Monday, November 26, 2012

அறிவியல் : பயணங்கள் முடிவதில்லை!

ண்பர்களே!

மாலை வந்தனங்கள்!

சில எளிமையான வினாக்கள் மூலம் அறிவியல் பற்றிய புரிதல்களை விளக்கியிருப்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசைப்படுகின்றேன். படித்துப் பாருங்கள் நண்பர்களே!
 
-Jesslya Jessly
 
 
 




1. அறிவியல் என்றால் என்ன?


ளிமையாகச் சொன்னால், மனிதனுக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியிலான தேடல்.


மனிதன் இதுவரை கண்டடைந்த அனைத்தும் அறிவியலாலேயே சாத்தியமாகியிருக்கின்றன. மனிதன் உழைப்பில் ஈடுபடும் போது இயற்கையை எதிர்கொண்டாக வேண்டியதிருக்கிறது. அப்படி எதிர்கொள்ளும் வழிகளில் இயற்கை வழங்கும் ஏராளமான புதிர்களை, தனக்கு ஏற்கனவே இருக்கும் அறிவைக் கொண்டும், புதிய பரிசோதனைகளைக் கொண்டும் விளக்கி புதிய உண்மைகளைக் கண்டடைவதும், அந்த புதிய உண்மைகளை மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தி அவைகளைச் சமன்பாடாக்குவதும், அந்தச் சமன்பாடுகளை சமூகத்தில் பயன்படுத்திப் பார்த்து விளைவுகளைக் கண்காணிப்பதும், அதன் அடிப்படையில் புதிய புதிர்களைத் தேடிப் போவதுமே அறிவியல்.


அறிவியல் முழுமையடையாத ஒன்றல்ல, அனைத்துக்கும் காரணிகளைக் கண்டறிந்து முழுமைப்படுத்துவதே அறிவியலின் பணி. சாராம்சத்தில் அறிவியல் என்பது ஒரு நீண்ட பயணம். அடுத்தடுத்த இலக்குகளைத் தேடி அது பயணித்துக் கொண்டே இருக்கும்.


அதன் பயணம் முடிவடைவதே இல்லை. அறிவியலுக்கு என்றேனும் முற்றுப் புள்ளி விழுமாயின் அறிவியலை முன்னெடுத்துச் செல்ல ஒற்றை ஒரு மனிதன் கூட உயிருடன் இல்லை என்பதே பொருள்.


2. கடவுள் என்றால் என்ன?


டவுள் என்றால் என்ன?

இந்த  கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியாது. ஏனென்றால் இது பொருளாகவோ கருத்தாகவோ, அல்லது இரண்டுமல்லாத வேறொன்றாகவோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மட்டுமல்லாது அடையாளம் காண முடியாது என்பதே கடவுளின் தகுதிகளில் ஒன்று என்கிறார்கள் ஆத்திகர்கள்.


இதுவரை மனித இனம் கண்டறிந்த, இன்னும் கண்டறியப் போகும் அனைத்து வித நுட்பங்களாலும், எந்தக் காலத்திலும் கண்டறியப் படமுடியாததும், அதேநேரம், மனிதனின் செயல்களில் அற்பமான ஒன்றைக்கூட விட்டுவிடாமல் அனைத்தையும் இயக்குவதும் கடவுள் என்ற ஒன்றே.


3. மனிதனின் அறிதல் என்றால் என்ன?


னிதன் ஒரு பொருளை அல்லது கருத்தை எப்படி அறிந்து கொள்கிறான்? தன்னுடைய ஐம்புலன்களின் வழியே பெற்ற அனுபவங்களைக் கொண்டும், அந்த அனுபவங்களை மூளை எனும் பொருளில் நினைவுகளாக சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை தேவையான பொழுதுகளில் தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுவதே மனிதனின் அறிவு அல்லது அறிதல் எனப்படுவது.


பகுத்தறிவு என்பதும் மூளை தன்னிடமிருக்கும் அனுபவங்களை அலசி பொருத்தமான முடிவை எடுக்க உதவும் ஒரு பயன்பாட்டுமுறைதான். இதுவரை மனிதன் கண்டடைந்த அனைத்தும் புலன்களின் மூலமும், அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமும் பெற்றவைகளே தவிர வேறெந்த வழியிலும் அல்ல.


அதேவேளை மனிதன் ஐயமுற்றிருக்கும் ஒன்றில் தெளிவடைவதற்கு தகுந்த உரைகல் அறிவியலைத் தவிர வேறு ஒன்றில்லை. அறிவியலைத் தவிர வேறு உரைகல் இருக்கக் கூடும் என்றுகூட இதுவரை யாரும் கண்டறிந்ததில்லை.


4. கடவுள் பற்றிய அறிதல் மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது?


னிதன் உயிர் வாழ வேண்டுமென்றால் அவன் உற்பத்தியில் அதாவது உழைப்பில் ஈடுபட்டே ஆக வேண்டும். மனிதன் உழைப்பில் ஈடுபடுகிறான் என்றால் அவன் தன் வழியில் இயற்கையை எதிர்கொள்கிறான் என்பதே அதன் பொருள். அவ்வாறு இயற்கையை எதிர்கொள்ளும் போது அறியாத, தெளிவில்லாத, தீவிரம் புரியாத பல இன்னல்களுக்கு அவன் ஆளாகிறான்.


எடுத்துக்காட்டு நெருப்பு, மழை, இடி, மின்னல், இருள், கடும் பனி, கொடுங்கோடை, வெள்ளம், வறட்சி.. .. .. இவைகளைக் கண்டு அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் உயிர் என்பதன் பயன்மதிப்பு மட்டுமே தெரிந்திருந்தாலும் அதன் இழப்பு அவனை அஞ்சச் செய்கிறது. அடுத்து, மரணம். தன்னுடன் உண்டு, களைத்து, களித்துக், கழித்துக் கொண்டிருந்த தன் கூட்டத்தில்...

1.ஒருவன் திடீரென தன் செயல்களை நிறுத்திக் கொள்வது ஏன்?

2. மீண்டும் என்றாவது ஒரு நாள் அவனின் நீள் தூக்கத்திலிருந்து எழும்பக் கூடுமோ ?

எனும்  2 கேள்வி. இந்த இரண்டும் சேர்ந்து தான் அதாவது இயற்கை குறித்த பயம், மரணம் குறித்த கேள்வி ஆகிய இரண்டும் சேர்ந்து தான் கடவுள் எனும் உருவகத்தை மனிதனிடம் கொண்டு வந்திருக்கின்றன. கடவுள் எனும் கருத்து உருவகம் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரே ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே மதங்கள் தோன்றத் தொடங்கின. இவைகள் வெறும் யூகங்கள் அல்ல. பண்டைக்கால குகை ஓவியங்கள் சுட்டும் வரலாறு இப்படித்தான் இருக்கிறது.

Thanks: Senkodi

No comments:

Post a Comment