கிடையே எனது உறவுகள் யாராவது வந்திருக்கிறார்களா என்று ஒவ்வொரு முகத்தையும் ஆவலாகத் தேடின எனது விழிகள். யாரையுமே காணவில்லை. எப்படி வருவார்கள்.. நானென்ன கிழக்கிந்தியக் கம்பனி நிருவாகத்தை நேரிலே கண்டறிய இந்தியாவுக்கு பயணம் செய்து விட்டுப் பரிவாரங்களுடன் வந்திறங்கும் இங்கிலாந்தின் சக்கரவர்த்தியா என்ன? கேவலம் ஒரு சாதாரண மாலுமியின் மகன். அதுவும் 20 ஆண்டுகளாய் தாய் நாட்டுடன் எதுவித தொடர்புமின்றி 'காணாமல் போனவன் '!


ஆம்!



பிரமாண்டமான வர்த்தகக் கப்பல் ஒன்றின் மாலுமிகளில் ஒருவானாய்ப் புறப்பட்டுச் சென்றவன்,   சிறிய சரக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலே கிடைத்த இடத்தில் ஒண்டிக் கொண்டு ஒரு திருடனைப் போல வந்திறங்கினால்  வரவேற்பதற்கு யார்தான் வருவார்கள்?



என்னைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் துறைமுக மனிதர்களைச் சிறிது நேரம்  வெறித்துப் பார்த்து விட்டு ஒரு வேதனைச் சிரிப்புடன் எழுந்து நின்றேன். பின்பு கீழ்த்திசையிலே கம்பீரமாக எழுந்து நிற்கும் மாதா கோயிலின் கோபுரத்தை நோக்கி மெல்ல நடக்கலானேன்.



1658ல் ஜனவரி மாதத்தின் கடைசிவாரத்தில் இதே துறைமுகத்திலே இருந்து நானும் எனது தகப்பனாரும் நண்பர்களும் கப்பலிலே புறப்பட்ட நாளை எண்ணிப்பார்த்தேன். அன்றைய தினம் அதிகாலை இதே மாதா கோயிலிலே பிரார்த்தனை முடித்து நாங்கள் அனைவரும் புறப்பட்ட நிகழ்வு ஏதோ நேற்று நடந்தது போல ஞாபகமிருக்கின்றது.



17 வயது வாலிபனாய் கப்பலிலே ஏறியபோது இத்தனை ஆண்டுகள் தாய் மண்ணையும் உறவுகளையும் பிரிந்திருக்கப் போகிறேன் என்றோ பெறுமதி மிக்க எனது வாலிபப்பருவத்தின் பெரும்பகுதியை உலகின் மறுகோடியிலுள்ள ஒரு சின்னஞ்சிறு தீவிலே வீணே அலைந்து திரிவதிலே கழிக்கப் போகிறேனென்றோ நான் அறிந்திருக்கவில்லை. அப்படி அறிந்திருந்தால் அந்தப் பயணத்தை நானும் எனது சகாக்களும்  நினைத்துத்தான் பார்த்திருப்போமா?



மனிதவாழ்க்கையின் பின்னே நடக்கவிருக்கின்ற சம்பவங்களை முன்கூட்டியே அறியும் வாய்ப்பு என்று ஒன்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.. உறவுகளையும் சொந்த மண்ணையும் பிரிந்திருப்பது எத்தனை கொடுமையானது என்பதை மனிதர்கள் நன்கு அறிந்து கொள்வதற்காகத்தான் இறைவன் இத்தகைய அனுபவங்களைக் தருகின்றாரோ என்னவோ.. எத்தனை அலைச்சல் எத்தனை வகையான மனிதர்கள் எவ்வளவு சிரமங்கள் வேதனைகள்...ஆற்றாமைகள்!



நான்  14 வயதுச் சிறுவனாக இருந்தபோது ஏற்கனவே ஒருதடவை இந்தியாவுக்கு எனது தகப்பனாருடன் கடல் பயணம் சென்ற அனுபவம் உள்ளது. கடல் பயணங்கள் இலகுவானவை அல்ல. அலைக்கழிக்கும் சூறாவளிகளும் புரட்டிப்போடும் புயல் காற்றுகளும் தொற்று நோய்களும் நமது உயிரைக் குடிக்கக் காத்திருக்கும். குடிநீரும் உணவுப் பண்டங்களும் தீர்ந்து போனால் நிலைமை அவ்வளவுதான். குடிநீருக்காக அறிந்திராத தீவுகளிலே கரையிறங்கினால் அங்குள்ள ஆதிவாசிகளாலோ அல்லது கடற்கொள்ளையர்களாலோ கொல்லப்பட வாய்ப்புண்டு.




இவை மட்டுமல்ல கடலின் சில இடங்களிலே தீய ஆவிகளின் நடமாட்டம் பற்றிய கதைகள் கூட உண்டு.  இப்படியெல்லாம் அலைவதை விட சொந்த மண்ணிலேயே இருந்துவிடுவது விவேகமான விடயம்தான். ஆயினும் நமது வாழ்க்கையை சவால்கள் எதையுமே எதிர்கொண்டு சாதிக்காமல் உப்புச்சப்பின்றி வெறுமனே வாழ்ந்து கொண்டிருப்பதை விட உயிராபத்துமிக்க கப்பல் பயணங்கள் எவ்வளவோ மேலானது என்றுதான் இப்போதும் கூறுவேன்.




இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவன் திடீரென பிறிதொரு கண்டத்திலே சின்னஞ்சிறு தீவிலே வேறுபட்ட காலநிலையின் கீழே வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்ட மனிதர்களுடன் நீண்டகாலம் இணங்கி வாழ்வதென்றால் எவ்வளவு கடுமையானது. புதிய சூழல், புரியாத மொழி,  கரடுமுரடான பாதைகள், பழக்கமில்லாத உணவுகள், தொற்று நோய்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்ந்ததையும் இப்போது அங்கிருந்து  விடுதலையாகி சுதந்திரமாய் வந்துசேர்ந்ததையும் நினைத்தால் ஒருவித வேதனைச் சுகமாயிருந்தது.



இந்த உலகத்தின் மறுபுறத்திலும் மனிதர்கள் இருக்கின்றார்கள்.. அவர்களுக்கும் வாழ்க்கையுள்ளது.. பண்பாடுகள் கலாசாரம் உள்ளது என்பதை என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்வதற்காகவாவது குறைந்தபட்சம்  இந்த அனுபவங்கள் உதவியிருக்கின்றன என்பதை நினைக்கும் போதுதான் சிறிது ஆறுதலாக இருக்கின்றது. இவற்றைவிட அந்தச் சிறுதீவிலே எனக்கிருந்த மற்றுமொரு ஆறுதலான விடயம் என்று ஒன்றிருந்தால் அது எனது தோழி லூசியாதான்.



அத்தியாயம் 2








என்னையும் எனது உயிர் நண்பன் ஸ்டீபனையும் போலன்றி, என்னோடு வந்து அந்தத் தீவிலே வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டிருந்த சகபாடிகளில் பெரும்பாலனவர்கள்  தீவிலிருந்த சுதேசிப் பெண்களைத் திருமணம் முடித்திருந்தார்கள் அல்லது அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்படி எங்கள் கடல் பயணத்திலே துணையாக வந்திருந்த மாலுமிகளில்  ஒருவனுக்கும் அந்தத்தீவின் பூர்வீகக்குடிப் பெண்ணுக்கும் பிறந்தவள்தான் லூசியா.


ஐரோப்பியச் சிறுமிகளுக்கேயுரிய  உடல்வாகும்  வெளிர் நீலநிறக்கண்களும் அந்தத் தீவின் ஆதிவாசிகளுக்கேயுரிய கருமை நிறமும் சடைக் கூந்தலும் சேர்ந்த  கலவையாக இருந்தாள் அவள்.


நானும் எனது நெருங்கிய தோழன் ஸ்டீபனும் வாழ்ந்து வந்த கிராமத்து  வீட்டின் அருகில்தான் லூசியாவும் இருந்தாள்.  ஊரைச்சேரும் வழியுமின்றி உறவுகளைப் பார்த்திடும் வகையுமின்றி உடல் அலைச்சலும் மனவுளைச்சலுமாய் திரிந்த எனக்கு ஒரே நிழல்மரம் அந்தச் சிறுபெண்ணின் சகவாசம்தான்.

லூசியா அறிமுகமானதே ஒரு சுவாரசியமான கதைதான்.

தீவை விட்டு வெளியேறுவதற்கு நாங்கள் சரியான தருணம் பார்த்திருந்த கடைசி வருடங்களில்தான் லூசியாவின் அறிமுகம் ஏற்பட்டிருந்தது. கண்டி மன்னரின் அதிகாரிகளிடம் அனுமதிபெற்று கண்டி இராச்சியத்தில் மத்திய பகுதியிலிருந்த தென்னை மரச்சோலைகள் நிறைந்த கிராமமொன்றிற்கு வந்து சேர்ந்திருந்தோம். அங்கிருந்த விவசாயி ஒருவனிடம் சிறுபகுதி நிலத்தை வாங்கி வீடொன்றைக் கட்டி முடித்திருந்தோம். அந்த வீட்டைக் கட்டுவதற்காகச் சில பொருட்களைத் தேடி வாங்குவதற்காக கிராமத்துக்குள்ளே நடந்து சென்று கொண்டிருந்தோம்.

அதற்கு முன்பு எங்களைப் போன்றவர்களை பார்த்தேயிராத காரணத்தாலோ என்னவோ நாங்கள் சென்ற வழி முழுவதும் அந்தக் கிராமத்துவாசிகள் தங்கள் வேலைகளை நிறுத்திவிட்டு நின்று வேடிக்கை பார்த்தார்கள்.அவர்களில் சிலர் நாங்கள் கேட்பதற்கு முன்பே அவர்களாகவே ஏதோ ஒரு இடத்தை நோக்கி வழிகாட்டினார்கள். அவர்களது செயல் சரியாகப் புரியாமல் அவர்கள் காண்பித்த  ஒரு தென்னஞ்சோலைக்குள் நுழைந்தோம். அங்கு  கிடுகுகளால் வேயப்பட்டிருந்த கூரைகொண்ட மண் குடிசை ஒன்றிருந்தது. ஆனால் அந்தக் குடிசை அதுவரை அந்தத் தீவிலே பார்த்த குடிசைகள் போல இருக்கவில்லை. அதில் ஏதோ ஒரு வித்தியாசம் இருந்தது. 


சுதேசிகளின் குடிசைகள் பொதுவாகத் தாழ்வாகவும் அதன் நுழைவாயில்கள் ஒருவர் தலையைக் குனிந்து சென்றால் மட்டுமே உள்ளே நுழையக் கூடியதாகவும் இருக்கும்.  ஆனால் இதுவோ நன்கு உயரமானதாகவும் விசாலமான வாயில் கொண்டதாகவும் அமைக்கப்பட்டிருந்தது.


அந்தக் குடிசை வீட்டின் வெளியே பெண்கள் பலர் கூடி தென்னோலைகள் பின்னிக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள்  குழந்தைகளைச் சுமந்தபடி வேலை செய்யும் பெண்களுடன் அளாவளாவிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் இடுப்புகளில் ஏறத்தாழத் விழுந்து விடுவதுபோல குழந்தைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்களைக் கடந்து செல்கையிலே தற்செயலாக நீலநிறக் நிறக்கண்களையுடைய குழந்தை ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு நின்று விட்டேன் நான்.







அந்தக் குழந்தையின்  கண்களும் முகவெட்டும் அவளின் தாய்போலிருந்த சுதேசிப்பெண்ணுக்கு மட்டுமல்ல அந்தச்சூழலுக்கே கூடப் பொருத்தமின்றி தனியாகத் நெருடிக் கொண்டிருந்தது. ஒருவித சந்தேகத்துடன் அந்தப் பெண்ணை நெருங்கிச் சென்று நான் பேசவிழைந்த போதுதான் அந்த அதிசயம் நடந்தது. அந்தப் பெண் குடிசைக்குள்ளிருந்த யாரையோ உரத்து அழைத்தாள். அதைக்கேட்டு வெளியிலே வந்து பார்த்தவன் யார் தெரியுமா?


அவன்தான் எங்களோடு வந்து இந்தத் தீவில் மாட்டிக்கொண்டவர்களில் ஒருவனான மாலுமி X.  அவன் சில நாட்கள் எங்களோடு இருந்துவிட்டு கண்டி அரசனின் அதிகாரிகளின் காலாட்படையில் வேலைதேடிக்கொண்டு பிரிந்து சென்றவன்.


அவனைக் கண்டதும் முதலிலில் அடையாளம் புரியவில்லை. ஐரோப்பிய உடல்வாகையும் நிறத்தையும் தவிர ஏறத்தாழ சுதேசிகள் போலத்தான் தோன்றமளித்தான். உள்நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டு அவர்களைப் போலவே ஆகியிருந்தான். அவனுக்கும் எங்களைக் கண்டதில் வெகு ஆனந்தம். எங்களை உபசரித்து தன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். எங்களைப் பிரிந்து சென்றபின் நடந்தவற்றையெல்லாம் கேட்டறிந்து கொண்டதோடு நாங்கள் அந்தக் கிராமத்துக்கு வந்திருப்பதன் காரணத்தையும் தெரிந்து கொண்டு வீடு கட்டுவதற்குத் தேவையான பண்டங்ளை பெறுவதற்கும் உதவினான் அவன்.


சுதேசப் பெண்ணுடனான மணவாழ்க்கை காரணமாக எங்களையும் விட கண்டியச்  சிங்கள மொழியை நன்கு பேசப் பழகியிருந்த அவன், எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு தனக்கு ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதற்கு நாங்கள் கிடைத்திருப்பதாகக்கூறி மகிழ்ந்தான். இவை எல்லாவற்றையும் விட அவன்  சற்று முன்பு வரும் வழியில் பார்த்த நீலக் கண்கள் கொண்ட குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து அது தனது மகள்தான் என்று காட்டியதுதான் முக்கிய விடயம். அந்தக் குழந்தைதான் பின்னர் எனது சிறு தோழியான லூசியா.



குழந்தை லூசியாவை கண்ட அந்த நாள் முதல் அவள் என் மனதில் இடம் பிடித்து விட்டாள். அதன் பிறகு தினமும் குழந்தையை நானும் ஸ்டீபனும் குடியிருந்த வீட்டிற்கு அழைத்து வந்து பேசிக் கொண்டிருப்பது X க்கு வாடிக்கையானது. அவளோடு விளையாடுவதிலும் அவளை ஓர் ஆங்கிலச் சிறுமி போலவே உடைகள் தயாரித்து அலங்கரித்து மகிழ்வதிலும் எனக்கு திருப்தியாக இருந்தது. தினமும் அவளுக்கு ஆங்கிலத்தைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் சொல்லிக் கொடுப்பது அவளுடன் விளையாடுவது அவளை அழைத்துக் கொண்டு நடை பயில்வது என்று... சொல்லப் போனால் சிறுமி லூசியா எனக்கும் ஸ்டீபனுக்கும் மற்றும் எங்களோடு இருந்த மற்றைய தோழர்களுக்கும் செல்லப் பிள்ளையாகி விட்டாள்.


அந்தத் தீவை விட்டுத் தப்பி வந்ததிலே அவளது பிரிவு ஒன்றுதான் இன்னும் எனக்கிருக்கும் ஒரே வேதனை. பாவம் அவள். நான் இங்கு நலமாக வந்து சேர்ந்திருப்பதை யார் மூலமாவது அவளுக்குத் தகவல் அனுப்பி வைக்க வேண்டும்.




அத்தியாயம் 3







 ந்தத் தீவிலே கண்டி இராச்சிய மன்னர் ரத்கசிங்கனின் கைதிகள் நாங்கள். ஆனாலும் கைதிகள் எங்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது  விநோதமான ஒரு தண்டனை. அதாவது நாங்கள் கண்டி மன்னரின் இராச்சியத்துக்குள்  எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அங்குள்ள பெண்களைக் காதலித்தோ முறைப்படியோ திருமணம் புரியலாம்.  தொழில்களைச் செய்யலாம். ஆனால் அங்கிருந்து தப்பிச் செல்வது மட்டும் முடியாது. அந்த இராச்சியத்துக்குள் எங்கு சென்றாலும் மன்னரின் அதிகாரிகளின் கண்காணிப்பு இருந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக எல்லைப் பகுதிகளிலே நடமாடும் போது இத்தகைய கண்காணிப்பு அளவுக்கதிகமாக இருப்பதுண்டு. ஐரோப்பியர்களான எங்களை இலகுவில் அடையாளங் காணமுடியுமென்பதால் அங்குள்ள மக்களே மன்னரின் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லி விடுவார்கள்.



அந்தப் பசுமையான தீவில் அலைந்து திரிந்திலே அங்கு வாழும் மக்களின் குணாதிசயங்களும் அவர்களது மொழியும் எங்கள் எல்லோருக்கும் ஓரளவு பழகிவிட்டிருந்தது. இதனால் எங்களில் பலர் அந்த தீவின் மலைவாழ் பெண்களுடன் பழகலானார்கள். அவர்களைக் குற்றம் சொல்லவும் முடியாது. எத்தனை காலம்தான் இந்த விநோதமான திறந்தவெளிச்சிறை வாழ்வைத் துணையின்றித் தனிமையிலே கழிப்பது. வயிற்றுப் பிழைப்புக்காக தொப்பிகள் தயாரித்து விற்பது நெல்தானிய வியாபாரம் செய்வது என்று வயிற்றைக் கழுவிப் பொழுதைக் கழித்தாலும்  இயற்கைத் தேவை  என்று ஒன்று உள்ளதல்லவா?



திறந்தவெளிச் சிறைவாழ்வின் அலைச்சல்களும் தோல்வியில் மட்டுமே முடிவடையும் எங்கள் தப்பிச் செல்லும் முயற்சிகளும் தாங்க முடியாத சலிப்பையும் விரக்தியையும் தரலாயின. நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி காலம் கழிந்து கொண்டிருந்தது. எனது கப்பல் சகாக்களிலே மிகவும் வயதில் குறைந்தவர்கள் நானும் எனது தோழன் ஸ்டீபனும்தான். மற்றவர்களெல்லாம் நடுத்தர வயதிற்கு வந்து விட்டார்கள். இனியும் இந்தத் தீவை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்பதிலே  நம்பிக்கைகள் வற்றித் தீர்ந்து விட்ட நிலையிலே அவர்கள் அந்த உத்தேசத்தை முற்றாகவே கைவிட்டு சுதேசிப் பெண்களைத் மணம் முடித்து வாழத் தொடங்கியிருந்தார்கள்.



எங்கள் சகாக்களில் பலருக்கு சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் உத்தேசம் கூட மெல்ல மறந்தே போனது. அவர்களைக் குற்றம் சொல்வதற்குமில்லை. ஆபத்தான கொடிய விலங்குகள் வாழும் காடுகளும் நீர்நிலைகளும் செங்குத்தான மலைக்குன்றுகளும் நிறைந்த இந்த இராச்சியத்தை விட்டு தப்பிச் செல்வது எங்களைப் போன்ற ஐரோப்பியர்களுக்குச் சாத்தியமில்லை. சீரான பாதைகளில்லை. வழிகாட்டிகளின் உதவியில்லை. அப்படித்தான் சிரமப்பட்டு காட்டின் வழியே சென்றாலும் காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் கூட எங்களைச் சுலபமாக அடையாளங்கண்டு மன்னனின் படையாட்களுக்குத் தகவல் கூறிவிடுவார்கள். தப்பிச் செல்ல முனைந்து பாதியிலே அகப்படுவதானது ஏற்கனவே எங்களுக்கு இருந்து வரும் சுதத்திரத்தைக் கூடத் தின்றுவிடும்.



இதையெல்லாம் அனுபவத்திலே நன்கு அறிந்தவர்களான எங்கள் சகாக்கள் அந்தத் தீவின் வாழ்க்கையை வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டதிலே ஆச்சரியமில்லைதான். நானும் எனது நண்பன் ஸ்டீபனும் மட்டுமே இந்த விடயத்திலே விதிவிலக்காக அங்கிருந்து தப்பிச் செல்வது என்பதிலே கடைசிவரை உறுதியாய் இருப்பதெனத் தீர்மானித்தோம்.


ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு புயலிலே மாட்டி எங்களது கப்பலின் பாய்மரம் முறிந்து நாங்கள் குடாக்கடலில் நங்கூரமிட்டுக் கிடந்தபோது நிகழ்ந்ததையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றேன்.


அது கி.பி.1659ம் ஆண்டு. கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான பிரமாண்டமான கப்பல் ஆன் இந்தியாவின் மசூலிப் பட்டினத்தின் துறைமுகத்தில் பிரிட்டிஷ் கொடிபறக்க கம்பீரமாக நின்றிருந்தது. கப்பலின் தலைவனாகிய எனது தந்தையார் ரொபர்ட் நொக்ஸ் கப்பலின் மேல்தளத்தில் நின்று கப்பல் புறப்படுவதற்குரிய கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அவரது மகனும் கப்பலின் உதவி மாலுமிகளில் ஒருவனுமாகிய நான் உட்பட ஏனைய பணியாளர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம். பாய்மரங்கள்  விரிக்கப்பட்டு அவற்றின் கயிறுகளின் உறுதிப்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன.

1657ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் திகதி முதல் இந்தியக் கரைகளின் துறைமுகங்களிலே தரித்து நின்று அங்குள்ள உள்ளுர் வியாபாரிகளிடம் புடவைகள், கம்பளங்கள் உட்பட  பல்வேறு விதமான சரக்குகளையும் கொள்வனவு செய்து ஏற்றிக்கொண்டு சரியாக இரு வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தை நோக்கிப் புறப்பட்டோம்.


இந்து சமுத்திரத்தின் கடல் அலைகளைப் பிளந்தபடி முன்னேறிக் கொண்டிருந்தது எங்கள் ஆன்.



அத்தியாயம் 4









ர்திரும்பப்போகும் மகிழ்ச்சியிலே மிகவும் உற்சாகமாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தோம்.


கப்பலெங்கும் ஒரே மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக இருந்தது. மசூலியின் தென்னங்கள்ளும் இந்தியச் சுருட்டுகளும் தாராளமாகப் புழங்கியது. ஆடல்களும் பாடல்களுமாய் குதூகலம் நுரைத்துப் பொங்கியது. 'இதோ பார்!  இதுதான் இந்தியப் பெண்களின் நடனம்' என்று அபிநயம் பிடித்து ஆடிக்காட்டினான் லவ்லேண்ட் என்பவன். அனைவரும் கைதட்டி ஆரவரிக்க ' ஹேய்! இதைப் பார்! இது நாகப்பாம்பு நடனம்!' என்று என்று இரு முழங்கால்களையும் மடித்து பின்புறமாக மடிந்து முதுகு தரையில் படுமாறு படுத்து இரு கைகளையும் ஒன்று சேர்த்து வளைந்து வளைந்து ஆடினான் அவன். அதற்கேற்றாற்போல மகுடி ஒன்றைக் கொண்டு வந்து ஊதினான் ஸ்டீவன்.

' ஏய்! அந்தக் கறுப்பு சலவைக்காரிதானே இந்த மகுடியை உனக்குப் பரிசளித்தாள்? உண்மையைச் சொல்லு!' என்று ஸ்டீவனைக் கலாயத்தான் லவ்லேண்ட்.

'இல்லை...இல்லை! நீ, 'முத்தம் கொடு!' என்று கேட்டுப் பின்னால் அலைந்தாயே  பாசி மணி ஊசி விற்கும் குறத்திப்பெண்... அவள்தான் கொடுத்தாள்'

'சரி, எனக்குத்தான் தரவில்லை உனக்காவது கொடுத்தாளா?'

' கொடுத்திருப்பாள்..அதற்குள் ஒருத்தன் வந்து கெடுத்து விட்டான்'

'யாருடா அது?   நம்ம மக்டொனால்டா?'

'இல்லடா, அவளுடைய புருஷன்!'


கப்பலே சிரிப்பால் அதிர்ந்திட, தூரத்தில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தவர்களோடு நின்றிருந்த எனது தந்தை  லேசாக முறுவலித்தார்.


ஆனால் எங்கள் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.


புறப்பட்டு ஒரு தினம் முடிவடைவதற்கிடையில் கிழக்கு வானம் சட்டென இருண்டு பெரும் புயலுக்குரிய அத்தனை அறிகுறிகளையும் காண்பிக்கத் தொடங்கி விட்டது. பாய்மரங்களை இறக்கிக் கொள்வதற்குக்கூட அவகாசம் தராமல் விரைந்து வந்த புயல்காற்று மழையுடன் சேர்ந்து சுழன்றடித்ததில் கப்பல் எங்கள் கட்டுப்பாட்டை இழந்து விட்டது.


'பாய் மரத்தை இறக்குங்கள்! விரைவாக இறக்குங்கள்!' என்று எனது தந்தையின் கட்டளை ஓலமிடும் காற்றினூடே கேட்டது ஆனால் அலைக்கழிக்கும் புயல்காற்று அதற்கு இடம் தரவேயில்லை. கப்பல் அலைகளின் மேல் சமநிலை தவறி அல்லாடிக் கொண்டிருந்தது. எனது தந்தை எத்தனையோ பல கப்பற்பயணங்கள் புரிந்த  அனுவபம் மிகுந்த ஓர் திறமையான மாலுமி. இது போன்ற பல கடற்புயல்களை நிறையப் பார்த்தவர்.  பாய்மரங்களை இறக்குவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டதும் சடுதியாக, 'பாய்மரங்களை வெட்டிச் சாய்த்து விடுங்கள்! யோசிக்க வேண்டாம் வெட்டிவிடுங்கள்!' என்ற கட்டளை அவரிடமிருந்து வந்தது. வேறுவழியின்றி உடனே அதனைச் செய்து முடித்தோம். அதன் பிறகு கப்பலின் அலைக்கழிவு ஓரளவு குறைந்தாலும் கடல் நீரோட்டத்தில் சிக்கி அது எங்கோ ஒருபுறமாக இழுபட்டுச் செல்வதை உணர்ந்தோம். எங்கு செல்கின்றோம் என்ன நடக்கப் போகிறது என்பது எதுவுமே புரியவில்லை. இழுபட்டுச் செல்லும் வேகத்தில் எங்காவது பாறைகளில் மோதினால் என்னாகும் என்பதை நினைத்துப் பாரக்கவே பயந்தோம்.


பின்னிரவில் ஆரம்பித்த அந்தப் போராட்டம் மறுநாள் அதிகாலை விடியும் வரை இடைவிடாமல் வரை நீடித்தது.




அத்தியாயம் 5










கிழக்கு வெளுத்தபோது புயலின் உக்கிரம் படிப்படியாகக் குறைந்து மெல்ல ஓய்ந்து போனது.


பளீரென விடிந்தபோது எங்கள் கப்பல் ஒரு விரிந்த குடாவுக்குள்ளே மிதந்து  கொண்டிருப்பது தெரிந்தது. தூரத்திலே கண்ணுக்கெட்டிய தூரத்திலே தென்னந்தோப்புகள் நிறைந்த மனித சஞ்சாரமற்ற வெண்ணிறக் கடற்கரை நீள நெடுகிலும் கோடிட்டுச் செல்ல தொடுவானம் கிழக்குப் புறமாகத் தெரிந்தது. ஒருவாறு கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தினோம். அது ஓர் ஆழமற்ற கடல்பகுதியாக இருந்தது. கலங்கல் நிறைந்த கடல் நீரையும் அதில் மிதந்து வரும் நீர்த்தாவரங்களையும் வைத்துப் பார்க்கும் போது கப்பல் ஓர் ஆற்றுமுகத்துக்கருகே வந்திருப்பது பரிந்தது முதலில் நாங்கள் இருப்பது எந்தப்பகுதியில் என்று யூகிக்க முடியவில்லை. புயல் கிழக்கிலிருந்து வீசியிருந்ததை வைத்துப் பார்த்தால் இந்தியாவின் கிழக்குக் கரையோரக் குடா ஒன்றுக்குள்தான் நாங்கள் வந்திருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் நினைத்தோம்.


முதலில் அதை ஏற்றுக் கொண்ட எனது தந்தை , பின்பு தேசப்படத்தை வைத்துக் கணித்து நாம் இருப்பது இந்தியாவின் தென்புறமுள்ள தீவிலிருக்கும் கிழக்குக் கரையோரத்தில் என்றார். அந்தத்தீவில் 'யக்காக்கள்' எனும் பேய் மனிதர்கள் இருப்பதாகத் தான் கேள்விப்பட்தையும் கூறினார். பின்புதான் நாங்கள் தரித்து நின்ற இடம் சிலோன் தீவின் திரிக்கோணமலையை அடுத்துள்ள கொட்டியாரக்குடா என்று அறிந்தேன்.


அன்று கொட்டியாரக்குடாக் கடலிலே நாங்கள் நங்கூரமிட்டுக் கிடந்தபோது இந்தத்தீவின் கரைகளில் இறங்கி கண்டி இராச்சிய மன்னன் ரத்க சிங்கவின் அதிகாரிகளின் பேராசைக்கும் சூழ்ச்சிக்கும் பலியாகி   பாரிய அனுபவங்களைப் பெறப்போகிறோம் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

கப்பலின் பாய்மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுச் சேதமடைந்து கிடந்தன. அவற்றைப் புதிதாக அமைத்தால் மட்டுமே பயணத்தைத் தொடரமுடியும். எனவே கரைக்குச் சென்று புதிதாக மரங்களைக் கொண்டு வந்து முறிந்துபோன பாய்மரங்களை திருத்திக் கொண்டு  மீண்டும் எங்கள் பயணத்தை தொடரலாம் என்று எங்கள் குழுவில் சிலர் நினைத்தார்கள். கரைக்குப் போகாமல் இருக்கும் கருவிகளைக் கொண்டு முறிந்த பாய்மரங்களை ஓரளவு திருத்திக்கொண்டு மீண்டும் மசூலிப் பட்டணத்துக்கே போய் அங்கிருந்து மீண்டும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லலாம் என்பது எனது அபிப்பிராயமாக இருந்தது.


கரைக்குப் போவதிலே இருக்கும் ஆபத்தை எண்ணித்தான் நான் எனது எண்ணத்தை வலியுறுத்தினேன் என்றபோதிலும் திருத்தியமைத்துச் செல்லும் பாய்மரத்தினால் சாதாரண காற்றைக் கூடத் தாங்க முடியாது என்பதை நானும் அறிந்துதானிருந்தேன். அதுமட்டுமன்றி, பெரும் சமுத்திரங்களைக் கடந்து வெகுதூரம் போகவேண்டிய கடற்பயணத்தில் நடுவழியில் திருத்தங்களை மேற்கொள்வதெல்லாம் சாத்தியமில்லை. தவிர, இந்த புயலினால் உண்டான தாமதத்தினால் உணவு, குடிநீரின் அளவும் குறைந்து விட்டதால் அவற்றையும் சேகரித்தாக வேண்டும்.
ஆனால் ஐரோப்பியர்களாகிய நாங்கள் கரையோரத்திற்குச் சென்று இறங்குவது அத்தனை நல்ல முடிவல்ல என்று தோன்றியது. எனவே எங்களோடு இந்தியப் புடவைகளை எடுத்து வந்திருந்த வியாபாரி ஒருவனை சிறுபடகு மூலமாக கரைக்கு அனுப்பிவைத்து அங்குள்ளவர்களோடு தொடர்பு கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். முதலில் இந்திய வியாபாரி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை எனினும் பின்பு எங்களில் சிலரும் துணைக்கு வருவதாகக் கூறியதையடுத்து சம்மதித்தான்.


ஆனால் எங்களுக்குச் சிரமம் எதுவும் வைக்காமல் கரையிலிருந்து சிறுபடகு ஒன்று எங்களது கப்பலை நோக்கி வரத் தொடங்கியது. அது படகு என்று கூடக் கூறமுடியாதபடி மிகச் சிறியதாகவும் ஒடுக்கமாகவும் இருந்தது. அதிலே வந்தவர்களில் படகோட்டிகளைத்தவிர ஏனைய இருவரையும் கயிற்று ஏணிகளின் உதவியுடன் கப்பலுக்குள்ளே வரவழைத்தோம். அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் விநோதமாக இருந்தன. அவர்கள் பேசிய மொழியை கப்பலில் வந்த இந்திய வியாபாரியால் கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவர்கள் எங்களோடு நட்புறவை விரும்புவதாகத் தெரிந்தது.



அவர்களது முகபாவனைகளையும் சைகைகளையும் வைத்து அவர்கள் அந்தப் பிரதேசத்தின் ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் என்று புரிந்து கொண்டோம். 'திசாவ'  எனும் சொல்லை பலமுறை உச்சரித்து  தம்மோடு கொண்டு வந்திருப்பதிருந்த பழங்களையும் மற்றும் சில வகைக் கிழங்குகளையும் தொட்டுத் தொட்டுக் காட்டியதிலிருந்து திசாவை எனும் அவர்களது எஜமானர் எங்களது வருகையை பெரிதும் விரும்புகின்றார் என்பதையும் அறிந்து கொண்டோம். ஆனால் அதெல்லாம். எங்களது வியாபாரக் கப்பலில் குவிந்திருந்த விலையுயர்ந்த பொருட்களை அபகரிக்கும் நோக்கத்திலே திசாவை என்பவன் எங்களைத் தங்களது வலையில் விழவைப்பதற்காகச் செய்த தந்திரங்களில் ஒன்று என்பதை பின்பு வெகுதாமதமாகத்தான் புரிந்து கொண்டோம்.



எங்களுக்கும் கரைக்குச் சென்று திரும்ப வேண்டிய தேவை இருந்ததால் திசாவையின் அழைப்பை ஏற்றுக் கொண்ட  கப்பலின் தலைமை மாலுமியான எனது தந்தையார் எங்களில் சிலரை கரைக்கு அனுப்பி வைப்பதெனத் தீர்மானித்தார். அந்தக் குழுவினரைத் தலைமை தாங்கி அழைத்துச் சென்று திரும்பும் பொறுப்பு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.



திசாவையின் ஆட்களின் படகுகள் வழிகாட்ட கரையை நோக்கிப் புறப்பட்டோம்.

கப்பலிலிருந்து நேரே தெரிந்த மணற்கடற்கரைக்குச் செல்லாமல் கண்டல் மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும் களப்புப் பகுதியினூடாகப் பயணித்து கொட்டியாபுர எனும் இடத்தில் நானும் எங்கள் குழுவும் கரையிறங்கினோம். அந்த இடம் பெருவிருட்சங்கள் நிறைந்த சோலையாக இருந்தது.  கரையிலே இறங்கியதும் சிறிது தூரம் நடந்து சென்றதும் ஒரு    கிளைபரப்பிய  விசாலமான பெரிய புளிய மரம் ஒன்று தென்பட்டது. அதன் கீழ் பற்றைச்செடிகள் எதுவுமின்றித் திடலாக இருந்ததால் அந்த மரத்தின் கீழே இளைப்பாறினோம்.



சிறிது நேரத்தில் நாங்கள் திசாவை என்று அழைக்கப்பட்டவன் மாடுகள் பூட்டிய கூடாரம் போன்ற வண்டியில்  சில ஆட்கள் புடைசூழ அங்கு  வந்திறங்கினான். அவனது காவலுக்கு வந்திருந்தவர்களின் கைகளில் கூரிய ஈட்டிகள் போன்ற கழிகள் இருந்தன. திசாவை நடத்தர உயரமுள்ள வாட்டசாட்டமுள்ளவனாக இருந்தான். அவனது உடைகள் விநோதமாக இருந்தன. புளிய மரநிழலில் அமர்ந்திருந்த எங்களைக் கண்டதும்  மிகுந்த மரியாதை செய்து வரவேற்றான்.

அவன் வந்தது போன்ற அலங்கரிக்கப்பட்டிருந்த மணிகள் ஒலிக்கும் மாட்டு வண்டிகளில் எம்மை ஏற்றி மணல் நிரம்பிய பாதையினூடாக தனது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். அந்த இடம் உறுதியான அடியைக் கொண்ட மரங்களடர்ந்த சோலையாகும். பனை ஓலைகளால் கட்டப்பட்ட வேலிகள் அதன் மத்தியில் சிறு மைதானம் போல திடல் இருந்தது. அந்தத் திடலைச் சூழ களிமண்ணால் மெழுகிக் கட்டப்பட்டு தென்னோலைகளால் வேயப்பட்டிருந்த சற்று அகலமான குடிசைகள் பல இருந்தன.  அவற்றில் ஒன்றிற்குள் நாங்கள் இளைப்பாறுமாறு விடப்பட்டோம்.

அங்கு வைத்து வாழை, பலா, மற்றும் நாங்கள் அறிந்திராத பழ வகைகளையும் நெருப்பில் வாட்டிப் பதப்படுத்திய இறைச்சியையும் உண்ணத்தந்து விருந்தளித்தான் திசாவை. தனது முகபாவங்களாலும் சைகையாலும் அவன் எனது தந்தையைச் சந்திக்க விரும்புவதாகவும் அன்றிரவு தங்களது விருந்தாளியாக எங்களைத் தங்கிச் செல்லுமாறு வேண்டினான். பாய்மரங்கள் அமைப்பதற்குரிய மரங்களைத் தேடிக்கொள்ள வேண்டிய தேவையிருந்ததால் அவனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டோம்.  மறுநாள் நாங்கள் பாய்மரத்தைக் கொண்டு படகுமூலமாய் கப்பலுக்கு கொண்டு சேர்த்ததும்  கப்பலின் தலைமை மாலுமியை கரைக்கு அழைத்து வருவதாகத் திசாவையிடம் உறுதியளித்திருந்தேன்.


அதன்படி எங்கள் குழுவில் ஒரு பகுதியினர் திசாவையின் ஆட்களோடு காடுகளுக்குள் சென்று தேவையான மரங்களைப் பெற்று வந்தனர். எங்களது கருவிகளைக் கொண்டு பாய்மரம் செப்பனிடும் வேலையையும் ஆரம்பித்தோம். எங்களது தச்சுக் கருவிகளையும் வேலைத்திறனையும் ஆச்சரியமாகப் பார்த்தவாறு நின்றிருந்தார்கள், திசாவையின் காவலாளிகள். பொழுது அடிவானத்திற்கு இறங்கி இருட்டும் போதுதான்  அந்த வேலைகள் முடிவடைந்தன.


இரவானதும் தேங்காய் எண்ணெய் மற்றும் விலங்குக் கொழுப்பை உருக்கிப் பெற்ற எண்ணெய்களில் திரிகள் வைத்த விளக்குகள் ஏற்றப்பட்டன. வீதிகளில் மக்கள் தீப்பந்தங்களோடு உலாவினார்கள். முக்கியமான சந்திகளில் காடா விளக்குகள் எரிந்தன. இரவு உணவுக்குப் பின்பு வேலைக் களைப்பின் அயர்வினால்  எல்லோரும் உறங்கலானார்கள்; என்னைத்தவிர.

  மறுநாள்  கப்பலின் தலைமை மாலுமியை அழைத்து வருவதாகத் திசாவையிடம் உறுதியளித்திருந்தாலும், பாய்மரங்களை கப்பலுக்கு எடுத்துச் சென்றதும் திரும்பி வராமல் சென்றுவிடுவதே எனது உள்நோக்கமாக இருந்தது. ஏனெனில் திசாவையின் அளவுகடந்த உபசரிப்புக்குப் பின்னால்  கபட நோக்கம் எதுவும் மறைந்து இருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்ததுதான் காரணம். ஆனால் அதை நான் எனது கூட வந்தவர்களிடம் காட்டிக் கொள்ளவில்லை.


அன்றிரவு மிகுந்த யோசனையுடன் கழிந்தது. 




அத்தியாயம் 6






றுநாள் பொழுது கானகப் பறவைகளின் இன்னிசைக்கச்சேரியுடன் புலர்ந்தது.

கடற்பறவைகளின் ஒலிகளை மட்டுமே கேட்டுக்கேட்டுப் புளித்துப் போய்க்கிடந்த கப்பல் தோழர்கள் எங்கள் காதுகளில் அந்த அழகிய குருவிகளின் சங்கீதம் தேன் வார்த்தது. எங்களது இக்கட்டான சூழ்நிலையையும் மறந்து அந்தப் பட்சிகளையும் அவற்றின் இனிய கீதங்களையும் ரசித்தவாறிருந்தோம்.


காலைப் பனியில் குளித்திருந்த மரங்களின் இலைகளிலிருந்து நீர் சொட்டியது. சிறிய வேம்பு மரக் கன்று ஒன்றின் தண்டுகளை உடைத்து பல்துலக்கியபடியே நாங்கள் இருந்த குடிசைப் பகுதியிலிருந்து சிறிது தூரம் நடந்து மேட்டுப்பகுதி ஒன்றிற்கு வந்தோம். அங்கிருந்த ஒர் உயர்ந்த மரத்தைத் தேர்ந்தெடுத்து ஏறினேன். அதன் உச்சிக்கு வந்ததும் அதுவரையில் நான் பார்த்திராத ஓர் அழகிய பரந்த நிலப்பரப்பு என் கண்முன்னே விரிந்தது. கிழக்குத் திசையில் மூடுபனிப்படலத்தினூடே ஆகாயத்துடன் ஒன்றிவிட்ட கடலும் சூரியக் கிரணங்களின் கீழே வெள்ளிப் பாம்புகளாய் பளபளத்து நெளியும்  கிளையாறுகளும் தென்பட்டன. அதன் கரையோரங்களில் தென்னை மரங்களும் பனைமரத்தோப்புகளும் இருந்தன.

முந்திய தினம் நாங்கள் வந்து இறங்கிய கரையோரப் பகுதியும் அதிலே நின்றிருக்கும் மனித சஞ்சாரமும் தெளிவாகத் தெரிந்தது. அந்தக் கரையோரம் பெரும்பாலும் சதுப்பு நிலமாகவே இருந்தது. ஓங்கி வளர்ந்த கண்டல் மரங்களும் நீண்ட இளம் பச்சை நிறமுள்ள புல்வகைகளும் சில இடங்களில் குட்டையாக வளர்ந்த பற்றைச் செடிகளும் இருந்தன.  ஏனைய மூன்று திசைகளிலும் அங்காங்கே தெரிந்த ஓரிரு சிறு குடிசைகள் தவிர கண்ணுக்கெட்டியவரை மரங்கள் அடர்ந்த காடுகளே தெரிந்தன. சில இடங்களில் புகை வருவதிலிருந்து அங்கு மனிதக்குடியிருப்புகள் இருப்பதை யூகிக்கக் கூடியதாக இருந்தது.  தென்கிழக்குத் திசையில் ஒட்டகங்களின் திமில்கள் போல வரிசையாகச் செல்லும் காடுகள் அடர்ந்த குன்றுகள் இருந்தன.


காலையில் எங்களுக்கு தடல்புடலான  உணவை ஏற்பாடு செய்திருந்தான் திசாவை. அதன் பின்பு கடலிலே நங்கூரமிட்டு நிற்கும் எங்கள் கப்பலுக்கு ஏதாவது செய்தி இருந்தால் தரலாம் என்றான். திசாவையின்  உதவியாட்கள் பலர் முன்பறமிருந்த திடலில் குழமி நின்றிருந்தார்கள்.  அவர்களது பேச்சிலிருந்து எங்கள் கப்பலுக்குரிய உணவுப் பொருட்களையும் முதல்நாள் மாலையில் நாங்கள் செய்து முடித்ததுத் தயாராக வைத்திருந்த பாய்மரத்தையும் அவர்களே  கொண்டு செல்லப் போவதாகத் தெரிந்தது. 



அதாவது தாங்கள் படகுகளில் சென்று கப்பல் தலைவனை வரவேற்று அழைத்து வரப்போவதாகவும்  எங்களை  ஓய்வெடுக்குமாறும் கூறினர். நாங்கள் சென்று எனது  தந்தையை அழைத்து வருவதாக முதல்நாளில் செய்திருந்த ஏற்பாடு இரவுக்குள் திசாவையினால்  மாற்றப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.  திசாவையின் உபசரிப்பில் கபட நோக்கம் இருப்பதாக நான் கருதியது ஏறத்தாழ உண்மையாகி விட்டதையும் உணர்ந்து கொண்டேன்.



கப்பலுக்கு எங்களை அனுப்பிவைத்தால்  நாங்கள் மீண்டும்  திரும்பி வரப்போவதில்லை என்பதை எப்படியோ திசாவை யூகித்து விட்டான். அதனால்தான் எங்களை மரியாதைப் பணயக் கைதிகளாய் வைத்திருக்கின்றான் என்பது எனக்கும் எனது தோழர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது. திசாவையின் வஞ்சகம் புரிந்தாலும் அப்போது நாங்கள்  இருந்த நிலையிலே அவனைப் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனமில்லை  என்பதால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி நடப்பது என்று முடிவு செய்தோம். ஆனால் கப்பலிலுள்ள எனது தந்தையும் மற்றவர்களும் திசாவையின் வார்த்தைகளை நம்பி கரைக்கு வருவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று மட்டும் விரும்பினேன்.


அதற்காக திசாவை கேட்டுக் கொண்டபடி, கப்பலுக்கு அவர்கள் புறப்படுகையில், 'ஒருபோதும் கரைக்கு வரவேண்டாம்!'  என்று ஆங்கிலத்தில் எழுதிய செய்தி ஓலையைக் கொடுத்து விட்டேன். இருந்தும் அந்தச் செய்தி எனது தந்தையிடம் உண்மையிலேயே கொடுப்பார்களா என்பதிலும் எனக்குச் சந்தேகமிருந்தது. அதனால் கப்பலுக்குச் அனுப்புவதற்குத் தயாராக வைத்திருந்த நீண்ட பச்சை வாழைப்பழங்களில் ஒன்றிலே இரகசியமாக அதே செய்தியை விரல் நகத்தினால்  குறியீடாகப் பொறித்துவிடலாமா என்று நான் நினைத்தபோதிலும் சூழ்நிலை காரணமாக அது கைகூடவில்லை.


அன்றுமட்டும் எனது முயற்சி கைகூடியிருந்து அந்தச் செய்தி கப்பலுக்கும் எட்டியிருந்தால் பின்பு நடந்தவை எல்லாமே வேறுவிதமாக மாறியிருந்திருக்கக் கூடும் அல்லவா?



அத்தியாயம் 7









திசாவையின் ஆட்கள் கப்பலுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.
நாங்கள் கரையிலிருப்பதால் அங்கு என்ன நடைபெறப்போகிறது என்பதை அனுமானிக்க முடியவில்லை. எங்களது செய்தி எனது தந்தைக்கு தரப்படுமா? தரப்படாமல் போனல் கூட திசாவையின் ஆட்களின் நடத்தையிலிருந்து அவர்களின் தந்திரத்தைப் புரிந்து கொண்டுவிட மாட்டாரா? 'கடவுளே இங்கிருந்தே கப்பலில் இருக்கும் தந்தைக்குத் தகவல் சொல்லும் மாயவித்தைக் கருவிகள் ஏதேனுமிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..' என்றெல்லாம் விசித்திரமாக என்மனம் பதறியது.

எனது தந்தை ஓர் நட்பை விரும்பும் மனிதர். அதிலுள்ள சூழ்ச்சிகளை இலகுவில் புரிந்து கொள்ள மாட்டார். அதுவும் அவரது மகனாகிய நான் இங்கிருப்பதால் நிச்சயம் திசாவையின் ஆட்களை நம்பிக் கரைக்கு வருவதற்குத்தான் அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனாலும் 'கப்பலிலிருந்து இங்கு வந்தவர்களில் ஏன் ஒருவராவது திசாவையின் ஆட்களோடு கூடவரவில்லை?' என்று அவர் யோசிப்பாராயின் நிலைமை வேறுவிதமாக மாறலாம்.


'கடவுளே அவ்வாறே அவர் நினைத்திட வேண்டும். நாங்கள் இளைஞர்கள். திசாவையின் ஆட்களை எப்படியோ சமாளித்து மீண்டும் கப்பலுக்குச் சென்று விடலாம். ஆனால் வயதான தந்தையும் அங்கிருப்பவர்களும் இங்கு வந்து விட்டால் நிலைமை மேலும் சிக்கலாகி விடும்.



இப்போது என்ன செய்வது என்று யோசித்தவாறே அன்றைய எங்கள் பொழுது கழிந்தது.அந்த இடம் திசாவை  பிரதேசத்துக்குரிய அலுவல்களைக் கவனிக்கும் ஓர்  இடம்தான் .  நாங்கள் தங்கியிருந்த கொட்டியாபுரத்தில் எங்களால் சுதந்திரமாக நடமாட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.  ஒரே இடத்தில் இருந்து கொண்டிருப்பது எங்களுக்குச் சலிப்பைத் தந்தது. அதனால் இந்தப் பகுதியை கால்நடையாகச் சுற்றிப் பார்க்க அனுமதி கேட்டோம். அதற்கு சில நிபந்தனைகளோடு ஒத்துக் கொண்டான் திசாவை. அவையாவன எங்களோடு அவனது ஆட்கள் இருவர் துணைக்கு வருவார்கள், எங்கு சென்றாலும் பொழுது மறைவதற்குள் திரும்பி வந்துவிட வேண்டும், மற்றையது கடலோரங்களுக்கோ களப்புப்பகுதிகளுக்கோ செல்லக் கூடாது என்பவைதான் அந்த நிபந்தனைகள்.


அந்த நிபந்தனைகளின் உள்நோக்கம் தெளிவாகவும் எதற்காக நாங்கள் வெளியே சுற்றிப்பார்க்க விரும்பினோமோ அதனை முறியடிப்பதாகவும் இருந்தது. இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு திசாவையின் ஆட்களோடு கால்நடையாகவே கிளம்பினோம்.



இறங்குதுறையிலே நாங்கள் ஓய்வெடுத்த அந்தப் பெரிய புளிய மரத்தின் அடியில் இருந்து கிழக்குத் திசையிலே நடக்கத் தொடங்கினோம். மரங்கள் அடர்ந்த ஒற்றையடிப் பாதைகளும் மாட்டு வண்டிகள் செல்லக்கூடிய சற்று அகலமான மணல் பாதைகளுமே அங்கு இருந்தன. காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அவதானமாக வருமாறு காவலாளிகள் எச்சரித்தார்கள். நாங்கள் செல்லும் வழியில் இடையிடையே யானைகளின் விட்டைகள் காய்ந்து கிடந்தன. காட்டுச் செடிகளின் சிறுமுட்கள் எங்கள் உடைகளைப் பிறாண்டின.



ஏறத்தாழ இரண்டு  பர்லாங்குகள் நடந்தபோது ஒரு சிறு கிளையாறு வந்தது. அதனருகே சிறிது மனித சஞ்சாரமிருந்தது. ஆற்றைக் கடந்து செல்வதற்காக இருபுறமும் பெரிய மரங்களில் பிணைக்கப்பட்ட தொங்குபாலம் போன்று வலுவான கயிற்றுப் பாலம் இருந்தது. அதன்மீது ஒவ்வொருவராகத்தான் கடந்து செல்ல முடிந்தது.


அங்கிருந்த மனிதர்கள்  பரட்டைத் தலையும் கறுத்த தேகமும் கொண்டிருந்தார்கள். இடுப்பின் கீழ் மட்டுமே துணியினாலான உடையிருக்க வெற்றுடம்போடும் காணப்பட்டார்கள். பெண்களும் கூட ஏறத்தாழ அவ்வாறே காணப்பட்டார்கள். அவர்களது கைகளில் ஒரு முனை கூர்மையான நீண்ட கழிகள் இருந்தன அவற்றினால் ஆற்றின் கரையோர சேற்றுத்திட்டுகளில் குற்றிக்குற்றி கருமை நிறத்தில் கையகலத்தில் கிண்ணம் போலிருந்த எதையோ ஒன்றைக் கிளறியெடுத்து இடுப்பிலே இருந்த துணிப்பையினுள் சேகரித்துக் கொண்டிருக்க இன்னும் சிலர் அவற்றை ஒரு பாறாங்கல்லிலே வைத்து உடைத்து அதனுள்ளிருந்து பஞ்சு போன்ற சதைப்பகுதியை மட்டும் மண் சட்டிகளில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் உடைத்துக் கிடந்த பீங்கான் போன்ற வெண்ணிறத்துண்டுகள் குவியலாகக் கிடந்தன.நாங்கள் அனைவரும் ஆற்றைக் கடந்தபோது எங்களை அவர்கள் எல்லோரும் எழுந்து நின்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்;.


அதன் பின்பு நாங்கள் மற்றொரு வழியாகச் சென்றோம்.


அது ஒரு குடியிருப்புகள் உள்ள பகுதியாக இருந்தது. அங்கு நிறைய கடல் சிப்பிகளும் ஊரிகளின் ஓடுகளும் குவியல் குவியலாய் கிடந்தன. அவற்றுக்கருகிலே தூசுபடிந்த பரட்டைத்தலை ஆண்கள் பெரும் மரக்குற்றிகளை கோடரிகளால் பிளந்து கொண்டிருக்க பெண்கள் விறகுகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு அல்லது மூன்று மனிதர்களின் உயரமுள்ள  அகலமான பெரும் அடுப்புகள் பற்றவைக்கப்பட்டுப் அழுக்கு வெண்ணிறத்தில் புகைந்த வண்ணமிருந்தன. அந்த இடமே வெண்ணிறச் சுண்ணாம்புத்துகள்களால் நிறைந்திருந்தது. அதனருகே மாட்டு வண்டிகள் பல நின்றிருக்க அவற்றிலே சாக்குப்பைகளில் பொதியேற்றிக் கொண்டிருந்தார்கள்.


அந்தச் சுண்ணாம்புச் சூளையிலே வேலை செய்து கொண்டிருந்தவர்களும் எம்மை வியந்துபோய் பார்த்தார்கள்.


அந்த வழியே இன்னும் சிறிது தூரம் சென்று வரலாம் என்று நாங்கள் முனைந்தபோது உடன் வந்த திசாவையின் ஆட்கள் இருவரும் மறுத்துவிட்டனர். இப்போது அதற்கு நேரெதிரே திரும்பி தென்கிழக்காக  செல்லத் தொடங்கினோம். அந்த சுண்ணாம்புச் சூளை வழியாகச் சென்றால் கடற்கரையை அடையலாம் என்பதனை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன்.

ஆங்காங்கே சில குடியிருப்புகள் இருந்தனவே தவிர செறிவான மனித சஞ்சாரம் அந்தப் பகுதிகளில் குறைவாகவே இருந்தது. வெகுதூரத்தில் மூன்று நான்கு குன்றுகள் தெரிந்தன. அந்தப் பக்கமாக சில பர்லாங்குகள் நடந்ததிலே வெண்ணிறத் தூரிகைகள் போன்று உச்சியில் பூத்துச் நிற்கும் ஒருவகை உயரமான புற்கள் கரை நெடுகிலும்  செழித்து வளர்ந்திருக்கும் சிறுகிளையாறு ஒன்றைக் கண்டோம். அதன் கரைவழியே நடந்து சென்று விட்டு இறுதியாக அங்கிருந்து நேரே இறங்குதுறைப் புளிய மரம் இருந்த திசையை நோக்கித் திரும்பி வந்தோம்.


இந்த வழியில் மட்டும் காடுகள் இடையிடையே அழிக்கப்பட்டு பரந்த வெறும் நிலங்களாக இருந்தன. அவற்றில் நெல், இறுங்கு, சோளம் போன்ற தானியங்கள் மற்றும் சில காய்கறிகள் விளைந்த தோட்டங்கள் இருந்தன. அவற்றின் மத்தியில் நிலத்தில் நடப்பட்டிருந்த தடிகளிலே மண்பானையொன்று தென் மீது வெள்ளைச் சுண்ணாம்பினால் மனித முகம் போல வரையப்பட்டு கவிழ்க்கப்பட்டுக் காணப்பட்டது. சில இடங்களிலே வைக்கோலால் செய்த உருவப்பொம்மைகளையும் கட்டி வைத்திருந்தார்கள்.


தோட்டங்களைச் சுற்றிலும் பயிர்களை கால்நடைகள் அழித்துவிடாதபடி கழிகள் கொண்டு சுற்றிலும் நேர்த்தியாக அடைத்திருந்தனர். அவற்றின் சிறிய நுழைவாயில்களை மரவுரிகளில் கழிகளைக் கிடையாக கோர்த்துக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். மாட்டு வண்டிகள் செல்லக்கூடிய வழிகளில் மட்டும் வேலி மரக்குற்றிகளில் தேவையான போது எடுத்துவிட்டு மீண்டும் கூடியதாக நீண்ட உருளைக் குற்றிகளை கிடைத்தடுப்பாக வைத்திருந்தார்கள். வாயில்களில் துணிபோன்றும் மெழுகுபோன்றும் இருந்த எரிந்து அணைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்கள் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு தோட்டத்தின் முன்புறமும் ஏதாவது நிழல்தரும் மரமொன்றின் கீழே பெரும் பாறாங்கல் ஒன்றின் மீது நீர் நிறைந்த மண்பானையும் அதன்மேல் அள்ளிப் பருகுவதற்காக நன்கு சீவித் துப்புரவு செய்யப்பட்ட தேங்காய்ச் சிரட்டை ஒன்றும் காணப்பட்டது.

வழியிலே எதிர்ப்பட்ட நடக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைக் கண்டோம். எங்களைப் பார்த்துப் பயந்துபோய் நின்றவரிடம் பேச்சுக் கொடுத்தோம். முதலில் தயங்கி நின்றவர் பின்பு எங்களது மொழியில் நாங்கள் சைகைகளுடன் பேச அவரது மொழியில்  சைகைகளைப் பயன்படுத்திப் பேசலானார். என்ன சொல்கிறார் என்பதை சரியாகப் புரியாது போனாலும் அவரோடு பேசியது மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அவரது வேண்டுகோளை ஏற்று அவர் இருந்த தோட்டத்துக்குச் சென்றோம். அங்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆழமான கிணற்றிலே இருந்து தோட்டத்திற்கு நீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கண்டதும் பயந்துபோய் விலகி நின்றவர்கள் பின்பு நாங்கள்  தமது பாட்டனாருடன்தான் வந்திருப்பதை அறிந்து அருகிலே வந்தார்கள். ஆண்கள் நீண்ட தலைமுடியை பின்புறமாக வளர்த்திருந்தார்கள். இடுப்பில் மட்டும் துணியைச் சுற்றிக் கட்டியிருந்தார்கள். பெண்கள் இடுப்பிலும் மார்பிலும் தைக்கப்படாத துணிகளை அணிந்து காணப்பட்டார்கள். காதுகள் எங்கும் துளையிட்டு ஓசையெழுப்பும் உலோகத்தாலான ஆபரணங்களையும் அணிந்திருந்தார்கள்.  

பரட்டைத் தலையுடன் இருந்த சிறுவர்களும் சிறுமிகளும் எங்களருகே பயந்தபடியே வந்து எங்களையும் எங்கள் உடைகளையும் தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். அந்த வயதான மனிதர் எங்களை அங்கிருந்த மரக்குற்றிகள் மீது அமரவைத்து ஒரு வகை அவித்த கிழங்குகளை உண்ணத்தந்தார். அவை இரு சாண்கள் நீளத்தில் இருபெருவிரல்களின் மொத்தத்தில் அடியில் பருத்தும் நுனியில் கூரியதாகவும் ஏறத்தாழ  கொக்குகளின் அலகுகள் போல இருந்தன. அவற்றை எப்படி உண்பதென எனக்கும் நண்பர்களுக்கும் தெரியவில்லை. அக்கிழங்குகள் நீளவாக்கிலே தும்பு நார்கள் நிறைந்ததாக வேறு இருந்தன. பின்பு அந்த முதியவர் செய்து காட்டியது போலவே தும்புகளை நீங்கி உண்டோம். ஆரம்பத்திலே சிறிது கசப்புச் சுவையுடன் இருந்தாலும் போகப்போகச் சுவையாகவே இருந்தது.


பின்னர் நாங்கள் அவரிடம் விடைபெற்ற போது ஆரஞ்சு நிறத்தில் தோலும் உள்ளே வெண்ணிறச் சுளைகளும் இருந்த பழங்களையும் பால்போன்ற திரவம் வடியும் சிறு மஞசள்நிறப் பழங்களையும் அன்பளிப்பாகத் தந்தனுப்பினார். மொழி புரியாத போதிலும் அந்தக் காட்டு மனிதர்களின் உபசரிப்பை வியந்தபடியே நடந்தோம்.
இப்படியான காட்சிகளையும் மனிதர்களையும் பார்த்தவாறே திசாவை எம்மைத் தங்க வைத்திருந்த இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தபோது மதிய உணவு தயாராக இருந்தது. நீண்ட நேரம் வெயிலில் நடந்ததால் ஏற்பட்ட அயர்வும் உண்டகளையும் சேர எம்மையறியாமலே உறங்கிப் போனோம். 



(தொடரும்)


-'Mutur' Mohammed Rafi