Wednesday, July 24, 2013

நெல்சன் மண்டேலா ஒத்துழைக்க மறுக்கிறார்.








நெல்சன் மண்டேலாவுக்கு RIP போட்டு பலரும் தங்கள் கடமையை முடித்துக்கொண்டுவிட்டார்கள். (சமீபத்தில் படித்தது, இர்ஃபான் ஹபீப்பின் ட்வீட்). மண்டேலாவை எப்போது கவர்ஸ்டோரி ஆக்குவது என்று உலகின் முன்னணி பத்திரிகைகள் நகம் கடித்தபடி காத்துக்கொண்டிருக்கின்றன. ‘ஆப்பிரிக்காவின் மகாத்மா, உண்மையான பாரத் ரத்னா, உலகளாவிய ஹீரோ The Last Icon’ என்கிறது  மண்டேலாவின் முகம் தாங்கி வந்திருக்கும் இன்றைய அவுட்லுக் இதழ்.


‘சர்வதேச மீடியா எல்லை தாண்டி இவ்வாறு செய்கிறது. இதுவும் ஒருவகை நிறவெறிதான்’ என்று சீறுகிறார் மண்டோலாவின் மகள், மகாஸிவே (Makaziwe).


‘சிங்கம் தின்றது போக மிச்சமுள்ள எருமை மாட்டின் சிதிலங்களைக் கொத்திப் போக காத்திருக்கும் வல்லூறுகள்.’


ஆனால் இதற்கெல்லாம் முன்பே மண்டேலாவின் குடும்பத்திலேயே பலரும் அவருடைய மரணம் குறித்து விவாதிக்கவும் சண்டையிடவும் தொடங்கிவிட்டார்கள். எங்கே புதைப்பது? யார் முதலில் அவர் உடலுக்கு மலர் தூவுவது? எந்தக் குடும்பத்தை முதலில் அழைக்கவேண்டும்? யாருக்கு முதல் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்?


இன்னும் ஒரு படி மேலே போய், மண்டேலாவின் இறுதி ஊர்வலம் தொடர்பான வீடியோ காட்சிகளை யாருக்கு அளிக்கவேண்டும் என்பதிலும் ‘மடிபா’வின் (மண்டேலாவின் பழங்குடி இனப்பெயர்)  பெயரை யார் கமர்ஷியல் லோகோவாகப் பயன்படுத்தவேண்டும்
என்பதிலும் குடும்பத்தாரிடையே பலத்த போட்டிகள் நிலவிவருவதாக சில மாதங்களுக்கு முன்பே தி வீக்கில் வெளிவந்த ஒரு கட்டுரை குறிப்பிட்டது.
மண்டேலா பிறந்து, வளர்ந்த குனுவில்தான் அவர் உடல் புதைக்கப்படவேண்டும் என்கிறது குடும்பத்தின் ஒரு தரப்பு. அல்ல, Mvezo-வில் புதைக்கப்படவேண்டும் என்கிறார் மண்டேலாவின் கொள்ளு பேரன், மண்ட்லா.


தனக்கு மிக அருகே நிலவிவந்த இத்தகைய குழப்பங்களை ஓரளவுக்கு உடல் நிலை சரியாக இருந்த சமயத்தில்கூட மண்டேலாவால் தீர்க்கமுடியவில்லை என்பதுதான் நிஜம். அவர் நாட்டைப் போலவே அவர் குடும்பமும் அவரைமீறி வளர்ந்துவிட்டது ஒரு காரணம். அதட்டிக் கேட்கக்கூடிய நிலையில் அவர் இல்லை. அடங்கிப்போகும் நிலையில் மற்றவர்கள் இல்லை. நெல்சன் மண்டேலா எப்போதோ ஒரு பண்டமாக மாற்றப்பட்டுவிட்டார். அதில் மீடியாவுக்கு மட்டுமல்ல அவருடைய குடும்பத்தினருக்கும்கூட ஒரு பெரும் பங்கு உண்டு.


மண்டேலாவுக்கு என்னை யாரென்றே தெரியவில்லை என்று வருத்தத்துடன் குறைபட்டுக்கொள்கிறார்கள் பல ஆண்டுகள் அவருடன் பழகி வந்த நண்பர்கள்.  எப்படியாவது  மண்டேலாவின்  பக்கத்தில் நின்று ஒரு படம் எடுத்துக்கொண்டுவிட முடியாதா என்னும் ஏக்கத்துடன் பல பிரபலங்கள் இந்த நிமிடம் வரை காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது ஆசிர்வாதத்துடன் ஏதாவது ஒரு புராடக்டை சந்தையில் இறக்கிவிடமுடியாதா என்று அவரது குடும்பத்திலேயே சிலர் ஏக்கத்துடன் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.


மீடியாவும் நண்பர்களும் குடும்பத்தினரும்கூட தங்களால் முடிந்ததைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நெல்சன் மண்டேலாதான் ஒத்துழைக்க மறுக்கிறார்.


-மருதன்
Thanks: tamilpaper.com


No comments:

Post a Comment