Saturday, January 19, 2013

ரிஸானா நபீக்?



 
 
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன்.


இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.


குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன்.


அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.


குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார்.அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள்.


அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள் குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள். கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன்.சரியான நினைவு எனக்கில்லை குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.


அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெரிக்கவில்லை.

ரிஸானா நபீக்.
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.


1501_398946436855582_928849973_n


இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மூதூர் பகுதி கிராமமொன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தை ரிஸானாவை 17 -வயதில் வீட்டு வேலைக்காக அனுப்புகிறார்கள். தங்களுடைய வறுமையைப் போக இக்குழந்தையை வீட்டு வேலைக்கு அனுப்ப சட்ட ரீதியான சாத்தியங்கள் இல்லாத போது 1998-ல் பிறந்த ரிஸானாவில் பிறந்த நாளை 1982 என மாற்றி வயதை அதிகமாக்கி பாஸ்போர்ட் எடுத்து அனுப்புகிறார்கள்.


இது இலங்கையில் மட்டுமல்ல அரபு நாடுகளுக்கு இப்படியாக பல ஏழைக் குழந்தைகள் ஏஜெண்டுகள் மூலம் அனுப்பப்படுகிறார்கள். ஏழ்மையைத் தவிற வேறு எந்த காராணங்களையும் சொல்ல முடியாது. ஆனால் தேயிலைப் பயிற் செய்கைக்கு கங்காணிகள் என்ற பெயரில் ஏஜெண்டுகள் எப்படி ஏழைகளை 19-ஆம் நூற்றாண்டில் கடத்திச் சென்று மலைக்காடுகளில் விட்டார்களோ, அப்படியே ஏஜெண்டுகள் இந்த ஏழைகளை கடவுச்சீடுகள் மூலம் அரபு நாடுகளுக்குக் கடத்துகிறார்கள்.


10 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 16 வயது ரிஸானா நபீக் சமைக்கிறாள், துணி துவைக்கிறாள், வீட்டைச் சுத்தம் செய்கிறாள், தன் எஜமானியின் நன்கு மாத குழந்தைக்கு ஊட்டுகிறார். கடைசியில் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றதாக 17 வயதில் கைது செய்யப்பட்டு இப்போது 24 வயதில் தலை வெட்டப்பட்டு சவூதி மன்னராட்சி அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்.
தமிழைத் தவிற வேறு மொழியறியாத ஒரு குழந்தை தன்னை விட 17 வயது குறைவான நான்கு மாதக் குழந்தையை கவனித்துக் கொள்கிறது. இடம் புதிது, மொழி தெரியாது. சம்பவம் நடந்த போது வீட்டிலும் எவரும் இல்லை. ஒரு சின்னக் குழந்தையிடம் ஒரு பெரிய குழந்தை துரதிருஷ்டமான ஒரு நேரத்தில் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் ரிஸானாவும் நடந்தாள்.


ஏனெனில் ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் குழந்தைக்கு நடக்கிறது, அதற்கு புரை ஏறி மூச்சுக்குழாய்க்குள் பால் அடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பிராயமோ, புரையேறிய குழந்தையை சரிந்த வாக்கில் படுக்க வைத்து முதுகைத் தட்டிக் கொடுத்தால் ஒரு வேளை சரியாகும் வாய்ப்பு உள்ளது என்பதோ இந்தப் பெரிய குழந்தைக்கு எப்படித் தெரியும் என எதிர்ப்பார்க்க முடியும்?


ஆக மொத்தம் ரிஸானா வறுமையின் நிமித்தம் சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சிறைக்குச் சென்று விடுகிறார். சிறையில் கழிந்த இந்த ஏழு ஆண்டுகளில் அவருக்காக ஒரு வழக்கறிஞர் கூட நியமிக்கப்பட்டு வாதாடியதாகத் தெரியவில்லை. நிலப்பிரவுத்துவம் வீழ்ந்து முதலாளித்தும் நமக்கு இந்த நவீன உலகையும் சிந்தனைப் போக்கையும் கொடுத்த பின்னரும் இன்னமும் மன்னராட்சி முறையை சவுதி அரேபியா வைத்திருக்கிறது.


வஹாபிசம் எனப்படும் படு பிற்போக்கான சிறிதும் ஜனநாயகமற்ற கடும் ஒழுக்க தேசியவாதப் போக்கைக் கொண்ட சவுதி, அரபுத் தேசியத்தின் அடையாளமாக தன்னை நிறுத்திக் கொள்கிறது.
இம்மாதிரியான தண்டனை முறைகளால் மக்களை நிரந்தரமான அச்சத்துள் வாழ வைப்பதே அதன் ஆன்மா.


இஸ்லாத்தின் மேன்மை மிக்கவனாக தன்னை காட்டிக் கொள்ளும் மன்னராட்சி சவுதியில் மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த தொழிலாளார்களில் நிலை மிக பரிதாபம், வறுமையாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சுதந்திரமானவைதான் இங்கிருந்து செல்லும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படும் நிலையில் இதிலிருந்து முஸ்லீம் தொழிலாளர்களும் விதிவிலக்கில்லை.


பணக்காரன் தன் சாதிக்காரனாக இருந்தாலுமே அவனை ஒரு வர்க்க அடிமையாக மட்டுமே எப்படி நடத்துவானோ அப்படித்தான் இந்த ஏழை முஸ்லீம்கள் மீது கூட வாஹாபிசம் எவ்வித கருணையும் காட்டுவதில்லை.
அது சவுதிக்குள் ஏழை பணக்காரன் என்ற வேறு பாடில்லாமல் இந்த தண்டனை முறையைக் கொண்டிருப்பதாக நான் வாசித்தேன். ஆனால் இதே வஹாபிசம் அமெரிக்க , ஐய்ரோப்பிய தேசியத்திடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஐய்ரோப்பாவைச் சார்ந்த எவர் ஒருவரும் இப்படியான தண்டனைகளுக்கு சவுதியில் உள்ளாக முடியாது என்பதெல்லாம் தனிக்கதை.
எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதையொட்டி சவுதி மன்னராட்சி மேற்குலகோடு செய்து கொண்ட தொழிலாளர், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சவுதி அரேபியச் சட்டங்களின் படி ஐய்ரோப்பியர்களை தலை வெட்டித் தண்டிக்க முடியாத விலக்கை அளிக்கிறது. ரிஸானா வெள்ளை தேசத்தவராக இருந்தால் நிச்சயம் இந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்காது.
நீதிமன்றங்களோ, அவர்களின் போலீசாரும், அவர்களின் இஸ்லாமிய ஷரியத் சட்டங்களும் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு தீர்ப்பு எழுதும். இவர்தான் குற்றவாளி என்பதை எளிதில் தீர்மானித்து விடுகிற நீதிமன்றம்.


குற்றம் சுமத்தப்பட்டவருக்கு தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதில்லை. சவுதியின் பணக்கார முஸ்லீம்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்ய, கார் ஓட்ட ஏழை முஸ்லீம்கள் தேவைப்படுகிறார்கள். ஏனெனில் முஸ்லீம் அல்லாதவர்களை தங்களின் வீட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது.


ரிஸானா என்னும் சிறுமியைப் பொறுத்தவரை அவருக்கு மொழி பெயர்ப்பாளாராக இருந்தவர்கள் குறித்து அரிய முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்ட போதும் ஏழாண்டுகள் சிறையில் கழிந்த போதும் தலை துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்னரும் அந்தக் குழந்தையின் நினைவில் என்ன ஓடியிருக்கும் எனத் தெரியவில்லை. புரையேறி இறந்து போன நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளித்திருந்தால் ரிஸானா விடுவிக்கப்பட்டிருப்பார் என்னும் நிலையில் அவர்கள் அந்த மன்னிப்பை இன்னொரு குழந்தைக்கு வழங்க முன் வரவில்லை.


2004-ம் ஆண்டில் இயக்குநர் கமலின் ‘பெருமழக்காலம் ’படம் மலையாளத்தில் வந்தது. ரஸியா வின் கணவன் ஒரு விபத்தாக ரகுநாத அய்யர் என்பரைக் கொன்ற கொலைக்குற்றத்தின் பேரில் தலைவெட்டும் தண்டனைகுள்ளாகி வளைகுடா நாட்டில் இருக்க, கொல்லப்பட்ட ரகுநாத அய்யரின் மனைவியிடம் ரஸியா குற்றத்தை மன்னிக் கோருவதுதான் கதை.


ரகுவின் மனைவி மன்னித்தால் தன் கணவன் விடுவிக்கப்படுவான் என்பதாகச் செல்லும் கதையில் நுட்பமாக ஒரு உயிரை இழந்த, இன்னொரு உயிரைக் காப்பற்றப் போராடும் இரண்டு பெண்களின் மன உணர்வுகளை மிக நுட்பமாகச் சொல்லியிருப்பார் கமல். இப்படியான வாய்ப்புகள் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம் என்னும் நிலையில் மன்னிக்கும் தேவையிருந்தும் கூட அந்த வாய்ப்பில்லாமல் வாளால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் இந்த சிறுமி.கொடூரமான இந்த வாள் வெட்டைத்தான் இந்துப் பாசிஸ்டுகள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தக் கோருவதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.


அளவற்ற கருணையையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் பேசும் குரானோ அல்லாவோ இந்த ரிஸான் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்ள 17 வயதில் கடைசியாக தங்கள் மகளை வழியனுப்பியவர்கள் பிணமாகவேனும் ரிஸானாவைக் காண்பார்களா என்பது தெரியவில்லை. அவர்களின் வறிய வாழ்வும் மாறவில்லை பிள்ளையும் இல்லாமல் போய் விட்டது.


எல்லையற்ற அல்லாவின் கருணையில் ரிஸானாவின் இடம் எதுவெனத் தெரியவில்லை. ஏழாண்டுகள் சிறையில் கழிந்த போது அவள் என்ன நினைவுகளோடு வாழ்ந்திருப்பாள். மூதூரை, தன் உறவுகளை, கொஞ்சம் முந்தைய தன் பால்யத்தை, விளையாடிய விளையாட்டை, தன் சகாக்களோடு இட்ட சண்டையை, சிரிப்பின் துளிர்ப்பை, தன் தாய் பட்ட கஷ்டத்தை, தந்தையின் துயரத்தை, ஒரு காதல் கனவை, நடனத்தை, நாடு திரும்புவதை, மூதூரின் வீதிகளின் புதிய மனுஷியாக நடப்பதை, அரபு தேசத்திலிருந்து வாங்கி வந்த மிட்டாய்களை உறவுகளுக்கு கொடுப்பதை, புதுத்துணி எடுத்துக் கொடுப்பதை, குடிசை வீட்டை ஒரு சுவராக மாற்றுவதை, முற்றத்தில் சின்னதாய் ஒரு செம்பருத்தி வளருவதை….. ரிஸானா எதையெல்லாம் கனவு கண்டிருப்பாய்…. ஒரு தனித்த கனவு அல்ல அது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின் கனவல்லவா?


அத்தனையும் ஒரு வெட்டில் சிதறிப்போனக் கனவோ…. என் அன்பே…

-Jesslya Jessly

Friday, January 18, 2013

ஷரீஆ சட்டம் பேசுவோரின் லட்சணம் பாரீர்!

 

சவுதி அரேபியாவில் வேலை செய்த இலங்கை பெண்ணின் உடலில் ஆணிகள் அடித்து வேலைக்கார சித்ரவதை

Aug 27, 2010
 



கொழும்பு: சவுதி அரேபியாவில் வேலை செய்த இலங்கை பெண்ணின் உடலில், 24 ஆணிகள் அடித்து எஜமானர்கள் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 20 லட்சம் பேர், வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்களில், 14 லட்சம் பேர், வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு, எஜமானர்களால் பல்வேறு கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் கடந்த ஐந்து மாதங்களாக அரியாவதி(49) என்ற பெண், நிலசுவான்தார் வீட்டில் வேலை செய்து வந்தார். “அதிக வேலை தருகிறீர்களே’ என, இந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த நிலசுவான்தாரும், அவரது மனைவியும், அரியாவதியின் நெற்றி, கை, கால்களில் இரண்டு அங்குல நீளமுள்ள 24 ஆணிகளை சூடாக நுழைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த கொடுமைகளை பொறுக்க முடியாமல், கடந்த வாரம் அரியாவதி கொழும்பு திரும்பினார்.





மூன்று குழந்தைகளுக்கு தாயான அரியாவதி, நடந்த சம்பவங்களை இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து இவரது உடலில் நுழைக்கப்பட்டுள்ள ஆணிகளை எடுப்பதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆணிகள் சூடாக்கப்பட்டு பாதம், கால்களில் நுழைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். சில சமயங்களில் ஊசி வைத்தும் குத்தியிருக்கின்றனர். அதற்கான தழும்புகள் காணப்படுகின்றன. அதில் நெற்றிப் பகுதியில் ஒன்று இருக்கிறது. சவுதி அரேபிய நிலசுவான்தார் தம்பதியினர் செய்த இந்த கொடுமை குறித்து, அந்நாட்டு அரசிடம், இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Rate This

23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா
(பெண்ணியத்திற்காக மூலக் கட்டுரையை சிங்களத்தில் அனுப்பியவர்
வெறோனிக்கா – தமிழில் என்.சரவணன்.)


pic207.jpg


இந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது.
இயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார்.


உடலில் எட்டு ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண்.
தனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ சொந்தமாக ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொள்வதற்காக பிழைப்பு தேடி பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றவர் ஆரியவதி (வயது 49).
இவர் இலங்கையின் தெற்குப் பகுதியில் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர் ஒருவர் இலவசமாக அனுப்புகிறார் என்று கேள்வியுற்று அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 நாள் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டார்.


1282776839989.jpeg


சவுதியில் ரியாத் நகரத்தில் இறங்கியதும் அவரை இருவர் காரொன்றில் அன்பாக வேலைக்காக அழைத்துச் சென்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடைகள் செய்வதும் வீட்டை சுத்தமாக பராமரிப்பதும் அவருக்கு வழங்கப்பட்ட பிரதான வேலைகள். இதனைத் தவிர உடுதுணி துவைத்தல், அவற்றை ஸ்திரிசெய்து மடித்து வைத்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற வேலைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.


ஒரே வாரத்தில் அந்த வீட்டினர் தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர். சிறு சிறு தற்செயல் பிழைகளுக்காக அவரை கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளனர்.


தற்செயலாக ஒரு கிளாஸ்’ கைதவறி விழுந்து உடைந்த சம்பவத்திலிருந்தே இந்த வன்முறைகள் தொடங்கின.

உரிமையாளரின் மனைவி (எஜமானி அம்மா) ஆரியவதியின் கைகளை இறுக்கிப் பிடித்திருக்க கணவர் சூடாக்கிய ஆணிகளை உடலில் சுத்தியலால் அடித்திருக்கிறார். அதே நாள் இரண்டரை இஞ்ச் உயர ஆணிகள் ஐந்து இவ்வாறு ஆரியவதியின் உடலில் ஏற்றப்பட்டுள்ளன.

அன்றைய தினம் ஆரியவதியின் ஓவென்ற அவலக்குரல் எவர் காதுகளிலும் விழவுமில்லை. அந்த வீட்டில் ஆரியவதியின் அன்புப் பணிவிடைகளை அதுவரை பெற்றுக்கொண்ட அந்த வீட்டின் பிள்ளைகள் கூட காப்பாற்ற முன்வரவில்லை.

தொடர்ந்து கத்தினால் கழுத்தை வெட்டி எறிவோம் என்று மிரட்டப்பட்டுள்ளார். தனது அன்புக்குரிய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்துள்ளார்.

ஆரியவதி தாய்மண்ணுக்கு திரும்பியதும் அவர் கண்களில் நீர்பெருக பகிர்ந்துகொண்ட விபரங்கள் அனைவரது நெஞ்சையும் உலுக்கச் செய்யும் கதைகள்.


saudi-women2.jpg


“ஒரு தடவை கோப்பை நழுவி விழுந்தது. இன்று தொலைந்தேன்.. என்று பதறிக்கெணடிருக்கையில் வீட்டு எஜமானி அம்மா “உன் கண்கள் என்ன குருடா.. இரு… குருடாக்கி விடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆணியை எடுத்து கண்களில் சொருகுவதற்காக கிட்ட கொண்டு வந்தார். என் கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தேன். எவ்வளவோ கதறியும் அந்த ஆணிகளை எனது புருவ இமைகளின் மேல் பகுதியில் இறுக்கிச் சொருகினார்…. “ என்று இன்னமும் நீக்கப்படாத நிலையில் உள்ள அந்த ஆணி சொருகப்பட்ட இடத்தைக் காண்பித்தார் ஆரியவதி..


அவரது கால் பாதங்களுக்குள் இரு ஆணிகளை ஏற்றியுள்ளனர். இவ்வாறு சிறுசிறு பிழைகளுக்கெல்லாம் உடலின் ஏதாவது ஒருபகுதியில் ஆணியை செருகினார்கள். வெளியில் இழுக்கக்கூடிய ஆணிகளை இழுத்துவிட்டேன். அகற்ற கடினமானவற்றை அப்படியே விட்டுவிட்டேன். காய்ச்சல் ஏற்ப்பட்டபோது என்னை சிகிச்சையளிக்க அனுமதிக்கவில்லை. இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று மன்றாடியபோது, அவர்கள் கிடைத்ததைக் கொண்டு என்னைத் தாக்கினர்.


இறுதியில் எனது உடலில் ஆணிகள் உள்ள பகுதிகளில் இருந்து புண் முற்றி சீழ் வடிய ஆரம்பித்தது. இருக்கின்ற உடு துணிகளைக் கொண்டு சுத்தப்படுத்தி கட்டு போட்டுக்கொண்டே இருந்தேன். கடந்த மாதம் அவர்கள் என்னைப் பார்த்து அசிங்கப்பட்டனர். ஆணி உள்ள இடங்களில் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் சித்திரவதை செய்வார்கள் என்று பயந்து வேலைகளை செய்து வந்தேன்…” எனறார்.


இதற்கிடையில் தொடர்பு இல்லாத நிலையில் ஆரியவதியின் குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆரியவதியுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரியவதியால் சுதந்திரமாக விபரமாக நிலைமைகளை எடுத்துரைக்க முடியவில்லை. “…எனக்கு இங்கு பிரச்சினை என்னை உடனடியாக இலங்கை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்..” எனக்கூறி வைத்துவிட்டார்.


அதனைத் தொடர்ந்து ஆரியவதியின் கணவர் மீண்டும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவர் திருப்பி அழைக்கப்பட்டார். இது குறித்து ஆரியவதி தெரிவிக்கையில்


main.jpg



“..கடந்த 20ஆம் திகதி வீட்டு எஜமானி அம்மா ஒரு பையைக் கொண்டுவந்து தந்து ஒரு காரில் என்னை ஏற்றிக்கொண்டுவந்து விமான நிலையத்தில் ஏஜென்சியிடம் ஒப்படைத்தார். அந்த ஏஜென்சி, நாடு திரும்புவதற்கு டிக்கெட் செலவுக்காக 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு எஞ்சிய இரு மாத சம்பளத்தை என் கைகளில் வைத்தார். ஏன் நடப்பதற்கு கஸ்டப்படுகிறாய் என்று அவர் என்னிடம் கேடடார். காலில் வருத்தமுள்ளது என்று மட்டும் கூறினேன். இருந்த பண்த்தில் எனது கணவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் நாடு திரும்புவதை அறிவித்தேன். 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல எனது கணவர் வந்திருந்தார்.” என்றார்.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் நடந்து வந்த விதத்தை வைத்து ஒரு துன்புறுத்தப்பட்ட நிலையில் திரும்புகிற ஒரு பெண் என்பதை யாரும் புரிந்து கொள்வர். அது குறித்து விமான நிலைய அதிகாரிகள் பலர் ஆரியவதியிடம் விசாரித்த போதும், தனக்கு காலில் நோ உள்ளதாக மட்டுமே கூறியுள்ளார். தனத பாதங்களில் ஆணிகள் ஏற்றப்பட்டுள்ளன என்கிற உண்மையை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை. ஒரு அதிகாரி 700 ரூபாவை வைத்தியச் செலவுக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.
நான் நாடு திரும்பிய மகழ்ச்சி எனக்கு போதும். உடலில் உள்ள வலிகூட தெரியவில்லை. உண்மையை எங்காவது சொன்னால் என்னை பிடித்து வைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் நான் எங்கும் உண்மை கூறவில்லை..” என்று அப்பாவித்தனமாக பின்னர் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விமான நிலையங்களின் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எதுவுமே இவரது உடலின் ஆணிகளைக் கண்டு பிடிக்காதது பலருக்கும் வியப்பைத் தந்திருக்கிறது.


வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கூட அவர் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ தான் பட்ட வேதனைகளை அவர் கூறவில்லை. சிறு ஊசியொன்று ஏறியிருப்பதால் தனக்கு கால் வலிப்பதாகக் கூறியியிருக்கிறார். அவரது 25 மகன் சமில் பிரியதர்சன தனது தாயை அழைத்துக்கொண்டு கும்புறுபிட்டி நகர வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதுதான் முதற்தடவையாக வைத்தியரிடம் உண்மைகளைக் கூறியிருக்கிறார்.


tortured-nails-495x278.jpg


வைத்தியர் நிமல் ஜயசிங்க உடனடியாகவே அவருக்கு ஏற்பு ஊசி ஏற்றியிருக்கிறார். பின்னர் அவரது உடலை முழுவதும் எக்ஸ்ரே எடுத்து மேலதிக அறிக்கைகளை சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை அங்குள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மொத்தம் 23 ஆணிகள் உடல் முழுவதும் ஆங்காங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது போன்றதொரு சம்பவம் இதற்கு முதல் இடம்பெற்றதில்லை என ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி தெரிவித்தார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆரியவதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய அனைத்தையும் மேறகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது குடிசையை சரிசெய்து குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக வாழவென புறப்பட்டுச் சென்று 5 மாதங்களின் பின் தனது கிராமத்துக்குத் திரும்பியபோது ஆரியவதிக்கு எஞ்சியிருந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இருந்த குடிசையும் கடும் மழையினால் உடைந்து உருக்குலைந்து இருந்தது. ஆணிகள் ஏற்றப்பட்ட போது கிடைத்த வலியை விட அது வேதனைமிக்கது என அவர் கண்ணீர்மல்க பலர் முன்னிலையில் தேம்பினார்.


27அன்று நடந்த ஒப்பரேசனில் 5 ஆணிகளை நீக்க முடியவில்லை.
ஆரியவதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அந்த 23 ஆணிகளில் முக்கிய 18 ஆணிகளை இன்று (ஓகஸ்ட் 27) நீக்கப்பட்டுள்ளது. ஏழு சிரேஸ்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேரைக் கொண்ட குழு இரண்டரை மணித்தியாலங்களாக செய்த ஓப்பரேசனில் 13 இடங்களை வெட்டி ஆணிகளை நீக்கியுள்ளனர். எஞ்சிய 5இல் குண்டு ஊசிகளும் உண்டு என்றும் அவற்றை நீக்குவது ஆபத்து மிகுந்ததென்றும். அவற்றை நீக்கும் போது நரம்புகளுக்கு பாதிப்பை கொண்டுவரக்கூடும் என்றும். அதை விட அவற்றை நீக்காமல் விடுவது பாதுகாப்பானது எனது வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.


operation.jpg


நீக்கப்பட்ட ஆணிகள்:

கண் இமை நெற்றிக்கருகில் – 1 கம்பி
வலது கையில் – 5 ஆணிகள், 1 கம்பி
இடது கையில் – 3 ஆணிகள், 2 கம்பிகள்
வலது காலில் – 4 ஆணிகள்
இடது காலில் – 2 ஆணிகள்
ஆகக் கூடிய நீளமுள்ள ஆணி 6.6 சென்றிமீற்றர் கொண்டது என வைத்தியர்கள் அறிவித்தனர்.


குறிப்பு:


மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் சராசரி 20 சடலங்கள் மாதாந்தம் இலங்கை கொண்டுவரப்படுகின்றன. இயற்கை மரணங்கள், ஏனைய விபத்துக்களினால் மரணித்தவர்கள் அதில் அடக்கம்.
வெளிநாடுகளில் நாடுகளில் 1.8 மில்லியன் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர்.

சவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர்.
இதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள்.
இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
மாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.

இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர்.

Sunday, January 6, 2013

கல்லெறியும் யோக்கியர்கள் :

 



டெல்லி குற்றவாளிகள்






ந்தியாவை சில நாட்கள் கட்டிவைத்திருந்த ஒரு செய்தி கசப்பான முடிவுக்கு வந்திருக்கிறது. பாலியல் சாயம் பூசப்பட்ட செய்திகள் எப்போதும் சிறப்பான விற்பனையை கொண்டிருக்கின்றன. இம்முறை அது இன்னும் மெருகேற்றப்பட்டு விழிப்புணர்வு, பாதுகாப்பு, மனிதாபிமானம் என பல முகமூடிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போராடுபவர்கள் எல்லோரையும் நக்சலைட் என்றும் அன்னிய கைக்கூலிகள் என்றும் பேசிய வாய்கள் எல்லாம் இந்த விவகாரத்தில், உணர்வுகளை மதிப்பதாவும் வன்முறையின்றி போராடும்படியும் கோரிக்கை வைக்கின்றன.
இந்த நிகழ்வு எப்படி மைய அரசால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் மக்களின் பொதுஉணர்வானது எப்படி பெரிய ஊடகங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விடயமென்றாலும் இம்முறை நான் அதுகுறித்து எழுத விரும்பவில்லை.


மக்களின் பரவாலான நம்பிக்கையின்படி இது பாலியல் வன்கொடுமைக்கெதிரான இளைஞர்களின் சீற்றம் எனும் கருத்தின் அடிப்படையிலேயே இந்த பதிவை தொடர்கிறேன்.
பொதுவில் இந்த போராட்டத்தை நடத்துவோரும் ஆதரிப்போரும் வைக்கும் கருத்துக்கள் என்னென்ன? பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு தூக்குதண்டனை வழங்கு, அதனை சிறப்பு நீதிமன்றம் வைத்து விசாரணை செய், பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டம் இயற்று.. இவைதான் பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான நடவடிக்கை என பரவலாக சொல்லப்படுகின்றன. சில, பாலா(சேது) ரசிகர்களோ குற்றவாளிகளுக்கு ஆணுறுப்பை வெட்டிவிடும் தீர்வை முன்வைக்கிறார்கள். சரி, கடுமையான சட்டங்களால் பாலியல் குற்றங்களை தடுத்துவிட முடியுமா?


குற்றங்கள் இங்கு பெரும்பாலும் மூன்று காரணங்களால் நடக்கின்றன. ஒன்று, சட்டத்தை எப்படியும் வளைத்துவிடமுடியும் எனும் நம்பிக்கையில் நடப்பவை. பெரும்பாலான பெரிய குற்றங்களும் பெரிய மனிதர்களின் குற்றங்களும் இந்த வகையிலானவை.
இரண்டு, தண்டனையை அறிந்து அதற்கு தயாராக இருந்து செய்யப்படும் குற்றங்கள். வழிப்பறி போன்ற குற்றங்கள் இந்த பட்டியலில் வரும்.
மூன்று, தண்டனை பற்றிய அறிவின்றி உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் குற்றங்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மாணவர்கள் இதற்கான சிறந்த உதாரணமாக வைக்கலாம்.


ஆக, ஒரு குற்றத்துக்கான காரணியாக மூன்றில் எது இருந்தாலும் குற்றவாளி தண்டனை பற்றி கவலைகொள்ளப்போவதில்லை அல்லது அது அவனுக்கு நினைவுக்கு வரப்போவதில்லை. தண்டனை பற்றி பயம் இருப்பவனுக்கு சிறைக்கு போவதென்பதே கடுந்தண்டனைதான். ஆக பயந்தகொண்டு குற்றம் செய்யாமல் இருப்பவன் இப்போதிருக்கும் சட்டத்துக்கே பயந்தவனாகத்தான் இருப்பான். பிறகு கடுந்தண்டனை வாயிலாக எப்படி குற்றத்தைத் தடுப்பீர்கள்?


பாலியல் குற்றங்களுக்கான நடவடிக்கையை எடுக்க வேண்டியது காவல்துறை. அதற்கான தண்டனையை வழங்கவேண்டியது நீதித்துறை. இந்தியாவில் அதிகம் பாலியல் அத்துமீறல் செய்யும் துறை எது என்று பார்த்தால் அதில் காவல்துறையும் ராணுவமும்தான் முதலில் வரும். மனைவியை கணவன் அடிப்பது தவறில்லை என்றும் தலித் பெண்ணை உயர்சாதிக்கார்கள் கற்பழித்திருக்க மாட்டார்கள் என்றும் தீர்ப்புக்கள் எழுதிய நீதிமான்கள் இருக்கும் நாடு இது. இந்த நடைமுறையை வைத்துக்கொண்டு கடுமையான தண்டனையை யாருக்கு வாங்கிக்கொடுக்க முடியும்? ஆக, அதிகாரமும் பணமும் இல்லாதவன் மட்டும் தண்டிக்கப்பட்டால் போதும் என்பதுதான் உங்கள் நிஜமான கோரிக்கையா?


இந்த கருத்துக்களை பகிர்ந்துகொண்ட பெரும்பாலான நபர்களிடம் இருந்து எனக்கு வந்த பதில் கேள்வி  “அப்ப என்னதான் செய்யலாம் என்கிறீர்கள்? குற்றவாளிகளை அப்படியே போகவிடுவதா?.”


இப்போது பிரச்சினை பலாத்கார குற்றவாளிகளை எப்படி தண்டிப்பது என்பதல்ல. நியாயமான காவல் மற்றும் நீதித்துறை இருக்கும்பட்சத்தில் இப்போதையை சட்டங்கள் வாயிலாகவே அவர்களை தண்டிக்க முடியும். ஆனால் இவ்வகை குற்றங்களை எப்படி கட்டுப்படுத்துவது?


இன்றைக்கு பெருகிவரும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு அடிப்படை நம் நாட்டில் இருக்கும் பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் இருக்கிறது. இரவு பத்து மணிக்கு நண்பனுடன் சாலையில் நிற்கும் பெண்ணைப் பற்றிய சமூகத்தின் கருத்தென்ன? அது அவளது உரிமை என சொல்லும் ஆண்கள் நூறில் பத்தாவது இருப்பார்களா? தொன்னூறு விழுக்காடு ஆண்கள் பெண் ஒருத்தி இரவில் ஆணுடன் தனியே வருவது தவறென கருதும் நாட்டில் பத்து விழுக்காடு ஆட்களேனும் அந்த தவறை செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என கருத்தினை கொண்டிருப்பார்கள். அதில் குறிப்பிட்ட சதவிகித மனிதர்கள் தாங்களே அந்த தண்டனையை வழங்க வேண்டுமென நினைப்பார்கள். அதிலொருவன் வன்புணர்ச்சியில் இறங்குகிறான். செயல் ஒரு மிகச்சிறிய சதவிகிதத்தினருடையதாக இருக்கலாம், ஆனால் அதற்கான நியாயம் பெரும்பாலானவர்களிடமிருந்துதான் கிடைக்கிறது.


இந்தியன் ஏர்லைன்ஸ் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணங்களில் ஒன்றாக வசீகரமற்ற பணிப்பெண்களையும் குறிப்பிட்டது டைம்ஸ் ஆஃப் இந்தியா. இந்த செய்தி வந்த பிறகு, ஒன்று அந்த பத்திரிக்கை கண்டனத்துக்கு உள்ளாகியிருக்க வேண்டும். அல்லது விமானத்தில் சாப்பாடு கொடுக்கக் கூட அழகான இளமையான பெண் வேண்டுமென விரும்பும் இந்திய பயணிகளின் பொது புத்தி விமர்சனத்துக்குள்ளாகியிருக்க வேண்டும். ஆனால் அந்த செய்தி மிக சாதாரணமாக நம்மை கடந்து சென்றது. செக்சியாக இருக்கிறாய் என் சொன்னால் அதை பாராட்டாக எடுத்துக்கொள்ள சொல்கிறார் இந்திய மகளிர் ஆணைய தலைவி. பெண்கள் மீதான எல்லா வன்முறைகளையும் பெண்களது ஆடையும் நடவடிக்கையுமே தூண்டுவதாக ஆகப்பெரும்பாலான இந்திய ஆண்கள் நம்புகிறார்கள். இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கிற மதங்களும் அரசு எந்திரமும் பெண்ணுரிமைக்கு எதிரானதாக இருக்கிறது. செய்தி சொல்லவும் பொழுதுபோக்கவும் இருக்கிற ஊடகங்களும் சினிமாவும் அவ்வாறே. ஒருவரியில் சொல்வதானால் இந்தியாவின் ஆன்மாவே பெண்களது பாதுகாப்புக்கு எதிரானதுதான்.






புதிய சட்டங்கள் இயற்றலாம், ஆனால் அந்த சட்டத்தை மேற்சொன்ன ஆன்மாவைகொண்ட போலீஸ்தான் நடைமுறைப்படுத்தியாகவேண்டும். நாகை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தில் சமீபத்தில் 11 வயது தலித் சிறுமி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட வழக்கு வழக்கமான பிரிவுகளின்கீழ் பதியப்பட்டிருக்கிறது. சிறார்கள் மீதான பாலியல் வன்முறைக்கெதிரான தமிழகத்தில் இருக்கும் சிறப்பு சட்டத்தின்கீழ் அந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை, அந்த சட்டம் பற்றிய தகவல்கூட அவ்வழக்கை நடத்தும் போலீசுக்கு தெரியவில்லை.


விரைவு நீதிமன்றங்கள் அமைக்கலாம். உத்திரப்பிரதேசத்தில் பதினான்காண்டுகளுக்கும் மேலாக ஒரு பாலியல் வன்புணர்ச்சி வழக்கு “விரைவு நீதிமன்றத்தில்” நடந்துகொண்டிருக்கிறது. பெண்களைக் கொண்டே பெண்கள் குற்றங்களை அனுகலாம். ஒரு பெண் முதல்வராக இருந்த போதுதான் வாச்சாத்தி முதல் இருளர் பெண்கள் வன்கொடுமை வரை தமிழகத்தில் நடந்தது. பணத்துக்காக பெண்கள் இந்த குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என ஒரு பெண் முதல்வர்தான் சொன்னார். ஆகவே இப்போது நடக்கும் போராட்டங்களில் வைக்கப்படும் எல்லா கோரிக்கைகளும் மேற்சொன்ன ஏதோ ஒரு புள்ளியில் முட்டிக்கொண்டு நின்று போகும்.
பண்பாடு கலாச்சாரம் ஆகியவை பெண்களது நடவடிக்கைகளால் கெடுகிறது என நீங்கள் நினைத்தாலும், பெண்கள் அடக்கமாக இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என நீங்கள் கருதினாலும், புகை பிடிக்கும் பெண்களைக் கண்டு கலிமுற்றிவிட்டது என நீங்கள் புலம்பினாலும், இரண்டு பாலினங்களுக்கும் இரண்டு விதமான ஒழுக்க மதிப்பீடுகளை நீங்கள் வைத்திருந்தாலும், இந்த பொண்ணுங்களே இப்படிதான் என உசுப்பேற்றும் வகையிலான சினிமா வசனத்தை நீங்கள் நெருடலின்றி ரசித்திருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறையை வெளியிலிருந்து ஆதரிப்பதாகவே பொருள்.


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நம் ஒட்டுமொத்த சமூகத்தின் பங்கை அந்த ஆறுபேரின் மரணத்தின் மூலமும் ஒரு மெழுகுவர்த்தி மூலமும் .கழுவிவிட முடியும் என நினைப்பது முட்டாள்தனம். நியாயமான காவல்துறையும் நீதித்துறையும் இருந்தால் பாலியல் வன்முறையில் ஈடுபடும் எல்லா குற்றவாளிகளையும் தண்டித்துவிடமுடியும். எனக்குள்ள எல்லா உரிமைகளையும் கொண்டிருக்கிற சக ஜீவன் என பெண்களைக் கருதுகிற ஆண்கள் உருவாகிறவரை அந்த வன்முறைகளை தடுக்க முடியாது.


கல்லெறியும் உரிமை எல்லோருக்கும் உண்டு… யோக்கியனான பிறகு அதை செய்யுங்கள் என்பதுதான் என் கோரிக்கை

Thanks: Senkodi

Wednesday, January 2, 2013

 
 Happy New Year!

2013

 

இந்தப் புதிய ஆண்டுதானும்
வன்முறைகள், மாசடைதல்கள் , மதஅராஜகங்கள், வீதிவிபத்துக்கள், விலையேற்றங்கள், இயற்கையழிவுகள், 'உலகம் அழியும்' எனும் வதந்திகள் மிகக்குறைந்த ஆண்டாக அமையட்டும்!
 
 
 
 
Jessly Jessly
 

Tuesday, December 25, 2012

சிறுகதை: சிலந்திக்கூடுகள்




கொழும்பிலே ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் உதவி இரசாயனப் பகுப்பாய்வாளாராக வேலை செய்து கொண்டிருக்கும் நான் பல வருடங்களுக்குப் பின்பு திடீரென்று ஒருநாள் ஊருக்குத் திரும்பி வந்திருந்தேன். வந்திறங்கியவுடன் முன்பு ஊரிலே ஒன்றாகத் திரிந்த எனது நண்பர்களில் சிலரையாவது உடனடியாகச் சந்திக்க நினைத்தேன்.
குளித்து முடித்து தம்பியின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு முச்சந்திக்கு வந்தேன்.

'அட என்ன தம்பி  நீங்கதானா இது? நான் வேறு யாரோண்டல்லவா பார்த்தேன்.. முடியெல்லாம் வளர்த்து ஆளே மாறிப்போயிட்டீங்க' என்று ஊர்ப் பெரியவர்கள் சிலர் அதிசயித்துப் பேசியபோதுதான் தெரிந்தவர்கள் பலர் என்னைப் பார்த்தும் பேசாமல் போனதற்குரிய காரணம் புரிந்தது. ஆனால் எனது நண்பர்கள் என்னை நிச்சயம் அடையாளங் கண்டுவிடுவார்கள்.
பாடசாலைக் காலத்திலிருந்தே நண்பர்கள் நாங்கள் வழமையாக ஒன்றுகூடும் முச்சந்தி ஆண்டியின் சில்லறைக்கடைக்கு வந்து சேர்ந்தேன். இத்தனை வருடங்கள் கழிந்தும் அது அதிக மாற்றங்களேதுமின்றி அப்படியேதான் இருந்தது.


'தம்பீ, இப்ப இதில நம்ம இஸ்ஸத் ஸேர், பாகிம் ஸேர்வயர் ஆக்கள் வந்தாங்களா?' என்று கடையில் நின்ற சிறுபையனிடம் விசாரித்தேன். அவனிடம் ஆண்டியின் முகச்சாயல் இருந்தது. அவனுடைய தம்பியாக இருக்க வேண்டும்.


'அஸருக்குப் பொறவு எல்லாரும் இதிலதான் வந்து பேசிட்டு நிண்டாங்க. பொறவு இப்ப கொஞ்ச முதல்தான் நம்மட ஷம்ரி ஸேர்ட வீட்டுப்பக்கம் எல்லாரும் சைக்கிள்ள போறதைக் கண்டேன்' என்னை அவனுக்கு யாரென்று தெரிந்திருக்க நியாயமில்லை என்பதால் புதிதாகப் பார்த்தவாறே பதில் சொன்னான்.

ஷம்ரி என்னோடு ஒரேவகுப்பில் படித்தவன். எனது மிகவும் நெருங்கிய பால்ய நண்பர்களிலே ஒருவன். என்மீது அளவில்லாத அன்பும் ஆதரவும் கொண்டவன். பாடசாலை காலத்திலே என்னோடு ஒன்றாகவே திரிந்தவன். நடுத்தீவில் இருந்த ஷம்ரியின் தாய் வீட்டைத்தான் எனக்குத் தெரியும். திருமணமான பின்பு அவன் மனைவியோடு எங்கே குடியிருக்கின்றான் என்பது தெரிந்திருக்கவில்லை.

அத்தனை நெருங்கிய நண்பனாக அவன் இருந்தும்கூட ஊரில் நடந்த அவனது திருமணத்திற்கு நான் வந்திருக்கவில்லை. நான் நிச்சயம் வரமாட்டேன்  என்பதை அறிந்தும் பெருந்தன்மையுடன் தனது கல்யாண அழைப்பிதழை தபாலில் அனுப்பியிருந்தான். திருமண மாப்பிள்ளையாய் அவன் பெருந்தன்மையாக நடந்து கொண்ட அளவுக்கு ஏனையவர்களும் நடந்து கொள்வார்களா என்ற எனது நியாயமான சந்தேகத்தை  அவனும் அறிந்தே வைத்திருந்தான். ஆம், அவனது திருமணம் நடந்ததே ஒரு பெரிய கதை. அதைக் நான் கூறத்தொடங்கினால் இப்போதைக்குத் திரும்பி வரமுடியாது. எனவே இப்போது ஷம்ரியின் வீடுசெல்வதை மட்டுமே பார்க்கலாம்..


 'தம்பீ ஷம்ரி ஸேர்ட வீடு எங்க இருக்கு?'

'மதரஸாக்குக்கிட்ட சந்தியில டேஸ்ட் கடையில கேட்டிங்கண்டா காட்டுவாங்க நானா'  என்று அவன் வழிசொல்ல பைக்கை ஏஸி ரோட்டில் திருப்பி ஓட்டினேன்.


ஷம்ரியை நினைத்தால் பத்தாம் வகுப்பு வரை எங்களோடு ஒன்றாகப் படித்த ரினோஸாவின் நினைவும் தவறாமல் வரும். அவள் எனது தந்தையின் நண்பர்களில் ஒருவரான உள்ளுர் போஸ்ட் மாஸ்டரின் இரண்டாவது மகள். எங்கள் வகுப்பிலே சரி அரைவாசித் தொகையில் மாணவிகளும் இருந்து வந்தார்கள். பையன்கள் எங்களுக்கும் பெண்களுக்கும் படிப்பு, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் உட்பட எல்லாவற்றிலுமே ஒருவித போட்டி மனப்பான்மை இருந்து வந்தது. நாங்கள் எப்போதுமே பெண்களை எங்களது எதிர்த்தரப்பாகவேதான் கருதுவதுண்டு.


இதனால் நானும் எனது நண்பர்களும் எதையாவது காரணத்தை வைத்துக்கொண்டு மாணவிகளைக் கிண்டலடிப்பது வழக்கம். அதுவும் அவர்களுக்குப் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவதும் அதற்கு அவர்கள் கோபப்படுவதை இரசிப்பதும் எங்களுக்கெல்லாம் பொழுதுபோக்காக இருந்து வந்த காலம் அது. அந்தப் பெண்களும் லேசுப்பட்டவர்களல்ல. படுசுட்டிகள்; பயப்படாமல் பையன்களாகிய எங்களுக்கு ஈடுகொடுத்து வாயடிப்பார்கள். அதிலும் சற்றுத் துடுக்கும் அழகும்  நிறைந்த ரினோஸா எங்களைக் கலாய்ப்பதிலே படுசுட்டியாக இருப்பாள். நாங்கள் அவளைத்தான் கூடுதலாக கிண்டலடிப்பது வழமை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.
ரினோஸாவை நாங்கள் எவ்வளவுதான் நையாண்டி செய்தாலும் அவள் அவற்றையெல்லாம் வெறும் விளையாட்டாக மட்டுமே எடுத்துக்கொள்ளும் குணமுள்ளவள். எங்களுடைய கிண்டலை தானும் உள்ளுர இரசித்து அதற்குப் பொருத்தமாக திருப்பியடிப்பாளே தவிர ஒருபோதும் அதனை பிரச்சினையாக ஆக்க மாட்டாள். அதுமட்டுமல்ல மற்றப் பெண்களைப்போல போலியான வெட்கமெல்லாம் காண்பிக்காமல் பையன்களாகிய எங்கள் எல்லோருடனும் சமமாகவும் வெளிப்படையாகவும் பழகுவாள். அபூர்வமாக எப்போதாவது ஒருநாள் அவள் கோபித்தாலும் அதுகூட அழகாகவும் நியாயமாகவும்தான் இருக்கும். இதனால் பையன்களாகிய எங்களுக்கு அவள் எப்போதும் ஒரு மதிப்புக்குரிய எதிர்த்தரப்பாகவே இருந்து வந்தாள்.


அப்போது பார்த்து எங்களுர் சினிமாத் தியேட்டரில் ஒரு புதுத்தமிழ் திரைப்படம் வந்திருந்தது. அந்தப்படம் திரைக்கதையிலும் காட்சியமைப்பிலும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.  நடுத்தர வயதைத் தாண்டியவர்களும் வயோதிபர்களும் இளைஞர் வேடமிட்டு நடிக்கும் அன்றைய காலத்தில் வழமையான தமிழ் படங்களைப்போலன்றி எங்கள் வயதொத்த இளைஞர்களே நடித்திருந்த ஒர் உல்லாசமான காதல் கதையுள்ள படம் அது. இதனால் நானும் நண்பர்களும் பல தடவை அந்தப் புதுப்படத்தைப் போய்ப்பார்த்தோம். அந்தப்படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் எனக்கும் எனது நெருங்கிய நண்பன் ஷம்ரிக்கும் சலிக்கவேயில்லை. மாலைவகுப்புகளைக் கூட தவிர்த்துவிட்டு இருவரும்  படத்தை அடிக்கடி பார்க்க ஆரம்பித்தோம்.


அந்தப்படத்தில் வரும் அழகிய இளம் கதாநாயகியை எனக்கும் எனது வகுப்பு நண்பர்கள் பட்டாளத்துக்கும் பிடித்துப்போனது. மிகவும் அழகான அந்த நடிகை எங்கள் வகுப்பின் மதிப்புக்குரிய எதிரி ரினோஸாவை தோற்றத்தில் பெரிதும் ஒத்திருந்தாள். அவ்வளவுதான். உடனடியாக எங்கள் எல்லோருக்குமே ரினோஸா மீது திடீரென ஒரு புதிய ஈடுபாடு உண்டாகி விட்டது. இந்த விடயம் எங்கள் வகுப்பு முழுவதும் பரவிவிட்டது. அதற்குப் பின்பு படத்தில்வரும் அந்த நடிகையின் பாத்திரப் பெயரைக்கூறி ரினோஸாவைப் புதிதாகக் கிண்டல் செய்யத் தொடங்கினோம். அந்தக் கிண்டலில் நானும் ஷம்ரியும்தான் சற்றுத் தீவிரமாக இருந்தோம்.


நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்ட ரினோஸாவுக்கு இணையாக எங்களில் யாரென்ற கேள்வி வந்தபோது எதுவித தயக்கமமின்றி நண்பர்கள் பட்டாளம் என்னையே தேர்ந்தெடுத்தது. அத்தோடு அவளோடு சேர்த்து என்னையும் கேலிபண்ண ஆரம்பித்து விடவே எங்கள் வகுப்பு முழுவதும் விடயம் அடிபட ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் இதுகுறித்து நானும் ரினோஸாவும் வெளிப்படையாகக் கோபித்துக்கொண்டாலும் உண்மையில் இருவரும் அதை உள்ளுர இரசித்தோமென்றுதான் கூறவேண்டும். அதிலே கட்டிளமைப்புரவத்திற்கேயுரிய ஏதோ ஒரு கிளுகிளுப்பு இருக்கத்தான் செய்தது. இதனால் நானும் ரினோஸாவும் காதல் என்றால் என்னவென்றே தெரியாத வயதிலேயே ஏறத்தாழ காதலர்கள் ஆகிவிட்டோம்.


இதுதான் நானும் ரினோஸாவும் 'காதலர்களான கதை'.


காதலர்கள் என்று வாங்கிய பெயரை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று அந்த வயதிலே எனக்கு சத்தியமாக தெரியவேயில்லை. ஒருவரை ஒருவர் விரும்புபவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இன்றைய காலத்தில் போல அதிகம் தெரியவில்லை. அப்போது வந்த திரைப்படங்களில் கூட ஆகமிஞ்சிப் போனால் வீட்டாருக்குத் தெரியாமல் எங்காவது தோப்புகளுக்குள்ளே அல்லது கடற்கரையிலே பேசிக்கொண்டிருப்பது போலத்தான் காட்டுவார்கள். நாங்கள் வளர்ந்த சூழலில் அதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது. காரணம்  பாடசாலை அல்லது மாலைநேர வகுப்புகள் (அதுவும் கூட பாடசாலையில்தான் நடைபெறும்) தவிர்ந்த வேறு எங்கும் பெண்பிள்ளைகளைத் தனியாக அனுப்பும் வழக்கம் அந்தக்காலத்தில் எங்கள் ஊரில் இருந்ததில்லை.


அதிலும் பையன்களாகிய எங்களுக்கிருந்த சுதந்திரம் பெண்களுக்கு சிறிதும் இருக்கவில்லை. இருந்தாலும் காதல் விடயத்திலே ரினோஸா என்னைவிட படுவிவரமாகவே இருந்தாள். தன்னை விரும்புபவன் தனக்கு நிறையத் தின்பண்டங்கள் வாங்கித் தரவேண்டும்.. தான் விரும்புவதையெல்லாம் அசடுவழிந்த கொண்டே நிறைவேற்ற வேண்டும்.. மற்றப் பெண்பிள்ளைகளோடு நெருங்கிப்பழகக்ககூடாது... தான் பையன்களுடன் சாதாரணமாகப் பேசினால்கூட அதற்காக நான் தன்னைக் கோபிக்க வேண்டும் என்பது போன்ற சில மலிவான எதிர்பார்ப்புகளையெல்லாம் வைத்திருந்தாள். ஆனால் சிறுவயது முதல் பாசாங்குகள் தெரியாமலே வளர்ந்தவனாகிய எனக்கு அதையெல்லாம் செய்வதற்குத் தெரியவில்லை மட்டுமல்ல அவற்றை நான்  விரும்பவுமில்லை. இது அவளுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்திருக்க வேண்டும்.


அதுமட்டுமல்ல என்னோடு ஒப்பிடும்போது இரண்டொரு மாதங்கள் பெரியவள் என்பதோடு தன்னுடைய அழகு போதாது தாழ்வான எண்ணத்தையும் அவள் கொண்டிருந்தாள். பாடசாலையில் வைத்து எப்போதாவது தனிமையிலே சந்திக்கக் கிடைத்தபோதெல்லாம் என்னுடைய அழகுக்கும் குணத்துக்கும் தான் பொருத்தமில்லை என்பதுதான் அவளது பேச்சாக இருப்பதுண்டு. அப்படி அவள் சொல்லும்போதெல்லாம் எனக்கு அவளுடைய தாழ்வுணர்வு எரிச்சலூட்டியது. அதைவிடவும் பாடசாலையிலே அவளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதானித்த எனக்கு எங்களைவிட உயர்ந்த வகுப்புப் படிக்கும் பையன்களோடெல்லாம் சகஜமாகப் பேசிப்பழகும் ரினோஸாவுக்கு காதல் விடயத்தில் வேறு சில தெரிவுகளும் இருப்பதாக சிறு சந்தேகமும் உண்டானது. அவளது பல தெரிவுகளில் நானும் ஒருவனோ என்று எண்ணவும் தோன்றியது எனக்கு.


நான் சிறுவயது முதலே புத்தகங்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். அவளுக்கு பாடப்புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவளுக்கு வானொலி நிகழ்ச்சிகளென்றால் உயிர். எனக்கு அதிலே பெரிய நாட்டமில்லை. இதுபோல பல அம்சங்களில் எங்களுக்கிடையே வேறுபாடுகளிருந்தன. ஆகமொத்தத்தில் என்னுடைய இரசனைக்கு அவளாலும் அவளுடைய எதிர்பார்ப்புகளுக்கு என்னாலும் இறங்கி வரவே முடியவில்லை. இதனால் எங்கள் 'காதல்' ஒரு முழுமையான வடிவம் பெறமுடியாமல்   நெடுங்காலம் அலைக்கழிந்தது. ஒருகட்டத்தில் இருவரும் முன்பு இருந்ததைப்போலவே மிகவும் சாதாரணமாக பழகத்தொடங்கி விட்டோம். இதைப்பார்த்த எனது நண்பர்கள்தான் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.


'என்னடா ரெண்டுபேருக்கும் ஏதும் பிரச்சினையா?' என்று துளைத்தான் நண்பன் ஷம்ரி.


'இல்லையே. இப்பவும் பேசிட்டுத்தானே இருக்கிறோம்'


'பேசுறீங்கதான்.. பழகுறீங்கதான். ஆனா.. அதில ஒரு 'இது' இல்லியடா?'


'இது இல்லையெண்டா எதுடா?'


'என்னடா சொல்றது..? இப்பல்லாம் உங்களைப் பாத்தா லவ்வர்ஸ் மாதிரியே இல்லியடா!'


நான் என்னுடைய பிரச்சினைகளை ரஸீனிடம் சொன்னேன்.

'உன்னிலயும் பிரச்சினை இருக்குதுடா. நீ லவ்வை ஃபிட்டாக்கிற மாதிரி எதுவும் செய்யாம இருக்கிறியே..'

'சரி, இப்ப என்ன செஞ்சா லவ் ஃபிட்டாகும்? படத்தில காட்ற மாதிரி புளியமரத்தை சுத்திப் பாட்டுப்பாடி ஆடணுமாடா? சொல்லு செய்வோம்'


'ஓ! ஆடுங்க.. வருவாரு வாப்பா! போஸ்ட் ஒபீஸ்ல கடிதத்துக்கு சீல் குத்துற கட்டையாலயே ஒன்னப் போட்டுக் குத்தியெடுப்பாரு மனிசன்! மச்சான் வாடா பின்னேரத்தில கொடத்தோட மில்லுக்கெணத்துக்கு தண்ணிக்கு வரும். சைக்கிள எடுத்திட்டு வாடா பொட்டைய பாக்கப் போவோம்'


'அதான் ஒவ்வொரு நாளும் ஸ்கூல்ல பாக்கிறந்தானேடா!'


'போடா இவனே! நீயெல்லாம் ஒரு..! லவ்வெல்லாம் ஃபிட் ஆகணுமெண்டால் இப்பிடியெல்லாம் போவணும் திரியணும்'


ஷம்ரியின் யோசனைப்படி ஒரு வெள்ளிக்கிழமை பின்னேரம் அவள் வீடு இருக்கும் தெருவால் பல தடவை சைக்கிளில் டபுள்ஸ் அடித்துப் போவதும் மில்லுக்கிணற்றுக்கு முன்னாலிருக்கும் புளியமரத்தடியில் காத்து நின்றும் பார்த்தோம். ஊரிலுள்ள அத்தனை இளம் பெண்களும் தண்ணீருக்கு வந்தார்கள். ஆனால் ரினோஸாவைத்தான் அந்தப்பக்கமே காணவில்லை. சனி ஞாயிறுகளிலும் அவள் வரவில்லை. அவள் வராததிலே என்னைவிட ஷம்ரிக்குத்தான் அதிக ஏமாற்றமாக இருந்தது.


எங்கள் ஏமாற்றம் அத்தோடு முடியவில்லை.


அடுத்த வாரம் முழுவதும் ரினோஸா பாடசாலைக்கும் வராதிருந்தாள். விசாரித்துப் பார்த்ததிலே கொழும்பிலிருக்கும் அவளது மாமா ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். சரி, எப்படியும் அதற்கடுத்த வாரமாவது பாடசாலைக்குத் திரும்பி வருவாள்தானே என்று நாங்கள் எங்களையே தேற்றிக்கொண்டோம். ஆனால் நடந்ததோ வேறு விடயம்.
ஆம். ரினோஸா வரவேயில்லை. கொழும்பு சென்ற  ரினோஸா அங்கே மாமா வீட்டிலேயே தங்கிப் படிக்கப்போவதாக ஒரு செய்தி மட்டும்தான் வந்தது.
'என்னடா இப்பிடிப் போய் கொழும்புலயே நிண்டுட்டாள்..?' என்று சலித்துக் கொண்டான் ஷம்ரி.


'அதானடா. இதைப்பத்தி ரினோஸா எதுவும் சொல்லவே இல்லையே திடீர் என்டு ஏன்டா..?'


'நீ அவளை ஷேப்பண்ணி வச்சிருந்தால்தானே சொல்லுவாள்..? சரி, எப்பிடியும் லீவிங் ஸேர்ட்டிபிக்கேட் எடுக்க இங்க வருவாள்தானே.. அப்ப  எப்படியாவது அவளைத் தனியாச் சந்திக்கணுன்டா.. இப்பிடியே போனா சரிவராது மச்சான்'


அதற்குப் பிறகு பாடசாலை விட்டால் போதும் கொழும்பிலிருந்து ரினோஸா வந்திட்டாளா இல்லையா என்று அறிவதற்காக அவளது தெருவிலேயே அலைந்து கொண்டிருப்பதுதான் எனக்கும் ரஸீனுக்கும் தினசரி வேலையாகிப் போனது.


'சே! அவள் இஞ்ச இருந்த நேரமே லவ்வை டெவலப் பண்ணாம சும்மா இருந்திட்டு இப்ப போய் இப்பிடி அலையுறியேடா மடையா'


'நான் எங்கடா அலையுறேன். நீதான் என்னையும் இழுத்திட்டு அலைய வைக்கிறா தெரியுமா?' என்றேன் வாய் தவறிப்போய்.


'டேய் நாயே! எனக்கு இது வேணுண்டா! நீதானேடா அந்தப் படத்தைப் பாத்துப்போட்டு அந்த நடிகை நம்மட ரினோஸா மாதிரியிருக்கா அது இது என்று உளறிக் கொட்டி என்னையும் இழுத்திக்கிட்டு தியேட்டருக்குத் திரிஞ்சுபோட்டு.. இப்ப இப்பிடியாடா சொல்றா?' என்று என்காதைத் திருகினான் ஷம்ரி.


அதற்குப் பிறகு நான் ரினோஸாவை மீண்டும் காண்பதற்குள் பலவருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. அதற்குள் எனது வாழ்க்கையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் மாற்றங்களும் நடந்தேறியிருந்தன. குறிப்பாக ரினோஸாவை காத்திருந்து அவள் வீட்டுத்தெருவில் நானும் ஷம்ரியும் அலைந்த காலத்திலே நான் இன்னுமொரு காதலைச் சந்திக்க வேண்டியேற்பட்டதை அவசியம் சொல்லித்தானாக வேண்டும்.


அவளுடைய பெயர் ரிமாஷா.


ஊரிலிருக்கும் கிறிஸ்தவப் பாடசாலை கணித ஆசிரியரின் மகள். அவளும் அதே பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். பழைய காதலி ரினோஸாவின் வீடு இருந்த அதே தெருவிலே இருந்து தினமும் பொதுக்கிணற்றுக்குத் தண்ணீர் அள்ளிச்செல்ல வந்து செல்லும் ரிமாஷாவின் ஓரவிழிப்பார்வையில் நான் என்னையறியாமலே விழுந்துவிட்டேன். அவளுடைய அழகும் அமைதியான குணமும் இவள்தான் உண்மையிலேயே எனக்குரியவள் என்ற உணர்வை ஏற்படுத்தியது.


உண்மையைச் சொல்லப்போனால் ரிமாஷாவைக் கண்டபின்புதான் முன்பு எனது பழைய காதல் வெறும் சினிமாக் கவர்ச்சியினால் உருவானது என்பதையும் அது எங்கள் இருவரின் உள்ளார்ந்த ஈடுபாடின்றி நண்பர்களின் ஊக்கத்தால் மட்டுமே தழைத்திருந்த ஒன்று என்ற உண்மையையும் நான் உணர்ந்து கொண்டேன்.


ஆனால் இந்த முறை பழைய தவறுகளை நான் செய்யவேயில்லை.


ஆம், எனது புதிய காதலை மிகவும் இரகசியமாக வைத்திருக்கத் தீர்மானித்தேன்.  எனக்காக என்கூடவே அலைந்தவனாகிய நண்பன் ஷம்ரிக்குக்கூட நான் தெரியப்படுத்தவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் நானும் ரிமாஷாவும் எங்கள் காதலை வெறுமனே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதோடு மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டோம். எங்கள் காதலை அடைகாத்து வைத்திருப்பதிலே என்னைவிடத் தீவிரமாக இருந்தவள் ரிமாஷாதான். இதனால் எனது நண்பர் வட்டாரத்தில் வெளிப்பூச்சுக்கு ரினோஸாவின் காதலன் என்ற பெயரோடு உள்ளுர ரிமாஷாவின் காதலனாக நான் இருந்து வந்தேன்.


உண்மையைச் சொல்லப்போனால் முதிர்ந்த இலைகள் தளிரிலையைப் போர்த்துப் பாதுகாப்பதுபோல எனது உண்மைக்காதலை மற்றவர்களின் கவனத்திற்குச் செல்லாமல் பாதுகாத்ததே என்னுடைய பழைய காதல்தான். இதற்காகவே ரினோஸாவின் காதலன் என்ற பழைய பெயரை மறுக்காமலே இருந்து வந்தேன். இப்படியே வெகுகாலம் எங்கள் இரகசியக் காதல் தொடர்ந்தது.


இப்படியே வெகுகாலம் எங்கள் இரகசியக் காதல் பேச்சுவார்த்தை, இடைத்தரகர்கள், தோழிகள், கடிதப் பரிமாறல்கள், தொலைபேசித் தொடர்பாடல்கள் ஏதுமின்றி வெகு ரகசியமாக தொடர்ந்தது.

ஓரிரு ஆண்டுகளிலே படிப்பை முடித்துவிட்டு வேலைவிடயமாக வெளியூருக்கு நான் சென்று தங்கியிருக்க வேண்டிய அவசியமேற்பட்டது. அப்போதுதான்...

 'என்ன தம்பீ, யாரைத் தேடுறீங்க' என்று என்னைக் கலைத்தார் என்னுடைய தாய்வழி உறவினர் ஒருவர்.


விடயத்தைச் சொன்னேன்.


'வாங்க அந்த வழியாலதான் நானும் வயலுக்குப் போறேன்' என்றபடி என்னைக் கூட்டிச்சென்று ஷம்ரியின் வீட்டில் விட்டுச் சென்றார்.


இரண்டு பிரதான தெருக்கள் ஒன்றையொன்று வெட்டிச்செல்லும் ஒரு நாற்சந்திக்கு அண்மையிலிருந்தது அவனது வீடு. தகரவேலியிட்டிருந்த அந்த ஓட்டுவீட்டின் முன்னால் நிறைய சைக்கிள்கள் நின்றிருந்தன. சிறிய போர்ட்டிக்கோ போலிருந்த பகுதியை அடுத்திருந்த வரவேற்பறையின் கதவு திறந்து கிடந்தது பலசோடி கழற்றப்பட்ட செருப்புகள் கிடந்தன.


'ஷம்ரீ! ஷம்ரீ!!'  என்று அழைத்தவாறு நான் உள்ளே சற்று எட்டிப் பார்த்தேன். அங்கிருந்த நாற்காலிகளிலே ஷம்ரியும் அவனைச்சூழ எனது நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் ஒரு கணம் அவர்களுக்கு ஒருகணம் எதுவுமே புரியாமல் சட்டென்று அமைதியானார்கள்.


என்னை முதலில் அடையாளங் கண்டவன் வேறு யாராக இருக்கும்? என் பால்ய நண்பன் ஷம்ரியேதான்.


'அடேய் நீயாடா? இஞ்ச பாருங்கடா புதினத்தை! இது எப்படா வந்தாய் நீ! எவ்வளவு நாளைக்குப் பிறகுடா இது..' என்று கூவிக்கொண்டே ஓடோடி வந்து என்னைத் தன் நெஞ்சோடு கட்டித் தழுவிக்கொண்டான் ஷம்ரி.


அதன் பிறகுதான் மற்ற நண்பர்கள் எல்லோருக்கும் வந்திருப்பது நான்தான் என்பது புரிந்தது. ஆளாளுக்கு ஓடோடி வந்து கட்டித் தழுவிக்கொண்டது மட்டுமல்ல, 'டேய் இதென்னடா உன்ட கோலம்..? தலையெல்லாம் நீளமாய் அந்நியன் ஸ்டைல்ல வளர்த்து ஆளை மதிக்கவே ஏலாதுடா..? என்று தலைமுடியை குலைத்து முதுகிலே செல்லமாய் அடிக்கவும் செய்தார்கள்.


'அதுசரி என்னடா எல்லாரும் இஞ்ச வந்து கெடக்கிறீங்க..? ஏதும் விசேஷமாடா..?' என்றேன் எல்லாரையும் பொதுவாகப் பார்த்து.


'ஓண்டா விசேஷம்தான்..! நம்மட ஷம்ரி வாப்பாவாகிட்டான்டா. மனுஷி ஆஸ்பத்திரி வாட்ல; நேத்துத்தான் ஆம்பிளைப் பிள்ளைளொண்ணு கெடைச்சிருக்கு.. அதான் வந்து மச்சானைக் கலாய்ச்சிக்கிட்டிருந்தோம். இப்ப நீயும் வந்திட்டா!'


'ஓ! நல்ல விசயந்தானே..? இப்ப ரெண்டு பேரும் எப்பிடி இருக்கிறாங்க?'


'பிரச்சினையில்லடா சுகப்பிரசவந்தான். நாளைக்கு இல்லாட்டி
நாளண்ணைக்கு டிக்கட் வெட்டுவாங்க.. உம்மா மாமியெல்லாம் வாடலதான் கூடவே நிக்கிறாங்க.. இரு, நான் உனக்கு டீ போட்டுட்டு வாறேன்' என்று எழுந்து உள்ளே சென்றான் ஷம்ரி.


'ஷம்ரி ஊத்துற டீயைக் குடிச்சிடாத! குடிச்சியோ நாளைக்கே கொழும்புக்கு ஓடிடுவா?' என்றான் பைஸல்.


'ஓண்டா.. இதை பைஸல் ரெண்டு கப் டீயைக் குடிச்சிப் போட்டுத்தான்டா சொல்றான்!' என்று கிச்சனிலிருந்தபடி ஷம்ரி சொல்ல மற்றவர்கள் சத்தமாய்ச் சிரித்தோம்.


'பார்டா, வீட்ல பொம்பிளை இல்லையென்ட உடனே எப்பிடியெல்லாம் கூத்தடிக்கிறானொள் எண்டு'


அடுத்த ஒரு மணிநேரம் நண்பர்கள் எங்களது அளவளாவலோடு வெகு அட்டகாசமும் மகிழ்ச்சியுமாய் கழிந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அருகிலிருந்த மத்ரஸாவிலிருந்து மஃரிப் தொழுகைக்கான அழைப்பு கேட்டது.  உடனே நண்பர்கள் எழுந்து,


'மச்சான் ஷம்ரி, நாங்க தொழுதுட்டு ஆண்டி கடையில நிக்கிறோம் ரெண்டுபேரும் அங்க வாங்க சரியா' என்று ஷம்ரியிடம் விடைபெறத் தொடங்கினார்கள்.


'இருங்கடா நானும் வாறேன்'  என்று நானும் எழுந்தேன்.

'நீ இரு மச்சான். அவனொள் போகட்டும்.  நம்ம முன்கடையில கிழங்கு ரோஸ் ஏதாவது சாப்பிட்டுட்டு டீ குடிச்சிட்டு தொழப் போவோம்' என்றான் ஷம்ரீ.

'பாத்தியாடா இவன..  பழைய கூட்டாளி வந்தவுடனேயே எப்பிடி நம்மளுக்கு காய் வெட்டுறானென்டு' என்றான் இஸ்ஸத் சிரித்துக் கொண்டே.

நண்பர்கள் எல்லோரும் சென்றதும் 'மச்சான் டேய், இந்தா இதைப் பார்த்திட்டு இரு. ஒரு நிமிஷத்தில முகத்தைக் கழுவிட்டு வாறேன்' என்று  அவனது திருமண போட்டோ அல்பத்தை தந்து விட்டு கிணற்றடிக்குச் சென்றான் ஷம்ரி .

அதை வாங்கி நான் திறந்ததும், கருநீலநிற கோட்சூட் அணிந்த திருமண மாப்பிள்ளை ஷம்ரியின் இடதுபுறமாக பாரதிராஜா படத்தில்வரும் தேவதைகள் போன்ற வெண்ணிறத் திருமண ஆடையில் கையிலே பூங்கொத்துடன் காதலின் துரோகம் சிறிதும் தெரியாதபடி புன்னகைத்தவாறு நின்றிருந்தாள் அழகும் அமைதியும் நிறைந்த பாத்திமா ரிமாஷா.


-மூதூர் மொகமட் ராபி

 .


Wednesday, December 19, 2012

ஒரு கேள்வியும் பதிலும்

 


Q: உங்கள் இளையராஜா கட்டுரையில் தமிழ் சினிமாவில் இசையில் மட்டுமே உயர்தரமான திறமை வெளிப்பட்டது என்று எழுதியிருக்கிறீர்கள். அதை விளக்க முடியுமா? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?


A:  சினிமா நமக்கு ஒரு புதிய கலை. மானுடத்துக்கும் அது ஒரு புதிய கலைதான். அது ஒரு கூட்டுக்கலை. ஓவியம் புகைப்படம் நாடகம் இசை என பலகலைகளின் கலவை அது. உலகில் வெவ்வேறு பண்பாடுகளில் சினிமா உருவானபோது அப்பண்பாடுகளில் ஏற்கனவே இருந்த கலைகளை எடுத்துக் கலந்துகொண்டு தன் கலைவடிவத்தை, தனித்தன்மைகளை உருவாக்கிக்கொண்டது.

தமிழில் சினிமா உருவானபோது எழுத்து, அரங்க அமைப்பு, நடிப்பு ஆகிய மூன்றையும் நாம் மேடைநாடகத்தில் இருந்து பெற்றுக்கொண்டோம். நமது மேடைநாடகமே அதிகம் வளர்ச்சியடையாத ஒன்றுதான். நமக்கு நெடுங்காலமாக இருந்து வந்தது கூத்துமரபுதான். உயர்தளத்திலான கூத்துக்கலை பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழக மன்னர்களின் அழிவுடன் தேக்கமடைந்து படிப்படியாக அழிந்திருக்கலாம். அவற்றின் நாட்டார் வடிவங்கள் மட்டுமே நம்மிடம் மிஞ்சியிருந்தன – தெருக்கூத்து போல.
நீண்ட காலம் கழித்து பதினெட்டாம் நூற்றாண்டில் பார்ஸிநாடகக் குழுக்கள் தென்னிந்தியாவில் பயணம் செய்து ஊர் ஊராக நாடகம் நடத்தியபோதுதான் நமக்கு நாடகம் என்ற கலை அறிமுகமாயிற்று. அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நாம் நம்முடைய மேடைநாடகங்களை உருவாக்கிக் கொண்டோம். தொழில்முறை நாடகக் குழுக்கள் உருவாயின. சென்னையில் பயில்முறை நாடகக்குழுக்கள் பிறந்தன. பாய்ஸ் கம்பெனிகள் என்ற பேரில் அறியப்பட்ட இரண்டும் கலந்த குழுக்களும் வந்தன. இவையே நம்முடைய நாடகத்தை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கின.. ஆனால் அவை உருவாகி ஓரளவேனும் முழுமைபெறுவதற்குள்ளாகவே இங்கே சினிமா வந்துவிட்டது. நம்முடைய மேடைநாடகம் என்ற வணிகக்கலைவடிவத்தின் தோற்றத்துக்கும் முடிவுக்குமான கால இடைவெளி ஒரு தலைமுறைக்காலம் மட்டும்தான்.
இந்தச் சிறிய கால அளவில் நாம் நம்முடைய நாடக ஆக்கத்தையும் நாடக ரசனையையும் பெரிதாக வளர்த்தெடுக்கவில்லை. நம் மேடைநாடகம் வணிகநோக்கம் கொண்டதாகையால் மக்களின் ரசனையுடன் சமரசம் செய்துகொள்வதில் கவனமாக இருந்தது. மக்களின் ரசனையோ தெருக்கூத்துக்குப் பழகியதாக இருந்தது. ஆகவே நம் நாடகங்கள் தெருக்கூத்துக்கும் நாடகத்துக்கும் நடுவே இருந்த வடிவங்களாக இருந்தன. சமீபத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களை வாசித்துப் பார்க்கையில் அவற்றில் தெருக்கூத்தின் அம்சங்களே அதிகம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இன்றுகூட தென்தமிழகத்தில் அவற்றை கூத்து என்றே சொல்கிறார்கள். ஸ்ரீவள்ளி கூத்து, அல்லிஅர்ஜுனா கூத்து என்றெல்லாம்.


ஐரோப்பாவின் நாடகமேடை இருநூறாண்டுக்கால வளர்ச்சி உடையது. பல்வேறு இயக்கமுறைகள் நடிப்புமுறைகள் அரங்க அமைப்புமுறைகள் அவற்றில் சோதித்துப் பார்க்கப்பட்டிருந்தன. பல்வேறு கலைப்பாணிகள் இருந்தன. இங்கே நாடகத்தில் நாற்பது பாடல்களை கத்திப்பாடுவதும் வசனங்களை ஒரு குறிப்பிட்ட வகையில் கூவுவதும் மட்டுமே நடிப்பு என கருதப்பட்ட 1920-களில் ஸ்டனிஸ்லாவ்ஸ்கியின் [Constantin Stanislavski] யதார்த்தபாணி நடிப்புமுறையும் இயக்கமுறையும் ஐரோப்பாவில் வேரூன்றிவிட்டன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அந்த முழுவளர்ச்சியடைந்த மேடைநாடக மரபிலிருந்து ஐரோப்பிய சினிமா உதயமானது.


நேர்மாறாக நம்முடைய சினிமா நம்முடைய வளராத நாடகத்தில் இருந்து உருவானதாக இருந்தது. அந்த நாடகமேடை தெருக்கூத்துக்கு பக்கமாக இருந்தமையால் நம்முடைய சினிமாவும் தெருக்கூத்துக்கு நெருக்கமானதாகவே இருந்தது. சமீபத்தில் டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ஸ்ரீவள்ளி சினிமாவைப் பார்த்தேன். அப்படியே செல்லுலாய்டில் தெருக்கூத்து பார்ப்பது போலிருந்தது. வேலன் விருத்தன் கூத்து என்ற பேரில் ஆடப்பட்ட கூத்து சங்கரதாஸ் சுவாமிகளால் ஸ்ரீவள்ளி அல்லது வள்ளிதிருமணம் என்ற பேரில் நாடகமாக ஆக்கப்பட்டு பின்னர் சினிமாவாக மாறியிருந்தது. ஆம், இரண்டு முறை வெவ்வேறு கலைவடிவங்களுக்குள் அது புகுந்து வந்திருந்தது. ஆனால் பெரிதாக உருமாற்றம் அடையவேயில்லை.


ஆகவே நம்முடைய சினிமாவில் எல்லாமே தெருக்கூத்துக்கு நெருக்கமாக இருந்தன. திரைக்கதை அமைப்பு, காட்சிகளை அமைக்கும் முறை, நடிப்பு , ஒப்பனை எல்லாமே. சிவாஜிகணேசன் வரை நடிப்பில் தெருக்கூத்தின் பாணியையே அதிகம் நாம் காண்கிறோம். அரங்க அமைப்பு பார்சி நாடகத்தில் இருந்து வந்த படுதா வரையும்முறை. அதிலிருந்து விடுபட்டு நாம் சினிமா என்ற கலைவடிவை புரிந்துகொள்ள அரைநூற்றாண்டாகியது. ஆகவே இந்தத் தளங்களில் பெரிதான திறமைகள் ஏதும் வெளிப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஏற்கனவே கூத்து முதல் நமக்குப் பழக்கமாகி இருந்தவற்றை மீண்டும் நிகழ்த்தும் கலைஞர்களையே நாம் காண நேர்ந்தது.
ஐரோப்பிய சினிமாவில் இருந்துதான் நாம் சினிமாக்கலையை தொடர்ந்து கற்றுவருகிறோம். திரைத்தொழில்நுட்பத்தை வேகமாக உடனுக்குடன் கொண்டுவந்தோம். அது வணிகரீதியாக பலனளிப்பது. ஆனால் மிகமிகக் குறைவாக, மிகுந்த தயக்கத்துடன் மட்டுமே நாம் அங்கிருந்து கலைநுட்பங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். காரணம் நம் ரசிகர்களை அதற்குப் பழக்கப்படுத்துவது கடினம். ஆகவே வணிகரீதியாக அது அபாயமான முயற்சி. எது ரசிகர்களுக்கு பழக்கமோ, எது அவர்களுக்குப் பிடிக்குமென ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டிருக்கிறதோ அதைமட்டுமே கொண்டு வந்தோம். சினிமாவின் எல்லா கலைத்துறைகளிலும் இதுவே யதார்த்தம். இசை மட்டுமே விதிவிலக்கு.


தமிழ் சினிமா ஆரம்பமான காலம் முதலே சினிமாவின் நகர்வுக்கு சம்பந்தமில்லாத வேகத்தில் இசை நவீனமாகிக் கொண்டிருப்பதைக் காணலாம். தமிழில் சினிமா வந்த சிலவருடங்களிலேயே முற்றிலும் நவீனமான ஐரோப்பியப் பின்னணி இசை வர ஆரம்பித்துவிட்டது. பாடல்கள் தென்னிந்திய மரபிசைப்பாணியில் இருக்கையில் பின்னணி இசை ஐரோப்பிய பாணியில் இருந்தது. பின்பு பாடல்களிலேயே அந்தக் கலப்பு வெற்றிகரமாகச் சாத்தியமானது.


விளைவாக மிகவிரைவில் திரையிசை என்ற தனித்துவம் மிக்க ஒரு இசைமரபு தமிழில் ஆழமாக வேரூன்றியது. தமிழ்ப்பண்பாட்டில் இவ்வளவு வேகமாக உருவாகி நிலைபெற்ற ஒரு தனிக்கலைவடிவம் வேறு உண்டா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்சினிமாவில் இசையில் இருந்த தரம் படங்களின் பிற அம்சங்களில் பெரும்பாலும் இல்லாமலிருப்பதன் காரணம் இதுவே.


இதற்குக் காரணம் நடிப்பு, ஓவியம் போன்ற கலைகளைப்போல அல்லாமல் நமக்கு இசை நெடுங்காலமாகவே தொடர்பு அறுபடாமல் இருந்து வந்தது. பல்வேறு புறப்பாதிப்புகளை உள்வாங்கி தன்னை புதுப்பித்துக்கொண்டே அது நீடித்தது. கர்நாடக சங்கீதம் என்ற பேரில் பதினேழாம் நூற்றாண்டில் மறுபிறப்படைந்து கோயில்விழாக்கள் போன்ற வெகுஜன நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே ஆழமாக வேர்விட்டிருந்தது. நுட்பமான செவ்வியல் இசைக்கு இங்கே பொதுமக்களிடையே அறிமுகம் இருந்தது.


அதாவது நமக்கு தரமான நடிப்பை, தரமான நாடக இலக்கியத்தை, தரமான காட்சியமைப்பை ரசிக்கும் பயிற்சி நம் மரபில் இருந்து கிடைக்கவில்லை. ஆனால் தரமான இசையை ரசிக்கும் நுண்ணுணர்வு நம் சூழலில் இருந்து நம்மையறியாமலேயே கிடைத்தது. இசையில் மட்டுமே நமக்கு செயலூக்கம் கொண்ட ஒரு செவ்வியல்மரபு இருந்தது.


சமீபத்தில் பழைய நாடக இசை சம்பந்தமான சில இசைத்தட்டுக்களை கேட்டபோது கர்நாடக இசையானது இங்கிலீஷ் நோட்டு எனப்படும் மேலை இசையுடனும் இந்துஸ்தானி இசையுடனும் எப்படி படைப்பூக்கத்துடன் முயங்கியிருக்கிறது என்று கண்டு ஆச்சரியப்பட்டேன். அந்தப் பரிணாமப்போக்கில் இயல்பாக அது திரையிசையாக மலர்ந்தது. அதன் அடித்தளம் கர்நாடக இசையாக இருக்க மேலே பல்வேறு புறப்பாதிப்புகளை ஏற்றுக்கொண்டு தன்னை உருவாக்கிக் கொண்டது. பார்ஸி நாடகங்கள் வந்தபோது இந்துஸ்தானி இசைக்கூறுகளை உள்வாங்கி அது புதுவடிவம் பெற்றது. பின் ஆங்கில இசைக்கூறுகளை உள்வாங்கி மேலும் வளர்ந்தது.
இந்தத் தொடர்ச்சி காரணமாக திரையிசையில் தொடர்ந்து அசலான படைப்பூக்கம் வெளிப்பட்டது. அதைக் கேட்கும் ருசியும் நம் சாதாரண மக்களிடம் இருந்தது. இந்த வகையான படைப்பூக்கமும் சரி, இந்த வகையான ரசனையும் சரி, திரைப்படத்தின் பிற கலையம்சங்களில் சாத்தியமாகவில்லை.


நான் கேட்டவரை இந்தியத் திரையிசை பற்றியும் இதைத்தான் சொல்வேன். சமீபகாலமாக அதிகமாக பழைய தெலுங்கு சினிமாப்பாடல்களை அதிகம் கேட்கிறேன். அவற்றில் தெரியும் படைப்பூக்கம் பிரமிப்பூட்டுவது. உண்மையில் தெலுங்கு திரையிசை என்பது கடல் அலை. அதன் மேலேறி மிதந்தெழுந்த இரு நெற்றுகள்தான் என்.டி.ராமாராவும் நாகேஸ்வர ராவும். தெலுங்குப்பாடல்களைக் கேட்டுக்கேட்டு இவர்களை நானும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன்.


சினிமாவில் நாம் எடுத்தாண்ட நடிப்பு, நாடக இலக்கியம் அரங்க அமைப்பு போன்ற பிற கலைமரபுகள் வளர்ச்சியடையாமல் தேங்கி நின்றிருந்தவை. நம் ரசிகர்களும் அவற்றுக்குப் பழகி அவற்றையே எதிர்பார்த்திருந்தார்கள். ஆகவே அந்த சராசரிக்கோட்டில் இருந்து மேலெழுவது நமக்கு மிகக் கடினமானதாக நெடுங்கால வளர்ச்சி தேவைப்படக்கூடியதாக இருந்தது. இசையில் அப்படி அல்ல. நாம் செவ்வியலின் உச்சியில் இருந்து புதியவானங்களை நோக்கிப் பறக்க முடிந்தது.

Thanks: Jeyamohan

Tuesday, December 18, 2012

பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமுடியாததற்கு வருந்துகிறேன்.



(தி ஹிந்துவில் (நவம்பர் 19, 2012) வெளியான ஜஸ்டிஸ் மார்கண்டேய கட்ஜுவின் கட்டுரை  Why I can’t pay tribute to Thackarey, அவர் அனுமதியுடன் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தமிழில் : மருதன்.)

ரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் முண்டியடித்து மறைந்த பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களிடம் இருந்து புகழஞ்சலிகளும் நினைவஞ்சலிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எனது மாறுபட்ட கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால் இத்தகைய விதிகளைக் காட்டிலும் என் நாட்டின் நலன் எனக்கு முக்கியம்.


பால் தாக்கரேவின் பண்பு என்று எதைச் சொல்லலாம்? எனக்குத் தெரிந்து மண்ணின் மைந்தன் (பூமிபுத்ரா) என்னும் அவருடைய தேச விரோதக் கோட்பாடுதான்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 1(1) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியா, அதாவது பாரத் மாநிலங்களின் யூனியனாக இருக்கும்.’ அதாவது, இந்தியா என்பது கூட்டுக்குழு அல்ல, யூனியன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 19(1)(e) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும் தங்கவும், குடியமரவும் அனைத்து குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது.’
ஒரு குஜராத்தியோ, தென் இந்தியனோ, பிகாரியோ, உத்தரப் பிரதேசத்துக்காரரோ அல்லது இந்தியாவில் எந்தப் பகுதியில் இருப்பவராக இருந்தாலும் சரி, மகாராஷ்டிராவுக்குக் குடிபெயரலாம். இது அனைவருக்குமான அடிப்படை உரிமை. (சில வரலாற்றுக் காரணங்களுக்காக ஜம்மு காஷ்மிர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அவ்வாறு குடியேறுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.)

ஆனால், பூமிபுத்ரா கோட்பாட்டின்படி, மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கு மட்டுமே உரியது. குஜராத்திகள், தென் இந்தியர்கள், வட இந்தியர்கள் ஆகியோர் ‘வெளியில் இருப்பவர்கள்’. நாம் மேலே கண்ட அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு நேர் எதிரான கோட்பாடு அல்லவா இது! இந்தியா என்பது ஒரு தேசம். மராத்தியர் அல்லாதாரை அயல்நாட்டினரைப் போல் மகாராஷ்டிராவில் நடத்தமுடியாது.

தாக்கரே தோற்றுவித்த சிவ சேனா, அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் தென் இந்தியர்களைத் தாக்கி, அவர்களுடைய வீடுகளையும் உணவிடங்களையும் அழித்தொழித்தது. மும்பையில் செய்தித்தாள்கள் விற்பவர்களாகவும் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் இருந்த பிகாரிகளையும் உத்தரப் பிரசேத்துக்காரர்களையும் 2008ல் தாக்கினார்கள். அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டன. ஊடுருவல்காரர்கள் என்று அழைக்கப்பட்டு அவர்கள் தாக்கப்பட்டார்கள். இஸ்லாமியர்கள் வில்லன்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள்.

இவையனைத்தும் ஓட்டு வங்கிகள் உருவாக தாக்கரேவுக்கு உதவி செய்தன. வெறுப்புணர்வின் அடிப்படையில் திரண்ட வங்கிகள் இவை. ஹிட்லரும் இப்படித்தான் செய்தார் என்பதையும் தாக்கரே ஹிட்லரை நேசித்தவர் என்பதையும் இங்கே நினைவுபடுததிக்கொள்ளவேண்டும்.
தாக்கரோவை நான் விமரிசிப்பதற்குக் அவருடைய தேச விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கோட்பாடு மட்டும் காரணமல்ல. இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

What is India? என்னும் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா என்பது வட அமெரிக்காவைப் போல குடியேறிகளால் உருவான ஒரு நாடு. இன்று இங்கு வசிக்கும் 92 முதல் 93 சதவிகித மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் அல்லர். அவர்கள் குடியேறிகளின் வழிவந்தவர்கள். நல்ல வாழ்வு தேடி வட மேற்குப் பகுதியில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்தவர்கள் அவர்கள். இதுபற்றி மேலும் விரிவாக அறிய என் வலைப்பதிவுக்குச் செல்லுங்கள். இந்தியாவின் அசலான பூர்வகுடிகள் (பூமிபுத்ராக்கள்) ஆதிவாசிகள் என்று அழைக்கப்பட்ட திராவிட பழங்குடிகளுக்கு முந்தையவர்கள். (கோண்டுகள், சாந்தல்கள், தோடாக்கள் போன்றவர்கள்.) இப்போது அவர்களுடைய மக்கள்தொகை 7 அல்லது 8 சதவிகிதம் மட்டுமே.

பூமிபுத்ரா கோட்பாட்டை நிர்தாட்சண்யமாக அமல்படுத்தவேண்டுமானால், 92 முதல் 93 சதவிகிதி மகாராஷ்டிரியர்களை நாம் அந்நியர்களாக மதிப்பிடவேண்டியிருக்கும். இவர்களுள் தாக்கரே குடும்பத்தினரும் அடக்கம். மகாராஷ்டிராவைப் பொருத்தவரை உண்மையான பூமிபுத்ராக்கள் எனப்படுவோர் பழங்குடிகள் (Bhils போன்றவர்கள்). இவர்கள் தற்போது 7 முதல் சதவிகிதம் வரையிலேயே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பல பிரிவினைவாத சக்திகள் இன்று இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியாவைத் துண்டுகளாக உடைப்பதே இவர்கள் குறிக்கோள். நாட்டுப்பற்று உள்ள அனைவரும் இவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும்.
Justice M. Kadju
நாம் எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும்? ஏனென்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். வாழ்க்கைத் தரம் உயரவேண்டுமானால் மிகப் பெரிய அளவில் செல்வம் சேர்த்தாகவேண்டும். விவசாயத்தால் மட்டும் இதனை நம்மால் சாதிக்கமுடியாது. நமக்கு நவீனத் தொழிற்சாலைகள் தேவை. நவீனத் தொழிற்சாலைகளுக்கு மிகப் பெரிய சந்தை தேவைப்படுகிறது. ஒன்றுபட்ட இந்தியாவால்தான் இப்படிப்பட்ட மிகப் பெரிய சந்தையை அளிக்கமுடியும்.

வறுமையை ஒழிக்கவேண்டுமானால், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டுமானால், பிற சமூக அவலங்களை ஒழிக்கவேண்டுமானால் நவீன தொழிற்சாலைகள் தேவை. நவீன கல்விமுறையையும், நல்ல மருத்துவ வசதிகளையும் நாம் உருவாக்கவேண்டும். அதற்கு நாம் ஒன்றாக இருக்கவேண்டியது அவசியம். உலகின் முன்னேறிய நவீன நாடுகளில் ஒன்றாக இந்தியா வளரவேண்டும்.
எனவே, திரு பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமுடியாததற்கு நான் வருந்துகிறேன்.

Thanks: Tamilpaper.com

Monday, December 3, 2012

சிறுகதை: கூண்டுக்கிளி





 


'ஆன்ரி இது உங்கடதுதானே...?'


தோளிலே டியுஷன் பையுடன் சைக்கிளை நிறுத்தி மேலே அண்ணாந்து பார்த்துக் கேட்டவனின் கையில் இருந்த பொருளைப் பார்த்ததும் ஓர் உயிர்ப்பான மின்சாரக்கம்பியை மிதித்ததைபோலிருந்தது எனக்கு.  இந்த நேரம் பார்த்து பொதுநூலகத்துக்குச் சென்றிருக்கும் எனது கணவரோ டியூஷன் போயிருக்கும் சுஜன்யாவோ வந்துவிடாமலிருக்க வேண்டுமே என்று மனம் பதைபதைத்தது.

'இரு தம்பி கொஞ்சம், கீழே இறங்கி வாறேன்'
'இது எப்படி இவன்ட கையில் வந்தது' என்று யோசித்தவாறு, என்று அவசர அவசரமாய் படியிறங்கத் தொடங்கினேன். எனது இளைய மகள் தனுஷாவுடன் கனகம் அக்காவின் டியூட்டரியில் படிக்கும் அடுத்த தெருப்பையன் துவாரகன்தான் அவன். அவனைப் 'புறா துவாரகன்' என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். இரண்டு கிழமையாக எனது வீட்டிலே வீசிக்கொண்டிருக்கும் புயல்காற்றின் மையமாக இருக்கும் இந்தச் சனியன் எப்படிக் கீழே காத்திருக்கும் துவாரகனின் கைக்கு வந்தது?

மூன்று நாளைக்கு முன்புதான் நடுச்சாமத்திலே ஓசைப்படாமல் எழுந்து யாருக்கும் தெரியாமல் அதை நான் முன்பு ஒளித்து வைத்திருந்த இடத்திலிருந்து திரும்பவும் கையிலெடுத்தேன். பேய் பற்றி எனக்குள்ள மெலிதான பயத்தையெல்லாம் சிறிதுநேரம் ஒத்திவைத்துவிட்டு நாங்கள் வசித்த மாடிக்குடியிருப்பின் நாலாவது மாடிக்கு படியேறி மொட்டை மாடிக்கு வந்து வீசும் குளிர்காற்றிலே நின்று நிதானித்தேன்.

நான் செய்யப்போகும் காரியத்தை நினைத்து அன்றிரவு ஒரு மெலிதான குற்றவுணர்வு இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் என்னைப் புரிந்து கொள்ளாத கணவரையும் மகளையும் நினைத்த மாத்திரத்திலே மனதிலே மண்டிக்கொண்டு வந்த கோபத்தையெல்லாம் ஒன்று திரட்டி பலத்தைக் கூட்டி, இருட்டிலே ஏதோ ஒரு திசையிலே அதை வீசியெறிந்துவிட்டு ஓசைப்படாமல் வந்து ஒன்றுமே நடவாததுபோல மீண்டும் படுத்துக்கொண்டேன். அத்தனை உயரத்தில் இருந்து வீசியதால் நிச்சயம் வெகுதூரத்தில் எங்காவது விழுந்து நொறுங்கிச் சிதறியிருக்கும் என்று நம்பினேன். அப்படித் தலைமுழுகிய இந்தப் பீடை எப்படி இவனின் கையிலே முழுதாக வந்து சேர்ந்தது...?

'ம்மா.. அம்மா!'

படியிறங்கிக் கொண்டிருந்த எனக்கு மேலே வீட்டுக்குள்ளிருந்து அலறும் என் கடைக்குட்டிப் பையன் யதுவின் குரல் கேட்டது. 'இப்போதுதானே தூங்க வைத்தேன் அதற்குள்ளே எழும்பி விட்hனே..  அவனைப்போய்த் தூக்கிக் கொண்டு வருவதற்குள் கீழே நிற்பவன் போய் விடுவானே?' என்று யோசித்தபடியே திரும்பவும் அவசர அவசரமாக மேல் நோக்கி ஏறத் தொடங்கினேன். மின்னலாய் வீட்டிற்குள் நுழைந்து தொட்டிலினுள் கிடந்தவனைத் தூக்கித் தோளிலே போட்டபடி மீண்டும் படிகளில் தடதடவென இறங்கினேன்.

நான், கணவர், தோளுக்கு மேல் வளர்ந்த இரு மகள்கள், கடைசியாயப் பிறந்தவனான ஒன்பது மாத யதுஷன் இவர்கள்தான் எனது குடும்பம். எனது கணவர் சேவையிலிருந்து சுய விருப்பத்துடன் ஓய்வுபெற்ற ஓரு விமானப்படை உயரதிகாரி. அவருக்கு எல்லாமே நேர்த்தியாக இருக்க வேண்டும். இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலட்சியமுள்ளவர். ஆனால் நானோ அவரது குணங்களுக்கு எதிரிடையாக எப்படியும் வாழ்ந்தால் போதும் என்ற இயல்புள்ளவள். எதைச் செய்வதானாலும் முன்கூட்டியே திட்டமிட்டு ஆயத்தம் செய்பவர் அவர். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்துவிட்டு அதை நியாயப்படுத்துவதிலே கெட்டிக்காரி நான்.
எனது கணவரது நேர்மை, தேசப்பற்று, நேரந்தவறாமை, அதீதசுத்தம், பரவலான உலக அறிவு,இவை எல்லாமே எனது மகள்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். அக்கம் பக்கத்திலுள்ளவர்களிலிருந்து அவருடன் வேலைபுரிந்தவர்கள் வரை இன்றுவரை அவற்றுக்காகவே அவரைப் பெரிதும் மதிப்பார்கள். ஆனால் அத்தனைபேருக்கும் உதாரண மனிதரான அவரிடம் எனக்குப் பிரச்சினையாக இருப்பதே அவரது மேற்படி குணங்கள்தான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்காது.

அவரைத் திருமணம் புரிந்த ஆரம்ப காலத்திலிருந்தே அவரது குணங்களை நானும் பெருமையாக நினைத்தவள்தான் என்றாலும் என்னால் அவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தது. அவருக்கு வீடு எப்போதுமே பளிச்சென்று சுத்தமாக இருக்க வேண்டும். அவருக்குரிய விருந்தினர்கள் வெகுகுறைவுதான் என்ற போதிலும் ஒரு விருந்தாளி வீட்டுக்கு வந்த பிறகு முன்னறையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பதெல்லாம் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆரம்பகாலத்திலே திருமணக் கவர்ச்சியினால் சிறிதுகாலம் நானும் ஒழுங்கானவள்தான் என்று அவரிடம் காட்டிக்கொள்ளப் பகீரதப் பிரயத்தனமெல்லாம் செய்து நடித்துப் பார்த்தேன். ஆனால் என் சாயம் வெளுத்துப்போக அதிக நாட்கள் தேவைப்படவில்லை.

தன்னைப்போலவே தன்னைச் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்தான் அவர். ஆனால் அதற்காக மற்றவர்களை வருத்துவதில்லை. மாறாக பிறர் செய்யத்தவறும் வேலைகளையும் தானே இழுத்துப்போட்டுச் செய்து கொண்டிருப்பார். அதைத்தான் இன்றுவரை என்னால் தாங்கமுடிவதில்லை. அப்படிச் செய்வது அவருக்கு வெகுஇயல்பானதாகத் தோன்றினாலும் அது ஏனோ என்னைக் குத்திக்காட்டுவதற்கென்றே அவர் செய்வது போலிருப்பதுண்டு. 'சே! அடித்தால் கூடத் தாங்க முடியுமே' எனும் ஆற்றாமை மனதிற்குள் ஆத்திரம் மாய்த் திரளும்.  அதை வெளிப்படையாகக் காட்டவும் வழியில்லாமல் மறைக்கவும் முடியாமல் சமையலறைப் பாத்திரங்களில் மீதுதான் காட்டுவேன்.

'ஹேய், என்ன எவ்லின்.. இன்டைக்கு கிச்சன் சத்தமெல்லாம் கூடுதலாக் கேக்குது..? ஓ! என்ட காதில இருந்த அடைப்பு சரியாயிட்டுது போல' என்பார். அதிலும் கூட எத்தனை நையாண்டி பார்த்தீர்களா? இதைக்கேட்டு அடுத்த அறையிலே படித்துக் கொண்டிருக்கும் மூத்தவள் சுஜன்யா உடனே வாய்விட்டுச் சிரிப்பது இன்னும் என்னைக் கோபப்படுத்தும்.

ஒரு சராசரிக் கணவனைப்போல இந்த ஆள் இருந்திருந்தால் கூட ஒரு சண்டைபோட்டு மனதினுள்ளே மண்டிக்கிடக்கும் ஆற்றாமையையெல்லாம் தீர்த்துவிடலாம். ஆனால் எல்லாவற்றிலும் நேர்த்தியான அந்த மனிதரின் செயல்களிலே இருக்கும் ஒழுங்கும் நேர்த்தியும்தான் வார்த்தை வெளிப்பாட்டிலும் இருக்கும். எனக்கு அவரைப்போல வெளிப்படையாகவும் திறமையாகவும் பேசும் குணம் கிடையாது என்பதனால் அவருடன் விவாதம் செய்யப்போனாலும் வீணே மூக்குடைபட்டுத் திரும்புவதைத்தவிர வேறுபலனேதும் கிட்டுவதில்லை எனக்கு.

திருமணமான புதிதில் அவரது உத்தியோகம் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து நானும்  தலைநகருக்கு வரவேண்டியதாக இருந்தது. அரசு அவருக்கு வழங்கியிருந்த சகல வசதிகளும் கொண்ட குவார்ட்டர்ஸ் ஒன்றில்தான் இருவரும் குடித்தனத்தை ஆரம்பித்தோம். குழந்தைகள் பிறக்கும் வரையிலே எங்களது வேறுபட்ட இயல்புகளால் இருவருக்குமிடையிலே பெரிய முரண்பாடுகள் ஏதும் தலையெடுத்திருக்கவில்லை. அதற்காக நாங்கள் மிகவும் அந்நியோன்னியமாக இருந்தோம் என்றும் சொல்லிவிட முடியாது. ஆரம்பத்திலே இனிமையாக இருந்த திருமணவாழ்க்கை, சிறிதுகாலம் போனதும் அது பெண்ணின் சுதந்திரங்களைப் பூட்டிவைக்கும் ஓர் அலங்காரச் சிறைதானோ என்று எண்ணத் தோன்றியது எனக்கு.

பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு வெகுதொலைவிலே அதுவரை ஒன்றாய்க் கிடந்த உறவுகளைப் பிரிந்து பெரும்பகுதி நேரத்தை தனிமையில் கழிப்பது வேதனை தந்தது. எப்போதாவது ஒரு தடவை யாராவது உறவினர்கள் தலைநகருக்கு ஏதாவது வேலையாக வந்தால் என்னையும் அவரையும் வந்து பார்த்துவிட்டுச் செல்வதுண்டு. அவ்வாறு வருபவர்களோடு புறப்பட்டு ஊருக்கே போய்விட்டாலென்ன என்று கூட சிலசமயங்களிலே நினைக்கத் தோன்றியிருக்கின்றது.

அடிக்கடி ஊருக்குச் சென்று எல்லோரையும் பார்த்துவிட்டு வரவேண்டும் போலிருக்கும். ஆனால் அதை உரிமையோடு நேரடியாக அவரிடம் கேட்டிருந்தால் அவரே, 'சரி போய் வா' என்று அனுமதி தந்திருக்கூடியவர்தான். ஏனென்றால் அவர் தனக்குத் தேவையானவற்றை சுற்றிவளைக்காமல் நெற்றிக்கு நேரே கேட்டுப் பெறுகின்ற பழக்கமுடையவர். நானோ எனக்கு விருப்பமான எதையுமே முரண்பட்டுப் பெறுபவள். சிறுவயதிலிருந்தே எதையாவது ஒன்றை ஆசைப்பட்டுக் கேட்டுவிட்டால் அது எனக்கு கிடைத்தே ஆகவேண்டும். 'கிடைக்காது' என்று ஒரு தெரிவும் வாழ்க்கையில் நிறைய உண்டு என்பதை அப்போதெல்லாம் நான் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இதனால் எதையும் சண்டை போட்டு அடைவதுதான் நான் பழகிய பழக்கம்.
ஊருக்குப் போய்வர அனுமதி கேட்டால் எங்கே ஒருவேளை மறுத்து விடுவாரோ என்ற அங்கலாய்ப்பிலே அவர் வேலைக்குச் சென்ற பின்பு அவரிடம் சொல்லாமலே ஊருக்கு பஸ்ஸேறிச் சென்றுவிடும் பழக்கத்தை ஆரம்பித்தேன். யாராவது உறவினர்கள் தலைநகருக்கு வந்திருப்பதாக அறிந்தால் போதும் உடனே ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கி அவர்களோடு சேர்ந்து, அவர் வேலைவிட்டு விமானப்படை முகாம் அலுவலகத்திலிருந்து வருவதற்கிடையில் ஊரைப்பார்த்து பாதி தூரத்தைக் கடந்திருப்பேன்.

இப்படி சொல்லாமல் புறப்படுவதிலே இன்னுமொரு வசதியும் உண்டு. அதாவது அவரிடம் சொல்லிவிட்டுச் செல்வதென்றால், 'நானும் வருகிறேன்' என்று சிலவேளை அவரும் கிளம்பி வந்துவிடுவார் அல்லது அவருக்கு வசதியான தினத்தில்தான் பயணத்தை வைத்துவிட்டு என்னையும் காத்திருக்கச் சொல்வார். அப்படி அவரும் ஊருக்கு வந்துவிட்டால் நான் அங்கு சென்று எப்படி சுதந்திரமாக இருக்க முடியும்?  எனவே இப்படித் தடாலடியாய்க் கிளம்பினால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் கிடையாது அல்லவா?
திடீரெனப் புறப்பட்டுப் போவதற்காக அசத்தலான பல பொய்க்காரணங்களைச் சோடித்து அவருக்குக் கூறவும் ஆரம்பித்தேன். ஊரிலுள்ள எனது உறவினர்களில் பலரை எனது கணவருக்குத் தெரியாது என்பதனால் அவர்களில் பலரைத் திடீர் சுகவீனர்களாக்கினேன். சாகும் வயதிலிருந்த சிலருக்கு முன்கூட்டிய மரணச் சடங்குகள்  கூட வைத்தேன். ஆனால் ஒன்று பொய்களின் சுவாரசியமே அவை என்றாவது ஒருநாள் பிடிபட்டுவிடுவதில்தானே இருக்கின்றது. எனது பொய்களும் காலக்கிரமத்திலே ஒவ்வொன்றாக அவரிடம் வெளுத்துப்போயின. ஆயினும் புதுமனைவியான என்னை பலமுறை லேசான கண்டிப்புடன் மன்னித்திருக்கின்றார்.

ஆனாலும் விளையாட்டுப்போல நினைத்து  ஆரம்பித்த சொல்லாமல் ஊர்கிளம்பும் படலம் அவரது புத்திமதி, ஆலோசனை, எச்சரிக்கை, கட்டளை எல்லாவற்றையும் மீறித் தொடர்ந்து நிகழவே எங்கள் வாழ்விலே பல குழப்பங்கள் உருவாகின. இதனால் ஒருகட்டத்தில் நல்ல மனிதராக அனைவராலும் அறியப்பட்டிருந்த எனது கணவருக்குள்ளே ஒளிந்து கிடந்த சில நிழலான பக்கங்களும் வெளிப்படலாயின. என்னைத் தனியாக விட்டு வேலைக்குச் செல்வதற்கே யோசிக்க ஆரம்பித்தார். இயல்பாக வீட்டிற்கு வரும் எனது உறவினர்களையெல்லாம் சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தொடங்கினார்.

'உன்னுடைய தேவைக்காக எந்தவொரு பொய்யையும் தயங்காமல் சொல்லக்கூடியவள்தான் நீ!' என்று ஒருநாள் என் முகத்துக்கு நேரே கூறினார். அன்றுதான் ஆரம்பித்தது தொல்லை. அதற்காகவே காத்திருந்ததைப் போல வலியச் சண்டைபிடித்து மீண்டும் ஊருக்குப் படையெடுத்தேன். இந்தத் தடவை கோபித்துக் கொண்டு வந்ததனால் அதையே சாக்காக வைத்து ஊரிலேயுள்ள உறவுகளோடு நீண்ட காலம் தங்கினேன். முறைப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தால் இப்படியெல்லாம் இஷ்டத்திற்கு இருக்க முடியுமா?

கிராமத்திலே ஏறத்தாழ ஒரு கோயில் பசுவாய் அலைந்தேன். அதற்கு வசதியாக என்னைப் பெற்று வளர்த்த குடும்பத்தினரும் சம்பிரதாயங்கள் அறியாதவர்களாக அல்லது அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களாக இருந்தார்கள். உறவினர்களில் சிலர் நான் எனது கணவரைப் பிரிந்திருப்பதைப்பற்றி பேசினால் போதும். உடனே எனக்குள்ள கற்பனைவளம் மற்றும் சமயோசித சாகசக்குணங்களை பயன்படுத்தி அவர்களிடம் எனது கணவரை ஒரு  பெண்ணை வதைக்கும் கொடுமைக்காரராகச் சித்தரித்து விடுவேன். எனது புனைவுகளையெல்லாம் அவர்கள் நம்பினார்களோ அல்லது நம்பியதுபோல நடித்தார்களோ தெரியவில்லை. ஆனால் அதற்குமேல் என்னைக் கேள்வி கேட்காமல் அனுதாபம் காண்பித்து வாளாவிருந்தார்கள். இதனால் என்பாடு கொண்டாட்டமாகியது.

ஒரு விமானப்படை அதிகாரியின் வசதியான வீட்டில் கூண்டுக்கிளியாக இருப்பதைவிட சொந்த மண்ணின் புழுதியிலே புரளும் சிட்டுக்குருவியாக இருப்பது சுவாரசியமாகத் தோன்றியது  எனக்கு. ஆனாலும் இவ்வாறான முதிர்ச்சியற்ற போக்குகளால் எனது வாழ்க்கையிலே ஏற்படவிருந்த நீண்டகாலப் பாதிப்பைப் பற்றி அந்த இருபத்து மூன்று வயதிலே புரியாமல் போய்விட்டது.

குழந்தைகள் பிறந்த பிறகு வாழ்க்கை எனக்கு தந்த சிக்கல்களையும் வாழ்க்கைக்கு நான் ஏற்படுத்திய சிக்கல்களையும் சொல்வதற்கு இந்தக் கதையின் களம் போதாது. ஒவ்வொரு குழந்தையைச் சுமக்கும்போதும் குறைந்தபட்சம் இரண்டு தடவையாவது அவரிடம் வலிந்து கோபித்துக் கொண்டு ஊருக்கு வந்து விடுவதும் பின்பு உறவினர்கள் தலையிட்டு புத்திமதிகூறி திரும்பக்கொண்டு சேர்த்து விடுவதும் வழமையாகிப்போனது. அவருக்கும் அது பழகிப்போனது.

கணவரை விட்டு ஊருக்கு ஓடிவரும் ஒவ்வொரு தடவையும் கையிலிருக்கும் காசும் கழுத்திலிருக்கும் ஆபரணங்களும் கரையும். நான் விட்டெறியும் சில்லறைக்கு ஏவல்களை நிறைவேற்றும் உறவுகளும் ஏனைய காலங்களிலே சோற்றுக்கில்லாமல் அலையும் சிறுவர் பட்டாளமும்தான் என்னோடு திரிவார்கள். என் கையிலே பசையுள்ளபோது இளநீர், மாங்காய் புளியங்காய் பறித்துத் தருவது, சாப்பாட்டுக் கடைகளுக்குச் சென்று கொத்துரொட்டி மற்றும் தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு வருவது, ஆற்றிலே தோணியில் வைத்து வலிப்பது என்று எனது பின்னால் அடியாட்கள் போல அலையும் அவர்களுக்கு நிறைய வேலை இருக்கும் .

ஆனால் கையிலே காசில்லாமல் ஊரிலிருப்பது தற்கொலைக்கு ஒப்பானது. ஏனென்றால் அதை வைத்துத்தான் தலைநகரிலும் கிராமத்திலுமாக  மாறிமாறியோடும் எனது வாழ்க்கையின் சாரமே இருந்தது. காசு பணம் தீர்ந்து நகைகளும் அடவுக்குப்போய் விட்டால் என் பின்னே அலையும் தொண்டர் கூட்டமும் இயல்பாகவே குறைந்துவிடும். அதன்பின்பு அடுத்திருக்கும் சில்லறைக் கடைக்குச் சென்று  ஒரு தலைவலி மாத்திரை வாங்கித்தரக்கூட ஆளிருக்காது.

அதுவரையில் எனது சாகசப்புளுகுகளை நம்பியவர்களும் நம்புவதுபோல நடித்தவர்களும் திடீரென பல்டியடித்து தர்க்கரீதியாகப் பேசவும் புத்திமதி கூறவும் ஆரம்பித்துவிடுவார்கள். நாட்டுக்கோழியறுத்து புரியாணி சமைத்துத்தந்த உறவுகள் ஒருவாய் தேனீர் தருவதற்கே அலுத்துக்கொள்வார்கள். சின்னச் சின்ன மனத்தாபங்கள் கூட வர தொடங்கும். நான் விட்டெறிந்த எலும்புகளுக்காக கால்களைச் சுற்றிய வந்தவையெல்லாம் ஒன்றுசேர்ந்து உறுமிக்குரைக்கத் தலைப்படுவதை எண்ணி மனம் வெம்பும்.

எனது கணவருடன் எனக்கிருந்த சீர்மையான வாழ்க்கையின் மேன்மை அப்போதுதான் மண்டையிலே உறைக்க ஆரம்பிக்கும். திடீரென ஒருநாள் ஊரிலிருந்து யாருமறியாமல் மாயமாவேன். அதற்கு அடுத்த காட்சியிலே தலைநகரிலேயுள்ள கணவரின் குவாட்டர்சில் இருப்பேன். வேலைக்குச் சென்று மாலையில் திரும்பும் கணவர் வீடு திறந்திருப்பதைப்பார்த்து நான் திரும்பி வந்திருப்பதைப் புரிந்து கொள்வார். சில நாட்கள் ஒரே வீட்டிற்குள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் நடமாடியபிறகு தவிர்க்க முடியாத உடல் தேவைகளின் நிமித்தம் உறவாகிவிடுவோம். சில வாரங்களுக்கு கடைத்தெரு புதிய ஆடைகள் தங்க நகைகள் கொள்வனவு மற்றும் தமிழ் சினிமா என்று சில மாதங்கள் தாக்குப் பிடிப்பேன். அதன் பிறகு முருங்கைமரம் வேதாளக்கதையாய் ஊருக்கு ஓடிவந்து விடுவேன்.

இப்படி நான் ஓடுகாலியாய் அலைந்ததற்கு காரணமாய் ஊரிலே பலரும் எனது கணவரைத்தான் நினைத்திருந்தார்கள். ஆனால் எனது கணவரின் ஒழுங்கு மற்றும் நேரம் தவறாமைக்கு ஈடுகொடுக்கமுடியாத எனது இயலாமைதான் இதெற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்பது ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் தெரிந்து போனது. இன்று நடுத்தரவயதையும் தாண்டி நிற்கும் என்னை எனது உறவுகள் மட்டுமல்ல இப்போது தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் எங்களது இரு பெண் பிள்ளைகளும் கூட அறிந்து விட்டார்கள்.
எனது பெண்கள் குணத்திலும் நடத்தையிலும் என்னைப் போலல்லாமல் அவரைப்போலத்தான் வந்திருக்கின்றார்கள். நியாயப்படி பார்த்தால் அதற்காக நான் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். எந்தத் தாய்தான் தனது பெண்கள் ஒழுங்கின்றி இருப்பதை விரும்புவாள்? ஆனால் நான் எனது பெண்கள் ஒவ்வொரு விடயத்திலும் அவரைப்போலவே கண்டிப்பாகவும் நேர்த்தியாகவும் இருப்பதைக்கூட என்மீது யாரோ விடுக்கும் சவாலாகத்தான் பார்க்கமுடிகின்றதே தவிர அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

அன்று படை அதிகாரியின் நேர்த்திக்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தது போலவே இன்று அவரின் வாரிசுகளிடமும் தடுமாறிக் கொண்டிருக்கின்றேன். அவராவது அவ்வப்போது ஓரளவு என்னைச் சகித்து விட்டுக்கொடுத்துச் சென்றிருக்கின்றார். ஆனால் ஏஎல் வகுப்பிலும் பத்தாம் ஆண்டிலும் கற்கும் எனது இரு ராட்சசிகளும் ஒரு சின்ன விடயத்தில் கூட விட்டுத்தரமாட்டார்கள்.
'அம்மா, இதென்ன இப்படிக் குப்பையா அயன் பண்ணி வச்சிருக்கீங்க. ஸ்கூல் யுனிபோமை இப்படியா அயன் பண்றது? அயன் பண்ணத் தெரியாட்டி தெரியாதென்று நேரடியாச் சொல்ல வேண்டியதுதானே' என்பாள் மூத்தவள் சுஜன்யா.

'அம்மா தலையைக்கட்டி நீங்க ஸ்கூலுக்குப் போனதேயில்லையா? ஏன் இப்படி ஏனோதானோன்று இழுத்துக் கட்டி வச்சிருக்கீங்க. ப்ரெண்ட்ஸ் எல்லாம் சிரிக்கப்போறாங்க!' என்று தனபங்குக்கு நையாண்டி செய்வாள் இளையவள் தனுஷா.

எனக்கு பொறுமை எல்லை மீறும்.

'அடியேய் எனக்கு இவ்வளவுதான் செய்யத் தெரியும்.. நான் குப்பைதான்.. இது பிடிக்கலண்டா இந்தா சுஜன்யா நீயே உன்ட உடுப்பை அயன் பண்ணு. தனுஷா நீ எல்லாத்தையும் ஒழுங்காச் செய்யுற உன்ட அப்பாவைக் கூப்பிட்டு அவரையே உனக்குத் அழகாக தலைகட்டச் சொல்லு சரியா?' என்று ஆத்திரத்தில் வெடிப்பேன்.

'உங்களுக்கு அப்பாவை இழுக்காட்டி சோறு செமிக்காதே! அப்பாவுக்குத் தலைகட்டத் தெரியாதுதான். ஆனா அதுக்கென்று அப்பா வந்தாரெண்டால் அதையும் அழகாகத்தான் செய்வார் தெரியுமா? சும்மா போம்மா!'
எனக்குச் சுருக்கென்று தைக்கும். அந்த நேரம் பார்த்து வோக்கிங் போய்விட்டு உள்ளே வரும் அவர் நிலைமை புரியாமல், ' இதென்ன கிச்சன் இப்படிக் கிடக்கு..?' என்று முணுமுணுத்தபடி சமையலறையைத் துப்பரவு செய்ய ஆரம்பித்து விடுவார்.
'இஞ்ச, தாங்க பாப்பம் அந்தத் தும்புத்தடியை விளையாடாம!' என்று வெடுக்கென்று அவர் கையிலிருந்து பிடுங்கி கோபம் உச்சிக்கேற கிச்சனைக் கூட்டிப்பெருக்க ஆரம்பிப்பேன்.

'இதை எப்பவோ செய்திருக்கலாம்' என்று முனகியபடி வெளியேறி வீட்டின் முன்புற  வாசலைக் கூட்டிப் பெருக்குவதற்கு ஆரம்பித்து விடுவார். வீட்டிலிருந்தால் கொஞ்ச நேரம்கூட சும்மாவே இருக்காத ஜென்மம்தான் அவர்.

'அது எப்படிம்மா அப்பாவுக்கு மட்டும் சமையல் தொடங்கி எல்லா வீட்டு வேலைகளுமே செய்யத் தெரிந்திருக்குது?' என்று அப்பாவி போல பேச்சை ஆரம்பிப்பாள் இளையவள்.

'அது அவர் என்னைக் கலியாணஞ் செய்ய முந்தி இருந்தே கொழும்புல தனியா இருந்தவர்தானே.. அதனால சமைச்சுப் பழகி இருப்பார்.' என்பேன் நான்.

'அப்படியா..? ஆனா நாங்க அப்படிக் கேள்விப் படல்லியே..' 
'அப்ப எப்பிடிடீ கேள்விப் பட்டீங்க?'
'அப்பா கொழும்புல பேச்சுலரா இருந்த காலம் முழுக்க ஸ்லேவ் ஐலண்ட் கேம்ப் மெஸ்லதானே சாப்பிட்டவராம்.. உங்களைக் கட்டினாப் பிறகுதான் வீட்டுல சமைக்கவே பழகினாராமே..'
'டீயேய் உனக்கு இதை யாருடி சொன்னது? இவள் சுஜன்யாதானே.. அவள்தாண்டி சொல்லியிருப்பாள் உனக்கு. அவள்தாண்டி அப்பா திறம் இந்த அம்மா குப்பையெண்டு அப்பாவுக்கு காவடி தூக்கிறவள்.. சனியன்'
'அம்மா, இப்ப எதுக்கு அக்காவை ஏசுறீங்க. எனக்கு அக்கா சொல்லவேயில்ல சொர்ணா மாமிதான் சொன்னவ.'
'நான் நம்ப மாட்டேன்டி. சொர்ணா கடைசி வரையும் சொல்லியிருக்க மாட்டா? அவவுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.'
'சரிம்மா.. அக்காதான் சொன்னவ. ஆனால் அவவுக்கு சொர்ணா மாமிதான் சொல்லித்தான் தெரியும்'
'அப்பிடி என்னவெல்லாம்டி அந்தத் திமிர் புடிச்ச சொர்ணா சொல்லித் தந்தவள். இப்ப சொல்லப்போறியா இல்லையா?' என்று நான் பத்ரகாளியாய் மாறியதால் பயந்து போன தனுஷா, இந்த உரையாடலுக்கு முன்புள்ள அத்தனை பராக்களிலும் நான் உங்களுக்கு மாய்ந்து மாய்ந்து கூறியவற்றையெல்லாம்  பயந்தபடியே சொல்லி முடித்தாள்.
அதற்குப்பிறகு என்னால் வாய்திறக்கவே முடியாமல் போனது. பெற்ற பிள்ளைகளிடமே ஒரு தாய் தலைகுனியும்படி ஆவது எத்தனை சங்கடமானது என்பதை யோசித்துப் பாருங்கள். சங்கடமும் லேசான அவமானமும் ஒன்று சேர்ந்து மெல்லிய பழியுணர்வாக உள்ளுர உருவெடுத்திருந்ததை நானே முதலில் அறிந்திருக்கவில்லை என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா?
'ஏனம்மா அந்த நேரம் அப்பாவை இப்படிக் கஸ்டப்படுத்தின நீங்க? ஒழுங்கா மரியாதையா அப்பாவோட கொழும்பிலயே இருந்திருந்தா இப்ப இங்க திருகோணமலைக்கு வந்திருக்கவும் தேவையில்ல .. தேவையில்லாத கதைகேட்கவும் வேண்டியதில்லையே.' என்றாள்.
எனக்குக் கோபம் வந்தாலும் அவள் கூறியதிலிருந்த நியாயம் வாயை அடைத்துவிட்டிருந்தது. ஆனால் என்னுடைய கோபமெல்லாம் மூத்தவள் சுஜன்யா மீதுதான் திரும்பியது. அவளை எனக்குச் சும்மாவே அவ்வளவாகப் பிடிப்பதில்லை.  போதாததற்கு அவள் மனதில் தனது தகப்பனிலிருக்கும் மரியாதையில் துளியளவு கூட என்னிடம் இல்லாதவளாக இருந்து கொண்டிருந்தாள். அதுதான் அவள் மீது பாசத்தையும் மீறிய பழியுணர்வுக்குக் கூட காரணமாக இருந்துவந்தது.
சுஜன்யா மட்டுமென்றில்லை எனது கணவரோடு ஓரளவுக்கு மேல் நெருங்கிப் பழகும் யாரையுமே எனக்குப் பிடிப்பதில்லை. குறிப்பாக அவரைத்தேடிவந்து அவருக்கு நிகராக அமர்ந்து அரசியல், சினிமா, கிரிக்கட், விஞ்ஞானம் இலக்கியம் என்று சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்கும் பேர்வழிகளை எனக்கு ஆகவே ஆகாது. ஆனாலும் எனது வெறுப்பை அவர்கள் மீது வெளிப்படையாகக் காண்பிக்க மாட்டேன்.
அந்த விருந்தினருக்கு உபசரிப்புகளில் குறையெல்லாம் வைக்க மாட்டேன். அவர்களோடு தேனாய் இனிக்கப்பேசி, 'இத்தனை இனிமையான மனைவியா இவருக்கு?' என்று அவர்கள் எனது கணவரைப் பார்த்துப் பொறாமைப்படுமளவுக்குப் பேசிப்பேசி உபசரிப்பேன். ஆனால் நெஞ்சுக்குள்ளே ஆற்றாமையெனும் உமி அடுப்பு உள்ளுரத் தணல்பூத்துக் கனன்று கொண்டிருக்கும். அவர்களது நட்பைப் பிரித்து விடுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்து யோசித்தே எனக்குத் தூக்கம் வராது. கூடிய விரைவிலே எதையாவது செய்து அந்த சகவாசம் அதிக நாட்களுக்குத் தொடராதளவுக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிடுவேன். அவரது நண்பர்கள் மட்டுமல்ல கணவருடன் நெருங்கி உறவாடிய எனது உறவினர்களைக்கூட அவரிடமே திருட்டுப்பட்டம் பெற்று உறவு துண்டிக்கப்படுமளவுக்கு மாட்டிவிடும் எனது கைங்கரியங்களை விபரித்தால் அதுவே ஒரு தனிக்கதையாகி விடும் அபாயமுண்டு.

என்னைப் பற்றி நானே இப்படிச் சொல்வதை வைத்து தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலே வருகின்ற அத்தைகள் மாமிகள் போன்ற எதிர்மறைப் பாத்திரமாக என்னை நினைத்து விடாதீர்கள். நிஜ வாழ்க்கையில் நாயகிகள் என்றும் வில்லிகள் என்றும் தனித்தனியான குணாம்சங்களோடு யாரும் இருப்பதில்லையல்லவா? எனது சில இயல்புகளுக்கு எனக்கே காரணம் தெரிவதில்லை. சில சமயம் என்னையே எனக்குப் பிடிக்காமல் போகும் ஒரு சிக்கலான ஜென்மம்தான் நான்.
ஒருவிதத்திலே எல்லோரையும் திருப்திப்படுத்தி எல்லோருக்கும் வேண்டியவளாக இருக்க வேண்டுமென்று நினைப்பவள்தான் நான். எனது நலன்கள் பாதிக்கப்படும்போது மட்டும் எனது கணவரையோ பிள்ளைகளையோ பற்றி எனது உறவினர் யாரிடமாவது குறை சொல்லிக் கொண்டிருப்பேன். அவர்களும் எனது முகத்துக்காக அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்பதுண்டு. சிலவேளை பேச்சுவாக்கில் தங்கள்  பங்குக்கு எனது கணவரையோ பிள்ளைகளையோ ஏதாவது குறை சொல்ல ஆரம்பிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை என்னால் தாங்க முடியாது என்பதால் சட்டென அந்தர் பல்டியடித்து அதுவரை எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவரையே வாரிவிட்டு ஆளை விட்டால் போதும் என்று ஓடவைத்துவிடுவேன்.
இவ்வாறு அவரது நெருங்கிய சகாக்களைக்கூட எனது பாணியில் வேட்டையாடி விரட்டிய பின்பு அவர் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது உள்ளுர கவலையாகவும் குற்றவுணர்வாகவும் இருக்கும். முன்பு நான் வெட்டி விட்டவர்களை எங்காவது சந்திக்கும்போது மீண்டும் வீட்டுக்கு வரவழைப்பதற்காக முடியுமான முயற்சிகளைக்கூட செய்து பார்ப்பேன். ஆனால் அவர்களே பழையபடி மீண்டும் கணவரோடு மிகவும் நெருங்கிவிட்டால் போதும். உடனடியாக வெட்டிவிடும் படலத்தை ஆரம்பித்து விடுவேன். அவர்கள் எங்களுக்கு எவ்வளவு வேண்டியவர்களாகவும் உறவாகவும் இருந்தாலும் சரியே.
இப்படி என்னிடம் மாட்டியவர்களின் பட்டியலிலே கடைசியாக இடம்பிடித்தது யார் தெரியுமா?

வேறுயாருமல்ல. எனது மூத்த மகள் சுஜன்யாவேதான். அவள் உயர்தரவகுப்பு படிக்கும் பெண்ணாக வளர்ந்து விட்டது மட்டுமன்றி அப்படியே தகப்பனைப்போல பரந்த அறிவுள்ளவளாகவும் தர்க்க ரீதியாகச் சிந்திக்குமாற்றல் உள்ளவளாகவும் இருந்ததால் எனது கணவருக்குச் சமதையாக அமர்ந்து பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள். தகப்பனோடு உட்கார்ந்து அரசியல், அரபுவசந்தம், செவ்வாய் கிரக ஆய்வுகள், எல்நினோ-லாநினா காலநிலை, இலக்கியம், கிரிக்கட் என்று உரையாடிக் கொண்டிருக்கத் தொடங்கியிருந்தாள். சுஜன்யா என்னுடைய பெண்தான். இருந்தாலும் இது பொறுக்குமா எனக்கு..? இவளுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே.. செய்தாக வேண்டுமே என்று பரபரத்தது மனது.
அவளுக்கு வெளியில் நிறைய நண்பர்களுண்டு. அவர்களோடு அடிக்கடி கைத்தொலைபேசித் தொடர்பில் இருப்பாள். அவர்களோடு நிறைய அறிவுபூர்வமான விடயங்களைப் பேசிக்கொண்டிருப்பாள். அவளது விலையுயர்ந்த போனில் ஜீபீஆர்எஸ் வசதியையும் வைத்துக் கொண்டு இணையத்தில் உலாவுவது அவளது பொழுதுபோக்காகவும் இருந்ததால்தான் அவளுக்கு இந்தளவு அறிவும் திமிரும்..
000

'ஆன்ரி கிரிக்கட் ப்ரக்டிசுக்கு நேரமாகுது..நான் போகணும் கெதியா வாங்க' என்று கீழேயிருந்து அவசரப்பட்டுக் கொண்டிருந்தான் துவாரகன். மனம் திக்திக்கென்று அடித்துக்கொள்ள தினேஷைத் தோளிலே கிடத்தியபடி கீழே இறங்கி அவனை நோக்கி வாசலுக்கு நடந்து வந்தேன். தெருவை ஒரு தடவை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு

'இது எப்பிடி உனக்கு..'

'இது வந்து.. கனகம் அக்காட டியூசன்ல சுஜன்யாட வகுப்புதான் நானும். நான் புறா வளர்க்கிறன்தானே அதுக்காக எங்கட வீட்டு மேல்மாடியில கட்டியிருந்த வலையை காலையில துப்புரவாக்க ஏறக்குள்ள விழுந்து கிடந்திச்சு ஆன்ரி. எடுத்துப் பார்த்தா..இது! சுஜன்யா இதை வகுப்புக்குக் கொண்டு வாறவ எங்களுக்கெல்லாம் காட்டியிருக்கிறதால டக்கெண்டு நினைவுக்கு வந்தது. 2012 ஆகஸ்ட்டில செவ்வாயில க்யுரியோசிட்டி விண்கலம் இறங்கப்போறதைக்கூட எல்லாருக்கும் சுஜன்யா இதுலதான் ஆன்ரி காட்டினவ. அவ இன்டைக்கு க்ளாசுக்கு வரல்ல. அதான் தர்றதுக்கு கொண்டு வந்தேன்' என்று அவன்  என்னிடம் நீட்டிய அந்த அழகான விலையுயர்ந்த வெளிநாட்டு செல்போனை கைநீட்டி வாங்கிக் கொண்டு நான் திரும்பியபோது..

என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் முன்னாள் விமானப்படை அதிகாரியான என் கணவர்.


-மூதூர் மொகமட் ராபி
 

 

Tuesday, November 27, 2012

மழலையர் திறமை & குதூகலம்

 






சிறுமி அனாமிகா தான் வரைந்து வர்ணம் தீட்டிய சித்திரத்துடன் இங்கே காட்சி தருகின்றாள்.



இவள் ஆசிரியர் திரு. நந்தன் - சாந்தி ஆசிரியை தம்பதியின்புதல்வி ஆவாள்.


இங்கே சிறுமி அனாமிகா தனது அம்மம்மா மற்றும் சிறகுகள் இணையாசிரியருடனும் காட்சி தருகின்றாள்.

சிறுமி லைலா ஷிமோனி கடற்கரையிலே பட்டம் விடுகின்றாள்.




இவள் அல்- இம்ரான் பாலர் பாடசாலை விழாவிலே ரேபோடா பாடலுக்குத் திறமையாக ஆடி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பரிசு பெற்ற புனித மரியாள் கல்லூரி மாணவியும் ஆவாள் என்பது குறிப்பிடத்தக்கது.
 


குளக்கோட்டன் சிறுவர் பூங்காவிலே சிறுமி லைலா விளையாடும் காட்சி இது.

Monday, November 26, 2012

அறிவியல் : பயணங்கள் முடிவதில்லை!

ண்பர்களே!

மாலை வந்தனங்கள்!

சில எளிமையான வினாக்கள் மூலம் அறிவியல் பற்றிய புரிதல்களை விளக்கியிருப்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசைப்படுகின்றேன். படித்துப் பாருங்கள் நண்பர்களே!
 
-Jesslya Jessly
 
 
 




1. அறிவியல் என்றால் என்ன?


ளிமையாகச் சொன்னால், மனிதனுக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியிலான தேடல்.


மனிதன் இதுவரை கண்டடைந்த அனைத்தும் அறிவியலாலேயே சாத்தியமாகியிருக்கின்றன. மனிதன் உழைப்பில் ஈடுபடும் போது இயற்கையை எதிர்கொண்டாக வேண்டியதிருக்கிறது. அப்படி எதிர்கொள்ளும் வழிகளில் இயற்கை வழங்கும் ஏராளமான புதிர்களை, தனக்கு ஏற்கனவே இருக்கும் அறிவைக் கொண்டும், புதிய பரிசோதனைகளைக் கொண்டும் விளக்கி புதிய உண்மைகளைக் கண்டடைவதும், அந்த புதிய உண்மைகளை மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தி அவைகளைச் சமன்பாடாக்குவதும், அந்தச் சமன்பாடுகளை சமூகத்தில் பயன்படுத்திப் பார்த்து விளைவுகளைக் கண்காணிப்பதும், அதன் அடிப்படையில் புதிய புதிர்களைத் தேடிப் போவதுமே அறிவியல்.


அறிவியல் முழுமையடையாத ஒன்றல்ல, அனைத்துக்கும் காரணிகளைக் கண்டறிந்து முழுமைப்படுத்துவதே அறிவியலின் பணி. சாராம்சத்தில் அறிவியல் என்பது ஒரு நீண்ட பயணம். அடுத்தடுத்த இலக்குகளைத் தேடி அது பயணித்துக் கொண்டே இருக்கும்.


அதன் பயணம் முடிவடைவதே இல்லை. அறிவியலுக்கு என்றேனும் முற்றுப் புள்ளி விழுமாயின் அறிவியலை முன்னெடுத்துச் செல்ல ஒற்றை ஒரு மனிதன் கூட உயிருடன் இல்லை என்பதே பொருள்.


2. கடவுள் என்றால் என்ன?


டவுள் என்றால் என்ன?

இந்த  கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியாது. ஏனென்றால் இது பொருளாகவோ கருத்தாகவோ, அல்லது இரண்டுமல்லாத வேறொன்றாகவோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மட்டுமல்லாது அடையாளம் காண முடியாது என்பதே கடவுளின் தகுதிகளில் ஒன்று என்கிறார்கள் ஆத்திகர்கள்.


இதுவரை மனித இனம் கண்டறிந்த, இன்னும் கண்டறியப் போகும் அனைத்து வித நுட்பங்களாலும், எந்தக் காலத்திலும் கண்டறியப் படமுடியாததும், அதேநேரம், மனிதனின் செயல்களில் அற்பமான ஒன்றைக்கூட விட்டுவிடாமல் அனைத்தையும் இயக்குவதும் கடவுள் என்ற ஒன்றே.


3. மனிதனின் அறிதல் என்றால் என்ன?


னிதன் ஒரு பொருளை அல்லது கருத்தை எப்படி அறிந்து கொள்கிறான்? தன்னுடைய ஐம்புலன்களின் வழியே பெற்ற அனுபவங்களைக் கொண்டும், அந்த அனுபவங்களை மூளை எனும் பொருளில் நினைவுகளாக சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை தேவையான பொழுதுகளில் தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுவதே மனிதனின் அறிவு அல்லது அறிதல் எனப்படுவது.


பகுத்தறிவு என்பதும் மூளை தன்னிடமிருக்கும் அனுபவங்களை அலசி பொருத்தமான முடிவை எடுக்க உதவும் ஒரு பயன்பாட்டுமுறைதான். இதுவரை மனிதன் கண்டடைந்த அனைத்தும் புலன்களின் மூலமும், அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமும் பெற்றவைகளே தவிர வேறெந்த வழியிலும் அல்ல.


அதேவேளை மனிதன் ஐயமுற்றிருக்கும் ஒன்றில் தெளிவடைவதற்கு தகுந்த உரைகல் அறிவியலைத் தவிர வேறு ஒன்றில்லை. அறிவியலைத் தவிர வேறு உரைகல் இருக்கக் கூடும் என்றுகூட இதுவரை யாரும் கண்டறிந்ததில்லை.


4. கடவுள் பற்றிய அறிதல் மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது?


னிதன் உயிர் வாழ வேண்டுமென்றால் அவன் உற்பத்தியில் அதாவது உழைப்பில் ஈடுபட்டே ஆக வேண்டும். மனிதன் உழைப்பில் ஈடுபடுகிறான் என்றால் அவன் தன் வழியில் இயற்கையை எதிர்கொள்கிறான் என்பதே அதன் பொருள். அவ்வாறு இயற்கையை எதிர்கொள்ளும் போது அறியாத, தெளிவில்லாத, தீவிரம் புரியாத பல இன்னல்களுக்கு அவன் ஆளாகிறான்.


எடுத்துக்காட்டு நெருப்பு, மழை, இடி, மின்னல், இருள், கடும் பனி, கொடுங்கோடை, வெள்ளம், வறட்சி.. .. .. இவைகளைக் கண்டு அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் உயிர் என்பதன் பயன்மதிப்பு மட்டுமே தெரிந்திருந்தாலும் அதன் இழப்பு அவனை அஞ்சச் செய்கிறது. அடுத்து, மரணம். தன்னுடன் உண்டு, களைத்து, களித்துக், கழித்துக் கொண்டிருந்த தன் கூட்டத்தில்...

1.ஒருவன் திடீரென தன் செயல்களை நிறுத்திக் கொள்வது ஏன்?

2. மீண்டும் என்றாவது ஒரு நாள் அவனின் நீள் தூக்கத்திலிருந்து எழும்பக் கூடுமோ ?

எனும்  2 கேள்வி. இந்த இரண்டும் சேர்ந்து தான் அதாவது இயற்கை குறித்த பயம், மரணம் குறித்த கேள்வி ஆகிய இரண்டும் சேர்ந்து தான் கடவுள் எனும் உருவகத்தை மனிதனிடம் கொண்டு வந்திருக்கின்றன. கடவுள் எனும் கருத்து உருவகம் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரே ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே மதங்கள் தோன்றத் தொடங்கின. இவைகள் வெறும் யூகங்கள் அல்ல. பண்டைக்கால குகை ஓவியங்கள் சுட்டும் வரலாறு இப்படித்தான் இருக்கிறது.

Thanks: Senkodi