Thursday, October 15, 2015

சிறுகதை : சித்திமா






ஆற்றின் மேற்குக் கரையின் கண்டல் காடுகளில் சூரியன் மிதந்து கொண்டிருந்தான். ஆற்றங்கரை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. சூரியனின் அந்திக் குளியல், கொள்ளை அழகில் குதூகலிக்கும் இரவைத் தழுவும் தாபம்.
கண்கள் சுட்டெரிந்தன. வாப்பாவின் கை பிடித்து ஆமையரப்பாட்ட ஆட்டுக் குட்டி வாங்கப் போன அன்றிலிருந்து இந்த ஆற்றங்கரையை இத்தனை காலமாக அவரும் பார்க்கிறார். எத்தனை அழகு, எத்தனை கோணம், எத்தனை சிலிர்ப்பு.
அவர் ஆற்றங்கரையைப் பார்த்துக் கொண்டிருக்க வீதியில் போவோரும் வருவோரும் அவரைப் பார்த்துக் கொண்டு போவார்கள். அவர் ஊருக்குப் புதினம். ஊர் அவருக்குப் புதினம். தீராத புதினம்.
அண்ணாவி சாச்சாவின் களி கம்பு...
நூகு சாச்சாவின் சிலம்பாட்டம்...
அலிக்குட்டி ஓடாவியாரின் தொட்டில் ஊஞ்சல். . .
ஓடக்கரை பூலாமீர்சா சாச்சாவின் கோடு கச்சேரி...
வெடிக்கார இபுறான்குட்டி மாமாவின் புலி வேட்டை...
அலியார் போடியாரின் குதிரை வண்டி...
உலக்க பாவாவின் வெட்டுக்குத்து...
நெடிய மையப்பாவின் களகம்பும் விரால் மீன் கூடையும்...
அபுசாலி மச்சானின் கரப்பந்தாட்டம்...
பட்டறையர் மாமாவின் கந்தூரியில் பசு நெய்யில் குழைந்துகிடக்கும் ஆட்டுக்கறித் துண்டங்கள்...
சித்திமாவின் பொங்கிப் பூரித்துக் கிடக்கும் பேரழகுத் துண்டங்கள்...
குண்டுமணி போலும் ஊருக்குள் எத்தனை புதினங்கள்.
ஹாஜியார் மக்காவுக்குப் போய்வந்த பதினைந்து நாட்கள் பதினைந்து மணித் துளிகள்போல் உம்மா இரண்டு நாட்கள் கண் கலங்க, உடல் குலுங்க, ஹாஜியாரை முத்தமிட்டுச் சென்றார்.
இன்று வியாழன் மாலை - உம்மாவைக் காணும் நாள். உம்மாவின் கையால் இஞ்சி பிளேன்டீ குடித்து விட்டு ‘மஃரிப்’ தொழப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நெஞ்சில் நிய்யத் உறுதியாகியது.
ஆற்றங்கரை வீதியில் மிதந்து சென்ற ஹாஜியாரின் புராதன காலத்து சைக்கிள் வண்டி திடீரென்று குறுக்கு வீதியால் அவரை அழைத்துச் சென்றது. முன்னால் வரும் சந்தியால் திரும்பினால் மூணு வீடு தள்ளி உம்மாவின் மண் குடிசை. வாசலில் பனி அவரைப் பந்தல். குருத்து மணலைக் கொட்டி நிறைத்திருந்த வாசல்.
எதிரே வரும் சந்தியைக் கண்டு சைக்கிளின் வேகம் மட்டாகியது. திடீரென்று கேற்றின் உள்ளிருந்து ஒரு ‘கை’ அவரின் சைக்கிளின் ஹெண்டலை அலாக்காகப் பிடித்து நிறுத்தியது.
இந்த நேரம் பார்த்து, இந்த வீதியால் நான் வருவேனென்று சித்திமாக்கு யார் சொன்னது? எத்தனை தருணங்களின் காத்திருப்பு... அவரின் எண்ணம் மடிந்து விழுந்த மறுகணம்,
“என்ன ஹாஜியார்! மக்காவுக்குப் போய் அன்று பிறந்த பாலகனா, சந்தனக் கட்டை ஆயிட்டீங்களாமே. எங்களக் கொத்திப் பிளந்த ‘கொறக் கொள்ளிக் கட்டைய’ நாங்க மறக்கல்ல. என்னையும் தொட்டுட்டுப் போயிருந்தா, என்ட பாவமும் அழிஞ்சிருக்குமே. நீங்க ஆம்பிளைக, லேசா மறந்திருப்பீங்க” சித்திமாவின் குரலில் ஏதோ ஒன்று இழையோடிக் கசிந்தது.
சித்திமா, தனக்கு முன்னால் வளைந்துகிடந்த வீதியை மேலும் கீழும் பார்த்தாள். மறு கணம், ஹாஜியாரின் தோள் பட்டையைப் பிடித்து, தலையைக் கவிழ்த்து, தொழுகையில் பூத்துக் கிடந்த நெற்றியிலும் அத்தர் மணக்கும் மோவாய்த் தாடியிலும் மூச்சுமுட்ட முத்தமிட்டாள். ஹாஜியாரின் சைக்கிள் ஆடிப் போனது.
அவரின் பாதங்கள் நிலத்தை அழுத்திப் பிடித்தன. ஹாஜியார் முன்னும் பின்னும் பார்த்தார். இடது பக்கப் புற வளவில் மாமரங்களும் தென்னைகளும் பூத்துக் குலுங்கும் முருங்கை மரங்களும் மஹ்ஷர் பெருவெளியில் கண் கண்ட சாட்சியங்களோ.
மரங்களெல்லாம் கொண்டல் காற்றில் அவருக்குப் பயங்காட்டிச் சிரிப்பதுபோல் கெக்கலித்தன. குளிர் தழுவிய மஃரிப் வேளையிலும் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. பள்ளிவாசலிலிருந்து “அல்லாஹு அக்பர்”. அவரின் சைக்கிள் அவரிடமிருந்து விடை பெற்றது.
“மெய்தான்! நம்மடெ ரசீதாவுக்கு... உங்கட ரசீதாவுக்கு கவிதைப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாவது” அந்த வார்த்தையில் சந்தனத்தின் மணம் குழைந்து காற்றில் கலந்து அவரின் நாசித் துவாரங்களை நிறைத்தது.
“யா அல்லாஹ்! எனது பாவங்களை மன்னித்து விடு.”
உம்மாவின் குடிலை மறந்து அவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்.

-எஸ். எல். எம். ஹனீபா

Thanks - Kalachchuvadu

No comments:

Post a Comment