நான் மண விழாக்களுக்கோ , மரண வீடுகளுக்கோ செல்வதில்லை. இரண்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. மணவிழா , உயிர் உற்பத்திக்காக நடைபெறும் சடங்கு ; மரணம் , உயிரின் விடுதலை. மண விழாக்களுக்குச் செல்லாததன் காரணம் , தம்பதியர் எப்போது விவாக ரத்து செய்யப் போகிறார்களோ என்று மனதுக்குள் எழும் அபத்த உணர்வு. மரண வீடுகளைத் தவிர்ப்பது , அங்கே கிடக்கும் பூத உடல் ஏற்படுத்தும் அச்சத்தினால். பிறந்தோர் யாவருக்கும் மரணம் நிச்சயம் என்பது தெரிந்ததே என்றாலும் , அவ்வளவு கிட்டத்தில் மரணத்தைப் பார்க்கும்போது எழும் அச்ச உணர்வு அலாதியானதுதான்.
வாழ்வில் இரண்டு மூன்று முறை மட்டுமே மரண வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அவை , நெருங்கிய உறவினர்களின் மரணம். உதாரணமாக , அம்மா. ஜனவரி தொடக்கத்திலிருந்தே ஒரே மரண செய்திகளாகவே வந்து கொண்டிருந்தன. மிகவும் பாதித்தவை நாஞ்சில் நாடனின் இளைய சகோதரர் மற்றும் அவரது மைத்துனரின் மரணம். இருவருக்குமே இளம் வயது. இரண்டு மரணங்களுமே ஒரே வார இடைவெளியில் நிகழ்ந்தவை.
இரண்டாவது மரணம் பற்றி 27.2.2008 அன்று காலை செய்தி வந்தது. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தபோது அன்றைய தினம் மாலை சுஜாதா கவலைக்கிடமாக இருப்பதாக கனிமொழியிடமிருந்து செய்தி கிடைத்தது. அப்போது நான் சவேரா ஓட்டல் மூங்கில் பாருக்கு வெளியே அமர்ந்திருக்கும் கிளி ஜோசியரிடம் ஒரு நண்பருடன் ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
செய்தி அறிந்து மனம் சிறிதும் பதற்றமடையவில்லை. ஏனென்றால் , மிக நிச்சயமாக சுஜாதா இன்னும் 20 ஆண்டுகள் உயிரோடு இருப்பார் என்று நான் நம்பினேன்-எம்.எஃப் ஹ § சேன் , குஷ்வந்த் சிங் போன்றவர்களைப் போல. அல்லது , குறைந்த பட்சம் இன்னும் 10 ஆண்டுகள் மிக உறுதி என்பது என் எண்ணம்.
சுஜாதாவை என்னால் எந்தக் காலத்திலும் 74 வயதானவராகவோ , முதியவராகவோ எண்ணிப்பார்க்கவே முடிந்ததில்லை. 74 வயதானாலும் அவர் இளைஞராகவே இருந்தார். தோற்றத்தில் கூட அவர் ஒரு இளைஞர் தான் ; யாரும் அவரை ' தாத்தா ' என்று அழைத்துவிட முடியாதபடியான ஓர் இளமைத் தோற்றம் அவருடையது.
பிறகு , மூங்கில் பாரிலிருந்து கிளம்பி நண்பரும் நானும் கடற்கரைக்கு வந்தோம். இரவு ஒன்பது மணி இருக்கும். வழக்கமாக நாங்கள் நண்பர்களைச் சந்திக்கும் இடத்தில் கவுண்டமணி நின்று கொண்டிருந்தார். நாங்கள் சந்திக்குமிடத்தை கடற்கரையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றி விட்டபடியால் கவுண்டரை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சந்திக்கவில்லை. கவுண்டரை (அவரை நான் அப்படித்தான் அழைப்பது வழக்கம்) முன்வைத்து என்னை குமுதத்தில் பாமரன் சாடியிருந்தது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில்தான் மனுஷ்யபுத்திரன் அந்த அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார்.
ஏற்கனவே மரண செய்திகளால் வெறுப்புற்றியிருந்ததனாலோ அல்லது வேறு எந்தக் காரணமோ தெரியவில்லை , கையிலிருந்த தொலைபேசியை கோவிலில் சிதறு தேங்காய் உடைப்பது போல் போட்டு உடைத்துவிட்டேன். நண்பரும் கவுண்டமணியும் தான் சிதறிய பாகங்களை எடுத்துக் கொடுத்தனர். கிளம்பும் போது என் கையில் ஒரு பாக்கெட் பொரியைக் கொடுத்துவிட்டுப்போனார் கவுண்டர்.
* * *
தமிழில் என்னுடைய ஆசான்கள் என இரண்டு பேரைச் சொல்லலாம். ஒருவர் , ஜெயகாந்தன். என்னுடைய பதின் பருவத்தில் (இந்த வார்த்தையே கூட நான் ஜெயகாந்தனிடமிருந்து பயின்று கொண்டதுதான்) அவர் தான் என்னுடைய ஹீரோவாக இருந்தவர்.
மிகத் தீவிரமான தி.மு.க.குடும்பமாக இருந்த எங்கள் குடும்பச் சூழலில் அதனுடைய பாதிப்பு எதுவுமே என் மீது படாத வண்ணம் என்னைக் காத்தவர் என ஜெயகாந்தனைக் கூறலாம். அவரைப் படித்தே நான் சமஸ்கிருதம் படித்தேன். அவரைப் படித்தே நான் சினிமா பாடல் என்ற ஜனரஞ்சக ரசனையினின்றும் விலகி சாஸ்த்ரீய சங்கீதத்தின் பால் ஈடுபாடு கொண்டேன்.
பார்ப்பதற்கும் அவரைப் போலவே இருப்பேன். கட்டு மஸ்தான உடம்பு , நீண்ட தலைமுடி , இத்யாதி. அப்போது சென்னையில் சிறைத்துறையில் குமாஸ்தா வேலை , மில்லர்ஸ் ரோடிலுள்ள சாந்தி மேன்ஷன் முதல் மாடியில் ஒரு 35 வயது மதிக்கத் தக்க ஒருவருடன் அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். (இப்போது அந்த மேன்ஷன் இருக்கிறதா என்று தெரியவில்லை)
என்னுடைய இயல்பு எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணம்: சென்னையில் நான் ஒரு ஆண்டுக்காலம் அந்த மேன்ஷனில் அந்த அறையில் தங்கியிருந்தேன். ஆனால் , அந்த ஒரு வருடகாலமும் நான் என்னுடைய அறைவாசியான அந்த அன்பருடன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை , ' ஒரு வார்த்தை கூட ' என்பதை அட்சர சுத்தமாக அர்த்தப்படுத்திக் கொள்ளவும். ஏனென்றால் , ஹலோ கூட சொல்லிக் கொண்டதில்லை. ஒரு புன்சிரிப்பு. அவ்வளவுதான்.
அப்போதுதான் ' ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் ' என்ற தொகுப்பு வெளிவந்திருந்தது. அதில் பால குமாரன் , சுப்ரமணிய ராஜு போன்ற பெயர்கள். மாதா மாதம் கணையாழியை விடாமல் படித்துக் கொண்டிருந்தேன். அதில் பாலகுமாரனின் ஒரு கவிதை.
உனக்கென்ன கோவில் குளம்
ஆயிரமாயிரம்
எனக்கோ
வலப்பக்கக் கடல் மணலை
இடப்பக்கம் இரைத்து இரைத்து
நகக் கணுக்கள் வலிக்கின்றன
அடியே
நாளையேனும்
மறக்காமல் வா!
பாலகுமாரனுக்கு கடிதம் எழுதினேன். என்னை ஒரு அழகான இளம் பெண் என்று எண்ணி மேற்கண்ட கவிதை பாணியிலேயே ஒரு பதில் எழுதியிருந்தார் பாலா. ராயப்பேட்டை லாய்ட்ஸ் ரோடிலுள்ள அவர் வீட்டுக்குச் சென்ற போது மனிதர் என்னைப் பார்த்து அலறியே விட்டார்.
அப்போதுதான் சாவியில் சுஜாதா ஒரு விஷயத்தை எழுதியிருந்தார். தன்னுடைய முதல் கதை சிவாஜியில் வெளியாகி இருப்பதாகவும் , அதன் பிரதி தன்னிடம் இல்லை என்றும் , யாராவது அதைத் தந்தால் தன்னுடைய சாம்ராஜ்யத்தில் பாதியையும் , தன் மகளையும் கொடுப்பேன் என்று எழுதியிருந்தார் சுஜாதா. உடனே நான் " என்னிடம் இருக்கிறது அந்த சிவாஜி இதழ். எனக்கு சாம்ராஜ்யமெல்லாம் வேண்டாம் ; பெண்ணே போதும் " என்று சாவிக்கு எழுதினேன். அதுதான் பத்திரிகையில் பிரசுரமான என்னுடைய முதல் எழுத்து. பிறகு சாவியுடன் பேசிய பொழுது " எங்கே சிவாஜி ?" என்று கேட்டார். " அது இருக்கட்டும் ; எப்போது கல்யாணம் ?" என்றேன் நான்.
" அதெல்லாம் சும்மா நகைச்சுவையாக எழுதுவது ; சுஜாதாவுக்கு 2 பையன்கள் தான் ; பெண் கிடையாது " என்றார் சாவி.
நான் தஞ்சாவூரில் படித்துக் கொண்டிருந்த போது சரஸ்வதி மஹால் நூலகத்தில் சிவாஜியைப் பார்த்திருக்கிறேன். திருச்சியிலிருந்து திருலோக சீத்தாராம் நடத்திக் கொண்டிருந்த பத்திரிகை. மற்றபடி என்னிடம் அந்தப் பிரதி இல்லை.
" அப்புறம் ஏன் பொய் சொன்னீர் ?" சாவி.
" ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் என்பார்களே. . . அதுதான். . .ஹிஹி. . . "
" சரி , சுஜாதா சொன்ன பொய்க்கும் நீங்கள் சொன்ன பொய்க்கும் சரியாப் போச்சு " என்று கூறி என்னிடம் கதை கேட்டார் சாவி. அனுப்பி வைத்தேன். பிரசுரமானது. தொடர்ந்து அனுப்பினேன். தொடர்ந்து பிரசுரமானது. அப்படியே எழுதி ஒரு ஜனரஞ்சக எழுத்தாளனாக ஆகியிருப்பேன். அப்போதும் சுஜாதாவே வழி மறித்தார். வேறொரு திசையைக் காட்டினார்.
ஜெயகாந்தனின் தீவிர வாசகனாக இருந்த எனக்கு ஜெயகாந்தன் காட்டிய இந்திய மரபும் , அதன் விழுமியங்களும் மட்டுமே போதுமானதாக இல்லை. இந்திய எல்லையை நான் தாண்ட வேண்டியிருந்தது. கல்லூரிப் பருவத்தில் நான் படித்த ஜி.கே.செஸ்டர்டனும் , ஆஸ்கார் ஒயில்டும் , டி.ஹெச்.லாரன்ஸும் காட்டிய உலகம் ஜெயகாந்தனின் உலகிலிருந்து வேறுபட்டிருந்தது. அந்த நேரத்தில்தான் நான் சுஜாதாவைப் பற்றிக் கொண்டேன். சில விஷயங்கள் மிக நன்றாக ஞாபகம் இருக்கின்றன. ஒரு கதையில் அவர் ' நியாட்ஷே ' என்று எழுதியிருந்தார். வெகு சாதாரணமாக போகிற போக்கில் நியாட்ஷே என்று சொல்லி விட்டுப் போவான் வசந்த். அதை வைத்துக் கொண்டு இனி என் வாழ்வு நீட்ஷேவுடன் தான் என்று புரிந்து போனது.
இச்சம்பவம் நடந்து சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள்-கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே விரிவுரை ஆற்றியபோது ஒரு மாணவன் " உங்களுடைய ஸீரோடிகிரியில் நீட்ஷேவின் பாதிப்பு பெருமளவுக்கு இருப்பதாக உணர்கிறேன். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன ?" என்று கேட்ட போது அந்தக் கணத்தில் சுஜாதா என்ற எனது ஆசிரியருக்கு நான் மானசீகமாக நன்றி கூறினேன்.
* * *
சாவி கொடுத்த உற்சாக ஆதரவில் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளனாக ஆகியிருப்பேன் என்று சொன்னேன் அல்லவா ? அந்த நேரத்தில் சுஜாதா ஒரு பத்திரிகையில் தனது நண்பர் கமல்ஹாசன் ' பிரக்ஞை ' என்ற காலாண்டிதழின் ஆயுட்கால சந்தாதாரர் என்று எழுதியிருந்ததைப் படித்து பிரக்ஞையைத் தேட ஆரம்பித்தேன். முதலில் எனக்கு அந்த வார்த்தையே பிடித்திருந்தது. எங்கு தேடியும் பிரக்ஞை கிடைக்கவில்லை. சென்னையிலிருந்த அந்த ஒரு வருட காலமும் ஒவ்வொரு வார விடுமுறையிலும் தஞ்சாவூர் போய் விடுவேன். அங்கே மேல வீதிக்குப் பக்கத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் தெருவில் எனக்கு ஒரு காதலி இருந்தாள். அப்படிச் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாள் தஞ்சாவூர் பொது நூலகத்தில் ' பிரக்ஞை ' இதழைக் கண்டேன். அப்படியே சுருட்டி பேண்ட்டுக்குள் வைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
தி.நகர் பஸ் நிலையத்துக்கு எதிரே இருந்தது பிரக்ஞை அலுவலகம். அது ஒன்றும் அலுவலகம் இல்லை. பிரக்ஞை ஆசிரியர் குழுவிலிருந்த ஒருவரின் வீடு. அந்த வீட்டு மாடியில் கூரை வேய்ந்திருந்தது. ஒருவர் பெயர் ரவீந்திரன். மற்றவர் பெயர் ரவி ஷங்கர். இன்னொருவர் வீராச்சாமி. ரவீந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரவி ஷங்கர் அந்தக் காலத்து பிராமண இடது சாரிகள் மற்றும் புத்திஜீவிகளைப் போலவே தாடி வைத்திருந்தார். (கிட்டத்தட்ட இப்போதய தசாவதாரம் கமலைப் போல் இருந்தார் ரவி ஷங்கர்). வீராச்சாமியை இப்போது தமிழ் நாட்டில் அனைவருக்கும் தெரியும்.
* * *
' ந்ருஸிம்ஹப்ரியா ' என்ற ஸ்ரீ வைஷ்ணவப் பத்திரிகை பற்றி சுஜாதா டிசம்பர் 1965 க ¬¬ யாழி இதழில் முதல் முதலாகக் குறிப்பிடுகிறார். அப்போது என் வயது சரியாக 12. அப்போது அதை நான் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ' ந்ருஸிம்ஹப்ரியா ' வை அதன் பிறகும் தொடர்ந்து சுஜாதா தன் கட்டுரைகளில் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். இதனால் அப்பத்திரிகையை கடந்த பல ஆண்டுகளாக நான் வாசித்து வருகிறேன். நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும் , பெரியவாச்சான் பிள்ளையும் , இன்னும் பலப் பல வைணவ இலக்கியங்களும் எனக்கு அறிமுகமானது சுஜாதாவின் மூலமாகத்தான் என்று சொல்லலாம். ஸீரோ டிகிரியின் மொழியில் ஒரு சீரான தாள லயத்தை ஒருவர் உணர முடியும். இதற்குக் காரணமாக அமைந்தது என் உணர்விலும் உயிரிலும் கலந்திருந்த ஆழ்வார் பாசுரங்கள்தான்.
உலக இலக்கியத்தை எவ்வளவு தீவிரமாக வாசிக்கிறேனோ அதே அளவு தீவிரத்துடன் வைணவ இலக்கியத்தை வாசித்து வருகிறேன். வேளுக்குடி வரதாச்சாரியாரைப் பற்றிய குறிப்பு ஸீரோ டிகிரியில் உண்டு. அவரது புதல்வர் வேளுக்குடி கிருஷ்ணன் அமெரிக்காவில் பெரிய உத்தியோகத்தில் இருந்தவர் , தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு , அமெரிக்காவையும் ஆடம்பர வாழ்வையும் உதறிவிட்டு இங்கே வந்து உபந்யாசம் செய்யத் துவங்கியதிலிருந்து அவரை விடாமல் கேட்டு வருகிறேன். அவரது கம்ப ராமாயண உபந்யாசத்தை ( 18 மணி நேரம்) முழுவதுமாகக் கேட்டு விட்டு ஒருவர் கம்பனுக்குள்ளே நுழைந்தால் அது ஒரு அதியற்புத அனுபவமாக அமையும்.
இப்போது கூட பொதிகை சேனலில் தினந்தோறும் காலை ஆறரை மணிக்கு அவரது உபந்யாசத்தைக் கேட்கலாம். ஆறேழு மாதங்களாகத் தொடரும் அந்த உபந்யாசத்தைத் தவறாமல் கேட்டு வருகிறேன். மைலாப்பூர் மாதவப் பெருமாள் கோவிலிலும் அவர் அவ்வப்போது உபந்யாசம் செய்வதுண்டு. முதல் ஆளாக முதல் வரிசையில் அமர்ந்திருப்பது அடியேன்தான். தமிழை வளர்க்கிறோம் என்று இன்றைய தினம் சில சினிமா டைரக்டர்களும் , அரசியல்வாதிகளும் புறப்பட்டிருக்கிறார்கள். போலீஸ் என்ற வார்த்தையை போலீசு என்று எழுதினால் தமிழ் வளர்ந்து விடும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் உண்மையிலேயே தமிழ் வாழ்ந்து கொண்டிருப்பதும் , வளர்ச்சி அடைந்து வருவதும் வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற பெரியார்களாலும் , தமிழ் இலக்கியவாதிகளாலும்தான் என்பது என் கருத்து.
இதற்கெல்லாம் எனது சாளரங்களைத் திறந்து விட்டவர் சுஜாதா.
சுஜாதாவிடம் எனக்குப் பிடிக்காதது அவருடைய மட்டையடிப் பகுத்தறிவுவாதம். என்னதான் அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பற்றியும் , ஆழ்வார்கள் பற்றியும் பேசினாலும் அதெல்லாம் அவரது இலக்கிய அனுபவங்களாகவே இருந்தன. அவருக்கு ஜோதிடம் போன்ற விஷயங்களில் அறவே நம்பிக்கை இருக்கவில்லை. அதையெல்லாம் பற்றி எப்போதுமே அவர் கிண்டலுடனேயே எழுதி வந்தார். ஒரு பிரிட்டிஷ் பிரஜையைப் போலவே அவர் இந்திய மரபை அணுகினார். இந்திய மரபின் மாந்த்ரீகத்தையும் , தாந்த்ரீகத்தையும் விஞ்ஞானப் பார்வையில் எப்படிப் புரிந்து கொள்ள முடியும் ? வள்ளலாரையும் , ராமகிருஷ்ண பரமஹம்சரையும் , ரமணரையும் , ஷீரடி பாபாவையும் அவர்கள் செய்த சித்து வேலைகளையும் பற்றிப் புரிந்து கொள்ள எந்த மேலைநாட்டு விஞ்ஞான அறிவும் உதவாது என்பதை சுஜாதா அறியவில்லை. பின்னாளில் அவர் ஆன்மீகத்தின்பால் ஈர்க்கப்பட்டார் ; தனது இறுதிக் குறிப்பில் பெருமாள்பகவான் என்று எழுதியிருக்கிறார்- என்றாலும் 50 ஆண்டுகளாக அவர் கொண்டிருந்த பகுத்தறிவுக் கண்ணோட்டத்தின் அடிப்படை அவரிடம் மாறி விட்டதற்கான ஆதாரம் அவரது எழுத்தில் காணக் கிடைக்கவில்லை.
ஆனால் அவர் படித்த புத்தகங்களைப் படித்து , அவர் காட்டிய திசைவழிச் சென்று நான் ஒரு ஆன்மீகவாதியாகவே மாறிவிட்டேன். இருப்பிடத்தையும் கேசவப் பெருமாள் கோவிலருகே மாற்றிக் கொண்டு விட்டேன். தினமும் எழுந்தவுடன் தர்சனம் தருவது கேசவப் பெருமாளின் திருமுகம்தான்.
* * *
சுஜாதாவை நேரில் சந்திக்காமலேயே , அவர் எனது ஆசானாக இருந்து வந்திருக்கிறார் என்பதைக் கூட பிரக்ஞாபூர்வமாக உணராமலேயே நான் அவரிடமிருந்து பலப்பல வருடங்களாக பல்வேறு விஷயங்களைக் கற்று வந்திருக்கிறேன். நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவனாதலால் யாரிடமும் வலிய சென்று பார்ப்பதில்லை ; பேசுவதில்லை. ஜெயகாந்தனின் வீட்டுக்கு ஓரிரு வீதிகள் தள்ளித்தான் 10 ஆண்டுக்காலமாக வசித்து வந்தேன். அவரைப் பார்க்க வேண்டும் ; ஒரு முறையாவது அவரோடு கஞ்சா புகைக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் அதோடு சரி.
அதேதான் சுஜாதா விஷயத்திலும் நடந்தது. அப்படியிருக்கும் போது 1994- ஆம் ஆண்டு கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் என் கதை முதல் பரிசு பெற்றது. ' நினைவுகளின் புதர்ச்சரிவுகளிலிருந்து ' என்ற அக்கதை அதே ஆண்டு மே மாத கணையாழியில் வெளிவந்தது. இக்கதையை ஸ்ரீவைஷ்ணவ இனத்தில் பிறந்து வளர்ந்த ஒருவரால்தான் எழுத முடியும் என்பதால் இதைப் படித்த சுஜாதா கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கனிடம் " சாரு நிவேதிதா என்ற பெயரில் வேறு ஒருத்தரும் எழுகிறார் போலிருக்கிறதே ?" என்று கேட்க , கஸ்தூரி ரங்கன் " இல்லை அதே சாருநிவேதிதா தான் " என்று சொல்லியிருக்கிறார். " அப்படியானால் அவரைச் சந்திக்க விரும்புகிறேன் " என்று சுஜாதா தெரிவிக்க அவரை நான் நேரில் சந்தித்தேன். அப்போது அவர் ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் இந்திரா பார்த்தசாரதியின் வீட்டுக்கு எதிரே வசித்து வந்தார்.
இந்த நேர்ச்சந்திப்புக்கு முன்னால் நடந்த வேறொரு விஷயத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். எனது நெருங்கிய நண்பர்களான மனுஷ்யபுத்திரனுக்கும் , கனிமொழிக்கும் சுஜாதா நேரடியாக பல விஷயங்களை கற்பித்திருக்கிறார் ; வெகுஜன பத்திரிகைகளில் தான் எழுதும் பிரபலமான பத்திகளில் அவர்களைப் பற்றி விடாது எழுதி வந்திருக்கிறார் ; உற்சாகப் படுத்தியிருக்கிறார் ; இன்ன பிற. ஆனால் அவரை எனது மானசீக குருவாக ஏற்று தொலைவிலிருந்தே அவரிடமிருந்து கற்றுக்கொண்டு வந்த என்னைப் பற்றி அவர் மிக மோசமான கருத்தையே கொண்டிருந்தார். இவ்வளவுக்கும் நான் அவருடைய நேர் வாரிசாகவே அவருக்குரிய பல்வேறு விஷயங்களை என் எழுத்தில் ஸ்வீகரித்துக் கொண்டிருந்தேன். அவருடைய அங்கதம் , எளிமையும் சுவாரசியமும் கூடிய பாணி , அதனூடே உள்குத்தாக மறைந்திருக்கும் கனமான சிந்தனைக் கீற்றுகள் , எடுத்தால் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான நடை என்று என் எழுத்தின் பல்வேறு சாதகமான அம்சங்களுக்கு முன்னோடியும் , ஆசானும் சுஜாதா தான்.
மார்ச் 1976 கணையாழி கடைசிப் பக்கங்களில் அவர் தமிழில் கிடைக்கும் போர்னோ எழுத்து பற்றி இப்படி எழுதுகிறார்:
" தமிழில் போர்னோ கிராஃபி இருக்கிறதா என்ன ? "
சமீபத்தில் சென்னை சென்றிருந்தபோது கடைகளில் தொங்கிய முத்தம் , பருவம் , தில்குஷ் , மோகினி போன்ற முன்பக்கமும் ஸ்டேப்பில் அடித்த பத்திரிகைகளில் சிலவற்றை ஆராய்ந்தேன். ம்ஹூம்! ஜாக்கெட்டின் பட்டன்களை அவிழ்ப்பதுடன் போர்னோ நின்று விடுகிறது. உண்மையான போர்னோ எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும். . . அமெரிக்கர்களை இதில் மிஞ்ச முடியாது-ஃபிலிப் ராத் , வானர்காட் போன்றவர்களைத் தனிப்பட்டுக் குறிப்பிடலாம்.
தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால். . . சங்கப் பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப் பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய்விடுகிறது. திருக்குறளில் காமத்துப் பாலில் சில வரிகள் பளிச்சிடுகின்றன. இருந்தும் வள்ளுவரின் காமத்தில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள் , ஊடல் , வளை கழல்வது இன்னபிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும் out of proportion கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். . . இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம் (உலோபியின் தருமம்!) ; சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள்! அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno :
அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள. . .
மேலே ' திருப்புகழில் ' தேடிக்கொள்ளவும்.
சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் அந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பதங்கள் என்று தேவதாசிகளுக்கான நடனப் பாடல்கள் ராகதாளத்துடன் நிறைய எழுதப்பட்டன. இவைகளில் எல்லாம் கண்ணனின் லீலைகளை விஸ்தாரமாக வர்ணித்து அவன் இப்படிச் செய்தான் , இங்கே கடித்தான் , சகியே அவனைக் கூட்டிவா. . . பசலை! என்ற ரீதியில் எழுதப்பட்ட அந்தப் பாடல்களை எவரும் பாடியதாகத் தெரியவில்லை. சில அந்தரங்க சபைகளிலேயே நடனமாடியிருக்கலாம். பக்தியும் போர்னோவும் கலக்கும் வினோதம் இந்திய இலக்கியத்தின் தனிப்பட்ட அம்சம்.
இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிக போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனில் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன் , கு.ப.ரா. போன்றவர்கள் தலைவைத்துப் படுக்கவில்லை. ஏன் நம் புதுக் கவிஞர்களும் புது எழுத்தாளர்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். (தமிழ் நாடனின் ' காமரூபம் ' சற்று வேறு ஜாதி) எடுத்துக் கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும். அதற்கப்புறம் என்னடா என்றால் ' அவர்கள் இருவரும் இருளில் மறைந்தார்கள். ' ஏன் மறைய வேண்டும் ?"
சுஜாதா இதை எழுதிய பிறகு 13 ஆண்டுகள் கழித்து 1989- ஆம் ஆண்டு என்னுடைய முதல் நாவல் ' எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் ' வெளி வருகிறது. பின்னர் அதைத் தொடர்ந்து வெளி வந்தது ' கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் ' என்ற சிறுகதைத் தொகுதி.
சுஜாதா தமிழில் போர்னோ பற்றிப் பேசும்போது மிகச்சரியாகவே ஆங்கில எழுத்தாளர்களான ஃபிலிப் ராத்தையும் , கர்ட் வனேகட்டையும் ( Kurt Vonnegut ) குறிப்பிடுகிறார். இது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம். ஏனென்றால் அவர் இதை எழுதி இப்போது 32 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றைக்கும் இந்த இருவரையும் படித்த தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சுஜாதாவின் உலக இலக்கியப் புலமைக்கு இது ஒரு உதாரணம். தமிழின் வெகுஜன இதழ்களில் எழுதுவதாலேயே சுஜாதாவைப் போல் ஆகி விடலாம் என்று நினைத்த பைங்கிளி எழுத்தாளர் யாருமே அவரது நிழலைக் கூட தொடமுடியாமல் போனதற்குக் காரணம் இதுதான். சுஜாதா ஒரு பைங்கிளி எழுத்தாளர் அல்ல. வெகுஜன இதழ்களில் எழுதிய ஒரு இலக்கியவாதி. மாறுவேடத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு கலைஞன்.
ஃபிலிப் ராத்தையும் , கர்ட் வனேகட்டையும் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவிலும் போர்னோ என்று கூறினாலும் , பின்னர் சில ஆண்டுகளல் போர்னோ என்பதே ஒருவித இலக்கிய வகையாக (நிமீஸீக்ஷீமீ) மாறிவிட்டது. அது வேறு விஷயம்.
மேற்குறிப்பிட்ட நாவலையும் , சிறுகதைகளையும் எழுதிய போது எனக்கு ஃபிலிப் ராத்தையும் , வனேகட்டையும் அவ்வளவாகத் தெரியாது. அமெரிக்க நூலகத்தில் கொஞ்சமாக மேய்ந்திருக்கிறேன் ; அவ்வளவுதான். ஸீரோ டிகிரி வெளி வந்தபிறகு தான் ( 1989) எனக்கும் சில அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் இருந்த இணைத்தன்மைகளை அறிந்து கொண்டேன். அவர்களுள் முக்கியமானவர்கள் ஜெர்ஸி கோஸின்ஸ்கி மற்றும் சார்லஸ் ப்யூகாவ்ஸ்கி.
இப்போது தமிழில் போர்னோ என்ற சுஜாதாவின் குறிப்பை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். இது ஒரு புறமிருக்க , காலச்சுவடு பத்திரிகையில் இரண்டு பேர் கர்ட் வனேகட்டை நான் நகலெடுத்து எழுதுவதாக அவதூறு செய்தி எழுதியிருந்தனர் என்பதையும் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
உலகில் இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதும் இரண்டு வெவ்வேறு எழுத்தாளர்களிடம் ஒரே விதமான எழுத்துப் பாணி இருப்பது சர்வ சகஜமான ஒரு விஷயம். என்னுடைய எழுத்தில் மலையாள எழுத்தாளர் வி.கே. என்னின் பாணி அப்படியே மாற்றுக்குறையாமல் இருப்பதாக சில நண்பர்கள் கூறியிருக்கின்றனர். அதற்குப் பிறகு தான் நான் வி.கே.என்னைப் படித்தேன். ஆச்சரியகரமான ஒற்றுமை!
ஆனால் வனேகட்டையும் படித்து , சாரு நிவேதிதாவையும் படித்த சுஜாதா என்ன செய்திருக்க வேண்டும் ? தமிழில் செறிவான போர்னோ வந்து விட்டது என்று கொண்டாடி இருக்க வேண்டும். (இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ; இன்னமும் நான் போர்னோவை எழுதவே ஆரம்பிக்கவில்லை என்பதே அடியேனுடைய அபிப்பிராயம்). ஆனால் கடைசிப்பக்கங்களில் சுஜாதா என்ன எழுதினார் தெரியுமா ? இதோ:
" தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்று கேட்டு சில வருஷங்களுக்கு முன் இந்தப் பக்கங்களில் தமிழில் இருப்பதெல்லாம் ' ஸாப்ட் போர்னோ வகை ' என்று சொல்லியிருந்தேன். இப்போது தமிழில் போர்னோ வயசுக்கு வந்துவிட்டது. அண்மையில் வெளிவந்த சில புத்தகங்களையும் பத்திரிகைக் கதையையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். சாரு நிவேதிதாவின் ' எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் பேன்ஸிபனியனும் ', கர்நாடக முரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஒரு அமைப்பியல் ஆய்வும் ' என்ற இவ்விரு புத்தகங்களிலும் (மெட்டா ஃபிக்ஷன் என்கிறார்கள்) எல்லை மீறிய கெட்ட வார்த்தைகள் பிரயோகித்து இன்னது என்று இல்லா வக்ர உறவுகளும் பெய்து படிக்கிற பேரையெல்லாம் வெறுக்க வைக்கும் வீம்புடன் வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு புத்தகங்களை விவரிக்க வார்த்தைகள் புத்தகத்திலேயே இருக்கிறது. ' டோட்டல் டிஸ் இண்டக்ரேஷன் , டோட்டல் ஃபார்ம்லஸ்னஸ் '.
கி.ராஜ நாராயணன் எழுதும் ' வயது வந்தவர்களுக்கு ' என்ற கதைத் தொடர் தாய் இதழில் கொஞ்சம் ' wicked ' என்று சொல்வேன். இந்த மாதிரி வார்த்தைகளையும் கதைகளையும் நாம் தினம் தினம் கேட்காமலில்லை. தெருவில் கேட்பது , கழிப்பறைகளில் எழுதுவது அனைத்துமே அச்சில் வருவது மேல்நாட்டு இலக்கியங்களிலும் சினிமாக்களிலும் உண்டு. தமிழில் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இலக்கியம் என்பது கங்கை நதிபோல ; அதில் எல்லா சங்கதிகளும் மிதந்து செல்லும் என்று சொல்வார்கள். அந்த வகையில் மேற்குறித்தவைகளும் பழுப்பாக மிதந்து செல்கின்றன. "
ஆக , ஆங்கிலத்தில் வனேகட் எழுதினால் உசத்தி ; தமிழில் சாரு நிவேதிதா எழுதினால் மலம்! ஆனால் சுஜாதாவின் மேல் எனக்குச் சிறிதளவு கோபமும் இல்லை. ஏனென்றால் அவரிடம் நேர்மை இருந்தது.
மற்றவர்கள் செய்வது என்னவென்றால் என் பெயரையே இருட்டடிப்பு செய்து விடுவார்கள். 500 பக்க தொகுபபு ஒன்று வரும். அதில் என்னுடைய கதை ஒன்றும் இருக்கும். ஆனால் அத்தொகுதியில் காணும் அத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு மதிப்புரை எழுதும் ஒருவர் என்னுடைய கதையை மட்டும் விட்டுவிடுவார். மலம் என்று திட்டக் கூட மாட்டார். ஒட்டுமொத்தமான இருட்டடிப்பு. தமிழில் நான்-லீனியர் பாணியில் எழுதிய முதல் ஆள் நான்தான். இன்று வரை விடாமல் கடந்த 20 ஆண்டுகளாக அந்தப் பாணியில் எழுதி வரும் ஒரே ஆளும் நான் தான். ஆனால் சுப மங்களா பத்திரிகையில் வெளிவந்த இரண்டு டஜன் பேட்டிகளிலும்-ஒரு பேட்டி தவறாமல் ' நான்-லீனியர் எழுத்து பற்றி உங்கள் கருத்து என்ன ?' என்ற கேள்வி இடம் பெற்றிருக்கும். பொள்ளாச்சி மகாலிங்கத்திடம் கூட பேட்டியாளர் இந்தக் கேள்வியைக் கேட்பார். ஆனால் எதிலுமே என் பெயர் இடம் பெற்றிருக்காது.
இந்த நிலையில் சுஜாதாவின் ' பழுப்பு ' விமர்சனத்தில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ' அப்பாடா , இந்த ஒரு ஆளாவது என் பெயரைக் குறிப்பிட்டுத் திட்டியிருக்கிறாரே! ' என்ற ஆசுவாசமே எனக்கு ஏற்பட்டது.
மேலும் , உண்மையிலேயே சொல்கிறேன். என் எழுத்தை ஒருவர் மலம் என்று திட்ட அவருக்கு உரிமையிருக்கிறது. நான் எத்தனை பேரை மலம் என்று திட்டியிருக்கிறேன் ? என் எழுத்தைப் பற்றிய எவ்வளவு கடுமையான வார்த்தைகளையும் கண்டு நான் கோபமடைவது இல்லை.
சுஜாதாவுடனான சந்திப்பு குறித்து சந்தோஷமடைய என்னிடம் ஆயிரம் விஷயங்கள் இருந்தன. அவரை நான் தொடர்ந்து என்னுடைய ஆசானாக மட்டுமல்லாமல் , சகாவாகவுமே கருதி வந்திருந்தேன். அவருடன் எனக்கு மிக நெருக்கமான , உணர்வு பூர்வமான உறவு இருந்தது. இதற்கு ஆதாரமாக நூற்றுக்கணக்கான உதாரணங்கள் தரலாம் என்றாலும் இட வசதி கருதி ஒரே ஒரு உதாரணம்: 1966- ஆம் ஆண்டில் சுஜாதா கணையாழியில் பீட் எழுத்தாளரான ஆலன் கின்ஸ்பர்க் பற்றி எழுதியிருக்கிறார். அவரைப் பற்றிய மிகச் சரியான அறிமுகத்தை எழுதிவிட்டு இறுதியில் இவ்வாறு எழுதுகிறார்: " கின்ஸ்பர்க் இளைஞர் கூட்டங்களில் அடிக்கடி படித்துக் காட்டும் அவருடைய ' ஹெளல் ' என்கிற கவிதையின் சில வரிகளைத் தமிழ்ப் படுத்தி இந்தப் பகுதியில் சமயம் வரும்போது வெளியிட எனக்கு ஆசை. " கின்ஸ்பர்க் பற்றி சுஜாதா இப்படி எழுதியிருப்பது எனக்குத் தெரியாது. இப்போது கடைசிப் பக்கங்கள் தொகுப்பை முழுமையாகப் படிக்கும்போதுதான் தெரிகிறது. ஆனால் , என்னுடைய எழுத்தின் ஆதர்சமாக இருந்தவர்கள் பீட் எழுத்தாளர்கள் என அறியப்பட்ட ஆலன் கின்ஸ்பர்கும் , வில்லியம் பர்ரோஸும் தான். இது பற்றி நான் அநேக முறை எழுதியிருக்கிறேன். பர்ரோஸின் Naked Lunch என்னுடைய புனித நூல். பர்ரோஸ் அரபி கற்றுக் கொண்டு மொரக்கோ சென்று வாழ்ந்தவன். கின்ஸ்பர்க் காவித்துண்டைக் கட்டிக்கொண்டு காசியில் வாழ்ந்தவர். இவர் பற்றி 1966 இல் சுஜாதா எழுதுகிறார்: " கின்ஸ்பர்க் 1965 ல் இந்தியா வந்தார். காசியில் ஒரு குடிசை போட்டுக் கொண்டு தங்கி , கங்கையில் குளித்து , வேத மந்திரங்கள் பயின்று அந்த வயதில்லாத நகரத்தின் விசித்திர வீதிகளில் கங்கைக் கரையில் சுடுகாட்டு நெருப்பின் வெளிச்சத்தில் அலைந்து தேடினார். அவரிடம் உபதேசம் பெற்ற கல்கத்தா இளைஞர்கள் எழுதிய புத்தகங்களை அரசாங்கம் தடை செய்தது. "
சுஜாதா குறிப்பிடும் கின்ஸ்பர்க்கின் ' ஹெளல் ' கவிதையை சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிதை என்று கூறி என்னுடைய அத்தனை நண்பர்களிடமும் நான் வாசித்துக் காட்டுவது வழக்கம்.
இதனால்தான் சுஜாதாவை எனது தோழனாகவும் கருதினேன்.
* * *
அது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. சுஜாதாவின் வீடு மாடியில் இருந்தது. வீட்டின் வெளியிலேயே செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய முதல் கேள்வியே " உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் ?" என்பதுதான். நான் ஒருக்கணம் கூட யோசிக்காமல் சீரியஸாக " எந்த கண்டத்தில் ?" என்று கேட்டதும் அவர் சற்று திடுக்கிட்டு விட்டார். பிறகு நான் நிதானமாகச் சொன்னேன். " எனக்குத் தமிழில் அநேகம் பேரைப் பிடிக்காது ; ஆஃப்ரிக்க கண்டத்தில் எந்த எழுத்தாளரையும் படித்ததில்லை. அமெரிக்காவில் பீட் எழுத்தாளர்கள். தென்னமெரிக்காவில் பல பேர். அவர்களில் முக்கியமானவர் மரியோ பர்கஸ் யோசா. . . " சொல்லிவிட்டு " உங்களிடம் யோசா அளவுக்கான திறமை இருந்தும் நீங்கள் அதை வெளிப்படுத்தாதது பற்றி எனக்கு ஒரு மனக்குறை இருக்கிறது " என்றேன்.
சிரித்தார்.
திருமதி. சுஜாதாவின் அருமையான காப்பி வந்தது.
பேசி முடித்துவிட்டு வெளியே வந்த போது என் செருப்பைக் காணவில்லை. சுஜாதாவுக்கு ஒரே ஆச்சரியம். " இப்படி நடந்ததே இல்லை! " என்று திரும்பத் திரும்ப சொன்னார். செருப்பு இல்லாமலேயே ஆட்டோவில் திரும்பினேன்.
பின்னர் மீண்டும் சில சந்திப்புகள்.
பிறகு ஒரு மழைக்காலத்தில். காலை 10 மணிக்கு சந்திக்க வேண்டிய நேரம். திடீர் மழையினால் ஆட்டோ தண்ணீரில் தத்தளித்த படியே சென்றது. ஒரு டெலிபோன் பூத் அருகே நிறுத்தி , நிலைமையை விளக்கி , "11 மணிக்குத் தான் சந்திக்க முடியும் போலிருக்கிறது ; வரலாமா அல்லது இன்றைய சந்திப்பை ரத்து செய்து விடலாமா ?" என்று கேட்டேன். " வாருங்கள் " என்றார்.
நான் சென்ற போது 11 மணி.
கதவைத் திறந்து உள்ளே கூட நுழையவில்லை. அதற்குள்ளாகவே " உங்களுக்காக ஒரு மணி நேரம் அனாவசியமாக காத்திருக்க வேண்டியதாகி விட்டது. எதற்காக நீங்கள் என்னைச் சந்திக்க விரும்புகிறீர்கள் ?" என்று மிகக் கோபமான குரலில் கேட்டார்.
ஒன்றுமே பதில் சொல்லாமல் , உள்ளேயும் நுழையாமல் அப்படியே திரும்பி விட்டேன். ஏற்கனவே தொட்டாற் சுருங்கியான எனக்கு இது அதிக பட்ச வார்த்தைகள். " இனிமேல் இந்த ஆள் முகத்திலேயே விழிக்கக் கூடாது " என்று நினைத்துக் கொண்டேன்.
* * *
தனிப்பட்ட உறவுகளில் நேரும் இப்படிப் பட்ட உரசல்கள் அவர்கள் எழுத்தின் மீது நான் கொண்டுள்ள மதிப்பை என்றுமே பாதித்ததில்லை. அதே போல் ஒருவர் எவ்வளவுதான் கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாலும் அவருடைய எழுத்து எனக்குப் பிடிக்கவில்லையானால் தயவு தாட்சண்யமின்றி முகத்துக்கு நேராகச் சொல்லி விடுவேன். அசோகமித்திரனுக்கு என் எழுத்தைப் பிடிக்காது. கொஞ்சம் தந்திரம் தெரிந்ததால் சுஜாதா அளவுக்கு வெளிப்படையாக மலம் என்று சொல்லவில்லை. எனக்கும் அசோகமித்திரனைப் பிடிக்காது. அவருடைய கருத்துக்கள் இந்துத்துவ அடிப்படைவாதம் சார்ந்தவை. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக அவருடைய எழுத்து எனக்கு ஒரு கொண்டாட்டம். ஒருமுறை பாரதீய ஞானபீடப் பரிசுக்கு ஒரு பெயரை முன்மொழியும் படி ஒரு படிவம் எனக்கு அனுப்பப்பட்டபோது (விலாசம் தவறிவந்திருக்கும் ; வேறொன்றுமில்லை) அசோகமித்திரனின் பெயரையே சிபாரிசு செய்து எழுதினேன்.
எனவே , சுஜாதாவை சந்திக்கக் கூடாது என்ற முடிவுக்கும் , அவரது எழுத்துடனான எனது உறவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரது மரண தினம் வரை விகடனைப் பிரித்தால் நான் முதலில் படிப்பது சுஜாதாவின் ' கற்றதும் பெற்றதும் ' பகுதியைத் தான். ரொலான் பார்த் கூறும் வாசிப்பு இன்பம் என்ற ஒன்றை சுஜாதாஅளவுக்கு வாசகர்களுக்கு நல்கிய வேறொரு எழுத்தாளன் யாரும் இல்லை என்பதே சுஜாதாவின் விசேஷம். அதனால்தான் அவரது சலவைக் கணக்கு கூட பத்திரிகையில் பிரசுரமானது. ஆனால் தமிழ்ச் சமூகம் சலவைக் கணக்கை மட்டுமே வாங்கிக் கொள்ளும் ; அறிவை வாங்கிக் கொள்ளாது.
' ரத்தத்தின் நிறம் சிவப்பு ' என்ற அவரது தொடர்கதை குமுதத்தில் வெளிவந்தபோது ஆயுதம் தாங்கிய கும்பல் அப்பத்திரிகை அலுவலகத்தைச் சுற்றி வளைத்தது. சுஜாதாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. தொடர்கதை உடனடியாக நிறுத்தப்பட்டது. உயிருக்கே உத்தரவாதம் இல்லாதபோது அவர் எப்படி மரியா பர்கஸ் யோசா அளவுக்கு எழுதுவது ? பின்னால்தான் இவ்விஷயம் எனக்குப் புரிந்தது.
கல்கி , அரு.ராமனாதனுக்குப் பிறகு அவர்களைப் போல் சுவாரசியமான சரித்திரக் கதையாசிரியர்கள் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சுஜாதாவின் ' காந்தளூர் வசந்த குமாரன் கதை ' அக்குறையைத் தீர்த்தது. ஆனால் ஏழெட்டு பாகங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டிய அந்த நாவல் ஆரம்பித்த ஜோரிலேயே நின்று போனது.
சுஜாதாவுக்கு தமிழ் நாட்டில் எழுத்துச் சுதந்திரம் இல்லை. அவரைத் தமிழ்ச் சமூகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவுமில்லை. மேலும் , கணையாழியில் தெரியும் சுஜாதாவை மிக வசதியாகப் புறக்கணித்த இந்தச் சமூகம் , அவரிடமிருந்து தனக்கு வேண்டியதை மட்டுமே எடுத்துக் கொண்டது.
இவ்வளவு தடைகளுக்கிடையிலும் அவருடைய எழுத்தை கடந்த 45 ஆண்டுகளாக அவருடைய கடைசி தினம் வரையிலும் நம்மால் உற்சாகமாகப் படிக்க முடிந்தது. உதாரணமாக , இப்போது விகடனில் வெளிவரும் வண்ணதாசனின் பத்தியை என்னால் ஒரு வரிகூட படிக்க முடியவில்லை. ஆனால் இலக்கியச் சூழலில் வண்ணதாசன் தான் இலக்கியவாதியாக மதிக்கப்படுபவர் ; சுஜாதாவுக்கு அந்த அங்கீகாரம் கடைசி வரை கிடைக்கவில்லை. இதுதான் தமிழின் நவீன இலக்கியம் உலக அளவில் மிகப் பின் தங்கிய அளவில் இருப்பதன் காரணம். பெரும்பாலான எழுத்தாளர்கள் இன்னும் 60 களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுஜாதா கடைசி வரை சமகாலத்தவராகவே வாழ்ந்தார். அவருடைய சமீபத்திய ஒரு கதையில் ஒரு காதலன் காதலியிடம் ' ச்சோ ச்வீட் ' என்று கொஞ்சுவான். இது இன்றைய இளைஞர்களின் மொழி என்பது சுஜாதாவுக்குத் தெரிந்திருக்கிறது. பல இலக்கியவாதிகள் இதை அறிய மாட்டார்கள்.
சுஜாதா இன்னும் 20 ஆண்டுகள் இருந்திருந்தால் அப்போதும் 2028 இன் இளைஞர்களின் உலகை எழுதியிருப்பார் ; அப்போதும் சமகாலத்தவராக இருந்திருப்பார்.
* * *
சுஜாதாவின் மிக வீரியமான பகுதியை தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ளவே இல்லை என்று குறிப்பிட்டேன். அவருடைய கணையாழி கடைசிப் பக்கங்கள் தொகுக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் பேசிய கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் கடைசிப் பக்கங்களெல்லாம் தொகுக்கப் பட வேண்டும் என்று குறிப்பிட்டார். ஹிந்து பத்திரிகையும் அதையே எழுதியிருந்தது. வெகுஜனப் பத்திரிகைகளில் வராத சுஜாதாவின் சீரியஸ் எழுத்துக்கள் ஒரு சில ஆயிரம் பிரதிகளே விற்பதும் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு.
வெகுஜன சினிமா மற்றும் பத்திரிகைகளை ஏதோ நான்தான் முதல் முதலாகத் தாக்குகிறாற் போல் எனது நண்பர்கள் விசனப்படுகிறார்கள். ஆனால் சுஜாதா இதையெல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்பே செய்ய ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகள் வரை செய்து கொண்டிருந்தார். அவருடைய கடும் விமர்சனங்களுக்கும் , கேலிக்கும் ஆளாகாத ஆளே இல்லையோ என்று சொல்கிற அளவுக்கு எழுதியிருக்கிறார். மொத்தம் 540 பக்கங்கள் வரக்கூடிய ' கணையாழி கடைசிப் பக்கங்கள் ' என்ற அந்தப் புத்தகம் முழுவதையும் இதற்கு நான் உதாரணமாகக் கூறலாம். அவற்றில் ஒரு சில:
" டில்லித் தமிழர்கள் தமிழ்ப் படத்துக்காக ஏங்கியிருப்பவர்கள். அதனால் எந்த ஓட்டைப் படம் வந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் போய் தரிசிப்பார்கள். படங்களின் தரத்தைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. " மாடப் புறாவைப் பார்த்தாயா " என்று கதாநாயகன் கேட்கும்போது நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து கொண்டு " சரி பாடப் போகிறாயா ? பாடு பாடு! " என்று சமாளிக்கும் ' பிலாசபி ' அவர்களது. கொச்சையும் , இலக்கணத் தமிழும் கலந்த வசனங்கள். ' ப ' னாவில் ஆரம்பிக்கும் ஒன்பது எழுத்து , ஏழு எழுத்து பீம்சிங் படங்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் ' பாங்கோ ' டிரம்கள் , நம் நாட்டுத் தபலா , கிழக்கத்தி மேற்கத்தி வாத்தியங்களில் வினோதக் கலவையான சங்கீதம் , கண்ணதாசனின் ஆழ்வார் , கம்பர் இவர்களிலிருந்து முழுதாக எடுத்து தமிழ் தேசிய உருவம் கொடுத்து , மெட்டுக்குள் திணிக்கப்பட்ட பாடல்கள். வாலி! கேட்க வேண்டாம். காப்பி அடிப்பவரைக் காப்பி அடித்து அரைகுறை யாப்பிலக்கணப்படி அசிங்கமான எதுகைமோனைகள் அமைந்த பாடல்கள். 7,8 பிளேடுகளை விழுங்கி விட்டுப் பேசும் பிறமொழி நடிகர்கள். யாரைக் கண்டாலும் ' பளேர் ' என்று கன்னத்தில் அறையும் அம்மாக்கள். சிவாஜி கணேசனின் கன்னங்கள்-சினிமாஸ்கோப் ஆகிருதி. ஜெமினி கணேசனின் மேற்படி , மேற்படி ' எங்கள் எம்.ஜி.ஆர் ' மேற்படி. மேற்படி கன்னடத்து நடிகைகள் ( " யன்னை யதற்காகக் கூப்பிட்டீர்கள் ?") டைரக்டர்கள்-பிற மொழிப் படங்களிலிருந்து ஒட்டவைத்து திடீரென்று மனசில் மத்தாப்பு வெடிக்கும் , மனசாட்சி பெரிய உருவமெடுத்து நிற்கும் , பறவைகள் சிறகடிக்கும்.
தமிழ் சினிமாவுக்கு கதியில்லை என்றேன். ஸ்ரீதரின் ' நெஞ்சில் ஓர் ஆலயம் ' சிறந்த படங்களில் ஒன்று என்றால் தமிழ் சினிமாவுக்கு கதியில்லை என்று மறுபடி சொல்வேன். "
சிவாஜி கணேசன். இவர் முக்கால்வாசிப் படங்களில் கேவிக் கேவி அழுகிறார். பின்னால் தாடி வளர்க்கிறார் , அல்லது கை கால் , கண் பார்வை ஏதாவது ஒன்று இழக்கிறார். இப்படி இல்லாத படங்கள் மிகச் சிலவே!. . . எல்லோரும் நாடகத்தில் போல் ஒரே திக்கில் பார்த்துக் கொண்டு இடமிருந்து வலம் வரிசையாக நின்று கொண்டு நடிக்கிறார்கள். ' ரியலிஸம் ' இல்லை.
" ராஜராஜசோழன் ' சிவாஜி கணேசன் நடிக்கும் தமிழ்ப் படத்தில் எத்தனையோ செலவழித்து மெட்றாஸில் தஞ்சைக் கோயிலையும் நந்தியையும் அட்டையில் செட் அமைத்துப் பிடித்திருக்கிறார்களாம். இதைவிட. . . த்தனமான காரியம் இருக்க முடியாது. "
" வர்ணப் படம் என்றால் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ஏழு வர்ணங்களும் கசிந்தாக வேண்டும் என்று நினைப்பவர்களைத் திருத்துவது கடினம். தமிழ் சினிமா ஒரு ஸ்ட்ரெட்சர் கேஸ். நான் சமீபத்தில் படம் எடுப்பதாக இல்லை. "
அடுத்து , எங்க வீட்டுப் பிள்ளையில் வரும் ' கண்களும் காவடிச் சிந்தாடட்டும் ' என்ற பாட்டைப் பற்றி:
" கண்களும் காவடிச் சிந்தாடட்டும்
காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்
பெண்களும் ஆண்களும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்
இதை எழுதியவர் பஞ்சு அருணாசலம் என்ற ஒரு பேர்வழி. ஒரு சந்தேகம். காவடிச் சிந்து என்பது ஒரு வகை பாட்டு. நடனமல்ல. கண்கள் எப்படிக் காவடிச் சிந்து ஆட முடியும் ? பெண்களும் ஆண்களும் ஒன்றாகட்டும் என்றால் என்ன அர்த்தம் ? எல்லாரும் அர்த்தநாரீசுவரர்கள் ஆகிவிட வேண்டுமா ? இந்த மாதிரி எழுதி தமிழ் சினிமா பாட்டுக் கேட்கிறவர்கள் காதில் ' பூ ' வைக்கிறார்கள். "
வெகுஜனப் பத்திரிகைகள் பற்றி:
" பார்வதி பரமேச்வரர் படமானாலும் கவர்ச்சியாக இருப்பது முக்கியம்.
' ஆனந்த விகடனும் ', ' கல்கியும் ' ஒன்றையன்று மிஞ்சுகின்றன. எடை போட்டுப் பார்த்ததில் ' கல்கி ' தீபாவளி மலருக்குத்தான் பரிசு. எட்டு அவுன்ஸ் அதிகம். "
இதையெல்லாம் சுஜாதா எழுதியிருக்கும் ஆண்டு 1965. வெகுஜனப் பத்திரிகைகளில் வெளிவரும் தொடர்கதைகளைப் பற்றிய அவருடைய கிண்டல் இது:
" ஒரு முக்கியமான தமிழ்ப் பத்திரிகையில் வெளியான சிறு கதையின் ஆரம்பம் இப்படி: சாப்பிட்ட களைப்பால் சோபாவில் சாய்ந்திருந்த சேகரை மெல்லத் தோளில் தொட்டாள் உஷா. தொடர்ந்து " இந்தாருங்கள் " என்று அழைத்தாள்.
உஷா மேலே என்ன செய்தாள் என்று நமக்கு ஆர்வம் எழாது. இத்துடன் ஒரு ஆங்கிலக் கதையின் ஆரம்பத்தை ஒப்பிடலாம்:
தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த ஆசாமிக்கு ஒரு தலை இல்லை. . .
இந்த ஆரம்பம் திடீரென்று நம்மைக் கவர்கிறது. மேலே அவசரப் பட்டுப் படிக்கிறோம் , இம்மாதிரி துவங்கி எப்படி ஆசிரியர் தப்பிக்கப் போகிறார் என்று!இப்படித் தப்பிக்கிறார்: " தலை இல்லை என்றா சொன்னேன் ? மன்னிக்கவும் ; எனக்கு ஞாபக மறதி அதிகம். ஒரு கை இல்லை அவனுக்கு. . . எப்படியோ உங்களைக் கதைக்குள் இழுத்துவிட்டார். "
இதே போல் தொடர்கதையின் முடிவில் எப்படி தொடரும் போடுகிறார்கள் என்பதற்கு சுஜாதா தரும் உதாரணம்:
பம்பரம் கொண்ட சோழன் வெண்கல நாச்சியாரின் சொற்களைக் கேட்டு பிரமித்து நின்றான். ' சரேல் ' என்று எங்கிருந்தோ ஒரு கட்டாரி பாய்ந்து வந்தது. . . - சரித்திரத் தொடர் கதை
" சேகர்!நீ சொல்வது நிஜமா ? என்னால் நம்பவே முடியவில்லையே " என்றாள் வனிதா. விதி சிரித்தது.
- சமூகத் தொடர்கதை
ஜன்னலில் தெரிந்த கை ஒரு வலது கை. கடிகாரம் கட்டிய கை. மணி 6.20
- மர்மத் தொடர்கதை
என் அன்புள்ள வாசகர்களே இந்த மாதிரிக் கதைகளை வாசிப்பதை விட சரும அரிப்பைப் பற்றி ' நிக்ஸோடர்ம் ' விளம்பரத்தைப் படிக்கலாம் என்று நான் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா இல்லையா ?
சினிமா இசையமைப்பாளர்கள்: "( மேற்கத்திய) மெட்டுக்களையெல்லாம் அவர்கள் நாடுகளில் அனுமதியின்றிக் காப்பியடித்தால் கோர்ட்டில் நஷ்ட ஈடு வழக்குப் போடுவார்கள். நம் நாட்டிலோ விஸ்வநாதனுக்கும் , ஷங்கர் ஜெய்கிஷனுக்கும் அந்தக் கவலை இல்லை! "
சினிமாப் பாடல்கள்:
" பாலிருக்கும் பசியிருக்கும்
பழமிருக்காது
பஞ்சனையில் தூக்கம் வரும்
காற்று வராது! "
இலக்கிய வாதிகள்:
" சாகித்திய அகாடமி அவார்டு திரு.சு.சமுத்திரத்துக்கு கிடைத்ததில் சந்தோஷம். எழுத்துடன் சம்பந்தப்படாத துணை வேந்தர்களுக்கும் துணி வியாபாரிகளுக்கும் போகாமல் பரிசு ஒரு எழுத்தாளருக்குக் கிடைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் இந்த பரிசுகள் கிடைத்ததுமே எழுத்தாளர்களுக்கு ஒரு மெஸ்ஸையா பாசாங்கு வந்து விடுகிறது. அது கருந்தாட்டாக்குடி ஜமீன் அறக்கட்டளைப் பரிசாக இருந்தாலும் சரி. பரிசு பெற்றவுடனே தமிழ் இலக்கியத்தை உஜ்ஜீவிக்கிற வேகம் வந்து கொஞ்சம் போலும் உளற ஆரம்பிக்கிறார்கள். அண்மையில் அகிலன் நினைவு நாவல் பரிசு பெற்ற ஒரு இளம் எழுத்தாளர் ஏற்புரையில் , தமிழில் ஒரே ஒரு நாவல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அது ஜேஜே சில குறிப்புகள். அதற்கு மேல் படிக்க தமிழில் வேறு ஏதும் கிடையாது. மலையாளத்தில்தான் உள்ளது என்றாராம். இந்த மாதிரி ஆசாமிகளையெல்லாம் கூட்டி வந்து டிபன் காபி பரிசு எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். "
தமிழ்ச் சமூகம்:
" பிரமிளாவுக்கு நகத்தைக் கடிக்கும் பழக்கம் உண்டு ' என்று ஒரு பத்திரிகை கட்டத்துக்குள் பதிப்பிக்கிறது. பிரமிளாவுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் என்ன வேறு எவளுக்கோ தொடையில் மச்சம் இருந்தால் நமக்கு என்ன என்று ஒருவரும் கேட்பதில்லை. கேள்வி கேட்காமல் இந்த Trivia அனைத்தையும் உட்கார்ந்து கொண்டு படித்துக் கொண்டிருக்கிறோம். இதைவிட அதிகமாக ஒரு ஜனக் கூட்டத்தை எவனும் அவமானப்படுத்த முடியாது என எண்ணுகிறேன். "
நுண்ணுணர்வு:
" குமுதம் இதழ் தற்போது ஓட்டக்காரர்களாலும் ஆட்டக்காரர்களாலும் பாட்டுக்காரர்களாலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் டி.ராஜேந்தர் தயாரித்த குமுதம் இதழில் ஒரு பகுதியை கருத்து தெரிவிக்காமல் அப்படியே தருகிறேன்.
என் பையனைப் பொறுத்த வரைக்கும் ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடனே கான்வர்ஸேஷன் வகுப்பு. ஸ்கூல் ஒர்க் பண்ண , ஸ்டடி பண்ண ஒரு டியூஷன் , தமிழுக்கு ஒரு டியூஷன் , இப்படி மூணு டியூஷனுக்குப் பையன் போறான். இதைத் தவிர கர்நாடக சங்கீதம் கத்துக்கறான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் கராத்தே வகுப்பு , ஜிம்னாஸ்டிக் வகுப்பு , தலைகீழாய் பையன் நடப்பான் , ஸாமர்சால்ட் அடிப்பான். பின்பாக பல்டி அடிப்பான். இதைத் தவிர சனி ஞாயிறில் சினிமா ஃபைட்டிங் , காலையிலே கத்துக்கறான். கம்புச் சண்டை , மான் கொம்புச் சண்டை , குத்துச் சண்டை இந்த மாதிரி அதுக்கான ஸ்டண்ட் மாஸ்டர் வச்சு கத்துத் தர்ரேன். அப்புறம் டான்ஸ் வகுப்பு. . .மேற்கோளிட்ட இந்த வாக்கியங்களின் சமூகவியல் சார்ந்த அர்த்தம் தெரிய வேண்டுமெனில் எனக்கு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய கவர் அனுப்பவும். "
சுஜாதா வெகுஜன கலாச்சாரம் , இலக்கியம் என்று எந்தத் துறையையுமே விட்டு வைக்கவில்லை. தமிழர்கள் போற்றிக் கொண்டாடுகிற அத்தனை விஷயங்களையும் அத்தனை புனித பீடங்களையும் ( Icon s) போட்டு உடைக்கிறார்.
இந்த வகையில் சுஜாதாவை தமிழின் முதல் பின் நவீனத்துவ எழுத்தாளர் என்று சொல்லலாம். De – Canonization என்ற புனித பிம்பங்களை உடைத்தல் என்பதிலிருந்து இவரது பின் நவீனத்துவம் துவங்குகிறது. இவரது புனைகதைகளில் நாம் அடிக்கடி காணும் வடிவ சோதனைகள் , கட்டங்கள் , குறுக்கெழுத்துப் போட்டிகள் , கேலிச் சித்திரங்கள் , எழுத்தையே சித்திரங்களாக மாற்றுதல் , கண்ணாடியின் பிம்பத்தில் தெரிவதைப் போல் எழுதுவது போன்றவை அனைத்தும் பின் நவீனத்துவ விளையாட்டுகளே ஆகும். டொனால்ட் பார்த்தெல்மேயின் ' கீர்க்கேகார்ட் ஷ்லெகலுக்குச் செய்த துரோகம் ' என்ற கதையில் வரும் கறுப்புச் சதுரத்தையும் சுஜாதாவின் கறுப்புச் சதுரங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
* * *
சுஜாதாவை ' வாத்தியார் ' என்று குறிப்பிட்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். முற்றிலும் சரி. தமிழ்ச் சமூகம் கலாச்சார செழுமையற்ற ஒரு சமூகம். கேரளத்தில் கலா கௌமுதி , மாத்யமம் , மாத்ருபூமி என்று ஏழு இலக்கியப் பத்திரிகைகள் வாராந்தரிகளாக வெளி வருகின்றன. விற்கும் எண்ணிக்கை 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம். இங்கே இருக்கும் இரண்டு இலக்கியப் பத்திரிகைகளும் , மாதாமாதம் வெளிவருபவை. அதுவும் 10,000 பிரதிகள் அதிக பட்சம். எவ்வளவு வித்தியாசம் என்று கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
பள்ளிக்கூடங்கள் , கலாசாலைகள் போன்றவை மாணவர்களின் மூளையில் தகவல்களைத் திணித்து அவர்களை வெறும் எந்திரங்களாகவே மாற்றிக் கொண்டிருக்கின்றன. எனவே கலாச்சாரத்துக்கும் மேற்படி ஸ்தாபனங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இப்படியாக சில நூற்றாண்டுகளாகவே கலாச்சாரமோ , ஞானமோ அற்ற பிரஜைகளையே உருவாக்கிக் கொண்டு வந்த தமிழ்நாட்டில் , சுஜாதா கடந்த 40 ஆண்டுகளாக இந்தச் சமூகத்திற்கு ஒரு மாபெரும் Alma mater -ஆகத் திகழ்ந்தார்.
இம்மானுவல் கான்ட் , Zen Satori, மஹாயானம் , ஸென் கவிதைகள் , யாப்பருங்கலக் காரிகைக்கு குணசாகரர் எழுதிய உரையிலும் , ஆழ்வார் பாசுரத்திலும் , தி.ஜானகிராமன் காலத்திலும் தமிழ்மொழி எவ்வெவ்வாறு வேறுபட்டிருந்தது , இ.இ.கம்மிங்ஸ் , ஜான் அப்டைக் , அழகிரிசாமி , கு.ப.ராஜகோபாலன் , அருணகிரி நாதர் , ஸல்வதோர் தாலி , நபகோவ் , கம்பன் , நகுலன் , சத்யஜித்ரே , ஹெமிங்வே , என்.எஸ்.கிருஷ்ணன் , ந.முத்துசாமி , ஏ.கே.ராமானுஜன் , ஞானக் கூத்தன் , கசடதபற இலக்கிய இதழ் , அஃ , அசோகமித்திரன் , வில்லியம் ஃபாக்னர் , சாமுவல் பெக்கெட் , ஸாமர்ஸெட் மாம் , பத்திரகிரியார் , சிவவாக்கியர் , கலாப்ரியா , அயனெஸ்கோ , காஃப்கா , மதுரை ந.ஜயபாஸ்கரன் , எம்.பி.சீனிவாசன் , புறநானூறு , சூடாமணி வசனம் , ஜி.நாகராஜன் , தொல்காப்பியம் , உ.வே.சாமிநாதய்யரின் என் சரித்திரம் , ராபர்ட் ஃப்ராஸ்ட் , தெறிகள்-காலாண்டிதழ் , ஷ்யாம் பெனகல் , Artificial Intelligence , பி.வி.காரந்த் , வீரமாமுனிவர் , கமல்ஹாசன் , எஸ்.டி.பாஸ்கரன் , மிருணாள் சென் , அ.மாதவையா , வேதநாயகம் பிள்ளை , கி.ராஜநாராயணன் , எம்.எஸ்.ஸத்யு , கிரீஷ் காஸரவள்ளி , யு.ஆர்.அனந்த மூர்த்தி. . .
- இதெல்லாம் 1965-75 என்ற வெறும் பத்தாண்டுகளில் சுஜாதா தமிழர்களுக்குக் கற்பித்த விஷயங்கள். பெயர்களைத் தூவிச் செல்வதல்ல அவர் பாணி. நின்று , நிதானித்து , அந்தப் பொருளின் சாராம்சத்தையே பிழிந்து தந்து விடுகிறார். உதாரணமாக இதைப் பாருங்கள்:
" Ionesco வின் Rhinoceros என்கிற நாடகத்தில் ஒரு காட்சி ஞாபகம் வருகிறது. நாடக பாத்திரங்கள் ஒரு பொது இடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது முழுசாக ஒரு காண்டாமிருகம் குறுக்கே திடும் திடும் என்று புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவர்கள் எதிரே ஓடி மறைகிறது. இந்தக் காட்சியின் Incongurity யும் அபத்தமும் அவர்களைப் பாதிப்பதில்லை. ஓடின மிருகம் ஆசிய வகையா ஆப்ரிக்க வகையா என்று சர்ச்சையில் தீவிரமாக இறங்கிவிடுகிறார்கள். நம் தின வாழ்க்கையில் எத்தனை காண்டாமிருகங்கள்! "
இப்படி ஒரே ஒரு பத்தியில் அயனஸ்கோவைப் பற்றி நம் வாழ்நாள் முழுவதுமே மறக்க முடியாத படிச் செய்து விடுகிறார் சுஜாதா. ஆனால் அதே சமயம் யாரையும் புனிதப்படுத்துவதில்லை. இதே அயனஸ்கோவை வேறோர் இடத்தில் யுனெஸ்கோ என்று கிண்டல் செய்கிறார். (அதைப் படித்த போது எனக்கு காப்ரேரா இன்ஃபாந்த்தே Three Traped Tigers நாவலில் Shitspeare என்று எழுதியது ஞாபகம் வந்தது.)
மேலும் சில எழுத்தாளர்களைப் பற்றி எழுபதுகளிலேயே மிக அருமையான அறிமுகங்களைச் செய்கிறார் சுஜாதா. எஸ்.தியோடர் பாஸ்கரன் பற்றி 1976- இல் எழுதுகிறார். கி.ராஜநாராயணன் , ஞானக்கூத்தன் போன்றவர்களைப் பற்றி அவர் அப்போது 35 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருப்பதைப் போல் இன்று வரை கூட யாரும் எழுதியதில்லை-மிகப்பெரும் விமர்சகர்கள் என்று கருதப்படுகிறவர்கள் உட்பட. ஆனால் இலக்கியத்துக்குப் புறம்பான காரணங்களால் ஞானக் கூத்தனைப் பிடிக்காமல் போன அவரது இலக்கிய சகாக்களால் அவர் மோசமான முறையில் தாக்கப்பட்டபோது சுஜாதா ஞானக் கூத்தனின் சார்பாக எழுதுகிறார். அதே போல் நகுலனைப் பற்றி அவரை சிலாகிக்கும் என்னைப் போன்ற ஒரு சிலரே எழுதியிருக்கின்றனர். நகுலனின் சமகாலத்தவரான பல பேர் நகுலன் என்ற எழுத்தாளரே இல்லாதது போல் மௌனம் சாத்திருக்கின்றனர். ஆனால் , 41 ஆண்டுகளுக்கு முன்பே- 1967 இல்- நகுலனின் நிழல்கள் நாவலைப் பற்றி மிகவும் பிரமிப்புடன் எழுதியிருக்கிறார் சுஜாதா. நகுலனைத் தான் புதிதாகக் கண்டு பிடித்தாகவே எழுதுகிறார். எழுத்தாளர்கள் மட்டுமல்ல. கமல்ஹாசனைப் பற்றி சுஜாதா 1976 இல் இப்படி எழுதுகிறார்: " உரக்கப் பேசும் , உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக , கற்பனையுடன் , நம்பும்படி நடிக்கும் கமலஹாசனிடம் தமிழில் நவசினிமாவின் உதயத்தை எதிர்பார்க்கிறேன். இப்போது கமலின் வயது 23!"
வாக்குப் போடும் மின் எந்திரத்தை சுஜாதா கண்டு பிடித்ததாக பலரும் சிலாகிக்கின்றனர். இதுபோல் பல்லாயிரம் சாதனங்களை பல்லாயிரம் பேர் தினந்தோறும் கண்டு பிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கணிப்பொறி என்ற கண்டு பிடிப்பை விட உசத்தியான கண்டு பிடிப்பு வேறேதும் இருக்க முடியுமா என்ன ? ஆனால் சுஜாதா மனித நாகரீகத்தை மேலும் செழுமையாக்கக் கூடிய கலாச்சாரம் என்ற பிரதேசத்தில் நுழைந்து-உலக அளவிலேயே அதிகக் கண்டு பிடிப்புகள் நிகழாத ஒரு வெட்ட வெளி அது ; அதுவும் தமிழகம் என்ற பகுதியில் இந்தத் தேடலில் ஈடுபடுபவனுக்குச் சாதகமான சூழலோ சந்தர்ப்பமோ எதுவுமே கிடையாது-நூற்றுக்கணக்கான கண்டு பிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தவர் சுஜாதா. 50 ஆண்டுக்காலம் தொடர்ந்தது அந்தத் தேடலும் கண்டு பிடிப்புகளும்.
ஒரே ஒரு பத்தியில் , ஒரு சில வாக்கியங்களில் , சமயங்களில் ஒரே ஒரு வார்த்தையில் கூட தன்னுடைய கண்டு பிடிப்பை நமக்கு உணர்த்தி விடுகிறார் சுஜாதா. கலாப்ரியாவின் பெயரைக் குறிப்பிடும் போது அடைப்புக் குறிக்குள் ' சசி ' என்று எழுதுகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அசோகமித்திரனின் ' காலமும் 5 குழந்தைகளும் ' என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது தமிழின் ஓர் அற்புதம் என்று நினைத்தேன். அதனாலேயே அசோகமித்திரன் தொடர்ந்து இனவாத வெறுப்பை உண்டு பண்ணும் கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும் அது பற்றிப் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் அவர் காலமும் 5 குழந்தைகளும் போலவே பல அற்புதங்களை சிருஷ்டித்தவர். இப்போது சுஜாதாவின் கடைசிப் பக்கங்களை ஒரு சேரப் படிக்கும்போது இதை அவர் 1976 இலேயே எழுதியிருப்பது தெரிகிறது. இதோ சுஜாதா:
" காலமும் 5 குழந்தைகளும் சிறுகுதைத் தொகுதியில் இருக்கும் வழி , கடன் , புலிக்கலைஞன் போன்ற அற்புதங்களை அசோகமித்திரன் ஒரே வருஷத்தில் எழுதி இருக்கிறார். பிரமிக்கிறேன். "
* * *
பின் நவீனத்துவத்தின் முக்கியமான பண்பு பகடி. சுஜாதாவின் கேலியும் , கிண்டலும் , எள்ளலும் , பகடியும் கலந்த நடை தமிழில் மிகவும் பிரசித்தமானது. ஆனால் பல எழுத்தாளர்களுக்கு முற்றிலும் அசாத்தியமானதாக இருக்கும் அந்தப் பண்பு சுஜாதாவிடம். பக்கத்திற்குப் பக்கம் விரவிக் கிடக்கிறது. அவரது அத்தனை எழுத்தையும் இதற்கு உதாரணமாகக் காட்டலாம் என்றாலும் 1976 இல் அவர் எழுதிய ஒரே ஒரு பத்தியை இங்கு தருகிறேன்:
" ஆர்.ஜி.பதி கம்பெனி பதிப்பித்துள்ள ரூ. 3.50 விலையுள்ள மாயாஜால மர்மங்கள் என்கிற நான்கு பாகங்கள் அடங்கிய புத்தகத்தில் யாவரும் பிரமிக்கத்தக்க பல ஜாலங்கள் , பல சித்துக்கள் , விளையாடும் மை வகைகள் , சிங்கி வித்தை , சொக்குப் பொடி சூக்ஷி அஷ்ட கர்ம கருமை , முனிவர்கள் , வாராகி , ஜாலாக்காள் , குட்டிச்சாத்தான் , யக்ஷணி , அனுமான் , மாடன் , பகவதி , இருளி , காட்டேரி வசியங்களும் கோகர்ண கஜகர்ண இந்திர மகேந்திர ஜாலங்களும் , குழந்தைகளின் சகல தோஷங்களுக்கும் விபூதி பிடித்தல் , வேப்பிலை அடித்தல் , பேய் பிசாசுகளை ஓட்டுதல் , பில்லி சூனியங்களை அகற்றல் , சதிபதிகள் பிரியாதிருத்தல் , ஈடு மருந்தை முறித்தல் , பாம்பு , தேள் , நாய் , பூனை , எலிக்கடி விஷங்களை ஒழித்தல் , ஜாலாக்களின் ஜெகஜ்ஜால வித்தைகள் , முள் மீது படுத்தல் , நெருப்பைக் கையில் அள்ளுதல் , மிதித்தல் , சட்டி ஏந்துதல் , மடியில் கட்டுதல் , ஜலத்தின் மீது படுத்தல் , உட்காருதல் , வயிற்றில் ஈட்டி பாய்ச்சுதல் போன்ற எண்ணற்றவைகளுடன் எல்லாவற்றிற்கும் சிகரமாக ஆட்டு மந்தையை மாட்டு மந்தையாக்குதல் வரை விவரங்கள் இதில் அடங்கியுள்ளது.
விலாசம் 4 வெங்கட்ராமய்யர் தெரு சென்னை- 1. 1976 ல் எல்லாரும் வைத்திருக்க வேண்டிய புஸ்தகம். "
மேற்கண்ட பத்தியின் கடைசி வாக்கியத்தில் தான் சுஜாதா ஆகாசத்துக்குப் பறந்து விடுகிறார்.
* * *
29.2.08 அன்று சென்னை அபிராமபுரத்தில் உள்ள ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையிலுள்ள சுஜாதாவின் குடியிருப்பில் ஒரு கண்ணாடிப் பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. கனிமொழி , ரவிக்குமார் , நான் மூவரும் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்கிறோம். அப்போது ரவிக்குமார் இதே சூழ்நிலையை வைத்து சுஜாதா எழுதியிருக்கும் ' பெட்டி ' என்ற சிறுகதை பற்றிக் குறிப்பிடுகிறார். எதிர் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் மரணச் சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த வாத்தியாரின் சமஸ்கிருத உச்சரிப்பின் துல்லியத்தைப் பற்றி சுஜாதா பாராட்டி எழுதியிருப்பார் என்று தன்தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அது உண்மைதான். மரண வீட்டில் கூட ஒரு விசேஷமான தன்மையைக் கண்டு பிடித்து எழுதிவிடக் கூடியவர் தான் சுஜாதா காரணம் , அவரது உள் மனதில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை உட்கார்ந்து கொண்டிருந்தான்.
சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த வேறு சில நண்பர்களை நோக்கி நகர்ந்தேன். ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் என்னைச் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னார். என்ன என்று கேட்ட போது " நடமாடும் வயகரா வருகிறது என்றேன் " என்றார். " அடடா , நடமாடிக் கொண்டிருந்த சீனியர் வயகரா இங்கே படுத்துக் கிடக்கும்போது நான் எம்மாத்திரம் ?" என்றேன் பதிலுக்கு. அந்த வார்த்தை சுஜாதாவின் இளமைத் துள்ளலுக்கு ஒரு குறியீடு. பின் வரும் பத்தியைப் படியுங்கள்:
" ராட்சச வினியோகமாகும் நம் பத்திரிகைகளில் நான் ரசித்துப் படிப்பது விளம்பரங்களை. அழகில்லாதவர்களை அழகாக்கி டென்னிஸ் கோர்ட் மார்பைப் பதினைந்து நாட்களில் பீறிப் பிதுங்க வைக்க Money Back காரண்டி வழங்கும் இந்த விளம்பரக்காரர்களின் வார்த்தைகளில் நாம் இருப்பது செயற்கை சாதனங்களின் சொர்க்கத்தில். வாலிய வயோதிக அன்பர்களே என்று திடுக்கிட வைத்து அழைக்கும் இழந்த சக்தி லேகிய விளம்பரங்களை நம் நாடெங்கும் நான் பலப்பல பாஷைகளில் பார்த்திருக்கிறேன். இந்த இழந்த சக்தி நம் தேசிய குணங்களில் ஒன்றென்று தெரிந்தும் டில்லியில் ஏஜி ஆபீஸ் வாசலில் மத்யானத்தில் கூட்டம் கூட்டி சாண்டே கா தேல் ( Sande ka Tel ) விற்பவன் (உடும்புத் தைலம் என்று நினைக்கிறேன்) அதை உபயோகிப்பவர்களுக்கு-எதிரே எலக்ட்ரிக் கம்பத்தைக் காட்டி- அது போல் நிற்கும் என்று சத்தியம் செய்கிறான். பத்திரிகைகளிலும் எத்தனை பழனி லேகியங்களும் மஸ்தானா நைட் பில்ஸ்களும் பார்க்கிறேன். இல்வாழ்க்கையில் இணையில்லா வெற்றி தந்து தேக புஸ்டியை (ஆம்! புஸ்டி) ஊக்குவித்து புஜபல பராக்கிரமத்தை உண்டாக்கப் பெரிதும் உதவும் இந்த ஒரிஜினல் சித்த வைத்தியத் தயாரிப்பில்தான் நம் வாழ்க்கையின் மறுமலர்ச்சி இருக்கிறதாம். "
நான் சிறிது காலம் எஸ்பஞோல் (ஸ்பானிஷ்) வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது என் வகுப்புத் தோழி ஒருத்தி என்னிடம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தாள். நேநி என்ற அவளுடைய பெயருக்கும் , சுத்த ஸ்ரீரங்கத்துத் தோற்றத்துக்கும் பொருத்தமே இல்லாதிருந்தது. மற்றவர்களுடன் பேசும்போது மட்டும் தமிழில் பேசினாள். ஒருநாள் அவளிடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவள் சொன்ன பதில்: தமிழில் பேசினால் ' கள் ' விகுதி போட்டுப் பேச வேண்டியிருக்குமாம். ஆனால் என்னுடன் அப்படிப் பேச முடியாதாம். நீ , வா , போ என்று ஒருமையில் பேசினால் மற்றவர்களுக்கு ' எப்படியோ ' தெரியுமாம். அதனால்தான் ஆங்கிலத்தில் பேசுகிறாளாம். அவளுடைய முழுப்பெயர்:நப்பின்னை.
நப்பின்னை எப்படி என்னைப் பற்றிச் சொன்னாளோ , அதே மாதிரியாகத்தான் நானும் சுஜாதாவைப் பார்த்தேன். சமயங்களில் ' நமக்கு எழுதவே இடம் வைக்காமல் எல்லாவற்றையும் இந்த மனிதரே எழுதித் தொலைத்து விடுவார் போலிருக்கிறதே! ' என்று கூட அச்சப்பட்டிருக்கிறேன். மிகச் சமீபத்தில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர்கதை சில்வியா. அந்தக் கதையைப் படித்து மிரண்டு போனேன். காரணம் , நான் அப்போது எழுதிக் கொண்டிருந்த ' ராஸ லீலா ' நாவலின் இரண்டாவது பகுதியை அது மிகவும் ஒத்திருந்தது. நான் என்னுடைய நாவலில் ஸில்வியா ப்ளாத்தின் எந்தக் கவிதை வரிகளை மேற்கோள் காட்டியிருந்தேனோ அதே வரிகளை அவரும் மேற்கோளாக வைத்திருந்தார். ஒரு 20 வயதுப் பெண்ணுக்கும் அவளுடைய தந்தையைப் போன்று மதிக்கத் தக்க வயதுள்ள ஒரு ஆடவனுக்கும் இடையிலான ஃப்ராய்டிஸ முடிச்சுக்களைக் கொண்ட உறவுதான் என் நாவலின் அடிச்சரடு. ஸில்வியா ப்ளாத்தின் வாழ்க்கைதான் அதன் ஆதாரம். சுஜாதாவின் ஸில்வியாவும் இதே கதைதான். நல்ல வேளையாக அவர் அந்தக் கதையை குறுநாவலாக முடித்து விட்டதால் நான் தப்பினேன்.
இப்படி , அடுத்த தலைமுறை எழுத்தாளர்களையும் தன் எழுத்தினால் கலவரப்படுத்திக் கொண்டிருந்ததால் தான் ' தலைமுறை இடைவெளி ' யைக் கடந்த ஒருவராக அவரைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது.
* * *
சுஜாதாவுக்கு இரங்கல் செலுத்த வந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் " சுஜாதாவுக்கு வாசிப்பில் மிகத் தீவிரமான ஆர்வம் ( Passion ) இருந்தது. அப்படிப்பட்ட ஒருவரால்தான் கடைசி வரைக்கும் அதே தீவிரத்துடன் எழுதவும் முடியும் " என்றார்.
சுஜாதா குறித்த மிகச்சரியான அவதானிப்பு என்று இதைச் சொல்லலாம் சுஜாதா. கடைசி வரை படித்து கொண்டிருந்தார். உயிர்மையில் வெளிவந்த என்னுடைய அரசியல் கட்டுரைகளைப் படித்து விட்டு " சாருவை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள் " என்று கூறியிருக்கிறார். மேலும் , உயிர்மையில் நான் எழுதிக் கொண்டிருந்த சினிமா கலைஞர்களைப் பற்றிய கட்டுரையை மிக விரும்பிப் படித்திருக்கிறார். இது பற்றிப் பலரிடமும் சொல்லி வந்திருக்கிறார்.
இதே போல் சுஜாதாவிடமிருந்த மற்றொரு விசேஷமான குணம் , அவருடைய வாசிப்பில் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளருக்கும் அவருக்கும் உள்ள உறவு அந்த எழுத்தாளரின் படைப்பை அணுகுவதில் குறுக்கீடு செய்ய விடமாட்டார். உதாரணமாக , கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்: பிராமண சங்கத்தின் பரிசை அவர் ஏற்றுக் கொண்டபோதும் , முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பின் போது திருவரங்கத்தில் 5000 வைணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சுஜாதா எழுதிய போதும் , பாய்ஸ் படத்திற்கான அவரது வசனங்களுக்காகவும் மூன்று முறை. ஆனால் சுஜாதா இதையெல்லாம் என்றுமே பொருட்படுத்தியதில்லை. இது தமிழ் எழுத்தாளர்களிடையே மிகவும் அரிதான ஒரு பண்பு.
* * *
சுஜாதாவின் மரணத்தின் போது இறுதி அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு எழுத்தாளர்கள் யாரும் வரவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. தமிழ் இலக்கிய உலகம் ஒரு நன்றி கெட்ட உலகம். பல விதமான மனநோய்க் கூறுகளைக் கொண்ட உலகம். ஒருவேளை சுஜாதா பட்டினி கிடந்து இறந்திருந்தால் எல்லோரும் வந்திருப்பார்கள். ஆனால் அவரோ ஒரு Celebrity . லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டவர். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் பெங்களுரில் கமல்ஹாசனுடன் ஒரு உணவு விடுதியில் அமர்ந்திருந்த போது ' முப்பது பேர் சுற்றி நின்று எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் சாப்பிடவும் முடியவில்லை ; பேசவும் முடியவில்லை ' என்று எழுதியவர். இலக்கிய உலகத்திற்கு இது போதாதா ? தமிழ் இலக்கிய உலகம் என்பது ஓர் இருண்ட பகுதி. இங்கே சுஜாதா போன்ற வெளிச்சங்களுக்கே இடம் கிடையாது. இங்கே யாரும் அயல் இலக்கியத்தைப் படிக்க வேண்டாம்(கூடாது) ; உள்ளுர் சமாச்சாரங்களையும் படிக்க வேண்டாம் (கூடாது) ; 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை 60 பக்க சைஸில் ஒரு சிறுகதைத் தொகுப்பு போட்டால் போதும் ; ' சுவரில் விரலை ( nail ) அடித்தான் ' என்பது போன்ற மொழி பெயர்ப்புகளைப் படித்து ஞான விருத்தி செய்து கொள்ளலாம் ; எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுடைய பெயர் 100 சக எழுத்தாளர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரிந்திருக்கக் கூடாது. இந்த வரைமுறைகள் எதிலுமே அகப்படாத சுஜாதாவை இவர்கள் கண்டு கொள்வார்களா ?
இது ஒரு பக்கம் இருக்க , சுஜாதாவுக்கு இதுவரை எந்தவொரு இலக்கியப் பரிசுமே வழங்கப்படவில்லை என்பது மற்றொரு தகவல். (ஒருவேளை , அதற்குப் பழிவாங்குவதற்காகத்தான் பிராமண சங்கப் பரிசை நேரில் சென்று வாங்கிக் கொண்டாரோ ?) ஆனால் சுஜாதாவுக்கு சிறிதும் சம்பந்தமேயில்லாத சினிமா உலகம் அவரை கௌரவித்தது. என்னுடைய ஆசானின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் படி எனக்கு நடிகர் பார்த்திபன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்!
சில திரைப்படங்களுக்கு சுஜாதா வசனம் எழுதினார் என்பதால் அவரை ஒரு சினிமாக்காரர் என்று நான் சொல்ல மாட்டேன். 50 ஆண்டுகளாக எழுத்துலகில் அவர் எழுதிக் குவித்தது கணக்கில் அடங்காதது. அதோடு ஒப்பிட்டால் அவருடைய சினிமா வசனம் வெறும் தூசு. ஆனாலும் சினிமாக்காரர்கள் நன்றி பாராட்டினார்கள்.
எத்தனையோ பெரிய மதிப்பீடுகளைப் பற்றியும் , கலாச்சார விழுமியங்களைப் பற்றியும் கதையளந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் நன்றி என்ற அடிப்படையான மனிதப் பண்பு பற்றி சினிமாக்காரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அவல நிலை!
மேலும் , சுஜாதாவுக்கு மரியாதை செய்த சினிமாத்துறை நண்பர்கள் யாரும் சுஜாதாவை ஏதோ ஒரு சீனியர் வசனகர்த்தா என்று அடையாளப்படுத்தவில்லை. அவர்களுக்கும் கல்லூரிப் பருவத்திலிருந்தே சுஜாதா பள்ளியிலும் , கல்லூரியிலும் கிடைக்காத ஒரு மாற்றுக் கல்வியையும் , மாற்றுக் கலாச்சாரத்தையும் , மாற்று சினிமாவையும் கற்பித்திருக்கிறார். மேற்கத்திய சினிமா பற்றி அவர் எழுதிய விமர்சனங்கள் அனைத்தையும் படித்தால் ஒரு அற்புதமான சினிமா கலைஞன் உருவாக முடியும். இதன் காரணமாகவே அந்தச் சினிமா நண்பர்கள் அனைவரும் அவருக்கு நன்றி பாராட்டினார்கள்.
* * *
எவ்வளவு எழுதினாலும் சுஜாதா பற்றி இன்னும் எதுவுமே எழுதவில்லை என்ற உணர்வே மேலோங்குகிறது. சில இலக்கியவாதிகள் சுஜாதாவின் எந்தெந்த சிறுகதைகள் , நாவல்கள் இலக்கியமாகத் தேறும்; எதெது தேறாது என்று மார்க் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை விட அசட்டுத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் , சுஜாதா ஒரு எழுத்தாளர் மட்டும் கிடையாது. 50 ஆண்டுகளாக தமிழ் மொழியின் பல போக்குகளை நிர்ணயித்து வந்தவர் ; தமிழ் மொழியை உயிர்ப்பூட்டிப் புதுப்பித்தவர் ; 50 ஆண்டுகளாக தமிழ்ச் சூழலின் கலாச்சார சக்தியாக விளங்கியவர். யோசித்துப் பார்க்கும் போது பாரதிக்குப் பிறகான தமிழ் வாழ்வின் இத்தனை அம்சங்களிலும் இவ்வளவு வீரியமாக பாதிப்பு செலுத்திய கலைஞன் சுஜாதாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்றே தோன்றுகிறது.
Thanks : Sarunivethitha
No comments:
Post a Comment