Friday, October 16, 2015

டேவிட் ஐயா!







டேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.ஏ.டேவிட் (சொலமன் அருளானந்தம் டேவிட் ) அவர்கள். அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர் தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களிலொன்று என்பதால், அதன் காரணமாக அந்த நிறுவனத்தால் அவர் இருக்கும் வரையில் அங்கு தங்கியிருப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். யாழ் பல்கலைக்கழக நூல் நிலையக்கட்டடம் அவரது வடிவமைப்பில் உருவான கட்டடங்களிலொன்று என்றெண்ணுகின்றேன்.

இவரைப்பற்றி நான் விரிவாக அறிந்து கொண்டது எண்பதுகளின் ஆரம்பத்தில் மருத்துவர் ராஜசுந்தரம் மூலம்தான். மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தினர் அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து தன்னார்வத்தொண்டினை ஆற்றிவந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த நாவலர் பண்ணைக்கு மருதோடை என்னுமிடத்திலிருந்து இலகுவாகச்செல்வதற்கேற்ற வகையில் பாதையொன்றை உருவாக்குவதும் அத்தொண்டுகளிலொன்று. அதற்காக வார இறுதி நாள்களில் மாணவர்கள் பலர் செல்வதுண்டு. அவ்விதம் செல்லும் சமயங்களில் புகைவண்டி வவுனியாவை அடைய நள்ளிரவாகிவிடும். வவுனியாவில் இறங்கி மருத்துவர் இராஜசுந்தரத்தின் வீட்டில் தங்கி, மறுநாள் காலை அவரது ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச்செல்வது வழக்கம். செல்லும் வழியெல்லாம் இராஜசுந்தரம் அவர்கள் வாய்க்கு வாய் டேவிட் ஐயா என்று கூறிக்கொண்டே அவரது சேவைகளைப்பற்றிக்கூறிக்கொண்டு வருவார். அப்பொழுதுதான் விரிவாக அவரைப்பற்றி அறிந்து கொண்டது. அதற்கு முன்னர் சில தடவைகள் அவரைப்பற்றிக்கேள்விப்பட்டிருந்தாலும் அவராற்றும் பல்வகையான சேவைகளின் தன்மையினை அறிந்திருக்கவில்லை.
பல வருடங்களின் முன்னரே அவர் வன்னிப்பிரதேசத்தில் பண்ணைகளை வாங்கி இயக்கி வந்ததாக அறிந்தேன். 77 இனக்கலவரத்தைத்தொடர்ந்து மலையகத்திலிருந்து வன்னி நோக்கிப்புலம்பெயர்ந்த அகதிகளை இரு கரம் நீட்டி வரவேற்றது காந்தியம் அமைப்பே. அவ்விதம் வரும் அகதிகளைக்குடியேற்றி, அவர்களுக்கு விவசாயம் செய்வதை விளங்கப்படுத்திச் சொந்தக்கால்களில் நிற்க வைப்பதுதான் காந்தியம் அமைப்பின் பிரதான நோக்கம். அதற்காக அவ்விதம் அமைக்கப்படும் குடியேற்றத்திட்டங்களுக்கு அறிவு போதிக்கும், உதவி புரியும் மாதிரிப்பண்ணைகளாக விளங்கிய பண்ணைகளிலொன்றே நாவலர் பண்ணையும். இங்கு நியாய விலையில் குழந்தைகளுக்கான திரிபோஷா மா போன்ற பொருள்கள் வழங்கப்பட்டதுடன், குழந்தைகளைப்பராமரிக்கு வசதிகளும் ஏற்படுத்தித்தரப்பட்டன. அப்பண்ணைகளில் விவசாயம் செய்வதில் அக்குடியேற்றவாசிகளைப்பங்கு பற்ற வைப்பதன் மூலம் அவர்களுக்கு விவசாய அறிவினைப்போதிப்பதுதான் அம்மாதிரிப்பண்ணைகளின் நோக்கமாகவிருந்தது.

இப்பண்ணைகள் பற்றிய அறிவு எனக்கு டேவிட் ஐயா மீதான மதிப்பினை அதிகரிக்கவே வைத்தது. திருமணமாகாத அவர் தன் வாழ்க்கையினை ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகவே அர்ப்பணித்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அவரது கட்டடக்கலை அறிவுக்கும், அனுபவத்துக்கும் வெளிநாடுகளில் ஏன் இலங்கையிலேயே சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ தான் உழைத்ததையெல்லாம் காந்திய அமைப்புக்கே செலவிட்டார்.

இவரைச் சில தடவைகள் சந்தித்திருக்கின்றேன். ஆனால் கதைத்ததில்லை. நகர அதிகார சபையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம் இவர் தனது கட்டட வரைப்படங்களுடன் , அனுமதி வேண்டி வந்திருப்பதைக்கண்டிருக்கின்றேன். அப்பொழுதுதெல்லாம் வெள்ளை நிற 'சேர்ட்டு'டன் கால்களில் வெறும் செருப்புடன் தான் வருவார். இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கிறது. இன்னுமொரு தடவை டேவிட் ஐயாவின் மீது பெரு மதிப்புக்கொண்ட கட்டடக்கலைஞர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரூடாக ஒரு சில தொழில்ரீதியான உதவிகளை நானும், நண்பரொருவரும் செய்திருக்கின்றோம். ஆனால் அப்பொழுதும் நேரில் அவரைச்சந்திக்கவில்லை.

அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்பானது தமீழீழ மக்கள் விடுதலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்ததன் காரணமாக இலங்கை அரச படைகளின் கவனம் அவ்வமைப்பின் மீதும் விழுந்தது. அதன் விளைவாகவே மருத்துவர் ராஜசுந்தரம், டேவிட் ஐயா, அண்மையில் கனடாவில் மறைந்த சண்முகலிங்கன் போன்றவர்களெல்லாரும் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.

பின்னர் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திலேற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவரது வாழ்க்கை நீண்ட காலம் தமிழகத்தில் கழிந்தது. தமிழர் உரிமைகள் விடயத்தில் இறுதி வரையில் அவர் தன் கருத்துகளில் தெளிவாக இருந்தததை அவ்வப்போது பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளிவரும் செய்திகள் மூலம் அறிய முடிந்தது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பும் முக்கியமானது. முக்கியமாக அகதிகள் புனர்வாழ்வுக்காக அவ்வமைப்பு வட, கிழக்கில் ஆற்றிய சேவை போற்றப்பட வேண்டியதொன்று. மலையகத்தமிழர்களையும் வட, கிழக்கில் குடியேற்றி அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க முற்பட்ட செயலானது தீர்க்கதரிசனம் மிக்கவொன்றாக அச்சமயம் தோன்றியது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பை எவ்விதம் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாதோ அவ்விதமே டேவிட் ஐயாவின் பங்களிப்பினையும் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாது. தன் வாழ்வையே ஈழத்தமிழர்களின் நல் வாழ்வுக்காக அர்ப்பணித்தவர் அவர். அவரைப்பற்றி வரலாறு சரியாகவே இனங்கண்டு , நினைவு கூரும். 

-வ.ந. கிரிதரன்
Thanks : Geo Tamil

No comments:

Post a Comment