நள்ளிரவில் பிறந்த ஒரு நாட்டிலிருந்து நான் வருகிறேன். ஏறக்குறைய நான் இறந்துபோனபோது அது ஒரு நண்பகல் நேரம்.
ஒரு வருடத்திற்கு முன் பள்ளிக்குக் கிளம்பிச்சென்ற நான் பின் வீடு திரும்பவே இல்லை. தாலிபான்களின் தோட்டாக்களால் சுடப்பட்டு, சுயநினைவில்லாமல் பாகிஸ்தானிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டேன். சிலர் இனி நான் வீடு திரும்பப் போவதில்லை எனக் கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக நான் நாடு திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நேசிக்கும் நாட்டைவிட்டுப் பிரிந்துசெல்லும் கொடுமை எவருக்குமே நேரக்கூடாது.
ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போதெல்லாம், என் பொருட்களால் நிறைந்த, தரையெங்கும் என் உடைகள் இறைந்து கிடக்கின்ற, என் பரிசுகளால் நிரம்பிய அலமாரி நிற்கும் என் பழைய அறையைக் காண மனம் ஏங்குகிறது. ஆனால் என் அருமை பாகிஸ்தானிலிருந்தும் என் தாய்வீடான ஸ்வாட்டிலிருந்தும் ஐந்துமணி நேர வித்தியாசத்தில் இருக்கக்கூடிய நாட்டில் இப்பொழுது உள்ளேன். நினைத்துப்பார்க்க இயலாத அளவிற்கு இங்கு வசதிகள் உள்ளன. எல்லாக் குழாய்களிலும் வெந்நீரோ தண்ணீரோ எப்பொழுதும் கிடைக்கிறது. ஒரு ஸ்விட்சை இயக்கினால் இரவிலும் பகலிலும்கூட விளக்குகள் எரிகின்றன. எண்ணெய் விளக்குகள் இங்குத் தேவையே இல்லை. கடைத்தெருவிற்குச் சென்று சிலிண்டர்களில் எரிவாயு வாங்கிக் கொண்டு வந்து சமைக்கவேண்டாத அடுப்புகள் உள்ளன. இங்கு அனைத்தும் புதுமையாக உள்ளன. சமைத்த உணவுகூடப் பொட்டலங்களில்/
பாக்கெட்களில் இங்கு கிடைக்கிறது.
ஜன்னலில் இருந்து பார்க்கும்போது உயரமான கட்டடங்கள், வரிசை வரிசையாய் ஊர்திகள் செல்லும் நீண்ட சாலைகள், அழகாய் பராமரிக்கப்படும் பச்சைநிற வேலிகள், புல்வெளிகள் மற்றும் சுத்தமான நடைபாதைகள் இவையெல்லாம் கண்ணில் படுகின்றன. கண்ணை மூடிக்கொண்டு, ஒரு சில நிமிடங்கள் என் பள்ளத்தாக்கிற்குச் செல்கிறேன் - பனி சூழ்ந்த சிகரமுடைய மலைகள், காற்றிலாடும் பச்சை வயல்கள், தூய நீலநிற ஆறுகள் - ஸ்வாட்டின் மக்களைக் காணும்போது மனம் உவகைகொள்கிறது. எண்ண அலைகள் என்னை மீண்டும் பள்ளியில் கொண்டு நிறுத்துகின்றன. என் தோழிகளுடனும் ஆசிரியர்களுடனும் நான் மீண்டும் ஒன்று சேர்கிறேன். என் உயிர்த்தோழி மோனிபாவைச் சந்திக்கிறேன். நாங்களிருவரும் அமர்ந்து நான் பிரிந்துபோனது போலவே இல்லாமல் கதைபேசி, சிரித்துமகிழ்கிறோம். ஆனால் நான் இருப்பது இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்ஹாம் என்பது நினைவுக்கு வருகிறது.
2012 அக்டோபர் 9ஆம் தேதியில் அனைத்தும் மாறிவிட்டன. அன்று இயல்பாகவே ஒரு நல்ல நாளாக இல்லை. ஏனெனில் எங்களுக்குத் தேர்வுகள் பாதி நடந்து முடிந்திருந்தன. நான் நன்கு படிக்கக்கூடிய பெண்ணாக இருந்தாலும், வகுப்பறையிலுள்ள மற்ற தோழிகளைப்போல் தேர்வுகளை முக்கியமாகக் கருதுபவள் அல்ல.
அன்று காலை ஐந்தாறு பெண்களை அடைத்துக்கொண்டு, டீசல் புகையைக் கக்கியவாறே செல்லும் அடர் வர்ண ரிக்க்ஷாக்களில், குறுகிய ஹாஜிபாபா மண்பாதையில் ஊர்வலமாய் வந்தோம். தாலிபானின் காலத்திலிருந்து எங்கள் பள்ளியில், பள்ளி என்பதற்கான எந்தச் சின்னமும் கிடையாது.
வேலைப்பாடுள்ள செப்பு வாயிற்கதவு கொண்டது எங்கள் பள்ளி. தான் எதை மறைத்துநிற்கிறோம் என்று சிறு அறிகுறியும் காட்டாது. சிறுமிகளான எங்களுக்கோ எங்களுடைய பிரத்தியேகமான உலகிற்கு அழைத்துச்செல்லும் மந்திரக்கதவு அது. துள்ளிக் குதித்துச் செல்லும்போது, சூரியனுக்குப் பாதை அமைக்க, மேகங்களைத் துரத்தும் காற்றைப்போல் எங்கள் முக்காடுகளை வீசியெறிவோம். பின் படிகளில் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவோம். படிக்கட்டின் உச்சியில் அனைத்து வகுப்புகளுக்கும் செல்லக்கூடிய கதவுகளுடன் உள்ள ஒரு முற்றம் இருந்தது. புத்தகப் பைகளை எங்கள் வகுப்பறையில் வைத்துவிட்டு, காலைக் கூட்டத்திற்கு, வெட்டவெளியில் - எங்களின் பின் மலைகள் நிற்கும் - ஒன்று கூடி கவனமாய் நிற்போம். ஒரு பெண் ‘ஆஸான் பாஷ்’ அதாவது லகுவாக சிரமமில்லாமல் நிற்கலாம் என்று உரக்கக் கூறுவாள். நாங்கள் எங்கள் கால்களால் சப்தமெழுப்பி ‘அல்லா’ என்று பதிலுரைப்போம். பின் அவன் ‘ஹோஷியார்’, அதாவது ‘கவனம்’ என்று சப்தமிடுவாள். மீண்டும் நாங்கள் கால்களைச் சப்தத்துடன் ஒன்றுசேர்த்து ‘அல்லா’ என்று கூறுவோம்.
நான் பிறப்பதற்கு முன்னமே என் அப்பாவினால் இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. எங்கள் முன்னுள்ள சுவரில் சிவப்பும் வெள்ளையும் கலந்த பெரிய எழுத்துகளில் ‘குஷால் பள்ளி’ என்று பொறிக்கப்பட்டிருக்கும். வாரத்தில் ஆறுநாட்கள் நாங்கள் பள்ளிக்குச் சென்றோம். 9ஆம் வகுப்பில் படிக்கும் 15 வயது சிறுமிகளான எங்களுக்கு வேதியியல் சமன்பாடுகளும் உருது இலக்கணமும் கற்றுக் கொடுக்கப்பட்டன. படிப்பினை தரக்கூடிய, ‘அதிக வேகம் ஆபத்து’ போன்ற கதைகளை ஆங்கிலத்தில் எழுதுவோம் அல்லது ரத்த ஓட்டத்தை விளக்கும் படங்களை வரைவோம். என் வகுப்புத்தோழிகள் பலர் மருத்துவர்களாக விளங்க ஆசைப்பட்டனர். இதைப்போய் தமக்கு ஒரு அச்சுறுத்தல் என்று யாரோ கருதக்கூடும் என்று யோசிக்க ஆச்சரியமாக உள்ளது. எனினும் பள்ளியின் கதவுகளுக்கு வெளியே ஸ்வாட்டின் முக்கிய நகரான மிங்கோராவின் கூச்சலும் குழப்பமும் மட்டுமில்லை, சிறுமிகள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று கருதும் தாலிபான்களும் இருந்தனர்.
எல்லாக் காலை நேரங்களும் போலவேதான் அந்தக் காலையும் விடிந்தது. ஆனால் சிறிது தாமதமாக... தேர்வுக் காலமானதால் எப்பொழுதும் எட்டுமணிக்குத் துவங்கும் பள்ளி ஒன்பது மணிக்குத்தான் ஆரம்பிக்கும். காலையில் சீக்கிரம் எழப்பிடிக்காத எனக்கு அது மிகவும் சௌகரியமாக இருந்தது. தொழுகைக்காக வரும் அழைப்பையும் காகத்தின் கரைதலையும் சேவலின் கூவுதலையும் மீறி நன்கு தூங்குவேன். முதலில் அப்பா என்னை எழுப்பப் பார்ப்பார். ‘எழுந்திருக்க நேரமாகிவிட்டது ஜானி மன்’ என்பார். இதற்குப் பெர்சிய மொழியில் ஆத்ம தோழமையே என்று அர்த்தம். காலையில் எப்பொழுதுமே அப்படித்தான் என்னை விளிப்பார். “இன்னும் சில நிமிடங்கள் அபா” என்று கெஞ்சி போர்வைக்குள் புதைந்து கொள்வேன். பின் அம்மா வருவார். ‘பிஷோ’ என்று என்னைக் கூப்பிடுவார். பிஷோ என்றால் பூனை. அவர் என்னைக் கூப்பிடும் செல்லப்பெயர் அது. அம்மா கூப்பிட்ட பிறகுதான் நேரமானது எனக்கு உறைக்கும். “ஐயோ நேரமாகிவிட்டதே பாபி” என்று அலறியடித்துக் கொண்டு எழுந்திருப்பேன். எங்கள் கலாச்சாரத்தில் எல்லா ஆண்களும் சகோதரர்கள், எல்லா பெண்களும் சகோதரிகள். அப்பா திருமணம் முடித்து அம்மாவைப் பள்ளிக்கு அழைத்துச்சென்றபோது, அண்ணனின் மனைவி என்ற ஸ்தானத்தில் அவரைப் பாபி அதாவது அண்ணி என்றழைத்தனர். நாங்களும் அவரைப் பாபி என்றே அழைக்கத் தொடங்கினோம்.
வீட்டின் முகப்பில் உள்ள நீண்டதோர் அறையில்தான் நான் தூங்குவேன். அந்த அறையில் ஒரே ஒரு கட்டிலும், எங்கள் பள்ளத்தாக்கின் அமைதிக்காகவும் பெண்களின் படிப்புரிமைக்காகவும் நான் போராடியதற்காக எனக்குக் கிடைத்த கொஞ்சம் காசில் வாங்கிய ஒரு அலமாரியும் இருந்தன. அதில் தங்கநிற வர்ணம்பூசிய சில பிளாஸ்டிக் கோப்பைகளை வைத்திருந்தேன். அவை நான் என் வகுப்பில் முதலாவதாக வந்ததற்காக எனக்குப் பரிசளிக்கப்பட்டவை. இரண்டேமுறைதான் எனக்குக் கோப்பைகள் கை நழுவிப் போயின. அப்பொழுதெல்லாம் என் வகுப்புத் தோழி மால்கா - இ - நூரினால் நான் தோற்கடிக்கப்பட்டேன். அதுபோல் இனி நிகழக்கூடாது என அதன்பின் உறுதியாக இருந்தேன்.
வீட்டிலிருந்து பள்ளி நடந்துசெல்லும் தூரத்திலேயே இருந்தாலும், முந்தைய வருஷத்திலிருந்து மற்ற பெண்களுடன் போகும்பொழுது ரிக்க்ஷாவிலும், வீடு திரும்பும்போது பேருந்திலும் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நாற்றமடிக்கும் கால்வாயின் ஊடாகவும் மருத்துவர் ஹூமாயூனின் முடி வளர்க்கும் நிலையத்தின் விளம்பரப் பலகையை - எங்கள் ஆசிரியர் ஒருவருக்கு, திடீரென்று அவர் வழுக்கைத்தலையில் முடி வளர்வதால் - அவர் இங்குதான் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று கிண்டலுடன் - கடந்து செல்வோம். ஐந்துநிமிட பயணம்தான். நடந்தால் வியர்ப்பதுபோல் பேருந்துகளுக்குள் வியர்க்காது. மேலும் என் தோழிகளுடன் நன்றாக அரட்டை அடிக்கலாம். ஓட்டுநர் உஸ்மான் அலி, அவரை நாங்கள் ‘பாய் ஜான்’ அதாவது அண்ணாவென்று கூப்பிடுவோம், அவருடன் வம்புக்கதைகள் பேசலாம் என்பதால் இந்தப் பேருந்து பிரயாணம் மிகவும் பிடிக்கும். வினோதமான கதைகள் சொல்லி எங்களையெல்லாம் சிரிக்க வைப்பார் பாய் ஜான்.
நான் தனியே நடந்து பள்ளிக்குச் செல்வதைப்பற்றி அம்மா மிகவும் கவலைப்பட்டதால், பேருந்தில் செல்லத் தொடங்கினேன். வருடம் முழுவதும் எங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்தவண்ணமே இருந்தன. செய்தித்தாள்களில் சிலதும், சில சிறு குறிப்புகளாகவும், சில மக்கள் வழியாகவும் வந்தன. என்னைப் பற்றித்தான் அம்மாவுக்குக் கவலை. ஆனால் எனக்கோ, தாலிபான்களை எதிர்த்து எப்பொழுதும் பேசிக்கொண்டிருப்பதால், அப்பாவைக் குறிவைத்துவிடப் போகிறார்கள் என்று கவலை. இதுவரை தாலிபான்கள் ஒரு சிறுமியைக்கூடக் குறிவைத்ததில்லை. அப்பாவின் நெருங்கிய தோழரும், தாலிபான் எதிர்ப்பாளர்களில் ஒருவருமான ஜாகித் கான் ஆகஸ்ட் மாதம் தொழுகைக்குச் செல்லும்போது முகத்திலேயே சுடப்பட்டார். அன்றிலிருந்து அப்பாவைப் பார்க்கும் ஒவ்வொருவரும், ‘கவனமாய் இரு. அடுத்தது நீயாக இருக்கலாம்’ என்று எச்சரித்துக்கொண்டே இருந்தனர்.
எங்கள் தெருவில் கார் நுழைய முடியாது. வீட்டிற்கு வர பேருந்திலிருந்து ஓடையருகே இறங்கி, சட்டமிட்ட இரும்புக் கதவைத் திறந்து, சில படிகள் ஏறி வீட்டை அடையவேண்டும். யாராவது என்னைத் தாக்கவேண்டுமென்றால் நான் படியேறும் சமயம்தான் வாகானது என்று எண்ணிக்கொள்வேன். அப்பா சொல்வதுபோல் நான் பகல்கனவு காண்பவள். சில சமயம் வகுப்பறையில் பாடங்களை மறந்து நான் படியேறும்போது தீவிரவாதிகள் வழிமறித்து என்னைச் சுடுவதாகக் கனவு காணுவேன். அப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் என்று யோசிப்பேன். என் செருப்பைக் கழற்றி அவனை அடிக்கலாம். அப்படிச் செய்தால் அவனுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்காது. அவனிடம் கெஞ்சுவது மேல். “சரி என்னைச் சுடு. ஆனால் நீ தவறு செய்கிறாய். உன்னை நான் தனிப்பட்டமுறையில் எதிர்க்கவில்லை. எல்லாப் பெண்களும் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று கூறலாம்.
ஆனால் நான் உண்மையில் பயப்படவில்லை. இருந்தாலும் வாயிற்கதவு இரவில் நன்கு பூட்டப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வேன். இறந்தால் என்ன நடக்கும் என்று இறையிடம் கேட்கத் தொடங்கினேன். என் உயிர்த்தோழி மோனிபாவிடம் இவை எல்லாவற்றையும் கூறினேன். சிறுவயதில் நாங்கள் ஒரே தெருவில் குடியிருந்தோம். ஆரம்பப் பள்ளியிலிருந்து நாங்கள் தோழிகள். ஜஸ்டின் பீய்பர் பாடல்கள் ஆகட்டும், ட்விலைட் படமாகட்டும், முகம் வெளுக்க வைக்கும் க்ரீம் ஆகட்டும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டோம். அவளுடைய கனவு, உடைகள் வடிவமைப்பவளாய் ஆவது. அவளுடைய குடும்பத்தினர் அதற்கு ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிந்திருந்ததால் தான் ஒரு டாக்டராக வேண்டுமென்றே கூறிக் கொண்டிருந்தாள். எங்கள் சமூகத்தில் பெண்களுக்கு, வேலைக்குச் செல்லும் வாய்ப்பு என்று ஒன்று வந்தால் அது ஆசிரியை ஆகவோ மருத்துவராகவோ மட்டுமே இருக்கும். இதில் எனக்கு உடன்பாடில்லை. ஆரம்பத்தில் மருத்துவர் என்று சொல்லிக் கொண்டிருந்த நான், பின் என் கனவை மறைக்காது ஓர் அரசியல்வாதியாகவோ விஞ்ஞானியாகவோ ஆகவேண்டும் என்று கூறுவேன். ஏதாவது வேண்டாததொன்று நடக்கப் போகிறதென்றால் மோனிபாவிற்குத் தெரிந்துவிடும். “கவலைப்படாதே! தாலிபான்கள் சிறுமிகளைக் கொல்லமாட்டார்கள்” என்று அவளிடம் கூறினேன்.
பேருந்து வந்தவுடன் படிகளில் இறங்கி ஓடினோம். மற்ற பெண்கள் அனைவரும் வெளியே வரும்முன் தலையை முக்காடிட்டுக்கொண்டு பின்பக்கம் வழியே பேருந்தில் ஏறினர். பேருந்து என்பது நாங்கள் டைனா எனக்கூறும் ஒரு டொயோட்டோ ட்ரக்வண்டி. பின்புறத்தில் மூன்று பெஞ்சுகள் இடப்பட்டிருக்கும்; இரு ஓரங்களில் இரண்டும், நடுவில் ஒன்றுமாய். அதில் 20 மாணவிகளும் 3 ஆசிரியைகளும் நெருக்கியடித்துக்கொண்டு அமர்வோம். நான் மோனிபாவுக்கும், கீழ்வகுப்பில் படிக்கும் ஷாஸியா ரம்ஜானுக்கும் இடையில், தேர்வட்டைகளை மார்புடன் அணைத்துக் கொண்டும், புத்தகப்பையை காலில் இடுக்கிக் கொண்டும் அமர்ந்திருந்தேன்.
அதற்குப்பின் கொஞ்சம் தெளிவில்லாமல்தான் நினைவிற்கு வருகிறது. பேருந்தின் உட்புறம் மிகவும் வெப்பமாகவும் பிசுபிசுப்பாகவும் இருந்தது. குளிர்காலம் இம்முறை தாமதமாகிவிட்டது. தூரத்தே ஹிந்துகுஷ்மலையின் உச்சியில்மட்டும் பனி ஒருதொப்பி போலிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் பின்புறம் ஜன்னல்கள் ஏதும் இல்லை. நல்ல கனமான பிளாஸ்டிக் விரிப்பு போட்டு மூடப்பட்டிருந்தது. அது மிகவும் அழுக்கடைந்தும் தூசு நிரம்பியும் காணப்படும். வெளியே எங்களால் பார்க்கமுடிந்ததெல்லாம் ஒரு சிறிய வானத் தகட்டையும், சில சமயங்களில் கொஞ்சம் சூரியனையும்தான். அந்தநேரத்தில் மஞ்சள்நிறத்தில் தூசு பறந்து எல்லாவற்றின் மேலும் படியும்.
பேருந்து எப்பொழுதும்போல வலதுபுறமாகத் திரும்பியது. அங்குதான் இராணுவச் சோதனைச்சாவடி உள்ளது. பின் யாருமில்லாத கிரிக்கெட்மைதானத்தின் முனையில் திரும்பியது. அதன்பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை.
என் கனவுகளில் ஒன்று நானும் என் அப்பாவும், பேருந்தில் பயணம் செல்லும்போது சுடப்படுவது. துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் ஒரே மக்கள்கூட்டமாய் இருக்கும். அதில் நான் அப்பாவைத் தேடிக் கொண்டிருப்பேன்.
ஆனால் நிஜத்தில் நிகழ்ந்ததோ வேறு. பேருந்து திடீரென்று நின்றுவிட்டது. எங்களின் இடதுபுறத்தில், முழுவதும் புதர் மண்டிக்கிடந்த ஸ்வாட்டின் முதல் நிதியமைச்சரான ஷேர் மொஹமத் கானின் கல்லறை இருந்தது. வலதுபுறம் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை. சோதனைச் சாவடியிலிருந்து 200 மீட்டர் தூரம்தான் சென்றிருப்போம்.
பேருந்தின்முன் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் வெளுத்தநிறத்தில் உடையணிந்த தாடியுள்ள ஒரு மனிதன் பேருந்தை நிறுத்தக் கூறியிருக்கிறான்.
“இது குஷால் பள்ளியின் பேருந்துதானே?” என்று ஓட்டுநரிடம் கேட்டிருக்கிறான். பேருந்தின் வெளிப்பக்கத்தில் பெரிய எழுத்தில் பெயர் எழுதியிருக்கும்போது, முட்டாள்தனமான கேள்வி எதற்கு என்று எண்ணியபடி,
“ஆமாம்” என்றிருக்கிறார்.
சில குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் தேவை என்றான் அவன்.
“அலுவலகத்திற்குச் சென்று கேட்டுக் கொள்” என்றார் உஸ்மான் பாய் ஜான்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே, இளைஞன் ஒருவன் பேருந்தின் பின்பகுதியை நோக்கி வந்தான். “பார், யாரோ உன்னிடம் பேட்டி எடுக்க வருகிறார்கள் போலிருக்கிறது” என்றாள் மோனிபா. அப்பாவுடன் சேர்ந்து பெண்களுக்குக் கல்வி தேவை என்றும், எங்களை வீட்டிலேயே பதுக்கிவைக்க நினைக்கும் தாலிபான்களுக்கு எதிராய்ப் பல நிகழ்ச்சிகளில் பேசி இருக்கிறேன். அதனால் பல ஊடகவியலாளர்கள் என்னைப் பேட்டி எடுப்பது வழக்கம். ஆனால் யாரும் இதுபோல் நடுவீதியில் நிறுத்திப் பேசியதில்லை. அவன் ஒரு உயரமான தொப்பி அணிந்திருந்தான். வாயையும் மூக்கையும் குளிர்ஜுரம் வந்தவன்போல், கைக்குட்டையால் மறைத்திருந்ததால் காண்பதற்கு ஒரு கல்லூரி மாணவனைப்போல் தோற்ற மளித்தான். பின்பக்கம் வந்துநின்று எங்களை நோக்கிச் சாய்ந்தான். “இங்கு யார் மலாலா?” என்று கேட்டான்.
யாரும் எந்தப் பதிலும் கூறவில்லை. ஆனாலும் பல பெண்கள் என்னை நோக்கினர். முகத்தை மூடாமலிருந்த ஒரே பெண் நான்தான்.
அப்போதுதான் தன் கறுப்புத் துப்பாகியை உயர்த்தினான். பின்பு அது கோல்ட் 45 வகையைச் சேர்ந்தது என்று தெரிந்து கொண்டேன். பெண்கள் அலறினார்கள். அவள் கையை நான் இறுக்க பற்றிக் கொண்டதாக மோனிபா கூறினாள்.
அவன் அடுத்தடுத்து மூன்றுமுறை சுட்டதாக தோழிகள் கூறினார்கள். முதலாவது என் இடது கண் அருகே பாய்ந்து இடதுதோளின் வழியே வெளிவந்தது. இடது காலிலிருந்து ரத்தம் வழிய மோனிபாவின்மேல் மயங்கிச் சாய்ந்துவிட்டேன். அதனால் அடுத்தடுத்த குண்டுகள் அருகில் இருந்தவர்களின்மேல் பாய்ந்தது. ஷாஸியாவின் இடதுகையில் இரண்டாவது குண்டும் அவளின் இடது தோளின் வழியாய் கைனத் ரைஸ்ஸின் வலது தோளுக்கு மூன்றாவது குண்டும் பாய்ந்தன.
சுடும்போது அவனுடைய கை நடுங்கிக்கொண்டிருந்தது என்று தோழிகள் பின்னர் கூறினர். மருத்துவமனையை அடைவதற்குள் என் நீண்டமுடியும், மோனிபாவின் மடியும் ஒரே இரத்தமாக இருந்தது.
யார் மலாலா? நான்தான் மலாலா. இதுதான் என் கதை.
(மலாலா யூசுபாஃஸாய், பிரபல ஊடகவியலாளர் கிறிஸ்டினா லாம்ப்புடன் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய தன்வரலாற்று நூல் ‘ஐ ஆம் மலாலா’. காலச்சுவடு பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர உள்ள நூலின் பகுதி
இது. தமிழில் பத்மஜா நாராயணன்.)
Thanks: Kalachuvadu
மிகவும் சுவாரஷ்யமான எழுத்து நடை அதே நேரம் மனதை வேதனைப்படுத்தவும் செய்கின்றது
ReplyDelete