Saturday, November 14, 2015

தன் வலியால் பிறர் வலி உணர்தல்:




ரு காலத்தில் நாம் சின்னஞ்சிறார்களாக ஓடிவிளையாடிய காலத்து ஒளிப்படம் ஒன்றை பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருகின்றோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். எதிர்பாராதவிதமாய் அதை நாம் தொலைத்துவிட நேர்ந்தால்.....?

பின்னாட்களில் சிறுகதை எழுத்துக்களில் ஆர்வம்கொண்டு தீவிரமாக எழுதவாரம்பித்த நாட்களில்..  எழுதிய கதை ஒன்றின் ஒரேயொரு பிரதியையும் தொலைத்தபோதுதான் அந்த வலியை முழுமையாக நான் உணர்ந்தேன். 

என்னுடைய மண்ணின் பெருமைக்குரிய மூத்த எழுத்தாளரான திரு. வ . அ இராசரத்தினம் அவர்களது எழுத்துகளைப் படிக்க நேர்ந்தபோது, ஓரிடத்தில்  கலவரகாலத்தில் காடையர்களினால் தனது அச்சகத்துடன் கூடிய வீடு எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்திருந்தார். அதிலே எத்தனையோ இலட்சக்கணக்கான அச்சக உபகரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களையெல்லாம் புறக்கணித்து, அக்கினியுடன் சங்கமமான தனது கையெழுத்துப் பிரதிகளின் அழிவுக்காக அவர் அழுதிருந்தார்.

அதுதான் கலைஞனின் மனம்.

நமது சொந்த இழப்புகளின் வலிதான் பிறரின் வலிகளையும் நம்மை ஆத்மார்த்தமாகப் புரிந்து அனுதாபம் கொள்ளச் செய்யும்.இங்கே ஒரு திரைப்படக் கலைஞன் தனது வலியைப் பதிவு செய்திருக்கின்றான். பழையதுதான் ஆயினும் உணர்வுகள் எத்தனை தடவை படித்தாலும் ஈரம் மாறாதன. படித்துப்பாருங்கள்.

-'Mutur' Mohammed Rafi


தமிழ்த் திரைப்படக் காப்பகம் 




கில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” படம் இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான சர்வதேச திரைப்படவிழா ஒன்றில் காண்பிக்கப்படுவதாக இருந்தது.

அந்தத் திரைப்படவிழாவுக்கென்று எனது படத்தின் புதிய பிரதியொன்றை எடுத்துக் கொடுக்க எண்ணிய நான், அந்தத் படத்தின் நெகட்டீவை வெளியே எடுத்தபோதுதான் தெரிந்தது - “வீடு” படத்தின் நெகட்டீவ் முழுவதுமாக கெட்டுப்போய்,மேற்கொண்டு ஒரு பிரதிகூட எடுக்க முடியாத நிலையில் அழிந்துபோய் இருக்கிறதென்று!
அதைப் பார்த்து நிலைகுலைந்துபோன நான் உடனடியாக எனது “சந்தியாராகம்” மற்றும் “மறுபடியும்” ஆகிய படங்களின் நெகட்டீவ்களை எடுத்துப் பார்த்தேன். “வீடு” படத்தின் நெகட்டீவுக்கு ஏற்பட்ட அதே கதிதான்  “சந்தியாராகம்” மற்றும் “மறுபடியும்” ஆகிய இரண்டு படங்களுக்கும் ஏற்பட்டிருந்தது.ஒரு பிரதி கூட எடுக்க முடியாத அளவுக்கு இந்த இரண்டு படங்களின் நெகட்டீவ்களும் கெட்டுப்போயிருந்தன.

எனது மூன்று பிள்ளைகள் என் கண் முன்னேயே இறந்து விட்டது போல ஒரு சோகம் என்னை கவ்விக்கொண்டது.
எனது காலத்திலேயே அழிந்து போன எனது படங்களை நினைத்து நினைத்து நான் கண்ணீர் விட்ட இரவுகள் ஏராளம். அந்த இழப்பு தந்த துக்கத்திலிருந்து இன்று வரை என்னால் வெளியே வர முடியவில்லை.

“வீடு” “சந்தியாராகம்” “மறுபடியும்” ஆகிய எனது படங்களின் அழிவை நினைத்து கொண்டால்... இப்பொழுதும் நெஞ்சு வலிக்கிறது.
நான் இயக்கிய முதற்படமான “கோகிலா” , எனது முதல் தமிழ் படமான “அழியாத கோலங்கள்” , அதன்பின் வந்த “மூடுபனி”, எனக்கும் கமலுக்கும் தேசிய விருது வாங்கித்தந்த - பார்த்த் அனைவர் மனதிலும் இன்று வரை பசுமையாக நியாபகமிருக்கும் எனது “மூன்றாம் பிறை” ஆகிய படங்களின் நெகட்டீவ்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை பார்த்துத் தெரிந்து கொள்வதற்கான தைரியம் எனக்கில்லை. அந்த படங்களின் நெகட்டீவ்களுக்கு எதாவது ஆயிருந்தால், அந்த துக்கத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று பட்டதால் பார்க்கவில்லை. பத்திரமாக இருக்கின்றன என்ற குருட்டு நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்கள் என்று படித்தவர்களாலும்,விமர்சகர்களாலும் ,பாமர ரசிகர்களாலும் ஒரே மனதாக ஒத்துக் கொள்ளப்பட்ட “வீடு” , “சந்தியாராகம்” , “மறுபடியும்” படங்களின் நெகட்டீவ்கள் பாதுகாக்கப்பட்டிருக்க  வேண்டிய முறையில் பாதுகாக்கப்பட்டிருந்தால் அவை அழிந்து போயிருக்காது.

”அழியாத கோலங்கள்”  77-லும், “வீடு” 87-லும் , “மறுபடியும்” 93-லும் வெளியான படங்கள். இந்த படங்களே இனி பிரதியெடுக்க முடியாதபடி அழிந்துபோய் விட்டன என்றால் இவற்றிற்கு முன் வெளிவந்த நமது தமிழ் படங்களின் கதி என்ன? பராசக்தி,ரத்தக்கண்ணீர்,மனிதன்,பாசமலர் போன்ற நமது படங்களின் நெகட்டீவ்கள் எப்படி இருக்கின்றன?



ஏவிஎம் போன்ற பணவசதி படைத்த தனியார் நிறுவனங்கள் சில அவரவர் படங்களை பாதுகாக்க வேண்டிய முறையில் பாதுகாத்து வருவதால், அவர்களது படங்கள் பிழைத்திருக்கின்றன.
சினிமாவில் ஊறித்திளைக்கும் இனம் நம் தமிழினம். நமது மக்களுக்கு அவர்கள் வரவுக்குள் கிடைக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமாதான், நமது மீடியாக்களுக்கு இருக்கும் நிரந்தர பிழைப்புக்கூட சினிமாதான்.

தமிழர்களது அன்றாட வாழ்க்கையிலும் அவர்தம் அரசியலிலும் சினிமா ஏற்படுத்திய - ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கம் அசுரத்தனமானது என்பதில் இரண்டாவது அபிப்ராயம் எவருக்கும் இருக்க முடியாது.

ஒரு சராசரித் தமிழனுக்கு,தமிழச்சிக்கு, இசையென்றால் அது சினிமாப் பாடல்கள்தான். இயல் என்றால் அது நமது சினிமாக்களுக்கு எழுதப்படும் நாடகத்தனம் கொண்ட நமத்துப்போன உரையாடல்கள்தான். கவிதையென்றால் அது நமது சினிமாப்பாடல்களுக்கென்று எழுதப்படும் (இப்பொழுதெல்லாம் அது தமிழ் தானா அல்லது வேறேதேனும் மொழியா என்று தெரியாத) அந்த வரிகள்தான். நடனம் என்றால் அது திரையில் ஆடப்படும் அந்த ஆட்டம் தான்.போடப்படும் அந்த குத்துதான். ஓவியம் என்றால் நமது சினிமாக்களுக்காக வைக்கப்படும் விளம்பர பேனர்கள்தான்.உடையென்றால் அது வெள்ளித்திரையில் நமது நடிக நடிகையர் உடுத்திக்கொள்ளும் அல்லது உடுத்திக்கொள்ளாமல் விடும் அந்த ரக உடைதான்.அன்றாட பேச்சு வழக்கென்றால்,அது நமது படங்களுக்கான கதாபாத்திரங்கள் திரையில் எப்படிப் பேசுகிறார்களோ, அந்தப் பேச்சு வழக்குதான்... (சும்மா அதிருதில்ல...! நண்பேண்டா..!)

அரசியல் என்றால், “வேலைக்காரி” படத்தின் கதை-வசனகர்த்தா அண்ணா அவர்கள் முதல், ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இன்றைய அம்மா அவர்கள் வரை, தமிழகத்தின் அத்தனை முதல்வர்களும் சினிமாக்காரர்கள்தான்.(இடையில் வந்து போன பன்னீர்செல்வம் அவர்களை ஒரு விபத்து என்று விட்டு விடலாம்) தமிழனது முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகால அரசியலை சினிமாதான் - சினிமாக்காரர்கள்தான் கட்டிக் காத்து (?) வருகிறார்கள்.


இது போதாதென்று, இனி வரும் காலங்களில் கூட அப்படித்தான் என்று திரைத்துறை சார்ந்த சிலர் இங்கு பயமுறுத்திக் 
கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மீது சினிமா செலுத்திக்கொண்டிருக்கும் ஆணித்தரமான ஆதிக்கத்தை எடுத்துச் சொல்ல இவைகளை விட வேறு என்ன உதாரணங்கள் வேண்டும்..?
இப்பேர்பட்ட நமது தமிழ் சினிமாவை,அதன் வரலாற்றை,உலகிற்கும், இனி வரும் நமது தமிழ் தலைமுறைகளுக்குமெனப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற எண்ணமோ அக்கறையோ அதற்கான செயல்பாடுகளோ தமிழ் சினிமா மூலம் கோடி கோடியாக லாபம் பார்ப்பதில் மட்டுமே குறியாய் இருக்கும் அதன் பெரியவர்களுக்கோ அல்லது அதன் இதமான இளம் சூட்டில் அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியலாளருக்கோ கரிசனை இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகள் கூட திரையரங்கங்களின் இனி பார்க்க முடியாதபடி அழிந்து போய் விட்டன - போய்க்கொண்டிருக்கின்றன.
காலத்திற்கு காலம் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட - ஏற்பட்டுக்கொண்டிருக்கும் - இனியும் ஏற்பட இருக்கும் உள்ளடக்க ரீதியான - உருவ ரீதியான விரும்பத்தக்கது - தகாததுமான மாற்றங்களை ஆராய்ந்து படிக்க எண்ணும் ஆராய்ச்சியாளர்களுக்கு, அழிந்து போன - அழிந்து போகவிடப்பட்ட அந்த படைப்புகள் இனிக் கிடைக்க வாய்ப்பில்லை.

தமிழ் சினிமாவின் அந்த சரித்திர ஆவணங்களில் ஒன்றிரண்டையாவது பார்க்க வேண்டும் என்றால் மஹாராஷ்டிராவில் உள்ள பூனேயில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய திரைப்பட காப்பகத்திற்குத்தான் போக வேண்டும். அல்லது அவற்றின் திருட்டு விசிடிக்கள் தப்பித்தவறி எங்காவது கிடைக்குமா என்று தேட வேண்டும். அல்லது எப்பொழுதாவது காண்பிக்கப்பட்டால், பல விளம்பர இடைவேளைகளோடு அவற்றை நமது தொலைக்காட்சிகளில் தான் பார்க்க முடியும்.

மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய திரைப்படக் காப்பகத்திற்கு தமிழ் சினிமா மீது தனிப்பட்ட அக்கறை எதுவும் கிடையாது என்பதை அறுபதுகளின் நடுப்பகுதியில், நான் பூனே திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அறிவேன்.
நமது படங்கள் நமது காலத்திலேயே அழிந்து போய்விட்டன - அழிந்துபோய்க் கொண்டிருக்கின்றன என்ற துக்கம் காரணம், தமிழ் சினிமா மீதுள்ள தனிப்பட்ட காதல் காரணம்,தமிழ் சினிமா மீதுள்ள தனிப்பட்ட காதல் காரணம் கொதித்துப்போன நிலையில், உணர்ச்சிவசப்பட்ட ஒரு பலவீனமான தருணத்தில் எழுதப்பட்ட இந்த கட்டுரையின் சில பகுதிகள் சற்று காட்டமாக அமைந்துவிட்டன.அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நமது தமிழ் படங்கள் நமது காலத்திலேயே அழிந்துபோவதைத் தடுக்க நாம் என்ன செய்யலாம். நமது அரசு என்ன செய்யலாம் என்று சிறிது அக்கறையோடு ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

அந்த வகையில் நமது முதல் தேவை ஒரு தமிழ்த் திரைப்படக் காப்பகம்!

“ஆமா இந்த குப்பைகளைப் பாதுகாத்துவேறு வைக்கவேண்டுமாக்கும்” என்று சிலர் முனுமுனுப்பது என் காதில் விழுகிறது. இந்த அதிருப்தியாளர்களுக்கு ஒன்று சொல்கிறேன். நமது தமிழ் படங்களின் பெரும்பாலானவை குப்பைகள்தான்,ஒத்துக்கொள்கிறேன். அந்த குப்பைகளுக்கிடையில் அவ்வப்போது சில மாணிக்கங்களும் வருகின்றனவே ! அந்த மாணிக்கங்களை நாம் மறந்துவிடக்கூடாது.
அப்புறம், இன்னொரு விஷயம் - குப்பைகள் அதிகமாக இருப்பது நமது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல எல்லா மொழி சினிமாக்களிலும் குப்பைகளே அதிகம்.



தமிழ் சினிமாவுக்கான காப்பகம், அமெரிக்கா, ஃப்ரான்ஸ் , ஜெர்மனி போன்ற நாடுகளின் திரைப்பட காப்பகங்களுக்கு நிகராக அமைக்கப்பட வேண்டும். நமது காப்பகங்களுக்கான பிரதம காப்பாளர் (chief curator) சினிமாவை , குறிப்பாக தமிழ் சினிமாவை ஆழமாக நேசிப்பவராக இருக்க வேண்டும் (A young IAS officer who loves cinema - particularly tamil cinema) அவரையும் அவருக்கு கீழ் பணிபுரிய இருக்கும் இரண்டு,மூன்று இளைஞர்களையாவது , அமெரிக்காவிலோ, ஃப்ரான்ஸிலோ, ஜெர்மனியிலோ இருக்கும் ஒரு அதி நவீன திரைப்படக் காப்பகமொன்றுக்கு குறைந்தது ஆறு மாதங்களாவது திரைப்படப் பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் பயிற்சி அளிக்க வேண்டும்.

தமிழ் திரைப்படக் காப்பகம் அமைவதற்கான ஒரு இடமும் அதற்கான ஒரு கட்டிடமும் வேண்டும். அது சென்னையில்தான் இருக்க வேண்டுமென்றில்லை. ஊட்டி,கொடைக்காணல்,ஏர்காடு போன்ற இடங்களில் கூட இருக்கலாம்.

இதையடுத்து, திரைப்பட காப்பகத்திற்குத் தேவையான , ஒரு நவீன திரையரங்கம் உட்பட, அனைத்து உபகரணங்களும் (equipments) வாங்கப்படவேண்டும்.

தமிழில் தயாராகும் ஒவ்வொரு திரைப்படத்தின் நெகட்டீவ் பிரதியொன்றும் (duplicate negative copy), அதன் மின்பதிப்பொன்றும் (digital version of it) தமிழ்த் திரைப்படக் காப்பகத்தில் வைக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரைக் கேட்டுக்கொள்ளலாம். அல்லது சட்டம் மூலம் கட்டாயப் படுத்தலாம்.
பழைய தமிழ் படங்களின் நெகட்டீவ்களையோ அல்லது பிரதிகளையோ தேடியெடுத்து அவற்றை புதுப்பிக்கும் நவீன முறைகளை கையாண்டு புதுப்பித்து வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் திரைப்பட காப்பகத்திற்கான ஆரம்ப செலவுகள் அனைத்தையும் தமிழ் திரைப்படத்துறையினர் (தயாரிப்பாளர்கள், நடிக நடிகையர்,இசையமைப்பாளர்கள் மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள்) பாதி, அரசு பாதி என்று ஏற்றுக்கொண்டு செயல்படலாம்.

நமது தமிழ் திரைப்படங்கள் நமக்குப் பின் வரும் சந்ததியினருக்குக் கிடைக்க வேண்டுமென்றால், தமிழ் திரைப்பட துறையை சார்ந்த நலமும், நமது அரசும் சேர்ந்து உடனடியாக தமிழ் திரைப்படக் காப்பகத்திற்கான வேலையில் இறங்கினால்தான் உண்டு.இல்லையெனில், நமது காலத்திலேயே நமது தமிழ்ப் படங்கள் அழிந்து போய்விடும். தமிழன் என்ற வகையில் ,தமிழ் சினிமாவை நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில், தமிழ்த் திரைத் துறையினரே, தமிழக அரசே உங்கள் கால்களில் என் தலை வைத்து வணங்கி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து நமக்கான தமிழ்த் திரைப்பட காப்பகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள்- உடனடியாக அந்தப் பணியில் இறங்குங்கள்!

-பாலுமகேந்திரா

Friday, October 16, 2015

டேவிட் ஐயா!







டேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.ஏ.டேவிட் (சொலமன் அருளானந்தம் டேவிட் ) அவர்கள். அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர் தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களிலொன்று என்பதால், அதன் காரணமாக அந்த நிறுவனத்தால் அவர் இருக்கும் வரையில் அங்கு தங்கியிருப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். யாழ் பல்கலைக்கழக நூல் நிலையக்கட்டடம் அவரது வடிவமைப்பில் உருவான கட்டடங்களிலொன்று என்றெண்ணுகின்றேன்.

இவரைப்பற்றி நான் விரிவாக அறிந்து கொண்டது எண்பதுகளின் ஆரம்பத்தில் மருத்துவர் ராஜசுந்தரம் மூலம்தான். மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தினர் அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்புடன் இணைந்து தன்னார்வத்தொண்டினை ஆற்றிவந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த நாவலர் பண்ணைக்கு மருதோடை என்னுமிடத்திலிருந்து இலகுவாகச்செல்வதற்கேற்ற வகையில் பாதையொன்றை உருவாக்குவதும் அத்தொண்டுகளிலொன்று. அதற்காக வார இறுதி நாள்களில் மாணவர்கள் பலர் செல்வதுண்டு. அவ்விதம் செல்லும் சமயங்களில் புகைவண்டி வவுனியாவை அடைய நள்ளிரவாகிவிடும். வவுனியாவில் இறங்கி மருத்துவர் இராஜசுந்தரத்தின் வீட்டில் தங்கி, மறுநாள் காலை அவரது ஜீப்பில் நாவலர் பண்ணைக்குச்செல்வது வழக்கம். செல்லும் வழியெல்லாம் இராஜசுந்தரம் அவர்கள் வாய்க்கு வாய் டேவிட் ஐயா என்று கூறிக்கொண்டே அவரது சேவைகளைப்பற்றிக்கூறிக்கொண்டு வருவார். அப்பொழுதுதான் விரிவாக அவரைப்பற்றி அறிந்து கொண்டது. அதற்கு முன்னர் சில தடவைகள் அவரைப்பற்றிக்கேள்விப்பட்டிருந்தாலும் அவராற்றும் பல்வகையான சேவைகளின் தன்மையினை அறிந்திருக்கவில்லை.
பல வருடங்களின் முன்னரே அவர் வன்னிப்பிரதேசத்தில் பண்ணைகளை வாங்கி இயக்கி வந்ததாக அறிந்தேன். 77 இனக்கலவரத்தைத்தொடர்ந்து மலையகத்திலிருந்து வன்னி நோக்கிப்புலம்பெயர்ந்த அகதிகளை இரு கரம் நீட்டி வரவேற்றது காந்தியம் அமைப்பே. அவ்விதம் வரும் அகதிகளைக்குடியேற்றி, அவர்களுக்கு விவசாயம் செய்வதை விளங்கப்படுத்திச் சொந்தக்கால்களில் நிற்க வைப்பதுதான் காந்தியம் அமைப்பின் பிரதான நோக்கம். அதற்காக அவ்விதம் அமைக்கப்படும் குடியேற்றத்திட்டங்களுக்கு அறிவு போதிக்கும், உதவி புரியும் மாதிரிப்பண்ணைகளாக விளங்கிய பண்ணைகளிலொன்றே நாவலர் பண்ணையும். இங்கு நியாய விலையில் குழந்தைகளுக்கான திரிபோஷா மா போன்ற பொருள்கள் வழங்கப்பட்டதுடன், குழந்தைகளைப்பராமரிக்கு வசதிகளும் ஏற்படுத்தித்தரப்பட்டன. அப்பண்ணைகளில் விவசாயம் செய்வதில் அக்குடியேற்றவாசிகளைப்பங்கு பற்ற வைப்பதன் மூலம் அவர்களுக்கு விவசாய அறிவினைப்போதிப்பதுதான் அம்மாதிரிப்பண்ணைகளின் நோக்கமாகவிருந்தது.

இப்பண்ணைகள் பற்றிய அறிவு எனக்கு டேவிட் ஐயா மீதான மதிப்பினை அதிகரிக்கவே வைத்தது. திருமணமாகாத அவர் தன் வாழ்க்கையினை ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகவே அர்ப்பணித்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அவரது கட்டடக்கலை அறிவுக்கும், அனுபவத்துக்கும் வெளிநாடுகளில் ஏன் இலங்கையிலேயே சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ தான் உழைத்ததையெல்லாம் காந்திய அமைப்புக்கே செலவிட்டார்.

இவரைச் சில தடவைகள் சந்தித்திருக்கின்றேன். ஆனால் கதைத்ததில்லை. நகர அதிகார சபையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம் இவர் தனது கட்டட வரைப்படங்களுடன் , அனுமதி வேண்டி வந்திருப்பதைக்கண்டிருக்கின்றேன். அப்பொழுதுதெல்லாம் வெள்ளை நிற 'சேர்ட்டு'டன் கால்களில் வெறும் செருப்புடன் தான் வருவார். இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கிறது. இன்னுமொரு தடவை டேவிட் ஐயாவின் மீது பெரு மதிப்புக்கொண்ட கட்டடக்கலைஞர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரூடாக ஒரு சில தொழில்ரீதியான உதவிகளை நானும், நண்பரொருவரும் செய்திருக்கின்றோம். ஆனால் அப்பொழுதும் நேரில் அவரைச்சந்திக்கவில்லை.

அக்காலகட்டத்தில் காந்தியம் அமைப்பானது தமீழீழ மக்கள் விடுதலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்ததன் காரணமாக இலங்கை அரச படைகளின் கவனம் அவ்வமைப்பின் மீதும் விழுந்தது. அதன் விளைவாகவே மருத்துவர் ராஜசுந்தரம், டேவிட் ஐயா, அண்மையில் கனடாவில் மறைந்த சண்முகலிங்கன் போன்றவர்களெல்லாரும் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.

பின்னர் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திலேற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவரது வாழ்க்கை நீண்ட காலம் தமிழகத்தில் கழிந்தது. தமிழர் உரிமைகள் விடயத்தில் இறுதி வரையில் அவர் தன் கருத்துகளில் தெளிவாக இருந்தததை அவ்வப்போது பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளிவரும் செய்திகள் மூலம் அறிய முடிந்தது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பும் முக்கியமானது. முக்கியமாக அகதிகள் புனர்வாழ்வுக்காக அவ்வமைப்பு வட, கிழக்கில் ஆற்றிய சேவை போற்றப்பட வேண்டியதொன்று. மலையகத்தமிழர்களையும் வட, கிழக்கில் குடியேற்றி அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க முற்பட்ட செயலானது தீர்க்கதரிசனம் மிக்கவொன்றாக அச்சமயம் தோன்றியது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் காந்தியம் அமைப்பின் பங்களிப்பை எவ்விதம் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாதோ அவ்விதமே டேவிட் ஐயாவின் பங்களிப்பினையும் மறைக்கவோ, ஒதுக்கவோ முடியாது. தன் வாழ்வையே ஈழத்தமிழர்களின் நல் வாழ்வுக்காக அர்ப்பணித்தவர் அவர். அவரைப்பற்றி வரலாறு சரியாகவே இனங்கண்டு , நினைவு கூரும். 

-வ.ந. கிரிதரன்
Thanks : Geo Tamil

Thursday, October 15, 2015

சிறுகதை : சித்திமா






ஆற்றின் மேற்குக் கரையின் கண்டல் காடுகளில் சூரியன் மிதந்து கொண்டிருந்தான். ஆற்றங்கரை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. சூரியனின் அந்திக் குளியல், கொள்ளை அழகில் குதூகலிக்கும் இரவைத் தழுவும் தாபம்.
கண்கள் சுட்டெரிந்தன. வாப்பாவின் கை பிடித்து ஆமையரப்பாட்ட ஆட்டுக் குட்டி வாங்கப் போன அன்றிலிருந்து இந்த ஆற்றங்கரையை இத்தனை காலமாக அவரும் பார்க்கிறார். எத்தனை அழகு, எத்தனை கோணம், எத்தனை சிலிர்ப்பு.
அவர் ஆற்றங்கரையைப் பார்த்துக் கொண்டிருக்க வீதியில் போவோரும் வருவோரும் அவரைப் பார்த்துக் கொண்டு போவார்கள். அவர் ஊருக்குப் புதினம். ஊர் அவருக்குப் புதினம். தீராத புதினம்.
அண்ணாவி சாச்சாவின் களி கம்பு...
நூகு சாச்சாவின் சிலம்பாட்டம்...
அலிக்குட்டி ஓடாவியாரின் தொட்டில் ஊஞ்சல். . .
ஓடக்கரை பூலாமீர்சா சாச்சாவின் கோடு கச்சேரி...
வெடிக்கார இபுறான்குட்டி மாமாவின் புலி வேட்டை...
அலியார் போடியாரின் குதிரை வண்டி...
உலக்க பாவாவின் வெட்டுக்குத்து...
நெடிய மையப்பாவின் களகம்பும் விரால் மீன் கூடையும்...
அபுசாலி மச்சானின் கரப்பந்தாட்டம்...
பட்டறையர் மாமாவின் கந்தூரியில் பசு நெய்யில் குழைந்துகிடக்கும் ஆட்டுக்கறித் துண்டங்கள்...
சித்திமாவின் பொங்கிப் பூரித்துக் கிடக்கும் பேரழகுத் துண்டங்கள்...
குண்டுமணி போலும் ஊருக்குள் எத்தனை புதினங்கள்.
ஹாஜியார் மக்காவுக்குப் போய்வந்த பதினைந்து நாட்கள் பதினைந்து மணித் துளிகள்போல் உம்மா இரண்டு நாட்கள் கண் கலங்க, உடல் குலுங்க, ஹாஜியாரை முத்தமிட்டுச் சென்றார்.
இன்று வியாழன் மாலை - உம்மாவைக் காணும் நாள். உம்மாவின் கையால் இஞ்சி பிளேன்டீ குடித்து விட்டு ‘மஃரிப்’ தொழப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நெஞ்சில் நிய்யத் உறுதியாகியது.
ஆற்றங்கரை வீதியில் மிதந்து சென்ற ஹாஜியாரின் புராதன காலத்து சைக்கிள் வண்டி திடீரென்று குறுக்கு வீதியால் அவரை அழைத்துச் சென்றது. முன்னால் வரும் சந்தியால் திரும்பினால் மூணு வீடு தள்ளி உம்மாவின் மண் குடிசை. வாசலில் பனி அவரைப் பந்தல். குருத்து மணலைக் கொட்டி நிறைத்திருந்த வாசல்.
எதிரே வரும் சந்தியைக் கண்டு சைக்கிளின் வேகம் மட்டாகியது. திடீரென்று கேற்றின் உள்ளிருந்து ஒரு ‘கை’ அவரின் சைக்கிளின் ஹெண்டலை அலாக்காகப் பிடித்து நிறுத்தியது.
இந்த நேரம் பார்த்து, இந்த வீதியால் நான் வருவேனென்று சித்திமாக்கு யார் சொன்னது? எத்தனை தருணங்களின் காத்திருப்பு... அவரின் எண்ணம் மடிந்து விழுந்த மறுகணம்,
“என்ன ஹாஜியார்! மக்காவுக்குப் போய் அன்று பிறந்த பாலகனா, சந்தனக் கட்டை ஆயிட்டீங்களாமே. எங்களக் கொத்திப் பிளந்த ‘கொறக் கொள்ளிக் கட்டைய’ நாங்க மறக்கல்ல. என்னையும் தொட்டுட்டுப் போயிருந்தா, என்ட பாவமும் அழிஞ்சிருக்குமே. நீங்க ஆம்பிளைக, லேசா மறந்திருப்பீங்க” சித்திமாவின் குரலில் ஏதோ ஒன்று இழையோடிக் கசிந்தது.
சித்திமா, தனக்கு முன்னால் வளைந்துகிடந்த வீதியை மேலும் கீழும் பார்த்தாள். மறு கணம், ஹாஜியாரின் தோள் பட்டையைப் பிடித்து, தலையைக் கவிழ்த்து, தொழுகையில் பூத்துக் கிடந்த நெற்றியிலும் அத்தர் மணக்கும் மோவாய்த் தாடியிலும் மூச்சுமுட்ட முத்தமிட்டாள். ஹாஜியாரின் சைக்கிள் ஆடிப் போனது.
அவரின் பாதங்கள் நிலத்தை அழுத்திப் பிடித்தன. ஹாஜியார் முன்னும் பின்னும் பார்த்தார். இடது பக்கப் புற வளவில் மாமரங்களும் தென்னைகளும் பூத்துக் குலுங்கும் முருங்கை மரங்களும் மஹ்ஷர் பெருவெளியில் கண் கண்ட சாட்சியங்களோ.
மரங்களெல்லாம் கொண்டல் காற்றில் அவருக்குப் பயங்காட்டிச் சிரிப்பதுபோல் கெக்கலித்தன. குளிர் தழுவிய மஃரிப் வேளையிலும் அவருக்கு வியர்த்துக் கொட்டியது. பள்ளிவாசலிலிருந்து “அல்லாஹு அக்பர்”. அவரின் சைக்கிள் அவரிடமிருந்து விடை பெற்றது.
“மெய்தான்! நம்மடெ ரசீதாவுக்கு... உங்கட ரசீதாவுக்கு கவிதைப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாவது” அந்த வார்த்தையில் சந்தனத்தின் மணம் குழைந்து காற்றில் கலந்து அவரின் நாசித் துவாரங்களை நிறைத்தது.
“யா அல்லாஹ்! எனது பாவங்களை மன்னித்து விடு.”
உம்மாவின் குடிலை மறந்து அவர் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்.

-எஸ். எல். எம். ஹனீபா

Thanks - Kalachchuvadu

Tuesday, October 13, 2015

தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தைக் கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருதுகள்




நயன்தாரா சகல்
நயன்தாரா சகல்





ந்தோ-ஆங்கில எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான நயன்தாரா சகல் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப கொடுத்துள்ளார். இந்திய சமூகத்துக்கு இந்துத்துவத்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து, சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலைக்கு நீதி மறுப்பு,  தாத்ரியில் பசு மாட்டிறைச்சி உண்டார் என்று குற்றம் சுமத்தி முஸ்லிம் ஒருவரை அடித்துக் கொன்றது, இந்த பிரச்சினைகளில் மோடி சாதிக்கும் கள்ள மவுனம், மோடியின் அமைச்சர்கள் தவணை முறையில் கக்கி வரும் மதவாத விடம், எழுத்தாளர்களுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளின் போது சாகித்திய அகாடமி கடைபிடிக்கும் புதிர் மவுனம் ஆகியவற்றை கேள்வி கேட்டிருக்கிறார், சகல். ‘சீரழிக்கப்படும் இந்தியா’ என்று தலைப்பிட்டு எழுதிய திறந்த மடலில் தனது நடவடிக்கை,  “இந்துத்துவத்துடன் முரண்பட்டதால் கொல்லப்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகின்ற மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.



அசோக் வாஜ்பாயி
     இந்திகவிஞர் அசோக் வாஜ்பாயி


                  


‘Rich Like Us’ என்ற ஆங்கில நாவலுக்காக செகல் 1986-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதை பெற்றார். அவருடைய வயது இப்போது 88. நயன்தாரா சகலை தொடர்ந்து இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி அவர்களும் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப அளித்துள்ளார். நயன்தாரா சகலின் கருத்துக்களை அப்படியே வழிமொழிந்துள்ளார். லலித் கலா அகாடமியின் தலைமை பொறுப்பை அசோக் வாஜ்பாயி முன்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லட்சக்கணக்கானோர் மத்தியில் உரையாற்ற முடிகின்ற பிரதமரால் எழுத்தாளர்கள் கொல்லப்படும் போதும், அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்படும் போதும், அமைச்சர்கள் தகாத வார்த்தைகளை வெளியிடும் போதும் ஏன் அவற்றை கண்டித்து பேச முடியவில்லை’ என்று கேட்கிறார். சாகித்திய அகாடமியின் மவுனத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார், அசோக் வாஜ்பாயி.


உதய் பிரகாஷ்
 இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ்

கன்னட மொழியின் சிந்தனையாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்ட போது சாகித்திய அகாடமி விருதை முதன்முதலில் திரும்ப கொடுத்தவர் இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ். தனக்கு வழங்கப்பட்டிருந்த பொன்னாடை, பதக்கம், ஒரு லட்ச ரூபாய் என அனைத்தையும் சாகித்திய அகாடமிக்கு நேரில் சென்று கொடுத்து விட்டு வந்தார். ”ஒரு விருதை தந்து விட்டு எழுத்தாளர்களை மறந்து விடுகிறது, சாகித்தியஅகாடமி. ஒரு கொலை நடக்கும் போது ஒரு ஆறுதல் வார்த்தை கூட தெரிவிக்க முன்வராத சாகித்திய அகாடமியின் விருது எதற்கு” என்று கேட்டார், உதய் பிரகாஷ். கல்புர்கி கொலை குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆவதை கண்டித்து ஆறு இளம் கன்னட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக ஆறழு சாகித்திய அகாடமி’ விருதை திரும்ப அளித்தனர். வீரண்ண மடிவளர், சதீஷ் ஜாவரே கவுடா, சங்கமேஷ் மீனாசனகை, ஹனுமந்த் ஹலிகெரி, ஸ்ரீதேவி ஆளூர் மற்றும் சிதானந்த் சாலி ஆகியோர் அக்டோபர் 3-ம் தேதியன்று கன்னட சாகித்திய பரிசத்துக்கு சென்று தங்கள் விருதுகளை திரும்பக் கொடுத்தனர்.


கல்புர்கி, தாபோல்கர், பன்சாரே

இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர்கள் – கல்புர்கி, தாபோல்கர், பன்சாரே



கன்னட மொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சந்திரசேகர் பட்டீல் தனக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் பம்பா விருதை இதே காரணத்துக்காக திரும்ப கொடுத்தார். கல்புர்கி மற்றும் முகமது அக்லாக்கின் ஓலம் இந்திய அளவில் எழுத்தாளர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. படைப்பு அவஸ்தையை மீறிய ஒரு வலியை அவர்கள் பகிர்கிறார்கள். நயன்தாரா சகலின் எழுத்துக்கள் மேல்தட்டு வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுபவை. எனினும் அவரால் தாத்ரியின் அடித்தட்டு முஸ்லிம் ஒருவர் சந்தித்த பிரச்சினைக்கு எதிர்வினையாற்ற முடிகிறது. ஆனால், இதற்கு மாறான நிலை தமிழக எழுத்து சூழலில் நிலவுகிறது.



வைரமுத்து 
 


அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், வைரமுத்து, நாஞ்சில் நாடன், 
சு. வெங்கடேசன், திலகவதி, ஜோ டி க்ரூஸ், பிரபஞ்சன், பொன்னீலன் என்று ஒவ்வொரு வருடமும் சாகித்திய அகாடமி விருது வாங்கியோரின் பெரும் பட்டியல் இருக்கிறது. சாகித்திய அகாடமி விருது வாங்காத எழுத்தாளர்கள் சிலர், கண்டனங்களையாவது பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை அதே சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ? தாத்ரியின் ஓலம் தமிழகத்தில் உள்வாங்க நாதியற்று அலைகிறது. அது ஒவ்வொரு கணமும் இவர்கள் கல்நெஞ்சில் மோதி செல்ல வேண்டும்.


தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோரின் அரசியல் கண்ணோட்டத்தை வகை பிரிப்பது எளிது. அவர்கள் இரண்டு வகையை மட்டுமே சேர்ந்தவர்கள் — முதல் வகையினர் இந்துத்துவவாதிகள். இரண்டாம் வகையினர் பிழைப்புவாதிகள். வைரமுத்து, ஜோ டி க்ரூஸ் ஆகியோர்களின் தேய்மானம் பிழைப்புவாதம் இந்துத்துவத்துடன் கலக்கும் புள்ளியை சுட்டுகிறது.


எழுத்தாளர்களின் அரசியல் ஆதரவை எதிர்பார்த்து தனது முதிய வயதில் காத்திருக்கிறார் நயன்தாரா செகல். தமிழ் எழுத்தாளர்களோ தங்கள் விருதுகளை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதவெறியர்களோ அடுத்த குறியை தீர்மானித்து கொண்டிருக்கிறார்கள்.

– சம்புகன்

Thanks : Vinavu

Wednesday, October 7, 2015

சிறுகதை : யுக சந்தி?







ஸ் ஓரளவு காலியாத்தான் இருந்துது. ஆனாலும் கடசி வரிசையிலே ஜன்னலோரமா போய் உட்கார்ந்தேன். தனியா இருக்கணும்போல தோணிச்சுது. எதுக்கா? அழறதுக்குத்தான். ஆம்பளை அழலாமா? அதுவும் பட்டப்பகல்ல, நாலுபேர் ஏறி இறங்குற பஸ்ஸுல! குழப்பமாத்தான் இருக்கு. இப்போல்லாம் பொம்பளைங்களே லேசுல அழறது இல்லையே. சினிமாவுல கூட சிவாஜி, சிவகுமார் காலத்துக்கப்புறம் யாரும் பெருசா அழுதமாதிரி தெரியல. கமல் அழுவார்தான். இப்போ அவரும் குறைச்சுக்கிட்டார்தானே. குடும்பப்படம் பாபநாசத்திலே கூட நாயகன் மாதிரி மயில் அகவலாகவோ குணா மாதிரி குமுறி குமுறியோவோ அழலைதானே!

மத்தவங்க கதை எதுக்கு? நானே, ’அழுவேன்.. ஆனால் அழமாட்டேன்’ ரகம். குழப்புகிறேனா? உண்மை அதுதான். சினிமாவிலே நிழலான கதாபாத்திரங்களுக்காக சட்டென அழுதுடுற நான், நிஜத்திலே கல்லாட்டமா நிப்பேன். மரணமா இருந்தாலும்தான்! நாகர்கோவில் லக்ஷ்மி தியேட்டர்லயும் பயோனியர் தியேட்டர்லயும் சிவாஜி கூடவும் சவுகார் கூடவும் சேர்ந்து புழிஞ்சு புழிஞ்சு அழுத நான், என் பத்தொன்பது வயசிலே அப்பா செத்தப்போ சொட்டு கண்ணீர் விடலை! இத்தனைக்கும் அப்பா தலைமாட்டிலேதான் நின்னுட்டிருந்தேன். துக்கம் விசாரிக்க வந்தவங்க சின்னதா கேவிக்கிட்டு சட்டுனு உடம்பை குலுக்கினப்போ தொண்டையை அடைக்கத்தான் செஞ்சுது. ஆனா என் கண்ணுல மட்டும் ஊஹும் தண்ணி வரவே இல்லை. அப்பாவுக்கும் எனக்கும் சுமுகமான உறவு இல்லாமத்தான் நான் அழலைன்னு பலரும் பேசிக்கிட்டதுலேயும் உண்மை இல்லாம இல்லை.

அப்பா என்னை புள்ளையா வளர்த்ததைவிட பந்தயக்குதிரையா நினைச்சதுதான் அதிகம்.. பார்க்கிறப்போல்லாம் விரட்டிக்கிட்டேதான் இருந்தார். அதெல்லாம் ’அக்கறை’ன்னு இப்ப இந்த அம்பது வயசுல நானும் ஒரு டீன் ஏஜ் பையனுக்கு அப்பாவானப்பறம் சொன்னாலும் அன்னைக்கு அதை அடக்குமுறையாத்தான் நினைச்சு வெறுத்தேன். அந்த வெறுப்பினாலே எப்பவுமே அவரோடு ஏட்டிக்கு போட்டி வெறைப்புத்தான். கடைசியிலே களைச்சுப்போய் தனியா கூப்பிட்டுப் பேசுவார்.

“எனக்கு மட்டும் உன்னை எப்பவுமே கண்டிக்கணும்னு ஆசையா என்ன? எல்லாம் ஒரு பயம்தான். நீ நல்லாத்தான் படிக்கிறே. ஆனா இதெல்லாம் பத்தாது. படிப்பைத் தவிர என்னால உனக்கு காசு பணம் சொத்துன்னு வேற எதுவும் தரமுடியாது. அதனாலத்தான் சொல்றேன். நீ எவ்வளவு வேணும்னாலும் படி. இன்னும் அதிகமா உழைக்கணும். இப்போ பண்ற மாதிரி எழு மணி வரை தூங்குறது.. எப்பப் பார்த்தாலும் ரேடியோவில பாட்டு கேக்கறது.. மாசம் தவறாம சினிமா பார்க்க அடம் பிடிக்கிறது எல்லாம் ரொம்ப தப்புப்பா.“

அப்போதும் நான் இளகாமல் இறுக்கமாகத்தான் இருப்பேன். கடைசியில் அந்த அஸ்திரத்தை எடுப்பார்.

“உனக்கு என் உடம்பு பிரச்சனை தெரியாது. நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்னு எனக்கும் தெரியாது. என்மேலே இரக்கப்பட்டாவது கொஞ்சம் கூடுதலா ஒழுங்கையும் உழைப்பையும் கடைபிடி”

அந்த தழுதழுப்பான குரல் என்னை கலங்கடித்துவிடவே மவுனமாக
தலையாட்டி நகர்ந்து போய் புத்தகத்தை தூக்குவேன். எல்லாம் அந்த ஒரு ராத்திரி வரைதான். விடிஞ்சா பழைய குருடியாக என் தலையில் அவர் தண்ணீர் ஊற்றுவதும் நிமிராத வாலாக அவரை முறைச்சபடியே நான் எழுந்திருப்பதுமா பழைய வாழ்க்கைக்கே போயிருப்போம்.

ஆனால் அவர் உண்மையை மட்டும்தான் எப்போதும் சொல்லியிருக்கிறார்னு அவரது நாப்பத்தெட்டு வயசு அகால மரணம் உறுதி பண்ணிடுச்சி. அப்பாவை எடுக்கிற நேரத்திலே குனிந்து அவரது நெத்தியிலே முத்தமிட்டே அவரை வழியனுப்பினேன். அவ்வளவுதான். ’அவ்வளவேதான் எனக்கும் அப்பாவுக்குமான பந்தம்’ என ஊரும் உறவும் மட்டுமல்ல அம்மா, தங்கச்சிகளும் கூட நம்பியிருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை.
அன்னையிலேர்ந்துதான் நான் அப்பாவாகவே உருமாறினேன்.. ஆனால் அப்பாவுக்கு நேர் எதிராக! என்ன மறுபடியும் குழப்புறேனா? அப்பா வாழ்க்கையை ஓர் அனுபவமா வாழாம ஒரு தவமாவே வாழ்ந்து போய்சேர்ந்தவர். முழுக்க தியாகமான வாழ்வு. ஓரளவு கைநிறைய சம்பாதிச்சாலும் மூணு செட்டுக்கு மேலே தனக்குன்னு நல்ல உடுப்பு வச்சுக்கிட்டது இல்லை.. ஒரு ஓட்டலுக்கு போய் டிபன் காபி சாப்பிட்டது இல்லை… ரேடியோ சினிமான்னு எந்த கேளிக்கையையும் சுகிச்சது இல்லை. அவரது அதிகபட்ச பொழுதுபோக்கே ’ஹிண்டு’ பேப்பர் மட்டும்தான். தனக்குன்னு எதையுமே ஆசைப்படாம தன்னோட குடும்பத்து நன்மைக்காக அவர் காட்டின அதே அக்கறையை நான் உள்வாங்கிக் கிட்டாலும்.. அதைச் செயல்படுத்தறதுல அப்படியே அவருக்கு நேர்மாறா நடக்கவே முடிவெடுத்தேன்.

குடும்பத்து மீதான அக்கறையை கோபம், கண்டிப்பு, தண்டனை மூலம்தான் வெளிப்படுத்தணும்னு சட்டம் ஒண்ணுமில்லையே! தானும் சிரிக்காம மத்தவங்களையும் சிரிக்க விடாம அப்படி ஒரு இறுக்கமான அன்பு பாசம் அக்கறை என்னத்துக்கு? காசு செலவில்லாமல் இயற்கையே கொடுத்த சின்ன சின்ன சுகங்களைக் கூட அவர் அனுபவிக்கலையே! ஸ்பரிச சுகம் எத்தனை பெரிய இன்பம்! பள்ளிக்கூடம் மாறின ஒன்பதாம் வகுப்பைத்தவிர மற்ற எல்லா வகுப்புகள்லயும் மாதாமாதம் முதல் ராங்க் எடுத்த ஒரு மகனின் தோள் தொடுற, கட்டி அணைக்கிற, முத்தமிடுகிற சுகங்கள் ஒண்ணையுமே அவர் அனுபவிக்கவில்லையே! அப்பா பிணத்தை தூக்குறப்போ நான் முத்தமிட்டதோட நோக்கம்கூட அப்பா வாசம் எப்படி இருக்கும் என்று தெரிஞ்சுக்கத்தானோ என்னவோ? அப்போதான் அந்த சபதம் எடுத்தேன், ‘எனக்கு கல்யாணமாகி, குழந்தையும் பிறந்தால் எங்க முதல் ஸ்பரிசம் நிச்சயம் பிணத்தை முத்தமிடுகிற சோகமா இருக்கவே கூடாது’ன்னு! அதன்பிறகு நான் திரும்பிப் பார்க்கவே இல்லை.

சொல், செயல், நடவடிக்கை எல்லாத்துலேயுமே அவருக்கு நேர் எதிரான அணுகுமுறைகளோட வாழ்ந்தேன் ; வாழறேன். கோவமா யார் கிட்டேயும் ஒரு வார்த்தை பேசத்தெரியாது. ’இது பிடிக்குது இது பிடிக்கலைன்னு’ தீர்த்து சொல்லத் தெரியாது. ரெண்டு தஙகச்சிங்களுக்கு அண்ணனா வளர்ந்தப்ப ஒருதடவைகூட கை நீட்டினதில்லை. சென்னையில வேலை கிடைச்சு குடும்பத்தை கூட்டிவந்ததும் , ஒரு வாரம் ஹோட்டல், ஒருவாரம் சினிமா, ஒருவாரம் நண்பர்கள் வீடு, ஒரு வாரம் மெரினா என்று வாரம் தவறாம அம்மாவை அழைச்சிட்டுப் போய்.. அப்பா கொடுக்காத சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் வாரி வாரி வழங்கினேன். அந்த சுதந்திரத்தையே தனக்கான அதிகாரமா மாத்தி என்னை அடக்கி ஆளத்தொடங்கினதோட, தங்கச்சிங்க கல்யாணத்துக்கான டவுரி பண்டமாற்று வியாபாரமா, எனக்கு கல்யாணம் பேசினபோது அந்தப் பொண்ணு முகத்தைக்கூட பார்க்காமத்தான் தாலி கட்டுனேன். இருவது வயசு வரைக்கும் பசங்களை அடிச்சுத்தான் வளர்க்கணும்னு சொல்லி சொல்லியே அடிச்ச அப்பாவின் பிள்ளையான நான் என் மகனை (இந்த பதினேழு வருடத்தில்) ஒரு தடவை கூட அடிச்சதும் இல்லை குட்டுனதும் இல்லை.

நீங்களே அதிசயப்படுற அளவு இப்படியெல்லாம் அநியாயத்துக்கு நல்லவனா இருந்தும் கடைசியிலே என் நிலைமையைப் பார்த்தீங்களா? திருச்சி – சென்னை பஸ்ஸின் கடைசி மூலையிலே உட்கார்ந்து அழவேண்டிய கதிகேடு!
ஒரு அப்பா செத்துப்போன குடும்பத்து மூத்த மகன் என்ன என்ன செய்யணுமோ அத்தனையையும் தப்பாமத்தான் செய்தேன். ஆனாலும் அதெல்லாம் பத்தாது அதுக்கும் மேலே பெருசா ஏதாவது எதிர்பார்த்தாங்களோ என்னவோ இன்னைக்குவரை அம்மா, தங்கச்சிங்களுக்கு அந்த நன்றியுணர்வு இல்லவே இல்லை. ஒருகட்டத்துல ’உங்க நன்றியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்.. நிம்மதியா வாழவிட்டா போதும்’னு நான் நொந்துக்கிறாப்பிலே கல்யாணமாகி தனிக்குடித்தனம் போன ரெண்டு தங்கச்சிங்களோ இல்லை ஒரு தங்கச்சியும் அம்மாவுமோ இல்லே மூணுபேருமாவோ அடிக்கடி முட்டிப்பாங்க. நாள்கணக்கு மாசக்கணக்கு தாண்டி வருசக்கணக்கா ஒருத்தொருக்கொருத்தர் பேச்சுவார்த்தைகூட இருக்காது. பலசமயம் பஞ்சாயத்து பண்ணப்போய் நான் பொல்லாதவனா பேரெடுத்து திரும்பியிருக்கேன்.

என்னை ரொக்கத்துக்கு விக்கிறாப்பிலே அம்மாவா தேடிக் கொண்டு வந்த என் மனைவியை அம்மாவுக்குத்தான் மொதல்ல புடிக்காமப் போச்சு. அண்ணி கொண்டு வந்த பணம் நகையை ஆதாரமா வச்சு ஆளுக்கொரு வீடு கட்டி முடிச்சப்பறம் தங்கச்சிகளுக்கும் அண்ணியைப் புடிக்காம போச்சு. ஆனாலும் ‘யார் எது சொன்னாலும் நீ வாயை திறக்காதே’ன்னு நான் சொன்னதை என் சம்சாரம் விதியே என்று கடைபிடிச்சது பெரிய ஆறுதல்தான்.
ஆனால் அம்மா? வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்கிற மூர்க்கத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக விசுவரூபம் எடுக்க ஆரம்பிச்சார். தையல் கற்றுக்கொள்கையில் நியூஸ்பேப்பரை வெட்டிப்பழகும் அதே சுவாரஸ்யத்தோடு உறவுகளையும் உணர்வுகளையும் சகட்டுமேனிக்கு வெட்டித்தள்ளினார். இருபது வருசங்களாக அப்பா போட்ட கோட்டுக்குள்ளே வாழ்ந்துபழகிய அம்மாவுக்கு, ’நல்லது செய்வதா நினைச்சு நான் கோடுங்களை அழிச்சது பெரும் வினையாவே போச்சுது. அப்படித்தான் சித்தி மகள் கல்யாணத்துக்காக நான் நாகர்கோவில் பொறப்பட்டப்போ.. “எங்கே பொறப்பட்டுட்டே? சித்தி வீட்டுக்கா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..” – என தடுத்தார்..

“திடீர்னு சித்தியோட பகைங்கறதால சித்தப்பா செஞ்ச உதவிகளை மறக்கலாமா? அப்பா செத்தப்போ ஆஸ்பத்திரிலேர்ந்து மயானம் மட்டும் அவர்தானேம்மா உதவி செஞ்சாரு. அந்த நன்றியை நினைக்க வேணாமா? “
“சொள்ளமாடன் இல்லேன்னா சுடலை மாடன்கிறாப்பிலே அவர் இல்லேன்னா இன்னொருத்தர் உதவி இருப்பாங்க. பெருசா சொல்ல வந்துட்டான். நீ ஆபிசுக்கு போற வழியைப் பார். என்னை மீறி ஊருக்குப்போனா நீ திரும்ப வர்றப்போ நான் வீட்டுல இருக்க மாட்டேன்”

அம்மாவின் அந்த ஒரே துருப்புச்சீட்டில் என் ஆட்டம் முற்றாக முடிந்துவிடும். ஆனாலும் ஒரு டிபிகல் இந்தியனாக தமிழனாக அம்மாவுக்கு தலையாட்டியேதான் வந்தேன். மனைவி பிள்ளைகளைப் பின் தள்ளிவிட்டு அம்மாவுக்கே முன்னுரிமை தந்தேன். அம்மா சொன்னார் என்று கடனுக்கு மேல் கடனாக வாங்கி சென்னைக்கும், என் தகுதிக்கும் பொருத்தமில்லாத பெரியவீடாகவே கட்டிமுடித்தேன்.

தவணை முறையில் காரும் வாங்கி நிறுத்தினேன். டிவி பார்க்கையில் பேரப்பிள்ளைகளை இடைஞ்சலாக கருதினாள் என்று இன்னொரு டிவியை அம்மா அறையிலேயே பொருத்தினேன். ஹாலில் இருந்த ஃபோனும் அறைக்குள் இடம்பெயர்ந்தது. ஆசைப்பட்டாள் என்று ஜன்னலை உடைத்து ஏசியும் மாட்டினேன். ஆனாலும் திருப்திப்பட்டாள் எனத் தோன்றவில்லை. வயது ஆக ஆக இறுக்கமான முகபாவத்துடன் தான் உண்டு தன் டிவி உண்டு என அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள். சாப்பாடு கூட சீரியல் நடிகர்களோடுதான் என்றாகிப்போனது. சீரியல் நேரத்தில் யார் உள்ளே போனாலும் முகம் சுளித்தாள். சமயங்களில் கதவை அறைந்து சாத்தினாள்.
குறையில்லாத வாழ்வு சிலருக்கு வரம் சிலருக்கு சாபம்தானோ? அம்மாவின் எரிச்சல் குணம் கண்டு நானும் உறவாடலை குறைத்துக் கொண்டேன். அதனால்தானோ என்னவோ கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பிணங்கி இருந்த ரெண்டாவது மகளுடன் திடீரென் உறவை புதுப்பித்துக் கொண்டாள்.. போன்மூலமேதான்!

“உன் தங்கச்சிக்கும் எனக்குமான சண்டை தீர்ந்துடுச்சு.. அதனால மறுபடி அவளை வந்து போகச் சொல்லலாம்னு இருக்கேன்”

“தாராளமா வரட்டும் போகட்டும். ஆனா மறுபடி ரெண்டுபேரும் சண்டை போட மாட்டீங்கன்னு கியாரண்டி குடுக்க முடியுமா? “

“என்னைப் பார்க்க என் மவ வர்றதுக்கு உன் பர்மிஷன் வேணுமோ?”
சண்டைக்கு தயாரில்லாமல் நான் அலுவலகம் போய்ட்டேன். மாலையில் வீடு வந்தால் அதிர்ச்சி அம்மா வீட்டை விட்டு போய் விட்டாள். என்னால் நம்பவே முடியலை. அரக்கபரக்க தங்கச்சிகளுக்கு போன் போட்டால் அம்மா ஊருக்கே போய்விட்ட தகவல் கிடைச்சுது. ‘என்னதான் கோபம்னாலும் எதுக்கு ஊருக்கு போகணும்? உங்க கிட்டேயாவது வந்திருக்க வேண்டியதுதானே?’ங்கிற கேள்வியை அவர்களிடம் கேட்க முடியாது. ’எங்களாலயெல்லாம் அம்மாவை வச்சு பார்க்க முடியாது’ன்னு ஏற்கனவே பலதடவை சொல்லியிருந்தவங்க அவர்கள். மறுநாள் நாகர்கோவிலுக்கு போன் போட்டபோதுதான் அம்மா சித்தி வீட்டில் இருப்பது தெரியவந்துது. நான் உடனே வர்றேன்னு சொன்னதுக்கு
“வேணாம் வேணாம் அம்மா உன் மேலே ரொம்ப கோவமா இருக்காங்க.. ஒரு வாரம் கழிச்சு வந்தா போறும்’னு சித்தி சொன்னது நியாயமாகப் பட்டது.
அதான் நேத்தைக்கு பொறப்பட்டு இன்னைக்கு காலையிலே ஊருக்குப் போயிட்டேன். எப்பவுமே சிரிப்பும் குதூகலமுமாக நான் நுழையும் சித்தி வீடு முதன்முதலாக அன்னியமாகப் பட்டுது. அம்மா நடந்துகொண்டது அதை விட அதிர்ச்சியாக இருந்தது. கூடத்தில் டிவி பார்த்து கொண்டிருந்தவள் என்னை கண்டதுமே முகம் சுருக்கி உள்ளறைக்கு சென்று விட்டாள். பின்னாலேயே ”அம்மா அம்மா” என்று அழைத்தவாறே இயல்பாக நகர்ந்த என்னை சித்தப்பா வழிமறித்தார்.

வலுக்கட்டாயமாக இழுத்து பிரம்பு நாற்காலியில் இருத்தினார்.

“உன்னை யார் இப்ப வரச்சொன்னது? மைனிக்கு இன்னும் கோவம் தீரலைடா.."

“அந்த அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? திடீர் திடீர்னு சண்டைபோடறதும் திடீர் திடீர்னு ஒண்ணு சேர்றதும் தப்புன்னு சொன்னது உலகமகா குத்தமா? “

“குத்தமான்னு கேட்டா குத்தம்தான். ஏன்னா அம்மா வயசு அப்படி”

“ஏன் சித்தப்பா உங்களுக்கு என்னை தெரியாதா? என் தங்கச்சிங்க மாதிரி நான் எப்பவாவது அம்மா கிட்டே அவமரியாதையா நடந்திருப்பேனா?”

“நீ நல்லவன்தான்.. அதுக்காக அம்மாக்க போனை கட் பண்ணுனது நியாயமா?”
அதிர்ந்துபோய் விட்டேன். ”என்ன நான் போனை கட் பண்ணினேனா? என்ன சொல்றீங்க?”

“உங்கம்மா தங்கச்சி கூட பேசக்கூடாதுன்னுதானே போனை கட் பண்ணி வச்சே”

“யார் சொன்னாங்க?. நேத்தைக்கு நான் பொறப்படறப்போகூட போன் வந்துதே. அப்போ வேலை செய்யுதுன்னுதானே அர்த்தம்”

“அவன் என்ன முட்டாளாக்கப் பார்க்குறானா? போன் வரும் ஆனா கால் போகாது.. அப்படி கட் பண்ணி வச்சிருந்தான்” – அறையினுள்ளிருந்தே அம்மா குரல் வந்தபோதுதான் சட்டென புத்திக்கு எட்டியது, ’இந்தமாதம் இன்னும் பில் கட்டாதது’. அதன் விளைவாகத்தான் அவுட் கோயிங் மட்டும் துண்டிக்கப்பட்டிருக்கிறது போலும். விஷயத்தை விளக்கிச் சொல்லியும் சித்தப்பாவே நம்பத் தயாரில்லைங்கறப்போ அம்மா பத்தி சொல்லணுமா?
அம்மா இருந்த அறையை நெருங்கி தட்டிப்பார்த்து ஏமாந்தேன். மறுபடி தட்டுனதும் உள்ளிருந்து குரல் வந்த்து.

“என்னை நிம்மதியா இருக்க விடமாட்டியா? நீ எனக்கு புள்ளையும் இல்லை நான் உனக்கு அம்மாவும் இல்லை”

விக்கித்துப்போனேன். அதுக்குமேல் அங்கே நிக்க திராணியில்லாம தேகம் நடுங்கிச்சுது. இறுக்கமான என் அப்பாவை பார்க்கறப்போல்லாம் சட்டுனு உடல்மொழியை மாத்தி மரியாதையும் பாசமும் காட்டின என் பாட்டி நினைவிலே வந்து போனாள். போன தலைமுறை இறுக்கத்தை தளர்த்தணும்னு புறப்பட்ட நான் தோத்துப்போன மகனா வெளியே வந்தேன். பஸ் நிலையம் நோக்கி நடந்தேன்.

சென்னைக்கு டிக்கட்டும் எடுத்த பிறகுதான் அந்த புதிய எண்ணம் வந்துது.

திருச்சியில் இறங்கி கல்லூரியில படிக்கும் மகனைப் பார்த்தா என்ன? பழைய தலைமுறை உண்டாக்கிய காயத்திற்கு புதிய தலைமுறை மருந்து பூசினா இதமா இருக்கும்தானே! கூடவே மகனைப் பார்த்தாகவேண்டிய நிர்பந்தமும் இருந்துது. நானும் எங்கப்பாவும் எலியும் பூனையும்னா, என் மகனும் நானும் நகமும் சதையும் மாதிரி! இப்போ மொதல் மொதலா நகச்சுத்தி வந்திருக்கு. அதிலும் சொந்த காசுல சூன்யம் வச்சுக்கிட்ட நிலைமை!

போனவருஷம் அவனது பதினெட்டாவது பிறந்தநாளை கொஞ்சம் அமர்க்களமாவே கொண்டாடினேன். ‘டொட்டடாய்ங்’ என பரிசை நீட்ட, பிரிச்சவன் அசந்தே போனான். பதினையாயிரம் ரூபாய் ஸ்மார்ட் ஃபோன்! ’பச்சக்’கென முத்தமிட்டான் போனை அல்ல என்னைத்தான்!
“தேங்க் யூ.. தேங்க்யூப்பா. இவ்வளவு காஸ்ட்லி போனா? நினைச்சே பார்க்கலை. பலதடவை கேட்க நினைச்சும் கார் கடனோட தவணை முடியலியேன்னு மனசை அடக்கிக்குவேன்”

அதுதாங்க என் புள்ளையோட ஸ்பெஷாலிட்டி! மத்த பிள்ளைகளைப் போல அதுவேணும் இது வேணும்னு கேக்கறதே இல்லை.

“இப்பவே பதினைய்யாயிரம் ரூபா போன்னா அண்ணனோட அடுத்த பிறந்த நாளைக்கு என்னப்பா குடுப்பீங்க?”- மகள் ஆர்வமா கேட்டா.

“அதை இப்பவே சொல்லலாமா? சரி சொல்றேன்.. அதை நினைச்சாவது இன்னும் நல்லா படிக்கட்டும். அடுத்த வருஷம் ஆப்பிள் லேப்டாப்”

“ஹைய்யா அப்போ அண்ணனோட டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் எனக்கு.. “

“நிஜமாவே மேக் வாங்கி தருவீங்களா? ஐம்பது அறுபதாயிரம் ஆகும்பா”

“அதுக்குன்னு ஒரு சீட்டு போட்டா போச்சு”

மறுபடியும் ஒரு பச்சக் தந்தான். அன்னைக்கு ராத்திரி திருச்சிக்கு கிளம்பறதுக்கு முன்னால அவன் என்னை இறுக்கி கட்டி அணைச்சப்போ மனசு நிறைஞ்சு போச்சு. ஆனா அப்போ உத்தரத்துல விதி சிரிச்சதை நான் பார்க்கவே இல்லை. இது நடந்து பத்து மாசம் ஆகுது.

முந்தா நாள் அம்மா பஞ்சாயத்துக்காக நாகர்கோவில் பஸ் பிடிக்க காத்திருந்த சமயம் பையன் போன் வந்துது.

“சீக்கிரம் சொல்லுப்பா அவசரமா ஊருக்கு பொறப்பட்டுட்டு இருக்கேன்”

“அப்பா உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்.. இன்னும் ரெண்டு மாசத்திலே என் பொறந்தநாள் வருதுல்லே..”

“ம்..”

“இந்த தடவை மேக் லேப்டாப் வாங்கித் தர்றேன்னு சொன்னீங்கள்ல”

“ம் சொல்லு”

“ரமேஷ் வினீத் எல்லாரும் புது பைக் வாங்கிட்டாங்கப்பா”

“அப்ப உனக்கு ரொம்ப வசதியா போச்சு. அவங்க கூடவே சுத்தலாம்.”

“இல்லப்பா நீங்கதான் சொன்னீங்கள்ல செகண்ட் இயர்ல தினமும் லைப்ரரிக்குப் போற பழக்கம் வேணும்னு.. ஹாஸ்டல்ல இருந்து லைப்ரரி ரொம்ப தூரம்னுதான் இன்னும் தொடங்காம இருக்கேன். அதனால லேப்டாப்புக்குப் பதில் பைக் வாங்கித் தந்திருங்கப்பா..”

“நீ பைக் கேட்டது லைப்ரரிக்கா? இல்லை உன் நண்பர்கள் வாங்கிட்டாங்கங்கிறதுக்காகவா? “

“ரெண்டும்தான்”

“ஆனா என் பதில் ஒண்ணுதான். இப்ப உனக்கு பைக் கிடையாது. உனக்கு எப்போ என்ன வாங்கித்தரணும் இந்த அப்பாவுக்கு தெரியும்”

“…”

“என்ன புரிஞ்சுதா? “

“……. “

அந்த மவுனத்தின் பின்னாலிருந்த மகனோட ஏக்கம் எனக்கு பிடிபட்டாலும் அப்போ சமாதானப்படுத்த நேரமில்லாம ஊருக்கு ஓடிப்போனேன். திரும்பறப்போ அம்மா தந்த காயத்துக்கு மருந்தா மகனது நினைவு மேலோங்கி வந்ததும் போன் போட்டேன். எடுக்கலை. பிறகுதான் வகுப்பு நேரத்தில் சைலண்ட் மோடில் அவன் போனை வைக்கறது ஞாபகம் வந்துது.

’சாயந்திரம் ஐந்து ஐந்தரை மணி அளவில் திருச்சி வருவேன் பஸ் ஸ்டாண்டில் சந்திக்கவும்’னு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். நேரில பார்த்த உடனே ’உன் இருபதாவது பிறந்தநாளைக்கு பைக் வாங்கித்தர்றேன்’னு வாக்குறுதி குடுக்க நினைச்சேன். அப்பவும் சமாதானமாகாம சிணுக்கமாக முகத்தை வைச்சா வேறவழியில்லாம ’சரி’ சொல்லணும்னு முடிவு பண்ணுனேன். என் அம்மா மாதிரி என்னாலதான் இறுக்கமா நடந்துக்க முடியாதே. பிள்ளை முகம் பார்த்தாலே உருகிடுவேனே! அவனும் அப்படிப்பட்டவன்தானே..

எனது மனசின் வேகம் புரிஞ்சுதானோ என்னவோ நாலரைக்கே திருச்சி போய்ச் சேர்ந்துட்டேன். . இறங்கிய கையோடு போனைப் போட்டேன். மணி அடிச்சுது.. ஆனால் எடுக்கலை. நாலு தடவை முயற்சி பண்ணிட்டு கடைசியில அறை நண்பன் அரவிந்துக்கு போன் போட்டேன். உடனே எடுத்தான்.

“அப்பா எப்படி இருக்கீங்க? “

“நான் நல்லா இருக்கேன். உன் ஃப்ரண்டு எங்கே? “

“இதோ இங்கேதானே இருக்கான்..”

“அப்புறம் ஏன் நான் போன் பண்ணி எடுக்கலை?”

“அப்படியா? இதோ நானே போனை குடுக்கிறேன்.”

போனின் மவுனத்தினூடே சில இழுபறி பேச்சு கசிந்தது.

“ஏதோ கோபம் போல. பேசமாட்டேங்கிறான்”

என் மகன்… என் ம..க..னா இப்படி பகிரங்கமாக கோபம் காட்டுகிறான்?. நம்பவே முடியலை.

அதீத ஹீனத்துடன் “நிஜமாவா? “ எனக்கேட்ட்தும் சட்டென உரத்த சத்தம் காதில அறைஞ்சுது.

”நான் தான் உங்க போனை எடுக்கலைலே அப்புறம் எதுக்கு ஃப்ரண்ட்ஸ்க்கெல்லாம் போன் பண்ணி என்னை அசிங்கப்படுத்தணும்? யூ ஆர் நாட் எ குட் ஃபாதர். ஐ ஹேட் யூ டாட்”

என்னால நம்பவே முடியலைங்க. என் பையனிடமிருந்து அப்படி ஒரு எதிர்மறையை நான் எதிர்பார்க்கவே இல்லை. மேற்கொண்டு என்ன செய்வதுன்னு தெரியாம திணறி நிக்கிறபோதான் காலியாக கிளம்பின இந்த பஸ்ஸோட கண்டக்டர் டிரைவருக்கு விசில் கொடுத்தவாறே என் தோள் தொட்டு ‘சென்னையா?’ன்னு கேட்க மவுனமாக ஏறி உட்கார்ந்துட்டேன்.

இன்னமும் நம்பமுடியலை.. காலையிலே என்னைப் பெத்தவ அறைக்குள்ளே போய் கதவை அடைச்சு என்னை அவமானப்படுத்தினா.. சாயந்திரம் நான் பெத்தது அறையிலே ஒளிஞ்சுகிட்டு என்னை அசிங்கப்படுத்திடுச்சு. அதான் இந்த அழுகை! இப்படி ஜன்னல் ஓர சீட் பிடிச்சு அழுதா மட்டும் தீர்ந்துரக்கூடிய வேதனையா என் சோகம்? எங்கப்பா மாதிரி வீட்டை மிலிட்டரி கேம்ப் ஆக்க வேணாம்னு அதிக சுதந்திரம் கொடுத்ததுக்கான தண்டனையை அம்மா தந்துட்டாங்க. ஸ்கூல் ஹெட்மாஸ்டரா எங்கப்பா என்கிட்டே பழகின மாதிரி இல்லாம தோள்ல கைபோட்டு ஏ ஜோக் சொல்லுற ஃப்ரண்டுபோல அதிக சுவாதீனம் கொடுத்து பழகினதுக்கான பரிசை என் மகனும் கொடுத்திட்டான். ரெண்டு தலைமுறைகளை இணைக்கிற பாலமா என்னை நான் கற்பனை பண்ணிக்கிட்டதுக்கு இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து என்னையே புல்டோசர் வச்சு சாய்ச்சுட்டாங்களே! ஒரே நாள்ல என்னைப் பெத்த தாயாலயும் நான் பெத்த மகனாலுமா உதாசீனத்துக்காளாகி இப்படி நடுத்தெருவு.. இல்லை இல்லை நடுரோட்டிலே பஸ்லே அழுதுட்டே போக வச்சிட்டாங்களே! இருட்டு அருகில் ஆளுங்களும் இல்லைங்கறதால கண்ணீர் பொங்கி பொங்கி வழியற சமயம்.. சட்டுனு விளக்குங்க எரிஞ்சதும் வெளிச்சத்தில் அதிர்ந்துபோய் கையால முகத்தை துடைச்சுக்கிட்டேன். சாப்பாட்டுக்காக வண்டி நிறுத்தப்படப்போற முஸ்தீபு. வேகம் குறைச்சு இருட்டுல ஓடுற வண்டியின் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். ’நான் எந்த இடத்தில் இருக்கிறேன்’னு என்னால அனுமானிக்க முடியவிலை. சாலையிலே மட்டுமில்லே வாழ்க்கையிலும்தான்!


 -முகம்மது ஐஷ்வர்யன்

Sunday, October 4, 2015

சிறுகதை : சாதல் என்பது...







பெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின்பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு, அதற்குள் ஐதான இழைகளுடையதும் தொய்வானதுமான, ஒரு சிலந்திவலைபோல குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு பாதைகள் (புறோமினேட்ஸ்) காலாற உள்ளே நடப்பவர்களுக்கும் குதிரைகளில் சவாரி செய்பவர்களுக்குமாக உள்ளவை.

காட்டின் எல்லைவரை நடந்தால் இறுதியில் கேப்பர்னிக் ஸ்ப்றே (கடலேரி) வரும். கோடைகாலத்தில் ஏரியின் தீரத்தின் முழுநீளத்துக்கும் முகாம் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும், மக்கள் தனித்தனியாகவும் சிறு சிறு கூடாரங்கள் அமைத்தும் முகாமிடுவர், கிறில் போடுவர், நீச்சலடிப்பர். காட்டினுள் இருந்து இரவில் வெளியே உலாவரும் பன்றிகள், நரிகள், முயல்கள், கீரிகள், முள்ளெலிகள் வளவினுள் நுழைந்து கிளறாதிருக்க ஏனைய வளவுக்காரர்களைப்போல நாமும் எம் வேலியின் கீழ்ப்பகுதியை நெருக்கமான உலோகவலையால் அடைத்திருக்கிறோம்.

முப்பது வருஷங்களுக்கு முன்னர் இந்த வீட்டை வாங்கியது இன்னும் ஒரு கனவைப்போல இருக்கிறது. ஒரு ஜெர்மன்காரக் கட்டிடக் கலைஞர், தனக்காக உருவமைத்தும், பார்த்துப்பார்த்தும் கட்டியவீடு, அதில் ஆறுமாதங்கள்கூட அவர் வாழ்ந்திருக்கவில்லை, காலகதியாகிவிட்டார். அவரின் மறைவுக்குப் பின்னால் அவரது குடும்பம் அமெரிக்காவில் குடியேற விரும்பி இவ்வீட்டை விற்கமுயன்றபோது நாங்கள் வாங்க முயற்சி செய்தோம். வங்கிகள் அவ்வீட்டின் பெறுமதியான இரண்டு இலக்ஷம் மார்க்குகள் எமது வருமானத்துக்கு மிக அதிகம் என்றும், சொந்த முதலீடு மேலும் போடவேண்டும், அன்றேல் அத்தனை கடன் தரமுடியாதென்றும் உதட்டைப் பிதுக்கியபோது, அவுஸ்ரேலியாவிலிருந்த ஒரு பெரியம்மாவின் மகள் 50,000 டொலர்களைத் தந்து உதவினார். இன்னும் ஊரிலிருந்த இரண்டொரு காணிகளையும் விற்றதில் வீட்டை வாங்க முடிந்தது. வாழ ஆசைப்பட்டு ஒருவன் கட்டிய வீடு எமக்கானது. அவனது நஷ்டம் எமக்கு வரவானது, இதைத் தர்க்கத்தில் எப்படி வகையிடுவது. சரி நாம் யாரிடமும் அபகரிக்கவில்லையே, அதற்குண்டான கிரயத்தைச் செலுத்தித்தானே வாங்கினோமென்று சமாதானமடைந்தாலும் அப்பப்போ சிறுநெருடல் வந்து மனதை முட்டும்.

முப்பதுவருட ஜெர்மன் வாழ்க்கையில், 23 வருடங்கள் வாங்கிய வீட்டின் கடனைத் தீர்ப்பதற்காகவே உழைத் தோம் என்பது பச்சை முட்டாள்தனம் என்பது புரிகிறது. சராசரிமனிதன் அப்படித்தான் வாழ்ந்து தொலைக்கிறான்.
மாதினி வயசோடு சேர்த்து ஊளைச் சதைகளையும் ஏற்றிக் கொள்ளாததாலோ என்னவோ, சற்று இளைப்பிருந்தாலும் இந்த வயதிலும் சுழன்று சுழன்று மொத்தவீட்டோடு சேர்த்து என் அறையையும் படுக்கைகளையும் துப்புரவாக வைத்திருக்கிறாள். மகள் வாங்கித்தந்த, ஆஸ்பத்தரிகளில் இருப்பதுபோன்ற வேண்டியபடி சரிக்கவும் மடக்கவும்கூடிய கட்டிலில் படுத்திருக்கிறேன். செவிலி ஒருவர் தினசரி மாலையில் வந்து வேண்டிய ஊசி மருந்துகளை எனக்கு ஏற்றிச்செல்கிறார்.

Your problem is you think you have time. ஆனால் காலம் அதற்குள் விரைந்தோடி முடிந்துவிடும். ஒரு சுடரொன்று தள்ளாடுகிறது, அது நானாகிய தயாநிதி. எந்நேரமும் ‘அது’ இல்லாது கடந்துவிடும். என்னை நானே துரத்திக்கொண்டிருக்கிறேன். காலகதியடைதல் இப்போ எனது முறை. அதைப் பார்ப்பதற்காகவே பலர் காத்திருக்கின்றனர்.

மாதினி ஒன்றும் நான் ஒரேநாளில் கண்டெடுத்தவள் இல்லை, ஒரே ஊர்க்காரி, ஒன்றாகப் படித்தோம், காலத்தில் கல்லூரி வட்டகையில் இருந்த பல அழகிகளில் ஒருத்தி. எப்போதாவது எதிர்ப்படும் வேளைகளில் மெலிதான ஒரு மென்நகையை உதிர்ப்பாள். அவ்வளவுதான், அதோடு சரி, நின்று அவளுடன் பேச்சை வளர்த்துவதெல்லாம் இல்லை. காரணம் நான் வேறு சிறுக்கிகளின் அழகுகளையும் ஆராய்வதில் துடியாக ஈடுபட்டிருந்தேன். அழகியல் இரசனை எனக்கு அளவுக்கதிகமாக அமைந்துவிட்டது வரமா சாபமாவென இன்றுவரை உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.
காதலிப்பது, அந்தக் காதலுக்காகப் போராடுவது... வாழ்வின் சிலிர்ப்பான அந்த அவத்தைகள் அனுபவித்தற்குரியவைதான். கல்லூரி வட்டகையில் மாதினியும் அழகுதான், சிவமலரும் அழகுதான், மானஸியும் அழகுதான். சதா மனம் கோதிக்கொண்டிருந்தன இந்தச் சிறுக்கிகளின் நினைவுகள். மாதினியின் முகவமைப்பு நீளவாகிலானது, போதாததுக்கு அவள் கண்கள், நாசி, நாடி எல்லாமே அநியாயத்துக்கு நீண்டிருக்கும். பரதம் பயின்றவள், ஒரு கொடியைப்போலத் தழையத்தழைய நடந்துவருவது மறக்கவொண்ணாது. மாதினி என் தங்கையின் வகுப்பில் இருந்தாள், நான் அங்கே அதிகம் வினைக்கெட்டால் விஷயம் நொடியில் அம்பலமாகிவிடும் என்பதால் முதலில் அவளை நெருங்கப் பயந்தேன்.

துடிப்புடன் கூடிய அழகான இளமைக்காலம், உடல் நிரம்பிய சக்தி, எதைப்பற்றியும் கவலைகள் இல்லை, ஒரு குழந்தையைப்போல எதைப் பார்த்தாலும் பரவசம், குதூகலம். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இல்லை. ஒரு காலம் பதிவுசெய்ய வேதியியல் பதிவுகள், நினைவில் மீட்டெடுக்கப் பல சேர்வைகளின் நிறங்கள் வேதிக்குணங்கள், மனனம் செய்யக் கொள்ளை கொள்ளையாகத் தாவரவியலில் பூச்சூத்திரங்கள் என நெடிய குவியல்கள் இருக்கும், அவற்றை மறந்துவிட்டு ஏதோ எனக்காகவே வானும் நிலவும் நட்ஷத்திரங்களும் வருவது போலவும், தென்றல் தவழ்வது போலவும், மழை தூறுவது போலவும், தரவை வெளிகளிலிருந்து இடையர்கள் மாடுகளை ஓட்டிச்செல்வது இசையாகவும், செல்லம் மாமி மீன் கழுவி ஊற்றும் பாடாவதிக் கோடிகூட உலகின் சௌந்தர்யமான முடுக்குகளில் ஒன்றைப் போலவும் ஒரு பிரமைக்குள் தோய்ந்திருந்தேன்.

திவ்யா என்று இன்னொரு அழகி, அவளின் அழகு வேறொரு தினுசு. லட்டு மாதிரி எந்தப்பக்கத்தாலும் கடிக்கலாம் போலிருக்கும். இவளா அவளா என்பதில் பலகாலம் எந்த முடிவுக்கும் வரமுடியாதவனாக நிச்சயமின்மையுடன் உலைந்தேன். மனம் பஞ்சாகத் திசைக்கெட்டும் முயற்குட்டிகள் அனைத்தின் மீதும் அலைந்து ஆய்வுகள் நடத்திக்கொண்டிருந்தது. எனக்கான விசேஷகுதிகள் எதுவும் கிடையாது, என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் ஊரில் உள்ள எந்தவொரு பயலைவிடவும் தகுதிகள் அனைத்தும் வாய்த்தவொரு பிரபுவைப்போலும், எவரையும் கண்டுக்காது எல்லோரையும் அலட்சியம் செய்வது போலொரு பாவனையுடனும் நடித்துக்கொண்டிருந்தேன்.

மாதினி சிநேகிதிகள் சேர்ந்துகொண்டால் நடந்தே வீட்டுக்குப் போய்விடுவாள். தனியேவாயின் பேருந்துக்காகக் காத்துநிற்பாள். அப்போதெல்லாம் அவள் கண்களில் விழவேண்டுமென்பதற்காக ஏதோ முக்கியமான பல அலுவல்களைச் சுமந்துகொண்டு ஓடியாடித் திரிபவனைப்போலக் குறுக்கும் மறுக்கும் ஒரு மிதியுந்தில் அவள் காத்திருக்கும் பேருந்து நிழற்குடையைக் குறுக்கறுப்பேன்.

அம்பலவியா, அல்போன்ஸா, கறுத்தக் கொழும்பானா, மால்கோவாவாவென்று தடுமாறியவன் கடைசியாகச் செய்ததும் ஒரு தேர்வுதான். அதையெல்லாம் இன்று அமரக்காதல் என்பது அபத்தம். அரிந்துவைத்த கறுத்தக் கொழும்பான் மாம்பழங்கள் மாதிரி என்னை ஈர்த்துக்கொண்டிருந்த மாதினியின் கண்கள் கல்லூரியில் மதியவுணவு மண்டபத்திலிருந்து திரும்பும் வேளைகளிலும், மாணவர்கள் ஒன்றியக்கூட்டங்களின் போதுமான நுண்ணிய சந்தர்ப்பங்களிலும் என்மீது படிந்து மீள்வதைப் பலமுறை அவதானித்திருந்தேன்.

இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு அலைவானேன். இன்னும் அதைநோக்கி முன்னேறவேண்டும், சிறுமுயற்சி செய்துதான் பார்த்துவிடுவோமே, ஒருநாள் வேதியியல் ஆய்வுசாலையில் தனியாக உட்கார்ந்து ஏதோ அன்றைய பரிசோதனை ஒன்றைப் பதிவு செய்துகொண்டு இருக்கையில் போய் அமுக்கினேன்.

“இனிமேலும் எனக்குத் தாங்காது மாதினி”

“என்ன தாங்காது... ஏன் என்னாச்சு.”

ஒன்றும் புரியாதவள் மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.
“நீ இல்லாமல் இனித் தாங்காது. நேரடியாய் ஒரு பதிலைச் சொல்லிடு”

“ஓ... பாஸ்கெட்போல் கோர்ட்டுக்கு சார் அநாவசியமாய் வந்து சொட்டிக்கொண்டு நிற்கும்போதே நினைச்சன்... வினை ஒன்று மெள்ள உருவாகுதென்று”

“ஒருவினையும் இல்லை. நான் நல்லாய்த்தான் இருக்கிறன்”

முன்னெப்போதை விடவும் அணுக்கத்தில் அவளது ஈச்சங்கொட்டைப் பற்களும், கண்களின் கிறக்கமும், ஈரஉதடுகளும் என்னைக் கிளர்த்தின.

“வீட்டில அறிஞ்சால் கொண்டுபோடுவினம்... போய் உங்கட அலுவலைப் பாருங்கோ” என்றாள். நிறைவான சமிக்ஞை அது. ‘அதெல்லாம் முடியாது’ என்றோ ‘சீ... போவன்றோ’ எகிறவில்லை, அந்த அளவில் திருப்தி. இப்போ முட்டுக்கட்டை ‘அவள் அம்மா அப்பாதான்’ என்றானது.

இருவருக்கும் பொதுவிதியொன்று இருந்தது, இருவருக்குமே பல்கலைக்கழக வாசல்கள் திறக்கப்படவில்லை. பல்கலைக்கழகங்களுள் நுழைவதாயின் என்ன வகையில் படித்திருக்க வேண்டும், அதற்கான பரீட்சைகளை என்ன வகையில் எதிர்கொண்டிருக்க வேண்டுமென்று இப்போது நன்கு புரிகிறது, அந்த அறிவு இனிப் பிரயோசனப்படாது. இப்போதும் கனவுகளில் ‘மருத்துவ பீடத்துள் நுழைய முடியவில்லையே’ என்கிற தவிப்பும் நிராசையும் வந்துவந்து கடைவிழிகளை ஈரமாக்குகின்றன.

இரண்டு ஆண்டுகள் கழிந்தன.

காற்றிலே மிதந்த கதைகள் என் செவியையும் வந்தடைந்தன. மாதினிக்கு சாதகங்களும் வரத் தொடங்கியிருக்காம். விஷயத்தை ஆக ஆறப்போட்டால் கனிகை மாறிவிடும், உஷாரானேன்.

நெவிஞ்சர் செல்லத்துரையர் இப்போ கல்யாணத் தரகு வேலைகளும் பார்க்கிறாரென்று இடைச்சத்தம். நேராய்ப்போய் ஆளிடம் சரணடைந்தேன்.

“ஏது லவ்வுகிவ்வென்று நீங்களும் உங்கள் பாட்டுக்குத் தொடங்கிவிட்டியளோ தம்பி... ”

“சாய்ச்சாய் அப்படியொன்றுமில்லை.”

“அப்ப பெடிச்சிக்கும் இதில சம்மதந்தானென்று அறிஞ்சிட்டீரோ... ஓமெண்டால் எப்பிடி அறிஞ்சீர்”

அனுபவஸ்தர் என் கண்களுக்குள் துழாவினார்.

“ஒன்றாய்ப் படிச்சனாங்கள்... அவவை எனக்குத் தெரியும்... ஓரளவுக்கு அவ மனதை அப்பிடி அறிஞ்சிருக்க மாட்டனே.... என்னண்ணை சொல்றியள்.”

“பிறகு என்மேல பழியொன்றும் வந்திடப்படாது... கண்டீரோ”

நெவிஞ்சர் இரண்டு பக்கமும் புகுந்து விளையாடவும் விஷயத்தைச் சூழ்ந்து பிடித்துக்கொண்ட அப்பா நேரடியாகக் கேட்கிறார்: “பெடியா... இஞ்சை வா நீயும் அந்தப் பெட்டைக்கு முதல்லயே நூல்விட்டுப் பார்த்தனியோ...”

“இல்லை, அப்பா ஏன் அப்படிச் சொல்றியள்.....”

“இல்லை ஒரு ஊகந்தான்... அவை தாங்கள் உடையார் கோத்திரமென்று கொஞ்சம் கெப்பரான ஆட்கள்... தாங்களாய் எங்க பக்கம் சாயவோ, லேசில எங்க வீடுகள்ல கை நனைக்கவோ மாட்டினம். அதுதான் யோசிச்சன்.”
‘பெடியன் வேலைவெட்டி ஒன்றுமில்லாமல் இருக்கிறான்’ என்று முனகல் அங்கிருந்து கிளம்பவும் யாழ் மக்கள் வங்கியில் உதவிக் காசாளரானேன். முயன்றால் கிராம சேவகராவதற்கான வாய்ப்பொன்றும் வந்தது; பட்டதாரியாக இருந்தாலன்றி அதிலிருந்து மேலே வரமுடியாது. ஆயுள் முழுவதும் உழைத்தும் கிராம சேவகராகத்தான் ஓய்வுபெற வேண்டியிருக்கும். வங்கியைத் தேர்வு செய்தேன். என் மாமன் நிதிமந்திரிக்கு இருபத்தையாயிரம் தள்ளித்தான் அந்த நியமனம் கிடைத்ததென்று ஊரில் பேசிக்கொண்டார்கள். ஒருவாறு திருமணம் ஒன்றுகூடியது.

விசையுந்தொன்றை வாங்கி யாழ்ப்பாணத்துக்கு வேலைக்குப்போய் வந்துகொண்டிருந்தேன். அடுத்து இரண்டு குழந்தைகள் பிறக்கவும் காசாளர் சம்பளத்தில் வாழ்க்கை வண்டியைத் தள்ளுவது சிரமமாயிருக்கவும் 1983 இனக்கலவரத்தை அடுத்துக்கிளம்பிய வெள்ளத்துடன் வெள்ளமாக ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்தோம்.

முப்பது ஆண்டுகள் கடுகிக் கடந்துவிட்டன. அடுத்தடுத்து மூன்று பிள்ளைகள் பிறந்தன. மகனுக்குக் கனடிய அரசாங்கம் வழங்கிய புலமைப்பரிசிலால் அங்கே சென்றவன் அங்கேயே வசதியான ஒரு குஜராத்தி வணிகக் குடும்பத்துக்கு மருமகனாகிவிட்டான். நடுவில் மகள் ஐக்கிய ராச்சியத்தில் கணவனுடன் சேர்ந்து கண்ணாடிகள் அணிந்துகொண்டு முடிவில்லாத கல்வியிலும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறாள். என்று அவை தீருமோ, அவர்களுக்கு சமீபத்தில் பிள்ளை குட்டிகள் பெற்றுக்கொள்ளும் உத்தேசங்களும் இல்லை.

கடைக்குட்டி மகளுக்குப் பன்னாட்டு அரசுசாரா நிறுவனம் ஒன்றில் பணி, அவள் முழுக்கவனமும் மனித உரிமைகள், மாதர் உரிமைகள், ஏதிலியர் பிரச்சினைகள், மூன்றாம் உலகத்தின் குடிதண்ணீர்த் தட்டுப்பாடு, தானியங்கள் ரொட்டி / பாணுக்கான பஞ்சம், மருத்துவ வசதியின்மை அன்ன பிரச்சினைகளில்தான் குவிந்திருக்கின்றது. தன் சொந்த வாழ்க்கை, திருமணம் என்பவற்றில் கொஞ்சமும் கவனமோ அக்கறையோ இல்லை. அவை மனிஷருக்கு வேண்டாத சங்கதிகள் என்றிருக்கிறாள். அந்தப் பேச்செடுத்தாலே எம்சுவாதீனத்தைச் சந்தேகித்தும் வேற்றுக்கிரக
சஞ்சாரிகளைப்போலவும் எம்மைக் கீழ்க்கண்ணால் பார்க்கிறாள். ‘எந்தப் பசுதான் கன்றுகளுக்குப் புல்லைச் செருக்கி வைத்திட்டுச் சாகுது’ என்று மனதை ஆற்றிக்கொள்கிறோம்.

சராசரி மனிதனைவிடவும் நெடிய சீரானதொரு வாழ்க்கையை வாழ்ந்தாயிற்று. முதுமையின் நிலைப்படியை அண்மித்தானதும் எதுவெதுக்காக வெல்லாம் ஓடினோம் உழன்றோம் என்பதை நினைக்க சிரிப்பாக வருகின்றது. நான் சம்பாதித்துக்கொண்ட இந்த வீடு, மாதினி, எம் குழந்தைகள் இவையெல்லாம் இலாபமா நஷ்டமா சாதனையா என்னவென்று புரியவில்லை. ஒருவேளை பல்கலைக்கழகக் கல்வியோ அல்லது துறைபோந்த உயர்கல்வியோ ஏதாவது கிடைத்திருந்தால் பிரபஞ்ச சூத்திரத்தை இன்னும் மாறுபட்ட பரிமாணங்களில் நோக்கிப் புரிந்துகொண்டிருப்பேனோ என்னவோ.

வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டும் பற்றிக்கொண்டும் வாழ்ந்தோமா, பதவீசாக வாழ்கிறோமென்பதைப் பகட்டுக்காட்டி மற்றவர்களைத் திரும்பிப்பார்க்க வைத்து வாழ்ந்தோமா தெரியவில்லை. வாழ்வியக்கத்தின் வேகத்தோடு ஓடுகையில் கழன்றுவிழும் லாடங்களை நின்று நிதானமாகப் பொருத்திக்கொள்ளக் காலம் என்னை அனுமதிக்கவில்லை. வாழப்போகும் ஒவ்வொருநாளையும் முன் ஜாக்கிரதையாகத் திட்டமிட்டு வாழ மனிதனுக்கு முடிவதில்லை. அதேபோல் சாவகாசமாகப் பத்துவருஷங்கள் முன்னோக்கிப் பார்வையை எறிந்து அப்போ என்னவாகப் போவோம் என்பதையும் மனிதன் சிந்திப்பதில்லை.

பிரக்ஞையும் விழிப்புமுளபோதெல்லாம் மீட்டெடுத்தலின் நினைவு முகில்கள் மன வானில் அனைத்துத் திசைகளிலும் அலைகின்றன, நினைவுள்ளபோதெல்லாம் காமமுண்டு. காமமுளபோதெல்லாம் காதல்கள், காரிகையர் நினைப்பில்லாத நாள் ஒன்றில்லை. அழகா இளசா எவள் எதிர்ப்படினும் மனசு இன்னும் ‘ஜிவ்’வென்று குதித்தே ஓய்கிறது.
எதிரில் றிம்லெஸ் கண்ணாடி அணிந்த நாரியர் வந்தால் உடனே என்றோ கல்லூரி நாட்களில் லேனார்ட் ராஜேந்திரன் சொன்ன ‘றிம்லெஸ் கண்ணாடி அணிந்தவர்கள் எப்போதும் வளப்பமாய்த்தான் இருப்பார்கள்’ என்கிற பிரவசனம் நினைவில் பாய்ந்தோடி வருகிறது. அறிவு தாமதித்து வந்து ‘எட முட்டாள்ப் பயலே உனக்கிதிப்போ ரொம்பத் தேவைதானா’ என்கிறது.
பழைய நினைவு முகில்கள் சற்று விலகுகையில் இந்திரியங்களின் ஓய்தல் பற்றி, சாதல் பற்றி மனது அனுபவிக்க விழைகிறது. வாழ்வை நிஜமாக வீணடித் தோமா, பயன் செய்தோமா அல்லது எல்லாம் பிரமையேதானா இப்படி. காமம் இரத்தத்துக்கும் சதைக்குமுரிய இயல்பென்று ஜென், பௌத்த துறவிகள் சொல்லியிருக்கிறார்கள். காமம் கலந்தான நினைவுகள் இன்னும் துளிர்ப்பதால் இரத்தமும் சதையும் இன்னும் கெட்டிப்படவில்லையோ.
காமம் மரணத்தின் அடையாளமென்றும் ஒருத்தன் சொல்லியிருக்கிறான். பருவம்கண்ட விடலையோ செடியோ தன்னினத்தைப் பெருக்க முயல்வது உயிரியல் நியமம். காமம் மண்ணில் இனங்கள் அழியாதிருக்க இயற்கை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் சூக்ஷுமமான பொறிமுறை. மனிதன்தான் பின்னால் அதைக் காதல் கத்தரிக்காய் வசந்தம் வாழைக்காயென்று வியாக்கியானித்து மெருகுபடுத்தப் பார்க்கிறான்.

பழைய சில நினைவுகள் வந்து தொடர்பற்று அறுந்தன, காமம் பூசிய கவிதை வரிகளெனில் அநேகமாக அவை இன்னும் ஞாபகத்தில் அழியாதிருக்கின்றன.

‘முன்னர் முலையிருக்கும் காம்பிருக்காது
பின்னர் காம்பிருக்கும் முலையிருக்காது’

யாரது விக்ரமாதித்தனா, இப்போதும் சிரிக்கவேணும் போலிருக்கிறது. முயற்சித்தபோது வாய் இன்னொருதரமும் கோணுகிறது. கொடுமையாய்த்தான் இருக்கும், ஒண்ணும் பண்ணமுடியாது.
எமது வீட்டோடுசேர்த்து யாழ்ப்பாணத்தில் ஒன்பது பத்துப்பரப்புக் காணி இன்னும் மிச்சம் இருக்கிறது. சகோதரி அகல்யா, குடும்பத்தில் யாருக்கும் விருப்பமில்லாத ஒரு இடத்தில் திருமணம் செய்து கொண்டாள். அதனால் அப்பா அவளுக்குக் காணிகள் எதுவும் எழுதி வைக்கவில்லை. யாழ்ப்பாணத் தேசவழமைச் சட்டத்தின்படி பெண் பிள்ளைகளுக்குச் சீதனமாக அளிக்கப்பட்டவை போக மீதியுள்ள அசையும் அசையாச் சொத்துகள் எல்லாம் ஆண்பிள்ளைகளையே சேரும். லண்டனில் இருந்து வந்திருக்கிற அகல்யா தன்னைப் பார்க்க ஆசையாக வந்திருக்கிறாள் என்ற நினைப்பில் அவர் படுத்திருக்கிறார். அவளோ அந்த வீட்டையும் நிலத்தையும் தனக்கு எழுதி வாங்கிவிடும் உபாயத்தோடு விருப்பாவணம் (உயில்) ஒன்றைத் தயாரித்துக் கொண்டுவந்து எப்போ அண்ணா கண் திறப்பார், கையெழுத்தை வாங்கிவிடலாம் என்று வளைய வந்து கொண்டிருக்கிறாள். தனக்கேதோ ‘மரணமிலாப் பெருவாழ்வு’ வாய்த்திருப்பதாக நினைக்கிறாளோ ஒருவேளை.
அந்தச் சிறுவன் யாருடைய பிள்ளையோ தத்துவார்த்தமாகப் போட்ட மறக்க முடியாத விடுகதை ஞாபகத்துக்கு வருகிறது: “ஒரு பொருள் இருக்கு தாத்தா, அதை நீங்க யாருக்கும் பரிசளித்தாலும் வாங்கமாட்டாங்க, பதிலுக்கு உங்களைத் திட்டித் தீர்ப்பாங்க. கடைக்காரர் சிறப்புத் தள்ளுபடி விலையில் போட்டாலும் கஸ்டமர்கள் எவரும் ஒன்றுக்கு மூன்றாக வாங்கி வைத்துக்கொள்ள மாட்டாங்க. அது இருக்கும் கடையையே திறந்து போட்டாலும் எதுவும் திருட்டுப் போகாது. எல்லாமும் அப்படியே இருக்கும். அது என்ன தாத்தா?” புரிந்தது.

சரி, எனக்கும் 6 அடிநீளமான அந்தப் பொருளுக்குள் முகத்தை வலிக்காமல் சுழிக்காமல் ஒரு சாதுவைப்போல விகசித்துப் படுத்திருக்கத்தான் விருப்பம், நான் கோணிக்கொண்டு படுத்திருந்தவர்களை மீண்டும் பார்க்காமல் தவிர்த்திருக்கிறேன். மரணத்தைப் பற்றி மனிதன் ஒருவன் மட்டுந்தான் சிந்திக்கிறான். சுனாமியில் அள்ளுப்படவிருக்கும் விலங்குகளுக்கும் மற்றப் பிராணிகளுக்கும் அப்படியொரு விஷயம் இருப்பதே தெரிவதில்லை. இப்படி முனைந்து முனைந்து சிந்தனைகளை முன்னோக்கிச் செலுத்திக் குவிப்பதில் சமகால உபாதைகளிலிருந்து அமய விடுதலை கிடைக்கிறது. பின் மீளவும் ஒருவிசையிலிருந்து விடுபடுதல்போலும் நிகழ்வுக்கே திரும்புகிறது மனம்.
கனடாவிலிருந்து வந்த என் புத்திரனுக்கு அவனது பணியில் நிறைய பொறுப்புகள் குவிந்துள்ளனவாம், ஆதலால் முன்னைக்கு மாதிரி இப்போ விடுப்பு எடுப்பதில் கஸ்டமாம். ‘அப்பா சாகவில்லை’ என்ற ஏமாற்றத்தோடு மறுவிமானம் ஏறிவிட்டான். அப்பாவின் சிரம அவத்தையில் அவர் அருகில் இருப்பதைவிடவும் தன் குழுமத்தின் ஆதாயத்துக்காக உழைக்கவேண்டியது அவனுக்கு அவசியமாகிறது. எவ்வளவுக்குத்தான் கெடுபிடி கள் நிறைந்த குழுமமாயினும் உயர்நிலை அலுவலர் ஒருவரின் தேவையைக் கருத்தில்கொண்டு அவருக்கு விடுப்பு வழங்கத் தயங்காது. எவ்வளவு முயன்றும் அவன்மேல் எனக்குக் கோபம் வரவேயில்லை, எனில் ஆரம்பமுதலே அவனுக்கு எவ்விடயத்திலும் திடமான அபிப்பிராயமோ, முடிவெடுக்கும் திறனோ கிடையாது.

மனித உரிமைகளோடும், பசுமைப் புரட்சியோடும் மாயும் மகளின் குரல் அப்பப்ப அணுக்கத்தில கேட்கிற மாதிரியும் தூரத்தில் கேட்கிற மாதிரியும் இருக்கு, அதுவும் பிரமையோ என்னவோ. தான்சானியா போவதும் எர்னஸ்ட் ஹெமிங்வே சித்திரித்த பனிபடிந்த கிளிமஞ்சரோ மலை முகடுகளில் ஏறுவதும், அதன் முடியில் சமதரையில் நெடுந்தூரம் நடப்பதுவுமான விருப்பங்கள் இன்னும் விருப்பங்களாகவே இருக்கின்றன. ஹெமிங்வே கண்ட அந்த மரங்களுடன் நான் இனிப் பேசவோ புன்னகைக்கவோ முடியாதில்லையல்லவா. நான் என்ன விண்வெளியில் பறக்கவா ஆசைப்பட்டேன்? புறப்படாமல் இருக்கிறேன். ஆனாலும் பயணம் எவ்வேளையிலும் ஆரம்பித்துவிடுவதான அவத்தைதான் இது. சுற்றம், அயலவர், தெரிந்தவர் என நிறையப் பேர் வந்திருக்கிறார்கள் இதை மின்சார தகனக் காட்டிடை சுட்டு நீரினில் மூழ்கித் தாம் வாழப் புறப்படப்போகும் நாளும் எதிர்நோக்கி. ஊர்வலம் மயானம் கிரியைகள் தகனம் எதுவும் வேண்டாமென்றுதான் உடலை மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தலாமென்று எழுதிக் கொடுத்திருக்கிறேன். இவர்கள்போய் அவரவர் கனவுகளைப் போர்த்திப் படுக்கட்டுமே, எதற்கு இவனுடன் சும்மா வினைக்கெடுகிறார்கள். சம்பிரதாயத்துக்காக வந்திருப்பவர்கள், வேடிக்கைக்காக வந்திருப்பவர்கள், பொழுதுபோக்க வந்திருப்பவர்கள், வந்திருந்தவர்களில் பெண்களுக்கு எப்போதும் வேறு விஷயங்களுண்டு அலச, ஆண்கள் தத்தமக்குத் தெரிந்த அரசியலைத் தமக்கு வாய்ப்பான கோணங்களில் எடுத்து வைத்து அலசிக்கொண்டிருக்கிறார்கள்.

“மாதனி ஈழம் ஒன்றும் சாத்தியமே இல்லை என்றது எனக்கு அப்பைக்கே தெரியும்... வெளியில சொன்னால் அடிப்பாங்களெண்டு மூடிக்கொண்டிருந்தனான்.” என்கிறார் ஒருவர்.

“ராஜீவ் வாங்கித் தந்ததைப் பிடிச்சுவைச்சுக்கொண்டு அதிலயிருந்து மீதி விஷயங்களுக்காகப் போராடியிருக்க வேணும்.”

“ஆயுதங்களைப் போடவேணுமென்று சொல்லிப் போட்டாங்கள், அவங்களின் தீர்ப்பை ஒத்துக்கொண்டால் ஆயுதங்களை முழுக்க ஒப்படைத்திருக்கவேணும். பிறகு யாற்றை அணியத்தைப் பிடிச்சுப் போராடுறது.”

“இயலாமல் கிழக்கை முழுக்கக் கைவிட்டம், பிறகு நாச்சிக்குடாவைத் தாக்குப் பிடிக்கேலாமல் போனதோடையாவது தலைவருக்கு எங்களுடைய பலமும் பலவீனமும் தெரிந்திருக்க வேணும். அப்போவாவது ஆயுதங்களைப் போட்டிருந்தால் இத்தனை உயிரழிவு ஏற்பட்டிருக்காது.”

“இத்தனை இழப்புகளைத் தாங்கிக் களத்தில நின்று பிடிச்சவன் லேசில அப்பிடிப்ப பணிவானோவுங்காணும்.”

“மாவிலாறை மறிச்சதிலிருந்து இவன் வம்புச் சண்டையை வலிக்கிறான், சமாதானத்துக்குத் தயாரில்லை என்கிற சமிக்ஞையைத்தான் தருகிறான் என்று அரசு சொன்னதே... கேட்டானா.”

“பாலே சிந்திப்போச்சாம்... இனி அது இருந்த பாத்திரத்தின் பவிசைப் பறைஞ்சென்ன வந்ததோய்.”

எதுவும் ஒருநாள் வேண்டாமென்றாகும் என்பதை தயாநிதி முன்னரே தெரிந்து வைத்திருந்தார். அந்தப் பிணத்தைவைத்து தன் வண்டியில் ஓயாது காடுமேடெல்லாம் இழுத்துக்கொண்டு திரிவானே அந்த மனப்பிறழ்வுற்ற மனிதன். கழன்றுவிடுவனவற்றை எல்லாம் வீணே நாம் சுமந்து திரிகிறோம் என்பதுதானே அதன் உருவகம்.

தலையில் முதலாவது நரைமுடியைக் கண்டபோது திகைத்தேன், ஆனால் முதலாவது பல் தானாக விடைபெற்றபோது திகைப்பேதும் ஏற்படவில்லை. வயதோடு சிறுபக்குவம் வந்துவிடுகிறதோ. மனதிலிருந்தும் விடுதலை விரும்பும் மனம் பிறிதொரு கணம் மனதோடும் அறம்சேர்ந்த வாழ்வோடும் துய்த்திருக்க விரும்புகிறது.

படுக்கையில் இருக்கும்போது நேரம் வேகமாக நகர்வதுபோலத் தெரியுது. மீண்டும் ஒருமாதம் ஒருவாரம் ஒருநாளென முடிவடைகிறது. மரணத்துக்கு இன்னும் அணுக்கமாகின்றோம். விடாது துரத்துகிறது மரணம். ஒரு ரமணரைப்போல மரணத்தை எதிர்கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் வாய்த்துவிடுமா. நான் எதுக்குத்தான் மரணத்துக்கு பயந்து ஒளிக்க வேண்டும். இங்கே இப்போது இந்தக் கணங்கள் என்ன ரசித்துச் சுகிப்பதுக்குரியனவா. எதுக்குத்தான் இந்த உயிர் இன்னமும் துடித்துக் கொண்டிருக்கிறதோ. நானும் ரமணரைப்போல மரணத்தைத் தைரியத்துடன்தான் எதிர்கொண்டிருக்கிறேன், ஒருகால் கோமாவுக்குப் போவேனென்றால் உடனே அனைத்து விநியோகங்களையும் துண்டித்துவிட வேண்டுமென்று படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறேன். அப்போ நான் இன்னும் கோமா வுக்குப் போகவில்லையா.

அஸ்தமனமும் பூத்திருக்கும்
அந்திவானத் தாரகைகளும்
என்னை அழைக்கின்றன
திரும்பி வராத கடல் பயணத்துக்கு நான் ஆயத்தமாகிறேன்
கடற்கரையில் அலைகள் ஓசை எழுப்பாதிருக்க
அமைதியில் நான் கடந்து போவேன்- Alfred Lord Tennyson

“ஒவ்வொருநாளும் போய் - வாறதும் உங்களுக்கு அலைச்சல்தான்... அவங்கள் சொன்னாலும் நீங்கள் கதைச்சு அவரை ஆஸ்பத்தரியிலேயே வைச்சிருந்திருக்கலாம்.” கருத்துக் கந்தசாமி யாரோ கருத்து அவிழ்க்கிறார்.
ஊரில் எங்கே மேளம் கேட்டாலும் ஆர் பேர் ஊரென்று விசாரிக்க முதலே ஒப்பாரி சொல்லத் தொடங்கிவிடும் பொன்னாத்தைப் பாட்டி நினைவுக்கு வருகிறார். அவரை அப்படி அழவைப்பதுதான் என்ன? செத்ததும் இரண்டு நாளைக்குக் குளறிவிட்டு மூன்றாம் நாள் எதுவும் நடக்காத மாதிரி இருக்கத்தான் போகினம். சாப்பிடுவதை, குடிப்பதை, காதல் செய்வதை, முயங்குவதை எதைத்தான் நிறுத்தப் போகினம்.
இனி இந்த உலகத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை எனும்போது அல்லது சேதன இந்திரியங்களினாலான இந்த உடம்பினால் எதுவுமே ஆகாது என்பதை உணரும்போது விடைபெற விரும்புவதே இயல்பு. ஆக புறப்படுவதையிட்டு வருத்தமில்லை. என்ன உயிர் தீயால் உத்தரியாது நீரால் திணறாது, பிராணாவஸ்த்தைகளின்றி ஒரு தூக்கத்தைப்போலும் ஆழ்ந்துவிடவேணும்.




“ஏதும் சொத்துகள் சுவடுகள் கையெழுத்து வைக்க கிடக்கோ”வென்று சிலர் விசாரிக்கினம். அகல்யா என்னை இன்னும் நெருங்கி வந்து நிற்கிறாள்.
பத்து வருஷங்களின் முன் 12000 யூரோக்களைக் கைமாற்றாக வாங்கி இன்னும் திருப்பாத ரகோத்தமன்கூட ஏதோ அவன் பெண்சாதி சாகப்போவதைப்போல முகத்தைக் கடுஞ்சோகமாக வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.

பெட்டிக்குள் முறுவலித்துக்கொண்டு ஆனந்த சயனம் கொள்ளும் கோலம் நினைவுக்கு வருகிறது.

இலங்கையில் 30 வருஷங்கள் ஆட்சியில் இல்லாத வெளிநாட்டில இருக்கிற சனங்களின் காணிகளை அரசு கையகப்படுத்தக்கூடிய அபாயம் இருக்கின்றது என்கிற புரளி எழுந்தபோது சட்டென ஒன்றையும் யோசிக்காமல் என் ஒன்றிவிட்ட சகோதரர் ஒருவரின் பிள்ளையின் பேரில் எழுதிவைத்துவிட்டு வந்துதான் மாதினிக்கே தெரியப்படுத்தினேன். முதலில் எகிறி எழுந்தாள், பின் அடங்கினாள். உண்மைதான்; அவனுடைய பெயரில் அது அங்கே இருப்பதுதான் நல்லது.

“என்ன பேய் வேலையப்பா பார்த்திட்டு வந்திருக்கிறியள், பிறகு அவன் திருப்பித் தருவானென்று என்ன நிச்சயம்.”

“அவனும் எமக்கொரு பிள்ளைதானேயப்பா, இயன்றவரையில் அனுபவிக்கட்டன்.”

அவள் வெறுப்புப் பார்வை ‘எனக்கு மரை கழன்று போச்சு’ என்பதை வார்த்தைகள் இன்றிச் சொன்னது.

நினைவுகள் அனுராதபுரத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற காலத்துக்குப் போகின்றன. அனுராதபுரம் ‘பொல’வில் (சந்தை) கவிழ்த்துப் போட்ட ஒரு ஓலைப்பெட்டியில் மூன்று எலுமிச்சங்காய்களையும், ஒரு பிடி கறிவேப்பிலையையும் மட்டும் வைத்துக்கொண்டு அதை விற்பதற்காகக் காத்திருந்த கிழவியைப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது. கிழவியின் அத்தனை சரக்கையும் வாங்கி அவருக்கு உதவவேணும் போலிருக்கிறது இவனுக்கு. அண்ணியாரின் இழுப்புக்குச் சும்மா தேங்காய்க்கூடை தூக்கப் போனவனிடம் 50 சதம் எடுக்கக்கூடிய வசதியே இல்லை. அவருக்கு உதவ முடியவில்லையே என்கிற ஏக்கம் பல காலம் தொடர்ந்தது. முகத்தில் அத்தனை சுருக்கங்களோடும் களைப்போடும் இரக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருந்த அந்த முகம் மீண்டும் மீண்டும் வருகிறது இப்போது. வாடகை வீட்டுக்கு மின் சுற்றுகளை அமைக்க வந்த சிங்கள இளைஞன் ‘கூரைக்குள்ளே குருவி கூடு கட்டிக்கொண்டிருக்குது கூட்டை எடுத்தால்தான் மின் வயரை முகட்டுக்குள்ளால் இழுக்கலாம். அது என்னால் இயலாது, வேணுமென்றால் குருவிகள் அந்தக் கூட்டை விட்டுப்போன பின்னால சொல்லியனுப்புங்கோ வந்து செய்து தருகிறேன்’ என்று விட்டுப் போகிறான்.

மாதினி மாய்ந்து மாய்ந்து மீண்டும் வீட்டைத் துப்புரவு பண்ணுகிறாள். யார் யாரோவெல்லாம் வருகிறார்கள் போகிறார்கள், நேரம் இருப்பவர்கள் நிதானமாய் அமர்ந்து காப்பியைக் குடித்துக்கொண்டு வந்திருக்கும் மற்றையவர்களுடன் அரட்டையடிக்கிறார்கள். தும்மலைப்போல எப்போ வரும் போகுமென்று சொல்லமுடியாத அண்டை வீட்டு அரசண்ணை செமையாய்க் கீறிக்கொண்டு வந்து இவ்வளவும் மென்னிருக்கைக்குள் புதைந்து மொய்த்துக் கொண்டிருந்து விட்டு ‘அடைமழையாய்க் கிடக்கு கொஞ்சம் தணிஞ்சாப்போல போறன் என்கிறார். மழை அவருக்கு மட்டுந்தான் பெய்யுதோ, எல்லோருக்கும் சேர்த்துப் பெய்யுதோ தெரியவில்லை.
சிவமலர் என்றொரு வகுப்புத்தோழி, அக்கால நடிகை சுபாவின் சாயலில் இருப்பாள், அதனால் பையன்கள் நமக்குள் ‘சுபா’ என்கிற சங்கேதத்தாலேயே அவளைச் சுட்டுவோம். பாவம் இப்போ சிவமலரின் குழந்தைகளில் ஒன்றுக்கு இளம்பிள்ளை வாதமாம், அது விந்திவிந்தி நடப்பதை ஆயுளுக்கும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய வாதனை அவளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டாம். நான் சிவமலரைக் கட்டியிருந்தால் ஒருவேளை அந்தக் குழந்தை பிறக்காமல் போயிருக்கும். இப்படியாகவும் நினைவுகள் மீண்டும் உந்தின, பெண்ணே இல்லாமல் ஒரு சினிமா எடுத்துப் பாருங்கள் எவன் உட்கார்ந்து பார்ப்பான். அவள் அசைவதும் நலுங்குவதும் நளினந்தான்; அடிமுதல் முடிவரை சுகந்தரும் அதிசயத்தைக் கண்டுள்ளே அதிராத மனமும் உண்டோ. எல்லோருக்கும் பெண்தான் கண்களில் ஒற்றிக்கொள்ளத் தேவையாக இருக்கிறாள். அவளைச் ‘சீ’ என்பதுவும் தூவென்பதுவும் நடிப்பின் வகையன்றி வேறென்ன.

மனித இயக்கத்தின் எத்தனங்களெல்லாம் பொருள் சேர்ப்பது, சுகபோகங்களைத் தேடுவது பெண்களைநாடி ஓடுவது மட்டுந்தானே, அவற்றுக்கப்பால் என்னதான் உள்ளது.

மாதினியின் குடும்பத்துக்கு இருந்த செல்வாக்குக்கும் ஆதனங்களுக்கும் அவளுக்கு என்னைவிட உசத்தியான மாப்பிள்ளைகள் கிடைத்திருக்க வாய்ப்புகள் இருந்தன. நான் தனக்கேதோ வாழ்வளித்துவிட்ட நினைப்பிலிருப்பதாக மாதினி எண்ணுகிறாளோ. ஆனால் விரும்பிய ஒருவரையே கைபிடித்து வாழ ஆரம்பிப்பதுவும் ஒருவகையில் துணிச்சல்தான். எவரது விரலையும் பிடிக்காமல் தன் இஷ்டத்துக்கு ஓடும் குழந்தைகள் தடுக்கி விழுந்தாலும் அழுவதில்லை. ஒரு சினிமா பிடிக்கவில்லையென்றால் பாதியில் எழுந்துபோய்விடலாம். இது கொஞ்சம் கஷ்டமான விடயம். மணவாழ்வில் பிரிவென்பதும் முறிவென்பதும் அபத்தம். ஆனால் பெண்களில் வைக்கும் நேசம் என்பதுவும் பொய்தான், அதுக்கு தேர்வு இருக்கு. மறுக்கமுடியுமா. அல்லவெனில் அது ஏன் எல்லோரிடமும் சம அளவில் பிறப்பதில்லை. நோக்கத்துடனான நேசமே காதல். அதை அவளும் புத்திபூர்வமாக உணர்ந்துகொண்டு என்னை நிராகரித்திருந்தால்கூட கொஞ்சக்காலம் சோர்ந்திருந்துவிட்டு மனம் அடுத்துவிரும்பும் 

இன்னொருத்தியுடன் என் தாம்பத்யப் பயணம் தொடர்ந்திருக்கும். எதையும் நினைத்தபடி செயற்படுத்த முடிவதில்லை. இந்திரியங்களில் ஸ்மரணை வற்றுகிறது. அவையும் மெல்ல உறையத் தொடங்குகின்றனவோ... பிராணன் உறையும் வரையில் நினைவுகள் இப்படித்தான் அலையுமோ... அலையட்டும். எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை.

“பழைய கூத்திக்கு அப்பப்ப மணியோடர் அனுப்பினதும் போதாதெண்டு சொத்தில ஒரு பகுதியை தானம் கொடுத்த தர்மப்பிரபு, இன்னொரு பகுதியை அசுக்கிடாமல் உறவுகொண்டாடினவைக்கு வார்த்துவிட்டவர், மிச்சமிருக்கிறதை உருவிப்போக நோட்டும் கையுமாய் நிக்கிறா ஒரு உடன்பிறப்பு.”

மாதினி அதை யாருக்குச் சொல்கிறாள் என்று தெரியவில்லை.
கூத்தி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் எனக்கு உவப்பாயிராது, என்னை நோகடிக்கும் என்பது மாதினிக்குத் தெரியும்.

சாதுரியமாக எப்படியாவது காணியையும் வீட்டையும் எழுதுவித்துவிட வேண்டுமென்ற முனைப்பில் கையில் (உயில்) விருப்பாவணத்துடன் நிற்கும் அகல்யாவைக் கொட்டுவதற்காய் நீ எய்யும் வார்த்தைகள்தான் என்மேலும் சிந்தியதா? என் காரியம் யாவினுக்கும் கைகொடுத்தவளே, ஒரு முத்தத்தைக்கூட உன்னிடம் நான் வலிந்து பெற்றதில்லையே. இதுதானா என்மீதான உன் புரிதல். ஆரணி என்னைக் காலத்தில் அலைக்கழித்த சிறுக்கிகளில் ஒருத்தி என்பது நிஜம். ‘பணக்காரிகளின் படாடோபங்களுடன் போட்டி போடுறவள் நானில்லைப்பா’ என்பதைப்போல எளிமையாக அவள் இருந்தாலும் மினுமினுப்பான சதைப்பிடிப்புடன் சும்மா ‘கும்’மென்று இருப்பாள். என்னைக் கடக்க நேரும்போதெல்லாம் மேற்கண்ணால் அளப்பதுபோலொரு தினுசான பார்வையுடன்தான் மேற்செல்வாள். மாதினியின் சௌந்தர்யம் வேறுவகை. மாதினி பிறந்தேயிராவிட்டால் நான் ஆரணியை நெருங்கியிருப்பேனோ என்னவோ, ஆரணிக்கு என்னிடம் எதிர்வினைகள் எதுவுமிருக்கவில்லை.

ஆரணியின் அயல்வீட்டுக்காரனும் உறவினனுமான ஒருத்தன் ஜெர்மனிக்கு வந்து எங்கள் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தபோது ஆரணிக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றான், வியப்பாக இருந்தது.

வெகு இயல்பாக இரண்டொரு வியூகார்ட்களையும் எங்கள் குழந்தைகளின் படங்களையும் வைத்து அவளுக்கொரு இலிகிதம் வரைந்தேன். அவளும் அதைப் படித்துவிட்டு இயல்பாகவே பதில் எழுதியிருந்தாள். கடைசி வரியாகவும் பின்குறிப்புப் போலவும் அவள் எழுதியிருந்த வரிகள் என்னை உலுப்பிப் போட்டன: ‘மகர நக்ஷத்திரத்துக்கு பொருந்துகிற மாதிரி, பிக்கல் பிடுங்கல் இல்லாத 32 வயதுக்கு மேற்பட்ட ஆட்கள் யாரும் ஜெர்மனியில் இருந்தால் அப்பாவுக்கு விபரம் எழுதுங்கள், நன்றி.
அன்புடன் ஆரணி.’

அவளது, சற்றே வசதி குறைவான குடும்பம். ஒரு வகைக்கு இரக்கம் காருண்யம் என்று பார்த்தால் நான் ஆரணியையே மணந்திருக்க வேண்டும். என்னை அலைத்து உலைப்பதில் இவர்கள் எல்லோரைவிடவும் மாதினி முன்னணியில் நின்றாளே... நான் அதுக்கு என்ன செய்யலாம்.

“உங்கடை சாதகந்தான் தோஷமில்லாதது அசலாய்ப் பொருந்தும் அனுப்புங்கோ... அய்யாவுக்கும் ஏதோ இருதாரயோகம் பேசுதாக்கும். ”

“பாவம்டி... கிண்டல் பண்ணாதை.”

“அப்போ அவளையும் கூப்பிட்டு சைட் பிட்டா வைச்சிருக்கிறது.”

ஆரணிபற்றி மாதினி பிறகெதுவும் பேசியதே இல்லை.

அடுத்த வருடத்தில் தண்ணீரூற்றில் விவசாயி ஒருவருடன் அவளுக்குத் திருமணமாகியது. கல்யாணச்செலவுக்கு ஆயிரம் மார்க்குகள் அனுப்பிவைத்தேன்.

முப்பது ஆண்டுகள் கழித்து ஊருக்குப்போனபோது ஷெல்வீச்சொன்றில் அவனையும் பறிகொடுத்துவிட்டு நின்றாள். அரசுகொடுத்த குறைந்தபட்ச கட்டுமானப் பொருட்களில் தகரக் கூரைபோட்டு ஒரு கொட்டிலைக்கட்டிக் கொண்டு, ஊர்ப்பிள்ளைகளுக்கு டியூஷன் நடத்தி வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருந்தாள். அதற்கு அணித்தாக இருந்த எமது காணியில் சீமெந்தினால் 2 வகுப்பறைகளைக் கட்டி, அந்நிலத்தையும் அவர்களுக்கே நிந்தமாக எழுதிக்கொடுத்துவிட்டு வந்தேன்.

நான் மனதறிந்து மாதினியை எதற்காகவும் அலட்சியம் செய்ததில்லை. இன்னும் ஒருவேளை அவள் சுற்றத்தை எதிர்த்து அவளைக் கவர்ந்து வந்திருந்தால் ‘என்னிடம் அடைக்கலம் வந்தவள்’ என இன்னும் மென்மையாய்த் தாங்கியிருப்பேனோ என்னவோ.
நான் ஆகிய தயாநிதி இயல்பில் பொருள், பண்டம், ஆஸ்திகளுடன் தூங்கவல்ல உலோகாயதவாதி அல்ல என்பது மாதினிக்கு நன்கு தெரியும்.
ஒரு விருந்திலோ, தொடருந்திலோ ‘அங்கே பார் ஒரு அழகியை’ என்று இன்னொருத்தியைக் காட்டினால் மற்றப் பெண்களைப் போலவே அது மாதினிக்கும் பிடிக்காது, ஆனால் அவளைக் குளிர்விக்க ‘நீயே பிரபஞ்ச அழகு ரூபிணி’ என்று அவளைப் புகழ வேண்டியதுமில்லை. என் ஒழுக்கத்தைப் பரீட்சிக்க அவள் என்றைக்கும் முயன்றதில்லை.

என்னிடம் அவளுக்குப் பிடிக்காத விடயங்கள். சற்றே முனைப்பான என் அழகியல் இரசனைகள் மற்றும் ஆய்வுகள், நான் படிக்கும் நூல்களும் (அனைத்தும் வேண்டாத கிரந்தங்கள்) மாத்திரந்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அடடா... இன்னும் நமக்குள் ஸ்ருதி சேராத விஷயங்கள் ஏதும் மீதி இருந்திருக்கின்றனவா, சொல்லு மாதினி, மனதில் எதை வைத்து இந்த வார்த்தைகளைக் கொட்டினாய்.

பிரக்ஞையோடிருந்த காலை ஒரு முணுமுணுப்போ, உதட்டுச் சுழிப்போ இல்லாதிருந்த நீயா அவ் வார்த்தைகளைச் சிந்தியது. சாதா ஸ்திரீகளைப்போலும் உலோகாயத வாஞ்சை உன்னையும் தியக்கத்தில் ஆழ்த்திவிட்டதா.

இந்திரியங்களின் ஸ்மரணை உறைய உறைய மாதினியின் குரலின் அலைகள் ஆழக் கிணற்றிருந்து வருவதுபோல் ஒன்றிலொன்று மோதி எதிரொலித்து பின்னி நொய்து தேய்ந்து தீய்கின்றன.

அப்போதுதான் நான் சாகத்தொடங்கினேன்.

-கருணாகர மூர்த்தி பொன்னையா - பேர்லின்