Friday, April 18, 2014

சுஜாதா பதில்கள் :







பஞ்சவர்ணம், போளூர்.
நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ?
நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும்.

*****

செந்தில் வேலவன், திண்டிவனம்.
கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ?
ஆமாம். தாங்கள் நேரில் கண்டதைத்தானே எழுத முடியும் ?
மைதிலி வேணுகோபால், சென்னை.
சிறுகதை எழுதுவது எளிதா ? நாவல்கள் எழுதுவது எளிதா ?
100 மீட்டர் ஓட்டம் எளிதா ? 25 கிலோ மீட்டர் மராத்தான் ஓட்டம் எளிதா ?
*****

ஜே.மோசஸ், சிதறால்.
இளம் எழுத்தாளர்களிடம் உள்ள பலம் – பலவீனம் என்ன ?
பலம் – புதிய புதிய வார்த்தைப் பிரயோகம், நவீன சிந்தனை.
பலவீனம் – மற்ற எழுத்தாளர்களைப் படிக்காமல் எழுதுவது.
*****

கே.அரவிந்த்.
நீங்கள் கவனிக்கும் விஷயங்களை எழுதுகிறீர்களா ? அல்லது எழுதுவதற்காக கவனிக்கிறீர்களா? இரண்டாவது என்றால் விஷயங்களை இயல்பாய் ரசிக்க முடியாமல் போய்விடுமே?
கவனிக்கும்போது இரண்டுமே இயங்கும். எங்காவது ஒரு மூலையில் மூளையில் பதிவாகும். பிறகு எழுத்தாகும்.
*****

வெங்கடாசலம்.
நீங்கள் எப்படி இன்றும் தொடர்ந்து ஃபீல்டில் இருக்க முடிகிறது ?
தொடர்ந்து படிப்பதால்.
*****

ஜெ. ஜானகிசந்திரன், தம்மம்பட்டி.
ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான, முக்கியமான அடிப்படைக் ‘குணம்’ என்ன ?
கூர்மையான பார்வை, காது, படிப்புத் திறன்.
*****

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை.
ஓர் எழுத்தாளன் எப்போது உயர்வான் ?
தன் எழுத்தின் குறைகளை அறியும்போது.
*****

டி.சுப்பிரமணியன், மேலையூர்.
இலக்கியத் துறையில் உங்கள் இமாலய இலக்கு எது ?கடைசி வரை எழுதிக்கொண்டிருப்பது.
*****

சுமதி ராஜேந்திரன், அரக்கோணம்.
சாப்பிடும்போது புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா ?இல்லை. மற்ற எல்லா சமயங்களிலும் படிப்பேன்.
 *****

டி.ரவிக்குமார், திருப்பத்தூர்.
புத்தகம் படிக்க எந்த நேரம் உகந்தது ?எந்த நேரமும். தினம் நாலு பக்கமாவது படிக்க வேண்டும். அது எனக்கு முக்கியம்.
*****

சாருமதி, சென்னை.
எழுத ஆரம்பிக்கும்போது யாரை மனதில் நினைத்துக் கொண்டு துவங்குவீர்கள் ?படிக்கப் போகிறவர்களை.
*****

சி.மணிவண்ணன், பெங்களூர்.
ஒரு கதை எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் ?சாதாரணமாக சில மணி நேரம். சில கதைகள் எழுதுவதற்கு வருஷங்கள் கூட ஆகும்.
*****

முகமது ரஃபீக், ஆம்பூர்.
நடைபாதைக் கடைகளில் புத்தகம் வாங்கிய அனுபவம் உண்டா ?
இள வயதில் நான் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் நடைபாதைக் கடைகளில்தான். கடைக்காரர்களிடம் கெஞ்சிய அனுபவமும் உண்டு.
*****

சுகுமாரன், திருச்செந்தூர்.
நமது நாட்டில் எழுத்தாளர்கள் அனைவரும் பத்திரிகைகளை நம்பியே இருக்கும் நிலை எப்போது மாறும் ?மாறிவிட்டதே. எல்லா முன்னணி எழுத்தாளர்களும் சகட்டுமேனிக்கு டி.வி.க்கு எழுதி வருகிறார்களே!
*****

கார்த்திகேயன்.
எப்படி உங்களால் நிறைய புத்தகங்களைப் படிக்க இயலுகிறது? வேகமாய் படிக்க எதாவது டெக்னிக் வைத்திருக்கிறீர்களா ?
அனாவசியமான புத்தகங்களைத் தவிர்த்திருக்கிறேன். படித்ததையே திரும்பிப் படிப்பதில்லை. சில வேளைகளில் speed reading முறைகளைப் பயன்படுத்துவேன்.
*****

கோபாலன், ஃப்ராங்பர்ட்.
எழுத்துலகில் நீங்கள் ஏதாவது ‘மெகா ப்ராஜெக்ட்’ யோசித்து வைத்திருக்கிறீர்களா ?
அப்படியெல்லாம் இல்லை. எழுதிக் கொண்டே இருப்பதுதான் எனக்கு மெகா.
*****

கவாஸ்கர்.
புதிதாய் ஏதாவது அறிவியல் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறீர்களா ?கதைகள் இல்லை. அவ்வப்போது சிறிய அறிவியல் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
*****

அசோக்குமார்.
ஸ்பீட் ரீடிங் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன் ?
1. தலையை இடம் வலமாக அசைக்காமல் வார்த்தை வார்த்தையாக மனசுக்குள் படிக்க வேண்டும்.
2. நாவல்களில் பாராக்களின் முதல் வரிகளையும், உரையாடல்களையும் மட்டும் படித்தால் கதை புரிந்து விடும்.
3. தெரிந்த விஷயத்தை விளக்கும் வரிகளை, முன்னுரை, நன்றியுரை எல்லாவற்றையும் தாவிவிட வேண்டும்.
*****

வெங்கடேஸ்வரன்.
எப்படி உங்களால் நேரம் காண முடிகிறது ? அதே இளமை வேகத்துடன் இருக்கிறீர்களே…?
நேரம் காண்பது அனாவசியங்களைத் தவிர்ப்பதால். இளமை லோரியால் ( l’oreal ) உபயம்.
*****

விவேக்.
எழுதுகையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள் ?
முதலில் யோசிக்காமல் எழுதுவேன். திருப்பிப் படிக்கும்போது சிந்தித்து திருத்துவேன்.
*****

கே.அரவிந்த்.
நீங்கள் ஸ்பென்சர் பிளாசாவுக்கு முக்காடு போட்டு வந்து ஒட்டுக் கேட்டீர்களா ? அது எப்படி நாங்கள் பயன்படுத்தும் அதனை வார்த்தைகளையும் நீங்கள் எழுதுகிறீர்கள் ?
1962-லிருந்து எழுதி வருகிறேனே, இந்தத் தகுதி கூட இல்லையேல் வெட்கம்.
*****

ராம்.
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க யோகாவைத் தவிரவும் வேறு வழிகள் உள்ளன என்று பதிலளித்திருக்கிறீர்கள். அவைகளைச் சொல்லி எனக்கு உதவ இயலுமா?
ஒரு வழி – நல்ல புத்தகங்கள் படிப்பது. பால் டேவிஸின் Superforce படித்துப் பாருங்கள்.
*****

சுரேஷ்.
தங்களின் எழுத்துலக வாரிசு…?
எழுத்து என்பது என் பரம்பரைச் சொத்தல்ல. இதற்கெல்லாம் வாரிசுகளை நான் நியமிக்க முடியாது.
*****

கல்யாண்.
எழுத்தில் உள்ள உங்களது நகைச்சுவை உணர்வு நிஜ வாழ்க்கையில் குறைவாமே, அப்படியா ?
நிஜ வாழ்வில் நகைச்சுவையாக இருப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணம் உங்கள் மேலதிகாரியைக் கேலி செய்ய முடியுமா ?
*****

சபீர்.
சோம்பேறித்தனத்தைக் கைவிடுவது எப்படி ?
என் முறை இது. எடுத்த காரியத்தை ஒத்திப் போட மாட்டேன். இன்று இதெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு சிறு பட்டியல் எழுதி வைத்து, மறு தினம் அதில் செய்து முடித்தவைகளை அடித்து விடுவேன்.
*****

எழுதுவதற்கென்று ஏதாவது விதிகள் உள்ளனவா?
நல்ல அப்சர்வேஷன் பவர் வேண்டும். எனது கண்களையும் காதுகளையும் எப்போதும் கவனமாகத் திறந்துவைத்திருக்கிறேன். வாசிப்பது எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிகிறது. எதைப்பற்றித் தெளிவாகத் தெரியுமோ அதைப் பற்றியே எழுதவேண்டும்.

*****

உங்களுடைய எழுத்து நடையை நீங்களேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா?ஆமாம், நானேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ‘அவன் அங்கே போனான்’ அப்படின்னு எழுதணுமானா’ அவன்’ஐ எடுத்துட்டு ‘அங்கே போனான்’னு எழுதுவேன். திரும்பப் படிக்கும்போது எழுதினதைச் சின்னதாக ஆக்குவது. இலக்கணம் ஒழுங்காகத் தெரிஞ்சதனாலே அதைக் கொஞ்சம் மீறலாமேன்னு தோணித்து. இதுலே ஏற்படுகிற பலன் என்னன்னா படிப்பதிலே வாசகனுக்கும் ஒரு பங்களிப்பைக் கொடுக்கிறது. அவனுடைய புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் எழுதுவது. இதுதான் என் வெற்றின்னு நினைக்கிறேன்.
*****

நீங்கள் கற்ற பாடங்கள் ?நான் எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைக்கும். எத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது; என்பதெல்லாம் நாற்பத்தோரு வருஷங்களாய்க் கற்ற பாடங்கள்.
*****

உங்கள் எழுத்து மற்றும் எழுதும் சூழ்நிலை பற்றி…எழுத்து எனது மிகத் தனிப்பட்ட சமாசாரம். என் எழுத்து என் வீட்டில், ஒரு மூலையில், ஒரு மேஜை விளக்கின் அடியில், மிகமிகத் தனியான ஒரு சூழ்நிலையில் உருவாவது. அப்போது எனக்கும் வெளிஉலகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
*****

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள எதாவது எளிய முறைகள் ?எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும். தமிழ் நன்றாகத் தெரிய வேண்டும். தமிழில் நிறையப் படிக்க வேண்டும். அதிகம் பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும். எழுத்து என்பது ‘Memory shaped by art‘ என்று சொல்வார்கள். உண்மை எத்தனை? கற்பனை எத்தனை? அவற்றை எந்த அளவில் கலப்பது? நடந்ததைச் சொல்வதா? நடந்திருக்க வேண்டியதைச் சொல்வதா? – இந்த ரசாயனம் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நாளாகும். இதற்குக் குறுக்கு வழியே இல்லை. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும்.
*****

பால்சாக் பற்றி ?பால்சாக் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரம் எழுதினார். அத்தனை எழுத வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒருபக்கம் எழுதினாலே வாழ்க்கையில் நூறு புத்தகம் எழுதி விடலாம்.
*****

சொந்தக் கதை அல்லது தெரிந்தவர்கள் கதை எழுதலாமா ?
The image that fiction produces is purged of the distractions, confusions, and accidents of ordinary life 
-என்றதுபோல தினவாழ்க்கையிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். தெரிந்த மனிதர்கள்,தெரிந்த சம்பவங்கள் பற்றி முதலில் எழுதுவது நல்லது. சொந்தக் கதை எழுதுவதை விட, மனதில் வந்த கதையைச் சொந்தப் படுத்திக் கொண்டு எழுதுவது சிறப்பு.
*****

எழுதியதைத் திருத்துவதும், திரும்பத் திரும்ப எழுதுவதும் அவசியமா ?எழுதியதைச் சில தினங்கள் விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் கோணத்திலிருந்து அதை பார்க்க இயலும். கொஞ்சம் கூடக் கருணையே காட்டாமல் அநாவசிய வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சிதைத்து விட வேண்டும். நான் எழுதியதெல்லாம் மந்திரம் போல; ஒரு வார்த்தையை நீக்க முடியாது; நீக்கக் கூடாது என்பதெல்லாம் மடத்தனம். உங்களுக்கே திருப்தி வரும்வரை திரும்பத் திரும்ப எழுதுவதிலும் திருத்துவதிலும் நீக்குவதிலும் சேர்ப்பதிலும்தான் நல்ல எழுத்து ஜனிக்கிறது.
*****

நமக்கு எழுத்தாற்றல் வந்து விட்டது என்பது எப்படிப் புரியும் ?எழுத்தாற்றல் வந்துவிட்டது உங்களுக்கே புரியும். ஒரு ஜுரம் போலஉணர்வீர்கள். நீங்கள் சிருஷ்டித்த பாத்திரங்கள் உங்களை ஆக்கிரமிப்பார்கள். எழுதுவதில் உள்ள வேதனைகள் கழன்று போய் உங்களை எழுத ஆரம்பிக்கும். இந்த நிலை வருவதற்குச் சில தியாகங்கள் தேவை.
*****

சிறுகதைக்கு உங்களின் எளிய விளக்கம் ?உருவம், உள்ளடக்கம் என்று பலர் ஜல்லியடிப்பதைக் கேட்டிருக்கிறேன். டெண்டர் நோட்டீஸுக்குக்கூட உருவமும் உள்ளடக்கமும் இருக்கிறது. பின்சிறுகதை என்பது தான் என்ன? கூர்ந்து கவனியுங்கள். சிறுகதை என்பது ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்.
*****


நாம் observe செய்யும் அத்தனையும் எழுத்தில் கொண்டு வர முடியுமா 
என்ன ?எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப்பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம். கவனிப்பது என்பது உடல் நிலையையும், மனநிலையையும் பொறுத்தது. காண்கிற எல்லாவற்றையும் கவனிக்க எனக்குச் சில வருஷங்கள் ஆயின. கவனித்த அத்தனையையும் எழுத வேண்டுமென்பதில்லை. எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள் – முக்கியமாக மானுடம் வேண்டும்.
*****

உங்களுக்கு கஷ்டமாக இருப்பது எது ?எனக்கு சில வருஷங்கள் எழுதின பிறகு கவனிப்பதில் கஷ்டம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் எழுதும் போது சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபடுவதுதான் கஷ்டமாக இருந்தது. இருக்கிறது.
*****

உங்கள் வாசகர்கள் பற்றி?என்னுடைய வாசகர்கள் புத்திசாலிகள்; அவர்களால் இடைவெளிகளை நிரப்ப முடியும். முகவாயைப் பிடித்து ஸ்பூன் வைத்துப் புகட்ட வேண்டாம்.
*****

நீங்கள் மைலாப்பூர் வீட்டுக்கு இடம் பெயர்ந்தது பற்றி ?புதிய வீடு எனக்கு எப்படியோ! ஆனால், என்னுடன் அம்பலத்தில் பணியாற்றிய பலருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்ததாக நம்பினார்கள். பல ஆண்டுகளாக நான் தேர்ந்தெடுத்து படித்து… சேகரித்து வைத்திருந்த நூலகத்தைத் திறந்துவிட்டு… விருப்பமான, தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளும்படி சொன்னது – அந்த புது வீட்டுக்கு இடம் பெயர்ந்தபோதுதான். இன்று, நண்பர் சந்திரன் வீட்டில் இருக்கும் சின்ன லைப்ரரியின் பெரும்பாலான தமிழ் கிளாஸிக்ஸ் – அந்த நூலகத்திலிருந்து பெற்றவைதான்.
*****

ஸ்ரீரங்கத்துக் கதைகளில் கடைசி கதையான “மாஞ்சு” பற்றிக் கூற முடியுமா ?“சில கதைகளில்தான் இந்த மாதிரி அனுபவம் கிடைக்கும். நாம ஒன்றுமே செய்ய வேண்டாம் அதுவா எழுதிக்கொள்ளும். அப்படி எழுதப்பட்ட கதைகள் எல்லாம் நல்ல கதைகளாக இருக்கும்.
*****


க்ரைம் கதைகள் நிறைய எழுதி நேரத்தை வீணடித்துவிட்டோம் என்று எண்ணியதுண்டா ?
க்ரைம் கதைகள்-எழுதியிராவிட்டால் வாசகர்கள் என்னைக் கவனித்திருக்க மாட்டார்கள்.

*****

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.
நீங்க ஒரு பக்கம் பிரபஞ்சம் பத்தி விஞ்ஞான பூர்வமா எழுதறீங்க; அதே சமயத்துல ஆன்மீக விஷயங்களைப் பத்தியும் நிறைய எழுதறீங்க. இது எப்படி முடியுது ?
‘நான் பிறந்து சுமார் 20 வருஷம் வரைக்கும் வளர்ந்த சூழலை, எந்த ஒரு காரணத்தாலும் மாற்ற முடியாது; அதே சமயத்துல, நான் விஞ்ஞானத்தைப் படித்துத் தெரிந்துகொண்ட விஷயங்களை இல்லைன்னு மறுக்கவும் முடியாது.
*****

நீங்கள் ஏன் எழுத வந்தீர்கள் ?
boredom வேறு ஒன்றுமில்லை.
*****


சுஜாதா தேசிகன்.
சார் இப்ப எல்லாம் சிறுகதை எழுதினா கொஞ்சம் பெரிசா எழுதிடறீங்க. விகடன் கூட ‘சற்றே பெரிய சிறுகதை‘ ன்னு போடறாங்க. முன்னாடி இருந்த அந்த ‘நறுக் சுறுக்‘ இப்ப கம்மியாடுச்சே ?
ஆமாம்பா. ஏனோ தெரியலை இப்ப எல்லாம் நிறைய வர்ணிச்சு எழுதணும் போல இருக்கு.
*****

உங்கள் சிறுகதைகள் எல்லாம் வெவ்வேறு புத்தகங்களில் சிதறியிருக்கின்றன, அவைகளில் சிறந்தவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடுங்களேன் ?நல்ல யோசனைதான். இருந்தாலும் ஒரு சிக்கல்! சிறந்த சிறுகதை என்றால் என்ன ? அதற்கு பதில் கிடைத்து விட்டதென்றால் நான் இனி கதைகள் எழுத வேண்டியதில்லை. “இன்றைக்கு 9-05 க்கு நான் ஒரு ‘சிறந்த சிறுகதை‘ எழுதினேன்” என்று எந்த எழுத்துக்காரனாலும் சொல்ல முடியாது. தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டு கொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது.
*****

நீங்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அளவுக்கு வட்டார வழக்கைப் பயன்படுதுவதில்லையே ஏன் ?
வாழ்க்கையை இடம் பொருள் ஏவலுக்குத் தேவைப்பட்ட அளவுக்கு பிரதிபலித்தால் போதும் என்று எண்ணுபவன் நான். இதனால்தான் நான் வட்டார வழக்கு எழுதும்போது, ஒவ்வொரு வார்த்தையும் சரியாக இருக்க வேண்டும் என்று பாடுபடுவதில்லை. அதன் வாசனை மட்டும் போதும். இல்லையேல், வட்டார வழக்கு துல்லியமாக இருக்கும் கதை, பரதேசம் போய்விடும்.
*****

உங்கள் கதைகளில் வரும் ‘நான்’ நீங்கள் தானா ?வாழ்க்கையில் பார்த்த சம்பவங்களை, ஒரு விதமாகக் கலக்கித்தான் கதைகள் எழுதுகிறோம். இதனால் வாழ்க்கை வினோதங்களிலிருந்து எழுத்து தப்பவே முடியாது என்பது என் கருத்து. வாழ்க்கை என்று சொல்வது, மனித வாழ்க்கை. என் வாழ்க்கையாக அது இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஓர் எழுத்தாளன் ஊரெல்லாம் சுற்றிவந்து, பல இன்ப துன்பங்களை அனுபவித்து ஹெமிங்வே போல வாழ்ந்தால்தான் சொந்த வாழ்க்கையில், வற்றாமல் . . . விதம்விதமான கதைகள் எழுத முடியும். அப்படி எல்லோர் வாழ்க்கையும் அமைவதில்லை. சொந்த வாழ்க்கையைத் தான் எழுத வேண்டும் என்றால், ஒரே கதையைத் திரும்பத் திரும்ப எழுதவேண்டி வரும். இதை சுவாரஸ்யமாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். நான் அந்த ரகமில்லை. காரணம், என் சொந்த வாழ்க்கை அதிகச் சஞ்சலமற்றது. ஏதோ இருபது, முப்பது சிறுகதைகள்தான் தேறக்கூடிய சலனமற்ற வாழ்க்கை. அதனால் மற்றவர் வாழ்க்கையைக் கவனித்து, அவர்கள் வாழ்க்கையை வாழ முயல்வது தான் எனக்குச் சவாலாகப் படுகிறது. இதனால் கதையின் ‘நான்’ பல விதங்களில் மாறலாம். ‘நான் எனும் பொய்யை நடத்துவோன் நானே’ என்று பாரதி சொன்னாலும், ‘விண்ணில் திரிகிற புள்ளெலாம் நானே’ என்று அவர் ரேஞ்சுக்குப் போக முடியவில்லை. ஆனால் என் கதைகளில் பலவித ‘நான்’கள் இருப்பது தவிர்க்க முடியாதது. அத்தனை பேரும் வாழ்க்கையைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்கள் உண்மையான ‘நானா’க இருக்கத் தேவையில்லை. இந்த விதத்தில் எழுத்தாளன் ஒரு தேர்ந்த நடிகன் போல!”
*****

உங்கள் கதைகளில் உண்மை – கற்பனை கலப்பு பற்றி ?பல சமயங்களில், முழுக்க முழுக்க கற்பனை செய்து எழுதிய எழுத்துகள் நாளடைவில் வாழ்க்கையாகிவிடுவதும் உண்டு. ‘ஜில்லு’ என்கிற கதை, இந்தியா பாகிஸ்தானுக்கிடையில் அணு ஆயுதப் போருக்குப் பின் நிகழும் வெளியேற்றத்தைப் பற்றியது. உண்மையாகி விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. எழுத்தாளன், இதனால் தீர்க்கதரிசி அல்லது வாழ்க்கையின் கோட்பாடுகளை அமைக்கிறான் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியாது. முழுக் கற்பனை என்பது சாத்தியமே இல்லை. உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் ஒரு வாழ்க்கை அதைப் போல் இருந்திருக்கும். அல்லது இருக்கக் காத்திருக்கும்.
எழுதும்போது எச்சரிக்கையாக, செயற்கை கலந்துதான் எழுத வேண்டியிருக்கும். ஆணைப் பெண்ணாகவும் வயசைக் கூட்டிக் குறைத்தும் கும்பகோணத்தை டில்லியாகவும் மாற்ற வேண்டிவரும். (எப்படியும் மனைவி கண்டுபிடித்துவிடுவாள்.) இந்த எச்சரிக்கை இல்லையென்றால், எழுத்து நன்றாக இருக்கும்; எழுத்தாளன் பிழைத்திருக்க முடியாது.
 *****

நாங்கள் அல்லது இன்னொருவர். உங்களின் இலக்கியத்தனமான படைப்புகளைத் தொகுத்துத் தர விரும்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் எழுத்துகளில் எவற்றை எல்லாம் கொடுப்பீர்கள்? ஒரு பட்டியல் தாருங்களேன் ?
பட்டியலில் சிறுகதைகள் இருக்கும். சில கட்டுரைகள் இருக்கும். தனிமை கொண்டு (தனிப் புத்தகம்), ஜன்னல் (கசடதபற), காணிக்கை (கல்கி), செல்வம் (கலைமகள்), முரண் (சுதேசமித்திரன்), நகரம் (தினமணிகதிர்), எதிர் வீடு (கணையாழி), அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்), வீடு (தினமணிகதிர்), ஒரே ஒரு மாலை(ஆனந்த விகடன்), அம்மோனியம் பாஸ்பேட் (தினமணிகதிர்) பார்வை (தினமணிகதிர்) இவைகளை என் முதல் கதைத் தொகுப்பாகவும், Assorted Prose என்று உரைநடைப் பகுதிகள் எனப் பல நூல்களிலிருந்தும் எடுத்து மற்றொரு புத்தகமாகவும் வெளியிடலாம். இலக்கியதரம் என்கிற பாகுபாட்டை விட Representative of my writingஎன்கிற பாகுபாட்டில்தான் வெளியிடுவேன்.
*****

ஆங்கிலப் புத்தகங்கள் வாங்க ஆவலாய் இருக்கிறேன். எதில் துவங்கலாம் ? உங்கள் அறிவுரை வேண்டும்.
முதலில் ஒரு டிக் ஷனரி வாங்கவும்.
*****

ரவிசெல்வன்.எஸ்.
ஜனரஞ்சக இதழ்களில் எழுத மாட்டோம் என்று சொல்லும் எழுத்தாளர்களைப் பற்றி ?இப்போது யாரும் அப்படிச் சொல்வது இல்லை. எல்லோரும் ஜ. இதழ்களில் எழுதுகிறார்கள். எப்போது கடிதம் வரும் என்று காத்திருக்கிறார்கள்.
*****

சுகந்தி.
இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்கும் என்ன வித்தியாசம் ?இன்ஸ்பிரேஷனில் ஒரிஜினல்காரர் கேஸ் போட முடியாது.
*****

ஐஸ்வர்யா.
நீங்கள் தமிழ் மொழியைப் பற்றி அதிகமாய் விவரித்தாலும் உங்கள் எழுத்தில் ஆங்கிலம் நிறையக் கலந்திருக்கிறதே.
யதார்த்த வாழ்வில் யாரும் செந்தமிழில் பேசுவதில்லை. அதனால்தான்.
*****

வெங்கட்.
இன்னும் பத்து வருடங்களில் இன்டர்நெட், தொலைகாட்சி, சினிமா இவற்றின் வடிவங்கள் மாறிவிடும் என்று சொல்லியிருக்கிறீர்கள். புத்தகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் ?புத்தகங்களை அழிக்க முடியாது. ஆனால் புத்தகப் பிரசுர முறைகள் மாறும். சுடச்சுட தோசை சுடுவது போல ஆர்டர் வந்ததும் புத்தகம் அச்சடித்துக் கொடுக்கப்படும். இதனால் காகித விரயம் குறையும்.
*****

அன்பு.
உங்கள் கதைகளில் பாத்திரங்கள் பேசுவது இயல்பாக இருப்பதற்கு என்ன காரணம் ?மக்களின் பேச்சு முறைகளை நீங்களும் சீரியஸாகக் கவனித்திருக்கிறீர்கள், உள் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான்.
*****

சுரேஷ்குமார்.
உங்கள் கதைகள் எப்படி சிருஷ்டிக்கப்படுகின்றன ? உங்கள் அனுபவங்களினாலா ?அனுபவங்களுடன் கற்பனை கலந்து.
*****

விமல்.
சமீபத்தில் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம் எது ?
Best American Essays 2001
 என்கிற கட்டுரைத் தொகுதி. இம்மாதிரி ஒரு புத்தகத்தை யாரும் தமிழில் தொகுக்க மாட்டார்களா என்று ஏங்க வைத்தது.
 *****

சுதா.
தன் சுயசரிதைப் புத்தகத்தில் பாலகுமாரன், நீங்கள்தான் எழுத்துக்கு குரு என்றும், சிறுகதை எழுதுவது குறித்து நீங்கள்தான் வழிகாட்டினீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியா ? அவரது படைப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது ?பாலகுமாரனுக்கு சொன்னதையே பலருக்கு சொல்லியிருக்கிறேன். அவர்களில் பாலகுமாரன் தான் சிறந்து வந்தார். ஆதாரமான எழுத்துத் திறமை இல்லையெனில் எந்த குருவும் சரிப்படாது. அவர் எழுத்தில் எனக்குப் பிடித்தது ‘இரும்புக் குதிரைகள்
*****

சுதா.
சார், சென்ற மாதம் ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பது எப்படி என்று கேட்டதற்கு முதலில் டிக் ஷனரி வாங்குங்கள் என்று சொல்லியிருந்தீர்கள். வாங்கி விட்டேன். அடுத்து எங்கிருந்து தொடங்குவது ?

எடுத்து அதில் Serendipity என்பதற்கு அர்த்தம் பாருங்கள்.
*****

தியாகு, திருச்சி.
சுஜாதா வீட்டு லாண்டரி கணக்கைக் கூட பிரசுரிப்பார்கள். ஆனால் எங்கள் படைப்புகளைப் பிரசுரிக்க மாட்டார்கள் என்று இளம் எழுத்தாளர்கள் கூறுகிறார்களே ?இது ரொம்ப ரொம்ப பழைய (1978) குற்றச்சாட்டு.
*****

கல்யாண்.
உங்கள் எழுத்துகளை 1973-லிருந்து விடாமல் படித்து வருகிறேன். என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?உங்களை 73-லிருந்து தொடர்ந்து படிக்க வைத்த என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ அதேதான்.
*****

ஆர்.தியாகராஜன்.
மறு பிறப்பில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா ? ‘மெனி லைவ்ஸ் மெனி மாஸ்டர்ஸ்’ புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா ?
படித்திருக்கிறேன். ‘‘ என்று ஒரு கதை எழுத அது வசதியாக இருந்தது. மற்றபடி மறு பிறவி இருந்தாலும் ஞாபகத் தொடர்ச்சி இல்லையென்றால் அது மறுபிறவியே அல்ல என்பது என் வாதம்.
 *****

முத்துகுமார்.
பல எழுத்தாளர்கள் குடிக்கிறார்கள். அதை மறைப்பதும் இல்லை. இது பற்றி உங்கள் கருத்து என்ன ?
குடித்தால்தான் எழுத வரும் என்று சொல்லாத வரை சரி.
*****

சந்திரசேகரன் ஆர்.பிள்ளை, கிளீவ்லேன்ட்.
நீங்கள் பேச்சுத் தமிழில் எழுதுவதன் மூலம், தமிழ் மொழி இலக்கணம் பாதிப்படைய காரணமாய் இருக்கிறீர்கள் அல்லவா ?இலக்கணம் முதலில் வராது. இலக்கியத்தை விவரிப்பதுதான் இலக்கணம். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தமிழின் பேச்சு மொழியில் டாக்டரேட் பண்ணுகிறார்கள்.
*****

சீனிவாசன்.
வெறும் ஒரு தமிழ் எழுத்தாளராய் இருந்து பிழைக்க இயலுமா ?முடியும் சிலரால்.
*****

ச.ராஜாராமன்.
சமீபத்தில் தமிழகம் வந்திருந்தேன். நண்பர் ஒருவர் ‘வா மலையேறிட்டு வரலாம்’ என்றார். எனக்குப் புரியவில்லை. ‘மலையேறுவது’ என்றால் மது குடிப்பதாம். எங்கே போகிறது தமிழ் ?நல்ல வேளை. அவர் உங்களை ‘சால்னா சாப்பிடலாம் வா’ என்றழைக்கவில்லை. அது சரி, ‘ஹீட்டர் போடுவது’ என்றால் என்ன தெரியுமா ?

*****

மலர்க்கொடி, காஞ்சிபுரம்.
நீங்கள் ஏன் தொலைகாட்சி தொடர்களுக்கு கதை எழுதுவதில்லை ?அண்மையில் ‘சித்தி’ பாஸ்கருடன் பேசிக்கொண்டிருந்தேன். தொலைக்காட்சி தொடர் என்பது பாசஞ்சர் ரெயில் போல என்றேன். அவர், ‘அது மட்டும் இல்லை, எப்ப வேணா ட்ராக் மாத்தலாம், யாரை வேணா நிறுத்தி இறக்கி விடலாம், மறுபடியும் ஏத்திக்கலாம். மெல்லப் போகும் பாசஞ்சர்’ என்றார். ‘உங்களுக்கு வராது’ என்றார். என் ‘24 ரூபாய் தீவை‘ சினிமாவாக எடுக்கப் போகிறார்.
*****

சௌந்தர்யா, திருச்சி.
பெண்களை சுவாரசியமாக வர்ணிக்கும் நீங்கள், ஆண்களை அப்படி வர்ணிப்பதில்லையே, ஏன் ?வர்ணித்திருக்கிறேன். உங்களுக்கு ஞாபகமில்லை. அவ்வளவுதான். அண்மையில் எழுதிய ‘உள்ளம் துறந்தவ‘னில் (கல்கி) அழகேசன் ஒரு உதாரணம். என்ன, கொஞ்சம் அல்பாயுசாகச் செத்துப் போய்விடுகிறான், அவ்வளவுதான்.
*****

ஜி.ஜோசப்ராஜ், புதுக்கோட்டை.
டான் ப்ரௌனின் ‘டாவின்சி கோட்’ படித்தீர்களா ? தமிழில் ஏன் அது மாதிரியான புது நாவல் முயற்சிகள் வருவதில்லை ?தமிழில் அவ்வகையான நாவல்கள் எழுத உலகப்புகழ் பெற்ற ‘லாஸ்ட் சப்பர்’ போன்ற சித்திரம் தமிழ் நாட்டில் வேண்டும். ஐகனா கிராஃபி பற்றிய ஆராய்ச்சி தெரிந்தவர்கள் வேண்டும். அவர்களுக்கு ஜெட் வேகத்தில் செல்லக் கூடிய தமிழ் நடை வேண்டும். நிறைய நிறைய ஓய்வும், பண பலமும் வேண்டும். டாவின்சி ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும், சிப்பாய் கலகத்தை ஆராய்ச்சி செய்து, அதில் ஒரு தமிழன் கலந்து கொள்வதாக, ‘கருப்பு சிவப்பு வெளுப்பு‘ என்ற ஒரு தொடர்கதை ஆரம்பித்தேன். ‘கையை வெட்டுவேன் நிறுத்து’ என்றார்கள். எனக்கு இடது கையால் ஷேவ் செய்து பழக்கமில்லாததால் நிறுத்தி விட்டேன். என்னதான் ‘ரத்தம் ஒரே நிறம்‘ என்று எழுதினாலும் ஆரம்ப உற்சாகத்தை இழந்து விட்டேன்.

ஒரு யோசனை தோன்றுகிறது. ராஜாரவிவர்மாவின் லக்ஷ்மி, சரஸ்வதி சித்திரங்களுக்கு யார் மாடலாக உட்கார்ந்தார்கள் என்று ஆராய்ந்து ஒரு நாவல் எழுதலாம்.


நன்றி: http://balhanuman.wordpress.com

No comments:

Post a Comment